மின் நூல்

Thursday, May 24, 2012

பார்வை (பகுதி-47)

முந்தாநாள் அரைத்து வைத்திருந்த இட்லி மாவு மீதம் இருந்தது.   அதை ஊத்தப்பமாக உருவாக்கிக் கொடுத்த பொழுது, "அற்புதம், வித்யா..  இன்னொண்ணு போடு"ன்னு விரும்பிக் கேட்டு வாங்கி சாப்பிட்டு விட்டு ரிஷி எழுத்துப் பட்டறைக்கு போய் விட்டான்.  அப்பா வீட்டில் இருந்தால், மகனும் அப்பாவோடேயே கூட உட்கார்ந்து சாப்பிட்டு விடுவது வழக்கம். அப்பொழுது தான் குழந்தைகளுக்கு சாப்பாட்டுப் பழக்கம் பழக்கமாகும் என்று கெளதம் சின்னக் குழந்தையாய் இருக்கும் பொழுதே செய்த ஏற்பாடு இது.

ஞாயிற்றுக் கிழமை.  கெளதமுக்கு ஸ்கூல் கிடையாது.  பக்கத்து வீடு சீனு தான் இவனுக்கு எல்லா விளையாட்டுகளுக்கும் வழிகாட்டி.  அவன் கூப்பிட்டான் என்று போயிருக்கிறான்.  "வெளியே போகும் பொழுது உன்னை வந்து கூட்டிப் போகிறேன்" என்று அவனிடம் இவள் சொல்லியிருந்தாள்.

சுடச்சுட தனக்கும் வார்த்து தட்டில் வைத்துக் கொண்டு உட்கார்ந்தாள்.  எண்ணையில் குழைத்த மிளகாய்ப்பொடி கிண்ணத்தில் ரிஷி போட்டுக் கொண்டது போக மீதமிருந்தது. அந்த காம்பினேஷன் அவளுக்கும் பிடித்திருந்ததில் இரண்டு ஊத்தப்பம் உள்ளே போனதே தெரியவில்லை.  டிபன் சாப்பிட்டால் ஒரு வாயாவது காப்பி குடிக்க வேண்டும் அவளுக்கு.  அவள் அம்மாகிட்டேயிருந்து தொற்றிக் கொண்ட பழக்கம்.  'என்னம்மா, இது ஒரு பழக்கம்?' என்று வித்யா ஒரு நாள் தன் அம்மாவிடமே கேட்டிருக்கிறாள்.  'ஒண்ணுமில்லேடி.. எங்கம்மா அப்படித்தான்; தான் போட்டுக் குடிச்சிட்டு எனக்கும் ஒரு டோஸ் கொடுப்பாளா?.. அப்படியே பழக்கமாயிடுத்து' என்றாள்.
இன்னொண்ணையும் அவள் அம்மா சொன்னாள்.  'வாக்கப்பட்டு இங்கே வந்து பாத்தா, என் மாமியாருக்கும் இதே பழக்கம்.  தான் குடிக்கறச்சேலாம் நானும் குடிச்சாகணும், அவருக்கு. கேக்கணுமா? என் பாடு குஷி தான்' என்றாள்.

வாழ்க்கையின் பலன் சந்தோஷம் தான் போலிருக்கு.  ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொண்ணில் சந்தோஷம்.  தூர இருந்து பார்க்கிறவர்களுக்குத் தான், இன்னொருத்தர் சந்தோஷம் தெரியறதில்லே.  தெரிஞ்சாகணும்ன்னும் ஒண்ணுமில்லே. ஆனா, தெய்வப்பிறவிகள் போல இன்னொருத்தர் சந்தோஷத்தில் தன் சந்தோஷத்தையும் பார்க்கறவங்க இருக்காங்க;  லஷ்மணன் போல. ஏன், ஊர்மிளாவும் கூடத் தான்.

ஊர்மிளாவின் ஞாபகம் வந்ததும், நினைவிழை படக்கென்று அறுந்தது. 'இப்பவே சொல்லிவிட்டால் தேவலை.. வேறெங்காவது இருந்தால் வந்து விடுவார்' என்கிற நினைவில் செல்லெடுத்து அந்த ஆட்டோ பெரியவருக்கு அழைப்பு விடுத்தாள்.  ரெண்டே ரிங்கில் எடுத்து விட்டார்.

"பெரியசாமி தானே?.. நேத்திக்கு சாயந்தரம் மேட்லி பிரிட்ஜ் பக்கத்திலிருக்கிற கல்யாண சத்திரத்திற்கு..." என்று சொல்லும் பொழுதே, "சொல்லுங்கம்மா.. பெரியசாமி தான் பேசறேன்..  ஆட்டோ வரணுமா?"

"ஆமாம். திருப்பியும் அந்தக் கல்யாண சத்திரத்திற்குப் போகணும்.. இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு வந்தாப் போதும்.  வீடு ஞாபகம் இருக்கில்லையா? அங்கேயே வந்திடுங்க.."

"சரிம்மா.. கரெக்டா வந்திடறேன்."

"வரும் போது ஞாபகமா உங்க பையன் ஜாதகம் இருந்தா அதையும் எடுத்து வந்திடுங்க.. உங்க குடும்ப விவரங்களும் அதிலே இருக்கட்டும்.."

"அப்படியாம்மா..  எல்லாத்தையும் குறிச்சு ஜெராக்ஸ் போட்டு வைச்சிருக்கேன்.  எடுத்தாந்திடறேன்." என்று பதில் சொன்ன குரலின் சந்தோஷம் அவளுக்கும் தொற்றிக் கொண்டது.  முன்னே பின்னே பார்த்ததில்லை.  அந்தப் பெண் யார் என்ன என்று தெரியாது.  தெரியாட்டா என்ன?.. ஒரு கன்னிப் பெண்ணிற்கு கல்யாணம் ஆவதில் தன் ஒரு சிறு முயற்சி கலந்திருப்பத்தில் ஒரு சின்ன சந்தோஷம்.  தெய்வ சங்கல்பத்தில் எல்லாம் நல்லபடி முடிந்தால் சரிதான்.

'உஷா கிளம்பத் தயாராகி விட்டாளா என்று பார்த்து விட்டு வரலாம்' என்று வித்யா அவள் வீட்டிற்குப் போனாள்.

முன் ஹாலில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த அவள் கணவர் இவளைப் பார்த்ததும், "வாங்க.. வாங்க.." என்றார். "இதோ வந்திடுவா, உட்காருங்களேன்" என்று சோபாவைக் காட்டி விட்டு, "உஷா.. என்ன செய்றே? வித்யா வந்திருக்காங்க.." என்று குரல் கொடுத்தார்.

"இதோ வந்திட்டேன்.." என்று உள்பக்கமிருந்து உஷாவின் குரல் வந்தது.

உஷாவின் கணவர் கையில் இருந்த பேப்பரைப் பார்த்து விட்டு, "இது என்ன நியூஸ் பேப்பர், டிபரண்ட் கலரில் இருக்கிறதே.." என்று ஆச்சரியப்பட்டாள்.

"இது எக்னாமிக் டைம்ஸ்..  ஷேர் பத்தின விவரங்கள் இருக்கும்..." என்றவர் "உங்களுக்கு ஷேர் மார்க்கெட்லாம் பத்தி தெரியுமோ?"

"ஷேர்லாம் வாங்குவா, விப்பான்னு கேள்விப்பட்டிருக்கேன்.   அவ்வளவு தான் இது பத்தின என் நாலட்ஜ்.  டீடெயில்லா தெரியாது.." என்று சொல்லி சிரித்தாள். ஒரு வினாடி கழிச்சு, "தெரிஞ்சிக்கணும்னு எண்ணம் உண்டு. இப்போத்தான் எல்லாத்தையும் பத்தி எல்லாருக்கும் தெரிஞ்சிருக்க வேண்டியிருக்கே.." என்றாள்.

"ஷ்யூர்.." என்றார் அவர்.  "முதல்லே ஒரு டிரேடிங் அக்கவுண்ட்டும் அப்பாலே டிமேட் அக்கவுண்ட்டும் ஓபன் பண்ணிடுங்க.. ஆரம்பத்திலே ஒரு பத்தாயிரம் ரூபா முதலீடா இருந்தாக் கூடப் போதும்..  விளையாட்டு போல வீட்லேந்தே சம்பாதிக்கலாம்.  ஒத்து வந்தா முதலீட்டை கொஞ்ச கொஞ்சமா அதிகரிச்சிக்கலாம்.  உஷாவை கேட்டாக்கூட இதுபத்தி நிறைய சொல்லுவா.  கொஞ்ச நேரம் டிவி முன்னாடி செலவழிச்சா போதும்..  மிஸ்டர் ரிஷி கிட்டே சொல்லுங்க.. வேண்டிதெல்லாம் செஞ்சு கொடுத்திடுவார்" என்றார்.

"அவருக்கு கதை எழுதவே நேரம் பத்தலே.  நான் உஷாகிட்டேயே கேட்டுத் தெரிஞ்சிக்கறேன்.."

"தாராளமா.  ஆனா, ரிஷி கிட்டே சொல்லிட்டு நீங்களும் அவரும் ஜாயிண்ட் அக்கவுண்ட்டா ஆரம்பிக்கறது நல்லது. இந்த மாதிரி ஷேர் மார்க்கெட் ஈடுபாடெல்லாம் இப்போ கொஞ்சம் வசதியிருந்தாலே முடியும்.  ஆனா, ரிஷி மாதிரி கதையெல்லாம் எழுதறது ஒரு சிலராலே தானே முடியும்? இட் ஈஸ் எ கிப்ட்!  அதுனாலே அந்த நேரத்தை இதுலே செலவழிச்சான்னு சொல்ல மாட்டேன். யார் யாருக்கு எது எதிலே விருப்பமும் ஆசையும் இருக்கோ, அதிலே அட்டகாசமா ஜொலிப்பாங்க.  இது அடிப்படை உண்மை. அதுனாலே அந்த விருப்பமும்,  திறமையும் உங்களுக்கு இதிலே இருந்தா இன்னிக்கு விலைவாசி இருக்கற நிலைமைலே குடும்பம் நடத்த கொஞ்சம் பொருளாதார சுதந்திரம் கிடைக்கும். அதுக்காகச் சொல்ல வந்தேன்.." என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே உஷா வந்து விட்டாள். "வா, வித்யா..  வாஷிங் மெஷின்லே துணிலாம் போட்டிண்டிருந்தேனா,  சட்டுன்னு வர முடிலே.. சாரி.." என்றாள்.

