மின் நூல்

Friday, October 18, 2019

மனம் உயிர் உடல்..

14.   மனக்கோயில்

க்தி என்பதற்கு அருளாளர்கள்  எத்தனையோ விளக்கங்கள் கொடுத்துள்ளார்கள்.   அதிலெல்லாம் உள் நுழைந்து கிளர வேண்டாம்.

மனதிற்கும் இறைவனுக்குமான சொந்தம் அற்புதமானது.  பூசலார்  மனக்கோயிலில் சிவபெருமான்  குடிகொண்ட கதை  நமக்குத் தெரியும்.   'யான்  உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்து அருள்வது இனி நீயே' என்று மாணிக்கவாசகர்  சிவபெருமானைப் பற்றிய மன சந்தோஷத்தில் பெருமிதம் கொண்டு  பூரித்ததும் அறிவோம்.

எல்லாமே மனத்திற்கும் இறைவனுக்குமான   தொடர்பை மாய்ந்து மாய்ந்து  நமக்குத் தெரிவிக்கின்றன.   பக்தி யோகத்தின் அடிப்படை மனமும் இறைவனும் கலப்பது தான்.

மனக்கோயிலில் இறைவன் வீற்றிருக்கிறான் என்ற உணர்வில் பூரணமாக திளைத்து அவனை ஆராதிப்பது என்பது ரொம்ப விசேஷமானது.  தன் மனது, தன் இறைவன் என்ற தனக்கேயான சொந்தம் அது.

எந்த அயலார் தலையீடும் இன்றி   இறைவனோடு கலந்து உரையாடுவது இன்னும் சிறப்பு.   புழக்கத்தில் இருக்கும் இறைத் துதிப்பாடல்களைக் கூடத் தவிர்த்து  விடலாம்.  தனக்குத் தெரிந்த மொழி முக்கியம்.  தானே தன் மொழியில் தன் இறைவனுடன் பேசிக் களிப்பது தான் தனித்த  சந்தோஷத்தை மனதில் பெருக்கெடுக்க வைக்கும்.

கிருஷ்ண காந்த் என்றொரு நண்பர் எனக்கு.   இறை  உணர்வு மிக்கவர்.   அவரோடு பேசிக் கொண்டிருக்கையில் எனக்கு பக்த ராமதாஸ் தான் நினைவுக்கு வருவார்.  இறைவன் மேல்   அப்படி   ஒரு அபிமானம் அவருக்கு.

அர்த்தமே தெரியாத ஸ்லோகங்களைச் சொல்லி  இறைவனை கைகூப்பித் தொழுவோரைப் பார்த்திருக்கிறேன்.  ஸ்லோகங்களுக்கு அர்த்தம் தெரிந்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை;  இதில் அவர்கள் கொண்டுள்ள இறை  நம்பிக்கை தான் முக்கியமாகிப் போகிறது என்ற
சால்ஜாப்புகளையும்  கேட்டிருக்கிறேன்.  பாரதி இதைப் பற்றி கடுமையாகச் சாடிய வரியும் நினைவுக்கு வருகிறது.

நம்ம கிருஷ்ண காந்த் எப்படி என்றால்  தனக்குள் தோன்றும் தன் வார்த்தைகளிலேயே மனம் உருகி  தனக்கு அந்தந்த நேரத்தில் மனசில் பதியும் வார்த்தைகளை வைத்து இறைவழிபாடு செய்யும்  பழக்கம் கொண்டவர்.

