மின் நூல்

Tuesday, July 23, 2019

வசந்த கால நினைவலைகள்..

                                                                       41னந்த விகடனில் ஜெயகாந்தனின் உன்னைப்  போல  ஒருவன் குறுநாவல்  பிரசுரம் கண்டு வாசகர் மத்தியில்  மிகுந்த வரவேற்பைப் பெற்றது.   ஆனந்த விகடனில் அவரது முதல் குறுநாவலும் அதுவே.  பின்னால் இதே கதையை குறைந்த செலவில் திரைப்படம் ஆக்கினார் அவர்.  வழக்கமாக அந்தப்
படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்யாமல்  ப்லீம் ப்ரிண்ட் போட்டு  ஊர் ஊராக சென்று அங்கு வாடகைக்குக் கிடைக்கும் தியேட்டரில் காலைக் காட்சி போல  திரையிட ஏற்பாடுகள் செய்தார்.  இதற்கு பல்வேறு இடங்களிடம் விரவிக் கிடந்த அவரது வாசக அன்பர்கள், பொதுவுடமைக் கட்சித் தோழர்கள் பெரிதும் உதவியாக இருந்தனர். 
அந்த மாதிரி புதுவையில்  உன்னைப் போல் ஒருவன் படப்பெட்டியோடு அவர் வந்திருந்த பொழுது அவருடனான அடுத்த சந்திப்பு   நிகழ்ந்தது.  இந்தத் தடவை   அவரைச் சுற்றியிருந்த கூட்டந்தில் என்னை அடையாளம் கண்டு கொண்டு  "எப்படியிருக்கீங்க, ஜீவி?" என்றார்.  நான் பதில் சொல்வதற்குள் அடுத்த கேள்வியாக  "சிரில் வரலையா?" என்றார்.  "வர்றதா சொல்லியிருக்கிறார்.." என்று நான் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே,  இன்னொருவர் குறுக்கிட்டு ஏதோ  கேட்டார்.  அதற்குள் என் வழக்கப்படி 'ஆட்டோகிராப்' நீட்டி கையெழுத்து வாங்கிக் கொண்ட பொழுது, 'அவசியம் வீட்டுக்கு வாருங்கள்.." என்று தன் சென்னை எழும்பூர் வீட்டு முகவரியையும் குறித்துக் கொடுத்தார்.   அதற்குள் சிரிலும் வந்து விடவே பேச்சு  திரைப்படம் குறித்து அலைபாய்ந்தது. 
                                                                 
படத்தில் இடைவேளையில் ஜெயகாந்தன் பேசினார்.   'இன்றைய  தமிழ் சினிமா ரசனையையும் அதன் சிருஷ்டி   முறைகளையும் இந்தப் படம் பூரணமாக மறுத்து ஒதுக்கியிருக்கிறது.  இது பற்றி ஓரளவு அறிந்திருந்தும் என்னைப் புரிந்து கொண்டமையால் இந்தத் திரைப்படத்தைப் பார்க்க வந்திருக்கும்  நண்பர்களே!  உங்களை நான் வணங்குகிறேன். பாராட்டுகிறேன்.  காலத்தின் தேவையை உணர்ந்து அதற்கான கடமையை ஆற்ற வந்தவர்களின் படைப்பு என்ற அளவில் இந்தப் படமும் அதற்கான ஓர் ஆரம்பமே..' என்ற கருத்தில்  தொடங்கியதாக நினைவு.

ஜெயகாந்தனே இயக்கிய படம் இது.  ஆறு தயாரிப்பாளர்களில் ஒருவராக 'ஆசிய ஜோதி பிலிம்ஸ்' என்ற தயாரிப்பு நிருவனத்தின் தயாரிப்பாக இந்த படம் வெளிவந்தது.   பின்னால் இந்த 'உன்னைப் போல் ஒருவன்' தேசிய விருதையும் பெற்றது.  இந்தப் படத்தின் முக்கிய பாத்திரத்தில் காந்திமதி நடித்திருந்தார்.

புதுவையில்  நான் இருந்த வரை  காங்கிரஸ்,  கம்யூனிஸ்ட் என்று இரண்டே இரண்டு கட்சிகள் தான் இருந்தன.  கம்யூனிஸ்ட் இயக்கமும் தோழர் வ. சுப்பையாவின் தலைமையில் பஞ்சாலைத் தொழிற்சங்கங்களின் வலுவோடு தொழிலாளர்  நலன் சார்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தது.  குபேர் ஆட்சி போய் வெங்கட சுப்பையாயின் காங்கிரஸ் ஆட்சி வந்த பொழுது புதுவையில் காலூன்ற கழகங்களின் முயற்சிகள் லேசாக வேர் கொள்ள ஆரம்பித்தது.

