மின் நூல்

Wednesday, July 11, 2012

பார்வை (பகுதி-54)

வித்யாவின் விழிகள் டி.வி. திரையில் நிலைகொள்ளாது தவித்தன.  ஆங்கில அகர வரிசைப்படி திரையில் நகர்ந்து கொண்டிருந்த நிறுவனங்களின் பெயர்களுடன் காணப்பட்ட அந்த நொடியிலான பங்கின் மதிப்பு விலையை அவள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு வந்தாள்.  அவள் குறிவைத்திருந்தது ஐந்து நிறுவனங்கள்.  அந்த ஐந்து நிறுவனங்களின் அப்பொழுதிய பங்கு விலை மிகவும் இறங்கித் தான் இருந்தது. இந்த இறக்கம் எந்த அளவுக்கு இறங்கப் போகிறது என்பது தான் கேள்வி.  எவ்வளவு குறைவான விலைக்கு வாங்குகிறோமோ அந்த அளவுக்கு அந்தப் பங்குகளின் விலை ஏறும் போது லாபம்.  இன்றைய ஷேர் மார்க்கெட்டின் இந்த இறக்கம் தனக்காகவே இறங்கியது போலிருந்தது அவளுக்கு.

'இதற்குத் தானே காத்திருந்தேன்- தாங்க் காட்' என்று முணுமுணுத்தபடி வித்யா தொலைபேசியை நெருங்கினாள்.  ஷேர்களின் ஏற்ற இறக்க விவரங்களை எழுதி வைத்திருந்த அந்த நோட்டுப் புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே ஸ்டாக் புரோக்கரின் அலுவலக தொலைபேசி எண்களை கொட்டை எழுத்துக்களில் குறித்து வைத்திருந்தது நல்லதாகப் போயிற்று.

மொத்தம் மூன்று எண்கள்.  முதல் எண்ணை அழைத்த பொழுது அந்தத் தொலைபேசி எங்கேஜ்டாக இருப்பது தெரிந்தது.  ஒரு கண் டி.வி. திரையில் பதிந்திருக்க, அவசரமாக ஹூக் ஸ்விட்சை அழுத்தி டயல்டோன் ஏற்படுத்திக் கொண்டு அடுத்த எண்ணை அழைத்த பொழுது கிடைத்த வாய்ஸ், லயனில் காத்திருக்கச் சொன்னது.  காத்திருக்க அவளுக்குப் பொறுமை இல்லை. இன்னொரு பக்கம் டி.வி. திரையில் மிகமிகக் குறைந்திருந்த அந்த சிமிண்ட் கம்பெனியின் ஷேர் மதிப்புத் தொகை கொஞ்சம் கொஞ்சமாக ஏறுவதைப் போலிருந்தது. ஸ்டீல் நிறுவனத்தின் பங்கும் இறங்கிய விலையிலிருந்து ஏற ஆரம்பிக்க.. ஆக, இந்த வீழ்ந்த விலை தான் நிறைய பேரை வாங்கத் தூண்டி ஏறத் தொடங்கியிருக்கிறது என்று நினைத்துக் கொண்டாள்.  பார்த்துக் கொண்டே இருக்கையில் நான்கு ரூபாய்கள் ஏறியிருந்தது ஏழாகி ஏற...  சரசரவென்று அந்தப் பங்குவிலை இன்னும் ஏறுவதற்குள் வாங்கி விட வேண்டும் என்கிற துடிப்பில், தொலைபேசியில்  மூன்றாவது எண்ணைத் தேர்ந்து அழைப்பதற்குள்  டி.வி. திரையில் மார்க்கெட் நேரம் முடிந்து விட்டதைத் தெரிவிக்கும் மணியோசை கிணுகிணுத்து திரையின் இடது பக்க மேல் மூலையில் பூஜை மணி மாதிரி சின்னம் தோன்றி குலுங்கிக் கொண்டிருந்தது.  கடிகாரத்தில் மணியைப் பார்த்தாள்.  சரியாக மூன்றரை! இன்றைய ஸ்டாக் மார்க்கெட்டின் வர்த்தக நேரம் முடிந்து விட்டது;  அவ்வளவு தான். இனி நாளை தான்.

'ச்சை'என்று மனம் கசந்தது.  கைக்கெட்டும் வரை வந்ததைக் கோட்டை விட்டாயிற்று. இந்த இழப்பு உணர்வு அவளுக்கு புது அனுபவம்.  முதன் முதல் நிஜமாக ஷேர் வாங்கலாம் என்று உட்கார்ந்த பொழுது ஏற்பட்ட அனுபவம் கசந்தது.  கெளதம் விளையாடுகிற டிரேட் விளையாட்டு மாதிரி தான்.  விளையாட்டு மாதிரி கற்பனையில் கோட்டை கட்டும் பொழுது எல்லாம் நடந்து விடுகிற மாதிரி சுலபமாகத் தான் இருக்கிறது.  நிஜம் என்று வருகிற பொழுது நிறைய யோசனைகள் வந்து சடாரென்று துணிந்து இறங்க முடியாத தயக்கத்தை ஏற்படுத்துகிறது என்று நினைத்துக் கொண்டாள்.  'அவ்வளவு நேரம் ஏன் யோசித்தாய்; வாங்கியிருக்கலாமில்லையா' என்று மனசின் இன்னொரு மூலையிலிருந்து அவளைப் பழித்துக் காட்டி கேள்வி எழுந்தது.  பத்து நிமிஷம் போலிருக்கும்.  டி.வி. திரையைப் பார்த்தபடி சோர்ந்து உட்கார்ந்திருந்தவள், ஒரே நாள் அனுபவத்திற்கு, அதுவும் எதுவுமே நிகழாத ஒன்றுக்கு இவ்வளவு குமைச்சல் கூடாதென்று ஒருவாறு தன்னை சமாளித்துக் கொண்டு எழுந்தாள்.

