மின் நூல்

Monday, January 28, 2019

பாரதியார் கதை --27

                                                 அத்தியாயம்-- 27


யானை தும்பிக்கை தள்ளி கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயங்கள் சில நாட்களில் ஆறத் தொடங்கின.  விழுந்த அதிர்ச்சி தந்த உடல் நலக்குறைவும் சுமாராக சீராகத் துவங்கியதுமே பாரதிக்கு வீட்டில் தங்க உடல்  இருப்பு கொள்ளவில்லை.   'சுதேச மித்திரன்' அலுவலகம் செல்லத் துவங்கினார்.

தமிழுக்கு மொழிமாற்றம் செய்யக் கூடிய கட்டுரைகள் அவரது பணி நேரத்தின்   பெரும் பகுதியை ஆக்கிரமித்தன.  சுதேசமித்திரன் அந்த நேரத்தில் 'கதாமாலிகா' என்று சிறுகதைகளின் தொகுப்பு நூல் ஒன்றை வெளியிட்டது. அந்தத் தொகுப்பில் பாரதியின் பல சிறுகதைகள் சக்தி தாசன், காளிதாசன் என்ற பாரதியின் புனைப்பெயர்களில் வெளியாகியிருக்கின்றன.குதிரைக் கொம்பு, கதவு, கடற்கரையாண்டி,  விடுதலை முத்தம்மா கதை, கடல்,  ஆவணி அவிட்டம்,  மலையாளம், வேணு முதலி, பிங்கள வருஷம் போன்ற பாரதியின் கதைகள் கதாமாலிகாவில்  காணக் கிடைக்கின்றன.  புத்தகத்தின் விலை ரூ.1/-.  என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பாரதியின் காலத்தில்  அவர் படைப்புகளுடன்  வெளியான கடைசி நூல் கதாமாலிகா தான். பாரதியாரை பெரும்பகுதி மக்கள் கவிஞர் என்றே அறிந்திருக்கின்றனர்.  அவர் மிகச் சிறந்த கதாசிரியர் என்பது பலருக்கு இன்றளவும் அதிகம் தெரியாமலேயே இருக்கிறது. அதுவும் அந்தக் காலத்திற்கு மிகவும் தேவையாக இருந்த முற்போக்கான சீர்திருத்த கதைகளைப் பின்னுவதில் பாரதி மிகவும் ஆர்வம் கொண்டிருந்ததை அவர் கதைகள் நமக்குப் புலப்படுத்துகின்றன.  விதவா மறுமணத்தை வரவேற்று பாரதி எழுதிய 'சந்திரிகையின் கதை'  அந்நாட்களின் அரிய முயற்சி.  கதையின் நாயகி விசாலாட்சியின் பாத்திரப்படைப்பு அற்புதமாக இருக்கும்.  பாரதிக்கு இந்த நாவலை முழுதாக எழுதி முடிக்க முடியாமலேயே  போய்விட்டது.   பின்னாட்களில் கல்கிக்கு நேர்ந்தது தான் பாரதிக்கும் நேர்ந்தது.  'அமரதாரா' நாவலை எழுதிக் கொண்டிருக்கும் பொழுதே கல்கி காலமாகி
விடுகிறார்.  அவர் எழுதி வைத்திருந்த குறிப்புகளைத் துணையாகக் கொண்டு கல்கியின் அருமைப் புதல்வி ஆனந்தி 'அமரதாரா' நாவலை முழுதாக எழுதி முடித்தார்.  ஆனால் பாரதிக்கு அப்படி யாரும் அமையவில்லை.  'சந்திரிகையின் கதை' பாதியிலேயே நிற்கிறது.  சந்திரிகையின் கதை,  கதை மாதிரியே தோன்றாமல் தத்ரூபமாக நடந்த நிகழ்வு போலவே இருக்க பாரதியும் வெகுவாக முயற்சித்திருக்கிறார். பிற்காலத்தில் 'சந்திரிகையின் கதை'  பொதிகை தொலைக்காட்சியில் தொடராக வந்ததாக கோமதிம்மா சொல்லத் தெரிந்தது.

வேளாண்குடி என்ற கிராமத்தில் ஒரு பூகம்ப இரவில் பிறந்தவள் சந்திரிகை.  பூகம்பத்தைத் தொடர்ந்து பிடித்துக் கொண்ட அடைமழைச் சூழலில் கைக்குழந்தை சந்திரிகையின் பெற்றோர் இறந்து விடுகின்றனர்.  குழந்தை சந்திரிகையின் தந்தை மகாலிங்கத்தின் தங்கை விதவை விசாலாட்சியின் ஆதரவில் சந்திரிகை வளர்கிறாள்.  விசாலாட்சி  பாத்திரப் படைப்பின் மூலம் விதவா மறுமணத்தை ஆதரித்து எழுத  பாரதி அந்நாட்களிலேயே  துணிகிறார்.  வேத விசாரங்களையும் பிரஸ்தாபித்து நிறைய வாதங்களை வைக்க பாரதி இந்நாவலில்  சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்  கொள்கிறார்.

பாரதி எழுதிய  நாவலா இது என்று துணுக்குறும்படியும்  சில காட்சிகளும்   சொல்லாடல்களும் உண்டு.  9-ம் அத்தியாயத்தின் ஆரம்பத்திலேயே நாவல் அரைகுறையாக நிறுத்தப் பட்டிருக்கிறது.   " ......... இப்படியிருக்கையில் ஒருநாள் முத்தம்மா தன் கணவனை நோக்கி, "நாளை ஞாயிற்றுக் கிழமை  தானே?  உங்களுக்கோ கோர்ட் வேலை கிடையாது.  ஆதலால்   நாமிருவரும் குழந்தைகளையும் வேலைக்காரனையும் ....." என்று  அடுத்து எழுத வேண்டிய வார்த்தைகளை எழுதி வரியைப் பூர்த்தி கூட செய்ய முடியாமல் இந்த சந்திரிகை நாவல் அப்ரப்ட்டாக முடிந்திருப்பது  என்னவெல்லாமோ யோசிக்க வைக்கிறது..   தன் வாழ்வில் எந்தக் காலப்பகுதியிலேயோ எழுதத் துவங்கியதை மேற்கொண்டு எழுதப் பிடிக்காமல் நிறுத்தி வைத்திருந்தானோ?..   இளமையில் எழுதிய கதையின்  தொடர்ச்சியாய் சில பகுதிகளை சேர்த்தும், நீக்கியும்  மீதிப் பகுதியை பிரசுரத்திற்காக எழுதும் பொழுது தொடர முடியாமல் போயிற்றோ?..  அந்த 9-ம் அத்தியாயத்திற்கு சோமநாதய்யர் ஞானம் பெற்ற வரலாறு என்று தலைப்பிட்டிருப்பதும் கவனத்திற்குரியது.

1920-ல் சுதேசமித்திரனில் வெளிவந்த 'சந்திரிகை கதை'யை பாரதி பிரசுரலாயம் 1925-ல்  தனி நூலாக வெளியிட்டிருப்பதாகத்  தெரிகிறது.  பாரதியின் படைப்புகளைப்  பற்றி ஆராய்ச்சிகள் மேற்கொண்ட பாரதி அன்பர் ரா.அ. பத்மனாபன் 1982-ல் பாரதி புதையல் பெருந்திரட்டு' என்ற நூலை வெளியிடுகிறார்.  அதில் இந்த சந்திரிகை கதையும் இடம் பெற்றிருக்கிறது.  பா.பு. பெருந்திரட்டில் 9 -ம் அத்தியாயம் நிறைவுற்று 10-ம் அத்தியாயத்தோடு கதை நிறைவடைகிறது.  பாரதியின் கற்பனையில் இருந்த சந்திரிகை கதையாக அது பூரணத்துவம் பெறாது விசாலாட்சியின் கதையைச் சொல்லி நிறைவுறுகிறது.   அரைகுறையாக இல்லாமல் பாரதி எழுதத் தொடங்கிய ஒரே ஒரு சமூக நாவல் நிறைவுப் பகுதியோடு காணப்படுவதில் மனசுக்குத் திருப்தியே.

