மின் நூல்

Monday, August 19, 2024

குமுதம் 2

நாட்டுக்கு சுதந்தரம் கிடைத்த ஆண்டிற்கு அடுத்த ஆண்டு தான்  நமக்கும் குமுதம்  கிடைத்தது..  '48-லே எனக்கு ஐந்து வாது.    அதுனாலே அதெல்லாம் இன்னொருத்தர் சொல்லித் தான் தெரிஞ்சது.  குமுதத்தைப் பற்றி யார் எது சொன்னாலும் தெரியாத தகவல்ன்னா ரொம்ப ஆர்வத்தோடக் கேட்டுப்போம்.   சேலத்லே எம்.என்.ஆர். என்று ஒரு நியூஸ் ஏஜெண்ட்.  பெரியவர்.  எங்களுக்கு ரொம்பவும் பழக்கமானவர்.  அவர் தான் எங்களுக்குப் பத்திரிகைகள் எல்லாம் பற்றி சுவாரஸ்ய விஷயங்கள் பலதைச் சொன்னவர்.  குமுதத்தின் முதல் இதழ் விற்பனைக்கு வராம எல்லா மாவட்டங்களிலும் இலவசமாகவே  சப்ளை செய்யப்பட்டதாம்.  எம்.என்.ஆர். சொன்னது தான்.  இந்த மாதிரி நிறைய.  அவர் சொல்லச் சொல்ல, 'அட, அப்படியா?' என்று ஆர்வதோடக் கேட்டுப்போம்.


குமுதம்  நாலணா   விலையில்   மாதத்திற்கு மூன்று        இதழ்களாகத்தான் இருந்தது.  1,10,20 தேதிகள் என்று இருந்தாலும் ஓரிரண்டு நாட்கள் முன்னாடியே கடைக்கு வந்திடும்.  இதெல்லாம்  எனக்கே தெரியும்.  அட்டைலே குமுதம் பெயர் போட்ட இடத்துக்குக் கீழே, 'கெளரவ ஆசிரியர் -- ஆர்.எம். அழகப்பச் செட்டியார்' என்று போட்டிருக்கும்.  வழவழன்னு அட்டையில்  வர்ணம் வரைந்த அந்நாளைய குடும்பப்  பாங்கான பெண் சித்திரங்கள் இருக்கும்.  பெரும்பாலும் உள்ளடக்க விஷயம் எதையாவது தொட்ட சித்திரமாக அது இருக்கும்.   ஓவியர் வர்ணத்தின் இயற்பெயர் பஞ்சவர்ணம்.

குமுதத்தைப்   பிரித்ததும் முதலில் தலையங்கப் பகுதி.  இந்தத் தலையங்கப் பகுதிக்கு மேலே  நிலவு -- அல்லி மலர் தாங்கிய குமுதம் இலச்சனை குமுதம் பெயருடன் பதிந்திருக்கும்.  ஆரம்ப காலத்திலிருந்தே ஒரே பக்கத்தில் பொறுக்கி எடுத்த வார்த்தைகளோடு நறுக்குத் தெரித்தாற் போல வரிகளாய் தலையங்கப் பகுதி நீண்டிருக்கும்.  மொத்த தலையங்க விஷயத்தின்   எஃபெக்ட்டையும் கொண்டு வருகிற மாதிரி அந்தப் பகுதியின் கடைசி வரி அமைந்திருக்கும். ரொம்பவும் குழப்பமில்லாத  எளிமையான விஷயங்களே தலையங்கத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தாலும் அதுவும்  மிகத்  தெளிவாக இருக்கும்.   தலையங்கம் எழுதும் பொறுப்பு முற்றிலும்  ஆசிரியரின் வசம் இருந்தது என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.  

தலையங்கம் மாதிரியே சினிமா விமரிசனப் பகுதியும்.  பொதுவா பத்திரிகைக்காரர்களுக்கு பாஸ் வழங்குவது அக்காலத்து திரையுலக வழக்காமாக இருந்தது.  ஆனால் நம்ம குமுதம் மூன்றெழுத்துகாரருக்கோ இதெல்லாம் கட்டோடப் பிடிக்காது. டிக்கெட் எடுத்து சினிமா பார்த்து கறாராக விமர்சனம் எழுதுவதற்குப் பழக்கப்பட்டவர் அவர் என்று அறிந்திருக்கிறேன்.


திரைப்படங்களுக்கு விமரிசனம் எழுதுவதில்  குமுதம் பெற்ற க்யாதி இருக்கே,  சினிமா உலகமே 'குமுதத்திலே ஏதாவது கோணல் மாணலா எழுதிடப் போறாங்கய்யா'ன்னு கவனம் கொள்ளும்.
சினிமா விமர்சனத்திலே கட்டக் கடைசியா பஞ்ச் போல ஒரு வரி இருக்கும். எப்படியோ,  படமெடுத்தவர்களுக்கு  குட்டு போலவும் ஷொட்டு போலவும்  அது அமைந்து விடும்..   இப்படி குமுதம் திரைப்பட விமர்சனத்தோட கடைசி வரிக்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகள்.    'வெட்கக்கேடு'ன்னு ஒரு படத்திற்கு எழுதிவிட்டு  தமிழ்த் திரைப்பட உலகே அல்லோகலப்பட்டது.    
'கலைஞரின் வசனத்தால் சிவாஜி கணேசனின் நடிப்பு சிறப்புப் பெறுகிறதா, இல்லை சிவாஜி கணேசனின் உச்சரிப்பால் கலைஞரின் வசனங்கள் சிறக்கிறதா' என்பது விடை சொல்ல முடியாத விஷயம் என்று மனோகரா திரைப்படத்திற்கு குமுதத்தில் வந்த விமரிசனக் குறிப்பு நினைவிருக்கிறது.

இப்படி நிறைய.  நீண்டு விடும்.  அதனால் இதுவே போதும்.
       


குமுதத்தின் ஆரம்ப கால எழுத்தாளர்கள் இன்னும் நினைவிலிருக்கிறார்கள்.  அதில் முக்கியமானவர் பி.எம். கண்ணன்.  இவர் குமுதத்தில் எழுதிய 'முள்வேலி' என்ற தொடர்கதையை எனது இளம் பருவத்திலேயே ஆர்வத்துடன் படித்திருக்கிறேன்.  'நிலவே நீ சொல்' என்ற அவரது இன்னொரு நாவலும் மறக்காமல் நினைவில் படிந்திருக்கிறது.  

இன்னொருவர் மாயாவி என்ற பெயரில் எழுதியவர்.  பம்பாய் நகர சூழலில் இவர் எழுதிய தொடர் கதை ஒன்று வர்ணம் அவர்களின் சித்திரத்தோடு நினைவில் நிழலாடுகிறது.
 
ஹேமா ஆனந்த தீர்த்தனை குமுதம் எழுத்தாளர் என்றே சொல்லலாம்.    'தீப்பிடித்த  கப்பலில் அம்மணியும் நானும்' என்ற மலையாளத்திலிருந்து தமிழாக்கமாக குமுதத்தில் எழுதியது இவரை நினைத்தாலே என் நினைவுக்கு வரும்.

கோமதி சுவாமிநாதன் என்பரின் குடும்பப் பாங்கான நகைச்சுவை நாடகங்கள் அந்தக் காலத்தில் ரொம்ப பிரசித்தம்.  முதன் முதல் நாடக பாணிக் கதைகளை  வார இதழில் அச்சேற்றியது குமுதம் தான்.  

அதே மாதிரி குமுதத்தில் பிரசுரமான சித்திரத் தொடர்கள்.   சேற்றின் சிரிப்பு,  ஆறாவது விரல், தங்கச்சாவி  என்று தொடர்களின் பெயர்கள்  கூட நினைவில் தேங்கியிருக்கின்றன.  குமுதத்தில் பல விஷயங்கள் டீம் ஒர்க் தான்.  இவர் எழுதியது இது என்று பெயர் போடாத விஷயங்கள் அத்தனையையும் தயாரித்தது  எஸ்.ஏ.பி. அவர்களே.   போட்டோவைப் போட்டுக் கொள்ள வேண்டும், பெயரைப் போட்டுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையே லவலேசமும் இல்லாத வினோத மனப்போக்கு.   ஒருவிதத்தில் இது கூட மற்ற பத்திரிகை ஆசிரியர்களிடமிருந்து அவரை வித்தியாசப்படுத்தியது என்று சொல்லலாம்.

தங்கச்சாவி என்று பெயர் கொண்ட சித்திரத்தொடர் பற்றிச் சொல்ல வேண்டும்.  இந்தத் தங்கச்சாவி என்ற பெயர் ஒரு பாஸ்வேர்ட் போல.   கதையில் வரும்  தங்கத்துரை,  கச்சாலீஸ்வரன், விநாயகம்  என்ற மூன்று நபர்களின் பெயர்களின் ஆரம்ப எழுத்துக்களால் கோர்க்கப் பட்ட பாஸ்வேர்ட்.    தங்க+கச்சா+வி =  தங்கச்சாவி.    இது தான் பிற்காலத்தில்  கேள்வி--பதில் பகுதி 'அரசு' க்கு  அச்சாரம் போலிருக்கு.   அ-- அண்ணாமலை,  ர-- ரங்கராஜன்,  சு - சுந்தரேசன் = அரசு.   அப்போ இன்னொரு  துணையாசிரியர் புனிதன்  கேள்வி--பதில் பகுதிக்கு சம்பந்தமே இல்லாமல்  இருந்தாரா?; நிச்சயம் என் வாசிப்பு அனுபவத்தில் இல்லை என்றே எனக்குத் தெரிகிறது.  ஆனால் நம்ப இந்த சந்தேகங்களுக்கெல்லாம் பதில் சொல்ல விவரம் தெரிந்த யாரும் இல்லை என்றே சொல்லலாம்.

குமுதத்தின் இந்த சித்திரத்தொடர்கள் பற்றிய செய்திகள் எல்லாமே சமீப காலட்தில்  தான் இணையத்தில் பதிவாகிறது என்று கூடச் சொல்லலாம்.   அந்த அளவுக்கு இதையெல்லாம் விவரமாகச் சொல்ல குமுதம் சம்பந்தப்பட்ட  யாரும் இல்லாமலிருந்திருக்கிறார்கள் என்பது கூட வியப்பான ஓர் உண்மை தான்.

செய்திருந்தால்  ரா.கி.ர.  செய்திருக்க வேண்டும்.  குமுதமே அவராகிப் போனதில் பாவம் அவரிடமும் தான் நாமும் எவ்வளவு தான் எதிர்பார்க்க முடியும்?.. 

சொல்லுங்கள்.





****  ( மேலே இரண்டாவது குமுத அட்டைப்படத்தில் இருக்கும் நடிகர் யாரென்று
             தெரிகிறதா பாருங்கள் )

Saturday, August 17, 2024

குமுதம் 1

 க்கத்திலேயே ரயில்வே லெவல் கிராஸிங்.


நாங்கள் அந்த ர.லெ. கிராஸை ஒட்டிய  தனித்த மேடான பகுதியில் அமர்ந்திருந்தோம்.   

நாங்கள் என்றால் நானும்,  ரகுவும்.   ரகு யாரென்றால் என் அருமை நண்பன்.  உடன்பிறப்பு என்ற உறவு மலினமாகி விட்டதால் அதை உபயோகிக்க தயக்கம்.  உடன்பிறவா சகோதரன் என்று கொள்ள வேண்டுகிறேன்.  ரகு என்னை விட ஒரு வயது பெரியவன்.  இரண்டு பேருக்குமே ஒன்பதாவது வகுப்பு வாசிக்கிற பள்ளிப் பருவம்.  அந்த மேட்டுக்குக் கீழேயே அவன் வீடு இருந்ததால் இந்த இடத்தை எங்கள் சந்திப்புகளுக்குத் தேர்ந்தெடுத்திருந்தோம்.

வெள்ளைக் காகிதத்தை க்ளிப்பிட்டு செருகிய கார்ட்போர்டு அட்டை என் கையில்.  அதில் காகிதத்தில் 'பளீரென்று வெளிச்சம்.  60 வாட்ஸ் பல்பு தான்.  இருந்தாலும்..'  என்று நான் எழுதிக் கொண்டிருக்கையில்,  "நீளமா வேண்டாம்டா.  ஆரம்பம் ஒற்றை வரிலே இருக்கணும்" என்று திருத்தினான் ரகு.  இந்த  ஒற்றை வரி ஆரம்பம் நூல்  கண்டில் பிரிந்திருக்கிற ஒரு முனையை பற்றி இழுக்கற மாதிரி.  

நாமும் எதையாவது எழுதிப் பார்க்க வேண்டும் என்ற தாபம் கொண்டவர்களின் நுழைவு வாயில் தான் இந்தப் பதிவுலகம் என்பது நிச்சயம்.  இந்தப்  பதிவுலகில் சிலர் தம் இளம் வயதில் கையெழுத்துப் பிரதி நடத்தி தங்கள் எழுதும் ஆசையைத் தீர்த்துக் கொண்டிருப்பார்கள். 

