மின் நூல்

Sunday, October 13, 2024

இது ஒரு தொடர்கதை -- 23

லேசான புன்னகையுடன்,  மோகன் வெளியே நின்று கொண்டிருப்பான் என்ற எதிர்பார்ப்பில் வித்யா கதவைத் திறந்தாள்.

வெளியே சிலிண்டருடன் Gகேஸ் கம்பெனி  ஆளைப் பார்த்து ஏமாற்றத்தில் அவள் முகம் கவிந்தது.  சமாளித்தபடி கதவை அகலத் திறந்து, "வாப்பா.." என்றபடி உள்பக்கம் போனாள். 

சிலிண்டர் டெலிவரி ஆள் உள்ளே வருவதைப் பார்த்து அவசர அவசரமாக ஜலஜா அவனுக்கு வழி காட்டியபடி சமையலறை உள்பக்கம் போனாள்.  அம்மாவுக்கு உதவுவதற்காக வித்யாவும் சமையலறை கதவின் உள்பக்கம் நின்று கொண்டாள்.

சிலிண்டர் காஸை செக் பண்ணி, அவன் காலி சிலிண்டரை எடுத்துக் கொண்டு வெளியே வந்ததும் பில் பார்த்து கையெழுத்திட்டு காசு கொடுத்து அனுப்பினார் புரந்தரதாசர்.   அந்த வீட்டில் இன்னாருக்கு இன்ன வேலை என்று அட்டவணையிட்டு குறித்த மாதிரி எல்லாம் நடந்தது.  இதை வெளி மனுஷர் ஒருத்தர் பார்த்தால் கூட ஆச்சரியப்படக்கூடியதாக இருக்கும் தான்.

"காலிங் பெல் அடிச்சதும் மோகன் தான் வந்து விட்டானோ என்று நினைத்தேன்" என்றார் புரந்தரதாசர்.

"ஆமாம்.. ஏன் அந்தப் பையனைக்  காணோம்?" என்றாள் ஜலஜா.

"என்னைக் கேட்டேனா?" என்று வித்யாவைப் பார்த்தவாறே சொன்னார் பு. தாசர். "சித்தே தலைசாய்க்கிறேன்... அந்தப் பையன் வந்தா சொல்லு.." என்று வீட்டின் உள்பக்கம் போனார்.

கால் மணி நேரம் ஆகியிருக்கும்.  மறுபடியும் காலிங் பெல் அழைத்தது. சட்டென்று வாசல் பக்கம் வித்யா போனாள்.  

கதவைத் திறந்ததும் பேப்பர்காரப் பையன் கத்தை வார இதழ்களைக் கொடுத்து விட்டுப் போனான்..  

அன்று வெள்ளிக்கிழமை அல்லவா?..  'மனவாசம்' அந்தக் கத்தையில் இருந்தது.

அதை மட்டும் எடுத்துக் கொண்டு ஜன்னல் பக்கம் நாற்காலியை இழுத்துப் போட்டபடி வித்யா அமர்ந்தாள்.  வேகவேகமாக 'இது ஒரு தொடர்கதை'ப் பகுதியைத் தேடி அவள் விரல்கள் புரட்டின.  

அந்த வார தொடர்கதைப் பகுதியும் கிடைத்தது.  தொடருக்கு ஓவியர்  போட்டிருந்த படமும் அவள் பார்வைக்கு அசப்பில் தன்னைப் போலவே இருந்ததில் அவளுக்கு லேசான சந்தோஷம். அவளுக்குத் தெரிந்த வினிதா போல ஏதாவது படம் இருக்கிறதா பக்கங்களைப் புரட்டிப் பார்த்தாள்.  நல்ல வேளை இல்லை. அதில் அவளுக்கு அடக்க முடியாத சந்தோஷம்.  தற்செயலாகத் தான் என்றாலும் இதெல்லாம் எப்படி அமைகிறது என்று வித்யாவிற்கு ஆச்சரியம். 

அந்த சமயத்தில் தான் "வரலாமா?.." என்று வாசல் பக்கமிருந்து ஒரு குரல். பழக்கப்பட்ட குரலாக இருக்கவே அனிச்சையாக வித்யா திரும்பிப் பார்த்தாள். ஓ... மோகன்!.. 

அவள் சுதாரித்துக் கொள்வதற்குள் அவள் அம்மா,"வாங்க.. வாங்க.." என்று அழைத்தபடியே கதவுப் பக்கம் போனாள்.  நல்லவேளை, பேப்பர் பையன் வந்து வார இதழ்களைக் கொடுத்த பொழுது வாசல்கதவை சாத்தாமல் வந்திருக்கிறோம் என்று வித்யா நினைத்துக் கொண்டாள்.

மோகன் உள்ளே வந்ததும் டக்கென்று நாற்காலியிலிருந்து எழுந்த வித்யா, "வாங்க.." என்றாள்.  அவள் கையிலிருந்த மனவாசம் இதழைப் பார்த்து, "ஓ... படிச்சாச்சா?" என்று புன்னகையுடன் கேட்டான் மோகன்.

"உங்க பகுதி மட்டும்.." என்று வித்யா சொன்னதும் இருவருமே சிரித்தனர். "ஸாரை எங்கே காணோம்?" என்று சுற்றுமுற்றும் பார்த்தான் மோகன்.

"இத்தனை நேரம் இங்கே தான் இருந்தார்,, உள்ளே கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கப் போயிருப்பார்.." என்று ஜலஜா சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே புரந்தரதாசர் வந்து விட்டார்.."என்ன மோகன்! ஒம்போது மணிக்கு வருவேன்னு சொன்னேயே என்று.." என்று சொல்ல வந்ததை முடிக்கக் கூட இல்லை, 'சாரி.. சார்.. இன்னிக்கு ஆபீஸ்லே எதிர்பாராத வேலை ஒண்ணு.. அதான், டிலே ஆயிட்டது.." என்று தழைந்த குரலில் மோகன் சொல்லும் பொழுதே "பரவாயில்லேபா.. ஜஸ்ட் வரேன்யே காணுமேன்னு நெனைச்சிண்டிருந்தேன்.." என்றார் புரந்தரதாசர்.  "உட்காரு, மோகன்.." என்று சோபாவைக் காட்டி தானும் பக்கத்து சோபாவில் அமர்ந்தார்.  மற்றவர்களும் பக்கத்து சோபாக்களில் அமர்ந்தனர். 

"என்ன சாப்பிடுறீங்க மோகன்? காப்பி?"

"சாரி, ஸார்..  இன்னிக்கு ரெண்டு காப்பி ஆச்சு.. வேணாம் சார்,,"

"அப்போ கூல் டிரிங்க்ஸ் ஏதாவது?.."

"இல்லே, ஸார்.. ஏற்கனவே ஓவர் லோட்.." என்று அவன் சொன்னதும் "இன்னிக்கு நம்ம வீட்லேயே சாப்பிட்டுடலாம்.." என்றாள் ஜலஜா.

'அட! வழக்கமா இவ்வளவு நெருங்கிப் பேசாத அம்மா கூடவா' என்று வித்யா நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே  "சரிங்க.." என்று மோகன் சொன்னதில் எல்லோருக்கும் சந்தோஷம்.


"உங்க வீட்டு வெளிப்பக்கம் இருக்கே, ஒரு பெரிய இரும்பு கேட், அதைப் பகல்  நேரங்களில் உள் பக்கமா மூட மாட்டீங்களாக்கும்?" என்று மோகன் திடுதிப்பென்று கேட்ட பொழுது எதற்குக் கேட்கிறான் என்று தெரியாமல் திகைத்தார் புரந்தரதாசர்.

"ஆமாம். பகல் நேரங்களில் மூடுவதில்லை.. ராத்திரி மட்டும் நாதாங்கியை மாட்டி பூட்டு போட்டுடுவோம்"என்று ஜலஜா சொன்ன போது "ஓ.. அப்படியா?.. பகல் நேரங்களிலும் சும்மாவானும் நாதாங்கியை மட்டும் போட்டுட்டீங்கனா  இன்னும் சேஃப்டி தானே? இப்பப் பாருங்க, நான் வரும் பொழுது அந்த வெளி கிரில் கேட், உள் வாசல் மெயின் டோர் ரெண்டும் திறந்திருந்ததில்லையா? அந்த மாதிரி இருக்காம இருந்தா  நல்லது தானே! அதுக்காகத் தான் கேட்டேன்" என்றான்.

"நீங்க சொல்றதும் சரி தான்" என்றாள் ஜலஜா. "வர்றவங்க கை நுழைச்சு நாதாங்கியை திறந்திண்டு வந்தாலும் போறப்போ சாத்திண்டு போறதில்லை.. இங்கிருந்து கொஞ்சம் தூரமா கேட்டு இருக்கில்லியா, அதனாலே எங்களுக்கும் அப்பப்ப போய் சாத்த முடிலே.. அதனாலே இருக்கட்டும் போன்னு அப்படியே விட்டுடறோம்.  ஆனா இந்த வாசக்கதவை  நிச்சயம் சாத்தி தாழ் போட்டு மூடிடுவோம். காலிங் பெல் அடிச்சதுன்னாத்தான் திறக்கறது வழக்கம்."  

"மோகன்! இன்னிக்கு இந்தக் கதவு திறந்தபடி இருந்தது நான் பண்ணின தப்பு.." என்றாள் வித்யா. "பேப்பர்காரன் வரும் பொழுது கூட இந்தக் கதவு சாத்தித் தான் இருந்தது. கை நிறைய வார இதழ்களை வாங்கிக் கொண்டு வந்தவள் வெளிக்கதவை சாத்த மறந்திருக்கிறேன். அது என்னோட தப்பு தான்" என்றாள் வித்யா. 

"அப்படியா?  அப்படின்னா சரி.  நேத்து ராத்திரி நான் இங்கே வந்து விட்டுப் போனேன் இல்லியா? அப்போ அந்த வெளி கேட் பக்கம் தான் கொஞ்ச நேரம் நின்றிருந்தேன். அவ்வளவு பெரிய கேட்டுகளை பொதுவா நான் வீடுகளில் பார்த்ததில்லை.  இப்போ வர்றத்தே கூட அது பக்கம் கொஞ்சம் நின்னு அதன் உயரத்தையும் அகலத்தையும் பிரமிப்போடு பாத்துட்டுத்தான் வந்தேன். ஆக்சுவலி அரண்மனைக் கதவு மாதிரி அற்புதமாத் தான் இருக்கு.. ராத்திரி நேரங்களில் லோன்லியா தனிக்காட்டு ராஜா மாதிரி அது தனியா நிக்கறது இன்னும் அழகு.." என்றான் மோகன்.

அவன் அப்படிச் சொன்ன பொழுது நேற்று ராத்திரி 'மோகன், நாளைக்குப் பார்க்கலாமா?' என்று இவள் கேட்டதற்கு, 'பார்க்கலாம், வினிதா' என்று சொல்லி விட்டு 'சாரி, வித்யா' என்று அவன் திருத்திக் கொண்டது இப்பொழுது வித்யா ஞாபகத்திற்கு வந்தது..  இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், "மோகன்! உங்க எழுத்து மாதிரியே தான் இருக்கு, நீங்க கேஷூவலாப் பேசறதும்.." என்றாள், புன்னகைத்தபடி.

"பையா.. அந்த கேட் இந்த வீட்டிக்கு வந்ததே பெரிய கதை.." என்றார் புரந்தரதாசர்.

"ஹஹ்ஹா.. மோகன் தான் கதை எழுதறார்ன்னா, நீ வேறே கதை சொல்ல ஆரம்பிசிட்டையா, அப்பா?" என்று அவள் சிரித்த பொழுது மகளுடன் சேர்ந்து ஜலஜாவும் சிரித்தாள்.

"ஸார் சொல்லட்டும், நான் எழுதற கதைலே ஏதாவது இண்டு இடுக்கில் நுழைச்சிக்க உதவுமிலே.." என்றான் மோகன்.

"இண்டு இடுக்கு என்ன, மெயின் கதையாகவே எழுதிடுங்களேன்.." என்றாள் வித்யா.

"இப்போ அந்த கேட் பத்தி வேணாம், மோகன்.  நான் அது பத்திச் சொல்ல ஆரம்பிச்சேன்னு வெச்சுக்கோ, நீ வந்த வேலை கெட்டுடும்.  இன்னொரு சமயத்திலே சொல்றேன்..  ஆனா, நீ இதைப் பத்திக் கேட்டாத்தான் எனக்கு ஞாபகத்துக்கு வரும்.  சரியா?" என்றார் புரந்தரதாசர்.

"நிச்சயமா இன்னொரு சமயம் கேப்பேன்.. ஏன்னா, அந்தக் கேட்டின் வெளித் தோற்றம் அப்படியே என் மனசிலேயே நின்னுண்டிருக்கு.." என்றான் மோகன். அப்படிச் சொல்லும் பொழுது ஏனோ அவன் கண்கள் பளபளத்ததை வித்யா பார்க்கத் தவறவில்லை.

"அப்படியா?.." என்று புரந்தரதாசர் கேட்ட பொழுது அவர் குரலில் ஒரு படபடப்பு இருந்ததை வித்யா கவனிக்கவில்லை என்றாலும் மோகன் கவனத்திலிருந்து அது தப்பவில்லை. "நிச்சயம் அது பற்றி இவரிடம் கேட்டே ஆக வேண்டும் என்று மோகன் மனத்தில் குறித்துக் கொண்டான்.

(தொடரும்)

Saturday, October 5, 2024

இது ஒரு தொடர்கதை -- 22

வித்யா தன் ரூமிற்கு வந்து உடை மாற்றும் பொழுது அறுந்த சிந்தனை மீண்டும் தனக்குத் தானே பின்னிக் கொண்டது.

அவளுக்கு  ஆச்சரியமாக இருந்தது.  கிண்ணத்லிருந்து கொஞ்சம்  நல்லெண்ணையை கைகுவித்து ஊற்றிக்கொண்டு தேகத்தில் தேய்க்க ஆரம்பித்த பொழுது ஆரம்பித்த நினைவுகளின் ஊர்வலம்! எண்ணை தேய்த்து முடித்து ஏற்கனவே சின்ன பிளாஸ்டிக் டப்பாவில் எடுத்து வைத்திருந்த சீயக்காய் தூளில் நீர் விட்டுக் கரைத்து அதையும் தலை -  உடம்பு என்று சகல 
பகுதிகளிலும் அழுந்தத் தேய்த்த பிறகு வெந்நீர் குளியலையும் முடித்து டர்க்கி டவலால் தேகத்தைத் துடைத்துக் கொள்ளும்  வரை ஒரு பக்கம் சிந்தனையோட்டம் இன்னொரு பக்கம் எண்ணைக் குளியல் செயல்பாடு என்று ஒன்றில் ஒன்று குறுக்கிடாமல் ஒரே  நேரத்தில் எப்படி இப்படி இரட்டை வெவ்வேறு காரியங்களும் நடந்தன என்று அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.  அந்த யோசனையின் ஊர்வலம் கூட வினிதாவின் பெயர் மூளையில் தைத்ததால் தான் அறுந்திருக்கிறது. அது வரை எந்தத் தடையுமில்லாமல் யோசிப்பு டேப் ரிகார்டரில் போட்ட சி.டி. மாதிரி ஓடியிருப்பது அவளுக்கு வியப்பாக இருந்தது.   அல்லது, மூளையும் ஒரு சி.டி. போலத்தானா?....  பழக்கப்பட்ட காரியங்கள் மூளையில் பதிந்திருப்பது அந்தந்த நேரத்தில் வேண்டும் பொழுது அது பாட்டுக்க தன்னிச்சையாக செயல்பாடாக வெளிப்படுமா.. காலேஜ் படியேறியிருக்கிறோம் என்று தான் பெயர். யாருகிட்டேயாவது கேட்டுக்கணும் என்ற நிலையில் இதெல்லாம் பற்றித் தனக்குத் தெரியாதது அவளுக்கு வருத்தமாகத் தான் இருந்தது.

அவள் கீழே இறங்கி வருவதற்கும் ஜலஜா மணியடித்தபடி சுவாமிக்கு கற்பூரம் காட்டுவதற்கும் சரியாக இருந்தது... ஓடி வந்து அப்பா பக்கத்தில் நின்று கொண்டு வித்யா கைகுவித்து இறைவனைத் தொழுதாள்..  கற்பூர ஜ்வாலைக்கு மேல் கை நீட்டி அந்த வெப்ப அருளை கண்களில் ஒற்றிக் கொண்டாள்.  நடக்கறதெல்லாம் நன்மையாகவே அமைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள்.

மணி காலை 9-15. மோகன் இன்னும் வரவில்லை.  "ஒன்பது மணிக்கே மீட் பண்ணலாம் என்று சொல்லியிருந்தோமில்லையா?" என்று ஏதோ தனக்கிருந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்கிற மாதிரி புரந்தரதாசர் வித்யாவைக் கேட்டார்.  வித்யாவோ ஜலஜாவைப் பார்த்து, "அப்படியாம்மா?" என்று கேட்டாள். ஜலஜாவோ அவளை விட கில்லாடி. "என்ன, அப்படியாம்மா?" என்று அவளையே கேட்டாள்.  வித்யாவோ தன் தந்தை பக்கம் திரும்பி, "அப்பா.. அம்மா கேக்கறா பாரு.  நீயே கேட்டுக்கோ.." என்று சொல்லி விட்டு சமையலறைப் பக்கம் போனாள். அங்கிருந்து அப்பாவும் அம்மாவும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தாள்.

"இவ ஏன் இப்படி இருக்கா?" என்று புரந்தரதாசர் ஜலஜாவைப் பார்த்துக் கேட்டார்.

"யார் எப்படி இருக்கா? யாரைச் சொல்கிறீர்கள்?"

"வேறே யார் இருக்கா இந்த வீட்லே?  வித்யாவைத் தான்.. அந்தப் பையன் வர்றேன்னு சொன்னான்லே.. ஏன் அவனைக் காணோம்ன்னு நெனைச்சு கூடப் பாக்க மாட்டா போலிருக்கே?"

"எந்தப் பையன்? இப்படி மொட்டைத் தாத்தா குட்டேலே விழுந்தார்ங்கற மாதிரி கேட்டா யாருக்குத் புரியும்?  எனக்கே நீங்க என்ன கேக்கிறீங்கன்னு புரிலே.. பாவம், சின்னஞ்சிறு சிறிசு..  அவளைக் கேட்டா, அவளுக்கு என்ன தெரியும்?" என்று சிரிக்காமல் சொன்னாள் ஜலஜா.

சமையலறையிலிருந்து இவர்கள் பேசுவதை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்த வித்யா தனக்குள் 'க்ளுக்'கென்று சிரித்துக் கொண்டாள்.

"சரியாப் போச்சு.. நா ஒருத்தன் தான் கற்பனைக்கோட்டை கட்டிண்டிருக்கேன், போலிருக்கு.." என்று லேசாக சலித்துக் கொண்டார் புரந்தரதாசர்.  "உனக்கே ஞாபகம் இல்லையா?  நேத்திக்கு மோகன்னு ஒரு எழுத்தாள பையன் நம்ம வீட்டுக்கு வந்து போனான் இல்லியா? அவன் கூட தான் எழுதறக் கதையைப் பத்தி விரிவா பேசணும்ன்னு இன்னிக்கு வரேன்ன்னு சொல்லியிருந்தானே! ஒண்ணுமே ஞாபகம் இல்லியா ஒனக்கு?" என்று கொஞ்சம் எரிச்சலோடையே புரந்தரதாசரிடமிருந்து வார்த்தைகள் வெளிப்பட்டன.
 
"ஓ.. அந்தப் பையனைப் பத்திச் சொல்றீங்களா?.. இதைக் கேக்கறதுக்கா இத்தனை நேரம் இப்படி இழுத்தடிச்சீங்க? அந்த மோகன் வரேன்னானே, வரக்காணுமே?"ன்னு நேரடியா கேட்டிருந்தா புரிஞ்சிருக்குமில்லே?" என்றாள், பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு.

"நன்னா பதில் சொல்லிடப்போறையே! அந்த மோகன் வரேன்னானே, காணோமேன்னு நான் கேட்டிருந்தா, எந்த மோகன்னு  கேட்டிருப்பே, உன்னைப் பத்தித் தெரியாதா, எனக்கு?" என்றார் புரந்தரதாசர்.

"ஆமான்னா.. எனக்குக் கூட இப்பத்தான் அந்தப் பையன் சொன்னது ஞாபகத்துக்கு வர்றது.. மணி ஒம்பதரை ஆச்சே.. எங்கே  காணோம்?.. ஏதாவது ஃபோன் பண்ணியிருப்பானா? உங்க நம்பர் தானே அவங்கிட்டே இருக்கு?" என்றாள்.

"அப்படி ஃபோன் பண்ணியிருந்தா உங்கிட்டே ஏன் கேக்கறேன்?. சொல்லு.."

"ஏதாவது கூப்பிட்டிருக்கானான்னு பாருங்களேன்.."

