மின் நூல்

Saturday, March 19, 2016

அழகிய தமிழ் மொழி இது!...

பகுதி--4

ரணி குப்புசாமி முதலியார்,  வடுவூர் துரைசாமி ஐயங்கார், கே.ஆர்.ரங்கராஜூ  பொன்றவர்கள் ஆங்கில மர்ம நாவலக்ள் கதை மாந்தர்களுக்கு தமிழ் உடை உடுத்தி  அழகு பார்த்தவர்கள் என்றால் இவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவராய்த் திகழ்ந்தார் வை.மு. கோதைநாயகி அம்மாள்.    வை.மு.கோ. என்று வாசிப்பு  உலகத்தினரால் செல்லமாக அழைக்கப்பட்டவர்.

அந்தக்கால வழக்கப்படி பெண்ணாய்ப் பிறந்ததினால் கல்விச்சாலையை நெருங்க முடியாமல் ஆரம்பக்கல்வியே மறுக்கப்பட்ட நிலைக்கு உள்ளானார். குழந்தைப் பருவத்திலேயே தாயை  இழந்த இவரை வளர்த்த சித்தப்பா இவருக்கு ஞான ஆசிரியராய் ஆனார்.  அவரிடம் தேவாரம், திருவாசகம், திருவாய்மொழி என்று கற்றார்.  ஐந்து வயதில் பால்ய விவாகம். கணவர் பார்த்தசாரதிக்கு ஒன்பதே வயது.

சிறுவயதிலேயே தன்னையொத்த சிறு குழந்தைகளுக்கு கோதை கதை சொல்லும் திறமை பெற்றிருந்தார். கணவரின், மாமியாரின் அன்பும் ஆதரவும் பெண்ணுக்கான சுதந்திரக் காற்றை சுவாசிக்கச் செய்தது.  பிற்காலத்தில் தமிழை வாசிக்கவும் எழுதவும் தெரியாத நிலையிலேயே இவ்ர் சொல்லவும் இவர் சொல்வதை எழுதவும் பட்டமாள் என்ற தோழி கிடைத்தார். அப்படி வை.மு.கோ. சொல்லி எழுதியது தான் இவரின் முதல் நாவலான 'இந்திர மோகனா'!. நாளாவட்டத்தில் பட்டமாளே இவருக்கு கல்வி போதித்த ஆசிரியையும் ஆனார்.

அன்னி பெசண்ட் அம்மையாரின் அறிமுகம், சமூக சேவகி அம்புஜம் அம்மாளீன் தோழமை, தீரர் சத்யமூர்த்தியின் தீவிர மேடைப்பேச்சு , மஹாத்மாவின் தமிழக விஜயம் எல்லாம சேர்ந்து இவரை சுதந்திரப் போராட்ட வேள்வியில் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள இழுத்துச் சென்றது.

இந்த காலகட்டத்தில் தான் 'ஜகன்மோகினி' என்ற பத்திரிகையை தம் சொந்தப் பொறுப்பில் நடத்தவும் அதற்கு ஆசிரியையாகவும் ஆகிறார் வை.மு.கோ. . ஜெகன்மோகினியில் தன் இரண்டாவது நாவலான 'வைதேகி'யை எழுதினார்., பின் 'சண்பகவிஜயம்', ''ராதாமணி,' பத்ம சுந்தரன்', 'கெளரி முகுந்தன்'' என்கிற நாவல்களை 1926-27 காலகட்டத்தில் எழுதினார்.   'நாவல் அரசி' என்ற பட்டம் வை.மு.கோ.விற்கு தன்னாலே தேடிவந்தது.  பிரமிக்காதீர்கள், இவர் எழுதிய மொத்த நாவல்களின் எண்ணிக்கை 115 என்று இலக்கிய ஆய்வாளர்கள் கணக்கு சொல்கின்றனர்.  இன்றைக்கும் இந்த எண்ணிக்கையை யாரும் எட்டவில்லை என்று நினைக்கிறேன்.

