மின் நூல்

Tuesday, March 27, 2012

பார்வை (பகுதி-37)

லைசாய்த்து 'இந்த மெஜாட்டியோ கதை', 'பார்வை'கதை போல இருக்குமா, ரிஷி?" என்றாள் ஊர்மிளா.

"படிச்சிட்டு இருக்கறதா இல்லையாங்கறதை நீங்க தான் சொல்லணும், ஊர்மிளா!  ஆனா, பத்திரிகைலே கால் ஊனிக்கணும்ங்கற நிதர்சன உண்மையை உணர்ந்து எழுதின கதையா இருக்கும்ங்கறதை மட்டும் இப்போதைக்கு என்னாலே சொல்ல முடியும்" என்றான் ரிஷி.

"அப்போ கால் ஊனிக்கறத்துக்காக எழுதறது ஒண்ணு, அப்பாலே எழுதறது ஒண்ணுன்னு கூட இருக்குமா?"

"எஸ். அபராஜிதனும் நானும் போட்டிருக்கிற ப்ராஜக்ட் பெரிசு.  ரொம்ப தீர்க்கமான ஒண்ணு.  ஆனா இப்படி கால் ஊனிக்கறத்துக்காகவே எழுதற மாதிரி தொடர்ந்து எழுதக் கூடாதுங்கறதிலே தீர்மானமா இருக்கேன்" என்றான் ரிஷி.

"என்னங்க.. நீங்க பேசற பாஷையே எனக்குப் புரியலை. எனக்கென்னனா, எப்படியோ நீங்க பிரபலமானா சரின்னு தோண்றது" என்று வித்யா சொன்னதைக் கேட்டு குலுங்கிக் குலுங்கி சிரித்தான் லஷ்மணன்.

"இப்போ சொல்றதாவது புரியறதா பார்" என்றான் ரிஷி. "ஒரு கவிதை புத்தகம் வெளியீட்டு விழாலே தான் அபராஜிதனை முதன் முதலா சந்திச்ச பாக்கியம் எனக்குக் கிடைச்சது.     அதுக்கு முன்னாடி அவரோட ஒண்ணு ரெண்டு கதையைப் படிச்சிருக்கேன். அவ்வளவு தான், அவரைப் பத்தி எனக்குத் தெரியும்.  ஆனா, என்னோட பிரசுரமான ஒரே கதையைப் படிச்சிட்டு ரொம்ப பிரபலமான அவர் என்னைப் பாராட்டினது எனக்கு ரொம்பக் கூச்சத்தைத் தந்தது. நேருக்கு நேரே சொல்லக் கூடாது தான். இருந்தாலும் சொல்றேன்.  அவருடைய பரந்த மனப்பான்மை, எழுதற இன்னொருவனையும்-- அவன் எழுதறதைப் பாராட்டி அணைச்சிண்டு போர்ற தன்மை இதெல்லாம் பாத்து அந்த முதல் சந்திப்பிலேயே என் மனசிலே அவர் ரொம்ப உசரத்துக்குப் உயர்ந்திட்டார்.  இந்த பண்பெல்லாம் பத்திரிகை உலகிலே பாக்கறது அதிசயம் இல்லையா, அதனாலே கூட இருக்கலாம்.  அப்புறம் ரொம்ப நேரம் என்னை என்னவெல்லாமோ கேட்டார்.  நிறைய பொதுவான விஷயங்களைப் பேசினோம்.  கடைசிலே என்ன சொன்னார் தெரியுமா?..  'ரிஷி! நான் எழுத ஆரம்பிச்சப்போ எப்படி இருந்தேனோ, அந்த அபராஜிதனை உங்க கிட்டே இப்போப் பாக்கறேன்.  இந்த பத்திரிகை உலகிலே பழகிப் பழகி நாளாவட்டத்திலே அந்த அபராஜிதன் எங்கிட்டே கொஞ்சம் மங்கிப் போனாலும்,  நீரு பூத்த நெருப்பா எந்நேரமும் மனசிலே இருப்பதை உணர்ந்திருக்கேன்..  அந்த அபராஜிதனை நீங்க இப்போ ஊதி விட்டுட்டீங்க.. இனி அந்த அபராஜிதன் எழுந்து உங்களோட சேந்துப்பான்.  ஆனா நீங்க வளரணும்; வளர்றத்துக்காக இதெல்லாம் செஞ்சு தொலைக்கணும்ங்கறது என் அனுபவம். முன்னேரா நான் முன்னாடிப் போறேன்; என் பின்னாடியே வாங்க'ன்னார். அவர் சொன்னதையெல்லாம் நெஞ்சிலே அப்படியே பதிச்சிண்டிருக்கேன்.  காலம் தான் பதில் சொல்லணும்.." என்று ரிஷி சொல்லி முடித்த பொழுது, தனக்கே தெரியாத ஒரு புது அபராஜிதனைத் தெரிந்து கொண்ட மாதிரி இருந்தது ஊர்மிளாவுக்கு.

"இத்தனை நாள் இவ்வளவு விஷயங்களை எங்கிட்டே கூடச் சொல்லாம மறைச்சு இருக்கீங்கள்லே?" என்றாள் வித்யா.

"நம்ம வீட்டுக்கு எத்தனை சிறு பத்திரிகைகள் வர்றது?.. அதையெல்லாம் நீ புரட்டியாவது பாத்திருந்தையானா, எனக்கும் சொல்லணும்னு தோணியிருக் கும்.  வாரப் பத்திரிகைகள்லேயே நீ மூழ்கி இருக்கறதினாலே இதெல்லாம் சொன்னா எந்தளவுக்கு உனக்குப் புரியும்ன்னு தெரிலே.  அதான் சொல்றதுக்கு தயங்கிண்டிருந்தேனே தவிரச் சொல்லக்கூடாதுன்னு இல்லே" என்றான் ரிஷி.

"என்ன செய்யறது, வித்யா?.. இதான் வழி. ஒண்ணை யோசிச்சுப் பாக்கணும் நீங்க..  சுத்தமா வெகுஜனப் பத்திரிகைகள் படிப்பதையே விட்டு ஒழிச்சு, சிறுபத்திரிகைகள் பக்கம் போனவரை, திருப்பியும் இதுக்கே வாங்கன்னு கூப்பிடறது தப்பு தான்.  இருந்தாலும் வேறே வழியே இல்லை. ஆனா இப்போ எழுதற மாதிரி இப்படியே எழுதித் தேங்கிட மாட்டேன்னு அவரே சொல்றார்.. வெகுஜன வாசகர்களிடம் அறிமுகமாகி அவர்களைக் கவர்ந்தாரானால் பின்னாடி தான் எழுதுவதெல்லாம் பிடிக்கற மாதிரி அதிகப்படியான வாசகர்களைத் தன்னோட கூட்டிகிட்டு வர்லாம்ங்கறத்துக்காகத் தான் இதெல்லாம்"என்றாள் ஊர்மிளா.

"கூட்டிகிட்டு வர்றதா?.. எங்கே கூட்டிகிட்டு வர்றது?.. எதுக்காகக் கூட்டிகிட்டு வர்றது?.. எனக்கு என்னன்னா, நீங்க பேசறதிலே பல வார்த்தைகள் புரியாம இருக்கு.  ஆனா ஏதோ நல்லதுக்குத் தான் இதெல்லாம் செய்யற மாதிரி இருக்கு. இதோ, இப்பவே ஒரு கதையை படத்தோட ஜோரா போட்டுட்டாங் களே.. இந்நேரம் எங்க ஸ்டோர்லே பாதிப்பேர் இதைப் படிச்சிருப்பாங்க...  நான் போனவுடனே இருக்கு, வேடிக்கை.."ன்னு வித்யா முகம் மலர்ந்தாள்.

"கொஞ்ச காலத்துக்கு ரிஷி இந்த 'மெஜாட்டியோ' கதை மாதிரி தான் எழுதிண்டு இருப்பார்.  வெகுஜன வாசகர்களின் மனசில் அவர் பெயர் பதியறத்துக்காகத் தான் இதெல்லாம்.  ஓரளவு பிரபலம் அடைஞ்சதும் எதை எழுதுவதற்காகப் பேனா பிடிச்சிருக்கோம்ன்னு இப்போ அவர் நினைக்கிறாரோ அதெல்லாம் அவர் எழுத்தில் படியும்.  விஜிக்குத் தேவையான இந்தக் காத்திருப்பு எனக்கு தேவை இல்லாததினாலே இனிமே நான் எழுதற கதைங்கள்லே வெளிப்படையா உங்களுக்குப் புரியற மாதிரி சில மாறுதல்கள் தெரியும். அதையெல்லாம் படிச்சுப் பாருங்க. உங்களுக்கே புரியும். உங்க ஸ்டோர்லே இருக்கற பத்திரிகை படிக்கிறவங்களையும் கூட்டாச் சேர்த்துங்கங்க.  நான் எழுதற விஷயங்களை உன்னிப்பா கவனிங்க.. அதிலே என்னன்ன மாறுதல் தெரியறதுன்னு சொல்லுங்க.." என்றான் லஷ்மணன்.

வித்யாவுக்கு அவன் சொன்னதைக் கேட்டுத் தலைகால் புரியவில்லை. "அம்மாடி!  எவ்வளவு பெரிய பொறுப்பு கொடுக்கறீங்க.. நீங்க எழுதறதெல்லாம் ரொம்ப பிடிக்கும்.  அதனாலே தவறாம படிச்சிடுவேன். அவ்வளவு தான் எனக்குத் தெரியும்" என்றாள்.

"அதான் வேணும்" என்றான் லஷ்மணன். "அப்படியே தொடர்ந்து படிச்சிண்டு வாங்க.  பொழுது போக்குக் கதைகள்ன்னு என்னைக்குமே நான் எழுதினதில்லே.  ஆனா கதைகள் ரூபத்திலே சொல்ல விரும்பறதைக் கேப்ஸ்யூல்களாகக் கொடுக்காம... ரொம்ப சொல்லக் கூடாது, சொன்னா சுவாரஸ்யம் போய்டும். இனிமே நான் எழுதப் போறதையும் அதே உற்சாகத்தில் என் வாசகர்கள் ரசித்து வரவேற்கிற மாதிரி எழுதப் போறேன். நான் எழுதறதெல்லாம் ரொம்பப் பிடிக்கும்'ன்னு சொன்னீங்கங்கல்லே.. இனி நான் எழுதறதிலே கொஞ்சம் வித்தியாசம் தெரியும்.  அந்த வித்தியாசத்தை உங்களாலே தெரிஞ்சிக்க முடியறதா பாருங்க..  அப்புறம் அப்படித் தெரிஞ்சிக்க முடிஞ்சா அதெல்லாத்தையும் நீங்களும் மனசாலே உணர முடியறதா பாருங்க. உணர முடிஞ்சா அதிலே இருக்கற தப்பு, ரைட்டைச் சொல்லுங்க.. சரியான உங்கள் விமரிசனம் நான் நேரே போகறேன்னான்னு தெரிஞ்சிக்க உதவும். அதுக்காகத் தான்.." என்றான் லஷ்மணன்.

வித்யாவுக்கு தன்னால் இதெல்லாம் முடியுமா என்றிருந்தது. அதையே வேறே மாதிரி சொன்னாள். "எங்க ஸ்டோர்லே உஷான்னு ஒருத்தி இருக்கா. பயங்கர இண்டலிஜெண்ட்.  அவள் கூட உங்களோட தீவிர வாசகி தான்.  நீங்க எழுதின எல்லாத்தையும் பத்தி 'இதுக்காகத் தான் இந்த வாரம் இப்படி எழுதறார்.  அடுத்த வாரம் இப்படி எழுதுவார் பார்'ன்னு நெறையச் சொல்லுவா. அவள் சொன்னது பலது பலிச்சிருக்கு.  நீங்கன்னு இல்லே, பத்திரிகைங்கல்ல வர்ற எல்லாத்தையும் படிச்சு அக்கு அக்கா பிரிச்சுப் போட்டு அலசுவா. நெறைய வாசகர் கடிதங்கள் எழுதுவா.  அதெல்லாம் பொதுவா எழுதற வாசகர் கடிதங்கள் மாதிரி இல்லாம, ரொம்ப டிஃபரண்டா இருக்கும்.. இனிமே நீங்க எழுதறதையெல்லாம் பத்தி அவ என்ன சொல்றான்னு பாக்கறேன்.  எதுக்குன்னா என்னாலே அவ்வளவு தீர்க்கமா புரிஞ்சிக்க முடிலேனாலும்..."

'நீங்கள் சொல்ல வர்றது, புரியறது.."என்றான் லஷ்மணன்.. "சொல்லப் போனால் இப்படிப்பட்ட வாசகர்களுக்காகத் தான் எழுத வேண்டும். இப்போ சொன்னீங்களே, உஷான்னு ஒருத்தரைப் பத்தி! இந்த வாசகர்கள் எல்லாம் எங்கிருந்தோ குதித்தவர்கள் இல்லை.  இந்த சமூகத்தின் பிரதிநிதிகள்.  அவர்களுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. அவர்களும் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டியிருக்கிறது. அவர்களின் மேம்பாட்டிற்காக என்றில்லாமல், வேறு எதற்காக இதெல்லாம்' என்று சமயங்களில் எனக்கேத் தோன்றும்."

"இத்தனை நாள் நீங்கள் எழுதின கதைகள்லாம் அப்படித்தானே?.. மர்மக் கதையிலும் ஒரு மெஸேஜ் வைச்சிருப்பீங்களே.." என்றாள் வித்யா.

"உண்மை தான். இதை ஒரு நல்ல எழுத்தாளனோட குணம்ன்னு சொல்லாட்டாலும் உணர்வுங்கலாம்.  குணம்ன்னு எடுத்துக்கிட்டா, ஒவ்வொருத்தர்கிட்டேயும் ஒவ்வொண்ணு பதுங்கியிருக்கு. சில சமயம் அவன் கிட்டேயிருந்து வெளிப்பட நினைச்சு, வெளிப்படாமலேயே இன்னொரு நேர வெளிப்படலுக்காக பதுங்கிக்கும் அது. ஆனா உணர்வுங்கறது அப்படியில்லே. இந்த உணர்வு தான் எழுத்தாளனை ஆட்டிப்படைக்கிறது. இந்த உணர்வு தான் எழுதறவனுக்கும், அவன் எழுத்தைப் படிக்கறவனுக்கும் சங்கிலிப் பிணைப்பா இருந்து செயல்படறது."

லஷ்மணன் பேசறதைப் புரிந்து கொள்ற அக்கறையுடன் வித்யா கேட்க, ரிஷியோ ஒரு பள்ளி மாணவன் ஆசிரியரிடம் பாடம் கேட்பதைப் போல் கைகட்டிய பாவனையில் அவன் சொல்வதை உன்னிப்பாகக் கேட்டான்.

