மின் நூல்

Saturday, September 22, 2012

பார்வை (பகுதி-60)

கீழ்த்தளம் வாடகைக்குக் கிடைத்தது அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.  அதுவும், வீட்டுக்குப் பக்கத்திலே மெயின் ரோடிலேயே என்பது பல விஷயங்களுக்கு ரொம்ப செளகரியமாகப் போயிற்று.

ஒரு வாரமாக வித்யாவும் உஷாவும் யோசித்து யோசித்து எடுத்த முடிவு.  முடிவு எடுத்தவுடன் அடுத்து செய்ய வேண்டியவைகளை விவரமாக ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறித்துக் கொண்டனர்.  குறித்துக் கொண்ட விஷயங்களில் தகுந்த இடம் கிடைப்பது தான் முக்கியமாகப் பட்டது. வல்லப கணபதி கோயிலுக்கு தரிசனத்திற்காகப் போயிருந்த பொழுது தான் புதுசாகக் கட்டிய அந்த கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் 'வாடகைக்காக' என்று போட்டிருந்த அறிவிப்பை வித்யா பார்த்தாள்.  அறிவிப்போடேயே தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் நம்பரும் இருந்தது.

வீட்டிற்கு வந்ததும் உஷாவிடம் முதல் வேலையாக விஷயத்தைச் சொன்ன பொழுது வேறு யாரும் முந்திக் கொள்வதற்குள் விஷயத்தை முடித்து விட வேண்டும் என்று அவள் துடியாய்த் துடித்தாள்.  அவள் கணவர் ஆபிஸூக்கு அன்று விடுப்பு போட்டிருந்தது நல்லதாகப் போயிற்று.  அந்த இடத்திற்குச் சொந்தக்காரர் அவருக்குத் தெரிந்தவராய் இருந்தது, அடுத்த நல்லதாய் அவர்களுக்கு ஆயிற்று..  வித்யா ரிஷிக்கு போன் போட்டுச் சொன்னாள்.  ரிஷி, உஷாவின் கணவரிடம் பேசினான். அடுத்து உஷாவின் கணவர், இடத்திற்குச் சொந்தக்கார நண்பரிடம் பேச கிட்டத்தட்ட அந்த விஷயம் முடிந்த மாதிரியே ஆகிவிட்டது. அன்று மாலை எல்லோரும் உட்கார்ந்து பேசும் போது வாடகை விஷயமும் முடிவாகி அலுவலகத்தைத் தொடங்க நாளும் குறித்து விட்டார்கள்.;

'அ' முதல் 'ஒள' வரை-- என்று முதலிலேயே தீர்மானித்திருந்த பெயரில் எந்த மாற்றமும் இல்லாமல், போர்ட் எழுத ஆர்டிஸ்ட்டிடம் ஆர்டர் கொடுத்தார்கள்.  ஆர்டிஸ்ட் மிகவும் பழக்கப்பட்டவர்.  இரண்டே நாட்களில் அற்புதமாக வேலையை முடித்துத் தந்தார்.  தன்னையும் அவர்கள் குறித்து வைத்திருந்த லிஸ்ட்டில் சேர்த்துக் கொள்ள விண்ணபித்தார். "நீங்களில்லாமலா?" என்று உஷா சொன்னதே அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 

இந்த வியாபாரத்திற்கான நெட் ஒர்க்கை வித்யாவும் உஷாவும் சேர்ந்தே தயாரித்தார்கள்.  நகர்ப்புறங்களில் வாழ்பவர்களின் பல சங்கடங்கள் விசித்திரமானவை.  ஒரு பக்கம் தேவைகள், மறுபக்கம் அந்தத் தேவைகளுக்கு தரமான முறையில் உடனடித் தீர்வுகள் காணமுடியாத தவிப்பு. அப்படியான அவர்களின் தேவைகளைக்க் குறிவைத்து ஒரு பெரிய பட்டியலையே அவர்கள் தயாரித்திருந்தார்கள்.  ப்ளம்பர் வேலையிலிருந்து கல்யாண ஏற்பாடுகள் வரை எதையும் விட்டு வைக்கவில்லை..  இன்னொரு பக்கம் அப்படியான தேவைகளை உடனடியாகப் பூர்த்தி செய்யக் கூடிய நம்பகமான நபர்களைக் கொண்ட நிறுவனங்கள்.  கணக்கெடுத்ததில் அப்படியான நிறுவனங்கள் சிறிதும் பெரிதுமாக இருநூறுக்கும் மேலே தேறிற்று.  நிறுவன உரிமையாளர்களிடம் பேசிப்பார்த்த பொழுது தான், அவர்களின் முயற்சி மிகப் பெரிய அளவில் வெற்றியடைவதற்கான வெளிச்சம் தெரிந்தது.  நிறுவனங்களும், வாடிக்கையாளர்களுக்கும் தங்களுக்கும் இடையே இவர்கள் தொடங்கியிருக்கிற மாதிரியான ஒரு கம்பெனி இருந்தால் தங்கள் வேலை மிகச் சுலபமாக முடியும் என்று அபிப்ராயப் பட்டார்கள்.  ஒரு வேலைக்கு குறைந்த பட்சம் மூன்று நிறுவனங்கள் என்கிற விகிதாச்சாரத்தில் பட்டியலிட்டு முடித்த பொழுது முக்கால் வாசி வேலை முடிந்த மாதிரி இருந்தது.

வீட்டிற்குப் பெயிண்ட் அடிக்க வேண்டுமா, தண்ணீர் குழாய் ரிப்பேரா, சாக்கடை அடைத்துக் கொண்டு விட்டதா, எலெக்டிரிக் வேலையா இல்லை எலெக்ட்ரானிக் வேலையா, கல்யாணத்திற்கு சத்திரம் ஏற்படா, சமையல் வேலையா எதுவென்றாலும் உடனடியான தீர்வுக்கு 'அ' முதல் 'ஒள'வைத் தொடர்பு கொண்டால் போதும், இரண்டு மணி நேரத்திற்குள் அட்டண்ட் செய்யப்படும் என்று விளம்பர நோட்டீஸ்கள் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டன.

"நமக்குன்னு வாடிக்கையாளர்கள் அமைய வேண்டும்.  அதற்கு என்ன செய்யலாம்?" என்று உஷா தவித்தாள்.

"பேசாமல் உறுப்பினர் அட்டை வழங்கி விடலாம்.  அது வாடிக்கையாளர்களுக்கும் நமக்கும் ஒரு பந்தத்தை ஏற்படுத்தும்" என்றாள் வித்யா.

"உறுப்பினர் அட்டை இலவசமாகக் கொடுத்தால், அதில் சுவாரஸ்யம் இருக்காது.  குறைந்தபட்சமாக ஒரு தொகையை உறுப்பினர் சேர்க்கைக் கட்டணமாக வசூலித்து விடலாம்" என்றான் ரிஷி.  "அது எளிய மக்களும் உறுப்பினராக சேருவதற்கு வசதியாக மிகக் குறைந்த தொகையாக இருக்க வேண்டும்.  அதே சமயத்தில் அவர்களாக 'அ' முதல் 'ஒள' வரை சேவையை உபயோகப்படுத்திக் கொள்ள விருப்பமின்றி விலகும் பொழுது, அவர்கள் செலுத்தியிருக்கும் உறுப்பினர் கட்டணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்" என்றான் அவன்.

உறுப்பினர் சேர்க்கைக் கட்டணத்தை ரூ.100/- ஆகத் தீர்மானித்தனர். பெரிய நிறுவனங்கள் தங்களுக்குக் கிடைக்கும் ஆர்டர்களுக்கு 30% கமிஷன் கொடுக்கத் தயாராக இருந்தார்கள்.  சிறிய நிறுவனங்கள் 15% கொடுக்க சம்மதித்தார்கள்.  பெரிய வேலைகளுக்கு பெரிய நிறுவனங்களையும் சிறு சிறு வேலைகளுக்கு சிறிய நிறுவனங்களையும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று தீர்மானமாயிற்று.  பெரிய நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் வேலைக்கு 20%-ம், சிறிய நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் வேலைகளுக்கு 10%-ம் தள்ளுபடி வாடிக்கையாளர்களுக்குத் தந்து விட வேண்டுமென்று கொள்கை ரீதியாகவே முடிவெடுத்தார்கள்.   பெரிசோ, சிறிசோ செய்கிற வேலை நறுவிசாக இருக்க வேண்டுமென்றும், குறித்த காலத்தில் கொடுக்கப்பட்ட பணியை முடித்துக் கொடுப்பதில் இரண்டாவது கருத்து இருக்கக் கூடாது என்பதிலும் கறாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் உஷாவின் கணவர்.  ஒவ்வொரு கட்ட ஆலோசனையிலும் வாடிக்கையாளர் திருப்திக்கே முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதிலும் அதில் எந்த சறுக்கலுக்கும் இடமில்லை என்பதில் மிக மிக கவனமாக இருந்தார்கள்.

நேரிலும் தொலைபேசி மூலமாகவும் உறுப்பினர்கள் 'அ' முதல் 'ஒள' வரை சேவையை உபயோகித்துக் கொள்ளலாம் என்று தீர்மானிக்கப் பட்டது.  வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வேண்டிய பணி தொடங்கும் நாளில் மொத்த செலவில் 50% பட்டுவாடாவும், பணி முடிந்தவுடன் பாக்கி பணத்தில் அவர்களுக்கான தள்ளுபடி கழித்துக் கொண்டு செலுத்த வேண்டும் என்றும் முடிவெடுத்தார்கள்.  எந்தப் பணியிலும் பணி முடிந்த பிறகு எந்தக் குறைபாடும் இருந்தால் அந்த குறைபாடு நிறுவனத்தின் செலவில் களையப்பட்டு வாடிக்கையாளர் திருப்திக்கே முதலிடம் கொடுக்கப்படும் என்கிற உறுதிமொழி, உறுப்பினர் விண்ணப்பப் படிவத்திலேயே கொட்டை எழுத்துக்களில் அச்சடித்து அதை உறுதிபட வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.


ரு சுபயோக சுபதினத்தில் 'அ' முதல் 'ஒள' வரை நிறுவனத்தின் தொடக்க நாள் விழா, களைகட்டியது.

சந்தனப் பேலா நீட்டி பன்னீர் தெளித்து என்று வெளி போர்டு பார்த்து உள்ளே நுழைந்தவர்கள், கிடைத்த வரவேற்பில் நனைந்தனர்.  புதுமாதிரியான உபசரிப்பு, புது மாதிரியான அனுபவம், புது மாதிரியான உற்சாகம் என்று கலந்து கட்டி எல்லாவற்றிலும் திட்டமிட்டு கலக்கியிருந்தாள் உஷா.

ஆரம்ப நாளன்றே அந்த அதிசயம் நடந்தது.  காலையிலேயே பதினோறு மணியளவிலேயே முன்யோசனையாக 'அ' முதல் 'ஒள' வரை சேவையை சுகிக்க உறுப்பினர் ஆனவர்கள் எண்ணிக்கை எழுபதைத் தாண்டியது.

"இது என்னங்க, புது மாதிரி கடை?"

"கடை இல்லை.  பதிவு அலுவலகம்.. சொல்லப்போனால் சேவை நிறுவனம்"

"என்ன பதிவு பண்ணுவாங்க?"

"எல்லாம். தினம் பொழுது விடிந்தால் எத்தனை தேவை இல்லை நமக்கு?.. நியாயமான உங்களோட அனைத்துத் தேவைகளின் தீர்வுகளுக்கும் இங்கே அணுகலாம். நல்ல தரமான சேவை.  விரைவான சேவை.  குறைவான தொகையில். மொத்த கட்டணத் தொகையில் நிறுவனம் தன் அன்பளிப்பாகக் கொடுக்கும் தள்ளுபடியும் உண்டு."

"மெய்யாலுமேவா?  இல்லை, சும்மாக்காச்சுமா?.."

"சும்மா இல்லை, நிஜமாவே!  வீட்டிற்கு கலர் வாஷ்-- பளபள பெயிண்ட்! இவ்வளவுக்கும் எவ்வளவு ஆகும் என்று நினைக்கிறீர்கள்?.. உள்ளே வந்து விசாரியுங்கள். உறுப்பினர் ஆகுங்கள்.  உங்களுக்கு அளிக்கும் ஒவ்வொரு சேவைக்கும் உண்மையான தள்ளுபடி உண்டு."

"அதுசரி, அது என்னங்க,  புது மாதிரி பேரு?  'அ' முதல் 'ஒள' வரைன்னா"

"இங்கிலீஷ்லே சொல்லலையா,  A to Zன்னு?..  அந்த மாதிரி தமிழ்லே! தமிழ் உயிரெழுத்திலே! அ முதல் ஒள வரைன்னு!  உங்கள் எல்லாத் தேவைகளுக்கும் தீர்வு, ஒரே கூரையின் கீழே!  வருக! வருக!"