"பரவாயில்லை, உஷா!  நீ வர்றத்துக்குள்ளே சார் நிறைய உபயோகமான தகவல்கள் சொன்னார்."

கணவர் கையிலிருந்த நியூஸ் பேப்பரைப் பார்த்தவுடனேயே, எதைப் பத்தி தகவல்கள் சொல்லியிருப்பார் என்று உஷாவிற்கு புரிந்து விட்டது. "ஷேர் மார்க்கெட் பத்தி தானே, வித்யா?..  அதுலே இவர் புலி.  இந்தப் புலியைப் பாத்துட்டு ஷேர் மார்க்கெட்லே வர்ற கரடி, காளையெல்லாம் பயந்து ஓடிடும்னா பாத்துக்கோயேன்!" என்று சொல்லி குழந்தை போலச் சிரித்தாள். அடுத்த நிமிடம் அவளே,"யார் கிட்ட என்ன திறமை இருந்தாலும் நாம் அதை ஒத்துக்கணும், இல்லையா?.. இன்னிக்கு இந்த ஷேர் இந்த அளவுக்குப் போகும்ன்னு இவர் சொன்னா, அது என்ன மாயமோ தெரிலே, இவர் சொன்ன மாதிரியே அப்படியே அது நடக்கும். மார்க்கெட்டை ஸ்டடி பண்றதிலே அப்படி ஒரு நிபுணர்த்துவம்! இந்த மாதிரி கணக்குப் போடறது அத்தனையும் கடுமையான சுயமுயற்சிலே இவராத் தெரிஞ்சிண்டது தான்.  ஸ்ரீராமஜெயம் எழுதற மாதிரி, ஒவ்வொரு கம்பெனியா பேர் அதோட ஏறி இறங்கின ஷேர் விலைன்னு நோட்டு நோட்டா எழுதி வைச்சிருக்கார்! பத்தாததுக்கு கிராஃப்லாம் வேறே.  பாத்தா மலைச்சிடுவே" என்றாள்.

"அப்படியா?.. உஷா! நீ சொல்லச் சொல்ல எனக்கும் இதையெல்லாம் பத்தி தெரிஞ்சிக்கணும்ன்னு ஆசையா இருக்கு.  சொல்லித் தர்றையா?"

"ஓ. எஸ்.." என்ற உஷா, "இதிலே இருக்கற ரிஸ்க்கையும் சொல்லித் தரேன்.  அப்புறம் உன் பாடு; அந்த ஷேர் உலகம் பாடு" என்றவள், "உள்ளே வாயேன்.." என்று உள்பக்கம் வித்யாவை அழைத்துக் கொண்டு போனாள். "'எழுத்துப் பட்டறை'க்குப் போகணுமில்லையா?.. பத்தரை பதினொண்ணு வாக்கிலே கிளம்பலாமா? சாப்பாட்டுக்கு திரும்பிடலாமிலையோ?"

"அதுவும் அங்கேயே ஏற்பாடு பண்ணியிருக்கறதா சொன்னார்.  அதையும் அங்கேயே முடிச்சிண்டு வந்திடலாமே.. என்ன சொல்றே?"

"இவருக்கு வேணுமில்லையோ?..  கொஞ்சம் சீக்கிரம் எழுந்திருந்து நான் எல்லாத்தையும் முடிச்சிட்டேன். பாக்கலாம்.  அங்கே நிலவரம் எப்படியிருக்குன்னு அதுக்கேத்த மாதிரி பாக்கலாம்."

"நான் ஆட்டோக்கு சொல்லிட்டேன்.  அந்தப் பெரியவர் ஆட்டோ தான். இன்னும் அரைமணிலே வந்திடுவார்."

"சரி, வித்யா.. அதுக்குள்ளே நானும் ரெடியாடறேன்."

 கெளதமையும் அழைத்துக் கொண்டு இரண்டு பேரும் வெளிவாசல் பக்கம் வருவதற்கும், பெரியசாமியின் ஆட்டோ வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது.

ஆட்டோவிலிருந்து இறங்கி வந்த பெரியசாமி, ரொம்ப பவ்யமாக வித்யாவிடம் ஒரு கவரை நீட்டினார்.  கவரின் நான்கு முனைகளிலும் குங்குமம் தடவியிருந்தது.

"ஜாதகம் தானே?" என்று கவரைப் பிரித்துப் பார்த்தாள் வித்யா. "தெரிஞ்சவர் ஒருத்தர் கேட்டிருந்தார்.  நீங்களும் அன்னிக்கு பையன் கல்யாணத்திற்கு இருப்பதாகச் சொல்லியிருந்தீங்களா?.. அதான்.  அவங்க கிட்டே கொடுக்கலாமேன்னு கேட்டேன்.. எல்லாம் நல்லபடி நடக்கணும்.."

"ரொம்ப சந்தோசம்மா.." என்று பெரியசாமி நெகிழ்ந்தார்.

எல்லோரும் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்ததும், உஷா பக்கம் திரும்பி, "நம்ம ஊர்மிளா தான் கேட்டிருந்தாங்க.. அவங்க ஆபீஸ்லே வேலை செய்யற ஒரு பெண்ணோட அக்காவாம். அதான் கொடுக்கலாம்ன்னு.."

கொஞ்ச நேரம் யாரும் பேசவில்லை. திடீரென்று, "பொண்ணு வேலை செய்துங்களா?.." என்றார் பெரியசாமி.

"இல்லைன்னு தான் நெனைக்கிறேன்.." என்றாள் வித்யா. "ஏன், உங்க பையன்னுக்கு வேலைக்குப் போற பெண்ணா இருக்கணுமா?"

"அப்படில்லாம் இல்லீங்க.. கல்யாணம் ஆனதும் எங்களை ஒதுக்கிடக் கூடாது.  தன் புருஷனைப் பெத்தவங்க இவங்கன்னு ஒரு மரியாதை இருந்தாப் போதும்" என்றார் பெரியசாமி.

லஷ்மி தெரு திருப்பம் வந்தாச்சு.  ஸ்பீட் பிரேக்கரின் மேல் மெதுவாக ஆட்டோவை ஏற்றிய பெரியசாமி, "பொண்ணு பேரு தெரியுங்களா?" என்றார்.

"பொண்ணு பேரு தானே?  லஷ்மின்னு சொன்னாங்க.."

"ரொம்ப சந்தோசம்ங்க.." என்று சொன்னபடியே, "பாத்தீங்களா.." என்று அந்தத் தெருவின் பெயர் எழுதியிருந்த சிமிண்ட் பலகையைக் காட்டினார்.  "இதைத் தாங்க சூசகமா தெரிவிக்கறதுன்னு சொல்லுவாங்க போலிருக்கு... ரெண்டு பக்கமும் சாதகம் மாத்திக்கணும்னும்பாங்க..  அதெல்லாம் பொறவு பாத்துக்கலாம்ங்க.  சாதக பொருத்தம் கூட அவங்க பாத்தா சரி.  எங்களுக்குப் பாக்கணும்ன்னு இல்லீங்க" என்றார்.

உஷாவுக்கும் என்ன தோன்றியதோ தெரியவில்லை. இத்தனை நேரம் மெளனமாக இருந்தவள் சடக்கென்று, "இந்த வரன் அமைஞ்சிடும்ன்னு நெனைக்கறேன்.." என்றாள்.

"அப்படியாம்மா.. ரொம்ப சந்தோசம்மா.. நீங்க சொன்னது நடக்கட்டும்மா.
சிறுசுங்க சந்தோசமா இருக்கணும்.  அதான் நான் வேண்டறது.."

மேட்லி பிரிட்ஜ் வந்தாச்சு;  வலது பக்கம் திரும்பி சத்திர வாசலில் வண்டியை நிறுத்தினார் பெரியசாமி..

பர்ஸைத் திறந்து வித்யா பணம் எடுத்த பொழுது, "இருக்கட்டும்மா.  பொறவு வாங்கிட்டாப் போச்சு.." என்றார் பெரியசாமி.

"இல்லை.. இல்லை.. இந்தாங்க.." என்று வற்புறுத்தி காசைக் கொடுத்து விட்டு, "அவங்க கிட்டே ஜாதகத்தைக் கொடுத்திடறேன்.  மத்த விவரத்தை போன் பண்ணிச் சொல்றேன்.." என்றாள் வித்யா.

"சரிம்மா.. ரொம்ப நன்றிம்மா.." என்று அவர் கும்பிட்டது அவரை விட ரொம்ப சிறியவர்களான அவர்களுக்குக் கூச்சமாக இருந்தது.

"சரிங்க.. நாங்க வர்றோம்.. எல்லாம் நல்லபடி நடக்கட்டும்" என்று நகர்ந்தாள் வித்யா.. அவளுக்கு சற்று முன்னால் சென்ற உஷா திரும்பி யதேச்சையாக ஆட்டோவின் முகப்பைப் பார்த்த பொழுது, மஞ்சள் எழுத்துக்களில் "லஷ்மி நாராயணர் துணை" என்று எழுதியிருந்ததைப் படித்தாள்.

அவள் நின்று அந்த எழுத்துக்களைப் படித்துப் பார்ப்பதைப் பார்த்த பெரியசாமி, "எங்க குலதெய்வங்க.." என்றார்.


