வித்யாவின் விழிகள் டி.வி. திரையில் நிலைகொள்ளாது தவித்தன. ஆங்கில அகர வரிசைப்படி திரையில் நகர்ந்து கொண்டிருந்த நிறுவனங்களின் பெயர்களுடன் காணப்பட்ட அந்த நொடியிலான பங்கின் மதிப்பு விலையை அவள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு வந்தாள். அவள் குறிவைத்திருந்தது ஐந்து நிறுவனங்கள். அந்த ஐந்து நிறுவனங்களின் அப்பொழுதிய பங்கு விலை மிகவும் இறங்கித் தான் இருந்தது. இந்த இறக்கம் எந்த அளவுக்கு இறங்கப் போகிறது என்பது தான் கேள்வி. எவ்வளவு குறைவான விலைக்கு வாங்குகிறோமோ அந்த அளவுக்கு அந்தப் பங்குகளின் விலை ஏறும் போது லாபம். இன்றைய ஷேர் மார்க்கெட்டின் இந்த இறக்கம் தனக்காகவே இறங்கியது போலிருந்தது அவளுக்கு.
'இதற்குத் தானே காத்திருந்தேன்- தாங்க் காட்' என்று முணுமுணுத்தபடி வித்யா தொலைபேசியை நெருங்கினாள். ஷேர்களின் ஏற்ற இறக்க விவரங்களை எழுதி வைத்திருந்த அந்த நோட்டுப் புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே ஸ்டாக் புரோக்கரின் அலுவலக தொலைபேசி எண்களை கொட்டை எழுத்துக்களில் குறித்து வைத்திருந்தது நல்லதாகப் போயிற்று.
மொத்தம் மூன்று எண்கள். முதல் எண்ணை அழைத்த பொழுது அந்தத் தொலைபேசி எங்கேஜ்டாக இருப்பது தெரிந்தது. ஒரு கண் டி.வி. திரையில் பதிந்திருக்க, அவசரமாக ஹூக் ஸ்விட்சை அழுத்தி டயல்டோன் ஏற்படுத்திக் கொண்டு அடுத்த எண்ணை அழைத்த பொழுது கிடைத்த வாய்ஸ், லயனில் காத்திருக்கச் சொன்னது. காத்திருக்க அவளுக்குப் பொறுமை இல்லை. இன்னொரு பக்கம் டி.வி. திரையில் மிகமிகக் குறைந்திருந்த அந்த சிமிண்ட் கம்பெனியின் ஷேர் மதிப்புத் தொகை கொஞ்சம் கொஞ்சமாக ஏறுவதைப் போலிருந்தது. ஸ்டீல் நிறுவனத்தின் பங்கும் இறங்கிய விலையிலிருந்து ஏற ஆரம்பிக்க.. ஆக, இந்த வீழ்ந்த விலை தான் நிறைய பேரை வாங்கத் தூண்டி ஏறத் தொடங்கியிருக்கிறது என்று நினைத்துக் கொண்டாள். பார்த்துக் கொண்டே இருக்கையில் நான்கு ரூபாய்கள் ஏறியிருந்தது ஏழாகி ஏற... சரசரவென்று அந்தப் பங்குவிலை இன்னும் ஏறுவதற்குள் வாங்கி விட வேண்டும் என்கிற துடிப்பில், தொலைபேசியில் மூன்றாவது எண்ணைத் தேர்ந்து அழைப்பதற்குள் டி.வி. திரையில் மார்க்கெட் நேரம் முடிந்து விட்டதைத் தெரிவிக்கும் மணியோசை கிணுகிணுத்து திரையின் இடது பக்க மேல் மூலையில் பூஜை மணி மாதிரி சின்னம் தோன்றி குலுங்கிக் கொண்டிருந்தது. கடிகாரத்தில் மணியைப் பார்த்தாள். சரியாக மூன்றரை! இன்றைய ஸ்டாக் மார்க்கெட்டின் வர்த்தக நேரம் முடிந்து விட்டது; அவ்வளவு தான். இனி நாளை தான்.
'ச்சை'என்று மனம் கசந்தது. கைக்கெட்டும் வரை வந்ததைக் கோட்டை விட்டாயிற்று. இந்த இழப்பு உணர்வு அவளுக்கு புது அனுபவம். முதன் முதல் நிஜமாக ஷேர் வாங்கலாம் என்று உட்கார்ந்த பொழுது ஏற்பட்ட அனுபவம் கசந்தது. கெளதம் விளையாடுகிற டிரேட் விளையாட்டு மாதிரி தான். விளையாட்டு மாதிரி கற்பனையில் கோட்டை கட்டும் பொழுது எல்லாம் நடந்து விடுகிற மாதிரி சுலபமாகத் தான் இருக்கிறது. நிஜம் என்று வருகிற பொழுது நிறைய யோசனைகள் வந்து சடாரென்று துணிந்து இறங்க முடியாத தயக்கத்தை ஏற்படுத்துகிறது என்று நினைத்துக் கொண்டாள். 'அவ்வளவு நேரம் ஏன் யோசித்தாய்; வாங்கியிருக்கலாமில்லையா' என்று மனசின் இன்னொரு மூலையிலிருந்து அவளைப் பழித்துக் காட்டி கேள்வி எழுந்தது. பத்து நிமிஷம் போலிருக்கும். டி.வி. திரையைப் பார்த்தபடி சோர்ந்து உட்கார்ந்திருந்தவள், ஒரே நாள் அனுபவத்திற்கு, அதுவும் எதுவுமே நிகழாத ஒன்றுக்கு இவ்வளவு குமைச்சல் கூடாதென்று ஒருவாறு தன்னை சமாளித்துக் கொண்டு எழுந்தாள்.