காரைக்குடி-- பாரதியார் என்றாலே கானாடுகாத்தான் வயி.சு. சண்முகம் செட்டியார் நினைவுக்கு வந்து விடுவார்.  செட்டியாருக்கு பாரதியாரின் கவிதைகளில் அப்படியொரு மோகம்.  வயி.சு.ச.வுக்கு கானாடு காத்தானில் இன்ப மாளிகை  என்ற பெயரில் நிஜமான மாளிகையன்ன வீடு இருந்தது.  செட்டியாருக்கோ கானாடுகாத்தானிலேயே பாரதி குடும்பத்தோடு அவர் மாளிகையில் தங்கி கவிதைகள் எழுதி வரலாம் என்று ஆசைப்பட்டார்.  தங்கிவிடலாம் என்று பாரதியும் ஒரு புறம் நினைத்தாலும் அவர் குடும்ப சூழ்நிலையும் மனைவியின் எண்ணமும் வேறாக இருந்தது.  அக்டோபர் 1919 வாக்கில் செட்டியாரின் அன்பு அழைப்பைத் தட்டாமல் கானாடுகாத்தான் சென்று அவர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசிவிட்டு சில நாட்கள் அங்கு தங்கியிருந்து  பாரதியார் திரும்பினார் என்று தெரிகிறது.  ரவண சமுத்திரம், பொட்டல்புதூர், திருவனந்தபுரம் என்றெல்லாம் சென்று கூட்டங்களில் பேசியிருக்கிறார்  என்றாலும் ஈரோடு கருங்கல் பாளைய கூட்டத்திற்கு பாரதி சரிதையில் தனியே ஒரு இடம் உண்டு.  அது தான் அவர் உரையாற்றிய கடைசிக் கூட்டம்.

ஈரோடு கருங்கல் பாளையத்தில் பாரதியை உயிருக்கு உயிராய் நேசித்த தங்கப்பெருமாள் பிள்ளை  என்ற வழக்குரைஞர் இருந்தார்.   சிறந்த தேசபக்தரான அவர் கருங்கல் பாளையத்தில் வாசகசாலை ஒன்றை நடத்தி வந்தார்.  அந்த வாசகசாலையின் வருடாந்திர விழாவில் பேசுவதற்காகத் தான் பாரதியாரை அழைத்திருந்தார்.

பாரதி ஈரோடுக்கு ரயிலில் போகிறார்.  பாரதியை ரயிலடியில் வரவேற்றுக்கு கூட்டி வர  தங்கப்பெருமாள் இளைஞர் ஒருவரை அனுப்பி வைக்கிறார்.  அந்த இளைஞர் தான் பிற்காலத்து ச.து.சு.  யோகியார்.   முண்டாசு கட்டி  கருகரு
மீசையுடன் வருவார் என்று பாரதியைப் பற்றிய அடையாளமாக அந்த இளைஞருக்குச் சொல்லப்பட்டிருந்தது.  ஆனால் அப்படி யாரும் வராததால் இளைஞர் திரும்பி விடுகிறார்.  திரும்பி வந்தவர் வக்கீலுக்கு எதிரே புதியவர் ஒருவர் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கிறார்.  முண்டாசை பாரதி கட்டியிருக்கவில்லை என்பதே அந்த இளைஞருக்கு பாரதியை அடையாளம் காண முடியாமல் போயிற்று என்பது இளைஞருக்கு புரிகிறது.   பாரதி என்ன செய்தார் என்றால் யாரையும் எதிர்பார்க்காமல் ரயில் நிலையத்திலிருந்து மாடு பூட்டிய கட்டை வண்டி பிராயணத்தில் நேராக கருங்கல் பாளையம் வந்து சேர்ந்து விட்டார்.

சென்னை திரும்பி வந்ததும் 'என் ஈரோடு யாத்திரை'  என்ற  தலைப்பில்  ஆகஸ்ட்  4-ம் தேதிய சுதேச மித்திரனில் ஜூலை 31=ல் நடந்த ஈரோடு கூட்டம் பற்றி பாரதி கட்டுரை எழுதுகிறார் அந்தக் கட்டுரையே அவரது கருங்கல் பாளையம் உரை பற்றி அறிந்து கொள்ள ஆவணமாகத் திகழ்கிறது.

'... அந்த வாசகசாலையின் வருஷோத்ஸ்வக் கூட்டத்திற்கு நான் போய்ச் சேர்ந்தேன்.  என்னை ஒரு பிரசங்கம் பண்ணச் சொன்னார்கள்.  எனக்கு ஒரு விஷயம் தான் முக்கியமாகத் தெரியும்.  அதையே அங்கும் எடுத்துப் பேசினேன். அதாவது இந்த உலகத்தில் மானுடர் எக்காலத்திலும் மரணமில்லாமல் இருக்கக் கூடுமென்ற விஷயம்' என்று தனது கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடுகிறார் பாரதி.

'மரணமில்லாமல் வாழ்வது குறித்த என்னுடைய கொள்கையைப் பெரிய மகான்கள் கூடியிருக்கிற இச்சபையில் தருக்கம் செய்யவே வந்திருக்கிறேன்.  எனது கொள்கையை தக்க ஆதாரங்களுடன் ருஜூப்படுத்தி உங்களுடைய அங்கீகாரம் பெறவே உங்கள் ஊருக்கு வந்திருக்கிறேன்..' என்று உரையைத் தொடங்கியதாக அக்கட்டுரையில் குறிப்பிடுகிறார் பாரதி

ஹிரண்யன் தன் மகன் பிரகலாதனிடத்தில் 'சொல்லடா, ஹரியென்ற கடவுள் எங்கே?' என்று கேட்டதையும் அதற்குப் பிரகலாதன், "நாராயணன் தூணிலும் உள்ளான்; துரும்பிலும் உள்ளான்" என்று பதில் கூறியதையும் குறிப்பிட்டு விட்டு, அதையொட்டிய தனது கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்தாராம் பாரதி.

'வல்ல பெருங்கடவுளில்லா  அணுவொன்றில்லை;   மஹாசக்தியில்லாத வஸ்துமில்லை;  சுத்த அறிவே சிவமென்றுரைக்கும் வேதம்.  வித்தகனாம் குருசிவமென்று எடுத்துரைத்து, "அத்வைத நிலை கண்டவருக்கு மரணமேது? பார் மீது யார் சாகினும் நான் சாகாதிருப்பேன். காண்பீர்.."  என்று தனது பேச்சின் முதல் பகுதியில் குறிப்பிடுகிறார் பாரதி.

"நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை அச்சத்தை, வேட்கைதனை அழித்து விட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்து போம்' என்று சித்தரெல்லாம் உரைத்திட்டார்.  இதனையே ஐரோப்பிய ஸயன்ஸ் சித்தாந்தங்களும்  தெளிவுபடுத்துக்கின்றன.  சினத்தை முன்னே வென்றிடுவீர்.  மேதினியில் மரணமில்லை. சினங்கொள்வார் தம்மைத் தாமே தீயாற் சுட்டுச் செத்திடுவாருக்கு ஒப்பாவார்.  சினம் கொண்டோர் பிறர் மேற்கொண்டு கவலைப்பட்டு தாம் செய்தது எண்ணித் துயர்க் கடலில் வீழ்ந்து சாவர்.  எனவே சினம் காரணமாகக் கவலையும், கவலையினால் சாவும் நேரிடுகின்றன.." என்று சாவிற்கான இன்னொரு காரணத்தையும் குழந்தைக்கும்  புரியுமாறு விளக்குகிறார் பாரதியார்.

"அறக்கடவுள் புதல்வன் என்னும் உதிட்டிரனும் இறுதியில் பொறுமை நெறி தவறி இளையாருடன் பாரதப் போர் புரிந்தான்.  பாரத நாட்டைப் போர்க்களத்தே அழித்து விட்டுப் புவியின் மீது வறுமையையும் கலியினையும் நிறுத்தி வானம் சேர்ந்தான். போரினால் புவியிலுள்ள உயிர்கள் எல்லாம் அநியாய மரணமெயதல் கொடுமையன்றோ?" என்று கேட்போரை யோசிக்க வைக்கும் திறத்தில் போரில்லா உலகத்தின் மேன்மை பற்றி விரிவாக எடுத்துரைக்கிறார் பாரதி.

"'நாடியிலே அதிர்ச்சியினால்  மரணம்' என்று விஞ்ஞானியான  ஜகதீச சந்திர வசு கூறுகின்றான்.  ஞானானுபவத்தினாலும் இது தான் முடிவு.  கோபத்தால் நாடியிலே அதிர்ச்சியுண்டாம். கொடுங்கோபம் பேரதிர்ச்சி.  அச்சத்தால் நாடியெல்லாம் அவிந்து போகும்.  கவலையினால் நாடியெல்லாம் தழலாய் வேகும்.  எனவே கோபத்தை வென்றிடலே பிறவற்றைத் தான் கொல்வதற்கு வழியென நான் குறிக்கிறேன்.." என்று ஞானபுருஷனுக்கான மேதாவிலாசத்துடன் அந்தக் கூட்டத்தில் எடுத்துரைக்கிறார் பாரதி.

"மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வமென்றால் மனையாளும் தெய்வமன்றோ?.. பெண்ணுக்கு விடுதலை நீரில்லையென்றால் பின்னிந்த உலகிலே வாழ்க்கையில்லை.. வீட்டிலுள்ள பழக்கமே நாட்டிலுண்டு.. வீட்டினில் தமக்கடிமை பிறராம் என்பவன் நாட்டினில் பிறரை அடிமைப்படுத்த நாள் தோறும் முயன்று நலிந்து சாவான்.." என்று கேட்போர் மனதில் பதியும் பாங்கில் எடுத்தியம்புகிறான் பாரதி.

