மின் நூல்

Tuesday, July 9, 2019

வசந்த கால நினைவலைகள்....

                                                        பகுதி--39  


'கல்கி' பத்திரிகையில்  குறிஞ்சி மலர் என்ற சமூக  நாவல்  வெளிவந்து  கொண்டிருந்த காலம் அது.   வித்தியாசமான எழுத்து  நடையில் இருந்த அந்த புதினத்தை மணிவண்ணன் என்பவர் எழுதி வருவதாகத் தெரிந்தது.  அந்த எழுத்தாளரைப் பாராட்டியும்,  சில குறைகளைச் சுட்டிக் காட்டியும்  அந்தப் புதினத்தை  விமரிசிக்கிற ரீதியில் மணிவண்ணன் என்ற பெயருக்கு கல்கி பத்திரிகை முகவரியிட்டு  அவ்வப்போது கடிதங்கள் எழுதி வந்தேன்.  தமிழ் பத்திரிகை உலகிலும் யார் இந்த மணிவண்ணன் என்ற கேள்வி  வாசகர் மனதில் எழுந்த நேரமும் அது தான்.  அந்த புதினம் அந்த பத்திரிகையில் நிறைவுறும் வரை மணிவண்ணன் யார் என்பதனை வெளிக்காட்டாமலேயே கல்கி பத்திரிகையும் அதன் விற்பனை யுக்தியாய் சமாளித்து வந்தது.

மணிவண்ணனின் அடுத்தத் தொடர்  வெளிவருகின்ற நேரத்தில் தான் மணிவண்ணன் என்கிற நா. பார்த்தசாரதி என்று பார்த்தசாரதி என்ற பெயர் கொண்ட எழுத்தாளரை அவர் புகைப்படம்  வெளியிட்டு தன் பத்திரிகையில் விளம்பரப்படுத்தியது 'கல்கி'.    நா. பார்த்தசாரதி தமிழ் எழுத்துலகிற்கு அறிமுகமான கதை இது தான்.

சில குறுநாவல்கள்,  சிறுகதைகள்  நா. பார்த்தசாரதியின் பெயரில் வெளிவந்த பொழுதும்  அவை பற்றிய எனது கருத்துக்களை நா.பா.விற்கு நான் கடிதம் மூலம் தவறாது தெரிவித்து வந்தேன்.   நா. பா. அவர்களுக்கு ஒரு நல்ல பழக்கம் இருந்தது.   தன்னிடம் தொடர்பு கொள்ளும் தன் வாசகர்களுக்கு உடனடியாக தன் கைப்பட கடிதம் எழுதும் பழக்கம்.   நா.பா.வின் கையெழுத்து முத்து முத்தாக கண்ணில் ஒற்றிக் கொள்கிற மாதிரி இருக்கும்.  வழவழப்பான வெள்ளை அட்டையில்,  பின் பக்கம் அவர் பொன்விலங்கு நாவலில் வரும் வாசகங்களான 'தூக்கமும் ஒரு  தற்காலிகமான சாவு தான்;  அதிலிருந்து  மறுபடி விழித்துக் கொள்ள முடிகிறது.  அதே போல சாவும்  ஒரு நிரந்தரமான தூக்கம் தான்.  ஆனால், அதிலிருந்து மறுபடியும் விழித்துக் கொள்ள முடிவதில்லை'  என்கிற வரிகள் கட்டம்  கட்டி அச்சிடப் பட்டிருக்கும்.   தன் அபிமான வாசகர்களின் பெயர் போட்டு அவர்கள் தனக்கு எழுதும் கடிதங்களும் அவற்றிற்கு தான் எழுதும் பதிலையும் சேர்த்து வைத்து தனி கோப்புகளாக  பராமரித்து வந்தார் அவர்.  இந்த அவரது வாசகர்களுடனான தொடர்பு பிற்காலத்தில் அவருக்கு மிகவும் பயன்பட்டது.

பாரதியார் ஆசிரியராக இருந்த மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தான் பார்த்தசாரதியும் ஆசிரியராக இருந்தார்.   பொன்விலங்கு கல்கியில் பிரசுரமான காலத்தில் கல்கி பத்திரிகைக்கு துணை ஆசிரியர் பொறுப்பில் இருந்தார்.  அந்த நேரத்தில் கல்கி பத்திரிகைக்கும் தனக்குமான சில உணர்வு பூர்வமான பாதிப்புகளை குறிப்பிட்டு எனக்குக் கடிதம் எழுதியிருந்தார்.  'என் மேஜை மேலிருந்த தொலைபேசித் தொடர்பைத் துண்டித்து விட்டார்கள், ஜீவி' என்று ஆற்றாமையுடன் அவர்   எனக்கெழுதிய கடிதத்திலிருந்த   வார்த்தைகள் இன்னும் நினைவில் நா.பா.வின் அழகான எழுத்து வடிவில் பதிந்திருக்கின்றன.    தனது ப்ரிய வாசகர்களுக்கும் தனக்கும் தனிப்பட்ட தான் சம்பந்தமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு அவர் மன விசாலமும் நெருக்கமும் இருந்தன என்பதற்காக இதைக் குறிப்பிட நேர்ந்தது.

