"ஐயே!.. " என்றாள் மங்கை.
"மனசிலே ராஜாங்கற நெனைப்புத் தான்!" என்று முகம் தொட்டு கன்னம் கிள்ளினாள். கிள்ளிய இடத்தில் வலித்தாலும் இன்னொரு தடவை கிள்ள மாட்டாளா என்று பாண்டியனுக்கு இருந்தது. "நெஜமாலும் அப்படி இல்லை, மங்கை.." என்றான்.
"எப்படி இல்லை?"
"ராஜாங்கற நெனைப்பு என்னிக்கும் இருந்ததில்லே.. அதுவும் அந்த ராஜா சிலைக்கு முன்னாடி நின்னப்போ, நாம்பலாம் ராஜாங்கற நெனைப்பு எங்கேயாச்சும் வருமா?"
"வேறே என்ன நெனைப்பு வந்திச்சி?.."
"எந்த நெனைப்பும் இல்லே. ஆனா மனசு மட்டும் என்னை விட்டுப் பிரிஞ்சி அவரோட ஒட்டிக்கிட்ட மாதிரி இருந்தது. சிற்பி வடித்திருந்த சிலையை கண்ணைத் திறந்து பார்த்ததுமே ஆச்சரியத்தோட இந்த நாயன்மார் யாருன்னு தெரிஞ்சிக்க மேலே எழுதியிருந்த பேரைப் பார்த்தேன்."
'உம்' என்று சுவாரஸ்யமாகக் கேட்கிற உணர்வில் 'உம்'கொட்டினாள் மங்கை.

"அங்கேயும் நெடுக்க தீபம் ஏத்தி வைச்சிருந்தாங்கன்னாலும், அரைகுறை இருட்லே சரியா தெரிலே.. உச்சிலே வேறே எழுதியிருந்தாங்களா, கழுத்தைச் சாய்ச்சு அண்ணாந்து பாக்க வேண்டிருந்தது.. லேசா அழிஞ்சிருந்தாலும் நின்ற சீர் நெடுமாற நாயனார்ன்னு எழுத்தைக் கூட்டி படிக்க முடிஞ்சது.. அவர்
நாயனார் ஆனாலும் மன்னராய் தான் இருப்பார்ன்னு பேரைக் கொண்டு யூகிச்சேன்."
"நெடுமாறன்னதும் பாண்டிய ராஜான்னு தெரியறது.. ஐயே! பாண்டிய ராஜான்னா எவ்வளவு சந்தோஷம் பாரேன்!"
"மதுரைதான் நம்ப ஊரு. அதனாலே பாண்டிய ராஜான்னா ஒரு இது! அதான்!" என்றான் பாண்டியன்.
"ஒங்க பேரும் பாண்டியங்கறதாலே தான் மனசிலே ராஜாங்கற நெனைப்பான்னு கேட்டேன். இப்போ சொல்லுங்க. கேட்டது நியாயம் தானே!"
"அரை நியாயம். அரை அநியாயம்."
"என்ன கணக்கிலே சொல்றீங்க?"
"பாண்டியன்ங்கறதாலே ராஜாவா நினைச்சது நியாயம்; எல்லாரும் இந்நாட்டு மன்னர்ன்னு நான் நினைக்கறதாலே நான் ஒருத்தன் தான் ராஜாங்கறது அநியாயம்.."
"ஊருக்கு ராஜா இல்லேனாலும் என் ராஜ்யத்திற்கு நீங்க தானே ராஜா!"
"அப்ப நீ தான் என் ராஜ்ய ராணி. சோழ ராணி.."
"சோழ ராணியா?" என்று கேட்டு விழி விரித்தாள் மங்கை.
"பின்னே, இல்லியா? சோழ நாட்டுப் பெண் தானே நீ? அதனாலே சோழ ராணி."
"அத்தை மகளானாலும் பாண்டிய ராஜாவை திருமணம் முடித்த சோழ ராணிங்கறீங்க.. அப்படித் தானே?"

"சரிதான்.." என்று அவள் அருகே கொஞ்சம் நகர்ந்து உட்கார்ந்தான் பாண்டியன். "சிவராத்ரிக்கு முழிக்கணும்னா சும்மா இல்லே.. தெரிஞ்சிக்க. பாதி ராத்திரி போக இதோ, இது!" என்று பக்கத்தில் மடக்கி வைத்திருந்த பரமபத
விளையாட்டு அட்டையை எடுத்தான். பிரித்து வைத்து பிளாஸ்டிக் கவரில் இருந்த எண்கள் போட்ட சதுர பகடையையும், இரண்டு பேருக்குமான இரண்டு நிறங்களில் இருந்த அடையாள வில்லைகளையும் எடுத்து வைத்துக் கொண்டான்.
