மின் நூல்

Thursday, September 5, 2019

மனம் உயிர் உடல்

6. சிந்தனை செய் மனமே....


குழந்தை மனது என்கிற சொல்லை அவ்வவ்போது நாம் கேட்டிருக்கலாம். குழந்தை மனம் என்றால் கள்ளம் கபடற்ற, சூது வாது அற்ற என்று நிறைய அற்ற சமாசாரங்கள் கூடவே வரும்.  ‘அற்ற’ என்றால் அற்றுப்போன, இல்லாத என்று அர்த்தம். கள்ளம், கபடு போன்ற விஷத்தன்மைகள் இல்லாத மனம் குழந்தை மனம். குழந்தைகளுக்கு பால் போன்ற வெள்ளை மனமாம். வெள்ளை என்பது அதன்  கபடமற்றத்  தன்மையைக் குறிக்க வந்தது. வெள்ளையின் கலர் மாறுவது  வளர்ச்சியின் ஊடாக என்று ஆரம்பித்து ஒருவகையில் அதுவே தான் வளர்ச்சி என்றாகிறது. . வாழுதல் என்கிற சுழலில் சமாளித்துக் கொண்டு நீந்துவது தான் வளர்ச்சி என்று அனுபவப்பட்டவர்கள் சொல்கிறார்கள்..

ஏற்படுவது எல்லாமே தேவையின் அடிப்படையில் தான். குழந்தையாய் இருக்கும் போது தேவைப்படாததெல்லாம் வளர்ச்சிப் போக்கில் தேவையாகி விடுகின்றன.  வெள்ளை காலத்திற்கேற்ப கோலம் பூண்டு நிறம் மாறுவதும் தேவைகளின் அடிப்படையில் தான்.  படிப்பு, வேலை, கல்யாணம், குடும்பம், குவாகுவா என்று வரிசை கட்ட  தேவைகளின் நீளம் மலைப்பாதையாய் நீண்டு நீள, அகல, உயர வாக்கில் என்று சகல பரிமாணமும் கொள்கிறது. குழந்தைப் பருவத்தில்  கைகால் அசைக்கவும், குரல் கொடுக்கவும் மட்டுமே முடிந்ததினால், அந்தப் பருவத்தில் தேவைப்படும் ஒரே தேவையான பாலுக்கும் குழந்தை குரல் கொடுக்கிறது. குரல் கொடுத்தால் தீர்வு கிடைக்கிறது   என்று அந்த பிஞ்சு மனசில் பதிந்து போவது தான் பிறந்த குழந்தையின் ஆரம்ப மனப்பதிவுகளில் ஒன்று போலும். 

குழந்தையின்  மனப்பதிவினை வரிசைபடுத்தினால்,  முதல் பதிவு கருப்பை வாசம் வெளியுலக வரவானதும்   அறையின் சீதோஷ்ண நிலையின் தாக்கம். அடுத்து பாலுக்கான ‘வீல், வீல்’, அடுத்து தாயின் தேசலான முகம் என்று இருக்கலாம்.  மழலையாய் மிழற்றுவது வரை பிறர் கவனத்தை ஈர்ப்பதற்கு இந்த 'குரல் கொடுப்பது' தான் குழந்தைக்குப் பழக்கப்பட்ட ஒன்றாய் இருக்கிறது. பால் என்றில்லை, கைக்கு எட்டாத பொம்மையைத் தொட்டுப் பார்க்க முடியாத ஆத்திரம் அல்லது ஆவல், தாயின் அருகாமை என்று தனக்குத் தேவையானதைத் தெரியப்படுத்த குரல் கொடுப்பது ( நம் பேச்சு வழக்கில் அலறல் அல்லது அழுவது) என்பது ஒன்றே குழந்தை அறிந்த ஒன்றாய் இருக்கிறது. ‘நை நைன்னு எப்பப் பாத்தாலும் அழுகை; எதுக்கு அழறான் என்றே தெரியலே’ என்றால் அந்தக் குழந்தையின்  உடனடித் தேவை என்னவென்று நமக்குத் தெரியவில்லை என்று அர்த்தம்..  வயிற்று நமநம, ஜட்டி நனைந்திருப்பதின் ஜில்லிப்பு, அறையின் சீதோஷ்ண நிலை என்று குழந்தை சுட்டிக் காட்டுவதற்கான காரணம் எதுவானும் இருக்கலாம். குழந்தைக்குத் தெரிந்த ஒரே அஸ்திரமான அந்த வீரிடும் குரல், பையப்பைய மொழியாய் மாற்றம் கொள்வது பிறப்பின் அதிசயம்.  என்ன மொழியில் குழந்தையிடம் பேசும் வழக்கத்தை வைத்துக் கொள்கிறோமோ அந்த  மொழி குழந்தைக்கு அறியும் மொழியாகிறது. ஒவ்வொன்றும் பழக்கத்தின் அடிப்படையிலேயே குழந்தைக்கு வழக்கமாவது தான் உயிர்ப்பின் விசித்திரம். ஏக சக்ராதிபதியான மனசை வென்று அடிமைபடுத்த திறம் பெற்ற  ஒரே வல்லுனர் இந்த பழக்கம் தான்.

