மின் நூல்

Monday, April 30, 2012

பார்வை (பகுதி-43)

ர்மிளாவிற்கு சந்தோஷம் பிடிபடவில்லை. "சொல்லு, வேணி! மாப்பிள்ளை வீட்டுக்காரங்கள்லாம் வந்திட்டுப் போயிட்டாங்களா?" என்றாள்.

"அதுக்குத்தாங்க அக்கா கூப்பிட்டேன்.  அவங்கள்லாம் வர்றப் போறாங்கங்கறது உங்களுக்கு தெரியுமா?"

"தெரியும்.  ஜோதி சொன்னா.. என்னாச்சு?.."

"அக்காவை அவங்களுக்கெல்லாம் பிடிச்ச மாதிரி தான் தெரியுது, அக்கா!  ஆனா எது ஒண்ணும் நிச்சயமா சொல்லாம போயிருக்காங்க.. அவங்களுக்கு ஊர் வேலூராம். மெட்ராஸ்லே பொண்ணு எடுத்தா, கல்யாணம் கட்டிக்கிட்டு மெட்ராஸ்லேயே தான் வேலை பாத்துக்கலாம்ன்னு கட்டிக்கப் போறவர் நெனைக்கறாராம்.  அதுலே அவங்க கண்டிஷனா இருக்காங்க-- மெட்ராஸிலே வேலை கிடைச்சதுக்கு அப்புறம் தான் கல்யாணம்ங்கறதிலே.  பொண்ணு பாக்க வந்தவங்க மெட்ராஸ் வேலையைப் பத்தியே பேசிகிட்டு இருக்காங்க.. அவங்க பேசறதைப் பாத்தா, நாம முயற்சி எடுத்து இங்கே ஒரு வேலையை வாங்கித் தரணும்ங்கற மாதிரியும் இருக்கு.  அவருக்கு இங்கே ஒரு வேலை கிடைச்சிருச்சுன்னா அக்கா கல்யாணம் முடிஞ்சிட்ட மாதிரி தான். ஆனா, நீங்களே சொல்லுங்க அக்கா, வேலை கிடைக்கறதுங்கறது அவ்வளவு ஈஸியாவா இருக்கு? "

"அதெல்லாம் சரி, வேணி!..அவர் இப்போ அங்கே என்ன வேலைலே இருக்கார்?"

"ப்ரஸ்லே அக்கா.  ஆறு வருஷ சர்வீஸாம்.  பிரிண்ட்டிங் வேலைலாம் அல்லாம் தெரியுமாம்."

"அப்போ கவலையை விடு.  நம்ம பதிப்பகத்திலேயே பாத்துக்கலாம்.  எதுக்கும் பெரியவர்கிட்டே சொல்லி வைக்கிறேன்" என்று தன்னாலே ஊர்மிளாவிடமிரு ந்து வார்த்தைகள் வெளிப்பட்டன.

"அப்படியாக்கா?.. அது கூட முடியுமாக்கா?.. இது கூட என் புத்திலே படலேயே!இப்போத் தான் தெரியுது.. நான் பதிப்பகத்திலே வேலை செய்யறது தெரிஞ்சு தான் எங்க வீட்லே பொண் பாக்கவே வந்திருப்பாங்களோ?"

"ரொம்ப போட்டுக் குழப்பிக்காதே..  முயற்சிக்கலாம்.  கிடைச்சா சரி, இல்லேன்னாலும் சரின்னு இந்த மாதிரி விஷயங்கள்லே போக வேண்டியது தான்.  இங்கே வேலை இல்லேனா, எங்க வீட்டுக்காரர்கிட்டேயும் சொல்லி வைக்கிறேன்.  பாக்கலாம்.  எல்லா பிரச்னைக்கும் அந்த பிரச்னை அடிப்படையிலேயே ஒரு தீர்வு இருக்கும். எப்படிப் போனா சரியா இருக்கும்ன்னு பாக்கலாம்.  சரியா?.."

"சரிக்கா..  ரொம்ப தேங்க்ஸ்க்கா.  அம்மாக்கு இப்போ இந்தக் கவலை தான்.  அம்மாகிட்டே சொல்றேன்."

"இப்போ அவங்க கிட்டே சொல்ல வேண்டாம்.  வேலை நிச்சயம்ன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் சொல்லிக்கலாம்.  நீ எத்தனை நாள் லீவு?.."

"லீவு இன்னிக்கு மட்டும் தான் அக்கா.   திங்கட்கிழமை வேலைக்கு வந்திடுவேன்."

"எங்கிருந்து பேசறே?"

"வீட்டுப் பக்கத்லே ஒரு போன் பூத் இருக்கு.  அங்கேயிருந்து அக்கா.."

"பூத்லேந்தினா?.. ரொம்ப நேரம் விவரமா பேசமுடியாது.. சனி, ஞாயிறு போகட்டும்.  திங்கட்கிழமை வந்திடுவேல்யோ?..  நேரே பேசிக்கலாம். சரியா?"

"சரிக்கா..." என்று வேணி சொன்னதில் தெரிந்த நம்பிக்கையை ஊர்மிளா உணர்ந்தாள்.

கிருஷ்ணவேணியின் அக்கா லஷ்மியை பெண் பார்க்க வருகிறார்கள் என்கிற விஷயம் ஜோதியின் மூலம் இன்று காலைதான் அவளுக்கேத் தெரியும். மதியம் தான் ஆகியிருக்கிறது.  அதற்குள் அந்தக் கல்யாணம் நடக்க வேண்டியதற்கான முக்கிய பொறுப்பொன்றை தான் ஏற்றுக்கொள்ள வேண்டியதாக இருக்கும் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை. ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்க்க அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.  ஒரு மாசத்திற்கு முன்னால் இப்படி நடக்கும் என்று தெரியாது. ரிஷிக்கு லஷ்மணனுடான அறிமுகம், இன்று ரிஷி 'காதல் தேசம்'ன்னு தொடர்கதையை பத்திரிகைலே எழுதுகிற அளவுக்கு கொண்டு வந்து விட்டிருக்கு. இடையிலே புதுப்புது அறிமுகங்கள். ஒன்றைத் தொட்டு ஒன்று என்று வாழ்க்கையின் இந்த 'நெட் ஒர்க்'கை நினைத்துப் பார்க்க பார்க்க அவளுக்கு வியப்பாக இருந்தது. 'எனக்கு இந்தக் குழந்தைக்கு தலைவாரி, நெத்திக்குப் பொட்டு இட்டு, பூச்சூட்டி ஸ்கூலுக்கு அனுப்பனும்ன்னு குடுத்து வைச்சிருக்குன்னா'ன்னு அம்மாவை எல்லாம் தயார்படுத்தி ஸ்கூலுக்கு அனுப்பறச்சே தாத்தாகிட்டே பாட்டி சொல்வாளாம். ஊர்மிளாவுக்கு எல்லாம் அவள் அம்மா சொல்லித் தெரிந்தது.  'பாட்டி சொன்னது கரெக்ட்! குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்பற பாக்கியம் இன்னும் கிடைக்கலேனாலும், பாட்டி சொன்ன மாதிரி நாம செய்யறதுக்குக் கொடுத்து வைச்சிருக்கற மாதிரி தான் ஒவ்வொண்ணையும் பாக்கறச்சே தோண்றது' என்று நினைத்துக் கொண்டாள்.

ஊர்மிளா பெரியவளாகி காலேஜ் போகறத்தே கூட 'இப்படி பாட்டி சொல்லுவா, இந்த நேரத்திலே பாட்டி இப்படி நடந்துப்பா'ன்னு அவள் அம்மா, பாட்டியைப் பத்தி நிறையச் சொல்லியிருக்கா.  தன்னோட அம்மாவைப் பத்தி தன்னோட பொண்ணு கிட்டே எது ஒண்ணு சொல்றத்தேயும் அம்மா முகத்திலே அலாதியா ஒரு களை வந்து உக்காந்துக்கும்.  அதைப் பாத்து பாத்து மனசிலே அம்மாவோட அந்த செளந்தர்யம் அப்படியே படிஞ்சு போயிடுத்து.  பாட்டியைப் பத்தி நெனைச்சாலே அம்மாவோட அந்த முக தரிசனமும் கூடவே ஞாபகத்துக்கு வரும்.  'உன்னோட அம்மாவைப் பத்தியே சொன்னா எப்படின்னு இவ தான், அப்பாவோட அம்மாவைப் பத்தி ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறையே'ன்னு ஒருநாள் கேட்டதுக்கு 'நான் வாக்கப்பட்டக் கதையைக் கேக்கறையா'ன்னா..  'நான் செஞ்சு போட்டாத்தான் என் பிள்ளைக்குப் பிடிக்கும்'ன்னு தன்னோட கடைசி காலம் வரை என்னை சமையல் அறைக்குள்ளேயே நுழைய விடலை, உன்னோட இந்தப் பாட்டி..  நல்ல வேளை, அடுக்களை பத்தி அத்தனையையும் என் அம்மாகிட்டேயே தெரிஞ்சிண்டேனோ, பிழைச்சேனோ!' என்றாள்.

ஊர்மிளாவுக்கு அப்பாவைப் பெத்த அம்மா பற்றி அதிகம் தெரியாது.  வீட்டு ஹாலுக்கு உள்ளடங்கி முன் ரூம் ஒண்ணு உண்டு.  அதிலே அப்பாவோட பொருள்கள் தான் நிறைய அடைஞ்சு கிடக்கும்.  அப்பா டிரஸ் இருக்கற டிரங்க் பெட்டி, கேஷ் அலமாரி, சட்டை- பேண்ட் மாட்டியிருக்கற கோட் ஸ்டாண்ட், அப்பாவோட வாட்ச், ஆபீஸ் பைல்ன்னு எல்லாம் அப்பாவோடதா தான் இருக்கும்.  அந்த ரூம்லே இந்தப் பாட்டியோட சின்ன புகைப்படம் ஒண்ணு சுவத்திலே ஆணி அடிச்சு மாட்டியிருக்கும்.   ஆபிஸுக்குப் போறத்துக்கு முன்னாடி அப்பா இந்த ரூமுக்கு வந்து போட்டோ முன்னாடி தியானம் பண்ற மாதிரி கொஞ்ச நேரம் நின்னு கும்பிட்டுட்டுப் போவார்.  ஊர்மிளாவுக்கு இந்தப் பாட்டியைப் போட்டோலே பாக்கறச்சேயே பாவமா இருக்கும்.  நார்மடிப் புடவை முட்டாக்கு போட்டுண்டு, நெத்திலே வீபூதிக் கீத்தோட சாந்தமான மூஞ்சி.  இந்தப் பாட்டியைப் பத்தி எனக்குச் சொல்றவாளே யாருமில்லையான்னு துக்கம் தொண்டையை அடைக்கும்.  அடக்க முடியாம ஒரு நாளைக்கு அப்பாகிட்டேயே அதைக் கேட்டுட்டாள்.

அவள் கேட்டதும் அப்பாவுக்கு ஏனோ திடுக்குன்னது.   தொண்டை கமறி, தழைஞ்ச குரல்லே, "அந்தப் பாட்டி ஒரு தெய்வம்மா.."ன்னு சொன்னப்போ அவர் கண் கலங்கித்து.  "உன்னோட அம்மா தானேப்பா..  அந்தப் பாட்டியைப் பத்தி ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறையே!" என்றாள். "என்னோட அம்மாவை நெனைச்சாலே எனக்கு அதாம்மா ஞாபகம் வர்றது.."ன்னு கம்பிச் சார்பு போட்டிருந்த ரேழி முத்தத்திலே விழுந்த நிழலைப் பாத்திண்டே அப்பா சொன்னார். "உன்னோட தாத்தா -அதான் என்னோட அப்பா- ரொம்ப முன் கோபக்காரர். எப்பப்பாத்தாலும் தாம்தூம்ன்னு குதிச்சிண்டே இருப்பார்; மூஞ்சிலே செவசெவன்னு ஒரு ரெளத்திரம் பூசி மெழுகியிருக்கும். வீட்லே இருந்தார்ன்னா அதிகாரம் தூள் பறக்கும். அப்பாவைப் பாத்தாலே பயம்; நான் பெட்டிப் பாம்பா அடங்கிடுவேன்.  காதைப் பிடிச்சுத் திருகினார்ன்னா செவந்து போய் ரெண்டு நாளைக்கு வலிக்கும்.  பாத்தா அப்பா மாதிரியே இருக்காது; ஏதோ ராட்சஷன் நிக்கற மாதிரி..

"ஒரு நாளைக்கு என்ன நடந்தது தெரியுமா?..  அன்னிக்கு ஸ்கூலுக்கு லீவு.  பக்கத்து வீட்டு வாசல் திண்ணைலே கேரம் ஆடிட்டு ரொம்ப நேரமாச்சேன்னு அப்பாக்கு பயந்திண்டே வீட்டுக்குள்ளே நுழையறேன்.  அப்பா குரல் கர்ண கடூரமா சமைக்கற உள்ளுலே கேக்கறது.  பதுங்கிண்டே அந்தப் பக்கம் போனேன். "என்னடி சாதம் வடிச்சிருக்கே?.."ன்னு அம்மாகிட்டே உருமிண்டு இருக்கார். அம்மா சப்த நாடியும் ஒடுங்கி நிக்கறா. சடார்ன்னு இலை முன்னாடி உக்காந்திருந்தவர் எழுந்து நிக்கறார்.  அம்மாவை அடிச்சிடுவாரோன்னு எனக்கு பயம்.  பாவம், அம்மான்னு நெனைசிண்டிருக்கறச்சேயே, "பாத்து வடிச்சிருந்தா, இப்படியா குழைஞ்சு போயிருக்கும்"ன்னு அப்படியே நின்ன வாக்கிலேயே சாதத்து வெங்கலப் பானையை எட்டி உதைக்கறார்.  சிப்பல் தட்டோட உருண்டு போன வெங்கலப் பானை.. சிந்திச் சிதறின சாதம்..  பயந்து போன அம்மா.. ராட்சஷனாய் நின்ன அப்பா.. எல்லாம் அப்படியே மனசிலே பதிஞ்சு போயிடுத்து..  பாவம், அம்மா.. கணுக்கால் பக்கம் வெந்து போய் ஒரு வாரம் கால்லே தேங்காய் எண்ணையைத் தடவிண்டு விசிறிண்டு இருந்தா.. அம்மாவை பாக்கறச்சேலாம் எனக்கு நெஞ்சு அடைச்சிக்கும்.. ரொம்ப வலிக்கறதாமான்னேன்.  என் தலையைக் கோதிண்டே "இல்லேடா.."ன்னா.  அது எனக்காகத்தான் சொல்றான்னு தெரியும். இதான் என்னோட அம்மா!  ஊர்மிளா,, இப்போ சொல்லு.. உன் பாட்டியைப் பத்தி என்னத்தைச் சொல்றது?.."ன்னு அப்பா எப்பவோ சொன்னதை இப்போ நினைத்துப் பார்க்கறத்தேயும் ஊர்மிளாவின் கண்கள் கலங்கின.

அடுத்த வாரமாவது லஷ்மணனைக் கூட்டிக் கொண்டு பெற்றவர்களைப் பார்த்து விட்டு வரவேண்டுமென்று ஊர்மிளா நினைத்துக் கொண்டாள். அவர்களும் ரொம்ப தூரத்தில் இல்லை; பக்கத்து திருவான்மியூரில் தான்.  திருவான்மியூர் வீட்டிலே அதே ரூமிலே அதே இடத்திலே பாட்டி படம் மாட்டியிருக்கிறது.  இப்பவும் ஊர்மிளா அங்கே போனாளானால், முதலில் அந்த ரூமுக்குப் போய் பாட்டி போட்டோவைப் பார்த்தபடி கொஞ்ச நேரம் நின்று கொண்டிருப்பாள்.  சாந்தமான அந்த முகம் அவள் நெஞ்சில் படிந்து அவளை ஆசிர்வதிப்பது போல இருக்கும்.  அந்த உணர்வோடேயே ஹாலுக்கு வந்து அப்பா-அம்மாவை நிறுத்தி வைத்து நமஸ்கரிப்பாள்.

