மின் நூல்

Monday, February 25, 2019

பரணிலிருந்து...

நம்மூர் கட்டிடம் வெறும் கோயில் இல்லை.  குதுப்மினார் மாதிரி தூண் இல்லை.  சிற்பம் பண்ணி வைக்கிற ஆர்ட் காலரி இல்லே. (ஜிஎம்பீ சார் கவனிக்கவும்).  மதம் பரப்பற இடம் இல்லே.  இது தத்துவம்.

கோபுர தரிசனம் பாவ விமோசனம்ன்னு சொல்லுவாங்க.. ஏன் ஒவ்வொரு  கோபுரமும் ஒரு யாகசாலை.  கீழே தாமரை மாதிரி இருக்கும்.  அது பத்மம்.  மேலே அரை உருளையா ஒரு இடம்.  அது குமுதம். --அதுக்கு மேலே பட்டை கல்லா இருக்கறது கண்டம்.  இதுக்கு மேலே வேதிகை.  அது நிக்கற இடம் கட்டிடம்.  யாக குண்டம் மாதிரி கட்டிடம்.     

அதுக்கு மேலே கோபுரம்.  என்ன மாதிரி? நெருப்பு மாதிரி.  தீ.... ஜூவாலை மாதிரி.  மேலே கும்பம்.  ஏன் யாக குண்டம் சிம்பாலிக்கா வைச்சான்?  அக்னியால் வளர்ந்து, அக்னியால் அழிந்து... எல்லா உடம்பும் யாக குண்டம்.   எல்லா உயிரும்  தீச்சுடர்.  தகதகன்னு எரிஞ்சிண்டிருக்கற உயிர்.  பூச்சி, புழு, ஆடு மாடு,  தாவரம் .., எல்லாம்,  ஏன், பூமி கூட  ஒரு யாக குண்டம் தான்.  சகலமும் அக்னி தான்.   அதான் அக்னியே தெய்வம். அக்னியை வழிபடறதாலே, எல்லா உயிரையும் வழிபட,  எல்லா உயிரையும் வணங்கற  தத்துவம் வர்றது.  எனவே அக்னி குண்ட  ரூபமா கோயில் கட்டியிருக்கிறான். சகலரையும், சகல் நேரமும்  தன்னை உட்பட வணங்கற தத்துவம் இது.  இதான் கோயில்.

=======================================================

பெரிய பெரிய  மன்னர்களும், முரட்டு தளபதிகளும், செல்வக் கோமான்களும்  காணாமல் போக, தமிழ்ச் சரித்திரம் 'யாயும்  ஞாயும் யாரா கியரோ' என்று  ஒரே ஒரு கவிதை
எழுதியவனை குறுந்தொகையோடு நினைவுக்குள் வைத்திருக்கிறது.   எல்லோர் வாழ்க்கையும் சரித்திரம் தான். சாதித்தவனுக்கு மட்டுமே சரித்திரம் என்பது முட்டாள்தனம்.

========================================================

விஷயம் நல்லதோ, கெட்டதோ ஒரு அலசல் செய்யத்
தோன்றுகிறது.  ரீ கலெக்ஷன் ஆஃப் தாட்ஸ், மனுஷனுடைய பெரிய சொத்து.   நடந்ததை நினைவுக்குக் கொண்டு வந்து யோசனை பண்ணத் தன்னைப் பக்குவப்படுத்திக்கறது மனுஷனுக்கு  மட்டுமே உண்டு.  மிருகம் மாதிரி சட்டென்று கோபமோ தாமமோ வந்துடறதில்லே.  வாலை மிதிச்சவுடனே பாஞ்சுடறதில்லே.  கோபப்பட்டா என்னாகும்னு நம்மாலே யோசிக்க முடியும்.  தொடர்ந்து யோசிக்கறவன் ஞானி.   முடியாதவன் மிருகம்.  யோசனை பண்ணினதின் விளைவு, ஏன் என்ற கேள்வி கேட்டதின்  பதில், இன்றைய வாழ்க்கை வளர்ச்சி.  அண்ணிலேந்து இன்னி வரைக்கும் மிருகத்திற்கு பசி தான் பிரச்னை.  நமக்கு ஆயிரம்.  வளர்ச்சின்னா இடைஞ்சல் உண்டு.  இடைஞ்சலைத் தாண்டறது தான் வளர்ச்சி.       
                                         
நாய்க்குட்டியை நிலைக்கண்ணாடிக்கு முன்னாடி வச்சா என்ன பண்ணும்?  நக்கிப் பாத்துட்டு திங்க முடியலேன்னு போயிடும்.  மனுஷன்னா அடடா, நான் இவ்வளவு அழகான்னு யோசிப்பான்.  தன் இருப்பும் தெரிந்து எதிர்ப்பக்கம் போய் தன்னையே பாத்துக்கற சுபாவம் வர்றது. நாய்க்குட்டிக்கு இருப்பு மட்டும் தான் முக்கியம்.  மனுஷனுக்கு இருப்பும் தொலைவும் உண்டு.  தொலைவுப் பார்வை இருக்கறதாலே வீடும், அரிசி சேம்ப்பும் அல்லது ஏதாவது
ஒண்ணு வந்துடறது. படருவதால், வளர்வதால் வரும் பிரச்னை.  படர்ந்த இடம் மரமோ, முள்ளுச் செடியோ, மலையோ, தரையோ அந்தந்த சூழ்நிலை, பிரச்னை  மனுஷனைச் சூழ்ந்திடறது.

=======================================================

மனிதனுக்கு சந்தோஷம் என்பது என்ன?

தன்னைப் பிறரிடம் உயர்த்திக் காட்டிக் கொள்ளுதலா?  எதையும் பிறரிடம் பகிர்ந்து கொள்ளுதலா?  எதையும் பிறரிடம் பகிர்ந்து கொள்ளுதலே சந்தோஷம்.   அந்தப்
பகிர்தலின் பொருட்டே உறவும்,  உறவுக்கான சந்தோஷமும்.

பகிர்ந்து கொள்ள மறுப்பவன் பயமுள்ளவன்.

'தனிமை கண்டதுண்டு;  அதிலே சாரமிருக்குதம்மா' என்கிற த்வனியிலேயே  ரகசியம் பரிமாறும் உணர்வு இருக்கிறது.

=======================================================

சகல உயிர்களுக்கும் உணர்வு ஒன்றே.  வலி பொது.  காமம் பொது.  உயிர் வாழும் விழைவு பொது.  மரணம் பொது.

மாறுதல்களை மனிதன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.  எந்த மாறுதலும் இவனை அழிக்காது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.  அத்தனை மாறுதலிலும் புகுந்து மீளும் திடம்
இவனுள் உண்டு என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

புயல் வருகிற பொழுது புயலோடு வாழுங்கள்.  புயலற்ற பொழுது அமைதியை அனுபவியுங்கள்.  புயலோடு உண்டான போராட்டமே வாழ்க்கை என்றோ,  அமைதியே உலகமென்றோ கனவு  காணாதீர்கள்.  அமைதியான நேரத்தில் புயல் கவலையும், புயல் நேரத்தில் அமைதி பற்றிய கனவும் உங்களைச் சிக்கலாக்கி விடுகிறது.

=========================================================

புதுபுது அனுபவம் முக்கியம்  உலகில் எந்த இயக்கமும், எந்த பாலிஸியும், எந்த தத்துவமும் முடிவான முடிவல்ல.   வாழ்க்கை நகர்ந்து கொண்டே இருப்பது.  வளர்ந்து கொண்டே இருப்பது.  எப்போதும் வளர முடியும்.