சென்னையிலிருந்து காங்கிரஸ் பேச்சாளர்கள்  சிலர் வந்து  ஒதியஞ்சாலை மைதானத்தில் கூட்டம் போட்டதெல்லாம் நினைவிலிருக்கிறது.  நாத்திகம் ராமசாமி  சென்னையிலிருந்து வெளிவந்த நாத்திகம் என்ற பத்திரிகையின் ஆசிரியர்.  அந்நாட்களில் அவர் காங்கிரஸ்  மேடைகளில் பேசுவது  வழக்கம்.   எது எப்படியிருந்தாலும் புதுவை மக்களின் ஆசை, அபிலாஷையெல்லாம் ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்தது.   'புதுவை சென்னை மாகாணத்தோடு சேர்ந்து விடலாகாது;  புதுவையின் தனித்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்' என்பதே அது.  அதனால் அந்நாட்களில்  மேடைகளில் புதுவை மக்களின் ஒன்றுபட்ட இந்தக் கோரிக்கைக்கு எதிராக யாரும் பேச மாட்டார்கள்.  சொல்லப் போனால் புதுவையின் தனித் தன்மையை பாதுக்காப்போம் என்று உறுதி மொழி வேறு கொடுப்பார்கள்.

இந்த சமயத்தில் தான் எங்கள் தொலைத் தொடர்புத் துறையின் தமிழக வட்டத்தில்  சில மாறுதல்கள் ஏற்பட்டன.   இதுகாறும்  சேலம் தொலைதொடர்பு  வட்டத்தில் இருந்த பவானி  என்ற ஊர்  கோவை வட்டத்தோடு சேர்ந்தது.   இந்த மாற்றத்தை உபயோகப்படுத்திக் கொண்டு பவானிக்கு விருப்ப மாற்றலுக்காக நான் விண்ணப்பித்திருந்தது ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பவானி அழகான ஊர்..   நான் தபால் அலுவலகத்தில் பணியாற்றிய குமார பாளையம்  பவானிக்கு பக்கத்து ஊர் தான்.  இரண்டு ஊர்களையும் இணைப்பது காவிரிப் பாலம் தான். 

பவானியில் பணியாற்றும் காலத்தில் இந்தி எதிர்ப்பின் தீவிரம் மேலோங்கிய காலம்.   அந்நாட்களில் ஜெயகாந்தன் பவானிக்கு வந்திருந்தார்.  காங்கிரஸ் மேடையில் கர்ஜித்தார்.  அவர் பேச்சு முழுக்க முழுக்க தனி மனித உரிமையில் தடையிடல் சம்பந்தப்பட்டு அமைந்திருந்தது.    கூட்டம் முடிந்ததும் அவர் தங்கியிருந்த  ஓட்டலில் அவரது வாசகர்கள் கூட்டத்தோடு கூட்டமாக சந்தித்தேன்.

இதெல்லாம் நடந்து முடிந்து கிட்டத்தட்ட 54 ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழகத்தில்  இந்தி மொழி  எதிர்ப்புக்கான காரணங்கள் உயிர்ப்புடன் இருப்பது தான் இன்னொரு ஆச்சரியம்.

வட இந்திய மக்களின் சில ஆங்கில உச்சரிப்புகள் அபத்தமானவை.  -- sion  -- tion  என்று முடியும் வார்த்தைகளை விநோதமாக உச்சரிப்பார்கள்.

தெற்கில் ஆங்கிலம் வளர்ந்த அளவுக்கு வடக்கே இல்லை.  அதனால் தான் இந்திக்கு அபரிதமான வளர்ச்சி அங்கே.  இங்கே தமிழின் வளர்ச்சியை ஆங்கிலம் சாப்பிட்டு விட்டது.   தமிழை ஓரங்கட்டி விட்டு ஆங்கிலத்தால் வாழ்க்கையை வளப்பமாக்கிக் கொண்டோம்.  ஆங்கில மொழித் தேர்ச்சியில் தனிமனிதனுக்கு  லாபங்கள் எக்கச் சக்கம் தான்.  ஆனால் அந்த லாபங்கள் தாய் மொழி வளர்ச்சிக்கு அன்னியப்பட்ட லாபங்கள் என்ற உணர்வு மட்டும் நமக்கு இல்லாது போயிற்று.

அடிக்கடி தில்லி போக வேண்டியிருக்கிறதே என்று அரசியல்வாதிகளும் இந்தியைக் கற்றுத் தேர்ந்தார்கள்.  ஒரே கட்சியில் கூட  இந்தி கற்றவருக்கும் கற்காதவருக்கும் இடையே பாலமாக துபாஷி வேலை பார்க்க இந்தி உதவிற்று.  தில்லி வாழ் மாற்றுக் கட்சிகாரர்களுடனான சொந்த லாபத்திற்கான நட்பு இறுக இந்தி கற்றது துணையாக இருந்தது.

