மின் நூல்

Friday, October 4, 2019

மனம் உயிர் உடல்

11.     நான்  யார்?

பூவுலகில்  வெளிப்பார்வைக்குத் தெரியும்  அத்தனையையும் கண்களால் காணுகிறோம்.  புறவுலகில் தென்படுபவனவற்றை இன்னது தான் என்று அறிவு  பெறுவது புறப்பார்வையால் சாத்தியப்படுகிறது.     அதற்கு நம் கண்கள் உதவுகின்றன.

புறப்பார்வை போலவே அகப்பார்வை என்ற ஒன்றும் இருக்கிறது.  புறப்  பார்வை வெளிநோக்கி என்றால் இது உள் நோக்கி.  நமக்கு நாமே உள்நோக்கிப் பார்ப்பது.  புறப்பார்வையைச் சாத்தியப்படுத்துவதற்கு  கண்கள் இருக்கின்றன என்றால்,  அகப்பார்வைக்கு?..  மனக்கண் என்று பேச்சு வழக்கில் சொல்கிறோம்.  ஓ! மனமே கண் போலச் செயல்படுகிறதா என்று ஆச்சரியம் கொண்டால், ஓரளவுக்கு  இது சரியே.

நம்மை நாமே ஆராயும் பார்வை தான் அகப்பார்வை.

இப்படி நம்மை நாமே ஆராய்வதற்கு நம்மை விடத் தகுதி வாய்ந்தார்கள் வேறு யார் இருப்பார்கள்?..  சொல்லுங்கள்..  இது சத்யமான உண்மை எனினும் தன்னைத் தானே ஆராயத் தெரியாதவர்கள் தான் அதிகம்.  இது ஓர் ஆச்சரியமான உண்மை.

இந்தியத் தத்துவ ஞானத்தில் 'நான் யார்?' என்பது மிகவும் சிக்கலான  கேள்வி.

'நான் யார்?' என்று உங்களுக்கு நீங்களே கேள்வி கேட்டுக் கொண்டுப் பாருங்கள்.  விடைகாணுவதில்  சிரமம் தாண்டி,  கிடைக்கும் எந்த விடையும் சரியாக இல்லை என்பது மாதிரி உங்களுக்கேத்  தோன்றும்.  ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நீங்கள் நடந்து கொள்ளும் முறையெல்லாம் நீங்களல்ல.
நீங்கள் யார் தீர்மானமாக வரையறுத்து    நெஞ்சுக்கு நீதி வழங்குவது உங்களாலேயே   முடியாத காரியம் என்பது அதற்காக முயற்சித்துப் பார்த்தால்  தெரியும்.

ஆக, நாம் யார் என்பது நமக்கிட்டப் பெயரைத்  தாண்டி மிகச் சரியாக நம்மை நாமே யார் என்று கணிக்க முடியாமை தான் விசித்திரம்.

நம்மை நாமே கணிப்பது என்றால் என்ன?..  நாம் எப்படிப்பட்டவர் என்று நம்மைத் தெரிந்தவர்கள் நம்மைப் பற்றிக் கணித்து வைத்திருப்பது அல்ல.

அகவயப்பார்வையை நம் உள்ளே செலுத்தி  நமக்கு நாமே நம்மைப் பற்றி அறிய முற்படுவது.  இந்தச் சோதனையில்  ஈடுபடும் பொழுது நம்மைப் பற்றி நமக்கே இதுவரைத் தெரிந்திராத பல உண்மைகளைத் தெரிந்து கொள்ள தலைப்படுவோம்.   போலியாக இல்லாமல் ஒரு சத்ய உணர்வோடு உண்மையான அறிதல்  நோக்கோடு இந்த அகவயப் பயணத்தை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும்.  அப்பொழுது நாம் எந்த முயற்சியை  மேற்கொள்கிறோமோ அதற்கேற்பவான பலன் சித்திக்கும்.

மனிதன் ஆகச்சிறந்த படைப்பாக்கம்.  வாழ்நாள் பூராவும் பிரச்னைகளைத் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்டு அவற்றைக் களைவதற்கு தன்னாலான முயற்சிகளை மேற்கொள்ளும் பாவப்பட்ட  ஜென்மம்.   அதற்கான உழல்தல் தான்  அவனது வாழ்க்கையாகியிருக்கிறது.

பிரச்னைகள் இல்லையெனில் வாழ்க்கை இல்லை  என்பது வாழ்க்கைக் கல்வியின் பால பாடம்.   வாழ்க்கையில்  பிரச்னைகள் தாம் ஒருவரின் முன்னேற்றத்திற்கான   தூண்டுக்கோலாக இருக்கின்றன என்பது   அப்பட்டமான உண்மை.

ஆக பிரச்னைகளும் இருக்க வேண்டும்.  அதிலிருந்து மீண்டு வருகிற பயிற்சிகளையும் இந்த வாழ்க்கையினூடேயே பெற வேண்டும் என்பது தான் மனிதப் படைப்பு புடம் போட்டத் தங்கமாக மிளிர்வதற்கு இயற்கை விதித்திருக்கும் விதி.