வளர்ச்சி எது?  மாறுதலே வளர்ச்சி.  மாறாதது வளராது.

எது மாறும்?  உயிருள்ளது அனைத்தும் மாறும்.  உயிர்ப்புள்ளது அனைத்தும் மாறும்.   மாற மாட்டாதவன் கல்மரம். டெட் வுட்.

======================================================
"ஒரு பத்திரிகை நிருபருக்கு அன்னியமானது எதுவுமில்லை. அவன் தொடாத விஷயம் எதுவுமில்லை.  மனிதன் சம்பந்தப்பட்ட எல்லா விஷ்யமும் பத்திரிகை சம்பந்தப்பட்டது.  மக்களைப் போய்ப்பார்.   நாலு வர்ண ஆட்களோடும் பேசு"

"நாலு வர்ணமா?... பிராமண, ராஜ,  வைசிய..."

"இல்லை.. இல்லை.. இது வேறு.  உண்மையில் இதில் ஐந்து வர்ணம்.  புவர் கிளாஸ்,  லோயர் மிடில் கிளாஸ், மிடில் கிளாஸ்,  ரிச்,  வெரி ரிச்..  ஜாதி அழியாது, கல்யாணி.. ஏதோ ஒரு விதத்தில் அது மனிதரிடையே இருக்கும்..  இன்னொண்ணு.  இனாமா எதுவும் கிடைக்காது, கல்யாணி.. கிடைத்தால் ஏற்பதும் இழிவு.  உலக இயக்கம் முழுவதும் பண்டமாற்றல் நடைபெறுவது சாதாரண பார்வைக்கே புரியும்.."

========================================================

இதுவும் கூடல் தான் தமிழ் மகளே.. என்னோடு நீ நடத்துகிற பெண்ணுரிமை விவாதங்களும், சமூக நலச் சண்டையும் கூடல் தான்.  பார்த்துப் பார்த்துச் செய்கிற உதவிகள் கூட சுகம் தான்.  ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள இந்த பரஸ்பர ஈர்ப்பு இனி கடவுளாலும் நிறுத்த முடியாது.  கூடலில் உள்ள சுகத்தை உலகம் ஒருபோதும் மறக்காது.  துறவு பொய், கல்யாணி..   வன்முறை அது.

பழகு.. கலந்து பழகு.. மனசுக்குப் பிடித்தவனோடு வெளியே போ.. கை கோர்த்து நட.. காதல் செய்.  உருகு.  கவிதை படி. கண் இறங்கி கனவு காண்... காமம் பழகு.. இயல்பாய் இரு. இயற்கைக்குத் தலைவணங்கு.

=========================================================

"இரண்டு கை தட்டினா சத்தம்.  கை தட்டறது எதுக்கு?  எல்லார் கவனமும் என்னைப் பாருன்னு கூப்பிடறதுக்கு.  பார்த்தவன்  யாரு உதவப் போறான்?  கூச்சல் புண்ணியமே இல்லை, ஈஸ்வரி.."

"கோபத்தை எப்படிக் காட்டறது?"           

"ஏன் கோவம்?  நீ நினைச்ச மாதிரி நடக்கலைன்னு தானே..
இன்னிக்கு மழை பெய்யணும்ன்னு நினைச்சா நடக்குமா?  இன்னிக்கு காத்து கூட வேணும்னா வருமா?.. இல்லை.. நாம் நினைக்கிற மாதிரி நடக்கறதில்லே.. அதுவா ஏதேதோ நடக்குது.. சில சமயம் நடக்கற போது, நினைச்சிக்கறோம்.  ஆகா, நினைச்சது நடந்திருச்சின்னு குதிக்கறோம்.  இரண்டு தடவை குதிச்சிட்டு   மூணாவது தடவை நினைச்சிக்கறோம்.   நடக்கலைனா, கத்தறோம்.   இது நடைமுறை.. தத்துவமல்ல.

=================================================

 
                                                           ------   பாலகுமாரன்


Sunday, February 24, 2019

பாரதியார் கதை --30

                                                 அத்தியாயம்-- 30

'
'உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்து உடம்பை வளர்த்தேன்;  அதனால் உயிரையும் வளர்த்தேனானேன்'.. என்ற அர்த்தத்தில் யோகி திருமூலரின் வரி ஒன்று பத்தாம் திருமுறையில் உண்டு.
                                                                                                       
உடம்பும் உயிரும் வெவ்வேறு இல்லையாயினும் உடம்பை ஓம்பும் வழிமுறைகளை அனுசரிக்கவில்லை எனில், அதுவே மொத்த இயக்க சக்தியையும் பாதிக்கும் அளவுக்குக் கொண்டு போய் விடுகிறது.

பாரதியாரின்  உள்ளத்தில் திண்மை இருந்தாலும் அதற்கேற்பவான உடல் ஒத்துழைப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்தது.

ஆந்திர கேசரி ஸ்ரீமான் டி.பிரகாசம் அவர்களின் தம்பி டி. ஜானகிராமன் என்ற ஹோமியோபதி மருத்துவர் தான்  அவ்வப்போது பாரதியாரின் வீட்டுக்கு வந்து மருந்துகள் கொடுத்துக் கொண்டிருந்தார்.   நாளடைவில் மருந்து சாப்பிடுவதை அறவே வெறுத்தார் பாரதியார்.  மருத்துவர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் பாரதியார் மசிந்து கொடுக்கவில்லை.  மருந்துகளை மறுப்பதைப் பிடிவாதமாகக் கொண்டிருந்தார்.    ஆகாரம் கஞ்சி தான்.  கஞ்சியும் வற்புறுத்தி கொடுக்க நேர்ந்தது.   அதுவும் கொஞ்சமே கொஞ்சம் தான் எடுத்துக் கொள்வதாக இருந்தது.

1921-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி.  அன்றைய இரவு வழக்கம் போல் வரும் இரவுகள் மாதிரி அந்தக் குடும்பத்திற்குத் தெரியவில்லை.  "சகுந்தலா! நீ மருந்து கொடுத்தால்  ஒருவேளை கோபிக்காமல் அப்பா சாப்பிடுவார்.." என்று  என் தாயார் என்னை மருந்து எடுத்துக் கொடுக்கச் சொன்னார்.  மங்கலான விளக்கு வெளிச்சம். நான் மருந்து என்று நினைத்து பக்கத்தில் கிளாஸில் வைத்திருந்த பார்லித் தண்ணீரை எடுத்து அப்பாவிடம் கொடுத்தேன்.   மருந்து வேண்டாமென்றார்.  உடனே அவர் மனதில் என்ன தோன்றியதோ என் கையிலிருந்த கிளாஸை வாங்கி ஒரு வாய் குடித்தார்.  'பாப்பா!  நீ கொடுத்தது மருந்து இல்லைம்மா.. கஞ்சி..." என்று சொல்லி விட்டு கண்களை மூடிக் கொண்டார்.  எனக்கு மறுபடியும்  அவரை ஹிம்சை பண்ணி மருந்து கொடுக்க மனமில்லை.  அப்படியே வெளியே வந்து கூடத்தில் படுத்தேன். தூங்கிவிட்டேன் போலும்.." என்று பாரதி பெண் சகுந்தலா 'பாரதி என் தந்தை' என்ற தம் நூலில் சொல்கிறார்.                                                                     

பாரதியின் மூத்த மகள் தங்கம்மா தன் பெரிய தாயாரின் பராமரிப்பில் காசியில் வளர்ந்தவர்.   அவருக்கு இளமையிலேயே திருமணம்.  மைசூரில் குடும்பத்துடன் இருந்தார்.

