மின் நூல்

Sunday, September 15, 2019

மனம் உயிர் உடல்


7.  மனம் விரும்புதே.....
                                                     
னுபவம் தான் ஆசான் என்பார்கள்.   ‘அனுபவமே  நான் தான் என்றான்’  என்று இறைவனே ஒப்புதல்  வாக்குமூலம் கொடுத்தது போல கண்ணதாசன் ஒரு பாடல் கூடப் புனைந்திருக்கிறார்.  அந்த அளவுக்கு நாம் வாழ்க்கையில் பெறும் அனுபவங்களுக்கு இறைவன் அந்தஸ்தையே கொடுத்திருக்கிறார் அவர். அதற்கும் அவர் பெற்ற அனுபவங்களும் அந்த அனுபவங்கள் அவரை
வார்த்தெடுத்ததும் தாம் காரணம்.

நாம் பெறும் அனுபவங்களைப் பற்றியும்  அந்த அனுபவங்களின் அடிப்படையில் நமது யோசிப்பு அமைவது பற்றியும் மேலோட்டமாக சென்ற பகுதியில் பார்த்தோம்.

சகுனியை மாதிரியான சூதாட்டக்காரருக்கு பகடையை உருட்டினால் தனக்குத் தான் வெற்றி என்பது அவரது அனுபவமாக இருக்கும்.  எதிராளியை ஜெயிப்பது எப்படி என்றால் அந்த எதிராளியை சூதாட்டத்திற்கு அழைப்பது தான் ஒரே வழி என்று அவரது யோசனை போகும். 

பேச்சுத் திறமை பெற்ற ஒருவருக்கு தனது வாக்குத் திறமையை பிரயோகித்து   எதிராளியை வெல்வதே  வழி என்பதாக அவர் யோசனை இருக்கும்..  தனது வாழ்க்கை உயர்வுக்கு தனது பேச்சுத் திறமையையே பெரும் சொத்தாக அவர் எண்ணியிருப்பார்.  எதுவும் சோம்பி இருந்தால் கிடைத்து விடுவதில்லை;  தனது பேச்சுத் திறமையை வளர்த்துக் கொள்ள அது பற்றிய எல்லா முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டிருப்பார் என்பது திண்ணம்.

இந்த மாதிரி ஒவ்வொருவருக்கும் ஒன்று.  இந்த ஒன்றில் இருக்கும் ஆபத்து என்ன என்றால் அந்த ஒன்றிலேயே குறுகிப்  போவது.  அந்த ஒன்றைத் தாண்டி வர முடியாமையும்  அந்த ஒன்றைத் தீவிரமாக நேசிப்போருக்குள்ளேயே ஏற்படும் உறவாக குறுகி  விடுவதும் தான்.  

உலகின் பரந்துபட்ட இந்த வளர்ச்சி சூழலில் அவரவருக்கு கைவசப்பட்ட ‘கலை’களைத் தாண்டி எத்தனையோ இருக்கின்றன.  அதனால் நமது அனுபவங்கள் வளப்பட இந்தக் காலகட்ட்த்தில் பரந்துபட்ட ஞானம் வேண்டியிருக்கிறது.

வெற்றிக் கதைகள் இப்படி என்றால் தோல்விக் கதைகள் இதை விட சோகமானது.   

பங்குச் சந்தையில் பெருமளவில் இழந்த ஒருவருக்கு பங்கு சந்தை என்றாலே ‘அலர்ஜி’யாக இருக்கும்.   விட்ட இடத்தில் தான் எடுக்க வேண்டும் என்று யாராவது சொன்னால் சீறி விழுவார்.  ‘பெறுவது இழப்பதற்காகவே; இழப்பதும் மீண்டும் பெறுவதற்காகவே’ என்னும் பாலபாடம் போதிக்கும் கல்விச்சாலை பங்குச்சந்தை என்று சொன்னால் ஏற்றுகொள்வது அவருக்கு வெகு சிரமமாக இருக்கும்.   