"நான் எழுத ஆரம்பிச்சதும் தான் இந்தக் கதைகள் எழுதறதிலே இருக்கற சூட்சுமமே எனக்குப் புரிபட ஆரம்பிச்சது.  நம்ம விருப்பப்படியே நாம உலாவ விடற எல்லாப் பாத்திரங்களிலும் நாமே நுழைச்சிக்கலாம்ன்னு தெரிஞ்சது. அதாவது கதாநாயகனும் நானே, கதாநாயகியும் நானே, வில்லனும் நானே மத்த துணைப்பாத்திரங்களும் நானேங்கற நிலைமை.  எல்லாரும் நானேன்னு ஆகறதாலே இது மட்டுமே நான்னு வரையறுத்துச் சொல்ல முடியாது.  எல்லாரிடமும் நானிருப்பேன், எல்லாவற்றிலும் நானேருப்பேன் என்கிற நிலை இது. நான் என்று இங்கே சொல்வது என் உணர்வை.  சொல்லப் போனா பொம்மலாட்டம் மாதிரி.  வேணுங்கற இழுப்புக் கயிறை வேணுங்கற மாதிரி இழுக்கற நிலை.  அந்தந்த நேரத்துக்கு வசதி எப்படியோ அப்படி. உங்களுக்குப் புரியறதுன்னு நினைக்கிறேன்"

"புரியறது. ஆனா ஒரு சந்தேகம்.." என்றாள் வித்யா.

"சொல்லுங்க.." என்றான் புன்முறுவலுடன் லஷ்மணன்.

"சகலமும் நீங்களேன்னு சொன்னீங்க.. அப்படி எல்லா பாத்திரங்களும் நீங்களேன்னா, எல்லா பாத்திரங்களும் உங்கள் உணர்வையே பெற்றிருக்கிறவர்களா இருக்க மாட்டாங்களா?.. கதாநாயகனும், வில்லனும் ஒருவரின் உணர்வையே எப்படிப் பெற்றிருக்க முடியும்?"

"வெரிகுட்.." என்று கைதட்டினாள் ஊர்மிளா. "எனக்கு கதைங்களை படிக்கறதைத் தவிர வேறே ஒண்ணும் தெரியாதுன்னு சொன்னீங்க?.. சரியான பாயிண்ட்டைப் பிடிச்சு இப்படிப் போடு போடென்று போடுறீங்களே?"

"ரொம்ப சரி.."என்றான் லஷ்மணன். "பொழுது போக்குக் கதைங்கன்னா, நீங்க சொல்ற மாதிரி சாத்வீகமான கதாநாயகன், கொடூரமான வில்லன்னு இப்படில்லாம் பாத்திரப் படைப்பு இருக்கும், இல்லையா?.. நான் எழுதற கதைலாம் அப்படியான சினிமாத்தனங்கள் இல்லாத கதைகளா இருக்கறதாலே, அந்த சிக்கல் எனக்கில்லை.  நடக்கற ஒரு விஷயம் அல்லது பல விஷயங்களைப் பற்றிய பார்வை தான் நான் எழுதற கதைங்களா இருக்கறதாலே, ஒரு பார்வைக்கு நேர் எதிரான இன்னொரு பார்வையை கதாநாயகனாகவும் வில்லனாகவும் கொள்கிறேன். மாறி மாறியும் அவற்றோடு ஒன்றியும் விடுபட்டும் டிபேட் நடக்கும் பொழுது எது சரியான பார்வைங்கற தெளிவு படிக்கற வாசகர்களுக்குக் கிடைக்கும்.    பல கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் இப்படியான விவாதங்கள் தான் என்னில் ஒரு கதை ரூபமெடுக்கிறது.  என் கதைகளைப் படிச்சு பழக்கப்பட்ட உங்களுக்கு இது நன்றாகவேத் தெரியும், இல்லையா?"

"இப்போப் புரியறது.." என்று புன்னகைத்தாள் வித்யா. "உங்களோட கதைகள் எத்தனைப் படிச்சிருப்பேன்?.. பிரச்னை இதுன்னா ஆன்ஸர் இதுன்னு எவ்வளவு சரியாச் சொல்லிட்டார்ன்னு இத்தனை நாளும் நெனைச்சிண்டிருந்தேன்.  ஒரு கணக்குக்கு விடை கொடுக்கற மாதிரி, கதைகள் எழுதறதிலேயும் இப்படில்லாம் இருக்குன்னு இப்போத்தான் தெரிஞ்சது, அபராஜிதன் சார்!"

அப்படி வித்யா சொல்லிக் கொண்டிருக்கையில் டெலிபோன் மணி கிணுகிணுத்தது.  ஊர்மிளா போய் காலர் ஐடியைப் பார்த்து விட்டு, "உத்தம புத்திரன்.." என்றாள்.


(இன்னும் வரும்)











Wednesday, March 21, 2012

பார்வை (பகுதி-36)

தற்காகத் தான் காத்திருந்ததே போன்று அந்த சனிக்கிழமையும் வந்தது.

காலையில் சாப்பாட்டுக்கு வருகிற மாதிரி பத்து, பதினொன்று வாக்கில் வரச் சொல்லியிருந்ததால் ரிஷி,  வித்யாவையும் கெளதமையும் அழைத்துக் கொண்டு பத்தரைக்கே வந்து விட்டான். அவர்கள் வருகிற பொழுது ஊர்மிளா அப்பளம் பொரித்துக் கொண்டிருந்தாள்.  லஷ்மணன் தான் போய் கதவைத் திறந்தான்.

"வாங்க.. வாங்க.." என்று லஷ்மணன் வந்தவர்களை அழைத்துக் கொண்டிருக்கும் பொழுதே ஊர்மிளாவும் எண்ணெய் வடியும் துளைப்பாத்திரத்தில் எடுத்துப் போட்டிருந்த அப்பளங்களை நமத்துப் போகாமல் மூடி வைத்து விட்டு வெளிவந்து, அவளும் அந்த 'வாங்க,வாங்க'வில் கலந்து கொண்டாள். .

"என்னங்க, நுழையும் பொழுதே வாசனை மூக்கைத் துளைக்கிறது?.." என்றபடி உள்ளே வந்த வித்யா, கொண்டு வந்திருந்த கைப்பையைத் திறந்து, ஆப்பிளும் மாதுளையும் நிறைந்த கவரை அவளிடம் தந்தாள்.

அதை வாங்கிக் கொண்டபடியே ஊர்மிளா, "ஒரு மணி நேரத்திற்கு முன்னாலேயே கிளம்பியிருப்பீங்களே?..  கெளதம் காலைலே என்ன சாப்பிட்டான்? நான் வேணா போர்ன்விடா கலக்கித் தரட்டுமா?" என்றாள்.

"எல்லாருமே காலை ஓட்ஸ் கஞ்சியோட சரி.   மத்ததையெல்லாம் இங்கே வைச்சிக்கலாம்ன்னு வந்திட்டோம்லே" என்று வித்யா சொன்ன போது மறைத்துப் பேசாமல் உள்ளதை உள்ளவாறு சொல்லும் அவள் சொல்லாடல் ஊர்மிளாவுக்கு பிடித்திருந்தது.

"அதான் எனக்கும் வேணும். எல்லாம் சூடா இருக்கு. இலை போட்டுடலாமா?" என்றாள் வித்யா.

"நான் ரெடி.."என்று ரிஷி வாஷ் பேசின் பக்கம் கையலம்பச் சென்றான்.

"இலையெல்லாம் வேண்டாம்.  தட்டு தான் செளகரியம்.  ஊர்மிளா!  இந்த டைனிங் டேபிள்லேயே எல்லாருக்கும் பறிமாறிடலாமா?" என்று புடவையின் தலைப்பை லேசாக எடுத்து செருகிக் கொண்டாள் வித்யா.

"ஓ.எஸ்.." என்று தட்டுகளை வாஷ் பேசினில் அலம்பி டேபிளின் மேல் வைத்தான் லஷ்மணன்.

ஊர்மிளாவும்,  வித்யாவும் சமையலறையிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து வந்து டைனிங் டேபிளின் மேல் நிறைக்க, எதிரும் புதிருமாக இரண்டிரண் டாகவும்,  சைடில் ஒன்றாகவும் நாற்காலிகளைப் போட்டான் ரிஷி.

"நீங்கள்லாம் உட்காருங்கள்.  லேசாப் பறிமாறி ஆரம்பிச்சு வைச்சிறேன். அப்புறம் வேணுங்கறதைப் போட்டுண்டு சாப்பிட செளகரியமாக இருக்கும்.." என்று சேமியா பாயசத்தை கொஞ்சமாக தட்டுகளில் பறிமாறினாள் ஊர்மிளா. உருளை கறியும், வாழைக்காய் பொடிமாஸும் தவிர பொடிப்பொடியாய் அரிந்து போட்ட வெங்காய பச்சடி. அதில் தாளிச்சு கொட்டி தக்காளியைத் துண்டாக்கிச் சேர்த்திருந்தாள்.

சாதம் போட்டு பருப்பு வைத்து நெய் ஊற்றும் பொழுது, "ஊர்மிளா! நீயும் உக்காந்துக்கோ. அப்பார்ட்மெண்ட்னாலும் வீடு நன்னா இருக்கு.. எப்போ வாங்கினீங்க?" என்றாள் வித்யா.

"எங்க கல்யாணத்துக்கு முன்னடியே வாங்கிட்டார்.  அஞ்சு வருஷத்துக்கு மேலே ஆச்சு.."

"இந்த முருங்கைக்காய்க்குன்னு தனி குணம்.  சாம்பார்லே போட்டுட்டா எப்படி வாசனை தூக்கறது பாருங்க.." என்றான் ரிஷி.

"அரைச்சு விட்ட சாம்பாரா, ஊர்மிளா?..  ஏ.கிளாஸ்.."

"நான் குளிச்சிட்டு வந்தேனா, வித்யா?.. அதுக்குள்ளாற இந்த மிக்ஸி வேலைலாம் முடிச்சு எல்லாத்தையும் அவரே ரெடி பண்ணிட்டார்.  காரமெல்லாம் பொருந்தி வந்திருக்கா?.."

"பிரமாதம், போ! லஷ்மணன் சார்.. உங்க கை மணத்தை எழுத்திலே தான் பாத்திருக்கோம்.. இப்போ, இந்த சாம்பார்லே.." என்று வித்யா சொன்ன போது "அதை ஏன் கேக்கறீங்க.. பட்டை, லவங்கம்னு வேறே கலந்திட்டேனா?.. கழுவி வைக்கறத்தே, அந்த மிக்ஸியே மணத்தது.." என்று லஷ்மணன் சிரிக்காமல் சொன்ன போது அந்த ஹாலே சிரிப்பில் குலுங்கியது.

"ஒரு விஷயம் தெரியுமா, ரிஷி சார்..  உங்க 'பார்வை' கதைக்கு நாங்க ரெண்டு பேருமே அட்மைரர்ஸ்.. அந்த பார்வை தெரியாத பெரியவருக்கு நீங்க எந்தப் பேரையும் வைக்கலியா?.. அந்தக் குறையை எல்லாம் போக்கி அறிவழகன்னு அவருக்கு நாங்க பேரெல்லாம் கூட வைச்சிருக்கோம், தெரியுமா?.." என்றாள் ஊர்மிளா.

"என்னங்க.. எனக்கே ஒரு மாதிரி இருக்கு.. ஒரு கதை பிரசுரமானவனை உண்டோ இல்லையோன்னு பண்றீங்களான்னு ஒரு சம்சயம்.."

"அப்படில்லாம் இல்லை! அந்தக் கதையைப் பத்தி நிறையச் சொல்லலாம். லாம் என்ன, சொல்லணும்..  அதைச் சொல்லி உங்களைப் பாராட்டிப் போகத் தான் அன்னிக்கு உங்க வீட்டுக்கு நாங்க ரெண்டு பேரும் வந்ததே! வேறே எதேதோ பேசி, முடியாம போயிடுத்து.."

"அதுக்குத் தான் இன்னிக்கு இத்தனையும் பறிமாறி விளாசலாம்ன்னு தீர்மானிச்சிட்டீங்க, போலிருக்கு.." என்றான் ரிஷி.

"இல்லே, நீங்க அனுமதி கொடுத்தா, எல்.எல்.ஏ.லே ஒரு பாராட்டு விழாவே நடத்திடுவோம்."

"நீங்க நடத்தலாம்.  ஆனா, யாருக்கு நடத்தறாங்கன்னு, அட்லீஸ்ட் நாலு பேருக்குத் தெரியற அளவுக்கு ஆனபிறகு நடத்துங்க.. எனக்கு ஆட்சேபணை இல்லே.." என்று ரிஷி சொன்ன பொழுது "ஹியர்..ஹியர்.." என்றான் லஷ்மணன்.

"ஆரம்ப எழுத்தாளர்கள் எல்லாருக்குமே இருக்கற ஒரு வில்லங்கம் இது.  நாலைஞ்சு பத்திரிகைலே வரிசையா பத்து பதினைஞ்சு பிரசுரமாகி, யார்டா இதுன்னு படிக்கறவங்களையும் திரும்பிப் பாக்க வைச்சிட்டா, அடுத்தாப்லே 'டேக் ஆஃப்' ஸ்டேஜ் தான்.  அப்புறம் நாங்க உங்க வீட்டுக்கு வந்தப்போ நீங்க
சொன்னீங்களே, 'அபராஜிதன் சார் வந்திருக்கிறார்ன்னு ஒரு குரல் கொடுத்தா போதும், இந்த ஸ்டோரே இங்கே குழுமிடும்'ன்னு.  அந்த நிலை வர்ற வரைக்கும் என்னைப்பிடி, உன்னைப்பிடின்னு ஆகிடும்! அதுக்காகத் தான்.." என்று லஷ்மணன் சொன்ன போது ஊர்மிளா ஏதோ புரிந்த மாதிரி அவனை உற்றுப் பார்த்தாள்.

"உண்மைலே நீங்க அப்படி சொன்னதும் தான், விஜியை அப்படி ஆக்கிப் பாக்கணும்ங்கற ஆசையே எனக்கு வந்தது.  அப்படி ஆகணும்னா அதுக்காக என்னன்ன செய்யணுமோ, அதெல்லாம் அடுத்த அடுத்த வேலையா இருக்கணும்ன்னு அன்னிக்கே அங்கேயே தீர்மானிச்சிட்டேன். ஊர்மிளா கூட  அவ வேலை செய்ற பதிப்பகத்தின் மூலமா, இந்த 'பார்வை' குறுநாவலை புத்தகமாப் போடலாமேன்னு நெனைச்சா.  நான் தான் வேண்டாம்னுட்டேன். என்ன காரணத்தினாலே அப்படிச் சொன்னேன்ன்னு பாவம் இன்னிக்கு வரைக்கும் கூட அவளுக்குத் தெரியாது " என்று லஷ்மணன் சொன்னதைக் கேட்டு, "அப்படியா?.." என்று திகைத்தாள் வித்யா.  "ஏன் அப்படி சொல்லீட்டீங்க.." என்று அவள் சொன்ன போது, அவள் குரலில் ஏமாற்றம் கலந்திருந்தது.