முருகா போற்றி
ஷண்முகா போற்றி
அழகா போற்றி
ஆறுமுகா போற்றி
திருத்தணி வாழ்   தெய்வமே போற்றி
திருப்பரங்குன்றம் தெய்வமே போற்றி                                       
திருச்செந்தூர் வாழ் தெய்வமே போற்றி
வடபழனி ஆண்டவரே போற்றி
பழனி ஆண்டவரே போற்றி
சிவபெருமான் பார்வதித் தாயாரின் இளைய  மகனே போற்றி
கணபதியின் தம்பியே போற்றி

--- இந்த மாதிரி..  அவர் வார்த்தைகளில் அவருக்கு பழக்கப்பட்ட நெக்குருகலோடு  குழைந்து போய் மனசை இறைவனின் மேல் படிய வைத்த லயத்தில்  ஒவ்வொரு கடவுளுக்கும் அவரே மனசில் கோர்த்து வடிவாய் அமைத்த சொற்களோடு வழிபாடு செய்து கொண்டிருப்பார்.  அவர் கற்பனை புதுசு புதுசாய் வழிபாட்டிற்கான வார்த்தைகளை அவருக்கு  வடித்துக் கொடுக்கும் என்றும் சொல்லியிருக்கிறார்.

ஒரு நாள் அவரைப் பார்க்கப் போயிருந்தேன்.  வாசல் கதவு திறந்திருந்தது.

உள்ளே ஹாலில் அவர் குரல் கேட்டதால் உள் பக்கம் நுழைந்தேன்.  ஹாலில் பெரிய  பூஜை அலமாரிக்கு எதிரே  இடுப்பில் கட்டிய  துண்டுடன் பக்திப் பரவசமாய் இறை வழிபாடு நடந்து கொண்டிருந்தது.  அவர் கவனம் சிதறி விடக் கூடாது என்று கொஞ்சம் தள்ளி பின் பக்கம் நானும் கைகூப்பி  நின்று கொண்டேன்.

                                                                                               
ஆஞ்சநேயா போற்றி
அனுமாரே போற்றி
வாயு புத்ரா போற்றி
இராம தூதா போற்றி
கொழிஞ்சிவாடி ஆஞ்சநேயரே போற்றி
மண்ணச்ச நல்லூர் ஆஞ்சநேயரே போற்றி
நங்கநல்லூர் ஆஞ்சநேயரே போற்றி                           
நாமக்கல் ஆஞ்சநேயரே போற்றி                                               
சுசீந்தரம் ஆஞ்சநேயரே  போற்றி!.....  என்றவர்

இராமா போற்றி
சீதா பிராட்டியே போற்றி
இலட்சுமணா போற்றி
பரதா போற்றி
சத்ருகனனா போற்றி    ....  என்றவர்  மறுபடியும்

ஆஞ்சநேயா போற்றி
அனுமாரே போற்றி
வாயுபுத்திரா போற்றி
--- என்று ஆஞ்சநேயர் வழிபாடு முழுவதையும் சொல்லி முடித்தார்.

அவர் வழிப்பாட்டு  முறை  என்னைக் கவர்ந்தது..   முதலில் அனுமாரைத் துதித்து அடுத்து ஸ்ரீராமரைத் துதித்து  அதற்கடுத்து முன்பு சொல்லிய அதே அனுமார் துதியைச் சொல்லி...

கிருஷ்ணகாந்த் தன் பூஜையை முடித்து வரட்டும் என்று வாசல் பக்கம்  போய் சோபாவில் உட்கார்ந்து கொண்டேன்.    செய்தித்தாட்களைப் புரட்டும் பாவனையில் கிருஷ்ணகாந்த் வரட்டும் என்று காத்திருந்தேன்.

கொஞ்ச நேரத்தில் பூஜையை முடித்து விட்டு கிருஷ்ணகாந்த் வாசல் பக்கம் வந்தவர், என்னைப் பார்த்து விட்டு, "அடேடே!  எப்படா வந்தே?.." என்று  ஆச்சரியம் காட்டினார்.

"நீ பூஜையில்  தீவிரமாக ஆழ்ந்திருந்த பொழுதே  வந்து விட்டேன்" என்றவன்    சட்டென்று, "ஆஞ்சநேயர், ராமர், மீண்டும் ஆஞ்சநேயர் என்று முக்கோண வடிவில் நீ பூஜித்ததில்  ஏதாவது விசேஷ காரணம்  உண்டா?" என்று மனத்தில் பட்ட கேள்வியைக் கேட்டே விட்டேன்.