ஊர்மிளாவுக்கு அவளோடேயே ஊறிப்போன ஒரு பழக்கம் உண்டு.  எந்த வேலையையும் கை பாட்டுக்க செய்து கொண்டிருக்கும் மனம் பாட்டுக்க வேறொண்ணை நினைத்துக் கொண்டிருக்கும்.  இரண்டுக்கும் சம்பந்தம் இருக்காது.  இது பாட்டுக்க தனி; அது பாட்டுக்க தனிங்கற மாதிரி மனசிலேயே ரெட்டை பாட்டை போட்டு வைத்துக் கொண்டு வேலை நடக்கும்.  சொல்லப் போனால் இந்த இன்னொரு சிந்திப்பு இல்லை என்றால் மெயின் வேலை தடுமாறும்.   அந்த தடுமாற்றத்தைப் போக்கவே எப்படியானும் இந்த இன்னொரு நினைப்பு வந்து சேர்ந்து கொண்டு தனக்கென்று தனிப்பாதை போட்டுக் கொண்டு பயணிக்கும்..

என்றைக்கும் மாதிரி இன்றைக்கும் அலுவலகப் பணி ரெக்கை கட்டிப் பறந்து கொண்டிருந்தது. 'எம்.வி. வெங்கட்ராமின் வாழ்வும் எழுத்தும்' என்று பதிப்புக்காக காத்திருந்த கையெழுத்துப் பிரதியை படிக்க படிக்க ஊர்மிளாவுக்கு மனம் கசிந்தது..  'மணிக்கொடி' எழுத்தாளரான எம்.வி.வெங்கட்ராம், ஜரிகைத் தொழிலில் சம்பாதித்த காசையெல்லாம் முடக்கி 'தேனி' என்கிற பத்திரிகையை அச்சிட்டு வெளியிட பட்டபாட்டிற்கு இடையே தொழிலும் நலிவடைந்து, சொத்துக்களையும் விற்ற உண்மைக்கதை பரிதாபமாக இருந்தது. கிட்டத்தட்ட இருபது வருடங்கள் தனது காதுகளில் ஒரு வினோத ஒலி கேட்க அவஸ்தைப்பட்டவர், தனக்கேற்ப்பட்ட உணர்வுகளை 'காதுகள்' என்கிற நாவலாய் உருவாக்கிய சரிதம் மனம் பதைபதைப்பதாய் இருந்தது.  தி.ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, கு.ப.ரா. போன்றோருடன் எம்.வி.வி. கொண்டிருந்த நட்பு கும்பகோணத்துச் சூழலில் வர்ணிக்கப்பட்டிருந்தது அற்புதமாக இருந்தது.  தி.ஜானகிராமனின் மறைவின் பொழுது 'யாத்ரா' இதழில், 'ஜானகிராமனுக்காக ஒரு கதை' என்று எம்.வி.வி. எழுதியிருந்த கட்டுரையும் சேர்க்கப்பட்டிருந்தது.  அதைப் படித்த பொழுது ஊர்மிளாவின் கண்கள் கலங்கிவிட்டன.  எப்படிப்பட்ட எழுத்தாளர்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுதே மனம் மருகிப் போனது. பக்கம் பக்கமாக படித்துக் கொண்டே வருகையில் அச்சுக்குப் போவதற்கு முன்,  முன் பின்னாக இருந்த சில செய்திகளை கோர்வை படுத்த வேண்டுமென்று ஊர்மிளாவுக்குத் தோன்றியது. அப்படிப்பட்ட இடங்களில் வாசிக்கும் பொழுதே சிவப்பு பென்ஸிலால் அடையாளத்திற்காக கோடு போட்டு வைத்திருந்தாள்.  அதையெல்லாம் அந்த அந்த நிகழ்வின் ஆண்டு வாரியாக வரிசைப்படுத்தி கணினியில் குறிப்பெடுக்க ஊர்மிளா ஆயத்தமான பொழுது கேபின் போன் கணகணத்தது.

"ஹலோ..." என்றாள்.

"நான் தான் அக்கா..."

"சொல்லு, வேணி...  எச்.ஆர். சுந்தரி சொந்த வேலையா வெளிலே போயிருக்கா. பர்மிஷனாம்.  முதல்லே பிரிண்டிங் ஆபிஸ்ல்லே காலி இடம் இருக்கான்னு தெரிஞ்சிக்கலாம். அதுக்குத் தான் சுந்தரி. இருந்ததுன்னா சின்னவர் கிட்டேயே மேட்டரைக் கொண்டு போகலாம்ன்னு இருக்கேன்."

"அதுக்கு தாங்க அக்கா கூப்பிட்டேன்."

"சொல்லு. என்ன விஷயம்?"

"இப்போ பாத்தா எங்கக்கா இந்த இடம் வேணாங்குது. அதான்."

 "ஏனாம்?"

"எல்லாம் ஒரே குழப்பமா இருக்கு, அக்கா... கடனை உடனை வாங்கி நான் இருக்கறச்சேயே ஒங்கல்யாணத்தை முடிச்சிடலாம்ன்னா, ஏண்டி உன் புத்தி இப்படிப் போர்றதுன்னு அம்மா அக்காவைக் கோவிச்சிக்குது."

"உங்கக்கா என்ன சொல்றா?"

"என்னத்தைச் சொல்லுதோ?.. அது சொல்றது யாருக்குப் புரியிது?.. 'இந்த இடம் வேணாம்ன்னு என் மனசுக்குத் தெரியுது. அதுனாலே வேணாம்'ங்கறது. என்ன மனசோ?.. யாருக்குத் தெரியுது?..  அதுவே வேணாங்கும் போது, நாம என்னத்தை அக்கா செய்யுறது?  அதான் அம்மாக்கு வருத்தம்."

"அப்போ அந்தாளு வேலை விஷயமா ஒண்ணும் முயற்சிக்க வேணாம்ங்கறே? அதுக்குத் தான் போன் பண்ணினியா?"

"ஆமாக்கா.  ரெண்டு நாள் போகட்டும்.  நா திங்கட்கிழமை ஆபிஸூக்கு வருவேன்லே.. அப்போ நேர்லே சொல்றேங்க்கா.. உங்களுக்குத் தான் சிரமம் கொடுத்திட்டேன். ஸாரிக்கா."

"இதுக்கெல்லாம் எதுக்கு ஸாரி, வேணி?.. உங்கக்கா சொல்றதிலே ஏதானும் காரணம் இருக்கும்.. அதைச் சொல்லி உங்கம்மாவை கோபிக்காம இருக்கச் சொல்லு.. மத்ததை நேர்லே பேசிக்கலாம்.சரியா? வைச்சிடட்டுமா?"

"சரிக்கா.."


(இன்னும் வரும்)


Tuesday, April 24, 2012

பார்வை (பகுதி-42)

லுவலகத்திற்குள் நுழையும் பொழுதே இன்றைய காலை வருகையைப் பகிர்ந்து கொள்வதற்கு கிருஷ்ணவேணி இல்லாதது ஊர்மிளாவிற்கு என்னவோ போலிருந்தது.  நுழைவாயில் முன்பக்கம் இல்லையென்றால் இன்னும் அலுவலகத்திற்கு வேணி வரவில்லை என்று அர்த்தம். 'என்ன காரணமோ தெரியலையே, ஏதானும் உடம்பு சரியில்லையோ, என்னவோ' என்று ஊர்மிளாவுக்கு கவலையாக இருந்தது.

கைப்பையை லாக்கரில் வைத்து விட்டு வாஷ் பேஸின் பக்கம் வரும் பொழுது, பார்ஸல் செக்ஷன் ஜோதி தட்டுப்பட்டாள்.  வேணி குடியிருக்கும் பகுதியில் தான் ஜோதியும் இருக்கிறாள்.  அலுவலகம் முடிந்து போகையில் தினமும் பஸ்ஸூக்காக ஜோதியுடன் தான் வேணி சேர்ந்து போவாள்.  இதை பலதடவை ஊர்மிளா பார்த்திருப்பதால் "ஜோதி! வேணி இன்னும் வரலையா?" என்று கேட்டாள்.

"அது தெரியாதா, அக்கா?" என்று ஜோதி ஆரம்பித்தாள். ஊர்மிளாவும் அவள் என்ன சொல்லப் போகிறாளோ என்கிற கவலையில் கலவரமானாள்.

"வேணிக்கு ஒரு அக்கா இருக்கில்லையா?  லச்சுமின்னு பேரு. அதை பொண் பாக்க வர்றாங்க.. அதான் வேணியும் லீவு போட்டிருச்சு.."

"காலைலே நல்ல சமாச்சாரம் தான் சொல்றே.." என்று ஊர்மிளா லேசாகச் சிரித்து தன் மகிழ்ச்சியைக் காட்டிக் கொண்டாள்.

"லச்சுமி நம்ம வேணியை விட லட்சணமா இருக்கும்க்கா.  இதை விட அது நல்ல டிரஸ்ஸெல்லாம் போட்டுக்கும். பாக்க வர்ற பையனுக்கு லக்கு தான்.  கொத்திக்கிட்டு போய்டுவான்லே!"

ஜோதி சொன்ன இந்த விஷயம் ஊர்மிளாவுக்கு இன்னும் கொஞ்ச நிம்மதியைக் கொடுத்தது.  சாதாரணமா சினிமாக்கள்லேலாம் வர்ற மாதிரி அக்காவை விட தங்கை அழகாயிருக்க, அக்காவைப் பெண் பார்க்க வருகிறவர்கள் பார்வை தங்கை மேல் என்று அக்கா திருமணம் தள்ளிப் போர்ற கதையா இருக்காம...

அவள் தன் கேபினுக்குள் போய் உட்காருவதற்கும் சுந்தரவதனன் அந்தப் பக்கம் வருவதற்கும் சரியாக இருந்தது. வழக்கமாக வேகமாகத் தான் அவர் நடப்பார் என்றாலும் இன்றைய நடை வேகம் அவர் வேகமாக வந்தது அவளைத் தேடித் தான் என்பது போலிருந்தது.

"உக்காருங்க, ஸார்.." என்று எழுந்திருந்து பின்னால் கிடந்த நாற்காலியை கொஞ்சம் முன்னால் இழுத்துப் போட்டாள்.

"தலைக்கு மேலே வேலை கிடக்கு.. உக்காரக்கூட நேரமில்லை" என்று சொல்லிக்கொண்டே உட்கார்ந்தார். "ரொம்ப தேங்க்ஸ், ஊர்மிளா.. நான் என் நன்றியைச் சொன்னேன்னு லஷ்மணன் கிட்டே சொல்லு.." என்றவர் கண் கண்ணாடியை எடுத்து துடைத்துப் போட்டுக் கொண்டார்.

"ரிஷி சொன்னான்.  அவனைப் பாக்க நீங்க மாம்பலத்துக்கும், உங்களைப் பாக்க அவா ரெண்டு பேரும் அடையாறுக்கும் வந்திட்டுப் போனாங்களாமே!   லஷ்மணன் செஞ்ச உதவி தான் கரெக்ட்! புஸ்தகமெல்லாம் போடறதை விட இது தெளஸண்ட் டைம்ஸ் பெட்டர்! கைதூக்கி விட்டுட்டீங்க.. இனிமே அவன் தான் பாத்துக்கணும். வால் போஸ்டர்ல்லாம் பாத்து மனசெல்லாம் நெறம்பி வழிஞ்சது..  இந்த அதிர்ஷ்டம் யாருக்குக் கிடைக்கும்ன்னு சொல்லு.  ரொம்ப தேங்க்ஸ்மா.." என்று சொல்லிக் கொண்டே வந்தவர் குரல் தழுதழுத்தது.

சுந்தரவதனன் அப்பொழுதிருந்த நிலையில் அவரது நெகிழ்ச்சி அவருக்குள்ளேயே கரைந்து போகட்டும் என்கிற எண்ணத்தில் அவர் சொல்லவந்ததைச் சொல்லட்டும் என்று ஊர்மிளா பேசாமலிருந்தாள்.

'தலைக்கு மேலே வேலை கிடப்பதை' மறுபடியும் ஞாபகப்படுத்திக் கொண்டு சுந்தரவதனன் தொடர்ந்தார். "என் கூடப்பிறந்தவா நாலு பேர். அதிலே ரிஷி அம்மா தான் ஒரே ஒரு பெண் குழந்தை.  எங்களுக்கெல்லாம் ஒரே தங்கைங்கறதாலே எங்க நாலு பேருக்கும் அவள் மேலே அப்படி ஒரு ஒட்டுதல்.  அப்பா போயிட்ட பின்னாடி நாலு பேரும் சேந்து ஜாம்ஜாம்ன்னு அவ கல்யாணத்தை நடத்தி வைச்சோம்.  அவளுக்கு ரிஷி தான் தலைச்சன். அவா என்னவோ நிகமாந்தகன், வேதாந்தம்ன்னு நிறைய பேரை சஜஸ்ட் பண்ணினா..  கடைசிலே நான் வைச்ச ரிஷிங்கற பேர் தான் கூப்பிடற பேரா ஆச்சு..  நான் வைச்சேன்னு ஒசத்திக்காகச் சொல்லலே.  பேர்ன்னா எப்பவும் சின்னதா இருக்கணும். அதான் பல நேரத்லே செளகர்யம்.  ரிஷிக்கு அடுத்தவ தான் ஹேமா. அதுவும் நான் வைச்ச பேர் தான்.  இப்போ செளகரியமா நியூஜெர்ஸிலே இருக்கா.  ஒரே குழந்தை.  பெண் குழந்தை. 'மாமா, நீங்க தான் ஹேமா குழந்தைக்கு நன்னா ஒரு பேரு செலக்ட் பண்ணிக் கொடுக்கணும்'ன்னான் ரிஷி. ஸ்ரீதேவின்னு வைடான்னேன்.  இன்னிக்கு அதுக்கு நாலு வயசாகறது. அவ்வளவு தூரம் போவானேன்?.. ரிஷி பையனுக்கு பாரு, அவாளே கெளதம்ன்னு ஷார்ட்டா வைச்சுட்டா."

"அதுமட்டுமில்லே.  ரிஷி கூட தன்னோட புனைப்பெயரை விஜின்னு ஷார்ட்டாத் தானே வைச்சிண்டிருக்கார்."