வை.மு.கோ. தன் நாவல்களுக்கு எடுத்துக் கொண்ட எழுது பொருள் பெண் விடுதலை, மதுவிலக்கு, விதவைத் திருமணம், மத நல்லிணக்கம் என்று--- அத்தனை நாள் ஆங்கில நாவல்களை அடியொற்றி எழுதிய எழுத்துப் பாங்கு தமிழில் இவரால் மாறுபடுகிறது.  இவ்வாறாக தமிழ் நாவல்களில், நாவலுக்காக எழுதும் கருப் பொருளில் முதல் முதலாக மாற்றம் கண்ட பெண்மணி வை.மு.கோ. தான்.  இது தமிழ் நாவல் எழுத்துலகம் கண்ட மிகப் பெரும் வரலாற்று மாற்றம்.

வை.மு.கோ.வின் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் தீர்ம் மிக்கது.  காந்திஜியின் அறைகூவலை ஏற்று சென்னை திருவல்லிக்கேணியில் கள்ளுக்கடை மறியல், மற்றும் அன்றைய சைனா பஜாரில் தடையை மீறி ஊர்வலம் சென்றார் என்று ஆறு மாதம் சிறைதண்டனை+ அபராதம் என்று தண்டனை வழங்கப்பட்டு,  அபராதம் செலுத்த மறுத்ததால் இன்னும் 4 மாதங்கள் சேர்த்துக் கிடைத்த தண்டனையையும் புன்முறுவலுடன் ஏற்று சிறை சென்றார்   அன்னிய துணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் தண்டனை பெற்று வேலூர் சிறைவாசம்.  சிறை வாழ்க்கையையும் எழுதுவதற்குக்  கிடைத்த வாய்பாகக்  கொண்டு 'உத்தம சீலன்', 'சோதனையின் கொடுமை' என்று இரு நாவல்களைப் படைத்தார்.

வை.மு.கோ,  தேச நலனுக்காகப் பயன்பட்ட நல்ல மேடைப் பேச்சாளர், கர்நாடக சங்கீதத்தில் ஆழ்ந்த புலமை கொண்டவர் என்று ஏகப்பட்ட பெருமைகளுக்குச் சொந்தக் காரர். பெண் எழுத்தாளர்களில் சாதனைகள் படைத்த முதல் பெண்மணி.  பாரத தேசத்தின் நலன்கள் சார்ந்த கொள்கைகளை தம் எழுத்துக்கு கருப்பொருளாக அவர் எடுத்துக் கொண்டது என்றென்றும் நினைவு கொள்ள வேண்டிய சாதனை.

தமிழ் நாவலுலகில் 1879-ல் பிரசுரமான மயூரம் வேதநாயகம் பிள்ளையின் 'பிரதாப முதலியார் சரித்திரம்',  1896-ல் வெளிவந்த ராஜம் அய்யரின் 'கமலாம்பாள் சரித்திரம்' போன்ற நாவல்கள், வை.மு.கோ.வின் நாவலகளுக்கு முற்பட்ட காலத்தினது ஆயினும்  அவை தனி மனித கோணல்மாணல்களை அச்சுப்பிச்சுத் தனமாக வர்ணித்தவை.  இந்த நிலைகளிலிருந்து மாறுப்பட்டுப் போனதும் வை.மு.கோ.வுக்கு வாய்த்த  தனிச் சிறப்புகளாகின்றன.

1898-ல் பிரசுரமான மாதவய்யாவின் 'பத்மாவதியின் சரித்திரம்'  இதற்கு முந்தைய காலகட்டதின் நாவல் தலைப்புகளைப் பிரதி எடுத்திருப்பது மேலோட்டமான பார்வைக்கே புலப்படுவது..  ஒரு நாவல் என்றால் குறிப்பிட்ட ஒருவரின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்வது தான் என்று முடிவு எடுக்கிற மாதிரியும் உள்ளடக்கத்தின் தேர்வு நிகழ்ந்திருக்கிறது.  அதே நேரத்தில் பத்மாவதி என்னும் தனிப்பட்ட ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையில் நேர்ந்துவிட்ட சோக வரலாற்றின் விவரிப்பாக குறுக்கம் கொண்டதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து நெடுங்காலம் கழித்து 1946-ல் பிரசுரமான க.நா.சுப்பிரமணியம் அவர்களின்  'பொய்த்தேவு' தான் தேறுகிறது. தமிழ் நாவலுலகின் இலக்கிய ஆய்வாள்ர்களால் விசேஷப்படுத்தும் நாவல் இது.  அதைப்  பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