அதனால் ஒன்று தெரிந்தது.   அவசியம் உள்ளோருக்கு தெரியாத எந்த  மொழியையும் கற்பதில் எந்தவிதத்தில் பார்த்தாலும் ஏதாவது ஒரு லாபமே  தவிர  இழப்பு ஏதுமில்லை என்று தெரிகிறது..    அதுமட்டுமில்லை..  இன்னொரு மொழியைக் கற்பதால்   தாய்மொழித் தமிழுக்கு எந்த ஏற்றமோ அன்றி  ஏற்றமின்மையோ ஏற்பட்டு விடவில்லை என்பது தெரிகிறது.. அது பாட்டுக்க அது,  இது பாட்டுக்க இது   என்று ஒன்றுக்கொன்று இணைப்பில்லாத இரு கோடுகள் தத்துவம் இதுவாயிற்று.

கன்னடம், தெலுங்கு, மலையாளம்  போன்ற மொழிவழிப் பிரிந்த மாநிலங்களுக்கும் நம்மைப் போலவான  தாய் மொழிப் பற்று இல்லை என்று சொல்லி விட முடியாது..     மலையாளத்தில் இலக்கியம்  அந்த மக்களின் இலக்கியம்.   எளிய  மக்களின் வாழ்க்கை முறை தான்   அங்கே  இலக்கியம் என்ற பெயரைச் சூட்டிக் கொண்டிருக்கிறது..   இங்கே  எப்படி என்று உங்களுக்கே தெரியும்.

எல்லா பிராந்திய மொழிகளும்  வளரும் வரை  இந்த அகண்ட பாரதத்தின் தொடர்பு மொழி ஆங்கிலமாகவே இருக்க வேண்டும் என்று  அந்நாளைய பிரதமர் நேருவிடம் உறுதி மொழி வாங்கி   நெஞ்சை  நிமிர்த்தியது நாம் தான்.  பண்டித நேருவையே பணிய வைத்தோம் என்று எக்காளமிட்டோம்.

இந்தியை எதிர்க்க வில்லை,  இந்தித் திணிப்பைத் தான் எதிர்த்தோம் என்று பூசி மெழுகினதால் விளைந்தது ஏதுமில்லை.   அன்று  இந்தி இன்று சமஸ்கிருதம் என்று வேறொன்றுக்குத் தாவி இருக்கிறோம்.  அவ்வளவு தான்.  எதையாவது எதிர்க்கொண்டிருக்க வேண்டியது நமது தேவையாகி விட்டது.  பக்கத்து மாநிலக் காரர்களோ நோகாமல்  ஏற்றமிகு  வாழ்க்கைக்கு தங்களின் ஆற்றலையே ஏணிப்படிகள் ஆக்கியிருக்கிறார்கள்.

பெற்ற அந்த உறுதிமொழியால் விளைந்த பலன் என்னவென்று கணக்குப் பார்க்க மட்டும் நாம் தயங்குவோம்.  ஏனென்றால் ஆங்கிலேயர் நம்மை ஆண்ட காலத்திலேயே ஆங்கிலத்தை   அவனை விட அழகாகப் பேசியது நாம் தான்.  ஆதியிலிருந்து ஆங்கிலேயரின் நடை, உடை,  பாவனை, நாகரிகம் என்று மோகித்து  ஆங்கிலம் அறியாத பாமர மக்களை சுரண்டிக் கொழுத்தது  நாம் தான்.  ஆங்கிலத்திலேயே யோசித்தால் தான் நம் யோசனைகளே செயல்படும் என்ற அளவுக்கு மழுங்கிப் போனவர்கள் நாம்.

இத்தனை காலம் இந்தி தெரியாமலேயே  வாழ்ந்தாயிற்று..  பாக்கி காலமும் அப்படியே தெரியாமல் வாழ்ந்தால்  போச்சு.


(வளரும்)

22 comments:

நெல்லைத்தமிழன் said...

சொல்லிட்டீங்க இல்லை...இப்போ தமிழ்க் காவலர்கள் வந்துடுவாங்க. நம்ம ஊர் தமில் காவளர்கள், அவங்க தொழில்ல மட்டும், ஹிந்தியை ஏத்துக்குவாங்க. ஏன் அரசுப் பள்ளிலாம் நடத்தலை, அப்படி நடத்தி தமிழ் வளர்க்கலாமேன்னு கேட்டா, அப்போ எங்க பேங்க் பேலன்ஸை யார் வளர்ப்பாங்க என்று திருப்பிக் கேட்பாங்க.