பழக்கம் ஏன் தோஷம் என்று அழைக்கப்படுகிறது என்பது  உங்கள் யூகத்திற்கு..

இளமை பழக்கம் இறுதி வரை நிழலாய்த் தொடரும் சாகசம் பெற்றது. . எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் பொடி போடுவார்.  அவர் அப்பாவும் பொடி போடுவார்.  அவரின் அப்பாவுக்கும் பொடிப்பழக்கம். தாத்தா மட்டும் மட்டையில் பொடியை இடுப்பு வேஷ்டி மடிப்பில் பதுக்கியிருப்பார். . அப்பாவுக்கும் மகனுக்கும் மட்டும் தனித்தனியே குட்டியூண்டு வெள்ளி பொடி டப்பா.  "நீங்க மட்டும் ஏன் தாத்தா மட்டையிலே?" என்று ஒரு நாள் கேட்டேன். "இதில் இருக்கும் காட்டம் டப்பாவில் கிடைக்காதுடா... சவசவத்து இருக்கும்" என்றார் தாத்தா, ஒரு இழுப்பு இழுத்ததினால் ஜிவுஜிவுத்த விழிகளுடன்.  தாத்தா--அப்பா--மகன் என்று இந்த பொடி சங்கிலி என்னுள் என்னன்னவோ யோசனைகளைக் கிளர்த்தியிருக்கிறது.  நிச்சயம் இது  ஜீன் சமாசாரம் இல்லை என்பது மட்டும் நிச்சயம்.  'பின்னே?' என்று நமக்குள்  ஒரு கேள்வி கேட்டுக் கொண்டால், அது உளவியலின்  பெரியதோர் விவாத களத்திற்கு இட்டுச் செல்லும்.

ஜீன் சமாச்சாரத்திற்கு பட்டும் படாமலும்  ஒரு உதாரணத்தைப் பார்ப்பதற்கு இதுவே சரியான தருணம் என்று  தோன்றுகிறது.  எனக்கு மிகவும் பழக்கமான ஒரு சித்த வைத்தியருக்கு  இரண்டு காது மடல்களிலும் கற்றையாக உரோமம் மண்டிக் கிடக்கும்.  அவரது மூன்று மகன்களுக்கும் இதே கதை  தான்.  இது தான் ஜீன் வழி வரும் வழி வழி உறவு ஒற்றுமை. 

பிறவிக்குப் பிறவி மீண்டும் மீண்டும் பிறந்தவுடனான வீரிட்ட அழுகையிலிருந்து வாழ்க்கை ஆரம்பிக்கிறது என்பது தான் வழக்கமாகத் தெரிகிறது.  அந்த வீரிடல் இல்லை என்றால் தான் மருத்துவரின் புருவம் உயரும்.    ஆரம்பப் பிறப்பிலிருந்து  (ஆரம்பம் இது தான் என்று யாருக்குத் தெரியும்) ஒரு எல்லை வரை, அடுத்த பிறவியில் முற்பிறவியிலான அந்த எல்லையிலிருந்து அடுத்த எல்லை வரை அதற்கடுத்த பிறவியில் தொடர்ந்த அந்த  எல்லையிலிருந்து அடுத்த எல்லை வரை என்று இறுதி எல்லையை அடையும் வரை என்றில்லை.  ஒவ்வொரு பிறவிக்கும் ஆரம்ப அழுகையிலிருந்து தான் ஆரம்பம் என்றிருப்பது தான் முந்தைய பிறவிகள் என்றிருந்தால் அவற்றின் பழக்க வழக்கங்கள், மனப்பதிவின் பாதிப்புகள் அடுத்தடுத்த பிறவிகளில் தொடர்வதில்லை என்பதற்கு சான்று.   ஒவ்வொரு பிறவிக்கும் பாவ புண்ணியங்கள் புதுசு புதுசாய் கணக்கில் சேரும் போலிருக்கு.  பிறவியிலா இறைநிலை அடைய செய்த பாவங்கள், புண்ணியங்கள் இரண்டையும் அந்தந்த  பிறவியிலே இழக்க வேண்டுமாம்.  இரண்டுமே கணக்கில் பைசல் ஆகவேண்டுமாம்.  ' 'ஏனாம், எதற்காகவாம்' என்று யாருக்காவது தோன்றினால் சொல்லலாம். தொடர் பிறவிகளில் நம்பிக்கை இல்லை என்பாரும் முயற்சிக்கலாம்.
  