அந்த நேரத்தில் எனக்கு வந்திருந்த அந்தக் கடிதமும் அப்படியான  ஒன்று தான்.  கல்கி பத்திரிகையிலிருந்து தான் விலகி வெளிவரப் போவதாகவும் ஒரு எழுத்தாளன் தன் கீர்த்தி பலத்தைச் சோதித்துக் கொள்ள வேண்டிய நிலையில் தான் இருப்பதாகவும் அதற்காகவே புதுப் பத்திரிகை ஒன்றைத் தொடங்கவிருப்பதாகவும் அது சம்பந்தமான மேற்கொண்டான செய்திகளை விரைவில் தங்களுக்குத் தெரிவிக்கிறேன்' என்று அந்தக் கடிதம் எனக்குச் சேதி சொன்னது.  தங்களைப் போல நண்பர்களின் அன்பு தான் தனக்கான பலத்தைக் கொடுக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அந்தக் கடித்ததின் அடுத்த முன்னேற்றமாக ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை தான் 'தீபம்'.   புதுவையில் பிரபலமன மருந்துக் கடை ஒன்றின் உரிமையாளரின் புதல்வர் எங்கள் இலக்கிய அமைப்பின் தொடர்பிலிருந்தார்..  நா.பா.வின் மேல் தனிப்பட்ட பற்றும் அவருக்கு உண்டு.  அவரிடம் விஷயத்தைச் சொன்னேன்.   புதிதாக வெளிவரவிருக்கும் பத்திரிகைகக்கு  சில விளம்பரங்களை திரட்டிக் கொடுப்பதற்கான  ஆலோசனைகளை அவர் எனக்குச் சொல்லவும் செய்தார். செயல்படுத்தியும் காட்டினார்.  புதுவையில் கிட்டத்தட்ட 25-க்கு மேற்பட்ட சந்தாதாரர்களை நா.பா.வின் 'தீபம்' பத்திரிகைக்காகச் சேர்த்தோம்.  நா.பா.விற்கு மிகவும் மகிழ்ச்சி.   அவரின் நட்பு மேலும் இறுகிய  காலம் அது.  நா.பா.விடம் இவ்வளவு நெருக்கம்  எனக்கிருந்தும் 'தீபம்' பத்திரிகை பிரசுரத்திற்காக எனது கதைகளில் ஒன்றைக் கூட அவருக்கு நான் அனுப்பி வைத்ததில்லை.  இதற்காகத் தான் அது என்கிற மாதிரியான  மலினப்படுத்தலாகி விடும் என்று ஒரு தயக்கம் அந்நாட்களில் என்னை ஆட்கொண்டிருந்தது.  ஆனால், பிற்காலத்தில் குமுதம் பத்திரிகையின் போக்குகளை விமர்சிக்கிற செயலாய் ஒரு கட்டுரை தீபம் பத்திரிகையில் வந்திருந்த பொழுது  அந்த  கட்டுரையின் வார்த்தைகளுக்கு எனது ஆழ்ந்த கண்டனங்களைத் தெரிவித்து நீண்ட கடிதம் ஒன்றை  நா.பா.க்கு தனிப்பட்ட முறையில் என்று அல்லாது  'ஆசிரியர், தீபம்'  என்று முகவரியிட்டு எழுதியிருந்தேன்.   என் கடிதம் கண்ட உடனே அதற்கான மறுமொழியையும்
நா.பா. கடிதமெழுதித்  தெரிவித்திருந்தார்.  அதைப் பற்றி பிறகு சொல்கிறேன்.