"கரெக்ட். ஆனா,  இப்போலாம் ரொம்பப் பேர் தன்னோட பேரோட ஊர் பேரையும் சேத்து வைச்சுக்கறா.  உலகமே குறுகிப் போயிருக்கறச்சே, குட்டியூண்டு ஊர் பேர் பெரிசாப் போயிடுத்துப் பாருன்னு நெனைச்சிப்பேன். ஜலகண்டாபுரம் சந்திரமெளலீஸ்வரன் நாராயணஸ்வாமிங்கற தன்னோட பேரை பாங்க் அப்ளிகேஷன் கட்டத்துக்குள்ளே போட்டு ரொப்பறத்துக்குள்ளே ஒருத்தர் பட்ட சிரமம் ஞாபகத்துக்கு வர்றது..  ஜே.ஸிங்கறது இன்ஷியல். நாராயண ஸ்வாமி தான் அவரோட பேர்.  நாரா.. வரை வந்தவுடனேயே கட்டம் முடிஞ்சி போயிடுத்து..  ரொம்ப நெருக்கமா வேறே அந்தக் கட்டங்களைப் பிரிண்ட் பண்ணியிருந்தாங்களா?    'நாரா..'க்குத் தொடர்ச்சியா கீழே கூட எழுத இடமில்லாம இருந்தது.   என்ன செய்வார் பாவம்! கடைசிலே என்ன செஞ்சார்ன்னா.." என்றவர், ஒருதடவை அவர் காபின் இருந்த திசைப்பக்கம் பார்த்து விட்டு, "இருக்கற வேலைக்கு இன்னும் ரெண்டு மணி ஆபீஸ் நேரம் கூட இருந்தால் தேவலைன்னு தோண்றது..  எதுக்கு வந்தேனோ அதைச் சொல்லாம என்னன்னவோ சொல்லிண்டிருக்கேன் பாரு" என்று கண் கண்ணாடியைக் கழட்டி பஞ்சக்கச்ச நுனியெடுத்துத் துடைத்து போட்டுக் கொண்டார்.  "எல்.ஐ.சி.லே தான் ரிஷி வேலை செய்யறான். அது உனக்குத் தெரியுமோல்யோ?..  குடும்பத்தை செளகரியமா பாத்துக்கறதுக்கு நல்ல வேலை அவனுக்கு அமைஞ்சிருக்கிருக்குங்கறது வாஸ்தவம் தான்.  என்ன மாதிரி ஆளுங்களுக்கு வயத்துப் பாட்டுக்கு செய்யற வேலையே பிடிச்சுப் போய்ட்டது.  எல்லாருக்கும் அந்த மாதிரியே இருக்கும்ன்னு சொல்ல முடியாது, இல்லையா?.. வாழ்க்கைன்னா செய்ற வேலையோட எல்லாம் போய்டறதா, என்ன? மனசுக்கு பிடிச்சதுன்னு ஒண்ணு இருக்கும் இல்லையா?  அப்படித்தான் சின்ன வயசிலிருந்தே அவனுக்கு கதைப் புஸ்தகமெல்லாம் படிக்கறது, எழுதறங்கறதிலே ஒரு ஈடுபாடு!  எப்பவும் ஏதாவது கிறுக்கிண்டே இருப்பான்.  அவனுக்கு மனசுக்குப் பிடிச்சதிலே ஷைன் ஆறதுன்னும் ஒண்ணு இருக்கில்லையோ! எத்தனை பேருக்கு இதெல்லாம் கைக்கெட்டறது?.. உங்க புண்ணியத்லே அந்த பாக்கியம் அவனுக்குக் கிடைச்சிருக்கு. வளந்திட்டானே தவிர சூது வாது தெரியாது. லஷ்மணன் சார் கிட்டே சொல்லு.  அவர் அனுபவப்பட்டவர். இந்தத் தொழில்லே இருக்கற தப்பு ரைட்டைச் சொல்லி அவர் தான் அவனுக்கு வழிகாட்டணும்.. நான் சொன்னேன்னு சொல்றையா, குழந்தை?" என்றார்.

'இந்தத் தொழில்லே'ன்னு அவர் சொன்னது மனசிலே உறைத்து, "தொழிலா?.." என்று புருவத்தை உயர்த்தினாள் ஊர்மிளா. "எழுதறதைக் கூட தொழில்னா சொல்றீங்க?.."

"பின்னே? சொல்லப் போனா முதலீடு இல்லாத தொழில்ன்பேன். வேணும்னா அவங்களுக்கிருக்கற கற்பனா சக்தியை வேணா முதலீடாச் சொல்லலாம். என்ன சொல்றே?"

"சொல்லலாம் தான். ஆனா, காசு பணம் போட்டு முதலீடு செஞ்சாத் தானே தொழில்ன்னு சொல்லுவா..  இதிலே அந்த முதலீடு இல்லாததினாலே../"

"நீ சொல்றது டெக்னிக்லி கரெக்ட் தான்.  ஒத்துக்கறேன்.திருவல்லிக்கேணிலே நாங்க இருந்தப்போ நாலு வீடு தள்ளி செல்லப்பான்னு ஒருத்தர் இருந்தார்.  மதுரை பக்கத்துக்காரர்.  எழுத்தாளர்.  எழுத்தாளர்ன்னா, இப்பல்லாம் சொல்றோமே அந்த மாதிரி இல்லே;  லைப்லே எழுதறதைத் தவிர வேறே ஒண்ணு இருந்ததா அவருக்குத் தெரியாது.  போதாக்குறைக்கு 'எழுத்து'ன்னு ஒரு பத்திரிகை வேறே நடத்தினார்.  எப்படி?.. பெண்டாட்டி நகை நட்டடெல்லாம் அடகுவைச்சு, கைக்காசையெல்லாம் காலிபண்ணி அந்த 'எழுத்து' பத்திரிகையைக் கொண்டு வர்றது தான் அவரோட ஸ்மரணை ஆச்சு.   மாசாமாசம் பத்திரிகைகள்லாம் அச்சான ஜோர்லே அவரே சுமந்துண்டு போய் வித்துட்டு வருவார்.  காலேஜ் லைப்ரரி, பஜார்ல்லே இருக்கற கடை-கண்ணி, ரயில்வே ஸ்டேஷன் புஸ்தகக் கடைங்க, நெருங்கினவா, நண்பர்கள் கூட்டம்ன்னு எதையும் விட்டு வைக்கலே, அவர். பாவம், மனுஷன் என்ன செய்வார், ஏது செய்வார்ன்னு தெரியாது.  ஒவ்வொரு மாசமும் முதல் வாரத்துக்குள்ளே 'டாண்'ன்னு பத்திரிகை கைக்கு வந்திடும்.  அவருக்காகவே நானும், இன்னும் நாலைஞ்சு பேரும் லைப் சந்தா கட்டியிருந்தோம். மாசம் இருபது பத்திரிகையை விக்கறதை என் பொறுப்பா ஏத்திண்டு தெரிஞ்சவாளு க்கு டிஸ்ட்ரிப்யூட் பண்ணியிருக்கேன். எதுக்குச் சொல்ல வந்தேன்னா, அவாள்லாம் எழுதறதை தொழில்ன்னு நெனைச்சதில்லே.  ஏதோ எழுதறதுதான் பிறவி எடுத்த பெரும் பயன்'ங்கற மாதிரி..  அந்தக் காலம் மாதிரி இந்தக் காலமும் இல்லேன்னு வைச்சுக்கோ.  எதைச் செஞ்சாலும் அதுனாலே எனக்கு என்ன லாபம்ன்னு நெனைக்கற காலம் இது.  இதிலே சொல்றத்துக்கு ஒண்ணுமில்லே...  என்னைக்கு எழுதறவங்களே இந்த எழுதற காரியத்தையும் ஒரு தொழில்ன்னு நெனைச்சு எழுத ஆரம்பிச்சிட்டாங்களோ அன்னிக்கே இதுவும் ஒரு தொழிலாயிடுத்து.  'தொழில் இல்லே இது; அதைத் தாண்டின ஆத்மார்த்தமான ஒண்ணு இதுன்னு என்னதான் நீ சொன்னாலும் அவங்க அதை ஏத்துக்கத் தயாரில்லே.  சம்பாதிக்கக் கிடைச்ச காசு-பண சமாச்சாரமாத் தான் இதையும் பாக்கறாங்க..  எத்தனை புஸ்தகம் போட்டோம்; அதிலே என்ன வருமானம் வந்தது? தன்னோட புஸ்தகத்தை எப்படில்லாம் விற்பனைபடுத்த லாம், அதுக்கு யார் யாரை அணிசேத்திண்டு என்னலாம் பண்ணலாம்கற மாதிரி போயிடுத்து.  அதனாலே எனக்கு என்னவோ இதுவும் ஒரு தொழில்ன்னு தான் தோண்றது.. "

"நீங்க சொல்றதெல்லாம் சரிதான்.  புஸ்தகத்துக்கு விலை போடறச்சேயே அந்த புஸ்தகத்திலுள்ள உள்ளடக்கத்துக்கு ப்ளஸ் அந்த புஸ்தகத்தை புஸ்தகமா ஆக்கித்தர்றத்துக்கான செலவுத் தொகைன்னு ஆயிடுச்சு.  அந்த புஸ்தகத்தோட உள்ளடக்கம்ங்கறது அந்த எழுத்தாளரோட உழைப்புங்கறதாலே புஸ்தகத்தை வித்து வர்ற காசுலே அவருக்குப் போய்ச் சேர வேண்டியது சேரணும்ங்கறதை ஒப்புக்கறேன். இதெல்லாம் சரி தான்.  என்னோட கேள்வி என்னன்னா, ஒரு எழுத்தாளர் மனசிலே ஒரு விஷயத்தைப் பத்தி எழுதணுங்கற அர்ஜ் தோணி மனம் குவிஞ்சு அதை எழுதறச்சேயே இந்த காசுங்கற நினைப்பு வந்திடறதான்னு தான்.   அப்படின்னு இருந்தாத்தான் எழுதறதே காசுக்காகன்னு எடுத்துக்கலாம் இல்லையா?.."

"ஊர்மிளா! பேச்சு சுவாரஸ்யத்திலே ஒண்ணை நினைக்காமயே பேசிண்டு இருக்கோம், பாரு!  உங்க கணவரும் ஒரு பிரபல எழுத்தாளர். உங்களுக்கு எழுத்தாளர்களைப் பத்தி தெரியாதையா நான் சொல்லிடப் போறேன்?" என்று சுந்தரவதனம் கேட்ட போது ஊர்மிளாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

"அபராஜிதன் நிச்சயம் காசுக்காகவேன்னு எழுதறவர் இல்லை.  எழுதாம அவராலே இருக்க முடியாது; அதான் விஷயமே.  ஏன் இப்படி மாஞ்சு மாஞ்சு எழுதிறீங்கன்னு கேட்டா, 'எழுதற சுகத்துக்காக எழுதறேன்'பார்.  அவர் எழுதறத்தே பக்கத்திலே இருந்து பாக்கணுமே?.. மனசிலே அலை அலையா புரள்ற எண்ண வேகத்தை அப்படியே வரி வரியா எழுத்தாய் மாத்தி பேப்பர்லே உலா விடற மாதிரி இருக்கும்! அந்த நேரத்தில் முகத்தில் அலாதியான ஒரு களை வந்து அமர்ந்துக்கும். எழுதறத்துக்காக அஞ்சு இலக்கத்லே சம்பளம் வாங்கிண்டிருந்த வேலையை விட்டவர் அவர். அதனாலே தான் நான் நினைக்கறதை இவ்வளவு தீவிரமாகச் சொல்ல முடிந்தது" என்றாள் ஊர்மிளா.

"சாரி, ஊர்மிளா.." என்றார் சுந்தரவதனன்.  "எழுத்தாளர்கள் சம்பந்தப்பட்ட பதிப்பகத்திலே நாம வேலை செய்யறதாலே நமக்கிருக்கற அனுபவத்திலே என் மனசிலே தோணினதைச் சொல்லிட்டேன்.." என்றார்.

"பர்சனலாய் ஒண்ணுமில்லே, சார்! பொதுவாத் தானே நாம பேசினோம்.. அதனால் என்ன?" என்றாள் ஊர்மிளா.  ரிஷியைப் பத்தி சுந்தரவதனன் சொன்னது நினைவுக்கு வந்து, "ரிஷின்னா கொக்கான்னாம்! அவரோட அந்த 'பார்வை'' கதையைப் படிக்கறச்சேயே தெரிஞ்சி போயிடுத்து. அவருக்கு இருக்கற திறமைலே வெளுத்து கட்டப்போறார், பாருங்கோ!" என்று வெளிக்குச் சொன்னாளே தவிர உள்ளுக்குள்ளே அவளுக்கும் ரிஷியின் திடீர் வளர்ச்சியில் ஒரு கவலை இருக்கத்தான் செய்தது.   அதையே குறிப்பிட்டு நேற்று லஷ்மணன் சொன்னதும் நினைவுக்கு வந்தது. 'ஊர்மிளா! நானும் நெறைய உதாரணம் சொல்வேன்.  ஆரம்ப தீவிரம், நிறைய பப்ளிஷ் ஆகி கொஞ்சம் செட்டில் ஆனதும் காணாமப் போயிடும்.  'இருந்த சரக்கெல்லாம் காலியாடுத்து; இனிமே என்ன செய்வேன்'ங்கற மாதிரி ஒரு நிலைன்னு வைச்சிக்கோயேன்.  இந்த ரிஷி அப்படி ஆகாம இருக்கணும்.  அதான் என் ஆசை' என்று அவன் சொன்னதை நினைத்துக் கொண்டாள்.

சுந்தர வதனன் எழுந்து கொண்டார்.  "பிரஞ்சும், இங்கிலீஷும் செலக்ஷன் முடிஞ்சு மொழிபெயர்க்கறத்துக்குப் போயாச்சு இல்லையா?.. அடுத்தாப்லே மலையாளம்ன்னு சின்னவர் சொல்லியிருக்கார்.  நவநீத கிருஷ்ணன், கோயம்புத்தூர் பிரான்ச்சிலேந்து உதவிக்கு வர்றார். ஒருவாரம் தங்கியிருப்பார். அதற்குள்ளே அந்த வேலையை முடிக்கணும்..  வரேன்."

சுந்தரவதனன் சென்றபிறகு இன்றைக்கு முடிக்க வேண்டிய பாக்கியிருக்கும் வேலைகளில் கவனம் கொண்டாள் ஊர்மிளா.  சின்னவர் அப்ரூவலுக்குப் பிறகு அவள் தயார்ப் பண்ண வேண்டிய வேலைகள் என்று சில இருந்தன. அப்ரூவல் கட்டத்தில் சின்னவர் ரொம்பவும் யோசிப்பார்.  பாதிக்குப் பாதியை தாண்டிய லாபம் கிடைக்கும் வேலைகளில் தனிப்பட்ட அக்கறையைக் காட்டுவார் அவர்.  பெரியவர் அப்படியில்லை.  அவர் ஈடுபாடே தனி; தனி மட்டுமில்லை;  அவரைப் போன்ற மனிதர்களை இக்காலத்தில் பார்ப்பதே அபூர்வம்.  பணம் பெரிசு அல்ல; புதுபுதுசாக நிறைய பதிப்பகத் துறையில் செய்ய வேண்டும் என்று விரும்புவர் அவர்.  சங்க இலக்கியங்களை எளிய தமிழில் மக்களுக்கு கொண்டு போய்ச் சேர்க்க வேண்டுமென்று விரும்பி ஒரு பல்கலைக் கழக பேராசிரியரிடம் அந்தப் பணியை ஒப்படைத்த பொழுது, தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயரின் பதிப்புகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு அய்யரவர்களின் கருத்திற்கேற்ப எழுதுவதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்று அதை தம் விருப்பமாகவே அந்தப் பேராசிரியரிடம் சொன்னார்.  சீவக சிந்தாமணியை மக்கள் பதிப்பாக வெளியிட்ட போதும் இதே விருப்பம் அவருக்கு இருந்தது.  சங்கஇலக்கியங்களைப் பதிப்பிக்கும் பொழுது இடது பக்கம் பாடலும், அரும்பத உரையும் வலது பக்கம் அந்தப் பாடலுக்காக உரையும், பாடிய புலவர் பற்றிய விவரங்களும் வர வேண்டும் என்று விரும்பினார்.  இதை சரிபார்க்கும் பணியை ஊர்மிளாவிடம் அவர் கொடுத்த பொழுது தான் அந்த சிரமம் அவளுக்குத் தெரிந்தது.    ஊர்மிளா சரிபார்த்ததைத் தாண்டி பெரியவர் வேறு இதே பணியைச் செய்த பொழுது, சில நேரங்களில் சங்க இலக்கியங்களுடனான தனது பரிச்சயங்கங்களைப் பற்றி அவளிடம் அவர் பகிர்ந்து கொண்ட பொழுது என்று-- அவர் மேல் அவளுக்கு தனி மதிப்பே உருவாயிற்று.   சங்க இலக்கியங்கள் பதிப்பில் இருந்த நேரத்தில் அவ்வப்போது வீட்டிலும் அவை பற்றியே லஷ்மணனிடம் அவள் பேசி விவாதித்த காலங்கள் மறக்க முடியாதவை..  சில நேரங்களில் லஷ்மணனின் பார்வை வேறு மாதிரி இருக்கும்.  பல நேரங்களில் அவன் கருத்தை மறுக்க முடியாது தவிப்பாள்.  அதையே அடுத்த நாள் பெரியவரிடம் சொல்லி விவாதிக்கும் பொழுது வேறொரு தெளிவு கிடைக்கும்.  பெரியவர், நிறைய தமிழறிஞர்களுடன், எழுத்தாளர்களுடன் பதிப்புத் துறையைத் தாண்டிய நட்பாக ஒரு உறவை வளர்த்துக் கொண்டவர். கருத்தரங்கங்கள் என்றால் அவருக்கு வெல்லக் கட்டி.  நிறைய தமிழ்க் கருத்தரங்களில் கலந்து கொள்வதை வழக்கமாகவே அவர் கொண்டிருந்தார்.  அதனால், சமூகத்தில் பதிந்திருந்த அவருக்கான பிம்பம், பதிப்பகத்திற்கும் ஒரு தனி மரியாதையைத் தேடித்தந்திருந்தது. அந்த மரியாதையும் பதிப்பகத்திற்கு ஒரு காவல் தெய்வம் மாதிரி அமைந்து அதைக் கட்டிக் காப்பாற்றுவதையும் சொல்லத்தான் வேண்டும்.