ஓர் ஆணும், பெண்ணும் மாற்றி மாற்றி கேள்வியும் பதிலுமாய் பேசுவதை புதுவகை விளம்பரமாய் 'அ' முதல் 'ஒள' வரை அலுவலக வாயிலில் கட்டியிருந்த லவுட் ஸ்பீக்கர் சொல்லிக் கொண்டிருந்தது....  வாசகங்களை மாற்றி வெவ்வேறான வகையில் இப்படி நிறைய தயாரித்து வைத்திருந்தார்கள்.  கேட்பவர்களுக்கு சலிப்பேற்படுத்தாமல், ஆவலைத் தூண்டும் வகையில் அந்த தயாரிப்புகள் இருந்தன.  மொத்தத்தில் தெருவில் சென்றவர்களின் முக்கால் வாசிப்பேர் கவனத்தை அந்த 'அ' முதல் 'ஒள' வரை அலுவலக விளம்பரம் கவர்ந்து கொண்டிருக்கையில்....

அந்த சமயத்தில் இரண்டு வாழைமர லோடோடு வாசல் பக்கம் டயர் வண்டி.  ஒன்று வந்து நின்றது.   வண்டிக்கு முன்னால் பைக்கில் வந்தவர், "சீட்டு வாங்கியாந்துடறேன். வெயிட் பண்ணு.." என்று வண்டியோட்டியிடம் சொல்லிவிட்டு, 'அ' முதல் 'ஒள' வரை அலுவலகத்திற்குள் நுழைந்தார்.

முன் அறையில் வித்யா கிடைத்தாள்.  வாழைமரங்கள் போய்ச்சேர வேண்டிய விலாச அட்டை கொடுத்து விளக்கினாள். "மேட்லி பிரிட்ஜ்ஜாண்டே திரும்பி கொஞ்ச தூரம் உள்ளார போனா கல்யாண சத்திரம் தெரியும்"  என்று சத்திரத்தின் பெயரைச் சொன்னாள்.  சத்திர வாசல்லே பெரிய டிஜிட்டல் போர்ட்லே, திருவளர் செல்வி லஷ்மி - திருவளர் செல்வன் நாராயணன்-ன்னு பெயர்கள் பளபளக்கும். அதான் அடையாளம்.  பெரியசாமி இல்லத் திருமணம்ன்னு பெரிசா வளைவு கூட கட்டியிருப்பாங்க..

"சத்திரம் தெரியும்மா.  சேர்த்திடறேன்."

"மணமகனுக்கு அப்பா பெரியசாமி.  அவர் அங்கே தான் இருக்கார்.  அவர் கிட்டே கேட்டுகிட்டு, அவங்க சொல்றபடி வாழைமரங்களைக் கட்டிட்டு வாங்க..  கையோட மொபைல்லே அம்சமா ஒரு போட்டோவும் எடுத்திட்டு வாங்க" என்றாள். "பில் செட்டில்மெண்ட்லாம் இங்கே தான்.  அவங்க கிட்டே ஒண்ணும் கேட்கப்படாது.  சரியா?.."

"சரிம்மா.."

அலுவலகம் ஆரம்பித்து முதல் பணியாக ஒரு கல்யாணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளுமாக, அதுவும் நாராயணன்-லஷ்மி கல்யாண ஏற்பாடாக இருந்ததில் வித்யாவிற்கு ஏக குஷி.

அந்தக் கல்யாண சத்திரத்தில் தான் எழுத்துப்பட்டறையின் போது தான் பையன் ஜாதகத் தேவை பற்றி ஊர்மிளா வித்யாவிடம் பிரஸ்தாபித்தாள். அவள் கேட்டதற்கு அடுத்த நாளே நாராயணனின் ஜாதகத்தை வித்யா அந்த கல்யாணச் சத்திரத்தில் தான் ஊர்மிளாவிடம் கொடுத்தாள்.  எழுத்துப் பட்டறைக்குப் போகும் போது இந்த மணமகன் நாராயணனின் தந்தை பெரியசாமி தான் தன் ஆட்டோவில் இந்த கல்யாண சத்திரத்தில் தான் உஷாவையும் அவளையும் இறக்கி விட்டார்.  அப்பொழுது கூட, 'கல்யாண பேச்சு பேசிக் கொண்டே கல்யாண சத்திரத்திற்கு கொண்டு வந்து விட்டிருக்கீங்க.. உங்க பையனின் கல்யாணமும் இனிதே நடக்கட்டும்' என்று வித்யா பெரியசாமியிடம் சொன்னாள்.

இந்தக் கல்யாணம் சம்பந்தப்பட்ட நிறைய விஷயங்களுக்கு சம்பந்தப்பட்ட இந்தக் கல்யாண சத்திரத்திலேயே இவர்கள் கல்யாணமும்! என்ன பொருத்தம், இந்தப் பொருத்தம்?  உம்?..

எது தான் முன் கூட்டியே தெரிகிறது?..

பின்னால் எல்லாம் நடந்த பிறகு தான், முன்னால் நடந்ததெல்லாம் வரிசை வரிசையாக நினைவுக்கு வந்து 'அட, இதெல்லாம் முன்கூட்டியே தெரியாம போச்சே'ங்கற நினைப்பும் வர்றது.

நிகழ்வுகளின் வரிசைப்படுத்துதலில் இருக்கும் சூட்சுமமே அது தானோ என்று வித்யா நினைத்தாள்.




                                           (நிறைவுற்றது)



    






Wednesday, September 19, 2012

பார்வை (பகுதி-59)

மைலாப்பூர் தேர்நிலை தாண்டி ஒரு குறுக்குச் சந்தில் இருந்தது, வராஹமிஹிரரின் வீடு.  வீட்டு இலக்கங்களை சரிபார்த்துக் கொண்டே வீட்டை நெருங்குகையிலேயே, வாசல் பக்கம் வாலைத் தூக்கிக் கொண்டு ரெடியான மாடு போட்டு முடிக்கட்டும் என்று காத்திருந்து, முடித்ததும்
அதற்கு இடைஞ்சல் இல்லாமல் சுற்றிக்கொண்டு படியேறினார்கள் ரிஷியும், வித்யாவும்.

கடப்பைக் கல் பாவிய திண்ணையும் ஓட்டுவில்லைக் கூரைகளுமாய் வால் மாதிரி நீண்ட ஒற்றைச் சார்பு குடித்தனங்கள்.  வாசல் பக்கம் 'ஹோ'வென்றிருந்தது. இந்த ஏகப்பட்ட பொந்துகளில் எந்தப் பொந்திலோ வராஹமிஹிரர் வசிக்கிறார் என்று நினைத்துப் பார்ப்பதற்கே கழிவிரக்கமாய் இருந்தது.  'எதற்காகவோ தான் இதெல்லாம்; இதற்கப்புறம் பொன் மாளிகையாகக் கூட இருக்கலாம்; யார் கண்டார்கள்?' என்கிற நினைப்பு வந்ததும் வித்யாவிற்கு மனசு தெளிவடைந்தது.   'மண் குடிசை வாசலென்றால், தென்றல் வர வெறுத்திடுமா?' என்று இராகத்துடன் முணுமுணுத்தப்படி உள்பக்கம் முன்னேறிய ரிஷியைத் தொடர்ந்தாள் வித்யா.

வருவதற்கு முன்பே தொலைபேசியில் கேட்டு,"பேஷாய், வாருங்கள். வீட்டில் தான் இருப்பேன்" என்று அவர் சொன்னவுடன் தான் வந்திருந்தார்கள்.  மொபைல் மவுசில் இந்த மாதிரி சின்னஞ்சிறு குடித்தனங்களில் கூட தொலைபேசி இருக்கிறதே என்று வித்யா நினைத்துக் கொண்டாள்.

வெளிப்பக்கம் துள்ளிக் குதித்து வந்த ஒரு தாவணி சிறுசை வழிமறித்து ரிஷி கேட்டதும், அவள் பயந்தே போய்விட்டாள் போலத் தெரிந்தது.  பின்னாடி வித்யாவும் நிற்பதைப் பார்த்துத் தான், தெளிவடைந்து, "யாரைப் பாக்கணும்?.." என்று ஈனஸ்வரத்தில் குரல் வந்தது.

"மிஸ்டர் வராஹமிஹிரரை.. இங்கே தானே?.."

"தாத்தாவையா?.. வாங்கோ.." என்று திரும்பி முன்னேறியவளை புன்னகையு டன் தொடர்ந்தார்கள்.

நாலு குடித்தனங்கள் தாண்டி அடுத்ததில் நுழைந்தாள்.  குட்டி வாசல் பக்கம் போட்டிருந்த கோலத்தை மிதித்து விடாமல் ஒதுங்கி நின்றாள் வித்யா.

"உள்ளே வாங்கோ..." என்று அவர்களை உள்ளே அழைத்து விட்டு, "தாத்தா.. உன்னைப் பார்க்க யாரோ வந்திருக்கா.." என்று அறிவித்து விட்டு, இவர்கள் பக்கம் திரும்பி மீண்டும் ஒரு 'வாங்கோ'.

"யாரு.." என்று கேட்டபடியே யக்ஞோபவீதம் தரித்த மார்புக் கூட்டில் ஒரு காசித்துண்டு தொங்க வெளிப்பக்கம் வந்தவர், "யாரு.. தெரிலேயே!.." என்று திகைத்து, ஒரு நிமிடத்தில் புரண்ட ஞாபகச் சிதறலில் நினைவு வந்து, "ஓ.. நீங்க தானே போன்லே பேசினது? வாங்கோ.. வாங்கோ.." என்று தட்டி மறைப்பைத் தாண்டி உள்ளே கூட்டிக்கொண்டு போனார்.

சின்ன ஹால், பூஜை மாடத்தோடு இருந்தது.  மாடத்திற்கு கீழே கோலம் போட்டு கேரள குத்து விளக்கு.  தேய்த்த மினுமினுப்பில் தீப ஒளிக்குப் போட்டி போட்டுக் கொண்டு ஜ்வலித்தது.

அதற்குள் வலது பக்க மூலை ரூமிலிருந்து மடிசார் கட்டுடன் வந்த பெண், அவர்களைப் பார்த்து, "வாங்கோ.." என்று முகமலர்ந்தாள்.  மடித்து வைத்திருந்த இரண்டு ஸ்டீல் சேர்களைப் பிரிக்கப் போனாள்.  அதற்குள் "இப்படி வர்றேளா?" என்று பக்கத்து ரூம் பக்கமிருந்து குரல் வந்தது.  வராஹ மிஹிரரின் ஆஸ்தான அறை அதுவென்று தெரிந்து, மடிசார் பெண் பக்கம் பார்த்து முறுவலித்து விட்டு ரிஷியைத் தொடர்ந்து உள்ளே போனாள் வித்யா.

ரூமுக்குள் போனதும் பெரிய ஜன்னல் பக்கம் பின்பக்கத் தெரு தெரிந்தது.  அங்கேயும் ஒரு மாடு....

"உட்காருங்கோ.." என்று வராஹமிஹிரர் தயாராக இருந்த நாற்காலிகளைக் காட்டினார். "என்ன, சாப்பிடறேள்?"

"இப்போத் தான் சாப்பிட்டுட்டு வந்தோம்.. நீங்க போஜனம், ஆயாச்சா?"

"ஓ.. ஒம்பதுக்கெல்லாம் முடிச்சிடுவேன்.. சொல்லுங்கோ.."

"உங்களைப் பாத்து பேசணும்ன்னு ரொம்ப நாள் ஆசை.. ஊர்மிளா தான் உங்க நம்பர் கொடுத்தா.." என்று ஆரம்பித்தாள் வித்யா.

"ஊர்மிளாவா?.. லஷ்மணன் சம்சாரம் இல்லையா?" என்று சொல்லி, அவரே தொடர்ந்தார். "இராமயண லஷ்மணன் இல்லை, எழுத்தாளர் லஷ்மணன்.  நல்ல ஆத்மா.." என்று கைதூக்கி, எதிரில் லஷ்மணன் இருப்பது போலவே நினைவில் கொண்ட மாதிரி, "நன்னா இருக்கட்டும்.." என்று ஆசிர்வாதம் பண்ணினார்.  "செந்தாமரைன்னு ஒரு பத்திரிகை இருக்கில்லியோ.. அதிலே வாராவாரம் ராசிபலன் எழுத லஷ்மணன் தான் ரெகமண்ட் பண்ணினான். அப்புறம் தான் நான் எழுதறதே சூடு பிடிச்சது.. நன்னா இருக்கட்டும்.." என்று மறுபடியும் கைதூக்கி காற்றில் ஆசிர்வாதம் பண்ணினார்.

ரிஷியின் உடல் சிலிர்த்தது. "அவர் சொல்லித் தான் எனக்குக் கூட நிறைய எழுத வாய்ப்பு கிடைச்சது.." என்றான்.

"ஓ.. நீங்க கூட எழுத்தாளரா?"

"லஷ்மணன் சார் மாதிரி முழுநேர எழுத்தாளர் இல்லே.  எல்.ஐ.சி.லே வேலை செய்யறேன். ஒழிஞ்ச போது எழுதறது.."