'எல்லா மதங்களின் சாரமும் இதுவே.   ஞாலத்தில் மதங்கள் ஆயிரமாயிரம் இருக்கலாம்.   'கோபத்தைக் கொல்லுக.  அன்பே அரியும் அரனும் ஆகும். ஞாலத்தில் மதங்கள் ஆயிரமாயிரம் இருக்கலாம்; இருப்பினும் யாவினுக்கும் உட்புதைந்த கருத்து ஒன்றே; அதுவே அன்பெனும் அடிநாதம்..' என்ற பொருளில் அமைந்திருந்த தன் உரையை முடிக்கிறார் பாரதி.

'மோதி மிதித்து விடு, பாப்பா-- அவர் முகத்தில் உமிழ்ந்து விடு, பாப்பா' பாரதிக்கும் இந்த பாரதிக்கும் எவ்வளவு வித்தியாசம் என்று நாம் திகைக்கிறோம்.   'அக்னிக் குஞ்சொன்று கண்டேன்.. அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்..  வெந்து தணிந்தது காடு..' பாரதியாரா இந்த பாரதியார்?..   ஆமாம், எல்லா பாரதியும் ஒரே பாரதி தான்!

அதுதான் ஆகப்பெரிய கவிஞனின் இலட்சணம், இலக்கணம் எல்லாம்!  எந்த நேரத்தில் எந்த உணர்வில் மீக்கூர்ந்து தான் இருக்கிறானோ, அந்த நேரத்தில் அந்த உணர்வை மிகச் சரியாக தன்னில் பிரதிபலிப்பவன் தான் கவிஞன்!  இப்பொழுதோ, வெந்ததெல்லாம் தணிந்த காட்டின் நிலை பாரதிக்கு! புறநானூற்றில் பிசிராந்தையார் சொல்கிறாரே,  'ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர்' என்று, அந்த நிலையை 38 வயதிலேயே சித்தன் பாரதி கைவரப் பெற்றான் என்று தெரிகிறது.

(வளரும்)



Thursday, January 17, 2019

பாரதியார் கதை --26

                                             அத்தியாயம்--26    


விடுதலைக்குப் பிறகு   கொஞ்ச காலம் தான் எருக்கஞ்சேரி வாசம்.  சென்னை சென்று,  விட்ட இடத்தில் தொடர வேண்டும் என்ற வேகம் நீலகண்டனை ஆட்டிப் படைத்தது.  அந்த ஆசைக்கு அணைபோட்டு நிறுத்த முடியவில்லை.  ஒரு சுபயோக சுப தினத்தில் நீலகண்டன் சென்னை வந்து சேர்ந்தான்.

திருவல்லிக்கேணி பைகிராப்ட்ஸ் ரோடில் 566 எண்ணுள்ள கட்டிடத்தில் தங்க இடம் கிடைத்தது.  பக்கத்து காசி அய்யர் உணவு விடுதியில் சாப்பாடு.  பகல் பூராவும் சுதேசி பிரச்சாரம்.  பாக்கி நேரங்களில் சுதந்திர இந்தியாவின் கனவு.  காசு   இருந்தால் சாப்பாடு இல்லையென்றால்  கொலைப்  பட்டினி என்று வாழ்க்கையின் சிரமங்கள் பரிச்சயமாயின.  பசி பொறுக்க முடியாத தருணங்களில் முகத்தை மறைத்துக் கொண்டு  இராப்பிச்சை என்று அலைந்து கிடைத்ததை வாங்கிச் சாப்பிடவும் நேர்ந்திருக்கிறது.  பிச்சை எடுக்கக் கூடாது என்ற வைராக்கியம் மனதை பிசையும் பொழுது தொடர் பட்டினி தொடர்ந்திருக்கிறது.  ஏன் இந்த இளைஞனுக்கு இந்த நிலை என்று மனம் இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் வருந்துகிறது. 'சுதந்திர தேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே!' என்ற உணர்வு பொங்கி எழுந்ததாலா?..

நீலகண்டனுக்கு அப்பொழுது 30 வயது  இருக்கலாம்.  அந்த முப்பது வயதுக்குள் இந்த இளைஞன் வாழ்க்கையில் தான் எத்தனைப்  போராட்டங்கள்.  ஒரு நாள் நீலகண்டன்
திருவல்லிக்கேணியில்  பாரதியாரைப் பார்த்து விடுகிறார்.  'பாரதி! நான் தான் நீலகண்டன்..' என்று சொன்ன நீலகண்டனை அடையாளமே தெரியவில்லை பாரதிக்கு. நீலகண்டன் அவ்வளவு இளைத்திருந்தார்.  குடுமி இல்லை. அங்கி போன்ற ஆடை உடலைப்  போர்த்தியிருந்தது.   "நீலகண்டா! என்னடா இது கோலம்?" என்று பாரதி பதறிப் போய் நீலகண்டனைக் கட்டி அணைத்துக் கொள்கிறார்.  நீலகண்டன் தயங்கித்  தயங்கி, "பாரதி! உன்னிடம் இருந்தால் எனக்கு ஒரு நாலணா கொடேன்.. சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு.." என்கிறார்.  எதற்கும் நிலைகுலையாத பாரதி நிலை குலைந்து கண்ணீர் மல்கி நீலகண்டனின் சாப்பாடுக்கு ஏற்பாடு செய்கிறார்.  அந்த நேரத்தில் வந்த ஆத்திரத்தில் பாரதி பாடிய பாடல் தான் 'தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்..' என்று தெரிய வருகிறது.

நீலகண்ட பிரம்மச்சாரிக்கும் பாரதிக்கும் ஏழே வயசு வித்தியாசம்.  பாரதி ஏழு வயசுப் பெரியவர்.  இருவருமே டிசம்பர் மாதத்தில் தான் பிறந்திருக்கின்றனர்.  அப்பொழுது திருவல்லிக்கேணியில் பிரம்மச்சாரி பாரதியை சந்தித்ததுக்கும் இறைவன் விதித்திருந்த காரணத்தை அந்த நேரத்தில் அவர்கள்  இருவருமே அறிய மாட்டார்கள்.  ஆனால் தொடர்ந்த சரித்திர நிகழ்வுகளைப் பார்க்கும் பொழுது,  இதற்காகத்தான் இது என்று இறைவன் நிர்ணயித்திருந்த காரணங்கள் புரியும் போது மனம் சிலிர்க்கிறது.

அந்தக் காரணமும் நீலகண்ட பிரம்மச்சாரிக்கு 1921-ம் வருடம் செப்டம்பர் 11-ம் தேதியன்று புரிந்தது.

காலம் நம்மைக் கேட்டுக் கொண்டா நகர்கிறது?..  நாட்கள், மாதங்களாகி, மாதங்கள்  வருடங்களாக உருக் கொள்கின்றன.    நாளாவட்டத்கில்       
நீலகண்டனுக்கு இடதுசாரி சிந்தனையாளர் சிங்காரவேலருடனான
பழக்கம்,  புரட்சிகரமான கம்யூனிச சிந்தனைகளும்  தேசப் புரட்சி  பற்றிய எண்ணங்களும் மனசை ஆக்கிரமிக்கின்றன.  மக்களை  அணி திரட்டி வெகுஜனப் புரட்சி  நடந்தாலன்றி, இந்த ஆங்கிலேயரை நாட்டை விட்டு ஓட்டுவது சிரமம் என்று தீர்மானமான முடிவுகளை எடுக்கிறார் நீலகண்டன்.  பொதுவுடமைக் கருத்துக்களை உள்ளடக்கி நூலொன்றை வெளியிடுகிறார்.  பிரிட்டிஷ் ஆட்சி அதிகாரம் விழித்துக்  கொள்கிறது.

சென்னையில் பாரதியாருடனான சில மாத கால பழக்கத்திற்காகத் தான் இவர் சிறையிலிருந்து வெளியில்  விட்டு வைக்கப் பட்டிருந்தாரோ என்று எண்ணும்படி 1922 வருஷம் நீலகண்டன் கைது செய்யப் படுகிறார்.  ராபர்ட் வில்லியம் டிஎஸ்கோர்ட் ஆஷ் கொலையை விட கம்யூனிச சித்தாந்தங்களின் விளக்கமாக  சிவப்பு சிந்தனையில் ஒரு நூல் வெளிவந்த விஷயம் சகித்துக் கொள்ள முடியாமலிருக்கிறது ஆட்சியாளருக்கு. ஆஷ் கொலைக்கு 7 ஆண்டுகள் என்றால் இந்த நூல் வெளியீட்டுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையை பிரித்தானிய ஆங்கில அரசு நீலகண்டனுக்குப்  பரிசாக வழங்கியது.

