10
சமஸ்கிருதம் தேவ மொழியென்றால் அமிழ்தத் தமிழ் தெய்வ மொழி என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.
பண்டைய தமிழன் தெய்வத்தைத் துதித்துப் பாடாதிருந்ததில்லை. சங்க காலத்தில் தெய்வத்தின் வழிபாடாகவே வண்ண வண்ண மலர்களாய் அர்ச்சிக்கப்பட்ட பாடல்கள்.. 'சங்க காலத்தோடு மட்டும் சொந்தம் கொண்டாடுவோம், சங்க காலத்து தமிழரின் தெய்வ வழிபாட்டை கண்டுக்க மாட்டோம்' என்பது காலத்தின் நிர்பந்தம் போலாயிற்று.
'மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே' -- என்றும்
பாலை நில கொற்றவை வழிபாடு குறித்து---
'மறம் கடை கூட்டிய துடி நிலை. சிறந்த
கொற்றவை நிலையும் அகத்திணை புறனே'
(-- தொல். பொருளதிகார புறத்திணையியல்)
என்றும், வாழ்ந்த ஐவகை நில அமைப்புகளுக்கு ஏற்ப மாயோன், சேயோன், இந்திரன், வருணன், துர்க்கை என்று திணைநிலைத் தெய்வங்களை வழிபடும் வழக்கமிருந்திருக்கிறது என்பதற்கு ஆதார பூர்வமான எடுத்துக் காட்டுகள் இருக்கின்றன.
கொடி நிலைக் கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே
(தொல். புறத்திணைவியல்: 85)
கடந்து நிற்பவர் என்ற பொருளில் கடவுள் என்ற சொல் தொல்காப்பியத்திலேயே எடுத்தாளப்படுகிறது. 'தெய்வம் தான் தமிழரின் வழிபாடே தவிர கடவுள் இல்லை' என்று கடவுள் - தெய்வம் வார்த்தைகளையே வித்தியாசப்படுத்திய பெருங்கவிஞர் ஒருவரின் உரையைக் கேட்ட நேரத்து திகைப்பாய் இருந்தது, 'எம்மிடம் தயிர் தான் இருக்கிறது; மோர் இல்லை' என்கிற மாதிரியாக இது எனக்குத் தோன்றியது. ஏதோ தயிருக்கும் மோருக்கும் அவரளவில் வித்தியாசம் காணுகிறார் என்று நினைத்துக் கொண்டேன். மேற்கண்ட தொல்காப்பிய நூற்பா இப்பொழுது தெரிய வந்து, இதோ கடவுளும் தொல்காப்பிய காலத்தில் இருக்கிறரே என்று குஷியாயிற்று.
கடவுள், தெய்வம் எல்லாம் ஒன்று என்று தானே நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்?.. இல்லை என்பது சில தமிழ்ப் பேரறிவாளர்களின் கருத்து. எல்லாம் வார்த்தைகளுக்குக் கொள்ளும் பொருள் சம்பந்தப்பட்ட விளையாட்டுகள் தான்.
'இயற்கையை தெய்வமாக வணங்கியவன் தமிழன்; தீயைத் தெய்வமாகப் போற்றியது ஆரியம்' என்று ஆறு வித்தியாசம் காணுகிற மாதிரி என்னன்னவோ மயக்கங்கள். தீ, இயற்கையின் வெளிப்பாடு இல்லையா, என்றால் அதெப்படி என்று ஆயிரத்தெட்டு வக்கணைகள்.
'கொடி நிலைக் கந்தழி வள்ளி என்ற'
கொடிநிலை என்றால் கதிரவன் (சூரியக் கடவுள்). 'ஆதித்யானாம் அஹம் விஷ்ணு' என்பது பகவத்கீதையில் கண்ணபிரான் வாக்கு. 'நானே சூரியனாய்த் திகழ்கிறேன்' என்று இதற்குப் பொருள். தமிழகத்தில் சூரியக் கடவுள் கோயில் கொண்டுள்ள குடந்தைக்கு அருகிலுள்ள தலம் சூரியனார் கோயில் என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது. சிலப்பதிகாரத்திலோ உச்சிக் கிழான் கோட்டம் என்ற பெயர் சூரியனுக்கான கோயிலைச் சுட்டுகிறது. இன்றைய ஒடிசா மாநிலத்தில் கொனார்க்கில் அமைந்துள்ள சூரியனார் கோயில் பற்றி நாம் அறிவோம்.