லேசாகத் தலையைக் கோதிவிட்டபடி சீப்பெடுத்து வாரிக் கொண்டாள். சோப் போட்டு முகம் அலம்பி டர்க்கி டவலால் துடைத்துக் கொண்டிருக்கையில் கொஞ்சம் உற்சாகம் தொற்றிக் கொண்ட மாதிரி இருந்தது. ஸ்டிக்கர் பொட்டை நெற்றியில் கண்ணாடி பார்த்து அழுத்திக் கொண்ட பொழுது அம்மாவின் நினைவு வந்தது. 'எங்காலத்தில் எல்லாம் சாந்து தாண்டிம்மா.. கொட்டாங்கச்சி யில் குழைச்சு வைச்சிருப்போம். நீ கூட குழந்தையாய் இருக்கறச்சே உனக்கு இட்டிருக்கேன்' என்பாள். நடுவயிறு பெருத்து மீன் மாதிரி இருக்கும் சின்ன சிமிழிலிருந்து பிளாஸ்டிக் குச்சியில் மை எடுத்து விழிக்கடையில், நீட்டி விட்ட மாதிரி அம்மா தீட்டி விட்ட நினைவு கூட இருக்கிறது. அப்படி கண் மை தீட்டும் பொழுதெல்லாம் கண்ணசைத்து விடாமல் இவள் கவனத்தைக் குவிக்க அம்மா கீழ் உதடை உட்புறமாகக் குவித்து 'களக்,களக்' என்று ஒரு விநோத ஒலியை எழுப்புவாள். பாவம், அம்மா. அவள் மேல் ரொம்பவும் பிரியம். என்ன அடம் பிடித்தாலும் துளிக் கோபம் வர வேண்டுமே! சாதாரணமாய் இருக்கும் பொழுதே சந்தோஷமாய் இருக்கிறது மாதிரியான முகம். சிரித்துக் கொண்டே பார்த்துப் பார்த்து எல்லாம் செய்வாள். கல்யாணம் ஆன பிறகு, பொதுவாக வீட்டில் இருக்கும் பொழுது பவுடர் போடும் பழக்கம் வித்யாவுக்கு இல்லை. எங்காவது வெளியில் கிளம்பும் பொழுது முகத்தில் எண்ணைய் வழிகிற மாதிரி டல்லடிக்கற உணர்வு வந்தால், முகம் அலம்பியவுடன் லேசாகத் தீற்றிக் கொள்வாள். வீட்டில் பெளடர் டப்பா இருக்கிறது தான்; ஆலிலை கிருஷ்ணன் டி.எஸ்.ஆர். சாண்டல் டப்பா. தினமும் பள்ளிக்கூடத்திற்குக் கிளப்புகையில் கெளதமிற்கு அதைப் பூசி விடுவதோடு சரி. ரிஷிக்கானால் ஹேர் ஆயில், பெளடர், செண்ட் என்று அத்தனை சமாச்சாரங்களும் அலர்ஜி. மொத்தத்தில் இந்த காஸ்மடிக் சமாச்சாரங்களுக்கு செலவு செய்வது தன் வீட்டில் ரொம்பவும் குறைச்சல் தான் என்று நினைத்துக் கொண்டாள்.
கெளதம் ஸ்கூல் விட்டு வருவதற்குள் சாயந்தர டிபனுக்கு ஏதாவது பண்ணலாமா என்று தோன்றியது. காய்கறிக் கூடையைத் திறந்து பார்த்ததில் வெங்காயம் இருந்தது தெரிந்தது. சிவப்பாய் நான்கு எடுத்துக் கொண்டாள். நல்லவேளை, கடலைமாவும் இருந்தது. எடுத்துக் கரைத்து வைத்துக் கொண்டாள். கால்மணியில் வெங்காய பஜ்ஜி ரெடியாவதற்கும் கெளதம் வருவதற்கும் சரியாக இருந்தது.