புரந்தரதாசர் மொபைலை எடுத்துப் பார்த்து உதடைப் பிதுக்கினார். "ஒண்ணும் காணோம்.."

அதைக் கேட்க சமையலறையிலிருந்த வித்யாவிற்கும் ஏமாற்றமாக இருந்தது.

"கூப்பிடலேல்லே.. விட்டுத் தள்ளுங்க.. அவனுக்கே அக்கறை இல்லாத போது நாம ஏன் அலட்டிக்கணும்?" என்ற தாயின் குரலைக் கேட்டு 'அம்மா சொல்வதும் நியாயமாகத் தானே இருக்கு?' என்ற எண்ணம் வந்தாலும் 'ஏன் மோகன் வரவில்லை?' என்று யோசிப்பு ஓடியதை வித்யாவால் தவிர்க்க முடியவில்லை.

அதே சமயத்தில் வாசல் காலிங் பெல்லின் கிணுகிணுப்பு ஒலி கேட்டு வித்யாவின் உச்சி குளிர்ந்தது.

"யார் இந்த நேரத்தில் காலிங் பெல்லை இந்த அழுத்து அழுத்தறாங்க?" என்று சமையலறையிலிருந்து வெளி வந்தவள் ஆசையுடன் வாசல் பக்கம் போனாள்.

ஜலஜா, புரந்தரதாசர் இருவர் முகமும் ஒரே சமயத்தில் சொல்லி வைத்தாற் போல மலர்ந்தன.

(தொடரும்)

Saturday, September 28, 2024

இது ஒரு தொடர்கதை - 21

டுத்த நாள் காலை ஐந்து மணிக்கே எழுந்து விட்டாள் வித்யா.  

எழுந்தவுடனேயே மோகன் இன்று வரப்போகிறான் என்ற எண்ணம் அவளை ஆக்கிரமித்ததும். மெல்ல தனக்குள் சிரித்துக் கொண்டாள்.  'மனவாசம்' பத்திரிகையில் அவள் படித்திருந்த அவனது 'இது ஒரு தொடர்கதை' கதையை அவனே காட்சி காட்சியாகச் சொல்லச் சொல்லக் கேட்கப் போகிறோம் என்ற உணர்வு அலாதியாத சந்தோஷத்தை அவளில் மீட்டியது.   

அந்த வீட்டு மாடியில் தனியாக அவளது அறை அமைந்திருந்தது.  எழுந்தவள், பல் துலக்கி முகம் துடைத்து கீழே இறங்கும் படிகளின் முகப்புக்கு வரும் பொழுதே  கீழே வராந்தா மூலையில் அமைந்திருந்த சமையல் பகுதியில்  ஜலஜா காலை காப்பிக்காக பில்ட்டரில் வெந்நீர் ஊற்றிக் கொண்டிருப்பது அவள் பார்வையில் பட்டது.  

அவளுக்கு முன்பே வழக்கமாக ஜலஜா எழுந்து விடுவாள்.  ஜலஜா தலையில் டவலைச் சுற்றியிருந்தது இன்று வெள்ளிக் கிழமை என்பதை அவளுக்கு நினைவு படுத்தியது.  இன்று எண்ணைக் குளியலா என்று நினைக்கையில் அவளுக்கு அலுப்பாய் இருந்தது.  ஒன்பது மணிக்கே மோகன் வந்து விடுவான் என்ற நினைப்பு, அதற்குள் காலை வேலைகள் அத்தனையையும் முடித்துக் கொள்ள வேண்டும் என்ற அவசர உணர்வையும் அவளில் விதைத்தது.

அவள் கீழிறிங்கி வரும் பொழுதே ஜலஜா அவளைப் பார்த்து விட்டாள். "வித்யா!காப்பி கலந்திடட்டுமா? முதல் டிகாஷன் இறக்கியாயிற்று.." என்றாள். 

"ஓ..." என்றபடியே ஜலஜாவின் அருகில் போய் வாத்சல்யத்துடன் "அதற்குள் எழுந்து குளிச்சிட்டையே அம்மா?" என்று கேட்டாள்.  

"இன்னிக்கு வெள்ளிக்கிழமை.. பூஜை இருக்கில்லையா?  அதான்,.  ஊரிலில்லாத அதிசயமா உங்க அப்பா கூட எழுந்தாச்சு.. பேப்பர் பார்த்திண்டுருக்கார்.." என்றாள்.   "நீ காப்பி குடிசிட்டு, அவருக்கும் கலந்து வைச்சிருக்கேன்.  சூடா இருக்கும்.  பாத்து எடுத்துண்டு போய் குடுத்துடு.." என்றாள்.

ஜலஜா சகல பூஜை சமாச்சாரங்களையும்  எடுத்து வைத்துக் கொண்டு சுவரிலேயே குடைந்து மரப்பலகை தடுப்புகள் பொருத்திய பிர்மாண்ட பூஜை அறை முன் ஸ்லோகப் புத்தகத்தைக் கையிலெடுத்துக் கொண்டு உட்கார்ந்தாள்.  இனி அவள் எழுந்திருக்க அரை மணி நேரம் பிடிக்கும்.

அப்பா புரந்தரதாசருக்குக் காப்பியைக் கொண்டு போய்க் கொடுக்கும் பொழுது, "ஏம்மா.. அந்தப் பையன் மோகன் இன்னிக்கு வருவான்லியோ?" என்று ஞாபகமாகக் கேட்டார்.

"என்னைக் கேட்டா எப்படிப்பா?" என்றாள் வித்யா.  "நாம நேத்திக்குப் பேசிண்டிருந்தது ஞாபகம் இருந்தா வருவார்.." என்றாள், பட்டும் படாமலும்.

"பையனைப் பார்த்தா நல்லவனா தெரியறான்..  ஹூம்.. நாம் நினைக்கறதெல்லாம் நடந்டுடறதா, என்ன?" என்று அவளையே கேட்டார்.

"நடக்கறதெல்லாம் நன்மைக்கேன்னு எடுத்துக்க வேண்டியது தான்,அப்பா"

"எனக்கே கீதா உபதேசம் சொல்லிக் காட்டறையா, நீ?" என்று சொல்லிச் சிரித்தார் அவர்.

அவர் காபி குடித்து முடித்ததும்  டம்ளரை எடுத்துக் கொண்டு, "நெறைய வேலை இருக்குப்பா, எனக்கு.. இனிமே தான் எண்ணை தேச்சுக் குளிச்சாகணும்.." என்று அவள் திரும்பும் போது, "ஓ.. வெள்ளிக்கிழமையா இன்னிக்கு?.. அம்மா என்ன செய்யறாள்?" என்று கேட்டார்.

"பூஜை பண்ணிண்டு இருக்கா,,"

"அப்படியா?.." என்று அவரும் எழுந்திருந்தார்.

அம்மா பூஜை முடித்து வருவதற்குள் தான் குளித்து விட்டு வந்து விடலாமென்று மாடிப் படிகளேறினாள், வித்யா..  படிகளேறும் போதே நேற்று மோகனை வழியனுப்புவதற்காக வீட்டு வாசல் பக்கம் போகையில் அவன் பேயறைந்த மாதிரி  நின்று கொண்டிருந்ததை இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் அவளுக்கு 'பக்'கென்றிருந்தது.  என்னாச்சு அவனுக்கு என்று அந்த சமயத்தில் அவளுக்கிருந்த கலக்கம் இப்பொழுது தீவிரமான 

யோசனையில் அவளை அமிழ்த்தியது. நல்ல வேளை, சற்று தூரத்தில் அம்மா நின்றிருந்தார்கள்.  அவர் மட்டும் அந்த நேரத்தில் அங்கிருந்திருக்காவிட்டால் அவள் பதட்டம் இன்னும் எகிறியிருக்கும் என்று இப்பொழுது நினைத்து ஆசுவாசப் பெருமூச்சு விட்டாள்.

அம்மாவைக் கேட்டதற்கு "வித்யா! ஓரு நிமிஷம்ன்னு நீ சொல்லிட்டுப் போனே இல்லையோ? அதான் அவர் வெயிட் பண்றார் போலிருக்கு.." என்று அம்மா சொன்னதும் தான், தான் அப்படிச் சொன்னதால் தான் பாவம் அவர் நின்று கொண்டிருந்திருக்கிறார்.. அப்படி அவரிடம் சொன்னதே எனக்கு அந்த சமயத்தில் நினைவுக்கு வராமல் போயிற்றே' என்று இப்பொழுதும் அவள் கலங்கினாள்.

ஆனால் வெளி கேட் அருகே அவரை நெருங்கி, கையசைத்து, "மோகன்! நாளைக்குப் பார்க்கலாமா?" என்று கேட்ட பொழுது, "பார்க்கலாம், வினிதா" என்று சொல்லி விட்டு, "சாரி, வித்யா.." என்று திருத்திக் கொண்டாரே, யார் அந்தப் வினிதாவாக இருக்கும் என்று நேற்றைக்கு லேசாக இருந்த குழப்பம் இப்பொழுது விஸ்வரூபம் எடுத்தது.

"யார் அந்தப்  வினிதா?" என்ற கேள்வியே வண்டாக அவள் மனதைக் குடைந்தது.

ரொம்ப நேரம் ஒரே விஷயத்தையே யோசித்தால் சரியான பதில் கிடைக்காது என்பது அவளது சொந்த அனுபவம்.  அதனால் கொஞ்சம் இடைவெளி விட்டுப் பார்க்கலாம் என்று மாடி பாத்ரூம் வந்து கதவில் கைவைக்கும் பொழுது தான்      தேய்த்துக் கொள்ள எண்ணை கொண்டு வரலியே என்று நினைவுக்கு வந்தது.  மறுபடியும் கீழே போக வேண்டுமே என்று நினைத்த பொழுது சோம்பலாக இருந்தது. இருந்தாலும் வேறே வழியில்லேன்னு படியிறங்கி கீழே போனாள்.  சமையலறை ஸ்டோர் ரூம்லே இதயம் இருந்தது.  ஒரு கிண்ணம் எடுத்து அதில் பாதியளவு  ஊற்றிக் கொண்டு வெளியே வந்த பொழுது ஜலஜா இன்னும் பூஜையை முடிக்க வில்லை.  குளிச்சிட்டு வந்து சுவாமி கும்பிட்டுக்கலாம் என்று படியேறினாள்.

கை தான் எண்ணையை தேய்த்துக்  கொண்டிருந்ததே தவிர மனசு என்னென்னவோ எண்ணங்களில் மூழ்கி முக்குளித்துக் கொண்டிருந்தது.

அவளது தோழிகள் சிலரிடம் பேச்சு வாக்கில் இன்னிக்கு எண்ணை தேய்த்துக் குளித்தேன் என்றாலே சிரிப்பார்கள்.  'இது என்னடி, எந்தக் காலத்லே இருக்கே?.. எண்ணை தேச்சுக் குளிக்கச் சொல்லி பாட்டி சொன்னாங்களா'ன்னு கேட்டு விட்டு அதுக்கும் ஒரு சிரிப்பு சிரிப்பார்கள்.  இந்த சிரிப்பு வித்தியாசமாக இருக்கும்.  இப்படி ஒவ்வொண்ணுக்கும் பேசற மேட்டருக்கு ஏத்த மாதிரி விதவிதமா சிரிப்பு வைச்சிருப்பாங்க,, 

'நீங்கள்லாம் எண்ணையே தேச்சுக் குளிக்கற வழக்கமில்லையா?'ன்னு கேட்டதுக்கு 'ஷாம்பூ இருகறச்சே எதுக்குடி எண்ணைலாம்?'ன்னு விசித்திரா கேட்டது நினைவுக்கு வந்தது.  'ஐயையோ! ஷாம்புலாம் எனக்கு ஒத்து வராதடிம்மா!..' என்று ஷோபா முகத்திலேயே பயங்காட்டினாள். 

'ஏன்?' புருவத்தை வில்லா வளைதாள் சுந்தரி. 'ஷாம்புனா, முடிலாம் கொட்டிடும்டீ...கண்ட கெமிக்லாம் கலக்கறான்.. அதான் அதக்கண்டாலே பயம்.."என்ற ஷோபா, "நான்லாம் தேங்கா எண்ணை தான்!" என்றாள்.  "அதென்னடி.. கேரளான்னா எதுக்கெடுத்தாலும் தேங்கா சமாச்சாரம் தானா?" என்று சுந்தரி கேட்டதுக்கு "அடிச்சேன்னா, பாரு.." என்று ஷோபா அவளை நெருங்க, சுந்தரியோ சிட்டாய்ப்  பறக்க....    

நெனைச்சுப் பார்க்கறத்தையே சிரிப்பு தான் பொத்துக்கொண்டு வந்தது வித்யாவுக்கு. ஸ்கூல் லைஃப்லே இப்படிக் கொண்டாட்டம்னா காலேஜ் லைஃப்லே வேறே மாதிரி.. கொஞ்சம் மெச்சூரிட்டி வந்தாப்லே நடிப்பாங்களே தவிர அடிப்படையில் என்னவோ இதே கூத்து தான்.  என்ன பேச ஆரம்பித்தாலும் அது என்னவோ தெரிலே, சினிமாலே வந்து முடிஞ்சிடும்.  

சந்திரக்கலா போன வாரம் அவ போன மலைக்கோயில் ஒண்ணைப் பத்தி சொல்ல ஆரம்பிச்சிருந்தா.. அவளும் அவ அக்காவும் போயிருந்தாங்களாம். தரிசனமெல்லாம் முடிஞ்சு  மலைப்பாதைலே இறங்க ஆரம்பிச்சு பாதி தூரம் இறங்கியிருக்க மாட்டாங்க.. திடீர்ன்னு மழை பிடிச்சிண்டுடுத்தாம். என்ன செய்யறதுன்னு தெரிலே.. போயிடலாம்ன்னு மலைப்பாதை படிக்கட்டுகள்லே இறங்க ஆரம்பிச்சாங்களாம்.  திடீர்ன்னு சாரல் அதிகமாகி படிக்கட்டு வழுக்க ஆரம்பிச்சு அதுக்கு மேலே இறங்கறது ஆபத்துன்னு ஒரு பெரிய பாறை கீழே ஒதுங்கினாங்களாம்.  அங்கே பக்கத்திலே கைக்கு எட்டற தூரத்திலே ஒரு ரோஜா செடி.. செடி பூராவும் பூத்திருக்காம்.  அந்த மழைச் சாரல்லே பூத்திருந்த ரோஜாலாம் காத்திலே ஈர ரோஜாக்களா நடுங்கிண்டு இருந்ததாம்'.. என்று சந்திரக்கலா சொல்லிண்டு இருக்கறத்தே,  'ஈரமான ரோஜாவே,,என்னைப் பாத்து மூடாதே'ன்னு சசிகலா பாட ஆரம்பிக்க, 

'நிலவு தூங்கும் நேரம்.. நினைவு தூங்கிடாது.. இரவு தூங்கினாலும், உறவு தூங்கிடாது..  இது ஒரு தொடர்கதை.. தினம் தினம் வளர்பிறை..' என்று மைக் மோகனின் இன்னொரு பாட்டை வினிதா தொடர..  நினைவு இழைகள் படாரென்று அறுந்து, ஈரத்தலையை டர்க்கி டவலால் துவட்டிக் கொண்டிருந்த வித்யா தலை நிமிர்ந்தாள்.  மோகன் -- வினிதா .. ஓ! மோகன் உச்சரித்த வினிதா..

தன் ரூமிற்கு வந்து பட்டு மேனியில் மிச்சம் மீதியிருந்த ஈரத்திவலைகளைத் துடைத்து விடுவிடுவென்று உடை மாற்ற ஆரம்பித்தாள் வித்யா.

(தொடரும்)


Sunday, September 22, 2024

இது ஒரு தொடர்கதை -- 20

"மனம் என்பது எதுக்காக செயல்படற Representative  அப்பா?" என்று வித்யா கேட்டதும்  "நான் சொல்றேன்.." என்று பின்பக்கமிருந்து குரல் கொடுத்த பெண் இன்னும் முன்னால் வந்து இவர்களுக்கெதிராக இருந்த சோபாவில் அமர்ந்த பொழுது மோகனின் பார்வை அவள் பக்கம் போயிற்று.

"மோகன்.. இவங்க தான் என்னோட அம்மா.. ஜலஜா.." என்று தன் தாயை மோகனுக்கு அறிமுகப்படுத்துவது போலச் சொன்னாள் வித்யா. வித்யாவை விடக் கொஞ்சம் உயரம் என்றாலும் வித்யாவின் சகோதரி போனற சின்னப்பெண் தோற்றம்,  இவங்க வித்யாவின் அம்மாவா என்று நம்ப முடியாமல் இருந்தது அவனுக்கு.  பெரியவர் புரந்தரதாசருக்கு இரண்டாம் தாரமாக இருக்கலாமோ என்கிற நினைப்பு மேலிட்டது.

அடக்கமாக, "வணக்கம். நான் மோகன்.." என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பொழுது மோகனின் குரல் ரொம்பவும் தழைந்திருந்தது.

"எழுத்தாளர் மோகன்.." என்று அவன் சொன்னதைத் திருத்தினள் வித்யா. 
" 'மனவாசம்'ன்னு ஒரு பத்திரிகை நம்ம வீட்டுக்கு வர்றதே.. அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் ஒருத்தர் இவர். எழுதிப் பழகிய கைம்மா.. மோதிரம் தான் போடணும்"ன்னு சொந்தம் கொண்டாடுகிற நெருக்கத்தில் சிரித்துக்கொண்டே அவள் சொன்ன பொழுது அவள் கரு விழிகள் பளிச்சிட்ட மாதிரி மோகனுக்குத் தோன்றியது.

"வீட்டுக்கு வந்தவரை இப்படியா உக்கார வெச்சு வெறுமனேப் பேசிக்கிட்டிருப்பாங்க?  ஸ்நாக்ஸாவது கொடுத்தீங்களா?" என்றபடியே எழுந்திருந்தாள் ஜலஜா..  "அதெலாம் நீ வந்த பின்னாடி தானேம்மா செய்யணும்?" என்று லேசா சிணுங்கிக் கொண்டே சொன்னாள் வித்யா.

"சரியான பொண்ணுடி நீ!.."என்றபடியே ஜலஜா சோபாவிலிருந்து எழுந்திருந்து வீட்டு உள்ளே போனாள்.

அந்த சமயத்தில் தான் மோகனால் ஜலஜாவைத் தீர்க்கமாகப் பார்க்க முடிந்தது.  ஏற்கனவே அவனுக்குப் பழக்கமான இன்னொரு பெண்ணின் ஜாடை அவளுக்கு இருப்பது போலவான ஒரு உணர்வு சட்டென்று அவன் மன ஆழத்தில் நிழலாடி விட்டுப் போனது.  

வித்யாவுக்கும் அவள் அம்மா ஜலஜாவிற்கும் வயசு வித்தியாசம் அதிகம் இருக்காது போலத் தோன்றியது போலவே இருவர்  உடல் வாகிலும் லேசான மாறுபாடுகள் அவனுக்குத் தெரிந்தது.  சாட்டை போன்ற நீண்ட கூந்தலை ஜலஜா பின்னிப் பின்னால் விட்டிருந்தது பின் பகுதியைத் தொடும் அளவிற்கு நீண்டிருந்தது.  அது  அவளின் உயரத்திற்கும் சற்றே மெலிந்த உடல் வாகிற்கும் பாந்தமாக இருந்தது என்று அவன் நிணைத்த சமயத்தில் தான்   இதே மாதிரி பின்னல் பின்னிய ஆனால் நுனியில் குஞ்சலம் கொண்ட அவனுக்குத் தெரிந்த அந்த இன்னொருத்தி யாரென்று அவன் நினைவுக்கு மட்டும் வராமல் அடம் பிடித்தாள். 

வித்யாவோ தன் கருகரு கூந்தலை அளவாக வெட்டி நடு முதுகு வரை பரத்திப் படர விட்டிருந்தாள்.  இவளின் நடுவாந்திரமான உயரத்திற்கு இது அழகாக இருப்பதாக மோகன் நினைத்துக் கொண்டான். 

உள்ளே போன சடுதியில் திரும்பி வந்த ஜலஜாவின் கையிலிருந்த ட்ரேயில் விதவிதமான தின்பண்டங்கள் இருந்தன.  அதை நடுவிலிருந்த டீபாயில் வைத்தாள்.  "எடுத்துங்கங்க, மோகன்.." என்று அவள் குரலில் இருந்த குழைவு தன்னிடம் ஒரு நெருக்கம் பாராட்டிய உணர்வை ஏற்படுத்தியது மோகனுக்கு.  உடனே ஜலஜாவைப் பார்த்து லேசாக முறுவலித்தபடி ஒரு ஸ்வீட் துண்டத்தை எடுத்துக் கொண்டான்.

"பையா.. இப்போ சொல்லு.. ஜலஜாவும் வந்தாச்சு.. அவளும் நாம பேசற விஷயத்லே கலந்து கொண்டால் சுவாரஸ்யமாக இருக்கும்.." என்றார் புரந்தரதாசர்.