புதுவையிலிருந்த காலத்தில்  நான் அனுப்பும்  சிறுகதைகளை உடனுக்குடன் பிரசுரித்து  என் எழுத்துக்கு   மிகவும் ஆதரவளித்த பத்திரிகை  'காதல்'.  அதன் ஆசிரியர் அரு. இராமநாதன் அவர்களை நான் நேரில் சந்தித்ததிலை.  தொடர்ந்து  அந்தப் பத்திரிகையின் ஆஸ்தான எழுத்தாளராய் என்னை  நேசித்தார் அவர்..  காதல் பத்திரிகைக்கு  மாத முதல் வாரத்தில் நான் அனுப்பும் சிறுகதை அடுத்த மாத இதழிலேயே பிரசுரமாகிவிடும். ஒவ்வொரு தீபாவளித் திருநாளன்றும் 'வசந்த மலர்' என்ற பெயரில் காதல் பத்திரிகையின் தீபாவளி மலர் மலரும்  வழக்கமிருந்தது.   அந்த தீபாவளி அன்று 'பார்வதி அம்மாள் என் அம்மா'  என்ற எனது முதல்  குறுநாவல்  'காதல்' பத்திரிகையில் பிரசுரமாயிற்று.  இரண்டே குறுநாவல்கள்.   இன்னொன்றை  அமரர் ஜெகசிற்பியன் எழுதியிருந்தார்.

எங்கள் இலக்கிய அமைப்பின் சார்பாக  சிறுகதைத் தொகுப்பு ஒன்றை  வெளியிட்டோம்.  அந்நாட்களில் புதுவையின்  ஆளுனராக இருந்த        லெப்டினட் கவர்னர் சீலம் அவர்கள் அந்த சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார்.   ஆளுனர் அவர்களிடமிருந்து  சிறுகதைத் தொகுப்பை நான்  பெறுகிற மாதிரி அந்நிகழ்வு  சம்பந்தப்பட்ட புகைப்படம் ஒன்று நெடுநாள் என்னிடம் இருந்தது.  இப்பொழுது தேடிப் பார்த்ததில் கிடைக்கவில்லை.  கிடைப்பின் வெளியிடுகிறேன்.

கண்ணதாசன் அவர்களை நான் நேரில் சந்தித்த முதல் நிகழ்வும் புதுவையில் தான்.  புதுவை கடற்கரை சாலையில். கவியரசர் கண்ணதாசன் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் ஏற்பாடாகியிருந்தது.  கவியரசரின் உரையைக் கேட்கச் சென்றிருந்தேன்.  அவருடன் எப்படியும் பேசிவிட வேண்டும் என்ற முடிவிலிருந்தேன்.    பொதுக்கூட்டங்கள் என்றால் அந்த நாட்களில் வழக்கமாக நான் எடுத்துச் செல்லும் ஆட்டோகிராப் குட்டிப் புத்தகமும்  கைவசமிருந்தது.


கண்ணதாசன் அவர் கார் கதவு திறந்து வெளிவந்த பொழுதே ஆட்டோகிராப் புத்தகத்துடன் நெருங்கிய என்னை பார்த்து விட்டார்..  அந்தக் காலத்தில் மனசுக்குப்  பிடித்தமான பிரபலமானவர்களிடம் ஆட்டோகிராப் புத்தகத்தில் கையெழுத்து வாங்குவது ஒரு பழக்கமாகவே இருந்தது.  தனக்கு பிடித்த பொன்மொழி மாதிரி ஏதாவது வரி எழுதிக் கையெழுத்திட்டுத் தருவார்கள்.

சட்டென்று கவிஞருக்கு மிகவும் அருகில் சென்றவுடன் அவரே என் கையிலிருந்த ஆட்டோகிராப்  புத்தகத்தை வாங்கிக் கொண்டார்., முதல் தடவையாக அவ்வளவு நெருக்கத்தில் கவியரசரைப் பார்க்கிறேன். என் சட்டைப் பையிலிருந்த பேனாவை எடுத்து அவரிடம் தந்தபடியே சொன்னேன்: "எல்லோருக்கும் தெரிந்த கண்ணதாசன்கள் இருவர்.  ஒருவர் அரசியல் கண்ணதாசன்; மற்றொருவர் இலக்கிய கண்ணதாசன்.  ஏனோ அரசியல் கண்ணதாசனை விட இலக்கிய கண்ணதாசனைத் தான் எனக்கு மிகவும்  பிடிக்கும்.  அதனால் இலக்கிய கண்ணதாசன் என்று கையெழுத்திட்டுத் தர வேண்டுகிறேன்.." மடமடவென்று மனசில் மனனம் செய்து வைத்திருந்ததை கொஞ்சம் கூடத் தயங்காமல் சொல்லி விட்டேன்.  என்ன சொல்லி விடுவாரோ என்று லேசான உதறலும் இருந்தது.

