மின் நூல்

Wednesday, March 20, 2019

வசந்த கால நினைவலைகள்

                                 ஆரம்ப அத்தியாயம்                         
                                  
னந்த விகடனுக்கென்று அலாதியான   பாணி ஒன்று உண்டு.  தனது எல்லா உறவுகளை விட வாசகர் உறவைப் பெரிதினும் பெரிதாய் நினைக்கிற உயர்ந்த எ ண்ணம் அது.. மற்ற பத்திரிகைகளில் அவ்வளவு எதிர்ப்பார்க்க முடியாத இந்த ஆகச் சிறந்த குணம் எஸ்.எஸ்..வாசனின் திருமகனார் எஸ். பால சுப்பிரமணியன் காலத்தில் கொடிகட்டிப் பறந்தது என்பதை என் இளம் வயதில் விகடனுடான எனது பழக்கத்தில் தெள்ளந் தெளிவாக பல நேரங்களில் உணர்ந்திருக்கிறேன்.  விகடனில் எனது சில கதைகள் பிரசுரமாகியிருப்பினும்  ஒரு எழுத்தாளன் என்ற ஹோதாவில் விகடனுடான நெருக்கத்தை விட அதன் பெருமைமிக்க வாசகன் என்ற மேலான உறவில் திளைப்பதே எனக்கும் மிகவும் பிடித்திருந்தது.

1974-ம் ஆண்டு பிற்பகுதி  அது.  அந்நாளைய  தமிழக கல்வியமைச்சருடன் கூட இருந்து விகடன் நிருபர் அவரின் ஒரு நாள் பணியை விவரிப்பது போல அநதக் கட்டுரை அமைந்திருந்ததாக நினைவு.  அந்தக் கட்டுரையில் அமைச்சரின் பேரனின் படங்கள் காணக்கிடைத்தன. அதைப் பார்த்தவுடன்  வாசக உள்ளம் பொருமிய நிலையில் விகடனுக்கு ஒரு நாலு வரிக் கடிதம் எழுதி என் மகன் ஜீவாவின்  புகைப்படத்தையும் இணைத்து அனுப்பி வைத்திருந்தேன்.அமைச்சரின் பேரன் என்றால் ஆனந்த விகடனில் புகைப்படம்!  நேருவின் பிறந்த நாளான உலகச் சிறுவர் தினத்தன்று (14-11-74) சாதாரணக் குடிமகனான எனது ஒன்றரை வயது மகன் ஜீவா,  இதோ ஜெய்ஜவான் உடையில்!  பிரசுரிப்பீர்களா?....

காஞ்சீபுரம்                                                                                      ஜீவி


--- இதான் அந்தக் கடித வாசகம். 

அடுத்து வந்த 8-12-74  இதழிலேயே என் மகனின் புகைப்படமும் எனது அந்தக் கடிதத்தையும் அப்படியே வெளியிட்டு  உயர்ந்த தனது வாசக மரியாதையை எளிமையாய் தெரியப்படுத்தியது விகடன்..


னந்த விகடனுடனான அதன் வாசகர் ரீச் மிகப் பிரமாதமான ஒன்றாக அந்த நாட்களில் இருந்தது.   சொல்லப்போனால்  ஆனந்த விகடனின் பொன்விழாக் கொண்டாட்டங்கள்  வாசகர் திருவிழாக்களாகவே  தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் கோலாகலமாகக்கொண்டாடப்பட்டன உள்ளூர் விகடன் பத்திரிகை ஏஜெண்டுகள்   தங்கள் வீட்டுத் திருமண வைபவங்கள் போலவே வாசகர் திருவிழாவை திறம்பட நடத்துவதில் பெரும் பங்காற்றினர்.

