மின் நூல்

Wednesday, July 3, 2019

வசந்த கால நினைவலைகள்...

                                                                      38


டுத்த நாள்  மாலை எங்கள்  தொழிற்சங்க கிளைக்கூட்டம் இருப்பதாகவும்  மாநிலச் செயலர்  அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றப் போவதாகவும் தோழர் சிரில் என்னிடம் சொல்லியிருந்ததால் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு வாகாக எனது அலுவலகப் பணி நேரத்தை காலை 0610-1330 என்று மாற்றிக் கொண்டிருந்தேன்.

மதியம் பணி  நேரம் முடிந்ததும் நேரே  ஆர்யபவன்  ஓட்டலுக்குப் போய் மதிய சாப்பாடு ஆயிற்று.  அப்படியே நேரே பாரதி தெரு வீட்டிற்குச் சென்றேன்.  கை கால் கழுவிக் கொண்டு ஃபேனை சுழல விட்டு படுத்தது தான் தெரியும். நல்ல தூக்கம்.   மாலை 4 மணி சுமாருக்கு ஏதோ சப்தம் கேட்டு விழித்துக் கொண்டு விட்டேன்.  பாலகிருஷ்ணன் என்ற அறைத் தோழர் அவரது 0800-1530 பணி முடிந்து வீட்டிற்கு வந்திருக்கிறார்.   (இடமிருந்து:  முதலாவது பாலகிருஷ்ணன், நாலாவது நான்)

நான் தூக்கம் கலைந்து விழித்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், "மணி நாலாச்சு, ஜீவி..  ஆறு மணிக்கெல்லாம் கூட்டம் ஆரம்பமாயிடும்..  கடலூர் கூட்டத்தை முடிச்சிண்டு ஜெகன்  ஐந்தரைக்கெல்லாம் வந்துடுவார்ன்னு சொன்னாங்க.. கிளம்பு.. கிளம்பு.." என்று என்னிடம் சொல்லிக் கொண்டே பாத் ரூம் பக்கம் போனார்.

தோழர் ஜெகன்  எங்கள் அகில இந்திய தொழிற்சங்கத்தின்  தமிழ் மாநிலச் செயலர்.  இதுவரை அவரை நேரில் பார்த்ததில்லை.   எங்கள் தொழிற்சங்க  பத்திரிகை ஒலிக்கதிரில் அவர் கட்டுரைகளை வாசித்ததோடு  சரி.   ஒரு உத்வேகத்தோடு  எழுந்திருந்தேன்.                 