பாரதி இறுதி காலத்தில் அருகில் இருக்க முடியாது போன இன்னொருவர் யதுகிரி;  பாரதியின்  அருமை நண்பர்  ஸ்ரீநிவாச்சாரியாரின் மகள்.  சிறுமியாக  இருந்த யதுகிரிக்கு பாரதி தந்தையே போலவாகிறார்.

தந்தை போலவாகிறார்  என்றதும் நினைவுக்கு வருகிறது.  யதுகிரிக்கு திருமணமாகி மைசூரிலிருந்த  புகுந்த வீட்டிற்குப் புறப்படும் போது யதுகிரிக்கு ஆசி கூறி  தந்தை ஸ்தானத்திலேயே  பாரதி சொல்கிறார்:

"யதுகிரி!  நீ இரண்டு வீட்டிற்கும் விளக்கைப் போலப்  பிரகாசிக்க வேண்டும்.  இரண்டு குடும்ப வாழ்க்கை கலப்பது முதலில் கஷ்டமாகத்தான் இருக்கும்.  பழகியபின் வழக்கமாகி விடும்.  கேவலம், அடிமைத்தனத்திற்கு ஒத்துக் கொள்ளாதே.  உனக்கு உரிமை உண்டு; புத்தி உண்டு ; ஸ்வந்திரம் உண்டு.  தலைநிமிர்ந்து நட.  உன் இருபுறமும் உள்ள இயற்கையைக் கண் குளிரப் பார்.  நேர்ப் பார்வையில் பார்.  கடைக்கண் பார்வையில் பார்க்கத் தகுந்தவன் கணவன் ஒருவனே.  தந்தை, சகோதரர்கள், பிள்ளைகள் முதலியோரை நிமிர்ந்து பார்.  இவர்களைக் கடைக் கண்ணில்  பார்க்காதே...  நிமிர்ந்து உட்கார்.  பேசுவதை ஸ்பஷ்டமாகப் பேசு; தைரியமாகப் பேசு.   இதில் கற்பு கெடுவதில்லை.  மேலுக்கு வேஷம் அவசியம் இல்லை.'

பாரதியின் இந்த உபதேசம் கூட யதுகிரி சொல்லி நமக்குத் தெரிந்தது தான்.    ஒரு சிறுமியின் சிந்தனையில் ஒரு மகாக் கவிஞனைக் காணும் கிளாசிக் படைப்பு  'பாரதி நினைவுகள்' என்ற இவரது புத்தகம்.  பாரதி பற்றி எழுதித் தாருங்கள் என்று யாரோ கேட்க  1939-ல் யதுகிரி எழுதிய  நூறு பக்கங்களுக்குக் குறைவான இநதப் புத்தகம் அதற்குப் பிறகு பதினைந்து ஆண்டுகள் கழித்து வெளிவருகிறது.  இந்தப் புத்தகம் வெளிவந்த பொழுது யதுகிரியும்  உயிரோடில்லை.


யதுகிரியிடம் செல்லம்மா சொல்வதாக இந்தப் புத்தகத்தில் சில செய்திகள் வருகின்றன.  'யதுகிரி!  அவர் பிராணன் போகுமுன் கூட, 'செல்லம்மா,    யதுகிரி எங்கே இருக்கிறாள்?' என்று விசாரித்தார்.  நீ மைசூரில் இருப்பதாகச் சொன்னேன்.  'எவ்வளவு குழந்தைகள்?' என்று  கேட்டார்.  நம்மைப் போல் இரண்டு பெண்கள் என்றேன்.   உன்னைப் பார்க்க வேண்டும் போல் இருப்பதாகச் சொல்லி விட்டு, 'அவள் இப்போது எங்கே வருவாள்?  எங்காவது நன்றாக இருக்கட்டும்.  காலை சீக்கிரம் சமைத்து விடு.  எட்டு மணிக்கெல்லாம் ஆபிஸுக்குப் போக வேண்டும்' என்றார்.

 அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லியிருந்தார் பாரதியார்.  நடுவில் மித்திரனிலிருந்து யாரோ பார்க்க வந்திருந்த பொழுது கூட நான் இரண்டு மூன்று நாட்களில்  அலுவலகத்திற்கு வந்து விடுவேன் என்று நிச்சயமாகச் சொல்லியிருக்கிறார் பாரதியார்.                 


பாரதி தீர்க்கதரிசி.  இன்றும் அவன் நம்மிடையே தான் உலா வருகிறான்.  கவிதை, கட்டுரை, காதல்,  தேசப்பற்று,  சுதந்திர உணர்வு,  தமிழின் செம்மாந்த நடையழகு என்று எதைத் தொட்டுப் பேசவோ, எழுதவோ நினைத்தாலே பாரதி நம்மைத் தொட்டுக் கொண்டு பக்கத்தில் அமர்ந்து விடுவான்.   முண்டாசும் மீசையுமாய் அவனது ஆசை முகம் நமக்கு மறக்கவே  மறக்காது.  நெஞ்சில் நினைவுகளில் பதிந்தவனை  மறப்பதும் சாத்தியமில்லாத விஷயம்.  அவன் சிரஞ்ஜீவித்துவத்தின் மகிமை அது.

பாரதி புகழ் ஓங்குக.. 

பைந்தமிழ்த் தேர்ப்பாகனின் சிந்தனைகள் வளர்க! வளர்கவே!


=======================================================

பாரதியின் படைப்புகளைத்  தேடித் தேடித் தொகுத்து தந்த பாரதி அன்பர்  ஸ்ரீமான்  சீனி. விஸ்வநாதன் அவர்களுக்கு நன்றி.   பாரதிப் பயிலகம் தஞ்சை வெ. கோபாலன் அவர்களுக்கு நன்றி.

பாரதியின் ஆக்கங்களின் மேல்  தீராத காதல் கொண்டுள்ள
பாரதி அன்பர்களுக்கு நன்றி.



Thursday, February 21, 2019

பாரதியார் கதை --29

                                        அத்தியாயம்-- 29


ரோடு வாய்க்கால் கரை பகுதியில் 'இந்தியாவின் எதிர்காலம்' என்ற தலைப்பில் உரையாற்றிய பாரதி அடுத்த நாளே சென்னை திரும்பி விடுகிறார்.

அன்றே அலுவலகமும் செல்கிறார்.  இரண்டு நாட்கள் ஊரில் இல்லாததின் பிரதிபலிப்பாய் அன்று வேலை பளு கொஞ்சம் கூட என்று தான் சொல்ல வேண்டும்.  அன்றாட பத்திரிகைச் செய்திகளுக்கான பணிகளூடே, தான் ஈரோடு சென்று வந்த விஷயத்தை வாசகர்களுக்குத் தெரியப்படுத்தும் விதமாக 'எனது ஈரோடு யாத்திரை' என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரையையும் தயாரிக்கிறார்.

பாரதியாரின் எழுத்து நடை வாசிக்க சுகமானது.  அந்தச் சுகத்தை இந்தத் தொடரை வாசிக்கும் அன்பர்களும் பெற வேண்டி பாரதியின் அந்தக் கட்டுரையை அப்படியே இங்கு தருகிறேன்.