நானும் ரகுவும் கூட எங்கள் பள்ளி பருவத்தில் அதைத் தான் செய்தோம்.  அதற்காகத்தான் அப்பொழுது  எழுதிக் கொண்டிருந்தோம். கையெழுத்துப் பிரதியில் நிறைய ஐட்டங்கள்.  ஒரு  தொடர்கதை வேறே..  கலர் பென்சிலில் படம் வரைய சோமு இருந்தான்.  சோமுவைத் தவிர இன்னும் நாலைஞ்சு பேர். ஆளுக்கொரு  வேலை.  ஒவ்வொரு மாத ஆரம்பத்திலும் எங்கள் 'புரட்சி' வெளிவந்து விடும்.  

நாங்கள் சைக்கிளில் வீடு வீடாக விஜயம் செய்து  நாவல்கள்,  மாத-- வார பத்திரிகைகளை வாசிக்கக் கொடுக்கும் லெண்டிங் லைப்ரரி வைத்திருந்தோம்.  சர்குலேஷன்லாம்  தூள் கிளப்பும்.  சேலத்தின்  தெருக்கள் நெடுகிலும் எங்கள் வாடிக்கையாளர்கள் இருந்தார்கள்.  அந்தக் காலத்து வீட்டுப் பெண்மணிகளில் பலரின் பொழுது போக்கு பத்திரிகை வாசிப்பு என்றிருந்தது எங்கள் சர்க்குலேஷனுக்கு ரொம்பவும் அனுகூலமாக இருந்தது.  ரொம்ப வேண்டப்பட்டவர்கள் சிலருக்கு இந்தக் கையெழுத்துப் பிரதியையும் 
சேர்த்துக்  கொடுப்போம்.  எங்கள் எழுத்து ரசனையை அவர்களும் தெரிந்து கொள்ளட்டுமே என்று தான்.   இப்படி ஆரம்பித்தது  "உங்கள் கையெழுத்துப் பத்திரிகையில் நாங்களும் எழுதலாமா?" என்று ஓரிரண்டு மகளிர் வாடிக்கையாளர்களும் கேட்ட பொழுது இரட்டை மடங்கு சந்தோஷத்தோடு ஒப்புக் கொண்டது,   எங்களுக்குள்  பத்திரிகை வாசக - எழுத்தாளர் குழாம் ஒன்றே செயல்படுவதற்கு ஆதர்சமாக இருந்தது.  அதெல்லாம் பற்றி இந்தப் பகுதியில் வேண்டாம்.  வேறொரு சமயம் அதற்கென்று வாய்க்கும் பொழுது தனிக் கச்சேரியாக அதை வைத்துக் கொள்ளலாம்.

பண விஷயங்களில் சிக்கலே இல்லை.  எப்படியோ புரட்டி விடுவோம். எங்கள் வாடிக்கையாளர்களின் அதீத ஆதரவு எங்களுக்கு எப்பொழுதுமே இருந்தது.
எந்த விதத்திலும்  கையைக் கடிக்காமல் காசு வந்து  கொண்டிருந்ததால் எங்களுக்கு இதெல்லாம் அந்த வயதில் இனிமையான பொழுது போக்காக இருந்தன.

'கையெழுத்துப்  பிரதியை  இவ்வளவு கஷ்டப்பட்டு தயாரிக்கிறீர்களே..  எம்ஜிஆருக்கு அனுப்பி வையுங்கள்.  பெரிய  அளவில்  ஏதாவது  உதவி செய்வார்' என்று யாரோ ஒரு பெரியவர் சொல்லி பதிவுத் தபாலில் ஒரு பிரதியை ரொம்ப யோசனைக்குப் பிறகு  அனுப்பி வைத்தோம்.  அனுப்பிய ஒரு வாரத்தில்,  முகவரி பகுதியில் சிவப்பு இங்க் கோடுகள் எல்லாம்  குறுக்கு நெடுக்காக இழுத்து,  'Return to sender' என்று திரும்பி வந்து விட்டது. 

எங்களுக்கு ஒண்ணும் புரிலே.  "சாதாரண தபாலில் அனுப்பக் கூடாதா?  இந்த மாதிரி ரிஜிஸ்தர் தபாலாம் என்னவோ ஏதோன்னு சிலர் வாங்க மாட்டாங்க..' என்று எங்கள் லெண்டிங் லைப்ரரி கஸ்டமர் ஒருத்தர்.  'ஆரெம்வி அகழியைத் தாண்டி கோட்டைக்குள் போகணும்னா கஷ்டம்தான்.  அந்த என்ட்ரி லெவல்லேயே திருப்பப் பட்டிருக்கும்' என்று இன்னொருத்தர்.  'ஏம்ப்பா..  ரோஜா, மல்லிகைன்னு ஏதாவது சாதாரணப் பெயரா பத்திரிகைக்கு வைக்கக் கூடாதா? அதென்ன புரட்சி, புடலங்காய்லாம்?.,,   சில பேருக்கு இந்தப் பெயரெல்லாம் அலர்ஜி.. தெரியுமோ'ன்னு இன்னொருத்தர்.

எது  வேணா காரணமா இருக்கட்டும்.  நாங்க கஷ்டப்பட்டு எழுதின கையெழுத்துப் பிரதி எங்க கைக்கு உருப்படியா வந்து சேர்ந்ததிலே கிடைத்த சந்தோஷம் அந்தத்  திரும்பி வந்ததை ஒரே நாளில் மறக்கச் செய்தது.  இனிமே இந்த மாதிரி தப்பெல்லாம் பண்ணிடக் கூடாதுன்னு அப்பொழுதே ஒரு மனதாக ஒன்று கூடி சூளுரைத்துக் கொண்டோம்..

முக்கியமான விஷயத்தைச் சொல்லாம எங்கேயெல்லாமோ எழுத வந்தது இழுத்தடிக்கறது.  எதை எழுதணும்னாலும்  நறுக்குத் தெரிந்தாற் போல ஒற்றை வரி ஒண்ணுலே ஆரம்பிச்சு ஆரம்பித்ததின் முன்னே, பின்னே என்று விஷயத்தை ஓட்டற சாமர்த்தியத்தை அந்த வயசிலேயே எங்களுக்குக் கற்றுக் கொடுத்தது  குமுதம் பத்திரிகை ஆசிரியர் எஸ்.ஏ.பி. தான்.

இப்படி எழுதற கலைலே அவர் கற்றுக் கொடுத்த பாடங்களையெல்லாம் சொல்றதுக்குத் தான் இந்தப் பகுதி..  அப்படியே அவர் பேராசிரியராய் இருந்த அந்த சர்வகலாசாலை 'குமுதம்' இதழ் பற்றியும்.  சரியா?..  சரி..  அந்த  ஒற்றை வரி ஆரம்பத்திற்கு வருவோம்.

அவரோட 'நீ'  என்கிற ஒற்றை எழுத்து தலைப்பிட்டிருந்த நாவலே---

பொட்டென்று மணிக்கட்டில் விழுந்தது ஒரு மழைத்துளி   -  என்று தான் ஆரம்பிக்கும்.

மிஞ்சி மிஞ்சிப் போனா  எனக்கு அப்போ  14 வயது தான் இருக்கும். ஏறக்குறைய  எங்கள் ஜமாவே இந்த வயசொத்தவங்க தான்.   ரகுக்கும் எனக்கும் பத்திரிகை வாத்தியார் எஸ்.ஏ.பி. அவர்கள் தான்.  எப்படிலாம் எழுதணும்ங்கறதைக் கத்துக் கொடுத்த மானசீக குரு.  ஏகலைவர்களாக கற்றோம்.   அவர் தொடர்கதை எழுதறார்ன்னா  எங்களுக்கு பாட வகுப்பு ஆரம்பித்த மாதிரி தான்.  

போதாக்குறைக்கு எங்க சர்குலேஷன் லைப்ரரிலே  குமுதம் ரிலீஸாகும் நாளன்னைக்கே நாலைந்து வீடுகளில் 'என்ன, குமுதம் கொண்டு  வர்லையா'ன்னு கேப்பாங்க..  அதனாலே வாரா வாராம் குறைந்தபட்சம் மூணு குமுதமாவது வாங்குவோம்.  ஆ.வி.  ரெண்டு வாங்குவதே சர்க்குலேஷனில் எந்தக் குழறுபடியும் ஏற்பட்டு விடாமல் சமாளிக்கப் போதுமனதாக இருக்கும்.

குமுதம் வந்த அன்னிக்கே கடை வாசல்லேயே நின்னு விடுவிடுவென்று மேலோட்டமா ஒரு  பார்வை பார்த்தாத் தான் மனசுக்குத் திருப்தி.   அப்பவே அந்த இதழ்லே என்னன்ன இருக்குன்னு மனசுக்கு மனப்பாடம் ஆவிடும் . குமுதம்ன்னா அப்படியொரு கிரேஸ்.
 
அதனாலோ  என்னவோ எங்கள் கையெழுத்துப் பிரதியும் கிட்டத்தட்ட
குமுதம் சாயலிலேயே உருவானது.   'புரட்சி' என்ற பத்திரிகையின் பெயரைக் கூட முகப்பு அட்டையில் அச்சு அசலாக 'குமுதம்' மாதிரியே எழுதி சந்தோஷப்பட்டோம்.

(வளரும்)

Thursday, August 15, 2024

வெங்கட் சாமிநாதன் நினைவில்...

ரு பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வெங்கட்சாமிநாதனின் கட்டுரைகள் பலவற்றை பிரமிப்புடன் படித்திருக்கிறேன்.

இலக்கியம்,இசை,நடனம்,நாடகம்,ஓவியம்,சிற்பம்,சினிமா என்று எதையும் விட்டுவைக்காமல் நிறைய எழுதியிருக்கிறார். ஒவ்வொரு துறையிலும் அவ்வப்போது பேசப்படுபவபற்றி தன் கருத்து என்ன என்பது பற்றி கொஞ்சம் கூட ஒளிவு மறைவோ, எவ்வித சார்போ இன்றி பதிந்தவர் விமரிசனக் கலைஞர் வெங்கட் சாமிநாதன் அவர்கள்.

சமீபத்தில் அவரது நூல் ஒன்றை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2002 லிருந்து 2004 வரை என்று கூடச் என்று சொல்லலாம், பல்வேறு இலக்கிய பத்திரிகைகளில் அவர் எழுதிய கட்டுரைகள் நூலாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. "கலை உலகில் ஒரு சஞ்சாரம்" என்பது புத்தகத்தின் பெயர். சென்னை சந்தியா பதிப்பகத்தார் நூலை வெளியிட்டிருக்கிறார்கள். அந்தப் புத்தகத்திலிருந்து 'கலை உணர்வுகளும் எதிர்வினைகளும்' என்னும் தலைப்பிட்ட ஒரு கட்டுரையின் சில பகுதிகள் இவை. ஆற்றொழுக்காக அவர் விவரிப்பதை தொடர்ச்சி குலையாமல் படிப்பதே ஓர் அனுப்வம். என் வார்த்தைகளில் அதை எடுத்துச் சொல்லப் போய் அந்த அழகு கெட்டு விடுமோ எங்கிற அச்சத்தில் அப்படியே அவர் உணர்ந்ததை வரிக்கு வரியாய், உங்கள் ரசனைக்கு...

இனி வெங்கட்சாமிநாதன் அவர்களின் வார்த்தைகளில்:


"பிக்காஸ்ஸோவின் கலைப்பயணம், நிறைந்த மாறுதல்களைக் கொண்டது. முற்றிலும் வித்தியாசமானது எனத்தோன்றும் எண்ணற்ற கட்டங்களைக் கொண்டது. தன் கலை உண்டு தானுண்டு என்று இருந்தவர் போலத்தோன்றினாலும் நாட்டின் நிகழ்வுகள், சரித்திர மாற்றங்கள் அவரை வெகுவாகப் பாதித்ததுண்டு. அப்பாதிப்புகளுக்கு அவரது அங்கீகாரமும் நிராகரிப்பும் அவரது வாழ்க்கைச் செயல்பாடுகளில், கலைப்படைப்புகளில் தடம் பதிக்கும். அவரது நிலைப்பாடு வெளிப்படையானது. பதிவு பெற்றது. தான் பிறந்த ஸ்பெய்ன் நாட்டில் ஜெனரல் ஃப்ராங்கோ இருக்கும் வரை காலடி எடுத்து வைக்க மாட்டேன் என்றவர். அந்நாளைய கம்யூனிஸ்ட் பார்ட்டியோடு அனுதாபம் கொண்டவர் என்றாலும், அவருடைய கலை உலகத்திற்கும்,கம்யூனிஸ்ட் பார்ட்டியின் கலைக்கொள்கைகளுக்கும் ஸ்நானப் ப்ராப்தி கூடக் கிடையாது. இரு தரப்பாருக்கும் இதில் சமரசம் சொல்லப்படாது நிர்ணயித்துக் கொள்ளப்பட்டது.