"அதுக்குக் காரணம் நான் சொல்றேன்" என்றான் ரிஷி.

வித்யா ரசம் விட்டுக் கொண்ட போது, "ஒரு சேஞ்சுக்காக திப்பிலி ரசம்! ஜோரா இருக்கும்.. போட்டுக்கங்க" என்றான் லஷ்மணன்.. "அப்பளாம் போட்டுக்கறையா?" என்று கெளதம் தட்டில் அப்பளத்தை எடுத்து வைத்த ஊர்மிளா, ரிஷி என்ன சொல்லப் போகிறானோ என்கிற ஆவலில் அவனைப் பார்த்தாள்.

"லஷ்மணனும் நானும் சேர்ந்து எடுத்த முடிவு தான் இது.  ஜனங்களுக்கு நன்னா அறிமுகமாகாம புஸ்தகம் போட்டு என்ன பிரயோஜம்?.. நானும் புஸ்தகம் போட்டிருக்கேன் பாருன்னு வீட்லே அடுக்கி வைச்சிக்க வேண்டியது தான்!" என்று ரிஷி சொல்லும் போதே குறுக்கிட்டாள் வித்யா. "ஏன், ஊர்மிளா தான் பதிப்பகம் மூலமா போட்டுத் தரேங்கறாங்களே, அவங்க மூலமா விற்காதா என்ன?.."

"நன்னா விக்கும் பார்!  அப்படிப் பதிப்பிச்சோம்னா முதல்லே நம்ம ஸ்டோர்லே ரெண்டு புஸ்தகத்தை யாருக்கானும் தந்து காசு வாங்க முடியுமா, பார்! அப்போத் தெரியும்" என்று ரிஷி சொன்ன போது, ஊர்மிளாவிற்கும் பதிப்பகத் துறையில் இருந்தாலும் இது வரை உணராத நிதர்சன உண்மை புரிந்தது.

எல்லோரும் மோர் சாதம் சாப்பிடும் பொழுது, மாவடு ஊறுகாய் கிண்ணத்தை நகர்த்தி வைத்தாள் ஊர்மிளா.  "மாவடுவைப் பார்த்து எத்தனை நாளாச்சு?.." என்று ஆர்வத்துடன் போட்டுக் கொண்டான் ரிஷி."வித்யா, அது குப்பைனாலும் எழுதினவர் யார்னு பார்த்து புஸ்தகம் வாங்கற வாசக உலகம் இது.  தனக்குப் புடிச்ச எழுத்தாளர்ன்னா குப்பையா இருந்தாலும் பரவாயில்லைன்னு அவரோட அடுத்த குப்பையையும் வாங்கற வாசகர்கள் இருக்கறதாலே தான் எல்லாக் குப்பையும் இங்கே புத்தகமா குவிஞ்சு போயிடுத்து.  அதுக்கெல்லாம் போவானேன்?.. எழுதின எழுத்தாளர் பிரபலமா இருந்தாத் தான் இங்கேலாம் புஸ்தக விற்பனையையே நெனைச்சுப் பாக்க முடியும்! நீயே சொல்லு.  சுஜாதா சார் புஸ்தகமும் என் புஸ்தகமும் சேர்ந்து இருந்தா, அது கூட வேண்டாம், நம்ம அபராஜிதன் புஸ்தகமும் என் புஸ்தகமும் சேர்ந்து இருந்தா எதை வாங்குவாங்க, சொல்லு.." என்றான் ரிஷி.

"அப்போ இந்த வேலையே வேண்டாம்ன்னு எழுதற ஆசையையே விட்டுட வேண்டியது தான்.." என்றாள் வித்யா.

"அப்படித் தான் தமிழ்நாட்லே நிறைய நல்ல எழுத்தாளர்கள் எப்பவோ அந்த முடிவுக்கு வந்திட்டாங்க.." என்றான் ரிஷி.  "ஆனா, விஷயம் என்னவோ சுஜாதா கிட்டேயோ, அபராஜிதன் கிட்டேயோ இல்லை. அவங்க பத்திரிகை படிக்கறவங்களுக்கு பிடிச்சவங்களா ஆயிட்டாங்க.. அதான் விஷயம். ஒரு கதை தான் பிரசுரமாகியிருக்கு.   அதுக்குள்ளே நான் அவங்களைப் போலன்னு நெனைச்சிக்கத்தான் முடியுமா?..  நான் எழுதறதெல்லாம் புஸ்தகமாகி விற்பனையாகணும்னா, அவங்க போல ஆகணும்.  அதான் அடுத்த விஷயம். அதான் ஆரோக்கியமான சிந்தனை.  அவங்க போல ஆகணும்னா, அதுக்கு ஒரே வழி அவங்க காட்டின் வழிதான். பத்திரிகை மூலமா பேர் தெரிஞ்சு பிரபலமாறது. அப்படிப் பிரபலமாகறவரைக்கும் புஸ்தகம் போடற ஆசையே இருக்கக் கூடாது.  அதனாலே தான் ஊர்மிளா சொன்ன போதும் லஷ்மணன் இப்போ அந்தப் பதிப்பிக்கற வேலையே வேண்டாம்னுட்டார்.."

சாப்பிட்டு விட்டு எல்லோரும் எழுந்திருந்து அவரவர் தட்டுகளை எடுத்து வாஷ்பேசினில் கழுவி வைத்தார்கள்.  ஹாலுக்கு வந்து ஃபேனைப் போட்டு அமர்ந்த பொழுது மணி பதினொன்று ஆகியிருந்தது.  ஊர்மிளா உள்ளே போய் ஆப்பிளையும், மாதுளையையும் நறுக்கி தட்டுகளில் நிரப்பி வந்து டீபாயின் மீது வைத்தாள்.

அதே சமயம் வாசல் அழைப்பு மணி கிணுகிணுத்தது.  ஊர்மிளா வாசல் பக்கம் போய், திரும்பி வந்த பொழுது அவள் கையில் ஒரு தடிமனான கவர் ஒன்று இருந்தது.  டேபிளுக்குச் சென்று அதைப் பிரித்து வந்து, "இந்தாங்க.. 'வெண்ணிலா'  பத்திரிகை. கூரியரில் வந்தது.." என்று சொல்லியபடியே லஷ்மணனிடம் கொடுத்து விட்டு அமர்ந்தாள் ஊர்மிளா.

லஷ்மணனின் 'நிஜத்தின் நிழல்' சமூகத் தொடர்கதை இந்தப் பத்திரிகையில் தான் வருகிறது என்று வித்யாவிற்குத் தெரியும். அவன் அதைப் பார்த்து வைத்ததும் அந்தக் கதையைப் படிக்கும் ஆவலில் வித்யா காத்திருந்தாள்.

'வெண்ணிலா'வின் சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்த லஷ்மணன், லேசாக முகம் மலர்ந்து, "வந்தாச்சு.. இந்தா, ரிஷி" என்று புத்தகப் பக்கம் ஒன்றைப் பிரித்து வைத்தவாறு அவனிடம் கொடுத்தான்.

அந்தப் பக்கத்தைப் பார்த்ததும் ரிஷியின் முகமும் மலர்ந்தது.  "தேங்க்ஸ் லஷ்மணன்.." என்று சிரித்து, ஊர்மிளாவிடம் பத்திரிகையை நீட்டினான்.  ஊர்மிளாவின் பக்கத்தில் அமர்ந்திருந்த வித்யாவும் தலைசாய்த்துப் பார்த்தாள்.

அவர்கள் பார்த்த பக்கத்தில், "மெஜாட்டியோ" என்று கலர்க் கலர் எழுத்துக்களில் கதையின் பெயரைப் போட்டு, கதையின் பெயரை விட பெரிய எழுத்துக்களில் 'விஜி' என்று போட்டிருந்தது.  மிகப் பிரபல ஓவியர் வரைந்திருந்த அந்தப் படப்பெண்ணின் கண்களில் பரவசம் பொங்கி வழிந்தது.


(இன்னும் வரும்)





































Sunday, March 18, 2012

பார்வை (பகுதி-35)

ரு நிமிட தாமத்திற்குப் பிறகு சடாரென்று கிளைத்த நினைவுச் சரடைப் பற்றிக் கொண்டு, "எனக்கென்னவோ வேறொன்று தோன்றுகிறது" என்றாள் ஊர்மிளா.

"என்ன?" என்றார் சுந்தரவதனன்.

"நாம் வழக்கமாக எல்லோரிடமும் வாங்குகிற ஒப்புதல் தான்.  இந்தப் பதிப்பகத்தின் மூலமாக தன்னுடைய படைப்புகள் பிரசுரமாவதற்கு ரிஷி சம்மதிக்க வேண்டுமே?.. பெரியவரிடம் இந்த விஷயத்தைக் கொண்டு போவதற்கு முன்னால், ரிஷி இதுபற்றி என்ன நினைக்கிறார் என்று தெரியவேண்டுமல்லவா?" என்றாள்.

"ஏன், என்ன சொல்லுவான்னு நெனைக்கறே?"

"ஒருகால் அவர் விரும்பலைன்னு வைச்சிக்கோங்கோ...அப்புறம்.."

"அப்படிக் கூட இருக்குங்கறே?..  தன் படைப்புகள் புஸ்தகமா வெளிவந்து பலபேருக்கு அறிமுகமாகறதை எந்த எழுத்தாளனாவது விரும்பாமக் கூட இருப்பான்னு நெனைக்கறே?"

"எல்லாரையும் சொல்லலே.  சொல்லப்போனா, இப்போலாம் எழுதற அத்தனை பேருடைய எண்ணமும், எழுதற எதையும் எப்படியாவது புத்தகமாக்கிடணும்னு தான் இருக்கு."

"பின்னே?.. ரிஷி மட்டும் என்ன சொல்லிடப்போறான்."

"ஒருகால் எல்லார் மாதிரியும் நினைக்காம அவர் வேறு மாதிரி நினைக்கலாம் இல்லையா?"

"என்னன்னு?"

"புத்தகமாகணும்ன்னு நெனைக்கலாம். ஆனா இந்தப் பிரசுரம் மூலமா இல்லாமன்னு.."

"ஐ காண்ட் ஃபாலோ யூ." என்றார் சுந்தரவதனன் குழப்பமான முகத்துடன்.

"இப்போ என் வீட்டுக்காரர் நெனைக்கலையா?.. அதுமாதிரி.."

"கொஞ்சம் தெளிவாச் சொல்றையா?"

"சொல்றேன்.  இந்தப் பதிப்பகத்தின் மூலமா அபராஜிதன் புத்தகம் எதையும் பிரசுரிச்சது இல்லை.  இல்லையா?.. நான் இந்த இடத்தில் வேலை செய்றதாலே இந்த இடத்திலேந்து தன்னோட புத்தகம் எதுவும் பிரசுரமுமாக வேண்டாம் என்றிருக்கிறார் அவர்.  நான் இந்த இடத்தில் வேலை செய்யலைனா, பத்தோடு பதினொண்ணா இந்தப் பிரசுரமும் அவருக்கு இருந்திருக்கும்.  அப்படி இல்லாததினாலே, எனக்கு முழுச் சுதந்திரம் இங்கே இருக்கணும்ங்கறத்துக்காக நான் சம்பந்தப்பட்டு இருக்கும் ஒரு நிறுவனத்தில் தன்னையும் எந்த விதத்திலும் சம்பந்தப்படுத்திக் கொள்ளாம விலகியிருக்கார் அவர்.  அவ்வளவு தான்" என்றாள்.

"புரியறது.  ஆனா, அபராஜிதன் புஸ்தகங்களும் இந்தப் பிரசுரத்தின் விற்பனைக் கூடங்களில் இருக்கு, இல்லையா?"

"அது வேறே.  அந்த புத்தகங்களெல்லாம் வேறே வேறே பதிப்பகங்கள் பதிப்பிச்சவை.  அந்த பதிப்பகங்களுக்கும், இந்த பிரசுரத்திற்கும் இருக்கற தொடர்பு அது.  இந்தப் பிரசுரம் அந்தப் பதிப்பகம் பதிப்பிச்ச புத்தகங்களுக்கு ஒரு விற்பனைக் கூடமா இருந்து விற்றுக் கொடுக்கறது. அவ்வளவு தான்.
அபராஜிதனுக்கும் அந்த பதிப்பகங்களுக்கும் தான் ஒப்பந்தம்.  அதே மாதிரி அந்தப் பதிப்பகங்களுக்கும் இந்தப் பிரசுரத்திற்கும் தான் புத்தக விற்பனை குறித்து கணக்கு வழக்கு.  இந்த பிரசுரத்திற்கும் அபராஜிதனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை அல்லவா?"

"கரெக்ட்..."

"அதே மாதிரி ரிஷியும் நெனைச்சார்ன்னா என்ன செய்யறதுங்கறதுங்கறது தான் இப்போ என் யோசனை.."

"சொல்லு..."

"ரிஷியும் தன் மாமா வேலை செய்யற பதிப்பகம் மூலமா தன் படைப்புகளைப் பதிப்பிக்க வேண்டாம்ன்னு நெனைக்கலாம் இல்லையா?"

"அப்படி நெனைப்பான்னு நெனைக்கறே?"

"ஏன்னா, மாமா எப்படியோ அப்படியே மருமானும் இருக்கக் கூடாதா, என்ன? அப்படியே அவரும் நெனைச்சார்ன்னு வைச்சிக்கோங்கோ.."

"ஓ.. நீ அப்படி யோசிக்கறையா?.. எனக்கு இந்த பாயிண்ட் தோணவே இல்லை பாரு."

"தோணாததுக்குக் காரணம் இருக்கு.  உங்களோட நேர்மை ஒண்ணு தான் உங்களுக்குக் குறிக்கோள்.  ஒரு வட்டத்தைப் போட்டுண்டு அதிலே நீங்க மட்டுமே அடக்கம்.  நான் சரியா இருக்கேன்லே அது போதும் எனக்குங்கற நினைப்பு.  உங்களைத் தாண்டி மத்தவங்களும் உங்களை மாதிரியே இருக்கணும்ங்கற எதிர்பார்ப்பு உங்களுக்கு இல்லை.  அதான் காரணம்." என்று ஊர்மிளா சொன்ன போது சுந்தர வதனன் முகம் மலர்ந்தது.