"அப்படியா?" என்று யோசனையுடன் இழுத்தவர், "நீங்க தான் எனக்குப் போன் பண்ணினது.  இல்லையா?" என்று சட்டென்று திரும்பி வித்யாவைப் பார்த்துக் கேட்டார்.

"ஆமாம். நான் தான். என் ப்ரண்ட் ஊர்மிளாகிட்டே கொஞ்ச நாளைக்கு மின்னாடி பேசிண்டிருக்கறச்சே, நம்மைச் சுத்தி நடக்கற நிகழ்ச்சிகளைப் பத்தி பேச்சு வந்தது.  பேசறத்தையே எனக்கு நிறைய சந்தேகங்கள்.  அவங்க தான் சொன்னாங்க. உங்கள் டெலிபோன் நம்பரைக் குடுத்து, 'இதெல்லாம் பத்தி அவருக்குத் தான் தெரியும்.  போன் பண்ணிட்டு, அவருக்கு செளகரியம்ன்னா போய்ப் பாருங்கோ'ன்னா. இப்போ ரெண்டு நாளா இவருக்கும் இதிலே ஈடுபாடு வந்திருக்கு.  நடக்கற நிகழ்வுப் போக்குகளை மெயினா வெச்சு ஒரு நாவல் எழுதணும்ன்னு ஆசையா இருக்குன்னார்.  சரின்னு வந்திட்டோம்.  எங்க சந்தேகங்கள் குழந்தைத்தனமானவை. நீங்கப் பெரியவா, அதையெல்லாம் சகிச்சிண்டு எங்களுக்கு நிறைவேற்படுத்தினா ரொம்ப சந்தோஷப்படுவோம்" என்று சொல்லி முடித்தும்,  தான் நினைக்கறதைச் சரியாச் சொன்னோமா என்று வித்யாவிற்கு சந்தேகமாக இருந்தது.  இருந்தாலும் அவள் சொன்னதைக் கேட்டுக் கொண்டு தலையை லேசாக அசைத்த வராஹமிஹிரரைப் பார்த்து ஓரளவு அவருக்குப் புரிகிற மாதிரி தான் தெரியப்படுத்தி விட்டோம் என்று வித்யா நினைத்தாள்.

"நான் இதுக்கெல்லாம் அத்தாரிட்டி இல்லே.  இருந்தாலும் எனக்குத் தெரிஞ்ச்சதைச் சொல்றேன். என்ன சந்தேகம் உங்களுக்கு?" என்று லேசாகக் கையுயர்த்தி தலையைத் தடவி விட்டுக் கொண்டார் வராஹமிஹிரர்.

"ஒரு நிகழ்ச்சி நடக்கறதுக்கும், மனுஷங்களோட பங்களிப்பு நடக்கற அந்த நிகழ்ச்சிலே இருக்கறதுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?" என்று வித்யா தலை நிமிர்ந்து அவரைப் பார்த்துக் கேட்ட போது, என்ன கேட்கணும்ங்கறதை முதலிலேயே தீர்மானிச்சு கேக்க வேண்டியதைக் கேள்விகள் ரூபத்திலே உருவாக்கி பலதடவை அவற்றை நினைச்சு நினைச்சு மனசில் உருவேற்றிக் கொண்ட மாதிரி இருந்தது..

"என்ன அப்படிக் கேட்டுட்டேள்?..  நிச்சயம் உண்டும்மா" என்றார் வராஹமிஹிரர். "எந்த நிகழ்ச்சியும் தானா நடக்கறதில்லே.  அப்படி நடக்கறதுக்கு சில சேர்க்கைகள் வேண்டும். புரியற மாதிரிச் சொல்லணும்னா, சின்ன சின்ன சில நிகழ்வுகளின் ஒண்ணாச் சேர்ந்த வெளிப்பாடு தான் ஒரு நிகழ்ச்சி.  நிகழ்வு, நிகழ்ச்சி-- இந்த வார்த்தைகள்லே ரொம்ப பெரிய வித்தியாசம் இல்லே.  உங்களுக்குப் புரியறதுக்காகச் சொன்னேன். இப்பவும் புரியறத்துக்கு கஷ்டமா இருந்தா, சின்னச் சின்ன கூறுகள்ன்னு வேணா வெச்சிக்கோ.  பல சிறு சிறு கூறுகளான நிகழ்வுகளின் சேர்க்கை தான் ஒரு நிகழ்ச்சி.  பல வித நிகழ்வுகளின் சேர்க்கைலே ஒரு திருமணம் நடக்கறது.  இதிலே ஆணும் பெண்ணும் தம்பதிகளானாங்கங்கற நிகழ்ச்சி தான் மேலோட்டமா பாக்கறச்சே தெரியும்.  அப்படி அவங்க தம்பதிகளான நிகழ்ச்சியின் தொடர்ச்சியா அதுக்குப் பிந்தி ஒரு வரலாறே அவங்களை வைச்சுத் தொடரும். ரெண்டு நிலை.  ஒரு நிகழ்வுக்கு நிகழ்வை நோக்கி நகர்ற ஒரு நிலை, அந்த நிகழ்வுக்கு அப்புறம் அந்த நிகழ்வின் பலனான இன்னொரு நிலை.  ஒரு மாணவன் தேர்வுக்கு படிக்கிறான்னு வைச்சுக்கோங்கோ. இது தேர்வுங்கற மைய நிகழ்வுக்கு முன்னான அதை எதிர்பார்த்து எதிர்கொள்வதான ஒரு நிலை.  தேர்வுங்கற நிகழ்வு நடந்தபிறகு அந்தத் தேர்வில் வெற்றி அல்லது தோல்வி அவன் அடையறதை வைச்சு அந்த நிகழ்வின் பலனாக அடுத்து வரும் நிலை.  இப்படி ரெண்டு நிலை. நிறைய இப்படி இருக்கு.  இந்த நிறையங்கறது நிறைய நிறையத் தொடர்ந்து ஏற்படறதுனாலே, பலது ரொம்ப சாதாரணமா ஆயிடுத்து.   இயற்கையாகவே பலது நம்ம யோசனைக்கு அப்பாற்பட்டு நடக்கறது.  அதெல்லாம் பத்தி யோசிக்காமயே நாம போயிட்டோம்ங்கறது தான் அதிசயம்.  ஒண்ணுமில்லே; புஷ்பங்கள்லே தேனை உறிஞ்சறத்துக்காக உக்கார்ற வண்ணத்துப் பூச்சி, வண்டுகள் மாதிரி சின்னஞ்சிறு பூச்சிகளோட கால்கள்லே அந்தப் பூக்களின் மகரந்தங்கள் ஒட்டிண்டு இன்னொரு பூவுக்கு கடத்தப்பட்டு மகரந்த சேர்க்கை எப்படி நடக்கறது, பாருங்கோ.. இதில் தன் மகரந்த சேர்க்கை, அயல் மகரந்த சேர்க்கைன்னு ரெண்டா வேறே.  எத்தனையோ ஜீவராசிகள்.  கடலோட அடி ஆழத்திலே இருக்கற பாசிலேந்து எத்தனையோ; தெரிஞ்சது கொஞ்சம் தான்;  தெரியாதது தான் அதிகம்.  இயற்கையோட கருணையான ஏற்பாடுகள் நம் எண்ண வேகத்திற்கும் புரிஞ்சிண்டதற்கும் அப்பாற்பட்டவை.  கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் உணவு ரெடி.  இப்படி பல விஷயங்கள் புரியாதவை.   அந்த மாதிரி ஓரளவு தான் நடக்கும் விஷயங்களின் தாத்பரியங்களை, எதுக்காக எதுன்னு உத்தேசமா தெரிஞ்சிக்க முடியறது.  எதையெதையோ கூட்டியும் கழிச்சும் கணக்குப் போட்டு வானிலை அறிக்கை சொல்றதில்லையா, அந்த மாதிரி,"  என்று சொன்னவர் மூச்சு வாங்கி லேசாக ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

"ஜலமானும் சாப்டுங்கோ.."என்று ஒரு செம்பில் ஜலத்தைக் கொண்டு வந்து ரிஷிக்கும் வித்யாவுக்கும் இடையில் ஒரு ஸ்டூல் போட்டு டம்பளருடன் வைத்தார் அந்த மடிசார்ப் பெண்.  அவர் தலை மறைந்ததும், "என் மருமகள்" என்றார் வராஹமிஹிரர்.

"அப்படியா?" என்று கேட்டு விட்டு, பேச்சு வேறு திசையில் போய்விடப் போகிறதே என்கிற கவனத்தில் அவசரமாகக் குறுக்கிட்டாள் வித்யா. "நமம விருப்பத்திற்கு ஏற்ப நடக்கற நிகழ்ச்சிகளை அமைச்சிக்க முடியுமா?"

"நாம் மட்டுமே சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் முழு கவனம் செலுத்தி நிறைவேற்றிக் கொள்ளலாமேன்னு நாம நினைக்கலாம். ஆனால் அதுக்குக் கூட காலம், சமயம் போன்ற புறக்காரணங்களின் ஒத்துழைப்பு தேவை. ஆடிப் பட்டம் தேடி விதை என்கிறார்களே, அதுமாதிரி.  இதைத் தான் ரொம்ப அழகா, 'ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின்'ன்னு வள்ளுவப் பெருமான் சொல்றார். அதுவும் தவிர ஒவ்வொரு நிகழ்வுக்கும் தொடர்ந்த விளைவு உண்டு.  அந்த விளைவுகளையெல்லாம் ஒருங்கிணைத்து நாம் விரும்புற பூர்த்திக்கேற்ப வழி நடத்த வேண்டும்.  கர்ம பலன் இருந்தால் தான் அந்த வழிநடத்தற சக்தி கிடைக்கும்.  நம் செயல்பாடுகள் தான் நமக்கான கர்மபலனைத் தீர்மானிக்கறதாலே, நல்ல விளைவுகளை ஏற்படுத்தற கர்மபலனைச் சேர்த்துக் கொள்ளக் கூடிய செயல்பாடுகள் தேவை."

"கர்ம பலன்னா என்ன,  எதைச் சொல்கிறீர்கள்?"

"'திருப்பியும் திருவள்ளுவர் தான். 'பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்'ன்னு அவர் சொல்லியிருக்கிறார் இல்லையா, அந்த கருமத்தை.  அநுதினமும் செயல்படுகிற நம் செயல்பாட்டை. செயல்பாடுக ளின் குணாம்சங்களில் ப்ளஸும் உண்டு; மைனஸும் உண்டு.  ப்ளஸ் அதிகமாகற மாதிரி செயல்பாடுகளை அமைச்சிக்கறது, அதற்கான நற்பலன்களை அதிகமாக் கொடுக்கும்"

"ப்ளஸ்ன்னா, நமக்கு நன்மை கொடுக்கறது. மைனஸுன்னா நமக்குத் தீமை கொடுக்கறதா?"

"நமக்கில்லை.  சமூகத்திற்கு.  இந்த நமக்கு என்பதெல்லாம் கொஞ்ச காலத்துக்குத் தான்.  அப்புறம் நமக்கு என்பதே நம்முள் அருகிப் போயிடும். நற்காரியங்களில் நாம் ஈடுபட ஈடுபட நாமும் சமூகமும் ஒரே நேர்கோட்டில் ஒண்ணாயிடுவோம்.  ஒரு ஸ்டேஜில் நமக்கு நன்மைங்கறது சமூகத்தின் நன்மையாயிடும். 'பயன் மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடையான் கண் படின்'ங்கற நிலை."

"புரியறது.  மனசிலே பதியற மாதிரி ரொம்ப எளிமையா சொல்றீங்க. அப்படிப் பதியறதெல்லாம் அப்படியே எங்களை நடந்துக்க வைக்கும்" என்று ஏதோ உறுதி தன்னுள் பிறந்த மாதிரி சொன்னாள் வித்யா.  "நடந்துக்கறதுன்னதும் இப்போ மனுஷாளோட பங்களிப்பைப் பத்தி நினைக்க வைக்கிறது..  இந்த மனுஷப் பங்களிப்புங்கறது ஒரு நிகழ்வு நிகழ்வதற்கான நிகழ்வுக்கூறா, இல்லை இப்படி பங்களிப்பு செய்யறதுன்னு ஒருபக்கம் நாம நினைக்கறது தான், இன்னொரு பக்கம் ஒவ்வொரு மனுஷனோட வளர்ச்சிக்கும் பங்காற்றுகிறதா?"

