மின் நூல்

Thursday, June 28, 2012

பார்வை (பகுதி-51)

பேச்சு வழக்கிற்காக கதை என்று சொன்னாளே தவிர நடந்த நிகழ்ச்சிகளின் சங்கிலிப் பிணைப்பு நாராயணனைத் திகைக்க வைத்து ஊர்மிளா சொன்னதை உன்னிப்பாகக் கேட்க வைத்தது.

"நாராயணன்! உங்க அப்பாவை எனக்கு முன்னே பின்னே தெரியாது.  ஆனா உங்க ஜாதகம் அவர் மூலம் என்னிடம் வந்தது தான் ஆச்சரியம்" என்றாள் ஊர்மிளா.

"அப்பா ஏதோ மேரேஜ் மேட்சிங் சென்டரில் என் விவரங்களைப் பதிவு செய்து வைச்சிருக்கறதா சொல்லிருக்கார்..  அவங்க அனுப்பச் சொல்லி உங்களுக்கு அனுப்பியிருப்பார்ன்னு நெனைக்கிறேன்."

"அப்படிக் கூட இல்லை.." என்று ஊர்மிளா சொன்ன போது நாராயணனின் புருவங்கள் ஏறி இறங்கின. "ஆச்சரியமானா இருக்கு.."

"இதில் இன்னொரு ஆச்சரியமும் எனக்கு உண்டு" என்று ஊர்மிளா முறுவலித்தாள். "யாருக்காக உங்க ஜாதகத்தை வரவழைச்சேனோ அந்தப் பெண்ணை நான் பாத்தது கூட இல்லை..  ஆனா இப்போ என்னன்னா அந்தப் பெண்ணுக்கு உங்க ஜாதகம் பொருந்தி வந்து அந்தப் பெண்ணே உங்களுக்கு மனைவியா வரணும்ன்னு, ஏனோ தெரிலே, எனக்கு ரொம்பவும் ஆர்வமா இருக்கு" என்றாள்.

"போச்சுடா.. ஜோசியர் சொன்னார்ன்னு என் ஜாதகம் பத்தி எங்கப்பா அப்பப்ப ஏதாவது சொல்லிண்டே இருப்ப்பார்.  அவர் சொல்றதிலே பலதைக் கேக்க எனக்கே ஆச்சரியமா இருக்கும். இப்போ நீங்க சொல்றதைப் பாத்தா இன்னும் இன்னும் நிறைய ஆச்சரியங்கள் தொடர்ந்து வரும் போல இருக்கே.. ஒவ்வொண்ணா சொல்லுங்க.  நானும் எனக்குத் தெரிந்த ஆச்சரியங்களோடு உங்களது ஆச்சரியங்களையும் சேர்த்துப் பார்த்து சரியா இருக்கான்னு செக் செஞ்சுக்கறேன்.." என்று சொல்லிச் சிரித்தான்.

"அடேடே! உங்களுக்குக் கூட ஆச்சரியங்கள் கைவசம் இருக்கா? அப்படீன்னா ஏதாவது ஒண்ணைச் சொல்லுங்களேன்" என்று ஊர்மிளா பரபரத்தாள்.

"வேணாம். இப்பச் சொல்லிட்டா சுவாரஸ்யம் இருக்காதுங்க.. பின்னாடி சொல்றேனே!"

"அப்படியா சொல்றீங்க?.." என்று அவள் கேட்ட போது 'பொசுக்'கென்று அவள் முகம் போனதென்னவோ உண்மைதான்.  ஆனால் ஒரே வினாடியில் தன் ஏமாற்றத்தை சரிசெய்து கொண்டு,"நீங்க சொல்றதைப் பாத்தா இப்போ சொல்ல வேண்டாம்ன்னு நீங்க சொல்றதுக்கு ஏதோ காரணம் இருக்கற மாதிரித் தெரியறது.  போனாப் போகட்டும்..   ஆனா, ஒண்ணு எனக்கேத் தெரியறது. உங்க ஜாதகம் எனக்கு வந்த விதம் அதைத் தொடர்ந்து நடக்கறதெல்லாத்தையும் பாத்து எனக்கே ஆச்சரியமா இருக்கு.   நீங்க சொல்றது கூட சரிதான். உங்க ஆச்சரியம் உங்களோட இருக்கட்டும்.  என்னோட அனுபவ ஆச்சரியம் என்னோட.  சரியா?.. பின்னாடி பகிர்ந்துக்கலாம். அப்போ நம் ஆச்சரியங்கள் இன்னும் கூடக் கூடலாம்" என்றாள்.

"நீங்க என்ன சொல்லப் போறீங்கன்னு எனக்குத் தெரியாது.  ஆனா ஒண்ணு தெரியறது, மேடம். என் திருமணத்துக்காக என்னிக்கு எங்க வீட்லே பேச்செடுத்தாங்களோ, அன்னிலேந்தே அது தொடர்பா நடக்கற எல்லாத்தையும் ஒரு இன்ட்ரஸ்ட்டோட கவனிச்சிக்கிட்டு வர்றேன். அதெல்லாம் பாத்து என் மனசிலே புதுசு புதுசா சில விஷயங்கள்லே சில அபிப்ராயங்கங்கள் உருவாகியிருக்கு. அதெல்லாம் பத்தி நிறைய யோசிக்கறேன். ஒரு காலத்திலே நான் நம்பாத சில விஷயங்களை இப்போ நம்ப ஆரம்பிச்சிருக்கேன். நீங்க சொல்லப் போறதும் நிச்சயம், எந்த நினைப்பெல்லாம் ஒண்ணாச் சேர்ந்து என் மனசிலே ஒரு உருவகத்தை உருவாக்க முயற்சிக்கறதோ அதுக்குத் தான் உதவி செய்யப்போறதுன்னு எனக்குத் தெரியறது. அதன் அடிப்படைலே நீங்க இப்பச் சொல்லப் போறதும் சட்டுன்னு நான் ஒரு முடிவுக்கு வர எனக்கு செளகரியமா இருக்கும். அதுக்குத் தான் சொல்றேன். ப்ளீஸ்.. யூ ப்ரொஸீட்.." என்று நாற்காலியில் நன்றாகச் சாய்ந்து தளர்த்தி உட்கார்ந்து கொண்டான் நாராயணன்.

"நாராயணன்! எனக்குக் கூட கல்யாணத்திற்குக் காத்திருக்கிற இந்தப் பெண்ணோட தங்கையைத் தான் தெரியும். அந்தப் பெண் மூலம் தான் அவளோட அக்காவைப் பத்தி கொஞ்ச விவரம் தெரியுமே தவிர நேர்லே பாத்தது கிடையாது.  அந்தப் பெண்ணைத் தெரிந்த இன்னொருத்தர் சொல்லி தங்கையை விட அக்கா அழகா இருப்பாள் என்று கேள்விப்பட்டிருக்கேன். கொஞ்சம் வறுமையான குடும்பம் தான்.  ஆனா, வறுமையில் செம்மைன்னு சொல்லுவாங்களே, அந்த மாதிரியான பக்குவம். அதனாலேயே தங்கைக்காரி மேலே எனக்கு ஒரு பாசம்.  இவளோட அக்கா திருமணத்திற்குத் தயாரா இருந்ததாலே, நம்மாலே இந்தக் குடும்பத்துக்கு ஏதாவது நல்லது செஞ்சாத் தேவலையேங்கற எண்ணத்திலே எனக்குத் தெரிஞ்ச இடங்கள்லே சொல்லி வைச்சிருந்தேன். அந்தப் பெண்ணுக்குக் கல்யாணமும் நிச்சியமாயிடுத்து ன்னா என்னாலே முடிஞ்ச அவங்களுக்குத் தேவையா இருக்கற ஏதாவது உதவியையும் செய்யலாம்ன்னு தீர்மானிச்சிருக்கேன்."

"சொல்லுங்க, மேடம்.  உங்களுக்கு இந்தக் குடும்பத்தின் மேலே இருக்கற நல்லெண்ணம் புரியறது.  ஆரம்பமே எனக்கு சந்தோஷமா இருக்கு.  சொல்லுங்க.."

"சொல்றேன்.  இந்தப் பெண்ணின் திருமண விஷயமா நான் சொல்லி வைச்சிருந்தவங்கள்லே ஒருத்தர் வித்யா; எங்க ஃபேமலி ஃப்ரண்ட். இப்போ ரிஷின்னு கதையெல்லாம் எழுதறாரே, அவர் ஒய்ஃப்."

"ரிஷி?.. 'காதல் தேசம்' ரிஷி தானே?"

 "எஸ். அவரே தான்.  இந்தப் பத்திரிகைக்காரங்களைச் சொல்லணும். கதைக்கெல்லாம் எப்படி பேர் வைக்கறாங்க, பாருங்க.. 'பசக்'ன்னு ஞாபகத்லே ஒட்டிண்டு ஆளையே அடையாளப்படுத்தற மாதிரி.."

"அது நமக்குத் தெரிந்த விஷயம் தானே?.. அப்புறம், என்ன நடந்தது?.." என்று அவன் கேட்ட ஆர்வத்தில் பேசும் பேச்சின் டிராக் மாறிடக் கூடாதெங்கிற கவலை அவனுக்கு இருந்ததை வெளிப்படையாகக் காட்டியது.

"நானும் நாலைஞ்சு பேர்கிட்டே சொல்லி வைச்சிருந்தேன்னு வைச்சிக்கங்க..  ஆனா, முதல் ரெஸ்பான்ஸ் வித்யாகிட்டேயிருந்து வந்தது.-- உங்கப்பாகிட்டே யிருந்து ஜாதகக் காப்பியே வாங்கி அவங்க எங்கிட்டே கொடுத்திட்டாங்க.."

