5
தொல்காப்பியர் இதைச் சொல்லியிருக்கிறார் என்றால் அதற்கு அப்பீலே கிடையாது. அந்த அளவுக்கு பழந்தமிழர் வாழ்க்கை நிலையை படம் பிடித்துக் காட்டியிருக்கும் நூல் தொல்காப்பியம். அதுமட்டுமல்ல, தமிழுக்கென தனித்தன்மையாய் இலக்கிய வடிவில் அமைந்த ஓர் இலக்கண நூலாய்த் தொல்காப்பியம் திகழ்வது தான் தமிழ் மொழிக்கான வித்தியாசப்பட்ட சிறப்பாகிப் போகிறது.
பொதுவாக இலக்கணம் என்றால் ஒரு மொழியை தவறில்லாமல் எழுதுவதற்கும் பேசுவதற்கும் நெறிப்படுத்தும் விதி முறைகளே இலக்கணம் என்று பரவலாகக் கருதப்படுகிறது. இப்படியான இலட்சணம் கொண்ட இலக்கண வரைமுறைகளில் இலக்கியம் சமைப்பது எப்படி என்பது ஒரு அடிப்படை வினா.
இந்த அடிப்படை வினாவிற்கு விடையளித்திருப்பது தான் தொல்காப்பியம்.
தொல்காப்பியர் இயற்றியதால் அது தொல்காப்பியம் என்று பெயர் பெற்றதா இல்லை தொல்காப்பியத்தை இயற்றியமையால் அவர் தொல்காப்பியர் என்று அழைக்கப்பட்டரா என்பது ஒன்றில் ஒன்று புதைந்த ஒரு கேள்வி.
எது எப்படியாயினும் தொல்காப்பியம் என்பது தொன்மையான நூல் என்று அதன் பெயரிலிருந்தே பெறப்படுகிறது.
தொல்காப்பியத்தின் தோற்றத்திற்கு முன்பே அதன் பழமைக்கு முன்பேயே இலக்கிய, இலக்கண நூல்கள் இருந்தன என்பது தெரிகிறது. அவர் காலத்தில் ஐந்திரம் என்னும் வடமொழி இலக்கண நூல் இருந்திருக்கிறது. அகத்தியரால் இயற்றப்பட்ட அகத்தியம் இருந்திருக்கிறது. அவற்றையெல்லாம் ஆராய்ந்ததின் அடிப்படையில் அவற்றைப் பற்றியதான ஓர் ஆராய்ச்சி நூல் போன்றே இயற்றப்பட்டது தொல்காப்பியம். இந்த ஆராய்ச்சியில் இதெல்லாம் இப்படி இருந்தால் தான் இது; இல்லையென்றால் இது இல்லை என்று சொல்வது போல இருந்தவற்றை ஆராய்ந்து அவற்றிலிருந்து பெறப்பட்டதை அவற்றிற்கான இலக்கணமாகக் கொண்ட அரிய படைப்பு தொல்காப்பியம்.
ஒன்றைப் பற்றிச் சொல்வதற்கு அது இருந்தாக வேண்டும் என்ற இருத்தலியக் கொள்கைக்கு சரியான சான்று தொல்காப்பியம்.
பனம்பாரனார் தொல்காப்பியருடன் பயின்றவர். இவர் தான் தொல்காப்பியத்திற்கு பாயிரம் எழுதியிருக்கிறார். பாயிரம் என்றால் தற்காலத்தில் நூல்களுக்கு முகவுரை என்று எழுதுகிறோமே அது தான். பாயிரம் இல்லாமல் நூலில்லை என்பது அக்கால வழக்கமாகவே இருந்தது.
வடவேங்கடம் தென்குமரி
ஆயிடை
தமிழ்கூறு நல்லுலகத்து
----என்று ஆரம்பமாகும் பனம்பாரனார் எழுதிய அந்தப் பாயிரத்தில்,
அதன் கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி
மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமை யோனே
--என்ற வரிகள் காணக்கிடக்கின்றன.