"உங்கள் வழக்கம் போல இவரும் பையாவாகி விட்டாரா?" என்று கலகலவென்று ஜலஜா சிரித்தாள்.  "சமயத்தில் நான் கூட பையா தான் அவருக்கு!" என்று அவள் சொன்ன பொழுது குபீரென்று அடக்க முடியாமல் சிரித்தான் மோகன். 

தான் எழுதும் கதைத் தொடர்பாக ஏதோ விஷய சேகரிப்புக்கு வந்திருக்கும் மோகனின் எண்ணம் இந்த அரட்டையில் திசை திரும்பிப் போய் விடக்கூடாதே என்ற கவலை வித்தியாவிற்கு உள்ளூர இருந்தது.  அதனால் அது தொடர்பாகப் பேச்சைத் திருப்ப வேண்டி "அப்பா! மனம்ங்கறது எதுக்கு பிரதிநிதியா செயல்படறதுன்னு நான் கேட்டதுக்கு  அம்மா அது பத்தி சொல்றேன்னு சொன்னாங்க.." என்று நிணைவுபடுத்துகிற மாதிரி சொன்னாள் வித்யா.

வித்யா கேட்டதற்குத் தொடர்ச்சியாக "எனக்கும் அது பத்தி அடிப்படைலேயே சந்தேகம்.  மனம்ங்கறது சுதந்திரமா  தன்னிச்சையா செயல்பட முடியாதா என்ன? அது எதுக்கு இன்னொண்ணுக்குப் பிரதிநிதியா செயல்படணும்?" என்று கிடைத்த சந்தர்ப்பத்தை விட்டு விடாமல் மோகன் கேட்டான்.

"இப்படிக் கேட்டாத்தான் சொல்றவங்களுக்கும் விளக்கிச் சொல்ல ஏதுவாக இருக்கும்.." என்றார் புரந்தர தாசர்.  "இப்போ நீ சொல்ல வந்ததைச் சொல்லு ஜலஜா.." என்று அவளைப் பார்த்தார்.

"பொதுவா நாம செயல்படற எதுக்கும் மூளை தான் அடிப்படைக் காரணமா இருக்கு இல்லையா? அந்த மூளையோட செயல்பாட்டின் ஓரு வடிவம் தான் மனம் என்கிறதும்" என்றாள் ஜலஜா. இந்த மாதிரி நிறையப் பேசிப் பழக்கப்பட்டவள் போல அவள் தோரணை அந்த சமயத்தில் இருந்தது.  "மனுஷங்களோட உடம்புக்குள் உறுப்பாக இருப்பவற்றை உடற்கூறு சாத்திரத்தில் மூளை, இதயம், நுரையீரல் என்றெல்லாம் வகைப்படுத்திச் சொல்கிறோம், இல்லையா?.. அந்த மாதிரி மனுஷா உடம்பிலே சாதாரணமா ஒரு ஸ்கேன் பண்ணிப் பார்த்தாக் கூட கண்ணால் பார்த்துச் சொல்வதற்கு மனம் என்று எந்த உறுப்பும் இல்லாததினாலே தான் மனம்ன்னா எதைக் குறிப்பிட்டுச் சொல்றதுன்னு தயக்கம் நமக்கெல்லாம் ஏற்படறது.." என்றாள்.
ஜலஜா.

"அட! ரொம்ப ஈஸியா சொல்லிட்டீயே!  எனக்குத் தான் இப்படியெல்லாம் சுலபமா எதையும் மத்தவங்களுக்கு விளக்கிச் சொல்லத் தெரிலேங்கறது எனக்கேத் தெரியறது.." என்றார் புரந்தரதாசர்.

"You are a man of action.. Appa.." என்றாள் வித்யா.  அவள் சொன்னதற்கு புரந்தரதாசரே கலகல்வென்று சிரித்து விட்டார்.

மோகனுக்குத் தான் என்ன சொல்வது என்று தெரியவில்லை.  மனம் பற்றி ஜலஜா சுருக்கமாகச் சொன்னது விளங்கியது மாதிரியும் இருந்தது..  முழுமையாகச் சொல்லாத குறை கொண்ட அரை குறை விளக்கம் மாதிரியும் இருந்தது.  இப்பொழுது தான் முதல் முறையாக எல்லாரையும் பார்த்திருக்கிறோம்.. இந்த சந்தர்ப்பத்திலேயே உரிமை எடுத்துக் கொண்டு எல்லாவற்றிற்கும் விளக்கம் கேட்பதற்கும் தயக்கமாகவும் ஒரு பக்கம் இருந்தது.  அதனால் பேசாது இருந்தான். 'இதுவே புரந்தரதாசரும்,  தானும் மட்டுமே இருந்திருந்தால் நிறைய கேட்டுத் தெரிந்து கொண்டிருந்திருப்போம்..' என்று  தனக்குள்ளேயே நினைத்துக் கொண்டான்.  அப்படி நினைத்துக் கொண்டே, இப்படி நினைப்பது தான் மனதின் செயலா என்றும் தன்னுள் கேள்வி கேட்டுக் கொண்ட பொழுது அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.

      

"எதுக்கு சிரிக்கிறீங்க?  நான் சொன்ன விளக்கத்திற்கா?" என்று நேரிடையாகவே கேட்டு விட்டாள் ஜலஜா.

"ஹி..ஹி.. என்னைப் பற்றி நானே நினைத்துக் கொண்டேன். சிரிப்பு வந்து விட்டது.." என்று மோகன் சொன்ன பொழுது, வித்யாவும் சிரித்து விட்டாள்.

"நீ சொன்னது abstract-டா இருக்கறது எனக்கே தெரியறது, பையா.." என்றார் ஜலஜாவைப் பார்த்தபடியே புரந்தரதாசர், திடுதிப்பென்று.

"எனக்கும் அதே உணர்வு தான்.." என்று ஜலஜா புன்னகைத்தாள்..  அவளே தொடர்ந்து, "இந்த சப்ஜெக்ட் ஏதோ தியரியை விளக்கற லெக்சர் மாதிரி இருந்தா, சரிப்பட்டு வராது.." என்ற பொழுது, 

"ஓண்ணு செய்யலாமா?" என்று மார்பில் புரண்ட கூந்தல் கற்றையை முதுகு பக்கம் தூக்கிப் போட்டுக் கொண்டாள் வித்யா. "ஓண்ணு செய்யலாம்.  அடுத்த தடவை மோகன் வரும் போது அவர் இப்போ எழுதற கதையோட நிகழ்ச்சிகளை வைத்து மனம்ன்னா என்னன்னு நமக்குள்ளேயே விளக்கிக்கற மாதிரி ஒரு டிஸ்கஷன் நடந்தா அது நல்லா இருக்குமில்லே?" என்று அவள் சொன்னது மோகனுக்கும் பிடித்திருந்தது.

"கரெக்ட்.. அப்படியே செய்யலாமா, மோகன்?.." என்று புரந்தரதாசர் எழுந்து மோகனுக்கு அருகில் வந்து அவன் கைபிடித்துக் குலுக்கினார்.  "நாளைக்கு நான் ப்ரீ.. காலை ஒன்பது மணி வாக்கில் வைச்சுக்கலாமா?" என்றார்.

அவர் இந்தளவுக்கு தன் மேல் பிரியம் கொண்டிருந்தது மோகனுக்கும் பிடித்திருந்தது.  "அப்படியே செஞ்சிடலாம், ஸார்" என்றான். 

"ஓக்கே, மோகன்.  நாளைக்கு நாம மீட் பண்ணலாம்.." என்ற  புரந்தரதாசர், தன் கைக்கடியாரத்தைப் பார்த்தபடி, "அட! வித்யா..  மறந்தே போயிட்டேனே! சர்மா சொன்னது என்னாச்சு?.. ஒரு போன் அடிச்சிக் கேக்கறையா?" என்று சொன்னபடி வீட்டின் உள்பக்கம் போனார்.

"கேக்கறேன், அப்பா.." என்றவள், மோகன் பக்கம் திரும்பி "ஒரு நிமிஷம், மோகன்.." என்று தன் அப்பாவைத் தொடர்ந்தாள்.

இப்பொழுது மோகனும் ஜலஜாவும் மட்டும் தான்.  

ஜலஜாவிற்கு தனியாக நிற்கும் இவனுடன் ஏதாவது பேச வேண்டும் போலத் தோன்றியது.  இருந்தாலும் திடீரென்று ஒருவிதத் தயக்கம் அவள் வாயையும் கட்டிப் போட்டிருந்ததை அவளே உணர்ந்தாள்.  சிநேகமாக மனசுக்குப்படும் ஓர் ஆணுடன் அன்பாகவோ இல்லை சிரித்துப் பேசினால் கூட அதை அந்தப் பெண் தன்னுடனான நெருக்கத்தை விரும்புவதைத் தெரியப்படுத்தும் அணுகுமுறை என்று வலிய அர்த்தப்படுத்திக் கொள்ளும் ஆண்கள் இருப்பதால் அவளுக்கு இயல்பாகவே தயக்கம் ஏற்பட்டது.  பெண் நட்பையும் காமத்தையும் பிரித்துப் பார்க்கத் தெரியாத ஆணுலகம் என்று எங்கேயோ வாசித்திருந்தது வேறு, சமயம் பார்த்து அவள் நினைவுக்கு வந்தது.

'ஒரு நிமிஷம், மோகன்..' என்று வித்யா சொல்லி விட்டுப் போனதால் அவன் தேமேன்னு அவளுக்காக நின்று கொண்டிருக்கிறான் என்று ஒரு வழியாக அவளுக்குப் புரிந்ததும் இந்த வித்யா சீக்கிரம் திரும்பி வர மாட்டாளா என்று தோன்றியது.  உடனே தன் அப்பொழுதிய மன உணர்வுகளை ஒன்றாகக் குவித்த மாதிரி  "வித்யா, இங்கே வாயேன்.." என்று வாய் குவித்து காற்றோடு பேசுகிற மாதிரி ஜலஜா தலை நிமிர்த்தி மந்திரம் ஓதுவது போல மனசுக்குள்ளேயே முணுமுணுத்தாள்.  அடுத்த வினாடியே தூரத்தில் வீட்டின் வெளி ஹாலில் இங்கிருந்து பார்க்கிற மாதிரியே வித்யாவின் உருவம் தெரிந்தது. காற்றையே தூதுவனாக்கி அழைப்பு விடுத்தது போல வித்யா அவளை நோக்கியே வருவது தெரிந்ததும் ஜலஜாவின் முகம் மலர்ந்தது. 

மோகனோ வாசல் கேட்டிற்கு இரண்டடி முன்பக்கம் நின்ற மாதிரி வித்யாவிற்காக காத்திருக்கும் தோரணையில் நின்று கொண்டிருந்தான். கொஞ்ச தூரத்தில் ஜலஜா வீட்டின் உள் பக்கம் பார்த்த மாதிரி நின்று கொண்டிருப்பதை பார்த்ததும் அவள் கவனத்தைக் கவர்கிற மாதிரி ஏதாவது கேட்கலாமா என்று மோகனுக்குத் தோன்றிய நேரத்தில் அவள் பெயர் அவன் நினைவுக்கு வராமல் அடம் பிடித்தது.  

லேசாக இருட்டு கவிந்து கொண்டிருந்தது. 

'பெயர் தானா முக்கியம்?  "ஏங்க.." என்கிற மாதிரியான அழைப்பில் கூப்பிட்டுப் பார்க்கலாமே என்று அவன் நினைத்த தருணத்தில்.."உன்னை எப்பவோ எங்கையோ பார்த்திருக்கிற மாதிரி தோண்றது.. எப்போன்னு தான் ஞாபககத்திற்கு வரலே?" என்று அவன் கழுத்துப் பக்கம் கிசுகிசுத்த பெண்குரலைக் கேட்ட  உணர்வில் சட்டென்று சிலிர்த்துப் போனான் மோகன். அந்தக் குரல் அவனில் யாழை மீட்டிய மாதிரி இருந்தது.  இத்தனை நேரம் தன் நினைவில் முழுகியிருந்த அந்த இன்னொரு பெண்ணே பொறுக்க மாட்டாமல் தன் மூடு திரையைக் களைந்து நெருக்கத்தில் வந்து பேசிய உணர்வின் ஆட்படுதலில் அவன் திகைத்துப் போனான்.   

சுற்று முற்றும் பார்த்தான். அவனுக்குக் கொஞ்சம் முன்னால் வீட்டின் உள்பக்கம் பார்த்தபடி நிற்கும் வித்யாவின் அம்மாவையும் அவனையும் தவிர வேறு யாரும் அங்கிருப்பதாக அவனுக்குப் புலப்படவில்லை.  அதே கணத்தில் லேசாக மிக மிக லேசாக பரவிய காற்றில் அவனுக்கு முன்னாலிருந்து படர்ந்த மாதிரி அடர்த்தியான  பர்ப்யூம் வாசனை மட்டும் அவன் மேலும் மேவிய மாதிரி இத்தனை நேரம் இல்லாத ஒரு நறுமணம் அவனைப் பீடித்த மாதிரி மோகனுக்கு இருந்தது.

தன் வசமிழந்து, "நானும் அதைத் தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன், வினிதா,," என்ற அவன் குரல் அவனுக்கே கேட்காத அளவு அவனுள் அமிழ்ந்து போயிற்று..

(தொடரும்)


Saturday, September 14, 2024

இது ஒரு தொடர்கதை -- 19

குலச்சிறை நாயனார் சிலையிலிருந்து கொஞ்ச தூரம் தள்ளித் தான் 49-வது கற்சிலையாக நின்ற சீர் நெடுமாறன் நாயனாரின் சிலை இருந்தாலும் அவர் சிலை ஸ்தாபித்திருந்த இடம் குறிப்பாக ஏற்கனவே பாண்டியனுக்கு அத்துபடி  ஆகியிருந்ததினால் தன் நடையில் கொஞ்சம் வேகத்தைக் கூட்டியே பாண்டியன்


  தென்னாடுடைய சிவனே போற்றி!!  எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

நடந்ததைப் பார்க்க முடிந்தது.  அவன் வேகத்தோடு போட்டி போட்டுக் கொண்டு நடக்க முடியாவிட்டாலும் மங்கையும் தொடர்ந்து வரும் சிலைகளில் தன் பார்வையைச் சுழல விட்டபடியே பாண்டியனைத் தொடர்ந்தாள்.  மஙகையர்க்கரசியாரின் சிலையைப் பார்வையிலிருந்து தப்ப விட்டுவிடக் கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வு வேறு ஒரு பக்கம்!...

என்ன தான் நாயன்மாராய் இருந்தாலும் மன்னனாய் இருந்தவன் இல்லையா? அந்தக் கம்பீரம் அழியாமல்  நெடுமாற நாயனாரின் உடலிலும் திண் தோள்களிலும் முகத்திலும் படிந்திருந்தது.  நாயனாரின் சிலையை நெருங்கியதும் மங்கையைக் காணோமே என்று பாண்டியன்  திரும்பிப் பார்த்தான். நாலைந்து சிலைகளுக்குப் பின்னால் அவள் வந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும், "ராணியும் ராஜாவுமாய் சேர்ந்து பார்ப்போம் என்று சொன்னே, இல்லையா.. வா.. ராஜா இங்கேயிருக்கிறார் பார்.." என்று நெடுமாற நாயனார் சிலையை பாண்டியன் சுட்டிக் காட்டினான்.  அவன் கண்கள் நாயனார் சிலையின் மேலேயே நிலைக்குத்தி இருந்தது.

நடையில்கொஞ்சம் வேகத்தைக் கூட்டி அருகில் வந்த மங்கை நெடுமாறனார் சிலையைப் பார்த்தபடி,  "சும்மா சொல்லக்கூடாது.. ராஜ களையோடத் தாங்க  இருக்கார்.." என்றாள்.  

"நான் நினைச்சதையே நீயும் சொல்லணும்ங்கற எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது.. அதையே நீயும் சொன்னதில் சந்தோஷம், மங்கை.." என்றான் பாண்டியன்.

"அதுக்குள்ளேயே அப்படி சொல்லிட்டா, எப்படி?" என்றாள் மங்கை.  

"எதுக்குள்ளேயே?" என்று புருவத்தை உயர்த்தினான் பாண்டியன்.

"நான் நினைக்கறதையே நீங்க சொல்றீங்களான்னு பாக்க வேண்டாமா?"

"புரிலே.."                                                                                                                            55

அரசியார் சிலையை இன்னும் நாம பாக்கலே.. அவங்களை நாம பாக்கறப்போ நான் நினைக்கிறதையே நீங்களும் சொல்றீங்களான்னு பாக்க வேண்டாமா?" என்று மங்கை சொன்ன பொழுது அவள் குறிப்பிட்டது புரிந்த மாதிரி கலகலவென்று சிரித்தான் பாண்டியன்.  "அதையும் பார்த்தாப் போச்சு.." என்றவாறே பக்கத்துச் சிலையைப் பார்த்தான் பாண்டியன்.  50- என்ற எண் போடப்பட்டு நேச நாயனார் என்று சுவரில் குறித்திருந்தார்கள்.

"ஐம்பது வந்திட்டோம்.. பக்கத்லே தான் அவங்களும் இருப்பாங்க..வா.. அதையும் பார்த்துடலாம்" என்றபடியே பிரிய மாட்டாமல் பிரிகிற மாதிரி நெடுமாற நாயனாரின் சிலையை மீண்டும் ஒருமுறை உன்னிப்பாக நோட்டமிட்டு விட்டு நடையை எட்டிப் போட்டான் பாண்டியன்.

பாண்டியன் சொன்னபடியே நின்ற சீர் நெடுமாறனனுக்கு ஆறு சிலைகள் தாண்டி 55- என்ற எண் போடப்பட்டு மங்கையர்கரசியார் சிலை இருந்தது. அறிவார்ந்த கூர்மையான நாசி, வட்ட விழிகள், கருங்கூந்தலைக் கொண்டையிட்டு முடிந்த விதமே அந்த வட்ட முகத்திற்கு மேலும் அழகூட்டியது. நெற்றியில் திரு நீறு,  தலைக் கொண்டையில் மல்லிகைச் சரம் சூட்டியிருந்தார்கள்.  கைகள் குவித்த நிலையில் அரசியாரின் சிலையைத் தத்ரூபமாக வடித்திருந்தார்கள்.  

அரசியாரின் சிலையை தீர்க்கமாகப் பார்க்கும் பொழுதே மங்கை ஆழ்ந்த யோசனையில் உணர்ச்சி வசப்பட்டாள்.  'இவர் முயற்சியால் தானே இவரது கணவரின் மனமாற்றப் போக்கைக் போக்கவும் அவருக்கு பீடித்த நோயைத் தீர்க்கவும் முடிந்தது?' என்று சிந்தனை ஓடியது.  மங்கைக்கு அவரைப் பார்க்கும் பொழுது டாம்பீகமான அரச குடும்பப் பெண்ணாகத் தோன்றவில்லை. எளிய  சாதாரண மக்களின் வீட்டுப்பெண் போன்ற குடும்பப் பொறுப்பும் தீர்க்கமான முடிவுகளை எடுத்து பாதிக்கப்பட்ட தன் கணவரின் நலன் காத்த வெற்றித் திருமகளாகவும் காட்சியளித்தாள். உடனே 'இறைவனே! எனக்கும் இந்த மாதிரியான திறமைகளைக் கொடுத்து எடுத்த காரியங்க்களில் வெற்றி பெற நீ அருள வேண்டும்' என்று மனமாற வேண்டிக்கொண்டாள்.

'என்ன, அப்படியே அவங்க சிலையோட நீயும் ஒரு சிலையா ஒன்றிப் போயிட்டே போலிருக்கு!" என்று பாண்டியன் சிரித்தான்.

"ஆமாங்க.. ராணியார் எவ்வளவு அழகா இருக்காங்க, பாத்தீங்களா?" என்று கொஞ்ச நேரத்திற்கு முன் தனக்கேற்பட்ட உணர்வுகள் கலையாமலேயே கேட்டாள் மங்கை.

"ஆமாம், மங்கை.. பொதுவாகவே தமக்கான பெண்களைத் தேர்வு செய்வதில் அரசர்கள் என்றும் சோடை போனதே இல்லை" என்று ரொம்ப அலட்சியமாக சொன்னான் பாண்டியன்.  

அவன் சொன்னதைக் கேட்டு எரிச்சலாக இருந்தது மங்கைக்கு.  பெண்களின் உள்ளுணர்வுகளைப் புரிந்து கொள்ள சக்தியற்றவர்களாகவே ஆண்டவன் இந்த ஆண்களைப் படைத்து விட்டானோ என்ற பொருமல் மனசில் தேங்கியது.  அல்லது தன் அரச வாழ்க்கையில் இந்த அரசியார் பட்ட மனக்கஷ்டங்களும் அவற்றைக் களைய இவர் மேற்கொண்ட அரிய செயல்களையும் தன் கணவன் அறிந்திருக்க மாட்டாரோ என்ற ஐயம் அவளுக்கேற்பட்டது.   அப்படி அதெல்லாம் அறியாத பட்சத்தில் பாண்டியன் நெடுமாறனிடம் இவர் பக்தி கொள்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்று மங்கைக்கு எரிச்சலாக இருந்தது.

