7
தொல்காப்பியத்திற்குப் பாயிரம் பாடிய பனம்பாரனார் பற்றிய குறிப்புகளைக் கேட்டிருந்தார் ஸ்ரீராம்.
அதற்கு முன் தொல்காப்பியம் நிலந்தரு திருவிற் பாண்டியன் அரசவையில் அரங்கேறிய பொழுது அந்த சிறப்பான நிகழ்விற்கு தலைமை தாங்கிய அதங்கோட்டு ஆசானைப் பற்றி தெளிவு கண்டு விட்டு பனம்பாரனாருக்கு வருவோம்.
அதங்கோட்டு ஆசானுக்கு அறிமுகமாய் 'நான்மறை முற்றிய' அதங்கோட்டு ஆசான் என்ற பரம்பாரனாரின் குறிப்பு வருகிறது. ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் தாம் நான்கு மறைகள் என்பது நமக்குத் தெரியும். சமஸ்கிருத மொழியில் அமைந்த இந்த நான்கு வேதங்களையும் முற்றும் கற்ற அதங்கோட்டு ஆசான் என்று பரம்பாரனார் அவரை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். தொல்காப்பிய
எழுத்ததிகாரத்திற்கு உரைப் பாயிரம் எழுதிய இளம் பூரணரும் இதே கருத்தைத் தான் கொண்டிருக்கிறார். அன்றைய தமிழறிஞர்கள், தமிழையும் சமஸ்கிருதத்தையும் ஒன்றரக் கலந்தக் கல்வியாய் கற்றுப் புலமை பெற்றிருந்தார்கள் என்பதற்கு அதங்கோட்டு ஆசான் எடுத்துக் காட்டுமாகும்.
இத்தகு மொழிப்புலமை பெற்ற அதங்கோட்டு ஆசான் தான் அந்த நிகழ்விற்கு தலைமையேற்று நடத்திச் செல்கிறார். தகுந்த சான்றோர்களின் மேற்பார்வையில் அவர்களின் ஒப்புதலுடன் தான் அரசவையில் அரிய நூல்கள் அரங்கேறின என்பதற்கு சான்றுகள் இவை.
தொல்காப்பியம் அரங்கேறும் பொழுது எழுத்து, எழுத்து முறை இவற்றில் தமக்கேற்பட்ட சில ஐயங்களை தொல்காப்பியரிடம் கேட்டு தெளிவு கொள்கிறார் அதங்கோட்டு ஆசான். இவையெல்லாமே பனம்பாரனார் தம் பாயிரத்தில் சொல்லி நமக்குத் தெரிபவை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வள்ளுவன் கோடு (!) என்றொரு ஊர் உண்டு. இதுவே இன்று விளவன்கோடு என்று அழைக்கப் படுகிறது. இதன் அருகில் அமைந்த சிற்றூர் தான் அதங்கோடு. இந்த அதங்கோட்டில் இருக்கும் சூரிய முக்கு என்ற பகுதியில் தாமிரபரணி ஆறு ஓடுகிறது. குழித்துறை தாமிரபரணி என்று அழைக்கிறார்கள்.. (இந்த இடம் பற்றிய மேலதிகத் தகவல்கள் நமது நெல்லைக்குத் தெரிந்திருக்கலாம்.) இந்தக் குழித்துறை தாமிரபரணி தான் பண்டைய சங்ககால பஃறுளி ஆற்றின் விட்ட குறை தொட்ட குறையாய் இன்றிருப்பது என்றும் சொல்வார்கள்.
அடுத்து பாயிரம் பாடிய பனம்பாரனார் பற்றி.
தொல்காப்பியரும் பனம்பாரனாரும் அகத்தியரிடம் பயின்ற ஒருசாலை மாணாக்கர்கள் என்று ஏற்கனவே தெரிந்திருந்தோம். இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலிருக்கும் சாத்தான் குளம் அருகில் பன்னம்பாறை என்றொரு சிற்றூர் உள்ளது. இந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற கருத்தில் பனம்பாரனார் என்ற அழைக்கப்பட்டிருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து.
இந்தி மொழி வேறு; சமஸ்கிருதம் வேறு. வடமொழி என்ற பொதுச் சுட்டலில் இரண்டையும் ஒன்றாகக் கருதி நாம் மயக்கம் கொள்கிறோம். சமஸ்கிருதம் தமிழைப் போலவே இலக்கணச் சிறப்பில் வளப்பம் நிறந்த மொழி. தமிழும் சமஸ்கிருதமும் ஒன்றாகப் பின்னிப் பிணைந்து கி.மு. காலங்களிலேயே செம்மொழிச் சிறப்புடன் தனித்தியங்கும் ஆற்றலுடன் இலக்கிய, இலக்கண வளம் நிறைந்து இயங்கின. இன்னொரு ஒப்புமை இவ்விரண்டு மொழிக்கும் என்னவென்றால் இரண்டுக்குமே மூல இலக்கணம் ஒன்றே தான்.
ஐந்திரம் என்பது காலத்தால் முற்பட்ட சமஸ்கிருத இலக்கண நூலென்றும் இது இந்திரனால் ஆக்கப்பட்டது என்றும் குறிப்புகள் காணப்படுகின்றன. ஐந்திரம் பற்றிய முதல் தகவல் குறிப்பைத் தந்தவர் ஆர்ய பட்டர் என்று சொல்லப்படுகிறது.
சொல்லக் கேட்டது தானே தவிர, ஆர்ய பட்டர் என்ன குறிப்பு கொடுத்திருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் தமிழ் மொழியின் ஆகச் சிறந்த இலக்கிய மேதைகள் ஐந்திரம் பற்றி அறிந்திருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது.
சிலப்பதிகாரத்தின் மதுரைக் காண்ட முதல் பகுதி '.காடு காண் காதை'. கோவலன் கண்ணகியுடன் மதுரை புகுங்கால் வழித்துணையாகக் கிடைத்த கவுந்தி அடிகள், அவர்களுக்கு வழிகாட்டிச் செல்கிறார்:
"...... அவ்வழி செல்லாது இடப்பக்க வழியாகச் செல்வீராயின் திருமாலிருஞ்சோலை மலையை அடைவீர்கள். அங்கே பிலத்துவ வழியொன்று உண்டு. அப்பிலத்தினுள்ளே புண்ணிய சரவணம், பலகாரணி, இட்ட சித்தி எனப் பெயர் கொண்ட மூன்று பொய்கைகள் உள்ளன. அதில் புண்ணிய சரவணம் என்கிற பொய்கையில் மூழ்கி நீராடுவீராயின், விண்ணவர் கோமானால் இயற்றப்பட்ட ஐந்திரம் என்னும் இலக்கண நூலைக் கற்றுத் தேர்ந்தவராவீர்..' என்று ஐந்திரத்தின் பெருமை பற்றிச் சொல்கிறார்.
கம்பனோ, அனுமன் ஐந்திரம் பற்றி அறிவான் என்று சொல்லி நம்மை வியக்க வைக்கிறார்.
யுத்த காண்டத்தில் விபீஷணன் அடைக்கல படலம்:
'இயைந்தன இயைந்தன இனையக் கூறலும்
மயிந்தம் துயிந்தனும் என்னும் மாண்பினார்
அயிந்திரம் நிறைந்தவ நானை ஏவலால்
நயம் தெரி காவலர் இருவர் நண்ணினார்..'
-- என்பது கம்பன் வாக்கு.
மயிந்தன், துயிந்தன் என்ற இரு வானரர்கள், ஐயிந்திர இலக்கண வழிகாட்டுதல்களை அறிந்த அனுமன் கட்டளையால் அங்கு வந்தனர் என்கிறார். இது படித்து யுத்த சாத்திர நுணுக்கங்களின் பாங்குகள் ஐந்திரத்தில் காணக் கிடைக்குமோ என்ற ஆவலும் நம்முள் தலையெடுக்கிறது.
தொல்காப்பியப் பெருமான் அகத்தியத்தில் ஆழ்ந்த அறிவு பெற்றவர். அதே காலத்து சமஸ்கிருத இலக்கண நூலான ஐந்திரத்தின் சிறப்பையும் அறிந்தவர். இந்தச் சிறப்புகளையே அடித்தளமாகக் கொண்டு தன் மொழி ஆற்றலையும் ஆழப்பதிந்து தொல்காப்பியத்தை ஒரு முந்து நூலாகப் படைத்தருளியிருக்கிறார். சொல் அதிகாரம், எழுத்து அதிகாரம், பொருள் அதிகாரம் என்ற முப்பெரும் பிரிவுகளில் காப்பிய அழகோடு, தமிழ்த் தாய்க்கு அணிகலனாய் விளங்கும் ஒப்பற்ற நூல் தொல்காப்பியம்.
சமஸ்கிருதத்தில் இந்திரனின் ஞானத்தில் விளைந்த ஐந்திரம் என்னும் இலக்கண முறையும், பாணினியின் உருவாக்கத்தில் விளைந்த பாணினீயம் என்ற வகையும் இருந்ததாகத் தெரிகிறது.
இவ்வளவு சொல்லி விட்டு சமஸ்கிருத இலக்கண நூலான பாணினியின் அஷ்டாத்யாயி பற்றியும் சொல்லவில்லை என்றால் இந்தப் பகுதி நிறைவு கொள்ளாது.
அதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.
(தொடரும்)
13 comments:
இரண்டு மொழிகளுக்கும் மூல இலக்கணம் ஒன்றுதான் என்பது அரிய தகவல். அனுமன் கல்வி கற்றவன் என்பதே வியப்பு. அதிலும் இலக்கண நூல்கள் காற்றறைந்தவன் என்பது இன்னும் வியப்பு. உறுவியப்பால் முறுவலித்தேன்!
//காற்றறைந்தவன்//
* கற்றறிந்தவர்
உறு வியப்பால் முறுவலித்தேன் -- என்ற வரியை முதல் வரியாகவோ, ஈற்றடியாகவோ கொண்டு ஒரு கவிதை
எழுதுங்களேன், ஸ்ரீராம்.
உறு வியப்பால் முறுவலித்தேன் -- என்ற வரியை முதல் வரியாகவோ, ஈற்றடியாகவோ கொண்டு ஒரு கவிதை
எழுதுங்களேன், ஸ்ரீராம்.
உறு வியப்பால் முறுவலித்தேன் -- என்ற வரியை முதல் வரியாகவோ, ஈற்றடியாகவோ கொண்டு ஒரு கவிதை
எழுதுங்களேன், ஸ்ரீராம்.
ஸார்... அது சீறாப்புராண வரி!
இல்லாத உலகத்து எங்கும் இங்கு இவன் இசைகள் கூறக்
கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்று அன்றே யார்கொல் இச் சொல்லின் செல்வன்
வில்லார் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடை வல்லானோ?
-- கம்பர்
சொல்லின் செல்வன் அன்றோ, அனுமன்?..
@ ஸ்ரீராம்
//..அது சீறாப்புராண வரி! //
அப்படியா?.. நல்லிணக்கமாய் இயல்பாய் எங்கிருந்து எதற்கு முடிச்சுப் போட்டிருக்கிறீர்கள்?
உறுவியப்பால் முறுவலிப்பார் என்கிற வரிகள் பள்ளியில் படிக்கும்போது செய்யுளில் படித்த வரிகள். மனதில் நின்ற வரிகள். எனவே அதை உபயோகித்தேன். சீறாப்புராணமோ என்று மனதில் நின்றாலும் இன்று கூகுளிட்டுத் தேடியபோது தேவாரம், பன்னிரு திருமுறைப் பாடல் என்று தெரிய வருகிறது. இது பள்ளியில் பாடத்தில் எனக்கு வந்திருந்தா என்று தெரியவில்லை.
பாடல் எண் பதினாறாக
விளங்குதிரு மதிக்குடைக்கீழ்
வீற்றிருந்து பாரளிக்கும்
துளங்கொளிநீண் முடியார்க்குத்
தொன்முறைமை நெறியமைச்சர்
அளந்ததிறை முறைகொணரா
அரசனுளன் ஒருவனென
உளங்கொள்ளும் வகையுரைப்ப
வுறுவியப்பால் முறுவலிப்பார்
http://thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1241&padhi=72&startLimit=16&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC
தொடர்ந்து வாசிக்கிறேன்.
@ Dr. B. Jambulingam
மிக்க மகிழ்ச்சி ஐயா. வாசிக்கையிலேயே வேறுபட்ட பார்வை ஏதேனும் தட்டுப்படின்
அதையும் குறித்திட வேண்டுலிறேன். பொது வாசிப்பில் அதை சரிப்படுத்தி திருத்திக் கொள்ளத துணையாக இருக்கும். தங்கள் ஏற்றுக் கொண்டிருக்கும்
சமீபத்திய ஆராய்ச்சிப் பணிகளுக்கு குந்தகம் ஏற்படாதவாறும் இருக்க வேண்டும்.
சுவாரஸ்யமான தகவல்கள்! ரசித்துப் படித்தேன்.
தொல்காப்பியம் பற்றிய சில இணைப்புகள் உங்கள் பார்வைக்கு:
https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2021/feb/21/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-3567698.html
https://www.youtube.com/watch?v=o_z0SDWpedE
@ மனோ சாமிநாதன்
தினமணி கட்டுரையை ஏற்கனவே ஸ்ரீராமும் அனுப்பி வைத்திருந்தார், சகோதரி.
திருக்குறளுக்கு முன்னான காலத்திற்கான வாசிப்பை பலர் கொள்வதில்லை. அதற்கான
காரணங்களும் உண்டு. இந்தப் பகுதியில் அது பற்றிச் சொல்வதாக இருக்கிறேன்.
காணொளிக் காட்சியையும் பார்த்தேன். இந்த மாதிரி வகுப்பு எடுக்கும் உரைகளைப் போல அல்லாமல் இந்தப் பகுதியை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே இந்தத் தொடர்.
வாசிக்கும் நீங்கள் தான் அது பற்றிச் சொல்ல வேண்டும்.
நம்ம சுஜாதாவும் தொல்காப்பியத்தை ஆராய்ந்திருக்கிறார் என்று வாசித்த நினைவு.
சுஜாதா என்றாலே ஸ்ரீராம் தான் அத்தாரிட்டி. அவரிடம் கேட்க வேண்டும்.
தாங்கள் வாசித்துக் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி, சகோ.
Post a Comment