"குட்.." என்று வித்யா கேட்ட கேள்வியை சிலாகித்து நிமிர்ந்து உட்கார்ந்தார் வராஹமிஹிரர்.  "குழந்தை! உன்னோட பேசிண்டிருக்கறதே ஒரு நிறைஞ்ச அனுபவத்தை ஏற்படுத்தும் போலிருக்கு..  ரொம்ப நாளா என் மனசிலே பாசிப்பிடிச்சு படிஞ்சு கிடக்கிற எண்ணங்களை எடுத்துத் துலக்கற மாதிரி இருக்கு.. நீ கேட்ட கேள்விக்கு எனக்குத் தெரிஞ்சதைச் சொல்ல முயற்சிக்கிறேன்.." என்று சொன்னவர் ஒரு நிமிடம் மெளனத்தில் ஆழ்ந்தார்.  அவர் கண்கள் மேல் சுவரின் மூலையில் நிலைக்குத்தியிருக்க சொல்ல ஆரம்பித்தார்.  அவர் சொல்லச் சொல்ல ரிஷியும் வித்யாவும் புறவுலகம் மறந்து அவர் பேசும் கருத்துக்களில் கட்டுண்டு கிடந்தனர்.

நேரம் போனதே தெரியவில்லை.  இன்று பொதுவிடுமுறை நாளாக இருந்தது ரொம்ப செளகரியமாகப் போயிற்று. கெளதம் மொட்டை மாடி குரூப் ஸ்டடிக்குப் போயிருந்தான். மதியம் சாப்பிடுவதற்குள் வந்து விடுவதாக அவனிடம் சொல்லி விட்டுக் கிளம்பி வந்திருந்தார்கள். மாலை பெரியசாமி வேறு வந்து விடுவார். அவர் வீட்டு 'பெண் பார்க்கும் நிகழ்ச்சி'க்குப் போக வேண்டும்.  வராஹமிஹிரரிடம் பேசிய பிறகு நிகழ்ச்சி என்கிற வார்த்தையே ரொம்பவும் அர்த்தம் நிறைந்ததாக அவளுக்குப் பட்டது.

அவர்கள் கிளம்பும் பொழுது, "அடிக்கடி வாருங்கள்.."என்று வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார் வராஹமிஹிரர்.  அவர் தந்திருந்த 'நடக்கும் என்பார் நடக்கும்' புத்தகம் சுகச்சுமையாக இருந்தது வித்யாவிற்கு.


 (இன்னும் வரும்)




































Friday, September 14, 2012

பார்வை (பகுதி-58)


ன்றைக்கு என்னவோ ரிஷி சீக்கரமே அலுவலகத்திலிருந்து வந்து விட்டான்.

"என்னங்க?.. மழை வரப்போகுதா?" என்று வித்யா கேட்டதற்கு, "ஒரு மாறுதலுக்காகத் தான்.." என்று புன்முறுவலுடன் பதிலளித்தான்.

"என்னவோ போங்க, காலைலேந்து இந்த மாறுதல் பைத்தியம் உங்களுக்குப் பிடிச்சிருக்கு.  என்ன விஷயம்?." என்று கொஞ்சம் கவலையைக் குரலில் குழைத்துக் கேட்டாள் வித்யா.

"பயந்திடாதே.  யோசனைலே என்னை ஆட்டிப் படைச்சிண்டு இருக்கறது தான் தறிகெட்டு அப்பப்போ வார்த்தைலே வந்திடுது.. ஆட்சுவ்லி என்னன்னா,  'காதல் தேசம்' நாலாவது அத்தியாயத்திலே ஒரு பெரிய மாறுதல் செய்ய யோசிச்சு வைச்சிருக்கேன்.  அதை எழுதறதுக்குள்ளே இப்ப யோசிச்சு வைச்சிக்கறதை விட சிறப்பா வேறே ஏதானும் கிடைக்கலேனா, இப்ப யோசிச்சு வைச்சிருக்கறதையே நாலாவது அத்தியாயமா இன்னிக்கு உக்காந்து எழுதிடலாம்ன்னு இருக்கேன்.    சீக்கிரம் வீட்டுக்கு வந்ததுக்கு அதுவும் ஒரு காரணம்.." என்று ரிஷி சொல்லிக் கொண்டு இருக்கையில் கெளதம் தன் பிரோகரஸ் ரிப்போர்ட்டை கொண்டு வந்து அப்பா கையில் தந்தான்.

ரிப்போர்ட்டைப் பிரித்துப் பார்த்த ரிஷிக்கு சந்தோஷம் தாங்கவில்லை. பையனை அணைத்துக் கொண்டு தலையைக் கோதிவிட்டான். "ஃபைன்டா கண்ணு.. கீப் இட் அப்."

"வெறும் 'கீப் இட் அப்'ன்னா எப்படி?.. இன்னிக்கு வெளிலே போய் செலிபரேட் பண்ணப்போறதா கெளதம் கிட்டே சொல்லியிருக்கேன்.  டின்னர் கூட வெளிலே தான்.  சரியா?.."

"ஓ.." என்று உதடு குவித்தான் ரிஷி. "அப்ப ஒண்ணு செய்யலாமா?.. அந்த நாலாவது அத்தியாயம் இந்த நிமிடத்லேந்து தான் ஆரம்பமாகப் போகுது.  இன்னிக்கு ராத்திரி வீட்டுக்கு வந்து சேர்ற வரைக்கும் என்னலாம் நடக்கறதோ அதிலேந்து தேர்ந்தெடுத்தெல்லாம் அந்த நாலாவது அத்தியாயத்திலே வந்துடும்.  ஓக்கே வா?"

"பக்கா சுயநலம். என்ன பேசினாலும், செஞ்சாலும் உங்க வேலைலே தான் குறி. இல்லையா?" என்று நொடித்தாள் வித்யா.

"அதுக்காக இப்படி மூஞ்சியைத் தூக்கி வைச்சிண்டா எப்படி?.. நீ என்ன சொல்றையோ அதையும் கேட்டிண்டு, அதுக்கேத்த மாதிரி என் வேலையையும் மாத்திக்கிறேன். இது கூட சுயநலமா?"

"அதுக்குச் சொல்லலீங்க..  எதையும் உங்களைச் சுத்தியே யோசிக்கறீங்க, பாருங்க, அதுக்குச் சொன்னேன்.  அதுலே எதுக்காக எதுங்கறதெல்லாம் மறைஞ்சு போய் உங்களைப் பத்தினதே முக்கியமா போய்ட்றது இல்லையா, அதுக்காகச் சொன்னேன்.  இப்போ அந்தக் கதையை எப்படிக் கொண்டு போர்றதுங்கறதே உங்களுக்கு ஞாபகமா இருக்கறச்சே, செலிபரேஷன், குழந்தையோட சந்தோஷம் இதெல்லாம் அதிலே அமுங்கிப் போய்டும். அதான்."

"சீச்சீ.. இப்படிச் சொன்னா எப்படி?.. ரெண்டும் தான்.முக்கியம்.  ஏன்,  ரெண்டும் ஒரே நேரத்லே நடக்கக் கூடாதா, என்ன?" என்று அந்த நான்காம் அத்தியாய போக்கிலே இந்த கான்வர்சேஷனை எப்படி நுழைக்கலாம் என்கிற கவனத்திலேயே கேட்டான் ரிஷி.

"ஒண்ணுக்கு ஒண்ணு இடைஞ்சல் இல்லாமல் இருந்தால், சரி தான்." என்று சட்டென்று வித்யா இறங்கி வந்தாள்.

"நாட் அட் ஆல் இடைஞ்சல்.  பாக்கறையா, ஒண்ணுக்கு ஒண்ணு ஒத்துழைக்கப் போறது. இது தான் அதுவாகப் போறது.  அதான் சொல்லிட்டேனே?.. இப்போ நாம பேசிண்டிருக்கறது, இனிமே நடக்கப் போறது இதெல்லாம் தான் அந்த நாலாவது அத்தியாயமாகி கதையாகப் போறது.."

"அதாங்க வேணும்.." என்று சோபாவில் ரிஷிக்கு எதிரா உட்கார்ந்திருந்த வித்யா எழுந்திருந்து அவன் பக்கத்தில் வந்து அமர்ந்தாள். "உங்க கற்பனையெல்லாம் கொஞ்ச நேரத்துக்கு மறந்து இருங்க.. நடக்கற விஷயங்களை உன்னிப்பா கவனிச்சாலே ஒரு ஆச்சரியம் தன்னாலே வரும்.  விஷயம் என்னன்னா, ஏதோ நடக்கறதுன்னு பலதை இயல்பா எடுத்திக்கறதாலே, அதிலே நம்ம முழுக்கவனம் செல்லலேங்கறது தான்.   கண்ணுக்கு முன்னாடி நடக்கற காரியங்கள்லே இருக்கற நறுவிசும், அழகும், அப்பாடி அந்தக் கோர்வையும் இருக்கே.. அப்பப்பா.  அதோட மகாத்மியத்தைச் சொல்லிண்டே இருக்கலாம் போலிருக்கு."

"ஒண்ணு ரெண்டு சொல்லேன்.  நானும் கேட்டுக்கறேன்.." என்று ரிஷியின் உதடுகள் ஜபிக்க, அவன் உள் மனசோ 'அவள் சொல்றதையெல்லாம் தீர்க்கமா கேட்டுக்கோ..  கேட்டுண்டு அந்த நாலாவது அத்தியாயத்லே அதையெல்லாம் உபயோகப்படுத்திக் கொள்றது உன் சாமர்த்தியம்' என்றது.

இடைஞ்சலாய் நெற்றிப்பக்கம் வந்து விழுந்து தொந்தரவு செய்த கூந்தல் சுருளை வித்யா ஒதுக்கி விட்டுக் கொண்டாள் "அந்த ஆட்டோக்காரர் பையன் விஷயம் என்னாச்சுன்னு நீங்க கேக்கலையே?.. நாளைக்கு அவங்கள்லாம் அந்தப் பையனுக்கு பொண் பாக்கப் போறாளாம்.  காலம்பற அவரோட சம்சாரத்தோடு லட்சணமா வெத்தலை, பாக்கு, பழத்தோட வந்து எங்கட்டே சொல்லிட்டு, நீங்களும் வரணும்மான்னு கூப்பிட்டுப் போறார்.நல்லவங்களுக் கும், நல்லதுக்கும் இந்தக் காலத்லே மதிப்பில்லேன்னு சொல்றாங்களே, என்ன நடந்திருக்கு பாருங்க!  இப்போ, நேத்திக்கு நடந்த மாதிரி இருக்குங்க.. அந்த எழுத்துப் பட்டறைக்குப் போனோமே, அப்ப ஊர்மிளா 'யாராவது நல்ல பையன் உனக்குத் தெரிஞ்சு கல்யாணத்துக்கு இருந்தா சொல்லு, வித்யா'ன்னு எங்கிட்டே சொன்னது தான் சொன்னாங்க,  அந்த ஆட்டோக்காரர் ஆட்டோலே தான் நான் எழுத்துப்பட்டறைக்குப் போகணும்ன்னு இருந்திருக்கு பாருங்க.  அவரா தன் பையன் கல்யாணத்திற்காக வரன் பாத்திண்டிருக்கறதா எங்கிட்டே சொல்லப் போக, ஊர்மிளா எங்கிட்டே கேட்டது நினைப்புக்கு வந்து, அவர் கிட்டே பையன் ஜாதகத்தை வாங்கி நான் கொடுக்க, எல்லாம் டேலியாகி பொண்ணு பாக்கற வரைக்கும் கூட்டிண்டு வந்தாச்சு..  இதையே, ஒரு கதைன்னா உங்க கற்பனைலே எத்தனை குழறுபடி பண்ணியிருப்பீங்க, நெனைச்சுப் பாருங்க..  என்ன பண்ணியிருப்பீங்கன்னு சொல்லிடுவேன்.  ஆனா, வேணாம்.  உஷா கிட்டே கேட்டா இந்தக் கதைகளைப் பத்தி இன்னும் நிறைய வண்டி வண்டியா சொல்லுவா.  ஒரு கதைலேயானும் பாஸிடிவா படிக்கறவங்களுக்கு ஆறுதலா, நம்பிக்கை அளிக்கற மாதிரி ஏதாவது ஆலோசனை சொல்லுவாங்களாக்கும் ன்னு நானும் பார்த்திட்டேன்.  செய்ய மாட்டீங்களே.."

"வித்யா! நெகட்டிவ் அப்ரோச்லே ஒரு த்ரில் இருக்கும்.  மசமசன்னு கதை போகாது. திருப்பம் வந்து வந்து சுவாரஸ்யம் பத்திக்கும்..  அதானே படிக்கறவங்களுக்கு வேணும்?.. நல்லதைச் சொல்ற மாதிரியே கெட்டதையும் சொல்லணும். சொல்லப்போனா, கெட்டதைக் கொஞ்சம் தூக்கலா சொல்லி படிக்கறவங்களை வசீகரிச்சு, வலைலே போட்டுண்டு கபால்ன்னு நல்லதுக்குத் தாவி கதையை முடிச்சிடணும். இதான் காலதிகாலமா இருக்கற ஃபார்முலா."

"அப்போ நல்லதையே சொன்னா வசீகரிக்க முடியாதுன்னு சொல்றீங்க, அப்படித்தானே?"