1921-ம் ஆண்டு ஆகஸ்ட் 4 என்று தேதியிட்ட அந்தக் கட்டுரை இதோ:

                        என் ஈரோடு யாத்திரை

4  ஆகஸ்ட் 1921

ஈரோட்டுக்குப் போய்ச் சேர்ந்தேன்.  அது கொங்கு நாடு. ஆனால், அதற்கும் தென்பாண்டி நாட்டிற்கும் யாதொரு வேற்றுமையும் தென்படவில்லை.   ஸ்வேதேசீய நிகழ்ச்சி தோன்றிய  காலம் முதலாக தமிழகத்தின் உட்பகுதிகளுக்கிடையே உள்ள அக வேற்றுமைகள் குறைவுபட்ட காரணத்தாலே புற வேற்றுமைகளும் குறைவு படுகின்றன.

இதற்கு 'சுதேசமித்திரன்' முதலிய பத்திரிகைகள் பெரிதும் உதவி புரிந்தன என்பது நிச்சயம்.

கட்டை வண்டி ஒன்று கிடைத்தது.   கட்டை வண்டியில் ஒரு மனிதன் நிமிர்ந்து உட்கார இடமில்லை.  ஒன்றரை அடி நீளம். மாடு ஒரு சிறு பூனைக்குட்டி போன்று இருந்தது.  நான் ஒன்று; வண்டிக்குடையவன்  இரண்டு;  அவனுக்குக் கீழே கூலிக்கு வண்டி ஓட்டும் சிறுவனொருவன்; எங்கள் மூவரையும் மூன்று பர்வதங்களாக நினைத்து அந்த மாட்டுப் பூனை இழுத்துக் கொண்டு போயிற்று.

அரைமைல் தூரத்தில் உள்ள கருங்கல் பாளையத்தில் எனக்கு வேலை.  அங்கு ஒரு சிநேகிதருடைய அழைப்பிற்கிணங்கிச் சென்றிருந்தேன்.  கருங்கல் பாளையத்துக்குப் போய்ச் சேரு முன்னே மாடு வெயர்த்துப் போய்விட்டது.  அதன் மேலே குற்றஞ் சொல்வதில் பயனில்லை. அது சிறு ஜந்து. அதன் மேலே நாங்கள் மூன்று தடி மனிதரும் ஒரு கழுத்தளவுக்குச் செய்யப்பட்ட விதானத்தை உடைய வண்டியும் சவாரி பண்ணுகிறோம்.

ஏறக்குறைய இரண்டு மணி நேரத்துக்குள்ளே கருங்கல் பாளையம் என்ற கிராமத்துக்குப் போய்ச் சேர்ந்தேன். அந்த கிராமத்தில் ஆண் மக்கள் எல்லோரும் மஹா யோக்கியர்கள்;  மஹா பக்திமான்கள்.  புத்திக்  கூர்மையிலும், சுறுசுறுப்பிலும், தேசாபிமானத்திலும் மிகவும் பாராட்டுக்கு உரியவர்கள்.

இவர்களுடன்  ஸல்லாபம் எனக்கு எல்லா வகைகளிலும் இன்ப மயமாக   இருந்தது.
                                                                                                   
அங்கே ஒரு புஸ்தகசாலை இருக்கிறது.  வாசகசாலை.  அதன்  காரியதரிசி ஒரு வக்கீல். மிக நல்ல மனிதர். மஹா புத்திமான்; தேசபக்தியில் மிகவும் பாராட்டுக்குரியவர்.

அந்த வாசகசாலை அவ்வூராரை நாகரிகப்படுத்துவதற்குப் பெரியதோர் சாதனமாக விளங்குகிறது.   அதனால் அவ்வூருக்குப் பலவித நன்மைகள் ஏற்பட்டு வருகின்றன என்பதை கனம் நரசிம்மையர்  (சேலம் வக்கீல்)  ஸ்ரீமான் வரதராஜூலு நாயுடு, ஸ்ரீ கல்யாணசுந்தர முதலியார் முதலிய முக்கியஸ்தர்கள் தம் நற்சாஷிப் பத்திரங்களாலே தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த சபையின்  வருஷோதஸ்வக் கூட்டத்திற்கு நான் போய்ச் சேர்ந்தேன்.  என்னை ஒரு பிரசங்கம் பண்ணச் சொன்னார்கள். எனக்கு ஒரு விஷயம் தான் முக்கியமாகத் தெரியும்.  அதையே அங்கும் எடுத்துப் பேசினேன். அதாவது இந்த உலகத்தில் மானுடர் எக்காலத்திலும் மரணமில்லாமல் இருக்க கூடுமென்ற விஷயம்.

ப்ரஹ்லாதனைப் போன்ற தெய்வ பக்தியும், மன்மதனைப் போன்ற ஏக பத்தினி விரதமும் ஒருவன்  கைக்கொண்டு இருப்பானாயின், அவன் இந்த உலகத்திலேயே ஜீவன் முக்தியடைந்து, எல்லா அம்சங்களிலும் தேவ பதவி எய்தியவனாய், எப்போதும் மகிழ்ச்சி கொண்டிருப்பான் என்பது என்னுடைய கொள்கை.  இந்தக் கொள்கையை நான் வேத புராண சாஸ்திரங்கள், இதர மத நூல்கள், ஐரோப்பிய ஸயன்ஸ் சித்தாந்தங்கள், ஸ்ரீமான் ஜகதீஸ்சந்திர வஸுவின் முடிபுகள் என்னும் ஆதாரங்களாலே ருஜூப்படுத்தினேன். அங்குள்ள பெரிய வித்வான்கள்  எல்லோரும் கூடி என்னுடைய  தர்க்கத்தில் யாதொரு பழுதுமில்லையென்று அங்கீகாரம் செய்து கொண்டனர்.

பிறகு மறுநாள்  ஈரோட்டுக்கு வந்து வாய்க்கால் கரையில் ஒரு பொதுக்கூட்டத்திலே, 'இந்தியாவின் எதிர்கால நிலை'  என்ற விஷயத்தைக் குறித்துப் பேசும்படி கேட்டுக் கொண்டார்கள்.  நான் உடன்பட்டேன்.  மறுநாள் கூட்டத்தைப் பற்றிய விஷயங்களை விவரித்துக் கொண்டு போனால் இந்த வியாசம் மிகவும் நீண்டு போய்விடும்.  ஆதலால் இன்று இவ்வளவோடு நிறுத்தி மற்றை நாள் சம்பவங்களைப் பற்றி நாளை எழுதுகிறேன்'  என்று பாரதியின் கட்டுரை முடிகிறது.

'மற்றை நாள் சம்பவங்களைப்  பற்றி நாளை எழுதுகிறேன்'  என்று சொல்லியிருக்கிறாரே,   கருங்கல்பாளையம் வாசகசாலை  சொற்பொழிவு கிடைத்த மாதிரி, வாய்க்கால்கரை சொற்பொழிவும் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் கடந்த பதினைந்து நாட்களாக தேடித் தேடி சோர்ந்து போனேன்.   கன்னிமாரா நூலகத் தேடலிலும் கிடைக்கவில்லை.  ஆனால் வாய்க்கால்கரை சொற்பொழிவின் அதே தலைப்பில் 'இந்தியாவின் எதிர்கால நிலை'  பற்றி ஈரோடு கூட்டங்களுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு பாரதி திருவண்ணாமலையில் பேசியிருக்கிறார் என்று தெரிய வருகிறது.  அந்தப் பேச்சின் குறிப்பு மாதிரியான  சுதேசமித்திரனில் வெளிவந்த செய்தி தான் இப்பொழுது கிடைக்கப் பெறுகிறது.