வாழ்க்கையின் சுக செளகரியங்களுக்காக  தேவைப்படுவனவற்றை ஏற்றுக் கொள்ளவும் நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். .  நாம் ஏற்றுக்கொள்ளும் எதற்கும் அதற்கான தேவை நம்மில் இருக்கும். இந்த ‘நம்மில்’, நம் மனம் என்று கொண்டாலும் சரியே. தேவையின் அடிப்படையில் தான் எல்லாமே. என்று ஆகிப்போனபின் நம் தேவை அல்லது  தேவையின்மை தான் எதையும் ஏற்றுக்கொள்வதையும் ஏற்றுக் கொள்ளாமையையும் தீர்மானிக்கிறது.  சிலருக்கு தேவை  இருக்கோ, இல்லையோ வாங்கி வைத்துக்  கொள்ள வேண்டும்.  சிலர் எதிர்கால உபயோகத்திற்கு என்று கண்டதையும் வாங்கிப் போடுவார்கள்.

25 வயது வாலிபன் கைத்தடி ஒன்றை வாங்கினான்.

"என்ன உங்க தாத்தாவுக்கா?.. உயரம் என்ன இருப்பார்?" என்று கேட்டார்  கடைக்காரர், தாத்தாவின்  உயரத்திற்கேற்ப கோல் கொடுக்கலாமே என்று., .

"தாத்தாக்கு  இல்லை; எனக்குத் தான்.  எதுக்கும் இருக்கட்டுமேன்னு வாங்கறேன்!"என்ற  வாலிபனை வினோதமாகப் பார்த்தார் கடைக்காரர்.

அடுத்த இரண்டே வருடங்களில் அவனுக்குத் திருமணம் நிச்சயமாக, "காசி யாத்திரைக்கு கைத்தடி வாங்க வேண்டாம்; எப்போவோ வாங்கியாச்சுன்னு பெண் வீட்டாரிடம் சொல்லி விடுங்கள்" என்றானாம் பையன்.

துய்த்தலின் அடிப்படையிலான தேவைகளின் சரிதம் பிர்மாண்டமானது. தேவையை ஏற்படுத்துவதும் புறக்கணிப்பதும் அவரவர் மனமே. தேவையின் ஊற்றுக்கண் உள்ளம் தான்.  உள்ளத்தில் கிளர்ந்தெழும் ஆசையும் ஆர்வமும் தான் மாட்டிக்கொள்ளும் வலை. வெவ்வேறு தேவைகளாக தேவைகளும் கிளைபிரிந்து கிளைபிரிந்து மாயம் காட்டுகின்றன. தேவைகளில் சாஸ்வதமான, அல்லது அந்தந்த நேரத்து என்று வகைகள் உண்டாயினும் மனசின் உள்ளார்ந்த ஈடுபாடுகள் தாம் அத்தனையையும் தீர்மானிக்கின்றன.

ஈடுபாடுகள் உள்ளோர் ரசனையாளர்களாய் இருப்பார்கள்.  எதிலும் ஈடுபாடு இல்லாதோர் பெரும்பாலும் 'டைலமா' பேர்வழிகள்.  நண்பகலில் கூட ஹோட்டலுக்குப் போனால் 'சாப்பாடா, டிபனா?' என்று தீர்மானிப்பதற்குள் ஒருவழியாகி, சர்வர் வந்து கேட்கும் பொழுது தீர்மானித்தற்கு மாறாக ஆர்டர் கொடுப்பார்கள். 

நம் தேவைகளின் அடிப்படையில் நியாமில்லாத பல விஷயங்களுக்கும் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.  இந்த நியாயம், நியாயமின்மையைத் தீர்மானிப்பதும் அவரவர் மனசின் நியாய சபை தான்.  இப்படியாக சர்வ சக்ராதிபதியாய் ஆளுகை நடத்திக்கொண்டு எல்லா விஷயங்களிலும்  மனமே மனிதனை வழிநடத்திக் கொண்டிருக்கிறது. தேவையைத் துறந்தாலே பல விஷயங்கள் செல்லாக் காசாகி விடும். மனசுக்கு இதை யார் எடுத்துச் சொல்வது என்பதிலேயே ஏகப்பட்ட விவாதங்களும், மாறுபட்ட கருத்துக்களும் மனவியலாரிடையே மண்டிக் கிடக்கின்றன. . இந்த நச்சு-பிச்சுகளுக்கு நொந்து தான் கண்ணதாசன் ‘பிள்ளையாய் இருந்து விட்டால் இல்லை ஒரு தொல்லையடா’ என்று திரைப்படக் கவிதை ஒன்றில் சொல்லி நம் மனசை அசக்கியிருப்பார்.

கபடமில்லாத குழந்தைப் பருவத்து மனம் வயது கூடக் கூட வளர்கிறது என்று தெரிகிறது.  வயதைப் பொறுத்து உடல் உறுப்புகளுக்குக் கூட  வளர்ச்சி உண்டு தான். அந்த மாதிரியான வளர்ச்சி அல்ல மனசின் வளர்ச்சி. இது மனசின் குணாம்ச வளர்ச்சி.. நல்லது கெட்டது அறியக்கூடிய வளர்ச்சி. வளர வளர எது நல்லது எது  கெட்டது என்பதை அறிய வேண்டும் என்கிற தேவையின் அடிப்படையிலான வளர்ச்சி இது.     குழந்தை பருவத்து ஒன்றுமறியா நிலையில் இருக்கக்கூடாதென்பதற்காக ஏற்படுகிற வளர்ச்சி. வாழ்க்கை அறிதலுக்காக ஏற்படுகிற வளர்ச்சி. இந்த இடத்தில் தான் அறிதல் என்பது மனதால் மட்டுமே முடியும் என்று தெரிகிறது. 