"அப்படியா?" என்று கண்ணதாசன்  புன்முறுவல் பூத்ததே அழகாக இருந்தது.  காரின் முன்பக்கம் நகர்ந்து கார் பானெட்டின் மீது ஆட்டோகிராப் புத்தகத்தை வைத்து  'இலக்கிய கண்ணதாசன்' என்று தெளிவாக எழுதி அதற்கு கீழே  கையெழுத்திட்டார்.     'இப்பொழுது திருப்தியா?'   என்கிற மாதிரி என்னைப் பார்த்தார்.    முகம் சுளிக்காமல் நான் விரும்பியதை அவர் நிறைவேற்றிக்  கொடுத்தது மனசுக்கு  சந்தோஷமாக இருந்தது.  என் தோளில்  லேசாகக் கைவைத்தபடி ஆட்டோகிராப் புத்தகத்தையும் பேனாவையும் என்னிடம் தந்தபடியே, "ஒண்ணு தெரியுமா? ரெண்டு கண்ணதாசன்களுமே பொய்" என்று அவர் புன்முறுவலுடன்  சொன்ன பொழுது திகைப்பாக  இருந்தது.

எனது அந்த 22 வயசில் தத்துவார்த்தமாக அவர் சொன்னது புரியாது பின் புரிபட்ட பொழுது இந்த நிகழ்வை நினைக்கும் பொழுதெல்லாம் அவரது வசீகரமான புன்முறுவல் தான்  நினைவுக்கு வரும்.

இந்த என் அனுபவத்தை குமுதம் பத்திரிகைக்கு குட்டி கட்டுரையாக்கி அவரது ஆட்டோகிராப் கையெழுத்து காகிதத்தை இணைத்து அனுப்பி வைத்திருந்தேன்.   அந்த வார குமுதம் இதழிலேயே அது பிரசுரமாகி விட்டது.

இந்த மாதிரி குமுதப் பிரசுரமான  ஆட்டோகிராப் நினைவுகள் நிறைய. இருந்தாலும் அதையெல்லாம் இப்பொழுது நினைத்துப் பார்க்கையில் இந்த மாதிரியான பிரசுரங்களில் ஒரு வருத்தமும் இப்பொழுது மேலோங்குகிறது.

ஜெராக்ஸ் மிஷின்கள் இல்லாத காலம் அது.  அதனால் பத்திரிகை காரியாலயங்களுக்கு ஒரிஜனல் தான் அனுப்பி வைக்க வேண்டும். அவர்கள் அதற்கு அச்சு வடிவம் கொடுத்தாலும் ஒரிஜனல் இல்லாதது இப்பொழுது நினைத்துப்  பார்க்கையில் ஒருவிதத்தில் இழப்பாகத் தான் தெரிகிறது.

(வளரும்)

23 comments:

G.M Balasubramaniam said...

பல எழுத்தளர்களின் அறிமுகம் உங்களிடம் நிறையவே பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது தெரிகிறது/ இந்த 'எப்படி எப்படி' அடிக்கடி மாறலாம். மாற வேண்டும். அதான் உயிர்ப்புள்ள சிந்தனைக்கு அடையாளம்/ இந்த பின்னூட்டவரிகள் இப்போதுபுரிகிஅமாதிரி இருக்கிறது.

நெல்லைத்தமிழன் said...

இண்டெரெஸ்டிங் நிகழ்வுகள். தீபம் நா பார்த்தசாரதி, கண்ணதாசன்.....

அந்த குமுதம் பக்கத்தைப் பகிரிந்துகொண்டிருக்கிறீர்களோ?

கோமதி அரசு said...

பிரபலமான எழுத்தாளர்களுடன் பழக்கம் கிடைத்தது உங்களுக்கு ஒரு வரம்.
அவர்களிடம் தைரியமாய் தன் மனதில் பட்டதை சொல்லும் குணம் எல்லாம் படிக்க படிக்க வியப்பான அனுபவம்.
வசந்த கால நினைவலைகளில் நிறைய எழுத்தாளர்களைபற்றி தெரிந்து கொள்ள முடிகிறது. புதுச்சேரி நல்ல இடம் தான், பிரபலமானவர்கள் எல்லோர் பேச்சையும் கேட்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கே!

ஸ்ரீராம். said...

சில புகழ் பெற்ற நாவல்கள் எந்தப்பத்திரிகையில் வந்தன என்று இப்போது யோசிக்கும்போது தெரியாமலிருக்கும். அந்த வகையில் குறிஞ்சி மலரும் பொன்விலங்கும் கல்கியில் வந்தனவா என்று மனதுக்குள் கேட்டுக்கொள்கிறேன்!

ஸ்ரீராம். said...

கண்ணதாசன் உண்மையைச் சொன்னார். உண்மையில் எல்லா பிரபலங்களுக்கும் இது பொருந்தும் இல்லையா?

ஸ்ரீராம். said...

வாலியின் பெயர்க்காரணம் பற்றி நாபா அவரிடம் பேசிய சம்பவம் ஒன்றை வாலி எழுதிப் படித்த நினைவு.