"என்ன மங்கை?  அப்படி என்ன யோசனையில் மூழ்கிட்டே? அரசியார் இவ்வளவு அழகாய் இருக்கிறாரேன்னு தானே நினைத்து மலைச்சுப் போய் நிக்கறே?" என்று கேட்டான்.

சட்டென்று தன் உணர்வுகளை மறைத்துக் கொண்டு, "ஆமாமாம்.. எப்படி நான் நினைப்பதை அப்படிக் கரெக்டாக கண்டு பிடிக்க முடிஞ்சது?" என்று சொல்லிச் சிரித்தாள் மங்கை.

"ஹே! இதெல்லாம் கண்டுபிடிக்கறது கஷ்டமா என்ன? பொதுவா பெண்கள்னாலே இன்னொரு பெண் அழகா இருந்தா அது அவங்களை ரொம்ப பாதிக்கும். அந்த சைக்காலாஜி அடிப்படைலே தான் சொன்னேன்" என்றான் பாண்டியன்.

அவன் சொன்னதைக் கேட்டு மேலும் எரிச்சல் கூடியது அவளுக்கு.  இருந்தாலும் ரொம்ப கஷ்டப்பட்டு அதை அடக்கிக் கொண்டு, "சரியாச் சொல்லிட்டீங்களே!" என்று போலியாகத் தன் உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் புன்னகைத்தாள் மங்கை.

(தொடரும்)

 


Monday, September 9, 2024

இது ஒரு தொடர்கதை -- 18

டையில் காளியண்ணன் இல்லை.     இது யாரோ புது ஆள்.

காளியண்ணனுக்குத் தெரிந்தவர் தான் என்று காட்டிக்கொள்கிற மாதிரி, "காளி இல்லை?" என்று ஒரு கேள்வியைக் கடையில் இருந்த ஆளிடம் கேட்டு விட்டு, பதிலை எதிர்பார்க்காத தோரணையில் செருப்பை மட்டும் தட்டி தடுப்பைத் தாண்டி அதற்குரிய இடத்தில் கழட்டி விட்ட பிறகு இருவரும் கோயிலை நோக்கி நடந்தனர்.     

கூட்டம் அவ்வளவாக இல்லை.  சுவாமி சன்னதியில் இவர்களைப் பார்த்ததும் ஏற்கனவே தெரிந்திருக்கும் அறிகுறியில் லேசான சிரிப்புடன்  கற்பூர தட்டுடன் படியேறி உள்ளே செனற குருக்கள், சுவாமிக்கு தீபாராதனை காட்டி வெளியே வந்து இவர்கள் பக்கம் வந்ததும் பாண்டியன் கற்பூர ஜ்வாலை மேற்பக்கம் கை நீட்டி கண்களில் ஒற்றிக்கொண்டு சில்லறையைத் தட்டில் இட்டான்.. மங்கையும் ஒற்றிக் கொண்டாள்.   குருக்கள் இவனுக்கு வீபூதி பிரசாதமும் மங்கைக்கு குங்குமமும் சுவாமி பாதப்பக்கமிருந்து தான் எடுத்து வந்திருந்த மலர் சரடும் கொடுத்தார்.  மங்கை குங்குமத்தை நெற்றி வகிட்டில் இட்டுக் கொண்டு பாண்டியன் பக்கம் லேசாகத் திரும்பி தலையில் சூட்டிக் கொண்டாள். அதற்குள் இன்னொரு ஆள் வந்து விட தீபாராதனைத் தட்டை அவரிடம் எடுத்துச் சென்றார்.

சுவாமி தரிசனத்தை முடித்துப் பிராகாரம் பக்கம் வந்ததும் "ராஜாவைப் பார்த்துட்டுப் போகலாம், மங்கை" என்று நாயன்மார்கள் வரிசை பக்கம் சென்றான் பாண்டியன்.  சொல்லப்போனால் விறுவிறுவென்று அவன் நடந்த வேகம்,  நின்ற சீர் நெடுமாற நாயனாரைத் தான் பார்க்க ஆவலோடு வந்திருக்கிறான் என்று தெரியப்படுத்துவது போல இருந்தது.   

"நீங்க ராஜான்னா நான் ராணியைப் பார்க்கப் போகட்டுமா?" என்றாள் மங்கை.

"தனித்தனியாப் பார்ப்பானேன்?  நாம ரெண்டு பேரும் அவங்க ரெண்டு பேரையும்ன்னு சேர்ந்து பார்த்துட்டாப் போச்சு.."

"அப்படியே குலச்சிறையாரையும்..." என்றவளை ஆழ்ந்து பார்த்தான் பாண்டியன்.

"என்ன அப்படிப் பார்க்கிறீங்க? குலச்சிறையார் இல்லேனா இவங்களை இப்படி இந்த வரிசைலே சேர்த்து வைச்சு நாம பாக்கப் போறதில்லை. தெரியுமோ?" என்று தலைசாய்த்துக் கேட்டாள் மங்கை.

"எனக்கெங்கே அதெல்லாம் தெரியுது?.. உன்னைப் போல பி.லிட்., படிச்சிருக்கேனா என்ன?" என்றான் பாண்டியன்.

அவன் குரலில் ஒரு சோகம் இழையோடியதைக் கவனித்து விட்டாள் மங்கை. அவளுக்கும் வருத்தமாக இருந்தது.  அதை துடைத்தெறிய "நான் பி.லிட்.,ன்னா நீங்க எம்.ஏ. இல்லையா?  என்னை விட படிப்பு ஜாஸ்தி" என்றாள்.

"இல்லை, மங்கை.. தமிழ் இலக்கியம் தெரிஞ்சிருக்கிறது, ஒரு தனித்தகுதி இல்லையா?"

மங்கை பதிலே பேசவில்லை.     

நாயன்மார்களில் முதல் சிலையாக அதிபக்தர் இருந்தார்.  அவரை அடுத்து ஒவ்வொரு  நாயன்மார் சிலையைப் பார்ப்பதும் பின்சுவரில் அவரின் பெயரைப் பார்ப்பதுமாக இருவரும் ஒவ்வொரு சிலையாகப் பார்த்துக் கொண்டே வந்தனர்.

24-வது சிலையாக குலச்சிறையார் இருந்தார்.  மந்திரி பெருமானைப் பார்த்த சந்தோஷத்தில் பாண்டியன் புன்முறுவலுடன் மங்கையைப் பார்த்தான்,  இருவரும் குலச்சிறை நாயன்மாரை இருகரம் கூப்பி வணங்கினர்.  இருவர் மனமும் என்னவோ குலச்சிறையார் திருவுருவ தரிசனத்தில் மெய்மறந்து குவிந்தது.

புரந்தரதாசரைப் பார்த்தால் ஆழ்ந்த யோசனையில் இருப்பவர் போலத் தோன்றியது. அவராக யோசனை கலைந்து என்ன சொல்லகிறாரோ அதைக் கேட்டுக் கொள்வோம் என்ற முடிவில் இருந்த மோகனின் கவனம் வித்யாவின் மேல் படிந்தது.  

'பார்த்தவர் எவரையும் மறுபடியும் பார்க்கத் தூண்டும் அழகு,  காலேஜ் மாதிரி மேல் படிப்பு படிக்கிறாளா அல்லது ஏதானும் வேலைக்குப் போகும் பெண்ணா எனறு தெரியவில்லை.  தன் எழுத்துக்களை  ஆர்வத்துடன் பத்திரிகைகளில் படிப்பவள் என்று இப்போதைக்குக் தெரிகிறது. அலைபாயும் விழிகள்.  சூடிகையாகத் தெரிகிறாள். இவள் துணை கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அவன் மனம் எண்ணியது. 

'வித்யா இப்படி.  அவள் அம்மா எப்படியோ' என்று அவன் மனசின் இன்னொரு பக்கத்தில் சந்தேகப்பூ பூத்தது.  'கணவனையும் பெண்ணையும் வீட்டில் காணவில்லை, அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தேடி வெளியே சென்றிருந்து இப்பொழுது தான் வீட்டிற்குள் நுழைந்த ஒரு பெண் இந்தப் பக்கம் வந்து கூடப் பார்க்க மாட்டாளோ' என்று அவன் மனதில் ஒரு எண்ணம் தலைகாட்டியும் போயிற்று. 'அல்லது இந்த வீட்டில் இப்படித் தான் தனித்தனி யூனிட்டுகளாய் ஒவ்வொருவரும் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்க் கொண்டே இருப்பார்களோ என்னவோ!  வித்யாவை பார்த்தால் அப்படித் தெரியவில்லை.  பார்க்கலாம்'. என்று நினைத்துக் கொண்டான்.  

'வித்யா போன்ற பெண் தனக்கு துணையாக கிடைத்தால் எதுவாயினும் சமாளித்து விடலாம் என்று மனசில் நம்பிக்கை பிறந்த நிமிடமே, வாழ்க்கையில் அடுத்த கட்ட நகர்வுகளுக்காக இயல்பாகவே பாதைப்போடுகிற மாதிரி அடுத்த அடுத்த நிகழ்வுகள் எப்படியெல்லாம் நிகழ்கின்றன என்பதை நினைக்கவே அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த வாழ்க்கை போலவே இயல்பாக தான் எழுதும் கதைகளும் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

"மோகன்! தெய்வ தரிசனம்ன்னா என்ன? தெய்வத்தின் அருகாமையை நாம் மனசார உணர்வது.இல்லையா?" என்றார் புரந்தர தாசர்.   "இந்த 'நாம்'-- அதாவது உன்னைப் பொறுத்த மட்டில் 'நான்'ங்கற 'indiduval' -லை மனம், உடல்ன்னு ரெண்டாப் பிரிக்கறே நீ! இல்லையா?...  இது நீ எழுதற கதைக்காகன்னு நீ சொன்னாலும் நெஜமாலுமே இதான் உண்மை, மோகன்!.. நாம  ஒவ்வொருத்தரும் வெளிப்பார்வைக்கு தெரியற மாதிரி ஒவ்வொரு திரேகத்தைக் கொண்டிருந்தாலும் இந்த திரேகம் அதாவது வெளிப்பார்வைக்குத் தெரியற இந்த உடல் நாமல்ல. யோசிச்சுப் பார்த்தா,  இந்த உடம்புக்குள் உள்ளடங்கியிருக்கற மனம் தான் வெளியுலகத்திற்கு நம்மை வெளிப்படுத்தற பிரதிநிதின்னு தெரியும். கையைக் குவித்து சாமியைக் கும்பிடறோம், சரி.. நமஸ்காரம் பண்ணறோம், சரி.. இதெல்லாம், இந்த நடவடிக்கையெல்லாம் அப்பப்போ மனம் சொல்லி உடல் உறுப்புகள் இயங்கற நடவடிக்கைகள்.. பாரதியார் சொன்னார் இல்லையா, 'மனம் வெளுக்க மார்க்கம் காணீர்'ன்னு.  அந்த உண்மை இது தான்.." என்று சொன்னார் புரந்தரதாசர்.  அவர் விவரித்த விதம் பள்ளிக்கூடத்தில் வகுப்பெடுக்கிற மாதிரி இருந்தது மோகனுக்கு. 

தன் தந்தை சொன்னதை உன்னிப்பாகக் கவனித்து வந்த வித்யா,"புரியறது, அப்பா! இருந்தாலும் எனக்கு ஒரு டவுட்" என்றாள்.

"சொல்லு, பையா,,"

"மனம் தான் வெளியுலகத்திற்கு நம்மை வெளிப்படுத்தற பிரதிநிதின்னு சொன்னே தானே?  பிரதிநிதின்னா ஒருத்தருக்காக செயல்படற இன்னொருத்தர்ன்னு தானே நாம சொல்வோம்?  அப்படிப் பாத்தா மனம்ங்கறது எதுக்காக செயல்படற Representative அப்பா?" என்று அவள் கேட்டது ஸ்பஷ்டமாக அந்த அறையில் ஒலித்தது. 

" நான் சொல்றேன்.." என்ற குரல் கேட்டு சட்டென்று பின்பக்கம் திரும்பிப் பார்த்தான் மோகன்.  வாளிப்பான திரேகம் தூக்கலாகத் தெரிய கதவு பக்கம் அழகான பெண்ணொருத்தி நின்று கொண்டிருந்தாள்.  இவங்க தான் வித்யாவின் அம்மாவா என்று திகைப்பு கூடிற்று அவனுக்கு. 

 

(தொடரும்..)  


 

                                 

Tuesday, September 3, 2024

இது ஒரு தொடர்கதை -- 17

(கதையின் முன்பகுதிகளையைப் படிக்காதவர்களுக்காக முன் கதைச் சுருக்கம் என்ற பெயரில் கதையின் போக்கைத் தெரிந்து கொள்ள இது ஒரு குறிப்பு தானே தவிர ரசனையான வாசிப்புக்கு   முன் பகுதிகள் முழுதையும் வாசித்து விட வேண்டுகிறேன் அது உங்களுக்கோர் புது அனுபவமாக இருக்கும்..)

முன் கதைச் சுருக்கம்

மோகன் கட்டிளம் காளை,  கல்யாணம் ஆகாதவன்,  இளம் எழுத்தாளன், மனவாசம் என்னும் பத்திரிகையில் சமீபத்தில் தான் பணியில் சேர்ந்திருக்கிறான்.  அவன் எழுதிக்கொண்டிருக்கும் சமூகத்தொடர் தொடர்பாக பலரை சந்தித்து நிஜத்தின் சாயலை எழுத்தில் கொண்டு வர அனுபவம் பெற வேண்டியிருக்கிறது.  அந்த நோக்கத்தில் புரொபசர் புரந்தர தாசரை சந்திக்கிறான்.  புரந்திரதாசரின் அருமைப் புதல்வி வித்யா.

பாண்டியனும் மங்கையும் இளந்தம்பதிகள்.  மோகனின் தொடர்கதை கதாபாத்திரங்க்கள்.  உள்ளூர் ஆடலரசர் கோயில் பிராகாரத்தில் வரிசையாக வீற்றிருக்கும் அறுபத்து மூவர் சிலைகளின் மீது சமீபகாலமாக மோகனுக்கு ஒரு பிடிப்பு ஏற்பட்டிருக்கிறது.  அதுவும் நின்ற சீர் நெடுமாற நாயனார், மங்கையர்க்கரசி நாயனார், குலச்சிறை நாயனார் ஆகிய மூன்று நாயன்மார்களிடம் தனித்தன்மையான பாசம் அவனுக்கு ஏற்படுகிறது.  கோயில் பண்டாரம், பாண்டியனுக்கு நாயன்மார்கள் பற்றிய வரலாற்றுத் தகவல்களைச் சொல்ல பெருந்துணையாய் இருக்கிறார்.

(இனி தொடரலாம்..)


'சட்'டென்று தலை திருப்பிப் பார்த்தான் மோகன்.                    

'அம்மா வந்தாச்சு போலிருக்கு அப்பா..' என்று வித்யா சொன்னது அவனை உசுப்பி விட்ட சடுதியில்.   காரை விட்டு இறங்கிய அந்தப் பெண்ணின் பின்புறம் தான் அவன் பார்வையில் தட்டுப்ப்ட்டது. 

 'அப்புறம் என்ன நடந்தது, நீ சொல்லுப்பா' என்று புரந்தரதாசரின் கேள்வி அவனை அவர் பக்கம் திருப்பியது.

எங்கு விட்டோம் என்ற மோகனின் நினைவை மீட்டெடுக்கிற மாதிரி "கும்பேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் முடிந்தாலும் மனமில்லாமல் அந்தப் பெரியவருடன்  வெளியே வந்ததாகச் சொன்னே..அதுக்கு மேலே என்ன நடந்தது?" என்று கேட்டார் புரந்தரதாசர்.


"அதுக்கு மேலே.." என்று முணுமுணுத்தபடியே லேசான யோசனையில் ஆழ்ந்த மோகன், "பாதிப் பிராகாரம் வரை என்னுடன் வந்த அந்தப் பெரியவர், 'சரிப்பா;.. நான் இங்கே தான் இருப்பேன்..  நீ எப்போ வந்தாலும் என்னை இங்கேப் பார்க்கலாம்..' ன்னு சொல்லி எனக்கு விடை கொடுத்த நினைவு.. " என்று அரை குறை  ஞாபகத்தில் சொல்கிற        மாதிரி சொன்னான்.                                                                                                                                              

 "அப்போ நாம கும்பேஸ்வரர் கோயிலுக்குப் போனால் அந்தப் பெரியவரைப் பார்க்கலாம்'ன்னு சொல்லு.." என்று புரந்தரதாசர் உடனே கேட்டது மோகனுக்கு எதிர்பாராதக் கேள்வியாக இருந்தது.

"ம்.. பார்க்கலாம்ன்னு தான் நினைக்கிறேன்.." என்று இழுத்தபடியே சொன்னான் அவன்.

"நீ கடைசியா எப்போ அவரைப் பாத்தே?" என்ற புரந்தரதாசரின் கேள்விக்கு "அதான் ஆறேழு மாசத்திற்கு முன்னாடி கும்பகோணம் போனேன்னு மோகன் சொன்னாரேப்பா" என்றாள்.வித்யா.

"தேங்க்ஸ்.." என்று குரலெழும்பாமல் மனசுக்குள் சொல்லிக் கொண்டான் மோகன்.  சொல்லப்ப்போனால் தான் எப்போ குடந்தை போனோம் என்பதே  புரந்தரதாசர் கேட்ட பொழுது சட்டென்று அவன் நினைவுக்கு வராமல் இருந்தது.  அவன் மனம் ஏனோ வித்யாவின் அம்மாவைச் சுற்றி அலைபாய்வதை அவனே உணர்ந்தான்.  ஏனென்று தான் தெரியவில்லை.

னிக்கிழமை மதியம்.

"மங்கை! மாலை  கோயிலுக்குப் போகலாமா?" என்று கேட்டான் பாண்டியன்.

"வெளிலே போனீங்க. சீக்கிரம் வந்திட்டீங்களேன்னு பார்த்தேன்.. கோயில் நினைப்பாகவே இருக்கோ?" என்றாள்.

"எப்படிக் கண்டுபிடிச்சே?"

"பாம்பின் கால் பாம்பறியும்.."

"பாம்பின கால் பாம்பறியும் என்று தானே சொல்வார்கள்?  அது என்ன பாம்பின் கால்?.."

"என்னவோ கம்ப ராமாயணத்திலே அப்படித்தான் கம்பர் சொல்லியிருக்கார்".

"ஹி..ஹி.. கம்ப ராமாயணத்திலா?  கம்பர் தப்பு பண்ண மாட்டாரே!"

தமிழ் பி.லிட்..ன்னா சும்மாவா?. "நேத்து கிளாஸ்லே இதான் பாடம் நடத்தினேன். அதுக்குள்ளே மறந்து போயிடுமா?"  மங்கைக்கு ஆத்திரமா வந்தது.

"பாம்புக்குக் கால் உண்டா, என்ன?"                            

"கால் இருக்கோ, இல்லியோ? பாட்டு இதான்.  இன்னும் மறக்கலே.. சொல்லட்டுமா?"

"ம்.. சொல்லு. "

"காம்பு அறியும் தோளாளை கைவிடீர் எனினும்--ன்னு அந்தப் பாட்டு ஆரம்பிக்கும்.. சீதா பிராட்டியாரை நீங்கள் கைவிட மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும்.. இருந்தாலும்'ன்னு சூர்ப்பனகை சொல்கிற மாதிரி அந்தப் பாட்டுஆரம்பிக்கும்....  'பாம்பு அறியும் பாம்பின் கால்' என மொழியும் பழமொழியும் பார்க்கிறீரோ' என்று முடியும்'.  

" அதான் கைவிடமாட்டார்ன்னு தெரியுதுலே.. பின்னே ஏன் இவ இடைலே நுழையறா?" என்ற பாண்டியன், " மங்கை! இது ஏதோ இடைக்கால செருகல் மாதிரி இல்லே?  கம்பர் இப்படீலாம்.. நான் என்ன சொல்ல வர்றேன்னா,  இப்போ நாமலெல்லாம் பேசிக்கற மாதிரி  சகஜமா,  நம்ம காலத்துச் சொல்லெல்லாம் கவிதைலே வர்ற மாதிரி.. ஆங்! பழமொழி நானூறிலே இதே மாதிரி ஒரு பாட்டு, மங்கை!  இதைத்தான் குறிப்பிட்டு, பழமொழியும் பார்க்கிறீரோ'ன்னு கமபர் சொல்லியிருப்பாரோ?"...