ஏதேதோ விட்டு விட்டான யோசனைகளுக்கிடையே வேலை பாட்டுக்க நடந்து கொண்டு தான் இருந்தது.  இன்றைக்கு அலுவலகம் முடிந்தவுடனேயே தி.நகர் போக வேண்டும் என்கிற நினைவும் ஊர்மிளாவுக்கு வந்தது. அஞ்சுக்கு கிளம்பினால் போக்குவரத்து நெரிசல் எப்படியிருந்தாலும் ஆறுக்குள் 'எழுத்துப்பட்டறை' அரங்கை அடைந்து விடலாம் என்று அவள் நினைத்த பொழுது, கேபின் தொலைபேசி கணகணத்தது.  எடுத்தாள்.

மறுபக்கத்தில் "அக்கா!.." என்று அழைக்கும் பொழுதே, கிருஷ்ணவேணி தான் என்று ஊர்மிளாவுக்குத் தெரிந்து விட்டது.


(இன்னும் வரும்)



Monday, April 16, 2012

பார்வை (பகுதி-41)

வித்யா வீட்டிற்கு வந்ததும் வெளி கிரில்க்கதவை சாத்தி விட்டு முதலில் 'செந்தாமரை'யைப் புரட்டிப் பார்த்தாள்.  மேலோட்டமாகப் பார்க்கையிலேயே வழக்கமாக வரும் சில பகுதிகள் இல்லாமல் இருந்தது தெரிந்தது.   'இந்த இதழ் செந்தாமரையைப் பாத்தப்போ, இது என்ன 'செந்தாமரை' தானான்னு, அதிசயமா இருந்தது, வித்யா..' என்று உஷா சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.

உஷா சரியாகத் தான் சொல்லியிருந்தாள்.  பத்திரிகையின் தலையங்கத்தைத் தலைகீழாகப் பிரசுரித்திருந்தார்கள். 'செந்தாமரை'யைத் தலைகீழாகத் திருப்பி வைத்துக் கொண்டு தான் அதைப் படிக்க வேண்டும்.  ஒரு ஆங்கிலப் படத்திற்கும் தமிழ்ப் படத்திற்கும் சினிமா விமரிசனம் எழுதியிருந்தார்கள். அவ்வளவு தான் சினிமா பற்றி. 'இவர்கள் சந்தித்தால்..' என்று ஒரு புதுப் பகுதி.  பதிப்பகப் புத்தகங்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் ஒருவரும்,  தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கும் ஒருவரும் சந்தித்து உரையாடுவதை கற்பனையாக நகைச்சுவையாக எழுதியிருந்தார்கள். டிசம்பர், 21, 2012 என்று ஒரு அலசல் கட்டுரை. நிறைய கலர்க் கலர் படங்களுடன் படித்துப் பார்க்க ஆவலைத் தூண்டியது. வழக்கமாக பிரசுரிக்கும் அரைகுறை அசட்டுக் கதைகளுக்குப் பதில் சிறுகதைகள் மூன்றோ நான்கோ;  அதுவும் ஒவ்வொன்றும் ஐந்து பக்கங்களுக்குக் குறையாமல் அழகழகான சித்திரங்கங் களோடு!   அவற்றைப் பிரசுரித்த விதமே புதுத் தோற்றத்துடன் அலாதி பொலிவு கொண்டிருந்தது.  ஒரு கதையின் தலைப்பைப் போட்ட மாதிரி இன்னொரு கதையின் தலைப்பைப் போடாமால் அச்சில் வித்தியாசம் காட்டியிருந்தார்கள். கதையின் இரண்டுப் பக்கமும் சங்கிலி கோர்த்த மாதிரி பார்டர் கட்டி, கதைக்குக் கீழே எழுதியவரின் ஸ்டாம்ப் சைஸ் புகைப்படம் அச்சாகியிருந்தது.

புகைப்படம் சின்ன சைஸ்ஸில் இருந்தாலும், விஜியின் மாக்ஸிம் கார்க்கி மீசை அவன் முகத்திற்கு ஒரு களை கொடுத்து எடுப்பாகத் தெரிந்தது. 'நேற்றுப் போனவர்கள், இன்று வந்தோம்' என்று அவன் கதைத் தலைப்பு புதுமையாக இருந்தது.  இரண்டு மூன்று தடவை அந்தக் கதைத் தலைப்பையே படித்துப் பார்த்த பொழுது அதுவே அவளுக்கு நிறைய சேதி சொல்வது போலிருந்தது. தெரு போஸ்டரில் பார்த்த தொடர்கதைத் தலைப்பை விட இந்தத் தலைப்பு அர்த்தம் நிறைந்ததாக அட்டகாசமாக இருப்பதாக அவளுக்குப் பட்டது.

'வானவில்' பத்திரிகையிலிருந்து வந்திருந்த கடிதக் கவரைப் பிரித்துப் பார்த்தாள். விஜி கொடுத்திருந்த தொடர்கதைச் சுருக்கம் அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் இரு வாரங்களுக்குள் பத்து அத்தியாயமாவது எழுதி அனுப்பச் சொல்லிக் கேட்டிருந்தார்கள்.  இவன் கொடுத்திருந்த 'எங்கிருந்து இங்கு?' என்கிற தொடர்கதைத் தலைப்பை, வெகுஜன ரசிப்பிற்காக 'காதல் தேசம்' என்று மாற்றியிருப்பதாகவும், அதற்காக மன்னிப்பையும் கோரியிருந்தார்கள்.  அவர்கள் அதைப் பற்றி எழுதியிருந்த நாலைந்து வரிகளில் இந்த தலைப்பு மாற்றம் ஒரு பெரிய விஷயமே இல்லை என்கிற மாதிரியான 'தொனி' இருந்தது.  கூடவே, இந்த வார 'வானவில்' இதழின் ஒரு பிரதியும் அனுப்பியிருந்தார்கள்.  அந்தப் பிரதியின் பின்பக்க அட்டையில் போஸ்டரில் பார்த்தபடியே விஜியின் 'காதல் தேசம்' தொடரின் விளம்பரத்தையும் கூடுதலாக அவனின் புகைப்படத்தையும் பிரசுரித்திருந்தார்கள்.. புகைப்படத்தில் விஜி பைஜாமா ஜிப்பாவுடன் நின்ற கோலத்தில் இருந்தான்.

'விண்சுடர்' என்னும் பத்திரிகையிலிருந்து வந்திருந்த கடிதத்தில் இவனிடமிருந்து ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் கேட்டிருந்தார்கள்.  'வெண்ணிலா' பத்திரிகையிலிருந்து ஒரு குறுநாவல் கேட்டிருந்தார்கள்.  எல்லாவற்றையும் பார்க்கையில் வித்யாவிற்கு பிரமிப்பாக இருந்தது.   ரிஷி என்ன செய்யப் போகிறான் என்று தெரியவில்லை.  இந்த பத்திரிகைகாரங்க கேட்டிருப்பதை உட்கார்ந்து எழுதி அனுப்புவதா இல்லை ஆபிஸுக்குப் போவதா என்றிருந்தது.  இந்த லட்சணத்தில் தானும் கதை எழுதுகிறேன் பேர்வழியென்று ஒரு ரைட்டிங் பேடும் பேப்பருமாய் உட்கார்ந்தால், வீடு என்னாவது என்று மலைப்பே மிஞ்சியது.  கெளதம் படிப்பு வேறு . சின்ன வயசாயும் சின்ன கிளாஸாகவும் இருப்பதில் சில சிரமங்கள் இருந்தன..  போகப்போக நினைச்ச இடத்திற்கெல் லாம் இரண்டு பேரும் சேர்ந்து சேர்ந்து இனிமேல் போகமுடியாது என்று எண்ணிக் கொண்டாள்.

உஷாக்கானும் ஒருவிதத்தில் செளகரியம்.  குழந்தை குட்டி பிக்கல் படுங்கல் இல்லை.  கணவன், மனைவி இருவருமே ஒருத்தருக்கொருத்தர் குழந்தை. அதனால் நிறையப் படிக்க முடிகிறது; மனத்தில் தோன்றுவதை கடிதங்களாக உருமாற்றி பத்திரிகைகளுக்கு நிறைய அனுப்பவும் முடிகிறது.  கெளதம் ஸ்கூலுக்குப் போகும் வயதில் என்றாலும், எங்கே போனாலும் அவனையும் கூட்டிக் கொண்டு போக வேண்டியிருக்கிறது.  போகாமலும் இருக்க முடியவில்லை. நாலு இடத்திற்குப் போய்ப் பழக்கப்பட்டால் தான் நாலும் எழுத முடியும் என்று நம்பும்படி காலம் ரொம்பவும் மாறியிருக்கிறது.  அந்தக் காலம் மாதிரி இல்லை இந்தக் காலம். நாலும் தெரிந்திருக்க வேண்டியிருக்கிறது;  இல்லையென்றால் நாலு சுவத்துக்குள்ளேயே எதுவும் முடங்கிப் போய்விடும் என்கிற நினைப்பு வந்த பொழுது சுற்று வட்டாரமே அவளைக் குழப்பியது.

அந்த ஸ்டோர் போன்ற அப்பார்ட்மெண்ட்டில் எப்படிப் பார்த்தாலும் இரண்டு வகைகளில் இருக்கிற பெண்களை அடைத்து விடலாம் போலிருந்தது. ஒன்று அலுவலக வேலைக்குச் செல்கிறவர்கள்; இன்னொன்று அப்படியான ஒரு வேலைக்குச் செல்லாமல் இருப்பவர்கள்.  பத்தரை மணிக்கு மேலே வெளி வேலைக்குப் போகிறவர்கள் போன பின்பு அந்த ஸ்டோரே 'ஹோ'வென்று இருக்கும்.  வீட்டு வேலையெல்லாம் முடிந்த பின் சும்மா இருக்கும் நேரங்களில் பேச்சுத் துணை என்றால் இந்த மாதிரி வீட்டில் தங்கிவிட்ட பெண்களிடையே தான். அதனால் இப்படியான பெண்களிடையே ஒரு அந்நியோன்யம் இயல்பாகவே இழைந்திருந்தது.  கோலம், சமையல், கடை கண்ணிகளில் புதுசாக விற்பனைக்கு வந்திருப்பவை, டி.வி.சீரியல்கள், பத்திரிகை பேட்டிகள், அலசல்கள் என்று அவர்களுக்குள்ளேயே சுற்றி சுற்றி வரும் எத்தனையோ விஷயங்கள் பற்றி அவர்களுக்கிடையேயான விவாதங்களும் அவர்களைச் சுற்றி வரும். ஏதாவது ஒரு வீட்டில் இந்த ஜமாக் கூட்டம் தினமும் அரைமணி நேரமாவது இருக்கும்.  அப்பப்ப சொந்த செளகரிய ஷேம லாப விசாரிப்புகளைத் தாண்டி மற்ற குடித்தனக்காரர்கள் பற்றிய ஆர்வக் கோளாறான வம்புக்குப் போகாமல் வயதில் பெரியவர்கள் அனுபவ அறிவோடு பார்த்துக் கொள்வார்கள்.  மற்றபடி வேலைக்கு செல்லும் பெண்களை எப்போதாவது பார்க்கும் பொழுது ஒரு 'ஹலோ'வோடு சரி. சனிக்கிழமை சிலருக்கு அலுவலகம் உண்டென்பதால் ஞாயிற்றுக் கிழமைகளில் தவறாது வேலைக்குச் செல்வோர், செல்லாதோர் என்று இரண்டு வகைகளும் கலந்த மாதிரி இந்த மொட்டை மாடியில் உட்கார்ந்து சேர்ந்து பேசும் பழக்கமும் அவர்களிடையே படிந்திருந்தது.

மொத்தம் இருபது வீடுகள்.  இருபதும் சேர்ந்து ஒன்றன் பக்கத்தில் ஒன்றாக இருந்தாலும் இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடிவரை நீண்ட ஹால் மாதிரி நீள வாக்கில் இருக்கும் மொட்டை மாடியில் ஒவ்வொரு வீட்டையும் பிரித்துக் காட்டுகிற மாதிரி சின்ன இடுப்பளவிலான கைப்பிடிச் சுவர் உண்டு. அதனால் வாசல் வழியாகத் தான் வரவேண்டும் என்றில்லாமல் எந்த வீட்டு மொட்டை மாடியிலும் இந்த ஞாயிற்றுக்கிழமைகளில் கூடிப் பேச வசதியாக இருந்தது.

மனசு நிறைந்திருந்ததில் வித்யாவுக்கு சாப்பாடு அவ்வளவாக இறங்க வில்லை.   பூசணிக்காய் மோர்க்கூட்டு பண்ணியிருந்தாள்.  வழக்கமாக கல்யாண சாப்பாடுகளில் காணப்படுவது போல் காரம் கலந்து தோலுரித்து வதக்கிய உருளைக்கிழங்கு கறி, தக்காளி ரசத்திற்கு ஒத்து வந்தாலும், 'செந்தாமரை'க் கதையைப் படித்துப் பார்க்க வேண்டும் என்கிற ஆவலில் சாப்பிட்டதாக பேர் பண்ணிக் கொண்டு எழுந்தாள்.  கையலம்பித் துடைத்து 'செந்தாமரை' அவள் கையில் தவழும் போது 'எழுத்துப் பட்டறை'க்குப் போக வேண்டிய நினைவில் மணி பார்த்த பொழுது ஒன்றாகியிருந்தது.

கணவனின் 'நேற்றுப் போனவர்கள்,  இன்று வந்தோம்' கதை படிக்கப் படிக்க அவளுக்குப் பிடித்திருந்தது.  ஒரு கதையைப் படிக்கும் பொழுதே, வரிவரியாய்ப் போகும் எழுத்துக்கள் ஊடேயே ஒருகதை போலச் சொல்லி வேறோரு விஷயத்தை படிக்கிறவர்கள் மனசில் பதிக்க வைக்கிற அவன் திறமை அவளுக்குப் பிடித்திருந்தது.  அந்த இன்னொரு விஷயத்தைச் சொல்வதற்காகத் தான் இவர் கதை எழுதுகிறார் என்பது நன்றாகத் தெரிந்தது.  இப்படியெல்லாம் தன்னால் எழுத முடியுமா என்று அவளுக்குத் திகைப்பாக இருந்தது.  கெளதம் ஸ்கூலுக்குப் போய் பாடங்கள் படித்துத் தெரிந்து கொள்கிற மாதிரி, தானும் புருஷனின் பக்கத்தில் உட்கார்ந்து இப்படியெல்லாம் எழுதறது எப்படின்னு தெரிந்து கொள்ள வேண்டும் போலிருந்தது.  'வெளிப்பார்வைக்கு பொதுவா கதை எழுதறவங்க எல்லாரும் எழுதற ஒரு கதை மாதிரி தான் இவரதும் இருக்கிறது.  ஆனால் படிக்கப் படிக்க மத்தவங்க எழுதறதிலேந்து ஏதோ ஒரு விதத்தில் இவர் எழுதறது வித்தியாசப்படுகிற மாதிரியும் இருக்கு' என்று  அவள் கொஞ்சம் யோசித்த பொழுதே அந்த வித்தியாசம் தான் இவருக்கும் மற்ற எழுத்தாளர்களுக்கும் இருக்கும் வித்தியாசம் என்று புரிந்து கொள்ள முடிந்தது.