அந்நாளைய பிரிட்டிஷ் தண்டனைச் சட்டப்படி ஒரு தடவைக்கு மேல் சிறையேகும் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் கறுப்பு குல்லாய் நீலகண்டனுக்கும் வழங்கப்பட்டது.   தீவிர பயங்கரவாதியாய் அந்த நாற்பதே வயசு இளைஞர் சித்தரிக்கப்பட்டு வடமேற்கு இந்திய மாண்ட்கோமரி சிறைச்சாலை, பின்னர் பெஷாவர், அதற்குப் பின் மூல்டான், கடைசியாக ரங்கூன் என்று அந்த பத்து வருஷ தண்டனை காலத்தில் பந்தாடப்பட்டார்.

சந்தேகமில்லாமல்  தமிழகத்தில்  பொதுவுடமை சித்தாந்த  புத்தக வெளியீட்டிற்காக சிறையேகிய முதல் நபர்  நீலகண்ட பிரம்மச்சாரியாகத் தான் இருக்கும்.  மக்கள் புரட்சி சிந்தனைகளுக்காக சிறை சென்ற நீலகண்டனாரின் மனசில் சிறையிலிருந்த அந்த பத்தாண்டு காலத்தில் அகப்புரட்சி ஏற்பட்டிருந்தது.  தன் தாய் மாமா வெங்கட்ராம சாஸ்திரியுடன்--  இவர்  மாயவரம்  முனிசிபல்  பள்ளி ஆசிரியர்--  சிறுவயதில் வேதாந்த கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு விவாதித்தது எல்லாம்  இப்பொழுது முழு உருக்கொண்டு இவரை ஆட்டிப் படைத்து இனி செய்ய வேண்டியது பற்றி ஆக்கபூர்வமான சிந்தனைகளை மனசில் விதைத்தது.

இரண்டு வருடங்கள் தேசாந்தரியாக பல இடங்களுக்குப் போனார்.   அப்படியான பயணங்கள் இவருக்கு  ஞானபீடமாக அமைந்தன.  தாடி  வளர்ந்ததும், காவியுடை தரித்ததும் இயல்பாக நடந்தன.  ஒரு நாள் ரயிலில் சென்று கொண்டிருக்கும் போது 90 வயது விஜயநகரத்து ராணி அறிமுகமாகி தன் ராஜ்யத்திற்கு அழைத்துப் போதல்,  ஆனைக்குன்று என்ற இடத்தில் இவர் ஆசிரமம் அமைத்தல்  ஆகிய காரியங்கள் தானாக அமைகின்றன.  ஏதோ உந்துதலில் திடீரென்று அங்கிருந்து கிளம்பி  தென்பெண்ணை உற்பத்தி ஸ்தானத்திற்கு வந்து சேருகிறார். ஒரு பக்கம் உயர்ந்த நந்தி ஹில்ஸ், மறுபக்கம் எழில் கொஞ்சும் சந்திரகிரி.   அந்த இடத்தில் சிவாலயம் ஒன்றை அமைத்து வழிபட இவரைத் தரிசிக்க வந்த ஜனத்திரளுக்கு இவர் ஓம்கார் சு, வாமிகளாகிறார்.  எல்லாம் இறைவனின் சித்தம் என்றாகிறது.

காந்திய பொருளாதார ஆசான் ஜே.சி.குமரப்பா,  சர்தார் படேல் ஆகியோர் அந்நாட்களில் இவரைச் சந்தித்து ஆன்மிக இந்தியாவை சமைப்பது பற்றி உரையாடல் நிகழ்த்தி இருக்கின்றனர்.   1936 வாக்கில் மஹாத்மா நந்தி ஹில்ஸூக்கு வந்திருந்தார்.  நீலகண்ட பிரம்மச்சாரி,  ஓம்கார் சுவாமிகளாக மாறி அங்கிருப்பது தெரிந்து அவரைச் சந்திக்க விரும்பினார்.  ஆனால் மஹாத்மாவால் மலையேறிப் போக முடியவில்லை.  மஹாத்மாவின் தனிச் செயலாளர் மஹாதேவ தேசாய் மலையேறி வந்து ஓம்கார் சுவாமிகளைப் பார்த்து காந்தியின் விருப்பத்தைச் சொன்னார்.  அது கேட்டு  நந்தி  ஹில்ஸில்               
காந்திஜி தங்கியிருந்த இடத்திற்கு வந்து சுவாமிகள் காந்திஜியைச் சந்தித்து அளவளாவியதில் இருவருக்குமே பூரண திருப்தி.  1936-ம் வருடம் மே மாதம் 30-ம் தேதி மாலை 7 மணி சுமாருக்கு மஹாத்மாவும் ஓம்கார் சுவாமிகளும் சந்தித்துப் பேசியதாக சரித்திர ஏடுகள் நமக்குத் தகவல் தெரிவிக்கின்றன.   வாழ்க்கையின் நிகழ்ச்சி நிரல்கள் எப்படியெல்லாம் வலை பின்னுகிறது என்று நமக்கும் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.

நீலகண்ட பிரம்மச்சாரியின் வாழ்க்கை ஏறத்தாழ 42 ஆண்டுகள் துறவியாகவே கழிந்தது.  கிட்டத்தட்ட 19 ஆண்டு காலம் சிறைப்பறவையாக இருந்த ஒரு சுதந்திரப் போராட்டக்காரர்,  புரட்சியாளராக-- கம்யூனிஸ்ட்டாக வரிக்கப்பட்டு, பின் வேதாந்தியாகி துறவியாக மாறிய கதை இது. 

88 ஆண்டுகள் வாழ்ந்த வாழ்க்கையின் ஏடுகள் பிரமிப்பூட்டுகின்றன.  அதுவும் 1978 மார்ச் 4-ம் தேதி நிறைவுற்றது.

ஓம்கார் சுவாமிகள் என்று அழைக்கப்பட்ட துறவியிடம் தாங்கள் கொண்டிருந்த பற்றினை வெளிப்படுத்தும் விதமாக அந்தப் பகுதி மக்கள் அவருக்கு  சமாதியை நிறுவினர்.  'இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய புரட்சியாளர் ஸ்ரீ ஓம்கார் சுவாமிகள் இங்கு சமாதியாகி உள்ளார்'  என்று கன்னட மொழியில் எழுதப்பட்டுள்ள வாசகங்கள் நமக்கு அவரது நீண்ட நெடிய போராட்ட வாழ்க்கையின் வரலாற்றைத் தெரிவிக்க போதுமானதாக உள்ளது.

(வளரும்)



Tuesday, January 15, 2019

பாரதியார் கதை --25

                                                 அத்தியாயம்-- 25



ருபதாயிரம் என்பது சாதாரண எண்ணிக்கை இல்லை.  அதுவும் ஒரு அடக்குமுறை அன்னிய ஆட்சியை இந்த நாட்டை விட்டுத் துறத்த  சர்வ பரியந்த தியாகமும் செய்யத் தயாராக இருந்த இருபதாயிரம் பேரைத் திரட்டுவது என்பது சாதாரண காரியம் இல்லை.  அதற்கு தயாராக ஒரு மனிதர் தன்னை தயார்படுத்தி வைத்திருந்தார் என்பதே அந்த மனிதரைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆவலை ஏற்படுத்தும்.

அவர் தான் நீலகண்ட பிரம்மச்சாரி.  சீர்காழிக்கு 
அருகாமையில் இருக்கும் எருக்கஞ்சேரி என்ற ஊரில் பிறந்தவராகையில் எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி என்று
பிரித்தானிய குற்றப்பத்திரிகை ஏடுகளில் இவர் பெயர் குறிப்பிடப்படுகிறது.  சுதந்திரப் போராட்ட வீரனுக்கு திருமணமும் ஒரு தடையாகிப் போய்விடப் போகிறதே என்று திருமணமே செய்து கொள்ளாதிருந்த தியாகி அவர்.

சீர்காழி இந்து உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வாசித்துக் கொண்டிருந்த சிறுவன் நீலகண்டன் ஒருநாள் காணாமல் போகிறான்.  திருவனந்தபுரத்தில் சிலகாலம் இருந்து விட்டு சென்னை திருவல்லிக்கேணி சிங்கராச்சாரி தெருவில் டி.யூ.சி.எஸ். பண்டகசாலையில் சின்னதாக ஒரு வேலை கிடைத்து தனது சிறப்பான பணியால் அந்த பண்டகசாலைக்குத் தேவையான மளிகை சாமான்களை விநியோகிக்கும் அந்தஸ்த்துக்கு உயர்கிறான்  இளைஞன்
நீலகண்டன்.