நான் அப்பொழுது காஞ்சீபுரம்  தொலைபேசி இணைப்பகத்தில் பணியாற்றி வந்தேன்.  19-7-80  சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் காஞ்சீபுரம் அண்ணா அரங்கில் விழா களைகட்டியது.  மனைவி, மகன், மகள் என்று  குடும்பத்துடன்  விழாவிற்குச் சென்றிருந்தேன்..  என் மகனை  மட்டும்  அழைத்துக் கொண்டு   அரங்க மேடையின் பின்புறம் சென்று  விகடன்  ஆசிரியர் பாலுவைச் சந்தித்தேன்.   கையில் ஆனந்த விகடனின் 8-12-74  தேதியிட்ட இதழின் 16-ம் பக்கத்தில் பிரசுரமாகியிருந்த என் மகனின் புகைப்படத்தை ஆசிரியரிடம் காட்டியதில் அவருக்கு ஏகப்பட்ட சந்தோஷம்..  என் மகனை அணைத்துக் கொண்டு "ஜீவியை ஜீவாவுடன் பார்த்ததில் ரொம்பவும் சந்தோஷம்" என்றார்..  'பெரியவனானவுடன் நீயும் விகடனில் எழுதணும்.. செய்வியா?" என்று என் மகனிடம் கேட்டார்.  அவன் 'சரி' என்கிற பாவனையில்.  தலையாட்டிய பொழுது பரவசத்துடன் என்னைப் பார்த்தார்.  ஐந்து ஆண்டுகள் கழித்தும் விகடனின் அந்த இதழை புதுக்கருக்கு அழியாமல் நான் வைத்திருப்பதை அந்த பத்து நிமிட சந்திப்பில் இரண்டு முறை சொல்லி மகிழ்ந்தார்.

விழா  தொடங்கியதும் அவரிடம் விடைபெற்றுக் கொண்டு அரங்கில் என் மனைவியும் மகளும் அமர்ந்திருந்த இடத்திற்கு  வந்தேன்.  அண்ணா அரங்கம் செம கூட்டத்தில் நெளிந்தது.   ஜோக்குகளும் விகடனும் பிரிக்க முடியாத இரட்டைக் குழந்தைகள்.  மொத்தக் கூட்டமும் அன்று வாயெல்லாம் பல்லாக .      இருந்தது.  பொன்விழா ஆண்டு விகடன் வைத்திருந்த போட்டிகளில் கலந்து கொண்டு அதன் வாசகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தார்கள்  என்று தான் சொல்ல வேண்டும்.   அரங்க மேடையிலேயே விகடனுக்கு வாசகர்கள் அனுப்பியிருந்த (காஞ்சீப்ரத்தில் 85037)  கடித உறைகளை குலுக்கிப் போட்டு         9 அதிர்ஷ்டசாலிகள் பரிசுக்குரியவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது மொத்தக் கூட்டமுமே உற்சாகத்தில் பீரிட்டது...  முதல் பரிசு என்னவோ அந்த கூட்டத்தில் இல்லாத பம்பாய் வாசகர் ஒருவருக்கு கிடைத்து அவர் பெயர் படிக்கப்பட்ட பொழுது  அரங்கமே ஆர்ப்பரித்தது...புகைப்படத்தின்  மூன்றாவது வரிசையில் நான், என் மனைவி கீதா, மகன் ஜீவாவும்--மகள் கவிதாவும்  (ஒரே இருக்கையை பகிர்ந்து கொண்டு) அமர்ந்திருக்கிறோம்.

16 comments:

கோமதி அரசு said...

உங்கள் கடிதமும், உங்கள் மகன் படமும் இடம்பெற்றது மகிழ்ச்சியான தருணம்.
விகடனும் உங்களுக்கு அந்த பத்திரிக்கையுடன் உள்ள தொடர்பும் அருமை.
விகடன் ஆசிரியர் வேண்டுகோள் படி தங்கள் மகனும் பத்திரிக்கையில் எழுதுகிறார்களா?வசந்த கால நினைவலைகள் அருமையான தலைப்பு.

நெல்லைத்தமிழன் said...

'வசந்தகால நினைவலைகள்' மிகவும் ரசிக்கும்படி இருந்தது.

எப்படி இருந்த விகடன், பாலசுப்ரமணியம் அவர்களுக்குப் பிறகு இவ்வளவு மோசமாக கட்சிப் பத்திரிகைபோல ஆகிவிட்டது? காலத்தின் கோலம்தான். எப்போது வியாபாரத்துக்காக மற்றவர்கள் தயவை எதிர்பார்க்கிறோமோ அப்போதே பத்திரிகையின் தார்மீக நெறியைக் காவு கொடுத்துவிடுகிறோம் என்பதை விகடனின் ஆசிரியர் (பாலசுப்ரமணியம் அவர்கள் காலத்துக்குப் பின்) நினைத்துப்பார்க்கவில்லை. நல்ல இதழ், தகுதி இழந்து வாசகர்களை இழந்ததுதான் மிச்சம்.

நெல்லைத்தமிழன் said...

விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியத்தைப் பற்றி பல நல்ல நிகழ்வுகளைப் படித்திருக்கிறேன். அவர் காலத்தைய விகடன், இதழ்களில் கோலோச்சியது என்றால் மிகையாகாது. (அரசியலுக்காக சிலரிடம் காம்ப்ரமைஸ் செய்துகொண்டபோதிலும்)

ஸ்ரீராம். said...

விகடன் நினைவுகள் சுவாரஸ்யம். அந்தக் கால விகடன் விகடன்தான். இப்போது வாசன் குடும்பத்துக்கும் விகடனுக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்றே தெரியவில்லை.

வெங்கட் நாகராஜ் said...

இனிமையான நினைவலைகள்...

அப்போதைய விகடனும் இப்போதைய விகடனும் - எத்தனை வித்தியாசம்? சமீபத்தில் நண்பர் வீட்டில் விகடன் பார்த்தபோது ஒரு சில பக்கங்களுக்கு மேல் படிக்க பிடிக்கவில்லை.

ஜீவி said...
This comment has been removed by the author.
வே.நடனசபாபதி said...

தங்களின் வசந்தகால நினைவுகளில் நானும் லயித்துப் போனேன். அப்போது இருந்த விகடனையும் இப்போது உள்ள விகடனையும் ஒப்பிடவே மனம் ஒப்பவில்லை. அப்போதைய விகடன் ஆசிரியர் யாருக்கும் அஞ்சாதவர். அன்று இருந்த எம்.ஜி. ஆர் அரசு அவரை சிறையில் அடைத்தும் தனது கொள்கையிலிருந்து மாறாமல் விகடன் இதழை நடத்தியவர். அப்படிப்பட்டவர் தங்களின் அஞ்சலுக்கு மதிப்பு தராமல் இருப்பாரா? அது சரி. தங்கள் மகனும் தங்களைப்போல் விகடனில் எழுதினாரா?

ஜீவி said...

@ கோமதி அரசு

விகடனுடான தொடர்புகளைச் சொல்ல இன்னும் இருக்கிறது.
என் மகன் ஜீவாவின் படைப்புகள் பற்றி தனிப் பதிவில் சொல்கிறேன். ஆழ்ந்து வாசித்து விட்டு வெளிப்பட்ட கேள்விக்கு நன்றி, கோமதிம்மா. தலைப்பு திடீரென்று மனசில் தோன்றிய தலைப்பு. இந்தத் தலைப்பில் தொடர்ந்து சில பழைய நினைவுகளைப் பகிர்ந்து கோள்வதாக இருக்கிறேன்.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

தங்கள் பின்னூட்டங்களைப் படித்ததும் விகடன் ஆசிரியர் பாலு பத்திரிகை சுதந்திரத்தை பெரிதாக நினைத்து வருத்தம் தெரிவிக்க மறுத்து சிறை சென்றது நினைவுக்கு வருகிறது.
விகடனின் வாழ்க்கைச் சரித்திரத்தில் அதெல்லாம் பொன்விழாக் காலம் தான். கருத்துக்களை பகிர்ந்து கோண்டமைக்கு நன்றி, நெல்லை.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

ஆமாம், விகடனைப் பற்றிச் சொல்ல நினைத்தால் எல்லாமே சுவாரஸ்யம் தான். வசுமதி ராமஸ்வாமி, நாடோடி, தேவன் எல்லோரும் நினைவுக்கு வருகிறார்கள். ஜெயகாந்தன் உச்சம் தொட்டது விகடனில் தான். நிறைய இந்தக்கால தலைமுறைக்கு சொல்ல இருக்கின்றன. நினைவுக்கு வருபவைகளை இந்தப் பகுதியில் அவ்வப்போது எழுதுகிறேன். தங்கள் கருத்துக்கு நன்றி.

ஜீவி said...

@ வெங்கட் நாகராஜ்

இப்போதைய விகடனைப் பற்றி இளைய தலைமுறை சார்ந்த பதிவர்கள் யாராவது தாங்கள் உணரும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் நன்றாகத் தான் இருக்கும்.

விகடனின் அளவு-- பத்திரிகையின் சைஸ் மாற்றியதிலிருந்து-- அன்றைய விகடனுக்கு இன்றைய விக்டன் அந்நியப்பட்ட மாதிரி ஒரு உணர்வு.. அப்புறம் உள்ளடக்கத்திற்கு சொல்லவும் வேண்டுமோ?..