தன் ஈர்ப்பு சக்தியால் அத்தனைக் கோள்களையும் ஆகர்ஷித்துப் பின்னிப் பிணைந்திருக்கும் நிலை 'கொடிநிலை'யாகி அதுவே காரணப் பெயராயிற்று.
தண்கதிரை வாரிவழங்கி இராக்காலங்களில் பயிரைக் காத்து அருளுவதால் திங்கள் (சந்திரன்) வள்ளியாயிற்று.
கந்தழி என்றால் நெருப்பு (அக்னி). நெருப்பு, தீ என்றால் உடன்பாடாகத் தெரிவது அக்னி என்றவுடனேயே முகச்சுளிப்பாகி விடுவதற்கு காரணம் இருக்கிறது. உண்மை என்பது உணர்வாக இருப்பினும் சமஸ்கிருதம் என்றால் ஒரு தயக்கத்துக்கு பிறகே ஏற்றுக்கொள்ள மனதில் சம்மதம் கிடைக்கிறது. இந்த சம்மதம் கிடைக்காததாலேயே கடலில் மூழ்கிய கடைச்சங்க காலத்திற்கு முந்தைய காலத்தை அப்படியான ஒரு பொற்காலம் இருந்ததே இல்லை என்று மறுக்க மனசைத் தயார்படுத்தியது.
ஞாயிறு, தீ, திங்கள் ஆகிய மூன்றும் வடுநீங்கு சிறப்பு கொண்ட தெய்வங்கள் என்பது தொல்காப்பியனார் வாக்கு.
பிற்காலத்தில் இதே நிலையை ஒட்டித் தான் 'வான் இனிமையுடைத்து, தீ இனிது, நீர் இனிது, நிலம் இனிது, என்ற பாரதியாருக்கு தீக்குள் விரலை வைத்த பொழுதும் நந்தலாலாவைத் தீண்டும் இன்பம் உணர்ந்து இறைவனுடனான
நெருக்கத்தின் சுகம் பெறும் பேறு பெற்றார்.
தெய்வம் உணாவே மாமரம் புள்பறை
செய்தி யாழின் பகுதியோடு தொகைஇ
அவ்வகைப் பிறவும் கருவென மொழிப
(தொல்காப்பியம். பொருள். அகத்திணையியல். 18)
இந்நூற்பாவிலிருந்து தொல்காப்பியர் காலத்து தெய்வம் என்பது வாழ்வின் ஒரு பகுதியாக இருந்திருக்கிறது என்பதனை உணரலாம். மக்கள் வாழ்ந்த நிலம், அவரவர் தேவைகள் என்பவையின் அடிப்படையில் அவர்கள் தெய்வ வழிபாடு அமைந்திருக்கிறது.
(தொடரும்)
16 comments:
நல்ல ஆராய்ச்சி. படிக்கின்ற விஷயங்களை நுணுக்கி ஆராய்ந்து எழுதுவது சிறத செயல். காலச்சக்கரம் நரசிம்மா கூட இப்போது இந்த உத்தியைப் பயன்படுத்திதான் நிறைய எழுதுகிறார். கடவுள், தெய்வம், இயற்கை எல்லாம் படிக்கும்போது தன்னால் வெல்லமுடியும் என்று கற்பனை கூட செய்ய முடியாத விஷயங்க்ளுக்கு மனிதன் மரியாதை கொடுத்துப் பணியக் கற்றுக்கொண்டான் எனத் தெரிகிறது.
கொஞ்ச நாட்களுக்குமுன் உங்கள் தளத்தில்தான் என்று நினைக்கிறேன். சிலபபதிகாரம் பற்றி பேசும்போது எனக்கு ஒரு ஆசை வந்ததது என்று சொன்னேன். நீங்களும் செய்யலாம் என்று ஊக்குவித்தாலும் நடவாத காரியமாகி விட்டது. சிலப்பதிகாரம் முதல் பல பழைய நூல்கள் படித்து ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்த திருமண முறைகள் பற்றி ஆராயவேண்டும் என்று அப்போது தோன்றியது.