"பரமபத விளையாட்டு விளையாட ஆரம்பிச்சா பாதிலே எழுந்திருக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்கள்லே?" என்று நிமிர்ந்து பார்த்த மங்கையின் முகம் குழல் சுருட்டலுக்குப் பின்னால் பளபளத்தது.
"அப்படியா?.. நான் கேள்விப்பட்டது இல்லே. விளையாட ஆரம்பிச்சா எழுந்திருக்க மனசும் வராது, இல்லியா?.. ஒரு ஆட்டமாவது போட்டுடலாம். ஓக்கேவா?"
"ஓ.." என்று உதடைக் குவித்தாள் மங்கை. கண்மூடி கைகுவித்து உதடசைத்து வேண்டிக்கொண்டாள். அடுத்த வினாடி விழித்து, "தாயம் போட்டுத் தானே விளையாட்டை ஆரம்பிக்கணும்?" என்று அவனிடம் கேட்டாள்.
"என்ன தெரியாத மாதிரி கேக்கறே?.. தாயம் போட்டாத்தான்.."என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே தாயத்தைப் போட்டு விட்டு, "ஹையா.." என்று ஒரு எம்பு எம்பிக் குதித்தாள் மங்கை.
பாண்டியன் இதை எதிர்பார்க்கவில்லை."என்ன இவ்வளவு ஈஸியா தாயம் போட்டுட்டே?" என்று முனகியவாறே அவளிடமிருந்த பிளாஸ்ட்டிக் சதுரப் பகடையை வாங்கி உருட்டினான். அட! அவனுக்கும் தாயம்!
"அப்பாடி.." என்று அவன் சிரிக்க, அமர்த்தலாக "தாயம் போட்றதிலே என்ன இருக்கு? அந்த அருகாஷன் பாம்பு கைலே மாட்டாம இருக்கணுமில்லே.. அதுக்குத் தான் ஆட்டத்தை ஆரம்பிக்கும் போதே வேண்டிக்கிட்டேன்." என்றாள் மங்கை.
"அப்படியா சமாச்சாரம்?.. மங்கை! பாம்பின் கை பாம்பறியும்ன்னு ஒரு வழக்கு மொழி இருக்கு. தெரியுமிலே?"
"என்ன கிண்டல் அடிக்கிறீங்களா-- எனக்கும் தெரியும், பாம்பின கால் பாம்பறியும்னுட்டு.."
"ஓ.. நீ தமிழ் பி.லிட்.லே?.. தெரியாம கேட்டுட்டேன்" என்றபடி 9 போட்டு 'கொக்கு'க்கு வந்திருந்தவன், ஒரு 7 போட்டு 16 எண் 'சகுனக் கட்ட'த்திற்கு வந்து அங்கிருந்த ஏணியில் ஏறி 28ம் எண் 'கடவுள் உடனுறை' கட்டத்திற்கு வந்து விட்டான். கடவுள் உடனுறை! பெயரே தெய்வீகமாக இருந்தது; அதனால் அந்த கட்டம் வந்ததில் அவனுக்கு ரொம்ப சந்தோஷம்.
மங்கையோ எட்டும் ஆறும் போட்டு 14-வது கட்டத்திற்கு வந்திருந்தவள் இப்பொழுது ஒரு 5 போட்டு 'ஸ்தோத்திர கட்ட'த்திற்கு வந்து ஏணி ஏறும் அதிர்ஷ்டம் கிடைத்து 39 எண்ணிட்ட 'கோலோகம்' கட்டத்திற்கு வந்து சேர்ந்தாள். பசுக்கூட்ட லோகம் கிடைத்ததில் அவளுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி.
அந்த சந்தோஷத்தில், "அப்புறம் என்ன ஆச்சு?.. நாயன்மார் பேரைப் படிச்சீங்க. அதற்கப்புறம்?"