தோல்வியில் துவளாமல் மன ஈடுபாடு கொண்ட  விஷயங்களில் இறுதி வரை அறிவு  பெறுவது  குறிப்பிட்ட அந்தந்தத் துறைகளில் ஜெயக்கொடி நாட்ட பெரிதும் துணையாக இருக்கும்.   ஈடுபாடு கொண்ட  துறைகளில் வாகை சூடியவர்கள் அத்தனை பேரின் வரலாறுகளைப் புரட்டிப் பார்த்தீர்கள் என்றால் தொடர்ந்த அவர்களது அயராத முயற்சிகளே அவர்களது வெற்றிகளுக்கு  பெரும் துணையாக இருந்திருப்பதைத் தெரிந்து  கொள்ளலாம்.

மன ஈடுபாடு என்பதும் திடீரென்று அந்தரத்தில் இருந்து  குதித்து விடுவதில்லை. வாழ்க்கைப் போக்கில் குறுக்கிடும் ஏதாவது ஒரு விஷயத்தில் நமக்கேற்படும்  கவர்ச்சி தான் திரும்பத் திரும்ப அவற்றை நாடத் துவங்கி நாளாவட்டத்தில் மன ஈடுபாடாக மலர்கிறது.  இந்த இடத்தில் ‘நாம்’ என்பது சும்மாவேனும்;  கவர்ச்சிக்கு ஆட்பட்டதும் மனம் தான்;  தான் சிக்குண்ட அந்த கவர்ச்சியை தனது ஈடுபாடாக ஆக்கிக் கொண்டதும் அதே மனம் தான்.

‘தேமே’னென்று கிராமத்தில் தனது வயலும் வரப்பும் உண்டு என்றிருந்தவர்,  அந்த கிராமத்தில் நடந்த வெளிப்புற படப்பிடிப்பை ஆச்சரியத்தோடு பார்த்த அனுபவம் பற்றிக்கொண்ட ஜோரில் சினிமாத் துறையில் ஜெயக்கொடி நாட்டிய  கதைகள் நம் நாட்டில் நிறைய உண்டு.   அப்பா டாக்டர் அதனால் மகனும் டாக்டர், அப்பா திரைப்பட நடிகர் ஆதலால் மகனும் தேர்ந்தது திரைப்படத் துறை என்று  குடும்பத் தொடர்பாய் நீண்ட வரலாறுகளும் நிறைய  உண்டு.

பெறும் அனுபவங்கள் தாம் மனிதர்களை உருவாக்குகின்றன என்பது மேலோட்டமான பார்வை.  பெறும் பல அனுபவங்களில்  மனசு தனக்குப்  பிடித்ததைத் தேர்ந்து அதில் தனது ஈடுபாட்டைப்  பதிக்கிறது என்பது ஆழ்ந்த பார்வை.

நம்மைக் கவர்ந்த அனுபவங்கள் நம்மையே விலைக்கு வாங்கி விட்டதைப் போல ஆட்டமும் போடும்.  பெற்ற அனுபவங்களின் அடிப்படையிலேயே யோசனை போகும்.    இது அனுபவங்களில் காணப்படும் ஒரு  பெரும் குறை. பல நேரங்களில் பெற்ற அனுபவங்களிலேயே முடங்கிப் போன மனம்,  புது அனுபவங்களைப் புறக்கணிக்கும்.  அல்லது புது அனுபவங்களை துய்த்து விடமால் விலக்கும்.

கிராமத்து வண்டிப்பாதை மாதிரி போய்ப் போய் அனுபவப்பட்ட பாதை அதற்கான வடு கொண்டு அதற்கேற்பவான தடத்தேய்வைக் கொண்டிருக்கும்.  இந்தத் தடத்தேய்வு தான் ஒரு விஷயத்தில் ஒரே விதமான பழக்கத்தை ஏற்படுத்துகிறது.  நம் முன்னோர்கள் பழக்க தோஷம் என்று சொன்னது இதை தான்.