நான் ரோபோ இல்லை டிக் செய்து டிக் செய்து மூன்று பின்னூட்டங்கள் இட்டேன். இரண்டுதான் இருக்கிறது. மூன்றாவது என்ன பின்னூட்டம் எழுதினேன் என்று யோசித்துப் பார்க்கிறேன்! நினைவுக்கு வரவில்லை..
:))
@ ஸ்ரீராம் (3)
//மூன்றாவது என்ன பின்னூட்டம் எழுதினேன் என்று யோசித்துப் பார்க்கிறேன்! நினைவுக்கு வரவில்லை..//
1. ஆறு வித்தியாச அனுபவம் பற்றி?
2. கடவுள் - தெய்வம் இரண்டையும் வேறுபடுத்திப் பார்ப்பது பற்றி?
3. அக்னி வழிபாடு பற்றி?
4. காலச்சக்கரம் நரசிம்மாவின் இதே மாதிரியான நுணுகிய ஏதேனும் வாசிப்பு அனுபவம் பற்றி?
நிறைய பதிவுகளை நேரம் ஒதுக்கி வாசித்து பின்னூட்டமிட்டு விடும் உங்கள் அர்ப்பணிப்பு உணர்வு போற்றத்தக்கது.
தன் பதிவுக்கு வந்து வாசிப்போருக்கு மட்டுமே ஒரு கடமை போல பின்னூட்டமிடும்
வலையுலகில் நீங்கள் வித்தியாசமானவர் தான்.
தொலைந்து போனதைத் தேடிப்பார்த்தேன். வந்து சேரவில்லை.
இன்னொண்ணு போட்டால் போச்சு.
@ ஸ்ரீராம் (1)
இயல்பாகவே வாசிக்கும் பொழுதே மனசில் தோன்றும் மாறுப்பட்ட அல்லது அதே போலவான இன்னொரு கருத்து ஒன்றே அப்படி நுணுகிப் பார்ப்பதாகத் தோற்றம் கொள்கிறது.
வாசித்ததைப் பகிர்ந்து கொள்ளாமல் வாசித்த பொழுது நம் மனசில் விளைந்ததை பகிர்ந்து கொள்ளும் பழக்கம் வலையுலகில் வழக்கத்திற்கு வந்தால் அவரவர் மன எண்ணங்களை நாம் புரிந்து கொள்ள வழிவகுக்கும்.
@ ஸ்ரீராம் (1)
கல்கியை மறந்து விட்டு நரசிம்மாவை வாசிக்க வேண்டும் என்ற ஞானோதயம் நீங்கள் அவரைப் பற்றிக் குறிப்பிடும் பொழுதெல்லாம் புலப்படுகிறது. என்னிடமிருக்கும் உங்கள்
'லாசராவின் கதைகள்' புத்தகத்தை திருப்பி வாங்கிக் கொள்ளும் பொழுது நரசிம்மாவின் உங்களுக்குப் பிடித்த படைப்பொன்றைத் தந்து விட்டு என்னிடமிருப்பதைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
'பாலும் தெளிந்தேனும்' ஒளவையார் ஏற்கனவே வேறோர் விஷயத்திற்கு நினைவுக்கு வந்தவர் மனசிலேயே தேங்கி நிற்கிறார்.
கடவுள், தெய்வம் பற்றிதான் அப்போது தோன்றியதை எழுதிய நினைவு. அது போகட்டும். இனி யோசித்தால் செயற்கையான கருத்துகளே கிடைக்கும்!!!
கல்கியை மறந்து விட்டு அல்ல, நன்றாய் நினைவு வைத்துக் கொள்ளலாம். அவர் எழுதியது வரலாறு, அதுதான் உண்மை என்று மட்டும் நினைக்க வேண்டாம். புதிய உண்மைகள் நாள்தோறும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். பழைய விஷயங்கள் கருத்திழக்கலாம். நரசிம்மா நான்கு பக்கங்களிலிருந்து ஒரு விஷயத்தை ஆராய்கிறார். அவர் படைப்பாக்கத்தை ஒரு புத்தகம் மூலம் அளவிட முடியும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.. கல்கியின் கற்பனையை ரசிக்கலாம். கல்கிக்கு நிகர் கல்கியேதான் - அவர் பாணி எழுத்துகளில். அவரை நரசிம்மா, நான் உட்பட யாருமே குறைத்துச் சொல்லவே இல்லை. நாளை புதிய உண்மைகள் வெளிப்படும்போது நரசிம்மமாவின் கருத்துகளும் மறுக்கப்படலாம். ஒருவேளை அந்த மறுப்பையும் நரசிம்மமா மூலமே வெளிவரலாம்!!