லேசாகத் தலையைக் கோதிவிட்டபடி சீப்பெடுத்து வாரிக் கொண்டாள். சோப் போட்டு முகம் அலம்பி டர்க்கி டவலால் துடைத்துக் கொண்டிருக்கையில் கொஞ்சம் உற்சாகம் தொற்றிக் கொண்ட மாதிரி இருந்தது.  ஸ்டிக்கர் பொட்டை நெற்றியில் கண்ணாடி பார்த்து அழுத்திக் கொண்ட பொழுது அம்மாவின் நினைவு வந்தது.  'எங்காலத்தில் எல்லாம் சாந்து தாண்டிம்மா.. கொட்டாங்கச்சி யில் குழைச்சு வைச்சிருப்போம்.  நீ கூட குழந்தையாய் இருக்கறச்சே உனக்கு இட்டிருக்கேன்' என்பாள்.  நடுவயிறு பெருத்து மீன் மாதிரி இருக்கும் சின்ன சிமிழிலிருந்து பிளாஸ்டிக் குச்சியில் மை எடுத்து விழிக்கடையில், நீட்டி விட்ட மாதிரி அம்மா தீட்டி விட்ட நினைவு கூட இருக்கிறது.  அப்படி கண் மை தீட்டும் பொழுதெல்லாம் கண்ணசைத்து விடாமல் இவள் கவனத்தைக் குவிக்க அம்மா கீழ் உதடை உட்புறமாகக் குவித்து 'களக்,களக்' என்று ஒரு விநோத ஒலியை எழுப்புவாள்.  பாவம், அம்மா.  அவள் மேல் ரொம்பவும் பிரியம். என்ன அடம் பிடித்தாலும் துளிக் கோபம் வர வேண்டுமே! சாதாரணமாய் இருக்கும் பொழுதே சந்தோஷமாய் இருக்கிறது மாதிரியான முகம். சிரித்துக் கொண்டே பார்த்துப் பார்த்து எல்லாம் செய்வாள்.  கல்யாணம் ஆன பிறகு, பொதுவாக வீட்டில் இருக்கும் பொழுது பவுடர் போடும் பழக்கம் வித்யாவுக்கு இல்லை.  எங்காவது வெளியில் கிளம்பும் பொழுது முகத்தில் எண்ணைய் வழிகிற மாதிரி டல்லடிக்கற உணர்வு வந்தால், முகம் அலம்பியவுடன் லேசாகத் தீற்றிக் கொள்வாள்.  வீட்டில் பெளடர் டப்பா இருக்கிறது தான்; ஆலிலை கிருஷ்ணன் டி.எஸ்.ஆர். சாண்டல் டப்பா.  தினமும் பள்ளிக்கூடத்திற்குக் கிளப்புகையில் கெளதமிற்கு அதைப் பூசி விடுவதோடு சரி.  ரிஷிக்கானால் ஹேர் ஆயில், பெளடர், செண்ட் என்று அத்தனை சமாச்சாரங்களும் அலர்ஜி. மொத்தத்தில் இந்த காஸ்மடிக் சமாச்சாரங்களுக்கு செலவு செய்வது தன் வீட்டில் ரொம்பவும் குறைச்சல் தான் என்று நினைத்துக் கொண்டாள்.

கெளதம் ஸ்கூல் விட்டு வருவதற்குள் சாயந்தர டிபனுக்கு ஏதாவது பண்ணலாமா என்று தோன்றியது.  காய்கறிக் கூடையைத் திறந்து பார்த்ததில்  வெங்காயம் இருந்தது தெரிந்தது. சிவப்பாய் நான்கு எடுத்துக் கொண்டாள்.  நல்லவேளை, கடலைமாவும் இருந்தது. எடுத்துக் கரைத்து வைத்துக் கொண்டாள்.  கால்மணியில் வெங்காய பஜ்ஜி ரெடியாவதற்கும் கெளதம் வருவதற்கும் சரியாக இருந்தது.

வந்தவன் ஸ்கூல் பையை முன் அறையில் போட்டிருந்த அவனது குட்டி ஸ்டடி டேபிளின் மேல் வைத்து விட்டு, கைகால் அலம்பித் துடைத்துக் கொண்டு வந்தான்.  ஷெல்ப் மாதிரி தடுத்துக் கட்டியிருந்த பூஜை இடத்திற்குப் போய் சம்புடத்திலிருந்து விபூதி இட்டுக் கொண்டு வந்தவன், அவள் பக்கத்தில் நெருங்கி வந்து வாசனை பிடித்தபடி, "என்னம்மா?.. வெங்காய பஜ்ஜியா?" என்றான்.

"ஆமாண்டா.  தட்லே உனக்கு வைச்சிருக்கேன், பாரு. எடுத்துக்கோ.." என்று அவனுக்குச் சொன்னவாறே காப்பி கலந்தாள்.

பஜ்ஜித் தட்டை எடுத்துக் கொண்டு சோபா பக்கம்  போனதும், "என்னம்மா.. வானவில் வந்தாச்சா?" என்று ஆச்சரியப்பட்டவன், "ஹை! அப்பா கதை.." என்று குதித்தான். பத்திரிகை அட்டை பார்த்து 'காதல் தேசம் - தொடர்கதை - இந்த இதழில் தொடக்கம்' என்று கட்டம் கட்டி போட்டிருப்பதை ஒவ்வொரு எழுத்தாகக் கூட்டிப் படித்தான்.  "அப்பா தொடர்கதை ஆரம்பிச்சாச்சு, அம்மா! பாத்தியா?"

அவளுக்குக் கூட இப்பொழுது தான் நினைவுக்கு வந்தது.  வரும் பொழுதே போஸ்ட் பாக்ஸில் கிடந்த பத்திரிகையை எடுத்து வந்து சோபாவின் மேல் போட்டவள், டி.வி.யில் ஷேர் மார்க்கெட் நிலவரத்தைப் பார்த்த ஜோரில் மறந்தே போய் விட்டாள்!  'காதல் தேசம்' ஆரம்பித்து விட்டதா?'..  என்று மனம் கூப்பாடு போட்டது.  அடுத்த நிமிடமே, தொய்ந்து போய், 'எது ஆரம்பித்து என்ன?.. கதைன்னா எல்லாமே வெறும் கற்பனை தானே! கற்பனையில் மனம் போன போக்கில் என்ன வேண்டுமானாலும் எழுதலாம்.  ஆனால் நிஜம் வேறு.  இப்போ ஷேர் வாங்க முடியாமல் போச்சே! அந்த மாதிரி நிஜம் வேறு' என்று நினைத்துக் கொண்டாள்.  'இதற்குள் உஷா ஆரம்ப அத்தியாயத்தைப் படித்திருப்பாள். இதோ கொஞ்ச நேரத்தில் நிச்சயம் வருவாள்.  வந்து கதையின் ஆரம்பம் பற்றி என்ன சொல்லப் போகிறாளோ?.. அவளுக்கு பதில் சொல்வதற்காவது படித்து வைக்க வேண்டும்' என்று நினைப்பு மண்ணுளிப் பாம்பாய் சுருக்கிச் சுருக்கி நீண்டது..