முடிவெட்டிக் கொண்டால் பத்து வருஷமாக ஒரே ஸலூனில்.   எப்பவாவது போன போது அந்த ஸலூன் மூடியிருந்தால், முடிவெட்டிக் கொள்வதையே அடுத்த நாளுக்கு ஒத்திப் போடுவது.  இன்னொரு ஸலூனுக்குப் போய் அங்கு எப்படி என்று புது அனுபவம் பெற பழக்கப்பட்ட மனம் அனுமதிக்காது.  மன அனுமதி கிடைக்கவில்லை என்பது மிகப்பெரிய தடா.   அந்த அனுமதி  கிடைக்காத போது உங்களிலும் ஒரு புது அனுபவத்திற்காக வாய்ப்பு மொட்டிலேயே கருகிப் போகும்.  

ஏதாவது நியூஸ் பேப்பர் வாங்கிப் படித்து பழக்கப்பட்டிருந்தால்  பல வருஷங்களாக அதே நியூஸ் பேப்பர்.  ஒரே செய்தியை தங்கள் நோக்கத்திற்கேற்ப விதவிதமாகத் தலைப்பிட்டுப் பிரசுரிப்பது ஒவ்வொரு செய்தித்தாளுக்கும் வழக்கம்.  அதுவே அந்தச் செய்தித்தாளின் உயிர்ப்பின் ரகசியம்.  ஆண்டுக்கணக்காக  ஒரே செய்தித்தாளைப் படிக்கும் பழக்கம், அந்த செய்தித்தாளின் எக்ஸ்டென்ஷனாக, உங்களையும் அதன் இன்னொரு பதிப்பாக மாற்றியிருக்கும்.   அந்த பத்திரிகையிடமிருந்து பெற்றது தான் உங்கள் கருத்து;   அந்தப் பத்திரிகையின் அரசியல் தான் உங்கள் அரசியல் என்கிற அவலம் உங்களில் விதைக்கப்பட்டு செடியாய் மரமாய் நாட்பட வளர்ந்திருக்கும்.

மளிகை சாமான் வாங்குவது கூட ஒரே கடையில் தான்;    அலுவலகத்திற்குப் போனால் ஆண்டுக்கணக்காக அதே நாலு நண்பர்கள் தாம்.  இந்த நாலு பேருக்குள் பேசிக் களிப்பது தான் ஒரு நாளின் மூன்றில் ஒரு பகுதியை விழுங்கி இந்த நண்பர்களின் பொழுது போக்கு, விஷய  ஞானம் தாண்டி எதுவுமில்லை என்பதாக நான்கு பேரும்  உருமாறி இருப்பார்கள்.   இணையப் பதிவுகள், அதற்கான வாசகர்கள் என்ற உலகையும் இந்தப் பார்வையில் பதித்துப் பாருங்கள்.

மேல் நாடுகளில் வீக் எண்ட் என்பதை மனசின் மலர்ச்சிக்காகவே ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்.   ஒவ்வொரு வார கடைசி நாட்களில் சுற்றுலா மாதிரி வெளிக்கிளம்பும் வழக்கத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  அமெரிக்காவில்  இரவு தங்கலுக்காகத் தான் விடுதிகள்.  பின் மாலைப்  பொழுதில் விடுதிகளின் கார் பார்க்கிங் இடத்தில் ஒவ்வொரு காராக வந்து சேரும்.  பாதி  இரவு வரை இப்படி சேர்ந்து  கொண்டே இருக்கும்.  காலை ஏழு மணி அளவில் கார் பார்க்கிங் இடமே வெறிச்சோவென்று காலியாக இருக்கும். இரவு உறக்கம், காலை சின்னச் சிற்றுண்டி என்று முடித்துக் கொண்டு அத்தனை பேரும் விட்ட சுற்றுலாவைத் தொடர்ந்திருப்பார்கள்.

புதுப் புது அனுபவங்கள் வாழ்க்கையை உற்சாகமாக்கும்.  ஆண்டுக்கணக்காக தெரிந்த செய்திகளிலேயே மனசை ஊறப்போட்டு ஒரு செக்கு மாட்டு வாழ்க்கையில் வாழக்கையைப் பறி கொடுக்காமல் அன்றன்று ‘இன்று புதிதாய்ப் பிறக்கும்’ அனுபவங்களின் சரணாலயமாய் மனசை மாற்றும்.