நானும் பாலகிருஷ்ணனும் தொலைபேசி நிலையம்  போய்ச் சேர்ந்தோம்.   ஓய்வறையில் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள்.   நாங்கள் போய்ச் சேர்ந்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஜெகன் வந்து சேர்ந்து  விட்டார்.    பைஜாமா, ஜிப்பா,  கேரள தடிமன் மீசை என்று உற்சாகமான இளைஞராக இருந்தார்.   லைன்மேன் தோழர்கள் அவரைச் சுற்றிக் கொண்டனர்,  பெரும்பாலாரோடு அவருக்கு நல்ல அறிமுகமும் தோழமையும் இருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.   தனிப்பட்ட அவர்களுக்கான இலாகா குறைகளைச் சொன்னார்கள்.  இந்த கூட்டத்தை முடித்ததும் அதற்காக அரைமணி நேரம் தனியாக ஒதுக்கிப் பேசலாம்  என்று அவர் சொல்ல   சந்தோஷத்துடன் ஏற்றுக் கொண்டனர்.     நான் உன்னிப்பாக ஒவ்வொரு விஷயத்தையும் அவர் டீல் பண்ணும் அழகைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஒரு வழியாக கூட்டம் ஆரம்பித்த ஐந்தே நிமிடங்களில்  ஜெகன்  மைக்கைப் பிடித்து விட்டார்.   ஒரு மணி நேரத்திற்கு சுற்றுச் சூழலை மறந்து மெஸ்மரிசத்திற்கு ஆட்பட்டதே போல மெய்மறந்து போனேன்.  என்ன பேச்சு!..  அவர் பேசுகையில்  விவேகானந்தர் வந்தார், ஐன்ஸ்டீன் வந்தார்,  ஜான் கீட்ஸ்,  மு.வ., பாரதி,  லிங்கன் என்று ஒரு தொழிற்சங்க கூட்டத்தில் இவர்களை எல்லாம் இணைத்து ஒருவரால் பேச முடியும் என்று நினைத்துக் கூட நான் பார்த்திராத அருமையான சொற்பொழிவாக  அது  இருந்தது.  கூட்டம் முடிந்ததும் கேள்வி--பதிலுக்காக கால் மணி நேரம்,  லைன்மேன்  தோழர்களோடு ஒப்புக்கொண்ட அரை மணி நேர தனிப்பட்ட உரையாடல் எல்லாம் முடிய 8.30 ஆகி விட்டது.  ஒன்பது மணிக்கு சென்னைக்கு கடைசி பஸ்.  தோழர் ஒருவர் தன் பைக்கை எடுத்து வர எங்களிடம் விடைபெற்று  பின் சீட்டில் உட்கார்ந்து எங்களைப் பார்த்து கை அசைத்து.... ஓ! என்ன மனிதர் இவர் என்று வியப்பில் திகைத்தேன்.   இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் வீடு போய்ச் சேர்ந்து.. குடும்பம், குழந்தை குட்டிகள் என்று எல்லாமும் இவருக்கும் உண்டு தானே என்று மனம் வலை பின்னியது.

தோழர் ஜெகன் என் மனசில் பதிந்தது இப்படித் தான்.  இந்த ஆரம்பம் நீண்ட ஒரு சரித்திரத்தை தன்னுள் கொண்டது.  எந்த நிலையிலும் நிலை பிறழாது எனக்கு வழிகாட்டிய ஆசான் அவர்.   எதைப் பேசினாலும்  தொழிற்சங்க ஊழியனாகவே தன்  குரலைப் பதிவு செய்வதில் இம்மியளவும் அவர் விலகிப் போனதில்லை.

கடலூர் முத்தையா தியேட்டர்.  சோஷலிஸ்ட் கட்சியின் தலைவர் டாக்டர்  ராம் மனோகர் லோகியா கூட்டம் உள்ளே நடக்கிறது. அது கடலூரில் ஜெகன்
தொலைபேசி இலாகாவில் தன் ஆரம்பப் பணியை ஏற்றுக் கொண்ட காலம்.  எதேச்சையாக அவர் லோகியா அவர்களின் பேச்சைக் கேட்க செல்கிறார்.  கூட்டத்தின் தலைவர் வழக்கறிஞர் மனோகரன்.  டாக்டர் லோகியாவின் ஆங்கிலப் பேச்சை தமிழாக்கம் செய்ய வருவதாக இருந்த திருக்கோயிலூர் சுந்தரம் வரவில்லை. எனவே கூட்டத் தலைவர் மனோகரனே  லோகியாவின் பேச்சை  மொழிபெயர்த்தார்.  அது  சரியாக அமையவில்லை.  கூட்டத்தின் முன் வரிசையில் அஞ்சல் தந்தி நிலையத்திற்கு அடிக்கடி வருகிற ஜெகனுக்குப் பழக்கமான நியூஸ் ரிப்போர்ட்டர்கள் மொழிபெயர்ப்புப் பணிக்கு அவரை அனுப்பி  விட்டனர்.

