மின் நூல்

Saturday, October 26, 2019

மனம் உயிர் உடல்


16.   நினைவாற்றல் என்னும் வரம்

ரு ஊசியை எடுத்து நிரண்டினால் கூட கொஞ்சம் கூட வலிக்காத பிரதேசம் நம்  உடம்பிலேயே மூளைப் பகுதி  ஒன்று தான்.  குறைந்த பட்சம் தொடு உணர்ச்சி கூட மூளைக்குக் கிடையாதாம். அதனால்  மூளையில் ஊசி குத்த வேண்டுமானால் கூட  சம்பந்தப்பட்டவர்களை மயக்கத்தில் ஆழ்த்துவதில்லை.  நேரடியா 'சுருக்' தான்.

1400 கிராமிலிருந்து 1500 கிராம் வரை எடை கொண்டது மூளை.  மூளை தான் உயிர் என்று சொல்கிற அளவுக்கு உடல் உறுப்புகள் அத்தனையையும்  இதயம் தவிர  இதன் கட்டுப்பாட்டிலேயே.  ஆக்ஸிஜனும், பிற ஊட்டச்சத்துக்களும் தேவைப்படும்  பிரதேசம்.  நரம்பு செல்கள் கோடிக்கணக்கில் உள்ளே பதுங்கி இருக்கின்றன.  உடம்பில் உள்ள செல்களுக்கும் மூளை செல்களுக்கும் உள்ள பெருத்த வித்தியாசம் என்னவென்றால்,  மூளை செல்கள் சேதம் அடைந்தால் அம்போ தான். மற்றவிடங்களில் உள்ள செல்களுக்கு சேதம் அடைந்தாலும் வளர்ச்சி உண்டு.

நம் தியானம் மனம் சம்பந்தப்பட்டது.. மனமோ மூளை சம்பந்தப்பட்டது.  அதனால் தியானத்திற்கு முன்னான அமர்வில்  நம் மூளை சம்பந்தப்பட்ட சில சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்து கொண்டோமானால், அது  மனத் தொடர்பான இந்த தியானத்தை அனுஷ்டிக்கும் பொழுது ஒரு ஒத்துழைப்பு மனோபாவத்துடன் உபயோகமாக இருக்கும். அதற்காகவே தான் இந்த மூளைக்கல்வி.

எங்கையோ  படித்தது.  நலைஞ்சு வருஷமானாலும் பிரமிப்புடன்  மனசில் தேங்கியிருக்கிறது.  சொல்லப்போனால் இதைப் படித்தவுடன் தான்  மூளையைப் பற்றி  நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.  அந்த ஆவலை ஏற்படுத்தியதும்  மூளைத் தான் என்று பின்னால் தெரிந்ததை இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் சிரிப்புத் தான் வருகிறது. 
மூளையில் இருக்கும் நரம்பு நார்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வைத்தால் அந்த நீளத்திற்கு பூமியிலிருந்து சந்திர மண்டலத்திற்கு போய் விட்டுத் திரும்பலாமாம். எண்ணிக்கை, பருமன், நீளம் இதெல்லாம் முக்கியமில்லை;  உள்ளே இருக்கும் சர்க்யூட் தான் முக்கியம் என்று அவர் அந்த பேட்டியில் சொன்னது தான் முக்கியமாகப் போயிற்று.  சொன்னவர்  இவரோ அவரோ இல்லை;  பிரபல நரம்பியல் மருத்துவர்.  பல விருதுகள் வாங்கியவர். நம்ம சென்னை ஸ்டான்லி மருத்துவமனை நரம்பியல் பிரிவில் முக்கியமானவராக திகழ்ந்தவர்.  இதை வாசித்த நாளிலிருந்து மூளை என்றாலே என் மனசில் (!) ஒரு பிரமிப்பு.   மூளை பற்றின எந்த விஷயம் தெரிய வந்தாலும் அதற்கென்றே ஒரு தனி டயரி போட்டு குறித்துக் கொள்ள ஆரம்பித்தேன்.

மூளை விஷயத்தில்  பெண்களுக்கு  ஆண்களை விட  கொஞ்சம் சின்ன சைஸாம்.    ஆண்கள் மூளையில் சுமார்  4000 உயிரணுக்கள்  அதிகம்  இருக்கிறதாம்.  இருந்தும்  படிப்பு சம்பந்தப்பட்ட தேர்வுகளில் பெண்கள் தான்  அதிக அளவு தேர்ச்சி பெறுகிறார்கள், என்கிறீர்களா?   நியாயமான கேள்வி தான்.   இயல்பாக வே அவர்களுக்கு  ஞாபகசக்தி அதிகம் போலிருக்கு.  ஞாபக சக்தி என்றாலே ஹிப்போகேம்பஸ்  ஞாபகம் வந்து விடும்.  ஹி.கேம்பஸ் பற்றி பின்னால் பார்க்கலாம்.