பழக்கத்திற்கு மனிதனை அடிமை படுத்துவது என்பது இந்த நூற்றாண்டு வாழ்வரசியலின் வியாபாரத் தந்திரம்.   அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதை விட அனாவசியங்களுக்கு அதிகம் செலவு செய்ய பழக்கப்பட்டிருக்கிறோம்  நாம்.   எந்த பழக்கமும் நம்மை அடிமையாக்காமல் அவற்றிலிருந்து மீளத் தெரிந்திருப்பது புத்திசாலித்தனம்.  இதில் மனதின் மாய்மாலத்தைப் பாருங்கள்.  எது அவசியம் எது அனாவசியம் என்று தீர்மானித்து முடிவெடுப்பது மனம்.  முடிவெடுத்த எந்த பழக்கத்திற்கும் நம்மை வழக்கப்படுத்துவதும் அதே மனம் தான். 

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த புத்திசாலித்தனம் அறிவெனப்படுவதில்லை என்கிறார்கள் அறிஞர்கள்.

அறிவு என்பது தான் என்ன?..

‘அறிவு என்பது முந்தைய அனுபவத்தையும், அதனால் நமக்கு ஏற்பட்ட பாதிப்பையும் நினைவில் வைத்துக் கொண்டு அதன்படி நடந்து கொள்வது’ என்பதாகக் கருதப்படுகிறது.

பாதித்தவைகளைக் கைகழுவி,  பாதிக்காதவைகளிலேயே உழன்று கிடப்பது.

அறிவு என்பது இது தானா?..   

அல்லது அறிவு என்பது இவ்வளவு தானா?  உங்கள் யோசனைக்கு.


(வளரும்)



13 comments:

கோமதி அரசு said...

பழக்கத்திற்கு மனிதனை அடிமை படுத்துவது என்பது இந்த நூற்றாண்டு வாழ்வரசியலின் வியாபாரத் தந்திரம். அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதை விட அனாவசியங்களுக்கு அதிகம் செலவு செய்ய பழக்கப்பட்டிருக்கிறோம் நாம். எந்த பழக்கமும் நம்மை அடிமையாக்காமல் அவற்றிலிருந்து மீளத் தெரிந்திருப்பது புத்திசாலித்தனம். //

நீங்கள் சொல்வது சரிதான்.

பழக்கம் நம்மை அடிமையாக்காமல் இருக்க வேண்டும். பழக்க படுத்தி இருந்தாலும் மீளவும் வேண்டும்.

அனுபவமே நான் தான் என்றான்’ இந்த பாடல் நன்றாக இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் ஜீவி சார்.
அதிசயமான பதிவு. மனம் பழக்க வழக்கங்களுக்குக் கட்டுப் படுகிறது.
அறிவு
அதை மீறி யோசிக்கிறது.

படிப்பதும்,,,, மேலும் மேலும் வெவ்வேறு வழிகளில்
மனத்தைப் பழக்குவதும், பலன் தருகிறது.

‘//தேமே’னென்று கிராமத்தில் தனது வயலும் வரப்பும் உண்டு என்றிருந்தவர், அந்த கிராமத்தில் நடந்த வெளிப்புற படப்பிடிப்பை ஆச்சரியத்தோடு பார்த்த அனுபவம் பற்றிக்கொண்ட ஜோரில் சினிமாத் துறையில் ஜெயக்கொடி நாட்டிய கதைகள் நம் நாட்டில் நிறைய உண்டு. அப்பா டாக்டர் அதனால் மகனும் டாக்டர், அப்பா திரைப்பட நடிகர் ஆதலால் மகனும் தேர்ந்தது திரைப்படத் துறை என்று குடும்பத் தொடர்பாய் நீண்ட வரலாறுகளும் நிறைய உண்டு.//

உண்மையே. அப்பாவைப் பின்பற்றாத, மாத்தி யோசிப்பவர்களும் வெற்றி பெறுகிறார்கள்.
கல்லும் முள்ளும் குத்தும் புதிய பாதையில்
நடப்பதும் நல்ல அனுபவமே.

மாமனார் மாட்டுப்பண்ணை வைத்து வெற்றி பெற்றார்.
என் கணவர் அங்கேயே லாரிகளை நிறுத்தி வேலை பார்த்தார்.
பிள்ளை மனித வள மேம்பாட்டுக்குப் போய்விட்டார்கள்.