@ ஸ்ரீராம் (3)
உங்கள் ஆர்வம் என்னிலும் ஆசையை ஏற்படுத்தி விட்டது இப்போது. நானும் இதைக் குறித்துக் கொள்கிறேன்
தொல்காப்பிய காலத்து திருமணத்திலிருந்து ஆரம்பிக்கலாம்.
சாம்பிளுக்கு ஒன்று:
"பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர்யாத்தனர்கரணமென்ப... "
(தொல்காப்பியம்)
கரணம் என்றால் வேள்விச்சடங்கு என்று நச்சினார்கினியர் தம் உரையில் கேட்டுக் கொள்கிறவர்கள் காதுகளில் மட்டும் கிசுகிசுக்கிறார். !
இந்த வம்பே வேண்டாம் என்று தான் திருக்குறளை ஆரம்பமாக வைத்துக் கொண்டு அதற்கு முற்பட்ட காலத்து வாழ்க்கை முறைகளை தெரிந்து வைத்துக் கொள்வதில் பலர் ஆர்வம் காட்டுவதில்லை. வள்ளுவ பெருமான் தன் சிந்தனையை நமக்குக் கடத்துவதில் எந்தக் குறையும் வைக்காமல் நிறைவாகவே எடுத்துக்கொண்ட காரியத்தை அற்புதமாக நிறைவேற்றிய ஞானவான்.
@ ஸ்ரீராம்
// தன்னால் வெல்லமுடியும் என்று கற்பனை கூட செய்ய முடியாத விஷயங்க்ளுக்கு மனிதன் மரியாதை கொடுத்துப் பணியக் கற்றுக்கொண்டான் எனத் தெரிகிறது.//
வெல்ல முடியாது என்று ஒரு காலத்தில் நினைத்த விஷயங்களும் பிற்காலத்தில் வெல்ல முடிந்ததாகியும் வெல்ல முடியாத விஷயங்கள் இருந்து கொண்டே இருப்பது தான் இறை அருளில் மகத்துவம்.
@ ஸ்ரீராம்
//கல்கியை மறந்து விட்டு அல்ல, நன்றாய் நினைவு வைத்துக் கொள்ளலாம். அவர் எழுதியது வரலாறு, அதுதான் உண்மை என்று மட்டும் நினைக்க வேண்டாம்.//
நிச்சயமாக இல்லை. பொன்னியின் செல்வன் நாவல் கல்கிக்குக் கிடைத்த வரலாற்று தகவல்களை ஒரு பக்கம் வைத்துக் கொண்டு அதன் அடிப்படையில் பின்னப்பட்ட கல்கி அவர்களின் சொந்த கற்பனை என்ற தெளிவு எனக்கு என்றைக்குமே உண்டு. அதே மாதிரி நரசிம்மா அவர்களுக்கும் இருக்க வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு.
கல்கிக்கும் நரசிம்மாவிற்கும் கிடைத்த வரலாற்றுத் தகவல்கள் வேறுபடின் இருவர் கற்பனைக்கும் நிச்சயம் வேறுபாடுகள் இருக்கும் தான். நரசிம்மா பிற்காலத்தவர் ஆகையால் தகவல்களின் செழுமை வேறுபட்டும் மாறுபட்டும் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. இது இயற்கையே.
ஆனால்,
'ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்படவில்லை; அவனுக்கு நேர்ந்தது இயற்கையான மரணமே' என்கிற மாதிரியான புரட்டிப் போடுகின்ற மாற்றங்கள் சரியான ஆதாரத் தகவல்களின் அடிப்படையில் நரசிம்ம்மாவின் வரலாற்றுக் கதையில் இருந்தால் நிச்சயம் அடிப்படையிலேயே பொன்னியின் செல்வனிலிருந்து மாறுபட்டு தோற்றம் கொள்ளும் என்றூ நாம் கொள்ளலாம்.
இந்த மாதிரி சரித்திர நிகழ்வுகளில் கூடுதலான கவனம் கொண்ட படைப்புகளுக்கு உரிய மரியாதையை கொடுப்பதில் எந்த மாற்றுக் கருத்தும் எனக்கில்லை என்றே சொல்ல விழைகிறேன்.