"ச்சீ.. விளையாடாதே! பழமொழி நானூரெல்லாம் பாத்துத்தான் கம்பர்  எழுதணுமாக்கும்?.."

"அதில் என்ன தப்பு?  கம்பரோட வாசிப்பு அனுபவம் அந்தளவுக்கு பரந்து பட்டதுன்னு நெனைக்க வேண்டியது தானே!..  கம்பரே இன்னொருத்தர் சொன்னதை எடுத்தாளரார்ன்னா அந்த அவர் பெரிய பாண்டித்தியம் பெற்றவராய்த் தான் இருக்கணும், இல்லையா?.. யார் அவர்? உனக்கு அவர் பற்றி ஏதாவது தெரியுமா?"

"அது தெரியாமலா பி.லிட்., சர்ட்டிபிகேட் வாங்க முடியும்ன்னு நீ நெனைக்கறே?" என்று அவனைக் வம்புக்கு இழுக்கற மாதிரி கண் சிமிட்டியபடி கேட்டாள் மங்கை.

"சும்மா டபாய்க்காதே.. யார் அவர்ன்னு தெரிலேன்னா தெரிலேன்னு சொல்லணும்" என்று கைதட்டிச் சிரித்தான் பாண்டியன்.

"சொல்லிட்டேன்னா என்ன, தருவே?"

"அழுத்தமா ஒரு 'இச்..' சரியா?"

"'இச்'செல்லாம் சலிச்சுப் போச்சுப்பா.." என்று சும்மாகாச்சும் பொய்க்கோபம் காட்டினாள், மங்கை. "வேறே ஏதாச்சும் புதுசா.." என்று .. அவன் பக்கத்தில் இன்னும் நெருக்கமாக கிறக்கப் பார்வையில் நெருங்கி இழைந்தாள்.

"ஏய்..  நீ இப்படீலாம் செஞ்சா.. பழமொழியாவது கிழமொழியாவது?"என்று கூச்சத்துடன்  பாண்டியன் நெளிந்தான்.

அவன் கூச்சம் அவளுக்கு மேலும் கிறக்கத்தை ஏற்படுத்தியது. அவள் நெருக்கத்தை இன்னும் இறுக்கமாக்கினாள். "என்னைச் சொல்லிட்டு  இப்போ  நீ.." அவள் குரல் நெகிழ்ந்தது. "இப்போ நீ டபாய்க்கப் பாக்கிறியா?"

"டபாய்க்கறதா? எதுக்கு? " என்று லேசா திகைத்தவன்,புரிந்த தோரணையில் "ஓ..அதுக்கா?..  கரும்பு திங்கக் கூலியான்னேன்.. ஆங்! மத்தியான  நேரமாச்சேன்னு பாக்கறேன்.." என்று சிரித்த பொழுது புதுக்களை ஒன்று வந்து அவன் முகத்தில் வந்து அமர்ந்தது.

'ஐயே.. ஆசையைப் பாரு.. நான் எதுக்கோ சொன்னா நீ இதுக்குத் தாவுறியே..' என்று மங்கை கொஞ்சம் விலகி உட்கார்ந்தாள்..  சரிந்திருந்த சேலைத் தலைப்பைச் சரி செய்து கொண்டாள்., "தெரிஞ்ச்சிருந்தா நீ தான் அந்தப் பாட்டைச் சொல்லேன்."

"இந்தப் பாண்டிய ராஜாவை என்னென்னு நெனைச்சே" என்று ராஜ கம்பீரத்துடன் ஹால் சோபாவில் அட்டகாசமாக உட்கார்ந்து ஆள்சுட்டி விரல் உயர்த்தி, "இப்ப சொல்றேன்கேட்டுக்கோ" என்று அந்தப் பழமொழி நானூறு பாடலை சொல்ல ஆரம்பித்தான்:.  

"புலமிக்கவரை புலமை தெரிதல் புலமிக்கவர்க்கே புலனாம் -- நலமிக்க பூம்புலனூர் பொதுமக்கட்காகாதே பாம்பறியும் பாம்பின கால்.." என்று அவன் முடித்த பொழுது கைவலிக்க கைதட்டினாள் மங்கை.. மனனம் செய்த மாதிரி அவன் கடகடவென்று அந்தப் பாடலைச் சொல்வான் என்று சற்றூம் எதிர்பார்க்கவில்லை அவள்.        

"பாம்பின காலோ, இல்லை பாம்பின் காலோ -- எப்படி இந்த ரெண்டு பாடலும் ஒத்துப் போச்சு?.." என்று பாண்டியன் வியந்தான்.

"சாரே.. பாம்புக்குக் காலே கிடையாது.. அறியுமோ?"என்று உதடுகள் குவித்தாள் மங்கை.  செக்கச்செவேலென்று ரத்தச் சிவப்பாய் இருந்த அவை யாருக்குமே கிறக்க மூட்டும் தான்..

"அறியும்..  பாம்புகள் தாம் ஊர்ந்த தடத்தை நன்றாக அறியும் என்பதற்காக 'பாம்பறியும் பாம்பின கால்'ன்னு அப்படிச் சொல்றது வழக்கம் என்பதனையும் யாம் அறிவோம்" என்றான் பாண்டியன்..  

"ஓ..  நாளை கவியரங்கம் உள்ளது என்பதனையும் பாண்டிய ராஜா அறிவீர் தானே?" என்றாள் மங்கை முகத்தில் குறும்பு கொப்பளிக்க.

அப்பொழுது தான் ஏதோ நினைவுக்கு வந்த மாதிரி  சடக்கென்று சோபாவிலிருந்து எழுந்தான் பாண்டியன்.

"என்ன மகாராஜா! அரியணையிலிருந்து எழுந்து விட்டீரே!" என்று சிரிக்காமல் அவள் சொன்ன பொழுது பாண்டியனுக்குத் தான் சிரிப்பு கொப்பளித்துக் கொண்டு வந்தது..

சட்டென்று மங்கையின் கைகளைப் பற்றிக் கொண்டவன், "மங்கை! மாலை கோயிலுக்குப் போகலாமா?" என்று எதையோ எதிர்பார்க்கிற தோரணையில் கேட்டான்.

"ஓ.. எஸ்.." என்றாள் மங்கை.  அவன் எது கேட்டாலும் தட்டாமல் உடனே தந்து விடுகிற உணர்விற்கு அவள் உடல் - மனம் இரண்டும் ஒருசேர அவனிடம் ஆட்பட்டிருந்தது.

முன்பு பகாசுர பாம்புகள் நெளியும் பரமபத விளையாட்டு, இப்போ பாம்பின் கால் பற்றிய பழங்கவிதைகள் ஆராய்ச்சி. அடுத்து பாம்பு பற்றிய எதுவோ என்று அறியாத இள வயசு காதலராய் அவர்கள் அப்போதைக்கு இருந்தார்கள்.


(இன்னும் வரும்)

 

 

Monday, August 19, 2024

குமுதம் 2

நாட்டுக்கு சுதந்தரம் கிடைத்த ஆண்டிற்கு அடுத்த ஆண்டு தான்  நமக்கும் குமுதம்  கிடைத்தது..  '48-லே எனக்கு ஐந்து வாது.    அதுனாலே அதெல்லாம் இன்னொருத்தர் சொல்லித் தான் தெரிஞ்சது.  குமுதத்தைப் பற்றி யார் எது சொன்னாலும் தெரியாத தகவல்ன்னா ரொம்ப ஆர்வத்தோடக் கேட்டுப்போம்.   சேலத்லே எம்.என்.ஆர். என்று ஒரு நியூஸ் ஏஜெண்ட்.  பெரியவர்.  எங்களுக்கு ரொம்பவும் பழக்கமானவர்.  அவர் தான் எங்களுக்குப் பத்திரிகைகள் எல்லாம் பற்றி சுவாரஸ்ய விஷயங்கள் பலதைச் சொன்னவர்.  குமுதத்தின் முதல் இதழ் விற்பனைக்கு வராம எல்லா மாவட்டங்களிலும் இலவசமாகவே  சப்ளை செய்யப்பட்டதாம்.  எம்.என்.ஆர். சொன்னது தான்.  இந்த மாதிரி நிறைய.  அவர் சொல்லச் சொல்ல, 'அட, அப்படியா?' என்று ஆர்வதோடக் கேட்டுப்போம்.


குமுதம்  நாலணா   விலையில்   மாதத்திற்கு மூன்று        இதழ்களாகத்தான் இருந்தது.  1,10,20 தேதிகள் என்று இருந்தாலும் ஓரிரண்டு நாட்கள் முன்னாடியே கடைக்கு வந்திடும்.  இதெல்லாம்  எனக்கே தெரியும்.  அட்டைலே குமுதம் பெயர் போட்ட இடத்துக்குக் கீழே, 'கெளரவ ஆசிரியர் -- ஆர்.எம். அழகப்பச் செட்டியார்' என்று போட்டிருக்கும்.  வழவழன்னு அட்டையில்  வர்ணம் வரைந்த அந்நாளைய குடும்பப்  பாங்கான பெண் சித்திரங்கள் இருக்கும்.  பெரும்பாலும் உள்ளடக்க விஷயம் எதையாவது தொட்ட சித்திரமாக அது இருக்கும்.   ஓவியர் வர்ணத்தின் இயற்பெயர் பஞ்சவர்ணம்.

குமுதத்தைப்   பிரித்ததும் முதலில் தலையங்கப் பகுதி.  இந்தத் தலையங்கப் பகுதிக்கு மேலே  நிலவு -- அல்லி மலர் தாங்கிய குமுதம் இலச்சனை குமுதம் பெயருடன் பதிந்திருக்கும்.  ஆரம்ப காலத்திலிருந்தே ஒரே பக்கத்தில் பொறுக்கி எடுத்த வார்த்தைகளோடு நறுக்குத் தெரித்தாற் போல வரிகளாய் தலையங்கப் பகுதி நீண்டிருக்கும்.  மொத்த தலையங்க விஷயத்தின்   எஃபெக்ட்டையும் கொண்டு வருகிற மாதிரி அந்தப் பகுதியின் கடைசி வரி அமைந்திருக்கும். ரொம்பவும் குழப்பமில்லாத  எளிமையான விஷயங்களே தலையங்கத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தாலும் அதுவும்  மிகத்  தெளிவாக இருக்கும்.   தலையங்கம் எழுதும் பொறுப்பு முற்றிலும்  ஆசிரியரின் வசம் இருந்தது என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.  

தலையங்கம் மாதிரியே சினிமா விமரிசனப் பகுதியும்.  பொதுவா பத்திரிகைக்காரர்களுக்கு பாஸ் வழங்குவது அக்காலத்து திரையுலக வழக்காமாக இருந்தது.  ஆனால் நம்ம குமுதம் மூன்றெழுத்துகாரருக்கோ இதெல்லாம் கட்டோடப் பிடிக்காது. டிக்கெட் எடுத்து சினிமா பார்த்து கறாராக விமர்சனம் எழுதுவதற்குப் பழக்கப்பட்டவர் அவர் என்று அறிந்திருக்கிறேன்.


திரைப்படங்களுக்கு விமரிசனம் எழுதுவதில்  குமுதம் பெற்ற க்யாதி இருக்கே,  சினிமா உலகமே 'குமுதத்திலே ஏதாவது கோணல் மாணலா எழுதிடப் போறாங்கய்யா'ன்னு கவனம் கொள்ளும்.
சினிமா விமர்சனத்திலே கட்டக் கடைசியா பஞ்ச் போல ஒரு வரி இருக்கும். எப்படியோ,  படமெடுத்தவர்களுக்கு  குட்டு போலவும் ஷொட்டு போலவும்  அது அமைந்து விடும்..   இப்படி குமுதம் திரைப்பட விமர்சனத்தோட கடைசி வரிக்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகள்.    'வெட்கக்கேடு'ன்னு ஒரு படத்திற்கு எழுதிவிட்டு  தமிழ்த் திரைப்பட உலகே அல்லோகலப்பட்டது.    
'கலைஞரின் வசனத்தால் சிவாஜி கணேசனின் நடிப்பு சிறப்புப் பெறுகிறதா, இல்லை சிவாஜி கணேசனின் உச்சரிப்பால் கலைஞரின் வசனங்கள் சிறக்கிறதா' என்பது விடை சொல்ல முடியாத விஷயம் என்று மனோகரா திரைப்படத்திற்கு குமுதத்தில் வந்த விமரிசனக் குறிப்பு நினைவிருக்கிறது.

இப்படி நிறைய.  நீண்டு விடும்.  அதனால் இதுவே போதும்.
       


குமுதத்தின் ஆரம்ப கால எழுத்தாளர்கள் இன்னும் நினைவிலிருக்கிறார்கள்.  அதில் முக்கியமானவர் பி.எம். கண்ணன்.  இவர் குமுதத்தில் எழுதிய 'முள்வேலி' என்ற தொடர்கதையை எனது இளம் பருவத்திலேயே ஆர்வத்துடன் படித்திருக்கிறேன்.  'நிலவே நீ சொல்' என்ற அவரது இன்னொரு நாவலும் மறக்காமல் நினைவில் படிந்திருக்கிறது.  

இன்னொருவர் மாயாவி என்ற பெயரில் எழுதியவர்.  பம்பாய் நகர சூழலில் இவர் எழுதிய தொடர் கதை ஒன்று வர்ணம் அவர்களின் சித்திரத்தோடு நினைவில் நிழலாடுகிறது.
 
ஹேமா ஆனந்த தீர்த்தனை குமுதம் எழுத்தாளர் என்றே சொல்லலாம்.    'தீப்பிடித்த  கப்பலில் அம்மணியும் நானும்' என்ற மலையாளத்திலிருந்து தமிழாக்கமாக குமுதத்தில் எழுதியது இவரை நினைத்தாலே என் நினைவுக்கு வரும்.

கோமதி சுவாமிநாதன் என்பரின் குடும்பப் பாங்கான நகைச்சுவை நாடகங்கள் அந்தக் காலத்தில் ரொம்ப பிரசித்தம்.  முதன் முதல் நாடக பாணிக் கதைகளை  வார இதழில் அச்சேற்றியது குமுதம் தான்.  

அதே மாதிரி குமுதத்தில் பிரசுரமான சித்திரத் தொடர்கள்.   சேற்றின் சிரிப்பு,  ஆறாவது விரல், தங்கச்சாவி  என்று தொடர்களின் பெயர்கள்  கூட நினைவில் தேங்கியிருக்கின்றன.  குமுதத்தில் பல விஷயங்கள் டீம் ஒர்க் தான்.  இவர் எழுதியது இது என்று பெயர் போடாத விஷயங்கள் அத்தனையையும் தயாரித்தது  எஸ்.ஏ.பி. அவர்களே.   போட்டோவைப் போட்டுக் கொள்ள வேண்டும், பெயரைப் போட்டுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையே லவலேசமும் இல்லாத வினோத மனப்போக்கு.   ஒருவிதத்தில் இது கூட மற்ற பத்திரிகை ஆசிரியர்களிடமிருந்து அவரை வித்தியாசப்படுத்தியது என்று சொல்லலாம்.

தங்கச்சாவி என்று பெயர் கொண்ட சித்திரத்தொடர் பற்றிச் சொல்ல வேண்டும்.  இந்தத் தங்கச்சாவி என்ற பெயர் ஒரு பாஸ்வேர்ட் போல.   கதையில் வரும்  தங்கத்துரை,  கச்சாலீஸ்வரன், விநாயகம்  என்ற மூன்று நபர்களின் பெயர்களின் ஆரம்ப எழுத்துக்களால் கோர்க்கப் பட்ட பாஸ்வேர்ட்.    தங்க+கச்சா+வி =  தங்கச்சாவி.    இது தான் பிற்காலத்தில்  கேள்வி--பதில் பகுதி 'அரசு' க்கு  அச்சாரம் போலிருக்கு.   அ-- அண்ணாமலை,  ர-- ரங்கராஜன்,  சு - சுந்தரேசன் = அரசு.   அப்போ இன்னொரு  துணையாசிரியர் புனிதன்  கேள்வி--பதில் பகுதிக்கு சம்பந்தமே இல்லாமல்  இருந்தாரா?; நிச்சயம் என் வாசிப்பு அனுபவத்தில் இல்லை என்றே எனக்குத் தெரிகிறது.  ஆனால் நம்ப இந்த சந்தேகங்களுக்கெல்லாம் பதில் சொல்ல விவரம் தெரிந்த யாரும் இல்லை என்றே சொல்லலாம்.

குமுதத்தின் இந்த சித்திரத்தொடர்கள் பற்றிய செய்திகள் எல்லாமே சமீப காலட்தில்  தான் இணையத்தில் பதிவாகிறது என்று கூடச் சொல்லலாம்.   அந்த அளவுக்கு இதையெல்லாம் விவரமாகச் சொல்ல குமுதம் சம்பந்தப்பட்ட  யாரும் இல்லாமலிருந்திருக்கிறார்கள் என்பது கூட வியப்பான ஓர் உண்மை தான்.

செய்திருந்தால்  ரா.கி.ர.  செய்திருக்க வேண்டும்.  குமுதமே அவராகிப் போனதில் பாவம் அவரிடமும் தான் நாமும் எவ்வளவு தான் எதிர்பார்க்க முடியும்?.. 

சொல்லுங்கள்.





****  ( மேலே இரண்டாவது குமுத அட்டைப்படத்தில் இருக்கும் நடிகர் யாரென்று
             தெரிகிறதா பாருங்கள் )

Saturday, August 17, 2024

குமுதம் 1

 க்கத்திலேயே ரயில்வே லெவல் கிராஸிங்.


நாங்கள் அந்த ர.லெ. கிராஸை ஒட்டிய  தனித்த மேடான பகுதியில் அமர்ந்திருந்தோம்.   

நாங்கள் என்றால் நானும்,  ரகுவும்.   ரகு யாரென்றால் என் அருமை நண்பன்.  உடன்பிறப்பு என்ற உறவு மலினமாகி விட்டதால் அதை உபயோகிக்க தயக்கம்.  உடன்பிறவா சகோதரன் என்று கொள்ள வேண்டுகிறேன்.  ரகு என்னை விட ஒரு வயது பெரியவன்.  இரண்டு பேருக்குமே ஒன்பதாவது வகுப்பு வாசிக்கிற பள்ளிப் பருவம்.  அந்த மேட்டுக்குக் கீழேயே அவன் வீடு இருந்ததால் இந்த இடத்தை எங்கள் சந்திப்புகளுக்குத் தேர்ந்தெடுத்திருந்தோம்.

வெள்ளைக் காகிதத்தை க்ளிப்பிட்டு செருகிய கார்ட்போர்டு அட்டை என் கையில்.  அதில் காகிதத்தில் 'பளீரென்று வெளிச்சம்.  60 வாட்ஸ் பல்பு தான்.  இருந்தாலும்..'  என்று நான் எழுதிக் கொண்டிருக்கையில்,  "நீளமா வேண்டாம்டா.  ஆரம்பம் ஒற்றை வரிலே இருக்கணும்" என்று திருத்தினான் ரகு.  இந்த  ஒற்றை வரி ஆரம்பம் நூல்  கண்டில் பிரிந்திருக்கிற ஒரு முனையை பற்றி இழுக்கற மாதிரி.  

நாமும் எதையாவது எழுதிப் பார்க்க வேண்டும் என்ற தாபம் கொண்டவர்களின் நுழைவு வாயில் தான் இந்தப் பதிவுலகம் என்பது நிச்சயம்.  இந்தப்  பதிவுலகில் சிலர் தம் இளம் வயதில் கையெழுத்துப் பிரதி நடத்தி தங்கள் எழுதும் ஆசையைத் தீர்த்துக் கொண்டிருப்பார்கள். 

நானும் ரகுவும் கூட எங்கள் பள்ளி பருவத்தில் அதைத் தான் செய்தோம்.  அதற்காகத்தான் அப்பொழுது  எழுதிக் கொண்டிருந்தோம். கையெழுத்துப் பிரதியில் நிறைய ஐட்டங்கள்.  ஒரு  தொடர்கதை வேறே..  கலர் பென்சிலில் படம் வரைய சோமு இருந்தான்.  சோமுவைத் தவிர இன்னும் நாலைஞ்சு பேர். ஆளுக்கொரு  வேலை.  ஒவ்வொரு மாத ஆரம்பத்திலும் எங்கள் 'புரட்சி' வெளிவந்து விடும்.  