ஒரு அனைத்திந்திய தலைவரின் பேச்சை மொழிபெயர்க்கிறோம் என்ற உணர்வோடு தனக்கே உரிய பாணியில் ஜெகன் மொழிபெயர்ப்பு பணியை ஒரு அவசரத் தேவைக்காக செய்கிறார்.  கூட்டத்தில் கரவொலி.  அட்டகாசமான வரவேற்பு.   அகமகிழ்ந்த லோகியா தனது  நெல்லிக்குப்பம்,  சிதம்பரம் கூட்டங்களுக்கு மொழிபெயர்க்க ஜெகனை தன்னோடையே அழைத்துச் சென்று விடுகிறார்.   அரசியல் தலைவரின் பேச்சை மொழி பெயர்த்ததாலேயே  ஜெகன் அரசியல்  நடவடிக்கையில்  ஈடுபட்டார் என்று நிர்வாகம் குற்றம் சாட்டியது.   இனி அவரது பணியில் வரப்போகிற ஆண்டுகளுக்காக பெறவிருக்கும் ஆறு இன்கிரிமெண்ட்டை வெட்டி  தொடக்க கால சம்பளத்திற்கு குறைத்தது.   அரசியல் தலைவர் ஒருவரின் பேச்சை மொழிபெயர்த்தற்கு அந்நாட்களில் அகில இந்திய அளவில் கேள்விப்பட்டே இருக்காத ஆகப்பெரிய தண்டனை...  இது தான்  ஜெகன்  இலாகாவில் நுழைந்த தருணத்தில் பெற்ற   முதல்  விழுப்புண்!.. 

அன்றைய நாட்களில் வெளியூரிலிருந்து கடிதம் பெறுவது என்பதே தபால் அலுவலகத்தின் மூலம் தான் நடந்து எல்லோர் வாழ்விலும் தபாலாபீஸ் நிலையான இடத்தைப் பெற்றிருந்தது.  பலர் வீடுகளில்  காலை பதினோரு மணி ஆயிற்று என்றால் போதும், "என்ன தபால்காரன் இன்னும் வரலையா?" என்ற கேள்வி எழும்.  சொந்த பந்தங்களிலிருந்து,  வெளியிடங்களிலிருந்து கடிதங்களைப் பெறுவதில் அவ்வளவு எதிர்பார்ப்பு   அந்தக் காலத்தில் இருந்தது.    உறவுகள் பதினைந்து நாட்களுக்கு   ஒரு தடவையாவது தம் உறவினர்களுக்கு  ஒரு கார்டாவது போட்டு விடுவார்கள்.   அந்த தபால் அட்டை வழக்கமாக,  'இங்கு நாங்கள் நலம்;  அங்கு நீங்கள்   எல்லோரும் நலமா?'  என்றே   ஆரம்பிக்கும்.  காதல் கோட்டை,  'நலம்.  நலமறிய   ஆவல்' பாடலின் ஆதர்சம் அந்நாளைய தபால் கார்டு தான் என்று எனக்குத் தோன்றும்.

தபால் கடிதங்களைப் பொறுத்த மட்டில் என் அலுவலக முகவரி தான் என்  முகவரியாக அந்நாட்களில் இருந்தது.  அதனால் பணி நேரம் இருக்கிறதோ இல்லையோ தினமும்  காலை வேளையில்  பத்து மணியளவில் தொலைபேசி  நிலையம் சென்று விடுவது வழக்கம்.  அதற்குள் காலைத் தபால்கள் அலுவலக போஸ்ட் பாக்ஸில் காத்திருக்கும்.  தபாலை எதிர்பார்க்கும் ஆவலே கிளர்ச்சியூட்டக் கூடிய ஒரு அனுபவம்.  நாம்  செயலாற்றியதின் வினையாக பதில்  நிகழ்வை எதிர்பார்க்கும் ஆவல் அது.    பெரும்பாலும் பத்திரிகைகள்  அலுவலகங்களிலிருந்து வரும் தபால்கள் தான் எனக்கென்று இருக்கும்.

அன்றைய தபாலில்  'குறிஞ்சி மலர்'  நா. பார்த்தசாரதியிடமிருந்து வந்திருந்த கடிதம் முக்கியமான தகவல் கொண்டதாய் இருந்தது.