"குழந்தை! எவ்வளவு கரெக்டா பிட்டுப் பிட்டுச் சொல்லிட்டே?.. நீ சொன்னது நூத்துக்கு நூறு சரி.  நீ சொன்ன மாதிரி, நான் கரெக்டா இருந்தாப் போதும்ங்கற நெனைப்பு தான் எப்பவும் எனக்கு இருந்திருக்கு.   மருமான்னு வரச்சே இந்த உறவுங்கற அக்ஞானம் வந்து என் கண்ணை மறச்சிடுத்து. அதையும் சொல்லணும்" என்றார்.

இந்த நேரத்திலும் ரிஷியை எனக்கும் தெரியும் என்று சுந்தரவதனனிடம் காட்டிக் கொள்ள ஊர்மிளா விரும்பவில்லை; லஷ்மணன் அவளுக்குப் போட்டிருக்கிற வாய்ப்பூட்டு தான் பிரதான காரணம். ரிஷியும் லஷ்மணனும் சேர்ந்து ஏதோ ப்ளான் போடுவதாக அவளுக்குத் தெரியுமே தவிர, அது என்ன பிளான் என்று சரிவரத் தெரியாது.  அது சரியாத் தெரியற வரைக்கும் இப்படித் தான் இருக்கணும் என்பதில் அவள் தெளிவாக இருந்தாள். அநேகமா அடுத்த சனிக்கிழமை வரை இதற்கு கெடு.  அதுவரை தான் பொறுத்துப் பார்ப்போமே என்பது அவள் எண்ணம்.

சுந்தர வதனின் கேபினிலிருந்து கிளம்பி தன் இடத்திற்குப் போகும் பொழுது குறுக்கிட்ட புத்தக விற்பனைப் பிரிவு சுலோச்சனா, "ஊர்மிளா! உன்னைத் தான் தேடி உன் காபினுக்கு வந்தேன். உன்னைக் காணோம்ன்னு தெரிஞ்சதும் பெரியவர் தான் டிஸ்கஷனுக்குக் கூப்பிட்டிருக்கிறாரோன்னு நெனைச்சேன்" என்றாள்.  சுலோச்சனாவின் முக பாவம் அவள் எதையோ அவசரமாக அவளுக்குச் சொல்ல விரும்புவதைப் போலிருந்தது.

"என்ன விஷயம், சுலோ?"

"ஒண்ணு உனக்குச் சொல்லணும்.." என்றவள், "வா, உன் கேபினுக்கேப் போகலாம்.." என்றாள்.

இருவரும் ஊர்மிளா கேபினை அடையும் பொழுது கேண்டினிலிருந்து வழக்கமா காப்பி கொண்டு வரும் பையன், இரண்டு மக்கில் இருவருக்கும் காப்பி வைத்து விட்டுப் போனான்.

அவன் போகும்வரைக் காத்திருந்து விட்டு சுலோச்சனா சொன்னாள்." எதுக்கு உன்னைத் தேடி வந்தேன்னா ஆச்சரியப்படுவே.." என்றாள்.

புன்முறுவலுடன், "ஏதோ சுவாரஸ்யமாத் தான் சொல்லுவே போலிருக்கு. சொல்லு.." என்றாள்.

"இந்த அரையாண்டு தமிழ்ப் புத்தக விற்பனை பத்தி விவரங்களை சின்னவர் கேட்டிருந்தார்.  நம்ம பதிப்பகம் மூலமா பதிப்பிச்ச புத்தகங்கள் ப்ளஸ் மத்த பதிப்பகங்கள் மூலமா பதிப்பிச்சு நாம் விற்பனைக்கு வைச்சிருக்கற புத்தகங்கள்ன்னு இந்த ரெண்டுக்கான விவரங்களும் தான்.."

"ஃபைன்.  சொல்லு."

"கம்ப்யூட்டர் சொன்ன கணக்குப்படி வெளிப் பதிப்பக மூலமா பதிப்பிச்சு நாம விற்கற புத்தகங்களில், உங்க ஹஸ்பண்ட் புத்தகங்களின் விற்பனை தான் டாப்!  எந்தளவுக்கு அதிகம்ன்னா அந்த வரிசைலே அதுக்கு அடுத்து வர்ற எழுத்தாளரை விட இருபதாயிரத்துக்கு மேலே அதிகம்.  இதிலே இன்னொரு கணக்கும் இருக்கு.  அதையும் சின்னவர் கிட்டே சொன்னேன்."

ஊர்மிளாவின் உள்ளம் குதி போட்டாலும் அதை வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல், "அது என்ன கணக்கு? அதையும் தான் சொல்லேன்" என்றாள்.

"நீ இப்படி அசுவாரஸ்யமா கேட்டா சொல்ல மாட்டேன்..." என்று பிகு பண்ணிக் கொண்டாள்.

கலகலவென்று காசு குலுங்கியது போலச் சிரித்தே விட்டாள் ஊர்மிளா.."பாத்தையா..  கேட்டதும் குதிக்கக் கூடாதுங்கறத்துக்காக நான் அடக்கமா இருந்தா, அதுக்காக இப்படி நீ கோவிச்சிக்கறதா?" என்றாள்.

"கோவிச்சிக்கலே, ஊர்மிளா! ஊரார் விஷயம் இல்லே; உன் விஷயம். உன் ஹஸ்பண்ட் ரிகார்ட் ப்ரேக் பண்ற மாதிரி ஒரு சாதனை பண்ணியிருக்கார். மெனக்கெட்டு ஒருத்தி அதைச் சொல்ல வர்றாளே, அதை சந்தோஷத்தோட கேப்போமேன்னு இல்லாம ஏதோ யாருக்கோ என்னவோங்கற மாதிரி..."

"அப்படியில்லே, சுலோ.. பெரியவங்க சொல்லியிருக்காங்க.. எப்படிப்பட்ட சந்தோஷத்தையும் கொஞ்சம் அடக்கத்தோட எதிர்கொள்ளணும்ன்னு.."

"அச்சு அசலா எழுத்தாளர் மனைவியாவே பேசறேம்மா.. பெரியவங்க சொன்னதெல்லாம், அவங்கள மாதிரி பெரியவங்களுக்குத் தான்.  நம்ம மாதிரி சிறிசுகளுக்கு இல்லே.. தெரிஞ்சிக்கோ.."

"அம்மாடி.. கேண்டின்லே ஸ்வீட் வாங்கித் தர்றேன். போதுமா?.. இப்போ அதையும் சொல்றையா?" என்று ஊர்மிளா இறங்கி வந்ததும் தான், சுலோச்சனாவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. "அப்படிவா, வழிக்கு!" என்றவள், "நான் சொன்ன அந்த இன்னொரு கணக்கைக் கேட்டு சின்னவரே மலைச்சுப் போயிட்டார்" என்றாள்.

"அடேடே! அப்படியா சமாச்சாரம்?..  ப்ளீஸ்.. அது என்னன்னு சொல்லமாட்டியாடீ?" என்று ஊர்மிளா பரபரப்புக் காட்டியதும்,  "ரொம்பத் தான் நடிக்காதே.. எனக்காகத் தான் இதெல்லாம்ன்னு தெரியறது.. இருந்தாலும் சொல்றேன். கேட்டுக்கோ.  தமிழ் புத்தகங்களில்லே நம்ம பதிப்பகத்திலே பதிப்பிச்சு வெளிவந்த எந்த புத்தகமும் உங்க ஹஸ்பெண்ட் புத்தக விற்பனைக்கு பக்கத்திலே கூட வர்லே! இங்க பதிப்பிச்சதிலே அதிகமா வித்ததுக்கும், உங்க வீட்டுக்காரர் நாவல் ஒண்ணின் விற்பனைக்கும் வித்தியாசம் பத்தாயிரத்துக்கு மேலே! ஜனங்க கிட்டே அபராஜிதன் ரீச் எப்படின்னு பாத்துக்கோ.." என்றாள்.

"எல்லாம் ஒரு சீசன் தான் சுலோ!  நாம தான் ஜாக்கிரதையா இருக்கணும்.  ரொம்ப வேகம்ன்னா, இடறினாலும் இடறிடும்.. அதுனாலே, எல்லாத்தையும் அடக்கத்தோட ஏத்துக்க வேண்டியது தான்.. என்ன சொல்றே?"

"நான் சொல்றது இருக்கட்டும்.  சின்னவர் என்ன சொன்னார் தெரியுமா?"

"சின்னவரா?.. அவர் என்ன சொன்னார்?"

"இந்த அனாலிசிஸ் எல்லாம் பாத்துட்டு, 'அடுத்தாப்லே, நம்ம பிரசுரம் மூலமா அபராஜிதன் புத்தகமெல்லாம் போடலாமே! என்ன நினைக்கிறீங்க'ன்னு என்னைக் கேட்டார்.  இந்த பிரசுர முதலாளியே கேக்கறார். நான் என்னத்தை சொல்றது, ஊர்மிளா! சொல்லு." என்றாள்.

அவள் கேட்டதைக் கேட்டு ஊர்மிளாவுக்கு மிகுந்த யோசனையாகப் போய்விட்டது.


(இன்னும் வரும்)













Friday, March 16, 2012

பார்வை (பகுதி-34)

ன்றைக்குப் பரவாயில்லை.  என்னவோ தெரியவில்லை,  அண்ணா சாலையில் அவ்வளவு போக்குவரத்து நெரிசல் இல்லை.  க்ரீம்ஸ் ரோடு திருப்பத்தில் திரும்பி,  ஐடிபீஐ பாங்கைத் தாண்டும் பொழுது, வீட்டிலிருந்து புறப்படும் பொழுதே இருந்த சுந்தர வதனன் நினைவு மீண்டும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டது..

'அவரைச் சொல்லிக் குற்றமில்லை.  ரிஷியை எனக்குத் தெரிந்திருக்குமென அவர் என்ன கண்டார்?..  அன்றைக்குக் கூட பெரியவரின் டிஸ்கஷனுக்காகச் செல்லும் பொழுது எதைச் சொல்லவோ தயங்கி நின்றாரே?.. அப்புறம் அதைப் பற்றி அவரும் சொல்ல வில்லை, நானும் கேட்கவில்லையே?.. இன்றைக்குக் கேட்டு விடலாமா?..' என்றெல்லாம் யோசித்துக் கொண்டே அலுவலக காம்ப்ளக்ஸூக்குள் வண்டியைத் திருப்பி நிறுத்தினாள் ஊர்மிளா.

நுழைந்ததுமே கிருஷ்ணவேணி புன்முறுவலுடன் அவளை எதிர்கொண்டாள்.  வேணியின் வரவேற்பு தினமும் அப்படித் தான் இருக்கும் என்றாலும், அழகான அளவான அவள் காலைப் புன்முறுவல், அன்று பூராவும் நினைவில் தங்கி அன்றைய பொழுதை உற்சாகமாக்க உதவும் என்பதை ஊர்மிளா அனுபவ பூர்வமாகவே உணர்வாள்.  அதனால் கிருஷ்ணவேணியை அவளுக்கு ரொம்பவும் பிடிக்கும்.  கொஞ்சம் ஏழ்மை தான்;  ஆனால் அவளாக எதையும் வெளியில் காட்டிக் கொண்டதில்லை.  'வறுமையில் செம்மை' என்கிற வரியை பதிப்புக்காக காத்திருக்கும் எந்த படைப்பிலாவது படித்தால் கூடப் போதும் சொல்லி வைத்தாற் போல கிருஷ்ணவேணியின் நினைவு அவளுக்கு வந்து விடும். கல்யாணமாகாத அக்கா ஒருத்தி அவள் வீட்டில் இருப்பது தெரியும்.

ஊர்மிளாவும் தான் உடுத்தி கழித்திருந்த சுமாருக்கும் கொஞ்சம் மேலான உடைகளை ஒரு பையில் இட்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது யாருக்கும் தெரியாமல் கிருஷ்ணவேணியிடம் கொடுத்து விடுவாள்.  கிருஷ்ணவேணியும் அதில் எதையும் அலுவலகத்திற்கு உடுத்திக் கொண்டு வந்ததில்லை.  அதுவும் நல்லதுக்குத் தான்.  பொதுவாக பெண்கள் இந்த விஷயத்தில் ரொம்பவும் தீட்சணயமிக்கவர்கள்.  'என்ன, வேணி! ஊர்மிளா கொடுத்தாங்களா? அவங்க இதே மாதிரி போட்டுகிட்டு வந்த மாதிரி இருக்கே?' என்று யாராவது நேருக்கு நேர் கேட்டாலும் கேட்டு விடுவார்கள்.  அந்த மாதிரியான ஒரு நோகடிப்புக்கு இவள் அலுவலகத்திற்கு அதையெல்லாம் உடுத்திக் கொண்டு வராததே மேல்' என்று நினைத்துக் கொள்வாள் ஊர்மிளா. 'உங்க டிரெஸ்ஸெல்லாம் எங்க அக்காவுக்கு அவளுக்குத் தைச்சது போலவே அளவெல்லாம் அவ்வளவு கரெக்டா இருக்குங்க' என்று ஒருநாள் அதிசயப் படுகிற பாவனையில் முகத்தை வைத்துக் கொண்டு அவள் சொல்லியிருக்கிறாள்.  'ரொம்ப நல்லது.  தான் கொடுப்பதை இவள் அக்கா போட்டுக் கொள்கிறாள் போலும்' என்று ஊர்மிளா நினைத்துக் கொண்டதோடு சரி.

கைப்பையை லாக்கரில் வைத்து விட்டு வழக்கம் போல் வாஷ் பேசின் நாடி கை துடைத்து, கேசம் சரி செய்து தன் கேபினுக்கு வந்து அமர்ந்து ஒரு நிமிடம் தியானத்தில் ஆழ்ந்தாள் ஊர்மிளா.  தலை நிமிர்ந்து ஸ்டிக்கி நோட்ஸ் பார்த்ததில், 1. பிரென்ஞ், ஆங்கில நாவல்களின் பதிப்புக்கான ப்ரோப்ஸலுக்காக பெரியவரிடம் ஆலோசனை பெற வேண்டும். 2. இதுவரை பத்திரிகைகள் மூலமாக அறிமுகம் ஆகாத எழுத்தாளர்களின் புதினங்களை பதிப்புக்காக தேர்வு செய்ய வேண்டும் -- என்று அவளே எழுதி ஒட்டி வைத்திருந்த இரு நினைவூட்டல் குறிப்புகள் இருந்தன.