இந்த அதிசயத்தைக் கேளுங்கள்.  குழந்தை பிறந்து நாலே வயதுக்குள் அதன் மூளைக்குள் 100 கோடி நியூரான்கள் ஆக்கிரமித்துக் கொண்டு விடுகிறதாம்.  வளர்ந்த ஒரு மனிதனின் மூளையில் இருக்கும்   செல்களின் எண்ணிக்கை  ஏறத்தாழ இரண்டு கோடியே கோடியாம்.  ஒத்துக் கொள்ளத் தான்  வேண்டும். கணக்கிலே நான் கொஞ்சம் என்ன நிறையவே வீக்.  நூறு ரூபா நோட்டுகளாக பத்தாயிரத்திற்கு கொடுத்து எண்ணிப் பார்த்துச் சொல்லுன்னா,  பத்து தடவை எண்ற வழக்கம்.

அதனால் பணம்-காசு   என்றால் ஜோரா ஒரு  தடவை கைதட்டி விட்டு  இந்த ஆட்டத்திற்கு நான் வர்லே சாமின்னு ஒதுங்கிக்கற வர்ணம்.  ஊழல்களின் ராஜாவான 2G ஊழலின் அந்த 1.76 லட்சம் கோடி ரூபாயை எண்ணாய் எழுதும் பொழுது எத்தனை பூஜ்யம் போடுவது என்பதே முழி பிதுங்குகிற விழிப்பாய் இருந்த லட்சணத்தில்  இந்த இரண்டு கோடியே கோடிக்கு எத்தனை சைபர்கள்?.. தெரிந்தவர்கள் முயற்சித்துப் பார்க்கலாம்..

உடலில் சகல பகுதிகளையும் இயக்கத்தில்  வைத்திருப்பது மூளையே.   மூளைப் பகுதிலே லேசான மின்சார தூண்டுதல் கொடுத்த  பொழுது தான் உடல்  உறுப்புகளுக்கும் மூளைக்கும் இருந்த சம்பந்தமே தெரிய வந்ததாம்.  மூளைலே எலெக்ட்ரிக் ஸ்டிமுலேஷன் கொடுத்த பொழுது உடம்புப் பகுதிலே ஓரிடத்திலே துடிப்பு ஏற்படுவதைப் பார்த்தார்களாம்.  மூளைலே வேறொரு இடத்திலே அதே மாதிரி  மின்சார தூண்டுதல் கொடுத்த பொழுது வேறொரு உறுப்பு லேசா விதிர்விதிர்த்ததாம்.  இதிலேந்து தான் நம் உடம்பு உறுப்புகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மூளைன்னும் மூளையோட எந்தப்  பகுதி எந்த உறுப்பைக் கட்டுப்படுத்தறதுன்னும் தெரிஞ்சிண்டாங்களாம்.

நமது  கட்டை விரல்களுக்கும் மூளைக்கும் ஒரு அந்தியந்த தொடர்பு உண்டு.  மனுஷனோட கட்டை விரல்கள் தாம் மூளையோட அடிபணிந்த  ஆர்டர்லியாம்  மூளை அதிகமா வேலை வாங்கறது கட்டை விரலைத் தானாம்.  கட்டை விரலை வருடிக் கொடுத்தா மூளையை வருடிக் கொடுத்த மாதிரியா?..  தெரிலே!

முக்காலே மூணு வீசம் மூளைப் பிரதேசமே கொழுப்பின் ஆக்கிரமிப்பில் தான்.   தலைத் தோலின் கீழே சதை கிடையாது.  மனிதனின் மண்டையோட்டிற்கு அவனது எண்பது வயது வரை  வளர்ச்சி உண்டாம்.    அதனால் மண்டை சிறிசா இருக்கேங்கற கவலையெல்லாம்  அநாவசியம்.

நம்ம ஞாபகசக்தி இராஜ்யம் சர்வ வல்லமை படைத்த ஹிப்போகேம்பஸ்
(Hippocampus) வசம்.   எனது ஆறு வயதில் மதுரை டவுன் ஹால்  ரோடு இருந்த தோற்றத்தையும்  இப்பொழுதிய  நிலையையும்  இந்த ஹிப்போகேம்பஸ் உதவியால் பொருத்திப்  பார்த்துக் கொள்ளலாம்.   இது எப்படி சாத்தியமாகிறது என்கி்ற விஷய ஞானம் நம் தியானத்திற்கு பெரிதும்  உதவியாக இருக்கும். அப்படியே ஹிப்போகேம்பஸின் அருமையையும் தெரிந்து  கொள்ளலாம்.