"இன்ட்ரஸ்ட்டிங்.. அவங்களுக்கு எப்படி என் அப்பாவைத் தெரிஞ்சதோ, தெரிலே.."

"கவனிங்க. உங்க ஜாதகப் பயணம் இங்கேயிருந்து தான் ஆரம்பிக்குது. இப்போ நடந்ததே, அந்த எழுத்துப் பட்டறைலே கலந்துக்க வித்யா அவங்க வீட்டு வாசல்லே நின்னுண்டு ஆட்டோவைத் தேடினப்போ அந்தப் பக்கமா வந்த உங்கப்பா ஆட்டோலே ஏறிக்கிறாங்க.."

"ஓ.. அப்புறம்?"

"ஒரு பத்து நிமிஷப் பயணம் தான்.  பொதுவா ஆட்டோக்காரர் வண்டிலே உக்காந்தவங்க கேட்ட இடத்திற்குப் போய் வண்டியை நிறுத்த, பயணம் செய்றவங்களும் இறங்கிண்டு கேட்ட காசைக் கொடுத்திட்டுப் போகன்னு  வழக்கமா அமைஞ்சிருக்க வேண்டிய சவாரியா இது அமையாமப் போனது தான் விசேஷம்.  அந்த பத்து நிமிஷப் பயணத்திலே, அவருக்கும் இவங்களைப் பாத்து என்ன தோணித்தோ தெரியலே, பையனுக்கு பெண் பாத்திண்டிருக்கிற தைப் பத்தி, தன்னைப் பத்தி, தன் ஊர் பத்தி எல்லாத்தையும் உங்கப்பா அவங்க கிட்டே சொல்றார்.  மொத்தத்தலே தன் பேச்சாலே, நடவடிக்கைகளாலே உங்கப்பா அவங்களை ரொம்பவும் இம்ப்ரஸ் பண்ணிடறார். உங்களுக்கு தகுந்த ஒரு பெண் தெரிய வந்தா நிச்சயம் உங்கப்பாக்குத் தெரியப்படுத்தணும் ன்னு வித்யா அந்தப் பத்து நிமிஷப் பயணத்திலேயே தீர்மானிச்சிடறாங்க..  இதுக்கு நடுவே எங்கேயானும் வெளிலே போனா, உபயோகமாக இருக்குமேன்னு உங்கப்பா செல் நம்பரையும் வித்யா வாங்கிக்கறாங்க...

"எழுத்தாளர் பட்டறை ரெண்டு நாள் நிகழ்ச்சி.    ரெண்டாம் நாள் நிகழ்ச்சிக்கு வித்யா வரும் போதே அவங்க கிட்டே நான் சொன்னது ஞாபகம் இருந்து உங்க அப்பாக்கும் போன் செய்து அவரை உங்க ஜாதகத்தோட வரவழைச்சு, அவர் ஆட்டோவிலேயே நிகழ்ச்சி நடந்த கல்யாண சத்திரத்தில் வந்து இறங்கிக்கறாங்க..  சத்திரத்திற்கு வர்ற வழிலே,  யதேச்சையா உங்கப்பா வித்யாகிட்டே ஜஸ்ட் கல்யாணப் பெண் பேர் கேக்கறார்.  பொண்ணு பேரு லஷ்மின்னு இவங்க சொல்றத்தே, ஆட்டோ ஒரு தெருவில் திரும்பறது.  அந்தத் தெரு பேரு லஷ்மி தெரு.  அப்பவே உங்கப்பா வித்யா கிட்டே 'இது ஒரு சுப நிகழ்ச்சியைத் தொடங்கற அறிகுறியா எனக்குத் தெரியறது. அதனாலே  எங்களுக்கு ஜாதகப் பொருத்தம் பாக்க வேணாங்க.. வேணுன்னா அவங்க பாத்து பொருந்தி வர்றதுன்னா அதுவே எங்களுக்கு சரி'ங்கறார்.  அப்புறம், இன்னொண்ணு.  பெண்ணின் பேரான லஷ்மியையும், உங்க பேரையும் சேர்த்துப் பார்த்தா லஷ்மி நாராயணன்னு வர்றதில்லையா..."

"அட! எங்க குலதெய்வப் பெயர்" என்று உற்சாகத்தோடு உரக்கச் சொன்னான் நாராயணன்.  அடுத்த நிமிஷமே குரல் தழைந்து, "மேடம்!   இப்போ எனக்கு அந்த சேதி கிடைச்சிடுச்சி, மேடம்" என்றவனிடம் பரபரப்பு பற்றிக் கொண்டது. "எல்லாத்தையும் பார்த்தா இந்த லஷ்மி தான் என் மனைவியா வர்றப் போறாங்கன்னு என் உள் உணர்வு சொல்றது!.. ஏதாவது பராக்குப் பார்த்து கோட்டை விட்டேனோ, என்னை மாதிரி ஒரு மடப்பயல் இருக்க மாட்டான்." என்று சொன்ன போது அவன் விழிகள் பளபளத்தன.

"எப்படி நாராயணன் அவ்வளவு தீர்மானமாகச் சொல்றீங்க?.."

"எப்படின்னு சொன்னா என்னை ஒரு மாதிரி பார்ப்பீங்க.  அதனால இப்போ வேணாம்.  முதல்லே நினைக்கறது நடக்கட்டும். அப்புறமா சொல்றேன்."

அந்த சமயம் பார்த்து 'நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம்  ஏதுமில்லை' என்கிற திரைப்பாடல் ஊர்மிளாவின் நினைவுக்கு வந்து அதை மறக்க வேண்டி சடாரென்று தலையைக் குலுக்கிக் கொண்டாள் அவள்.

அவள் அப்படிச் செய்தது வித்தியாசமாகத் தெரிந்து, "என்ன மேடம், என்ன ஆச்சு?" என்று பதட்டத்துடன் கேட்டான் நாராயணன்.

"ஒண்ணுமில்லை.." என்று அந்த நினைவைக் கிளறாமல் வலிந்து சிரிப்புக் காட்டினாள் அவள்.

"இல்லை. என்னத்தையோ எங்கிட்டேயிருந்து மறைக்கிறீங்க.. எதுனாலும் பரவாயில்லை.  சொல்லுங்கள்"

"என்னவோ தெரிலே. 'நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்'ங்கற கண்ணதாசனோட பாட்டு நேரம் காலம் தெரியாமல் எக்குத் தப்பா எனக்கு நெனைவுக்கு வந்திடுத்து..  ஸாரி."

அவள் சொன்னதைக் கேட்டு கலகலவென்று சிரித்தான் நாராயணன். "எஸ். அதான் வேணும். பொருத்தமாத் தான் அந்தப் பாட்டு உங்க நினைவுக்கு வந்திருக்கு.." என்று சொன்னவனை விநோதமாகப் பார்த்தாள் அவள். "என்ன சொல்றீங்க?.."

"கவிஞர் சொன்னது என்னன்னா, சகஜமா நாம் நினைப்பதைத் தான். நாம நினைக்கறதெல்லாம் நடந்துட்டா, அப்புறம் தெய்வம்ன்னு ஒண்ணு என்ன இருக்கு?.. நடக்கறதெல்லாம் தெய்வத்தின் செயல்' என்கிறார்.  இந்த விஷயத்லே கூட நாம அப்படித் தானே நினைக்கிறோம், மேடம்?.. தொடர்ச்சியா இப்போ நடந்திருக்கிறதெல்லாம் தெய்வத்தின் வழிகாட்டல். அந்த வழி காட்டும் பாதை பார்த்து நடந்தா, எல்லாம் நல்லபடி முடியும்ங்கறதை மனப்பூர்வமா நான் நம்பறேன். இதுவரை நடந்த எல்லாத்தையும் வரிசையா நீங்க சொல்லிட்டு வந்தப்போ, என் மனசுக்குக் கிடைத்த சேதி இதான்.." என்று சொல்லி முடித்த போது புசுபுசுவென்று லேசாக மூச்சிறைத்தது அவனுக்கு.

அவன் உணர்வுகளுக்கு தன்னாலான உதவிகள் செய்து அதற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று அந்த சமயத்தில் நினைத்துக் கொண்டாள் ஊர்மிளா.

"கோலம் போடற மாதிரி மேடம்.  சொல்லப்போனா, தெய்வக் கோலம் . இன்ன கோலம் தான்னு தீர்மானிச்சு முன்னாடியே கோலப்புள்ளிகளை இட்டாச்சு.. புள்ளிகளை இணைச்சு கோலத்தைப் பூர்த்தி செய்யற வேலையை மட்டும் மனுஷங்க கையிலே கொடுத்திருக்கு..  அவங்க இல்லாம எதுவும்ன்னா அது அமானுஷ்யம் மாதிரி ஆயிடும் இல்லையா?.. அதுக்காகத் தான் அந்த ஏற்பாடு. . கண்ணுக்குத் தெரிஞ்சி அவங்க இன்வால்வ் ஆனாத் தான் அவங்களுக்கும் ஒரு அசட்டுத் திருப்தி.  அதுக்காக அது.  ஊர்மிளா மேடம்,  நீங்க தான் ஆரம்பிச்சு வைச்சீங்க. அதாவது கோலத்தைத் தொடங்கி வைக்கற பாக்கியம் உங்களுக்குத் தான் கெடைச்சது.  அங்கங்கே போய்ட்டு மறுபடியும் கோலடப்பா இப்போ உங்க கைக்கு வந்திருக்கு. வித்யா மேடம் விட்ட இடத்திலேந்து தொடர்ந்து நீங்களும் புள்ளிகளை கோடிழுத்து இணைச்சுத் தொடருங்கள் மேடம்.  ப்ளீஸ்.." என்று அவன் கேட்டுக் கொண்ட பொழுது ஊர்மிளாவின் உடல் சிலிர்த்தது. ஏதோ தெய்வ ஆக்ஞையைக் கேட்ட மாதிரி அவள் முகம் பரவசத்தில் பளிச்சிட்டது.