என்றைக்கு லஷ்மணன் சொன்னானோ அன்றைக்கே இரண்டாவது விஷயத்திற்கான அறிமுகமாக 'பார்வை' விஜி இல்லை என்று தீர்மானமாகி விட்டது.  அவளும் ரிஷி விஷயத்தை லஷ்மணனிடம் விட்டு விட்டாள்.  ரிஷியும், லஷ்மணனும் சேர்ந்தே எதெலாமோ தீர்மானித்திருக்கிற மாதிரித் தெரிகிறது.  எதெல்லாம் என்று லஷ்மணனிடம் இவள் கேட்ட பொழுது 'இன்னும் ஒரு சுற்று பேச வேண்டியிருக்கிறது; அடுத்த சனிக்கிழமை அவர்கள் நம் வீட்டிற்கு வருகிறார்கள், இல்லையா?.. அப்பொழுது விரிவாகப் பேசி விடலாம்' என்று சொல்லி விட்டான்.  இதுவரை கைவசம் இருக்கிற கையெழுத்துப் பிரதிகளைப் படித்து மூன்று நான்கு பேர்களை முன்னேற்பாடாகத் தேர்வு செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஊர்மிளா நினைவில் குறித்துக் கொண்டாள்.

முதல் விஷயத்தைப் பொறுத்த வரை சுந்தர வதனனிடமிருந்து எந்தந்த பிரென்ஞ், ஆங்கில நாவல்கள் என்று இன்னும் இறுதிப் பட்டியல் வரவில்லை என்கிற நினைப்பு ஊர்மிளாவுக்கு வந்த பொழுது, அவரிடமே அதுபற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்பதற்காக சுந்தரவதனின் கேபினுக்குப் போனாள்.

சுந்தர வதனன் அவர் கையாளும் செக்ஷனுக்கு மிகவும் பொருத்தமான மனிதர்.  நாலைந்து அந்நிய மொழிகள் பரிச்சயமுள்ளவர். ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாய் பஞ்சக் கச்சமும் நெற்றியில் ஸ்ரீசூர்ணமுமாய் இருப்பார்.  காலையில் ஆபிஸுக்கு வந்தாரானால், மாலை வீட்டுக்குக் கிளம்பும் வரை மதிய உணவு நேரத்தைத் தவிர்த்து அலுவலகப் பணி தவிர வேறு ஏதும் தெரியாதவராய் இருப்பார்.  ஸ்பஷ்டமான ஆங்கில உச்சரிப்பும், அதற்கு வாகான தேர்ந்த விவரிப்புகளும் அவருக்கென்று அலுவலகத்தில் ஒரு மரியாதையைத் தேடித் தந்திருந்தன.   ரிஷியின் மாமா அவர் என்பது இப்பொழுது புதிதாகத் தெரிந்திருக்கும் கூடுதல் தகவல். (ரிஷிக்கு ரிஷி என்று பெயர் வைத்ததே இவர் தானாமே!)  இது இத்தனை நாள் ஊர்மிளாவுக்குப் பரிச்சயமாகியிருந்த சுந்தர வதனன் என்கிற மனிதரை இன்னும் மரியாதைக்குரியவராக நினைக்கச் செய்தது.

ஏதோ புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்த சுந்தர வதனன், ஊர்மிளாவைப் பார்த்ததுமே "நானே வரவேண்டுமென்றிருந்தேன்.  நீங்களே வந்து விட்டீர்கள்" என்று பக்கத்திலிருந்த நாற்காலி பக்கம் கைகாட்டினார். அவள் உட்கார்ந்ததும், தன் மேஜை இழுப்பறையை இழுத்துத் திறந்து,  "இந்தாங்க லிஸ்ட்.." என்று ஒரு லிஸ்ட்டை எடுத்து ஊர்மிளாவிடம் நீட்டினார். "ஆங்கிலத்துக்கு அஞ்சு, பிரென்ச்சுக்கு அஞ்சுன்னு பத்து நாவல்களைத் தேர்வு செஞ்சிருக்கேன். நான் சின்னவர்கிட்டே பேசிட்டேன். பெரியவர்கிட்டே பேசி இரண்டோ நாலோ தேர்வு செய்ங்க.  அவரோட பேசினத்துக்கு அப்புறம், மத்ததையெல்லாம் பாத்துக்கலாம்" என்றார்.

"பெரியவர்க்கிட்டே டிஸ்கஸ் செய்யறத்தே நீங்க இருந்தாத்தான் இந்த வேலை எனக்கு செளகரியமாப் போகும்.  தவிர, என்னன்ன காரணங்களுக்காக இந்த பத்தை செலக்ட் செஞ்சிருக்கீங்கங்கறதையும் விவரமாச் சொல்லலாம். இல்லையா?"

"என்னைக் கூப்பிட்டீங்கனாத் தான் வம்பு.  ஆன மட்டும் பாத்துட்டேன். இந்த பத்தை எப்பாடுபட்டும் என்னாலே குறைக்க முடியலே. ஒவ்வொண்ணும் ஒவ்வொரு விதத்லே அற்புதமா இருக்கு."

"அவராலே மட்டும் எப்படித் தீர்மானிக்க முடியும்னு நெனைக்கிறீங்க?"

"முடியும்.  நான் பாக்கறது வாசக கோணம் மட்டும் தான்.  ஆனா அவர் பார்வைலே வாசக கோணம்+ முதலாளி கோணம் இரண்டும் இருக்கும், இல்லையா?  அதனாலே முடிவெடுக்க முடியும்."

"பெரியவரைப் பத்தி தெரியாதா?.. அவருக்கும் வாசக கோணம் தான் முக்கியமாப்படும். என்னிக்கு முதலாளி கோணம்ன்னு ஒண்ணு அவருக்கு இருந்திச்சு?.."

"இல்லை. ஊர்மிளா.. முதலாளி கோணம்ன்னு நான் சொல்ல வந்தது, வேறே!  உரிமை வாங்கறது, மொழிபெயர்ப்புக்கு ஏற்பாடு செய்யறதுன்னு பலதும் இருக்கில்லையா.. அதைச் சொன்னேன்."

"அப்போ ஒண்ணு செய்யலாம்.  பெரியவருக்கு இந்த பத்தையும் கொண்டு போறதுக்கு முன்னாடி, இந்த பத்திலே எதெல்லாம் நீங்க சொன்ன அந்த ரெண்டு விஷயத்திலே க்ளியரா இருக்குன்னு தெரிஞ்சிண்டறலாம்.  என்ன சொல்றீங்க..?"

"அது கூட சரிதான்.  சின்னவர் லெவல்லே இதையெல்லாம் முடிச்சிண்டு பெரியவர் கிட்டே போகலாம்.   மொழிபெயர்ப்பைப் பத்திப் பிரச்னை இல்லே.  இங்கிலீஷிற்கு சந்திர சூடனும், பிரன்ஞ்சுக்கு பரிதி மாலும் இருக்காங்க."

"இருக்காங்க சரி.  அவங்க ரெண்டு பேரும் ஃபிரீயா இருக்கணும், இல்லையா?  வேறே எதானுச்சும் ஒர்க்கை எடுத்துக்காம.."

"அதுவும் சரிதான்.  சின்னவர் கிட்டே சொல்லி கேக்கச் சொல்றேன்.  அப்புறம் அப்படியே சின்னவர் கிட்டே அந்த முதல் விஷயத்தையும் கவனிக்கச் சொல்லிடறேன். அதுக்கு நேரடியா அவர் வேலைலே இறங்கறது தான் சரியா இருக்கும்."

ஊர்மிளா புன்னகைத்தாள். "சார்! உங்க கிட்டே நான் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு, சார்! உங்க வேலை எதுவுண்டோ அதை மட்டும் ரொம்ப ஈடுபாட்டோடச் செய்றீங்க.. மத்தபடி, இந்த ஏற்பாடு செய்யறது, என்னாலே இந்த ஆபீஸிலே இந்தக் காரியம் செய்ய முடியும்ன்னு இன்னொருத்தருக்கு காட்டிக்கறது, அதனாலே அவர் கிட்டே நெருக்கமாறது இதெல்லாம் உங்களுக்கு கட்டோட பிடிக்காத காரியம்ன்னு எனக்கு நல்லாவே தெரியும் சார்!  இதுக்கெல்லாம் எதாச்சும் டிரைனிங் இருக்கா?.. ஏதாவது இன்ஸ்ட்டிட்யூட்லே இதுக்கெல்லாம் பயிற்சி கொடுக்கறாங்களா, சொல்லுங்க, சார்!" என்றாள்.

சுந்தர வதனன் சிரித்தார். "ஊர்மிளா! இன்னிக்கு நேத்தா, எத்தனை வருஷமா உன்னைத் தெரியும் எனக்கு!  நீயும் அப்படித்தான்னு எனக்குத் தெரியாதா, என்ன?  அதான் ஒரு விஷயத்தை உங்கிட்ட கேக்க முடியாம இப்போ கொஞ்ச நாளா யோசிச்சிண்டு இருக்கேன்."

"எங்கிட்டே கேக்கறதுக்கு யோசனையா?" என்று ஊர்மிளா திகைத்தாள்.  "சார்.." என்று அவள் அவரை அழைத்த பொழுது, அவளது குரல் மிகவும் தழைந்திருந்தது.  "சார்.. என்னன்னமோ சொல்லி என்னை அந்நியப்பட்டவளா ஆக்கிடாதீங்க.. நினைச்சதை சொல்லிடுங்க, சார்!" என்றாள்.

"சட்டுனு கேட்டுடுவேன்.  ஆனா, கேக்கக் தான் வார்த்தை வரலே."

"கேளுங்க சார்.."

"ஒண்ணுமில்லே, குழந்தை!  என் மருமான் ஒருத்தன் இருக்கான். ரிஷின்னு பேரு.  இந்த கதையெல்லாம் எழுதறதிலே, அவனுக்கு ரொம்ப இன்ட்ரஸ்ட்!  இப்போ கொஞ்ச நாளைக்கு முன்னாடி கூட 'பார்வை'ன்னு ஒரு நல்ல கதை எழுதி இருந்தான்.  தீபாவளி மலர் ஒண்ணுலே வந்திருக்கு.  நீ அதைப் படிச்சிருப்பையோ இல்லையோ?.. தெரிலே.  நான் வேணா ஒனக்கு
அதை எடுத்திண்டு வந்து தரட்டுமா?"

"சரி சார்..  நான் என்ன செய்யணும் சொல்லுங்க.."

"அற்புதமான கதை அது.  குறுநாவல் மாதிரி வரும்.  அதைத் தவிர, கேட்டா இன்னும் நெறைய எழுதித் தருவான்.  அவனது சிலதை நம்ம பதிப்பகம் மூலமா போட்டா, நன்னா முன்னுக்கு வந்திடுவான்.  நீதான் அவனைப் பத்தி பெரியவர் கிட்டே சொல்லி..."

"..........................."

"பெரியவர் கிட்டே நானே இதைச் சொல்லலாமேன்னு சொல்லுவே. சொல்லலாம் தான்.  ஆனா சொல்லத் தெரியாது எனக்கு.  இதுக்கு முன்னாடி இப்படி எல்லாம் எதுக்கும் யார் கிட்டேயும் சொல்லி பழக்கமில்லை, எனக்கு. எதைச் செய்ய வழக்கமா நான் தயங்குவேனோ, அதையே உங்கிட்டே செய்யச் சொல்லி நான் கேக்கறது தப்பு தான்.  உன்னைப் பத்தியும் எனக்கு நன்னா தெரியும்.  சொல்றது உனக்கும் கஷ்டம் தான். அதுனாலே தான் உங்கிட்டேயும் சொல்ல முடியாம தயங்கிண்டிருந்தேன்.  என்ன சொல்றே?., பெரியவர் காதுலே அவனைப் பத்திப் போட்டு வைக்கலாமா? என்ன சொல்றே?" என்று அவளிடம் ஆலோசனை கேட்பது போலக் கேட்டார் சுந்தர வதனன்.

அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஊர்மிளா தயங்கி தலை கவிழ்த்தாள்.


(இன்னும் வரும்)









Monday, March 12, 2012

பார்வை (பகுதி-33)

"கெளதம்! டிரேட் விளையாட்டுக்கு வர்றையாடா?" என்று கேட்டுக் கொண்டு உள் பக்கம் ஒரு சிறுவன் வந்தான்.  உடனே கெளதம் தன் அம்மாவிடம் அனுமதி வாங்கிக் கொண்டு அந்த சிறுவன் பின்னாடியே ஓடினான்.

அவன் போவதையேப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, பார்வைக்குப் பையன் மறைந்ததும், திரும்பி "எனக்குக் கூட இந்த டிரேட் விளையாட்டு ரொம்ப பிடிக்கும்.  நீங்க விளையாடியிருக்கிறீர்களா, ஊர்மிளா?" என்றாள் திவ்யா.

"ஓ.. சின்னப் பெண்ணாய் இருந்தப்போ, ஒரு தடவை மும்பை போனப்போ, சாரி அப்போல்லாம் பம்பாய் தான், அம்மா இந்த விளையாட்டு அட்டை ஒண்ணு வாங்கிக் கொடுத்தாங்க.  அதுலே, ஒர்லி, போரிவலி, டோம்பிவலி, ஜூஹூ, அந்தேரின்னு இடங்களின் பெயர்கள் போட்டிருக்குமா?.  பாங்கில் லோன் வாங்கி அந்த இடங்களை வாங்கி விற்று செம விளையாட்டு அது.  இப்போ கூட டிரேட் அட்டை முன்னாடி உக்காந்திண்டு விளையாட மாட்டோமான்னு இருக்கு.." என்றாள் ஊர்மிளா.

"போயும் போயும் அவளைக் கேட்டீங்க, பாருங்க! விட்டால் அந்த பக்கத்து வீட்டுக்கே போய் கொஞ்ச நேரம் விளையாடிட்டு வரட்டுமான்னு கேட்பாள்" என்றான் லஷ்மணன்.

"அந்த பக்கத்து வீட்லேருந்து வாங்கின பத்திரிகைலே தான் இப்போச் சொன்னீங்களே, அந்தக் கதையைப் படிச்சேன்..  கதை பேரு கூட... ம்..      ஞாபகம் வந்திடுத்து-- 'அந்த மூணு பழம்'! நல்ல தலைப்பில்லே!" என்று கேட்டு குழந்தை போல் கைகொட்டிச் சிரித்தாள் வித்யா. கதைகள் படிப்பதில் தான் இந்த வித்யாவிற்கு எவ்வளவு சந்தோஷம் என்று நினைத்துக் கொண்டான் லஷ்மணன்.

"ஒரு கதை விடமாட்டியே?" என்று மனைவியைப் பாராட்டுகிற மாதிரிப் பார்த்தான் ரிஷி.