கர்ஸான் பிரபு வங்காளத்தை இரண்டாகக் கூறு போட்ட கோணங்கித்தனம் தான் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு உத்வேகத்தை ஊட்டியது என்று சொல்லலாம்.  தேசம் பூராவும் சுதந்திரக் கனலை பற்ற வைக்க விபின் சந்திர பாலர்
சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.  சென்னை கடற்கரையில் அவர் பேசிய கூட்டத்திற்கு இளைஞன் நீலகண்டன் போயிருந்தான்.  விபின் சந்திர பாலரின் உணர்வு கொப்பளிக்கும் உரையை நீலகண்டன் கேட்டத் திருநாள் தான் அவன் நெஞ்சில் விடுதலை வேள்விக்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்ற உறுதி பூத்த நன்னாள்.  அடிமை விலக்கொடிக்க ஆர்வம்  நெஞ்சு பூராவும் வியாபித்தது.  இளைஞன் அல்லவா?..  அதனால் தான் எப்படி களப்பணி ஆற்ற வேண்டும் என்பது புரிபடாத குழப்பமாய் இருந்தது. அதற்கான சந்தர்ப்பத்திற்கு மனம் ஏங்கிய தருணத்தில்  திருவல்லிக்கேணியில் பாரதியுடான சந்திப்பு நீலகண்டனுக்கு நிகழ்ந்தது.  நீலகண்டனை பாரதிக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது.

அந்தத் தருணத்தில் தான் சென்னை வந்திருந்த வ.உ.சி.க்கு நீலகண்டனை அறிமுகப்படுத்தி வைக்கிறார் பாரதியார்.  வ.உ.சி.யின் தேசபக்தி, இளைஞன் நீலகண்டனுக்கு ஒரு வழிகாட்டலாக உற்சாகமூட்டுகிறது.  சுதேசி கப்பல்  கம்பெனியின் வளர்ச்சிக்கு  ஜீவ ஓட்டமான  அதன் பங்குகளை விற்றுத் தருதல் போன்ற  தன்னாலான உடலுழைப்பைச் செய்ய வேண்டும் என்று நினைப்பு மேலோங்குகிறது.  நீலகண்டனுக்கு பாரதி செய்து வைத்த அடுத்த அறிமுகம்,  வங்காளத்து புரட்சி வீரர் சந்திரகாந்த் சக்ரவர்த்தி.  நீலகண்டனை பார்த்த மாத்திரத்திலேயே அந்த இளைஞனின் வேகம் சக்ரவர்த்திக்குப் புரிந்து போயிற்று.  தனது புரட்சி இயக்கமான 'அபிநவ பாரத்'தில் நீலகண்டனை இணைத்துக் கொள்கிறார்.  திரு நெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளில் இரகசிய கூட்டங்களை நடத்தி நீலகண்டன் அந்த புரட்சி இயக்கத்திற்கான பணிகளை மேலெடுத்துச் செல்லும் தருணத்தில் தான் சங்கர கிருஷ்ணனைச் சந்திக்கும் தருணம் வாய்க்கிறது.

யார் இந்த சங்கரகிருஷ்ணன்?..

சங்கரகிருஷ்ணன் பாரதியின் துணைவியார் செல்லம்மாவுக்கு உறவு .  சங்கர கிருஷ்ணனின் மருமான் வாஞ்சிநாதன் அப்பொழுது திருவிதாங்கூர் சமஸ்தானத்து  புனலூரில் காட்டிலாகாவில் பணியாற்றிக் கொண்டிருந்தார்..   சங்கர கிருஷ்ணன் தொடர்பால் வாஞ்சிநாதன்,  வ.உ.சி.யின்  தொடர்பால் சுப்பிரமணிய சிவா என்று நீலகண்டனின் சுதந்திரப் போராட்டத்திற்கான நட்பு வட்டம் இறுகியது. அத்துடன் போலிசாரின் கண்காணிப்பும் தீவிரமானது.

இந்த சமயத்தில் நீலகண்டனின் பெயருடன் பிரம்மச்சாரி இணைந்தது.  லெளகீக வாழ்வில் நாட்டமில்லாத தேசப்பற்று தவிர வேறெந்த பற்றும் இல்லாத அவரது வாழ்க்கைக்கு  அவர் பெயருடனான பிரம்மச்சாரி இணைப்புப் பொருத்தமாக இருந்தது.  அத்துடன் தன் குடுமியைக் களைந்து கிராப்புக்கும் மாறி குறிப்பிட்ட தன் அடையாளத்தைத் தவிர்த்தார் நீலகண்ட பிரம்மச்சாரி.                                                   

பத்தொன்பதாம்  நூற்றாண்டின் ஆரம்ப கால  தமிழக சுதந்திரப் போராட்ட தியாகிகளில் பலர் எவ்வகையிலோ மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட திருநெல்வேலி கலெக்டராக இருந்த ஆஷ் துரையின் கொலை வழக்கோடு சம்பந்தப்பட்டவராக பிரிட்டிஷ் அரசு கருதியிருக்கிறது.  அதுவும் நீலகண்ட பிரம்மச்சாரி அந்தக் கொலை வழக்கின் முதல்  குற்றவாளியாக குறிக்கப்பட்டவர்.   ஆனால் அந்தக் கொலை சம்பவம் நடந்த பொழுது பிரம்மச்சாரி காசியில் இருந்தார்.  ஆஷ் கொலையுண்ட தகவலை செய்தித்தாட்களில் படித்ததே அவருக்கு செய்தியாக இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த பிரித்தானிய போலிசார்,  ஆஷைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் தன்னையும் சுட்டுக் கொண்டு மாண்டு விட்டதால் வாஞ்சிநாதனுடன் தொடர்பு கொண்டிருந்தோருக்கு வலை விரிக்க ஆரம்பித்தனர்.  தற்கொலை செய்து கொண்ட வாஞ்சிநாதனின் சட்டைப் பையில் இரண்டு காகிதங்கள் இருந்தன.  ஒன்று:  ஆங்கிலேயரின் காட்டாச்சியை விரட்டி விட்டு இந்தியரின் சுயாட்சியை  நிலைநிறுத்திட தமிழகத்தில் தங்களைத் தத்தம் செய்து கொண்ட 3000  வலிமை மிகுந்தவர் இருப்பதாகவும் அந்த இயக்கத்தின் கடைக்கோடித் தொண்டன் நான் எனவும் தெரிவிக்கும் கடிதம்.  இரண்டாவது:  தனக்கு ஜபம் செய்ய புலித் தோல் ஒன்று வேண்டும் என்று கேட்டு வாஞ்சிநாதனுக்கு நீலகண்ட பிரம்மச்சாரி எழுதிய கடிதம்.

'ஒரு குற்றம் நடந்த நேரத்து தான் அந்தக் குற்றம் நடந்த இடத்தில் இல்லை; அதனால் இந்தக் கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை'  என்று சொல்லி கல்கத்தா போலிஸ் கமிஷ்னர் முன் ஆஜராகிறார்.  உடனே பிரம்மச்சாரி நெல்லை மணியாச்சிக்குக்  கொண்டு வரப்படுகிறார்.

இந்த வழக்கு மணியாச்சி மாஜிஸ்ட்ரேட்டால் உயர்  நீதி மன்றத்திற்கு அனுப்பப்பட்டது.   1911 செப்டம்பர் முதல் 1912 வரை இந்த வழக்கு நடந்தது.  1912  பிப்ரவரி மாதம் வெளியான தீர்ப்பு 400 பக்கங்களைக் கொண்டதாக இருந்ததாம்.   நீலகண்டருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் என்று தீர்ப்பு சொல்லிற்று.   சங்கர கிருஷ்ணனுக்கும் மடத்துக் கடை சிதம்பரத்திற்கும் 4 ஆண்டுகள்.  ஆறுமுகம், ஹரிஹர அய்யர், சோமசுந்திரம் பிள்ளை மற்றும் இருவருக்கு ஓராண்டு கடுங்காவல்.  இந்த வழக்கில் ஒரு வித்தியாசமான அதிசயமும் உண்டு.   மாடசாமி பிள்ளையை (வ.உ.சி.க்கு அணுக்க நண்பர்) கடைசி வரை கைது பண்ண முடியாமலேயே இருந்தது.  அவர் இல்லாமலேயே அவர் மீது வழக்கு மட்டும் நடந்தது.  பிள்ளையவர்கள் காணாமல் போனவர் போனவர் தான்.

நீலகண்டருக்கு தமிழ்  நாட்டில்  எந்த சிறையையும் ஒதுக்காது  பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார்.  இரண்டு ஆண்டுகள் சிறைவாசம் நிறைவுற்ற நிலையில் ஒரு நாள்  சிறைச்சாலையிலிருந்து தப்பி விட்டார்.  தர்மாவரம் ரயில் நிலையத்தில் பிடிக்கப்பட்டு,  அரை ஆண்டு சிறை தண்டனை நீட்டிக்கப்பட்டது.  மொத்தம் ஏழரை ஆண்டுகள் தண்டனை அனுபவித்து விடுதலையானார்.    இந்த ஏழரை ஆண்டுகளில்   விசாகப்பட்டினம், ராஜமகேந்திர புரம், கண்ணனூர், சென்னை, கோயம்புத்தூர், பாளையங்கோட்டை என்று பல்வேறு சிறைகளுக்குப் பந்தாடப்பட்டார்.

