8
பண்டைய தமிழோடு ஒன்றிக் கலந்த சமஸ்கிருதமும் தமிழைப் போலவே இலக்கண வளப்பம் நிறைந்த மொழி.
அஷ்டாத்யாயிக்கு முன்பே சமஸ்க்ருதம் வேறு சில இலக்கண நூல்களைப் பெற்றிருந்தது என்பதற்கான குறிப்புகளை அஷ்டாத்யாயிலேயே காணலாம். இது எட்டு அத்தியாயங்களை உள்ளடக்கிய ஆக்கம் ஆதலினால் அஷ்டாத்யாயி என்று அழைக்கப்படல் ஆயிற்று. தில்லை நடராஜ பெருமான் நடனமாடிய பொழுது அவரது உடுக்கையிலிருந்து புறப்பட்ட பதினாங்கு ஒலி வடிவுகள் எட்டு அத்தியாயங்களாயின என்று புராணக் கதை வழி சொல்லப்படுகிறது.
ஐந்த்³ரம்ʼ சாந்த்³ரம்ʼ காஸா²க்ருʼத்ஸ்னம் கௌமாரம்ʼ ஸா²கடாயனம்ʼ |
ஸாரஸ்வதம் சாபிஸ²லம்ʼ ஸா²கலம்ʼ பாணினீயகம்ʼ ||
-- என்று சமஸ்கிருத இலக்கண படைப்புகளுக்கு வழிகாட்டும் ஸ்லோகம் ஒன்று உண்டு.
வியாகரணம் என்றால் இலக்கணம். இந்திர வியாகரணம், சந்திர வியாகரணம், காஸாக்ருத்ஸ்னம், கெளமாரம், ஸாகடாயனம், ஸாரஸ்வதம், ஆபிஸலம், ஸாகலம், பாணினீயம் -- என்பன சமஸ்கிருத இலக்கண நூல்களாக அறியப்பட்டவை. இவற்றில் கெளமாரம் திருமுருக பெருமானானின் அருளால் படைப்பாக்கம் கொண்டது என்று அறியப்படுகிறது. கெளமாரம், கலாபம் என்றும் அழைக்கப் படுகிறது. கலாபம் என்றால் சமஸ்கிருதத்தில் மயில்.
ஐந்திரம் தான் இந்திர வியாகரணம். இந்த ஐந்திர வியாகரணத்தை ஒட்டித் தான் தொல்காப்பியம் ஆக்கமுற்றதாக தொல்காப்பியப் பாயிரம் பகின்றதை ஏற்கனவே பார்த்தோம்.
மேற்சொன்ன சமஸ்கிருத இலக்கண நூல்களில் பாணினியின் படைப்பாக்கமான அஷ்டாத்யாயி தான் இன்றும் காணக் கிடைக்கிறது. இந்த அரிய நூலை முனைவர் கு. மீனாட்சி அவர்கள் தமிழில் மொழியாக்கம் செய்து தமிழகத்து உலக தமிழாராய்ச்சி நிறுவனம் அதை நூலாகவும் வெளியிட்டிருக்கிறது. பாணினியின் அஷ்டாத்யாயி நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் பார்த்திருக்கிறேன். சென்னை தரமணியில் இருக்கும் உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் கு. மீனாட்சி அவர்களின் தமிழாக்கத்தில் மூன்று பாகங்களாய் அஷ்டாத்யாயி மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது.
சமஸ்கிருதம் தேவ மொழி என்றால் நம் அருமைத் தமிழோ தெய்வ மொழி. இறையனாரும், முருக பெருமானும் தலைச்சங்கத்தைக் காத்து நின்ற கடவுளர்கள். தமிழனுக்கு இலக்கணமே தெய்வத்தின் புகழ் பாடுவது தான் என்று சொல்லும் அளவுக்கு இறை வழிபாட்டை உயிர் மூச்சாகக் கொண்டிருந்த இனம் இது.
பழந்தமிழரின் தெய்வ வழிபாடுகளைப் பற்றிப் பேச விருப்பமில்லாது போயின், சங்க இலக்கியங்களைப் பற்றிப் பேச முடியாமலேயே போகும்.
வாழ்வுக்கு அடிப்படை நிலம் தான். அந்த நிலப்பாகுபாடுகளை முன் நிறுத்தி குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று நிலப் பாங்குகளை அந்தந்த பகுதி மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட வகுத்த பழந்தமிழ் பண்பாட்டு அழகு வியக்கத் தக்கதாகும். தமிழர் வாழ்வு காத்த தெய்வங்களைப் பற்றிப் பார்ப்போம்:
மாயோன் மேயக் காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லைக் குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே..
-- என்பது தொல்காப்பிய பொருளதிகாரச் செய்யுள்.
நில அமைப்புகளையே திணைகளாகக் கொண்டு அந்தந்த நிலப் பகுதிகளுக்கான வழிபடும் தெய்வங்களையும் வகுத்து வணங்கிய தமிழரின் மாட்சியை துல்லியமாகப் படம் பிடித்துச் சொல்லும் அழகு நினைத்து நினைத்து இன்புறத் தக்கது.