நெல்லைத்தமிழன் said...

புதுவை எப்போதும் தனித் தன்மை உடையது. அதன்மீதான பிரஞ்சுத் தாக்கம்தான் அதற்குக் காரணம்.

ஸ்ரீராம். said...

என்னைப்பொறுத்தவரை இந்தி தெரியும் என்றும் சொல்லமுடியாது. தெரியாதுஎன்றும் சொல்லமுடியாது. அரைகுறை!

ஸ்ரீராம். said...

ஜெயகாந்தன் பற்றிய சம்பவங்கள் முழுமையில்லாமல் இருப்பது போல ஒருஏக்கம். அவரைப்பற்றி இன்னும் இன்னும் தெரிந்துகொள்ள ஆவல்.

வல்லிசிம்ஹன் said...

ஜெயகாந்தனின் ஆளுமை சிறந்திருந்த காலம். அவரை நினைக்கும்
வலிமை பெற்ற காட்டு ராஜாதான் நினைவுக்கு வருவார்.
உன்னைப் போல் ஒருவன் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் இல்லை.
ஆனால் தொலைக்காட்சியில் பார்க்கும்போது
மசாலா கலப்பில்லாத படம் என்பது தெளிவாக இருந்தது.

எல்லோரும் எல்லாமொழியையும் கற்கலாமே. இதே சென்னையில் தான் ஜப்பான் மொழி, ஜெர்மன்
எல்லாம் கற்கிறார்.அந்தந்த நாட்டுக்கு வேலைக்குப் போகிறார்கள்.
தமிழ் அறிந்த நன்மக்கள் அத்திவரதர் வருடா வருடம் விழா
காண்கிறார் என்று சொல்கிறார்.
அந்த இந்தி எதிர்ப்பின் போதுதான் கல்லூரிகள் மூடி என்
தேர்வுகளும் ஒத்திப் போயின.
ஆக்க பூர்வமாக ஒன்றும் செய்யாமல் எதிர்த்துக் கொண்டே
இருக்கட்டும்.
என் இந்தியும் பள்ளிக்கூட அளவே தான்.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

அவர் செய்யலையா, இவர் செய்யலையா என்று இன்னொருத்தரை கை காட்டி நியாயம் பேசுவது தான் இங்கு வழி வழி வந்த வழக்கமாகப் போய்விட்டது.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன் (2)

அந்நாட்களில் பிரஞ்சுப் போர்ப்படையில் வேலை செய்தோருக்கு மரித்தவர்களுக்கு அவர் வம்சா வழியினருக்கு என்று புதுவையில் தங்கியிருப்போருக்கு பென்ஷன் தவறாமல் வரும். பிரஞ்சு தமிழர்களும் இதில் உண்டு. பெண்மக்கள் ரிக்ஷாக்களில் போஸ்ட்டாபீஸ் வந்து மாதாமாதம் தங்களுக்கு பிரான்சிலிருந்து வரும் பென்ஷனை வாங்கிச் செல்வதை பார்த்திருக்கிறேன்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

எனக்கு இந்த வயதிலும் இந்தி தெரிந்திருக்க வேண்டிய தேவை பெருகி வருகிறது.

என்ன செய்வது?.. சூடு கண்ட பூனை போல நிலைமை ஆயிற்று.

ஒரு நாள் அதற்கான புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டு ஆரம்பப் பாடங்களை
கற்க முயன்றேன். உத்தேசமாக ஒன்று, இரண்டு வார்த்தைகளாவது பேச, பிறர் பேசுவது புரிய கற்றுக் கொள்ள வேண்டும் என்ற தேவை நெருக்குகிறது. பார்க்கலாம்.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (2)

நானும் அதை உணர்கிறேன். தனி மனிதருக்கு புரிதலான ஒரு விஷயம் பொதுவெளியில்
புரிதலற்றதாய் ஆகிப் போய்விடுகிற ஆபத்தும் இருக்கிறது. நம்மிடையே இல்லாதவரை
பற்றி சொல்லும் பொழுது அதற்கான சில கட்டுப்பாடுகளும் வேண்டியிருக்கிறது. இருந்தாலும் இந்தத் தலைமுறையினருக்குச் சொல்ல வேண்டியவைகளைச் சொல்ல முயற்சிக்கிறேன்.

பாரதி பற்றி எழுதும் போதும் இதே இயலாமைகளை உணர்ந்திருக்கிறேன். பாரதி கஞ்சா உபயோகித்தது தான் இங்கு பெரிய விஷயம் பலருக்கு.