(இன்னும் வரும்)

































  

Monday, May 21, 2012

பார்வை (பகுதி-46)

வளிடம் சொல்ல வேண்டுமென்று ஊர்மிளாவுக்குத் தோன்றியதே, அதைத் தான் சொல்ல வேண்டும்.  சாதாரணமாக பல பேர் எல்லாவற்றையும் எல்லாரிடமும் சொல்லிக் கொண்டிருக்க மாட்டார்கள்.  உலக வழக்கம் அப்படித் தான் ஆகிப்போச்சு.  குறிப்பிட்டுச் சொல்லவில்லை தான்;  ஏதோ பேச்சு வந்த பொழுது, நடுவில் வந்து விட்டுப் போன சமாச்சாரம் போல் சொன்னது தான். இருந்தாலும் எப்படியோ வேணியின் அக்கா லஷ்மி பற்றி வித்யாவிடம் ஊர்மிளா சொன்னது தான் அடுத்து நடக்க வேண்டியதற்கு நெம்பித் தள்ளிய காரியம் ஆயிற்று.

'எழுத்துப் பட்டறை'யின் இன்றைய அனுபவம் வித்யாவிற்கு வேறு மாதிரி இருந்தது.  பேச்சு.. பேச்சு... ஒரே பேச்சாக, அதுவும் ஒரே விஷயத்தைப் பற்றிய பேச்சாக இருந்தது அவளுக்கு எரிச்சலாக இருந்தது.  கதைகள் என்கிற பெயரில் கற்பனையாக எதையாவது எழுதுவது, அது பத்திரிகையில் பிரசுரமாவது இதைத் தவிர இவர்களுக்கு வேறு வேலை எதுவும் இல்லையா என்று அவள் நினைத்த நேரத்தில் அது ஒன்றே தான் அவர்கள் வேலை என்று அறிந்த பொழுது அதிர்ச்சியாக இருந்தது.  'எப்படியாவது தான் எழுதுவது எல்லாம் பத்திரிகையில் வெளிவந்து விட வேண்டும்; அல்லது அது புஸ்தகமாகி விட வேண்டும்' என்கிற ஒரே ஆசையே அங்கிருந்த அத்தனை பேருக்கும் இருந்ததாகத் தோன்றியது.  அதுவும், 'ஒரு சிறுகதையை எப்படித் தொடர்கதையாக எழுதுவது' என்று ஒருத்தர் பேசினாரே, அப்பொழுது எல்லாரும் சிரித்த பொழுது அவளுக்கு பற்றி எரிந்தது.  வெறும் கற்பனையில் தன் மனசுக்குத் தோன்றிய விதத்தில் நிகழ்வுகள் நிகழ்வதாக மாய்ந்து மாய்ந்து எழுதுவதில் என்ன வெற்றிக் களிப்பு வேண்டிக் கிடக்கிறது என்று குமைந்து போனாள்.

மனம் கைத்துப் போன அந்த கரிப்பில் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு சிற்றுண்டி கூட அவளுக்குக் கசந்தது.  சாப்பிட்டுக் கொண்டே நடந்த நிகழ்வுகளை எல்லோரும் ரசித்துக் களிக்கும் பொழுது தனக்கு மட்டும் ஏன் இப்படித் தனியாகத் தோன்றுகிறது என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள்.

"ஏன் என்னவோ மாதிரி இருக்கே?.. கெளதமுக்கு தூக்கம் வந்து விட்டதா?" என்று பக்கத்தில் அமர்ந்திருந்த உஷா கேட்டாள்.  அப்படி அவள் கேட்ட பொழுது, தன் மனத்தில் இருப்பதைக் கொட்டித் தீர்த்து விடலாமா என்று அவளுக்குத் தோன்றியது.  இருந்தாலும் எல்லாரும் சந்தோஷமாக இருக்கும் இடத்தில் தன் மன வெளிப்பாடுகளைக் காட்டிக் கொள்ளக் கூடாதென்கிற உணர்வில் லேசாகச் சிரித்தாள். "ஆமாம், உஷா!" என்றாள். "இன்னும் பாரு, இவரைக் காணோம்.  எனக்கும் வீட்டுக்குப் போய் எப்படா தலையைச் சாய்ப்போம் என்றிருக்கிறது" என்றாள்.

"ரிஷிக்கும் லஷ்மணனுக்கும் நிறைய வேலை இருக்கும்.  நாளைய நிகழ்ச்சிகளுக்கு வேறே முன்னாலே எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் இருக்கும்.  எப்படியும் நம்மோடு வரப்போவதில்லை. டின்னர் தான் ஆயாச்சே?..  நாம கிளம்பிடலாமா?" என்றாள் உஷா.

"இதோ, இப்பவே நான் ரெடி.." என்று வித்யா கிளம்பத் தயாரான போது, ரிஷி அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

அவர்களிருந்த இடத்திற்கு வந்ததும், "எனக்கு இங்கே சில வேலைங்க இருக்கு. நீங்க வேணா கிளம்பறீங்களா?.. நான் பின்னாடியே வர்றேன்.." என்றான் ரிஷி.

"அதைத் தான் நானும் இவளிடம் சொல்லிண்டிருக்கேன்.." என்று உஷா சொன்ன போது, கை அலம்பிக் கொண்டு வந்த கெளதமை அழைத்துக் கொண்டு, "நான் வர்றேங்க.." என்று கணவனிடம் சொல்லிக் கொண்டு வித்யாவும் கிளம்பி விட்டாள்.

வாசலுக்கு வந்தவுடன் தான் தங்களை இங்கு கொண்டு வந்து விட்ட ஆட்டோ பெரியவரின் நினைவு அவர்களுக்கு வந்தது.  "செல்லில் அவர் நம்பர் தான் இருக்கிறதே?.. பக்கத்தில் எங்காவது இருக்கிறாரா என்று பார்க்கலாமா?" என்று ஹேண்ட் பாக்கிலிருந்து செல்லை எடுத்தாள் வித்யா.

இடது கை திருப்பி மணியைப் பார்த்த உஷா, "ஒன்பதாகிறது, வித்யா.. எங்கேயிருக்காறோ?.. அவரைத் தொந்தரவு பண்ண வேண்டாம்" என்று சொல்லிக் கொண்டிருக்கையிலேயே அவர்கள் பக்கத்தில் ஓர் ஆட்டோ வந்து நின்றது.

இடத்தைக் கேட்டு ஐம்பது ரூபா கேட்டார்.  அதிகம் என்றதற்கு இரவு நேரத்தைக் காரணம் சொன்னார்.  கடைசியில், "சரி. நாற்பது ரூபா கொடுங்க.." என்றதும் ஏறிக் கொண்டார்கள்.

ஏழே நிமிடங்களில் வீடு வந்து சேர்ந்தார்கள்.  உஷா வீட்டுக்காரர் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தது திறந்திருந்த ஜன்னல் வழியாகத் தெரிந்தது.

கெளதம் கிட்டதட்ட தூங்கி விட்ட நிலையில் இருந்தான்.  மெதுவாக அவனைக் கைப்பிடித்துக் கூட்டி வந்து கதவு திறந்த பொழுது வித்யாவுக்கு லேசாகத் தலையை வலிக்கிற மாதிரி இருந்தது.

பாத்ரூம் சென்று கைகால் அலம்பிக் கொண்டு கெளதம் சேரில் வந்து உட்கார்ந்தான்.  "நான் படுத்துக்கட்டுமா, அம்மா?"

"கொஞ்சம் இரு.  பாலைக் காய்ச்சித் தரேன்.." என்றவள், பழக்கூடை திறந்து வாழைப்பழம் எடுத்துத் தந்தாள்.  பிரிட்ஜிலிருந்து பால் பாக்கெட் எடுத்து பாத்திரத்தில் ஊற்றிக் காய்ச்சும் பொழுது கெளதம் கேட்டான். "ஏம்மா, அப்பாவோட 'காதல் தேசம்' கதை பத்தி யாருமே பேசலே?"

ஒரு நிமிடம் திடுக்கிட்டாற் போல இருந்தது வித்யாவிற்கு.  தலையைக் குலுக்கிக் கொண்டு, "இன்னும் அப்பா எழுதற அந்தக் கதை பத்திரிகைலே வரலேயில்லையா?  அதனாலே யாருக்குமே அந்தக் கதை எப்படின்னு தெரியாது. அதான் பேசலே." என்றாள்..

கொஞ்ச நேரம் மெளனமாக இருந்தவன், தலையை குலுக்கிக் கொண்டு, "அப்பா இஸ் கிரேட், அம்மா!" என்றான்.

"நைஸ்.. எதுனாலே அப்படிச் சொல்றே?"

"சொல்ல மாட்டேன்.." என்றான்.

"ஏன்?.."

"உனக்கும் அது தெரியுமில்லையா?.. தெரிஞ்சவங்களுக்கு எதுக்குச் சொல்லணும்?" என்று அவன் கேட்ட பொழுது பதில் சொல்லத் தெரியாது பிரமித்து நின்றாள்.

வாசல் பக்கம் சப்தம் கேட்டது.  ரிஷி வந்து விட்டான்.

செருப்பை வெளிப்பக்கம் கழட்டிப் போட்டு விட்டு உள் நுழைந்தவன், "என்ன இன்னும் படுக்கப் போகல்லையா?" என்று கேட்டுக் கொண்டே கைகால் கழுவி வர பாத்ரூம் பக்கம் போனான்.

கெளதமுக்கு ஒரு தடவை சொன்னால் போதும்.  பசுமரத்தாணி கீற்றல் போல அப்படியே அவன் மனசில் படிந்து விடும்.  வித்யா டம்பளரில் ஊற்றிக் கொடுத்த பாலைக் குடித்து விட்டு வாஷ் பேசின் பக்கம் போய் வாய்க் கொப்பளித்து விட்டு படுக்கப் போனான்.

ரிஷி வந்ததும் அவனுக்கும் கொடுத்து விட்டு தானும் ஒரு டம்ளரை எடுத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தாள்.

"பாவம், லஷ்மணன்.  ரொம்ப மெனக்கிட்டிருக்கார்.  நாளை நிகழ்ச்சியும் நல்லபடி முடிந்து விட்டால், பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைத்த மாதிரி தான்" என்றான் ரிஷி.

வித்யா பதிலே பேசவில்லை.  பேசாமல் ரிஷியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.   'உற்றுப் பார்க்கும் பொழுது தெரியறது.   முன்னைக்கு இப்போ இவர் கூட இளைத்து விட்ட மாதிரி தெரியறது. பேசாமல் ஆபீஸ் வேலை, குடும்பம்,  குட்டியென்று இருக்கக்கூடாதோ? சில பேருடைய தலையெழுத்து;  எல்லாம் வாய்த்திருந்தும் நிம்மதியில்லாம எதையாவது இழுத்துப் போட்டுண்டு இப்படியெல்லாம் அல்லாடணும்ன்னு' என்று நினைத்துக் கொண்டாள்.