'திருவண்ணாமலையில்  ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி' என்னும் தலைப்பில் காணப்படும் செய்தியில் பாரதியார் இரு  பொதுக்கூட்டங்களில் திருவண்ணாமலையில் பேசியதாகத் தெரியவருகிறது.    மே 2-ம் தேதி அருணாசலேஸ்வரர் கோயில் எதிரில் 'இந்தியாவின் எதிர்கால நிலைமை' என்னும் தலைப்பில் பேசியது பற்றி  கீழ்க்கண்ட குறிப்பு காணப்படுகிறது.

'நமது வேதங்களில் வெகு நாளைக்கு முன்பாக கூறப்பட்டுள்ள  ஏகை சுபாவம் என்னும் தத்துவத்தைக் கொண்டு நம் பாரத நாட்டின் எதிர்கால நிலைமை சீர்படுத்தப்பட வேண்டும் என்றும் தேசிய விடுதலை அல்லது ஸ்வராஜ்யத்திற்கு இந்த மார்க்கமே தக்க கருவியாய் இருந்து இந்தியாவே அதற்குத் தலைமை ஸ்தானம் வகிக்க வேண்டுமென்றும் இந்தியாவின் விடுதலைக்கு எதிரியாய் உள்ளவர்களையெல்லாம் கடவுள் சரியானபடி தண்டித்து வருகிறார் என்றும் கூடிய சீக்கிரத்தில் நாம் விடுதலையடைவோம்' என்றும் ஸ்ரீ பாரதியார் பேசினார்.  ஊரெங்கும் இப்பிரசங்கம் ஒரு மகத்தான பரபரப்பை உண்டாக்கி விட்டதென்று ஒரு நிருபர் தந்தி மூலம் அறிவிக்கின்றார்' என்று அந்தச் செய்தி சொல்கிறது.

பாரதியார் பேசிய இரண்டாவது பொதுக்கூட்டம்  3-ம் தேதியன்று அருணாசலேஸ்வரர் கோயில் பதினாறுகால் மண்டபத்தில் நடைபெற்றது.  இங்கும் இந்தியாவின் எதிர்கால நிலைமை' என்னும் தலைப்பில் பேசினார்.  'இராஜீய ஞானத்தில் இனி ஒப்புமையில்லை என்று சொல்லும்படியாக மகாத்மா காந்தி இந்தியாவில் தோன்றி இருக்கிறார்.  விஷயங்களைக் கற்றுக் கொண்ட வகையில் இந்தியா சிஷ்யனாக இருந்தும் இனிஆச்சாரியனாக இருக்கும் பதவியை வகிக்க முன் வந்து விட்டது.

திருவண்ணாமலைக்கு பாரதியார் சென்ற பொழுது மலையேறி ரமண மகரிஷியைப் பார்க்கச் சென்றதாகவும் சுமார் ஒரு மணி நேரம் அவர் ரமணர் முன் உட்கார்ந்திருந்தார் என்றும் தெரிய வருகிறது.

பாரதி ஆங்கில மொழியிலும்  நிறைய எழுதியிருக்கிறார்.  வேத  துதிப்பாடல்களில் சிலவற்றையும்,  ஆழ்வார்களின் பாசுரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றையும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.  ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பும் சரி,  நேரடியான அவரது  ஆங்கிலக் கட்டுரைகளும் சரி, அந்த மொழியில் அவர் பெற்றிருந்த புலமையைப் பறைசாற்றும்.    தனது சில கவிதைகளையும் ஆங்கில மொழியாக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கிறார்.   எல்லாவகைகளிலும் நவீன தமிழிலக்கியத்தின் தொடக்கப் புள்ளியாய் பாரதி திகழ்ந்திருப்பது தெளிவு.

The Fox with the Golden Tail  கேலியும் கிண்டலுமாய் பாரதி எழுதிய நூல் அந்நாட்களில் மிகவும் பேசப்பட்ட ஒன்று.  மாதா மணிவாசகம்  என்ற  பாரதியின் நூல் தென்னாப்பிரிக்காவில் பிரசுரமாகி வெளிவந்தது ஒரு அதிசய தகவல் என்றால் டர்பனி ல் இருந்த அந்த அச்சுக்கூடத்தின் பெயர் சரஸ்வதி  விலாசம் என்பது இன்னௌரு வியப்பு!

பாரதியின்  ஆங்கில ஆக்கத்தில் 'பாயும் ஒளி நீ எனக்கு'  பாட்டொளி வீசி படபடக்கிறது, பாருங்கள்:

Thou to me the flowing light
And to thee discerning sight;
Honied blossom thou to me
Bee enchanted I to thee;
O heavenly lamp with signing ray,
O  Krishna,  Love  O nectar-spray
With falt'ring tongue  and words that pant
Thy glories here, I  strive to chant

பாரதி அன்பர் வயி.ச. ஷண்முகம்  செட்டியாருக்கு தன் நூல்களின் பிரசுரம்  பற்றி பாரதி எழுதிய கடிதமொன்று  தன் படைப்புகளின் பிரசுர விஷயத்தில் அவர் எவ்வளவு கவனம் கொண்டிருந்தார் என்பதைச் சொல்லும்.

' ஸ்ரீமான் வயி.சு. ஷண்முகம் செட்டியாருக்கு ஆசிர்வாதம்.

பகவத்கீதையில் அச்சுக்கு விரைவில் கொடுங்கள்.  தங்களுக்கு இஷ்டமானால் அதற்கு நீண்ட விளக்கம் எழுதி  அனுப்புகிறேன்.  நீண்ட முகவுரையும் எழுதுகிறேன்.

கீதைக்கு புஸ்தக விலை--ரூ1/-க்கு குறைத்து வைக்க வேண்டாம்.  தடித்த காயிதம், நேர்த்தியான அச்சு, பெரிய எழுத்து, இட விஸ்தாரம் -- இவை கீதைக்கு மட்டுமின்றி நாம்  அச்சிடப் போகும் எல்லா புஸ்தகங்களுக்கும் அவசியம்.  ஆங்கிலக் கவிகள், ஆசிரியரின் காவியங்களும் கதைகளும் இங்கிலாந்தில் எப்படி அச்சிடப்படுகிறதோ அப்படியே நம் நூல்களை இங்கு அச்சிட  முயல வேண்டும்.  அங்ஙனம் அச்சிட  ஒரு ரூபாய் போதாதென்று அச்சுக்கூடத்தார் அபிப்ராயம் கொடுக்கும் பஷத்தில்  புத்தக விலையை உயர்த்துவதில் எனக்கு யாதோர் ஆஷேபமுமில்லை.

பாஞ்சாலி சபதத்திற்கு முகவுரை இன்னும் இரண்டொரு நாட்களில் அனுப்புகிறேன்.

தம்பீ, இந்த பாஞ்சாலி சபதம் இரண்டாம் பாகம்   கையெழுத்துப் பிரதி  அனுப்பியிருப்பதை சோம்பலின்றி   தயவுசெய்து முற்றிலும்  ஒருமுறை படித்துப் பாருங்கள்.  பிறகு அதை மிகவும் ஆச்சரியமாகவும் அழகாகவும் அச்சிடுதல் அவசியம் என்று தங்களுக்கே விசதமாகும்.