நேற்று, இன்றோடு போகப்போவதில்லை.. நாளைய விகடனும் எப்படி மாறும் என்று பார்க்கலாம். வாசித்து கருத்து சொன்னமைக்கு நன்றி, வெங்கட்.Thulasidharan V Thillaiakathu said...

விகடனுடனான உங்கள் அனுபவங்கள் மிக மிக ஸ்வாரஸ்யம். இப்போதும் இது போன்ற வாசகர்களுடனான நெருக்கும் நிலவுகிறதா?

உங்கள் கடிதமும், உங்கள் மகனின் படமும் வெளியானதும், பின்னர் நீங்கள் ஆசிரியரை மேடைக்குப் பின் சந்தித்து அவருடன் பரிமாறிக் கொண்டதும். எத்தனை மகிழ்ச்சியான விஷயம். ஆசிரியரும் எப்படி மகிழ்ந்திருக்கிறார். வெரி சிம்பிள் பெர்சன்!

நல்ல நினைவுகள் பொக்கிஷமான நினைவுகளும் கூட.

துளசிதரன், கீதா

கீதா: நான் சமீபத்தில் ரயிலில் பயணித்த போது ஆவி ஒன்று வாங்கினேன் எப்படித்தான் இருக்கிறது என்று பார்க்க. ஏனோ மனம் அதில் ஈடுபடவில்லை. ஈர்க்கவில்லை.

Thulasidharan V Thillaiakathu said...

இப்போதைய சைசும் ஏனோ பிடிக்கவில்லை....

கீதா

ஜீவி said...

@ நடன சபாபதி

அப்போதைய விகடன் அந்தக் காலத்திற்கு, இப்போதைய விகடன் இந்தக் காலத்திற்கு என்று கொள்ள வேண்டியது தான். வேறு என்ன செய்வது?..

என் மகனின் புத்தக ஆக்கங்களைப் பற்றி இந்தப் பகுதியிலேயே தனிப்பதிவாகச் சொல்கிறேன். jeevagv.blogspot.com என்பது அவரது பதிவு தளம்.

தங்கள் அன்பான வருகைக்கும் வாசித்து கருத்து சொன்னமைக்கும் மிக்க நன்றி, சார்.

ஜீவி said...

@ Thulasidarn V. Thillaiakathu

துளசிதரன்! உங்களை இங்கே பார்த்ததில் மகிழ்ச்சி.

வெரி சிம்பிள் பெர்சன் தான்!.. அந்நாளைய ஆ.விகடன் அலுவலக நடைமுறைகளும் அப்படியே! பாதுகாப்புப் பணியில் இருப்போருக்கு மட்டும் தகுந்த காரணம் சொல்லி உள் நுழைந்து விட்டீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு விசிட்டர் அடையாளம் கொண்ட அந்தஸ்த்து கொடுத்து யாரை வேண்டுமானாலும் நேரடியாகப் பார்த்துப் பேசுவதற்கு வழி காட்டுவார்கள். வாசகர்கள் தாம் எஜமானர்கள் என்று உண்மையாகவே உணர்ந்த நிறுவனம்.

சேவற்கொடியோன் என்ற புனைப்பெயரில் (உன் கண்ணில் நீர் வழிந்தால்?) எழுதியவர் S.B.அவர்களே! இவர் இயக்கிய 'எல்லோரும் நல்லவரே' என்ற திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த படம்.


ஜீவி said...

@ கீதா

ஆனால் இந்த சைஸைத் தான் ஒரு பத்திரிகைக்கான அந்தஸ்த்தாகக் கொள்கிறார்கள். :))
TIME மாதிரி என்று மேனாட்டு பத்திரிகை நினைப்புகள்!

இந்தா சைஸ் நமக்குப் பிடிக்காமைக்குக் காரணம் இதற்கு இது தான் என்று மனம் பழக்கப்பட்டு விடுகிறது போலும்! பத்திரைகைன்னா கையட்டகமா, வாசிப்பதற்கு வசதியாக, சின்ன புத்தகம் போல... என்று மனசுக்கு பழக்கப்பட்டதை மாற்றிக் கொள்ள அந்த மனமே லேசில் இன்னொன்றை அங்கீகரிக்காது தான் காரணம்.

குமுதம் சைஸில் கட்டிங் வேஸ்ட் அதிகம்; இதில் குறைச்சல் என்கிற மாதிரி நமக்குத் தெரியாத வேறு காரணங்களும் இருக்கலாம்!Related Posts with Thumbnails