"சரி, நாராயணன்.  அடுத்த கட்டம் உங்க ஜாதகம் அவங்க கிட்டே போறது தான். இன்னும் கொடுக்கலே. என் ஹாண்ட் பேக்லேயே இருக்கு.  இன்னிக்கே நான் இந்த ஜாதகத்தை அவங்களுக்குச் சேர்த்திடறேன்" என்ற ஊர்மிளாவின் உதடுகள் ஜபிப்பது போல படபடத்தன.

"எஸ். சேத்திடுங்க. ஒரு ரிக்வெஸ்ட்.  இந்த அம்பத்தூர் புது வீடு சமாச்சாரம் அவங்களுக்குத் தெரிய வேண்டாம்.  எதுக்காகவும் எது ஒண்ணும்ன்னு இருக்கக் கூடாதுங்கறத்துக்காகத் தான் அந்த வேண்டுகோள்.  தெய்வ சங்கல்பம் இருக்கறச்சே அப்படி நேராது.  இருந்தாலும் மனுஷங்களோட குழறுபடிகள் இல்லாம கோலம் எப்படிப் போகணுமோ அப்படிப் போய் அழகாப் பூர்த்தியாகணும்ன்னு நான் ஆசைப்படறேன்.  என்னோட சுய அபிலாஷை இது. பூர்த்தியான கோல அழகைப் பாக்கணும்ன்னு மனசு கிடந்து அடிச்சிக்கறது.."என்று சொல்லி முடித்த போது நாராயணன் குரல் அமுங்கிப் போன மாதிரி இருந்தது.

"கவலையே படாதீங்க.  எனக்கும் இது எப்படிப் போறதுன்னு பார்க்க ஆர்வமா இருக்கு. அதனால எதுவும் லீக் ஆகாது.  என்னை நீங்கள் நம்பலாம், நாராயணன்" என்றாள் ஊர்மிளா.

"தேங்க்ஸ்..." என்று நாராயணன் சொன்ன போது அவன் முகத்தில் ஒரு பரவசம் பளிச்சிட்டது.   ரொம்ப இயல்பாக, "அடுத்தாப்ல ஆபிஸ் வேலையைப் பாக்கலாமா?.  மொத்தம் 52 நாவல்கள் என்றா சொன்னீர்கள்?.. டெலிவரி சிலிப் உங்க கிட்டே தானே இருக்கு?.. நான் ரிஸீவ் பண்ணிக்கலாம்லே?" என்று அவன் சொன்ன போது வேறு ஒரு நாராயணனாக அவன் ஊர்மிளாவுக்குத் தோற்றமளித்தான்.

"எல்லாம் ரெடி, நாராயணன்.  அச்சுக்கான எல்லா பிரிண்ட்ங் மேட்டர்களையும் வழக்கம் போலத் தனித்தனி கவர்லே போட்டு அடுக்கியாச்சு. கவரிங் லெட்டர் இதோ.." என்று மேஜை இழுப்பறை திறந்து ஊர்மிளா அந்த காகிதங்களை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.

"நீங்க சரிபாத்திட்டீங்கல்லே?.." என்று அந்த லிஸ்ட்டை மேலோட்டமாகப் பார்த்தபடியே கேட்டான் நாராயணன்.

"பாத்திட்டேன்.  இருந்தாலும் உங்க முன்னாடி ஒரு தடவை பாத்திடலாம். எல்லாம் சரியா இருந்து நீங்க கையெழுத்திட்டு வாங்கிண்டா எனக்கும் ஒரு திருப்தி." என்று ஊர்மிளா சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே நாராயணன் அடுக்கி வைத்திருந்த அச்சுக்கான பழுப்பு நிற கவர்களை எண்ணத் துவங்கி விட்டான்.

"ஆமா, ஐம்பத்திரண்டுன்னு தானே சொன்னீங்க?..ஐம்பத்து ஒண்ணு தான்..கொஞ்சம் இருங்க.. இன்னொரு தடவை எண்ணிடறேன்.." என்று மறுபடியும் எண்ண ஆரம்பித்தான்நாராயணன். எண்ணி முடித்து விட்டு,"இப்போ கூட ஐம்பத்து ஒண்ணு தானே வர்றது.." என்று புருவங்கள் வளைய ஊர்மிளாவைப் பார்த்தான்.

"கொஞ்ச நேரம் முன்பு நான் கூட வெரிஃபை பண்ணினேனே?.. சரியா இருந்ததே?" என்று நெற்றியைச் சுளித்த ஊர்மிளா, "ஒவ்வொரு நாவல் பேரா கவர் மேலே எழுதியிருக்கு பாருங்க,  நீங்க படிச்சிண்டே வாங்க, நான் இந்த லிஸ்ட்டோட சரிபார்க்கறேன்.." என்றாள்.

அப்படி சரிபார்த்ததில், ஒரு நாவல் அடுக்கி வைத்திருந்த கவர்க் கூட்டத்தில் இல்லாமலிருந்தது தெரிய வந்தது.

"அதாங்க, லிஸ்ட்டில் ஐம்பத்திரண்டு இருக்க, இங்கே ஐம்பத்தோரு கவர் இருந்திருக்கு.." என்று ஆசுவாசப்படுத்திக் கொண்ட நாராயணன், "விட்டுப் போன அந்த நாவல் பேரு என்னங்க?.. இந்த புத்தகக் குவியல்லே எங்கையானும் இருக்கான்னு தேடிப் பாக்கலாம்.." என்றான்.

"அந்த நாவல் பேரு தானே?" என்று இழுத்த ஊர்மிளா லிஸ்ட்டில் இவள் இப்பொழுது சரிபார்க்கையில் டிக்கடிக்காமல் விடுபட்டிருந்த பெயரைப் பார்த்து, "நாவல் பேர் 'நடக்குமென்பார் நடக்கும்'ன்னு போட்டிருக்கு" என்றாள்.

அவள் சொன்னதைக் கேட்டு திகைத்த நாராயணன், "நல்ல பேருங்க.. நம்பிக்கை கொடுக்கற பேருங்க.. ஆனா.. ஆனா.. அது இப்போ இல்லேனா.." என்று குழப்பத்துடன் அவளைப் பார்த்தான். அவன் முகம் லேசாக வியர்த்திருந்தது. கர்ச்சீப்பை எடுத்து கழுத்துப் பட்டையைத் துடைத்துக் கொண்டவன் சோர்வுடன் நாற்காலியில் விழுந்தான் என்றே சொல்ல வேண்டும்.


(இன்னும் வரும்)

Thursday, June 21, 2012

பார்வை (பகுதி-50)

"ஒரு நிமிஷம், அண்ணே... டெலிவரி சலான் ரெடியாயிடுத்து; இந்தாங்க..." என்ற வேணியின் குரல் அடுத்துக் கேட்டு ஊர்மிளாவின் உதடுகள் புன்னகைத்தன.

கிருஷ்ணவேணி தங்கமான பெண்.  பெற்றோர்களின் சுமை அறிந்த பொறுப்பான பெண்.  அவள் சொன்ன அந்த ஒரு நிமிஷம் தான். அதற்குள் எப்படி எல்லாம் மனசு எண்ணிக் களைத்து விட்டது என்று ஊர்மிளா எண்ணிக் கொண்டாள்.

நாராயணனைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.  பெரியவரின் அன்பான மதிப்பைப் பெற்றவன்.  சின்னவருக்கோ அலாதிப் பிரியம் அவன் மேல்.  'வெட்டிண்டு வான்னா, கட்டிட்டிண்டு வர்ற' சாமர்த்தியம். அவன் ஒரு நாள் லீவ் போட்டால் குகன் பிரசுரத்தின் அம்பத்தூர் பிரான்ஞ் அச்சகம் தடுமாறிப்போகும். எல்லாம் ஊர்மிளா அறிவாள். இருந்தாலும், அந்த ஒரு நிமிஷ அல்லாட்டம்?.. 'ஒரு ஆணும் பெண்ணும் சகஜமாகக் கூட பேசிப் பழக முடியாத அவலம் சுற்றிச் சூழ்ந்திருக்கையில் அறிவு அஸ்தமித்துத் தான் போய்விடுகிறது' என்று நினைத்த தருணத்தில், "வணக்கம், மேடம்! தாங்கள் நலமா?" என்று கேட்டுக் கொண்டே அவள் கேபின் நுழைவிடத்தில் நின்றான் நாராயணன். நாராயணன் போகும் இடத்திற்கெல்லாம் உற்சாகத்தையும் தன் கூடவே கூட்டிக் கொண்டு வருவான் என்று அந்த அலுவலகத்தில் எல்லோருக்கும் தெரியும்..

அவன் அந்த இடத்தில் பிரச்சன்னமானவுடனே தொற்றிக்கொண்ட மகிழ்வில், "வாங்க, நாராயணன்.." என்று ஊர்மிளா மலர்ந்தாள்.