பத்திரிகையோடு சில தபால்களையும் கொண்டு வந்து வைத்த ஞாபகம் வந்தது.  எல்லாவற்றையும் ரிஷியின் அறைக்குப் போய் அவன் டேபிளின் மேல் வைத்தாள்.  வெளி ஹாலுக்கு வந்த பொழுது தொலைபேசி அழைத்தது. வேகமாய்ப் போய் எடுத்தாள்.

"ஹலோ..."

"ஹலோ, வித்யா.. நான் ஊர்மிளா பேசறேன்."

"ஓ!.. எப்படியிருக்கீங்க?.. " என்று கேட்ட பொழுது புதுமனுஷியாய் சந்தோஷம் குரலில் வழிந்தது.

"நாங்க ஃபைன்.  'காதல் தேசம்' தொடங்கியிருக்கே?.. பாத்தீங்களா.. தொடக்கம் லாம் நல்லாத்தான் இருக்கு..  படம்லாம் தூள் கிளப்பியிருக்காங்கள்லே?.."

"வெளிலே போயிருந்தேன், ஊர்மிளா.. 'வானவில்' வந்திருக்கு.. ஆனா, இன்னும் பிரிச்சுப் பாக்கலை.." என்று பொய் சொல்ல விரும்பாமல் தவித்தாள். "ரொம்ப தேங்க்ஸ். ஊர்மிளா.. இவர் இன்னும் ஆபிஸ்லேந்து வரலே.. லஷ்மணன் சார் நல்லா இருக்காரா?"

"ஓ.. நல்லா இருக்கார்..  அப்புறம், எதுக்குக் கூப்பிட்டேன்னா.. இன்னொரு சந்தோஷத்தையும் உங்க கிட்டே பகிர்ந்துக்கறத்துக்காக.."

"அப்படியா?" என்று கேட்ட ஆவலில் வித்யாவின் குரல் குழைந்தது.


(இன்னும் வரும்)

Friday, July 6, 2012

பார்வை (பகுதி-53)

பெரியவரின் அறையில் பெரியவரின் வயசை ஒத்த இன்னொரு பெரியவரைப் பார்ப்போம் என்று ஊர்மிளா நினைத்தே பார்க்கவில்லை.

பெரியவர் அவரை ஊர்மிளாவிற்கு அறிமுகப்படுத்திய பொழுது அவர் தான் வராகமிஹிரர் என்று தெரிந்து ஊர்மிளாவின் வியப்பு இன்னும் அதிகமாயிற்று. பெரியவரின் நண்பராம்.  நெடுங்காலம் ஜோதிட சம்பந்தமாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தவரை பெரியவர் தான் அவரது அனுபவங்களை வைத்து ஒரு நாவல் எழுதித் தரக் கேட்டுக் கொண்டதின் விளைவு தான் 'நடக்குமென்பார் நடக்குமாம்'.    எல்லாவற்றையும் பெரியவரின் வாய் மொழியாகக் கேட்ட போது ஊர்மிளாவிற்கே அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளின் போக்கில் இருக்கும் விசேஷத்தன்மையை உணர்ந்து கொண்ட மாதிரி இருந்தது.

சாதாரணமாக நாம் மகிழ்ச்சி என்று சொல்வோமே அதைத் தாண்டிய ஒரு வசீகரப் பளபளப்பு நாராயணனின் முகத்தில் பளிச்சிட்டுக் கொண்டிருந்தது. அவனது அந்த பளபளப்புக்குக் காரணம் என்னவென்று ஊர்மிளாவால் ஊகிக்க முடிந்தது. புத்தகத்தைத் தேடினால் அந்த புத்தகத்தை எழுதிய நபரே நேரிலேயே வந்து நாராயணனுக்கு 'நடக்க வேண்டும் என்று நீ நினைத்திருப்ப தெல்லாம் நடக்கப் போகிறது, பார்' என்று நிச்சயப்படுத்திய பளபளப்பு அது.  கோடை வெப்பத்தில் மேகமாவது திரண்டு வெயிலின் சூட்டைக் குறைக்கட்டுமே என்று நினைத்தால், திரண்ட மேகம் வானத்தைப் பொத்துக் கொண்டு மழையாகவே பொழிந்த மாதிரி அவன் சந்தோஷம் வெளிப்படத் தெரிந்தது.

"ஊர்மிளா! இந்தாங்க.  புஸ்தகத்தை எழுதின ஆசிரியரைப் பற்றிய குறிப்பு.  இதை இவர் புஸ்தகத்தின் பின் அட்டையில் இவர் போட்டோவோட போட்டுடலாம்.  இந்த குறிப்புகளை நானே எழுதி வைச்சிருந்தேன்.  அகஸ்மாத்தாக இவரும் வந்து விடவே விட்டுப் போன ஓரிரண்டு விஷயங்களை சேர்த்துக்கவும் செளகரியமா போச்சு." என்றார் பெரியவர்.

"சரி. சார்." என்று அவர் கொடுத்த குறிப்புகளை வாங்கிக் கொண்டாள் ஊர்மிளா.

"இவங்க ஊர்மிளா.. யார் தெரியுமோ?"என்று அந்தப் பெரியவரிடம் கேட்டார் இந்தப் பெரியவர்.

"சொல்லுங்கோ. கேட்டுக்கறேன்" என்றார் வராகமிஹிரர்.

"அபராஜிதன்ங்கற பேர்லே கதையெல்லாம் எழுறாரே லஷ்மணன்,
தெரியுமோ?"

"பேஷாய்த் தெரியும்."

"அந்த லஷ்மணன் சார் மனைவி தான் இவங்க."

 சட்டென்று ஊர்மிளா இருந்த பக்கம் திரும்பி "அப்படியா, குழந்தை?.. உன்னைப் பாத்ததிலே ரொம்ப சந்தோஷம்" என்று மலர்ந்தார் வராஹமிஹிரர். 

"நமஸ்காரம்" என்று அவரைப் பார்த்துக் கைகுவித்தாள் ஊர்மிளா.