தண்டனை காலம் முடிந்து இவர் சிறையிலிருந்து வெளி வந்து தான் பிறந்த ஊருக்குச் செல்ல சீர்காழிக்கு டிக்கெட் வாங்கியிருந்தார்..  சென்னை செண்டரலில் அவருக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது.  நீலகண்டரின் தந்தையே அருமை மகனை எதிர்கொண்டழைக்கக் காத்திருதார்.

ஆஷ் கொலை வழக்கில்  நீலகண்டரின் தந்தை பதிமூன்றாவது சாட்சியாக விசாரிக்கப்பட்டது நமக்கான ஆச்சரியம்.


(வளரும்)


Wednesday, January 9, 2019

பாரதியார் கதை --24

                                                    அத்தியாயம்--24



பாரதியாரின் திருவல்லிக்கேணி வாழ்க்கை அவருக்கு நிறைய உற்சாகம் கொடுத்த வாழ்க்கை.  அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் அறிமுகமான நண்பர்கள் ஒவ்வொருவராக ஒன்று சேர்ந்த வாழ்க்கை.
வரகனேரி திருச்சிக்கு அருகிலுள்ள ஊர்.  இந்த ஊரில் ஜனித்த வேங்கடேச சுப்ரமணிய அய்யர்--- வ.வே.சு. அய்யர்--
புதுவையிலேயே பாரதிக்குப் பழக்கமானவர்.  பாரதி புதுவை கனகலிங்கத்திற்கு பிரம்மோபதேசம் செய்வித்த பொழுது அந்த புண்ணிய நிகழ்வில் கலந்து கொண்டது மட்டுமல்லாது நிகழ்விற்கு தலைமை தாங்கியவரும் வ.வே.சு. அய்யர் தான் யாரோ சொல்லியிருந்தது நினைவுக்கு வருகிறது.

வ.வே.சு. அய்யரின் வாழ்க்கை வீர சாகசங்கள் நிரம்பியது. பாரிஸ்டர் படிப்பு படிக்க இலண்டன் சென்றார் அய்யர் .  லண்டனில் ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா என்ற தேசபக்தர்

இந்திய இளைஞர்கள் தங்குவதற்காக இந்தியா ஹவுஸ் என்ற விடுதியை நடத்தி வந்தார்.  வ.வே.சு. அந்த விடுதியில் தங்கிப் படிக்கையில் தீவிர தேசியவாதியான வீர சவார்க்கரைச் சந்திக்கிறார். பிபின் சந்திரபால், லாலா ஹரி தயாள், மேடம் காமா என்று இந்தியா ஹவுஸில்  அவருக்கு நிறைய  புரட்சிகர நண்பர்கள்.   இலண்டனில் இருந்த பொழுதே பாரதியின் இந்தியா பத்திரிகைக்கு 'லண்டன் கடிதம்' என்ற
தலைப்பில் அய்யர் தொடர்ந்து எழுதினார்.  பாரதப்பிரியன் என்ற புனைப்பெயர் கொண்டிருந்த அய்யர், ஒன்றுபட்ட இத்தாலியை உருவாக்கிய கரிபால்டியின் சரிதத்தை இந்தியா பத்திரிகையில் தொடராக எழுதினார்.  பிரான்ஸின் சிந்தனையாளர் ரூசோவின் சிந்தனைகளை 'இந்தியா' பத்திரிகையில் 'ஜனசமூக ஒப்பந்தம்' என்ற தலைப்பில் தமிழாக்கம் செய்தார்.  கிரேக்கம், இலத்தின், பிரஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருதம், தமிழ் மொழிகளில் ஆழ்ந்த புலமை கொண்டவர் வ.வே.சு. அய்யர்.  தமிழின் முதல் சிறுகதையான 'குளத்தங்கரை அரச மரம்' கதைக்குச் சொந்தமானவர்.  அது மட்டுமில்லை, இவரது 'மங்கையர்கரசி காதல்' என்ற சிறுகதைத் தொகுப்பு தான் தமிழில் வெளிவந்த முதல் சிறுகதைத் தொகுப்பு நூலாகும்.

இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெறுவோர் ராஜ விசுவாச பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை பிரிட்டிஷார் கொள்கையாகவே கொண்டிருந்தனர். 
அப்படியொரு பிரமாணம் எடுத்துக் கொள்வதே அய்யருக்கு வெறுப்பாக இருந்தது. அதனால் பாரிஸ்டர் பட்டமே தேவையில்லை என்று புறக்கணிக்கிறார்.  அய்யரின் இந்த நடவடிக்கையை பெருத்த அவமானமாகக் கருதி  இதைச் சாக்காகக் கொண்டு அய்யரை வேட்டையாட ஆங்கில அரசு திட்டம் தீட்டியது.  வீர சாவர்கரின் ஆலோசனையின் பேரில் அய்யர் சீக்கியர் போல மாறு வேடம் பூண்டு பிரான்சுக்கு தப்பி விடுகிறார்.   பெர்லின், லண்டன், பிரான்ஸ் நாடுகளில் இயங்கிய இந்திய தேசிய புரட்சி வீரர்களின் குழுக்களுடன் அய்யர் தொடர்பில் இருந்தார்.

அய்யரை எப்படியாவது பிடித்து சிறையிலிட பிரிட்டிஷ் அரசு துடித்தது.  அய்யரோ,  துருக்கி, கொழுப்பு என்று நாடு நாடாக கப்பலில் மாறு வேடத்தில் பயணித்து பிரிட்டிஷ் வேவுப்  படையினரிடம் தப்பி ஒரு வழியாக புதுவை வந்து சேர்ந்து 1910 அக்டோபரில் பாரதியைச் சந்திக்கிறார்.  புதுவையில் அரவிந்தர், நீலகண்ட பிரம்மச்சாரி, பாரதி, வ.வே.சு, மண்டயம் ஸ்ரீனிவாச்சாரியார்,  வ.ரா.. என்று புரட்சியாளர்களின் ஜமா ஒன்று சேர்கிறது.

புதுவையில் அய்யர் கரடிக்குப்பம் என்ற இடத்தில் 'தர்மாலயம்' என்ற ஒரு இல்லம் அமைத்து அங்கு சுதந்திரப் போராட்டத்திற்கு வீரர்களை தயார்ப்படுத்தும் விதமாக அவர்களுக்கு  துப்பாக்கிச் சுடல், சிலம்பம், குத்துச் சண்டை போன்ற பயிற்சிகளை அளித்து வந்தார்.  இங்கு வாஞ்சிநாதன் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று வந்தார்.  இதைச் சாக்கிட்டு ஆஷ் துரை  வழக்கிலாவது அய்யரை சம்பந்தப்படுத்தி  சிறையில் தள்ளி விட வேண்டும் என்று ஆட்சியாளர்கள் வலை விரிக்க ஆரம்பித்தனர்....  இருந்தும்  யார் செய்த புண்ணியமோ தெரியவில்லை, அய்யர் இந்தக் கைது நடவடிக்கையிலிருந்து தப்பி விட்டார்.

முதல் உலகப்போர் முடிவில்   ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வ.வே.சு. பிரிட்டிஷ் இந்தியா வர அனுமதிக்கப் பட்டார்.  'தேசப்பக்தன்' என்ற இதழுக்கு ஆசிரியராக இருந்த தமிழ்த்தென்றல் திரு.வி.க. பணியிலிருந்து விடுபடவே அந்தஇதழுக்கு ஆசிரியர் பொறுப்பேற்றுக் கொள்கிறார்.   பாரதி சுதேசமித்திரனிலும் அய்யர் தேசபக்தனிலும் பத்திரிகைப் பணி ஆற்றுகின்றனர்.   அடிக்கடி சந்தித்துக் கொள்வர். பெரும்பாலும் பாரதியின் திருவல்லிக்கேணி வீட்டில் தான்.

தேசபக்தனில் வெளிவந்த கனல் கக்கும் கட்டுரைகளை சகித்துக் கொள்ள முடியாத பிரிட்டிஷ் அரசு  அய்யரைக் கைது செய்து பெல்லாரி சிறைக்கு அனுப்புகிறது. பாரதிக்கு உடல் நிலை சரியில்லை என்பதைக் கேள்விப்பட்டு சிறைக்கு இழுத்துச் செல்லப்படும் நிலையில் அரசிடம் கோரிக்கை வைத்து காவல் கைதியாக போலீஸ் காவலோடு பாரதியின் திருவல்லிக்கேணி வீட்டில் அவரைச் சந்திக்கிறார், அய்யர்.