இன்னொரு விஷயமும் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.  இப்படியெல்லாம் எழுத இவருக்குத் தெரியும் என்று இத்தனை நாள் தனக்குத் தெரியாதிருந்ததே ஆச்சரியமாக இருந்தது.  வீட்டுக்கு நிறைய அந்த இருபது பக்க பத்திரிகைகள் வரும் தான். எப்பவாவது பொழுது போகாத நேரங்களில் அதிலெல்லாம் என்ன எழுதியிருக்கிறது என்று புரட்டிப் பார்ப்பாள்.  நிறைய புரியாத வார்த்தைகள் இருக்கும்.  ரிஷி அலுவலகம் விட்டு வந்ததும் அவனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று அந்த வார்த்தைகளின் கீழே பென்ஸிலால் கோடிட்டு வைத்திருப்பாள்.   அப்படி அவன் வந்ததும் பலதைக் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்திருக்கிறாள்.  ஆரம்பத்தில் அது ஒரு பயிற்சி போல சந்தோஷத்தை அவளுக்குக் கொடுக்கவும் செய்தது.  ஒரு கட்டத்தில் சலிப்பாகவும் இருந்தது.  நாளாவட்டத்தில் ரிஷி போன்றவர்களுக்குப் புரிந்தால் போதும் என்று நினைத்துப் பிரசுரிக்கிற மாதிரி அப்பத்திரிகைகளின் வாசிப்பு அனுபவம் அவளுக்கு அமைந்து போக, நமக்கு புரிகிறவற்றைப் படிப்போம் என்று தீர்மானம் கொண்டாள்.  அப்படியாக சிறுபத்திரிகைகளைப் படிக்கிற அனுபவம் நாளாவட்டத்தில் அவளிடத்தில் இல்லாமலே போயிற்று.

'நேற்றுப் போனவர்கள், இன்று வந்தோம்' கதை அவள் பார்வையில் அட்டகாசமாக இருந்தது. சொல்லப் போனால், வழக்கமாக இந்த மாதிரி பெரிய பத்திரிகைகளில் வராத சிறுபத்திரிகை கதை போலத் தான் அது இருந்தது. இருந்தாலும் அதே கதையை படங்களுடனும், எளிமையாகப் புரியக் கூடிய வார்த்தைகளுடன் படிக்கும் பொழுது எல்லாரும் படித்து புரிந்து கொள்ளக் கூடிய கதையாக இதை எப்படி அமைத்தார்கள் என்று அவளுக்குத் ஆச்சரியமாக இருந்தது.  இந்த மாதிரி கதைகளைப் படித்து எவ்வளவு நாளாயிற்று என்ற எண்ணத்தில், 'ஓ,லவ்லி!' என்று தனக்குள் முனகிக் கொண்டாள்.  இன்று மாலை ரிஷியைப் பார்க்கும் பொழுதே, தன் பாராட்டைச் சொல்லி விட வேண்டும் என்று ஒருதடவைக்கு இருதடவை நினைவில் குறித்துக் கொண்டாள்.  இந்தக் கதையைப் படித்தால், லஷ்மணன் நிச்சயம் வெகுவாகப் பாராட்டுவார் என்று நினைத்துக் கொண்டாள்.

அந்த நினைவிலேயே, 'செந்தாமரை'யை டீபாயில் வைத்து விட்டு,  'வெண்ணிலா'வை எடுத்துப் புரட்டும் பொழுதே 'ஆசிரியருக்குக் கடிதம்' பகுதி கண்ணில் பட்டது.  இந்தப் பகுதியில் பிரசுரமாகும் சிறந்த கடிதத்திற்கு பரிசு உண்டு என்பது வித்யாவிற்குத் தெரியும். ஒவ்வொரு வாரமும் எந்தக் கடிதத்திற்கு பரிசு என்று பார்ப்பதில் வித்யாவுக்கு ஆர்வம் உண்டு.   கீழே கட்டம் கட்டி, அதனுள் முதல் பரிசு நூறையும் இரண்டாம் பரிசு ஐம்பதையும் பெறும் கடிதத்தை நட்சத்திரக்குறியிட்டுக் குறித்திருந்தார்கள்.  முதல் பரிசு பெற்ற கடிதத்தைப் படித்த பொழுது, விஜியின் 'மெஜாட்டியோ' கதையை அது வாங்கு வாங்கென்று வாங்கியிருந்தைப் பார்த்து லேசான கோபத்துடன் யார் இப்படி எழுதியிருக்கிறார்கள் என்று வித்யா பார்த்த பொழுது, ஷா, சென்னை-33 என்று போட்டிருந்தது.  இந்த 'ஷா', உஷாவாய்த் தான் இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் சாயந்தரம் அவளிடம் இதுபற்றிக் கேட்க வேண்டும் என்று வித்யா நினைத்துக் கொண்ட பொழுதே, கொஞ்சம் தலைசாய்த்து எழுந்தால் தேவலை போலிருந்தது.  வந்திருக்கும் தபால்களை மட்டும் அடுக்கி ரிஷியின் ரீடிங் ரூம் டேபிளின் மேல் வைத்து விட்டு ஹால் சோபாவிற்கு வந்து திண்டுகளைத் தலைக்குக் கொடுத்து படுத்தாள். டீப்பாயின் மேல் இருந்த 'வானவில்' பத்திரிகை பின் அட்டைப் புகைப்படம், ரிஷி பக்கத்தில் இருப்பது போலிருந்தது அவளுக்கு.

எப்பொழுது விழிப்பு வந்ததென்று தெரியவில்லை.  'சட்'டென்று வாசல் பக்கம் தலைநிமிர்த்திப் பார்த்த பொழுது, கிரில் கேட்டுக்கு வெளியே கெளதம் புத்தகப் பையுடன் நின்று கொண்டிருப்பது நிழலாய்த் தெரிந்தது.  வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்தவள், ஆணியில் மாட்டியிருந்த சாவியை எடுத்து கிரிலுக்கு உள்பக்கப் பூட்டைத் திறந்தாள்.

உள்ளே வந்த மகனின் தோளில் கைவைத்து அவனது புத்தகப் பையை வாங்கியவாறே, "சித்த அசந்திட்டேன்.  ரொம்ப நேரமா நிக்கறையாடா, கண்ணா?" என்று வித்யா கேட்டாள்.

"இல்லேம்மா.. இப்போத்தான் வந்தேன்.." என்று குதித்தபடி உள்ப்பக்கம் சென்ற கெளதம், வேகமாய்ப் போய் டீப்பாயின் மேலிருந்த புத்தகங்களை எடுத்தான்.

'வானவில்' பத்திரிகையை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் திருப்பிப் பார்த்தவன், பின் அட்டை பார்த்து, "ஐ.. அப்பா படம்.." என்று திகைத்தான். அடுத்து முணுமுணுத்தபடியே அச்சடிச்சிருந்த 'காதல் தேசம்' வார்த்தையைப் படித்தவன் தலைநிமிர்ந்து, "தேசம்ன்னா தெரியும்.. காதல்ன்னா என்னம்மா?" என்று கேட்டான்.


(இன்னும் வரும்)








Wednesday, April 11, 2012

பார்வை (பகுதி-40)


ஷா ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டு, ஏதோ வார இதழைப் புரட்டிக் கொண்டிருப்பது உள்ளே நுழைந்த பொழுதே வித்யாவிற்குத் தெரிந்தது.

வித்யாவைப் பார்த்ததும், "வா வித்யா" என்று முகம் மலர்ந்து உஷா எழுந்து வந்தாள்.  "உனக்குத் தான் சொல்லணும்ன்னு நினைச்சிண்டிருந்தேன்.  நீயே வந்திட்டே!" என்று அவள் சொன்ன பொழுது வித்யாவிற்கு வியப்பாக இருந்தது.

"காலம்பற வேலையெல்லாம் முடிஞ்சதா? அவசரம் ஒண்ணும் இல்லையே.." என்று உஷாவை சோபாவில் உட்காரச் சொல்லி தானும் அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். "இப்போத்தான் இவரும் ஆபீசுக்குக் கிளம்பினார்...   காலை 'வாக்கிங்' போறத்தேயே புஸ்தகத்தை வாங்கிண்டு வந்திட்டார். புரட்டிப் பாக்கக் கூட நேரமில்லை.. இப்பத்தான் ஒழிஞ்சது.  அதுசரி, நீ சொல்லவே இல்லையே?..  இந்த வார 'செந்தாமரை'யில் விஜி கதை வந்திருக்கே, பாத்தியா, இல்லையா?" என்று உஷா சொன்னதும் வித்யாவிற்கு சட்டென்று என்னவோ மாதிரி இருந்தது.

ஒரு வினாடிக்குள் ஓராயிரம் எண்ணங்கள் அவள் மன சமுத்திரத்தில் அலை அலையாய் வீசி அடித்தன. 'விஜி! விஜி!.. இனிமே லட்சோப லட்சம் பேருக்கு விஜி தான்!  இத்தனை நாள் தனக்கும் தன் பிள்ளைக்கும் மட்டுமே சொந்தமா இருந்த ஒருத்தனின் தோளில் இனிமே நாலு லட்சம் பேர் உரிமையோடு கை போட்டுக் கொள்ளப் போகிறார்கள்!' என்று நினைத்த அடுத்த வினாடியே புருஷன் மேல் ஆத்திரம் ஆத்திரமாக அவளுக்கு வந்தது. 'இவரும் சுத்த மோசம்; 'செந்தாமரை'யில் கதை வந்திருக்குன்னு முன் கூட்டியே ஒரு வார்த்தை எனக்குச் சொல்லியிருக்கலாம், இல்லையா? 'பாத்தையா, உஷா! இவர் கதை செந்தாமரையில் வந்திருக்கு, பார்' என்று நான் அவளுக்குச் சொல்வதை விட்டு, இந்த உஷா, என் புருஷன் எழுதியதைப் பற்றி எனக்குச் சொல்கிற நிலமையா' என்று ஆற்றாமையாக இருந்தது.   அத்தனை உணர்வையும் மறைத்துக் கொண்டு, "ஆமாம்,  கதை வரும்ன்னு சொல்லிண்டு இருந்தார்!இன்னிக்கு வெள்ளிக்கிழமை தானே?.. அதுக்குள்ளே 'செந்தாமரை' வந்திடுத்தா?" என்றாள்.

"நீ எந்த உலகத்லே இருக்கே!  வெள்ளி தானே 'செந்தாமரை' வரும்!  அது கூட மறந்திடுத்தா?" என்று உஷா கேட்ட போது 'இது கூடத் தெரியாமல் அசட்டுப் பிசட்டென்று உளறுகிறேனே' என்று தன் மீதே அவளுக்கு ஆத்திரம் வந்தது.  அந்த ஆத்திரம் புருஷன் மேல் பரிதாபமாய் சொரிந்தது.  'பாவம்.. அவருக்கே 'செந்தாமரை' இந்த இதழில் கதை வந்திருக்குன்னு தெரியுமோ, தெரியாதோ' என்று நினைத்துக் கொண்டாள்.  இந்தப் பத்திரிகைக்காரங்களைச் சொல்லணும்..  கதை எழுதறவங்களுக்கு இதையெல்லாம் முன்னாடியே தெரியப்படுத்தறது இல்லையா,  எழுதினவருக்குக் கூட இன்னொருத்தர் சொல்லியா தன் கதை இதுலே வந்திருக்குன்னு தெரியணும்!.. ஆனாலும் ரொம்பவும் தான் ஆடறாங்க' என்று மனத்திற்குள் பொருமிக் கொண்டாள்.

"என்ன வித்யா! என்ன யோசனை?.. உன்னவர் கதை பத்திரிகைலே வந்திருக்குன்னதும் எதுக்கு வந்தேன்னே மறந்து போச்சா?" என்றாள்.

அவள் அப்படிச் சொன்னதும் தான் வித்யாவிற்கு சகஜ நிலமை வந்தாற் போலிருந்தது. உண்மையிலேயே எதுக்காக உஷா வீட்டிற்கு வந்தோம்ங்கறது நினைவுக்கு வந்து, "ஒரு முக்கியமான விஷயம்  சொல்ல வந்தேன்" என்று வித்யா விஷயத்தைச் சொன்னாள்.  உஷாவுக்கு ஏகப்பட்ட குஷி.  "எழுத்துப் பட்டறை பத்தி சொன்னதற்கு ரொம்ப தேங்க்ஸ், வித்யா" என்றாள்.  "நிச்சயமா வர்றேன். எனக்கும் இந்த மாதிரி ஒரு ஃபோரத்லே கலந்துக்கணும்ன்னு ரொம்ப நாளா ஆசை. ஒரு ஆட்டோ பிடிச்சுப் போயிடலாம். அஞ்சரைக்குக் கிளம்பினா சரியா இருக்குமா?"

"ஆறுக்கு அங்கே இருக்கணுமாம்.  கெளதம் ஸ்கூல்லேந்து வந்ததும் அவனுக்கும் வாய்க்கு ஏதானும் கொடுத்து கூட்டிண்டு வந்திடறேன்."

"கெளதம் என்னத்துக்கு?.. அவன் தான் இங்கே விளையாடிண்டு இருக்கட்டுமே.  அஞ்சுக்கெல்லாம் இவரும் வந்திடுவார்.  ஏதாவது படிச்சிண்டு இருக்கட்டும்."

"என்னமோ தெரிலே.  அவனையும் கூட்டிண்டு வான்னு சொன்னார்."

"எழுத்தாளர் தன் பையனையும் எழுத்தாளர் ஆக்கப் போறாரோ என்னவோ?" என்று உஷா சொன்ன போது அவள் அப்படிச் சொன்னது வித்யாவிற்குப் பிடித்திருந்தது.  லேசாக புன்முறுவல் மட்டும் செய்தாள்.  'அம்மாக்காரி அதற்கு முன் எழுத்தாளர் ஆகப் போகிறாளாக்கும்!' என்று மனசில் நினைத்ததை மட்டும் ஏனோ அவள் உஷாவிடம் சொல்ல வில்லை.

"இவ்வளவு படிக்கறையே, உஷா! உனக்கும் கதையெல்லாம் எழுதணும்ன்னு தோணினது இல்லையா?" என்று தான் எழுத நினைப்பது போல் இவள் ஏன் நினைப்பதில்லை என்கிற சந்தேகத்தில் வித்யா கேட்டாள்.

"இது வரை தோணினது இல்லே. இனிமேயும் அப்படித் தோணாதுன்னு தான் நினைக்கிறேன்.." என்றாள் உஷா.  "கதைன்னு இல்லே. பொதுவா நம்மைச் சுத்தி நடக்கற நிறைய விஷயங்களைத் தெரிஞ்சிக்கணும்ன்னு பள்ளிக்கூடம் போன காலத்திலேயே எனக்கு ரொம்ப ஆசை.  அப்போலாம் ஸ்கூல் ப்ளே கிரவுண்ட்லே ஒன்பது மணிக்கு வகுப்பு வகுப்பா வரிசையா நின்னு ப்ரேயர் முடிஞ்சி அப்புறம் தான் வரிசை வரிசையா கிளாஸ் ரூமுக்குப் போவோம்.  ப்ரேயருக்கு அப்புறம் அன்னிக்கு முக்கிய செய்திகள் சிலதை யாராவது படிக்கறது வழக்கம்.  அப்படிப் படிக்கறத்துக்காக வீட்லே வாங்கற நியூஸ் பேப்பர்லேந்து செய்திகளைச் சேகரிக்க ஆரம்பிச்சேன். நான் நன்னா இந்தக் காரியத்தைச் செஞ்சதாலே, தினமும் மைக் முன்னாடி நின்னு அன்றைய முக்கிய செய்திகளைப் படிக்கறது நானேன்னு ஆச்சு.  செய்தித் தாள்களை படிக்க ஆரம்பிச்ச பழக்கம், வார மாச இதழ்களுக்குத் தாவினது.  முதல் அட்டைலேந்து கடைசி அட்டை வரை பிரிண்ட் ஆன எதையும் படிக்காம இருந்ததில்லை. வார இதழ்கள்லே வர்ற விளம்பரங்களை எத்தனை பேர் படிப்பாங்கன்னு நினைக்கறே, வித்யா?.. நான் அதையெல்லாம் கூட படிக்காம விடமாட்டேன்."