ஒன்று பற்றிய அறிவு பெறுவதை அறிதல் என்கிறோம். ஆக அறிவு பெறுவதற்கான சாத்தியம் கொண்டது மனம் என்று தெரிகிறது. மனத்திற்கான படைப்புத் தேவையும் இது தானென்று தெரிகிறது. தேவைகளின் தீராத தாகம் அப்படித் தேவைப்பட்டவற்றை அடைவதற்கான முயற்சியாக நம்மில் உசுப்பப்படுகிறது. முயற்சி செயல் வடிவம் கொள்கிறது. எல்லா செயல்களுக்கும் விளைவு உண்டு.  அந்த விளைவு தான் தேடித் திரிந்த தேவையின் பலன்.  பலனை நுகரும் பொழுது அனுபோகமாக அது நம்முள் மலரும்.  அனுபோகம் வேறு; அனுபவம் வேறு.  அனுபோகம் என்பது தேவையைத் துய்ப்பதான ரசனை.  அனுபவம் என்பது experience.

மனம் என்பது நாம் பெறும் அனுபவங்கள் அத்தனையும் நம் மூளையிலுள்ள ந்யுரான்களின் இணைப்பில் ஏற்படும் மாலிக்யுலர் மாறுதல் என்றார் ஃப்ரான்சிஸ் க்ரிக்.  ப்ரான்சிஸ் க்ரிக் யாரென்றால் டி.என்.ஏ. ரகசியத்தை கண்டுபிடித்த மேதை.  மூளையின் அடித்தளத்தில் சின்னச் சின்ன அணுக்கள் க்வாண்டம் இயற்பியல்படி இயங்குகின்றன;  வெளியுலக நிகழ்வொன்றிற்கும், இந்த இயக்கத்திற்கும் முடிச்சுப் போட்டு தீர ஆராய்ந்தால் மனம் பற்றிய வெளிச்சம் கிடைக்கும் என்பார் ராஜர் பென்ரோஸ். மனம் பற்றிய ஆராய்ச்சிகளின் தீவிரம் கூடிப்போன  நேரத்து மன ஆராய்ச்சிகள் கூட வேறு வழியில்லாமல் மனதால் தான் நடைபெறுகின்றன என்கிற உண்மை உறைத்தது. இன்னொரு பக்கத்தில் மனதை மனதால் அறியவே முடியாது;  அப்படி அறியவும் கூடாது என்கிற கொள்கைக்கான வலு கூடியது.  மனத்தைப் பற்றி அறிவு பெறுவதற்கான சோதனைகளும் அது பற்றிய தீராத விவாதங்களும் வெறும் நியுரான்களின் இயக்கத்தைத் தாண்டியதான அற்புத ஆற்றல் கொண்ட படைப்பு களம் இந்த மனம் என்று ஒரு பிரமிப்பான முடிவுக்கு இட்டுச் சென்றது.

(வளரும்,,)


25 comments:

ஸ்ரீராம். said...

மனதிலிருந்து 'அற்ற' சொல்லுக்குச் சென்று..

அதிலிருந்து வெள்ளை நிறத்துக்குச் சென்று..

இப்படிச் சொல்லலாமோ... அதற்கென்று நிறம்கிடையாது. எதிர்பப்படும் நிறத்தை பிரதிபலிக்கும் வெள்ளை!

ஸ்ரீராம். said...

மனதில் எண்ணங்கள் என்பது குழந்தைப் பருவத்திலிருந்து எப்போது முதலில் உண்டாகி இருக்கும்?

நம் முதல் எண்ணம் / நாம் முதன்முதலில் நினைத்தது என்ன எந்த வயதில் என்று பின்னால் சென்று அறிய முடிகிறதோ? இல்லையே...

ஸ்ரீராம். said...

பொடி விஷயத்திலேயேதோ பொடி வைக்கிறீர்கள். என்ன என்று பின்னால் 'தும்மும்'போது தெரிந்து கொள்கிறேன்!!!

ஸ்ரீராம். said...

இனி பிறவி இருக்காது என்று நினைத்திருந்தேனே... மறுபடி பிறந்து விட்டேனா? என்றுதான் முதல் அழுகையோ!! அல்லது சென்ற பிறவிக்கும் இந்தப் பிறவிக்கும் இடையிலிருந்த அந்த இனம்தெரியாத இருண்ட காலத்தின் பயத்தில் விளையும் அழுகையோ!

ஸ்ரீராம். said...

டைலமா பேர்வழிகளை நம்பிதான் இன்றைய வியாபார உலகமே இயங்குகிறது! அவர்கள்நினைத்துப் போவது ஒன்று. பார்ப்பது ஒன்று வாங்குவது ஒன்றாக இருக்கும்!

வெங்கட் நாகராஜ் said...