Bhanumathy Venkateswaran said...

//நா.பா.விடம் இவ்வளவு நெருக்கம் எனக்கிருந்தும் 'தீபம்' பத்திரிகை பிரசுரத்திற்காக எனது கதைகளில் ஒன்றைக் கூட அவருக்கு நான் அனுப்பி வைத்ததில்லை. இதற்காகத் தான் அது என்கிற மாதிரியான மலினப்படுத்தலாகி விடும் என்று ஒரு தயக்கம் அந்நாட்களில் என்னை ஆட்கொண்டிருந்தது. //
இதே மாதிரி அனுபவம்தான் எங்கு இந்துமதியிடம் ஏற்பட்டது. அவரோடு நட்பு கொண்ட சமயத்தில்,"நீங்கள் ஏதாவது கதை எழுதி வைத்திருந்தால் கொடுங்கள், எனக்குத் தெரிந்த பத்திரிகையில் கொடுத்து போடச் சொல்கிறேன்" என்றார். ஆனால் அதை பயன்படுத்திக் கொள்ள எனக்கு விருப்பமில்லை. மேலும், என் கதை பிரசுரமானால் அது தகுதியின் அடிப்படையில்தான் இருக்க வேண்டும் என்றும் நினைத்ததும் இன்னொரு காரணம்.

மாதேவி said...

முக்கியமானவர்களுடன் தொடர்பு கிடைத்திருக்கிறது. எமக்கு அறியத்தந்ததில் மகிழ்சி.

ஜீவி said...

@ ஜிஎம்பீ

பல நேரங்களில் என் பாதிப்பையும் அவர்களிடம் ஏற்படுத்த முயன்றிருக்கிறேன் என்ற இன்னொரு பகுதியும் இருக்கிறது, ஜிஎம்பீ சார். இந்த விஷயத்தில் இன்றும் என்னுடன் பழகுபவர்களுடன் அப்படியான முயற்சிகளை மேற்கொள்வது எனாக்கான பழக்கமாகி விட்டது. ஒரு விஷயத்தில் எனக்கேற்பட்ட தெளிவு என்று நான் நினைப்பதை பழகுபவர்களுடன் நான் கலந்து கொள்ளாமல் இருந்ததில்லை. அந்த எனது தெளிவும் சரியானது தானா என்ற அலசலின் அடிப்படையில் தான் அதுவும் நிகழ்ந்து கொண்டு வருகிறது.

அந்த 'எப்படி,எப்படி?'யை இங்கு கோர்த்துப் பார்த்தது, பிரமாதம். சில விஷயங்களை மனதில் ஊறப்போட்டு அதன் மீதான தேடலை நடத்தி அடுத்த கட்ட நகர்ந்தலுக்காக ஆயத்தமாவது தான் நமக்கான வளர்ச்சியைத் தீர்மானிக்கும் என்பது என் அனுபவ உண்மை. நன்றி, சார்.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

ஜெயகாந்தன், தீபம் பார்த்தசாரதி, கண்ணதாசன் இன்னும் பலர் தொடர்ந்து வரப் போகிறார்கள். நான் என் இளமையிலிருந்து கால வளர்ச்சியில் எழுதுவதினால் அந்தந்த காலத்தை ஒட்டி சந்தித்தவர்கள், பழகியவர்கள் என்று ஒரு நீண்ட லிஸ்ட் தொடர்ந்து வரப்போகிறது.

//அந்த குமுதம் பக்கத்தைப் பகிரிந்துகொண்டிருக்கிறீர்களோ?//

பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல கால வகையினாலே.

-- பவணந்தி முனிவர்

கைவசம் இருந்த பலவும் காணமல் போய்விட்டன. சில காகிதங்கள் பொடிப்பொடியாக நொருங்கியும் போய்விட்டன. ஆனால் அவையெல்லாம் நினைவுத் தடத்திலிருந்து அழியாதிருப்பது தான் ஆச்சரியம்.

ஜீவி said...

@ கோமதி அரசு

சின்ன வயசிலிருந்தே யார் எது சொன்னாலும் அதை மேற்கொண்டு யோசித்துப் பார்க்கும் பழக்கம் எனக்குண்டு. அந்த சமயத்தில் எனக்குத் தோன்றுவதை அவரிடமே அப்படியா என்று கேட்டு அதற்கு அவர் என்ன சொன்னாலும் உன்னிப்பாகக் கவனித்து அடுத்த கேள்வியை அவரிடமே கேட்பதுண்டு. அந்தக் காலத்தில் பிரபலங்களை நெருங்குவது எளிமையாகவும் நாம் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்டு அதற்கு பதில் சொல்லி நம்மை தெளிய வைக்க முயற்சிக்கும் இயல்பு கொண்டவர்களாகவும் இருந்தார்கள் என்பது இன்னொரு உண்மை. பிரபல கம்யூனிஸ்ட் தலைவர்கள் இந்த விஷயத்தில் மிகவும் ஆர்வமுள்ளவர்களாக இருந்தார்கள் என்பது எனது அனுபவம்.

'ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இருந்ததில்லை" என்பது இயல்பாக என்னில் படிந்த ஒன்று.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

குறிஞ்சி மலர், பொன்விலங்கு இதெல்லாமே அப்படி என்றால், மிதிலா விலாஸ், சி.ஐ.டி. சந்துரு, பெண்மனம், பாலும் பாவையும், வலம்புரி சங்கு, சில நேரங்களில் சில மனிதர்கள், ரிஷிமூலம், என் பெயர் ராமசேஷன், அம்மா வந்தாள், பனித்துளி போன்ற நாவல்கள் எந்தப் பத்திரிகையில் வெளிவந்தன என்று யோசிப்பதே பெரும் யக்ஞமாகி விடும். (எங்கள் பிளாக்கில் வேண்டுமானால் கேட்டுப் பாருங்களேன்.)

ஜீவி said...

@ ஸ்ரீராம்

பொருந்தாது. கண்ணதாசன் போல மனதை விரோதித்துக் கொள்ளாத குழந்தைப் பிரபலங்களைப் பார்த்ததில்லை.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (2)

பிரபலங்கள் என்று அறியப்படுவோர் சமயத்திற்குத் தகுந்த மாதிரி எதையேனும் சொல்லி வைப்பர். நா.பா. சொன்னது வாலிக்கு பாராட்டு மாதிரி தெரிந்தால் வெளியே சொல்வார்.
இல்லையென்றால் மனத்திற்குள்ளேயே புதைத்துக் கொள்வார். வாலியெல்லாம் நாணல்கள். வாழத் தெரிந்த மனிதர்கள். பணம் பெயர்ந்தால் தான் பாட்டெல்லாம்.

ஜீவி said...

@ பானுமதி வெங்கடேஸ்வரன்

உங்கள் மனம் புரிந்தது. ஆனால் நாம் நேசிபவர்கள் அவர்கள் விஷயத்தில் அந்த மாதிரி இருந்தில்லை என்பதையும் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு ஏதாவது நம்மிடம் தேவைப்படுகிறது என்றால் டக்கென்று கேட்டு விடுவார்கள்.

ஜீவாவை அரசு கட்டித் தரும் வீடு ஒன்றில் குடியேற்ற காமராஜர் மிகவும் விரும்பி அவரை அது பற்றி பல தடவைகள் கேட்டு முயன்றிருக்கிறார். கடைசி வரை ஜீவா அதற்கு சம்மதிக்கவில்லை என்பதில் காமராஜருக்கு மிகவும் வருத்தம்.

ஜீவாவின் மனைவியார் ஆசிரியை. அவருக்கு பணியிட மாற்றல் ஒன்று கிடைத்திருந்தால் அவர் குடும்ப வாழ்க்கைக்கு மிகவும் உபயோகமாக இருந்திருக்கும். காமராஜரிடம் கேட்டு அதைப் பெறக் கூடாதா என்று ஜீவாவின் துணைவியார் பலதடவை தன் கணவரிடம்
வேண்டியிருக்கிறார். உப்புப் பெறாத சமாச்சாரம். அதைக் கூட காமராஜரிடம் ஜீவா கேட்டதில்லை. காமராஜருடன் பேசிக் கொண்டிருக்கையில் தன் மனைவி கேட்டது நினைவுக்கு வந்தாலும் அதைக் கேட்டுப் பெற நாணியிருக்கிறார். அந்த மனநிலை தான் உங்களுக்கும்.

ருஷ்யா பயங்கர குளிர்ப் பிரதேசம். புரட்சி காலத்தில் ஜார் மன்னனை வீழ்த்தி போல்ஷ்விக் படைகள் முன்னேறுகின்றன. சாதாரண ஒரு படைவீரர் குளிரைத் தாங்க முடியாமல், ஒரு மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த கம்பளிப் போர்வை ஒன்றை போர்த்திக் கொள்ளப் பற்றி இழுக்கிறார். அவருக்குப் பக்கத்திலிருந்த இன்னொரு வீரர் அதைத் தடுத்து
"வேண்டாம். ஒரு கம்பளிப் போர்வைக்காக இந்தப் புரட்சி இல்லை.." என்று அவரிடமிருந்து போர்வையைப் பிடுங்கிப் போடுகிறார்.