புதுச்சேரியில் (பாடிய) பாட்டுக்கள் அனைத்தையும் இங்கே குழந்தை தங்கம்மா தன்னுடைய நோட் புக்குகளில் எழுதி வைத்திருக்கக் கண்டு அதை புதையல் போல் எடுத்து
வைத்திருக்கிறேன்...' என்று தாமும் ஒரு குழந்தை போலக் குதூகலிக்கிறார்.

பாரதியின்  தமிழ்  மொழிக்கான  சிறுகதைப்  பங்களிப்பையும் சொல்ல வேண்டும்.
வ.வே.சு. அய்யரின் 'குளத்தங்கரை அரசமரம்' கதையையே தமிழின் முதல் சிறுகதை என்று பொதுவாகச் சொல்லி வருகிறோம்.  ஆனால் தமிழ்  மொழியில்,   'குளத்தங்கரை அரசமரம்'  வெளிவருவதற்கு  முன்னாலேயே வெளிவந்த பாரதியின்  படைப்புகளான இரு கதைகளைப் பற்றி குறிப்பிட வேண்டும்.

பாரதி, ஷெல்லிதாஸ் என்ற புனைப்பெயரில் சக்கரவர்த்தினி இதழில் எழுதிய  'துளசீபாயி  என்ற ராஜபுத்திர கன்னிகையின் கதை'யை மறந்து விட முடியாது.  இக்கதை வெளிவந்த பொழுது சத்தப்படாமல் நிகழ்ந்த ஒரு புதுமையை இப்பொழுது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது.  அந்த பத்திரிகையின் இதழுக்கு இரண்டே பக்கங்களாய் அச்சாகி     ஐந்து இதழ்களுக்கு இந்தக் கதை  தொடர்ந்திருக்கிறது.  1905 நவம்பர் இதழில் தொடங்கி 1906 ஜூலையில்  நிறைவடைந்திருக்கிறது.  இடையே சில இடைவெளிகளும் உண்டு.   கிட்டத்தட்ட 12 பக்கங்கள் இருக்கும்.  கதையின் போக்குக்கு இடையே ஒரு கவிதை,  நாடக பாணியில் கொஞ்சம்,  ஜெகப்பிரியனாரின் மேற்கோள் ஒன்று என்று பிரமாதப்படுத்தியிருப்பார் பாரதி.  தமிழில் ஒரு சிறுகதைக்கான கன்னி முயற்சி என்று தாராளமாய் சொல்லலாம்.

ஆனால் புதுவையில்   பாரதி மூணணா விலையில் 'ஆறில் ஒரு பங்கு-- ஒரு சிறிய  கதை' என்ற தலைப்பில் 1910-ல்    வெளியிட்ட நூல்  ஒரு நாவலுக்குரிய  கருப்பொருளைக் கொண்டிருந்தாலும்  சிறுகதையின் அம்சங்களைக் கொண்டிருக்கிற நூல் என்றே சொல்லலாம்.  வெளிவந்த சில மாதங்களில் 'ஆறில் ஒரு பங்கு'  ஆங்கில அரசால் தடை செய்யப்படுகிறது.  தடையை நீக்க 'தி ஹிந்து' பத்திரிகையின் ஆசிரியருக்குக் கடிதங்கள் பகுதிக்கு 1912- ஆகஸ்ட்டில் ஒரு கடிதம் எழுதுகிறார் பாரதி.

'ஆறில் ஒரு பங்கு' நூலின் அர்ப்பணமே அட்டகாசம்!  நூறு ஆண்டுக்களுக்கு முன்னால் நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாத புரட்சி இது!தமிழின் முதல் சிறுகதை என்றால் நியாயப்படி பாரதியின் 'ஆறில் ஒரு பங்கு'  தான்!  ஏனோ விமரிசகர்கள் தமக்கே உரித்தான அளவுகோல்களை நீட்டி சட்டாம்பிள்ளைத்தனமாக,  பாரதியின் ஆ.ஒ.பங்குக்கான சிறுகதைத் தகுதியை மறுத்து, வ.வே.சு. அய்யரின் 'குளத்தங்கரை அரச மரம்'  சிறுகதைக்கே அந்தப் பெருமையைச் சேர்க்கின்றனர்.

பிற்காலத்து சுஜாதாவுக்கு முன்னோடியாய்  வ.வே.சு. அய்யரை புனைப்பெயர் விஷயத்தில் சொல்லலாம்.  1915-ல் விவேகபோதினி என்ற இதழில் தன் மனைவி பாக்கியலஷ்மி பெயரில் 'குளத்தங்கரை அரசமரம்' கதையை அய்யர் எழுதியிருக்கிறார்.  ஒரு விதத்தில் தாகூர் கதையொன்றின் பாதிப்பின் சாயலும் இந்தக் கதையில் புலப்படும்.

அணையும் விளக்கின் பிரகாசமாய் ஆகஸ்ட் சென்றது.  செப்டம்பர்  பிறந்து மாதத்தின் முதல் நாளன்றே சுதேசமித்திரன் அலுவலகம் செல்ல முடியாமல் பாரதியின் உடல் நிலை பாதித்தது.  தொடர்ச்சியாக வெளியூர் பயணமா,  கூட்டங்களில் பேசியதா,  வேலைப்பளுவா என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத நிலையில் வயிற்றுப் போக்கு தொந்தரவில் பாரதியார் பாதிக்கப்பட்டார்.

(வளரும்)

Saturday, February 2, 2019

பாரதியார் கதை --28

                                          அத்தியாயம்-- 28


 பாரதியை  ஈரோடு ரயிலடியில் பார்த்து அழைத்து வரச் சென்றிருந்த ச.து.சுப்பிரமணியனுக்கு அன்று மாலை பாரதி பேசவிருந்த சொற்பொழிவின் தலைப்பே சுவாரஸ்யமாக இருந்தது. 'மனிதனுக்கு மரணமில்லை' யாமே?..  அப்படி என்ன தான் அந்த மீசைக்காரர் இந்தத் தலைப்பில் பேசி விடப் போகிறார் என்று தெரிந்து கொள்ளும் ஆவலிலேயே வக்கீல் தங்கப்பெருமாள் பிள்ளையுடன் இவரும் போயிருந்தார்.

பாரதியின் பேச்சைக் கேட்கப் போனவருக்கு மேடையில் பாரதி உட்கார்ந்திருந்த தோரணையே மனசு பூராவும் வியாபிக்கிறது.  பாரதி பேசி தான் கேட்ட அந்தக் கருங்கல் பாளையம் கூட்டம் பற்றி பிற்காலத்தில் ஒரு கட்டுரையே எழுதி பிரமித்திருக்கிறார்.  சுதேசமித்திரனில் பாரதி எழுதிய  கட்டுரை அவர் பேசிய பொருள் பற்றி நமக்குத் தெரிவிக்கிறதென்றால் ச.து.சு. யோகியார் கட்டுரை அந்தக் கூட்டத்தை விடியோ எடுத்த மாதிரி ஒளிப்படமாய் மனசில் ஓடுகிறது..