பாரதியின் மெலிந்த உருவம் அய்யரை வாட்டியது.  கடுமையான வயிற்றுப்போக்கு என்று குடும்பத்தினர் சொல்லித் தெரிந்தது.   மருந்து கூட சாப்பிட மறுக்கும் பாரதியாரைப் பிரிந்து போக மனம் இல்லாமல் இருந்தது.  சுற்றிலும் காவலர்கள்.  என்னவோ ஏதோ என்று அக்கம்பக்கத்தினரின் லேசான சலசலப்பு.  ஒரு பக்கம் அருமை நண்பர் உடல் நலக்குறைவால்; இன்னொரு பக்கம் ரொம்ப நேரம் தான் அங்கு இருக்க முடியாது என்ற யதார்த்த அவசர கதி..

பரிதாபமாக  "பாரதி! நீ  மருந்து சாப்பிட மாட்டேன் என் கிறாயாமே?.. இப்படி அடம் பிடிக்கலாமா?,, மருந்து சாப்பிட்டால் தானே உடல் நலம் தேறும்?.." என்று  குழ்ந்தைக்குச் சொல்வது போல வேதனை வார்த்தைகளில் கொப்பளிக்க தழுதழுக்கிறார் வ.வே.சு.  அந்த சூழ்நிலை அதிக நேரம் பாரதியுடன் இருக்க முடியவில்லை.  தான் சிறையில் இருந்து வெளியே வருகின்ற பொழுது பாரதியின் உடல் நலம் தேறியிருக்கும் என்ற நினைப்பினூடே வீட்டை விட்டு வெ ளியே வந்தாராம் அய்யர்.

பாரதியையுடன் தம்மைப் பிணைத்திருந்த பாசக்கயிறை அய்யர் வலிய  அறுத்துக் கொண்டு செல்வதே போலவான உணர்வு நமக்கு.  சிறைக்குச் செல்பவர் எப்போது திரும்பி வருவாரோ என்ற வருத்தமும் கூடச் சேர்ந்து கொள்கிறது.


(வளரும்)



Thursday, January 3, 2019

பாரதியார் கதை --23

                                               அத்தியாயம--23


 'புதுவையில் புகுந்த பாரதி வேறு;  புதுவையிலிருந்து வெளிவந்த பாரதி வேறு.   உள்ளே சென்றவர் வீரர்; வெளியே வந்தவர் ஞானி'  என்பார் சுதேசமித்திரன் ஸி.ஆர்.ஸ்ரீநிவாஸன்.

உண்மை தான்.  ஆனால் அந்த ஞானத்தின் விளைச்சல் பாரதி சில விஷயங்களில் சமரசம் செய்து கொண்டு விட்டார் என்று அவர் வாழ்ந்த காலத்தின் அடக்குமுறைகளைப் பற்றி அறியாத சில வேடிக்கை மனிதர்களின் அறியாமை பிதற்றலும் ஆயிற்று. 

துளசிங்கப்பெருமாள் கோயில் தெருவின் தென் கோடியில் பாரதியார் குடியிருந்த வீடு இருந்ததென்றால் வட கோடியில்  இருந்த வீட்டில் இருந்த பழம்பெரும் தேசபக்தர் சடகோபன்  சிப்பாய் பாரதி என்றே பாரதியை வர்ணித்திருக்கிறார்.  'அந்தக் காலத்தில் பிரிட்டிஷ் சர்க்கார் தேசியவாதிகளுக்கு தசகண்ட ராவணனைப் போலவே இருந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ராணுவ ஆட்சியைக் கண்டு கலங்காமல் குழம்பாமல் வீரமாக இருந்த பாரதியார் போன்ற
தலைவர்களைக் கண்டால் ஏதோ மகத்தான அதிசயத்தைக் காண்பது போல இருக்கும்' என்று அவர் பிரமித்திருக்கிறார்.

சென்னை விக்டோரியா ஹாலில் ஆங்கிலத்தில் பாரதி ஆற்றிய 'The Cult of the Eternal' சொற்பொழிவுகளின் தொடர்ச்சியாய் The faith of the Vedas, The Doctrine of the Upanishads. The  place of Women in Human Society  என்ற தலைப்புகளில் சொற்பொழிவுகள் ஆற்ற விவரங்களை சேகரித்து வைத்திருந்தார் என்று பாரதி பற்றிய  குறிப்புகளிலிருந்து தெரிய வருகிறது.

திருவல்லிக்கேணி வந்த பிறகு ஊரில் இருக்கும் நாட்களில் தினமும் பார்த்தசாரதி பெருமாள் கோயிலுக்குப் போவதை பழக்கமாகக் கொண்டிருந்தார் பாரதியார்.  பார்த்தசாரதி  பாரதியின் உள்ளம் கவர்ந்த கள்வன்.  பெருமாளின் மீசையின் அழகைப் பார்த்துத்தான் பாரதி தன் மீசையையே திருத்திக் கொண்டானோ என்றொரு கவிதை நான் எழுதியது நினைவுக்கு  வருகிறது.




திருவல்லிக்கேணி கோயில்
போன போது தான் தெரிந்தது
பார்த்தசாரதியைப்
பார்த்து விட்டுத்தான்                         
பாரதி தன் மீசையை   
திருத்திக் கொண்டானோ என்று..
அப்போ முண்டாசு?...

பார்த்தசாரதி பெருமானை தரிசிக்க பாரதி கோயிலுக்குள் நுழையும் பொழுதெல்லாம்  கோயில் யானைக்கு ஏதாவது
கொடுத்து விட்டுத் தான் பெருமாளின் சந்நதிக்குள்ளேயே நுழைவார்.  அந்த யானையின் பெயர் அர்ஜூனன்.
யானைக்காக தேங்காய், பழம் என்று வீட்டிலிருந்தே எடுத்துச் சென்று விடுவது அவரது பழக்கம்.  பல நேரங்களில் சின்னதாய் வெல்லக்கட்டி எடுத்துச் செல்வாராம்.  யானைப் பசிக்கு சோளப்பொரியா என்று திகைக்காதீர்கள்.  இறைவனுக்கு நைவேத்தியம் மாதிரி யானைக்கு வெல்லக்கட்டி என்று பாரதி நினைத்திருக்கலாம்.  யானைக்கு இப்படி ஏதாவது கொடுத்து அதனுடன் நட்பு பாராட்டியது அவர் மனதுக்கு இதமாக இருந்தது மட்டுமல்ல, அந்த யானைக்கு இசைவாகவும் இருந்திருக்கிறது.

அன்று  அது எதிர்பாராமல் நடந்து விட்டது.  பாரதி யானைக்கு அருகில் சென்று வெல்லக்கட்டியை நீட்டும் பொழுது தலை குனிந்து தென்னம் ஓலையைத் தின்றபடி அசை போட்டுக் கொண்டிருந்த யானை தனக்கு மிக அருகில் யாரோ நிற்பதை உணர்ந்து தலை நிமிர்ந்த பொழுது யானையின் தும்பிக்கை வேகமாக பாரதியைத் தள்ளி பாரதி யானையின் காலடிகளுக்கு  கீழே விழுந்து விட்டார்.  யானைப் பாகன் எங்கே போனானோ தெரியவில்லை.

கோயில் யானையை வேடிக்கை பார்க்க வந்திருந்த ஓரிருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்திருக்க எங்கிருந்தோ பாய்ந்து வந்த குவளைக் கண்ணன்  சடாரென்று யானைக் கொட்டடிக்குள்  தாவிக் குதித்து தன் இரு கரங்களில்  பாரதியாரை அள்ளி வாரி எடுத்து வெளியே கொண்டு வந்தார்.  அங்கிருந்த சிலரின் உதவியோடு ஒரு வழியாக பாரதியாரை கோயில் வாசல் பக்கம் கொண்டு வந்திருக்கிறார்கள்.   கோயிலின் நுழைவாயிலுக்கு வெகு அருகில் தான் மண்டயம் ஸ்ரீனிவாஸாசாரியார் வீடு.  இரைச்சல் கேட்டு அவரும் வெளியே வர குவளைக்கண்ணன் சொல்லி விஷயம் அறிந்து பக்கத்தில் இருந்த ஒரு மருத்துவமனைக்கு பாரதியை
வண்டியில் அழைத்துச் செல்கின்றனர்.

பாரதியாரின் தவப்புதல்வி சகுந்தலா 'என் தந்தை பாரதி' என்று நூல் எழுதியிருக்கிறார். அதில் இந்த சம்பவம் பற்றி பதற்றதுடன் விவரிக்கிறார்: 'ஸ்ரீனிவாஸாச்சாரியார் பெண் ரங்காள் எங்கள் வீட்டுக்கு  ஓடி வந்தாள்.  "சகுந்தலா! அப்பாவை ஆனை அடிச்சிடுத்து.." என்று அழுது கொண்டே   கத்தினாள்.  கடவுளே! அந்த ஒரு  நிமிஷம் என் உள்ளம் இருந்த நிலையை எதற்கு ஒப்பிடுவேன் ---அப்பாவை ஆனை அடிச்சிடுத்து ---  ரெங்காவுடன் பார்த்தசாரதி கோயிலுக்கு ஓடினேன்.  அதற்குள் அவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய் விட்டார்கள்.  எந்த ஆஸ்பத்திரி என்று தெரியாது.
என்ன செய்வது?...