முதல் தழிழ்ச் சங்கம் தென்மதுரையிலும், இரண்டாம் தமிழ்ச் சங்கம் கபாடபுரத்திலும், மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய மதுரையிலும் அமைந்திருந்ததாக அறியப் படுகிறது. முதல் தமிழ் சங்கம் அமைந்திருந்த தென்மதுரையும், இரண்டாம் தமிழ் சங்கம் அமைந்திருந்த கபாடபுரமும் கடல்கோளில் மூழ்கடிக்கப்பட்டன. . வால்மீகி இராமாயணத்தில் கபாடபுரம் பற்றிய குறிப்பு உண்டு.
இரண்டாம் தமிழ்ச் சங்க காலம் கி.மு. 3600 முதல் 1500 வரை தொல்காப்பியரின் காலம் இரண்டாவது தமிழ்ச்சங்கம் இருந்த காலம்.
--என்ற வரிகள் காணக்கிடக்கின்றன.
முதல் தழிழ்ச் சங்கம் தென்மதுரையிலும், இரண்டாம் தமிழ்ச் சங்கம் கபாடபுரத்திலும், மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய மதுரையிலும் அமைந்திருந்ததாக அறியப் படுகிறது. முதல் தமிழ் சங்கம் அமைந்திருந்த தென்மதுரையும், இரண்டாம் தமிழ் சங்கம் அமைந்திருந்த கபாடபுரமும் கடல்கோளில் மூழ்கடிக்கப்பட்டன. . வால்மீகி இராமாயணத்தில் கபாடபுரம் பற்றிய குறிப்பு உண்டு.
இரண்டாம் தமிழ்ச் சங்க காலம் கி.மு. 3600 முதல் 1500 வரை தொல்காப்பியரின் காலம் இரண்டாவது தமிழ்ச்சங்கம் இருந்த காலம்.
நிலந்தரு திருவிற் பாண்டிய அரசன் முன்னிலையில் தமிழ்ச்சங்க அவைக்கு அதங்கோட்டாசான் தலைமை தாங்கிட இரண்டாவது தமிழ்ச்சங்கத்தில் தொல்காப்பியம் அரங்கேறுகிறது. தலைமை தாங்கிய அதங்கோட்டாசான் இடையிடையே எழுத்து பற்றிய சில சந்தேகங்களை எழுப்புகிறார். அதற்கு தொல்காப்பியர் தமிழுக்கான எழுதிலக்கணம் பற்றி விளக்கிச் சொல்ல தொல்காப்பியம் அரங்கேறுகிறது.
எழுத்து, சொல், பொருள் என்று மூன்று பிரிவுகளாக தொல்காப்பியம் பகுக்கப் பட்டுள்ளது. எழுத்தும் சொல்லும் தமிழ் மொழியின் இயல்பழகைக் கூறுகின்றன. பொருளதிகாரமோ பழந்தமிழரின் வாழ்வியலை படம் பிடித்துக் காட்டுகின்றன. பொருளதிகாரத்தில் ஒன்பது அதிகாரங்கள் உள்ளன.
அகத்திணையியல்,புறத்திணையியல், களவியல்,கற்பியல்,பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமயியல், செய்யுளியல், மரபியல் என்கிற ஒன்பது இயலியலும் படைப்பாக்கங்களுக்கு இட்டுச் செல்கிற கூறுகள் நிரம்பியிருப்பது தான் ஆச்சரியம்.
இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் நுண்மாண் நுழைபுலம் கொண்ட பேராசான் தொல்காப்பியர் செய்யுளில் கருத்துச் சொல்லும் வழக்கம் இருந்த காலத்திலேயே செய்யுளின் இயல்பையும் அதன் இயல்பின்மையும் ஒருசேர கற்பிதம் கொள்ளும் அளவுக்கு உரைவகை நடை ஒன்றை சொன்னதோடு எவ்வகைத்தானது அது என்று விளக்கமும் கொடுக்கிறார்.
பாட்டிடை வைத்த குறிப்பினாலும்
பாவின்றி எழுந்த கிளவியானும்
பொருளோடு புணர்ந்த நகைமொழியானும்
பொருளோடு புணர்ந்த பொய்ம்மொழியானும்
உரைவகை நடை மொழியே நான்கென மொழிய
(தொல்காப்பியம் செய்யுளியல்-- 173)
செய்யுள்களுக்கு உரை எழுதுவதையும், செய்யுளின் கருத்தை மட்டும் எழுதும் உரை வகையையும், கற்பனையாய் புனையும் கதைகளையும், உணமையான செய்திகளில் நகைச்சுவை கலந்து எழுதுவதையும் குறிப்பிடும் பொழுது நம் வியப்பு எல்லை மீறி திகைக்கிறது.