"... மூன்று மணி நேரம் பண்டிதர்களின்  மூச்சு முட்டும் முக்கடித் தமிழ்; அதுவரையில் பாரதி ஆடவில்லை--அசையவில்லை.  சுவாஸம் விட்டாரோ என்னவோ, அது கூட சந்தேகம்.  ஏதோ ஒரு சிற்பி செதுக்கிய ருத்ரன் சிலை அமர்ந்திருப்பது போலத் தோன்றியது.  மீசை முறுக்கும் போதன்று, வேறு யாதொரு சலனமும் கிடையாது.  ஆனால் அவர் முறை வந்தது; எழுந்தார்.. எழுந்தார் என்பது தவறு.. குதித்தார். நாற்காலி பின்னே  உருண்டது. பேச்சோ?.. அதில்  வாசகசாலையைப் பற்றி   ஒரு வார்த்தை கூடக் கிடையாது.   பண்டிதர்களின் மூன்று மணி நேரப் பிரசங்கங்கள் முக்கால் நிமிஷ முடிவுரை கூடப் பெறவில்லை.. எடுத்த எடுப்பிலேயே   "நான் மனிதனுக்கு மரணமில்லை என்கிறேன்.." என்றார். அவ்வளவு  தான்.  பாடலானார்.  அடாடா! அவர் பாடும் போது கேட்க வேண்டும்.  அது என்ன மனிதன் குரலா? இல்லை, இடியின்  குரல். வெடியின்  குரல்.  ஓ..ஹோ..ஹோ'.. என்றலையும்  ஊழிக்காற்றின்  உக்ர கர்ஜனை.  ஆனால் அவைகளைப் போல் வெறும் அர்த்தமில்லாத வெற்றோசையல்ல; அர்த்தபுஷ்டி நிறைந்த அசாதாரண வீர்யத்தோடு கூடிய  வேதக் கவிதையின் வியப்புக் குரல்.." என்று வியக்கிறார்.

"நெருப்புத் தெய்வத்தை நெஞ்சிலே கொண்ட அவர் பேசும்  போது உலகமே கிடுகிடுவென்று நடுங்குவது போல் தோன்றும்.  மகாகாளியே ஆணுருவம் தாங்கி நம்முன் மகா தாண்டவம் செய்வது போலிருக்கும்.. மூட எண்ணங்கள், முட்டாள் கொள்கைகள், மொண்டி  ஞானங்கள், சண்டித் தனங்கள், குற்ற நினைபுகள், குறுகிய   நோக்கங்கள் இவற்றின் மேலெல்லாம் சீறி விழுவார்.  சள்ளெனக் கடிப்பார், சிரிப்பார். வெறி கொண்டவர் போல் குதிப்பார்.." என்று அனுபவித்து வர்ணிக்கிறார்.

ச.து.சு.   பாரதியைப் பற்றிக்  கேள்விப்பட்டிருக்கிறாரே தவிர
அப்பொழுது தான் முதன் முதலாக பாரதியைப் பார்க்கிறார்.  கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் என்பார்கள்.  பாரதியைப் பார்த்த, அவர் பேச்சைக் கேட்ட அன்றையிலிருந்தே ச,து. சுப்பிரமணியனுக்கும் பாரதி மாதிரி கவிதை பாட வேண்டும், மேடைகளில் பேச வேண்டும் என்று ஆர்வம் வந்து விட்டது.  போதாக்குறைக்கு தன் பெயர் தான் பாரதியின் பெயரும் என்ற மன நெருக்கம் வேறே.   தனது சிறுவயதிலேயே பால பாரதி என்ற பட்டமும் பெற்றதில் பெரும் பெறுமை இவருக்கு. 
                                                                                                       
ச.து.ச. யோகியார் பற்றி ஒரு சின்ன குறிப்பாவது சொல்ல வேண்டும்.  தந்தை துரைசாமி கேரளப் பகுயைச் சேர்ந்தவர் ஆயினும் பிற்காலத்தில் இந்தக் குடும்பமே சேலத்திற்கு அருகிலுள்ள சங்ககிரிக்கு வந்து தங்கி விட்டதால், சுப்பிரமணியனும் சங்ககிரி துரைசாமி சுப்பிரமணியன் என்று அழைக்கப்பட்டார்.  பிற்காலத்தில் தமிழகத்தின் மிகச் சிறந்த கவிஞராய் இவர் ஜொலித்தார் என்பது வரலாறு.  வேதாரண்ய உப்பு  சத்தியாகிரகத்தில் சிறை சென்ற தேசப்பக்தரும் ஆவார்.  பாரதியாருடன்  நெருக்கம்  கொண்ட, சந்தித்த, அவர் பேச்சைக் கேட்ட யாருமே சோடை போனதில்லை  என்பது வரலாறு!..

சரியாகச் சொல்லப் போனால் கருங்கல் பாளையத்தில் பாரதி பேசிய கூட்டம் கூட அவரது கடைசிக் கூட்டம் அல்ல.
கருங்கல் பாளைய வாசகசாலையில் பாரதி பேசியதைக் கேட்டு அசந்து போன நண்பர்கள் தங்கள் ஊருக்கும் வந்து பாரதி பேச வேண்டும் என்று அன்பு கோரிக்கையை ஆசையுடன் வைத்தனர்.  கருங்கல் பாளையக்  கூட்டத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்புவதாக இருந்த பாரதி
அவர்களின் வேண்டுகோளைத் தட்ட முடியாமல் சம்மதிக்கிறான்.

ஈரோடு வாய்க்கால் கரையில் அடுத்த நாள் பாரதி பேசுவதாக  ஏற்பாடாயிற்று.  இந்த கூட்டத்தில் பாரதி 'இந்தியாவின் எதிர்கால நிலை'  என்ற தலைப்பில் பேசினார்.  நினைத்தால் நெஞ்சு  குமையத்தான்  செய்கிறது. இன்றைக்குக் கூட இந்தியாவின் எதிர்கால நிலை பற்றிக் குறிக்கோளோ  அக்கறையோ கவலையோ இன்றி மேம்போக்கு அரசியல் 'நடத்தும்'  தலைவர்கள் நிறைந்த நாட்டில் அன்றைக்கே பாரதி இந்தியாவின் எதிர்கால நிலை குறித்து திட்டவட்டமான கருத்துக்கள் கொண்டிருந்து அதுபற்றி பேசியும் இருக்கிறான் என்பது அந்த யுக புருஷனின் பெருமையாகத் தான்  தெரிகிறது.

பாரதியார் எதற்காக எதைச் செய்கிறார் என்பது அவர் மனசுக்கே தெரிந்த காரியமாய் பல விஷயங்களில் இருந்திருக்கிறது.  பாரதியாரின் மனத்தைப் புரிந்து கொண்ட அவரோடு நெருக்கம் கொண்டிருந்த சிலருக்கு ஒரு வேளை பாரதியாரின் செயல்கள் புரிந்திருக்கலாம்.  பாரதியார் காலத்திலேயே பாரதியார் செய்திட்ட சில காரியங்கள் பலருக்கு விசித்திரமாகவும் வித்தியாசமாகவும் இருந்திருக்கின்றன.   பாரதி பல நேரங்களில் பலரால் புரிந்து கொள்ள முடியாதவராய் பலரின் எதிர்ப்புகளை எதிர் கொண்ட நபராய் வாழ்ந்திருக்கிறார்.