"அப்புறம் என்ன?.. உன்னை மாதிரி பி.லிட்.டா இருந்திருந்தாலும் பேரைப் பாத்ததும் அவரு யாரு என்னன்னு தெரிஞ்சிருக்கும். சரித்திரத்திலும் அவ்வளவு பத்தாதில்லையா எனக்கு?.." என்று ஒரு 2 போட்டு 'தியானம்' வந்ததினால் அங்கிருந்த ஏணி ஏறி 50 எண்ணிட்ட 'தவக்கோலம்' அடைந்தான்.
"என்ன யார் முகத்லே முழிச்சீங்களோ, ஒரே ஏணி ஏத்தமானா இருக்கு!" என்று கேட்டு மங்கை பகடையை உருட்ட அது 2 காட்டி 'யாகம்' கட்டம் அடைந்து அங்கிருந்த ஏணி ஏறி 61 'சுவர்லோகம்' அடைந்தாள்.
"உனக்கு மட்டும் என்னவாம்?.. ஏணி சவாரி இல்லியோ?"
"ரெண்டு பேருக்கும் தான் சொன்னேன். நீங்க என் முகத்லேயும் நான் உங்க முகத்லேயும் முழிச்சிருப்பேன். ரெண்டு பேரா இருந்தாலே இப்படித்தான். அதுக்குத் தான் மூணாவது ஒருத்தர் வேணுங்கறது.."

"சிவ சிவா.." என்று பாண்டியன் பகடையை உருட்டிப் போட்டான். ஒரு 2 விழ 52 அடைந்து அங்கிருந்த ஏணி ஏற்றிவிட 72 'கடவுளை நெருங்குதல்' கட்டம் வந்ததில் சந்தோஷமான சந்தோஷம் அவனுக்கு.
"அட, இதைப் பாரேன்.." என்று மங்கை பகடையை உருட்டினாள். என்ன ஆச்சரியம்! அவளூக்கும் அதே 2 தான். அது அவளை 63 'பக்தி'க்கு கூட்டிப்போக அங்கு தயாராயிருந்த ஏணி அவளை 83 'பிரம்ம லோக'த்தில் கொண்டு வந்து விட்டது.
"மறந்திட்டேன். நாயனார் பேரு என்ன சொன்னீங்க?.. நின்ற சீர் நெடுமாறன் இல்லியா?.. உம்?.. அவரு யாரு, என்னன்னு சட்டுனு ஞாபகத்துக்கு வரலே. நாயன்மார்கள் பத்திலாம் படிச்சிருக்கேன். பரீட்சைலே அவங்களைப் பத்தி கேள்வி கூட வந்தது.. அதெல்லாம் கூட ஞாபகம் இருக்கு.. 63 பேர் இல்லியா?அதான் யார் யார் என்ன என்னன்னு சட்டுனு நெனைவுக்கு வரலே.. படிப்பு முடிச்சும் மூணு வருஷம் ஆயிடிச்சில்லா?.. அதான். சுவத்து மர பீரோலே கவர் போட்டு பழசெல்லாம் கட்டி வைச்சிருக்கேன். எடுத்து பாத்துத் தான் சொல்லணும்" என்று சொல்லிக் கொண்டே பகடையை உருட்டியவள், 4 போட்டு 87 'வைராக்கியம்' வந்து ஏணி ஏறி 115வது கட்ட 'வைகுண்டம்' வந்து சேர்ந்தாள். சேர்ந்த மகிழ்ச்சியில் பூரித்தாள். அந்த பூரிப்பை அவளது கன்னக் கதுப்புக்கள் பளபளத்து புஷ்டியுடன் வெளிப்படுத்தின..
"என்ன சரசரன்னு ஏறிட்டியே?" என்ற பாண்டியன் அவளைப் பிடிக்கும் அவசரம் கலந்த ஆவலில் கை பகடையை உருட்ட 7 விழுந்து 79 'ஞானம்' வந்து ஏணி ஏற்றிக் கொண்டது; 117 'கைலாய'த்தில் கொண்டு வந்து விட்டது.
79 எங்கே 117 எங்கே?.. ஏணியே! ஆயிரம் நூற்றாண்டிரும். உமக்கு நன்றி.." என்று பாண்டியன் வெற்றிக் களிப்பில் அந்த சமயத்தில் மனசுக்குத் தோன்றிய வசனம் பேசினான். "மங்கை! வைகுண்டத்துக்கும் கைலாயத்திற்கும் ஒரு கட்டம் தான் இடையே. ஒரு 2 போடு. நீயும் கைலாயம் வந்து சேர்ந்திக்கலாம்.." என்று கும்மாளம் போட்டான்.