"உன் பேர் ஊர்மிளா, இல்லையா?.." என்று யோசனையுடன் இழுத்த வராஹமிஹிரர், ஒரு நிமிடம் தாமதித்துச் சொன்னார். "இந்த மாதிரி பெயர்ப் பொருத்தம் இருந்தாலே, மத்தப் பொருத்தம்லாம் தன்னாலே கூட வரும்." என்று சொன்ன போது வேறொன்றை நினைத்துக் கொண்ட நினைவில் நாராயணன் முகத்தில் புன்னகை மலர்ந்தது. "ஒண்ணு தெரியுமா, குழந்தை?" என்று ஊர்மிளாவிடம் எதையோ சுவாரஸ்யமாகச் சொல்லத் தொடங்கினார் வராஹமிஹிரர். "உனக்கெப்படி தெரியும்? தான் மத்தவாளுக்குச் செஞ்சது எதைப் பத்தியும் இன்னொருத்தர் கிட்டே சொல்லத் தெரியாத உத்தமன், உன் புருஷன்! அப்படியிருக்க எப்படித் தெரிஞ்சிருக்கும், உனக்கு? நான் சொன்னாத்தான் இது கூடத் தெரியும்" என்றவர் தொண்டையைச் செருமிக் கொண்டார். 'செந்தாமரை' பத்திரிகை இருக்கில்லையா? அதுலே வாராவாரம் ராசிபலன் எழுத லஷ்மணன் என்னை அறிமுகப்படுத்தி வைச்சான்.  அப்படித்தான் அந்தப் பத்திரிகையோட என் தொடர்பு ஆரம்பிச்சது. குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சின்னா கேட்க வேண்டாம்.  என் வேலை களைகட்டிடும். எல்லா ராசிக்கும் பலனை எழுதி வாங்கிண்டு புஸ்தகமா வேறே போடுவாங்க. ஆரம்பத்திலே மாச சம்பளம் மாதிரி ஆயிரம் ரூபா கொடுத்தாங்க.. போகப் போக அது அஞ்சாயிரம் வரை போச்சு.  என்ன சம்பாதிச்சு என்ன பலன்? அதுக்குன்னே ஏதாவது மருந்துச் செலவு காத்திருக்கும். என் ராசி அப்படி.." என்றவர் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்.

"அப்போ இந்த ராசிபலன் எழுதிச் சம்பாதிக்கலேனா, மருந்துச் செலவும் இருந்திருக்காதுன்னு சொல்றையா?" என்றார் பெரியவர்.

"பாத்தையா? எதுக்கும் எதுக்கும் முடிச்சுப் போடறே, பாத்தையா?" என்று கோபப்படுகிற மாதிரி காட்டிக் கொண்டார் வராஹமிஹிரர்.  "ஒரு பக்கம் வந்ததுன்னா, இன்னொரு பக்கம் போயிடறது பார்ங்கறத்துக்காகச் சொன்னேன்.  காரணம் இல்லாம எந்தக் காரியமும் இல்லே.  நிகழ்வா நடக்கற ஒவ்வொரு காரியமும் சயின்ஸ்.  ஒண்ணைப் பாத்தையா?.. தன்னாலே எந்தக் காரியமும் நடக்காது.  ஒண்ணோட ஒண்ணு சேந்து தான் இன்னொண்ணுன்னு எல்லாத்துக்கும் ஒரு ப்ராஸஸ் இருக்கும். இந்தக் கணக்கைப் பத்திச் சொல்லப்போனா ஆரியபட்டரிலிருந்து ஆரம்பித்து ஐயின்ஸ்டின் வரைப் போகும்.  அதனாலே தான் இயற்கையா நடக்கற காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்ன்னு இந்த 'நடக்குமென்பார் நடக்கும்' நாவல்லே கூட என் வாழ்க்கையிலே எனக்கு அனுபவப்பட்ட விஷயங்களுக்கு கதை ரூபம் கொடுத்திருக்கிறேனே, தவிர செயற்கையா கற்பனையா எதையும் எழுதலே" என்றார்.

பேசாமல் கைகட்டி உட்கார்ந்து கொண்டு, வராஹமிஹிரர் பேசுவதைக் கேட்டுக் கொண்டேயிருக்கலாம் போலிருந்தது, நாராயணனுக்கு.

தேனாம்பேட்டையில் அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தின் ஆறாவது தளத்தில் அவர்களது அலுவலகம் இருந்தது. தனித்தனியாக பான் கார்டும், பேங்க் அக்கெளண்ட்டும் இரண்டு பேருக்கும் இருந்ததினால், ஷேர் அக்கெளண்ட்டை இரண்டு பேருக்கும் சேர்ந்த கணக்காக ஆரம்பிப்பது எளிதாகப் போயிற்று. கிட்டத்தட்ட இருபது பக்கத்திற்கான ஒப்பந்த காகிதங்களின் கீழ்ப்பகுதியில் வித்யாவும், ரிஷியும் கையொப்பம் இட்டனர். அங்கங்கே விண்ணப்ப படிவத்தில் ஒட்ட போட்டோக்கள் வேறு. ஷேர் ப்ரோக்கர் அலுவலகத்தில் அவர்களை அறிமுகப்படுத்த உஷாவின் கணவரும் கூட வந்திருந்தது மிகவும் செளகரியமாகப் போயிற்று..

ஷேர் ப்ரோக்கர் அலுவலகத்தில் அவர்களுக்கு வரவேற்பு பலமாக இருந்தது. உஷாவின் கணவருக்கு அங்கு ஏகப்பட்ட மரியாதை. இந்தத் துறையில் அவர் விஷயம் தெரிந்தவர் என்கிற விஷயம் தான் அந்த மரியாதைக்குக் காரணம் என்று வித்யாவிற்குப் புரிந்தது.

அவள் ஒப்பந்தப் படிவங்களில் கையெழுதிட்டுக் கொண்டிருந்த பொழுது, யாரோ சொன்னார்கள்.  "மேடம்! நீங்கள் பங்குச் சந்தையில் பங்கு பெற எடுத்த முடிவு புத்திசாலித்தனமான ஒண்ணு.  ஏன்னா, இங்கு அள்ள அள்ளப் பணம், மேடம்!" என்றார்.

புன்முறுவலுடன் தலை நிமிர்ந்த வித்யா, "அப்படியா சொல்றீங்க.. அள்ள அள்ள பணம்ங்கற பேராசை எனக்கில்லை.  அப்புறம் அது அதல பாதாளத்தில் தள்ளி விட்டுதுன்னா, எழுந்திருக்க முடியாம போயிடுமே, சார்!" என்றாள்.