"ஊக்கும்.."என்று சிணுங்கினாள் வித்யா.  "'திலகம்' பத்திரிகைலே வந்தது.  நீங்க தான் அந்தப் பத்திரிகையெல்லாம் தொடமாட்டீங்களே! அப்போ எப்படித் தெரியும்?" என்றவள், லஷ்மணனைப் பார்த்து, "இவருக்குன்னு சில பத்திரிகைகள் இருக்கு.  பலது கடைலே விக்காது; போஸ்ட்டிலேயே வந்திடும். இருபத்தைச்சு முப்பது பக்கத்துக்கு இருக்கும்.  முதல் அட்டை பின் பக்கத்லேந்து கடைசி அட்டை பின்பக்கம் வரை ஒரே எழுத்து தான்!  மருந்துக்கு ஒரு படம் போடமாட்டாங்களே! தமிழ்தாங்க, ஆனா படிச்சா என் புத்திலே ஒண்ணும் படியாது..  அதையெல்லாம் புரிஞ்சிக்கற அளவுக்கு எனக்கு விஷய ஞானம் இல்லைங்கறது தான் விஷயம்! என்ன செய்யச் சொல்றீங்க?.. நமக்கு 'திலகம்' மாதிரி, இந்த மாதிரி பத்திரிகைங்க தான்.. அந்த 'திலக'த்திலே நீங்க கூட தொடர்கதை எழுதறீங்களே, 'பாலைவனச் சோலை'ன்னு-- எனக்கு ரொம்ப பிடிக்கும்.. எனக்கு மட்டும் இல்லே, இந்த ஸ்டோரே ஒவ்வொரு வாரமும் அந்தக் கதையைப் படிக்க ஏங்கிண்டு இருக்கும்!  ஏன், அபராஜிதன் சார்!  அந்த மாதிரி பத்திரிகைங்கள்ல இவரை எழுதச் சொல்லக் கூடாதா?" என்று கேட்டாள்.

அவள் சொல்வதைக் கேட்டு சடாரென்று லஷ்மணனும், ரிஷியும் ஒருவரை ஒருவர் பார்த்து அவர்களுக்கு மட்டுமே புரிந்த ஒன்றைப் பரிமாறிக் கொள்கிற மாதிரி சிரித்துக் கொண்டனர்.

வித்யா சொல்வதைக் கேட்டுப் பொறுக்க வில்லை ஊர்மிளாவுக்கு."வித்யா! உங்க வீட்டுக்காரரும் எவ்வளவு நல்லா எழுதறார்?.. அவரோட 'பார்வை' கதை எங்க ரெண்டு பேருக்குமே ரொம்பப் பிடிச்ச ஒண்ணு. அதுகூட பிரபல பத்திரிகை தீபாவளி மலர்லே தானே வந்தது.. ஏன், நீங்க அதைப் படிக்கலையா?"

"படிக்காம இருப்பேனா?.. படிச்சேங்க.. ஆனா அத்தி பூத்த மாதிரி எப்பவோ ஒண்ணுன்னா, வாராவாரம் வர்ற மாதிரி இருந்தாத் தானே, இந்த ஸ்டோர்லேயே சொல்லிக்கற மாதிரி எனக்கும் பெருமை?.. 'இந்த அத்தியாயத்தை இப்படி முடிச்சிட்டாரே, அடுத்த வாரம் என்னவாகும்'ன்னு ஒவ்வொருத்தியும் என்னை வந்து கேட்க வேண்டாமா?.. ஊர்மிளா! தப்பா எடுத்திங்காதீங்க.. உங்க ப்ரண்ட்ஸ்லாம், அபராஜிதன் ஸார் எழுதற கதைங்களப் பத்தி உங்க கிட்டே விசாரிப்பாங்களா?" என்று ஆவலோடு கேட்டாள்.

"விசாரிப்பாங்க.. ஆனா, அடுத்த வாரம் என்ன வரும்ன்னு கேக்க மாட்டாங்க..  அதெல்லாம் அந்தந்த பத்திரிகை ரகசியம்ங்கறது பெரும்பாலும் என்னோட ஃப்ரண்ட்ஸூங்க எல்லாருக்கும் தெரியும்.  அப்படியே அவங்க கேட்டாலும் எனக்குச் சொல்லத் தெரியாது.  ஏன்னா, எங்க வீட்லே அவருண்டு அவர் கதைகள் உண்டுன்னு அவருக்கு மட்டுமே தெரிஞ்ச சமாச்சாரமா அது இருக்கும்.  நான் அதிலேலாம் தலையிடறது இல்லே. நாலோ, அஞ்சோ தொடர்கதை எழுதறார்; அதெல்லாம் ரெண்டு மூணு வாரத்துக்கு அப்புறம் எப்படிப் போகும்னு அவருக்கே தெரியாதுங்கறது மட்டும் எனக்குத் தெரியும்.." என்று சொல்லிச் சிரித்தாள்.

"அதென்ன கணக்கு, ரெண்டு மூணு வாரம்?.."

"அடுத்தாப்லே அடுத்தாப்லே வர்ற ரெண்டு வாரத்துக்கான மேட்டர் பிரிண்ட்டுக்குப் போயிடும்.. அந்த ரெண்டு வாரத்துக்கு அடுத்தாப்லே எப்படிப் போகணும்ங்கறதைத் தான் இப்பவே யோசிக்கணும்.  அதனாலே அப்படி.." என்றாள் ஊர்மிளா.    

"அப்படியா சங்கதி! அது என்னவோ தெரிலே, இதெல்லாம் கேக்கக் கேக்க சுவாரஸ்யமாகத் தான் இருக்கு.."என்று அவள் சொன்ன பொழுது, அந்தக் குரலில் ஒரு ஆற்றாமை வெளிப்பட்டு, இதே சுவாரஸ்யத்துடன் தன்னிடம் யாராவது கேட்க மாட்டார்களா, அதற்கு இப்பொழுது ஊர்மிளா தெரிந்து வைத்திருக்கிற மாதிரியான தகவல்களைத் தான் சொல்ல மாட்டோமா என்கிற ஆதங்கம் இருப்பதாகத் தோன்றியது.

"அப்படி நாலைஞ்சு தொடர்கதை எழுதுறீங்கன்னா.. எத்தனை கேரக்டர்கள்? ஒண்ணுக்கு ஒண்ணு மாறிப்போயிடாதா?.. அவங்க பேரையெல்லாம் எப்படி ஞாபகம் வைச்சிப்பீங்க?.." என்று லஷ்மணனைப் பார்த்தாள் வித்யா.

"ஒரு நாவலை எழுத ஆரம்பிச்சதுமே, அதிலே வர்ற கேரக்டர்களையெல்லாம் ஒரு சார்ட் போட்டு ஃபேமலி ட்ரீ மாதிரி எழுதிண்டு என் மேஜைக்கு பக்கத்லே மாட்டிடுவேன். எழுதறத்தே அப்பப்போ பார்த்துக்கறதும் உண்டு.  ஒரு அத்தியாயம் எழுதி முடிச்சவுடனேயே பேர் எதானும் மாறிடுத்தான்னு சரிபார்த்துக்கறதும் உண்டு.  சில அவசர நேரங்கள்லே, எல்லாம் சரியா இருக்கானு இவளையும் செக் பண்ணக் கேட்டுக்கறதுண்டு."

"எல்லாம் எழுதி முடிச்சு பத்திரிகை ஆபிஸுக்குப் போஸ்ட் பண்ணிடுவீங்களாக்கும்?"

"முன்னாடிலாம் பத்திரிகை ஆபிஸ்லேந்து ஆள் வந்து வாங்கிண்டு போவாங்க.  இப்போலாம் கம்ப்யூட்டரில் எழுதி, அதிலேந்தே பிடிஃப் ஃபைலா பத்திரிகை ஆபிஸுக்கு அனுப்பிச்சிடறது தான்."

"அப்படியா?" என்று கேட்டுக் கொண்டாள் வித்யா.  எதற்கு இவள் இவ்வளவு விவரமாக எல்லாவற்றையும் கேட்டுக் கொள்கிறாள் என்று ஊர்மிளாவிற்கு ஆச்சரியமாக இருந்தது.  தனக்காகத் தான் அத்தனை விஷயங்களையும் இவள் சேகரித்துக் கொள்கிறாள் என்று ரிஷிக்குத் தோன்றியது.

"இது என்ன வித்யா?.. அவரை ஏதோ பேட்டி காண்றது மாதிரி கேள்வி மேலே கேள்வி கேட்டுண்டு போறே? சலிச்சிக்கப் போறாரு" என்று சிரித்தான் ரிஷி.

"சேச்சே.. நிச்சயமா இல்லை.."என்று சடாரென்று சொன்னான் லஷ்மணன். "எனக்கு இது புது அனுபவம்.. இதுக்கு முன்னாடி இந்த மாதிரியான கேள்விகளை என்னிடம் யாரும் கேட்டதில்லே. அதனாலே இன்ட்ரஸ்டிங்கா இருக்கு. அதனால் ஒண்ணுமில்லை. அவங்க விருப்பப்பட்டதைக் கேட்கட்டும்.." என்றான்.

"எனக்கு என்னன்னா, தப்பா நெனைக்க மாட்டீங்களே, ஊர்மிளா?.." என்று தான் கேட்க வந்ததை முழுசும் கேட்காம தன்னைப் பார்த்த வித்யாவின் குழந்தை முகத்தைப் பார்த்ததும் அவளுக்கு நெருங்கி உட்கார்ந்து "எதுக்குத் தயங்கறீங்க?.. சொல்லுங்க வித்யா.."என்று ஊர்மிளா ஆதரவுடன் அவள் தோளைத் தொட்டாள்.

"அவர்கிட்டே இல்லே.. இந்தக் கேள்வி மட்டும் உங்க கிட்டே தான்.."என்ற வித்யா, "ஊர்மிளா!  அபராஜிதன் ஸார் எழுதறதையெல்லாம் நீங்களும் படிக்காம இருக்க மாட்டீங்க.. அதுவும் அவர் எழுதற 'காந்தளூர் சாலை' யைப் படிக்கறச்சே, ஒவ்வொரு வாரமும் அடுத்த வாரம் என்ன வருமோன்னு எதிர்பார்க்கிற மாதிரி தான் முடிப்பார்.  அந்த மாதிரி எதிர்ப்பார்ப்பு உங்களுக்கு இருக்காதா?.. ஐ மீன், அவர் கதை பத்திரிகை வெளிவர்றத்துக்கு முன்னாடி கம்ப்யூட்டரில் அவர் பதிஞ்சு வைச்சிருக்கறதைப் பார்க்கணும்னு.." என்று தயங்கித் தயங்கி அவள் கேட்ட பொழுது, "இதைக் கேக்கறத்துக்கா இவ்வளவு பீடிகை போட்டீங்க?.." என்று ஊர்மிளா வித்யாவின் முகத்தைப் பார்த்தாள்.  எந்த கல்மிஷமும் தெரியாத அந்த முகத்தைப் பார்த்ததும், தன்னை விட பெரியவளாக இவள் இருந்தாலும், எவ்வளவு சின்னக் குழந்தை போல மனசை வைத்துக் கொண்டிருக்கிறாள் என்று வியந்து போனாள்..

"நானா இதுவரைப் பார்த்ததில்லை.  ஆனா சில சமயம் அவரே பார்க்கச் சொல்வார். ஏதாவது கரெக்ஷன் தேவையாங்கறத்துக்காக. அது கூட கதை சம்பந்தப்பட்டு இல்லை; சொல்லப் போனா ஒரு ஃப்ரூப் ரீடிங் மாதிரி.."என்று முன் நெற்றியில் வந்து விழுந்த குழல் கற்றைகளை ஒதுக்கிக் கொண்டாள் ஊர்மிளா.

"இந்த சமயத்தில் நான் படிச்சது ஒண்ணு ஞாபகத்துக்கு வர்றது.." என்றான் ரிஷி.  "எழுத்தாளர் அகிலனுக்கும் அவர் எழுத்துக்கும் இருந்த உறவே தனின்னு சொல்வாங்க..   தனி அறைலே உக்காந்து, புறச்சூழ்நிலைகள்லேந்து தனியாத் தன்னைக் கத்தரிச்சிண்டு ஒரு தவம் மாதிரி எழுதுவாராம்..  அவரது எழுத்து அவ்வளவு ஆத்மார்த்தம் அவருக்கு. பத்திரிகைக்கு அனுப்பறச்சே தான், தளர்ந்து தன்னோட எழுத்து தங்கிட்டேயிருந்து பிரிஞ்சு போறதா அவர் உணர்ற அப்படிப்பட்ட ஒரு ஆத்மார்த்தம் அது. அப்படித் தான் எழுதினதை பத்திரிகைலே அவரா பகிரங்கப்படுத்தறதுக்கு முன்னாடி யாரும் அதைப் படிச்சிடக்கூடாதுங்கறதிலே அகிலன் ரொம்ப உறுதியா இருப்பாராம். அவங்க குடும்ப உறுப்பினர்கள் கூட இதுக்கு விதி விலக்கில்லை.  'பாவை விளக்கு' தொடர்கதை 'கல்கி'லே வெளிவந்த காலம்.  நீங்கள்லாம் கூட 'பாவைவிளக்கை'ப் படிச்சிருப்பீங்க. கதையோட இறுதிப் பகுதிலே அந்த உமாவை அகிலன் சாகடிச்சிடுவாரோன்னு லட்சக்கணக்கான வாசகர்கள் பதறிப் போயிட்டாங்க.  அப்படி அகிலன் செஞ்சிடக்கூடாதுன்னு வந்த ஆயிரக்கணக் கான கடிதங்களையும் தந்திகளையும் பார்த்து கல்கி பத்திரிகைக்காரங்க மலைச்சுப் போயிட்டாங்க.  இங்கே அகிலன் வீட்லேயும் அத்தனை பேரும் அதே மாதிரி தவிச்சுப் போயிட்டாங்க.  உமாவை என்ன செய்யப் போறாரோன்னு பதைபதைப்பு.  அகிலன் கிட்டே அதைப்பத்திப் பேசவும் முடியாம, அவர் எழுதி வைச்சிருக்கறதைப் பாக்கவும் முடியாம.."

"நான் கூட இதைப் பத்திப் படிச்சிருக்கேன்.." என்ற ஊர்மிளா, "எங்க பதிப்பக முதலாளி பெரியவருக்கு அகிலன் ஸ்மரணை தான் எப்பவும். அவர் மேலே அத்தனை ப்ரியம்.." என்றாள்.

"ஓ.." என்று ஓவல் சைஸ்ஸூக்கு முகம் மாறி அதிசயத்தாள் வித்யா. "இத்தனை நேரம் இதைச் சொல்லவே இல்லையே, ஊர்மிளா! நீங்க வேலைக்குப் போறீங்களா.. அதுவும் பதிப்பகத்தில் வேலைன்னா.. கொடுத்து வைச்சவங்க தான்" என்றாள்.