"இதோ வந்துகிட்டே இருக்கேன், மேடம்!" என்று எதிரில் நாற்காலியில் நாராயணன் அமர்ந்தான். "ஸார், எப்படியிருக்கார்?.." என்றவன், அதே மூச்சில் "என்னம்மா எழுதறார்ங்க! வாராவாரம் 'காந்தளூர் சாலை' படிக்கலைனா... என்ன சொல்றது?.. அவ்வளவு தான் நான்! நான் விசாரிச்சதா சொல்லுங்க, மேடம்!" என்றவன் பார்வை அடுக்கி வைத்திருந்த பழுப்பு நிற கவர்கள் பக்கம் திரும்பியது. "எல்லாம் ரெடியா இருக்கு போல இருக்கு! இந்த குவாட்டருக்கு எத்தனை மேடம்?"

"ஐம்பத்திரண்டு.." என்றவள் "ஆபிஸ் விஷயமெல்லாம் அப்புறம். அதுக்கு முன்னாடி பெர்சனலாய் ஒண்ணு.." என்று தீவிரமாய் அவன் முகத்தை ஆராய்ந்தபடியே சொன்னாள்.

"பெர்சனல்?.. குட்.. ஒரு நிமிஷம் இருங்க..என்னான்னு நானே சொல்லிடறேன்".. என்னாவாயிருக்கும் என்று இன்னொரு பக்கம் அவன் மனசு யோசனையில் ஆழ்ந்தது, மோவாயைத் தடவி விட்டுக் கொண்டு மேல் சீலிங்கைப் பார்த்ததில் தெரிந்தது.

"அது என்ன, நாராயணன்?.. யாரைப் பாத்தாலும் சொல்லி வைத்தாற் போல இந்த ஒரு நிமிஷக் கணக்கு?அடிக்கடி கேட்டுட்டேன்.." என்றாள்.

"மேடம்! ஒரு நிமிஷத்தை விஞ்சக் கூடிய ஒரு வினாடிக்காரங்க கூட இருக்காங்க.. அந்த just a second ஆட்களைப் பாத்திருக்கீங்களா?"

ஊர்மிளாவால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை..

நாராயணன் தன் இரு கைகளையும் பரக்க விரித்தான். "மேடம்! எனக்கு இந்த ஒரு நிமிஷம்ன்னாலே அபராஜிதன் ஸார் ஞாபகம் தான் வரும்.  'ஒரு நிமிஷம்'ன்னு நாவல் ஒண்ணு எழுதியிருக்கிறார். படிச்சிருக்கீங்களோ?.. திகிலான திகில் மனசை மருட்டும். தப்பித் தவறி ராத்திரி வேளைலே படிச்சிடக் கூடாது.." என்றான்.

"இஸ் இட்?" என்று தெரியாத மாதிரி ஊர்மிளா அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டாள். "அப்போ.. ஓக்கே.  இன்னிக்கு ராத்திரி அதைப் படிச்சிட வேண்டியது தான்.."

"எதுக்கும் ஸாரை பக்கத்லே வைச்சிகிட்டே படிச்சிடுங்க.. அவர் பக்கத்லே இருந்தாத் தான் அட்லீஸ்ட் கதைங்கற நெனைப்பானும் இருக்கும். இல்லேனா, அந்த ஜமீந்தார் கால பழைய பங்களாக்குள்ளார நொழையறச்சேயே பயம் குரல்வளையை நெருக்கற மாதிரி இருக்கும்.  ஜாக்கிரதை மேடம்" என்றான்.

"பழையனூர் பங்களான்னு ஒரு பங்களா வருமே, அந்தத் திகில்க் கதையைத் தானே சொல்றீங்க.. அதெல்லாம் ஜூஜூபி எனக்கு."

"பழையனூர் பங்களாவா? அது எந்தக்கதை?.. தெரியாதே! 'பழையனூர் நீலி'ன்னு தான் ஒரு புஸ்தகம்.  'காதல்' பத்திரிகை அரு.ராமநாதன் எழுதியிருக்கார்.   ஞாபகம் இருக்கு. அது கூட நம்ம பெரியவர் தான் தந்தார். படிச்சிருக்கேன்."

"காதல்ன்னதும் கேட்டுட வேண்டியது தான்.  உங்கது என்ன காதல் கல்யாணமா?  பொண்ணெல்லாம் ரெடியா இருக்காங்களா?.. எப்பக் கல்யாணச் சாப்பாடு போடப் போறீங்க?.." என்று பற்றக் கிடைத்தத் துரும்பைச் சரியாகப் பற்றினாள் ஊர்மிளா.

"சரி.. இந்த டாபிக் வந்தாலே, அந்த பெர்சனல் மேட்டருக்கு வந்தாச்சுன்னு அர்த்தம்.  இல்லையா?.. அப்போ அந்த ஒரு நிமிஷ கெடுவையெல்லாம் மறந்திட வேண்டியது தான்.." என்றவன் தலையைச் சாய்த்து, "என்ன கேட்டீங்க, மேடம்?"

"பொண்ணெல்லாம் பாத்து வைச்சிட்டீங்களா, உங்க கல்யாணம் காதல் கல்யாணமான்னு..."

"காதல்-- ஊதல்ன்னு சிக்கிட்டா மத்த சமாச்சாரம்லாம் அம்போ ஆயிடும் மேடம்..  வாழ்க்கைலே முன்னேற துடிக்கிறவன் கால்லே பூட்டற சங்கிலி தான் இதெல்லாம்ங்கறது எனக்கு நல்லாவே தெரியும். இப்பவே இருபத்தைஞ்சு வயசாயிடுத்து.  உருப்படியா செய்ய வேண்டியது நிறைய காத்திருக்கு.  கல்யாணத்திற்கு ரெடியாகத் தாவலை?.."

"ஃபைன்.. அப்போ ரெடியாகிட்டு இருக்கீங்கன்னு சொல்லுங்க..

"அஃப்கோர்ஸ்..  கல்யாணத்திற்கு முன்னாடி முடிக்க வேண்டிய முக்கியமானதெல்லாம் கிட்டத்தட்ட முடியற நிலை.."

"அப்படியா?.. வாழ்த்துக்கள்.  முக்கியமானதுன்னா?.. ஒண்ணு ரெண்டு சொல்லலாம்ன்னா சொல்லுங்க.." என்று மேற்கொண்டு தெரிந்து கொள்ளும் ஆவலில் கேட்டாள் ஊர்மிளா.

"உங்ககிட்டே சொல்றதுக்கு என்ன மேடம்?.." என்று வலது கையை நீட்டி விரல் மடக்கினான் நாராயணன். "முதல் பெரிய வேலைன்னா சொந்த வீடு கனவு. ஆபிஸுக்கு வரப்போக செளகரியமா இருக்கும்ன்னு ரெண்டு வருஷத்துக்கு முந்தியே அம்பத்தூர்லேயே ஒரு பிளாட், பிளாட்ன்னா எஃப் எல் ஏ ட்டீ,  புக் செஞ்சிருந்தேன்.  அது இன்னும் ரெண்டு,மூணு மாசத்லே ஹேண்ட் ஓவர் ஆயிடும்ன்னு நைனைக்கிறேன்.  பேங்க்லே கொஞ்சம் கடன் வாங்கியிருக்கேன். அந்த லோனும் இன்னும் நாலே வருஷத்லே அடைஞ்சிடும். வீடு கைவசம் வந்தவுடனேயே வுட் ஒர்க் ஆரம்பிச்சிடணும். அப்புறம் கொஞ்ச எக்ஸ்ட்ரா வேலைகள். எல்லாத்துக்கும் ரெண்டு லட்சம் வரை ஆகும்ன்னு எஸ்ட்டிமேட் போட்டு வைச்சிருக்கேன்."

"குட்..  டூ பெட் ரூம் பிளாட்டா?" என்று ஊர்மிளா கேட்டதில் அவள் சந்தோஷம் தெரிந்தது.

"இல்லை, மேடம்.  த்ரீ பெட்ரூம்.  மொத்தம் ஆயிரத்து இருநூறு ஸ்கொயர் ஃபீட் பிளிந்த் ஏரியா."

"ஓ.." இப்பொழுது தான் ஊர்மிளாவின் மனசில் லேசாக அந்த சந்தேகம் தட்ட ஆரம்பித்தது.  அம்பத்தூர் புது பிளாட்டிற்கே ஐம்பது லட்சத்திற்கு மேல் ஆகியிருக்கும்.  வேணி வீட்டுப் பொருளாதார நிலைக்கு இது ஏணி வைத்தாலும் எட்டாத ஒரு சம்பந்தம் தான்.  ஜாதகம் பொருந்தி வந்தாலும் அதற்கு மேலான எதிர்பார்ப்புகள் என்னவெல்லாம் தீர்மானிக்குமோ என்கிற கவலை அவள் மனசில் லேசாகத் தலைகாட்ட ஆரம்பித்தது.

ஏதோ நினைத்துக் கொண்டது போல நாராயணனே சொன்னான்."இப்போ இருப்பதும் சொந்த வீடு தான், மேடம். ஆனா, அடைசலான தெரு. ஓட்டு வீடு. மழைன்னா பொத்திண்டு கொட்டும்.  நாம படற சிரமமே போதும், நாளைக்கே கல்யாணம் ஆச்சுன்னா, வரக்கூடியப் பெண்ணையும் கஷ்டப்படுத்த வேண்டாம்ன்னு அப்பா தான் ஆரம்பத்திலேயே இந்த இன்னொரு வீட்டுக் கனவுக்கு அஸ்திவாரம் போட்டது.   பி.எஃப்.லேந்து கடன் வாங்கி அப்பா தான் பில்டருக்கு அட்வான்ஸ் கொடுத்தார். அவர் ஆரம்பித்து வைச்சதை, ரொம்பவும் சிரமப்பட்டு கிட்டத்தட்ட சமாளிசிட்டு வர்றேன்ன்னே சொல்லணும். ரொம்ப முடியாம போயிட்டா இப்ப இருக்கற வீட்டை வித்து எல்லாக் கடனையும் செட்டில் பண்ணிடலாம்ன்னு அப்பா சொல்றார்.  பாக்கலாம்ங்கற ஒரு நம்பிக்கை தான்."