அவள் முகத்தில் அடித்த மாதிரி அப்படிச் சொன்னது உஷாவின் கணவருக்குக் கூட ஒரு மாதிரி இருந்தது. ஏனென்றால்,வித்யாவிடம் அப்படிச் சொன்னவர் இந்த சந்தையில் ரொம்பவும் அனுபவம் வாய்ந்த மனிதர். இருந்தாலும் அவரும் அப்படி அப்பாவிகளுக்கு பேராசை காட்டி இழுக்கற மாதிரி அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டார்.

அவரும் விடுவதாயில்லை. "பின்னே எப்படி மேடம்?.. பணம் சம்பாதிக்கணும்ன்னு தானே பங்குச் சந்தைக்கு வந்தீங்க?.. கொட்டோ கொட்டென்று கொட்டித்துன்னா, வேணான்னா சொல்லிடுவீங்க?" என்றார்.

"எல்லாத்தையும் தெரிஞ்சிக்கணும்ன்னு எனக்கு ஆர்வம் உண்டு சார். அந்த ஆர்வம் இந்த சந்தை விளையாட்டிலும் எனக்கு ஏற்பட்டது.  ஆனா இது பணத்தோட விளையாடற விளையாட்டுனாலே ஒரு ஜாக்கிரதை உணர்வு எனக்கு ஏற்பட்டிருக்கு," என்று வார்த்தை வார்த்தையாக நிறுத்தி நிறுத்திச் சொன்னாள்.

"சரிதான் நீங்க சொல்றது. ஆனா, விளையாட விளையாடத் தான் இந்த விளையாட்டின் நுணுக்கம் அத்துப்படியாகும்." என்றார் அவர்.

"நிஜ விளையாட்டுக்குக் களத்திலே இறங்கறத்துக்கு முன்னாடி நான் கூட ஒரு பொய் விளையாட்டுலே இறங்கியிருக்கேன். அந்த பொய் விளையாட்டுலே நாலு மடங்கு லாபம் வந்ததாலே தான் இப்போ நிஜ விளையாட்டுக்கே துணிஞ்சு வந்திருக்கேன்" என்றாள் அவள்.

"அப்படியா?.. வேடிக்கையாய் இருக்கே, நீங்க சொல்றது? அது என்ன பொய் விளையாட்டுன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?"

"சொல்றேன்.  நீங்க பாத்திருக்கீங்களா? குத்துச்சண்டை போட பயிற்சி பெறவங்க, பயிற்சிக்காக ஒரு பஞ்சுப் பொதியில் குத்திக்கிட்டு இருப்பாங்கள்லே?.. அந்த மாதிரி.."

"அந்த மாதிரி?"

"கொஞ்ச நாட்களா இதான் வேலை.  பொய்யாவானும் பங்குகள் வாங்கறதாவும், விற்கறதாவும், வித்து வாங்கறதாவும் ஒரு விளையாட்டு வீட்லே விளையாடிண்டு இருக்கேன்.  இன்னித் தேதிக்கு அந்த பொய் விளையாட்டின் நிகர லாபம் நாலு லட்சம்.  இனிமே களத்துக்கு வர நான் ரெடி.  நிஜ விளையாட்டை நின்னு நிதானிச்சு விளையாடப் போறேன்.  இதான் இந்த விளையாட்லே நான் கத்துகிட்ட பாடம்" என்று தன்னம்பிக்கையோடு அவள் சொன்னது ஏதோ பங்கு சந்தை ஞானாசிரியனே சொன்ன மாதிரி இருந்தது அவருக்கு.

"வெல்கம் மேடம்.. இன்னிலேந்தே நீங்க பங்குகளை வாங்கத் தொடங்கலாம்.  . குட் லக்.." என்று அவள் வீட்டிலிருந்தே போன் மூலம் சொல்லி எப்படி பங்குகளை வாங்குவது, அதற்கான காசோலை அனுப்புவது போன்ற அடிப்படை விவரங்களைச் சொன்னார்.

வித்யா முதலீடாகக் கருதி பிரிமியம் கட்டிக் கொண்டு வந்திருந்த ஒரு LIC பாலிஸி முதிர்வடைந்து போனவாரம் இரண்டு லட்சம் கைக்கு வந்திருந்தது. அடுத்த மாதம் ரிஷியின் பாலிஸி ஒன்று முதிர்வடையப் போகிறது.  மொத்த பணத்தை டைவர்ஸிஃபைடு முதலீடாக பல இனங்களில் பிரித்துப் போடலாம் என்று வித்யா நினைத்திருந்தாள்.  அப்படிப் பிரிப்பதில் பங்குச் சந்தை முதலீடும் ஒன்று.  அவ்வளவு தான். அதில் இருவருமே தீர்மானமாக இருந்தனர்.

ஏற்கனவே உஷாவின் கணவர் பங்குகளை எப்படி வாங்குவது, விற்பது, வாங்கிய பங்குகளுக்குப் பணம் அனுப்புவது எப்படி, விற்ற பங்குகளுக்கு பணம் பெறுவது எப்படி என்று எல்லாவற்றையும் தெளிவாகச் சொல்லித் தந்திருந்திருந்ததினால் அவர் சொன்னதெல்லாம் சுலபமாக அவளுக்குப் புரிந்தது. சொல்லப் போனால், கடந்த ஒரு வாரமாக வித்யாவிற்கு இதான் வேலை.  டி.வி. திரையில் ஓடும் என்எஸ்ஸி, பிஎஸ்ஸி மார்க்கெட்டுகளில் பங்குகளின் நிலவரம், காலை, மதியம், பங்குசந்தை முடிவடையும் நேரம் என்று எப்படியெல்லாம் பங்குகளின் விலை ஏறி இறங்குகிறது என்பதை உன்னிப்பாகக் கவனித்துக் குறித்துக் கொண்டிருந்தாள்.