(வளரும்)


21 comments:

ஸ்ரீராம். said...

அழைக்கும் இலக்கியப்பணி!

G.M Balasubramaniam said...

உங்கள் இலக்கிய ரசனையின்காரணம் தெரிகிறது

Bhanumathy Venkateswaran said...

//அரசியல் தலைவர் ஒருவரின் பேச்சை மொழிபெயர்த்தற்கு அந்நாட்களில் அகில இந்திய அளவில் கேள்விப்பட்டே இருக்காத ஆகப்பெரிய தண்டனை... இது தான் ஜெகன் இலாகாவில் நுழைந்த தருணத்தில் பெற்ற முதல் விழுப்புண்!.. //
"சித்திர சோலைகளே உமை நன்கு திருத்த இப்பாரினிலே முன்பு எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ, உங்கள் வேரினிலே.." என்னும் பாரதிதாசனின் பாடல் நினைவுக்கு வருகிறது.

Bhanumathy Venkateswaran said...

//பலர் வீடுகளில் காலை பதினோரு மணி ஆயிற்று என்றால் போதும், "என்ன தபால்காரன் இன்னும் வரலையா?" என்ற கேள்வி எழும். சொந்த பந்தங்களிலிருந்து, வெளியிடங்களிலிருந்து கடிதங்களைப் பெறுவதில் அவ்வளவு எதிர்பார்ப்பு அந்தக் காலத்தில் இருந்தது. உறவுகள் பதினைந்து நாட்களுக்கு ஒரு தடவையாவது தம் உறவினர்களுக்கு ஒரு கார்டாவது போட்டு விடுவார்கள்.//
Gone are those days..:(((

கோமதி அரசு said...

தபாலை எதிர்பார்க்கும் ஆவலே கிளர்ச்சியூட்டக் கூடிய ஒரு அனுபவம். நாம் செயலாற்றியதின் வினையாக பதில் நிகழ்வை எதிர்பார்க்கும் ஆவல் அது.//

கடிதம் எதிர்பார்ப்பு மிகவும் முக்கிய காலகட்டம். இன்ப, துன்பத்தை பரிமாறி கொள்ளுவது எல்லாமே கடிதம் தான்.

கதை, கட்டுரைகளை பத்திரிக்கைக்கு அனுப்பி விட்டு, அவர்கள் அதை ஏற்றுக் கொண்டார்களா என்ற எதிர்பார்ப்பும் இருக்கும் அருமையான காலம் இல்லையா? உங்கள்
வசந்த கால நினைவுகளில்.

கோமதி அரசு said...

//நா. பார்த்தசாரதியிடமிருந்து வந்திருந்த கடிதம் முக்கியமான தகவல் கொண்டதாய் இருந்தது.//

தீபம் பத்திரிக்கைக்கு கதை கேட்டா?

வல்லிசிம்ஹன் said...

தபால் துறை, இலக்கியத் துறை உங்களை ஈர்த்துத் தக்க வைத்துக் கொண்ட அழகு அருமை.
நீங்கள் மிகுந்த பாக்கியசாலி.
இந்த அனுபவங்களைப் படிக்கும் போது
நம் மனது எத்தனை அழகான அன்னப் பறவையாக நன்மைகளைத் தக்க வைத்துக் கொள்கிறது என்று பூரிக்க வைக்கிறது.
மிக மிக நன்றி ஜீவீ சார்.
உங்கள் நட்பு கிடைத்தது எங்கள் அதிர்ஷ்டம்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

இலக்கியப் பணி என்று தனியாக ஏதும் இல்லை. எல்லாமே ஒன்றில் ஒன்று உள்ளடங்கியது தான்.

ஜீவி said...

@ ஜிஎம்பீ

உங்களின் ஈடுபாடுகளின் காரணம் தெரிகிறது என்று சொல்லியிருந்தால் சரியாக இருந்திருக்கும்.

ஜீவி said...