எத்தனை விஷயங்கள்...

இன்றைக்கு பதிவின் நீளம் கொஞ்சம் அதிகமோ....

குழந்தையின் அழுகை - அதற்கான அர்த்தம் புரிந்து கொள்வது எத்தனை சிரமம்... ஆனாலும் புரிந்து கொள்கிறார்கள் குழந்தையைப் பெற்ற தாய்....

தொடர்கிறேன்.

வே.நடனசபாபதி said...குழந்தைகளுக்கும் கற்பனை தோன்றுமாம். அதனால் தான் சில சமயம் குழந்தைகள் தானே சிரிக்கின்றானவாம்.

மனம் என்பது சிந்தனை, கற்பனை போன்ற உணர்வுநிலை சார்ந்த அம்சங்களின் தொகுப்பு என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அதனால் தான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் மனம் என்பது ஆராயப்படவேண்டிய ஒன்று என்றும், அப்படி ஆராய்ந்தால் தான் அது வளப்படும் என்றும் கூறுகிறார்.

எனவே மனதில் ஏற்படுகின்ற உணர்வுநிலைக்கு காரணம் மூளை என்தை மறுப்பதற்கில்லை. எனவே மூளைக்கும் மனதிற்கும் உள்ள தொடர்பு பற்றி தங்களின் கருத்தை அறிய தொடர்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அழுகையில் ஆரம்பிக்கும் உரிமைக் குரல் பிறகு வளர்கிறதா
தேய்கிறதா என்பது குழந்தை வளரும் சூழ்னிலையைப்
பொறுத்ததோ.
அற்புதமான ஆராய்ச்சி.
அதனால் சென்ற ஜன்மத்துக்கும் இந்த ஜன்மத்துக்கும் தொடர்பில்லையா.
ரசிக்க முடியவில்லையே.

மூளைக்குக் கட்டுப்பட்டு, உடலுக்குக் கட்டுப் பட்டு மனம் வளர்கிறதா.
பிறகு அதன் வசம் மூளையும் ,உடலும் சென்று விடுகிறதா.
பெரிய பெரிய ஆராய்ச்சிதான் இது.
பொடி போடுவது தந்தை தாத்தாவைப் பார்த்து என்று கொள்ளலாம். எனக்குத் தெரிந்து ஒரு குடும்பத்தில் அத்தனை பேரும் சீட்டாடுவார்கள்.
96 வயதுத் தாத்தாவிலிருந்து 15 வயது கொள்ளுப் பேரன் வரை.
இது பழக்க தோஷம்.

காதில் முடி வருவது உடல் ப்ரிணாம்த் தொடர்ச்சி.
சரியா சார்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அதிகம் சிந்திக்க வைத்த, நுணுக்கமான செய்திகளைக் கொண்ட பதிவு.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (1)

மனத்தை ஒரு பொருள் மாதிரி உருவகம் கொண்டால் இப்படியெல்லாம் வெள்ளை, பச்சை என்று உருவகம் கொள்ளலாம். அனால் மனமோ, அப்படியில்லை! :)

ஜீவி said...

@ ஸ்ரீராம் (2)

//பின்னால் சென்று அறிய முடிகிறதோ? //

பின்னால் என்றால் (முன்னால் சென்று) என்ற அர்த்தத்தில் சிறுவயது நினைவுகளைச் சொல்கிறீர்களா?..

நான் 1943 வருடம் ஜனவரி மாதத்தில் பிறந்திருக்கிறேன். 1945- ஆகஸ்ட்டில் இரண்டாம் உலக யுத்தம் முடிவுக்கு வந்திருக்கிறது. தொடர்ந்து ஊரடங்கு சட்டம் அமுலுக்கு வந்திருந்திருக்கிறது. ARP என்று சொல்லக் கூடிய Armed Reserve Police தொடர்ந்து ஊர் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். நான் அப்பொழுது மதுரையில் காமாட்சிபுர அக்கிரஹாரம் என்ற வீதியிலிருந்த எங்கள் வீட்டில் குழந்தையாய் தவழ்ந்திருந்த காலம். எனது 3 அல்லது மூன்றரை வயதில் தெருக்களில் கேட்ட பூட்ஸ் ஒலியும், விசில் சப்தமும் இன்னும் நினைவில் இருக்கின்றன.

தெருவிளக்குகள் மாலை கழிந்த முன்னிரவு நேரங்களில் விளக்குக் கம்பத்தில் ஏணி சாற்றி கார்ப்பொரேஷன் ஊழியர் அதில் ஏறி மண்ணெண்ணெய் விளாக்கை ஏற்றுவார். திண்ணையில் யார் மடியிலோ அமர்ந்து அதைப் பார்த்த காட்சியும் அவ்வவ்போது நினைவுக்கு வருகிற மாதிரி அழியாது மனத்தில் பதிந்திருக்கிறது.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (4)

உங்களது விசித்திர கற்பனை தான்.