இந்த தொல்காப்பிய கால ஆய்வையே எடுத்துக் கொள்ளுங்கள்..
தமிழ் மொழியின் மீதான பற்று அந்த மொழி கொண்டுள்ள பண்பாட்டுச் சிறப்புகள், வளமை எல்லாவற்றிலும் நாமும் தமிழர்கள் என்பதினால் இயல்பாகவே நமக்கான அக்கறை உண்டு.
ஆனால் இன்று காலமாற்ற செல்வாக்குகளின் அடிப்படையில் தங்களுக்கு ஏற்ற மாதிரி நம் மொழி பற்றிய செய்திகளை திரித்துக் கூற எவரேனும் முற்படுவாரே ஆயின் விழிப்புடன் இருந்து அவை தவறான தகவல்கள் என்று புலப்படுமாயின் அவற்றைச் சுட்டிக் காட்டி நமக்கான கருத்துக்களைப் பதிய வேண்டியது நமக்கான மொழிப்பற்று என்றும் அது நம் மொழியின் கால மாற்ற வளர்ச்சியை பலப்படுத்தும் என்ற எண்ணமும் எனக்குண்டு.
இந்த அடிப்படையிலேயே எல்லா வரலாற்றுக் கற்பனைகளையும் அணுக வேண்டுமென்பதே எனக்காக நான் வகுத்துக் கொண்ட வரையறை என்றே குறிப்பிட விழைகிறேன்.
இந்த தெளிவான புரிதல் நமக்கிருந்தால் கல்கியோ, நரசிம்மாவோ நபர்களுக்கான முக்கியத்துவம் இல்லாது போய்விடும். அவர்களின் ஆதாரபூர்வமான கற்பனை வளத்தின் அடிப்படையில் அவர்கள் பேசப்படுவார்கள்.
இதுவே வரலாற்று புதினங்களை நாம் அணுக வேண்டிய முறை என்றே நினைக்கிறேன்.
//'ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்படவில்லை; அவனுக்கு நேர்ந்தது இயற்கையான மரணமே' என்கிற மாதிரியான புரட்டிப் போடுகின்ற மாற்றங்கள் சரியான ஆதாரத் தகவல்களின் அடிப்படையில் நரசிம்ம்மாவின் வரலாற்றுக் கதையில் இருந்தால்//
இல்லை. அவர் அது கொலை அல்ல, இயற்கை மரணம் என்று சொல்லவே இல்லை. கொலையை யார் செய்திருக்கக் கூடும் என்பதற்கான ஆதாரங்களை மட்டுமே தருகிறார்.
பழைய வரலாற்றுப் புதினங்கள் பெரும்பாலும் மன்னர்களின் அல்லது வரலாற்றின் கறுப்புப் பக்கத்தைக் காட்டுவதே இல்லை. நரசிம்மா அதையும் - கவனியுங்கள் - அதையும் - காட்டுகிறார்.
கல்கியின் பொன்னியின் செல்வனில் பார்த்திபேந்திர பல்லவன் ஒரு உப பாத்திரம். பத்தோடு பதினொன்று போல. ஆனால் அவன் முக்கியத்துவத்தை, அவன் நிலையை நரசிம்மா சொல்கிறார்.
உதாரணத்துக்குச் சொன்னேன்.
கல்கி அவர்களும் பார்த்திபேந்திர பல்லவன் பாத்திரத்திரத்திற்கு உரிய இளவரச அபிலாஷைகளுடனான முக்கியத்துவம் கொடுத்துத் தானே உருவாக்கியிருக்கிறார்?..
சரி. நாம் தொல்காப்பியத்திலிருந்து விலகி விடக் கூடாது. கி.மு.க் காலம் அது.
அதனாலேயே அதற்கான முக்கியத்வத்தை அது பெறுகிறது. இனி வரப்போகிற வரலாற்றுச் செய்திகள் உங்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். ஒரு ஒப்பு நோக்குப் பார்வையாக இருக்கப்போகும் இந்தப் பகுதிக்கு நான் வாசித்த அளவில் இதுவரை யாரும் போகவில்லை.
தொடர்ந்து வாசித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். நன்றி, ஸ்ரீராம்.
Post a Comment