"முடியாதுன்னு சொல்லலே.. திகட்டும்ன்னு சொல்றேன்.  ஸ்வீட்டுக்கு நடுவே சுரீர்ன்னு காரம் வேணும்.  அந்தக் காரம் தான், இன்னும் ரெண்டு துண்டு ஸ்வீட்டை எடுத்து வாயிலே போட்டுக்கச் சொல்லும்.  கற்பனைங்கறது என்ன, ஜரிகை அலங்காரம் மாதிரி.  இப்படி நடந்தா எப்படியிருக்கும், அப்படி நடந்தா எப்படியிருக்கும்ன்னு படிக்கறவங்களை எதையெல்லாமோ நெனைக்க வைச்சு மலைக்க வைக்கறது, இல்லையா? "

"உங்களுக்கு என்ன, எழுத்திலே எழுதிட்டாலே போதும், அதெல்லாம் நடந்து முடிஞ்சிட்ட மாதிரி..  'அவன் எவெரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் ஏறித் திரும்பிப் பார்த்த பொழுது காலை மணி எட்டே கால்'ன்னு எழுதிட்டாலே போதும். அந்த  காரியமே நடந்திட்ட மாதிரி ஆகிடும்! ஆனா, அதை நடைமுறைப்படுத்தணும் னா எவ்வளவு சிரமம்?  இப்படி ஒரு விஷயத்தைப் பத்தி எழுதித் தீர்த்தவுடனேயே அந்த விஷயம் நடந்துட்டதா பொய்யாவானும் நினைக்கறதை விட நிஜத்திலேயே நடக்கற ஒரு நிகழ்விலே நம்ம பங்களிப்பும் இருக்கற மாதிரி செயல்படறது இன்னும் உசத்தி இல்லையா?"

"எது உசத்திங்கறது விஷயமில்லே.  பலன் தான் முக்கியம். நமக்குன்னு இல்லே; யாருக்கு வேணும்னாலும். பல பலன்கள் கண்ணுக்குத் தெரியாது. அதனாலே அதெல்லாம் கணக்கிலேயே வராதாக்கும்."

"கண்ணுக்குத் தெரியறதைத் தான் பாப்போமே! ஷேர் மார்க்கெட்லே நான் ஷேர் வாங்கினதையே எடுத்துக்கங்க.. முதல் நாள் அந்த சிமிண்ட் பங்கை வாங்கணும்ன்னு டெலிபோனைக் கூட எடுத்திட்டேன்.  அந்த சமயம் பாத்து பங்குச் சந்தை பரிவர்த்தனை நேரம் முடிஞ்சி வாங்க முடியாம போச்சு.  அடுத்த நாள் என்ன நடந்தது பாருங்க, பங்கு விலை இன்னும் இறங்கிப் போனப்போ கூட வாங்கலாமா, வேண்டாமான்னு குழப்பத்திலே சட்டுனு என்னாலே முடிவெடுக்க முடியாமப் போச்சு.  ஆனா அன்னிக்கே கொஞ்ச நேரம் கழிச்சு இன்னும் இறங்கிப்போய் என்னை வாங்க வைச்சது.  நான் வாங்கறத்துக்காகத் தான் அப்படி இறங்கித்தோன்னு நான் இப்போ நினைக்கிற மாதிரி, நான் வாங்கின அடுத்த நிமிஷத்லேந்து ஒரே ஏறுமுகம் தான். இன்னிக்கு வரைக்கும் நிக்காம ஏறிண்டு இருக்கு.  இப்போ கரஸ்பாண்டென்ஸ் கோர்ஸ்லே வணிக நிர்வாகப் படிப்பு படிச்சிண்டிருக்கேன் இல்லையோ, இது கூட ஏதோ காரணத்துக்காகத்தான்னு மனசு கிடந்து அடிச்சிக்குது.  பின்னாடி வளரப்போற மரத்துக்காக, முன்னாடி விதை ஊன்ற மாதிரி..  இல்லேனா, முன்னாடி லேசுபாசா நடக்கற அத்தனையும் பின்னாடி அழுத்தமா நடக்கப் போற ஒண்ணுக்கான வழி நடத்தலோ, ஒத்திகையோன்னு அடிக்கடி தோண்றது. எனக்கு இப்போலாம் என்ன ஆச்சரியம்ன்னா, இது இது இப்படித்தான் நடக்கணும்ன்னு ஒவ்வொரு விஷயமும் நடக்கறதுக்கு முன்னாடியே தீர்மானமாயிட்ட மாதிரி தோண்றது.  ஒரு செயல், அதற்கு ஏத்த விளைவுன்னு ஒண்ணுக்கு ஒண்ணு பிணைஞ்சு சங்கிலித் தொடர் மாதிரி ஒரு அர்த்ததோட வாழ்க்கை பூரா போயிட்டிருக்கற மாதிரி தோண்றது. என்ன நடக்கப் போறதுன்னு நமக்கு முன்கூட்டியே தெரிஞ்சா நிம்மதி போய்டும். அதான் எப்பப்போ எது நடக்கணுமோ, அப்பப்போ அதெல்லாம் நடக்கற மாதிரி..."

"மனம் ஒரு அற்புதமான.. அற்புதமான?.. வஸ்துங்கறதா என்ன சொல்றதுன்னு தெரிலே, வித்யா.." என்று ரிஷி உள்பக்கம் திரும்பிப் பார்த்தான்.  உள் ரூமில் உட்கார்ந்து கெளதம் சுடோகு புத்தகத்தில் கட்டங்களை முகத்தில் ஆர்வம் பொங்க நிரப்பிக் கொண்டிருந்தது இங்கிருந்தே தெரிந்தது.


மாலை மங்கிய தருணம் குளுமையான காற்றில் இதமாக இருந்தது.

முதலில் துணிக்கடை.  வெளியில் போனால் போட்டுக் கொள்ள நன்றாக இருக்கிற மாதிரி அவனுக்குப் பிடித்த கலரில் ஒரு ஜோடி பேண்ட் சட்டை கெளதமுக்கு வாங்கித் தர வேண்டும் என்றிருந்தாள் வித்யா.

அந்த பிர்மாண்ட துணிக்கடையில் அவர்கள் நுழைகையிலேயே, ஏக வரவேற்பு.  அங்கு நின்றிருந்த வாலிபன் ரிஷியின் கையைக் குலுக்கி, "தொந்தரவுக்கு மன்னிக்கணும்.  ஒரு நிமிஷம்.  இப்படிக் கொஞ்சம் வர முடியுமா?" என்று முன்பக்கமிருந்த தனி அறைக்கு அவர்களை அழைத்துச் சென்றான்.

அந்த அறையில் அவர்கள் நுழைந்ததும், "வாங்க.. வாங்க.." என்று உள்ளே அமர்ந்திருந்தவர் எழுந்து வந்து அவர்களை வரவேற்றார்.  கெளதமிடம் அவர் பார்வை பதிந்தது.  "உங்க பையனா?" என்று கேட்டுக் கொண்டே அவர்கள் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் அவன் கையைப் பிடித்துக் குலுக்கினார்.

ரிஷி பக்கம் திரும்பி, "ஒரு மகிழ்ச்சியை பகிர்ந்துக்கறதா இருக்கோம். தயவுசெஞ்சு ஏத்துக்கணும்.." என்று அவர்களை வேண்டிக்கொண்டு அவர்களை சோபாவில் அமர்ந்தி தான் நின்று கொண்டார்.

"ஒரு சந்தோஷமான விஷயம்.  அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி தெரிஞ்ச சந்தோஷம்.   ஹாஸ்பிடல்லேந்து தம்பி போன் பேசினான்.  தம்பி சம்சாரத்திற்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு.  எங்க தலைமுறைக்கு முதல் குழந்தை.  சந்தோஷம் பிடிபடலை.  உடனே அதைக் கொண்டாடத் தீர்மானிச்சோம்.  இந்த நிமிஷத்திலே இந்தக் கடைக்குள்ளாற நுழையற முதல் சிறுவன் அல்லது சிறுமிக்கு---"

மொத்த கடைக்குச் சொந்தக்காரர்களே அவரும் அவர் தம்பியும் தானாம். அண்ணனுக்கு கல்யாணமாகி ஏழு வருஷமாச்சாம்.  குழந்தை இல்லை. தம்பிக்கும் திருமணமாகி நாலு வருஷத்துக்கு அப்புறம் குழந்தை பாக்கியம்.  அதான் சந்தோஷத்துக் காரணம்.

"பையனுக்கு பிடிச்சது பத்தாயிரத்துக்கு எது வேணாலும் இங்கே எடுத்துக்கட்டும்.   அது எங்க பரிசு உங்க பையனுக்கு.  இந்த சிறுவன் சந்தோஷம் எங்கள் சந்தோஷம்" என்றார்கள்.

வித்யாவிற்கு கனவு மாதிரி இருந்தது.  ரிஷிக்கோ நடக்கற நிஜம், தான் எழுதும் கதைகளையே மிஞ்சி விடும் போலிருக்கே என்றிருந்தது.  'அடிசக்கை! நாலாவது அத்தியாயத்திற்கு நீ எதிர்பார்க்காமலேயே நல்ல மேட்டர் தான்' என்றது உள் மனசு.


(இன்னும் வரும்)





























Sunday, September 9, 2012

பார்வை (பகுதி-57)

நாராயணனுக்கு கிரீம்ஸ் ரோடு பதிப்பக தலைமை அலுவலகத்தில் வேலை இருந்தது. அப்படியே பெரியவரைப் பார்த்து விட்டு மறுநாள் பெண் பார்க்கப் போவதை ஊர்மிளா மேடத்திடம் சொல்லி விட்டுப் போகலாம் என்று வந்திருந்தான். ஊர்மிளாவின் மூலம் தானே இந்தப் பெண் பற்றியே தெரிய வந்தது?.. அதனால் அவர்களுக்கு செளகரியப்பட்டால் அவர்களையும் வரச்சொல்லி வேண்டிக் கொள்ள வேண்டும் என்பது அவன் எண்ணம்.

நாராயணன் அழைத்த பொழுது, வேணிக்காகப் போக வேண்டும் என்ற எண்ணம் ஊர்மிளாவுக்கு இருந்தாலும் நிறையப் பேர் போவது வேணி குடும்பத்தினருக்கு அசெளகரியமாக இருந்து விடப்போகிறது என்கிற ஒரு தயக்கம் இருந்தது.  ஆனால், நாராயணன் வருவதற்கு முன்பே ஊர்மிளாவின் வருகைக்கான வேணி கேட்டுக் கொண்ட போது, 'எங்களுக்கு வேறு மனுஷா, இல்லை அக்கா' என்று வேணி முன்பு ஒரு முறை பரிதாபமாய்ச் சொன்னது நினைவுக்கு வந்து நிச்சயம் வருகிறேன் என்று சொல்லியிருந்தாள்.  அதனால், நாராயணன் இப்பொழுது கேட்ட பொழுது, 'அனேகமா நீங்க அங்கே வர்றத்துக்கு முன்னாடியே நான் அங்கிருப்பேன் என்று நினைக்கிறேன்' என்றாள்.

"ஓ! பெண் வீட்டாரை உங்களுக்கு முன்னாடியே தெரியும் இல்லையா?" என்று கேட்டான் நாராயணன்.

"வீட்டார் என்று எல்லாரையும் சொல்ல முடியாது.  சொல்லப் போனா, கல்யாணப் பெண் அந்த லஷ்மியைக் கூட நான் பார்த்தது கிடையாது.  ஆனா, அந்த லஷ்மியோட தங்கையை நன்னாத் தெரியும்.." என்று சொன்ன போது 'அந்த தங்கை யார் என்று இப்பொழுது நான் சொன்னால், உனக்குக் கூட அவளைத் தெரியும்' என்று சொல்ல நினைத்ததை ஊர்மிளா கஷ்டப்பட்டு சொல்லாமல் தவிர்த்தாள்...

"ரொம்ப நல்லதாப் போச்சு.." என்றான் நாராயணன். "எனக்கும் தெரிஞ்சவங்களா, அந்த குடும்பத்துக்கும் ஓரளவு தெரிஞ்சவங்களாய் நீங்க இருக்கறது ரொம்ப செளகரியமாய் போச்சு.." என்றான்.

ஊர்மிளா புன்னகைத்தாள். "ஆமாம், இதில் ஒரு செளகரியம். அவங்களுக்கு வேண்டியதை உங்க கிட்டேயும், உங்களுக்கு வேண்டியதை அவங்க கிட்டேயும் கேட்டுச் சொல்லலாம்.. இல்லையா?"

"அட!.." என்று வியந்தான் நாராயணன். "சட்டுனு இது என் நினைப்புக்கு வரலை, பாருங்கள்!" என்று கொஞ்சம் சாய்ந்து சாய்மானமாக நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான். "எனக்கு ஒரு கேள்வி இருக்கு.  கல்யாணப்பெண் லஷ்மிகிட்டேயே கேக்கணும். அதுக்கு நீங்க ஏற்பாடு செய்யணுமே!" என்றான்.

"பொண்ணைப் பாக்கறத்துக்கு முன்னாடியே, அந்த லஷ்மியைத் தான் கட்டிக்கறதுன்னு தீர்மானிச்சிட்ட மாதிரி இருக்கு!"