"ஐ ஆம் ப்ரெளட் ஆஃப் யூ நாராயணன். இந்தக் காலத்து இளைஞர்களுக்கு நீங்க நிச்சயமா ஒரு மாதிரி."

"அப்படிலாம் இல்லீங்க..  எல்லாப் பெருமையும் என் அப்பாவுக்கே. அவர் தான் தகப்பனார்களுக்கெல்லாம் எடுத்துக் காட்டாத் தெரியற அப்பாவா எனக்குத் தெரியறார்.  எனக்கும் படற கஷ்டத்தையெல்லாம் இந்த இளம் வயசிலேயே பட்டுட்டா பிற்கால வாழ்க்கை கொஞ்சம் சுலபமா இருக்கும்ங்கற சுயநலம் தான்.  அப்பா பாருங்க, ரிடையர் ஆகியும் ஆட்டோ ஓட்டறார்.  கேட்டா வீட்லேயே முடங்கிப் போயிடாம வெளிலே ஜனங்களோட ஜனங்களா சங்கமிக்கறது உற்சாகமா இருக்குங்கார்.  அம்மா.. அவங்க ஒரு தனிப்பிறவி. வரப்போர்ற மருமகளைப் பத்தி ஏகப்பட்ட கனவுகள் அவங்களுக்கு.  கனவுன்னா ரொம்ப பெரிசா ஒண்ணும் இல்லீங்க.. எல்லாத்துக்கும் அனுசரணையா கூடமாட ஒத்தாசையா இருக்கணுமேன்னு தான்.  ஆக, வரப்போர்ற மகாலெஷ்மியை எதிர்பார்த்து எல்லாரும் காத்திருக்கோம்.. சரீங்களா..."

ஊர்மிளாவிற்கு திடீரென்று மனசின் ஒரு மூலையில் ஏதோ நம்பிக்கை துளிர்விட்ட மாதிரி இருந்தது.  நடக்கறதெல்லாம் ஏதோ நமக்குத் தெரியாத கணக்கின் வசப்பட்டு அதன் போக்கில் நடந்து கொண்டிருக்கிற மாதிரித் தோன்றியது.  அப்படி நடப்பவற்றிலும் நாமும் கலந்து கொள்கிற மாதிரி நம் பங்கை நிர்ணயித்து ஏதோ நம்பிக்கை ஒளி வழி நடத்திச் செல்வதாகப் பட்டது.  ஆக, நம்மால் முடிந்தது பாதை தெரியுது பார்ன்னு தெரியும் வழிபார்த்து நம்பிக்கையுடன் நடப்பது தான் என்றுத் தெரிந்தது.

"அதுசரி, மேடம்! என் அப்பாவை உங்களுக்கு எப்படித் தெரியும்?.. 'செல்'லில் அவரைக் கூப்பிட்டீங்களே?" என்று திகைப்பாக நாராயணன் கேட்டது அவள் சிந்தனையைக் கலைத்தது.

"ஓ.. அதுவா?.. ஹக்.. அது பெரிய கதை நாராயணன்.." என்று ஊர்மிளா சொல்ல ஆரம்பித்த கதையைக் கேட்க சுவாரஸ்யமானான் அவன்.


(இன்னும் வரும்)

Tuesday, June 12, 2012

பார்வை (பகுதி-49)

ர்மிளாவுக்கானால் ஆச்சரியமான ஆச்சரியம்.

முதலில் மத்ய கைலாஷ் அருகில் எதிர்பார்த்தாள்.  இல்லை என்றாகி அனுமதி கிடைத்தது.  அண்ணா பல்கலைக் கழகம் தாண்டித் திரும்பி சைதாப்பேட்டை கோர்ட் தாண்டி மறைமலை அடிகள் பாலம் தாண்டி, அவளால் அந்த ஆச்சரியத்தைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை, நந்தனத்திற்கு முன் எதிர்பார்த்து அதுவும் இல்லை என்றாகி சுதந்தர பறவையாய் பயணித்து தேனாம்பேட்டை ஜங்க்ஷல் நிச்சயம் மாட்டிக் கொண்டு விடுவோம் என்று நன்றாகத் தெரிந்து நெருங்க நெருங்க அங்கேயேயும் அனுமதி கிடைத்து டிஎம்எஸ்ஸை குஷாலாகக் கடந்து அண்ணா மேம்பாலம் ஏறி இறங்கி சர்ச் பார்க் கான்வெண்ட் தாண்டி கிரிம்ஸ் ரோடு திரும்பும் வரை எந்தத் தடையும் இல்லாமல் அத்தனை சிக்னல்களும் பச்சையாய் சிரித்து போ,போ என்று வழிவிட்டதில் ஆச்சரியமான ஆச்சரியம்.  கிரிம்ஸ் ரோடு திரும்பியதும் நீலாபவனுக்கு எதிரே நாலைந்து பேர் சாவகாசமாக ரோடை கிராஸ் பண்ண ஒருவினாடி தயங்கி அனுமதித்து அலுவலக காம்ப்ளக்ஸில் வண்டியை நிறுத்தும் வரை இன்றைய இந்த ஆச்சரியமே மனசில் உற்சாகத்தை இழையாக படிய விட்டிருந்தது.

இந்த மாதிரியே கிருஷ்ண வேணியின் அக்கா கல்யாணமும் எந்தத் தடங்கலும் இல்லாமல் க்ளியர் ரூட்டில் பயணித்து முடிந்து விட வேண்டும் என்று அடுத்த எண்ணம்.  நுழைகையிலேயே, "குட் மார்னிங், அக்கா.." என்று வேணி புன்னகையுடன் வரவேற்றாள்.

வேணியின் வரவேற்பைக் கேட்டதுமே ஊர்மிளாவின் உள்ளத்தில் உற்சாகம் கரை புரண்டது.  "குட்மார்னிங், வேணி! உனக்கு நிறைய சேதி வைச்சிருக்கேன்.  அப்புறம் வா.." என்றாள்.

"சரிக்கா" என்று சந்தோஷத்துடன் தலையை ஆட்டினாள் வேணி.

வழக்கமான ஆயத்தங்களுக்குப் பிறகு நாற்காலியில் அமர்ந்தவுடனேயே அவளுக்காக இன்று காத்திருக்கும் வேலைகள் வரிசைகட்டி நினைவுக்கு வந்தன.  மொத்தம் 52 புதினங்கள்; இந்தக் குவாட்டருக்கான அச்சுக்குக் காத்திருந்தன.  ஒவ்வொரு ஆண்டுக்கான பதிப்புக்களையும் நான்கு கால் ஆண்டு பதிப்புகளாகப் பிரித்து ஒவ்வொரு குவாட்டருக்கும் ஐம்பது புதினங்களுக்குக் குறைவில்லாமல் வெளியிட வேண்டுமென்று திட்டம் வகுத்திருந்தனர். இந்தக் காலண்டுக்கானவை பதிப்புக்கு போவதற்கு முன்னான முன் ஏற்பாடுகள் அத்தனையும் முடிந்திருந்தன..  மதியம் அச்சக மானேஜர் கிரீம்ஸ் ரோடு அலுவலகத்திற்கு வருவதாக ஏற்பாடு.  இந்த ஐம்பத்திரண்டு புதினங்களுக்கான கணினியில் பிரதி எடுத்த காகித பைல்களை அவரிடம் கொடுத்து விட்டால் ஊர்மிளாவின் பொறுப்பு முடிந்து அச்சக அலுவலர்களின் பொறுப்புக்கு அவை மாற்றப்பட்டு விடும்.

பதிப்பக உதவியாளர் சண்முகத்தைக் கூப்பிட்டு, அத்தனை ஃபைல்களையும் அலமாரி அடுக்கல்களிலிருந்து எடுத்து மேஜையின் மேல் அடுக்கச் சொன்னாள்.  ஒவ்வொரு புதின ஃபைல் ஃபோல்டரின் மேல் அட்டையில் அந்தந்த புதினத்தின் பெயரும் எழுதிய ஆசிரியரின் பெயரும் பெரிய எழுத்துக்களில் அச்சிடப்பட்டிருந்தது.  சண்முகத்தை விட்டு ஒவ்வொரு பெயராகப் படிக்கச் சொல்லி கணினியில் இட்டிருந்த அட்டவணையோடு சரி பார்த்துக் கொண்டாள்.  பின் முழுத்திருப்தியுடன் ஒவ்வொரு ஃபைலையும் அதற்காகவே இருந்த பழுப்பு நிறக் கவரில் உள்ளிடச் சொன்னாள்.  அரைமணி நேரத்தில் அந்த வேலை முடிந்தது.

சண்முகத்தை அனுப்பி விட்டு அச்சகத்திற்கு அனுப்பும் புதின ஃபைலுக்கான கவரிங் லெட்டருக்கு இரண்டு நகல்கள் எடுத்துக் கொண்டாள். ஆக, எல்லா வேலைகளும் முடிந்தது என்று நிறைவாக நினைக்கும் பொழுது நேற்றைய எழுத்துப் பட்டறை அலசல்கள் நினைவில் புரண்டது.  அந்த நினைப்பில் லஷ்மணன் யோசிப்பவை எல்லாம் எவ்வளவு யதார்த்தமாக இருக்கின்ற என்று நினைத்துக் கொண்டாள்.