காமராஜர் நினைத்திருந்தால் அவரது தாயாரை சென்னையில் ஒரு மாளிகையில் குடியமர்த்தி வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டிருக்க முடியாதா?..

எதற்காக எது என்று நன்கு தெரிந்த இலட்சியவான்கள் எந்த நேரத்தும் தம் இலட்சியப் பிடிப்பிலிருந்து விடுபட்டதே இல்லை!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜீவி சார். இந்தப் பாகத்தின் பாதிப்பிலிருந்து மீள நாட்களாகும். நல்ல
பலமான பின்னணி 22 வயதில் நீங்கள் அமைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஜெகசிற்பியன்
,
நா.பார்த்தசாரதி சார் எல்லோரும் மனதுக்குப் பிடித்த எழுத்தாளர்கள்.
கண்ணதாசனை நீங்கள் சந்தித்துப் பேசியது மிக மிக இனிமை.

அந்தப் பேப்பரை இழந்ததும் வருத்தமே.
இன்னும் வரப் போகும் செய்திகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
காமராஜர் எளிமை இனி எங்கு காணமுடியும்.
அந்தக்கால எளிமை மக்களிடத்தும் பரவி இருந்தது.
என் தந்தை அவரது தோழர்கள் எல்லோருமே
அளவுக்கு மிஞ்சி ஆசைப்பட்டதில்லை.
சேமிப்பதில்தான் கருத்து.மனம் நிறைந்த பாராட்டுகள்.

ஜீவி said...

@ வல்லிசிம்ஹன்

அன்பு பிரவாஹமாய் வர்ஷிக்கும் பின்னூட்டம்.

தங்களின் தெளிந்த நீரோட்டமான மனம் பின்னணியில் துல்லியமாகத் தெரிகிறது.

நினைவில் இருந்த இதையெல்லாம் எழுதும் நோக்கம் இப்படிக் கூட ஒரு காலம் இருந்ததா என்று இந்தத் தலைமுறைக்குத் தெரியப்படுத்துவதும் அப்படியான பொற்காலத்தை மீட்டு எடுப்பதற்கான உத்வேகத்தைக் கொடுப்பதற்க நம்மாலான அணில் பங்களிப்பு என்று நினைப்பதும் தான்.

சென்ற காலம் வாழ்ந்து பார்த்தவர்கள் இந்தக் காலத்திலும் வாழப் பழகிக் கொள்வது நிறையவே சிரமமாகத் தான் இருக்கிறது. இதெல்லாம் எங்கு கொண்டு போய் விடும் என்றி தெரியவில்லை.

அதர்மம் ஓங்கும் பொழுது நிச்சயம் கிருஷ்ண பகவானும் தர்மத்தைக் காக்க பிரதட்சயமாவார் என்று நம்புவோம். நன்றி, வல்லிம்மா.

Thulasidharan V Thillaiakathu said...

கண்ணதாசன், நாபா போன்றோரோடும் உங்களுக்கு இருந்த தொடர்பு ஸ்வாரஸியமாகவும் இருக்கிறது.

நாபா வின் தீபம் இதழுக்குக் கதை கொடுக்க உங்களுக்குக் கூச்சம் மிகவும் சரியானது. நம் படைப்பின் தகுதியின், தரத்தின் அடிப்படையில் வெளியாவதில் உள்ள சந்தோஷம் கண்டிப்பாக நமக்கு நெருங்கிய பழக்கம் உள்ள பத்திரிகைக்குக் கொடுத்து அப்படி வெளிவருவதில் இருக்காது.

பல சுவையான அனுபவங்கள் அண்ணா உங்களுக்கு. மிகவும் ரசனையான பகுதி இது..

கீதா

ஜீவி said...

@ தி. கீதா

//கண்ணதாசன், நாபா போன்றோரோடும்... //

நான் சார்ந்த அரசியல் செய்திகளைக் குறைத்துக் கொண்டு கண்ணதாசன், நா.பா. போன்று இனி வரவிருக்கிறவர்களின் மொழி சார்ந்த, அரசியல் சார்ந்த விவரங்களை விவரிக்க மாதிரி இந்தத் தொடரை அமைக்கலாமோ என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?.. சொல்லுங்கள்.

வே.நடனசபாபதி said...

நா.பார்த்தசாரதி, அரு.ராமநாதன் போன்ற மிகப்பெரிய எழுத்தாளர்களின் தொடர்பும் நெருக்கமும் தான் தங்களுக்கு எழுத்துலகில் சாதிக்கும் ஆர்வத்தை தூண்டியது என்பது சரிதானே.