நாம் யார் என்று தெரிந்து கொள்வதற்கு  நமக்கேற்பட்ட பிரச்னைகளும் அவற்றிலிருந்து நாம் மீண்டு வந்த அல்லது இன்னும் மீளாமல் உழன்று கொண்டிருக்கிற உண்மைகள் உதவலாம்.

தினம்  செளகரியப்பட்ட நேரத்தில் தனிமையில் ஒரு மணி நேரம் உட்கார்ந்து  கடந்து வந்த வாழ்க்கைப் பாதையில் மீண்டும் நினைவில் நடை பயின்று பாருங்கள்.

சில விஷயங்களில் நாம் நடந்து கொண்டவை   நியாயமாகப் படலாம்.  சில  விஷயங்களில் அப்படி நடந்து கொண்டிருந்திருக்கக் கூடாது என்று தோன்றலாம்.  ஏன் அப்படி நடந்து கொள்ளாமல் போனோம் என்று சில விஷயங்களில் நொந்து கொள்ளலாம்.  இன்னொரு தடவை அதே மாதிரி ஒரு நிகழ்வில் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று  புத்திமதி கிடைக்கலாம். 

பல நேரங்களில் சூழ்நிலைகளுக்கேற்ப செயல்பட்டிருக்கலாம்.  சொல்லப் போனால் மனிதனே சூழ்நிலைக் கைதி தான்.  இப்படித் தான் செயல்பட வேண்டும் என்று பல சந்தர்ப்பங்களில் சூழ்நிலை தான் அவனை வழிநடத்திச் செல்வதும் உண்மை  தான்.  ஆனால் இந்த உண்மைகளையெல்லாம் வாழ்க்கைக் கல்விக்கான நிரந்தர உண்மைகள் அல்ல.    ஒரு நேரத்தில் ஒரு மாதிரியும் இன்னொரு நேரத்தில் இன்னொரு மாதிரியும் நடந்து கொள்ள நம்மை நிர்பந்தப்  படுத்துபவை.

இதையெல்லாம் தெளிவாக அலசி ஆராய்ந்து நாம் இப்படித் தான் இருக்க வேண்டும்;  அல்லது நாம் இப்படித் தான் உருவாக வேண்டும் என்று தீர்மானம் கொள்வதற்கான  ஆரம்பப் பாடம் தான்  'நான் யார்?' என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ளும் கேள்வியில் ஆரம்பிக்கிறது.

அதைப் பற்றித் தொடர்ந்து பார்ப்போம்.


(வளரும்)

16 comments:

G.M Balasubramaniam said...

என்னை நானெ உணரவை / சுட்டி இதோ இதுவெ கருத்தாக இருக்கலாம்/http://gmbat1649.blogspot.com/2011/11/blog-post_27.html

ஸ்ரீராம். said...

சுய அலசலில்  இன்று நாம் செய்ததில் சரி என்று பட்டவை மனதில் நிற்பதைவிட, நாம் அப்படி நடந்து கொண்டிருக்கக் கூடாது, அப்படிப்பேசியிருக்கக் கூடாது என்கிற கருத்துதான் அடிக்கடி வந்துநிற்கும் எனக்கு.

ஸ்ரீராம். said...

ஏதோ ஒரு படத்தில் (அந்தமான் காதலி?)  சிவாஜி கணேசன் அன்றன்று நடந்தவற்றை மனைவியிடம் சொல்வார்.  நல்ல யோசனை!   என் அப்பா கூட அன்றன்று நடந்தவற்றை அலசிப்பாருங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

டிபிஆர்.ஜோசப் said...


மனிதன் ஆகச்சிறந்த படைப்பாக்கம்.//

மனிதனை தன்னுடைய சாயலாக இறைவன் படைத்தார் என்று பைபிள் கூறுகிறது. மனிதனால் மட்டுமே தன்னுடைய எண்ணம் மற்றும் செயல்களால் ஏற்படக்கூடிய சாதக பாதகங்களை ஓரளவுக்கு முன்கூட்டியே உணரமுடியும்.

இதையெல்லாம் தெளிவாக அலசி ஆராய்ந்து நாம் இப்படித் தான் இருக்க வேண்டும்;  அல்லது நாம் இப்படித் தான் உருவாக வேண்டும் என்று தீர்மானம் கொள்வதற்கான  ஆரம்பப் பாடம் தான்  'நான் யார்?' என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ளும் கேள்வியில் ஆரம்பிக்கிறது.//

உண்மை.

தொடரை மிக அழகாக கொண்டு செல்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

ஆத்ம விசாரணை என்பது மிக மிக முக்கியம். செய்த
தவறுகளும்,
நன்மைகளும் எப்பொழுதும் மனதில் இருக்க வேண்டுமானால்
தினப்படி பரிசோதனை செய்ய வேண்டியதுதான். மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்.
இது குழந்தையிலிருந்தே மனதில் பதிந்தால்
விசாரணை தொடரும்.
மிக அருமையான எண்ணங்களுக்கு வித்திடும் தொடர் இது ஜீவி சார்.
மிக மிக நன்றி.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சூழ்நிலைக்கைதி என்ற நிலையிலிருந்து நாம் தப்ப முடியாது. தொடர்கிறேன்.