அது எதனால் என்று தெரியவில்லை.  தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்ட உற்பத்தி நிறுவனங்களின் பங்குகளின் மேலேயே அவள் கவனம் நிலைத்திருந்தது.  சிமிண்ட், ஸ்டீல் என்று வகைப்படுத்தி பங்குகளின் அன்றாட விலைகளைக் குறித்துக் கொள்வதற்கே ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தில் மேலிருந்து கீழாக வரிசையாக பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பெயர்களையும், அவற்றிற்கு நேர் எதிரே இடமிருந்து வலமாக தான் பார்க்கும் பல நேரங்களில் அந்தந்த பங்குகளின் விலையையும் குறித்துக் கொண்டு வந்திருந்தாள்.  கடந்த ஒரு வாரமாக இப்படியாக ஒரு அட்டவணையைத் தயாரித்திருந்தது பங்குகளின் அன்றாட ஏற்ற தாழ்வு விலைகளைக் கணிப்பதற்கு அவள் மனசிற்கு ஒரு செளகரியத்தைக் கொடுத்தது.  தான் குறித்திருந்த நிறுவனப் பங்குகளின் 52 வார தாழ்ந்த, உச்ச விலைகளையும் தனியே ஒரு பக்கத்தில் குறித்து வைத்திருந்தாள்.    என்றைக்கு 52 வார தாழ்ந்த நிலைக்கு விலை வருகிறதோ அன்று கணிசமாக அந்த நிறுவனப் பங்கை வாங்கி விடுவதாக இருந்தாள்.அது தான் கைவசப்படாமல் அவளுக்குப் போக்குக் காட்டிக் கொண்டிருந்தது.

வீட்டுக்கு வந்ததும் டி.வி. ரிமோட்டைக் கை நாடியது.  டி.வி.யை இயக்கி ஷேர் சேனலில் நிலை கொண்ட பொழுது, வர்த்தக மார்க்கெட்டைப் பாதிக்கிற அளவுக்கு உலகலளாவிய விஷயம் என்ன நடந்தது என்று தெரியவில்லை, மொத்த ஷேர்களும் இறங்கு முகத்தில் சிவப்பாய் தெரிந்தன. நோட்டுப் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு பார்த்த பொழுது தான் எவ்வளவு பெரிய இறக்கம் இது என்று அவளால் கணிக்க முடிந்தது.

அதிர்ஷ்ட தேவதை சிறகு விரித்து டி.வி. பக்கம் நின்று கொண்டிருப்பது போல வித்யாவின் கண்ணுக்குப் பட்டது.


(இன்னும் வரும்)







Sunday, July 1, 2012

பார்வை (பகுதி-52)

நாராயணனைப் போல் அந்த நாவலின் பெயரை ஊர்மிளாவால் ரசிக்க முடியவில்லை.  'நடக்கும் என்பார் நடக்கும்'-- என்ன தலைப்பு இது என்று நினைத்துக் கொண்டாள். 'நிச்சயம் ஒரு நாவலுக்கான தலைப்பு இது இல்லை; ஏதோ ஜோதிடப் புத்தகத்தின் தலைப்பு மாதிரி' என்று நினைத்துக் கொண்டாள்.

சற்று நேரம் முன்பு வரை உற்சாகமாக பேசிக் கொண்டிருந்த நாராயணன், அந்த நாவலைக் காணோம் என்றவுடனேயே எந்த அளவுக்கு சோர்ந்து போய் விட்டான் என்பதைப் பார்த்து எந்த அளவுக்கு அந்த நாவலின் தலைப்பு இவனை வசீகரித்திருக்கும் என்று நினைத்துக் கொண்டாள். எல்லா வசீகரிப்புக்கும் என்ன காரணமோ, அந்தக் காரணமே இப்போது இவனுக்கும் காரணம் ஆயிற்று என்று அவள் உள்ளுணர்வு கூறியது. அந்தந்த நேரத்தில் எதை நாம் விரும்புகிறோமோ அதற்கு ஆதரவாக உணரும் எல்லாவற்றையும் அந்தந்த நேரத்தில் நாம் நேசிப்போம் என்று எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது.

"எங்கே போயிடப்போறது?.. இங்க தான் எங்காச்சும் இருக்கும். அந்தப் புத்தகக் குவியலுக்குள்ளாறத் தேடிப் பார்த்தா கிடைச்சிடும்ன்னு நெனைக்கறேன்" என்றான் நாராயணன்.

"எஸ்.  ஆனா, காலைலே நான் வந்த உடனே செக் பண்ணினப்போ இருந்ததே! நீங்க சொல்ற மாதிரி இங்க தான் எங்கேயானும் கலந்து போயிருகும்.. நான் பார்க்கிறேன்" என்று ஊர்மிளா சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே கேபின் போன் சிணுங்கி அவளை அழைத்தது.

"எஸ். சார்.  ஆமாம், இங்கே தான் இருக்கார்.  சரி, நான் சொல்றேன்,சார்!" என்று சொல்லி போனை வைத்தாள்.

"நாராயணன்! பெரியவர் உங்களைக் கூப்பிட்டார். நீங்க அவரைப் பாத்திட்டு வாங்க. அதுக்குள்ளாற நான் அந்த ஃபோல்டரைத் தேடி எடுத்து வைக்கிறேன்.  நீங்க அதை வாங்கிண்டே, டெலிவரி சிலிப்லே சைன் பண்ணலாம்.  ஓ.கே.வா?"

"நடக்கற காரியத் தொடர்ச்சிலே எங்கையோ பிரேக் ஆயிருக்கு, மேடம். அது சரியாச்சுனா, அந்த ஃபோல்டரும் கிடைச்சிடும், பாருங்க" என்று அவன் சொன்னது ஊர்மிளாவிற்கு வினோதமாக இருந்தது.  அவன் வார்த்தைகளில் இருந்த நம்பிக்கை த்வனி அவளை அசர அடித்தாலும், அப்படியான தலைப்பு கொண்ட அந்த நாவலுக்கான கணினிப் பிரதி காணாமல் போனதில் தான் இவன் ரொம்பவும் பாதித்துப் போய் ஏதேதோ சொல்கிறான் என்று நினைத்துக் கொண்டாள்.

அவன் பெரியவரைப் பார்த்து விட்டு கிளம்புவதற்குள் காணாமல் போயிருப்பதைத் தேடி எடுத்துக் கொடுத்தால் தான் அவன் எதற்காக இங்கு வந்திருக்கிறானோ அந்த வேலையும் பூர்த்தியாகும் என்கிற அவசர உணர்வும் அவளுக்கு இருந்தது.  'இத்தனை வருஷ சர்வீஸில் இப்படி ஏற்பட்டதில்லை யே!  என் வேலையில் அவ்வளவு அசிரத்தையாகவா நான் இருக்கிறேன்?' என்ற கேள்வி விஸ்வரூபமெடுத்து அவளை அவஸ்த்தைப் படுத்தியது.