"வழிலே சுந்தரேசனைப் பார்த்தேண்டி.."

"எந்த சுந்தரேசன்?"

"இது என்ன கேள்வி?.. நமக்குத் தெரிஞ்சது  ஒரு சுந்தரேசன் தானேடி?.. நம்ப ரகுவோட வாத்தியார் சுந்தரேசன் தானே?"

"அப்புசாமி சீதாபாட்டியை விழுந்து விழுந்து குமுதத்லே படிப்பீங்களே! அந்த  ஜீ.ஆர். சுந்தரேசனை மறந்திட்டீங்களா?"

"ஜீ.ஆர்.  இல்லேடி அவர்.  ஜே.ஆர்.--- ஜ.ரா. சுந்தரேசன்.  ஒத்துக்கறேன். அந்த சுந்தரேசன் சட்டுனு ஞாபகத்துக்கு வரலே..."

"அதை விடுங்கோ.. வாத்தியார்  என்ன சொன்னார்?.. நம்ம ரகுவைப் பத்தி என்ன சொன்னார்?"

"அவன் பெருமை தான் பேசினார்.    நன்னா புரிஞ்சிக்கறான்.  கிராஸ்பிங்க்  பவர் நன்னா இருக்கு..  படிச்சது எல்லாம்  நன்னா நினைவிலே வைச்சிக்கறான்.   நீங்க குடுத்து வைச்சவா.  நான் இன்னிக்குச் சொல்றேன்  உங்க பிள்ளை நன்னா முன்னுக்கு வருவான், பாருங்கோ.."ன்னார்.  அதைக் கேட்டு எனக்கும் சந்தோஷம்..  உனக்கும் சந்தோஷமா இருக்குமேன்னு சொன்னேன்.

'இப்படி பக்கத்து அறைலே அப்பாவும்  அம்மாவும் பேசிண்டது நன்னா கேட்டது. அவங்க பட்ட பெருமை தான் என்னை வாசிக்க வைச்சதுன்னு தாராளமா சொல்லலாம்..' என்று போன வாரம் யு.எஸ்.லேந்து  வந்திருந்த ரகு எங்கிட்டே சொல்லிக் கொண்டிருந்தான்.

ரகு  யார்ன்னா என்  எதிர் வீட்டு நண்பர் பையன்.  அவன் சொல்லிக் கொண்டிருக்கையில் என் ஞாபகம் என்னவோ நம் மூளையில் பொதிந்திருக்கிற ஹிப்போகேம்பஸ் மேல் தான் படிந்திருந்தது.

(வளரும்)

தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்...

பர்கள்                     

11 comments:

G.M Balasubramaniam said...

பல அறியாத விஷயங்கள் மீண்டும்படிக்க வேண்டும்

டிபிஆர்.ஜோசப் said...

அருமையாக கொண்டு செல்கிறீர்கள். படிக்கப் படிக்க படிக்க ஆவலைத் தூண்டும் இந்த தொடர் இன்னும் எத்தனை நாள் தொடர வேண்டும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும் அவசரப்பட்டு விரைவில் முடித்து விடவேண்டாம் என்பதே என்னுடைய வேண்டுகோள் நன்றி.

ஸ்ரீராம். said...

பற்பல தகவல்கள்..   மூளை பற்றிய பல தகவல்களை சொல்லி இருக்கிறீர்கள்.  நடுவில் மிக இலேசாக அரசியலையும் தொட்டிருக்கிறீர்கள்.

இனிய தீபாவளித் திருநாள்  நல்வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

ஜி எம் பி ஸார் சொன்ன மாதிரி தீபாவளி பரபரப்புகள் நிறைவடைந்ததும் மறுபடியும் ஒருதரம் படிக்க வேண்டும்.   அப்புறம் மறுபடி ஒருதரம்...  என் மூளையின் நினைவுப்பகுதி கொஞ்சம் பலவீனம்!  அந்த இடத்தில் ஒரு நார் இழை விடுபட்டிருக்கவேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