தான் கேட்டதற்கு அவளிடம் எந்த சலனமும் இல்லாதிருந்தது பார்த்து, "என்ன யோசனை? அசதியா இருக்கா?" என்றான் ரிஷி.

"இல்லே."

"பின்னே?"

"எதுக்கு இதெல்லாம்ன்னு தோண்றது..."

"எதெல்லாம்?.."

"ஆபீஸ் உண்டு குடும்பம் உண்டுன்னு நிம்மதியா இல்லாம எப்பப் பாத்தாலும் எதையாவது யோசிச்சிண்டு, எழுதிண்டு எதுக்கு இதெல்லாம்ன்னு தோண்றது."

அவள் சொன்னதிற்கு இப்பொழுது அவனால் சட்டென்று எதுவும் பதில் சொல்லத் தோன்றவில்லை.  

அவனது மெளனத்தைப் பார்த்து,"நான் ஏதும் தப்பாசொல்லிட்டேனா?" என்று துணுக்குற்று கேட்டாள் வித்யா.

"இல்லே.."

"பின்னே?" என்று கேட்ட பொழுது அவள் குரல் குன்றிப் போயிருந்தது நன்றாகத் தெரிந்தது அவனுக்கு. "இத்தனை நாளும் இல்லாம திடீர்ன்னு இப்படிக் கேக்கறத்துக்கு இப்போ என்ன வந்ததுன்னு தான் தெரிலே." என்றான்.

"நானும் தான் கொஞ்ச நாளா பாக்கறேன்.  உங்களை ரொம்ப வருத்திக்கற மாதிரித் தெரியறது..  சரியாச் சாப்பிடறதில்லே.  சரியாத் தூங்கறதில்லே. மூஞ்சியைப் பாக்க சகிக்கலை..  தாடியும் மீசையுமா ஏதோ ஜூரத்திலே விழுந்து கிடந்து எழுந்த மாதிரி..."

அவள் கேட்டது கேட்டு அவன் சிரித்தே விட்டான். "எங்க ஆபீஸிலே கூட என் ஃப்ரண்ட் ஒருத்தன் இதான் கேட்டான். என்னடா, காதல் ஜூரமான்னு.."

"ஜூரமான்னு கேக்கலாம்.  அது என்ன காதல் ஜூரமான்னு கேள்வி?.." என்று முறைத்தாள்.

"'காதல் தேசம்' எழுதப் போறேன்லே. அதுனாலே.  காதல் தேசம் மாதிரி, காதல் ஜூரம்.  எதையுமே காதலோடு இணைச்சுப் பேசினா அப்படி இணைச்சுப் பேசறதோட மகிமையே கூடிடும் மாதிரி இருக்கு."

"க்குங்.." என்று வித்யா அழகு காட்டியது ஹாலில் படிந்திருந்த அரை இருட்டில் அழகாக இருந்தது..  "அது என்னங்க அப்படி ஒரு தலைப்பு வைச்சாங்க?..  உங்க பிள்ளையாண்டான் கூட கேட்டுட்டான்.  காதல் தேசம்ன்னா என்னம்மானுட்டு?..." என்று சொல்லும் பொழுது அவளையே வெட்கம் பிடுங்கித் தின்றது.  தலையைத் தாழ்த்திக் கொண்டாள். "ஸ்டோர்லே பாக்கற பொண்ணுங்க கூட என்னை ஒரு மாதிரி பாக்கறாங்க.. இப்பவே இப்படி.. நாளைக்கு கதை வெளிவர்றச்சே, என்னவாகும்ன்னு எனக்குத் தெரிலே."

"இப்ப அப்படித்தான் பாப்பாங்க..  கதை வெளிவரட்டும், பாரு! விழுந்து விழுந்து படிப்பாங்க.." என்றான்.

"படிக்கவும் செய்வாங்க;  பாக்கவும் செய்வாங்க.  ரெண்டும் நடக்கும்."

"படிக்கவும் செய்வாங்க; பாராட்டவும் செய்வாங்கங்கற மாதிரி எழுதிக் காட்டறேன், பாரு!.  விற்பனை செய்யறவனுக்கு கலர்க்கலரா கவர்ச்சியா போடற லேபிள் முக்கியம்; பாக்கறவன் பொருளை வாங்கறத்துக்கான தூண்டில்.  உற்பத்தி பண்றவனுக்கு லேபிளைப் பத்தி என்ன கவலை?.. உள்ளே இருக்கற பொருளின் தரம் தான் அவனுக்கு முக்கியம்.  ஏன்னா, தரமாயிருந்தாத்தான் அதைச் சாப்பிடறவங்க ரசிச்சு சாப்பிட்டு மேலும் மேலும் அதைச் சாப்பிட விரும்புவாங்க.. சரியா?"

"எப்படியோ பேசி மடக்கிடறீங்க.." என்ற வித்யா பெருமூச்சு விட்டாள். "எழுதறது உங்க ஆசை;  உங்களாலே எழுதாம இருக்க முடியாது.  செய்யுங்க.  ஆனா...."

"ஆவ்..." என்று கொட்டாவி விட்டான் ரிஷி.  "உனக்குத் தூக்கம் வரலையா?"

"வராம என்ன?.." என்றவள் எழுந்தாள். "நான் என்ன நினைக்கிறேங்கறதை அப்புறமா சாவகாசமா சொல்றேன்"

"அப்போ நாளைக்கு 'எழுத்துப் பட்டறை'க்கு வரேலியோ?"

"கட்டாயம் வரணும்ங்க..  ஊர்மிளா ஒண்ணு சொல்லியிருக்காங்க..  அதுக்கானும் வரணும்.." என்றாள்.

"அட, அவங்களா?.. நான் என்னன்னு தெரிஞ்சிக்கலாமா?"

"உங்களுக்குச் சொல்லாமலா?..  நிச்சயம் சொல்றேன்;  ஆனா அப்புறம்.."  என்றவள் சமையலறைக்குள் நுழைந்தாள்.

நாளை தேய்க்கவிருந்த நாலைந்து பாத்திரங்களில் லேசாகத் தண்ணீர் ஊற்றி ஸிங்கில் போட்டாள்.  மிதமாக ஆறிப்போய் மீதமிருந்த பாலில் புறை ஊற்றி விட்டு நிமிர்ந்த பொழுது அவளுக்கும் தூக்கம் கண்களைச் சுழற்றியது.

புலறப்போகிற காலை விசேஷமாக அவளுக்குத் தோன்றியது.


(இன்னும் வரும்)















Tuesday, May 15, 2012

பார்வை (பகுதி-45)

ஷாவின் பக்கம் நன்றாகத் திரும்பி உட்கார்ந்து கொண்டு அந்தப் பெண்ணும் உஷாவும் பேசுவதை வித்யா உற்று கவனிக்கலானாள்.  வேறு எங்கையோ பார்க்கிற மாதிரி போக்குக் காட்டிக் கொண்டு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று அவள் கவனித்திருக்கலாம்.  ஆனால் அவளால் அப்படியெல்லாம் வேடம் போடமுடியாது என்பது தான் வெளிப்படையான அவள் செயலுக்குக் காரணம் ஆயிற்று.

"விஜி எழுதிய அந்தக் கதை நன்றாகத் தான் இருந்தது.  ஆனால் ஆண் வாடை அந்தக் கதையில் அதிகம்.  அதான் ஒரு உறுத்தலாக எனக்குப் பட்டது" என்றாள் அந்தப் பெண்.

"ஆண் வாடைன்னா?.. என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்குப் புரியலையே?" என்றாள் உஷா.

"ஆணின் மமதைன்னு வேணா வைச்சிக்கங்க..  இந்த மமதை அந்தக் கதையின் ஒவ்வொரு வரியிலும் இழைஞ்சு கிடக்கறதை நீங்க உணர்லையா?" என்றாள் அந்தப் பெண்.

"அப்படியா சொல்றீங்க?.."  என்று வியப்புக் காட்டினாள் உஷா.

"அப்படி இல்லைனா?.. அந்தத் தீவிலே காட்டுவாசிகளிடம் மாட்டிக்கிட்டு உயிர் போகிற நிலையில்,  அந்த இக்கட்டில் தன்னைக் காப்பாற்ற வந்தப் பெண்ணிடம் அப்படியா அவனால் நடந்து கொள்ள முடியும்?"

"இல்லை, மேடம்.." என்று அவள் சொன்னதை மறுத்தாள் உஷா. "கதை பூரா இயல்பா ஓர் ஆண் தனக்கு நேர்ந்த அனுபவத்தை விவரிக்கற மாதிரியே அந்த 'மெஜாட்டியோ' கதை போர்றது.  ஆண் சொல்ற மாதிரியே எழுதினதாலே உங்களுக்கு அப்படித் தோணியிருக்கலாம்.  கடைசிலே மொத்த தன் பார்வையும் எவ்வளவு தப்புன்னு அந்த ஆண் ஃபீல் பண்றதை-- கதை படிக்கறவங்களை ஒரு அதிர்ச்சிக்குள்ளாக்கற மாதிரி-- ஒரே வார்த்தைலே சொல்லி விஜி கதையை முடிச்சது அற்புதம் இல்லையா? இதிலே ஆணின் மமதை எங்கிருக்குன்னு.. ஸாரி.. மமதை கொள்வதில் கூட ஆண்- பெண் என்று வித்தியாசம் இருக்கா என்ன?"

"பெண்ணுக்கு எப்பவுமே சுமாராகவாவது தோற்றமளிக்கற தன் புற அழகு முக்கியம். அடுத்தாற்பலே தன்னோட அறிவு.  இந்த இரண்டும் குறித்து அவளுக்கு என்றைக்குமே பெருமை ஊண்டு.  இந்த பெருமை அதிகமானால் அதுவே மமதையா மாறும். . ஆனால் ஆணுக்கு மட்டுமே தான் ஆண்ங்கறதாலேயே ஒரு பெளர்ஷ உணர்வு உண்டு.   தனக்கு மட்டுமே கிடைச்ச விடுதலை உணர்வு மாதிரி அது பற்றி என்னைக்குமே ஒரு பெருமை அவனுக்கு உண்டு.  அந்தப் பெருமை தலைவிரித்து ஆடினால் அதுவே மமதையா மாறும். அவ்வளவு தான்."

