---- என்பது தொல்காப்பியத்திற்கு பாயிரம் எழுதிய பனம்பாரனார் வரிகள். பனம்பாரனார் பற்றிய மேலதிக விவரங்களைச் சொல்லுங்களேன் என்று சென்ற பகுதியில் ஸ்ரீராம் கேட்டிருந்தார்.
பனம்பாரனார் பற்றி மட்டுமல்ல. தொல்காப்பியம் அரங்கேறிய அந்தச் சூழலையும் அதற்கு சம்பந்தப்பட்டவர்களையும் பற்றி விவரித்து விட்டு அடுத்த பகுதிக்குச் செல்வதே முறை என்று ஸ்ரீராம் சொன்ன பிறகு தான் உணர்ந்தேன்.
நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையில் தொல்காப்பியம் அரங்கேறியதாக பாயிரக் குறிப்பு கூறுகிறது.
யார் இந்த நிலந்தரு திருவிற் பாண்டியன் என்பதிலிருந்து தொடங்கலாம்.
பண்டைய தமிழ் இலக்கியங்களில் இன்றைய வாசிப்புக்கு வழி காட்டலாய் நல்லதொரு அம்சம் உண்டு. பெரும்பாலும் பெயர்கள் என்பது சம்பந்தப் பட்டவர்களைப் பற்றிய ஒரு குறிப்புடனேயே இருக்கும்.
தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் அதியஞ்சேரல், காய்தின வழுதி வடிவம் பல நின்ற நெடியோன், இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன், வெண் தேர் செழியன், சோழன் வளி தொழிலாண்ட உரவோன், சேரன் பல் யானை செல்கெழு குட்டுவன், சோழன் பெரும் பூண் சென்னி, ஒல்லையூர் பூதப் பாண்டியன் என்பது போல.
-- மேற்குறித்த அத்தனை மன்னர்களும், கி.மு. காலத்தவர்கள் என்பது இன்னொரு வியப்பு.
நிலந்தரு திருவிற் பாண்டியனும் அப்படித் தான். நிலம் தந்த பாண்டியன் என்று இந்தக் குறிப்பிலிருந்து தெரிகிறது.. கி.மு. 7-ம் நூற்றாண்டு இவன் காலம் என்று வரலாற்றியல் அறிஞர்கள் யூகிக்கிறார்கள். அப்படியானால் கி.மு. 7-ம் நூற்றாண்டில் தான் தொல்காப்பியம் அறங்கேறியதா?..
கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரையிலான காலம் தலை, இடை, கடை என்ற மூன்று சங்கங்களும் இருந்த காலம். தலைச்சங்கம், தென் மதுரையிலும், இடைச்சங்கம் கபாட புரத்திலும், கடைச் சங்கம் இன்றைய மதுரையிலும் இருந்ததாகக் கொள்ளலாம். தென்மதுரையும், கபாடபுரமும் கடற்கோளால் கடலில் மூழ்கின என்பது கால மாற்றங்களிலும் நினைவில் கொள்ள வேண்டிய அம்சம். 'பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள' என்பது சிலப்பதிகார வரிகள். கடல் கொண்ட குமரிக்கண்டத்தில் குமரி மலை என்றே அழைக்கப்பட்ட மலையும் இருந்ததாகத் தெரிகிறது.
சங்ககாலம் பற்றிய பல்வேறு குழப்பச் சர்ச்சைகளுக்கிடையே தொல்காப்பியம் பற்றி முதல் முதலாய் பிரஸ்தாபிக்கும் இடைச் சங்ககால நூல் ஒன்றைப் பார்ப்போம்.
இந்த நூலின் பெயர் இறையனார் களவியல். காதலுக்கும் இலக்கணம் வகுத்த தமிழனின் அகப்பொருள் சார்ந்த நூல். இறையனார் என்ற புலவரின் படைப்பாகையால் இறையனார் களவியல் என்றே குறிப்பிடுவது வழக்கமாயிற்று.. நக்கீரர் என்று பெயர் தரித்த புலவர் இந்நூலுக்கான உரையில் மூன்று சங்கங்களையும் பற்றிச் சொல்லும் செய்தி தான் முச்சங்கங்கள் பற்றி நமக்குக் கிடைக்கும் முதல் தகவல் அறிக்கையாகும்.
தலைச் சங்கத்தில் கடவுளரும் முனிவர்களும் பெரும் பங்கு வகித்ததாக சொல்லப்படுகிறது. திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள் (சிவபெருமான்) தலைமையில் முருகவேள், அகத்தியர் , முரிஞ்சியூர் முடிநாகராயர், நிதியின் கிழவன் போன்றோர் பங்கு கொண்ட மன்றம் இது.
கிட்டத்தட்ட 4000 ஆண்டுகளுக்கு மேலாக தலைச் சங்கம் செயலாற்றி வந்திருக்கிறது. தலைச் சங்க காலத்திலேயே அகத்தியரின் அகத்தியம் தமிழ் மொழிக்கு இலக்கண நூலாக இருந்து பெருமை பெற்றது. வேதங்களில் மிகப் பழைமையானது ரிக் வேதம். சமஸ்கிருத செய்யுள்களின் தொகுப்பு நூல் இது. ருக்கு என்றால் மந்திரம். அகத்தியரால் இயற்றப்பட்ட செய்யுள் வடிவ மந்திரங்கள் ரிக் வேதத்தில் காணக் கிடைக்கின்றன..
தமிழுக்கு ஆதி இலக்கணம் படைத்தருளிய அகத்தியரின் பங்களிப்புகள் ரிக் வேதத்திலும் இருக்கிறது என்றால் சமஸ்கிருதமும் தமிழும் கைகோர்த்து உலாவிய இரட்டைச் சகோதரிகள் என்று தெரிகிறது.
அதங்கோட்டு ஆசானும், தொல்காப்பியனாரும் அகத்தியரிடம் கல்வி பயின்றவர்கள். மொத்தம் 12 சீடர்கள் அகத்தியருக்கு. இந்தப் பன்னிரண்டு பேரும் சேர்ந்து பன்னிரு படலம் என்ற நூலை இயற்றியதாக புறப்பொருள் வெண்பா மாலை என்ற பழந்தமிழ் நூல் சொல்கிறது.
பத்து தமிழ் எழுத்தாளர்கள் சேர்ந்து ஒரு நாவலை குமுதம் காலத்தில் படைத்தது இருபதாம் நூற்றாண்டிற்கு என்றால் அந்த நூற்றாண்டிற்கு அது.
(தொடரும்)
4 comments:
கி மு காலத்தவர்கள் அல்லது கி பி காலத்துக்கு முற்பட்டவர்கள் என்று இருக்க வேண்டுமோ!
படிப்படியாக சொல்லி வருவது புரிந்துகொள்ள எளிதாக இருக்கிறது. எங்கிருந்து எடுக்கிறீர்கள் இதை எல்லாம்? விரிவான ஆராய்ச்சி.
@ ஸ்ரீராம் (1)
ஆமாம். சரியே. திருத்தி விடுகிறேன். நன்றி, ஸ்ரீராம்.
@ ஸ்ரீராம் (2)
// எங்கிருந்து எடுக்கிறீர்கள் இதை எல்லாம்? விரிவான ஆராய்ச்சி. //
நல்ல கேள்வி, ஸ்ரீராம். இதற்கான பதில் பின்னூட்டங்களோடு போய் விடக்கூடாது. அதனால் அடுத்த பகுதியில் இதற்கு பதில் சொல்கிறேன்.
Post a Comment