"அதெல்லாம் ஒரு காரணமும் இல்லேப்பா.. அந்த  வரிசையில் பூஜை செய்வதை மனசு விரும்பியது. அவ்வளவு தான்.." என்று சுருக்கமாகச் சொன்னார்.

எனக்குத் திருப்தியாகவில்லை.   "ஏன் அப்படி உன்   மனசு விரும்பினது?  சொல்லேன்.." என்று முடுக்கினேன்.

"ஓண்ணுமில்லே.   ஆஞ்சநேயரை ஸ்ரீராமனிடமிருந்து  பிரித்து வழிப்பட்ட மாதிரி  மனசுக்குத் தோணித்து.   ஸ்ரீராமனை பூஜித்து பின்னாடி மறுபடியும்  ஆஞ்சநேயரை வழிப்பட்டு ராமனிடமே அனுமாரைக் கொண்டு போய்ச் சேர்த்ததில்  மனசுக்கு நிம்மதியாய் இருக்கு.  அதனால் தான்.." என்று அவர் சொன்ன பொழுது  அசந்து  போனேன். தீவிர  பக்தர்கள் தாங்கள் பூஜிக்கும் கடவுளோடு எந்தளவுக்கு நெருக்கமாக தங்களை உணர்கிறார்கள் என்று வியப்பாக இருந்தது.

கிருஷ்ணகாந்தே சொன்னார்: "அதே மாதிரி தான்.  ஸ்ரீராமரை மட்டும் பூஜிக்கத்  தோன்றுவதில்லை.  சீதா பிராட்டியாரையும் சேர்த்துச் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது..  ஸ்ரீராமருக்கு சகோதரர்களாக இருக்க இலஷ்மணன்,  பரதன், சத்ருகனன் எல்லாருக்கும் எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும்?.. அதனால் தான் யாரையும் பிரிச்சுப் பார்க்க முடியவில்லை..  " என்று அவர் சொன்ன பொழுது ஸ்ரீராம பட்டாபிஷேகப் படம் என் நினைவில் பளிச்சிட்டது.

"உண்மை தான் கிருஷ்ணகாந்த்!.." என்று என்  மனமும் நெகிழ்ந்தது.

இது தான்  மனம் விளைவிக்கும்  அற்புதம்.  மனதை விட்டு இறைவனைப் பிரித்துப்  பார்க்க முடியாது.  அப்படிப் பார்த்தால் எல்லாம் செயற்கையாய் போய்  முடியும்.  இறைவனுக்கும் மனத்திற்கும் அவ்வளவு நெருக்கம்.

(வளரும்)

10 comments:

கௌதமன் said...

என்னுடைய வழிபாட்டு முறையும் நீங்கள் சொல்லியிருப்பதுபோல என்னுடைய வர்ணனை வார்த்தைகள், துதிகள், சுலோகங்கள், வேண்டுதல்கள் அவ்வளவுதான்.
ஆம்.
அந்த வகை வழிபாட்டில் ஒரு ஆத்ம திருப்தி உள்ளது.

கோமதி அரசு said...

உங்கள் நண்பர் அவர்களின் வழி பாட்டு முறை மிகவும் நம்பிக்கையுடன் எளிமையாக இருக்கிறது.
மனதுக்கு இதம்.

ஜீவி said...

@ கெளதமன்

அன்பு கெளதமன்!

'ஆம். அந்த வகை வழிபாட்டில் ஒரு ஆத்ம திருப்தி உள்ளது' என்று நீங்கள் பகிர்ந்து கொண்டிருக்கும் கருத்து இந்தத் தொடரைத் தொடர்ந்து எழுதுவதற்கான சந்துஷ்டியை எனக்கு அளித்தது. மிக்க நன்றி.

தொடர்ந்து வந்து தாங்கள் உணரும் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

ஜீவி said...

@ கோமதி அரசு

எளிமை?..

அவர் மனோ உணர்வைப் பற்றி சொல்லவில்லையே! இந்தத் தொடருக்கு அது தானே முக்கியம்?