"இந்த மமதை போக மருந்தென்ன மேடம்?" என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் உஷா.

"ரொம்ப சிம்பிள்.  எல்லாமே மாறுதலுக்கு உட்பட்டவை.  மனசு மட்டும் அப்படியில்லைன்னு வீம்பு பிடிக்கக் கூடாது.  அனுபவப்படற நல்லதை கபால்ன்னு சுவீகரிச்சிக்கணும்.   தன்னோட அனுபவமின்மை தெரிஞ்சா அதைப் புரிஞ்சிண்டு மாத்திக்க முன்வரணும். தனக்குத் தெரிஞ்சிக்கறதை விட உசத்தியான இன்னொண்ணு தெரியற வரைக்கும் தான் இதெல்லாம்.  அது தெரிஞ்சிட்டா, அதை உணர்ந்திட்டா இந்தத் தனிப்பெருமைலாம் போயே போய்டும்.."

தன் மனசில் பாளம் பாளமா பதிந்திருக்கிற பல விஷயங்களிலிருந்து ஒண்ணைப் பெயர்த்தெடுத்துத் தந்த மாதிரி அந்தப் பெண் சொன்னது வித்யாவுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது.  இவளிடம் பேசப் பேச நிறைய தெரிந்து கொள்ளலாம் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டாள்.

"நீங்க சொல்றது எல்லாம் சரிதான்.  ஆனாலும் அந்தக் கதைலே, அந்த ஆண் தான் நெனைச்சது தப்புன்னு தெரிஞ்சவுடன் வருந்துகிறான் இல்லையா? நீங்க இப்போ சொன்ன அந்த மாற்றம் அவனுள் நிகழ்ந்த மாதிரி தானே அது?" என்று அவள் இன்னும் அதைக் கதை பற்றி அவள் கருத்தைச் சொல்ல வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் கேட்டாள் உஷா.

"நான் என்ன சொல்ல வர்றேன்னா..." என்று ஒரு வினாடி நெற்றியைச் சுருக்கிக் கொண்டு யோசனை செய்கிற பாவனையில் இருந்தார் அந்தப் பெண். அடுத்த வினாடியே, உதட்டைப் பிதுக்கியவாறே, "சொல்றத்துக்கு ஒண்ணுமில்லை, உஷா!.."என்று அந்தப்பெண் தன் இரு கைகளையும் விரித்தது வினோதமாக இருந்தது வித்யாவிற்கு. "அந்தக் கதையைப் படிச்சப்போ நான் உணர்ந்தது அது.  பாக்கப்போனா, படிக்கற கதை என்னமோ ஒண்ணு தான்.  அந்த ஒரு கதையையே பல பேர் படிக்கறச்சே, படிச்ச அந்தக் கதையைப் பத்தி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொண்ணு தோணுமில்லையா? அப்படி எனக்குத் தோணினது இது.  சொல்லப்போனா, ஹூயூமன் சைக்காலஜி இது.  பிடிச்சது நிறைய இருக்கும்.  அதையெல்லாம் வரிசைபடுத்திச் சொல்றதை விட்டுட்டு பிடிக்காது தான் சொல்லத் துடிச்சிண்டு ஞாபகத்திலே துருத்திண்டு முன்னாடி நிக்கும்.  அப்படி அந்தக் கதையை நினைச்சதுமே என் ஞாபகத்துக்கு வந்தது அது. அதனாலே அதைச் சொன்னேன்.." என்ற அந்தப் பெண், பேச்சை மாற்றவோ என்னவோ பக்கத்தில் அமர்ந்து இவர்கள் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்த வித்யாவை இப்பொழுது தான் பார்த்த மாதிரி, "இவங்களை எங்கையோ பார்த்த மாதிரி இருக்கே?  இவங்க உங்க ஃப்ரண்டா?" என்று கேட்ட தருணத்தில் ஊர்மிளாவும் பேசிக்கொண்டிருந்த அவர்கள் பக்கத்தில் வந்து அமர்ந்தாள்.

"இவங்களையா கேக்கறீங்க.." என்று வித்யாவைக் காட்டிக் கேட்டாள் ஊர்மிளா. "சாரி.. உங்களுக்கு இவங்களை அறிமுகம் பண்ண மறந்திட்டேன்லே.. இவங்க தான் வித்யா.. விஜியோட ஒய்ஃப்" என்று சொன்னவுடன் துணுக்குற்றது மாதிரிப் போனது அந்தப் பெண்ணின் முகம். இருந்தாலும் ஒரே வினாடியில் தன்னை சகஜ நிலைக்குக் கொண்டு வந்த மாதிரிச் சிரித்து, "ஹாய். வித்யா.. நைஸ் டு மீட் யூ" என்று லேசாகச் சிரித்தாள்.

இவ்வளவு தெளிவாக எல்லாவற்றையும் அலசும் அவள் யார் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் உதடு பிரித்து,"நீங்கள் யார்ன்னு சொல்லலையே?" என்றாள் வித்யா.  'தான் யார் என்று இவளுக்கு முன்னாலேயே தெரிந்திருந்தால், ரிஷியின் கதைபற்றி இவ்வளவு தூரம் இவள் பேசியிருக்க மாட்டாளோ' என்று அவள் நினைத்துக் கொண்டாள்.

"போச்சுடா.. இவங்களும் யார்ன்னு உங்களுக்குச் சொல்ல மறந்திட்டேனா?" என்று தன்னையே கடிந்து கொண்ட முக பாவத்துடன் அந்தப் பெண் யாரென்று ஊர்மிளா சொன்ன போது  உஷா அடைந்த ஆச்சரியம் அவள் முகத்தில் பிரகாசமிட்டது.  "அடேடே!.. நீங்களா அது? இது எனக்கு எதிர்பாராத சர்ப்ரைஸ்" என்று அவள் திகைத்தாள். "உங்க கதைங்களை நிறையப் படிச்சிருக்கேன். ஆண் பெயரில் அல்லவா எழுதுறீங்க.. ஸீ.. ஆக்ச்சுவலி இத்தனை நாள் யாரோ ஆண் தான் அந்தப் பெயரில் எழுதறார்ன்னு நினைச்சிண்டிருந்தேன்.." என்று குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள். "ஃபெண்டாஸ்டிக்.. எதுக்குங்க அப்படி ஒரு ஆண் பெயரைத் தேர்ந்தெடுத்தீங்க?" என்று அவள் கேட்ட பொழுது, சிரித்த சிரிப்பில் அவள் கண்களில் நீர் ததும்பியது.

"நிறைய ஆண்கள், பெண்கள் பெயரில் எழுதும் பொழுது, பெண் நான் ஆண் பெயரில் எழுதக் கூடாதா என்ன?" என்று அவள் கேட்டது அர்த்தம் நிரம்பிய கேள்வியாக இருந்தது.  அதே சடுதியில், "வித்யா, நான் கேட்டதை நீங்க தப்பா எடுத்துக்கப் போறீங்க.. உங்க வீட்டுக்காரர், 'விஜி'ங்கற பேர்ல எழுதினாலும், அது விஜயக்குமார்ங்கற ஆண் பேரின் சுருக்கம் போலத்தான் தெரியறது.." என்று சொன்ன போது அந்தப் பெண்ணின் ஜாக்கிரதை உணர்வு வித்யாவுக்குப் புரிந்தது.   அதே சமயம் ரிஷியின் புனைப்பெயர் ரகசியம் உணர்வில் படர்ந்து முறுவலித்தாள்.  'நானும் என் பையனும் அந்தப் பெயரில் ஒளிந்திருக்கிறோ மாக்கும்" என்று அவளிடம் சொல்ல நுனி நாக்கு வரை வார்த்தைகள் உருவாகி வந்து விட்டது.  இருந்தாலும் கஷ்டப்பட்டு விழுங்கிக் கொண்டாள்.

"தவிர, 'விஜி'ங்கறது ஆண் தான்னு தெரியற மாதிரி போஸ்டர்லாம் போட்டு தூள் கிளப்பிட்டாங்களே!" என்றாள் உஷா. "உங்க போட்டோவைக் கூட எங்கேயும் நான் பாத்ததில்லையா, இத்தனை நாள் ஆண்ன்னே நினைச்சிண்டிருந்தேங்க." என்று மறுபடியும் அந்த பெண் எழுத்தாளரின் புனைப்பெயர் விசித்திரத்தை சொல்லி அவள் மாய்ந்து போனாள்.

"இந்தப் பெயர் எனக்கு அந்தப் பத்திரிகை ஆசிரியர் வைச்சது.." என்று ஒரு பத்திரிகையின் பெயரைச் சொன்னாள் அவள். "பெண்மனசை பளிச்சின்னு எடுத்துக் காட்டி எழுதிறீங்க.. அதனாலே, ஒரு ஆண் புனைப்பெயரை நீங்கள் வைத்துக் கொண்டால், படிக்கறவங்களுக்கு ஒரு திரில்லா இருக்கும்ன்னு எனக்கு இந்தப் பெயரைச் சூட்டினார் அவர்.  என் முதல் கதையே இந்தப் பேர்லே தான் வந்தது"

"அப்படியா?" என்று கேட்டுக் கொண்டாள் வித்யா. "'பெண்மனம்'ன்னு எழுத்தாளர் லஷ்மி எழுதின கதையைப் படிச்சிருக்கேன். காலப்போக்கிலே எல்லாம் மாறின மாதிரி இந்த வார்த்தைக்கான அர்த்தமும் இப்போ மாறிடிச்சின்னு நெனைக்கிறேன். பெண்மனம் அப்படீன்னு பெண்களுக்கு மட்டுமே சொந்தமான ஒண்ணு மாதிரி இப்போக்கூட அந்த வார்த்தயைச் சொல்லணும்ன்னு நெனைக்கிறீங்க?" என்று தலைசாய்த்து சந்தேகத்துடன் கேட்கிற மாதிரி வித்யா கேட்டாள்..