இன்றைய உரைநடைக்கு முந்தியது உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள். செய்யுளுக்கு இடையிட்டு உரைநடை போலவான வரிகளும் வருவது அது. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளுக்கான தமிழின் முதல் படைப்பு ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம்.
அதே மாதிரி இன்றைய நாவல்களுக்கு முந்தியது அன்றைய காப்பியங்கள்..சொல்லப் போனால் அன்றைய காப்பியங்களே காலத்தில் மாற்றங்களில் மாற்றம் கொண்டு இன்றைய நாவல்களாகியிருக்கின்றன.
இத்தாலி நாட்டினர் நூவெல் (Novella) என்று பெயர் கொண்டு அழைத்த கற்பனை கலந்த கதைகள் தாம் நாவல்கள் என்று காலப்போக்கில் அழைக்கப்பட்டன என்று சொல்வார்கள். நாவல் என்பதற்கு புதுமை என்றும் அர்த்தம் கொள்ளலாம். இதன் அடிப்படையில் வந்த சொல், நவீனம்.
இதெல்லாம் பிற்காலத்துச் செய்திகள். இதெற்கெல்லாம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உரைநடையும் செய்யுளும் கலந்த உருவில் உரைநடையிட்ட பாட்டுடைச் செய்யுளாய் காப்பியங்கள் என்ற உருவில் நாவல்கள் தமிழில் முகிழ்த்திருக்கின்றன என்பதே இங்கு எடுத்தாளக் கூடிய கருத்தாகும்.
(தொடரும்)
படங்களை உதவியோருக்கு நன்றி.
14 comments:
நல்ல ஆராய்ச்சி. பின்னாளில் புத்தகமாகும் வாய்ப்பிருக்கிறது என்று நினைக்கிறேன். தொல்காப்பியம் வைத்திருக்கிறீர்களா? படித்தால் புரிந்துகொள்ள முடிகிற வகையில் இருக்கிறதா என்று ஒரு புரட்டு புரட்ட வேண்டும்!
நாவல் பெயர்க்காரணம் பற்றிய தகவல்கள் சுவாரஸ்யம். சுவாரஸ்யமான ஆராய்ச்சி அல்லது விளக்கத்தொடர் ஆரம்பித்திருக்கிறீர்கள். தொடர்கிறேன்
பாயிரம் கொடுத்த பனம்பாரனார் என்பவர் பற்றிய குறிப்புகள் என்ன? அவர் தொல்காப்பியரை விட திறன் வாய்ந்தவரா?. புகழ் வாய்ந்தவரா?
மிகச் சிறப்பான தகவல்கள்!
தொல்காப்பியச் சொல்லதிகார ஆராயச்சிக் குறிப்பிற்கு மறுப்புரை எழுதியவர் என் தாத்தா/கொள்ளுத்தாத்தா பழம்பெரு தமிழ்ப் புலவர் திரு. நா.சோமசுந்தரம் பிள்ளையவர்கள். இவர் தொல்காப்பியர் என்றே மற்ற தமிழறிஞர்களால் அழைக்கப்பட்டார். அவரைப்பற்றி அறிய:
http://karanthaijayakumar.blogspot.com/2018/12/blog-post_31.html#more
@ ஸ்ரீராம்
இப்பொழுதெல்லாம் எழுதும் பொழுதே நேரடியான புத்தக ஆக்கத்தைக் கருத்தில் கொண்டு தான் அதற்கேற்றபடி எழுதுகிறேன்.
தொல்காப்பியம் உட்பட அத்தனை சங்க இலக்கிய நூல்களும் கைவசம் உண்டு. ஐம்பதாம் ஆண்டுகளின் இறுதியில் திரு. மர்ரே எஸ். ராஜம் அவர்களால் வெளியிடப்பட்ட சங்க இலக்கிய நூல்கள் தாம் தமிழகத்தில் பரவலாக முதன் முதல் சங்க இலக்கியத்தை புத்தக வாசிப்பு முறையில் வாசிக்க துணையாக இருந்தன. அந்தப் பிரசுரங்களின் தொடர்ச்சியான பதிப்புகளாய் 1981-ம் ஆண்டு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிருவனத்தார்
சங்க இலக்கிய நூல்களை வெளியிட்டார்கள். அப்பொழுது வாங்கிய புத்தகங்கள் தாம் என் கைவம் இப்பொழுது இருப்பது. பின் இணைப்பாக இருக்கும் சில குறிப்புகள் நூல் வாசிப்புக்கு உதவிடும் வகையில் இருந்தன.