நாங்கள் சைக்கிளில் வீடு வீடாக விஜயம் செய்து  நாவல்கள்,  மாத-- வார பத்திரிகைகளை வாசிக்கக் கொடுக்கும் லெண்டிங் லைப்ரரி வைத்திருந்தோம்.  சர்குலேஷன்லாம்  தூள் கிளப்பும்.  சேலத்தின்  தெருக்கள் நெடுகிலும் எங்கள் வாடிக்கையாளர்கள் இருந்தார்கள்.  அந்தக் காலத்து வீட்டுப் பெண்மணிகளில் பலரின் பொழுது போக்கு பத்திரிகை வாசிப்பு என்றிருந்தது எங்கள் சர்க்குலேஷனுக்கு ரொம்பவும் அனுகூலமாக இருந்தது.  ரொம்ப வேண்டப்பட்டவர்கள் சிலருக்கு இந்தக் கையெழுத்துப் பிரதியையும் 
சேர்த்துக்  கொடுப்போம்.  எங்கள் எழுத்து ரசனையை அவர்களும் தெரிந்து கொள்ளட்டுமே என்று தான்.   இப்படி ஆரம்பித்தது  "உங்கள் கையெழுத்துப் பத்திரிகையில் நாங்களும் எழுதலாமா?" என்று ஓரிரண்டு மகளிர் வாடிக்கையாளர்களும் கேட்ட பொழுது இரட்டை மடங்கு சந்தோஷத்தோடு ஒப்புக் கொண்டது,   எங்களுக்குள்  பத்திரிகை வாசக - எழுத்தாளர் குழாம் ஒன்றே செயல்படுவதற்கு ஆதர்சமாக இருந்தது.  அதெல்லாம் பற்றி இந்தப் பகுதியில் வேண்டாம்.  வேறொரு சமயம் அதற்கென்று வாய்க்கும் பொழுது தனிக் கச்சேரியாக அதை வைத்துக் கொள்ளலாம்.

பண விஷயங்களில் சிக்கலே இல்லை.  எப்படியோ புரட்டி விடுவோம். எங்கள் வாடிக்கையாளர்களின் அதீத ஆதரவு எங்களுக்கு எப்பொழுதுமே இருந்தது.
எந்த விதத்திலும்  கையைக் கடிக்காமல் காசு வந்து  கொண்டிருந்ததால் எங்களுக்கு இதெல்லாம் அந்த வயதில் இனிமையான பொழுது போக்காக இருந்தன.

'கையெழுத்துப்  பிரதியை  இவ்வளவு கஷ்டப்பட்டு தயாரிக்கிறீர்களே..  எம்ஜிஆருக்கு அனுப்பி வையுங்கள்.  பெரிய  அளவில்  ஏதாவது  உதவி செய்வார்' என்று யாரோ ஒரு பெரியவர் சொல்லி பதிவுத் தபாலில் ஒரு பிரதியை ரொம்ப யோசனைக்குப் பிறகு  அனுப்பி வைத்தோம்.  அனுப்பிய ஒரு வாரத்தில்,  முகவரி பகுதியில் சிவப்பு இங்க் கோடுகள் எல்லாம்  குறுக்கு நெடுக்காக இழுத்து,  'Return to sender' என்று திரும்பி வந்து விட்டது. 

எங்களுக்கு ஒண்ணும் புரிலே.  "சாதாரண தபாலில் அனுப்பக் கூடாதா?  இந்த மாதிரி ரிஜிஸ்தர் தபாலாம் என்னவோ ஏதோன்னு சிலர் வாங்க மாட்டாங்க..' என்று எங்கள் லெண்டிங் லைப்ரரி கஸ்டமர் ஒருத்தர்.  'ஆரெம்வி அகழியைத் தாண்டி கோட்டைக்குள் போகணும்னா கஷ்டம்தான்.  அந்த என்ட்ரி லெவல்லேயே திருப்பப் பட்டிருக்கும்' என்று இன்னொருத்தர்.  'ஏம்ப்பா..  ரோஜா, மல்லிகைன்னு ஏதாவது சாதாரணப் பெயரா பத்திரிகைக்கு வைக்கக் கூடாதா? அதென்ன புரட்சி, புடலங்காய்லாம்?.,,   சில பேருக்கு இந்தப் பெயரெல்லாம் அலர்ஜி.. தெரியுமோ'ன்னு இன்னொருத்தர்.

எது  வேணா காரணமா இருக்கட்டும்.  நாங்க கஷ்டப்பட்டு எழுதின கையெழுத்துப் பிரதி எங்க கைக்கு உருப்படியா வந்து சேர்ந்ததிலே கிடைத்த சந்தோஷம் அந்தத்  திரும்பி வந்ததை ஒரே நாளில் மறக்கச் செய்தது.  இனிமே இந்த மாதிரி தப்பெல்லாம் பண்ணிடக் கூடாதுன்னு அப்பொழுதே ஒரு மனதாக ஒன்று கூடி சூளுரைத்துக் கொண்டோம்..

முக்கியமான விஷயத்தைச் சொல்லாம எங்கேயெல்லாமோ எழுத வந்தது இழுத்தடிக்கறது.  எதை எழுதணும்னாலும்  நறுக்குத் தெரிந்தாற் போல ஒற்றை வரி ஒண்ணுலே ஆரம்பிச்சு ஆரம்பித்ததின் முன்னே, பின்னே என்று விஷயத்தை ஓட்டற சாமர்த்தியத்தை அந்த வயசிலேயே எங்களுக்குக் கற்றுக் கொடுத்தது  குமுதம் பத்திரிகை ஆசிரியர் எஸ்.ஏ.பி. தான்.

இப்படி எழுதற கலைலே அவர் கற்றுக் கொடுத்த பாடங்களையெல்லாம் சொல்றதுக்குத் தான் இந்தப் பகுதி..  அப்படியே அவர் பேராசிரியராய் இருந்த அந்த சர்வகலாசாலை 'குமுதம்' இதழ் பற்றியும்.  சரியா?..  சரி..  அந்த  ஒற்றை வரி ஆரம்பத்திற்கு வருவோம்.

அவரோட 'நீ'  என்கிற ஒற்றை எழுத்து தலைப்பிட்டிருந்த நாவலே---

பொட்டென்று மணிக்கட்டில் விழுந்தது ஒரு மழைத்துளி   -  என்று தான் ஆரம்பிக்கும்.

மிஞ்சி மிஞ்சிப் போனா  எனக்கு அப்போ  14 வயது தான் இருக்கும். ஏறக்குறைய  எங்கள் ஜமாவே இந்த வயசொத்தவங்க தான்.   ரகுக்கும் எனக்கும் பத்திரிகை வாத்தியார் எஸ்.ஏ.பி. அவர்கள் தான்.  எப்படிலாம் எழுதணும்ங்கறதைக் கத்துக் கொடுத்த மானசீக குரு.  ஏகலைவர்களாக கற்றோம்.   அவர் தொடர்கதை எழுதறார்ன்னா  எங்களுக்கு பாட வகுப்பு ஆரம்பித்த மாதிரி தான்.  

போதாக்குறைக்கு எங்க சர்குலேஷன் லைப்ரரிலே  குமுதம் ரிலீஸாகும் நாளன்னைக்கே நாலைந்து வீடுகளில் 'என்ன, குமுதம் கொண்டு  வர்லையா'ன்னு கேப்பாங்க..  அதனாலே வாரா வாராம் குறைந்தபட்சம் மூணு குமுதமாவது வாங்குவோம்.  ஆ.வி.  ரெண்டு வாங்குவதே சர்க்குலேஷனில் எந்தக் குழறுபடியும் ஏற்பட்டு விடாமல் சமாளிக்கப் போதுமனதாக இருக்கும்.

குமுதம் வந்த அன்னிக்கே கடை வாசல்லேயே நின்னு விடுவிடுவென்று மேலோட்டமா ஒரு  பார்வை பார்த்தாத் தான் மனசுக்குத் திருப்தி.   அப்பவே அந்த இதழ்லே என்னன்ன இருக்குன்னு மனசுக்கு மனப்பாடம் ஆவிடும் . குமுதம்ன்னா அப்படியொரு கிரேஸ்.
 
அதனாலோ  என்னவோ எங்கள் கையெழுத்துப் பிரதியும் கிட்டத்தட்ட
குமுதம் சாயலிலேயே உருவானது.   'புரட்சி' என்ற பத்திரிகையின் பெயரைக் கூட முகப்பு அட்டையில் அச்சு அசலாக 'குமுதம்' மாதிரியே எழுதி சந்தோஷப்பட்டோம்.

(வளரும்)

Thursday, August 15, 2024

வெங்கட் சாமிநாதன் நினைவில்...

ரு பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வெங்கட்சாமிநாதனின் கட்டுரைகள் பலவற்றை பிரமிப்புடன் படித்திருக்கிறேன்.

இலக்கியம்,இசை,நடனம்,நாடகம்,ஓவியம்,சிற்பம்,சினிமா என்று எதையும் விட்டுவைக்காமல் நிறைய எழுதியிருக்கிறார். ஒவ்வொரு துறையிலும் அவ்வப்போது பேசப்படுபவபற்றி தன் கருத்து என்ன என்பது பற்றி கொஞ்சம் கூட ஒளிவு மறைவோ, எவ்வித சார்போ இன்றி பதிந்தவர் விமரிசனக் கலைஞர் வெங்கட் சாமிநாதன் அவர்கள்.

சமீபத்தில் அவரது நூல் ஒன்றை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2002 லிருந்து 2004 வரை என்று கூடச் என்று சொல்லலாம், பல்வேறு இலக்கிய பத்திரிகைகளில் அவர் எழுதிய கட்டுரைகள் நூலாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. "கலை உலகில் ஒரு சஞ்சாரம்" என்பது புத்தகத்தின் பெயர். சென்னை சந்தியா பதிப்பகத்தார் நூலை வெளியிட்டிருக்கிறார்கள். அந்தப் புத்தகத்திலிருந்து 'கலை உணர்வுகளும் எதிர்வினைகளும்' என்னும் தலைப்பிட்ட ஒரு கட்டுரையின் சில பகுதிகள் இவை. ஆற்றொழுக்காக அவர் விவரிப்பதை தொடர்ச்சி குலையாமல் படிப்பதே ஓர் அனுப்வம். என் வார்த்தைகளில் அதை எடுத்துச் சொல்லப் போய் அந்த அழகு கெட்டு விடுமோ எங்கிற அச்சத்தில் அப்படியே அவர் உணர்ந்ததை வரிக்கு வரியாய், உங்கள் ரசனைக்கு...

இனி வெங்கட்சாமிநாதன் அவர்களின் வார்த்தைகளில்:


"பிக்காஸ்ஸோவின் கலைப்பயணம், நிறைந்த மாறுதல்களைக் கொண்டது. முற்றிலும் வித்தியாசமானது எனத்தோன்றும் எண்ணற்ற கட்டங்களைக் கொண்டது. தன் கலை உண்டு தானுண்டு என்று இருந்தவர் போலத்தோன்றினாலும் நாட்டின் நிகழ்வுகள், சரித்திர மாற்றங்கள் அவரை வெகுவாகப் பாதித்ததுண்டு. அப்பாதிப்புகளுக்கு அவரது அங்கீகாரமும் நிராகரிப்பும் அவரது வாழ்க்கைச் செயல்பாடுகளில், கலைப்படைப்புகளில் தடம் பதிக்கும். அவரது நிலைப்பாடு வெளிப்படையானது. பதிவு பெற்றது. தான் பிறந்த ஸ்பெய்ன் நாட்டில் ஜெனரல் ஃப்ராங்கோ இருக்கும் வரை காலடி எடுத்து வைக்க மாட்டேன் என்றவர். அந்நாளைய கம்யூனிஸ்ட் பார்ட்டியோடு அனுதாபம் கொண்டவர் என்றாலும், அவருடைய கலை உலகத்திற்கும்,கம்யூனிஸ்ட் பார்ட்டியின் கலைக்கொள்கைகளுக்கும் ஸ்நானப் ப்ராப்தி கூடக் கிடையாது. இரு தரப்பாருக்கும் இதில் சமரசம் சொல்லப்படாது நிர்ணயித்துக் கொள்ளப்பட்டது.

க்யூபிஸம் என்ற பெயர் ஓவிய உலகில் பிரஸ்தாபிக்கப்படுவதற்கு முன்னாலேயே 1907-ல் Demoiselles d'Avignon தீட்டப்பட்டது.(இதைத் தமிழ் எழுத்துக்களில் எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. நானும் கஷ்டப்படவில்லை) அதற்கு முன்னர், பாரிஸ்க்கு தன் 18-19வது வயதில் வருவதற்கு முன்னர் அவர் பல கட்டங்களை கோயா போலவும், வ்ளாமிங்க் போலும் வண்ணங்களை, ரூபங்களைக் கையாண்டார். இம்ப்ரெஸனிஸமும் தலைகாட்டியதுண்டு. நலிந்த, அசிங்கப்பட்ட மனிதர்கள், விலைமாதர்கள், பிச்சைக்காரர்கள் இவரது சித்திரங்களில் நிறைந்திருந்தனர். அது தாண்டி நீல வண்ணக்கட்டம் என ஒரு காலம். பின் சுமார் 10 ஆண்டுகள் 1905 லிருந்து 1915 வரை, மிகுந்த மாற்றங்கள். பாரிஸ் கலைச்சூழலிலும் பிக்காஸோவின் கலைச்செயல்பாடுகளிலும் நிகழ்ந்தன. பல சைத்ரிகர்கள், ஒன்றிணைந்தும், ஒன்று கூடியும் (நட்புறவிலும், தம் கலை அணுகுமுறைகளிலும்) எண்ணற்ற மாற்றங்களை நிகழ்வித்தனர். அப்போது இவர்கள் எல்லோருக்கும் ஆதரவாக இருந்தவர் அபோலினேர் என்ற கவிஞர். அக்காலகட்டத்தில் அவரும் ஒரு சக்தி. ஒருவருக்கொருவர் சண்டையிட்டுப் பிரிந்த இணைந்த சைத்ரிகர்கள் எல்லோருக்குமாக அவர் வாதிடுபவர்.

ஆனால் அவர் முதன்முறையாக பிக்காஸோவின் சித்திரத்தின் முன் நின்றபோது அதோடு தன் ரசனையை உறவுபடுத்திக்கொள்ள தடுமாறினார். அவர் பழகியது, ரசனையை வளர்த்துக் கொண்டது, பழைய கட்டடங்களில் வளர்ந்த ஓவியங்களோடு. இப்போது டிலானே, லெகர் பிக்காஸோ போன்றோர் ஓவியங்களின் ரசனையை அவர் எதிர்கொள்ள வேண்டி வந்தது. ஒரு புறம் இந்த ஓவியங்கள் அவரைக் கவரவும் செய்தன. ஆனால் அவர் வளர்த்துக்கொண்ட ரசனைக்கு அவை சவாலாகவும் இருந்தன.

ஆனால் அடிப்படையான விஷயம், சவால் இருந்தாலும், அவை அபாலினேவைக் கவர்ந்தன. ஏன், எப்படி, எந்தக் கோட்பாட்டுப் பார்வையில் என்ற கேள்விகள் எழாமல் சட்டென அவர் Sensibilityக்கு உறவு கொண்டவை ஆயின.

ஆனால் இது ஒரு ஓவியம். முதலில் எதிர்கொள்ளும் ஒரே ஒரு ஓவியம் பற்றி அடைபட்டுப் போகும் விஷயம் அல்ல. தொடர்ந்து பிக்காஸோ, தன் வரைந்த மாற்றங்களால், ஒவ்வொரு முறையும் அபாலினேரின் மாறிவரும் ரசனைகளுக்கும் ஒவ்வொரு கட்டத்திலும் பிக்காஸோ சவாலாகவே இருந்து வந்தார். இது ஒரு தொடர்ந்த ஓட்டப்பந்தயம் போல பிக்காஸோ முன் ஓட இவர் பின்னால் தொடர்வது போல, பிக்காஸோ அந்த பத்துவ்ருடங்களில் செய்துள்ள மாற்றங்களை கொணர்ந்த் புதுமைகளைத்தான் பின் வந்த அறுபது எழுபது வருடங்கள் மெல்ல மெல்ல ஜீரணித்துக் கொண்டிருந்தது என்று சொல்வார்கள். 1907-ல் இன்றும் வந்திராத க்யூபிஸித்தின் தன் காலைப் பதித்த பிக்காஸோ பின் அதை விட்டு சீக்கிரம் நகர்ந்துவிட்டார். ஆனால் பாரிஸூம் ஐரோப்பிய ஓவிய உலகமும் ஓவியர்களும், க்யூபிஸத்திலே வெகு வருடங்கள் தொடர்ந்தனர். தன் நீலவண்ண கட்டத்தைத் தவிர, வேறு எந்த கட்டத்திலும் பிக்காஸோ வெகுகாலம் தொடர்ந்து இருந்ததில்லை.

ஓவியர்கள் தமக்குள் தமது ஓவிய அணுகுமுறை பற்றி சண்டை இட்டுக்கொள்வார்கள். பத்திரிகை விமர்சகர்கள் தாக்குவார்கள். ஆனால் தானே இந்த மாறிவரும் சூழலுக்கு ஈடுகொடுத்து வர இயலாத நிலையிலும் தமக்குள் சண்டை இடும் இவர்கள் எல்லோர் சார்பிலும் நீங்கள் எப்படி பரிந்து பேச முடிகிறது? என்ற கேள்வி அபாலினேரைத் தாக்கியதுண்டு. அவர் சொல்வார்: "அவர்கள் நியாமற்றுத் தாக்கப்படுகிறார்கள். அதனால்தான் நான் அவர்களுக்காக வாதாடுகிறேன்" என்பார்.

புதிய சோதனைகள் புரிந்து கொள்ளபடாமல் இருக்கலாம். ஆனால் அவை ஒரு தளத்தில் உறவு கொள்கின்றன. Sensibility என்ற தளத்தில். அதனால் தான் எவ்வளவு மாற்றங்கள் எவ்வளவு விரைவாக நிகழ்ந்தாலும்,தன் புரிதலுக்கு எவ்வளவு சவாலாக இருந்தாலும் அபாலினேர் அவர்களோடு உறவு கொள்ள முடிந்தது. ஓவிய உலகிலும், சுற்றியுள்ள சூழலிலும் நிகழும் மாற்றங்களையும் அவாலினேர் தன் கவிதைகளிலும் பிரதிபலிக்க முடிந்திருக்கிறது.

இந்த புரிதல் என்ற முரண்படும் தளமும், கலை உணர்வு என்ற உறவுபடும் தளமும் உடன்படுதல் ஒரு விசித்திரமும் புதிரும் ஆன விஷயம்.

இப்போது சில நாட்களுக்கு முன் தினத்தாட்களில் அடிபட்ட பெயர் த்யேப்மேஹ்தா என்னும் ஓவியரது எந்த இந்திய ஓவியத்திற்கும் கிடைக்காத ஒரு பெரிய தொகை த்யேப் மேஹ்தாவின் பழைய ஓவியம் ஒன்றிற்குக் கிடைத்துள்ளது. ஒன்றரைக் கோடியோ, மூன்று கோடியோ எனக்கு சரியாக ஞாபகமில்லை. அது கோடிக்கணக்கில் என்பது மட்டும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. "நான் பத்து ரூபாய்க்கும் வித்திருக்கிறேன். கோடிக்கணக்கில் உலகச்சந்தையில் விற்பனையான அந்த ஓவியம் தீட்டிய காலத்தில் என்று சொன்னார இல்லை இந்த ஓவியம் தான் ரூ.10க்கு அவர் ஒரு காலத்தில் விற்றாரா தெரியவில்லை. அந்த ஓவியத்தின் சொந்தக்காரர், ஏலம் போன சமயம், டைம்ஸ் ஆஃப் இந்தியா, 3 கோடி ரூபாய் யாருக்குப் போகும்? தெரியாது.

நான் சொல்ல வந்த விஷயம் அதுவல்ல. நான் த்யேப் மேஹ்தாவை அறியவந்தது அறுபதுகளின் கடைசி வருடங்களில் என்று ஞாபகம். அப்பொழுது அவரது ஓவியங்கள் கருப்பு அல்லது dark grey. மனிதக்கூட்டங்கள், பட்டினியால் வாடி மெலிந்த உருவங்கள், சோகம் பீடித்த முகங்கள், குவிந்த புருவங்கள், கீழ்நோக்கிய கண் இமைகள், ஒருகண மகிழ்ச்சி அறியாத ஜிவன்கள் -- "கூடல்" என்ற பெயரில் ஒரு documentary--யும் தயாரித்திருந்தார். நான் தாமதமாகப் போனதால் படம் பார்க்க முடியவில்லை. ஆனால் இம்மாதிரியான கண்காட்சி முழுதிலும் சோகம் அப்பிய முகங்களையே ஓவியங்களாகத் தீட்டியிருந்த த்யேப் மேஹ்தா பற்றி இப்ராஹீம் அல்காஷி சொன்னார்: "இவற்றில் நாம் இன்றைய வியத்நாமைப் (60s) பார்க்கலாம். பஞ்சத்தில் வாழும் பிஹார் மக்களைப் பார்க்களாம். த்யேப் மெஹ்தாவின் குரல் உலக்மெங்கிலும் வதைபடும் மக்களின் சோகக்குரல். த்யேப் மேஹ்தா பேசும் மொழி உலக மொழி" என்ற ரீதியில் தன் விளக்கங்களைத் தந்தார். உடன்படலாம். படவேண்டும். அந்த உருவங்களும், ஓவியங்களும் தீட்டப்பட்ட வண்ணங்களும் அல்காஹியின் பார்வையை சாட்சியப்படுத்தின.