என் அப்பா மாதிரி தபால் துறையில் கால் பதிக்க ஆசைப்பட்ட
போது அப்பா மறுத்துவிட்டார்.

வல்லிசிம்ஹன் said...

அனுபவம் கற்றுத்தரும் பாடங்களே எப்போதும் உதவும்.
அம்மா ஊட்டின சோறும், கட்டிக்கொடுத்த உணவும்
எத்தனை நாட்கள் வழிக்கு வரும்.

அடிபட அடிபடத்தான் மனம் நேர் வழிக்கு வரும்.

ஸ்ரீராம். said...

ஒரு குழந்தை பிறக்கும்போது அதன் மூளையில் டெம்போரல் லோப என்னும் பகுதி எல்லாமே வெற்றிடமாக புதுசாக இருக்குமாம்.  குழந்தை வளர வளர அனுபவங்கள் ஏற்பட ஏற்பட அதை அங்கு சேமித்து வைத்து, பின் நிகழ்வுகளின்போது அவற்றை சரியாக இணைக்குமாம் மூளை.

ஸ்ரீராம். said...

அனுபவமே நான்தான் என்று இறைவன் ஒப்புதல் வாக்குமூலம் தந்தது போல கண்ணதாசன் எழுதி இருக்கும் பாடல் எது என்று யூகிக்க முடியவில்லை.

ஸ்ரீராம். said...

பழக்கங்களிலிருந்து மீள்வது சற்றே சிரமம்தான்.  சில அன்றாட பணிகள் இயந்திர கதியில் ஒரே மாதிரி நடந்து விடுகின்றன. அது ஒரு வகை.  

ஜீவி said...

@ ஸ்ரீராம் (2)

//அனுபவமே நான்தான் என்று இறைவன் ஒப்புதல் வாக்குமூலம் தந்தது போல கண்ணதாசன் எழுதி இருக்கும் பாடல் எது என்று யூகிக்க முடியவில்லை.//

நிரம்ப நேரம் சஸ்பென்ஸ் வேண்டாம் எனபதற்காக அந்தப் பாடலைக் கீழே தந்திருக்கிறேன், ஸ்ரீராம்!

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்
'அனுபவித்தே தான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே, நீ ஏன்' எனக் கேட்டேன்
ஆண்டவன் சற்றே அருகில் நெருங்கி
'அனுபவம் என்பதே நான் தான்' என்றான்!

--- அனுபவக் கவிஞர் கண்ணதாசன்.

ஜீவி said...

@ கோமதி அரசு

வழக்கத்தின் அடிப்படையில் பழக்கம் வருகிறது. அந்த வழக்கத்தைப் புறக்கணித்து அவ்வவ்போது மாற்றி செயல்பட முனைந்தால் பழக்கம் வழக்கமாகாது.

ஆனால் உறுதி கொண்ட நெஞ்சினரால் தான் அதையெல்லாம் செய்ய முடியும்.

காலையில் எழுந்தவுடன் பல் தேய்த்தவுடன் காப்பிக்கு ஏங்கும் மனதைக் கூட நம்மால்
திசைத்திருப்பி மாற்றி வேறொரு காரியத்தில் ஈடுபட முடியவில்லை. கொஞ்ச நேரத்தில் எல்லாம் தலையை வலிக்கிற மாதிரி இருக்கிறதே என்று அதே மனம் சிணுங்கும்.

மனம் தான் காப்பிக்கு ஏங்குகிறது
மனம் தான் திசை திருப்ப முயல்கிறது
மனம் தான் திசை திருப்புவதை புரிந்து கொள்கிறது
மனம் தான் அதற்கு எதிர்ப்பாக மனம் தலை வலிக்கிற மாதிரி இருக்கிறதே என்று முரண்டு பிடிக்கிறது.

இப்பொழுது தான் அடுத்த கேள்வி எழுகிறது: அப்படியானால் மனம் வேறு, நாம் வேறா கோமதிம்மா?..

ஜீவி said...