இலக்கியம் என்பது  காலத்தின்  கண்ணாடியாக திகழும் பொழுது அதன் பெருமை வருங்காலத்திற்கு வழிகாட்டியாகிறது.   இலக்கியம் வாழ்வின் மதிப்பிடல்களைத் தீர்மானிக்கும் சக்தி பெறும் பொழுது அதற்கான உண்மையான உயிர்ப்பினைக் கொண்ட சாதனையாகிறது.  அந்த சாதனைகளும் சமூக அவலங்களைக் களைந்த நேர்த்திகளுக்குச் சொந்த மாகும் பொழுது இயல்பாகவே அவை நம் நேசிப்பை விட்டுத் தப்ப முடிவதில்லை.  இதுவே இலக்கியங்களுக்கான அடிக்கோடிட்டு அழுத்தம் திருத்தமாகச்  சொல்ல வேண்டிய அளவுகோல்களுமாகும்.


(தொடரும்)


படம் உதவிய நண்பருக்கு நன்றி.

23 comments:

sury siva said...

//இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடியாக திகழும் பொழுது அதன் பெருமை வருங்காலத்திற்கு வழிகாட்டியாகிறது.//

பெரிதும் உண்மையே.

சுப்பு தாத்தா.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அந்தக்கால வழக்கப்படி பெண்ணாய்ப் பிறந்ததினால் கல்விச்சாலையை நெருங்க முடியாமல் ஆரம்பக்கல்வியே மறுக்கப்பட்ட நிலைக்கு உள்ளானார். குழந்தைப் பருவத்திலேயே தாயை இழந்த இவரை //

கேட்கவே மிகவும் வருத்தமாக உள்ளது.

//இவரை வளர்த்த சித்தப்பா இவருக்கு ஞான ஆசிரியராய் ஆனார். அவரிடம் தேவாரம், திருவாசகம், திருவாய்மொழி என்று கற்றார். //

இது சற்றே மகிழ்ச்சியையும் ஆறுதலையும் தருவதாக உள்ளது.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//சிறுவயதிலேயே தன்னையொத்த சிறு குழந்தைகளுக்கு கோதை கதை சொல்லும் திறமை பெற்றிருந்தார். கணவரின், மாமியாரின் அன்பும் ஆதரவும் பெண்ணுக்கான சுதந்திரக் காற்றை சுவாசிக்கச் செய்தது. பிற்காலத்தில் தமிழை வாசிக்கவும் எழுதவும் தெரியாத நிலையிலேயே இவர் சொல்லவும், இவர் சொல்வதை எழுதவும் பட்டமாள் என்ற தோழி கிடைத்தார். அப்படி வை.மு.கோ. சொல்லி எழுதியது தான் இவரின் முதல் நாவலான 'இந்திர மோகனா'!. நாளாவட்டத்தில் பட்டமாளே இவருக்கு கல்வி போதித்த ஆசிரியையும் ஆனார். //

ஆஹா, அனைத்து விஷயங்களும் மனதுக்கு மகிழ்ச்சியளிக்கின்றன. வை.மு.கோ. அவர்களின் தனித்திறமைகளை ஒளி வீச உதவியுள்ள பட்டம்மாள் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்.

என்னுடைய ஒன்றாம் வகுப்பு டீச்சர் பெயரும் பட்டம்மாள் தான். http://gopu1949.blogspot.in/2012/03/2.html இன்னும் அவர்களையும் அவர்களின் அன்றையத் தோற்றத்தையும் என் மனதால் படம் வரைய முடிகிறது.

>>>>>

மோகன்ஜி said...

வை.மூ.கோ அவர்களைப் பற்றிய நல்ல தகவல்கள் தந்திருக்கிறீர்கள். என் அம்மா இவர்களைப் பற்றி சொல்லுவார்கள். அக்கால தமிழ்நடையும் கதை சொல்லும் பாணியும் இன்றைய வாசகனுக்கு அன்னியமாகவோ சுவாரஸ்யமற்றதாகவோ இருக்கலாம்.ஆயினும் முன்னோடிகள் என்ற வகையில் அவர்களுக்கான இடம் என்றும் இலக்கிய உலகில் இருக்கும். உங்கள் பதிவு அவருக்கு நல்லதோர் சொல்லாரம்!