ஆனால் த்யேப் மேஹ்தாவின் இன்றைய ஓவியங்கள் அங்கிருந்து வெகுதூரம் நகர்ந்து வந்து விட்டன. இப்போது அவர் ஓவியங்கள் மென்மையான,கண்களுக்குக் குளிமை தரும் வண்ணங்கள்.ஆனால் உருவங்கள் கொடுத்த உருவங்களானாலும், சிதைந்த உருவங்கள் நிலைகொள்ளாது தடுத்துவிடும் உருவங்கள். அந்தரத்தில் பறக்கும் கால்பாவாத உருவங்கள். மனித ஜீவனின், இன்றைய மனிதனின் இயல்பின் முழுமை பெறாதவையும் கூட என்கிறார் த்யேப் மேஹ்தா. சரி புரிகிறது. ஆனால் ஓவியத்தின் மிருதுவான, கண்ணைக் குளிர்விக்கும் வண்ணங்கள்?.. இவ்வண்ணங்கள் எப்படி மனித ஜீவனின் தவிப்பைச் சொல்லும்? என்று கேட்டால், த்யேம் மேஹ்தா, தன் ஆரவாரமற்ற மெல்லிய ஸ்வாபீகமான குரலில், "ஒரு ஓவியனின் வண்ணத் தேர்வு அவனுடைய உரிமை. இதற்கு இணை வர்ணம் தான் என்று ஏதும் கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது. இது என் தேர்வு" என்கிறார்.

"நான் சந்தைக்காக ஓவியம் தீட்டவில்லை.என் ஓவியங்கள் சந்தையில் இவ்வளவு மதிப்பு பெறும் என்று நினைக்கவில்லை. என் இயல்பில் என் இஷ்டத்திற்கு ஓவியங்கள் வரைகிறேன். பின் நிகழ்வுகளை முன் தீர்மானித்து நான் செயல்படுவதில்லை" என்கிறார். அதுவும் உண்மை.

இருப்பினும், வண்ணங்களின் மொழியும், உருவங்களின் மொழியும் நாம் இதுகாறும் வளர்த்துக்கொண்ட ரசனையில் முரண்படுவது ஏன்?

இங்கு நிறையவே ஏன்?களைக் கேட்டுவிட்டேன்."

--என்று முடிக்கிறார் வெங்கட் சாமிநாதன்

--இப்படி திரு. வெங்கட்சாமிநாதன் பலதுறைகளில் கண்டுணர்ந்த அர்த்தபூர்வமான அனுபவங்களை இப்பொழுது படிக்கையிலும் நாமும் அந்தக் காலத்திற்கும், சம்பவங்களுக்கும் இழுத்துச் செல்லப்படுவது மட்டுமில்லை, நம்மையும் அவ்வுணர்வுகளுக்கு ஆட்படுத்தும் சக்தி வெங்கட்சாமிநாதனின் எழுத்துக்களில் படிந்திருப்பதையும் உணரலாம்.

நன்றி: வெங்கட்சாமிநாதனின் "கலை உலகில் ஒரு சஞ்சாரம்"

புத்தகம் கிடைக்குமிடம்:

சந்தியா பதிப்பகம்,
நீயூடெக் வைபவ் பிளாட்ஸ்
77, 53வது தெரு,
அசோக் நகர். சென்னை-- 600 083
தொலைபேசி: 24896979/ 5585570
இணைய தளம்: www.sandhyapublications.com

Sunday, August 11, 2024

இது ஒரு தொடர்கதை -- 16

                                             

"எங்கே விட்டேன்?" என்றார் புரந்தர தாசர்.

அவர் அப்படிக் கேட்டது ரொம்ப நாளைக்கு முன்னாடி பாதியில் விட்ட
பேச்சை விட்ட இடத்திலிருந்து தொடர்வதற்கு கேட்கும் கேள்வி போலிருந்தது.

"'சில பேருக்கு இருக்குங்கறதை இல்லேன்னு நிரூபிக்கறதிலேயும், இல்லேங்கறதை இருக்குன்னு நிரூப்பிக்கறதிலேயும் அதீத ஆசை உண்டு. அப்படிப்பட்டவங்க..'ன்னு சொன்னதோடு முடிஞ்சிருக்கு, அப்பா..    இப்போ  அதுக்குத் தொடர்ச்சியா சொல்லு.." என்றாள் வித்யா.

"சொல்றேன்.." என்று லேசாக செருமிக் கொண்டு தொடர்ந்தார் புரந்தர தாசர்.
"அப்படிப்பட்டவங்க இளம் வயசிலே இருந்தே சாமி நம்பிக்கை இருக்கறவங்களாகவோ இல்லை இல்லாதவங்களாகவோ இருந்தா கேக்கவே வேணாம்.  ஏன்னா, இன்னிக்கு வரை இல்லேனும் இருக்குன்னும் லாவண்ய  கச்சேரி நடத்திண்டிருக்கிற விஷயம் இந்த சாமி சமாச்சாரம் தான்.  நீயும் இந்த விஷயத்தைத் தான் சுத்தி சுத்தி வர்றே.. அதுக்குத்தான் கேக்கறேன்.  சமீபத்திலே சுற்றுலா மாதிரி வேற ஊர் எதுக்கானும் போனியா?.. அங்கே போய் ஏதானும் கோயிலுக்குப் போனியா?" என்று நேரடியாகவே மோகனிடம் கேட்க, தான் எழுதுவதை நிறுத்தி விட்டு தன் அப்பாவின் கேள்விக்கு அவன் என்ன சொல்லப் போகிறான் என்கிற ஆர்வம் தனக்கும் ஏற்பட்ட தோரணையில் மோகனைப் பார்த்தாள் வித்யா.

"போனேன்.  ஆனா அதை சமீபத்லேன்னு  சொல்ல முடியாது.. ஆறு, ஏழு மாசத்துக்கு  முந்தி."

"அதெல்லாம் சமீபத்திலே தான்.  மனசிலே நினைவுகள் தேங்கறத்தைப்  பத்தி இந்தக் கணக்கு.  ஆறேழு மாசம்லாம் இந்த  கணக்குக்கு ரொம்ப சமீபத்திலே தான்.  சொல்லு..  எந்த ஊர்?  எந்தக் கோயில்?,,"

"கும்பகோணம் சார்.  சொந்தக்காரங்க வீட்டுக் கல்யாணம்.  அதுக்குப்  போயிருந்தேன்.  கும்பகோணத்துக்குப் போய் சாமி கோயிலுக்குப் போகாம யாரானும் வருவாங்களா?"

"சொல்லு.. எந்தக் கோயில்?.."

"கும்பேஸ்வரர் கோயில் சார்."

"ஆதி கும்பேஸ்வரர் கோயிலா?.. ஆஹா.. என்ன பிர்மாண்ட கோயில் அது?" என்று வியந்து அண்ணந்து மேலே பார்த்தபடி  கைகூப்பினார் புரந்தர தாசர்.   மனசில் கும்பேஸ்வரரை வரித்துக் கொண்டு  கும்பிடுகிற மாதிரி இருந்தது அவரது செயல்.

"நீ கோயிலுக்கு போன  அன்னிக்கு நடந்தையெல்லாம் கொஞ்சம் ஞாபகப்படுத்திச் சொல்லு.. எழுத்தாளன் இல்லியா, அதனாலே அன்னிக்கு நடந்ததெல்லாம் லேசா முயற்சி செஞ்சாலே ஒன்னோட ஞாபகத்துக்கு வரும்ன்னு நினைக்கிறேன்.." என்று சொல்லிவிட்டு மோகனைக் கூர்மையாகப்  பார்த்தார் புரந்தரதாசர்.  உடனே சொல்ல விட்டுப் போனது எதுவோ திடீர்ன்னு நினைவுக்கு வந்த மாதிரி, "ஆங்! எழுத்தாளன்ங்கறதாலே இன்னொரு இடைஞ்சலும் உண்டு.  உன் நினைவிலிருந்து எடுத்துச் சொல்ல முனையும் பொழுது  நீ சொல்ற விஷயங்கள்லே உன்னோட கற்பனை கலக்கறத்துக்கும் சாத்தியம் உண்டு.  அதுனாலே அந்த இடையூறு இல்லாம பாத்துக்கோ.  என்ன நடந்ததோ அதை மட்டும் சொன்னாப்  போதும்.." என்று அவர் சொன்ன பொழுது அடக்க முடியாமல் பீரிட்டு வந்த சிரிப்பை மிக சிரமத்துடன் மோகன் அடக்கிக் கொண்டான்.

அதே சமயத்தில் ஒரு விஷயத்தை ஆராய்வதில் அவருக்கிருக்கும் ஈடுபாட்டை நினைத்து மனசுக்குள் வியந்து கொண்டான்.  அதையே சிலாக்கிக்கிற மாதிரி, "கரெக்ட், சார்! அந்த எச்சரிக்கையோடையே சொல்றேன்.." என்று அன்று நடந்ததையெல்லாம் நினைவுக்குக் கொண்டு வர்ற பாவனையில் முயற்சித்து மோகன் சொல்ல ஆரம்பித்தான்.

"அன்னிக்கு கோயிலுக்குள்ளே நுழைஞ்சவுடனே எனக்கேற்பட்ட ஆச்சரியம்
என்னன்னா, க்யூவ்லே நின்னு தான் தரிசனம் பண்ண வேண்டியிருக்கும்ங்கற
எதிர்ப்பார்ப்புலே ரொம்ப கூட்டமா இருக்கும்ன்னு நெனைச்சேன். ஆனா என் நினைப்புக்கு மாறா கோயில்  ஜன நெரிசலே இல்லாம இருந்தது. காலம்பற எட்டு மணி அளவிலே தான்  இருந்ததாலே, இனிமே தான் ஜனங்க தரிசனத்துக்கு வருவாங்க போலிருக்குன்னு நெனைச்சிண்டேன். கர்ப்பகிரகத்துக்கு வெளிலே இருக்கற பிராகாரத்லே  நாலைஞ்சு பேர் தான் தேறும்,  பிரதட்சணம் பண்ணிகிட்டு  இருந்தாங்க..

"அவ்வளவு பிர்மாண்ட பிராகாரத்திலே இப்படி அங்கங்கே நாலைஞ்சு பேர் ஊர்ந்திண்டிருக்கறது அந்த பிர்மாண்டத்திற்கு அன்னியப்பட்டு 'ஹோ'ன்னு இருக்கற மாதிரி  இருந்தது.  தரைலே பெரிய  பெரிய பூக்களைச் சுமந்திண்டு மாக்கோலம்; போட்ட  கை விரல்களுக்கு  மோதிரம் தான்  போடணும்;  கொஞ்சம் பிசிறு இருக்கணுமே?.. ஊஹூம்.. அவ்வளவு நேர்த்தியா.  பிராகார சுற்றில் கொஞ்சம் உயர்த்திக் கட்டிய கல்மேடை பூரா வரிசை கட்டி லிங்கங்கள். கல்தூண்களில் பின்னங்கால் ஊன்றி எழுந்து நிற்கும் யாளிகள்.   இந்த யாளிகள் எல்லாம் இப்போ எங்கே போச்சுன்னு அந்த சூழ்நிலையிலும் கீற்றாய் எழுந்த  நினைப்பை தலைக்கு மேல் சடாரென்று பறந்த ஒரு  வெளவாலின் சப்தம் கலைத்தது.
 
"தாடி வெச்ச பெரியவர் ஒருவர் இடுப்லே காவி வஸ்தரம் தரித்தவாறு கொஞ்சம் உரத்த குரல்லே தேவார பாட்டுக்களை ராகத்தோட பாடிண்டே பிரதட்சணம் வந்திண்டிருந்தார்.  அந்த  ஏகாந்த சூழ்நிலைலே அவரோட குரல்  இனிமைலே தேவாரப் பாடல்களை கேக்கறது அற்புத அனுபவமா இருந்தது.. அந்த அனுபவத்தை மேலும் மேலும் கிரகிச்சிக்க அந்த  சமயத்லே ரொம்பவும் விரும்பினேன்.  அதுனாலே அவர் குரல் ஸ்பஷ்டமா எனக்குக் கேக்கற டிஸ்டன்ஸை மெயின்டைன் பண்ணிண்டு அவருக்கு பின்னாலே கொஞ்ச இடைவெளி விட்டு நானும் அவரைத் தொடர்ந்து பிரதட்சணம் பண்ணினேன்.  அப்போ ஒருவித  கிரக்கத்தோட பிராகாரத்தை வலம் வந்தது இப்போக்கூட உணர்ற மாதிரி மனசிலே தேங்கிப்  போய்க்  கிடக்கு..."

"ம்.." என்று ஒற்றை வார்த்தையை புரந்தர தாசர் அதிக ஓசையேற்படுத்தாமல் வெளிப்படுத்தியதே மோகன் மேலும்  சொல்வதற்குத் தூண்டிய மாதிரி இருந்தது.

"அந்த ஐயா முன்னே, நான் பின்னேன்னு ரெண்டு பேருக்கும் ஒரு மூணடி வித்தியாசம் தான் இருக்கும்.  கர்ப்பகிரக தரிசனத்திற்கு உள்ளே போகற மாதிரி சின்ன  சின்ன  படிகள் இருந்த இடத்திற்கு அருகில் வந்த பொழுது  சட்டென்று திரும்பி பின்னால் பார்த்தார் அந்தப் பெரியவர் .  மிக அருகில் என்னைப் பார்த்தவர் என் புஜத்தில் கை வைத்து, "வாங்க, உள்ளே போய் சாமி தரிசனம் செய்யலாம்.." என்று என்னையும் அவருடன்  கூட்டிச்  செல்கிற மாதிரி அந்தப்  படிகளில் ஏறி உள்  புகுந்தார்.  நானும் அவருக்கு பின்னாடியே ரொம்ப நெருக்கத்தில் உள்ளே போனேன்."

மோகன் சொல்லிக் கொண்டே வந்தது வித்யாவிற்கு பயங்கர சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியிருக்கும் போலிருக்கு.  தொடை மீது ஊன்றிய வலது கையால் தாடையைத் தாங்கியபடி தன்னை மறந்து கேட்டுக் கொண்டிருந்தாள்.

"சுவாமி சன்னதி பகுதிக்குள் நுழைந்ததும் அந்தப்  பெரியவர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவராய் காணப்பட்டார்.  தேவாரப் பாடல் அவர் மனுஷ உணர்வைத் தாண்டி அவரிடமிருந்து வெளிப்படுகிற மாதிரி கைகுவித்து கண்ணீர் மல்கப் பாடினார்.  அந்த சமயத்தில் ஐந்தாறு பேர் தான் அங்கிருந்திருப்போம்.  நாங்கள் ஒருவருக்கொருவர் கட்டுண்டு அந்த சந்நதியில் நின்று  கொண்டிருப்பது போலவான உணர்வு என்னை ஆட்கொண்டது. வீபூதி கீற்றுக்கு மேலே சந்தன பொட்டு பளிச்சென்று துலங்கும் சுவாமி அலங்காரம் மனசில் பதிந்து மெய் சிலிர்த்தது. கண் பார்வையில்  பட்டது லிங்கத் திருஉரு  தான்;  ஆனால் சடக்கென்று எங்கள் எல்லோரையும் கட்டிய அந்த உணர்வின் தலைவனாய் இறைவன் மந்தகாச புன்னகையுடன் நிற்பதாக ஒரு வினாடிக்கும் குறைந்த அவகாசத்தில் ஒரு எண்ணம் என்னில் வெட்டி விட்டுப் போனது.  குருக்கள் தீபாராதனைத் தட்டுடன் என் எதிரில் நின்ற உணர்வு கூட  இல்லாமல் நான் இருந்திருக்கிறேன் போலிருக்கு.  அந்தப் பெரியவர் என்னைத் தொட்டு ஏதோ சொன்னதும் தான் என்  நினைவு நிகழ் உலகிற்கு வந்தது போலத் தோன்றியது.  சட்டென்று தீபாராதனைச் சுடரைக் கண்களில் ஒற்றிக்  கொண்டு குருக்கள் கொடுத்த வீபூதியை வாங்கி நெற்றியில் பூசிக்  கொண்டேன்.  திருப்பி கர்ப்பகிரகததிற்குள் பார்த்த பொழுது பளபளவென்ற சுடரொளியில் சுவாமி ஜ்வலிப்பது போன்று தோன்றியது.அங்கிருந்து வெளிவர மனசே இல்லை.  'போலாமா?' என்று  என்னை அந்தப் பெரியவர் கேட்டதும் தான், அவர் சொன்னதைக்  கேட்டு நடப்பது போல சன்னதியை விட்டு அவர் பின்னாடியே வெளியே வந்தேன்."

"அன்னிக்கு நடந்ததைச்  சொல்றேன் பேர்வழின்னு எங்களையும் கும்பேஸ்வரரை தரிசிக்கற மாதிரி கோயிலுக்குள்ளேயே கொண்டு போய் விட்டுட்டே, பையா!" என்று புன்முறுவல் பூத்தார்  புரந்தர தாசர்.

"ஒரு விஷயத்தை ஒரு எழுத்தாளர் சொல்றார்ன்னா மத்தவங்க சொல்றதுக்கும் இவங்க சொல்றத்துக்கும் வித்தியாசம் இருக்குமில்லியா, அப்பா!  ஆனா இதை இவங்க  வீக்னஸா நீ நினைக்காத வரைக்கும்.." என்று வித்யா சொல்ல வந்ததை முடிக்கும் முன் குறுக்கிட்டார் புரந்தர தாசர்.  "சேச்சே.. இந்த நேரஷன் தான் எனக்கு வேணும்.. இம்மியளவு கூட கலப்படமில்லாத இந்த  உணர்வு தான் மோகன் அடைஞ்ச அந்த உணர்வோடையே என்னை யோசிக்கச் செய்யும்.. ப்ளீஸ்,   கன்ட்டினியூ.. அப்புறம்?" என்று புரந்தர  தாசர்  சொன்ன பொழுது வாசல் பக்கம் ஏதோ சபதம் கேட்டது..

"அம்மா வந்தாச்சு, போலிருக்கு, அப்பா!"  என்று வித்யா தன் தந்தையைப்
பார்த்தாள்.

அவள் சொன்னதை கேட்டுக் கொள்ளாத மாதிரி, "அப்புறம் என்ன  நடந்தது,
நீ சொல்லுப்பா" என்று மோகனிடம்  கேட்டார் புரந்தர தாசர்.


(தொடரும்..)


இது ஒரு தொடர்கதை -- 15

                                              15



"இல்லை, பெண்ணே" என்று பக்கத்துத் தூண் இருட்டுப் பகுதியிலிருந்து குரல் வந்ததும் திடுக்கிட்ட மங்கையும் பாண்டியனும்  குரல் வந்த திசையில் பார்த்தனர்.

மசமசத்த இருட்டில் யாரோ அசைவது போலிருந்தது.  துணுக்குற்ற மங்கை நகர்ந்து பாண்டியனுக்கு ஒட்டியவாறு தன்னை நெருக்கிக்  கொண்டாள்.

"யாருங்க, அது?" என்று பாண்டியன் குரல் கொடுத்தான்.

"இருங்க, தம்பி.  நானே வெளிச்சத்துக்கு வர்றேன்.." என்று பதில் கொடுத்தபடி ஒரு பெரியவர் ஒருபக்கம் சாய்ந்து நடந்தவாறே மண்டபத்தின் வெளிச்சப் பகுதிக்கு வந்தார்.

"அட! நம்ம கோயில் பண்டாரம் ஐயா, மங்கை!" என்று சொல்லி புன்னகைத்தான் பாண்டியன். "அங்கண ஏன் நிக்குறீங்க.. இப்படி பக்கத்லே வந்து உட்காருங்க, ஐயா.." என்று அவர் உட்காருவதற்கு வசதி ஏற்படுத்துவது போல பாண்டியன் நகர்ந்து உட்கார்ந்து கொண்டான்.

மங்கை நிறைய  தடவை இந்த  பண்டாரத்தைக் கோயிலில் பார்த்திருக்கிறாள். கோயில்  நந்தவனத்திலிருந்து பூக்குடலில் மலர்கள் பறித்து வந்து பிராகார நிழலில் உட்கார்ந்து இறைவனுக்கு சூட்டுவதற்காக மாலையாகத் தொடுத்துக் கட்டிக் கொண்டிருப்பார்.  நல்ல  கணீர் குரல் இவருக்கு. ஒவ்வொரு வேளை பூஜையின்  போதும் இவர் தேவாரம் ஓதும் போது சிவசபையில் நின்றிருக்கும் சிலிர்ப்பு ஏற்படும்.

"தம்பி, உம்பேரு பாண்டியன்  தானே?" என்று  கேட்டார் பண்டாரம்.

பாண்டியனுக்கு வியப்பு. "ஐயா, எம்பேரு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கே!" என்றான்.