அந்த சமயத்தில் தான் நாராயணன் சொல்லி விட்டுப் போனதும் அப்படியும் இருக்குமோ என்று அவளை நம்ப வைத்தது.. 'நடக்கற காரியத் தொடர்ச்சிலே எங்கையோ பிரேக் ஆயிருக்குன்னா'..  எவ்வளவு தெளிவாச் சொல்றான்!எதைத் தெரிந்து இப்படியெல்லாம் சொல்றான்.?. நடக்கப் போறதையெல்லாம் அந்தளவுக்கு முன்னாடியே தெரிஞ்சிக்கவும் முடியுமா?.. அவன் பார்வைக்குத் தெரியற மாதிரின்னா, சொல்றான்' என்று யோசித்துக் கொண்டிருக்கையிலே, சட்டென்று வேணியிடம் நாராயணனின் ஜாதகத்தைத் தான் இன்னும் சேர்ப்பிக்கவில்லை என்பது அவளது நினைவுக்கு வந்தது.  பெரியவரைப் பார்த்து விட்டு நாராயணன் வருவதற்குள் அதை வேணியிடம் கொடுத்து விட்டு வந்து விடலாம் என்கிற எண்ணத்துடன் கைப்பையைத் திறந்து ஜாதகத்தை எடுத்துக் கொண்டு வேணியிடத்திற்குப் போனாள்.

வேணி யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தாள்.  ஊர்மிளா தன்னை நோக்கி வந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும், "சரிம்மா.. வேறே ஒண்ணுமில்லே.  வைச்சிடறேன்" என்று அவசரமாக போனை வைத்து விட்டு அவளைப் பார்த்து முறுவலித்தாள்.  "என்னை வரச் சொல்லியிருந்தீங்கள்லே.. நானே வர்றத்தான் இருந்தேன்ங்க்கா.. பிரஸ் மேனேஜரோட பேசிக்கிட்டு இருந்தீங்களா.. அதுனாலே, அவர் பேசிட்டுப் போன பின்னாடி வரலாம்ன்னு..."

"பரவாயில்லை. இந்தா, இதுக்குத் தான் உன்னைக் கூப்பிட்டிருந்தேன்" என்று ஊர்மிளா தன் கையிலிருந்த கவரை அவளிடம் கொடுத்தாள். "வேணி! எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர். அவரோட ஜாதகம் இதிலே இருக்கு. உங்க அக்காவுக்காக பொருத்தம் பார்க்க கேட்டு வாங்கியிருந்தேன். கொண்டு போய் அம்மா கிட்டே கொடு. எவ்வளவு சீக்கிரம் பொருத்தம் பார்த்துச் சொல்றீங்களோ,  அவ்வளவு க்கு நல்லது.  மத்ததையெல்லாம் அப்புறமா பாத்துக்கலாம். சரியா?"

வேணியோட முகம் குப்பென்று மலர்ந்து, விழியோர ஈரம் பளபளத்தது. "இப்போ நீங்க வரச்சொல்ல போன்லே அம்மா தான் எங்கிட்டே பேசிக்கிட்டிருந் தாங்க...  கோயிலுக்குப் போயிருந்தாங்களாம்..  அக்காவும் கூடப் போயிருக்கு. அக்காக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகணும் வேண்டிட்டு வந்தாங்களாம்.. வர்ற வழிலே டெலிபோன் பூத்தைப் பாத்ததும் என் நினைப்பு வந்து பேசினாங்களாம்" என்றாள்.

"அப்படியா?.. ரொம்ப சந்தோஷம்.. கோயில்ன்னா வீட்டாண்ட இருக்கற கோயிலா?"

"இல்லக்கா.. கொஞ்சம் தொலைவாப் போவணும்.  பெருமாள் கோயில்.."

"ஓ.. பெருமாள்ன்னா?"

"லஷ்மி நாராயண பெருமாள் அக்கா.  எங்க குல தெய்வம்.  அதான் எங்க அக்காக்கு லஷ்மின்னு பேரு வைச்சாங்களாம்."

ஊர்மிளாவுக்கு நாராயணன் சொன்ன கோலம் நினைவுக்கு வந்து திடீரென்று மனசு பூராவும் மகிழ்ச்சி அலை பரவியது.  கூடி வரும் பொருத்தங்கள் நினைத்து பெருமிதம் பொங்கி வழிந்தது. "வேணி! ஜாதகம் பத்திரம். இங்கே அங்கே வைச்சிட்டுப் போயிட்டேன்னு சொல்லக் கூடாது. இன்னிக்கே அம்மாகிட்டே கொடுத்து, பொருத்தம் பாக்கச் சொல்லு.." என்று கைக் கெடியாரத்தைப் பார்த்தாள். "ஒண்ணு செய். நீ வேணா பர்மிஷன் போட்டு, இப்பவே வீட்டுக்குப் போறையா?"

"இல்லேக்கா.  மதியம் லஞ்ச்சுக்கு அப்பாலே போறேன். அம்மாவும் அக்காவும் வீடு வந்து சேர இன்னும் ரெண்டு மணி நேரமாகும்.."

"சரி.  சாப்பாட்டுக்கு அப்புறம் கிளம்பிடு.  நல்ல வேளை வந்திடுத்து போலத் தெரியறது. எல்லாம் நன்னா நடக்கும்..ஜாதகம் பாக்கணும்ன்னு கூட இல்லே. எல்லாம் உங்க திருப்திக்குத் தான்.  சரியா?" என்று ஊர்மிளா லேசாக அவள் தோளில் தட்டினாள். தட்டிய ஊர்மிளாவின் கையை அப்படியே இறுகப் பற்றிக் கொண்டாள் வேணி.

"ஜோசியர் பக்கத்து வீடு தான்ங்க்கா.  மூணு மணிக்குள்ளாற நான் போய்க் கொடுத்தாக் கூட உடனே பாத்திடுவாங்க..  பாத்திட்டு உங்களுக்கு போன் பண்றேன் அக்கா.." என்றவள் குழந்தை போல ஊர்மிளாவின் முழங்கைப் பக்கம் இறுகப் பற்றிக் கொண்டு லேசாக விசும்பினாள்..

திடுக்கிட்டு, "வேணி, என்ன இது?" என்று அவள் கையைப் பற்றினாள் ஊர்மிளா.