@ பானுமதி வெங்கடேஸ்வரன்

பாரதிதாசனின் நல்லதொரு பாடல் உங்களுக்கு நினைவுக்கு வந்திருக்கிறது.

சென்ற வாரம் BSNL-லின் அடிமட்ட அஸ்திவாரத் தோழர்கள் உருவாக்கிய செல்போன் டவர்களை நினைக்கும் பொழுது இதே பாடல் என் நினைவுக்கு வந்தது.

தங்கள் உணர்வுகளுக்கு நன்றி.

ஜீவி said...

@ பானுமதி வெங்கடேஸ்வரன் (2)

Yes. Those days were gone. :{

ஜீவி said...

@ கோமதி அரசு (1)

சரியே. இந்த எதிர்பார்ப்பு என் கூடவே என்னில் வாழ்ந்திருக்கிறது. 40-வருடங்களாக அது அவ்வளவாக இல்லை. ப்ளாக்கர் உலகம் அறிமுகமானதும் சுத்தமாக இல்லை. இப்பொழுதோ நாமே எழுதியவற்றை வெளியிடும் உணர்வு வந்து விட்டது.

பின்னூட்டங்களில் கூட சிலர் வெட்டி அரட்டை அடிப்பதைப் பார்த்தால், விழலுக்கு நீர் இறைப்பதைப் போல எனக்குத் தோன்றும்.

ஜீவி said...

@ கோமதி அரசு (2)

பத்திரிகைகளுக்கும் எழுத்தாளர்களுக்குமான உறவுகள் பல்வகைப் பட்டவை.

1. நீங்கள் சொல்கிற மாதிரி சில ஸ்பெஷல் எழுத்தாளர்க்களிடம் கதை கேட்டு பிரசுரிக்கும்.

2. சில எழுத்தாளர்கள் அனுப்பும் கதைகளை அது எவ்வளவு மோசமாக இருந்தாலும் பிரசுரிக்கும். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை அப்படியான எழுத்தாளர்களின் கதைகளைப் பிரசுரிப்பதைக் கடமையாகக் கூட கொண்டிருக்கும். (பத்திரிகைகளுக்கு கதை அனுப்பும் சில ஆரம்ப எழுத்தாளர்கள், இந்த மாதிரியான கதைகளைப் பார்த்து விட்டுத் தான், தான் அனுப்பிய தன் கதை எந்த விதத்தில் இந்த ஆளின் கதைக்குக் குறைந்தது?- என்று நினைப்பது உண்டு.

3. சில பத்திரிகைகள் ஏதாவது பரிசுப் போட்டி என்றால் தான் புதுசாக எழுதுபவர்களின் கதைகளை ஏறெடுத்தே பார்க்கும்.

4. வேறு எந்த வேலையும் செய்யாமல் எழுத்து வேலையை மட்டுமே தொழிலாகக் கொண்டுள்ளவர் என்று தெரிந்தால் சில பத்திரிகைகள் அவர்கள் கதைகளுக்கு முன்னுரிமை கொடுத்துப் பிரசுரிக்கும்.

-- இப்படியான போக்குகளில், 'கதை அனுப்பு' என்று எந்தப் பத்திரிகையும் என்னிடம் கேட்டதே இல்லை. அந்தப் பத்திரிகை ஆசிரியருடனான நெருக்கத்தில் 'என் கதையைப் போடுங்கள்' என்று நானும் இதுவரை கேட்டதில்லை. அது கெளரவக் குறைச்சலான காரியம் என்று பின்வாங்கி விடுவேன்.

அதனால் தான் தன் எழுத்துக்களை அதிகம் பிரசுரம் செய்த பத்திரிகை-அதன் ஆசிரியர் போன்றோரிடம் அந்த பத்திரிகையினால் வெளிச்சத்திற்கு வந்தவர்களை விட எனக்கு
அந்த பத்திரிகை, ஆசிரியர்களிடம் அதிகப் ப்ரியமும் அன்பும் இருந்திருக்கிறது..