"என்னைக் கேட்டா பெண்மனம்ங்கறதை இப்போலாம் ஒரு குறியீடாகத்தான் எடுத்துக் கொள்ளணும்ன்னு நெனைக்கிறேன்.." என்றாள் ஊர்மிளா. "மென்மையான, சட்டுனு இளகக்கூடிய, தொட்டதெற்கெல்லாம் பரிதாபப் படக்கூடிய மனசை பெண்மனம்ன்னு சொல்ல வர்றாங்க போலிருக்கு. வித்யா! நீங்க சொல்ல வர்றது ரைட்.  இப்போலாம் அப்படியான மனசு பெண்களுக்குத் தான் சொந்தம்ன்னு சொல்ல முடியாது தான்"

"அதே மாதிரி இன்னொண்ணையும் சொல்லணும்..  மறந்திடும்.. இப்பவே சொல்லிடறேன். பெண்கள் பிரச்னைகளை முன்னிலைப்படுத்தி நீங்கள் எழுதும் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.. ஆனா, பெண்கள்னாலே பிரச்னை தான்ங்கற மாதிரி அந்தக் கதைகள் தோற்றம் கொடுப்பதை நீங்கள் தவிர்க்கலாம் இல்லையா?" என்று உஷா அந்த பெயர் பெற்ற எழுத்தாளரிடம் கேட்ட போது இவளுக்கு ரொம்ப தைரியம் தான் என்று நினைத்துக் கொண்டாள் வித்யா.

"அப்படீன்னு நெனைக்கிறீங்க?.." என்றாள் அந்த எழுத்தாளர்.  திடீரென்று உஷாவின் கரங்களைப் பற்றிக் கொண்டு, "உஷா! நீங்க எனக்கு ஒரு உபகாரம் செய்ய முடியுமா?" என்று அவள் கேட்ட பொழுது, இவளுக்குத் தான் செய்யக்கூடிய உதவி என்னவாக இருக்கும் என்று உஷா திகைத்தாள்.

"உங்களால் எனக்கு செய்ய முடிஞ்ச உதவி ஒண்ணு இருக்கு. உஷா!.  நீங்க என்ன செய்றீங்கன்னா.. இப்போ நீங்க சொன்ன மாதிரி என் கதைகளைப் பற்றிய உங்கள் விமரிசனங்களை 'ஆசிரியருக்கு கடிதங்களா' அந்தந்த பத்திரிகைக்கு எழுதிப் போடணும். அது உங்களால் முடியும். செய்வீங்களா?" என்று அந்தப் பெண் எழுத்தாளர் உஷாவிடம் ரொம்ப தன்மையாகக் கேட்டாள். "அதோட அப்படி நீங்க எழுதற அந்த விமரிசனங்கள் ரொம்ப கடுமையா இருக்கணும்ங் கறது என்னோட சொந்த விருப்பம்.  எப்படீன்னா, இப்போ நீங்க விஜியோட மெஜாட்டியோ கதைக்கு எழுதியிருக்கீங்களே, அந்த மாதிரி!" என்று அவள் சொன்ன போது வித்யாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.  ஊர்மிளாவின் முகத்தில் புன்முறுவல் தவழ,  உஷாவிற்கோ,'இவள் ஏன் இப்படியான ஒரு கோரிக்கையை தன்னிடம் வைக்கிறாள்' என்று வியப்பாக இருந்தது. அந்த வியப்பில் எதுவும் சொல்லத் தோன்றாமல் அவளையே பார்த்தாள்.

உஷாவின் மனதில் ஓடுவதையே படித்தாற் போல,"ஏன் இப்படி ஒரு ஆசை இவளுக்குன்னு உங்களுக்கு ஆச்சரியமா இருக்கும், இல்லையா?.." என்றாள் அந்த எழுத்தாள பெண்மணி.  அவள் விவரித்தது அவள் எழுதுகிற கதை மாதிரியே இருந்தது. "எந்த எழுத்தையும் மறுக்கிற மாதிரி, வேறு பார்வைலே பார்த்து படிப்பவர்கிட்டேயிருந்து விமரிசனம் வந்தா, அதை வாசிக்கறவங்க ஒரு தடவைக்கு இரண்டு தடவையா அதைப் படிப்பாங்க.. என் கதையைப் படிக்காதவங்களுக்கும், அப்படி என்ன அவர் எழுதியிருக்கிறார்ன்னு அதைப் படிக்கற ஆர்வம் கூடி படிப்பாங்க.. உடனே அவங்களும் தனக்கு தோண்றதை நீங்க எழுதினதுக்கு ஒட்டியோ வெட்டியோ கடிதமா எழுதிப் போடுவாங்க.. இந்த மாதிரி வாதப்பிரதிவாதங்கள் பத்திரிகைகளுக்கு பிராணவாயு மாதிரி.. இதனாலே பத்திரிகை உலகிலே என்னோட எழுத்துக்கு இன்னும் மவுசு கூடும்.  அதனாலே தான் கேக்கறேன்" என்று சொன்னவள், கொஞ்சம் நிதானித்து, "'செந்தூரப்பூ' பத்திரிகைலே வர்ற திங்கட்கிழமை 'சத்தியம்'ன்னு என் கதை ஒண்ணு வரப்போறது.  அதைப்படிச்சிட்டு காரசாரமா அந்தப் பத்திரிகைக்கு ஒரு கடிதம் எழுதிப் போடுவீங்களா, உஷா!" என்று கெஞ்சுகிற மாதிரி கேட்டாள்.

அவள் சொன்னதைக் கேட்டு வித்யாவிற்கு என்னவோ போலிருந்தது. இவ்வளவு திறமையாக எழுதுகிறவள், பேசுகிறவள் தன் எழுத்தே வாசகர்களிடம் பேசட்டும் என்று வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்க மாட்டாளோ என்றிருந்தது.

"ஓ. எஸ். எழுதறேன்.  ஆனா,  எதையும் படிச்சவுடனே, என் கை நமநமக்கணும்.  அது ஒரு வார்த்தை அல்லது வரியாக் கூட இருக்கலாம்.  அதைப் பத்தி என் கருத்தை சொல்லியே ஆகணும்ன்னு தோணும். உடனே 'ஆசிரியருக்குக் கடிதம்' தான்.  இதுக்காகவே இருபது இன்லாண்ட் கடித உறைகள் எப்பொழு தும் என் டேபிள் ராக்கில் ரெடியா இருக்கும்ன்னா பாத்துக்கோங்களேன்.." என்று தன் பிரதாபத்தை உஷா சொன்னாலும், உஷாவின் உண்மையான ஆர்வம் வித்யாவுக்குப் பிடித்திருந்தது.  ' ஒருவிதத்தில் இவள் செய்தது கூட தன் கணவனின் எழுத்துக்கு உதவியாக இருக்கும் போலிருக்கே' என்று எண்ணம் வந்தாலும், அப்படியானும் கேட்டு வாங்கி என்ன புகழ் கூட வேண்டிக்கிடக்கிற து' என்று நினைத்துக் கொண்டாள். அந்த எழுத்தாள பெண்மணியிடம் இது பற்றிக் கேட்டால் அதற்கு என்ன சொல்வார் என்று கற்பனையில் ஓட்டிப் பார்த்தாள்.

இதற்கிடையில் யாரோ கைகாட்டி அழைத்துப் போயிருந்த ஊர்மிளா, திரும்பி அவர்கள் பக்கம் வந்த பொழுது, "என்ன, ஊர்மிளா!  நிகழ்ச்சி ஒண்ணும் ஆரம்பிச்சதா தெரியலையே! இன்னும் லேட்டாகுமா?"என்றாள் அந்த எழுத்தாள பெண்மணி.

"அதைத் தான் அங்கே போனப்போ கேட்டு வந்தேன்..  நிகழ்ச்சி நிரல்லே இல்லாட்டாலும், முதல் நிகழ்ச்சி நாம இப்போ நடத்தினது தானாம்..  ஒரு அறிமுகம் மாதிரி ஒருத்தருக்கொருத்தர் கலந்துரையாடல்..  அஃபிஷியலா அடுத்த நிகழ்ச்சி இதோ ஆரம்பிச்சிடுவாங்க போலிருக்கு.." என்றாள் ஊர்மிளா.

மேடைப் பக்கம் லேசான சலசலப்பு.  ரிஷி மேடைக்கு குறுக்கே போன போது
'வந்திட்டாரே' என்று வித்யா நினைத்துக் கொண்டாள். கெளதமும், "அதோ.. அப்பாம்மா" என்றான்..

"உங்க பிள்ளையா?.." என்று அந்த எழுத்தாளினி வித்யாவிடம் கேட்டுக் கொண்டாள்.  லேசாக சிரித்து அவள் சொன்னதை அங்கீகரித்தாக வித்யா காட்டிக் கொண்ட பொழுது, நிகழ்ச்சியைத் தொடங்கி விட்டார்கள்.

முதுபெரும் எழுத்தாளர் போலிருந்தது.  எழுத்தாளர்களுக்கென்றே அந்தக் காலத்தில் வாய்த்திருந்த கதர் வேஷ்டி ஜிப்பாவோடு இருந்தார்.  குரல் கணீரென்று மைக்கில் பட்டுத் தெரித்தது; வெளிப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் தீர்க்கமாகவும், தீர்மானமாகவும் இருந்தன. இரண்டு நாள் நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்துப் பேசினார்.  அரைமணி நேரப்பேச்சு, அனுபவம் பேசுவதாக இருந்தது.  பி.எம்.கண்ணன், மாயாவி, எல்லார்வி, கோமதி சுவாமிநாதன், பி.வி.ஆர், எஸ்.வி.வி., ஆர்வி, கொத்தமங்கலம் சுப்பு, வசுமதி ராமசாமி, கிருத்திகா என்று நிறைய பழம் பெரும் பத்திரிகை எழுத்தாளர்களைப் பற்றிச் சொன்னார்.  பி.எம்.கண்ணனின் 'முள்வேலி' கதையின் போக்கைச் சொல்லி பத்திரிகை எழுத்து என்று வரும் பொழுது இப்படியெல்லாம் எழுதினால் சிறப்பாக இருக்கும் என்று எடுத்துச் சொல்லி 'எழுத்துப் பட்டறை'யை ஆரம்பித்து வைத்தார்.