பெரியவரின் சிபார்சின் பேரில் தான் இந்த 52 புதினங்களிலேயே புதிய எழுத்தாளர்களின் புதினங்கள் நாலைந்து தேறிற்று. மற்றதெல்லாம் புத்தகங்கள் படிக்கிற வாசகர்களுக்குத் தெரிந்திருந்த, வழக்கமாய் அவர்கள் ரசிக்கிற பழைய எழுத்தாளர்கள் எழுதின நாவல்கள் தாம். சின்னவர் ரொம்பவும் கெட்டி. இப்போ போடறதெல்லாம் குறைஞ்சது அஞ்சு, ஆறு தடவையாவது மறுபிரசுரம் ஆகணும்ங்கறது அவர் கணக்கு.  யாரோ கேட்டதுக்கு ஒரு தடவை சின்னவர் காட்டமா சொல்லக் கூடச் சொன்னார். "என்னை என்ன பண்ணச் சொல்றீங்க.. பொஸ்தகம் போட்டோமா, கடைக்கு வந்ததா, பாத்தவங்க வாங்கிப் போனாங்களான்னு பழையவங்க எழுதினது தான் கடகடன்னு வித்துத் தீர்றது.. அவங்கல்லாம் எழுத்திலே ஏதோ வசியம் வைச்சிருக்காங்களோன்னு எனக்கு ஒரு சம்சயம்.."ன்னு ஒரு தடவை சொன்னார்.  இன்னொரு தடவை இன்னொண்ணு.  காகிதம்லாம் காசாகணும். அவ்வளவு தான் அவருக்கு.

யாரோ வேணீ என்று கூப்பிட்டது இங்கே கேட்டது.  நேற்று எழுத்துப் பட்டறையில் இருக்கும் பொழுது கிருஷ்ண வேணி போனில் கூப்பிட்டுச் சொன்னது ஊர்மிளாவின் ஞாபகத்திற்கு வந்தது.  கடைசியாக லஷ்மியை பெண் பார்த்து விட்டுப் போன அந்தப் பையனுக்கும் வேறே இடத்தில் செட்டில் ஆகிவிட்டதாக அவர்களிடமிருந்து போன் வந்ததாம். அதைத் தான் சொன்னாள்.

இப்பொழுது வித்யா தந்திருக்கும் இந்த ஜாதகமாவது லஷ்மிக்குப் பொருத்தமாக அமைய வேண்டுமே என்று நினைத்துக் கொண்டே ஊர்மிளா தன் கைப்பையிலிருந்து ஜாதகத்தை எடுத்தாள்.  நேற்றே மேலோட்டமாக அவள் அதைப் பார்த்திருந்தாள்.  அப்போதே பையனைப் பற்றி இன்னும் சில தகவல்களைக் ஜாதகத்தைக் கொடுத்திருந்தவர்கள் குறிப்பிட்டிருந்திருக்கலாம் என்று தோன்றியது இப்பொழுது நினைவுக்கு வந்து ஜாதகத்தின் கீழே குறித்திருந்த விவரங்களைப் பார்த்தாள்.

வேலை என்று குறிப்பிட்டு அச்சக மேனேஜர் என்று குறித்திருந்தார்கள்.  எந்த அச்சகம், எந்த ஊரில் என்று தெரியவில்லை.  அதைத் தெரிந்து இந்த ஜாதகத்திலேயே எழுதிக் கொடுத்து விடலாமே என்கிற எண்ணம் எழுந்த போது வாசல் பக்கம் சப்தம் கேட்டது.

புதுசாகப் போடவேண்டிய நூல்களின் அச்சுக்கான மேட்டரை வாங்கிப் போக அம்பத்தூர் அச்சகத்திலிருந்து வந்து விட்டார்கள் போலும் என்று நினைத்தாள். அவர்கள் வந்துவிட்டால் பெரியவரிடமிருந்தோ இல்லை சின்னவரிடமிருந்தோ தகவல் வரும்.  அதற்குள் இதைத் தெரிந்து கொண்டு விடலாம் என்று தன் செல்லை எடுத்தாள்.  நல்ல வேளை ஜாதகத்தின் கீழே தொடர்புக்கு என்று  பெரியசாமி என்று பெயர் போட்டு மொபைல் எண் காணப்பட்டது. அந்த எண்ணை ஊர்மிளா தன் செல்லில் பதிந்து தொடர்பு கொண்டாள்.

இரண்டாவது ரிங்கிலேயே தொடர்பு கிடைத்து விட்டது. "ஹலோ.. பெரியசாமிங்களா?"

"இல்லிங்க.  அவர் சன் பேசறேன்.  சாரி.. இன்னிக்கு தவறிப்போய் என் செல்லுக்கு பதிலா அப்பா செல்லை எடுத்து வந்திட்டேன்.  அதான்.   உங்களுக்கு என் அப்பாகிட்டே பேசணும்ங்களா?"

"ஆ..மா..ம்..  அப்படீன்னு கூட இல்லை.. நீங்களே..."

"சொல்லுங்க, மேடம்..  நீங்க யார்ன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?"

"நான் க்ரீம்ஸ் ரோட் குகன் பிரசுரத்திலேந்து ஊர்மிளா பேசறேன்.."

"ஓ.. ஊர்மிளா மேடமா..  நான் நாராயணன் பேசறேன், மேடம்.  பிரசுர வாசல்லேந்து தான் பேசறேன்.. " என்று சொன்ன குரலில் ஆச்சரியம் அலை மோதியது என்றால், ஊர்மிளா அயர்ந்தே போய் விட்டாள்..

"சரியாப் போச்சு.. நீங்க தானா இந்த நாராயணன்!" என்று சொன்ன ஊர்மிளாவின் குரலில் உற்சாகம் வழிந்தது.  எவ்வளவு துடிப்பான, அறிவார்ந்த கணவன் லஷ்மிக்கு அமையப் போகிறான் என்கிற சந்தோஷத்தில்,  "நாராயணன்! விஷயம் ரொம்ப ரொம்ப பர்ஸனல்..  உடனே என் கேபினுக்கு வாங்களேன்.." என்றாள்.

"இதோ... வரேன், மேடம்" என்றதைத் தொடர்ந்து, "வேணி! ஊர்மிளா மேடம் கூப்பிடறாங்க..  என்னன்னு கேட்டுட்டு வர்றேன்.." என்ற நாராயணின் குரல் ஊர்மிளாவுக்கு செல்லில் இங்கு கேட்டது.

உடனே ஊர்மிளாவின் புருவங்கள் முடிச்சுப் போட்டுக் கொண்டன.



(இன்னும் வரும்)










Wednesday, June 6, 2012

பார்வை (பகுதி-48)

நுழைவுப் பகுதியில் 'வருங்காலமே வருக!' என்று எழுதியிருந்ததைப் பார்த்த உஷா, வித்யாவிடம் அதைக் காட்டி,"நல்லா இருக்குல்லே" என்றாள்.  அதை அங்கீகரித்த பாவனையில் வித்யாவின் உதடுகள் புன்னகையில் மலர்ந்தன.  உள் ஹாலின் நடுமத்தியில் அமர்ந்திருந்தவர்களுக்கு பின் வரிசையில் காலியாகக் கிடந்த நாற்காலிகளில் இவர்களும் அமர்ந்தனர்.

எப்பொழுது ஆரம்பித்ததோ தெரியவில்லை.  இவர்கள் அங்கு போனபோது பாதியில் கலந்து கொண்ட உணர்வு இருந்தது. நேற்றைய கூட்டத்தை விட இன்றையக் கூட்டம் வித்தியாசப்பட்டு இருந்த மாதிரி தெரிந்தது.  கிட்டத்தட்ட நாற்பது பேர் தேறும்.  நட்ட நடுவில் லஷ்மணன் அமர்ந்திருக்க அவரைச் சுற்றி மற்றவர்கள் அரைவட்டமாக நாற்காலி போட்டு அமர்ந்திருந்தனர்.  ஏதோ கல்யாணங்களில் கிடைத்த நேரத்தில் நெருக்கமானவர்கள் நெருங்கி உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார்களே, அந்தக் காட்சி போல இருந்தது.  நெருங்கிய உள் வட்டக் கூட்டம் போல ஏற்பாடு பண்ணியிருப்பார்களோ என்கிற எண்ணத்தில் அவர்களோடு சேர்ந்து தாங்களும் அங்கே அமரலாமா என்பதே வித்யாவிற்கு யோசனையாகப் போய்விட்டது.  லேசாக எழுந்திருக்கப் போன அவளை உஷா விரல்கள் பற்றி அமர்த்தி வைத்தாள். ஊர்மிளாவும் எங்கு அமர்ந்திருக்கிறாள் என்றுத் தெரியவில்லை.  கூட்டம் முடிந்து அவளைப் பார்க்கும் பொழுது, பெரியசாமி கொடுத்திருந்த ஜாதகத்தை எல்லா விவரமும் சொல்லி அவளிடம் கொடுப்பது தான் உசிதமாக இருக்கும் என்று வித்யாவிற்குத் தோன்றியது.