"வரேன்.." என்றாள் மங்கை. வாயால் 'வரேன்..' என்று உறுதி போலச் சொல்வதால் எங்கே அதற்கு நேர்மாறாக நடந்து விடுமோ என்கிற பயமும் அவளுக்கு இருந்தது. அந்த பயம் தன்னைப் பாதிக்காமல் இருக்க வேறே ஒரு சந்தோஷத்தால் அதை மூடி மறைக்க வேண்டும் என்கிற உணர்வில், "ஒண்ணு தெரியுமா, உங்களுக்கு?.. ரெண்டு பேருமே அருகாஷனை கடந்து வந்திட்டோம். பாத்தீங்களா? நா வேண்டிக்கிட்டது வீண் போகலை." என்று பகடையை கையில் எடுத்தாள்.
"எதுக்கு வேண்டிகிட்டேன்னு தெரியாது. ஆனா, நீ வேண்டிக்கும் போதே உன் கோரிக்கை நிறைவேறிடும்ன்னு நான் நெனைச்சேன்.."என்றவனை எட்டி குஷியில் புஜம் பற்றி இறுக்கினாள்.
"பாத்து.. பாத்து, மங்கை.. நாலோ ஆறோ போட்டுடாதே.. கர்வமும், அகங்காரமும் ரெண்டு பாம்பாக் காத்திருக்கு. மாட்டினா அதுங்க நம்பளை கீழே இறக்கிவிட்டிட்டுத் தான் மறுவேலை பாக்கும்.. இவ்வளவு ஏணி ஏணியா ஏறினதெல்லாம் அம்போ ஆயிடும்.. பாத்து.. பாத்து.. ஜாக்கிரதையா உருட்டு" என்று எச்சரித்தான் பாண்டியன்.
"நம்ம கையிலே என்னங்க, இருக்கு.. எல்லாம், அந்த.." பயத்தை வெளிக்குக் காட்டாமல் ஆனால் பயப்பீதியோடையே மங்கை பகடையை உருட்டி விட, 3 விழுந்து "அம்மாடி--" என்று தன் மார் தொட்டாள் மங்கை. மூன்று கட்டம் தாண்டி பத்திரமாக 120 எண்ணிட்ட 'கோயில்' அடந்தாள். பாண்டியனோ தன் பங்குக்கு பயந்தபடியே உருட்ட தாயம் விழுந்து அவன் 118 எண்ணிட்ட இன்னொரு கோயில் அடைந்தான்.
தாயம் விழுந்தால் போச்சு. மங்கை இருந்த இடத்திற்கு அடுத்த கட்டம் அகங்காரம் பாம்பு. அதனிடம் மாட்டினால் ஒரே இழுப்பாக இழுத்து 99-க்கு இறக்கி விட்டு விடும். சாமியே, தாயம் விழக்கூடாது என்று பிரார்த்தித்தபடி வேக வேகமாக அவனிடம் பகடையை வாங்கி மங்கை உருட்ட 2 விழுந்து 122 'மறுபிறவி இல்லை' கட்டம் அடைந்து பிரமிப்பில் தத்தளித்தாள். பாண்டியனுக் கும் நடுக்கம் தான். தாயமும் விழக்கூடாது; மூன்றும் விழக்கூடாது. தாயம்ன்னா 'கர்வ'ப் பாம்பு. மூணுன்னா 'அகங்காரம்' பாம்பு. இந்த இரண்டைத் தவிர எதுவானும் விழட்டும் என்று உருட்ட நினைக்கையிலேயே வியர்வையில் வழுக்கி தாயக்கட்டை அவன் கைவிட்டு நழுவியது. நழுவியது நிமிர்ந்து 4 காட்டியது. இவர்களின் இரண்டு அடையாள வில்லைகளும் 'மறுபிறவி இல்லை' கட்டத்தில் ஒன்றை ஒன்று தழுவிக்கொண்டு இழைந்தன. அதைப் பார்த்து மங்கை கலகலவென்று சிரித்தாள்.
"அப்பாடி! இனி பிறவிப் பெருங்கடல் நீந்த வேண்டிய அவசியம் இல்லை" என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
"ஏன் அப்படி சொல்லிட்டே?.. ஜோடி கிடைச்சிடுச்சி. வேண்டியமட்டும் நீந்தலாம்ன்னு நான் நெனைச்சிக்கிட்டிருந்தா?.."
"க்குங்.. ஆளைப் பாரு!"