"உஷா! நீ ரொம்ப வித்தியாசமானவ தான்.  விளம்பரம் இருக்கற பக்கத்தைப் பார்த்தவுடனே அந்தப் பக்கத்தை திருப்பிடறதான் என் வழக்கம் கூட.  நீ அதையெல்லாம் கூடப் படிப்பேன்னு சொல்றது ஆச்சரியமா இருக்கு.. இனிமே என்னன்ன விளம்பரம்லாம் வாரப் பத்திரிகைலே வர்றதுன்னு நானும் படிச்சுப் பாத்துட்டு அந்த அனுபவம் எப்படி இருக்குன்னு உனக்குச் சொல்றேன்... "

"ஒரு வேடிக்கை தெரியுமா, வித்யா?..  இந்த விளம்பரங்களை அச்சடிக்க ஆரம்பிச்ச வேலைதான் நாம இன்னிக்குப் பாக்கற இந்த பத்திரிகைகளா ஆச்சுன்னு சொல்லுவாங்க..  பிட் நோட்டீஸ் மாதிரி அச்சடிச்சுக் கொடுத்தா பல பேர் பாத்துட்டு கசக்கிப் போட்டுடறாங்களாம்.  அப்படிக் கொடுக்கறத்துக்கு சரியா ரெஸ்பான்ஸ் இல்லைன்னு தெரிஞ்சதும், இலவசமா இல்லாம ஜனங்க காசு கொடுத்து வாங்கினா அதுக்கு அவங்க மத்திலே ஒரு மதிப்பு இருக்கும்னு நினைச்சாங்க.  வெறும் விளம்பரங்களை அச்சடிச்சுத் தந்தா யாரு காசு கொடுத்து வாங்குவாங்க, சொல்லு.. மாட்டாங்க இல்லையா?.. அதுக்காக ஒண்ணு செஞ்சாங்களாம்.  ஜனங்க காசு கொடுத்து வாங்கி படிக்கற மாதிரி அவங்களுக்கு ஆர்வமுள்ள விஷயங்களைச் சேகரிச்சு அச்சடிச்சு அதுக்கு நடுவே இந்த விளம்பரங்களையும் சேர்த்துக் கொடுத்தா, படிக்கறவங்க தாங்க படிக்கற விஷயங்களோட இதையும் சேர்த்துப் படிப்பாங்கங்கன்னு நெனைச்சு செஞ்சதோட வளர்ச்சி தான் இப்படி வார, மாசப் பத்திரிகைகளா உருமாறிடுத்து!"

"அப்படியும் விளம்பரங்களைப் படிக்காமத் தள்ளிண்டு போர்ற என்னை மாதிரி ஆளுங்க இருப்பாங்க, இல்லியா?"

"எஸ்.. இருப்பாங்க தான். அதுக்காகத் தான் இப்பல்லாம், விளம்பரம்ன்னு தெரியாம படிக்கற மேட்டரோடையே விளம்பரத்தையும் சேர்த்துக் கொடுக்கணும்ன்னு படிக்கறவங்க மனசிலே பதிய வைக்கிற முயற்சிலே இறங்கியிருக்காங்க..  ஜனங்களுக்கு நம்ம ப்ராடெக்ட் தெரிஞ்சிட்டாப் போதும், அவங்க வாங்கிடுவாங்கங்கறது அவங்க எண்ணம்.  அதான் தங்களோட பொருளை எப்படியானும் தெரிய வைக்கணும்ன்னு அவங்க நினைக்கிறாங்க.."

புத்தகங்களைப் படிச்சோம் போனோம் என்றில்லாமல் இந்த உஷா என்னலாம் விஷயங்கள் தெரிஞ்சு வைத்திருக்கிறாள் என்று வித்யாவுக்கு வியப்பாக இருந்தது.

அவள் மனத்தில் ஓடிய எண்ணத்தைப் படிச்சாற் போல "இந்த வார, மாசப் பத்திரிகைகளை விழுந்து விழுந்து நான் படிக்கறதைப் பார்த்து, இந்த சமாச்சாரமெல்லாம் இவர் சொல்லித் தான் எனக்குத் தெரியும்" என்று உஷா தன் புருஷன் விஷய ஞானத்தை சிலாக்கிக்கற மாதிரி சொன்னாள்.

"அப்போ அவரும் இதெல்லாம் நிறையப் படிப்பார் போலிருக்கு.."

"நன்னா சொன்னே போ.. இத்தனை புஸ்தகம் வாங்கறோமே?.. ஒண்ணைக் கூட புரட்டிப் பார்த்ததில்லே..  அதுவும் கதைன்னா கட்டோடு பிடிக்காது.  நிதர்சனமாத்தான் எத்தனையோ இருக்கே.  அது என்ன, கற்பனையா ஜோடிச்சு இவங்க வேறே எழுதறதும்பார்.  நிஜத்தை நேசிக்கறவர். அதனாலே வாழ்க்கையை நிஜமா எதிர்கொள்ளணும்பார்.   கற்பனை முடங்கிப் போக வைக்குமாம்.  நிஜம் நிஜமாவே சக்தி கொடுக்குமாம். "

"இதென்ன பாலிசி?.. நினைக்கற எல்லாத்தையுமா நிஜமாக்கிட முடியும்?"

"அதைத் தான் அவரும் சொல்றார்.  நிஜமாக்க முடியாததையெல்லாம் ஏன் நினைக்கணும்பார்!  நிஜமாக்க முடியாததெல்லாம் தான் ஏக்கமா கற்பனையாகறதுங்கறது அவரோட கட்சி."

"கற்பனைங்கறது நிஜ நடவடிக்கைக்கான ப்ரீ ப்ளான் இல்லையா?"

"இல்லையாம்.  நிஜத்தை நிஜமாய் எதிர்கொள்ளும் பொழுது தான் இறைவன் கொடுத்திருக்கிற அந்த எதிர்ப்பு சக்தி நம்ம உடம்பிலே செயல்படுமாம். அதே மாதிரி சந்தோஷமான நிஜம், உடம்புக்கு ஊட்டச்சக்தியை வாரி வழங்குமாம்.  எப்படிப்பட்ட கற்பனையும் நிஜத்தின் கால்தூசு கூடப் பெறாது என்பார்."

"இப்படிப்பட்டவர், எனக்கு ஆச்சரியமான்னா இருக்கு, இன்னைக்குக் கூட 'செந்தாமரை'யை அவர் தான் வாங்கிண்டு வந்ததா சொன்னே?"

"தான் படிக்கறத்துக்கா வாங்கினார்?.. எனக்குன்னா வாங்கிண்டு வந்தார்."

"அதான்.  இப்படிப்பட்டவர் அதெல்லாம் வாங்கறது வேஸ்ட்ன்னு நினைக்க மாட்டாரோ?  அதான் கேட்டேன்."

உஷா தலையைக் கோதிக்கொண்டே சிரித்தாள். "சின்ன வயசிலிருந்தே நான் ஒரு புஸ்தகப் பைத்தியம்ங்கறதாலே எந்த புஸ்தகத்தை எங்கே பார்த்தாலும் தவறாம வாங்கிண்டு வந்திடுவார்.   இந்த வாரப் பத்திரிகை இன்ன கிழமைலே வரும்ன்னு என்னை விட அவருக்கு நன்னாத் தெரியும்! இவ்வளவு ஏன்?.. அவருக்கு ஐஸ்கிரீம்ன்னா பிடிக்காது; உடம்புக்கு ஒத்துக்காது. ஆனா, நாங்க ரெண்டு பேரும் வெளிலே போனோம்ன்னா, எனக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தராம இருக்க மாட்டார்.  'இன்னும் பத்து கடை தாண்டி, அருண் ஐஸ்கிரீம் கிடைக்கும்'  சாப்பிட்டுப் போகலாம்பார்'.  நான் ஆசைப்பட்டு சாப்பிட்டா அவரும் சாப்பிட்ட மாதிரி.  அதான் அப்படிப் பன்மைலே சொல்றாரோன்னு நான் நெனைச்சிப்பேன்."

"அச்சா! ரொம்ப இன்ட்ரஸ்ட்டிங் பர்ஸனாய் இருப்பார் போலிருக்கே." என்று சொல்லும் பொழுதே தான் எழுதப்போகும் முதல் கதைக்கான கரு கிடைத்த சந்தோஷம் வித்யாவின் முகத்தில் தெரிந்தது.

"ஒரு நாளைக்கு நீயே பேசிப்பார்.  பேசினது இன்ட்ரஸ்ட்டிங்கா இருந்ததா இல்லையான்னு சொல்லு.."

"நிச்சயம்.  நிறைய கதை கிடைக்கும் போலிருக்கு.  எழுத்துப் பட்டரைக்குப் போய்ட்டு வந்த பின்னாடி ஒரு நாளைக்கு வைச்சிக்கலாம்."

"கதையா?.. என்ன சொல்றே?"

"விஜி எழுதறக்கு மேட்டர் கிடைக்கும் இல்லையா?.. அதைச் சொன்னேன்"  என்று சொல்லி விட்டு வித்யா சுவர் கடிகாரத்தில் மணி பார்த்தாள். "காலம்பற தோசை ஆச்சு..  இனிமேத்தான் சாப்டணும்.  நடுவிலே காப்பிப்பொடி வாங்கிண்டு வந்திடலாமான்னு பாக்கறேன்.  எப்பவும் டப்பாலே கொஞ்சம் இருக்கறச்சேயே ஞாபகம் வந்திடும்.  ஏதோ மறந்தாச்சு. சுத்தமா இல்லே" என்று வித்யா சொன்ன போது "எனக்குக்கூட ரெண்டு மூணு மளிகை சாமான் வாங்கணும்.  போயிட்டு வந்திடலாம்" என்று உஷா எழுந்திருந்தாள்.

அதற்குள் வீட்டிற்குப் போய் ஒரு பையும், பர்ஸையும் எடுத்துக் கொண்டு கதைவை சாத்தி பூட்டி விட்டு வந்தாள் வித்யா.

அவர்கள் வசித்த ஸ்டோரின் நுழைவு வாசல் பக்கம் உள்ளடங்கி அந்தந்த வீட்டு நம்பர் போட்டு அத்தனை வீட்டிற்கும் சின்ன சின்ன பெட்டியாய் போஸ்ட் பாக்ஸ் இருந்தது.   அந்தப் பக்கம் போய் தங்களுக்கு ஏதாவது தபால் இருக்கிறதா என்று பார்க்க 'Z' என்று போட்டிருந்த பெட்டியைத் திறந்தாள் வித்யா.  பெட்டியில் கத்தை தபால்கள் இருந்தன.  அந்தத் தபால்களின் ஊடே  'செந்தாமரை' பத்திரிகையும் உரையிட்டு இருந்தது, அவள் முகத்தில் சந்தோஷத்தைப் பூசியது.   மேலாகப் பார்க்கையிலேயே இரண்டு மூன்று பத்திரிகைகளிலிருந்து தபால்களும் வந்திருப்பது தெரிந்தது.

அவற்றை எடுத்துக் கொண்டு வந்தவள், 'செந்தாமரை' பத்திரிகையை மட்டும் எடுத்து உஷாவிடம் காட்டினாள்.

"பரவாயில்லையே!  காசு கொடுத்து வாங்க வேண்டியதில்லை.  அவங்களே அனுப்பிச்சிட்டாங்களே" என்று உஷா சொன்னதும்,  கதை எழுதவறங்களுக்கு இது கூட செய்யலேனா, எப்படி?" என்று வக்கணையாக அவளுக்கு பதில் சொன்னாள் வித்யா. இப்படியெல்லாம் 'கெத்'தாகப் பேசும் வழக்கமெல்லாம் வித்யாவிற்குக் கிடையாது.  இப்பொழுது புதுசாக இதெல்லாம் வந்து எப்படி ஒட்டிக் கொண்டதென்று தெரியவில்லை.

"அப்போ கதை எழுதினதுக்கு சன்மானம்?"

"தனியா வரும்" என்றாள் வித்யா..

"மணியாடரா?.."

"இல்லே. செக்.. 'மெஜாட்டியோ'வுக்கு செக் தான் வந்தது.. இதுக்கும் அப்படித்தான்னு நினைக்கிறேன்.

"எவ்வளவு?.." என்று கேட்க நினைத்த உஷா ஏனோ கேட்கவில்லை. பத்திரிகைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம், கொஞ்சம் பர்ஸனலாகப் போய்விடக்கூடாது என்கிற உணர்வு கேட்கவிடாமல் அவளைத் தடுத்தது.

அதற்குள் அவர்கள் வாசல் மெயின் கேட் தாண்டி தெருப்பக்கம் வந்து விட்டார்கள்.

நாலு தப்படி கூட நடந்திருக்க மாட்டார்கள். "அடிசக்கை!.. வித்யா.. அதோ பாத்தையா?"-- எதிர்ப்பக்கம் சுவரில் பெரிசு பெரிசாக ஒட்டியிருந்த வால்போஸ்டர்களைக் காட்டினாள் உஷா.

அதைப் பார்த்த வித்யாவின் பாதாதி கேசம் ஒரு சிலிர்ப்பு சிலிர்த்து அடங்கியது.  வால் போஸ்டரில், அந்தப் பிரபலப் பத்திரிகையின் பெயர் போட்டு, கொட்டை கொட்டை எழுத்துக்களில்,

                                                   விஜி எழுதும்

                                             காதல் தேசம்

                       தொடர் கதை-- விரைவில் ஆரம்பம்

--என்று போட்டிருந்தது.


(இன்னும் வரும்)





Saturday, April 7, 2012

பார்வை (பகுதி-39)

ழுத்துப் பட்டறை என்கிற சொல்லை இதற்கு முன் கேள்விப்பட்டதில்லை வித்யா.  அதனால், ரிஷி அந்த வார்த்தையை உச்சரித்த பொழுது விநோதமாக நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

"என்ன பார்க்கிறே?" என்று புரியாமல் கேட்டான் ரிஷி.

"என்னமோ சொன்னீங்களே.. சரியாக் காதிலே விழலே.. அதான்."

"இன்னிக்கு சாயந்தரம் 'எழுத்துப் பட்டறை' இருக்கு. ஆபீஸ் முடிந்தவுடன் நேரா அங்கே போயிட்டு கொஞ்சம் லேட்டாத் தான் வருவேன்.  சரியா?"

"எழுத்துப் பட்டறையா?.. என்ன அது?..  கொல்லன் பட்டறை-- கேள்விப் பட்டிருக்கேன்!..  அது என்ன எழுத்துப் பட்டறை?"

"எழுதுவதற்கான பயிற்சிக் களம்ன்னு வைச்சிக்கோயேன்."

"எழுதறதுக்குக் கூட பயிற்சி தேவையா, என்ன?"

"பின்னே?.. எழுதறது என்ன அவ்வளவு லேசுப் பட்ட காரியமா, என்ன?.. நிறைய பேருக்கு கற்பனைலே கதைகதையா தோணும். ஆனா சுவாரஸ்யமா சொல்லத் தெரியாது. நிறைய பேருக்கு சொல்லத் தெரியும். ஆனா இன்னொருத்தர் சுவாரஸ்யத்தோட படிச்சு ரசிக்கற மாதிரி எழுதத் தெரியாது.  ஆக, எழுதறத்துக்கும் ஒரு பயிற்சி தேவையா இருக்கு, இல்லயா?..  அதைச் சொல்லிக் கொடுக்கற வகுப்பு மாதிரின்னு வைச்சிக்கோயேன்."