"அது என் ஜாதகத்தை அப்பா அந்த மாம்பலத்துக்காரங்க கிட்டே கொடுக்கறச்சேயே தீர்மானமான ஒண்ணுங்க.. எல்லாத்துக்கும் அடிப்படை எங்க ரெண்டு பேருக்கும் இருக்கற அந்தப் பெயர்ப் பொருத்தமும், எங்கப்பா தனக்குத் தானே புரிஞ்சிக்கிட்டதாச் சொல்ற சில சகுன அறிகுறிகளும் தாங்க.." என்றான்.

"இந்தளவுக்கு உங்க குடும்பத்திலே இந்த வரனுக்கு முக்கியத்துவம் கொடுக்கறதாலே, ஒண்ணு உங்க கிட்டே நான் கேட்டா தப்பில்லைன்னு நெனைக்கிறேன்.." என்று ஒரு நிமிடம் தாமதித்து, 'வேணி குடும்பம் கொஞ்சம் வசதியில்லாத குடும்பமாச்சே, அவர்களோட அந்த ஏழ்மை நிலமை, பொருந்தி வர்ற இந்தத் திருமணத்திற்கு குறுக்கே நின்று மறித்து விடப் போகிறதே' என்கிற ஆதங்கத்தில், "உங்க பக்கத்து மத்த எதிர்பார்ப்பெல்லாம் எப்படி இருக்குமோ?" என்று தயங்கியபடியே ஆரம்பித்தாள் ஊர்மிளா.  அவள் தயக்கமே மிகுந்த அர்த்தம் கொண்டதாகத் தெரிந்தது.

"எதிர்பார்ப்பா?.. என்னன்னு புரியலே.."

 "அதான் நாராயணன்.  சீர் செனத்தி இதெல்லாம்.  உங்க அப்பாகிட்டே தான் அதெல்லாம் கேக்கணும், இல்லையா?"

" அதெல்லாம் ஒரு எதிர்பார்ப்பும் இல்லீங்க.." என்று பட்டென்று சொன்னான் நாராயணன்.  "அவங்க கிட்டேயிருந்து எந்த எதிர்பார்ப்பும் இருக்கக் கூடாது ங்கறதிலே அப்பா அம்மா ரெண்டு பேரும் ரொம்பத் தீர்மானமா இருக்காங்க.. நேத்து கூட என்னை வைச்சிகிட்டுப் பேசிகிட்டு இருந்தாங்க.. பெண்ணுக்கும் பையனுக்கும் பிடிச்சிருந்தா அதுவே போதுமாம், அவங்களுக்கு.. மத்தபடி வீட்டுக்கு வர்ற மருமகள் எப்படியிருக்கணும்ன்னு எல்லாரும் நினைக்கற மாதிரி தான்.." என்றான்.  

"அப்படீன்னா?.."

"அதாங்க, அதான் முக்கியமான விஷயம்.  அதான் அந்தப் பொண்ணு கிட்டே நேரடியாக் கேட்டுடறதுன்னு தவியா தவிச்சிக்கிட்டிருக்கேன்.. எங்க அப்பாரு கவலையும் அந்த ஒரு விஷயத்லே தான், மேடம்!  எனக்குன்னா.. ஆல்ரைட்.. உங்க கிட்டே சொல்றதுக்கு என்ன இருக்கு?..  சொல்லிடறேன்.  என்னை படிக்க வைச்சு ஆளாக்கினதுக்கு எங்க அப்பா பட்ட கஷ்டம் எனக்குத் தெரியும்.  அவங்க வேதனைப்படற அளவுக்கு எதுவும் நடந்திடக் கூடாதுன்னு இருக்கு.."

"என்ன சொல்றீங்க, நாராயணன்?.. எனக்குப் புரியலையே?"

"நாம புஸ்தகமா போட்ற கதைன்னா ரசிக்க முடியறது.  சிரிக்க முடியறது.. ஆனா, வாழ்க்கைன்னா அப்படி இல்லேதானுங்களே.. நாலும் இருக்கும், இல்லையா?"

"இந்த நாலும் கூட கதை புஸ்தகம் படிச்சிட்டு தெரிஞ்சிகிட்டது தானா, நாராயணன்?"

"தெரிஞ்சிக்கற மாதிரி என்னத்தை எழுதறாங்க, போங்க..  எல்லாம் நாலு பேரைப் பாத்துத் தெரிஞ்சிக்கறது தான்..  ஊர்லே உலகத்திலே நடக்கறதை, நாம பாக்கறதை.. நான் சொல்லியா உங்களுக்குத் தெரியணும்?.. அதான் என் கவலை."

"அலை ஓஞ்சு என்னிக்கு குளிக்கறது, நாராயணன்?..  அலையோட அலையா குளிச்சா, ஒரு அலை இழுத்திண்டு போனாலும் இன்னொரு அலை திருப்பி பிடிச்சு கரைக்குத் தள்ளிடும், இல்லையா?"

"சரிதான், நீங்க சொல்றது.. நானும் குளிக்கத் தான் போறேன்.  குளிக்கறத்துக்கு முன்னாடி, ஜாக்கிரதையா பாத்துக் குளிக்கணும்னுட்டு எண்ணம்.  அவ்வளவு தான்."

"என்ன ஜாக்கிரதை?.. சொல்லுங்க.."

"என்னோட விருப்பம்லாம் ரொம்ப சிம்பிள் மேடம்.  கல்யாணம் ஆனதும் நாம தனி, உன்னைப் பெத்தவங்க தனின்னு வரப்போர்ற மகாராணி என்னைப் பெத்தவங்களைக் கட் பண்ணாம இருக்கணும்.  அவ்வளவு தான்."

"அவங்க அப்படி 'கட்' பண்ணிட்டு வராங்கள்லே.. அதனாலே சில பேர் அப்படி நெனைப்பாங்க போலிருக்கு."

"ஓகோகோ.. அப்படி ஒரு நியாயம் இருக்கா.. இதுக்குத் தான் எது ஒண்ணையும் விஷயம் தெரிஞ்சவங்க கிட்டே கேக்கணும்ங்கறது.. அப்போ எதுக்கு மேடம், பெண்களுக்கு மட்டும் 'பிறந்த வீடு, புகுந்த வீடு'ன்னு ரெண்டு வீடு இருக்கறதா சொல்றாங்க?.."

"கேட்டா, யாரோ அப்படிச் சொன்னா அதுக்கு நாங்களா பிணைம்பாங்க..  நாராயணன்! அவங்க சொல்றதெல்லாம் நியாயம்னுட்டு நான் சொல்லலே.. அப்படில்லாம் சொல்றவங்க இருக்காங்கங்கறதுக்காகச் சொன்னேன்."

"அதுசரி.. அலை ஓஞ்சு என்னிக்குக் குளிக்கறதுன்னு நீங்க சாதாரணமா கேட்டுட்டீங்க.. யம்மாடி... எந்த புத்துல எந்தப் பாம்பு இருக்குமோ?.. பயங்கரமாலே இருக்குது.."

"இப்படில்லாம் பயந்தா வேலைக்கு ஆகாது.  உங்க மனசிலே இருக்கறதைச் சொன்னாத் தானே நீங்க என்ன நினைக்கிறீங்கன்னுட்டுத் தெரியும்?"

"அதான் சொன்னேனே, மேடம்.  பெத்தவங்களை 'கட்' பண்ணாம இருக்கணும்ன்னா, நான் சொல்றது, அவங்களை மாதிரி பெத்தவங்களை விட்டுட்டு வர்ற 'கட்' இல்லே;  ஒரேடியா 'கட்' பண்ணிர்றது.  என்னிக்கு எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆச்சோ, அன்னிலேந்து நாங்க ரெண்டு பேரும் தனி.  உங்க சங்காத்தமே வேண்டாம்ன்னு புருஷனைப் பெத்தவங்களை ஒதுக்கிடறது.."

"தனக்குன்னு ஒரு குடும்பம்ன்னு ஆனதும் தான், தன் புருஷன், தன் குடும்பம்ன்னு தனி அக்கறை கொள்றதுக்காக அப்படி நினைக்கிறாங்களோ, என்னவோ?"

"நினைக்கட்டும்.  அந்த மாதிரி அக்கறையோட குடும்பம் நடத்தட்டும். யார் வேணாம்னாங்க..  அதுக்காக?..  அவங்களுக்கும் சரி, எனக்கும் சரி, பெத்தவங்கன்னா அவங்களை எது ஒண்ணுக்கும் நோகாம வைச்சிக்கற கடமை இருக்கில்லையா?..  கல்யாணம் ஆச்சுன்னா, துண்டை உதறித் தட்டித் தோள்லே போட்டுகிட்டுக் கிளம்பறதுக்கு இது என்ன ரயில்ப் பயணமா?  சொல்லுங்க.."

"நிச்சயம் இது ரயில் பயணம் இல்லை; வாழ்க்கைப் பயணம். அதுவும் ரயில் மாதிரி யாரோ வண்டியை ஓட்டறாங்கன்னு அக்கடான்னு உக்காந்து போகக்கூடியதில்லே;  நாம் ஓட்டற வண்டி; நேக்கா ஓட்டிப் பயணம் செய்யணும்.  அதனாலே ஓட்றதிலே இருக்கற அக்கறைங்கற பொறுப்பும் கூடிப் போகுது. அதுக்கு மேலே என்ன, நீங்களே சொல்லுங்க.."

"அதாங்க.. என்னைப் பெத்தவங்களை எப்படி நான் அன்போட மரியாதை கொடுத்து மதிச்சு நடந்திக்கிறோனோ, அதே மாதிரி அவங்களைப் பெத்தவங்களுக்கும் அதே அன்பையும் மரியாதையையும் கொடுத்து மதிச்சு நடந்திப்பேன்.   அந்த மாதிரி இருக்கறவங்களா எனக்கு மனைவியா வர்றப் போறவங்க இருக்கணும்.  அவ்வளவு தான்."

"அதுசரி.  நியாயமான விருப்பம் தான்.  ஆனா, கல்யாணத்துக்கு முன்னாடியே இதெல்லாம் எப்படி தெரிஞ்சிக்கறது?..  சொல்லுங்க, நாராயணன்."

"அன்-கண்டிஷனலா உறுதிமொழி மாதிரி எதையும் நான் கேக்கலே, மேடம்.. சீராட்டி, வளத்து ஆளாக்கின தாய் தகப்பன் மேலே வளர்ந்த பிள்ளைங்களுக்கு பிரியமும் பாசமும் இருக்குமில்லையா?.. என்னைக் கல்யாணம் செஞ்சிக்கப் போறவங்களுக்கும் அப்படியான ஒரு நேசம் அவங்களைப் பெத்தவங்க மேலே இருக்குமில்லையா?.. அதை அவங்களும் உணர்வு பூர்வமா உணர்ந்திருப்பாங்க,  இல்லையா?.. அதே மாதிரி எனக்கும் இருக்குங்கறதைப் புரிஞ்சிண்டு என் உணர்வுகளை மதிச்சு என்னைப் பெத்தவங்ககிட்டே அன்பு காட்டணும்.  அவ்வளவு தான் நான் எதிர்பாக்கறது.  நானும் அவங்களைப் பெத்தவங்க கிட்டே அதே அன்பையும் மரியாதையும் காட்டுவேன்.  ஜஸ்ட் மனுஷங்க மேலே நாம வைச்சிருக்கிற பிரியம். அதுவும் வயசானவங்க மேலே. இதான் என் எதிர்ப்பார்ப்பு.  ஊர்லே உலகத்திலே இல்லாததை நான் கேக்கலே. நான் என்ன எதிர்ப்பார்க்கறேங்கறது உங்களுக்கானும் புரியறதா, மேடம்?"

ஊர்மிளாவுக்குப் புரிந்தது.   வளர்ந்த ஆண்பிள்ளையாய் தன் எதிரில் உட்கார்ந்திருக்கும் நாராயணனின் குழந்தை மனசு அவளுக்குப் புரிந்தது. இவனுக்கு புரிகிற மாதிரி எப்படி எடுத்துச் சொல்வது என்கிற யோசனையில் கொஞ்ச நேரம் மெளனித்த பொழுது, நாராயணனே கேட்டான்."மேடம்! இப்படியானும் சொல்லுங்க.. உதாரணத்திற்கு உங்களையே எடுத்திக்கங்க.  உங்களுக்கும் இப்படியான அனுபவம் உங்களுக்குத் திருமணம் ஆன போது ஏற்பட்டிருக்கும்.  அன்புங்கறது கொடுத்து வாங்கறதுன்னு கேள்விப்பட்டிருக்கேன். ஸாருக்கும் என்னை மாதிரி எதிர்பார்ப்பு நிச்சயம் இருந்திருக்கும்.ஸாரோட அப்பா- அம்மா அவங்களை மாதிரிப் பெரியவங்க கிட்டே எப்படி அன்பைச் சம்பாதிச்சிங்க?..  அதைச் சொல்லுங்க.." என்றான்.