பிறவியாவது ஒன்றாவது?.. வல்லிம்மா பின்னாடி சொல்லியிருகிற மாதிரி உரிமைக்குரல் அது. தன் உணர்வுகளைத் தெரிவிக்கவும் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கவும் குழந்தைக்குத் தெரிந்த ஒரே சமிக்ஞை அந்த வீரிடல் தான். அந்த அலறலுக்கு யாரானும் செவி சாய்த்து விடுகிறார்கள். அப்படி செவி சாய்க்கவில்லை என்றால் கை--கால் உதைத்து தன்னால் முடிந்த அத்தனை கவன ஈர்ப்பு செயல்பாடுகளையும் செய்ய குழந்தை தயாராகி விடுகிறது.

கோமதி அரசு said...

//தேவையின் அடிப்படையில் தான் எல்லாமே. என்று ஆகிப்போனபின் நம் தேவை அல்லது தேவையின்மை தான் எதையும் ஏற்றுக்கொள்வதையும் ஏற்றுக் கொள்ளாமையையும் தீர்மானிக்கிறது. சிலருக்கு தேவை இருக்கோ, இல்லையோ வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். சிலர் எதிர்கால உபயோகத்திற்கு என்று கண்டதையும் வாங்கிப் போடுவார்கள்.//

ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான்.
நிறை தேவையற்றதை வாங்கி வைத்துக் கொண்டு தூக்கி ஏறியவும் மனம் இல்லாமல் , வைத்துக் கொள்ளவும் அலுப்பு பட்டுக் கொண்டு இருக்கிறோம்.
பெரியவர்கள் சொல்வது மனதை பற்றி தேவை இல்லாதவைகளை அவ்வோப்பது தூக்கி ஏறிந்து விட வேண்டும். தேவை இல்லா குப்பைகளை மனதில் தேக்கி வைத்து இருந்தால் மனம் கெட்டு போகும் என்று.

சிலர் திட்டியதை மனதில் வைத்துக் கொண்டு பின் சமயம் வரும் போது திட்டியவரிடம் கேட்பார்கள், அவர்கள் திட்டிய அன்றே மறந்து போய் இருப்பார்கள்.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (3)

பொடி விஷயம், பழக்க தோஷத்திற்கு உதாரணம்.

அதே போலத் தான் சிகரெட் பிடிக்கும் தந்தைமார்களின் பழக்கமும்.

பெரியவர்கள் உபயோகிக்கும் பொழுது அதன் மேலான 'தீங்கு' வளர்கிற இளம் பிராயத்தினருக்கு பெரிதாகத் தெரியாமல் போகிறது. அப்பாவே உபயோகிக்கிறாரே, எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் என்று ஒரு நாள் இழுத்துப் பார்க்கும் பழக்கம் தான்
வயதான பின் பிற்காலத்திய பழக்கம் ஆகிறது.

மற்றபடி பொடி விஷயத்தில் எழுதும் பொழுது எந்த பொடி வைக்கும் எண்ணாமும் இல்லாமல் தான் எழுதினேன். பின்னால் வாய்ப்பு வந்தால் தும்மவும் செய்யலாம்.
இப்போதைக்கு இல்லை என்று மட்டும் தெரிகிறது, ஸ்ரீராம்.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (5)

டைலமா பேர்வழிகளின் உற்சாகத்திற்கு ஒன்றும் குறைச்சல் காணோம். இன்றைய வாழ்க்கை அமைப்பே '(வங்கிகளில் கடன் வாங்கு; இஷ்டப்படி செலவு பண்ணு. பின்னாடி பார்த்துக் கொள்ளலாம்' என்ற பொறுப்பற்ற குணத்தை ஊக்குவிப்பதாக இருப்பதாகவே நினைக்கிறேன்.

இன்றைய தினமலர் பத்திரிகையில் எத்தனை கோடிக்கணக்கான பணம் பொதுத்துறை வங்கிகளில் வாராக் கடனாக இருக்கிறது என்ற செய்தியைப் படித்ததின் படிப்பினை தான் மேற்கண்ட பின்னூட்ட பதில்.

ஜீவி said...

@ வெங்கட்

இந்தப் பதிவு கொஞ்சம் நீளமோ?.. இருக்கலாம். கொஞ்சம் கொஞ்சமாகச் செய்திகள் சேர்ந்து விட்டன.

குழந்தை அழுவதற்கான காரணங்கள் தாய்க்கு அத்துப்படி.. நாலைந்து விஷயங்களை வைத்துக் கொண்டு இது அல்லது அது என்றூ ஈஸியாக பழக்க ஞானத்தில் முடிவுக்கு வந்து விடுகிறார்கள்.

குழந்தைகளை சுலபமாக டைவர்ட்டும் பண்ணலாம். அழகிற குழந்தையின் கையில் ஏதாவது பொம்மை மாதிரி புதுப் பொருளைத் திணித்து திகைக்க வைத்து அழுகையை திசை திருப்பலாம். சில கில்லாடிக் குழந்தைகள் ஒரே வினாடியில் அதைத் தூக்கி எறிந்து விட்ட இடத்திலிருந்து அழுகையைத் தொடரவும் செய்யும்.