"நியாயம் தான் நீங்க சொல்றதும்.  இப்போலாம் சில பேர் எழுதறதைப் பார்த்தா இப்படி ஒரு களன் தேவைதான்னு தோண்றது. அதுசரி,  நீங்க இப்பத்தான் எப்படி எழுதறதுன்னு பயிற்சி பெறப் போறீங்களா?"

"உண்மைலே அப்படித்தான்.  லட்சக்கணக்கா விக்கற பத்திரிகையை இன்னும் பல லட்சம் பேர் படிப்பாங்க இல்லையா?..  நிறைய பேர்ங்கறதாலே எல்லாருக்கும் பொதுவா பிடிச்ச விஷயங்களை எழுதணும்.  பிடிக்கறதோ இல்லையோ,  'என்னடா எழுதியிருக்கான்'னு யாரும் விசிறிப் பத்திரிகையைத் தூர எறிஞ்சிடக் கூடாது.  மொத்தத்திலே கதை படிக்கற அந்த பத்து நிமிஷத்திலே சுத்தி நடக்கற எதுவுமே அவனுக்குப் புலப்படாத மாதிரி புடிச்சு வைச்சிக்கற மாதிரி எழுதணும்.  அந்த மாதிரி எழுதறது எப்படிங்கறதுக்கான எழுத்துப் பட்டறை இது.  லஷ்மணன் சார் தான் ஏற்பாடு பண்ணியிருக்கார். கிட்டத்தட்ட எழுபது- எண்பது பேருக்கு மேலே கலந்துப்பாங்கன்னு நினைக்கிறேன்."

"கலந்துக்கறவங்க அத்தனை பேரும் எழுத்தாளர்களா?"

"அத்தனை பேரும் எழுத்தாளர்களா இருப்பாங்கங்களான்னு தெரிலே.  ஒருத்தர் சொல்லி ஒருத்தர்ன்னு நிறையப் பேரை எதிர்பார்க்கறாங்க. ஒரு கதைன்னா ஓரிரண்டு வரிலே இதான் கதைன்னு ரொம்பப் பேர் சொல்லிடறாங்க இல்லையா?   அந்த மாதிரி படிச்ச ஒரு கதையை பாமரத்தனமா புரிஞ்சிக்காம, ஒருத்தன் எழுதறதை எப்படி ரசிச்சுப் படிச்சுத் தெரிஞ்சிக்கறதுங்கறத்துக்கான பயிற்சியும் இருக்கும் போலே இருக்கு.  இது ரெண்டாம் கட்ட வாசகர்களை உருவாக்கற வேலை.  பெரும்பாலும் இப்படி உருவாகற வாசகர்கள் நாளாவட்டத்லே அவங்களும் கதையோ, கட்டுரையோ எழுத ஆரம்பிச்சிடுவாங்க.   இப்பவே இப்படிப்பட்ட வாசகர்களையும் உருவாக்கணும்ங்கறதிலே லஷ்மணன் சார் குறியா இருக்கார். அதனாலே அதுக்கான வாசகர்களும் வருவாங்கன்னு நினைக்கிறேன்" என்று சுவர்க் கடியாரத்தைப் பார்த்தான் ரிஷி.  மணி ஏழுதான் ஆகியிருந்தது. காலை காப்பி மட்டும் ஆகியிருந்தது.  ஒன்பது மணி வாக்கில் சாப்பிட்டு விட்டுக் கிளம்பினானால், பத்துக்கெல்லாம் ஆஃபீசில் இருக்கலாம்.

தோசைக்கல்லில் மாவை ஊற்றி விட்டு,"ஒருத்தர் சொல்லி ஒருத்தர்ன்னா, உங்கள் பங்குக்கு நீங்க யாரையானும் சொல்லியிருக்கீங்கங்களா.."என்றாள் வித்யா.

"யாரையும் இல்லே.  ஏன் கேக்கறே?"

"என்னைச் சொல்லியிருக்கலாமிலேங்கறத்துக்காகத் தான்.  ஏன் நான் கலந்துக்கக் கூடாதா?" ஒரு முட்டை ஸ்பூனில் எண்ணை எடுத்து தோசை சுற்றிலும் வார்த்தாள்.

"ரெண்டு நாள் நடக்கப் போறது, வித்யா!  இன்னிக்கு சாயந்தரமும் நாளைக்குக் காலம்பறவும்.  இன்னிக்கு முழுக்க முழுக்க எழுதறவங்களுக்கான பயிற்சி.  நாளைக்கு வாசகர்களும் கலந்துக்கற மாதிரி இருக்கும். நாளைக்கு வேணா நீ வரலாமே?"

"ஏன் நான் எழுதக் கூடாதா, என்ன?" என்று அம்பென வித்யாவிடமிருந்து புறப்பட்டக் கேள்வி ரிஷியை அசர வைத்துவிட்டது.

ரிஷி பதிலேதும் சொல்லாததிருந்ததைப் பார்த்து, "நேத்திக்கு ஊர்மிளா கூட சொல்லலையா, 'வித்யா, பேசாம நீங்களும் எழுத்தாளரா ஆகியிருக்கலாம்;  நினைக்கிறதை நன்னாத் தான் சொல்றீங்க'ன்னு.  உங்களுக்குத் தான் இதெல்லாம் தானே தெரிலேனாலும்,  அவங்கள்லாம் சொல்றதைப் பாத்தானும் தெரிஞ்சிக்கலாமில்லையா?" என்று வித்யா சொன்ன போது
"அப்படிப் போடு! அதானா விஷயம்?" என்று கலகலத்தான் ரிஷி.

"சிரிக்கறத்துக்கு நான் ஒண்ணும் இல்லாததைச் சொல்லிடலேயே?.. ஊர்மிளா சொன்னதைத் தானே சொன்னேன்?.." என்று வித்யா தோசையைத் திருப்பிப் போட்டாள்.

"ஊர்மிளா சொன்னது இருக்கட்டும். . நீயா என்ன சொல்றே, அதைச் சொல்லு.."

"நான் சொல்லணும்னா நெறையச் சொல்லலாம்.  ராத்திரி முச்சூடும் இதான் யோசனை. சரியாக் கூடத் தூங்கலே.." என்று அடுப்பை அணைத்து விட்டு வார்த்திருந்த தோசைகளை டிபன் பாக்ஸில் அடுக்கி, ஒரு சின்ன கிண்ணத்தில் மிளகாய்ப்பொடி போட்டு எண்ணை ஊற்றி அதனுள் வைத்து மூடினாள்.

"பொய் சொல்லாதே.. நீ விட்ட குறட்டைலே தூங்க முடியாம ஸ்டடி ரூம்லே போய் எழுந்திண்டிருந்த எனக்குன்னா தெரியும், நீ எப்படித் தூங்கினேன்னு.."

"நீங்க எழுந்து போனதெல்லாம் தெரியும்..  என்ன, அப்போ நாலு மணி இருக்குமா?.. அதுக்கு மேலே தான் சித்த தூக்கம் வந்தது..அஞ்சுக்கெல்லாம் எழுந்தாச்சு...   எழுந்திருந்தாத் தான் ஒவ்வொண்ணா தலைக்கு மேலே வேலை இருக்கே.."

"அதான் நானும் சொல்றேன்.  இருக்கற வேலையோட எழுதற வேலை வேறா?
இழுத்துப் போட்டிண்டையானா சதா இதே நினைப்பா இருக்கும்."

"நீங்க ஆபீஸுக்குப் போனபின்னாடி எனக்கென்ன வேலை?..  சொல்லுங்கோ. கொட்டு கொட்டுன்னு உக்காந்திண்டு வம்பளக்க யாராவது வருவாளான்னு இல்லே கதைவைச் சாத்திண்டு நாம போவோமான்னு இல்லாம..."

"...........................'

"நான் கூட வெறுமனே இந்த வாரப்பத்திரிகை, மாசப்பத்திரிகையெல்லாம் பிரிச்சோமா, சுவாரஸ்யமா கண்ணுக்குத் தட்டுப்படறதையெல்லாம் படிச்சோமான்னு தான் இருந்தேன்.  நேத்திக்கு லஷ்மணன் சொன்னதை யெல்லாம் கேட்டு, அவர் கதையெல்லாம் கூட எவ்வளவு மேம்போக்காப் படிச்சிருக்கோம்ன்னு தோணித்து..  உஷா மாதிரி படிக்கணும்னு தீர்மானிச்சிட்டேன்.  அதோட உஷா மாதிரி வாசகர் கடிதம் எழுதறதைத் தாண்டி கதைகளும் எழுத முயற்சிக்கணும்ன்னு தோண்றது."

"அப்படின்னா சரி.  நான் தடுக்கலே. இங்கே மேட்லி பிரிட்ஜ் பக்கத்லே ஒரு கல்யாண சத்திரத்லே தான் பட்டறை நடக்கறது.  அட்ரஸ் தரேன். சாயந்தரம் ஆறுக்கெல்லாம் அங்கே இருக்கற மாதிரி வந்திடு. ராத்திரி டின்னருக்கு ஏற்பாடு செஞ்சிருக்கு.  திரும்ப பத்தாயிடும். அதனாலே கெளதமை விட்டுட்டு வர வேண்டாம். அவனையும் கூட்டிண்டு வந்திடு."

"காலம்பற இப்பவே சொல்லிட்டா உஷாவும் வந்துடுவா.  அவளும் வந்திட்டா எனக்கும் ஒரு துணையா இருக்கும்.  இல்லையா?"

"கரெக்ட்.  அதுமட்டுமில்லே.  உஷா வர்றது பின்னாடி பல விஷயங்களுக்கு உபயோகமா இருக்கும்.  கண்டிப்பா அவளையும் கூட்டிண்டு வா.  எதுக்கும் உஷா வர்றதைப் பத்தி அப்புறம் எனக்கு 'கன்ஃபர்ம் பண்றையா?.. அவங்க வரலேன்னா, ஆபீசிலேந்து கொஞ்சம் முன்னாடி வந்து நானே உன்னைக் கூட்டிண்டு போறேன். சரியா?"

பிள்ளை விஷயத்தில், பெண்டாட்டி விஷயத்தில் என்று எல்லாவற்றிலும் புருஷன் அக்கறை கொண்டிருப்பது அவளுக்குப் பிடித்திருந்தது.  "நீங்க கவலைப்பட வேண்டாம்.  எப்படியும் உஷா வருவா.  நாங்க வந்திடறோம்." என்றாள்.

"சரி..."

கெளதம் பள்ளிக்குக் கிளம்பிப் போய் கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ரிஷியும் ஆபீசுக்குக் கிளம்பிப் போனான்.  அவன் சென்ற பின்னால், வித்யாவும் இரண்டு தோசைகளை தட்டில் எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தாள்.  உட்கார்ந்ததும் தான் புதினாத் துவையல் பிரிட்ஜில் இருப்பது நினைவுக்கு வந்தது.  எழுத்து அதையும், ஒரு டம்ளர் தண்ணீரையும் எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தாள்.  ஏதேதோ நினைவுகள் மூளை செல்களில் ஊர்வலமாகப் போகையில் இதற்கு அடுத்தது அது என்கிற மாதிரி ஒவ்வொரு காரியத்தையும் செய்வதே அனிச்சைத்தனமாக அவளுக்குப் பட்டது. 'இதில் கதை வேறு எழுத ஆரம்பித்து விட்டால்..' என்று நினைத்த பொழுது சிரிப்பு தான் வந்தது.  அடுப்பில் குழம்பு கொதிப்பது கூடத் தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கலாம் என்கிற நினைப்பே எல்லா வேலையையும் இந்த எழுதற வேலை சாப்பிட்டு விடுமோ என்று அவளுக்கு பயமாக இருந்தது. இன்னும் கொஞ்சம் யோசித்த பொழுது, இதையே கூட ஒரு கதையாக எழுதலாமோ என்று தோன்றித்து.  'உஷாவுக்கு வேறு தகவல் சொல்ல வேண்டுமே' என்கிற நினைப்பு வந்ததும், அவசர அவசரமாக தட்டில் இருந்த தோசையை விள்ளி வாயில் போட்டுக் கொண்டாள்.  புதினா துவையல் கொஞ்சம் காட்டமாக இருந்தது வாட்டமா இருந்தது.  டம்ளர் தண்ணீர் உள்ளே போனதும் காலையில் எழுந்திருந்ததிலிருந்து பம்பரமாகச் சுற்றியதற்கு அம்மாடி என்றிருந்தது.

'இத்தனை நேரம் உஷா புருஷனும் ஆபீசுக்குக் கிளம்பியிருப்பார்..  அதனால் உட்காரச் சொன்னாலும் சொல்லுவாள்' என்கிற யோசனையில் வாசல் பூட்டு சாவியை எடுத்துக் கொண்டு, வாசல் கிரில் கதவை மட்டும் பூட்டி விட்டுக் கிளம்பினாள்.


(இன்னும் வரும்)





  

Monday, April 2, 2012

பார்வை (பகுதி-38)

"சொல்லுங்க, உத்தமபுத்திரன்!"

உத்தம புத்திரன் தயங்கித் தயங்கித் தான் பேசினான்.  ஸ்பீக்கர் போன் நிலையில் ஃபோனை வைத்திருந்ததால், அவன் பேசியது அந்த ஹால் முழுக்கக் கேட்டது.

"ஸார்! நான் சொல்லியிருந்தேன்லே, அந்த டி.வி.புரோக்கிராமிற்காக ரிகார்டிங் வேலை ஏதோ காரணங்களினாலே தள்ளித் தள்ளிப் போர்றது.. முதல்லே டைரக்டர் ரெடியா இருந்தப்போ, டி.வி.காரங்களுக்கு இந்த மாதிரி புரோக்கிராம்லே ஒரு தயக்கம் இருந்தது. இப்போன்னா, டி.வி.காரங்க ஓ.கே. சொல்லிட்டாங்களாம்.  ஆனா, டைரக்டர் அவுட் டோர் ஷூட்டிங்குக்காக சுவிட்ஸர்லாந்த் போயிருக்கார்.  இரண்டு ஸாங்.  ரெண்டையும் முடிச்சிண்டு வர்றத்துக்கு ஒரு மாசத்துக்கு மேலே ஆகுமாம்."

"பரவாயில்லை, உத்தமபுத்திரன்.. டேக் இட் ஈஸி.."

"இல்லே, சார்! எனக்குத் தான் இதை உங்க கிட்டே சொல்றத்துக்குக் கூட கஷ்டமா இருக்கு.  அந்த டைரக்டர் தான் உங்க சப்ஜெக்ட்க்கு ஏத்தவர். ஒரு கமிட்மெண்ட்டோட எடுக்கக் கூடியவர்.  எந்தத் துறைலேயும் ஓபனிங் நன்னா இருந்தா அப்புறம் உங்களுக்கும் பிக் அப் ஆயிடும்ங்கறத்துக்காகத் தான் கொஞ்சம் வெயிட் பண்ணலாம்ன்னு தோண்றது."

"அதான் சொன்னேனே, உத்தமபுத்திரன், பரவாயில்லேன்னு.. எனக்கும் வேறே சில கமிட்மெண்ட் இப்போ புதுசா வந்திருக்கு.  நடுவிலே இந்த விஷயத்தையும் கொஞ்சம் ஒத்திப் போடலாம்ன்னு நினைக்கிறேன். எதுக்கும் நீங்க எங்கிடே கன்ஃபர்ம் பண்ணிக்கிட்டு இது விஷயமா மேற்கொண்டு முயற்சி எடுக்கலாம். என்ன?"

"ஸாரி, ஸார்.  ஏதோ கோபத்லே இருக்காப்லே இருக்கு.."

"நோ..நோ.." என்று அவசரமாக அதை மறுத்தான் லஷ்மணன்."எல்லாம் நல்லதுக்காகத் தான்.  நேர்லே பாக்கும் பொழுது சொல்றேனே? இப்போ ஃபோனை வைச்சிடட்டுமா?"