@ வல்லி சிம்ஹன் (1)

//மனம் பழக்க வழக்கங்களுக்குக் கட்டுப் படுகிறது.
அறிவு
அதை மீறி யோசிக்கிறது. //

ஓ.. இது நல்ல பதில். அப்போ மனத்திற்கும் அறிவுக்கும் தான் போராட்டமா?

அடுத்த அத்தியாயத்தில் அந்த அறிவு பற்றி பார்த்து விடுவோம்.

உடற்கூறு சாத்திரத்தில் மனம் என்ற ஒரு பொருள் இருப்பதாகவே இது வரை கண்டுபிடிக்கப் படாவிட்டாலும் அது பற்றி நிறையவே நாம் பேசுகிறோம். அடுத்து அதற்கு அண்ணனாக அறிவு என்ற ஒன்றா?.. அது என்ன என்று பார்க்கலாம்.

மாற்றி யோசிப்பவர்கள் மரியாதைக்குரியவர்கள். உங்கள் உதாரணத்தை பார்த்து மனம் மகிழ்ந்து போனேன், வல்லிம்மா.

ஜீவி said...

@ வல்லி சிம்ஹன் (2)

//அடிபட அடிபடத்தான் மனம் நேர் வழிக்கு வரும்.//

வாழ்க்கையில் படும் அடியைத் தான் சொல்கிறீர்கள் என்று புரிகிறது.

பாவம், நம்மிடம் மாட்டிக் கொண்ட நம் மனம்! அந்த நம் மனத்திற்கும் நம்மை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள், வல்லிம்மா?

நம்மைப் பிரதிநிதித்துவப் படுத்துவது, நம் மனம் இல்லையா, வல்லிம்மா?..

மனத்தை அடித்துத் துவைக்கிறோம் என்று நினைத்து நம்மை நாமே வருத்திக் கொள்கிறோமோ என்று யோசனை ஓடுகிறது!

நாம் வேறு நம் மனம் வேறா வல்லிம்மா?.. சொல்லுங்கள்..

ஹூம்! நேரம் காலம் தெரியாமல் அந்த விசுவாமித்திரர் நினைவுக்கு வருகிறார்.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (1)

//ஒரு குழந்தை பிறக்கும்போது அதன் மூளையில் டெம்போரல் லோப என்னும் பகுதி எல்லாமே வெற்றிடமாக புதுசாக இருக்குமாம். //

டெம்போரல் லோப.. தேவ மொழி சமஸ்கிருத உச்சரிப்பு போல, இது ஒரு 'லோப'..!

நீங்கள் ஆரம்பத்தில் சொன்ன மாதிரி கொஞ்சம் கொஞ்சமாக அறிவியல் வகுப்பில் நுழைந்து விடுவோம்.. வேறே வழி!..

ஜீவி said...

@ ஸ்ரீராம் (3)

//சில அன்றாட பணிகள் இயந்திர கதியில் ஒரே மாதிரி நடந்து விடுகின்றன. அது ஒரு வகை. //

அன்றாடப் பணிகள் already programmed என்று கொண்டாலும் அது எவ்வகையான பணி என்பதைப் பொறுத்து இருக்கிறது. வல்லிம்மாவின் பரிந்துரையை கவனத்தில் கொள்க.

வே.நடனசபாபதி said...

மனதில் ஆழமாகப் பதிந்த அல்லது பதியும் விஷயங்களை அப்படியே சரியென ஏற்றுக்கொள்வதும் ஒரு வகையான அறிவுதான்.எனவே அறிவு என்பது முந்தைய அனுபவத்தையும், அதனால் நமக்கு ஏற்பட்ட பாதிப்பையும் நினைவில் வைத்துக் கொண்டு அதன்படி நடந்து கொள்வது என்று நீங்கள் சொல்லியிருப்பது சரி என எண்ணுகிறேன்.

ஆனால் அறிவு என்பது நியாயப்படுத்தப்பட்ட உண்மையான நம்பிக்கை"( Justified true belief) என்கிறார் பிளேட்டோ (Plato).

எனவே அறிவு பற்றி மேலும் அறிய தொடர்கிறேன்.

Related Posts with Thumbnails