தமிழ் எழுத்துலகில் ஒரு எழுத்தாளரின் எழுத்துக்களை இன்னொரு எழுத்தாளர் பாராட்டி எழுதி நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?.. கேள்விப்பட்டதுண்டா?.. அதெல்லாம் அதிசயம் இங்கு.

ஜீவி said...

@ கோமதி அரசு (2)

//தீபம் பத்திரிகைக்குக் கதை கேட்டா?//

நீங்கள் சொன்னதில் பாதி கரெக்ட்.

ஜீவி said...

@ வல்லிசிம்ஹன்

தங்கள் அன்பான ஆதுரமான வார்த்தைகளுக்கு நன்றி, வல்லிம்மா.

அன்பை வர்ஷிப்பவர்களுக்கு அப்படித் தான் தோன்றும். தங்களின் நட்பு கிடைத்திருப்பதற்கு நான் தான் பெருமைப்பட வேண்டும். அதுவும் எவ்வளவு காலமாக எல்.ஐ.சி. சின்னம் போல கைக்குள் அடங்கிய அகலாய் அதைப் பாதுகாத்து வைத்திருக்கிறோம்?..

நெல்லைத்தமிழன் said...

முன்பே படித்துவிட்டேன். இன்று மீண்டும் ஒரு முறை படித்தேன்.

இந்தத் தொழிற்சங்க நிர்வாகிகள், எந்த பிரதிபலனும் பாராமல், கொண்ட கொள்கைக்காகப் போராடுவது ரொம்பவும் ஆச்சர்யத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது. அதிலும் மிக எளிமையாக இருப்பது... என்ன ஒன்று..இப்போ அந்த மாதிரி ஆட்கள் குறைந்துகொண்டே வருகிறார்கள்.

நெல்லைத்தமிழன் said...

அன்றைய தபால்காரன் வந்துவிட்டானா (இப்படித்தான் அப்போ கேட்பாங்க)... எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன...

87களில் எங்க ஊரில் ஒரு தபால்காரர் ரெகுலராக தபால் போடுவார். மிக மிக ஏழை. ஆனால் ரொம்ப சின்சியராக பணி செய்பவர். நான் வெளிநாட்டுக்குச் சென்ற பிறகும் பல வருடங்களுக்குப் பிறகு அவர் அங்கு வேலை செய்வதைப் பார்த்தேன். உடை இன்னும் கிழிசல். ஆனால் வேலை நேர்த்தி.

காலம் மாறிவிட்டது. இப்போ தொடர்பு கொள்ளலுக்கு தபால் என்பது மிக அவசியம் என்ற ஒன்றாக இல்லாத நிலை வந்துவிட்டது.

Thulasidharan V Thillaiakathu said...

தபால் அன்றெல்லாம் தபால்காரர் வருவாரா நமக்கு ஏதேனும் தபால் இருக்கிறதா என்று எதிர்பார்த்து காத்திருந்ததில் உள்ள அந்த சந்தோஷம் இப்போதெல்லாம் இல்லவே இல்லை. இப்போது வாட்சப்பில் அந்த எதிர்பார்ப்பு...நம் மெசேஜ் போய்ச்சேர்ந்ததா...இரு டிக் வந்துவிட்டதா...அவர்கள் பார்த்ததன் அடையாளமாக ப்ளூ வந்துவிட்டதா...மெசேஜ் பதில் வந்திருக்கிறதா என்று பார்ப்பதாகிவிட்டது. இருந்தாலும் அக்காலத்தபாலுக்கு நிகராகாது.

அதுவும் அப்போதெல்லாம் வீட்டுக்குத் தெரியாமல் பத்திரிகைக்கு எழுதிப் போட்டு பதிலா இல்லை நாம் அனுப்பியதே மீண்டும் வந்திருக்கா என்று அனுப்பியதுதான் மீண்டும் வரும் என்பது தெரிந்திருந்தாலும்...