அடுத்துப் பேசியவர்-- அவரும் ஒரு எழுத்தாளர் தான் போலிருந்தது-- 'ஒரு சிறுகதையை எப்படித் தொடர்கதையாக எழுதுவது' என்கிற தலைப்பில் சிரிக்காமல் பேசினார்.  அவர் பேசிய ஸ்டைலைப் பார்த்து, வரிக்கு வரி வைத்திருந்த நையாண்டியைக் கேட்டு அவையே குலுங்கிக் குலுங்கி சிரித்தது.

வித்யா திரும்பி பக்கத்தில் உட்கார்ந்திருந்த உஷாவைப் பார்த்தாள்.  உஷா உன்னிப்பாக முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் அவர் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

வித்யாவின் மனசில் அலைஅலையாய் ஏதேதோ எண்ணங்கள் எழுந்து தாழ்ந்து நர்த்தனமாடின.


(இன்னும் வரும்)















































Saturday, May 5, 2012

பார்வை (பகுதி-44)

ட்டோக்காரப் பெரியவர் நல்லவராகத் தெரிந்தார்.  இடத்தைச் சொன்னதுமே "போலாம். முப்பது ரூபா கொடுங்க.." என்று நியாயமான ரேட்டைச் சொன்னதும் மறு பேச்சு பேசாமல் வித்யா கெளதமுடன் ஏறிக்கொள்ள உஷாவும் அடுத்து ஏறி உட்கார்ந்து கொண்டாள்.

பெரியவருக்கு அந்தப் பகுதியே அத்துப்படியாக இருந்தது.  முரட்டுத்தனமாக ஆட்டோவை விரட்டி சாகஸம் செய்யாமல் நிதானமாக ஸ்பீட் பேக்கரில் ஏற்றி இறக்கி பாங்க் ஆப் இந்தியா ஒட்டிய லஷ்மித் தெருவில் திருப்பினார்.

"உங்களுக்கு ஸ்டாண்ட் எங்கே?.. மாம்பலத்தில் தானா?" என்று உஷா கேட்டாள்.

"இல்லேம்மா.. கே.கே.நகர்லே.  ஈஎஸ்ஐயைத் தாண்டி."

"இல்லே. இந்தப் பகுதிலாம் நல்லாத் தெரிஞ்சிருக்கேங்கறத்துக்காகக் கேட்டேன்."

"நீங்க ஏறினீங்கல்லே, அதுக்கு பக்கத்லே தான் போஸ்டல் காலனிலே ஒரு சவாரியை இறக்கிட்டு உங்கத் தெருவாலே வந்தேன். இப்பல்லாம் பெரும்பாலும் சவாரிலாம் அங்கேயிருந்து இங்கே, இங்கேயிருந்து அங்கே அப்படித்தான் இருக்கு. கிட்டத்தட்ட மாம்பலத்லே அல்லா இடமும் எனக்கு அத்துப்படி தான்."

"செல் வைச்சிருக்கீங்களா.. வெளிலே போகணும்னா ஆட்டோ தான். பக்கத்திலே இருந்தீங்கன்னா, வரலாம்லே. அதுக்காகக் கேட்டேன்" என்றாள் வித்யா.

"செல் தானே?  இருக்குங்களே.. நம்பர் சொல்லட்டுங்களா?"

"இருங்க.. நோட் பண்ணிக்கறேன்.." என்று ஹேண்ட் பாக்கிலேந்து தன் செல்லை எடுத்தாள் வித்யா. "சொல்லுங்க..."

ஆட்டோ பெரியவர் நம்பரைச் சொல்ல தன் செல்லில் குறித்துக் கொண்டாள்.
"உங்க பேரு என்ன?"

"பெரியசாமி.."

வித்யா தன் செல்லில் அவர் பெயரையும் குறித்துக் கொண்ட பொழுது அந்தப் பெரியவரே சொன்னார். "எங்கப்பா வைச்ச பேர் இது;  எங்கத் தாத்தா பேரு.  தாத்தான்னா அப்பாரு அப்பா.  என் அப்பாக்கு அவரு அப்பா மேலே அத்தனை பிரியம்.  அதான் அவரு அப்பா பேரே எனக்கு வச்சிட்டார்.  எனக்குன்னா என் அம்மா பேர்லே அத்தனை பிரியம்.  அதுனாலே என் பையனுக்கு என்னோட அம்மாவோட அப்பா பேரு வைச்சிருக்கேன்.  அவரு பேரு நாராயணன்" என்றார்.

தன் பையனின் பெயரை அவர் சொன்ன விதம் அழகாக இருந்தது. குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும் சரித்திரத்தைப் பற்றி ஒரு புஸ்தகமே எழுதலாம் போலிருந்தது வித்யாவுக்கு.  புஸ்தகம் இல்லாட்டாலும் ஓய்வா உட்கார்ந்து ஒரு சிறுகதையானும் இது பத்தி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.  அப்படி ஒன்று எழுதினால் வரிசையாக தாத்தாவுக்கு அப்பாவிலிருந்து வரிசையாக ஆரம்பித்து தாத்தா, அப்பா என்று எல்லோர் பெயர்களும் இருக்கும்படி பெயர் வைத்துக் கொள்கிறவர்களின் விவரங்களையும் எழுத வேண்டும் என்று எண்ணினாள்.

ஒரு நிமிடம் யாரும் பேசவில்லை.  எல்லையம்மன் கோயில் தெருவின் முனையில் ஆட்டோவை வலது பக்கம் திருப்பியபடி, "எங்களுக்குக்கெல்லாம் ஈரோடு பக்கம்" என்றார் ஆட்டோ பெரியவர்.

"ஈரோடு பக்கம்ன்னா?..எந்த ஊர்?" என்று ஆவலோடு உஷா கேட்டாள்.

"பவானிம்மா.  உங்களுக்குத் தெரியுமா?"

"தெரியுமாவாவது? எனக்கு கோபி" என்றாள் உஷா.

"அப்படியாம்மா. ரொம்ம சந்தோசம்மா.." என்று அவர் மேட்லி சப்-வேயில் இறங்காமல் வலது பக்கம் திருப்பினார். "இங்கே தான் ஈபி ஆபிஸ் பக்கம் அந்த கல்யாணச் சத்திரம் இருக்கு.." என்றார்.  கொஞ்சம் தாமதித்து, "நான் கூட டிரான்ஸ்போர்ட் டிபார்ட்மெண்ட்லே டிரைவரா இருந்து ரிடையர் ஆனவன் தாம்மா" என்றார்.  "வீட்டிலே சும்மா உக்காரப் பிடிக்காம ஆட்டோ ஓட்ட ஆரம்பிச்சிட்டேன்.. பொழுதும் போகுது.  பல ஜனங்களோட பேசிப் பழகறதும் மனசுக்கு சந்தோசமா இருக்கு.  என்ன சொல்றீங்க?" என்றார்.

"நீங்க சொல்றது சரிதான்" என்றாள் உஷா.

"உங்க பையன் நாராயணன் வேலைக்குப் போறாரா?" என்று கேட்டாள் வித்யா.

"போறான்ம்மா..  அடையார்லே பிரிண்டிங் டெக்னாலஜி படிச்சான்.  இப்போ அம்பத்தூர்லே ஒரு பெரிய பிரஸ்லே மானேஜரா இருக்கான். வயசு இருப்பத்தாறு ஆச்சு.  அவனுக்குத் தான் கல்யாணத்துக்கு பாத்துக்கிட்டு இருக்கேன்.  அது என்னவோ நெருக்கத்லே வர்ற மாதிரி இருக்கு. ஆனா முடிய மாட்டேங்குது.  சாதகத்லே ஏதோ கோளாறுங்கறாங்க.."

"ஜாதகம்ன்னு போயிட்டா.. எல்லா ஜாதகத்திலேயும் ஏதோ ஒண்ணு குத்தம் குறை சொல்லத்தான் சொல்றாங்க.. வேளை வரணும்.  அது வந்திட்டா போதும்.  இப்படி அப்படி எப்படியோ பிள்ளை வீட்டுக்காரங்களுக்கும் பொண்ணு வீட்டுக்காரங்களுக்கும் தெரிஞ்சி கல்யாணம் முடிஞ்சு போய்ட்றது.." என்று உஷா சொல்லும் பொழுதே, கல்யாண மண்டபம் வந்து விட்டது.

"அதெல்லாம் நம்ம கைய்லே இல்லே.  கல்யாணம்லாம் சொர்க்கத்லே நிச்சயக்கப்பட்றதுன்னு அதுக்குத்தான் சொல்றாங்க போலிருக்கு.. பெரியவரே, உங்க பையன் கல்யாணம் பத்தி பேசிகிட்டே வந்தோமா.. இதோ, கல்யாண சத்ரமும் வந்தாச்சு.. ஆக, சீக்கரமே உங்க பையனுக்குக் கல்யாணம் நடந்திடும் பாருங்க.." என்று வித்யா சொல்லிக் கொண்டே ஆட்டோவிலிருந்து இறங்கிய போது பெரியவரின் முகம் மலர்ந்தது.

வழக்கமாக இல்லாமல் ஆட்டோ பெரியவரும் தன் ஸீட்டிலிருந்து இறங்கி வண்டியைச் சுற்றிக்கொண்டு வந்து நின்றார்.  வித்யாவிடம் ஐம்பது ரூபாய் நோட்டாக இருந்தது.  அவரிடம் பாக்கியைக் கொடுப்பதற்கு இருபது ரூபாய் சில்லரை இல்லாமலிருந்தது.  அதற்குள் உஷா தன் பர்ஸைத் திறந்து பார்த்து "எங்கிட்டே இருக்கு.."என்று மூன்று பத்து ரூபாய் நோட்டுகளை எடுத்துத் தந்தாள்.  வாங்கிக் கொண்ட ஆட்டோக்காரர் அவர்கள் சத்திரத்தின் படியேறும் வரை பார்த்திருந்து விட்டுக் கிளம்பினார்.