காடும் காடு சார்ந்த நிலமும் முல்லை நிலம்
மலையும் மலை சார்ந்த நிலமும் குறிஞ்சி
வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம்
கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல்
முல்லை நிலத்திற்கு திருமாலை தெய்வமாக வரித்தும், குறிஞ்சிக்கு மால் மருகனை கடவுளாகக் கொண்டும், மருதத்திற்கு இந்திரனை தலைவனாகக் கொண்டும்,
நெய்தலுக்கு வருணனைத் தெய்வமாக வகுத்தும் பழந்தமிழரின் இயற்கையோடு இயந்த வழிப்பாட்டு முறை தொல்காப்பியரால் தெளிவு படுத்தப் படுகிறது.
பைந்தமிழில் 'முருகு' என்றால் அழகு என்று பொருள். இயற்கையின் அழகுச் செடி கொடிகளாய் பூத்துச் செறியும் மலையும் மலைச்சாரலும் நிறைந்த குறிஞ்சி நிலத்திற்கு அந்த இயற்கை அழகையே வழிபடும் நிலையில் முருகன் தெய்வமானார்.
கோடை வெப்பத்தால் மாற்றுத் தோற்றம் கொள்ளும் இடம் பாலையாயிற்று. பாலை நிலத்திற்கான தெய்வத் தலைமை தொல்காப்பியத்தில் குறிப்பிடாவிட்டாலும் தொல்காப்பியம் பொருளதிகாரத் துணைத் திணையியலில்,
மறம்கடை கூட்டிய துடிநிலை, சிறந்த
கொற்றவை நிலையும் அகத்திணை புறனே
(தொல், புறத்திணை: 62)
-- என்ற வரிகள் காணக் கிடைக்கின்றன.
குறிஞ்சியும் முல்லையும் என்னதான் வளப்பச் செல்வம் பொருந்தியிருப்பின் நெடுநாள் மழையில்லாது தவிக்கும் நிலை ஏற்பட்டால் பாலையாகும் என்ற உண்மையை ஓர்ந்து அதுபற்றிய குறிப்பொன்றை சிலப்பதிகாரத்தில் பார்க்கலாம்.
சிலம்பின் மதுரை காண்டத்தின் ஆரம்பப் பகுதி தான் காடு காண் காதை. கவுந்தி அடிகளின் வழிகாட்டலுடன் கோவலனும் கண்ணகியும் உறையூரை விட்டு நீங்கி மதுரை மாநகர் நோக்கி வழிப்பயணம் மேற்கொண்ட பொழுது வழியில் குறுக்கிட்ட ஒரு சோலையினுள் நுழைகின்றனர். அங்கிருந்த மண்டபம் ஒன்றில் பாண்டியன் புகழ் பாடிக் கொண்டிருந்த முதியவர் ஒருவரைச் சந்திக்கின்றனர். அவரிடம் "மாமறை முதல்வ! மதுரைச் செந்நெறி கூறுவீர்' எனக் கோவலன் கேட்க,
".. முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல் பிழந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்..."
".. இத்தகைய வேனில் காலத்தே காரிகையுடன் கடும் பயணம் மேற்கொண்டீரே!" என்பார். முல்லையும் குறிஞ்சியும் நீண்ட காலம் மழை பொய்யாது காய்ந்து போயிருப்பின் அது பாலை நிலமாக மாறும் என்பதனை மாமறை முதல்வன் மூலமாக இளங்கோ அடிகளார் சுட்டிக் காட்டுகிறார்.
இத்தகைய இயற்கை மாறுபாடு காரணமாகவே முல்லைக்கும் குறிஞ்சிக்கும் கொற்றவை பொது தெய்வமாகிப் போனாள். தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரணனரும் பாலை நிலத்தின் தெய்வம் கொற்றவையே என்று உறுதி செய்கிறார்.
(தொடரும்)
4 comments:
ஆராய்ச்சி பறந்து விரிந்து வருகிறது என்று தெரிகிறது. கலாபம் என்பதற்கு மயில், ஒருவகை ஆபரணம் என்பதைத்தவிர கொள்ளை என்றொரு பொருளும் உண்டோ?
தொடர்ந்து வாசிக்கிறேன். பல அரிய செய்திகளை அறிகிறேன்.
கலாப மயிலே என்று திரைப்படப்பாடலில் கேட்ட நினைவு.
@ ஸ்ரீராம்
கலாபத்தை ஆராய்ந்து என்ன லாபம் ஸ்ரீராம்?
(தவறாக நினைக்க வேண்டாம். மேடையில் இப்படிக் கேட்டால் கைதட்டல் நிச்சயம். ஒருவரின் நினைவு சட்டென்று வந்திருக்குமே?.. )
@ Dr. B. Jambulingam Asst. Regtr. (Retd)
ஆய்வுகளுக்கு இடையேயும் நேரம் ஒதுக்கித் தாங்கள் தொடர்ந்து வாசித்து கருத்திடுவதற்கு நன்றி, ஐயா. அந்த ஊக்குவிப்பிற்கு நன்றி.
Post a Comment