கேட்ட கேள்வி தங்கிட்டையே திருப்பப்படும் என்று ஊர்மிளா எதிர் பார்க்கவில்லை.  அதனால் சட்டென்று பதில் சொல்ல கொஞ்சம் தாமதித்தாள்.

ஊர்மிளாவுக்கு அந்த நினைப்பு புதுசாக இருந்தது.  இத்தனை நாள் இப்படியான ஒரு கோணத்தில் நினைத்துப் பார்த்திராத புதுசு.

"கல்யாணமாகி புகுந்த வீட்டிற்கு நா வர்றச்சே, மாமியார் மட்டும் தான் இருந்தாங்க.  மாமனார் இவர் வேலைக்குப் போகும் பொழுது காலமாகியிருக்கிறார்.  இவர் முதலில் ஐ.ஓ.ஸி.யில் வேலையில் இருந்தார்ங்கறது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கலாம். அப்புறம் இவரோட எழுத்து வேலை அரசாங்க வேலையைச் சாப்பாடறதாகி, இதுவா, அதுவான்னு முடிவெடுக்க நேரிட்டப்போ, எழுதறதே இனி என் வேலைன்னு தீர்மானமாகி முழு நேர எழுத்தாளராயிட்டார்.     என் மாமியாரும் ஒரு எழுத்தாளர் தான் என்பது உங்களுக்குப் புதுத் தகவலா இருக்கும்.  அவர் அம்மாவின் தொடர்ச்சி தான் இவர்." என்று ஒரு நிமிடம் நிறுத்தித் தொடர்ந்தாள் ஊர்மிளா.

"கல்யாணமான புதுசிலே புகுந்த வீடு தான் புதுசுன்னா, பெண்களுக்கு அந்த நேரத்திலே பழக நேர்ந்த ஆட்கள், உறவு முறைன்னு எல்லாமே புதுசா இருக்கும்.  கிடைச்ச ஒரே துணை கணவன்; அந்தத் துணைவன் துணையில் தான் அத்தனையையும் தெரிச்சிக்கணும்ன்னு ஆகிப்போகும். இருப்பத்திரண்டு, இருபத்தைஞ்சு வயசு வரை பிறந்த வீட்லே ராஜ்யம் பண்ணின ஆட்ட பாட்டத்தையெல்லாம் அடக்கிண்டு, பழக்கமில்லாத புதுசுகளோடு தனக்கும் ஒரு பழக்கத்தை ஏற்படுத்திண்டு செட்டில் ஆகணும்ன்னா, அதுக்கு ஒரு தனித் திறமை தான் வேணும்.  என் விஷயத்தில் எந்த ஜென்மத்லே நான் பண்ணின புண்ணியமோ தெரிலே, அப்படி ஒரு மாமியார் எனக்குக் கிடைச்சார். அவர் தான் எனக்கு பிலாசபர், வழிகாட்டி, ஆசான் அத்தனையும். என் அம்மா சும்மா. மாமியாரோ இன்னொருத்தர் மனசைப் படிக்கத் தெரிஞ்சவர்.   ரொம்ப மென்மையானவர். பேசிறத்தே கூட அடுத்தவர் மனசு நோகக்கூடாதுங்கற ஜாக்கிரதை உணர்வு உள்ளவர்.  அவர் பழக்கப்படுத்தினது தான் எல்லாம்.  கல்யாணம் ஆகி ஆறு மாசம் கழிச்சு, பிறந்த வீட்டுக்குப் போனப்போ, 'என்னடி, ஆளே மாறிட்டேயே'ன்னு என் அம்மா ஆச்சரியப்பட்டுப் போனா" என்று சொன்ன போது லேசாக ஊர்மிளாவிற்குக் குரல் தழைந்தது.  தொண்டையைச் செருமி சரிப்படுத்திக் கொண்டாள்.

"என் அம்மா கூட அதிரப் பேசத் தெரியாதவங்க தான், மேடம்.  ரொம்ப அட்ஜெஸ்ட்மெண்ட் டைப்.  வரப்போற பெண் அதைப் புரிஞ்சிண்டு நடந்தாங்கன்னா, உங்களை மாதிரி அவங்களும் மாமியாரைப் பத்தி உயர்வா பேசலாம்.."

"இப்போச் சொன்னீங்களே, இது கரெக்ட்..  பெண்ணுக்குப் பெண் அந்த புரிதல் இருக்கணும்.  இருந்தா, ஒரு கோணலும் வராது, நாராயணன்.  நல்லவங்களு க்கு நல்லது தான் நடக்கும். கவலையே படாதீங்க.." என்றாள் ஊர்மிளா. "எங்க மாமியார் சொல்வார், ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் கல்யாணங்கறது கிருகஸ்தாஸ்ரம தர்மத்தைக் கட்டிக் காப்பாத்தறத்துக்காக விதிச்ச விதிம்பாங்க.  உங்க ரெண்டு பேர் கர்ம பலன்களுக்கு ஏற்ப நடக்கறதை முகஞ்சுளிக்காம ஏத்துண்டு ஒவ்வொண்ணையும் கடந்து நம்மாலே முடிஞ்ச நல்லதைச் செஞ்சு மீள்றது தான் அடுத்த ஜென்மத்துக்கான பூஜாபலன்ம்பாங்க.  அவங்க சொல்லி இதெல்லாம் கேக்கறத்தே, எனக்குக்கூட ஆரம்ப காலத்லே ஏதோ பெரியவங்க சொல்ற இதோபதேசம் மாதிரித் தான் இருந்தது.  நாளாவட்டத்திலே வாழ்க்கைலே அடிப்பட்டப்போத்தான், இதெல்லாம் வெறும் வார்த்தைகள் இல்லே, ஒருத்தர் அடைஞ்சு பாத்துத் தெரிஞ்சிண்ட அனுபவச் செறிவுன்னு தெரிஞ்சது.  எல்லாமே அப்படித்தான் நாராயணன்.  எதுவும் சொந்தமா அனுபவப்படாத வரைக்கும் அதது நம்ம கிட்டேயிருந்து விலகி அந்நியப்பட்டு நிற்கற மாதிரித் தெரியறது.  என்னைக் கேட்டா, அனுபவப் புரிதல் தான் ஆசான்ம்பேன்.  அது ஏற்படாத வரைக்கும், மனசு ஆயிரம் குறுக்கு விசாரணை நடத்தி தர்க்கித்து முரண்டு பண்ணிண்டு நிக்கும்.  நமக்கே எது ஒண்ணும் அனுபவமாகும் போது, அதை நல்லபடி சமாளித்து மீள்ற பக்குவம் கிடைக்கும்" என்றாள்.

"உங்க கிட்டே பேசின பிறகு இப்போ எனக்கு கொஞ்சம் தெளிவு கிடைச்சிருக்கு, மேடம்!  எனக்கென்னனா, ஒவ்வொண்ணா இதுக்கு அடுத்தது அது, அதுக்கு அடுத்தது இதுன்னு வரிசைப்படுத்தின மாதிரி ஒண்ணு முடிஞ்சா அடுத்ததுக்குன்னு என் திருமணத்தை நோக்கி சீரா இட்டுகிட்டுப் போற அந்த நிகழ்வுகளின் நேர்த்தியை நினைச்சா ஆச்சரியமா இருக்கு.  அதான் ஒரே நம்பிக்கை. யாரோ எல்லாத்தையும் முன்னாடியே தீர்மானிச்சு நல்லதுக்குத் தான் கைப்பிடிச்சு வழிகாட்டி கூட்டிட்டுப் போற மாதிரி இருக்கு.  அதுனாலே, இனிமே நடக்கப்போறதும் நல்லதுக்காகத் தான் இருக்கும்ன்னு நான் நம்பறேன்" என்று நாராயணன் சொன்னதைக் கேட்டதும், இவனது நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடி நடக்கட்டும் என்று நினைத்துக் கொண்டாள் ஊர்மிளா.


(இன்னும் வரும்)























Tuesday, September 4, 2012

பார்வை (பகுதி-56)

ரியாக காலை ஒன்பதே காலுக்கு டி.வி.யில் ஷேர் சேனலில் மணியடித்து பங்கு பரிவர்த்தனை தொடங்கி விட்டது.

ஒன்பதுக்கே இதற்காக ரெடியாகி விட்டாள் வித்யா.  காலையில் படுக்கையிலிருந்து எழும் பொழுதே அவள் குறித்து வைத்திருந்த பங்குகளின் விற்பனை விலை இன்று எப்படிப் போகும் என்கிற ஆவல் வந்து விட்டது.  அதற்காக கொஞ்சம் சீக்கிரமாகவே இன்று எழுந்திருந்தாள். காலை டிபன், சாப்பாடு எல்லாம் எட்டுக்கே தயாராகி விட்டது.

வழக்கமாக ரிஷி டிபன் சாப்பிட்டு விட்டு மதியத்திற்கான சாப்பாடை சின்ன கேரியரில் சாதம் தனி, மத்ததெல்லாம் தனித் தனியாக என்று எடுத்துச் செல்வான்.   இன்று ஏனோ சாப்பாட்டைச் சாப்பிட்டு விட்டு மதியதிற்காக டிபனை எடுத்துச் சென்றிருந்தான்.  கேட்டதற்கு ஒரு மாறுதலாக இருக்கட்டுமே என்று சொல்லிச் சிரித்தான்.  'எதிலெல்லாம் மனம் மாறுதலை விரும்புகிறது, பார்' என்று அவளுக்கும் புன்னகை விரிந்தது.  அவன் பொழுது சாய்ந்து வீட்டுக்கு வருகையில் திகைக்கிற மாதிரி வீட்டில் தானும் ஏதாவது மாறுதலைச் செய்து வைத்திருக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டாள்.

கெளதமும் ஸ்கூலுக்கு கிளம்பி போயாச்சு.   பன்னிரண்டரைக்கெல்லாம் கரெக்டாக மதிய சாப்பாட்டு இடைவேளையில் வீட்டிற்கு வந்து விடுவான். அவன் வருவதற்குள்----

நினைவுகளுக்கிடையில், டி.வி. திரையில் ஓடிக்கொண்டிருந்த அந்த பங்குகளின் பெயர்களுக்கிடையே அந்த சிமிண்ட் கம்பெனி ஷேரின் அன்றைய விலையைப் பார்த்து மனம் அலைபாய்ந்தது.  நேற்றைய விலைக்கு அதற்குள் நாற்பது ரூபாய்கள் விழ்ச்சி.  ஸ்டீலும் கிட்டத்தட்ட அதே அளவுக்கு விலை குறைந்திருந்தது.  தனியாக நோட்டுப் புத்தகத்தில் குறித்து வைத்திருந்த குறிப்புகளோடு ஒப்பிட்டுப் பார்த்தில் ஒன்று தெரிந்தது..  கடந்த இரண்டு நாட்களில் நல்ல வீழ்ச்சி.  அவள் ஆவல் கூடியது.  நல்ல வேளை, நேற்று எந்த ஷேரும் வாங்க முடியாமல் போனது நல்லதுக்கே என்று நினைத்துக் கொண்டாள்.

அடுத்த நினைப்பு, இதற்காகத் தான் அதற்காக முயற்சித்தும் வாங்க முடியாமல் நேற்று நடந்த நிகழ்வுகளின் சேர்க்கை தனக்குச் சாதகமாக அமைந்து விட்டதோ என்று.  தாங்க் காட்!  இந்த நிமிடம் வாங்கினால் கூட நேற்றைக்கும் இன்றைக்குமான விலையில் மொத்தத்தில் ஆறாயிரம் குறைந்திருந்தது.  வாங்குவது தான் வாங்கப் போகிறோம், அந்த ஆறாயிரம் வித்தியாசம் இன்னும் அதிகப்படுகிறதா என்று பார்க்கலாம் என்று யோசனை தீட்சண்யப்பட்ட பொழுது ---

அதற்குள் நாற்பது ரூபாய் இறக்கம் எழுபது ஆகியிருந்தது.  அதைப் பார்த்த வாக்கிலேயே மனம் பரபரத்தது.  கால்குலேட்டரை எடுத்து அந்த சிமெண்ட் ஷேர் அப்போதைய விலையில் ஐம்பது ஷேர்கள் வாங்கினால் எவ்வளவு கொடுக்க வேண்டியிருக்கும் என்று கணக்கு போட்டுப் பார்த்தாள்.  அறுபதாயிரம் ஒதுக்க வேண்டியிருக்கும் என்று தெரிந்தது.  ஸ்டீல் வேறு வாங்க வேண்டும்.  இல்லை, சிமிண்டிலும் ஸ்டீலிலும் தலைக்கு இப்பொழுது இருபது வாங்கி விட்டு, நாளைக்கு இன்னும் குறைந்தால் வாங்கிக் கொள்ளலாமா?..  நோட்டுப்புத்தகம், கால்குலேட்டர், கணக்கு என்றிருக்கும் நிலையில் டி.வி.யைப் பார்த்த பொழுது, அப்பொழுது தான் ஒரு ரவுண்டு முடிந்து 'A'-யிலிருந்து பங்கின் பெயர்கள் வரிசையாக நகர ஆரம்பித்திருந்தன.  அவள் நினைத்திருந்த சிமிண்ட் கம்பெனியின் பெயர் திரையில் தெரிவதற்குக் கொஞ்சம் பொறுக்க வேண்டும்.  அதற்குள் ஸ்டீல் விலையும் ஏறாதிருக்க வேண்டும். இல்லை, ஸ்டீல் ஏறினால், சிமிண்ட் மட்டும் இன்று வாங்கிக் கொண்டு ஸ்டீலை பிறகு பார்த்துக் கொள்ளலாமா?.. நாளைக்கு எப்படி இருக்குமோ, ஆகிறது ஆகட்டும் இரண்டையும் இன்றைக்கே வாங்கி விடலாமென்று நினைத்த பொழுது சிமிண்ட் பங்கின் விலை லேசாக ஏற ஆரம்பித்திருந்ததை வித்யா கவனிக்கத் தவறவில்லை. இன்றைய இறக்கம் அவ்வளவு தானா?  நாளையிலிருந்து ஏற்றமோ?.. சரி, இந்த விலையிலேயே வாங்கி விடலாமா? அடுத்த சுற்று வந்து சிமிண்ட் விலை டி.வி. திரையில் தெரியப் போகிற மூன்று வினாடிக்குள் ஏறி இருக்குமா, இல்லை இன்னும் இறங்கியிருக்குமா என்று மனம் தவித்தது.