"எந்தப் பதிப்பகம், ஊர்மிளா?" என்றான் ரிஷி.

"கிரீம்ஸ் ரோட்லே இருக்கே.  குகன் பிரசுரம்ன்னு..."

"அப்படியா?.." என்று ஆச்சரியப்பட்டான் ரிஷி. " என்னோட மாமா கூட அந்த பதிப்பகத்லே தான் வேலை செய்றார்."

"அவர் பேர்?" என்று திகைப்புடன் கேட்டாள் ஊர்மிளா.

"சுந்தரவதனன்.." என்றான் ரிஷி.


(இன்னும் வரும்)

















Wednesday, March 7, 2012

பார்வை (பகுதி-32)

"நான் முதல்யே சொன்னபடி எனக்குன்னு இருக்கற குணத்தை நான் அறிவேன். எழுத்தாளன்னு ஆயிட்டதா நீங்க சொல்றீங்களே தவிர, எனக்குள் அந்த உணர்வு இன்னும் வரலே. நீங்க சொல்றபடி அப்படி ஆயிட்டாலும் அதனாலே நீங்க சொல்ற மாதிரி புதுசா எந்த குணமும் எனக்கு வரும்மான்னும் தெரிலே.. எந்தந்த குணம் போகும்னும் தெரிலே. ஆனா நிறைய படிக்க ஆரம்பிச்ச பிறகு எழுத ஆரம்பிச்ச பிறகு முன்னாடி இருந்த பதட்டம்லாம் குறைஞ்சு விஷயங்களைக் கையாள்றதிலே ஒரு அமைதி ஏற்பட்டிருக்குன்னு சொல்லலாம்" என்று ஆரம்பித்தான் ரிஷி.

எழுத்தாளன்னு உணர்வு எனக்கு இன்னும் வர்லேன்னு அவன் சொன்னாலும் அவன் சொல்லத் தொடங்கியதின் தொடக்கமே ஏதோ கதை சொல்கிற மாதிரி இருந்தது. தொடர்ந்து மேலும் ரிஷி சொல்ல ஆரம்பித்ததை ஆர்வத்துடன் கேட்கத் தயாரானாள் ஊர்மிளா.

 "ஆனா  நான் நிறைய எழுத்தாளர்களைச் சந்திச்சிருக்கேன்.  நம்ம எல்லாருக்கும் இருக்கற ஆத்திரம், கோபம், அன்பு, நைச்சியம் அத்தனையும் கொண்டவங்களாத்தான் அவங்களையும் பாத்திருக்கேன். ஒரு நேரத்லே அவங்க எப்படியிருப்பாங்களோ அப்படித்தான் அது மாதிரியான ஒரு நேரம் அவங்க எழுதற கதைலேயும் வர்றத்தேயும் அவங்க இருப்பாங்கன்னு நெனைச்சிப்பேன். அதுனாலே அவங்க கதைகளையெல்லாம் படிச்சா அவங்களைப் படிச்ச மாதிரின்னு நெனைச்சிப்பேன்.

ஆற்றோட்டமாக ரிஷியிடமிருந்து வார்த்தைகள் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன.  "நாளாவட்டத்தில் சில எழுத்தாளர்களுடன் பழக்கம் ஏற்பட்டப்போ அவங்க எழுத்துக்கும் நடைமுறை வாழ்க்கைலே அவங்க நடந்துக்கறத்துக்கும் சம்பந்தம் இல்லாதது மாதிரி தெரிஞ்சது..  தீவிரமா எழுதத் தொடங்கினா நாமும் அப்படி ஆகிப்போவோமோங்கற பயம் என்னைப் பிடிச்சிண்டது.  அதனாலே இன்னும் அவர்களைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன். அதிலேந்து ஒண்ணைத் தெரிஞ்சிண்டேன்.  அவங்கள்லே பல பேர் அகவுலக வாழ்க்கை வேறு புறவுலக வாழ்க்கை வேறுன்னு ஒரு மனிதரே தன்னை ரெண்டாப் பிரிச்சிண்டு வாழறது புரிஞ்சது.  அதாவது என் எழுத்து வேறு, என் வாழ்க்கை வேறுன்னு வாழறது.

கொஞ்சம் நிறுத்தி விட்டு ரிஷி தொடர்ந்தான். "வாழ நேர்ந்த இந்த வாழ்க்கைலே நாம சந்திக்கற பிரச்னைகளும் அவற்றைக் கையாள்றச்சே ஏற்பட்ற அனுபவங்களும் தானே ஒருத்தரை வார்த்து எடுக்கறது?.. ஒரு எழுத்தாளருக்கு அந்த வார்த்தல் தானே எழுத்தா இருக்கணும்?..  இவங்களுக்கு ஏன் அப்படி இல்லைன்னு குழம்பிப் போனேன். ஒருத்தரைக் கேட்டேன்.  'வாழ்க்கை வேறு, எழுத்து வேறு இரண்டையும் போட்டுக் குழப்பிக்கக் கூடாது'ன்னார் அவர்.  அவர் ரொம்பப் பெரியவர்;  புகழ்பெற்ற எழுத்தாளர்.  அதனாலே 'நீங்க வாழறதும் பொய்; எழுதுறதும் பொய்ன்'னு அவர் முகத்துக்கு நேரே என்னாலே சொல்ல முடிலே.. ஆனா அவர் எழுதறது போல அவரே வாழாத போது எந்த அளவுக்கு அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கறதுங்கறதே எனக்குள்ளே கேள்விக் குறியாச்சு.. இந்த நேரத்லேயும் அவர் எழுதின எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்னு மனசிலே நெனைச்சிண்டது தான் அதிசயம்.  மனுஷப் பிறப்பின் உன்னத உணர்வுகளைக் குழைத்து அப்படியான ஒரு எழுத்தை அவர் எழுதினதுனாலே அவர் மேலே ஒரு மரியாதை. அவராலே முடியாம போகட்டும்; ஆனா அவர் எழுதினது மாதிரி நாம வாழ முயற்சிக்கணும்ன்னு ஒரு எண்ணம்.. இப்படியாக என் மனசிலேயும் அவர் வேறு, அவர் எழுத்து வேறுன்னு அவரே ரெண்டா பிரிஞ்சிண்டார்.

மனசிலிருந்து பிய்த்து எடுத்து சொல்கிற மாதிரியான அவனது நேரஷனுக்கு ஏத்த மாதிரியே ரிஷியின் முகபாவமும் மாறித்து. "ஒரு நிகழ்ச்சியைச் சொல்றேன். அப்போ நன்னாப் புரியும் உங்களுக்கு" என்று லேசாக முகம் நிமிர்த்தி எங்கேயோ தன் நினைவுகள் அழுந்திய தோரணையில் மேலும் சொல்லத் தொடங்கினான் ரிஷி. " ஒரு எழுத்தாளரின் எழுத்தை நான் ரொம்பவும் நேசித்தேன். அவர் உருக்கமா எழுதற கதைகளைப் படிச்சு நானும் உருகிடுவேன். டிபன் பாக்ஸ்கள் நிறம்பிய சாப்பாட்டுக் கூடையைத் தூக்கிக் கொண்டு அலுவலங்களில் சாப்பாடு சப்ளை செய்யும் 'டப்பா வாலா' கிழவர் ஒருத்தரைப் பத்தி உருக்கமா ஒரு கதை எழுதியிருந்தார் அவர். வேகாத வெயிலில், சுருக்கம் விழுந்த மேனி, பாளம் பாளமாய் வெடித்த பாதங்களோடு விந்தி விந்தி நடக்கும் அந்த பெரியவரின் சிரமத்தைப் படிக்கறச்சே மனசு கசியும்.

"ஒரு நாளைக்கு அந்தக் கதையை எழுதிய அந்த முதுபெரும் எழுத்தாளரோடு அவர் வீட்டில் பேசிக் கொண்டிருந்து விட்டு வெளியே வந்தேன்.  என்னோடு பேசியபடி அவரும் பக்கத்துக் கடையில் வெற்றிலை வாங்க வெளியே வந்தார். அந்த சமயத்தில் அந்தக் கதையில் வர்ணித்திருந்த கிழவரைப் போன்றே தள்ளாமையுடன் ஒரு கிழவி படபடக்கிற வெயிலில் பழக்கூடையுடன் நிழலுக்காக ஒதுங்கியிருந்தாள்.

"வீட்டுக்கு வெளியே வந்த எழுத்தாளர் அவளிடம் வந்து பத்து ரூபாய்க்கு பழம் கேட்டார்.  'பத்து ரூபாய்க்கு நான் என்னத்தைக் கொடுக்கறது'ன்னு முனகிண்டே அந்தக் கிழவி ஒரு சீப்பு பழத்திலிருந்து ஐந்து பழங்களைப் பிய்த்து அவரிடம் நீட்டிய போது, பத்து ரூபாய்க்கு பத்தாவது தர வேண்டாமான்னு எழுத்தாளர் அவளுடன் பெரிய சண்டைக்கேப் போய்விட்டார்.  கடைசியில் எட்டு பழங்களை வாங்கிக் கொண்டு ஒரு வழியாக அந்தக் கிழவியிடம் பத்து ரூபாயைத் தந்தார் எழுத்தாளர்.

"அந்தக் கிழவியைப் பார்க்க எனக்குப் பாவமா இருந்தது.  எழுத்தாளர் வெற்றிலை வாங்க பக்கத்து கடைக்குப் போன தருணத்தில், பத்து ரூபாயை எடுத்து அவளிடம் நீட்டினேன்.  'அந்த ஐயா அடிச்சுப் பிடிச்சு எட்டு வாங்கிட்டுப் போயிட்டார்; வெலைவாசி இருக்கற லட்சணத்லே ஐஞ்சு தந்தாத்தான் எனக்கு கட்டுப்படி ஆகும், சாமி' என்றாள். 'இல்லை. நீ பழம் எதுவும் தர வேண்டாம். சும்மாத் தான் தர்றேன். உன் நஷ்டத்தை ஈடு கட்டும். வைச்சுக்கோ"ன்னு நான் சொன்னதும் என்னை ஒரு மாதிரி பார்த்தாள்.  அந்தப் பார்வை ரொம்ப அர்த்தம் நெறைஞ்சதா எனக்குப் பட்டது. அந்த ஏழ்மையிலும் குழி விழுந்த அவள் கண்களில் சுடர் விட்ட நியாயம் என்னைச் சுட்டதும் தான் தாமதம், எனக்கு புதுமைப்பித்தனின் 'கவந்தனும் காமனும்' கதை நினைவுக்கு வந்து 'என்னை என்ன பிச்சைக்காரின்னு நெனைச்சிட்டியா'ன்னு அவள் கேட்டுடுவாளோன்னு பயமாயிருந்தது.  அந்த சமயத்லே அப்படி நடக்கும்னு நானே எதிர்பார்க்கலே. சடார்னு அந்தக் கிழவி குச்சி குச்சியா இருந்த தன்னோட இரண்டு கையையும் நீட்டி என் நெற்றிப் பொட்டில் வைத்து திருஷ்டி கழித்தாள். 'யாரு பெத்த பிள்ளையோ, நீ நல்லா இருக்கணும்.  சும்மா காசு வாங்கிக்க எனக்கு மனசு ஒப்பலே, ராஜா! இந்தா, இதை வைச்சிக்க' என்று பத்து ரூபாய்க்கு என்ன உண்டோ, அந்த ஐந்து பழங்களை எடுத்துத் தந்தாள்.

வெற்றிலை வாங்கிக் கொண்டு திரும்பின எழுத்தாளர், என் கையிலிருந்த பழங்களைப் பார்த்து விட்டு, 'எவ்வளவு கொடுத்தீங்க?'ன்னார்.. 'பத்து ரூபாய்' ன்னு நான் சொன்னதும், 'அஞ்சு பழம் கொடுத்திருக்கா, இல்லையா? பத்து ரூபாய்க்கு அஞ்சு பழம்; கிழவி சரியாகத் தான் எங்கிட்டே சொல்லியிருக்கிறாள்' என்றவர், அவர் மனசில் என்ன நெருடித்தோ தெரியலே, சடாரென்று தன் கையில் வைத்திருந்த பழச்சீப்பிலிருந்து மூன்று பழங்களைப் பிய்த்து அந்த கிழவியிடம் நீட்டினார்.  'இந்தா.. நீ எனக்கு அதிகமா கொடுத்த பழம்' என்று அவர் கொடுத்த பழத்தை வாங்கிக் கொள்ள கிழவி மறுத்து விட்டாள்.  'அந்த மூணு பழத்துக்கு என்ன சண்டை போட்டே?.. நீயே வைச்சுக்கோ.  உனக்கு நா தந்ததா இருக்கட்டும்' என்று ஒரு ஆவேசத்தில் கூடையைத் தூக்கிக் கொண்டு போயே போய் விட்டாள்.  எழுத்தாளருக்கு என்னைப் பார்க்கவே முகமில்லை. 'வாங்க..  காபி சாப்பிட்டுப் போகலாம்' என்று என்னை மறுபடியும் வீட்டிற்குள் கூட்டிச் சென்று மனைவியைக் கூப்பிட்டு காபி போடச்சொல்லி எனக்கு கொடுத்து கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தார்.  பாதிப் பேச்சில் எழுந்திருந்து கிழவியிடமிருந்து வாங்கி டேபிளின் மேல் வைத்திருந்த பழங்களில் மூன்றை எடுத்து பக்கத்திலிருந்த பூஜை மாடத்திலிருந்த சுவாமி படத்திற்கு முன் வைத்து விட்டு வந்தார்.  வேறே ஏதோ தீவிர சிந்தனையில் இருக்கிற மாதிரி அவர் நடவடிக்கைகள் இருந்தது.  அப்போத் தான் 'நான் வரேம்மா..' என்று உள் பக்கத்லேந்து ஒரு நடுவயசு அம்மாள் நாங்க உக்காந்து பேசிண்டிருந்த ஹால் பக்கம் வந்தாங்க.  பார்த்தால் வீட்டு வேலைகள் செய்கிற அம்மாள் மாதிரி இருந்தது. அவங்களைப் பார்த்ததும் சடாரென்று எழுந்த எழுத்தாளர், பூஜை மாடத்திலிருந்த அந்த மூன்று பழங்களை எடுத்து, "இந்தா. குழந்தைங்களுக்குக் கொண்டு போய் கொடு.." என்று அவளிடம் தந்தார்.  அப்புறம் தான் இத்தனை நேரம் அவர் பட்டுக்கொண்டிருந்த அவஸ்தைகளிலிருந்து வெளிவந்த மாதிரி அவர் முகபாவம் தெரிந்தது.  அப்புறம் தான் ரொம்ப உற்சாகமாக அவர் பேசுகிற மாதிரி எனக்குப் பட்டது.  நான் கிளம்புகையில், "பாத்தீங்கள்லே! எழுதறதுக்கு கதையெல்லாம் எப்படி வர்றதுங்கறீங்க?..  இப்படித்தான்..' என்று என்னைப் பார்த்து ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்தார்" என்றான் ரிஷி.