நம்ம ஞாபகசக்தி இராஜ்யம் சர்வ வல்லமை படைத்த ஹிப்போகேம்பஸ்
(Hippocampus) வசம். எனது ஆறு வயதில் மதுரை டவுன் ஹால் ரோடு இருந்த தோற்றத்தையும் இப்பொழுதிய நிலையையும் இந்த ஹிப்போகேம்பஸ் உதவியால் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம். இது எப்படி சாத்தியமாகிறது என்கி்ற விஷய ஞானம் நம் தியானத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும். அப்படியே ஹிப்போகேம்பஸின் அருமையையும் தெரிந்து கொள்ளலாம்/////////////////////இதுதான் மிகவும் பிடித்தது.
நமக்கு இனிமையாகப்பட்ட நினைவுகள்
எப்பொழுதும் மூளையில் தங்கி விடுமோ.
ஸ்ரீராம் சொன்னது போல ஆரவாரம் நாளை ஓய்ந்துவிடும். மீண்டும் படிக்க வேண்டும்.
இனிய தீபாவளி நல் நாள் வாழ்த்துகள் ஜீவி சார்.

ஜீவி said...

@ GMB

மனத்தில் பதித்துக் கொள்கிற மாதிரி படித்தால் நல்லது. ஏனென்றால்
அத்தனையும் உடல் சாத்திரம் சம்பந்தப்பட்டது. முக்கியமாக எதுவும் கற்பனையில் கயிறு திரிக்கிற சரடு இல்லை. ஆதார பூர்வமான உண்மைகள். மருத்துவக் கல்லூரி பாடப்புத்தகங்கள் கிடைத்தால் மேலான தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.

ஜீவி said...

@ டி.பி.ஆர். ஜோசப்

பதிவுகளுக்காக என்பதைத் தாண்டி புத்தக வெளியீட்டுக்காக எழுதுவதால் நேரடியாக அச்சுக்கு கொடுக்கிற மாதிரி எழுதுகிறேன். உங்களுக்கான கேள்விகள் ஏதாவது இருந்தாலும் கேட்க வேண்டுகிறேன். அதற்கு பதில் சொல்கிற சாக்கில் இன்னும் விவரங்களைச் சேர்க்கலாம். தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி, ஐயா.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//நடுவில் மிக இலேசாக அரசியலையும் தொட்டிருக்கிறீர்கள்.//

2G அரசியல் அல்ல ஸ்ரீராம். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதித்த விஷயம். குறுகிய கட்சி அரசியலைத் தாண்டிய தேச நலன் காப்பாற்றப் பட வேண்டும்.

//என் மூளையின் நினைவுப்பகுதி கொஞ்சம் பலவீனம்! அந்த இடத்தில் ஒரு நார் இழை விடுபட்டிருக்கவேண்டும்.//

தமாஷாகச் சொல்கிறீர்கள் :) நாம் கொள்ளும் ஆர்வத்திற்கேற்ப ஞாபகங்களின் திரட்சி கூடுகிறது. அவ்வளவு தான்.


ஜீவி said...

@ வல்லிசிம்ஹன்

//நமக்கு இனிமையாகப்பட்ட நினைவுகள்
எப்பொழுதும் மூளையில் தங்கி விடுமோ.//

அதில் அடித்தல், திருத்தல் அத்தனையும் உண்டு என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். சமீபத்திய அறிதல் வரை அப்டேட் ஆகும் கூடுதல் வசதியும் உண்டு. இதனால் தான் கம்பாரிஸன் ஸ்டடியும் சாத்தியமாகிறது.

தொடர்ந்து வாருங்கள், வல்லிம்மா.

வே.நடனசபாபதி said...

பள்ளியில் படிக்கும்போது பெருமூளை, (Cerebrum) மூளைத் தண்டு(Brain stem) சிறுமூளை(Cerebellum) படித்ததோடு சரி! தங்களின் பதிவு மூலம் மூளையைப் பற்றி புதிய தகவல்களை அறிந்துகொள்ள உதவியமைக்கு நன்றி! .

//நம்ம ஞாபகசக்தி இராஜ்யம் சர்வ வல்லமை படைத்த ஹிப்போகேம்பஸ்
(Hippocampus) வசம்.//

எனக்கு இதில் ஒரு ஐயம் உண்டு. இந்த ஹிப்போகேம்பஸ் எல்லாவற்றையும் நினைவில் வைத்துக்கொள்ளுமா அல்லது குறிப்பிட்ட சிலவற்றைமட்டும் நினைவில் கொள்ளுமா என்பதே அது.

ஜீவி said...

@ வே. நடனசபாபதி

ஆழ்ந்த வாசிப்புணர்வுக்கும் ஆர்வத்திற்கும் நன்றி, சார்.

வரும் பகுதிகளில் உங்கள் ஐயத்திற்கான பதிலளிக்க முயற்சிக்கிறேன். மீண்டும் நன்றி.

Related Posts with Thumbnails