என்ன செய்யலாம் என்று யோசித்த வினாடியியே, பட்டென்று டிவியை வித்யா ஆஃப் செய்தாள்.  பேசாமல் எழுந்து போய் வாசல் பக்க ஜன்னல் வழி ரோடைப் பார்த்தாள்.  எதிர் வீட்டுக்குக் கொஞ்சம் தள்ளி, காய்கறி தள்ளு வண்டியில் ஜரூரான விற்பனை நடந்து கொண்டிருந்தது.   நேற்று தான் மார்க்கெட்டுக்குப் போயிருந்தாள். வீட்டு பிரிட்ஜில் இன்னும் நாலு நாட்கள் தாங்கற அளவுக்கு வேண்டியது இருந்தது.

வாசல் தாளிட்டிருப்பதை நிச்சயப்படுத்திக் கொண்டு பின்பக்கம் போய் கதவு திறந்தாள்.  குட்டியூண்டு தோட்டம்.  வாழை குலை தள்ளியிருந்தது. மல்லிகைக் கொடி அரும்பு விட்டிருந்தது.  பக்கத்தில் அரளி.  கொஞ்சமாய் கலர்க் கலர் மலர்ச் செடிகள்.  பூவாளியில் தண்ணீர் பிடித்து செடிகளுக்கு
வார்த்தாள்.  வாழை பக்கம் வந்து கொஞ்சமே கொத்தி விட்டு குளிக்கும் அறையிலிருந்து வந்து லேசாகத் தேங்கியிருந்த நீருக்கு போக்கு கொடுத்தாள்.  சகதியை வாரி அணையிட்டாள்.  கையலம்பி, பின்பக்கக் கதவைச் சாத்தி தாழ்ப்போட்டு விட்டு ஹாலுக்கு வந்த பொழுது சுவர்க் கடியாரத்தில் பத்தே கால்.

கை ரிமோட்டை நாடியது.  நிதானமாக திரையில் ஓடிய பங்கு வரிசை ஓட்டத்தை நோட்டமிட்டாள்.  அவள் வாங்க நினைத்திருந்த சிமெண்ட் பங்கு விலை இன்னும் முப்பது ரூபாய் இறங்கி, இன்றைய பரிவர்த்தனையில் மொத்தமாக நூறு ரூபாய் இறங்கியிருந்தது.  ஸ்டீலிலும் கணிசமான இறக்கம்.

தொலைபேசி எடுத்து பொறுமையாக எண்களை அழுத்தினாள்.  மறு பக்கத்தில் தொடர்பு கிடைத்ததும் தன் பெயரைச் சொல்லி தனக்கான வாடிக்கையாளர் எண்ணையும் சொன்னாள்.   சிமிண்டில் நூறு ஷேர்களுக்கும், ஸ்டீலில் ஐம்பது ஷேர்களுக்கும் ஆர்டர் கொடுத்தாள்.  அவள் டி.வி.திரையில் பார்த்த விலையில் இன்னும் ஐந்து ரூபாய் அளவில் இந்த இரண்டு நிறுவனங்களின் பங்கு விலை ஆர்டர் கொடுக்கையில் குறைந்திருந்தது.   அடுத்த வினாடியில் அவளுக்காக ஷேர்கள் வாங்கி விட்டதாக தரகர் அலுவலகத்தில் நிச்சயப்படுத்தினர்.  ஒருவழியாக நினைத்த வேலை முடிந்து விட்டது.

நிம்மதியாக தொலைபேசியை வைத்து விட்டு வித்யா டி.வி.யை நிறுத்தினாள்.

சமையலறை சென்று பாத்திரங்களை ஒழித்து வைத்து விட்டு, அவற்றில் கொஞ்சமே தண்ணீர் பிடித்து ஸிங்க்கில் தேய்க்கப் போட்டாள்.  வாஷிங் மெஷினை பாத்ரூம் பக்கம் நகர்த்தி வைத்து கூடையில் சேர்ந்திருந்த துணிகளை எடுத்துப் போட்டு ட்யூப் செருகி தண்ணீர் பிடித்தாள்.  வாஷிங் பெளடர் டப்பாவை எடுத்துப் பார்த்த பொழுது இன்றைய உபயோகத்திற்கான தூள் மட்டும் இருப்பது தெரிந்தது.  'நல்ல வேளை. அதுவானும் இருக்கிறதே' என்று நினைத்துக் கொண்டு, டேபிள் பக்கம் தொங்கிக் கொண்டிருந்த பேப்பர் பேடை எடுத்து, வாஷிங் பெளடர் வாங்க வேண்டுமென்று வாங்க வேண்டிய பொருள்கள் லிஸ்ட்டில் சேர்த்துக் கொண்டாள்.  அதற்குள் மெஷினில் துணிகள் முழுகும் அளவுக்கு தண்ணீர் நிறைந்திருந்தது.  குழாய்த் தண்ணீரை நிறுத்தி விட்டு, வாஷிங் பெளடர் போட்டு மிஷினை நாற்பது நிமிட டைமிங்கில் வைத்து ஸ்விட்சை ஆன் செய்தாள்.

ஸிங்க்கில் கிடக்கும் பாத்திரங்களை சேர்ந்து போவதற்குள் தேய்த்து விட்டால் ஒரு வேலை முடியுமே என்றிருந்தது.  அதைச் செய்து முடித்த பொழுது, தான் வாங்கிய பங்குகளின் விலை இப்பொழுது எப்படியிருக்கும் என்று பார்க்க மனம் அலைபாய்ந்தது.  அலம்பி வைத்த பாத்திரங்களை ஸிங்க்கின் மேல் சிமிண்ட் பலகையில் அடுக்கி வைத்து விட்டு டி.வி. பக்கம் வந்து ரிமோட்டை எடுத்தாள்.

ஐந்து வினாடிகள் காத்திருப்பில் சிமிண்ட் பங்கின் விலை திரையில் ஓடிய பொழுது அவள் வாங்கிய விலையை விட அறுபது ரூபாய்கள் ஏறியிருப்பது தெரிந்தது.  அறுபது ரூபாய் என்றால், ஆறாயிரம் என்று மனம் கணக்குப் போட்டது.  ஸ்டீலில் ஐம்பது ரூபாய் ஏற்றம்.  ஆக, அதில் இரண்டாயிரத்து ஐநூறு.  அந்த நேரத்தில் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத சந்தோஷம் மனசில் கொப்பளித்தது.  ரொம்ப அவசரப்பட வேண்டாம், க்ளோசிங் டைமில் என்ன நிலமை என்று பார்த்துக் கொள்ளலாம் என்று டி.வி.யை ஆஃப் செய்தாள்.

டீப்பாயின் மீது கத்தை பத்திரிகைகள் கிடந்தன. அவற்றைப் பார்க்கையிலேயே மனம் கசந்தது. சமீப காலமாக அவை எதையும் புரட்டிப் பார்க்கக் கூட அவளுக்கு ஆர்வம் இல்லாதிருந்தது.  நிஜத்தை எதிர்கொள்ளும் சாதனையில் மலரும் களிப்பு, கற்பனைக் கதைகள் கொடுக்கும் சந்தோஷத்தை விட மனசுக்கு மிக நெருக்கமாக இருப்பதை உணர முடிந்தது.

ஒரு பிரபல பல்கலைக் கழகம் சார்ந்த தொலைக்கல்வி மையத்தில் வணிக நிர்வாகம் சம்பந்தப்பட்ட வகுப்பில் வித்யா சேர்ந்திருந்தாள்.   நேற்று இரவு உட்கார்ந்து எழுதிய பதில் பேப்பர்களை தொலைக்கல்வி மையத்திற்கு அனுப்ப வேண்டியிருந்தது.  பங்குகள் வாங்கிய தொகைக்கான செக்கை மாலை கூரியர் தபாலில் அனுப்பும் பொழுது, அப்படியே கூரியரில் அவற்றையும் அனுப்பி விடலாம் என்று தீர்மானித்து அந்த பேப்பர்களை எடுத்து உறையில் இட்டு முகவரி எழுதி வைத்தாள்.  இன்னொரு கவர் எடுத்து காசோலை அனுப்புவதற்காக அதில் பங்குத் தரகர் முகவரியையும் எழுதி வைத்துக் கொண்டாள்.

வாஷிங் மெஷின் ஒலியெழுப்பிக் கூப்பிட்டது.  தண்ணீரை எடுத்து விட்டு அலசுவதற்காக நிரப்பி முடிக்கையில் வாசல் அழைப்பு மணியின் ரீங்கரிப்பு.  விட்டு விட்டான அதன் ஓசையிலேயே, கெளதம் தான் என்று தெரிந்து விட்டது.  வாஷிங் மெஷினை அலசுவதற்காக ஆன் செய்து விட்டு, போய் கதவு திறந்தாள்.

தலை நிமிர்ந்து அம்மாவைப் பார்த்து முறுவலித்தபடியே கெளதம் உள்ளே வந்தான்.

"என்ன, ஆஃப் இயர்லி ப்ரோகரஸ் ரிப்போர்ட் கொடுத்திருங்களா?..  நீ சிரிச்ச சிரிப்பிலேயே தெரிஞ்சிடுத்தே?" என்று பையனின் தோள் பக்கம் கை போட்டு அணைத்தாள்.

"க்குங்.." என்று கெளதம் சிணுங்கினான். "கண்ணை மூடிக்கோ.. கைலே தர்றேன்"

"இதோ, மூடிண்டாச்சு.." என்று விழி இமைகளை அரைகுறையாக மூடிக்கொண்டு, இரு கைகளையும் பரக்க விரித்தாள் வித்யா.

"ஐசலக்கா.. இப்படித்தான் கண்ணை மூடிப்பாளாக்கும்?.." என்று அவனே குட்டி விரல்களால் அவள் கண் பொத்தியபோது தாயுள்ளம் பொங்கி வழிந்தது.

"எவ்வளவு நேரம்டா, இப்படியே இருக்கறது?" என்று சிணுங்கினாள்.

"இந்தா.." என்று பிள்ளை கையில் வைத்ததும் தெரிந்து விட்டது, அவள் சொன்னது சரியாகத் தான் இருக்க வேண்டும் என்று.

"என்னடா, கெளதம்! இப்போ அம்மா கண்ணைத் தொறக்கலாமா?" என்று பிள்ளையிடம் அனுமதி கேட்ட பொழுது அந்த 'அம்மா'வில் இருந்த கொஞ்சல் அலாதியாக இருந்தது.

"ஓ. எஸ்.. இப்போ திறக்கலாம்.." என்று பிள்ளை அனுமதித்ததும், கண் திறந்து பார்த்தாள்.

ஆமாம், அந்த ரோஸ் நிற அட்டை, அவனது ப்ரோகரஸ் ரிப்போர்ட் தான்.  "என்ன, ரேங்க் டா.." என்று மடித்திருந்திருந்த அட்டையைப் பிரித்துப் பார்த்தவள், மலைத்தாள்..  மகிழ்ந்தாள்.

"பர்ஸ்ட் ரேங்காடா, செல்லக்குட்டி.." என்று வாரி அணைத்துக் கொண்டாள் வித்யா.

"அப்பா வந்ததும், வீட்லே, இல்லே, வெளிலே, ஹோட்டல்லே இதை செலிபரேட் பண்ணலாம்.. ஒரு மாறுதலா இருக்கட்டுமே.." என்று சொன்ன போது வேறேதோ நினைப்பு வந்து சிரிப்பு வந்தது அவளுக்கு.

(இன்னும் வரும்)
Related Posts with Thumbnails