தெரிந்த மொழியில் மனம் உணர்ந்த வழிபாடு.. சொந்த வார்த்தைகளில் 'இங்கு இருப்பதை அங்கு எடுத்து வைக்கிற மாதிரி' வழிபாடு.. அதெல்லாம் பற்றிச் சொல்லவில்லையே!

மனத்திற்கு இதம் என்று சொன்ன உணர்வுக்கு நன்றி.

ஸ்ரீராம். said...

ஆச்சரியப்படுத்தும் திரு கிருஷ்ணகாந்த்.  மனம் ஒன்றி முக்கிய தருணங்களில் "முருகா" என்று ஒரு வார்த்தை சொன்னால்போதும்.... மனதில் ஒரு அமைதி, நிம்மதி!

நெல்லைத்தமிழன் said...

உண்மைதான். வெறும்ன அர்த்தம் தெரியாமல் ஸ்லோகங்களை முணுமுணுப்பதில் மனம் இறைவனோடு ஒன்றுவதில்லை.

நான் ப்ரபந்தம் அர்த்தம் தெரிந்து சேவிக்கும்போது அத்தகைய நெருக்கத்தை உணர்ந்திருக்கிறேன். வடமொழி ஸ்லோகங்களின் அர்த்தம் தெரியாமல் அவற்றைச் சொல்லும்போது அத்தகைய மன உணர்வு/நிறைவு வருவதில்லை.

சந்தியாவந்தனத்தின் ஓரளவு அர்த்தம் புரிந்த பிறகு அதைச் செய்யுங்கால் மனம் அதனுடன் ஒன்றியிருப்பதைக் கவனித்திருக்கிறேன். அதுபோல ஒவ்வொரு செயலிலும் அதன் அர்த்தம் புரியும்போது மனது ஒன்றிவிடும்.

வல்லிசிம்ஹன் said...

மனமுருக இறைவனிடம் ஒன்றும்போது திரு.
கிருஷ்ணகாந்தின் வழி உன்னதம். பெரியாழ்வார் இறைவனுக்குப் பல்லாண்டு
பாடியதும் இந்தப் பிரேமையினால் தான்..
நம்முள் உறைந்த இறைவன்
நம்மில் ஒன்றாகி நம்மைக் காக்கும் போது
அவனையும் பூரணமாக அணைக்கத்தான் தோன்றும். மிக மிக அற்புதம்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//மனம் ஒன்றி முக்கிய தருணங்களில் "முருகா" என்று ஒரு வார்த்தை சொன்னால்போதும்.... மனதில் ஒரு அமைதி, நிம்மதி!//

அனுபவப்பட்டதைச் சொல்லும் பொழுதே அதில் ஒரு தீர்க்கம் வந்து விடுகிறதே!

ஜீவி said...

@ வல்லிசிம்ஹன்

//நம்முள் உறைந்த இறைவன்
நம்மில் ஒன்றாகி... //

கண்ணன் என் தோழன்
கண்ணன் என் தாய்
கண்ணன் என் தந்தை
கண்ணன் என் சேவகன்
கண்ணன் என் அரசன்
கண்ணன் என் சீடன்
கண்ணன் என் சற்குரு

-- பாரதியாருக்கு கண்ணன் தான் என்னென்ன நிலைகளில்?..

வே.நடனசபாபதி said...

இறைவனை எப்படி வேண்டுமானாலும் வழிபடலாம். வணங்கும்போது மனதை ஒருமுகப்படுத்தத்தான் வழிபாட்டுப் பாடல்கள் பாடப்படுகின்றன. அது எந்த மொழியிலும் இருக்கலாம்.தங்களின் நண்பர் தன் விருப்பப்படி இறைவனை துதித்திருக்கிறார். மனஸ்பூஜா எனப்படும் இறைவனை மனதால் வணங்கும் முறையில் பாடல்கள் பாடி பூஜனை செய்யாமலே இறைவனை துதிக்கமுடியும் என்கிறார்கள் ஆன்மீகப் பெரியோர்கள். முறை எதுவாயினும். இறைவனை வணங்குவதுதான் நமது இலக்கு

Related Posts with Thumbnails