எதற்கும் மசிந்து கொடுக்காமல் இடித்த புளி மாதிரி இருக்கிற பெற்றோர்களும் உண்டு.
கேட்டால், இந்த அழுகைக்கெல்லாம் இந்த வயசிலேயே இடம் கொடுத்தால் பின்னால் அழுது சாதித்துக் கொள்ளும் பழக்கம் வந்து விடும் என்று தான் சாதித்துக் கொண்ட பழக்கத்தில் சொல்லவும் செய்வார்கள்.

ஜீவி said...

@ வே. நடன சபாபதி

//குழந்தைகளுக்கும் கற்பனை தோன்றுமாம். அதனால் தான் சில சமயம் குழந்தைகள் தானே சிரிக்கின்றானவாம்.//

கடவுள் தோன்றி குழந்தைக்கு விளையாட்டு காட்டுகிறார் என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

மனத்தில் ஏற்படுகிற உணர்வு நிலை, மனத்திற்கும் மூளைக்கும் உள்ள தொடர்பு ---என்றெல்லாம் வார்த்தைகளில் வடித்துச் சொல்கிற அளவுக்கு மனம் என்ற ஏதும் ஸ்கேனில் தட்டுப்படுகிற மாதிரி உடலில் இல்லை என்பதே ஆய்வாளர்களின் முடிவு.

மனம் என்றால் என்ன என்று போகப் போகப் பார்க்கலாம். தொடர்ந்து வாசித்து வருகிறீர்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஜீவி said...

@ வல்லிசிம்ஹன்

// சென்ற ஜன்மத்துக்கும் இந்த ஜன்மத்துக்கும் தொடர்பில்லையா.
ரசிக்க முடியவில்லையே..//

சென்ற ஜன்மம் என்பது அருமையான கதைக்கான சப்ஜெக்ட்டாக நம் மனத்தில் உருவகம் கொண்டிருக்கிறது. சாஸ்திர நம்பிக்கைகளுக்கு அடித்தளமாகவும் இருக்கிறது. அதனால் தான் அப்படியான ஒன்று இல்லையோ என்ற நினைப்பே ரசிக்க முடியாமலிருக்கிறது.
இருப்பினும் சென்ற ஜென்மம் என்ற கருத்துருக்கு உரிய மரியாதை கொடுத்து சாஸ்திரங்கள், உபநிஷத்துக்கள் பார்வையில் வரும் பகுதியில் அதை அலசுவோம். நெல்லைத் தமிழன் இந்தத் தொடரை வாசித்து வருவார் என்று நம்புகிறேன்.

ஜீவி said...

@ வல்லிசிம்ஹன்

//மூளைக்குக் கட்டுப்பட்டு, உடலுக்குக் கட்டுப் பட்டு மனம் வளர்கிறதா.
பிறகு அதன் வசம் மூளையும் ,உடலும் சென்று விடுகிறதா. //

மனம் என்ற பொருளே நம் உடலில் இல்லாத போது, மூளை, உடல் போலவான இதற்கும் ஒரு வளர்ச்சி என்றெல்லாம் நினைத்தால் இந்த ஆயுவில் நாம் பாதை தப்பிப் போய்விடுவோம்.

பொடி போடுதல் லாகிரி வஸ்து உபயோகிக்கிற மாதிரி. நெடுங்காலமாக பொடி போடுவோருக்கு துப்பறியும் சாம்புவின் கோபுலு சித்திரம் மாதிரி மூக்குப் பிரதேசம் அமைந்து விடும். மூக்கின் வழியாக உள்ளுக்குப் போகும் பொடி, கபாலத்தின் கீழ்ப்பாகத்தில் ஒட்டடை மாதிரி படிந்து விடும். ஓரளவுக்கு மேலான படிதல் தன்னாலே வெளியேற்றவும் படும். நரம்புத்தளர்ச்சி, சரும வியாதிகள் போன்றவற்றிக்கு பொடி போடுதல் ஒரு வழிப்பாதையாக அமைந்து விடும்.

சிகரெட் மாதிரி அதுவும் நாமே ஏற்படுத்திக் கொள்கிற மாதிரி ஒரு பழக்கம் தான். சிந்தனை கிளர்கிற மாதிரி நாம் நினைத்துக் கொள்கிறோம். அவ்வளவு தான். பொடிப்பழக்கம் கொண்டிருந்த அந்நாளைய எழுத்தாளர்கள் சிலரை எனக்குத் தெரியும்.

காது மடலில் உரோம வளர்ச்சி பரம்பரை ஜீன் வழி வருவது. இன்னொரு வகையில் பார்த்தால் நமது போன ஜென்ம தொடர்புக்கு சரியான சான்று இது. :)

ஜீவி said...

@ Dr. B. Jambulingam

தாங்கள் வாசித்து வருவது கண்டு மகிழ்ச்சி, ஐயா.

ஜீவி said...