'திருவல்லிக்கேணி விக்டோரியா ஹாஸ்டலில் என் தாயாரின் இளைய சகோதரர் தங்கியிருந்தார்.  அவரை அழைத்து வருவதற்காக விக்டோரியா ஹாஸ்டல் போனேன்.  அங்கு அவர் குடியிருந்த அறை எண் தெரியாது.   ஒரு வழியாக அவரைக் கண்டு பிடித்து அவரிடம் செய்தியைத் தெரிவித்தேன்.  ஜெனரல் ஆஸ்பத்திரிக்குத் தான் கொண்டு  போய் இருப்பார்கள் என்று நினைத்து அவர் அங்கு சென்றார். நான் வீடு திரும்பிய பொழுது என் தந்தையை வீட்டுக்கு கொண்டு வந்து விட்டார்கள்.     மேல் உதட்டில் யானையின் தந்தம் குத்தியதால்  ஏற்பட்ட ரத்தக் காயம்.  தலையில் நல்ல பலமான அடி....' என்று சகுந்தலாவின் அந்த  நூலிலிருந்து நமக்குத் தெரிய வருகிறது.

இடையில் ஒரு ஆச்சரியம்.  பாரதி புதுவையில் முப்புரி நூல் அணிவித்து உபநயனம் செய்வித்த பாரதி அன்பர் கனகலிங்கம்  அந்த சமயத்தில் சென்னையில் தான் இருந்திருக்கிறார்.  பாரதிக்கு ஏற்பட்ட விபத்து பற்றி சுதேச மித்திரனில் படித்து விட்டு பாரதியைப் பார்க்க ஓடோடி வருகிறார்.

கனகலிங்கத்தைப் பார்த்ததில் பாரதிக்கு ஏகப்பட்ட  சந்தோஷம்.  கவலையுடன் தன்னைப் பார்த்த கனகலிங்கத்தைப் பக்கத்தில் அழைத்து, புன்னகையுடன்  "ஒன்றுமில்லை.  எப்போதும் நான் அந்த யானைக்கு வெல்லம் கொடுப்பது வழக்கம்.  அன்று அது தன் தென்னம் ஓலையைத் தின்று கொண்டிருந்தது.  அச்சமயம் நான் வெல்லத்தை நீட்டினேன்.  அது தலை குனிந்து ஓலைப்பட்சணத்தை  பட்சித்துக் கொண்டிருந்ததால்  என்னைப் பார்க்கவில்லை.  என்னைப் பாராமல் தும்பிக்கையால் தள்ளி விட்டது.." என்று பாரதி தன்னிடம் சொன்னதாக கனகலிங்கம் 'என் குருநாதர் பாரதி' என்ற பாரதி பற்றிய தன் நூலில் சொல்கிறார்.

பாரதிக்கு தனது எந்த அனுபவத்தையும் எழுத்தில் வடித்து விட வேண்டும்.  யானையுடனான தனது அனுபவத்தையும்  'கோயில் யானை கதை' என்று  கொஞ்சம் கற்பனை  கலந்து  நாடகமாக  எழுதி விட்டார்.  8-1-21ல்  வெளிவந்த சுதேசமித்திரன் துணைத் தலையங்கத்தில் அதற்கு முன்னால் மித்திரன் வருஷ அனுபந்தத்தில் பாரதியார் எழுதிய கோயில் யானை நாடகம் பற்றிக் குறிப்பிடுவதால் ஜனவரி 1921-க்கு முன்னாலேயே பாரதியார் இந்த கோயில் யானை நாடகத்தை எழுதி விட்டார் என்று தெரிகிறது.

தான்  சம்பந்தப்பட்ட நிகழ்வு ஒன்றை கதையாக்குவது என்றால் எழுத்தாளனுக்கு என்றைக்குமே தனியான  ஒரு ஈடுபாடு உண்டு.  சம்பந்தப்பட்டு நடந்த நிகழ்வு அப்படியே நடந்தது  நடந்தபடி எழுதினால் அவனுக்கு அது சுவாரஸ்யப்படாது. நடந்த  நிகழ்வைக் கூட்டியோ குறைத்தோ மட்டுமில்லை, அதில் கற்பனை மெருகேற்றி வாசகரை ஜிவ்வென்று இழுத்துப்  பிடிக்கிற மாதிரி எழுத வேண்டும். பாரதியின்  கோயில் யானை கதை நாடகத்திலும் இது தான் நடந்திருக்கிறது.

ஆனால் ஆனை தள்ளி கீழே விழுந்த தனது வலி அனுபவத்தை இரு காதலர்களை ஒன்று சேர்க்கும் ஒரு சுப முடிவுக்கான கற்பனையாக அவர் மாற்றிக் கொண்டது தான் பாரதியின் சாதுர்யம்.   இந்த நாடகத்தை எழுதியதின் மூலம் யானை தள்ளிய அதிர்ச்சியிலிருந்து விடுபட்டு தன் மன வலிமைக்கான மருந்து கண்டிருக்கிறார் பாரதி என்றே எண்ணத் தோன்றுகிறது.

அது என்ன 'கோயில் யானை கதை'?

அமரபுரத்தை ஆண்டு வந்தவன் சூரியகோடி.  அவனது ஆசை மகன் வஜ்ரி.  இளவரசன் வஜ்ரி,  நித்தியராமன் என்னும் பெரும் செல்வந்தனின் மகள் வஜ்ரலேகையின் அழகில் மயங்கி அவளைக் காதலிக்கிறான்.  மன்னன் சூரியகோடியின் ஆசையோ வேறே.  அங்க தேசத்து இளவரசியை தன் மகனுக்கு மணம் முடிக்க வேண்டுமென்று விரும்புகிறான்.  இந்த அங்க தேசத்து அரசன் மகன் சந்திரவர்மன் வஜ்ரியின் தோழன் என்பது வேறு சூரியகோடியின் ஆசைக்கு வலு சேர்க்கிறது.

ஒரு நாள் இரு இளவரசர்களும்  சேர்ந்து சுற்றுலா போகும் பொழுது வழியில் இருந்த  காளி கோயிலுக்குள் செல்கின்றனர்.   அந்த கோயில் யானைக்கு மதம் ஏறியிருப்பது தெரியாது யானைக்கு அருகில் செல்கின்றனர். யானைக்கு மிக நெருக்கத்தில் சென்ற வஜ்ரி யானையால் தள்ளி விடப்படுகிறான்.  அருகிலிருந்த சந்திரவர்மன் சித்தம் கலங்கி கீழே விழுந்த   வஜ்ரியை யானையிடமிருந்து மீட்டு  வெளிக் கொணர்கிறான்.  சந்திரமோகன் மூலம் அரசன்  தன் மகனின் காதலைப்  புரிந்து கொண்டு வஜ்ரியையும் வஜ்ரலேகையையும் இணைத்து வைக்கிறான்..

'என் தந்தை பாரதி'  என்ற தமது நூலில் பாரதியின் புதல்வியார் சகுந்தலாவின் குறிப்பொன்றையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.  ' என் தந்தையின் உயிருக்கு ஆபத்து இல்லையெனக் கேட்டு என் மனம் ஒருவாறு ஆறுதல் அடைந்தது.   காயங்கள் குணமடைந்து அவர் வேலைக்குச் செல்ல பல நாட்களாகின.  யானை தள்ளிய கதையையும்  தன் சொந்த கற்பனையையும் சேர்த்து 'காளி கோயில் கதை' என்ற கதையொன்று எழுதியிருந்தார்.  அது சுதேசமித்திரனில் பிரசுரிக்கப்பட்டிருந்தது' என்று குறிப்பிடுகிறார்.

நெடுங்காலம் பாரதி எழுதிய  கோயில் யானை படைப்பாக்கம் பற்றி பிரசுர வடிவில் எதுவும் தெரியாமலேயே இருந்தது.  அது 'கோயில் யானை' கதையா, 'காளி கோயில் கதை'யா,  'கோயில் யானை கதை' நாடகமா என்று அந்த யானைக் கதை தலைப்பு பற்றிய குளறுபடிகள் வேறே.

ஒரு வழியாக,  1951 ஜனவரி மாத 'கலைமகள்' இதழில் 'இதுவரை நூல் வடிவம் பெறாத பாரதியாரின் படைப்பு' என்ற குறிப்புடன்  'கோயில் யானை' நாடகம் பிரசுரம் ஆயிற்று.  ஆனால் பாரதியியலில் மிக முக்கிய வரலாற்று சான்றான பாரதியின் இந்த நாடகப் படைப்பாக்கம் இன்று வரை பாரதியின் படைப்புகள் பற்றிய எந்தத் தொகுப்பிலும் இடம் பெறாதது ஆச்சரியம் தான்.


(வளரும்)


Related Posts with Thumbnails