காத்திருத்தலில் இருந்த சுகம் இன்று இல்லை..

கீதா

ஜீவி said...

@ தி. கீதா

//அதுவும் அப்போதெல்லாம்.... //

நான் உட்பட நம் எல்லோருக்கும் இதுவே ஒரே மாதிரியான அனுபவமாக இருப்பது எப்படி என்று வியக்கிறேன்.

நான் வீட்டிலில்லாத போது பத்திரிகை அலுவலகத்திலிருந்து சுவற்றில் அடித்த பந்து மாதிரி திரும்பி வரும் கதைக் கவர்கள் பிரிக்கப்பட்டு.... என்னவெல்லாம் அனுபவங்கள், போங்கள்!

வே.நடனசபாபதி said...

அந்த புகைப்படத்தில் தங்களின் கம்பீரமான பார்வை எதையும் நேர்கொள்ளும் தைரியத்தைக் காட்டுவதாக தெரிகிறது.

//அரசியல் தலைவரின் பேச்சை மொழி பெயர்த்ததாலேயே ஜெகன் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டார் என்று நிர்வாகம் குற்றம் சாட்டியது//

எப்போதுமே அலுவலகப்பணியில் உள்ளவர்கள் அரசியல் பணிகளில் ஈடுபடக்கூடாது என்பது ஏட்டளவில் உள்ள விதி. இன்றும் பலர் புனைப்பெயரில் அரசியல் பணியில் ஈடுபடுத்திக்கொண்டு இருக்கிறார்கள். திரு ஜெகன் அவர்கள் அவ்வாறு செய்யாமல் துணிந்து தன்னை வெளிக்காட்டிக்கொண்டதால் தான் அவருக்கு அத தண்டனை கிடைத்தது என நினைக்கிறேன்.

திரு பண்ருட்டி ராமச்சந்திரன் மின்சார வாரியத்தில் பொறியாளராக பணிபுரிந்துகொண்டு இருந்தபோது தி.மு.க பொதுக்கூடங்களில் ‘சம்பத்’ என்ற புனைப்பெயரில் பேசுவாராம்.அப்போதெல்லாம் இப்போதுபோல் காணொளி ஊடகங்கள் இல்லாததால்,அப்போது நாளேடுகளில் சம்பத் பேசினார் என்று மட்டும் வந்த தகவலை வைத்து அவர் மேல் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லையாம்.

படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக காத்திருந்தபோது தினம் காலையில் எப்போது தபால்காரர் வருவார் என காத்திருந்தது நினைவுக்கு வருகிறது தங்கள் பதிவைப் படித்ததும்.

‘குறிஞ்சி மலர்’ நா. பார்த்தசாதியிடமிருந்து தங்களி கதை பிரசுரிக்க தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது என்ற மகிழ்வூட்டும் தகவல் வந்திருக்கும் என்பது எனக்டு யூகம்.

காத்திருக்கிறேன் விவரம் அறிய.

ஜீவி said...

@ வே. நடன சபாபதி

இந்திரா காந்தி அவர்களை பதவியிழக்கப் போகும் அளவிற்கு போனது நினைவுக்கு வருகிறது. அரசு ஊழியர்களாய் இருந்து விட்டு அரசியல்வாதிகளானவர்களையும் நாம் பார்த்திருக்கிறோம். அவரகளும் வானத்திலிருந்து திடீரென்று குதித்தார்கள் அல்ல. கட்சி அரசியல் பள்ளியில் பயின்றவர்கள் தாம்.

தோழர் ஜெகன் அவர்களுக்கு தண்டனை கிடைத்தது என்பதை விட அவர் இயக்கத்தில் பிற்காலத்தில் அகில இந்தியத் தலைவராகும் அளவுக்கு தன் தியாகத்தால் உயர்ந்ததற்கு ஆரம்ப வித்து இது தான்.

தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி, சார்.

Related Posts with Thumbnails