பழைய மண்டபத்தை சமீபத்தில் தான் புதுப்பித்திருந்தார்கள் போலிருக்கு.  அங்கங்கே புது மோஸ்தரில் காணப்பட்ட விதவிதக் கலர் வெள்ளையடிப்பு அதைக் காட்டிக் கொடுத்தது.  உள் ஹாலின் ஒரு கோடியில் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் இடைவெளி விட்டு இரண்டடி உயரத்தில் மார்பிளில் மேடை கட்டியிருந்தார்கள்.  அங்கே போடப்பட்டிருந்த இரண்டு நாற்காலிகளுக்கு முன்னால் ஒரு மைக்கும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அவர்களை முதலில் பார்த்தது லஷ்மணன் தான். பார்த்தவுடன் மலர்ச்சியுடன் அவர்கள் இருக்குமிடத்திற்கு வந்தான்.  "வாங்க வித்யா! வாங்க, உஷா!" என்று அவன் சொன்னது உஷாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. தனக்குத் தெரியாத யார் இது தன் பெயரை இவ்வளவு சரியாகச் சொல்வது என்று லஷ்மணனை ஏறிட்டுப் பார்த்தாள்.  அவள் ஆச்சரியத்தைப் பார்த்து, "சார் தான் அபராஜிதன்.." என்று வித்யா சொன்ன போது சட்டென்று அவள் முகம் பூராவும் மலர்ந்தது.  "உங்க போட்டோவை பத்திரிகைகள்லே பாத்திருக்கேன்.. ஆனா, நேர்லே பாக்கறச்சே ஏதோ வித்தியாசம் தெரியறது..  அதான் சட்டுன்னு தெரிலே.. ஸாரி.." என்றவள், "அதுசரி, அது எப்படி என் பேர் உங்களுக்குத் தெரிஞ்சது?... முன்னே பின்னே பார்த்ததில்லையே!" என்று வியந்தாள்.

"உங்களைப் பத்தி வித்யா சொல்லியிருக்காங்க.. அதான்.. ஒரு கெஸ் தான்!  சரியாப் போயிடுத்து.." என்று சிரித்துக் கொண்டே லஷ்மணன் சொன்னவுடன், "எஸ்.. எங்க ஸ்டோருக்கு நீங்க வந்திருக்கீங்க, இல்லையா; அப்பவே பாக்க முடியாம போயிடுத்து.. இவ்வளவுக்கும் நான் உங்களோட அட்மைரர்! அப்படியும் இந்த வித்யா சொல்லாம விட்டுட்டா!" என்று வித்யாவின் கோர்ட்டில் பந்தைத் தள்ளினாள்.

"எங்கே ஊர்மிளாவைக் காணோம்?" என்று வித்யா கேட்பதற்கும் ஊர்மிளா மண்டபத்தின் உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது. அவளைப் பார்த்ததும் வித்யாவின் மனம் சந்தோஷத்தில் குதி போட்டது.. "ஹாய், ஊர்மிளா!" என்று பக்கத்தில் போய் அவளை அணைத்துக் கொண்டாள்..

"நீங்கள்லாம் வந்து ரொம்ப நேரமாச்சா?.." என்று கேட்ட ஊர்மிளா, "நீங்க, 'ஷா'- அதான் உஷா தானே?" என்று உஷாவைப் பார்த்துக் கேட்டதும் உஷா, வித்யாவைப் பார்த்து நெகிழ்ந்தாள்.  "இந்த வித்யாவைப் பாருங்க.. எல்லாருக்கும் என்னைப் பத்திச் சொல்லியிருக்கா.. ஆனா, எனக்குத் தான்.." என்று அவள் தடுமாறும் போதே, "உஷா! இவங்க தான் அபராஜிதன் சார் மிஸஸ்.. ஊர்மிளா!" என்று வித்யா சொன்ன போது, ஆர்வத்துடன் ஊர்மிளாவின் கைகள் இரண்டையும் பற்றிக் கொண்டாள் உஷா..  ஊர்மிளாவைப் பார்த்ததிலிருந்து நெருங்கிப் பழகிய தோழி ஒருத்தியை நெடுநாள் பிரிந்து இப்பொழுது திடீரென்று பார்ப்பது போல அவளுக்கு இருந்தது.

"வாங்க.. அந்தப் பக்கம் போலாம்.. நிறைய தோழியர்கள் வந்திருக்காங்க, பாருங்க" என்று ஊர்மிளா அவர்களை அழைத்துக் கொண்டு பெண்கள் வரிசையாக அமர்ந்திருந்த பக்கம் நகர்ந்தாள்.  ஊர்மிளாவைப் பார்த்ததும் கும்பலாக இருந்த அந்த பெண்கள் மத்தியில் ஒரு புது உற்சாகமே தொற்றிக் கொண்ட மாதிரி இருந்தது.

நிறையப் பேரை அவர்கள் பெயரைச் சொல்லிக் கூப்பிடும் அளவுக்கு ஊர்மிளாவுக்குத் தெரிந்திருந்தது.  உஷாவுக்கு சிலர் பெயரைக் கேட்ட பொழுது வார இதழ்களில் அச்சில் அவர்களின் பெயரைப் பார்த்த ஞாபகம் வந்து, 'ஓ! அவர்கள் தானா இவர்கள்'  என்று ஆச்சரியத்துடன் நினைத்துக் கொண்டாள்.

மொத்தத்தில் உஷாவுக்கு அது ஒரு புது அனுபவமாகவே இருந்தது.  எழுதுகிற உலகம், அது சம்பந்தப்பட்டவர்கள் என்று கும்பலாகப் பார்த்த பொழுது இதெல்லாம் பற்றி இத்தனை நாள் ஏன் தனக்குத் தெரியாதிருந்தது என்று ஒரு இழப்புணர்வே ஏற்பட்டது.  பத்திரிகைகள் வாங்குவதில் எந்தக் குறைச்சலுமி ல்லை; சொல்லப்போனால், அன்றாட வேலைகளில் பத்திரிகைகள் படிப்பதும் ஒன்றாகிப் போன சமாசாரம் அது.  ஒன்றாக மட்டுமில்லை, எழுதுபவர்களின் எழுத்துக்களை ஒரு பொழுது போக்கு போல படித்து அடுத்த வினாடியே படித்த பத்திரிகையைத் தூக்கிப் போடும் பழக்கமில்லை அவளுக்கு.  விசேஷமாக மனத்தில் தைக்கிற மாதிரி ஏதானும் ஒன்றைப் படித்தாளானால், அப்படிப் படித்தது நெடுநேரம் அவள் மனத்தைச் சுற்றிக் கொண்டிருக்கும்.  படித்தது அவளுக்குப் பிடித்திருந்தால் அதை எழுதியவர் பெயரைப் புரட்டிப் புரட்டி இரண்டு மூன்று தரம் பார்த்து, மனத்தில் அவர் பெயரைப் பதிய வைத்துக் கொள்வாள்.  அவள் நினைப்பதற்கு மாறுபட்டு எழுதியது இருந்தாலும், மறக்காமல் தான் நினைத்ததை அந்தப் பத்திரிகைக்கு தன் கருத்தாக எழுதிப் போடுவாள். அப்படி எழுதிப் போட்ட அவள் கடிதங்கள் நிறைய பத்திரிகைகளில் பிரசுரமாகியிருக்கின்றன.  சில நேரங்களில் உஷா என்றும் பல நேரங்களில் 'ஷா' என்றும் பெயர் வைத்துக் கொண்டு எழுதியிருக்கிறாள். 'ஷா' போன்ற ஆண்களுக்கு இதையெல்லாம் புரிந்து கொள்ள முடியாது' என்கிற மாதிரி காட்டமாக அவள் அந்தப் பெயர் கொண்டு எழுதிய ஒரு கடிதத்திற்கு பதிலாக இன்னொரு கடிதம் பிரசுரமானபோது, நாள் பூரா அதை நினைத்து நினைத்துச் சிரித்திருக்கிறாள்.  அவ்வளவு தூரம் போவானேன்,  ஆசிரியருக்கு கடிதம்' பகுதிக்கு எழுதும் 'ஷா' இவள் தான் என்று தெரிந்தால், இப்பொழுது கூட இந்தப் பெண்கள்லேயே எத்தனை பேர் அவளைச் சுற்றிக் கொள்வார்களோ' என்று நினைக்கையிலேயே அவளுக்குப் பெருமிதமாக இருந்தது.

அப்படி அவள் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே, அவள் கையைப் பற்றி அவளை இன்னொருவரிடம் காட்டி, "இவங்களைத் தெரியுமா? இவங்க தான்,  'ஆசிரியருக்கு கடிதங்கள்' எழுதும் 'ஷா' என்கிற உஷா!" என்று யாரிடமோ ஊர்மிளா சொன்ன போது அந்தப் பெண் தன் இடத்திலிருந்து எழுந்தே வந்து, உஷாவை அணைத்துக் கொண்டாள்.

"உங்கள் கடிதங்களைப் படிச்சே உங்கள் பேர் மனசிலே பதிஞ்சு போயிடுத்து.. யார் இந்த ஷா, இப்படி அருமையா எழுதறாரே'ன்னு அடிக்கடி நெனைச்சிப்பே ன்" என்ற அந்தப் பெண் அவளுக்கு அருகில் ஒரு பக்கம் காலியாக இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்."அதுவும் 'வெண்ணிலா' பத்திரிகையில் ரிஷியின் 'மெஜாட்டியோ' கதையைச் சாடி நீங்க எழுதியிருந்த கடிதம், ஓகோ ரகம், உஷா" என்று அவள் சிலாகித்துச் சொன்ன பொழுது வானத்திலே பறக்கிற மாதிரி இருந்தது உஷாவுக்கு.

அதே சமயத்தில், அதைக் கேட்டு இன்னொரு பக்கத்தில் அமர்ந்திருந்த வித்யாவிற்கு என்னவோ போலிருந்தது.


(இன்னும் வரும்)









Related Posts with Thumbnails