லஷ்மணன் சொன்ன பொழுது வாசலில் பார்த்த வருங்கால வரவேற்பில் பொதிந்திருந்த அர்த்தத்தின் மகிமை இன்னும் கூடியது. "சென்ற தலைமுறை எழுத்தாளர்களின் எழுத்துச் சிறப்பை உரமாகக் கொண்டு, இந்த தலைமுறை வாழ்க்கை பிரச்னைகளை அலசிப் பார்ப்போம். நாம் வரவேற்றுத் தான் வருங்காலம் வரவேண்டுமென்பதில்லை. ஆனால் சென்ற தலைமுறைச் சிறப்பை மறக்காத பலம் கிடைத்திருக்கே, அதான் அந்த வரவேற்பின் சிறப்பு. அந்த சிறப்பு கொடுக்கிற தெம்பில் வருங்காலத்தை வரவேற்போம்" என்று லஷ்மணன் சொன்னது அங்கு அமர்ந்திருந்தவர்களிடையே உற்சாகத்தைக் கொடுத்தது அவர்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தில் வெளிப்படத் தெரிந்தது.

"புதுசாகத் தெரிகிற எந்தப் புதுசும் எந்த அந்தரத்திலிருந்தும் தனியாக முளைத்து விடுவதில்லை.  எல்லாவற்றிற்கும் ஒரு ஆதி உண்டு; எல்லாமே ஒன்றைத் தொட்டு ஒன்று தான்;  அவற்றின் நீட்சி தான்; பழைய எச்சத்தின் வளர்ச்சி தான்.  எழுத்துக்கும் அதே தான்.  சென்ற தலைமுறை போட்டுக் கொடுத்த பாதை கூட அதற்கு முந்தைய தலைமுறை போட்ட பாதையின் விரிவு தான்.. புறநானூற்றில் கதைக்கான செய்திகளைப் பார்க்கிறோம். ஐம்பெருங்காப்பியங்களில், பிற்கால பிரபந்தங்களில் காணாத கதையா?  இந்த நீண்ட பாதையில் காலப்போக்கில் பழுதடைவதை செப்பனிட்டுக் கொண்டு மேலே போகிறோம்; அதுவே நாம் செய்யக்கூடியது.   எல்லா மாற்றங்களும் இயல்பான ஒன்று.  அப்படிக் காலத்தின் புதுக்கருக்கலில் எழுத்தில் விளைந்த இந்தக் காலத்து மாற்றங்களோடு ஒப்பிட்டு பழசு எதையும் மறப்பதற்கில்லை. மறப்பதிற்கில்லை மட்டுமில்லை; 'சொள்ளை; சொத்தை' என்று குறைத்துப் பேசுவதற்கும் எதுவுமில்லை. அது அது அந்தந்த காலத்துக் கண்ணாடி. அதனால் சென்ற தலைமுறை எழுத்தாளர்கள் நடந்து வந்த பாதையை திரும்பிப் பார்த்து அந்தப் பெருமையில் சன்னதம் கொண்டு மேலும் செல்வோம்.." என்று லஷ்மணன் சொன்னது 'இனிச் செய்வதென்ன?' என்பதைப் பிரகடனப்படுத்துவது போல இருந்தது.

"சிறுகதை, நீண்ட கதைகளின் சிறப்புகள் மங்கித் தெரியும் காலம் இது. அந்தந்த காலத்தில் நம் முன்னோர்கள் ஏற்றி வைத்திருக்கும் தீபத்தின் திரியை நிமிண்டி அணைந்து போய் விடாமல் காக்கும் கடமை நமக்குண்டு.." என்ற லஷ்மணன், அங்கு கூடியிருக்கும் இளம் எழுத்தாளர்களை இந்த சத்தியவேள்வியில் பங்கு கொள்ள அழைத்தான்.

"ரிஷி எழுதிய 'பார்வை' கதையைப் படித்த பின் எனக்கேற்பட்ட அனுபவம் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்" என்று தொடர்ந்தான் லஷ்மணன். "போன மாதம் தொலைக்காட்சியில் 'என்றென்றும் ராஜா' என்று ஒரு நிகழ்ச்சி பார்த்தேன்.  அந்த நிகழ்ச்சி பொது அரங்கில் நடைபெற்ற பொழுது நேரில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.  ஆனால் நடந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் பார்த்த பொழுது அசந்து போய் விட்டேன்.  இசைஞானி இசை அமைத்த தேர்ந்தெடுத்த ஒவ்வொரு பாடலாகப் பாடிக் கொண்டு வரும் பொழுது பின்னணி சாகசமாய் வயலின், புல்லாங்குழல், நாதஸ்வரம், வீணை, ஷெனாய் இன்னும் நிறைய வாத்தியங்கள் என்று.. அந்த வாத்யங்களிலிருந்து அந்தந்த கலைஞர்களின் ஆத்ம ஞானம் வெள்ளமாகப் பீறிட்டமாதிரி எனக்குத் தோன்றியது. எவ்வளவு கற்பனை, எவ்வளவு குழைவு, எழுந்து தாழ்ந்த அந்த இசை லாஹரியில் என்னையே பறிகொடுத்தேன்.  இசைக்கலைஞர்கள் இல்லாமலும் அவர்கள் தங்கள் ஞானத்தை வெளிப்படுத்தும் வாத்தியங்கள் இல்லாமலும் ஆத்மார்த்த இசையை அனுபவிக்க முடியும் என்று தோன்றவில்லை" என்றவன் தொடர்ந்தான்.

"'பார்வை' கதையில் வந்த 'மிஷினா, மனிதனா' என்கிற கேள்வி எழுந்த சூழலை நினைவில் கொள்ளுங்கள். நாதஸ்வரம் என்னும் வாத்யத்தையே எடுத்துக் கொள்ளுங்களேன்.   இப்பொழுதெல்லாம் கோயில்களிலும், திருமணம் போன்ற குடும்ப விழாக்களிலும் தான் நாதஸ்வர இசையையே அனுபவிக்க முடிகிறது.  காலப்போக்கில் இங்கெல்லாம் கூட இதற்கு இடமில்லை என்கிற நிலமை ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், பிற்பாடு நாதஸ்வரம் என்றால் என்னவென்றே வரும் தலைமுறைக்குத் தெரியாமல் போய் விடும்.  இங்கொன்றும் அங்கொன்றுமாக இதழ்களில் வரும் சிறுகதை, தொடர்கதைகளுக்கும் இந்த நிலை ஏற்பட்டுவிடக் கூடாதென்பது தான் நமது ஆதங்கம்" என்று லஷ்மணன் சொன்ன பொழுது "இவற்றை எல்லாம் படிப்பவர் இருந்தால் தானே, அவைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இதழ்களில் பிரசுரிப்பார்கள்?"  என்று ஒருவர் கேட்டார்.

"அதற்குத் தான் வருகிறேன்.." என்று லஷ்மணன் தொடர்ந்தான். "'செந்தாமரை' இதழில் இப்பொழுது ஏற்பட்டிருக்கும் மாறுதலைப் பார்த்திருப்பீர்கள். அந்த இதழின் இரண்டு பாரங்களை நிறைக்கும் வேலையை என்னிடம் கொடுத்திருக்கிறார்கள்.  அந்த முப்பத்திரண்டு பக்கங்கள் முழுவதும் படைப்பிலக்கியத்திற்கான பக்கங்களாக மலரப்போகிறது.  இரண்டு தொடர்கதைகள்; ஒன்று சமூகத் தொடர்கதையாகவும் மற்றொன்று சரித்திரமாகவும் இருக்கும். இரண்டு தொடர்கதைகளுக்கு ஓவியர் வரையும் படம் சேர்த்து பத்துப் பக்கங்கள் போனால் மீதி இருபத்திரண்டு பக்கங்கள். இதில் இரண்டு பக்கங்கள் கவிதைகளுக்காகவும் மீதி சிறுகதைகளுக்காகவும்.  ஒரு சிறுகதை காலஞ்சென்ற தமிழ் எழுத்தாளரின் நினைவைப் போற்றும் வகையில் அவரது அமரத்துவம் வாய்ந்த சிறுகதையாக இருக்கும். இன்னொன்று வேற்று மொழியில் வெளியான சிறந்த சிறுகதை ஒன்றின் மொழிபெயர்ப்பாக இருக்கும்.  மற்ற சிறுகதைகள் ஐந்து பக்கங்களுக்கு குறையாமல் தேர்வு செய்த கதையாக இருக்கும். அந்தந்த மாதம் வெளியாகும் சிறுகதைக்களுக்குள் சிறப்பான ஒன்றைத் தேர்வு செய்து அந்தக் கதைக்கு நட்சத்திர அந்தஸ்த்து அளித்து வழக்கமான சன்மானத்தை விட கூடுதல் சன்மானம் அளிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.   'செந்தாமரை'யில் இப்படி ஒரு மாற்றம் ஏற்பட்டால், என்னவாகும் என்பது உங்களுக்குத் தெரியும்.  சென்ற இதழ் 'செந்தாமரை' கிட்டத்தட்ட முப்பதாயிரம் பிரதிகள் விற்பனை கூடியிருக்கிறது.  அதாவது இந்த முப்பதாயிரம் பிரதிகளும் வேண்டுவோர் கையில் போய்ச் சேர்ந்திருக்கின்றன. நாள்பட நாள்பட இந்த நிலவரம் இன்னும் கூடும்" என்றான்.

"சரித்திரக் கதைகளை எந்த ஆதாரத்தில் நம்புவது என்று தெரியவில்லை; அந்தக் குறை சரித்திரத் தொடரில் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்றார் ஒருவர்.

"பொதுவாக சரித்திர கதைகளின் கதைப்போக்குக்கே, செப்பேடுகளையும், கல்வெட்டுகளையும், ஓலைச்சுவடிகள் போன்ற ஆவணக் குறிப்புகளையும் நடைபெற்ற போர்களையும், மெய்க்கீர்த்திகளையும், வரலாற்றுச் சம்பவங்களையும் ஆதாரமாகக் கொள்வது வழக்கம். இவற்றிற்கு மாறுபட்டு இருந்தால் அடிப்படையிலேயே அந்தக் கதை தேறாதுன்னு தெரியும்.  இது தவிர வேறு என்ன ஆதாரம் எதிர்பார்க்கிறீர்கள்?" என்றார் இன்னொருவர்.