இந்த இணைய வாசிப்பு யுகத்தில் தேடிக் கண்டு பிடித்து வாசித்து அறியும் பேறு நமக்கு கைவரப் பெற்றிருப்பதால் எதையும் வாசித்துப் புரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதனால் ஆர்வம் இருந்தால் எதையும் கற்கலாம் என்ற உற்சாகத்தில் தான் இதெல்லாம் செய்ய முடிகிறது என்பதே என் எண்ணம், ஸ்ரீராம்.
நம்மால் செய்ய முடிகிறது ஸ்ரீராம்.
@ ஸ்ரீராம்
மொழியே அரசியலாகியிருக்கும் சூழலில் நம் தாய் மொழியை அந்த பிடிப்புகளிலிருந்து விடுவித்து சுதந்திரப் பறவையாய் பறக்க விடும் முயற்சியில் இந்த்த் தொடரை அமைக்க வேண்டும் என்பது எண்ணம். எந்த அளவுக்கு சாத்தியப்படுகிறது என்று பார்க்கலாம், ஸ்ரீராம். தங்கள் ஆர்வத்திற்கு நன்றி.
@ ஸ்ரீராம் (3)
//பாயிரம் கொடுத்த பனம்பாரனார் என்பவர் பற்றிய குறிப்புகள் என்ன? //
மிக்க நன்றி, ஸ்ரீராம். இந்த மாதிரியான வினாக்கள் அடுத்து எதைப் பற்றி எழுத வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் உதவுகிறது. உங்கள் ஆழ்ந்த வாசிப்புக்கு நன்றி.
@ மனோ சாமிநாதன்
நன்றி சகோதரி! நீங்கள் சுட்டியில் கொடுத்திருந்த தகவல்களை வாசித்தறிந்தேன்.
பெரியவர் தமிழறிஞர் நா.சோ. அவர்கள் தங்கள் முப்பாட்டனார் என்று இப்பொழுது தெரிந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
கரந்தையாரும் அழகாக அவர் பற்றி எழுதியிருக்கிறார்கள். இருப்பினும் அந்த 'மறுப்புரை' குறித்து கொஞ்சமாகவேனும் குறிப்புகள் கொடுத்திருந்தால் நிறைவாக இருந்திருக்கும்.
நான் அறிந்தது தமிழறிஞர் பின்னங்குடி சுப்பிரமணிய சாஸ்திரி அவர்களால் எழுதப்பட்ட 'தொல்காப்பிய குறிப்புரை' என்ற நூல் மட்டுமே. தங்கள் முப்பாட்டனாரின் மறுப்புரை
பற்றி ஏதேனும் குறிப்புகள் இருப்பின் அதைத் தந்து உதவினால் எனது இந்தக் கட்டுரைத் தொடருக்கான ஆய்வுக்கு பேருதவியாக இருக்கும்.
தாங்கள் அளித்திருக்கும் தகவல்களுக்கு மிக்க நன்றி, சகோ.
அன்புடன்,
ஜீவி
விளக்கமான பதிலுரைக்கு அன்பு நன்றி!
என் தந்தையும் காவல் துறை ஆய்வாளராகத்தானிருந்தார்கள். அவர்களின் இறுதி நாட்களில் எனக்கு பதினைந்து வயதாயிருக்கும்போது தான் எனக்கு இந்த விபரம் தெரிய வந்தது. அப்போது மன்னார்குடி கோட்டூர் அரங்கசாமி முதலியார் நூல் நிலையத்தில் அந்த மறுப்புரை எழுதிய உரைகள் அட்ங்கிய நூலை எடுத்து படிக்க முயன்றேன். அந்த பதினைந்து வயதில் எதுவும் எனக்குப்புரியவில்லை. வாழ்க்கைத் தேடுதல்களில் பின் இந்த முயற்சி மறந்தே போயிற்று. கரந்தை ஜெயக்குமார் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது இந்த விஷயத்தை சொன்னேன். அவர்கள் தான் எனக்கு நிறைய குறிப்புகள் கொடுத்து படிக்கச் சொன்னார்கள்.