"காளியண்ணன் கடைலே அடிக்கடிப்  பார்த்திருக்கேன்.." என்றார் பண்டாரம். அவர்  சொன்னதும் தான் இவனும் இவரை காளியண்ணன்  கடையில் நிறைய தடவைகள் பார்த்திருக்கும் நினைவு வந்தது.

"அப்படீங்களா?" என்று அவர் சொல்வதை அங்கீகரிக்கற மாதிரி சொன்னான் பாண்டியன்.  "திடீர்ன்னு இருட்டுப் பக்கமிருந்து குரல் வந்ததும் திகைத்துப் போனோம். என் மனைவி இவ.  மங்கைன்னு பேரு. 'பிரமையா இருக்குமோன்னு இவ கேட்டதுக்குத் தானே, 'இல்லை, பெண்ணே'ன்னு சொன்னீங்க?.."

"ஆமா.."

"அப்படித் தீர்மானமா சொன்னதுக்குக் காரணம் ஏதானும் இருக்கணுமில்லியா? அதைத் தெரிஞ்சிக்கறதுக்காகக் கேக்கறேன்.. சொல்ல முடியுமா, ஐயா?"

"தம்பி! உனக்கும் அந்த அனுபவம் ஏற்பட்டிருக்கினு சொன்னியே! அது  பிரமை இல்லைன்னு ஒனக்குத்  தெரியலையா?" என்று அவனிடம் திருப்பிக் கேட்டார் பண்டாரம்.

"தெரியலையே, ஐயா!" என்றான்  பாண்டியன், ஆற்றாமையுடன்.

"பாண்டியன்! எனக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கு.." என்று மெதுவாக பண்டாரம் சொன்ன போது மங்கைக்கு ஆச்சரியமாக இருந்தது.  தன் கணவன் கண்டது பிரமையாக இருக்காது என்கிற நம்பிக்கை அப்பொழுதே அவளுக்கு ஏற்பட்ட மாதிரி இருந்தது.

 பண்டாரம் உதடுகளை நாவால் ஈரப்படுத்திக் கொண்டு தொடர்ந்தார்: "மத்த யாருக்கேனும் இந்த மாதிரியான ஒரு அனுபவம் ஏற்பட்டிருக்குமோ என்கிற சிந்தனை கூட இல்லாம இத்தனை நாள் இருந்திருக்கிறேன், பார்!  பாண்டியன்! ஒருவகையில் பார்த்தால், இது ஒரு மாதிரியான  இறுமாப்பு. இறைவன் எனக்கு மட்டும் நெருக்கமா இருக்கற மாதிரி  நினைக்கற ஒரு பொது  புத்தி இது.  அப்படி சின்னத்தனமா நான் நினைச்சதுக்குத் தான், மடையா, கேட்டுக்கோன்னு நீ இந்த மண்டபத்திலே உக்காந்து பேசினதையெல்லாம் என்னையும் கேக்க வைச்சிருக்கான்.. ஈஸ்வரா! என்னே உன்  கருணை!" என்று ஆகாயம் பார்த்து கும்பிட்டார் பண்டாரம்.  "பாண்டியன்! நீ சொன்னதைக் கேட்டதும், எனக்கு ஆச்சரியம் தாங்கலே. இதோ, நம்ம மாதிரி இன்னொரு ஆளும் இருக்காப்பலேன்னு இன்னிக்குத் தீர்மானம் ஆச்சு.."என்று பண்டாரம் சொன்ன போது பாண்டியன் மகிழ்ச்சியில் திளைத்தான்.  பண்டாரம் சொன்னதற்கு பதில் கூட சொல்ல நாவெழும்பாமல் அவரையே பார்த்துக்  கொண்டிருந்தான்.

"தம்பீ! மனசுக்குள்ளேயே இத்தனை நாள் இந்த சந்தோஷத்தைப் பொத்திப் பொத்தி வைச்சிருந்தேன்.  இது நாள் வரை இந்த சந்தோஷத்தை யாரு கிட்டேயும் பகிர்ந்திண்டதில்லை.  பகிர்ந்திக்கறத்துக்கும் மனசு ஒப்பாம இருந்தது.  இப்போத்தான் நீ சொன்னதையெல்லாம்  கேட்டதும் பூட்டி வைச்சிருந்த என் சந்தோஷத்துக்கு விடுதலை  கிடைச்ச மாதிரி இருக்கு" என்று சொல்லியபடியே அவர் அவனைப் பார்த்த பொழுது அவர் இமையோரங்கள்  நனைந்திருந்தன.. மிகவும் உணர்ச்சி வயப்பட்டவராய் அவர் தெரிந்தார். பாண்டியனுக்கு அவரைப் பார்க்க பாவமாய் இருந்தது.  அவர் வலது கையை உரிமையுடன் பற்றி இறுக்கிக் கொண்டான்.

"எனக்கு இப்போ எப்படி இருக்கு, தெரியுமா?" என்றார் பண்டாரம். "எப்படியோ தீவு ஒண்ணுலே தனியா மாட்டிகிட்ட ஒருத்தன், பல நாள் கழிச்சு அந்த தீவிலேயே இன்னொரு மனுஷனை, அதுவும் தான் பேசினா புரிஞ்சிக்கக் கூடிய தன் மொழி தெரிஞ்ச இன்னொருத்தனைப் பாத்த மாதிரி இருக்கு.." என்றவுடன் மங்கைக்கு அவர் சொன்ன உதாரணம் அவர் உள்ளத்தை விண்டு சொன்ன மாதிரி இருந்தது.

"அதனாலே தான் சொல்றேன், இது பிரமை இல்லேன்னு.." என்று எதையோ மனசில் நிறுத்தியவாறு சொன்னார் பண்டாரம்.  "இது நாள் வரை இது பிரமைன்னு நான் நினைச்சிருந்தாலும் அதுக்கு நியாயம் இருக்கு. என்னிக்கு என்னைப் போலவே இன்னொருத்தருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கோ, அப்ப என்ன?.. அப்ப இது தனி ஒரு மனுஷனுக்கு ஏற்பட்ட பிரமை இல்லே, தானே?..என்ன சொல்றே, பாண்டியன்?" என்றார்.

"எனக்கு எதுவும் சொல்லத் தெரிலே, பண்டாரம்,ஐயா.." என்று பணிவுடன் சொன்னான் பாண்டியன்.

'ஏன்?' என்று கேட்கிற மாதிரி அவனை உறுத்துப் பார்த்தார் பண்டாரம்.

"நாள் பூரா சிவபெருமானுக்கு சேவை செய்வதற்காகவே பிறப்பெடுத்த மாதிரி வாழறவர் நீங்க.. இந்த நந்தவனம் பூத்துக் குலுங்கறதுன்ன்னா அதைப் பெத்த குழந்தை மாதிரி நீங்கப் பாத்துக்கறதாலே. பூப்பறிக்கறது, அதை மாலை மாலையாத்  தொடுக்கறது, இறைவன் சந்நிதானத்லே மனம் உருகப் பாடறதுன்னு சதாசர்வ காலமும் இந்தக் கோயிலோடையே ஒன்றிப்  போனவங்க, நீங்க! நான் அப்படியில்லே. கோயிலுக்கு வந்தாத்தான் சாமி  நெனைப்பு.  மத்த நேரத்திலேயும் இந்த நெனைப்பு வந்திடாமே மறைச்சிக்கறத்துக்கு என்னன்னவோ வேறே வேறே நெனைப்புங்க!.. அதனாலே இதுனாலே இதுன்னு எதையும் தீர்மானமாச் சொல்ல முடிலே, ஐயா!" என்றான்.

"நீ சொல்றது கூடச் சரிதான்.." என்றார் பண்டாரம். "என்னை எடுத்துக்கோ. இந்தக் கோயில்லேயே நா கிடக்கறதினாலே, எந்நேரமும் கோயில் நினைப்பாவே போயிடுச்சி, எனக்கு. அடுத்தாப்பலே அடுத்தாப்பலேன்னு தினமும் மாத்தி மாத்தி கோயில் சம்பந்தப்பட்ட வேலைகளே என்னைச் சூழ்ந்து இருக்கறதாலே கோயில் தவிர வேறே எதுவும் தெரியாமயும் போயிடுச்சி.  கோயில் தொடர்பான வாழ்க்கையே நிகழ்கிற உண்மையாய் எனக்கு ஆகிப்போனதினாலே, பிரமைன்னு எதையும் நினைக்க முடியாமையும் போச்சு, இல்லியா?" என்று ஏதோ யோசிப்பில் பண்டாரம் தவித்தார்.

தவழ்ந்து வருகிற மாதிரி ஜில்லென்று காற்று இடுப்புக்கு மேல் தடவி விட்டுப் போயிற்று. பாண்டியன் மங்கை பக்கம் திரும்பிப் பார்த்தான்.  அவள் விரலால் கோலக்கோடுகள் இழுக்கிற மாதிரி தரையில் கோடியிழுப்பதான பாவனையில் பாண்டாரம் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

"மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே; மென்காற்றில் விளைசுகமே, சுகத்திலுறும் பயனே' என்று வள்ளலார் எவ்வளவு எளிமையா கடவுளைப் புரிஞ்சிகிட்டிருக்கார்?.. அவர் புரிஞ்சிகிட்டதைத் தெரிஞ்சிக்கறதுக்கு இந்த நாப்பது வருஷம் ஆச்சு... ம்.. பொழுது போய்க்கிட்டிருக்கு.. நீங்கள் கிளம்பலையா?" என்று கேட்டார்.

"பக்கத்லே தான் வீடு.  நீங்களும் வாங்களேன்.  சாப்பிட்டு விட்டு திண்ணையில் அமர்ந்து விட்டதிலிருந்து பேசிக் கொண்டிருக்கலாம்.." என்று அவருடன் பேசி தெரியாத விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் கேட்டான் பாண்டியன்.

வீட்டிற்குப் போய்த் தான் சமைக்க வேண்டும் என்று சட்டென்று நினைவுக்கு வந்தாலும், 'எவ்வளவு நேரம் ஆகப்போகிறது? அரைமணிப் பொழுதில் அற்புதமாக சுடச்சுட சமைத்து உணவிடலாம்' என்று பெண்களுக்கே உரித்தான சமையல் ஞானம் மங்கையின் மனசில் படிந்தது.

"நான் பகலில் ஒருவேளை தான் சாப்பிடுவது.  இரவுப் பொழுதானால் இப்படியே இருந்து விடுவேன்.." என்றார் பண்டாரம்.

"பழம், பாலாவது சாப்பிடலாம், வாங்க.." என்றான்  பாண்டியன்.

"இல்லை..  பழக்கமில்லை.. இருபது வருஷமாக இப்படியே இருந்து பழக்கமாகி விட்டது.." என்றவர், அந்த சமயத்தில் இதமாக அவர்களைத் தொட்டுச் சென்ற காற்றின் சுகத்தை சுகித்தவராய், "நீங்கள் கிளம்புங்கள்.  வீசுகின்ற காற்றிருக்க வேறெதுவும் வேண்டுவேனோ?.." என்று மலர்ந்து  சிரித்தார்.

அவர் சொன்னது வேடிக்கையாக சொன்ன வார்த்தைகள் போலல்லாமல் மிகுந்த அர்த்தத்துடன் நிஜமாகவே உணர்ந்து அவர் சொல்கிற மாதிரி பாண்டியனுக்குத் தோன்றியது.

"சரிங்க, ஐயா.. நாங்க  வர்றோம்.." என்று பாண்டியன் அவரைக் கும்பிட்டான்.

கோயில் கோபுரம் கடந்து வெளியே வருகிற பொழுது, "வீசுகின்ற காற்றிருக்க வேறெதுவும் வேண்டுவாரோ" என்று அவன் உதடுகள் முணுமுணுத்தன. அந்த வரியில் நிறைய அர்த்தம் பொதிந்திருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அடுத்த தடவை பண்டாரம்  ஐயாவைப் பார்க்கும் பொழுது   'காற்றே உணவாகுமா?' என்று அவரைக் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

காளியண்ணன்  கடைக்கு அருகில் வந்த பொழுது,  "வாழைப்பழம் வாங்கிங்க.. ப்ரிட்ஜ்லே பால் இருக்கு.. அது போதுமில்லியா?" என்றாள் மங்கை.

பழம் வாங்கிக்கொண்டான் பாண்டியன். "என்ன கோயில்லே இம்மாம் நேரம்?" என்று விசாரிக்கிற மாதிரி கேட்டு, "காத்தாட உக்காங்திட்டு வந்தீங்களா?" என்று கேட்டான் காளியண்ணன்.    இவனும் காற்று பற்றியே பேசுவது பாண்டியனின் எண்ணத்தில் பதிந்தது.

செருப்புகளை மாட்டிக்கொள்வதற்காக கடையின் தட்டி மறைப்பு பக்கம் சென்றாள் மங்கை.

"ஆமாம், காளி!  இங்கே விட கோபுரம் தாண்டி அங்கே உள்ளார பிரமாதமான காற்று. சும்மா ஜிலுஜிலுன்னு.."

"பாண்டியன் அப்புறம் சொல்லலேன்னு சொல்லாதே... வர்ற ஞாயிற்றுக்  கிழமை கவியரங்கம்.  நேரம் இடம் எல்லாம் வழக்கம் போலத்தான். தவறாம வந்திடு.." என்றான் காளியண்ணன். "இந்த மாத கவியரங்கக் கவிதைத் தலைப்பு  என்ன தெரியுமா?.."

"என்ன தலைப்பு?.." என்று ஆவலுடன் கேட்டான் பாண்டியன்.

"'காற்று'.  அதான் தலைப்பு.  மொத்தம் பன்னிரண்டு பேர் கவிதை வாசிக்கறாங்க.. அரங்க.சாமிநாதன் ஐயா தான் கவியரங்கத் தலைமை. அதனாலே கூட்டத்துக்குக் கொறைச்சல் இருக்காது." என்றான்.

"'காற்று!' என்று தனக்குள் ஒருமுறை சொல்லிக் கொண்டான் பாண்டியன். "'வீசுகின்ற காற்றிருக்க வேறெதுவும் வேண்டுவாரோ' என்று ஒரு வரி காளி! அழகா இருக்கு, இல்லே.. ஒருத்தர் சொல்லி மனசிலே பதிஞ்சு போயிடுச்சி, காளி!" என்றான்.

"என்ன, என்ன.. இன்னொரு தடவை அந்த வரியைச் சொல்லு.." என்று பரபரத்தான் காளியண்ணன்.

புன்சிரிப்புடன், "வீசுகின்ற காற்றிருக்க வேறெதுவும் வேண்டுவாரோ?" என்று நின்று நிதானித்து மறுபடியும்  சொன்னான் பாண்டியன்.

"அருமை, பாண்டியன்.."என்று குதூகலித்துப் போனான் காளியண்ணன்."நானும் கவியரங்கத்லே கவிதை வாசிக்கறேன்.  தலைப்பை இப்பத் தான்  சொன்னாங்களா?  அதனாலே அதுபத்தியே யோசனையாயிருந்தது.'வீசுகின்ற காற்றிருக்க வேறெதுவும் வேண்டுவாரோ?' செம வரிப்பா..இதையே  ஆரம்ப  வரியா வைச்சு இன்னிக்கு ராத்திரிக்குள்ளாற கவிதையை எழுதிடறேன்.. ரொம்ப தேங்க்ஸ்ப்பா.."

"எதுக்கு?.."

"கவிதைக்கு  ஆரம்ப வரி சொன்னதுக்கு.."

"இந்த வரிக்கு சொந்தக்காரர் வேறொருத்தர், காளி!.. நியாயப்படி நன்றின்னா அவருக்குத் தான் சொல்லணும்.  நானே இதுக்குள்ளாற நிறைய தடவை மனசுக்குள்ளேயே அவருக்கு நன்றி சொல்லிட்டேன்.." என்றான்.

"அப்படியா சமாச்சாரம்?.. யாருப்பா அவுரு?"

"நம்ம கோயில் பண்டாரம் ஐயா காளி!"

"ஓ! பண்டாரம் ஐயாவா?" என்று மரியாதை பொங்க சொன்னான்  காளி. "மதிய நேரம் ஐயா கடைக்கு வருவாரு.. எவ்வளவு விஷயம் சொல்றாருங்கறே! பலது புரியமாட்டேங்குது.. நிறையப் படிக்கணும், பாண்டியன்..  இருகறதை வைச்சிகிட்டு ஒப்பேத்தலாம்ன்னா ஒண்ணும் வேலைக்கு ஆகாது.. என்ன சொல்றே?"

"படிச்சு புது விஷயங்கள்லாம் தெரிஞ்சிக்கறதைக் கூட  வேணாம்ன்னு யாராவது  சொல்லுவாங்களா?..  சரி, நா வரட்டுமா.." என்று கடைக்கு வெளியே போட்டிருந்த ஸ்டூல் ஒன்றில் உட்கார்ந்திருந்த மங்கையைப் பார்த்து, "போலாம், மங்கை.." என்றான்.

இலக்கிய விஷயம் பேசினால் மங்கை சலித்துக் கொள்ள மாட்டாள் என்று அவனுக்குத் தெரியும்.  அதனால் நடந்து கொண்டே கவியரங்க சேதிகளை அவளிடம் சொன்னாள்.

"வர்ற ஞாயிற்றுக்கிழமை மாலை தானே?.. நானும் வர்றேன்.." என்று அவள் சொன்ன போது பாண்டியனும் அவசியம் அந்த கவியரங்கத்திற்கு போகவேண்டும் என்று தீர்மானம் கொண்டான்.

பாயை விரித்துப் படுக்கும் பொழுது மணி பத்துக்கு மேலாகிவிட்டது. வழக்கமாக படுத்ததும் அதற்குத்தான் காத்திருக்கிற மாதிரி உடனே தூக்கம் வந்து விடும் அவனுக்கு.  ஆனால் இன்று என்னன்னவோ நினைப்புகள் அவன்  மனசில் அலை மோதிக் கொண்டிருந்தது.. ஆனால் அத்தனைக்கும் நடுவே, 'வீசுகின்ற காற்றிருக்க வேறெதுவும் வேண்டுவாரோ' என்கிற வரி மட்டும் படுதாவில் ஜிகினா எழுத்துக்களில் பளபளக்கிற மாதிரி அவன் நினைவுத் திரையில் பளிச்சிட்டுக் கொண்டிருந்தது..

திடுக்கென்று 'பேசுகின்ற பொற்சிலையே' என்கிறதாய் அடுத்த வரி மனசில் உருவான பொழுது, ஒரு உத்வேகத்தில் பாண்டியன் படுக்கையிலிருந்து எழுந்து விட்டான்.  பக்கத்தில் பார்த்த பொழுது லேசான புன்முறுவலுடன் மங்கை நித்திரையில் இருந்தாள்.  மிக மெதுவாக எழுந்திருந்து தன் அறைக்குப் போய்  டேபிள் லைட்டை உயிர்ப்பித்து,  'பேசுகின்ற பொற்சிலையே' என்று பேப்பரில் எழுதி அடித்தான். அதற்கு மாற்றாக தோன்றிய வரியின் தொடர்ச்சியாக விடுவிடுவென்று நாலைந்து வரிகள் எழுதிவிட்டான். ஒரு கொட்டாவிக்குப் பின் தூக்கம் கண்ணை அழுத்துகிற மாதிரி இருந்தது. காலையில் பாக்கி கவிதையைப் பார்த்துக் கொள்ளலாம் என்று படுக்கைக்கு வந்தான்.

அவனை லேசில் விடமாட்டேன் என்று 'வீசுகின்ற காற்றிருக்க வேறெதுவும்
வேண்டுவாரோ' என் கிற வரியும் அவன் நினைவோடையே கூட வந்து அவனுடன் சேர்ந்து படுத்துக் கொண்ட மாதிரி இருந்தது. வேறெதுவும் வேண்டாமென்றால், காற்றே தான் உணவா? அதுவே தான்  உயிரோ, இல்லை அதுவே தான் கடவுளோ என்று நிறைய கேள்விகள் ஒவ்வொன்றாக எழுந்து நின்று நினைவில் ஆர்ப்பரித்தன.

லேசான நனவுலக நினைவிழப்பில் காற்றே தான் உயிரா என்று பண்டாரம் ஐயாவிடம் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

ஆழ்ந்த தூக்கத்திலும் காற்று பற்றிய கலர்க் கலர் கனவுகள் பாண்டியனை விட வில்லை.  அவன் கனவினூடே காற்றின் வீச்சின் பிம்பமாக அருள் தவழும் ஆடலரசனின் நாட்டிய தரிசனம் கண்கொள்ளா காட்சியாய் விரிந்தது.

'பொதுவில் ஆடுகின்ற அரசே, என் அலங்கல் அணிந்தருளே' என்று யாரோ தனக்கு நெருக்கத்தில் வந்து சொல்கிற உணர்வில் பாண்டியன் சிலிர்த்தான்.


 
(இன்னும் வரும்)
Related Posts with Thumbnails