@ கோமதி அரசு

இந்த பகுதிகளையெல்லாம் வாசித்து வரும் பொழுது நீங்கள் மகரிஷி சொன்னவற்றையெல்லாம் ஒப்பிட்டும் பார்க்க வேண்டும். கேள்விகள் கேட்க வேண்டும்.
அப்படியான விவாதங்கள் எல்லாம் இந்தப் பகுதியை இன்னும் சிறப்பாக எழுத உந்து சக்தியாக இருக்கும். தொடர்ந்து வாருங்கள், கோமதிம்மா.

நெல்லைத்தமிழன் said...

//முந்தைய பிறவிகள் என்றிருந்தால் அவற்றின் பழக்க வழக்கங்கள், மனப்பதிவின் பாதிப்புகள் அடுத்தடுத்த பிறவிகளில் தொடர்வதில்லை// - நிச்சயமாக இல்லை. முந்தைய ஜென்ம நினைவுகள், பயங்கள் ஆங்காங்கே ஒட்டியிருந்து நம்மைத் தொடர்ந்து வருகிறது.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

நிச்சயமாக இல்லை என்று எப்படி அப்படி அடிக்கோடிட்டுச் சொல்கிறீர்கள், நெல்லை.
அறிவியல் ரீதியாக இதை நிரூபிக்க முடியுமென்றால் சொல்லுங்கள். இந்தத் தொடரின் அடுத்த அடுத்த பகுதிக்கு உதவியாக இருக்கும்.

போன ஜென்மம் என்ற கருத்துரு அதைப் பற்றி வாசிப்பதாலும், நமக்குப் பிடித்தவர்கள் சொல்லும் அதற்கு ஆதரவான கருத்துக்களும், சாஸ்திர சம்பிரதாயங்களில் கேள்வி கேட்காத நம்பிக்கையையும் அப்படி ஒன்று இருப்பதாக நம்மை நம்ப வைத்து நம் மனத்தில் பதிந்து விடுகிறது. அதனால் அதனை ஆராய்ச்சிக்கு உட்படுத்தாமல் நம்புகிறோம் என்பது இன்றைய தேதி வரை இதற்கான அறிவியல் விளக்கம்.

இதைத் தாண்டி உங்களால் போக முடியுமென்றால் வரவேற்கிறேன். உங்கள் எண்ணங்களை பதிந்து இந்தத் தொடரின் அது பற்றிய கருத்தாங்களுக்கு உதவுங்கள். தொடர்ந்து வாசித்து வாருங்கள். உங்கள் கருத்துக்கள் எதுவாக இருப்பினும் விவாதங்களுக்கு உட்படுத்துங்கள். வாசிப்பவரை நம்ப வையுங்கள். அதுவே இந்தத் தொடர் எழுதுவதான பயனாக அமையும். நன்றி.

நெல்லைத்தமிழன் said...

இடிக்குப் பிறகு வரும் மின்னலைக் கண்டு நான் அதீதமாகப் பயப்படுவது, பறவைபோல என்னால் பறக்க முடியும் என்று நம்புவது/அதை ஒட்டிய நிறைய கனவுகள்... இவையெல்லாம் என் பூர்வ ஜென்மத்தில் மின்னலால் தாக்கப்பட்டிருக்கலாம், இன்னொரு ஜென்மத்தில் பறவையாக இருந்திருக்கலாம் என்ற எண்ணத்தை எனக்குள் தோற்றுவிக்கிறது. இதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியுமா என்று கேட்டால், விஜய் தொலைக்காட்சி செய்ததுபோல் மனோவசியத்தில் முந்தைய ஜென்மங்களுக்குக் கொண்டு செல்ல நேர்ந்தால் உண்மை (எனக் கருதுவது) வெளிவரலாம்.

இது தவிர, இறந்த ஒருவனைத் தேடி அவனது ஆசான் (அல்லது அவன் மேல் அன்பு செலுத்தும் ஒருவர்) அலைந்து கண்டுபிடிப்பது, அவனும் அதனை உணர்வது என்பதுபோன்ற சம்பவங்களை புத்தகங்களில் படித்திருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது ஸ்கான் செய்து அனுப்புகிறேன்.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

இந்த மாதிரியான விஷயங்களை விவரங்களை விவரிக்கும் புத்தகங்கள் என்னிடமும் சில உள்ளன. அதனால் அடுத்த பகுதியில் இதைப் பற்றி அலசும் பொழுது நாம் அது பற்றிப் பேசலாம்.

ஹிப்பனாடிசம் என்னும் மனோவசியம் அறிவியல் பூர்வமான ஆராய்ச்சி அல்ல. அது மனோதத்துவ மருத்துவர்கள் கையாளும் ஒரு முயற்சி. ஒருவரை தன்னை மறக்கும் ஆழ்நிலை மயக்கத்திற்குக் கொண்டு போய் அவரது ஆழ்மனத்தில் பதிந்திருக்கும் எண்ணப் பதிவுகளை வெளிக்கொண்டு வர செய்யும் ஒரு முயற்சி. அவ்வளவு தான்.

தங்கள் தெளிவான பதிலுக்கு Nantri. Naam ithu patri pesalam. Tamil key board not working. Hence this English typing.Related Posts with Thumbnails