"அதானா சமாச்சாரம்?" என்று எதையோ நினைத்து கலகலவென்று சிரித்தான் லஷ்மணன். "எதானா சமாச்சாரம்.  சொல்லிட்டு சிரிங்க" என்றாள் ஊர்மிளா.

"அந்தக் கிழவியை எனக்கும் தெரியும்.  அந்த எழுத்தாளர் வீட்டுக்கு அடுத்தாப்லே இருக்கற பஸ் ஸ்டாப்பில் பழம் விற்றுக் கொண்டிருப்பாளே. அவள் தானே?" என்று ரிஷியைக் கேட்டான் லஷ்மணன்.

"ஆமாம். அவளே தான்" என்றான் ரிஷி.

"நேத்திக்கு அந்த எழுத்தாளரைப் பார்க்கப் போயிருந்தேன்.  ரொம்ப நேரம் பேசிண்டு இருந்தோம்.  நான் கிளம்புகையில், 'லஷ்மணா.. ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கே.. அடிக்கடி வா'ன்னு சொல்லிட்டு, அவரும் என்னுடன் வெளிலே வந்தார். 'உன்னை பஸ் ஏத்திட்டுத் திரும்பறேன். எனக்கும் காலாற நடந்த மாதிரி இருக்கும்' என்று பஸ் ஸ்டாப் வந்தார்.  நாங்க ரெண்டு பேரும் நெருக்கமா பேசிண்டு வர்றதைப் பார்த்த அந்த பழக்காரக் கிழவி அவரையும் என்னையும் மாறி மாறிப் பார்த்துட்டு, என்னைப் பார்த்து 'பழம் எடுக்க அட்வான்ஸ் பணம் இல்லே; இனிமே வியாபாரம் எப்படிச் செய்யப் போறேனோ'ன்னு இவங்க வீட்டு அம்மாகிட்டே சொல்லிக்கிட்டிருந்தேனா?  அதைக் கேட்டிட்டு, 'இந்தா! இந்தப் பணத்தை வைச்சு சமாளி'ன்னு மகராசன், உடனே ஐநூறு ரூபா எடுத்துக் கொடுத்தார்'  என்று சொன்னாள். நான் ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தப்போ, என்னைக் கொஞ்சம் தள்ளிக் கூட்டிண்டு வந்து, 'ஒண்ணுமில்லே, லஷ்மணன்!.  போனவாரம் ஒரு பழக்காரியைப் பத்தி நான் எழுதின கதை படிச்சிருப்பீங்களே.. அதுக்கு வந்த சன்மானம்..  ரொம்ப நாளா இந்தக் கிழவியைத் தெரியும்.  வழக்கமா இவ கிட்டே தான் பழம் வாங்கறது.  அவளுக்கு ஏதாவது உதவி பண்ணனும்னு நினைச்சிண்டிருந்தேன்.  அந்த பத்திரிகைலேந்து ஐநூறு ரூபா வந்ததா, அவளுக்கும் ஒரு நெருக்கடிலே உதவினதா இருகட்டுமேன்னு கொடுத்திட்டேன்.  நமக்கோ ஆயிரத்தெட்டு செலவு இருக்கு..அப்புறம் மனசு மாறிடக் கூடாது பாருங்கோ'ன்னார்" என்று லஷ்மணன் சொன்னது எல்லோரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டது.

"லஷ்மணன்! எந்தப் பத்திரிகைலே இந்தக் கதையைப் படிச்சீங்க.. நான் பாக்கவே இல்லையே!" என்று ஆச்சரியப்பட்டுக் கேட்டான் ரிஷி.


(இன்னும் வரும்)




Sunday, March 4, 2012

பார்வை (பகுதி-31)

"நீங்க பேசிண்டே இருங்க.. இதோ வந்திட்டேன்" என்று உள்பக்கம் போனாள் வித்யா.  கெளதமும் அவள் பின்னாலேயே எழுந்து போனான்.  'ஸ்கூல் விட்டு வரும் குழந்தைக்கு ஏதாவது கொடுக்க வேண்டுமில்லையா; அதற்காகத்தான் வித்யா உள்ளே போகிறாள்' என்று நினைத்து ஊர்மிளா கொஞ்ச நேரம் ரிஷியும், லஷ்மணனும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரமாகியும் வித்யா வராததைப் பார்த்து, எழுந்து அவளும் உள்பக்கம் சென்றாள்.

உள்ளே போனால், கெளதம் டம்ளரில் எதையோ குடித்துக் கொண்டிருக்க வித்யா கேஸ் அடுப்பில் ஏற்றிய வாணலியில் எதையோக் கிளறிக் கொண்டிருந்தாள்.

"என்ன வித்யா.. என்ன செஞ்சிக்கிட்டிருக்கீங்க?" என்று அவள் குரல் கேட்டு திரும்பிப் பார்த்த வித்யா "ஒண்ணுமில்லே.. குழம்பு மாவு உப்புமா.. உங்களுக்குப் பிடிக்கும் இல்லையா?"

"உப்புமானு எடுத்திண்டா அதான் என் பேவரிட்! அது போகட்டும்.. எதற்கு உங்களுக்கு சிரமம்?"

"சிரமம்லாம் ஒண்ணுமில்லே.  டிபன் நேரம். எதானும் சாப்பிடலாமேனுட்டு தான். கெளதம்க்கு போர்ன்விடா கலக்கிக் கொடுத்தேன்.  புளியைக் கரைச்சு, மாவு போட்டு மின்னாடியே பிசைஞ்சு வைச்சிருந்தேன்.  அதான் வாணலியை ஏத்தியாச்சு.. அஞ்சே நிமிஷத்லே ரெடியாயிடும்.."

அவளுக்கு மிக அருகே வந்து, வாணலியைப் பார்த்து "சின்ன சின்ன கோலிக்குண்டு மாதிரி ஜோரா வந்திடுத்தே.. வாசனை வேறே மூக்கைத் துளைக்கிறது.." என்று சப்புக் கொட்டினாள்.

"அடிப்பிடிச்சாக் கூட எனக்கு சரிதான்.  அதுவும் டேஸ்ட்டா இருக்கும்" என்று லேசாக உப்புமாவைக் கிளறினாள் வித்யா. "டிகாஷன் இறக்கி வைச்சிருக்கேன். சாப்பிட்டானதும் காப்பி போட்டுக்கலாம் இல்லையா?" என்றாள்.

"டிபன் சாப்பிட்ட வாய்க்கு சூடா சாப்பிட்டாத்தான் நன்னா இருக்கும்" என்று பக்கத்து ஸ்டாண்டில் இருந்து பீங்கான் தட்டுகளை எடுத்தாள் ஊர்மிளா. "கெளதம்க்கு? அவனும் சாப்பிடுவான்ல்யோ?"

"அவனுக்கு தனியா கிண்ணத்லே கொடுத்திக்கலாம்" என்ற வித்யா, பிளேட்டில் உப்புமாவை பகிர்ந்து போட்டுக் கொண்டே, "அப்புறம் என்ன ஆச்சு?.. பாதிலேயே விட்டுப் போச்சே.. எழுத்தாள குணம்னா என்னனுட்டு சொன்னாங்களா?" என்றாள்.

"நீங்க வரட்டும்னு தான் காத்திருக்கேன்.  போய் வைச்சிக்கலாம் அந்தக் கச்சேரியை" என்ற ஊர்மிளா, "கெளதம், குடிச்சிட்டையா?" என்று கேட்டு அவனிடமிருந்து டம்ளரை வாங்கி ஸிங்க் குழாயில் அலம்பி டிரேயில் வைத்தாள்.  டர்க்கி டவலால் அவன் வாய் துடைத்து விட்டு, "எந்தக் கிளாஸ் படிக்கிறே?" என்றாள்.

"மூணாவது."

"குட்! இப்போ என்ன ஸ்கூல் விட்டு வந்தையா?"

"இல்லே.. குரூப் ஸ்டடி.. சனிக்கிழமை நோ ஸ்கூல்"

அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. மூற்றாவது படிக்கும் சிறுவன் குரூப் ஸ்டடின்னு சொன்னதைக் கேட்டு. நிமிர்ந்து வித்யாவைப் பார்த்தாள்.

"பக்கத்து வீட்டு மாடிலே குரூப் ஸ்டடின்னு ஒரு கூட்டமே கூடும்.  இவங்களை பாத்துக்கறத்துக்குன்னு இந்த ஸ்டோர்லே வீட்டுக்கு ஒருத்தர்ன்னு ஒவ்வொரு வாரமும் போய்டுவோம்.  எனக்கு அடுத்த வாரம். ஒண்ணுலேந்து அஞ்சாவது வகுப்பு வரை தான்.  ஒவ்வொரு வகுப்புக்கும் நாலைஞ்சு பேர் தேறும். அவங்களே கலந்து படிச்சிப்பாங்க.. அவங்க அடிச்சிக்காம கொள்ளாம-- நாம சும்மா மேற்பார்வை தான். ஹாலுக்கு போலாமா?"

"ஓ.." என்ற ஊர்மிளா அவளும் இரண்டு ப்ளேட்டுகளை எடுத்துக் கொண்டாள்.

"தொட்டுக்க மாங்கா தொக்கும், சக்கரையும் எடுத்திக்கறேன். அது போதுமில்லையா?" என்றாள் வித்யா.

"எதேஷ்டம்.." என்று ஹாலுக்கு வந்தாள் ஊர்மிளா.

"நான் அதற்கு கேரண்டி.."என்று எதற்கோ லஷ்மணன், ரிஷிக்கு காரண்டி கொடுத்துக் கொண்டிருந்தான். இவர்கள் வந்ததும் அவர்கள் பேச்சு நின்றது.

"இரண்டு எழுத்தாளர்களும் சேந்தாச்சு.  எதுக்குத் திட்டம் போடுறீங்களோ, தெரிலே!" என்று ஊர்மிளா ஆரம்பித்து வைத்தாள்.

பிளேட்டில் இருப்பதைப் பார்த்து விட்டு, "அடிசக்கை! குழம்பு மாவு உப்புமாவா?" என்றான் ரிஷி.

"இல்லே. அரிசி மாவு உப்புமா.." என்றாள் வித்யா.

"இதானே வேண்டாங்கறது? புளி உப்புமான்னு சொன்னாலும் சரி, எல்லாம்  ஒண்ணு தான்.. எனக்கு தெரியாதா என்ன?" என்றான் ரிஷி.

"சும்மாக்காச்சும்ங்க.. இப்படி ஆக்ரோஷத்தோட ஆரம்பிச்சு வைச்சாத் தானே சுறுசுறுப்பா அந்த மெயின் விஷயத்துக்கு வருவீங்க.."

ஒரு விள்ளல் உப்புமாவை எடுத்து சக்கரையில் தொட்டு வாயில் போட்டுக் கொண்டான் லஷ்மணன். "எந்த மெயின் விஷயத்துக்கு?"

"அதான்.  'எழுத்தாளர் குணம்'ன்னு ரிஷி ஆரம்பிச்சு வைச்சார்ல்யா?.. அதுக்குள்ளே இப்படி மறந்திட்டா எப்படி?"

 "சும்மா சந்தேகத்துக்குக் கேட்டேன். வாசகர் குணம்ன்னு ஊர்மிளா சொன்னாங்களே.. எழுத்தாளர் குணம்ன்னு ஏதாச்சும் இருக்கானுட்டு, கேட்டேன்.  அதுக்காக என்னைப் பிடிச்சிக்கிட்டா எப்படி?" என்று அப்பாவியாய்க் கேட்டான் ரிஷி.

"நீங்களும் எழுத்தாளர் தானே? நீங்களே கேட்டா எப்படிங்கறேன்.."என்றாள் வித்யா.

"இப்போத் தானே ஒரு கதை பிரசுரமாயிருக்கு.  அதுக்குள்ளாற என்னைக் கேட்டா எப்படி?.. ஒரு ஃபுல் ஃபிளெட்ஜ்டு எழுத்தாளர் ஆனதும்.."

"அந்தக் கதை இங்கே வேண்டாம்" என்றாள் அதற்குள் அரைத் தட்டு உப்புமாவை காலி பண்ணியிருந்த ஊர்மிளா.  "இந்த பத்திரிகைகாரங்க முத்திரை குத்தினாத்தான் எழுத்தாளர்ன்னு உண்டா என்ன?.. இந்த ஒரு கதை பிரசுரமாகறத்துக்கு முன்னாடி எத்தனை கதை எழுதியிருப்பீங்க?..  அதையெல்லாம் கணக்கிலே எடுத்துக்க வேண்டாமா?"

"நிறைய எழுதியிருக்கேன். நிறைய பத்திரிகைகளுக்கு அனுப்பியும் இருக்கேன். அத்தனையும் சுவத்லே அடிச்ச பந்து மாதிரி திரும்பி வந்தது தான் மிச்சம்" என்ற ரிஷி தொக்கு பாட்டிலை தன் பக்கம் நகர்த்திக் கொண்டான்.

"எழுத்தாளர்ங்கற அங்கீகாரத்துக்கு அது ஒண்ணு போதும்.  பிரசுரமான ஒத்தைக் கதையே ஓகோன்னு அமைஞ்சு போச்சு. இனி பிரசுரமாகப் போறதுக்கெல்லாம் இதான் அச்சாரம்..  இப்போ சொல்லுங்க." என்றாள் ஊர்மிளா விடாமல்.

"அதெப்படி அத்தனை நிச்சயமா சொல்றீங்க, இனி அனுப்பறதெல்லாம் பிரசுரமாகும்னு?.."

"அதான் பத்திரிகை குணமே.." என்று சொன்ன ஊர்மிளா சிரித்தே விட்டாள்.

"போச்சுடா.. பத்திரிகை குணம்னும் ஒண்ணு இருக்கா?" என்று வியந்தாள் வித்யா..

"அதை அப்புறம் வைச்சிக்கலாம்.  இப்போ முதல்லே எழுத்தாளர் குணம். அதை மிஸ்டர் ரிஷி ஆரம்பிச்சு வைப்பார்.." என்று உரத்த குரலில் அறிவித்தாள் ஊர்மிளா.


(இன்னும் வரும்)






























Related Posts with Thumbnails