ஜீவி said...

@ GMB

என்னையும் நானையும் மறந்து போகத் தானே சார், இத்தனையும்.

என், நான் - இதெல்லாம் மறந்து விட்டால் புது உலகம் பூக்கும்.

வே.நடனசபாபதி said...

//தினம் செளகரியப்பட்ட நேரத்தில் தனிமையில் ஒரு மணி நேரம் உட்கார்ந்து கடந்து வந்த வாழ்க்கைப் பாதையில் மீண்டும் நினைவில் நடை பயின்று பாருங்கள்.//

நான் நாள்தோறும் பழையவைகளை நினைத்துப்பார்த்து அசைபோடுகின்றேன். அப்படி செய்வதால் நாம் யாரென்று அறிந்துகொள்ளமுடியுமா?

ஜீவி said...

@ ஸ்ரீராம்

அப்படித் தோன்றுவதே பெரிய விஷயம். அந்த செய்திருக்கக் கூடாது என்பது அதே மாதிரியான அடுத்த தடவையில் தொடரக் கூடாது. அவ்வளவு தான்.

சில செய்திருக்கக் கூடாதுகள் நல்ல விளைவுகளையும் ஏற்படுத்தலாம் என்பது இன்னொரு பக்க பார்வை.

அதனால் ஒரு செயலின் விளைவு தான் அதன் நன்மை தீமைகளைத் தீர்மானிக்கின்றன.

நன்மை என்பது பிறருக்கு என்று வரும் பொழுது அதன் பலம் இன்னும் கூடும். அதற்கான பலன், நமக்கான நன்மை தானே வரும்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

பல பெரியவர்களின் அறிவுறுத்தல்கள் எல்லாம் தாம் அடைந்த அனுபவங்களின் அறிவால் தான்.

அன்றன்று நினைத்துப் பார் - என்பது சூட்டோடு சூடாக. அடுத்த நாள் கூட மறந்து போய் விடப்போகிறது என்பதற்காக.

G.M Balasubramaniam said...

என்னையும் நானையும் மறக்க முடியுமா நம்குறைகள்தெரிந்துஅதை நீக்க முய்ல்வதே செய்யக் கூடியது மற்றவை இயலாதவை

ஜீவி said...

@ டி.பி.ஆர் ஜோசப்

//மனிதனை தன்னுடைய சாயலாக இறைவன் படைத்தார் என்று பைபிள் கூறுகிறது.//

புனித பைபிள் மட்டுமல்ல எல்லா இறை நூல்களும் இதே கருதுகோளைத் தான் கொஞ்சமானும் மாற்றி மாற்றிச் சொல்கின்றன.

நான் யார்? என்ற கேள்வி நம்மில் தொடங்குவதின் தாத்பரியமும் அந்த சாயலைத் தெரிந்து கொள்வதற்காகத் தான், சார்.

ஜீவி said...

@ வல்லிசிம்ஹன்

செய்த தவறுகளும் நன்மைகளும் எப்பொழுதும் மனதில் இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டீர்கள்.. அதற்காகத் தான் ஆத்ம விசாரணை என்றும் சொல்லி விட்டீர்கள். அதற்கப்புறமும் -----

//மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்..//

மனம் தானே நம்மை வழிநடத்த வேண்டி கிடைத்த வழிகாட்டி, ஊன்று கோல் எல்லாம்.
அதை இவ்வளவு நிர்தாட்சண்யமாக ஒதுக்கலாமா, வல்லிம்மா?..பின் எதற்காகத் தான் அந்த ஆத்ம விசாரணை, வல்லிம்மா?..

ஜீவி said...

@ Dr. B. Jabulingam

//சூழ்நிலைக்கைதி என்ற நிலையிலிருந்து நாம் தப்ப முடியாது.. //

சூழ்நிலையை கைதியாக்க வழி கண்டோர் வழிகளை ஆராய்ந்தால் தப்பிக்க வழியில்லாமலாப் போகும்?

ஜீவி said...

@ வே. நடன சபாபதி

அசைபோடுவது வெறுமனே இல்லாமல் ஒரு அர்த்ததோடு இருந்தால், அதுவே அடுத்தடுத்து வழி காட்டும். குகையுனுள் நுழைய எத்தனிக்கையில் சிரமமாகத் தான் இருக்கும். நுழைந்துப் பழகிப் போகும் பார்வையை படர விட்டு பயணத்தைத் தொடர்ந்தால்
இறுதி வெற்றி நமக்கே. நான் யார் என்று நமக்கே புரிவது இமாலய சாதனை. சாதனை படைத்து விட்டால் அதுவே பெறும் பேறு என்று அறிவோம்.

ஜீவி said...

@ GMB (2)

//என்னையும் நானையும் மறக்க முடியுமா? //

இன்னுமா அந்த பாரத்தைச் சுமந்து கொண்டிருக்கிறீர்கள்?..

Related Posts with Thumbnails