"முழுவதும் கற்பனையாக எழுதுவது சமூக நாவல்கள் என்றால் சரித்திர சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதுவது சரித்திர நாவல்கள் என்று கொள்ளலாம்.  சமூக நாவல்களில் முழுச் சுதந்திரம்;  சரித்திர நாவல்களில் வரையறைக்கு உட்பட்ட சுதந்திரம் என்று சொல்லலாம். சரித்திர மாந்தர்களின் குணாம்சங்களை நிர்ணயிப்பதில் அறிய வந்த சரித்திர நிகழ்வுகள் ஓரளவுக்கு உதவியாக இருக்கலாம்.  அவ்வளவு தான். மற்றபடி சரித்திர நிகழ்வுகளுக்கு மாறுபாடில்லாமல் அமையும் எந்த பாத்திரப்படைப்பும் ஏற்றுக் கொள்ளத் தக்கதே.." என்றான் லஷ்மணன். "ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.  சரித்திர நாவல்களில் எழுத்தாளனுக்குக் கிடைக்கும் சுதந்திரம் இது ஒன்றே.  ஒரு சரித்திர நிகழ்வு நடந்ததிற்கு இது தான் காரணம் என்று வரலாற்று பூர்வமாக தெரியாத பட்சத்தில் தன் கற்பனையில் அதற்கான ஒரு காரணத்தை உருவாக்கி அதை நாவலாகப் புனைவதில் தான் எழுத்தாளனின் சாமர்த்தியமே இருக்கிறது.  இந்த அவனது சாமர்த்தியம் தான் அப்பட்டமான சரித்திரத்திற்கும் ஒரு கற்பனைப் புனைவிற்கும் இருக்கும் நூலிழை வித்தியாசம்.  அந்த வித்தியாசம் மட்டும் இல்லை என்றால், அந்த நூல் வெறும் சரித்திர நிகழ்வுகளின் கோர்வையாகப் போய்விடும்! அந்த வித்தியாசத்தில் சரித்திர நிகழ்வுகளுக்கு மாறுபடாத தன் கற்பனைச் சிறப்பைக் காட்டி வெற்றி பெறுவது தான் சரித்திர நாவலாசிரியர்களின் சிறப்பாக அமைந்து போகிறது.." என்றான் லஷ்மணன்.

"சரித்திர நாவல்களை வாசிப்பது ஒரு கனவுலகில் சஞ்சரிக்கிற மாதிரியான உணர்வை எனக்கு ஏற்படுத்துகிறது" என்றார் ஒருவர்.  "அதனால் தான் அது எனக்கு பிடிக்கறது கூட.."

"நான் தஞ்சாவூர்க்காரன் என்பது உங்களுக்குத் தெரியும். நான் தஞ்சையில் வசித்த காலத்தில் எனக்கேற்பட்ட உணர்வுகள் அலாதியானவை.  தஞ்சைக் கோட்டையை பார்க்கும் பொழுதெல்லாம், என்னன்னவோ நினைவுகளில் மனம் கிடந்து ஊஞ்சலாடும்..  இந்த கோட்டையில் நிகழ்ந்த சரித்திர நிகழ்வுகள் எல்லாம் நினைவுக்கு வந்து நெஞ்சு விம்மும்.  பழையாறையிலிருந்து வந்திருக்கும் குந்தவையை கோட்டை வாசலில் நின்று நந்தினி வரவேற்கும் ஒரு காட்சி தஞ்சைக் கோட்டையைப் பார்க்கும் பொழுதெல்லாம் நினைவில் தவறாமல் தட்டுப்பட்டுப் போகும்.  அதெல்லாம் பொன்னியின் செல்வனின் பாதிப்பு.  இன்று 'காந்தளூர் சாலை' எழுதி எனக்கேவான என்னுள் புதைந்த எத்தனையோ நினைவுகளை அசைப்போட்டுக் கொண்டிருக்கிறேன்.." என்றான் லஷ்மணன்.  "எல்லாம் நான் முன்னால் சொன்னது தான்.  இன்றைய வாழ்க்கையின் முந்தைய வரலாறு தான் அத்தனையும். முந்தைய வரலாறு என்பது நமது முன்னோர் வாழ்ந்த காலத்தின் வரலாறாகிறது.  சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இராஜராஜசோழனின் ஆட்சி காலம்.  ஒரு நபரின் சாராசரி வயது அறுபது என்று எடுத்துக் கொண்டாலும் பதினாறு தலைமுறைகளுக்கு முன்னால் பொன்னியின் செல்வனின் ஆட்சி.   பதினாறு தலைமுறைக்கு முன்பான எனது குடும்பத்துப் பெரியவர் இராஜராஜ சோழன் காலத்து தஞ்சை வீதிகளில் வலம் வந்திருப்பார் என்கிற நினைவை என்னால் எப்படி மறக்க முடியும்?.. சொல்லுங்கள்" என்று உணர்வுப் பிழம்பாய் அவன் சொன்னதைக் கேட்ட போது உஷா தன்னை மீறி கைதட்டினாள். அவளது கையொலி கேட்டதுமே மொத்த கூட்டமும் திரும்பி அவளைப் பார்த்த பொழுது நாணத்தில் உஷாவின் தலை கவிழ்ந்தது..

"அவங்க தான் 'ஆசிரியருக்குக் கடிதங்கள்' ஷா!  தெரியுமோ!" என்று ஊர்மிளா வலதுப் பக்கக் கோடியிலிருந்து உஷாவைக் கூட்டத்திற்கு அறிமுகப்படுத்திய பொழுது,  'நல்ல வேளை. ஊர்மிளா வந்தாச்சு. ஜாதகத்தை மறக்காமல் அவளிடம் சேர்ப்பித்து விட வேண்டும்' என்று வித்யா நினைத்துக் கொண்டே, சரித்திர நாவல்களைப் பற்றி லஷ்மணன் சொன்னதை மனத்தில் வாங்கிக் கொண்டாள்..  அதன் அடிப்படையிலேயே சமூக நாவல்கள் பற்றியும் கேட்பதற்கு அவளிடம் கேள்வி இருந்தது.  இருந்தாலும் அதை இந்த அவையில் கேட்கலாமா என்கிற உணர்வு தான் அதைப் பற்றிக் கேட்காமல் அவளை அடக்கி வைத்தது.

"மூன்று நாவல்களின் சிறப்பு பற்றி மூவர் சொல்லப் போகிறார்கள்" என்று அடுத்தபடியாக ஒரு பெரியவரிடமிருந்து அறிவிப்பு வந்தது.  என்னன்ன நாவல்கள் என்றும் அவர் சொன்னார்.  "முதலில் சாண்டில்யனின் 'கடல்புறா', அடுத்து தொ.மு.சி. ரகுநாதனின் 'பஞ்சும் பசியும்', இறுதியாக நகுலனின்
'நவீனன் டைரி'.  அதற்கு முன்னால் உணவு இடைவேளை.  மண்டப உணவுக்கூடத்தில் இலை போட்டாயிற்று.. அனைவரும் உணவுக்குப் பின் இதே அரங்கில் கூடலாம். எல்லோருக்கும் நன்றி' என்று அவர் அறிவிப்பை முடித்துக் கொண்டார்.

எல்லாரும் எழுந்திருந்தனர்.  பெண்கள் கூட்டம் ஒன்று உஷா நின்றிருந்த பக்கம் வந்தது. வந்தவர்கள், உஷாவிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். வித்யாவை உஷா அவர்களிடம் அறிமுகப்படுத்திய பொழுது, "அப்படியா.." என்று அவர்களில் செக்கச்செவேலென்று இருந்த பெண்ணொருத்தி வித்யாவை இறுகக் கட்டிக்கொண்டே விட்டாள்.

அவர்களோடு பேசியபடியே ரிஷி இருந்தப் பக்கம் நகர்ந்தாள் வித்யா. ஊர்மிளாவும் லஷ்மணனும் கூட அங்கு தான் நின்றிருந்தனர்.  ரிஷியிடம் சில இளைஞர்கள் ஆட்டோகிராப் வாங்கிக் கொண்டிருந்தனர். இவர்கள் அங்கு போன சமயத்தில் தன்னிடம் 'ஆட்டோகிராப்'பை நீட்டிய இளைஞனிடம் ரிஷி பெயர் கேட்க, அந்த இளைஞன் சேரன் என்று தன் பெயரைச் சொன்ன பொழுது அந்த இடமே கலகலத்தது.

அந்த சமயத்தில் தான் ஊர்மிளாவின் செல்லும் ரீங்கரித்தது. கைப்பையிலிரு ந்து அவசர கதியில் செல்லை எடுத்த ஊர்மிளா, மறுபக்க குரல் கேட்டு, "சொல்லு, வேணி..." என்று சொல்லிக் கொண்டே அந்த இடத்தில் எழுந்த இரைச்சலைத் தவிர்க்க நகர்ந்தாள்.

'வேணி! எப்போதோ கேள்விப்பட்ட பெயராக இருக்கிறதே' என்று நினைத்துக் கொண்டே ஊர்மிளாவிடம் ஜாதகத்தைக் கொடுக்க வித்யா தோள் பையின் ஜிப்பைத் திறந்தாள்.


(இன்னும் வரும்)





























Related Posts with Thumbnails