நான் இப்போது ஐக்கிய அமீரகத்தில் துபாயில் வசித்து வருகிறேன். என் ஊரான தஞ்சைக்கு செல்லும்போது இதற்கான முயற்சிகளில் இறங்கிப்பார்க்கிறேன். கிடைக்கும் விபரங்களை உங்களுக்கு தெரிவிக்கிறேன்.
உங்கள் தொலைபேசி எண்ணை முடிந்தால் எனக்குத் தெரிவிக்கவும்.
பணிக்காலத்தில் தட்டச்சுப்பணி மேற்கொள்ளப்ட்டபோது ஒற்றுப்பிழை தொடர்பாக விவாதம் வரும்போது சிலர் தொல்காப்பியத்தை மேற்கோள் காட்டி, நான் தட்டச்சு செய்தது தவறு என்று கூறுவர். சிலர் முழுமையாக தொல்காப்பியத்தை அடியொற்றி இருக்கவேண்டும் என்பதில்லை என்பர். துணைவேந்தரின் (முனைவர் சி.பாலசுப்பிரமணியன்) நேர்முக உதவியாளராகப் பணியாற்றியபோது (1989-1992)அவர் "தட்டச்சு செய்யும்போது உரிய சொல்லை உச்சரித்துப் பாருங்கள். வாசிக்க எளிதாக உள்ள உச்சரிப்பின் அடிப்படையில் செய்யுங்கள்." அது சரியா, தவறா என எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒரு நல்ல உத்தியாகத் தோன்றியது. பின்னர் அதையே கடைபிடிக்க ஆரம்பித்தேன். இப்போதுகூட ஆங்கிலத்தில் உள்ள தவறை எளிதாகக் காணமுடிகிறதே, தமிழில் அவ்வாறு முடியாமல் தவறு செய்கிறோமே என்ற குற்ற உணர்வு எனக்கு உண்டு.
ஆய்வுப் பணிகள் சிலவற்றை மேற்கொண்டு வருவதால் தளத்திற்குத் தொடர்ந்து வர முடியவில்லை. பொறுத்துக்கொள்ளவேண்டுகிறேன்.
@ மனோ சாமிநாதன் (2)
தங்கள் பதிலளிப்புக்கு நன்றி, சகோ.
சில அத்தியாயங்கள் சென்ற பின், தக்க தருணத்தில் மறக்கப்பட்ட தமிழ் அறிஞர்களைப் பற்றி நினைவுகூற இருக்கிறேன். அப்பொழுது தங்கள் முப்பாட்டனார் பற்றியும் மறக்கப்பட்ட தமிழ் அறிஞர்கள் வரிசையில் எழுதவிருக்கிறேன் என்ற நல்ல தகவலை இப்பொழுது தங்களிடம் பகிர்ந்து கொள்வதில் எனக்கும் மகி.ழ்ச்சி..
இந்தப் பகுதியை தொடர்ந்து வாசித்து வர வேண்டுகிறேன். நன்றி.
@ Dr. Jambulingam, Asst. Registrar, (Retd.)
தங்கள் அரிய ஆராய்ச்சிப் பணிகளுக்கு இடையேயும் கருத்திட்டமைக்கு நன்றி, ஐயா.
முனைவர் சி.பா. அவர்களை காஞ்சியில் சந்தித்த நினைவுகள் மனசில் புரண்டன. அந்த நினைவு மீட்டலுக்குக் காரணமாக இருந்த உங்களுக்கு நன்றி.
உங்கள் ஆய்வுப் பணிகளுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
அன்புடன்,
ஜீவி
அன்புள்ள சகோதரர் ஜி.வி அவர்களுக்கு,
தாங்கள் தெரிவித்த தகவல் மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அன்பு நன்றி.
என் பாட்டனார் பற்றி தாங்கள் எழுத உள்ளதை ஆவலுடன் எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறேன்.
@ மனோ சாமிநாதன்
தங்கள் வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி, சகோ.
Post a Comment