"ஓக்கே. ஓக்கே.. விளையாட்டு மத்திலே விளையாட்டுக்காகச் சொல்றதெல்லாம் கணக்கிலே எடுத்துக்கக் கூடாது, இல்லியா?"
"ஆட்டத்தைப் பாத்து விளையாடுங்க.. கும்மாளம் போட்டீங்கன்னா சமயம் பாத்துக் காலை வாரி விட்டுடும்.. ஜாக்கிரதை!" என்று அவனை எச்சரித்தாள்.
122-லிருந்து 132 வரை உல்லாசம் தான். தீண்ட பாம்பும் கிடையாது; ஏற்றி விட ஏணியும் கிடையாது. அந்த சுதந்திரத்தில் எப்படி வந்தோம் என்று தெரியாத சுகத்தில் இரண்டு பேருமே 132 'பராசக்தி' கட்டம் அடைந்தனர்.
"பரமபதம் அடையற வரை இனிமே தாயம் போட்டுத் தானே, ஒவ்வொரு கட்டமாக் கடக்கணும்?" என்று பாண்டியன் கேட்டான்.
"என்ன தெரியாத மாதிரி கேக்குறீங்க.. தாயம் போட்டால் தான்.." என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே தாயம் போட்டு பாண்டியன் கெக்கலிக்க மங்கை தனக்கு என்னவாகப் போகிறோ என்ற ஐயப்பாடில் பகடையை உருட்டினாள். அதிர்ஷ்ட்டம் அவள் பக்கத்தில் இருந்தது.. அவளுக்கும் தாயம் தான்!
"இப்போ சொல்லுங்க.. அதுக்கப்புறம் கோயில்லே என்ன நடந்ததுன்னு.." பகடையை அவனிடம் தந்து விட்டுக் கேட்டாள் மங்கை.
"நீ என்னவோ விளையாட்டு நடுவே டைம்பாஸ் மாதிரி அந்த கோயில் சமாச்சாரத்தைக் கேட்டினா, நான் நெனைச்சிப் பாத்து நெனைச்சிப் பாத்து சொல்லணும்ங்கறியா?" என்று பொய்க்கோபம் கொண்டான்.
"ஐயோ, அப்படில்லீங்க... மனசு அதிலே தான் இருக்கு. விளையாட்டுனாலும் இதுவும் முக்கியம் இல்லியா?.. சிவராத்திரியும் அதுவுமா பரமபதம் அடைஞ்சா எவ்வளவு புண்ணியம்! அதுக்குத் தான். இதோ கிட்டக் கிட்ட வந்தாச்சு.. இன்னும் நாலு தாயம் தான். தாயம் தாயமா போட்டு பரமபதம் அடைஞ்சு ஆட்டம் முடிஞ்சதும், மரபீரோவைத் திறந்து புஸ்தகமெல்லாம் எடுத்து அலசிப் பார்த்திட வேண்டியது தான்." என்று நிமிர்ந்தவள் கடியாரத்தைப் பார்த்தாள்.
"அட! மணி ரெண்டுங்க..."
இரண்டரை மணியளவில் ஆட்டம் முடிந்தது. இரண்டு பேரும் சிவராத்திரி திருநாளில் பரமபதம் அடைந்த பெருமையில் எழுந்திருந்தார்கள்.
"ஒரு சின்ன டீ.. குடித்த பின்னாடி மர பீரோவைத் திறக்கலாமா?" என்றான் பாண்டியன்.
"டீ தானே?.. நீங்க கேப்பீங்கன்னு தெரியும்.. ரெடியா பிளாஸ்க்கிலே போட்டு வைச்சிருக்கேன் பாருங்க.."
டேபிளின் மேலிருந்த பிளாஸ்க்கை நாடிப் போனான் பாண்டியன். அப்படிப் போனவன் என்ன நினைத்துக் கொண்டானோ, சடாரென்று திரும்பி, "ஏன், மங்கை! நாயன்மார்களைப் பத்தி புஸ்தகம் பார்த்து விவரம் தெரிஞ்சிக்கலாம். சரி. அதோட அவங்க படங்கள்லாம் போட்டிருப்பாங்களா?" என்று ஆவலோடு கேட்டான்.
"எதுக்குக் கேக்குறீங்க?" என்றாள் மங்கை, அவளுக்கும் தொற்றிக் கொண்ட உற்சாகத்தில்.
(வளரும்)
குறிப்பு: படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.