ஜீவி said...

@ வல்லிசிம்ஹன்

//வலிமை பெற்ற காட்டு ராஜாதான் நினைவுக்கு வருவார்.//

அவருக்கு மிகவும் பிடித்த வார்த்தைகளில் ஒன்று சிம்ஹம். சிங்கம் என்று சொல்ல மாட்டார். சிம்ஹம் என்று அந்த வார்த்தைக்கு ஒரு ஏற்றம் தந்து உச்சரிப்பது தான் அவர் வழக்கம். அவர் திருமகனாரின் பெயர் ஜெயசிம்ஹன்..


ஜீவி said...

@ வல்லி சிம்ஹன்

//உன்னைப் போல் ஒருவன் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் இல்லை.. //

அந்தப் படத்தை தியேட்டரில் வெளியிடாமல் தடுப்பதற்கு அந்நாட்களில் ஒரு கூட்டமே செயல்பட்டது. ஜெயகாந்தனும் அவருக்கு நெருங்கிய தோழர்கள் தியேட்டர் வாசலில் தடியுடன் நின்று தடுப்பாவர்களைத் தடுத்தார்கள் என்று பிற்காலத்தில் தெரிந்தது. சினிமா போஸ்டர்களுக்கு தார் பூசப்பட்டதாம்.

படப்பெட்டியுடன் அவர் புதுவை வந்து படத்தைப் போட்டுக் காடியது தான் எனக்குத் தெரியும். காமராஜர் அந்நாட்களில் இந்தப் படத்தைப் பார்த்து விட்டு வெகுவாகப் புகழ்ந்தார். மொத்த செலவே ஒரு லட்சம் தானாம். மூன்றே வாரத்தில் படம் ரெடியாகி விட்டதாம். சினிமா, படப்பிடிப்பு இதெல்லாம் பற்றி அனுபவ ஞானம் இல்லாத ஜெயகாந்தனின் இந்த முயற்சி பாராட்டப்பட வேண்டியது தான். அடுத்த அவரது தயாரிப்பான யாருக்காக அழுதான்? படப்பிடிப்பில் இந்த ஞானத்தை அவர் பெற்று விட்டார்.

வெங்கட் நாகராஜ் said...

ஒரு மொழியைக் கற்றுக் கொள்வதில் தவறில்லை என்பதை உணரவில்லை. எதிர்ப்பு என்ற பெயரில் அரசியல் மட்டுமே பிரதானமாகி விட்டது. ஹிந்தி தெரியாமல் ஹிந்தி படிக்காமல் தில்லி வந்து, சில மாதங்கள் தடுமாறியது எனக்கு பெரிய அனுபவம். ஹிந்தி பேசவும், பிறகு தான் எழுதவும், படிக்கவும் கற்றுக் கொண்டேன். அதன் பிறகு ஹிந்தி மொழி மூலம் இந்தியாவின் பல பகுதிகளிலும் பிரச்சனை இன்றி சுற்றி வர முடியும் என்பதை உணர்ந்தேன்.

உங்கள் அனுபவங்கள் தொடரட்டும். பல தகவல்களை இந்தத் தொடர் மூலம் அனைவரும் தெரிந்து கொள்ள முடியும்.

ஜீவி said...

@ வெங்கட் நாகராஜ்

வட இந்தியாவிலிருந்து இங்கு வந்து தொழில் செய்யும் வணிகர்கள் தமிழில் பேசி தம் வியாபாரத்தை மேம்படுத்தவில்லையா?.. அதே போல தமிழக வியாபாரிகளுக்கும் இந்தி சரளமாகப் பேசவில்லையா?.. இதையெல்லாம் நாம் நினைத்தேப் பார்ப்பதில்லை.

இந்தி ஆதிக்க மொழி. இந்தி பேசுபவர்கள் நம்மை ஆதிக்கம் செலுத்த முயல்பவர்கள் என்ற எண்ணம் வலுவாக இங்கு பதிந்து போய் விட்டது. இந்த எண்ணத்தைப் போக்க இந்தி, ஆங்கிலம் தெரிந்த அரசியல்வாதிகள் தமிழகம் வரும் பொழுது ஆங்கிலத்திலேயே பேச வேண்டும் என்ற உறுதி பூண வேண்டும். ஆங்கிலம் அறிந்த அகில இந்திய தலைவர்கள்
நாடாளுமன்றத்திலும், பொது விவாதங்களிலும், பத்திரிகையாளர் சந்திப்பிலும் ஆங்கிலத்தில் தங்கள் கருத்தைச் சொல்ல முயல வேண்டும். அதே போல ஆங்கிலம், தமிழ் அறிந்த அரசியல்வாதிகள் கூடிய மட்டும் தமிழ் நாட்டுக்கு வெளியே ஆங்கிலத்தில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள முயல வேண்டும். இந்த நடவடிக்கைகள் எல்லாம் வெகுவாக வடக்கிற்கும் தெற்கிற்கும் ஒரு சகஜ நிலையை ஏற்படுத்தவும், வட இந்திய தலைவர்கள் மேல் மதிப்பையும், மரியாதையையும் ஏற்படுத்த உதவும். அவர்கள் கட்சி இயக்காங்களும் தமிழகத்தில் பலப்பட இதுவும் ஒரு முக்கிய காரணமாகிப் போய் பலனளிக்கும்.