க்யூபிஸம் என்ற பெயர் ஓவிய உலகில் பிரஸ்தாபிக்கப்படுவதற்கு முன்னாலேயே 1907-ல் Demoiselles d'Avignon தீட்டப்பட்டது.(இதைத் தமிழ் எழுத்துக்களில் எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. நானும் கஷ்டப்படவில்லை) அதற்கு முன்னர், பாரிஸ்க்கு தன் 18-19வது வயதில் வருவதற்கு முன்னர் அவர் பல கட்டங்களை கோயா போலவும், வ்ளாமிங்க் போலும் வண்ணங்களை, ரூபங்களைக் கையாண்டார். இம்ப்ரெஸனிஸமும் தலைகாட்டியதுண்டு. நலிந்த, அசிங்கப்பட்ட மனிதர்கள், விலைமாதர்கள், பிச்சைக்காரர்கள் இவரது சித்திரங்களில் நிறைந்திருந்தனர். அது தாண்டி நீல வண்ணக்கட்டம் என ஒரு காலம். பின் சுமார் 10 ஆண்டுகள் 1905 லிருந்து 1915 வரை, மிகுந்த மாற்றங்கள். பாரிஸ் கலைச்சூழலிலும் பிக்காஸோவின் கலைச்செயல்பாடுகளிலும் நிகழ்ந்தன. பல சைத்ரிகர்கள், ஒன்றிணைந்தும், ஒன்று கூடியும் (நட்புறவிலும், தம் கலை அணுகுமுறைகளிலும்) எண்ணற்ற மாற்றங்களை நிகழ்வித்தனர். அப்போது இவர்கள் எல்லோருக்கும் ஆதரவாக இருந்தவர் அபோலினேர் என்ற கவிஞர். அக்காலகட்டத்தில் அவரும் ஒரு சக்தி. ஒருவருக்கொருவர் சண்டையிட்டுப் பிரிந்த இணைந்த சைத்ரிகர்கள் எல்லோருக்குமாக அவர் வாதிடுபவர்.

ஆனால் அவர் முதன்முறையாக பிக்காஸோவின் சித்திரத்தின் முன் நின்றபோது அதோடு தன் ரசனையை உறவுபடுத்திக்கொள்ள தடுமாறினார். அவர் பழகியது, ரசனையை வளர்த்துக் கொண்டது, பழைய கட்டடங்களில் வளர்ந்த ஓவியங்களோடு. இப்போது டிலானே, லெகர் பிக்காஸோ போன்றோர் ஓவியங்களின் ரசனையை அவர் எதிர்கொள்ள வேண்டி வந்தது. ஒரு புறம் இந்த ஓவியங்கள் அவரைக் கவரவும் செய்தன. ஆனால் அவர் வளர்த்துக்கொண்ட ரசனைக்கு அவை சவாலாகவும் இருந்தன.

ஆனால் அடிப்படையான விஷயம், சவால் இருந்தாலும், அவை அபாலினேவைக் கவர்ந்தன. ஏன், எப்படி, எந்தக் கோட்பாட்டுப் பார்வையில் என்ற கேள்விகள் எழாமல் சட்டென அவர் Sensibilityக்கு உறவு கொண்டவை ஆயின.

ஆனால் இது ஒரு ஓவியம். முதலில் எதிர்கொள்ளும் ஒரே ஒரு ஓவியம் பற்றி அடைபட்டுப் போகும் விஷயம் அல்ல. தொடர்ந்து பிக்காஸோ, தன் வரைந்த மாற்றங்களால், ஒவ்வொரு முறையும் அபாலினேரின் மாறிவரும் ரசனைகளுக்கும் ஒவ்வொரு கட்டத்திலும் பிக்காஸோ சவாலாகவே இருந்து வந்தார். இது ஒரு தொடர்ந்த ஓட்டப்பந்தயம் போல பிக்காஸோ முன் ஓட இவர் பின்னால் தொடர்வது போல, பிக்காஸோ அந்த பத்துவ்ருடங்களில் செய்துள்ள மாற்றங்களை கொணர்ந்த் புதுமைகளைத்தான் பின் வந்த அறுபது எழுபது வருடங்கள் மெல்ல மெல்ல ஜீரணித்துக் கொண்டிருந்தது என்று சொல்வார்கள். 1907-ல் இன்றும் வந்திராத க்யூபிஸித்தின் தன் காலைப் பதித்த பிக்காஸோ பின் அதை விட்டு சீக்கிரம் நகர்ந்துவிட்டார். ஆனால் பாரிஸூம் ஐரோப்பிய ஓவிய உலகமும் ஓவியர்களும், க்யூபிஸத்திலே வெகு வருடங்கள் தொடர்ந்தனர். தன் நீலவண்ண கட்டத்தைத் தவிர, வேறு எந்த கட்டத்திலும் பிக்காஸோ வெகுகாலம் தொடர்ந்து இருந்ததில்லை.

ஓவியர்கள் தமக்குள் தமது ஓவிய அணுகுமுறை பற்றி சண்டை இட்டுக்கொள்வார்கள். பத்திரிகை விமர்சகர்கள் தாக்குவார்கள். ஆனால் தானே இந்த மாறிவரும் சூழலுக்கு ஈடுகொடுத்து வர இயலாத நிலையிலும் தமக்குள் சண்டை இடும் இவர்கள் எல்லோர் சார்பிலும் நீங்கள் எப்படி பரிந்து பேச முடிகிறது? என்ற கேள்வி அபாலினேரைத் தாக்கியதுண்டு. அவர் சொல்வார்: "அவர்கள் நியாமற்றுத் தாக்கப்படுகிறார்கள். அதனால்தான் நான் அவர்களுக்காக வாதாடுகிறேன்" என்பார்.

புதிய சோதனைகள் புரிந்து கொள்ளபடாமல் இருக்கலாம். ஆனால் அவை ஒரு தளத்தில் உறவு கொள்கின்றன. Sensibility என்ற தளத்தில். அதனால் தான் எவ்வளவு மாற்றங்கள் எவ்வளவு விரைவாக நிகழ்ந்தாலும்,தன் புரிதலுக்கு எவ்வளவு சவாலாக இருந்தாலும் அபாலினேர் அவர்களோடு உறவு கொள்ள முடிந்தது. ஓவிய உலகிலும், சுற்றியுள்ள சூழலிலும் நிகழும் மாற்றங்களையும் அவாலினேர் தன் கவிதைகளிலும் பிரதிபலிக்க முடிந்திருக்கிறது.

இந்த புரிதல் என்ற முரண்படும் தளமும், கலை உணர்வு என்ற உறவுபடும் தளமும் உடன்படுதல் ஒரு விசித்திரமும் புதிரும் ஆன விஷயம்.

இப்போது சில நாட்களுக்கு முன் தினத்தாட்களில் அடிபட்ட பெயர் த்யேப்மேஹ்தா என்னும் ஓவியரது எந்த இந்திய ஓவியத்திற்கும் கிடைக்காத ஒரு பெரிய தொகை த்யேப் மேஹ்தாவின் பழைய ஓவியம் ஒன்றிற்குக் கிடைத்துள்ளது. ஒன்றரைக் கோடியோ, மூன்று கோடியோ எனக்கு சரியாக ஞாபகமில்லை. அது கோடிக்கணக்கில் என்பது மட்டும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. "நான் பத்து ரூபாய்க்கும் வித்திருக்கிறேன். கோடிக்கணக்கில் உலகச்சந்தையில் விற்பனையான அந்த ஓவியம் தீட்டிய காலத்தில் என்று சொன்னார இல்லை இந்த ஓவியம் தான் ரூ.10க்கு அவர் ஒரு காலத்தில் விற்றாரா தெரியவில்லை. அந்த ஓவியத்தின் சொந்தக்காரர், ஏலம் போன சமயம், டைம்ஸ் ஆஃப் இந்தியா, 3 கோடி ரூபாய் யாருக்குப் போகும்? தெரியாது.

நான் சொல்ல வந்த விஷயம் அதுவல்ல. நான் த்யேப் மேஹ்தாவை அறியவந்தது அறுபதுகளின் கடைசி வருடங்களில் என்று ஞாபகம். அப்பொழுது அவரது ஓவியங்கள் கருப்பு அல்லது dark grey. மனிதக்கூட்டங்கள், பட்டினியால் வாடி மெலிந்த உருவங்கள், சோகம் பீடித்த முகங்கள், குவிந்த புருவங்கள், கீழ்நோக்கிய கண் இமைகள், ஒருகண மகிழ்ச்சி அறியாத ஜிவன்கள் -- "கூடல்" என்ற பெயரில் ஒரு documentary--யும் தயாரித்திருந்தார். நான் தாமதமாகப் போனதால் படம் பார்க்க முடியவில்லை. ஆனால் இம்மாதிரியான கண்காட்சி முழுதிலும் சோகம் அப்பிய முகங்களையே ஓவியங்களாகத் தீட்டியிருந்த த்யேப் மேஹ்தா பற்றி இப்ராஹீம் அல்காஷி சொன்னார்: "இவற்றில் நாம் இன்றைய வியத்நாமைப் (60s) பார்க்கலாம். பஞ்சத்தில் வாழும் பிஹார் மக்களைப் பார்க்களாம். த்யேப் மெஹ்தாவின் குரல் உலக்மெங்கிலும் வதைபடும் மக்களின் சோகக்குரல். த்யேப் மேஹ்தா பேசும் மொழி உலக மொழி" என்ற ரீதியில் தன் விளக்கங்களைத் தந்தார். உடன்படலாம். படவேண்டும். அந்த உருவங்களும், ஓவியங்களும் தீட்டப்பட்ட வண்ணங்களும் அல்காஹியின் பார்வையை சாட்சியப்படுத்தின.

ஆனால் த்யேப் மேஹ்தாவின் இன்றைய ஓவியங்கள் அங்கிருந்து வெகுதூரம் நகர்ந்து வந்து விட்டன. இப்போது அவர் ஓவியங்கள் மென்மையான,கண்களுக்குக் குளிமை தரும் வண்ணங்கள்.ஆனால் உருவங்கள் கொடுத்த உருவங்களானாலும், சிதைந்த உருவங்கள் நிலைகொள்ளாது தடுத்துவிடும் உருவங்கள். அந்தரத்தில் பறக்கும் கால்பாவாத உருவங்கள். மனித ஜீவனின், இன்றைய மனிதனின் இயல்பின் முழுமை பெறாதவையும் கூட என்கிறார் த்யேப் மேஹ்தா. சரி புரிகிறது. ஆனால் ஓவியத்தின் மிருதுவான, கண்ணைக் குளிர்விக்கும் வண்ணங்கள்?.. இவ்வண்ணங்கள் எப்படி மனித ஜீவனின் தவிப்பைச் சொல்லும்? என்று கேட்டால், த்யேம் மேஹ்தா, தன் ஆரவாரமற்ற மெல்லிய ஸ்வாபீகமான குரலில், "ஒரு ஓவியனின் வண்ணத் தேர்வு அவனுடைய உரிமை. இதற்கு இணை வர்ணம் தான் என்று ஏதும் கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது. இது என் தேர்வு" என்கிறார்.

"நான் சந்தைக்காக ஓவியம் தீட்டவில்லை.என் ஓவியங்கள் சந்தையில் இவ்வளவு மதிப்பு பெறும் என்று நினைக்கவில்லை. என் இயல்பில் என் இஷ்டத்திற்கு ஓவியங்கள் வரைகிறேன். பின் நிகழ்வுகளை முன் தீர்மானித்து நான் செயல்படுவதில்லை" என்கிறார். அதுவும் உண்மை.

இருப்பினும், வண்ணங்களின் மொழியும், உருவங்களின் மொழியும் நாம் இதுகாறும் வளர்த்துக்கொண்ட ரசனையில் முரண்படுவது ஏன்?

இங்கு நிறையவே ஏன்?களைக் கேட்டுவிட்டேன்."

--என்று முடிக்கிறார் வெங்கட் சாமிநாதன்

--இப்படி திரு. வெங்கட்சாமிநாதன் பலதுறைகளில் கண்டுணர்ந்த அர்த்தபூர்வமான அனுபவங்களை இப்பொழுது படிக்கையிலும் நாமும் அந்தக் காலத்திற்கும், சம்பவங்களுக்கும் இழுத்துச் செல்லப்படுவது மட்டுமில்லை, நம்மையும் அவ்வுணர்வுகளுக்கு ஆட்படுத்தும் சக்தி வெங்கட்சாமிநாதனின் எழுத்துக்களில் படிந்திருப்பதையும் உணரலாம்.

நன்றி: வெங்கட்சாமிநாதனின் "கலை உலகில் ஒரு சஞ்சாரம்"

புத்தகம் கிடைக்குமிடம்:

சந்தியா பதிப்பகம்,
நீயூடெக் வைபவ் பிளாட்ஸ்
77, 53வது தெரு,
அசோக் நகர். சென்னை-- 600 083
தொலைபேசி: 24896979/ 5585570
இணைய தளம்: www.sandhyapublications.com

Sunday, August 11, 2024

இது ஒரு தொடர்கதை -- 16

                                             

"எங்கே விட்டேன்?" என்றார் புரந்தர தாசர்.

அவர் அப்படிக் கேட்டது ரொம்ப நாளைக்கு முன்னாடி பாதியில் விட்ட
பேச்சை விட்ட இடத்திலிருந்து தொடர்வதற்கு கேட்கும் கேள்வி போலிருந்தது.

"'சில பேருக்கு இருக்குங்கறதை இல்லேன்னு நிரூபிக்கறதிலேயும், இல்லேங்கறதை இருக்குன்னு நிரூப்பிக்கறதிலேயும் அதீத ஆசை உண்டு. அப்படிப்பட்டவங்க..'ன்னு சொன்னதோடு முடிஞ்சிருக்கு, அப்பா..    இப்போ  அதுக்குத் தொடர்ச்சியா சொல்லு.." என்றாள் வித்யா.

"சொல்றேன்.." என்று லேசாக செருமிக் கொண்டு தொடர்ந்தார் புரந்தர தாசர்.
"அப்படிப்பட்டவங்க இளம் வயசிலே இருந்தே சாமி நம்பிக்கை இருக்கறவங்களாகவோ இல்லை இல்லாதவங்களாகவோ இருந்தா கேக்கவே வேணாம்.  ஏன்னா, இன்னிக்கு வரை இல்லேனும் இருக்குன்னும் லாவண்ய  கச்சேரி நடத்திண்டிருக்கிற விஷயம் இந்த சாமி சமாச்சாரம் தான்.  நீயும் இந்த விஷயத்தைத் தான் சுத்தி சுத்தி வர்றே.. அதுக்குத்தான் கேக்கறேன்.  சமீபத்திலே சுற்றுலா மாதிரி வேற ஊர் எதுக்கானும் போனியா?.. அங்கே போய் ஏதானும் கோயிலுக்குப் போனியா?" என்று நேரடியாகவே மோகனிடம் கேட்க, தான் எழுதுவதை நிறுத்தி விட்டு தன் அப்பாவின் கேள்விக்கு அவன் என்ன சொல்லப் போகிறான் என்கிற ஆர்வம் தனக்கும் ஏற்பட்ட தோரணையில் மோகனைப் பார்த்தாள் வித்யா.

"போனேன்.  ஆனா அதை சமீபத்லேன்னு  சொல்ல முடியாது.. ஆறு, ஏழு மாசத்துக்கு  முந்தி."

"அதெல்லாம் சமீபத்திலே தான்.  மனசிலே நினைவுகள் தேங்கறத்தைப்  பத்தி இந்தக் கணக்கு.  ஆறேழு மாசம்லாம் இந்த  கணக்குக்கு ரொம்ப சமீபத்திலே தான்.  சொல்லு..  எந்த ஊர்?  எந்தக் கோயில்?,,"

"கும்பகோணம் சார்.  சொந்தக்காரங்க வீட்டுக் கல்யாணம்.  அதுக்குப்  போயிருந்தேன்.  கும்பகோணத்துக்குப் போய் சாமி கோயிலுக்குப் போகாம யாரானும் வருவாங்களா?"

"சொல்லு.. எந்தக் கோயில்?.."

"கும்பேஸ்வரர் கோயில் சார்."

"ஆதி கும்பேஸ்வரர் கோயிலா?.. ஆஹா.. என்ன பிர்மாண்ட கோயில் அது?" என்று வியந்து அண்ணந்து மேலே பார்த்தபடி  கைகூப்பினார் புரந்தர தாசர்.   மனசில் கும்பேஸ்வரரை வரித்துக் கொண்டு  கும்பிடுகிற மாதிரி இருந்தது அவரது செயல்.

"நீ கோயிலுக்கு போன  அன்னிக்கு நடந்தையெல்லாம் கொஞ்சம் ஞாபகப்படுத்திச் சொல்லு.. எழுத்தாளன் இல்லியா, அதனாலே அன்னிக்கு நடந்ததெல்லாம் லேசா முயற்சி செஞ்சாலே ஒன்னோட ஞாபகத்துக்கு வரும்ன்னு நினைக்கிறேன்.." என்று சொல்லிவிட்டு மோகனைக் கூர்மையாகப்  பார்த்தார் புரந்தரதாசர்.  உடனே சொல்ல விட்டுப் போனது எதுவோ திடீர்ன்னு நினைவுக்கு வந்த மாதிரி, "ஆங்! எழுத்தாளன்ங்கறதாலே இன்னொரு இடைஞ்சலும் உண்டு.  உன் நினைவிலிருந்து எடுத்துச் சொல்ல முனையும் பொழுது  நீ சொல்ற விஷயங்கள்லே உன்னோட கற்பனை கலக்கறத்துக்கும் சாத்தியம் உண்டு.  அதுனாலே அந்த இடையூறு இல்லாம பாத்துக்கோ.  என்ன நடந்ததோ அதை மட்டும் சொன்னாப்  போதும்.." என்று அவர் சொன்ன பொழுது அடக்க முடியாமல் பீரிட்டு வந்த சிரிப்பை மிக சிரமத்துடன் மோகன் அடக்கிக் கொண்டான்.

அதே சமயத்தில் ஒரு விஷயத்தை ஆராய்வதில் அவருக்கிருக்கும் ஈடுபாட்டை நினைத்து மனசுக்குள் வியந்து கொண்டான்.  அதையே சிலாக்கிக்கிற மாதிரி, "கரெக்ட், சார்! அந்த எச்சரிக்கையோடையே சொல்றேன்.." என்று அன்று நடந்ததையெல்லாம் நினைவுக்குக் கொண்டு வர்ற பாவனையில் முயற்சித்து மோகன் சொல்ல ஆரம்பித்தான்.

"அன்னிக்கு கோயிலுக்குள்ளே நுழைஞ்சவுடனே எனக்கேற்பட்ட ஆச்சரியம்
என்னன்னா, க்யூவ்லே நின்னு தான் தரிசனம் பண்ண வேண்டியிருக்கும்ங்கற
எதிர்ப்பார்ப்புலே ரொம்ப கூட்டமா இருக்கும்ன்னு நெனைச்சேன். ஆனா என் நினைப்புக்கு மாறா கோயில்  ஜன நெரிசலே இல்லாம இருந்தது. காலம்பற எட்டு மணி அளவிலே தான்  இருந்ததாலே, இனிமே தான் ஜனங்க தரிசனத்துக்கு வருவாங்க போலிருக்குன்னு நெனைச்சிண்டேன். கர்ப்பகிரகத்துக்கு வெளிலே இருக்கற பிராகாரத்லே  நாலைஞ்சு பேர் தான் தேறும்,  பிரதட்சணம் பண்ணிகிட்டு  இருந்தாங்க..

"அவ்வளவு பிர்மாண்ட பிராகாரத்திலே இப்படி அங்கங்கே நாலைஞ்சு பேர் ஊர்ந்திண்டிருக்கறது அந்த பிர்மாண்டத்திற்கு அன்னியப்பட்டு 'ஹோ'ன்னு இருக்கற மாதிரி  இருந்தது.  தரைலே பெரிய  பெரிய பூக்களைச் சுமந்திண்டு மாக்கோலம்; போட்ட  கை விரல்களுக்கு  மோதிரம் தான்  போடணும்;  கொஞ்சம் பிசிறு இருக்கணுமே?.. ஊஹூம்.. அவ்வளவு நேர்த்தியா.  பிராகார சுற்றில் கொஞ்சம் உயர்த்திக் கட்டிய கல்மேடை பூரா வரிசை கட்டி லிங்கங்கள். கல்தூண்களில் பின்னங்கால் ஊன்றி எழுந்து நிற்கும் யாளிகள்.   இந்த யாளிகள் எல்லாம் இப்போ எங்கே போச்சுன்னு அந்த சூழ்நிலையிலும் கீற்றாய் எழுந்த  நினைப்பை தலைக்கு மேல் சடாரென்று பறந்த ஒரு  வெளவாலின் சப்தம் கலைத்தது.
 
"தாடி வெச்ச பெரியவர் ஒருவர் இடுப்லே காவி வஸ்தரம் தரித்தவாறு கொஞ்சம் உரத்த குரல்லே தேவார பாட்டுக்களை ராகத்தோட பாடிண்டே பிரதட்சணம் வந்திண்டிருந்தார்.  அந்த  ஏகாந்த சூழ்நிலைலே அவரோட குரல்  இனிமைலே தேவாரப் பாடல்களை கேக்கறது அற்புத அனுபவமா இருந்தது.. அந்த அனுபவத்தை மேலும் மேலும் கிரகிச்சிக்க அந்த  சமயத்லே ரொம்பவும் விரும்பினேன்.  அதுனாலே அவர் குரல் ஸ்பஷ்டமா எனக்குக் கேக்கற டிஸ்டன்ஸை மெயின்டைன் பண்ணிண்டு அவருக்கு பின்னாலே கொஞ்ச இடைவெளி விட்டு நானும் அவரைத் தொடர்ந்து பிரதட்சணம் பண்ணினேன்.  அப்போ ஒருவித  கிரக்கத்தோட பிராகாரத்தை வலம் வந்தது இப்போக்கூட உணர்ற மாதிரி மனசிலே தேங்கிப்  போய்க்  கிடக்கு..."

"ம்.." என்று ஒற்றை வார்த்தையை புரந்தர தாசர் அதிக ஓசையேற்படுத்தாமல் வெளிப்படுத்தியதே மோகன் மேலும்  சொல்வதற்குத் தூண்டிய மாதிரி இருந்தது.

"அந்த ஐயா முன்னே, நான் பின்னேன்னு ரெண்டு பேருக்கும் ஒரு மூணடி வித்தியாசம் தான் இருக்கும்.  கர்ப்பகிரக தரிசனத்திற்கு உள்ளே போகற மாதிரி சின்ன  சின்ன  படிகள் இருந்த இடத்திற்கு அருகில் வந்த பொழுது  சட்டென்று திரும்பி பின்னால் பார்த்தார் அந்தப் பெரியவர் .  மிக அருகில் என்னைப் பார்த்தவர் என் புஜத்தில் கை வைத்து, "வாங்க, உள்ளே போய் சாமி தரிசனம் செய்யலாம்.." என்று என்னையும் அவருடன்  கூட்டிச்  செல்கிற மாதிரி அந்தப்  படிகளில் ஏறி உள்  புகுந்தார்.  நானும் அவருக்கு பின்னாடியே ரொம்ப நெருக்கத்தில் உள்ளே போனேன்."

மோகன் சொல்லிக் கொண்டே வந்தது வித்யாவிற்கு பயங்கர சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியிருக்கும் போலிருக்கு.  தொடை மீது ஊன்றிய வலது கையால் தாடையைத் தாங்கியபடி தன்னை மறந்து கேட்டுக் கொண்டிருந்தாள்.

"சுவாமி சன்னதி பகுதிக்குள் நுழைந்ததும் அந்தப்  பெரியவர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவராய் காணப்பட்டார்.  தேவாரப் பாடல் அவர் மனுஷ உணர்வைத் தாண்டி அவரிடமிருந்து வெளிப்படுகிற மாதிரி கைகுவித்து கண்ணீர் மல்கப் பாடினார்.  அந்த சமயத்தில் ஐந்தாறு பேர் தான் அங்கிருந்திருப்போம்.  நாங்கள் ஒருவருக்கொருவர் கட்டுண்டு அந்த சந்நதியில் நின்று  கொண்டிருப்பது போலவான உணர்வு என்னை ஆட்கொண்டது. வீபூதி கீற்றுக்கு மேலே சந்தன பொட்டு பளிச்சென்று துலங்கும் சுவாமி அலங்காரம் மனசில் பதிந்து மெய் சிலிர்த்தது. கண் பார்வையில்  பட்டது லிங்கத் திருஉரு  தான்;  ஆனால் சடக்கென்று எங்கள் எல்லோரையும் கட்டிய அந்த உணர்வின் தலைவனாய் இறைவன் மந்தகாச புன்னகையுடன் நிற்பதாக ஒரு வினாடிக்கும் குறைந்த அவகாசத்தில் ஒரு எண்ணம் என்னில் வெட்டி விட்டுப் போனது.  குருக்கள் தீபாராதனைத் தட்டுடன் என் எதிரில் நின்ற உணர்வு கூட  இல்லாமல் நான் இருந்திருக்கிறேன் போலிருக்கு.  அந்தப் பெரியவர் என்னைத் தொட்டு ஏதோ சொன்னதும் தான் என்  நினைவு நிகழ் உலகிற்கு வந்தது போலத் தோன்றியது.  சட்டென்று தீபாராதனைச் சுடரைக் கண்களில் ஒற்றிக்  கொண்டு குருக்கள் கொடுத்த வீபூதியை வாங்கி நெற்றியில் பூசிக்  கொண்டேன்.  திருப்பி கர்ப்பகிரகததிற்குள் பார்த்த பொழுது பளபளவென்ற சுடரொளியில் சுவாமி ஜ்வலிப்பது போன்று தோன்றியது.அங்கிருந்து வெளிவர மனசே இல்லை.  'போலாமா?' என்று  என்னை அந்தப் பெரியவர் கேட்டதும் தான், அவர் சொன்னதைக்  கேட்டு நடப்பது போல சன்னதியை விட்டு அவர் பின்னாடியே வெளியே வந்தேன்."

"அன்னிக்கு நடந்ததைச்  சொல்றேன் பேர்வழின்னு எங்களையும் கும்பேஸ்வரரை தரிசிக்கற மாதிரி கோயிலுக்குள்ளேயே கொண்டு போய் விட்டுட்டே, பையா!" என்று புன்முறுவல் பூத்தார்  புரந்தர தாசர்.

"ஒரு விஷயத்தை ஒரு எழுத்தாளர் சொல்றார்ன்னா மத்தவங்க சொல்றதுக்கும் இவங்க சொல்றத்துக்கும் வித்தியாசம் இருக்குமில்லியா, அப்பா!  ஆனா இதை இவங்க  வீக்னஸா நீ நினைக்காத வரைக்கும்.." என்று வித்யா சொல்ல வந்ததை முடிக்கும் முன் குறுக்கிட்டார் புரந்தர தாசர்.  "சேச்சே.. இந்த நேரஷன் தான் எனக்கு வேணும்.. இம்மியளவு கூட கலப்படமில்லாத இந்த  உணர்வு தான் மோகன் அடைஞ்ச அந்த உணர்வோடையே என்னை யோசிக்கச் செய்யும்.. ப்ளீஸ்,   கன்ட்டினியூ.. அப்புறம்?" என்று புரந்தர  தாசர்  சொன்ன பொழுது வாசல் பக்கம் ஏதோ சபதம் கேட்டது..

"அம்மா வந்தாச்சு, போலிருக்கு, அப்பா!"  என்று வித்யா தன் தந்தையைப்
பார்த்தாள்.

அவள் சொன்னதை கேட்டுக் கொள்ளாத மாதிரி, "அப்புறம் என்ன  நடந்தது,
நீ சொல்லுப்பா" என்று மோகனிடம்  கேட்டார் புரந்தர தாசர்.


(தொடரும்..)


இது ஒரு தொடர்கதை -- 15

                                              15



"இல்லை, பெண்ணே" என்று பக்கத்துத் தூண் இருட்டுப் பகுதியிலிருந்து குரல் வந்ததும் திடுக்கிட்ட மங்கையும் பாண்டியனும்  குரல் வந்த திசையில் பார்த்தனர்.

மசமசத்த இருட்டில் யாரோ அசைவது போலிருந்தது.  துணுக்குற்ற மங்கை நகர்ந்து பாண்டியனுக்கு ஒட்டியவாறு தன்னை நெருக்கிக்  கொண்டாள்.

"யாருங்க, அது?" என்று பாண்டியன் குரல் கொடுத்தான்.

"இருங்க, தம்பி.  நானே வெளிச்சத்துக்கு வர்றேன்.." என்று பதில் கொடுத்தபடி ஒரு பெரியவர் ஒருபக்கம் சாய்ந்து நடந்தவாறே மண்டபத்தின் வெளிச்சப் பகுதிக்கு வந்தார்.

"அட! நம்ம கோயில் பண்டாரம் ஐயா, மங்கை!" என்று சொல்லி புன்னகைத்தான் பாண்டியன். "அங்கண ஏன் நிக்குறீங்க.. இப்படி பக்கத்லே வந்து உட்காருங்க, ஐயா.." என்று அவர் உட்காருவதற்கு வசதி ஏற்படுத்துவது போல பாண்டியன் நகர்ந்து உட்கார்ந்து கொண்டான்.

மங்கை நிறைய  தடவை இந்த  பண்டாரத்தைக் கோயிலில் பார்த்திருக்கிறாள். கோயில்  நந்தவனத்திலிருந்து பூக்குடலில் மலர்கள் பறித்து வந்து பிராகார நிழலில் உட்கார்ந்து இறைவனுக்கு சூட்டுவதற்காக மாலையாகத் தொடுத்துக் கட்டிக் கொண்டிருப்பார்.  நல்ல  கணீர் குரல் இவருக்கு. ஒவ்வொரு வேளை பூஜையின்  போதும் இவர் தேவாரம் ஓதும் போது சிவசபையில் நின்றிருக்கும் சிலிர்ப்பு ஏற்படும்.

"தம்பி, உம்பேரு பாண்டியன்  தானே?" என்று  கேட்டார் பண்டாரம்.

பாண்டியனுக்கு வியப்பு. "ஐயா, எம்பேரு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கே!" என்றான்.

"காளியண்ணன் கடைலே அடிக்கடிப்  பார்த்திருக்கேன்.." என்றார் பண்டாரம். அவர்  சொன்னதும் தான் இவனும் இவரை காளியண்ணன்  கடையில் நிறைய தடவைகள் பார்த்திருக்கும் நினைவு வந்தது.

"அப்படீங்களா?" என்று அவர் சொல்வதை அங்கீகரிக்கற மாதிரி சொன்னான் பாண்டியன்.  "திடீர்ன்னு இருட்டுப் பக்கமிருந்து குரல் வந்ததும் திகைத்துப் போனோம். என் மனைவி இவ.  மங்கைன்னு பேரு. 'பிரமையா இருக்குமோன்னு இவ கேட்டதுக்குத் தானே, 'இல்லை, பெண்ணே'ன்னு சொன்னீங்க?.."

"ஆமா.."

"அப்படித் தீர்மானமா சொன்னதுக்குக் காரணம் ஏதானும் இருக்கணுமில்லியா? அதைத் தெரிஞ்சிக்கறதுக்காகக் கேக்கறேன்.. சொல்ல முடியுமா, ஐயா?"

"தம்பி! உனக்கும் அந்த அனுபவம் ஏற்பட்டிருக்கினு சொன்னியே! அது  பிரமை இல்லைன்னு ஒனக்குத்  தெரியலையா?" என்று அவனிடம் திருப்பிக் கேட்டார் பண்டாரம்.

"தெரியலையே, ஐயா!" என்றான்  பாண்டியன், ஆற்றாமையுடன்.

"பாண்டியன்! எனக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கு.." என்று மெதுவாக பண்டாரம் சொன்ன போது மங்கைக்கு ஆச்சரியமாக இருந்தது.  தன் கணவன் கண்டது பிரமையாக இருக்காது என்கிற நம்பிக்கை அப்பொழுதே அவளுக்கு ஏற்பட்ட மாதிரி இருந்தது.

 பண்டாரம் உதடுகளை நாவால் ஈரப்படுத்திக் கொண்டு தொடர்ந்தார்: "மத்த யாருக்கேனும் இந்த மாதிரியான ஒரு அனுபவம் ஏற்பட்டிருக்குமோ என்கிற சிந்தனை கூட இல்லாம இத்தனை நாள் இருந்திருக்கிறேன், பார்!  பாண்டியன்! ஒருவகையில் பார்த்தால், இது ஒரு மாதிரியான  இறுமாப்பு. இறைவன் எனக்கு மட்டும் நெருக்கமா இருக்கற மாதிரி  நினைக்கற ஒரு பொது  புத்தி இது.  அப்படி சின்னத்தனமா நான் நினைச்சதுக்குத் தான், மடையா, கேட்டுக்கோன்னு நீ இந்த மண்டபத்திலே உக்காந்து பேசினதையெல்லாம் என்னையும் கேக்க வைச்சிருக்கான்.. ஈஸ்வரா! என்னே உன்  கருணை!" என்று ஆகாயம் பார்த்து கும்பிட்டார் பண்டாரம்.  "பாண்டியன்! நீ சொன்னதைக் கேட்டதும், எனக்கு ஆச்சரியம் தாங்கலே. இதோ, நம்ம மாதிரி இன்னொரு ஆளும் இருக்காப்பலேன்னு இன்னிக்குத் தீர்மானம் ஆச்சு.."என்று பண்டாரம் சொன்ன போது பாண்டியன் மகிழ்ச்சியில் திளைத்தான்.  பண்டாரம் சொன்னதற்கு பதில் கூட சொல்ல நாவெழும்பாமல் அவரையே பார்த்துக்  கொண்டிருந்தான்.

"தம்பீ! மனசுக்குள்ளேயே இத்தனை நாள் இந்த சந்தோஷத்தைப் பொத்திப் பொத்தி வைச்சிருந்தேன்.  இது நாள் வரை இந்த சந்தோஷத்தை யாரு கிட்டேயும் பகிர்ந்திண்டதில்லை.  பகிர்ந்திக்கறத்துக்கும் மனசு ஒப்பாம இருந்தது.  இப்போத்தான் நீ சொன்னதையெல்லாம்  கேட்டதும் பூட்டி வைச்சிருந்த என் சந்தோஷத்துக்கு விடுதலை  கிடைச்ச மாதிரி இருக்கு" என்று சொல்லியபடியே அவர் அவனைப் பார்த்த பொழுது அவர் இமையோரங்கள்  நனைந்திருந்தன.. மிகவும் உணர்ச்சி வயப்பட்டவராய் அவர் தெரிந்தார். பாண்டியனுக்கு அவரைப் பார்க்க பாவமாய் இருந்தது.  அவர் வலது கையை உரிமையுடன் பற்றி இறுக்கிக் கொண்டான்.

"எனக்கு இப்போ எப்படி இருக்கு, தெரியுமா?" என்றார் பண்டாரம். "எப்படியோ தீவு ஒண்ணுலே தனியா மாட்டிகிட்ட ஒருத்தன், பல நாள் கழிச்சு அந்த தீவிலேயே இன்னொரு மனுஷனை, அதுவும் தான் பேசினா புரிஞ்சிக்கக் கூடிய தன் மொழி தெரிஞ்ச இன்னொருத்தனைப் பாத்த மாதிரி இருக்கு.." என்றவுடன் மங்கைக்கு அவர் சொன்ன உதாரணம் அவர் உள்ளத்தை விண்டு சொன்ன மாதிரி இருந்தது.

"அதனாலே தான் சொல்றேன், இது பிரமை இல்லேன்னு.." என்று எதையோ மனசில் நிறுத்தியவாறு சொன்னார் பண்டாரம்.  "இது நாள் வரை இது பிரமைன்னு நான் நினைச்சிருந்தாலும் அதுக்கு நியாயம் இருக்கு. என்னிக்கு என்னைப் போலவே இன்னொருத்தருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கோ, அப்ப என்ன?.. அப்ப இது தனி ஒரு மனுஷனுக்கு ஏற்பட்ட பிரமை இல்லே, தானே?..என்ன சொல்றே, பாண்டியன்?" என்றார்.

"எனக்கு எதுவும் சொல்லத் தெரிலே, பண்டாரம்,ஐயா.." என்று பணிவுடன் சொன்னான் பாண்டியன்.

'ஏன்?' என்று கேட்கிற மாதிரி அவனை உறுத்துப் பார்த்தார் பண்டாரம்.

"நாள் பூரா சிவபெருமானுக்கு சேவை செய்வதற்காகவே பிறப்பெடுத்த மாதிரி வாழறவர் நீங்க.. இந்த நந்தவனம் பூத்துக் குலுங்கறதுன்ன்னா அதைப் பெத்த குழந்தை மாதிரி நீங்கப் பாத்துக்கறதாலே. பூப்பறிக்கறது, அதை மாலை மாலையாத்  தொடுக்கறது, இறைவன் சந்நிதானத்லே மனம் உருகப் பாடறதுன்னு சதாசர்வ காலமும் இந்தக் கோயிலோடையே ஒன்றிப்  போனவங்க, நீங்க! நான் அப்படியில்லே. கோயிலுக்கு வந்தாத்தான் சாமி  நெனைப்பு.  மத்த நேரத்திலேயும் இந்த நெனைப்பு வந்திடாமே மறைச்சிக்கறத்துக்கு என்னன்னவோ வேறே வேறே நெனைப்புங்க!.. அதனாலே இதுனாலே இதுன்னு எதையும் தீர்மானமாச் சொல்ல முடிலே, ஐயா!" என்றான்.

"நீ சொல்றது கூடச் சரிதான்.." என்றார் பண்டாரம். "என்னை எடுத்துக்கோ. இந்தக் கோயில்லேயே நா கிடக்கறதினாலே, எந்நேரமும் கோயில் நினைப்பாவே போயிடுச்சி, எனக்கு. அடுத்தாப்பலே அடுத்தாப்பலேன்னு தினமும் மாத்தி மாத்தி கோயில் சம்பந்தப்பட்ட வேலைகளே என்னைச் சூழ்ந்து இருக்கறதாலே கோயில் தவிர வேறே எதுவும் தெரியாமயும் போயிடுச்சி.  கோயில் தொடர்பான வாழ்க்கையே நிகழ்கிற உண்மையாய் எனக்கு ஆகிப்போனதினாலே, பிரமைன்னு எதையும் நினைக்க முடியாமையும் போச்சு, இல்லியா?" என்று ஏதோ யோசிப்பில் பண்டாரம் தவித்தார்.

தவழ்ந்து வருகிற மாதிரி ஜில்லென்று காற்று இடுப்புக்கு மேல் தடவி விட்டுப் போயிற்று. பாண்டியன் மங்கை பக்கம் திரும்பிப் பார்த்தான்.  அவள் விரலால் கோலக்கோடுகள் இழுக்கிற மாதிரி தரையில் கோடியிழுப்பதான பாவனையில் பாண்டாரம் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

"மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே; மென்காற்றில் விளைசுகமே, சுகத்திலுறும் பயனே' என்று வள்ளலார் எவ்வளவு எளிமையா கடவுளைப் புரிஞ்சிகிட்டிருக்கார்?.. அவர் புரிஞ்சிகிட்டதைத் தெரிஞ்சிக்கறதுக்கு இந்த நாப்பது வருஷம் ஆச்சு... ம்.. பொழுது போய்க்கிட்டிருக்கு.. நீங்கள் கிளம்பலையா?" என்று கேட்டார்.

"பக்கத்லே தான் வீடு.  நீங்களும் வாங்களேன்.  சாப்பிட்டு விட்டு திண்ணையில் அமர்ந்து விட்டதிலிருந்து பேசிக் கொண்டிருக்கலாம்.." என்று அவருடன் பேசி தெரியாத விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் கேட்டான் பாண்டியன்.

வீட்டிற்குப் போய்த் தான் சமைக்க வேண்டும் என்று சட்டென்று நினைவுக்கு வந்தாலும், 'எவ்வளவு நேரம் ஆகப்போகிறது? அரைமணிப் பொழுதில் அற்புதமாக சுடச்சுட சமைத்து உணவிடலாம்' என்று பெண்களுக்கே உரித்தான சமையல் ஞானம் மங்கையின் மனசில் படிந்தது.

"நான் பகலில் ஒருவேளை தான் சாப்பிடுவது.  இரவுப் பொழுதானால் இப்படியே இருந்து விடுவேன்.." என்றார் பண்டாரம்.

"பழம், பாலாவது சாப்பிடலாம், வாங்க.." என்றான்  பாண்டியன்.

"இல்லை..  பழக்கமில்லை.. இருபது வருஷமாக இப்படியே இருந்து பழக்கமாகி விட்டது.." என்றவர், அந்த சமயத்தில் இதமாக அவர்களைத் தொட்டுச் சென்ற காற்றின் சுகத்தை சுகித்தவராய், "நீங்கள் கிளம்புங்கள்.  வீசுகின்ற காற்றிருக்க வேறெதுவும் வேண்டுவேனோ?.." என்று மலர்ந்து  சிரித்தார்.

அவர் சொன்னது வேடிக்கையாக சொன்ன வார்த்தைகள் போலல்லாமல் மிகுந்த அர்த்தத்துடன் நிஜமாகவே உணர்ந்து அவர் சொல்கிற மாதிரி பாண்டியனுக்குத் தோன்றியது.

"சரிங்க, ஐயா.. நாங்க  வர்றோம்.." என்று பாண்டியன் அவரைக் கும்பிட்டான்.

கோயில் கோபுரம் கடந்து வெளியே வருகிற பொழுது, "வீசுகின்ற காற்றிருக்க வேறெதுவும் வேண்டுவாரோ" என்று அவன் உதடுகள் முணுமுணுத்தன. அந்த வரியில் நிறைய அர்த்தம் பொதிந்திருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அடுத்த தடவை பண்டாரம்  ஐயாவைப் பார்க்கும் பொழுது   'காற்றே உணவாகுமா?' என்று அவரைக் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

காளியண்ணன்  கடைக்கு அருகில் வந்த பொழுது,  "வாழைப்பழம் வாங்கிங்க.. ப்ரிட்ஜ்லே பால் இருக்கு.. அது போதுமில்லியா?" என்றாள் மங்கை.

பழம் வாங்கிக்கொண்டான் பாண்டியன். "என்ன கோயில்லே இம்மாம் நேரம்?" என்று விசாரிக்கிற மாதிரி கேட்டு, "காத்தாட உக்காங்திட்டு வந்தீங்களா?" என்று கேட்டான் காளியண்ணன்.    இவனும் காற்று பற்றியே பேசுவது பாண்டியனின் எண்ணத்தில் பதிந்தது.

செருப்புகளை மாட்டிக்கொள்வதற்காக கடையின் தட்டி மறைப்பு பக்கம் சென்றாள் மங்கை.

"ஆமாம், காளி!  இங்கே விட கோபுரம் தாண்டி அங்கே உள்ளார பிரமாதமான காற்று. சும்மா ஜிலுஜிலுன்னு.."

"பாண்டியன் அப்புறம் சொல்லலேன்னு சொல்லாதே... வர்ற ஞாயிற்றுக்  கிழமை கவியரங்கம்.  நேரம் இடம் எல்லாம் வழக்கம் போலத்தான். தவறாம வந்திடு.." என்றான் காளியண்ணன். "இந்த மாத கவியரங்கக் கவிதைத் தலைப்பு  என்ன தெரியுமா?.."

"என்ன தலைப்பு?.." என்று ஆவலுடன் கேட்டான் பாண்டியன்.

"'காற்று'.  அதான் தலைப்பு.  மொத்தம் பன்னிரண்டு பேர் கவிதை வாசிக்கறாங்க.. அரங்க.சாமிநாதன் ஐயா தான் கவியரங்கத் தலைமை. அதனாலே கூட்டத்துக்குக் கொறைச்சல் இருக்காது." என்றான்.

"'காற்று!' என்று தனக்குள் ஒருமுறை சொல்லிக் கொண்டான் பாண்டியன். "'வீசுகின்ற காற்றிருக்க வேறெதுவும் வேண்டுவாரோ' என்று ஒரு வரி காளி! அழகா இருக்கு, இல்லே.. ஒருத்தர் சொல்லி மனசிலே பதிஞ்சு போயிடுச்சி, காளி!" என்றான்.

"என்ன, என்ன.. இன்னொரு தடவை அந்த வரியைச் சொல்லு.." என்று பரபரத்தான் காளியண்ணன்.

புன்சிரிப்புடன், "வீசுகின்ற காற்றிருக்க வேறெதுவும் வேண்டுவாரோ?" என்று நின்று நிதானித்து மறுபடியும்  சொன்னான் பாண்டியன்.

"அருமை, பாண்டியன்.."என்று குதூகலித்துப் போனான் காளியண்ணன்."நானும் கவியரங்கத்லே கவிதை வாசிக்கறேன்.  தலைப்பை இப்பத் தான்  சொன்னாங்களா?  அதனாலே அதுபத்தியே யோசனையாயிருந்தது.'வீசுகின்ற காற்றிருக்க வேறெதுவும் வேண்டுவாரோ?' செம வரிப்பா..இதையே  ஆரம்ப  வரியா வைச்சு இன்னிக்கு ராத்திரிக்குள்ளாற கவிதையை எழுதிடறேன்.. ரொம்ப தேங்க்ஸ்ப்பா.."

"எதுக்கு?.."

"கவிதைக்கு  ஆரம்ப வரி சொன்னதுக்கு.."

"இந்த வரிக்கு சொந்தக்காரர் வேறொருத்தர், காளி!.. நியாயப்படி நன்றின்னா அவருக்குத் தான் சொல்லணும்.  நானே இதுக்குள்ளாற நிறைய தடவை மனசுக்குள்ளேயே அவருக்கு நன்றி சொல்லிட்டேன்.." என்றான்.

"அப்படியா சமாச்சாரம்?.. யாருப்பா அவுரு?"

"நம்ம கோயில் பண்டாரம் ஐயா காளி!"

"ஓ! பண்டாரம் ஐயாவா?" என்று மரியாதை பொங்க சொன்னான்  காளி. "மதிய நேரம் ஐயா கடைக்கு வருவாரு.. எவ்வளவு விஷயம் சொல்றாருங்கறே! பலது புரியமாட்டேங்குது.. நிறையப் படிக்கணும், பாண்டியன்..  இருகறதை வைச்சிகிட்டு ஒப்பேத்தலாம்ன்னா ஒண்ணும் வேலைக்கு ஆகாது.. என்ன சொல்றே?"

"படிச்சு புது விஷயங்கள்லாம் தெரிஞ்சிக்கறதைக் கூட  வேணாம்ன்னு யாராவது  சொல்லுவாங்களா?..  சரி, நா வரட்டுமா.." என்று கடைக்கு வெளியே போட்டிருந்த ஸ்டூல் ஒன்றில் உட்கார்ந்திருந்த மங்கையைப் பார்த்து, "போலாம், மங்கை.." என்றான்.

இலக்கிய விஷயம் பேசினால் மங்கை சலித்துக் கொள்ள மாட்டாள் என்று அவனுக்குத் தெரியும்.  அதனால் நடந்து கொண்டே கவியரங்க சேதிகளை அவளிடம் சொன்னாள்.

"வர்ற ஞாயிற்றுக்கிழமை மாலை தானே?.. நானும் வர்றேன்.." என்று அவள் சொன்ன போது பாண்டியனும் அவசியம் அந்த கவியரங்கத்திற்கு போகவேண்டும் என்று தீர்மானம் கொண்டான்.

பாயை விரித்துப் படுக்கும் பொழுது மணி பத்துக்கு மேலாகிவிட்டது. வழக்கமாக படுத்ததும் அதற்குத்தான் காத்திருக்கிற மாதிரி உடனே தூக்கம் வந்து விடும் அவனுக்கு.  ஆனால் இன்று என்னன்னவோ நினைப்புகள் அவன்  மனசில் அலை மோதிக் கொண்டிருந்தது.. ஆனால் அத்தனைக்கும் நடுவே, 'வீசுகின்ற காற்றிருக்க வேறெதுவும் வேண்டுவாரோ' என்கிற வரி மட்டும் படுதாவில் ஜிகினா எழுத்துக்களில் பளபளக்கிற மாதிரி அவன் நினைவுத் திரையில் பளிச்சிட்டுக் கொண்டிருந்தது..

திடுக்கென்று 'பேசுகின்ற பொற்சிலையே' என்கிறதாய் அடுத்த வரி மனசில் உருவான பொழுது, ஒரு உத்வேகத்தில் பாண்டியன் படுக்கையிலிருந்து எழுந்து விட்டான்.  பக்கத்தில் பார்த்த பொழுது லேசான புன்முறுவலுடன் மங்கை நித்திரையில் இருந்தாள்.  மிக மெதுவாக எழுந்திருந்து தன் அறைக்குப் போய்  டேபிள் லைட்டை உயிர்ப்பித்து,  'பேசுகின்ற பொற்சிலையே' என்று பேப்பரில் எழுதி அடித்தான். அதற்கு மாற்றாக தோன்றிய வரியின் தொடர்ச்சியாக விடுவிடுவென்று நாலைந்து வரிகள் எழுதிவிட்டான். ஒரு கொட்டாவிக்குப் பின் தூக்கம் கண்ணை அழுத்துகிற மாதிரி இருந்தது. காலையில் பாக்கி கவிதையைப் பார்த்துக் கொள்ளலாம் என்று படுக்கைக்கு வந்தான்.

அவனை லேசில் விடமாட்டேன் என்று 'வீசுகின்ற காற்றிருக்க வேறெதுவும்
வேண்டுவாரோ' என் கிற வரியும் அவன் நினைவோடையே கூட வந்து அவனுடன் சேர்ந்து படுத்துக் கொண்ட மாதிரி இருந்தது. வேறெதுவும் வேண்டாமென்றால், காற்றே தான் உணவா? அதுவே தான்  உயிரோ, இல்லை அதுவே தான் கடவுளோ என்று நிறைய கேள்விகள் ஒவ்வொன்றாக எழுந்து நின்று நினைவில் ஆர்ப்பரித்தன.

லேசான நனவுலக நினைவிழப்பில் காற்றே தான் உயிரா என்று பண்டாரம் ஐயாவிடம் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

ஆழ்ந்த தூக்கத்திலும் காற்று பற்றிய கலர்க் கலர் கனவுகள் பாண்டியனை விட வில்லை.  அவன் கனவினூடே காற்றின் வீச்சின் பிம்பமாக அருள் தவழும் ஆடலரசனின் நாட்டிய தரிசனம் கண்கொள்ளா காட்சியாய் விரிந்தது.

'பொதுவில் ஆடுகின்ற அரசே, என் அலங்கல் அணிந்தருளே' என்று யாரோ தனக்கு நெருக்கத்தில் வந்து சொல்கிற உணர்வில் பாண்டியன் சிலிர்த்தான்.


 
(இன்னும் வரும்)

இது ஒரு தொடர்கதை -- 14

                                               14



தான் எழுதியதை அதைப் படித்த இன்னொருவர் சொல்ல வருவது ஒரு சந்தோஷ நிகழ்வு.  வித்யா மூலம் அது மோகனுக்கு வாய்த்ததும் கதையின் போக்குக்கு ஏற்ப சடக் சடக்கென்று மாறும் அவள் முகபாவத்தை பார்த்து வியந்திருந்தான்.

முழுசாக கதையை அவள் சொல்லி முடிக்கற வரை பொறுமையாக அதைக் கேட்டுக் கொண்டிருந்தார் புரந்தரதாசர். 'இது ஒரு தொடர்கதை' கதையின் சமீபத்திய  பகுதி வரை வித்யா சொல்லி முடித்ததும், மோகனைப் பார்த்து, "கதையை நன்றாகக் கொண்டு போயிருக்கே.." என்றார்.  ஒரு வினாடி நேர மெளனத்திற்குப்  பிறகு, "இந்த கதையில் வரும் கோயில் நிகழ்வு நீயும் உணர்ந்த ஒரு  உணர்வாய்  இருப்பதினால் அதை விவரித்து தத்ரூபமாக உன்னால் சொல்ல முடிந்திருக்கிறது" என்றார்.

"என் உணர்வுங்கறது சரி சார்.  எப்படி அந்த சந்தோஷ உணர்வு சுவாமி தரிசனம் போதெல்லாம் என்னை ஆட்கொள்கிறதுன்னு தெரியலே.  உங்களுக்குத் தெரிந்த வரையில் அதற்கு ஏதாவது காரணம் இருக்குனு நீங்க நினைக்கிறீங்களா?" என்று புரந்தரதாசரைப் பார்த்துக் கேட்டான்.  தெரியாத ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் அவன் முகத்தில் சுடர்விட்டது.

புரந்ததாசர் புன்னகைத்தார். "மோகன், விஷயம் என்னன்னா, எந்த நிகழ்வும் ஒரு காரணத்தின் அடிப்படையில் தான் நிகழறது.  அதாவது, காரணம்ன்னு ஒண்ணு இல்லேனா அதுக்கான நிகழ்வே இல்லேன்னு சொல்லலாம்.  இப்போ சொன்னையே, சுவாமி தரிசனம் போதெல்லாம் அந்த சந்தோஷ உணர்வுக்கு ஆட்படறேன்னு, அதுக்குக் கூட காரணம் இருக்கும்.  ஐ மீன் அதுக்கான காரணம் இல்லேனா, அந்த உணர்வு உனக்கு  ஏற்பட்டிருக்காதுன்னு சொல்ல வரேன்.." என்றார்.

"அந்தக் காரணத்தைத் தான் தெரிஞ்சிக்கணும்ன்னு எனக்கு ஆசை.."

"அதைத் தெரிஞ்சிண்டு என்ன ஆகப்போறது?"

"என்னப்பா, இப்படிக் கேக்கறே?.. அதுக்கான ரூட் காஸ் தெரிஞ்சா எதுனாலே அந்த  உணர்வு ஏற்படறதுன்னு  தெரிஞ்சிக்கலாமிலே?"

"வித்யா! அதை இன்னொருத்தர் கண்டுபிடிச்சுச் சொல்றதுக்காக சிரமப்படறதை விட சம்பந்தப்பட்டவரே ஈஸியாக் கண்டுபிடிச்சிடலாம்."

"சம்பந்தபட்டவர் அதைக் கண்டுபிடிக்கத் தெரியாமத்தானே, உங்கிட்டே கேக்கறார்.  ரொம்ப பிகு பண்ணிக்கறையே?.."

"சேச்சே.. அப்படிலாம் இல்லே." என்று வித்யா சொன்னதை அவசரமாக மறுத்தார் புரந்தரதாசர்.

"பின்னே, என்ன?.. நீ அதுக்காக சிரமப்படணும்ங்கறியா?"

"அப்படிலாம் இல்லே. அப்படியே கொஞ்சம் சிரமமா இருந்தாக்கூட இதுக்குன்னு வந்திருக்கற மோகனுக்காக சிரமப்பட மாட்டேங்கறியா?"

"பின்னே என்ன?"

தந்தைக்கும் மகளுக்கும் தன் சம்பந்தப்பட்டு நடக்கும் உரையாடல் கேட்டு மோகனுக்குப் பெருமிதமாக இருந்தது.  இந்தப் பெருமிதம் இந்தக் குடும்பத்தோடு இன்னும் தனக்கு நெருக்கத்தை அதிகரிக்கும் என்கிற நினைப்பு ஏற்பட்டு அந்த நினைப்பே அளப்பரிய சந்தோஷத்தை அவனுக்கு அளித்தது.

"பின்னே என்னன்னா?  என்னத்தைச் சொல்றது?..  இந்த மாதிரி சமாச்சாரத்துக்கெல்லாம் விடை கண்டுபிடிக்கணும்ன்னா சம்பந்தப்பட்ட அந்த நபர் பற்றிய பெர்சனல் சமாச்சாரம்ல்லாம் அலசி ஆராயணும்.  சம்பந்தப்பட்டவரும் எந்த ஒளிவு மறைவுமில்லாம தன்னைப்பத்திச் சொல்லணும்."

"ஓ.. ஸாரி.. அதுக்குச் சொல்றையா?" என்று வித்யா கேட்ட போது, "நீங்க கேளுங்க, சார்.. என்ன கேள்வினாலும் பதில் சொல்லலாம்ன்னு நெனைக்கிறேன்.." என்றான் மோகன்.

"என்ன, நெனைக்கிறீங்களா?.." என்று சடக்கென்று அவன் பக்கம்  திரும்பிப்  பார்த்த வித்யா, மறுவினாடி பார்வையைத் திருப்பி தன் தந்தையைப் பார்த்தாள். "ஏம்ப்பா.. இப்படி செஞ்சா என்ன?"

"எப்படிம்மா?.."

"இதுக்கான காரணத்தை மோகன் தெரிஞ்சிக்கணும். அவ்வளவு  தானே?  ஒண்ணு செய்.  எதுனாலே அந்த உணர்வு மோகனுக்கு ஏற்பட்டிருக்கலாம் ன்னு நீ நெனைக்கறையோ அதுக்கான காரணங்களை வரிசையா சொல்லு.  அந்தக் காரணங்கள்லேந்து மோகனே  தனக்குப் பொருந்தற ஒரு காரணத்தையோ இல்லே பல காரணங்களையோ தேர்ந்தெடுத்துக்கட்டும்.  என்ன சொல்றே?"

"நான்  சொல்றதுக்கு என்ன இருக்கு?.. மோகன் தான் சொல்லணும்.."

"எதுனாலும் எனக்கு சரி சார்.  நா ஒரு திறந்த புஸ்தகம். அந்த புஸ்தகத்தோட எந்தப் பக்கத்தை வேணா யார் வேணாலும் புரட்டிப் படிக்க எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.." என்றான்.

மோகன் சொன்னதைக் கேட்டு  சிரித்தே விட்டாள் வித்யா. "ஸீ.. மோகன்! இது சினிமா படப்படிப்பு இல்லே.  ஒரு உண்மையைத் தெரிஞ்சிக்க முயற்சிக்கறோம்.  'றோம்' கூட இல்லை,  நீங்க முயற்சிக்கிறீங்க.. அந்த உங்களோட முயற்சி பலிதமானா உங்களுக்கு பலவிதங்கள்லே அதுனாலே நன்மை.  முக்கியமா இதையே ஒரு நிகழ்வா வைச்சு நீங்க எழுதற கதைக்கு கற்பனையான வெத்து பூச்சு இல்லாம நீங்களே உணர்ந்த யதார்த்த உணர்வுகளோட கதையை அடுத்த கட்டத்துக்கு  நகர்த்தலாம்.  அதுக்கு அப்பா உங்களுக்குத் துணையா இருக்கார்.  நான்?...  நான் எதுக்குன்னா அப்பா வாயிலேந்து விஷயங்களை வரவழைக்க உங்களுக்குத் துணை.  ஓக்கேவா?"

அவள் பேசும் ஜாலத்தில் மெய்மறந்து தன்னையே பறிகொடுத்தவனாய் வித்யாவைப் பார்த்துக் கொண்டிருந்தான் மோகன்.  தனக்காகத்தான் எல்லாம் என்கிற நேரடிப்  பார்வை இல்லாமல், ஒரு மூன்று பேர் சேர்ந்து ஒரு  நிகழ்வுக்கான காரணங்களை அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிற உணர்வே பிரதானமாய் மோகன் மனசில் படிந்திருந்தது.

"இந்த ஐடியா நன்னாத் தான் இருக்கு.  இதுக்குத்  தாம்மா எதுக்குனாலும் நீ பக்கத்லே இருக்கறது பல விஷயங்கள்லே செளகரியமா இருக்குங்கறேன்" என்று புரந்தரதாசர் மகளின் அருகாமையின் அருமையைச் சொன்னார். அவர் சொன்னதும் நியாயமாகத் தான் பட்டது மோகனுக்கு.

"இப்போ சொல்லுப்பா.. அவசரம் இல்லே.  யோசிச்சே சொல்லு." என்றாள் வித்யா.

"சொல்றேன்.." என்றார் புரந்தரதாசர். "ஒவ்வொண்ணா சொல்றேன். மோகன், அதிலே உனக்கு எந்தக் காரணம் பொருத்தமாப்படறதோ அதைத் தேர்ந்தெடுத்துக்கலாம்.  அதை எங்களுக்குச் சொல்லணும்ன்னு  கூட இல்லே. உன்னோட கதைக்கு பொருத்தமா வந்ததுனா, அதை உபயோகப் படுத்திக்கோ. இதிலே செளகரியம் என்னன்னா, இதிலே பல ஆப்ஷன் இருக்கு. அதிலே எந்தக் காரணத்தை வேணா உன் கதைக்கு நீ உபயோகப்படுத்திக்கலாம்.  கூடவே உனக்குச் சரியாப் படற உன் உணர்வுக்கான பிரத்யேகக் காரணத்தையும் நீ தெரிஞ்சிக்கலாம்.. சரி தானே?.. நீ வேணா நா சொல்றதை பேப்பர்லே குறிச்சிக்கறையா?"

"நான் எதுக்கு இருக்கேன்?" என்று பக்கத்து மேஜையிலிருந்த பேப்பர் பேடையும்  பேனாவையும் எடுத்துக் கொண்டாள் வித்யா.. "நீ ஒவ்வொண்ணா சொல்லுப்பா.  நா நம்பர் போட்டு எழுதிக்கறேன்.   மோகன்! உடனே விடை காணணும்ன்னு நீங்க அவசரப்பட வேண்டாம்.  நா குறிச்சு வைச்சிருக்கறதிலேந்து உங்களுக்குப் பொருத்தமா படற ஒண்ணை மெதுவா பின்னாடித் தேர்ந்தெடுக்கலாம்.  அதுக்கு  நிறைய அவகாசம் இருக்கு. சரியா?.. இப்போ நீ சொல்லுப்பா.." என்றாள்.

"நம்பர்  ஒண்ணு.  குறிச்சிக்கோ.  சின்ன வயசிலே எதுனாலேயோ கடவுள் நம்பிக்கை இல்லாம இருந்திருக்கலாம்.  வளர வளர கூட்டங்கூட்டமா தெய்வத்தின் மேலே நம்பிக்கை வைச்சிருக்கறவங்களைப்  பாத்து, 'எதுக்காக இப்படி அலைமோதுறாங்க'ன்னு தெரிஞ்சிக்கணும்ன்னு  ஆர்வம் வந்திருக்கலாம்.  அதைத் தெரிஞ்சிக்கற ஆர்வத்லே, அந்த குறுகுறுப்பிலே கடவுள் சம்பந்தப்பட்ட நிறைய விஷயங்களைப் படிக்க ஆரம்பிச்சிருக்கலாம்.  அப்படிப் படிச்சுத் தெரிஞ்சிண்ட அறிவும் சதாசர்வ காலமும் அது பற்றிய நினைப்பும் மனசுக்கு வெகு  நெருக்கமாகி இறைவன் மீதான  ஆகர்ஷ்ணமா மாறியிருக்கலாம்.  அந்த ஈர்ப்பு தான்  வினை புரிந்து இறைவன் குறுநகையாய் சிந்தையில் விளைந்திருக்கலாம்.

"நம்பர் டூ.  இது ஒரு வினோதமான விஷயம். சில பேருக்கு இருக்குங்கறதை இல்லைன்னு நிரூபிக்கறதிலேயும், இல்லைங்கறதை இருக்குன்னு நிருவுவதிலும் அதீத ஆசை உண்டு.  அந்த ஆசை வயப்பட்டவங்க...." என்று புரந்தரதாசர் சொல்லிக் கொண்டு வருகையில், "இருப்பா.. பேனா எழுதலே.. வேறே எடுத்துக்கறேன்.." என்று வித்யா மேஜை இழுப்பறை திறந்து வேறொரு பேனாவை எடுத்துக் கொண்டாள். "ப்ளீஸ்..கண்ட்டினியூ, அப்பா.." என்றாள்.


 (இன்னும் வரும்)      

இது ஒரு தொடர்கதை -- 13

                                                   13


புரந்தரதாசரை நேரில் பார்த்த மரியாதையில் சட்டென்று எழுந்து நின்று கைகுவித்தான்  மோகன்.

பைஜாமாவும் அதன் மேல் முட்டி வரை ஜிப்பாவும் சந்தனக் கலரில். லேசாக நரைத்த குறுந்தாடி, சிகை  கலைந்த தலை, கூர்மையான மூக்கைச் சுமந்த ஓவல் முகம், ரிம்லெஸ் கண்ணாடி, குறுகுறு பார்வை என்று வயசானாலும் களையாக இருந்தார் புரந்தரதாசர்.

"வாங்கோ.. நான் தான்  புரந்தரதாசன்" என்று அவன் கைபற்றி அவர் குலுக்கிய போது அவரது தன்மையான அறிமுகமே மோகனுக்கு  மிகப்பெரிய விஷயமாக  இருந்தது.. 'எவ்வளவு பெரிய  ஜீனியஸ்?.. இப்படிச் சாதாரணமாய்..' என்று அவன்  மலைத்த பொழுது, அவர் ஜீனியஸாய் இருப்பதால் தான் அலட்டல் இல்லாத வெகு சாதாரணமாக தன்னை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்கிற உண்மை புத்திக்குப் பட்டது.

"உங்களைத் தான் பார்த்துப் போகலாமென்று வந்தேன்.." என்றவன் தன்னை அவருக்கு அறிமுகப்படுத்திக் கொண்டான்.

"அப்படியா?" என்று கூர்ந்து அவனைப் பார்த்தவர், "பத்திரிகை பேர் என்ன சொன்னீங்க?" என்று கேட்டார்.

"'மனவாசம்'ங்கறது  பத்திரிகை பேர். அதிலே, இப்போ 'இது ஒரு தொடர்கதை'ன்னு ஒரு தொடர்கதை எழுதிண்டு வர்றேன். அது சம்பந்தமாத்தான்.."

"தொடர்கதை சம்பந்தமாவா.. என்னையா?" என்று நம்பமுடியாதவர் போல் மோகனைப் பார்த்தார் அவர். "இந்தப் பத்திரிகை-- தொடர்கதைன்னாலே என் பெண்ணைத் தான் கேக்கணும்.. யூ நோ.. அவள் பயங்கர புத்தக ரசிகை.. ஒரு புத்தகமோ பத்திரிகையோ கையிலே இருந்திட்டா சோறு, தண்ணி வேண்டாம்" என்றவர், அந்த நொடியே, "வித்யா.." என்று அந்த வீடு முழுக்க கேட்கிற மாதிரி கூப்பிட்டார்.

"என்னப்பா.." என்று வீட்டினுள் எந்த இடத்திலிருந்தோ வீணை மீட்டல் மாதிரி குரல் குழைந்தது..

"இங்கே, வாம்மா.. சார் வந்திருக்கார், பாரு!" என்ற புரந்தரதாசர், மோகனைப் பார்த்து "என் பொண்ணைத் தான் பாக்க வந்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். அவ தான் இந்த  பத்திரிகை, தொடர்கதை இதோடெல்லாம் தொடர்பு உள்ளவள்.." என்றார்.

வித்யாவை எதிரில் உட்காருகிற நெருக்கத்தில் இன்னொரு தடவை பார்க்கப் போவது சந்தோஷமாய்  இருந்தாலும், அவள் இங்கு வருவதற்குள் விஷயத்தைச் சொல்லி விட வேண்டுமென்கிற அவசரத்தில், "உங்களைத் தான் சார் பார்க்கணும்ன்னு வந்திருக்கேன்.. அனந்தசயனம் சார் தான் உங்களைப்  பத்திச் சொல்லி முகவரி கொடுத்தார்.. அதான்.." என்று இழுத்தான்.

"எந்த  அனந்தசயனம்?....."

"அவரும் எங்க பத்திரிகைலே தான் எழுதறார்.  'ஹலோ,தோழி'ன்னு எங்க பத்திரிகைலே ஒரு பகுதி.. அந்தப் பகுதியை குத்தகைக்கு எடுத்திருக்கறவர்."

"ஹலோ, தோழியா?.. நீங்க என்ன சொல்ல வர்றீங்க, யாரைச் சொல்றீங்கன்னு தெரியலே.. என் பொண்ணு  வந்திடட்டும்.. எல்லாம் புரிஞ்சிடும்.." என்று தன் பெண்ணின் மீது அபார நம்பிக்கை வைத்தவராய் வீட்டின் உள்பக்கம் பார்த்தார். "வித்யா..." என்று மறுபடியும் ஒரு குரல்.. அந்தக் குரலில் அசாத்திய  ஆண்மை படிந்திருப்பதை இப்பொழுது தான் மோகன் கவனித்தான்.

"என்னப்பா?.." என்று அழகுக் குவியலாய் ஆரஞ்சு ஜூஸ் குவளைகளை ட்ரேயில் தாங்கியபடி வந்தாள் அவர் செல்ல மகள்.

பார்த்தும் பார்க்காத மாதிரி அவளை ஒரு பார்வை பார்த்து வைத்தான் மோகன். கருவிழியைச் சுழற்றி கொள்ளை கொண்டதற்கே ஆஸ்தி பூரா எழுதி வைத்து விடலாம் போலிருந்தது.

"வித்யா! சார் ஒரு எழுத்தாளர். பேர் மோகன்..." என்று சுறுசுறுப்பாக அறிமுகத்தை ஆரம்பித்தவர், சட்டென்று தயங்கி, மோகன் பக்கம் பார்த்து, "ஸாரி.. பத்திரிகை பேர் என்ன சொன்னீங்க?.." என்று கேட்டார்.

"நான் ரொம்ப சின்னவன்ங்க.. என்னைப் போய் 'ங்க..'லாம் போட்டு  அழைக்க வேண்டாம்.." என்று மோகன் நெளிந்தான்.

"சரி.. இனி 'ங்க' கிடையாது.. சொல்லு, பத்திரிகை பேர் என்ன சொன்னே?" என்று சடாரென்று அவர் ஒருமையில் மாறியது இயல்பாக இருந்தது.

"தொடர்கதை பேரும், 'இது ஒரு தொடர்கதை' தாங்க.." என்று அவன்  சொன்னதைக் கேட்டு கலகலவென்று சிரித்தாள் வித்யா.. "பத்திரிகை பேர் 'மனவாசம்'ப்பா.. அதிலே தான் 'இது ஒரு தொடர்கதை'ன்னு  ஒரு தொடர்கதை ஆரம்பிச்சிருக்கு.. அட! அந்தக் கதையை எழுதற மோகன் நீங்களா?  ஓ வாட் எ சர்ப்ரைஸ்.." என்று அவனை விழுங்கி விடுபவள் போல பார்த்தாள் வித்யா.   இது தனக்காக அல்ல, தன் எழுத்துக்கான பிரமிப்பு  என்று  அவன் மனம் சொல்லியது. உள் மனசோ, 'எதுக்கா இருந்தா என்ன, பிரமிப்பு பிரமிப்பு தானே, இப்போ எழுத்துக்காகன்னு ஆரம்பிக்கறதை, அந்த எழுத்தை எழுதற ஆசாமிக்காகன்னு  மாத்தறது ரொம்ப சிரமமோ' என்று இடித்துச் சொல்கிற மாதிரி முனகியது.

"அப்படியாம்மா.." என்று  இழுத்தார் புரந்தரதாசர். "இதுக்குத் தான் நீ வேணும்ங்கறது.. இப்போ சொல்லு.. ஏதோ 'ஹலோ, தோழி'ன்னு சொன்னாரே.. அதைப் பத்தித் தெரியுமாம்மா?"

"அனந்தசயனம் சார்ன்னா, அதை எழுதறார்.. அப்பாக்கு அவரைத் தெரியுமே?" என்று அவள் சொன்ன போது அவள் விழிகள் அளவாக விரிந்தன.

"எந்த அனந்தசயனம்,வித்யா?.. போர்ட் டிரெஸ்ட் அனந்தசயனமா?"

"சரியாப் போச்சு.. அனந்தசயனம்ன்னா அவர் ஒருத்தர் தானாப்பா? நம்ம அனந்து மாமாப்பா!  ஆனாலும் இப்போ உனக்கு மறதி ரொம்ப அதிகமாயிடு த்து.. ஆனா, அப்படின்னு முழுசா சொல்லவும் முடிலே.. அது எப்படிப்பா உன்னோட ஆராய்ச்சி சமாச்சாரம்ன்னா அது  மட்டும் டக்டக்ன்னு ஞாபகத்துக்கு வர்றது?.." என்று வித்யா வியந்தாள்.

மேற்கொண்டு தொடர ஒரு பிடி கிடைத்த மாதிரி இருந்தது மோகனுக்கு.. "நானும் அதுக்காகத்தான் சார் வந்தேன்..  உங்க ஆராய்ச்சி சம்பந்தமாத்தான்.. அனந்தசயனம் சார் சொல்லித் தான் தெரியும்.. இந்த பிரபஞ்சம், காந்தசக்தி.." என்று  மோகன் சொன்னதும் புரந்தரதாசரின் முகம் மலர்ந்தது.

'சொல்லு, மகனே!' என்று கேட்கிற பரிவுடன் பார்வையில் வாத்சல்யம் குடிகொண்டது. "அனந்து என்ன சொன்னான்?" என்று ரொம்ப  அக்கரையாகக் கேட்டார்.

அவர்கள் பேச்சில் தானும் சமயம் வாய்த்தால் கலந்து கொள்கிற தோரணையில் வித்யாவும் அவள் அப்பாவுக்கு பக்கத்தில்-- மோகனுக்கு நேர் எதிரில்-- உட்கார்ந்து கொண்டான்.  அவள் அங்கிருப்பது மேற்கொண்டு கேட்க வேண்டிய விஷயங்களைக் கேட்பதற்கு தடங்கலாக இருக்குமோ என்று திடீரென்று  முளைத்த எண்ணத்தை மோகன் மறக்க முயற்சித்தான்.

"நிறையச் சொன்னார்,சார்." என்றவனுக்கு அனந்தசயனம் சொல்லி நினைவில் படிந்திருந்த அந்த OBE பற்றி இந்த சமயத்தில் நினைவுக்கு வந்தது. "அனந்தசயனம் சார்,  OBE-யை பத்தி உங்க கிட்டே கேட்டு ரொம்பவும் ஆச்சரியப்பட்டதாகச் சொன்னார். அப்புறம் பெயிண்ட் கம்பெனி.." என்று ஏதோ சொல்ல ஆரம்பித்து நாக்கைக் கடித்துக் கொண்டது போல பாதியில் நிறுதினான்.

அவன் கடைசியாகச் சொன்னதை அவர் கவனிக்கவில்லை என்று தெரிந்தது. "அப்படியா?.." என்று புருவங்களை உயர்தினார். "அனந்து கிட்டே எங்க வாலிப காலத்லே OBE-யைக் கத்துக்கோடான்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அவன் மசியவே இல்லை.  இதெல்லாம் எனக்கெதுக்குன்னு ஒதுங்கிட்டான். அதெல்லாம் இன்னும் ஞாபகம் வைச்சிண்டிருக்கான், பாரு!" என்று பழைய நினைவுகளில் ஆழ்கிற மாதிரி லேசாக பாதி விழிகளை மூடியவரின் முகத்தில் விகசிப்பு படர்ந்தது.

"அவர் மசியாட்டாப் போகட்டும். நான் மசியறேன்.  எனக்கு கத்துக்குடுக்கிறீங்களா, சார்?" என்று அவன் கேட்டதும் கலகலவென்று சிரித்து விட்டாள், வித்யா.

"பையா! எடுத்தவுடனே OBE-க்கெல்லாம் போகப்படாது.  அதெல்லாம் யோகம் சித்திக்கறவங்களுக்கு தான் சித்திக்கும்.  அதெல்லாம் தெரிஞ்சிக்கறத்துக்கு நிறைய மனப்பக்குவம் அவசியம். அத்தனையும் படிப்படியாக் கத்துக்கற பயிற்சிகளின்  அடிப்படையில் பழக்கத்துக்குக் கொண்டுவருவது" என்று அவர் பரிவுடன் சொன்னார்.  "அதுசரி, இதெல்லாம் எதுக்குக் கத்துக்கணும்ங்கறே?" என்று திடுதிப்பென்று குறுக்குக் கேள்வி கேட்டார்.

மோகனுக்கு சட்டென்று அவர் கேட்டதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. "கதை எழுதறதுக்கு உபயோகப்படுமேன்னு  தான்.." என்று சொல்லி வைத்தான்.  அது தான் காரணம்  என்றாலும் அப்படிச் சொல்வது வித்யாக்கும்  பிடிக்கும் என்கிற எண்ணம் இருந்தது.  அதனால் ