
படுக்கையில் படுத்திருக்கையில்
தெளிவாய்க் கேட்டது
வெளியுலக உயிர்ப்புப் பிரதிநிதியாய்
டிக்டிக் கடியார ஓசை
உன்னிப்பாய்க் கவனிக்கையில்
உணரமுடிந்தது மின்விசிறி
சுழற்சி ஓசை
தெருவில் கிறீச்சிடும் வண்டியொலி
காற்றில் மிதந்து காதில் படிந்தது
ஜன்னல் சல்லாத்துணி மோதலில்
சன்ன படபடப்பாய் காற்றின் கீதம்
உந்தி விரிந்து சுருங்குகையில்
உள்மூச்சு வெளிமூச்சு கூட
உணரமுடிந்தது; ஆழ்ந்து இப்போது
உன்னிப்பாய் கவனித்தேன்
இதயஒலி கேட்கிறதா என்று
இல்லை என்பதே பதிலாயிற்று
மார்பில் கைவைத்து பார்க்கையில்
மனசில் உணரமுடிந்தது துடிப்பை
தன்னில் தானாய் என்னில் அதுவாய்
என்னுள் கலந்துபோன உயிரின் ஓசை
பிரயத்தனப்பட்டால் தான் உணர்வாய்
புரிகிறது என்னும் உண்மை புரிந்தது
என்னில் உறங்கும் உள்ளொளியும்
நான் எனும் சுயம் ஒழித்து
தன்னில் கரைந்தால் தான்
தட்டுப்படும் போலிருக்கு.