‘தீபம்’ இதழுக்கு நீங்கள் உங்களது படைப்புகளுக்கு அனுப்பாதது சரியே! அப்படி அனுப்பியிருந்தால் நீங்கள் தீபம் இதழுக்கு சந்தாதாரர்களை சேர்த்ததற்கு பலனை எதிர்பார்ப்பதுபோல் ஆகியிருக்கும் என்ற உங்களின் நிலைப்பாடு சரிதான்.

நா பார்த்தசாரதி அவர்கள் பொள்ளாச்சியில் ‘பறவைகள் பாலாவைதம் என்று ஆற்றிய இலக்கிய சொற்பொழிவையும் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையையும் கேட்டு இரசித்திருக்கிறேன். தங்களைப்போல் நெருங்கிப்பழகும் வாய்ப்பு ஏற்படவில்லை.

தங்களின் பதிவை ஒரு தொடர்கதையை ஆவலுடன் படிப்பதுபோல் படித்துக்கொண்டு இருக்கிறேன். தொடர்கிறேன்.




ஜீவி said...

@ வே. நடனசபாபதி

அமரர் அரு. ராமநாதன் அவர்கள் எனது மரியாதைகுரியவர். அவரை நான் நேரில் பார்த்தது கூட கிடையாது. என் ஆரம்ப எழுத்து முயற்சிகளுக்கு தொடர் ஆதரவு கொடுத்தவர் அவர்.
அந்த ஆதரவு இல்லையென்றால் மொட்டிலேயே கருகிய விரக்தி ஏற்பட்டிருக்கலாம். எந்த முயற்சிக்கும் ஆரம்ப முயற்சிகளுக்கு கைகொடுத்துத் தூக்கி விடுபவர்கள் வாழ்நாள் பூராவும் நினைவில் நிற்பார்கள். அந்த மாதிரியானவர் அரு. ராமநாதன் எனக்கு.

அவரது பிரேமா பிரசுரம் மலிவு விலையில் துப்பறியும் கதைகளையும், புராண நூல்கள் சிலவற்றையும் வெளியிட்டவர்கள். அந்நாளைய துப்பறியும் கதை எழுத்தாளர்கள் சிரஞ்சீவி, மேதாவி போன்றவர்களின் நூல்கள் பிரேமா பிரசுர வெளியீட்டில் சிறப்பு பெற்றவை. முதன் முதலாக டார்வின், பிளேட்டோ போன்ற சிந்தனையாளர்கள் பற்றிய கையடக்க நூல்களை வெளியிட்டதும் பிரேமா பிரசுரமே.

அரு. ராமநாதனின் குண்டு மல்லிகை நாவல் கல்கியில் தொடராக வெளிவந்து மனதைக் கவர்ந்த ஒன்று. வீரபாண்டியன் மனைவி, அசோகன் காதலி போன்ற நாவல்களும்,
டி.கே.எஸ். சகோதர்களுக்காக அவர் எழுதிய 'ராஜ ராஜ சோழன்' நாடகம் 1000 தடவைகளுக்கு மேல் மேடையேறியது. பின்னர் முதல் சினிமாஸ்கோப் படமாக வெளிவந்த பொழுது இவர் தான் அதற்கு கதை --வசனம் எழுதியிருந்தார்.

ஆரம்ப காலத்தில் நான் மனோதத்துவ ரீதியான கதைகள் நிறைய எழுதியது தான் அரு. ராமநாதனுக்கு பிடித்து தொடர்ந்து பிரசுரமாயின என்று இப்பொழுது நினைத்துக் கொள்கிறேன்.

நா.பா. பற்றி தொடர்ந்து சில நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

வ.ந.கிரிதரன் - V.N.Giritharan said...

வணக்கம் திரு.ஜீவி அவர்களே. நீண்ட நாட்களுக்குப் பின்னர் உங்கள் தளத்துக்கு வந்தபோது புதுப்பதிவுகள் எவற்றையும் காணவில்லையே.எப்படியிருக்கின்றீர்கள். சுகமாயிருக்க வேண்டுகின்றேன். அன்புடன், வ.ந.கிரிதரன்

ஜீவி said...

அன்பு கிரிதரன் சார்,

வயது மூப்பு காரணமாக சில உடல் தொந்தரவுகள் இருப்பினும் நலமாக இருக்கிறேன். தங்கள் அன்பு விசாரிப்புக்கு நன்றி. தங்கள் வருகை இந்தத் தொடரைத் தொடரை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து எழுத வேண்டுமென்ற உத்வேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பார்க்கலாம்.

மிக்க அன்புடன்,
ஜீவி

Related Posts with Thumbnails