வந்தவன் ஸ்கூல் பையை முன் அறையில் போட்டிருந்த அவனது குட்டி ஸ்டடி டேபிளின் மேல் வைத்து விட்டு, கைகால் அலம்பித் துடைத்துக் கொண்டு வந்தான். ஷெல்ப் மாதிரி தடுத்துக் கட்டியிருந்த பூஜை இடத்திற்குப் போய் சம்புடத்திலிருந்து விபூதி இட்டுக் கொண்டு வந்தவன், அவள் பக்கத்தில் நெருங்கி வந்து வாசனை பிடித்தபடி, "என்னம்மா?.. வெங்காய பஜ்ஜியா?" என்றான்.
"ஆமாண்டா. தட்லே உனக்கு வைச்சிருக்கேன், பாரு. எடுத்துக்கோ.." என்று அவனுக்குச் சொன்னவாறே காப்பி கலந்தாள்.
பஜ்ஜித் தட்டை எடுத்துக் கொண்டு சோபா பக்கம் போனதும், "என்னம்மா.. வானவில் வந்தாச்சா?" என்று ஆச்சரியப்பட்டவன், "ஹை! அப்பா கதை.." என்று குதித்தான். பத்திரிகை அட்டை பார்த்து 'காதல் தேசம் - தொடர்கதை - இந்த இதழில் தொடக்கம்' என்று கட்டம் கட்டி போட்டிருப்பதை ஒவ்வொரு எழுத்தாகக் கூட்டிப் படித்தான். "அப்பா தொடர்கதை ஆரம்பிச்சாச்சு, அம்மா! பாத்தியா?"
அவளுக்குக் கூட இப்பொழுது தான் நினைவுக்கு வந்தது. வரும் பொழுதே போஸ்ட் பாக்ஸில் கிடந்த பத்திரிகையை எடுத்து வந்து சோபாவின் மேல் போட்டவள், டி.வி.யில் ஷேர் மார்க்கெட் நிலவரத்தைப் பார்த்த ஜோரில் மறந்தே போய் விட்டாள்! 'காதல் தேசம்' ஆரம்பித்து விட்டதா?'.. என்று மனம் கூப்பாடு போட்டது. அடுத்த நிமிடமே, தொய்ந்து போய், 'எது ஆரம்பித்து என்ன?.. கதைன்னா எல்லாமே வெறும் கற்பனை தானே! கற்பனையில் மனம் போன போக்கில் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் நிஜம் வேறு. இப்போ ஷேர் வாங்க முடியாமல் போச்சே! அந்த மாதிரி நிஜம் வேறு' என்று நினைத்துக் கொண்டாள். 'இதற்குள் உஷா ஆரம்ப அத்தியாயத்தைப் படித்திருப்பாள். இதோ கொஞ்ச நேரத்தில் நிச்சயம் வருவாள். வந்து கதையின் ஆரம்பம் பற்றி என்ன சொல்லப் போகிறாளோ?.. அவளுக்கு பதில் சொல்வதற்காவது படித்து வைக்க வேண்டும்' என்று நினைப்பு மண்ணுளிப் பாம்பாய் சுருக்கிச் சுருக்கி நீண்டது..
பத்திரிகையோடு சில தபால்களையும் கொண்டு வந்து வைத்த ஞாபகம் வந்தது. எல்லாவற்றையும் ரிஷியின் அறைக்குப் போய் அவன் டேபிளின் மேல் வைத்தாள். வெளி ஹாலுக்கு வந்த பொழுது தொலைபேசி அழைத்தது. வேகமாய்ப் போய் எடுத்தாள்.
"ஹலோ..."
"ஹலோ, வித்யா.. நான் ஊர்மிளா பேசறேன்."
"ஓ!.. எப்படியிருக்கீங்க?.. " என்று கேட்ட பொழுது புதுமனுஷியாய் சந்தோஷம் குரலில் வழிந்தது.
"நாங்க ஃபைன். 'காதல் தேசம்' தொடங்கியிருக்கே?.. பாத்தீங்களா.. தொடக்கம் லாம் நல்லாத்தான் இருக்கு.. படம்லாம் தூள் கிளப்பியிருக்காங்கள்லே?.."
"வெளிலே போயிருந்தேன், ஊர்மிளா.. 'வானவில்' வந்திருக்கு.. ஆனா, இன்னும் பிரிச்சுப் பாக்கலை.." என்று பொய் சொல்ல விரும்பாமல் தவித்தாள். "ரொம்ப தேங்க்ஸ். ஊர்மிளா.. இவர் இன்னும் ஆபிஸ்லேந்து வரலே.. லஷ்மணன் சார் நல்லா இருக்காரா?"
"ஓ.. நல்லா இருக்கார்.. அப்புறம், எதுக்குக் கூப்பிட்டேன்னா.. இன்னொரு சந்தோஷத்தையும் உங்க கிட்டே பகிர்ந்துக்கறத்துக்காக.."
"அப்படியா?" என்று கேட்ட ஆவலில் வித்யாவின் குரல் குழைந்தது.
(இன்னும் வரும்)