பாரதி அன்பர் கனகலிங்கத்திற்கு பாரதி முப்புரி நூல் அணிவித்த  நிகழ்வு அதில் தலையாயது.    அந்த நிகழ்வில் நடந்த நிகழ்ச்சிகள் பற்றி நாம் தெரிந்து கொள்வதற்கு இரு நூல்கள் ஆதாரமாக இருக்கின்றன.     1.  முப்புரி நூல் போட்டுக் கொண்ட அந்த நிகழ்வின் நாயகனான பாரதி அன்பர் கனகலிங்கமே எழுதியுள்ள 'என் குருநாதர் பாரதியார்' என்ற நூல்.  2.   அந்த நிகழ்வின் பார்வையாளராக இருந்த வ.ரா. அவர்கள் எழுதியுள்ள 'மகாகவி பாரதியார்' என்ற பாரதியாரின் வாழ்க்கை வரலாறு நூல்.  இந்த இரண்டு பேரும் அந்த நிகழ்வு சம்பந்தப்பட்டவர்கள் என்பதே அவர்கள் சொல்வதின் நம்பகத்தன்மைக்கான ஆதாரங்கள். 

'..... சுவற்றில் லட்சுமி, சரஸ்வதி, கிருஷ்ணன் ஆகியோர் படங்கள் மாட்டப்பட்டிருந்தன.  அந்தப் படங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.   படங்களின் அடியில் ஒரு  பிச்சுவா கத்தி.  அதற்கும் படங்களுக்கும் பாரதி குங்குமப் பொட்டிட்டு வணங்கினார்.  பின்னர் பராசக்தியைப் பணிந்து போற்றி பாடல்களைப் பாடினார்..'

'ஒரு நாள் காலை எட்டு மணி  இருக்கும்.  அரவிந்தர் ஆசிரமத்திலிருந்து பாரதியாரின் வீட்டுக்கு வந்தேன்...' என்று வ.ரா. பாரதியார் பற்றிய தமது நூலில் விவரிக்கிறார்:  'வீட்டின் கூடத்தில், சிறு கூட்டமொன்று கூடியிருந்தது.   நடுவில் ஹோமம் வளர்க்கிறாற்போல புகைந்து கொண்டிருந்தது. ஓர் ஆசனத்தில் பாரதியார் வீற்றிருந்தார். இன்னொரு ஆசனத்தில் கனகலிங்கம் உட்கார்ந்து கொண்டிருந்தான். புரொபஸர் சுப்பிரமணிய அய்யர் போன்ற பல பிரமுகர்கள் இருந்தார்கள்.

'என்ன நடக்கிறது என்று மெதுவாகப் புரொபஸரைக் கேட்டேன்.  "கனகலிங்கத்திற்குப் பூணூல் போட்டு,காயத்ரீ மந்திரம் உபதேசமாகிக் கொண்டிருக்கிறது.." என்றார்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  இந்த  நிகழ்ச்சிக்குச் சில மாதங்களுக்கு முன்பு  தான், என் பூணூலை எடுத்து விடும்படி  பாரதியார் சொன்னார்.  அவரோ  வெகு காலத்திற்கு முன்பே பூணூலை எடுத்து விட்டவர். தமது பூணூலை எடுத்து விட்டு என்னையும் பூணூலைக் கழற்றி எறியச் சொன்ன பாரதியாருக்கு திடீரென்று வைதிக வெறி தலைக்கேறி விட்டதோ என்று எண்ணினேன்.

'மெளனமாக உட்கார்ந்திருந்தேன்.  பாரதியார் நான் இருந்த பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கவேயில்லை. மந்திரோபதேசம் எல்லாம் முடிந்த பிறகு, "கனகலிங்கம்! நீ இன்றையிலிருந்து பிராமணன்;  யார் உனக்குப் பூணூல் போட்டு வைக்கத் துணிந்தது என்று உன்னை யாராவது கேட்டால், பாரதி போட்டு வைத்தான் என்று அதட்டியே பதில் சொல்.  எது நேர்ந்தாலும் சரி, இந்தப் பூணூலை மட்டும் எடுத்து விடாதே!" என்று பாரதியார் அவனுக்கு வேறு வகையில் உபதேசம் செய்தார். .."

என்றைக்கோ பூணூலைக் கழற்றிப் போட்ட பாரதி,  பூணூலைப் போட்டுக் கொண்டவன் தான் இன்னொருவருக்கு பூணூலைப் போட வேண்டும் என்ற   சாஸ்திர விதியை மீறாமல் தானும்  பூணூலைப் போட்டுக் கொள்கிறான்.  கனகலிங்கத்திற்கு பிரம்மோபதேசம்  செய்கிறான்.  அந்த நிகழ்வு முடிந்ததும் இந்த நிகழ்வுக்காக தான் போட்டிருந்த பூணூலை கழற்றிப் போட்டு விடுகிறான்.  வில் வித்தைக்கு விதிகள் உண்டு;  சிலம்பாட்டத்திற்கு விதிகள் உண்டு. அந்த விதிகளை அனுசரிப்பவனே அந்த வித்தைக்கான மரியாதை அளிக்கிறான் என்பது போலவே பிரம்மோபதேசத்திற்கான விதி முறைகளை பாரதி அனுசரிக்கிறான்.

சாதி மதங்களைப் பாரோம் - உயர்
ஜன்மம் இத்தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி
வேறு குலத்தின   ராயினும் ஒன்றே

என்ற தமது பாடல் வரிகளை  நிகழ் வாழ்வில் அமுலாக்கிப் பார்க்கவே பாரதி தன் அன்பருக்குப் பூணூல் அணிவித்தான்.   பரவலாக அப்படியான ஒரு நிலை வராத வரை தான் பூணூல் அணியாதிருத்தல் என்பது பாரதி தன் நெஞ்சுக்கு வழங்கிய நீதியாக இருக்கலாம்.

கனகலிங்கத்திற்கு மட்டுமல்ல,  புதுவை உப்பளம் பகுதியில் இருக்கும் முத்து மாரியம்மன் கோயிலில் பூசாரியாக இருந்த நாகலிங்கம் என்பவருக்கு பாரதி உபநயனம் செய்வித்ததாக
கனகலிங்கம் சொல்லி நமக்குத் தெரிகிறது.

தாம்பரத்தில் குடிசையில் வாழ்ந்து கொண்டிருந்த பொதுவுடமைத் தோழர் ஜீவாவை நல்ல  ஒரு வீடு பார்த்து குடியேற்ற வேண்டும்  என்பது அன்றைய தமிழக முதல்வர்  காமராஜரின் மனத்தை அரித்துக்  கொண்டிருந்த ஒரு ஆசை.  ஒரு நாள் தாம்பரம் ஜீவாவின் குடிசைக்கு அவரைப் பார்க்க வந்திருந்த காமராஜர், நாதழுதழுக்க, "ஜீவா உடனே நீ இங்கிருந்து கிளம்பியாகணும்..   உனக்கு ஒரு வீடு பார்த்து வைத்திருக்கிறேன்.. வந்துடு.." என்று வற்புறுத்துகிறார்.

"இல்லை.." என்று காமராஜரின் மனம் கோணாமல் நெகிழ்ச்சியுடன் சொல்கிறார், ஜீவா. "எத்தனை பேர் இங்கே என்னோடு வாழ்கிறார்கள்?.. அவர்களை விட்டு விட்டு நான் மட்டும் வந்துட முடியுமா?  அவர்கள் எல்லோருக்கும் நல்ல வீடு கிடைக்கும் வரை நான் இங்கேயே தான் இவர்களோடு வாழ்வேன்.." என்று மறுத்து விடுகிறார்.

பிரச்னைகள் வேறு வேறாக இருக்கலாம்.  ஆனால்  தாம் தேர்ந்தெடுத்த முடிவில் பாரதிக்கும் ஜீவாவுக்கும் ஒரே மனசு தான் இருந்திருக்கிறது.


(வளரும்)



Related Posts with Thumbnails