"அக்கா.. எல்லாத்துக்கும் நீங்க கூடயே இருக்கணும். எங்களுக்கு மனுஷாள் கிடையாது அக்கா" என்று லேசாக வேணி விசும்பிய போது, வயிற்றிலிருந்து பந்து போல மேலெழும்பி ஏதோ தொண்டைக் குழியை அடைத்துக் கொண்டார் போலிருந்தது ஊர்மிளாவுக்கு.

"நாங்க இருக்கோம்.  நீ தைர்யமாயிரு" என்று அது ஆபீஸ் என்றும் பாராமல் வேணியின் தலையை வருடி விட்ட போது ஊர்மிளாவின் மனசு பூராவும் பரிதாபம் பொங்கி வழிந்தது.  அந்த ஷணமே, லஷ்மியின் கல்யாண ஏற்பாடுகள் அத்தனையையும் தானே முன்னின்று செய்ய வேண்டுமென்று தன்னுள் சூளுரைத்துக் கொண்டாள்.  

எங்கே போயிருக்கும் என்பது தான் அதிசயமாக இருந்தது.  பொதுவாக தன் கேபின் பொருட்களை மிக நேர்த்தியாக வைத்துக் கொள்பவள் ஊர்மிளா. அலுவலகம் விட்டுக் கிளம்பும் அன்றைய உபயோகத்திற்குப் பிறகு கழித்துக் கட்டிய வேண்டாத காகிதங்கள், பேப்பர் பிட்டுகள் எல்லாவற்றையும் ஒரு தடவைக்கு இரு தடவை பார்த்து விட்டு டிராஷில் கொண்டு போய்ப் போடுவாள்.  ஸ்டாப்ளர், குண்டூசி டப்பா, ம் குப்பி, A4 பேப்பர்கள் கொஞ்சம் பிரிண்ட்டரில் மீதி வெளியே பண்டலில் என்று எல்லாம் வைத்த இடத்தில் வைத்த மாதிரி இருக்க வேண்டும் அவளுக்கு.  அதனால் அடைசலுக்கு வழியே இல்லை. அப்படியிருக்க அந்த 'நடக்குமென்பார் நடக்கும்' எங்கே போயிருக்கும் என்று அவளுக்கே குழப்பமாக இருந்தது.

"அடுத்த பதிப்புக்கு இதெல்லாம் சரிப்பட்டு வருமா'ன்னு சின்னவர் உங்களைப் பார்க்கச் சொன்னார்ங்க.." என்று போன வெள்ளிக்கிழமை சண்முகம் கொண்டு வந்திருந்த ஒரு புத்தகக் கட்டு பிரிக்கப்பட்டுக் குவியலாக பக்கத்து டேபிளில் கொலு வீற்றிருந்தது. இந்தக் குவியலைத் தான் நாராயணன் குறிப்பிட்டுச் சொன்னான்.  அங்கேயிருக்க சான்ஸ் இல்லை.  இந்த பழுப்புக் கவரின் சைஸே பெரிசு.  பார்த்தாலே பிதுங்கித் தெரியும்.  இருந்தாலும் அந்த புத்தகக் குவியலை கலைத்துப் பார்த்தாள்.  ஊஹூம்.. அங்கேயும் இல்லை.  பின்னே எங்கே?..

அந்த புத்தகப் பிரதி 262 பக்கமோ என்னவோ. இன்னொரு பிரதி போட்டுப் ஃபோல்டர் போட்டால் ஆயிற்று என்றால் அதற்கான அவகாசம் இல்லை என்பது மட்டுமில்லை;  பழைசு கிடைத்தால் தான் அது ஏற்படுத்திய கலக்கம் நீங்கி நாராயணனின் முகத்தில் களையைப் பார்க்க முடியும்.. எங்கே போயிற்று அது?..

மறுபடியும் ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.  அந்த நாவல்கள் லிஸ்ட்டை எடுத்துக் கொண்டாள் ஊர்மிளா.  லிஸ்ட்டில் இருந்த நாவல்களும் பழுப்பு நிற கவர்களில் இருந்த நாவல் பிரதிகளும் சரியாக இருக்கின்றனவா என்று ஆரம்பித்திலிருந்து மறுபடியும் சரி பார்க்கத் தொடங்கினாள்.

ஒன்று, இரண்டு, மூன்று, ஆங்... நாலாவது கவர் வந்த பொழுது லேசான வெளிச்சக் கீற்று.. அந்த நாலாவது கவர் ரொம்பவும் பம்மிப் பெரிசாக இருப்பதைப் பார்த்து மேல் பட்டையைப் பிரித்துப் பார்த்தால்...

ஒரே கவரில் உள்ளே இரண்டு ஃபோல்டர்கள் அடைக்கப்பட்டிருந்தது அம்பலமானது.  அவசர அவசரமாக எடுத்துப் பார்த்த பொழுது.. ஹூவா.. 'நடக்குமென்பார் நடக்கும்' உள்ளே முழுசாகப் பதுங்கியிருந்தது.  ஆக, நாராயணனைப் பொருத்த மட்டில் இனி நடக்கப் போவதின் நீட்சி குறித்து எந்த சஞ்சலமும் கொள்வதற்கில்லை.

'நடக்குமென்பார் நடக்கும்' ஃபோல்டரை மட்டும் தனியே எடுத்து, ஒரு காலி பழுப்புக் கவரில் அடைத்து கவரின் மேல் நாவலின் பெயரை சிவப்பெழுத்துக் களில் எழுதினாள்.  நாவலை எழுதிய ஆசிரியரின் பெயரையும் எழுத லிஸ்ட்டைப் பார்த்த பொழுது வராஹமிஹிரர் என்று குறித்திருந்தது.  வராஹமிஹிரர்!  இந்த தேசத்து பெருமை மிகு வானவியல் அறிஞர் அல்லவோ? அவளுக்குத் தெரிந்து வராஹமிஹிரர் நாவல் எதுவும் எழுதவில்லை.  ஆக, இது இந்த நாவலை எழுதியவரின் புனைப்பெயராகத் தான் இருக்க வேண்டும் என்கிற நினைப்பில் அவரின் பெயரையும் பழுப்பு நிறக் கவரின் மேல் எழுதி முடித்த பொழுது, கேபின் போன் சிணுங்கியது.

வேகமாகப் போய் ஊர்மிளா ரிஸீவரை எடுத்துக் காதில் வைத்த பொழுது, மறுமுனையில்---

பெரியவர்!


(இன்னும் வரும்)
Related Posts with Thumbnails