"சரி. ஸார்.."என்று மறுமுனையில் பதில் வந்ததும், ஃபோனைத் துண்டித்தான் லஷ்மணன்.

புத்தக அலமாரி திறந்து இரண்டு மூன்று காமிக் புத்தகங்களை எடுத்து கெளதமிடம் எடுத்துத் தந்தாள் ஊர்மிளா.  மூலையில் போட்டிருந்த சோபாவில் போய் உட்கார்ந்து கொண்டு அதைப் படிக்கத் தொடங்கினான் கெளதம்.

வந்து உட்கார்ந்ததும், "ஒண்ணுமில்லே. என் கதை ஒண்ணை சினிமாவா எடுக்கலாம்ன்னு ஒருத்தர் அபிப்ராயப்பட்டு ஆரம்ப வேலைலே இறங்கினார்.  அது சம்பந்தமா.." என்று லஷ்மணன் சொல்லும் பொழுதே, "நல்ல ஐடியா,சார்! எந்தக் கதைன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?" என்று ஆர்வத்துடன் கேட்டாள் வித்யா.

"அந்த ஐடியாவையே இப்போதைக்கு டிராப் பண்ணிடலாம்ன்னு இப்போ நினைக்கிறேன், வித்யா" என்று லஷ்மணன் சொன்ன போது, ஏன் இப்படிச் சொல்கிறார் என்று ஊர்மிளாவுக்கும் இருந்தது.

வித்யாவும் அதையேத் தான் கேட்டாள். "ஏன் சார்?.. முதல் முதல் வர்ற வாய்ப்பு.."

"அதனால் தான்.." என்றான் லஷ்மணன். "எப்பவும் முதல் அடியை தீர்மானமா எடுத்து வைக்கணும். அப்படி எடுத்து வைக்கறத்துக்கு முன்னாடி ஆயிரம் யோசனை இருக்கலாம். ஆனா, எடுத்து வைச்ச பிறகு ஏன் எடுத்து வைச்சோம்ன்னு ஆகிடக் கூடாதல்லவா?.. அதுக்காகத் தான்.  அதுவும் தவிர, இப்போ புதுசா நிறைய வேலை குவிஞ்சிருக்கில்லையா? இதிலே தீவிரமா கவனம் செலுத்தணும். அதனால் தான்" என்று அவன் சொன்ன போது, எழுத்தில் அவன் கொண்டிருந்த ஈடுபாடு ஊர்மிளாவுக்குப் பெருமையாக இருந்தது.  வித்யாவிற்கோ வலிய வந்த வாய்ப்பை நழுவ விடுகிற மனுஷனைப் புதுசாகப் பார்க்கிற பிரமிப்பு இருந்தது.  ரிஷியோ இதெல்லாம் எதிர்காலத்தில் தானும் கடைபிடிக்க வேண்டிய பாடம் போலும் என்கிற பாவனையில் லஷ்மணனின் உணர்வுகளை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தான்.

"அது என்னவோ தெரிலே, பத்திரிகைலே வந்த கதையெல்லாம் சினிமாக்கு லாயக்காத் தெரிலே..  ஆனா, டி.வி. சீரியல்களுக்குத் தான் பொருத்தமா இருக்கும்ன்னு எனக்கு அப்பப்போ தோணும்.  அப்படித் தோணிலாலும் அங்கேயும் படிச்சதைக் கெடுத்துத் தொலைச்சிடுவாங்களோன்னு பயமாவும் இருக்கும்" என்றாள் வித்யா.

"வித்யா! பேசாம நீங்களும் ஒரு எழுத்தாளரா ஆகியிருக்கலாம்.  நினைக்கறதை நன்னாத் தான் சொல்றீங்க.." என்று லேசான சிரிப்புடன் சொன்னாள் ஊர்மிளா. "கதை சொல்றதும் கேக்கறதும் உலகளாவிய பாரம்பரிய பழக்கம். படிச்சுத் தெரிஞ்சிக்கறது புஸ்தகம்ன்னா, பார்த்துத் தெரிஞ்சிக்கறது சினிமா,டிராமா, டி.வி. சீரியல் இதெல்லாம்.  தமிழ்நாட்டிலே வார, மாதப் பத்திரிகைங்க இல்லேனா, சிறுகதை, நாவல் இதெல்லாம் இவ்வளவு விரிவா ஜனங்கள் மத்திலே பழக்கப்பட்டிருக்காதுன்னு தாராளமாச் சொல்லலாம்.  இப்போ என்னன்னா சினிமாச் செய்திகள் முக்கியம் ஆகி, பத்திரிகைகளை ஆக்கிரமிச்சிண்டதும், கதையெல்லாம் டி.வி.பக்கம் போயிடுத்துன்னு நெனைக்கிறேன்"

"என்னுடைய கேள்வி என்னன்னா, பத்திரிகை--பதிப்பகம் இப்படித்தானே போகணும்?.. ஏன் அப்படிப் போகலேங்கறது தான்.." என்றாள் வித்யா

"படிச்சுத் தெரிஞ்சிக்கறதை விட பார்த்து, கேட்டுத் தெரிஞ்சிக்கற பழக்கம் அதிகமாயிட்டதாலே இருக்கலாம்.." என்றான் ரிஷி.

"அப்படியும் சொல்ல முடியாது.." என்றாள் ஊர்மிளா. "பதிப்பகப் பிரசுரக் கதைகள்ன்னு எடுத்திண்டா சில எழுத்தாளர்கள் எழுதினதுன்னா அதுக்கு இருக்கற மவுசே தனின்னு தான் தோண்றது. அதுவும் பத்திரிகைலே பிரசுரமான கதை அதுன்னா 'டக்'குன்னு ஜனங்க வாங்கிடறாங்க.."

"உங்க அனுபவத்தில்லே சொல்கிறீங்க... நீங்களே சொல்லிட்டா சரிதான். அதான் முன்னே இருந்த மாதிரி இப்போலாம் பத்திரிகைகள் தான் கதைங்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கறதில்லேன்னு ஆயிடுச்சே!  அப்போ எப்படி?" என்று அந்த 'எப்படி'யைக் கொஞ்சம் இழுத்தவாறே கேட்டாள் வித்யா.

"நீ கேக்கறதைப் பார்த்தா நிலமை இப்படியேப் போனா என்னத்தை எழுதி எந்த காலத்திலே நான் பிரபலமடையறதுங்கற கவலை உன்னை இப்பவே பிடிச்சிண்ட மாதிரி இருக்கே.."என்று சொன்ன ரிஷியால் சிரிப்பை அடக்க முடியவில்லை.. "நாம விரும்பியோ விரும்பாமலோ இங்கே அதான் நிலைமை.  பிரபல பத்திரிகை--வாசகர்--புத்தக விற்பனைன்னு ஒரு சங்கிலிப் பிணைப்பு ஃபார்ம் ஆயிடுது. சினிமா, ராசிபலன், ஜோதிடம், ஆன்மிகம், விளம்பரம் அத்தனைக்கும் இங்கே மார்க்கெட்டிங் சோர்ஸ் பத்திரிகை தான்.  ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு இன்ட்ரஸ்ட்டுன்னு அமோகமா இங்கே வியாபாரம் நடந்திண்டிருக்கு. தெரிஞ்சிக்கோ."

"இந்த நிலைமைலேயும் நாலு பத்திரிகைலே நாலு தொடர்கள் எழுதிண்டு வர்றேன், இல்லையா?..  அதுனாலே ஒரேடியா மனந்தளர்ந்திடக் கூடாது.  கதைகள் படிக்கறதுக்குன்னு ஒரு செக்ஷன் இருந்தா, எப்படியானும் அவங்க படிச்சிண்டே தான் இருப்பாங்க.. அவங்களுக்காக எழுதறத்துக்காக எழுத்தாளர்களும் இருந்திண்டு தான் இருப்பாங்க.." என்றான் லஷ்மணன்.  "ஆனா, ஒருவிதத்தில் பார்க்கப் போனா, பத்திரிகைப் படைப்புலகை பொறுத்த மட்டில் முன்னாடிலாம் இருந்ததுக்கு இப்போ இருக்கற நிலமை ஒரு ஷீண நிலைன்னு தான் சொல்லணும். இருந்தாலும் மனம் தளரக் கூடாது. வாசகர்கள் தான் ஆதாரம். அவங்க தான் எல்லாம்.  இந்த டிரண்ட் மாறும்ன்னு நினைக்கிறேன்" என்றான்.

"புத்தகத் திருவிழாக்குப் போனா மலைப்பா இருக்கு.  மலை மலையா புதுசு புதுசா புத்தகங்கள் குவிஞ்சிருக்கு. கதைகள் படிக்கணும்னா இனிமே நேரா பதிப்பக புத்தகங்கங்களையே வாங்கிப் படிக்க வேண்டியது தானா?" என்றாள் வித்யா.

"அப்படிப் போனாலும் பரவாயில்லைங்கலாம். மேல் நாட்டேலாம் கதை, கட்டுரை, கவிதை எல்லாமே புத்தக ரூபமெடுத்தாச்சு.  பருவ இதழ்களெல்லாம் செய்திகளை வைத்து செய்திகள் எழுதறதுக்காகத்தான்.       இங்கேயும் நாளாவட்டத்திலே அப்படித்தான் ஆகும் போலிருக்கு. ஆனா பத்திரிகைகளு க்கு இருக்கற வீச்சு பதிப்பகங்களுக்குக் கிடையாது.  அது வேறோர் தனி உலகம். அந்த உலகத்தின் அனுபவங்களும் அலாதியானது.  பலது அனுபவப்பட்டா தான் தெரிஞ்சிக்க முடியும். அதுலே ஒண்ணு தன் படைப்புகளை புத்தகமா பாக்கறதும்." என்றான் லஷ்மணன்.

"உங்களுக்கு ரொம்ப தைரியம் தான்.."என்றாள் வித்யா. "ஊர்மிளாவை பக்கத்திலே வைச்சிண்டே பதிப்பகங்களைப் பத்தி..."

"அவங்க பதிப்பகம் எல்லாத்திலே இருந்தும் வித்தியாசமானது. அங்கே பத்திரிகைலே எழுதியேயிராத எழுத்தாளருக்கு முன்னுரிமை கொடுத்து பதிப்பகச் செலவிலேயே அவங்களோட நூல்களைப் பதிப்பிக்க தயாரா இருக்காங்க.  ஆனா, என்ன புத்தகம்- யாருடையதுங்கறதை அவங்க தான் தீர்மானிப்பாங்க.. அவங்க கை மோதிரக் கை.  குட்டுப்பட நிறையப் பேர் காத்திருக்காங்க.." என்று லஷ்மணன் சொன்ன போது, சுலோச்சனா தன்னிடம் சொன்ன விஷயத்தைச் சொல்லிடலாமான்னு ஊர்மிளாவுக்கு திடீரென்று அந்த விஷயம் ஞாபகம் வந்தது.  இருந்தாலும், 'சுலோச்சனா தானே சொல்லியிருக்கிறாள்,  பதிப்பக உரிமையாளர்களிடமிருந்து தகவல் வந்தால் பிறகு லஷ்மணனிடம் சொல்லிக் கொள்ளலாம்' என்று பேசாமல் இருந்தாள்.

"இப்போல்லாம் பதிப்பகங்களிலேயும் கதைன்னா மூஞ்சியைத் திருப்பிக்கறாங்க..  அதெல்லாம் போகட்டும்.  பேசிண்டே போனா, ஒண்ணு நம்பிக்கை தளர்வு ஏற்படும், இல்லே தடம் புரண்ட ரயிலை மீண்டும் தண்டவாளத்திலே ஏத்த உத்வேகம் உண்டாகும்.  இந்த இரண்டு மாசமா ரெண்டாவது சொன்னதுக்குத் தான் என்ன செய்யலாம்ன்னு யோசிச்சிண்டு இருக்கேன்.." என்றான் லஷ்மணன்.

அந்த சமயத்தில், 'தமிழுக்கும் அமுதென்று பேர்' என்று சுசீலாவின் குரல் ரிங்டோனாய் மிழற்ற, சடாரென்று இடுப்புப் பட்டையிலிருந்து செல் போனை மீட்டெடுத்த ரிஷி, "ஒரு நிமிஷம்" என்று அவர்களிடம் அனுமதி வாங்கிக் கொண்டு ஜன்னல் பக்கம் போய் பேசிவிட்டு வந்தான்.

வந்ததும், "'மெஜாட்டியோ' கதைக்கு முதல் பாராட்டு.. அதான்.." என்றான்.  அவன் சொன்னதைக் கேட்டு வித்யாவிற்கு முகம் கொள்ளாத மகிழ்ச்சி.

"ஹை.. முதல் பாராட்டா?.. யாருகிட்டேயிருந்துங்க?" என்றாள் ஊர்மிளா.

"என் குளோஸ் ஃப்ரண்டுங்க.  சிறுபத்திரிகைங்கன்னா இவனுக்கு உயிர்! இவன் சொல்லித்தான் 'கணையாழி'ன்னு ஒரு பத்திரிகை இருக்கறதே எனக்குத் தெரியும்! சுந்தர சோழன்னு பேர்.  'தனிச் சுற்றுக்கு'ன்னு போட்டு நிறைய சிறுபத்திரிகைகள் இவனுக்கு வரும்.  அதிலேலாம் எழுதவும் செய்வான். இவன் கொடுத்து படிச்சதினாலே தான் சின்னச் சின்னப் பத்திரிகைகள் எத்தனை இருக்குன்னு அந்த இன்னொரு ஒரு உலகமும் எனக்குத் தெரிஞ்சது."

யோசனையுடன் "ரொம்ப நல்லது.." என்றான் லஷ்மணன். "ஸோ.. சிறுபத்திரிகை உலகத்திலேந்தும் பாராட்டு வந்திடுத்து, இல்லையா?.. அதான் வேணும். இதைத் தான் நான் எதிர்பார்த்தேன்! வெகுஜன பத்திரிகைலே எழுதறோம்ன்னு வெட்கப்படறதுக்கு ஒண்ணுமில்லே.  எழுத்தாளனுக்கு என்னைக்குமே முதல் முக்கியம், என்ன எழுதறோம்ங்கறது. அந்த விழிப்புணர்வு! அதான் முக்கியம். அந்த முக்கியத்தை ஒட்டியே அடுத்த முக்கியம்,  அவன் முக்கியமா கருதி எழுதற அந்த எழுத்து எத்தனை பேருக்குப் போய்ச் சேர்றதுங்கறது.  எழுதறதுங்கறதே, அதுக்காகத் தான் இல்லையா?" என்றவன், தீவிர சிந்தனையுடன், "'இன்பத் தமிழ் நல்ல புகழ் மிக்கப் புலவர்க்கு வேல்'ன்னு அந்த பாரதிதாசன் பாட்டிலே ஒரு வரி வருமில்லையா?.. அதான் நம்ம எல்லா முயற்சிக்கும் ஆதாரம்! இந்த சுந்தர சோழனும் எழுதுவார் இல்லையா? நீங்க என்ன செய்றீங்கன்னா..  இந்த சுந்தர சோழன்,  அப்புறம் இந்த சுந்தர சோழன் போன்றவர்களை எனக்கு நீங்க அறிமுகப்படுத்தணுமே, ரிஷி!" என்றான்.

"தாராளமா.." என்று ரிஷி சொன்னவுடனேயே, "என்னது?.. எந்த காலத்லே இருக்கோம்னே தெரியலையே! அபராஜிதன், சுந்தர சோழன்னு ஒரே மன்னர்கள் சூழ இருக்கறாப்பலேனா இருக்கு!.." என்று வித்யா சிரித்த போது, "இனிமே ரிஷிகள்லாம் வரிசையா அறிமுகமாவாங்களோ, என்னவோ தெரிலே!" என்று சிரிக்காமல் சொன்னாள் ஊர்மிளா.


(இன்னும் வரும்)








Related Posts with Thumbnails