Yaathoramani.blogspot.com said...

அறியாதன அறிந்தோம்
பகிர்வு மிக நன்றி
தொடர்கிறோம்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இந்த காலகட்டத்தில் தான் 'ஜகன்மோகினி' என்ற பத்திரிகையை தம் சொந்தப் பொறுப்பில் நடத்தவும் அதற்கு ஆசிரியையாகவும் ஆகிறார் வை.மு.கோ.//

ஆஹா, எத்தனை பெரிய பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டுள்ளார் !

//ஜெகன்மோகினியில் தன் இரண்டாவது நாவலான 'வைதேகி'யை எழுதினார்., பின் 'சண்பகவிஜயம்', ''ராதாமணி,' பத்ம சுந்தரன்', 'கெளரி முகுந்தன்'' என்கிற நாவல்களை 1926-27 காலகட்டத்தில் எழுதினார். 'நாவல் அரசி' என்ற பட்டம் வை.மு.கோ.விற்கு தன்னாலே தேடிவந்தது.//

மிகவும் அருமையான செய்திகள். :)

//பிரமிக்காதீர்கள், இவர் எழுதிய மொத்த நாவல்களின் எண்ணிக்கை 115 என்று இலக்கிய ஆய்வாளர்கள் கணக்கு சொல்கின்றனர். இன்றைக்கும் இந்த எண்ணிக்கையை யாரும் எட்டவில்லை என்று நினைக்கிறேன்.//

மிகப்பெரிய சாதனையாளரான இவரை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்கவே முடியவில்லை. உண்மையிலேயே புகழப்பட வேண்டியவர்தான்.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//வை.மு.கோ. தன் நாவல்களுக்கு எடுத்துக் கொண்ட எழுது பொருள் பெண் விடுதலை, மதுவிலக்கு, விதவைத் திருமணம், மத நல்லிணக்கம் என்று--- அத்தனை நாள் ஆங்கில நாவல்களை அடியொற்றி எழுதிய எழுத்துப் பாங்கு தமிழில் இவரால் மாறுபடுகிறது. இவ்வாறாக தமிழ் நாவல்களில், நாவலுக்காக எழுதும் கருப் பொருளில் முதல் முதலாக மாற்றம் கண்ட பெண்மணி வை.மு.கோ. தான். இது தமிழ் நாவல் எழுத்துலகம் கண்ட மிகப் பெரும் வரலாற்று மாற்றம்.//

அச்சா, பஹூத் அச்சா. இத்தகையதோர் வரலாற்றுச்சாதனையைச் செய்துள்ளவரை வணங்குவோம்.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடியாக திகழும் பொழுது அதன் பெருமை வருங்காலத்திற்கு வழிகாட்டியாகிறது.//

நிச்சயமாக. பள்ளிப்படிப்பு இல்லாவிட்டாலும் படிக்காத மேதையாகத் திகழ்ந்து, மிகச்சிறந்த எழுத்தாளராக சாதனைகளையும் படைத்து, பத்திரிகை ஆசிரியராகவும் பொறுப்பேற்று, சுதந்திரப்போராட்ட வீரராகவும் இருந்து பலமுறை சிறை சென்ற தியாகி ஒருவரின் வரலாற்றைத் தங்கள் மூலம் இன்று அறிந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி, சார். மிக அருமையாக அமைந்துள்ள இந்தப் பகிர்வுக்கு என் நன்றிகள், சார். அன்புடன் VGK

ஜீவி said...

@ Sury Siva

வாசித்து வருவதில் மகிழ்ச்சி, சூரி சார்!

ஜீவி said...

@ வை.கோ

கட்டுப்பாடான வைணவ குடும்பம். இவருக்கு ஒரு வயதிலேயே தாயார் இறந்து வ்டுகிறார். பெருமாளுக்கு ஸ்லோகம் சொல்கிற மாதிரி தான். அத்தனை சமயத் துதிகளையும் சித்தப்பா குழந்தைக்கு பாராயணம் பண்ண வைத்து விடுகிறார். வைணவமில்லையா?. அதனால் கொஞ்சு தமிழுக்குப் பஞ்சமில்லை. தன்னையொத்த சிறுசுகளுக்கு 'இட்டுக்கட்டி' கதை சொல்லி கோதைக்கு கதை சொல்லி பழக்கமாகி விடுகிறது. 5 வயசில் பொம்மைக் கல்யாணம். கடைசி வரை கணவர் பார்த்தசாரதி தான் துணை. இவர் சிறையில் இருந்த போதெல்லாம் 'ஜகனமோகினி'யைப் பார்த்துக் கொள்கிறார் அவர்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஒரு புரட்சி எழுத்தாளரான திருமதி. வை. மு. கோதை நாயகி அம்மாள் பற்றிய சிறப்புகளைப் படித்தறிந்து வியந்தேன்; நன்றி ஐயா!.

ஜீவி said...

@ மோகன்ஜி

அக்கால கூட இல்லை, ஒரு முப்பது வருட கால முந்தைய எழுத்துக்களைக் கூட இன்றைய தலைமுறை வாசகர் வட்டத்திற்கு ரசிக்க முடியாது போய்விட்டது. அதனால் தான் ஜெயகாந்தன் பல வருடங்களுக்கு முன்பே தான் எழுதுவதை நிறுத்திக் கொண்டு விட்டாரோ என்று நான் நினைப்பதுண்டு. மானஸ்தர். தான் உண்டு, தன் மடம் உண்டு என்று...

தமிழ் எழுத்துலகின் சாபக்கேடு எல்லா காலத்தும் இந்த நாலு பத்திரிகைகள் தான் சட்டாம்பிள்ளை மாதிரி எழுத்தாள அங்கீகாரத்திற்கு 'அக்மார்க்' முத்திரை' குத்தி வருகின்றன. மெட்டல் டிடெக்டர் மாதிரி இவர்கள் சட்டத்திற்குள் நுழைந்து வந்தால் தான் நாலு பேருக்குத் தெரிந்த எழுத்தாளனாய் ஒருத்தன் அங்கீகரிக்கப்படுவான் என்று...

சிறுபத்திரிகைகள் மூலாக 'கல்லிலிருந்தும் வெளிப்படும் இந்தப் பூச்செடி'என்று அத்தி பூத்தாற் போல யாராவது பெரும் முயற்சியுடன் வெளீவந்து சாதித்தால், அவரை சினிமா உலகம் கொத்திக் கொண்டு போய் விடுகிறது! பக்கம் பக்கமாக எழுதியவர் 'ஒன் லைன்' கதை சொன்னால் போதும் என்று. என்னத்தைச் சொல்வது?.. சினிமாவின் ஆளுகை எல்லாத்தையும் சாப்பிட்டு விட்டது..

ஜீவி said...

@ Ramani.S.

வருகைக்கும் வாசித்து வருவதற்கும் சந்தோஷம், ரமணி சார்.

சிவகுமாரன் said...

வை.மு.கோ. அவர்களைப் பற்றிய இவ்வளவு தகவல்களை இப்போது தான் அறிகிறேன். பகிர்வுக்கு நன்றி

ஜீவி said...

@ மோகன்ஜி

//அக்கால தமிழ்நடையும் கதை சொல்லும் பாணியும் இன்றைய வாசகனுக்கு அன்னியமாகவோ சுவாரஸ்யமற்றதாகவோ இருக்கலாம்.//

ஒரு காலத்தில் வீடு தோறும் ஆனந்தவிகடன், கல்கி போன்ற தமிழ்ப் பத்திரிகைகளுக்கு நல்ல செல்வாக்கு இருந்தது. 'இந்த வாரம் ஆனந்தவிகடன் வாசித்தீர்களா?' தமிழக இரயில் நிலையங்களில் விகடன் தாத்தா விளம்பரப் போர்டுகளில் நம்மைக் கேட்டுக் கொண்டிருப்பார். கல்கி, தேவன், லஷ்மி, கொத்தமங்கலம் சுப்பு, அகிலன், நா.பா., போன்றவர்கள் அவர்கள் கதைகளை வாசித்த வாசகர் நெஞ்சில் ஊடுருவி அவர்கள் கதைதான் எழுதுகிறார்கள் என்ற எண்ணத்தையே மறக்கடித்தார்கள். கதை மாந்தர்கள் வாழும் மாந்தர்களாய் வாசகர்களுக்குத் தென்பட்டார்கள். கதை மாந்தர்கள் துன்பப்பட்டால் அதற்காக கண் கலன்டியிருக்கிறார்கள். அதே மாதிரி வாழ்க்கைக்கான நல்ல அம்சங்களைக் கொண்ட கதைகள் மூலம் தங்கள் வாழ்விலும் அவற்றைக் கடைபிடித்து வெற்றியடைந்திருக்கிறார்கள் பூரணி, அரவிந்தன், சத்தியமூர்த்தி போன்ற கதாபாத்திரங்களின் பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்கு வைத்து அந்த கதை மாந்தர்கள் மாதிரியே தங்கள் குழந்தைகளும் வாழ்க்கையில் நல்ல குணநலங்கள் பெற்றுத் திகழ வேண்டும் ஆசைப்பட்டார்கள்.

இதெல்லாம் இன்று ஒரு காலத்தின் கனவுகளாகி விட்டன. தமிழ்க் குடும்பங்களுக்குத் தமிழ்ப் பத்திரிகைகள் அன்னியமாகிவிட்டன. தமிழே அன்னியமாகி விட்ட அவலத்தை நினைத்து மனம் குமைகிறது. பதிப்பகங்களில் நாவல்கள், சிறுகதைத் தொகுப்பு என்றாலே 'வேண்டாம்,ஐயா' என்று கையெடுத்துக் கும்பிடுகிறார்கள். ''அதெல்லாம் விற்காது,சார்!' என்று கையைப் பிசைகிறார்கள். 150 ஆண்டுகள் அடிமைப்பட்டதின் தொடர்ச்சி விடுதலை என்கிற இடைவெளி விட்டு மீண்டும் சகல மட்டங்களிலும் தொடரத் தொடங்குகிறோதோ என்று ஆயாசமாக இருக்கிறது. அப்படித் தொடரத் தொடங்குவதின் வித்து, இன்றைய தமிழ் நாவல் உலகிலும் எப்படி முளை விடத் தொடங்கியிருக்கிறது என்பதை ஆராய்வதும் இக்கட்டுரைத் தொடரின் நோக்கங்களில் ஒன்று, மோகன்ஜி. தொடர்ந்து வாசித்து விவாதிக்க வேண்டுகிறேன்.

வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.

ஜீவி said...

@ Ramani. S.

தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி, நண்பரே!

geethasmbsvm6 said...

வடுவூரையும், ஆரணியையும் வாசித்த அளவுக்கு வை.மு.கோவை வாசிக்கவில்லை. ஆனால் அம்மா அடிக்கடி சொல்வார். நான் புத்தகங்கள் படிக்கத் தூண்டுகோலாகச் செயல்பட்டதில் என் அம்மாவுக்கும் பெரிய பங்கு உண்டு. அடுத்து என் தாய் வழித்தாத்தா. அவரிடம் இந்தச் சேமிப்பெல்லாம் இருந்தது. ஆனந்தரங்கம் பிள்ளை டைரியிலிருந்து எல்லாமும் படிச்சேன். நினைவில் இருப்பது சொற்பமே. மீண்டும் எங்காவது படிக்கையில் இது ஏற்கெனவே படிச்சதே என்று நினைவில் வரும்.

ஜீவி said...

@ Geetha Sambasivam

வை.மு.கோ. அவர்கள் எழுத எடுத்தக் கொண்ட விஷயங்களை நினைத்தால் இத்தோடு நிறுத்திக் கொள்ளத் தோன்றவில்லை. இவரைப் பற்றி ஆழ்ந்து படிக்க ஆரம்பித்திருக்கிறேன். அதான் அடுத்த பதிவுக்கு தாமதம் ஆகிறது. இவரைக் கடக்கும் முன் இவரைப் பற்றி இன்னும் சொல்ல வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. தமிழ் நாவல் உலக பிற்கால ஆய்வுகளில் இவருக்குத் தகுந்த இடம் இதுவரை யாரும் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. அந்த இடத்தை நிறுவ வேண்டும் என்கிற ஆவல் தோன்றியிருக்கிறது.

வை.மு.கோ பற்றி நீங்கள் அதிகம் வாசிக்காதது இழப்பு தான். உங்களுக்கு அவர் பற்றிய தகவல் ஏதாவது தெரிந்திருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். வல்லி சிம்ஹன் அவர்களுக்குத் தெரிஜ்திருக்குமோ?.. கோதையை வாசித்திருப்பார்களா என்று தெரியவில்லை.

வாசித்து வருவதற்கு நன்றி, தொடர்ந்து வாருங்கள்.

அப்பாதுரை said...

கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர விவரம் எதுவும் அறிந்ததில்லை.

(எனக்கென்னவோ கீதா சாம்பசிவம் வைமுகோ வாசிக்கவில்லை என்பதை நம்பவே முடியவில்லை)

கோமதி அரசு said...

1926-27 காலகட்டத்தில் எழுதினார். 'நாவல் அரசி' என்ற பட்டம் வை.மு.கோ.விற்கு தன்னாலே தேடிவந்தது. பிரமிக்காதீர்கள், இவர் எழுதிய மொத்த நாவல்களின் எண்ணிக்கை 115 என்று இலக்கிய ஆய்வாளர்கள் கணக்கு சொல்கின்றனர். இன்றைக்கும் இந்த எண்ணிக்கையை யாரும் எட்டவில்லை என்று நினைக்கிறேன்.//

நாவல் அரசியைப்பற்றி தெரிந்து கொண்டேன்.
கோதைநாயகி அவர்களின் கதையை படிக்கும் ஆவலை ஏற்படுத்திவிட்டது நீங்கள் எழுதிய பதிவு.

ஜீவி said...

@ கோமதி அரசு

கோதை நாயகியின் எழுத்துக்கள் அவ்வளவாகக் கிடைக்காவிட்டாலும் அவர் எழுத எடுத்துக் கொண்ட விஷயங்கள் பற்றித் தெரிந்திருக்கிறது. அவருக்குப் பின் வந்த பெண் எழுத்தாலர்களையும் விஞ்சி அவர் கம்பீரமாகத் திகழ்கிறார். தமிழ் எழுத்தாளர்களில் அவருக்கான உண்மையான இடம் மறுக்கப் பட்டிருப்பதும் தெரிகிறது. தொடர்தது வாருங்கள். நிறையப் பார்க்கலாம்.

geethasmbsvm6 said...

@அப்பாதுரை, உண்மையாகவே வை.மு.கோ.நாவல்கள் வாசித்தது இல்லை! :) அது ஏன் எனப் புரியவில்லை. அதே போல் அவர் குறித்து மேலதிகத் தகவல்களும் அதிகம் தெரியாது. திரு ஜீவி சார் எழுதி இருப்பது மட்டுமே நானும் படித்துத் தெரிந்து கொண்டது! :)

வே.நடனசபாபதி said...

வை.மு. கோதைநாயகி அம்மாள் பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் அவர் இவ்வளவு பெரிய எழுத்தாளர் என அறிந்திருக்கவில்லை. இவர் எழுதிய மொத்த நாவல்களின் எண்ணிக்கை 115 என்று அறியும்போது வியப்பாய் இருக்கிறது. தனி மனித வாழ்க்கையை பற்றி எழுதாமல் 1920 களில் பெண் விடுதலை, மதுவிலக்கு, விதவைத் திருமணம், மத நல்லிணக்கம் என்று பொது நல கருத்துகளை வைத்து நாவல்களாக எழுதியிருக்கிறார் என அறியும்போது இவையெல்லாம் தற்போது யாருக்கும் தெரியவில்லையே என்ற வருத்தமும் ஏற்படுகிறது. அந்த வகையில் இவரைப் பற்றி விரிவாக சொன்னமைக்கு பாராட்டுக்கள்!

Related Posts with Thumbnails