கடந்த கால அனுபவங்களும் இதுவே தான். இந்தப் பகுதியை வாசித்து கருத்திடுவதற்கு நன்றி, வெங்கட்.

இராய செல்லப்பா said...

ஜெயகாந்தனுடன் எனக்குக் கல்லூரி நாட்களில் இருந்தே பழக்கம் உண்டு. அவருடைய எழுத்துக்கள் எல்லாவற்றையும் நான் 'ஞானரதம்' காலம் வரை பின் 'ஜெய ஜெய சங்கர' வரையிலும் படித்திருக்கிறேன். என் எழுத்தின்மீது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் அவர். சினிமாவில் அவர் செய்ய முயன்ற சோதனைகளைத் தொடராமல் அவரே விட்டுவிட்டதுதான் துர்ப்பாக்கியம். கடைசி முப்பதாண்டுகள் இலக்கியத்தின் பக்கமோ சினிமாவின் பக்கமோ மேடைப்பேச்சின் பக்கமோ வராமல், நண்பர்களோடு வெற்று அரட்டையில் வாழ்னாளை அவர் வீணாக்கியது தமிழுக்கு மிகுந்த இழப்பாகும்.

-இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து

ஜீவி said...

@ இராய செல்லப்பா

என் எழுத்தின் மீது அவர் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் -- என்று நீங்கள் சொல்லியிருப்பது நானும் அவ்வாறே அடிக்கடி நினைத்துக் கொள்வது. அதே மாதிரி
அவரது கடைசி முப்பதாண்டுகள் அவரைப் பற்றிய எத்தனையோ விவரங்களை குட்டி குட்டி செய்திகளாக உணர்ந்து அதற்கேற்ப மறுவினைகள் மனசில் கிளர்ந்தெழுந்தாலும் நேரடியான தொடர்பு என்பது அறுந்தே போயிற்று.

சினிமா- மேடைப்பேச்சு எல்லாமே அவர் இயல்புக்கு அன்னியப்பட்டுப் போய் விட்டன.
எழுத்துமா என்று கேட்டால், ஆமாம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. எழுத்தின்
போக்கு (நவீனத்துவம், பின் நவீனத்துவம்) என்று வேறு வேறு திசைகளில் அலைபாய்ந்த காலத்தில், அந்த மாறி விட்ட நேரத்து புகழ்பெற்றவர்கள் ஜே.கே.-யை வழிபட்ட நிலையில் கூட -- ஜே.கே. எழுதுவதைத் தொடர்ந்திருந்தால் அவர் பெற்ற மதிப்பு என்னவாகியிருக்கும் என்று ஓரளவு யூகிக்க முடிகிறது. 'நல்லதோர் வீணை செய்தே, அதை நலங்கெட புழுதியில் எறிந்த' காரியமாகப் போயிருக்குமோ என்று துணுக்குற வேண்டியிருக்கிறது. அதை மிகச் சிறப்பாக புரிந்து கொண்டு சுய ஹத்தி போல அவர் எழுத்தைத் துறந்தார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. அவரும் எழுதுவதிலிருந்து விலகிப் போய் வேறான பொழுது போக்கலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது காலத்தின் சோகம் தான்.

தங்களை இங்கே பார்த்ததில் மிகவும் சந்தோஷம், இராய.செ. ஐயா.

வே.நடனசபாபதி said...

திரு ஜெயகாந்தன் அவர்களின் கதைகளை சரஸ்வதி இதழில் படித்தபின் அவருடைய விசிறி ஆனேன். ஆனந்தவிகடனில் வந்த முத்திரை கதைகளையும் படித்திருக்கிறேன். அவருடைய கதைகள் திரைப்படங்களாக வந்தபோது அவைகளை அவரது வாசகர்கள் தான் விரும்பிப் பார்த்தார்களே தவிர பொது மக்களிடையே அவ்வளவு வரவேற்பு இல்லை. காரணம். மக்களுடைய இரசனை வேறு விதமாக இருந்ததால்.

1977ஆம் ஆண்டு சீர்காழியில் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படம் பார்க்க சென்றிருந்தேன். வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் பீம்சிங் இயக்கத்தில் நடிகர் ஸ்ரீகாந்தும் நடிகை லட்மியும் நன்றாக நடித்திருந்தும் படம் பார்க்க வந்திருந்தவர்கள் ஒரேயடியாக சத்தம் போட்டு படத்தை இரசிக்க முடியாமல் செய்துவிட்தார்கள். ஏனெனில் மக்கள் விரும்பிய காட்சிகள் அதில் இல்லையாம். எப்போதுமே நம்மவர்களுக்கு நல்லதை ஏற்பதில்லையே.

இன்னொரு மொழியைக் கற்பதில் தவறில்லை. ஆனால் அதை கட்டாயாமாக ஆக்கும்போது தான் பிரச்சினையே. முன்பு நாம் மட்டும் தான் இந்தித்திணிப்பை எதிர்த்தோம். தற்போது கர்நாடகத்திலும் இந்தி திணிப்பை எதிர்க்கிறார்கள். காரணம் தற்போது பெங்களூருவில் இந்தி பேசும் மாநிலத்தவர்கள் அதிகம் வந்துவிட்டால் கன்னடம் பேசும் வழக்கம் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம்தான்.

இந்தி தெரிந்தால் தான் வட நாட்டில் பணிபுரிய முடியுமென்பது வீண் வாதம். நான் டில்லியில் இருக்கும்போதுதான் இந்தியை கற்றுக்கொண்டேன். ‘பிரபோத்’ ‘பிரவீண்’ போன்ற இந்தி தேர்வுகளையும் எழுதி வெற்றி பெற்று சான்றிதழ்கள் பெற்றேன். மேலும் கர்நாடகாவில் இருக்கும்போது கன்னடத்தை பேசவும், கேரளாவில் இருக்கும்போது மலையாளத்தை எழுத படிக்க பேசக்காற்றுக்கொண்டேன். அப்போது எனக்கு வயது 50. எனவே எந்த மொழியையும் தேவைப்படும்போது கற்றுக்கொள்ளலாம். இதில் அரசியல்வாதிகள் தலையிட வேண்டாம் என்பது எனது கருத்து.

Thulasidharan V Thillaiakathu said...

வேறு மொழி ஒன்று கற்றுக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. அதேதான் ஹிந்திக்கும். ஹிந்தி கற்றுக் கொள்வதால் பயன் தான். ஹிந்தி என்றில்லை எந்த வேற்று மொழியும்.

இப்போது இங்கு பங்களூரில் வாசம். இங்கு கன்னட மொழி கற்றுக் கொள்ள முயற்சி செய்து வருகிறேன் அப்போதுதான் அந்த மக்களோடும் பழகி பல விஷயங்கள் கற்றுக் கொள்ள முடியும். இங்கு கன்னட மொழி தெரியவில்லை என்றாலும் கூட ஹிந்தி வைத்து பிழைத்துக் கொள்ளலாம். தமிழும் ஓரளவு புரிந்து கொள்கிறார்கள்தான்.

இங்கும் வட இந்தியர்கள் அதிகம் இருப்பதாகத் தெரிகிறது. அதே போல் ஆந்திராவிலும் ஹிந்தி வைத்து சமாளிக்கலாம்.

கீதா

ஜீவி said...

@ வே. நடன சபாபதி

திரு. ஜெயகாந்தனின் எழுத்து காலத்தை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

1. சரஸ்வதி--சமரன்--தாமரை காலத்தது.

2. ஆனந்த விகடன் காலத்தது.

3. தினமணிக் கதிர் காலத்தது.

-- இந்த மூன்று காலத்திலும் அவர் வாழ்க்கை அமைந்த விதத்தில் மனப்போக்குகள் எப்படி இருந்தனவோ, அப்படியே அவற்றைத் தம் எழுத்துக்களில் பதிந்திருக்கிறார்.

குமுதத்தில் அவர் சுந்தர காண்டம் எழுதும் பொழுதே (இந்தத் தொடர் ஜேகே-க்கு மிகவும் பிடித்த தொடர்) தமிழில் மேலைநாடுகளின் பாதிப்பு கொண்ட எழுத்து முயற்சிகளின் ஆரம்ப கட்டம தொடங்கி விடுகிறது. இந்தத் தொடர் பிரசுரமாக வேண்டிய பத்திரிகை
குமுதம் அல்ல என்பது இன்னொரு பக்க சரிவு. ஜேகேயின் வாசகர்கள் அவர் எழுதும் பத்திரிகை சார்ந்து அவரை வாசிப்பதில்லை என்பது உண்மையாயினும் அவர் எழுத்தின் வீச்சு லேசாக மட்டுப்படுதலை தொடர்ந்த காலம் இதுவென்று ஒப்புக்கொள்ள மறுக்கக் கூடாது.

ஏற்கனவே ஜெயகாந்தன் தனக்காகத் தான் எழுதுவதாகத் தன்னைக் கருதுபவர். அதனால் பிறர் வாசிக்க ஏதுவாகும் பத்திரிகை பிரசுரங்களை தனக்காகவே தவிர்க்க ஆரம்பித்து விட்டார். கதைகள் அல்லாது பொது விஷயங்களில் அவர் கருத்து என்னவென்று சில பத்திரிகைகள் அவரை சீண்டிய பொழுது அல்லது பேட்டிகள் காண அணுகிய பொழுது அவர் தாரளாமாக அந்தந்த பிரச்னைகள் குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அந்தளவே அவரது வாசகர்கள் அவரைத் தெரிந்து கொள்ளும் காலம் இதுவாயிற்று.
பின்னால் மடம், அதற்கென்றே அமைந்த அவருடன் தொடர்பு கொண்டவர்கள், அந்தக் குழு சார்ந்து தன் கருத்துக்களை அவர் வெகு சுதந்தரமாக பகிர்ந்து கொண்டு திருப்தியடைந்த காலகட்டம் என்று தொடர்கிறது....

ஜீவி said...

@ நடன சபாபதி

உன்னைப் போல் ஒருவன், யாருக்காக அழுதான் -- இந்த இரண்டு படங்களைப் பொருத்த மட்டில் அவரது தனிப்பட்ட கவனம் திரைப்படங்கள் தொடர்பாக இருந்தது. மற்றவை அந்தந்த இயக்குனர்களின் வார்ப்பில் வெளிவந்தவை. ஜெயகாந்தனின் கதை என்ற ஒரு சம்பந்தமே அவருக்கும் இந்தத் திரைப்படங்களுக்கும் உண்டு.

ஜீவி said...

@ வே. நடனசபாபதி

இந்தி விஷயத்தில் திமுக ருசி கண்ட பூனை. தமிழை வளர்க்க ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போட வேண்டாமென்றாலும் இந்தி என்ற அந்த மொழியை முரட்டுத்தனமாக எதிர்த்தால் போதும் அது தனது வாங்கு வங்கியை பலப்படுத்தும் உத்தியாகப் போகும் என்பது திமுக அனுபவ பூர்வமாக உணர்ந்த ஒன்று. வடக்கத்திய தலைவர்கள் இந்தியில் தான் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்கள் என்ற அழும்பு நமக்கு லேசாகப் புரியும் போதே திமுகவின் இந்திக்கான எதிர்ப்பும் நமக்கு நியாயமாகப் படுகிறது. இப்படியான மனோரீதியான பாதிப்புகள் தான் இந்தி விஷயத்தில் திமுகவின் அணுகுமுறையை புரிந்து கொள்ளவும் வழி வகுக்குகிறது. தேவையிருப்பவர்கள் எந்த மொழியையும் இயல்பாகவே கற்பார்கள் என்ற புரிதல் வர வேண்டும்.

ஜீவி said...

@ வே. நடன சபாபதி

இந்தி தெரியவில்லை என்றால் வட மாநிலங்களில் சுற்றுப் பயணம் கூட செய்ய முடியாது என்பது எனது ஆழ்ந்த வருந்தத்தக்க அனுபவம்.

ஆனால் ஒருவொருக்கொருவர் கொள்ளும் மனித குல ஆழ்ந்த அன்பு என்பது இந்த மொழி விஷயங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது. வெறும் சைகைகள், முக பாவங்கள் மூலமே தில்லியில் மனித அன்பை புரிந்து கொண்ட நெகிழ்ச்சியான அனுபவங்கள் எனக்கு வாய்த்திருக்கின்றன. இந்த தேசத்தின் சோதரரகள் நாம் என்ற புரிதல் ஒருவருக்கு ஒருவர் ஏற்பட்டு விட்டதென்றால் மொழியெல்லாம் ஒரு பொருட்டே அல்ல, சார்.

ஜீவி said...

@ தி. கீதா

திரு. நடன சபாபதி அவர்களுக்கான என் பின்னூட்டங்களை வாசித்துப் பார்க்க வேண்டுகிறேன். ஒரு மொழியைக் கற்பதோ, தெரிந்து கொள்வதோ அல்ல -- இந்திக்கான
பிரச்னை. இது வேறு தள உணர்வுகள் சம்பந்தப்பட்டு இருக்கிறது.

Related Posts with Thumbnails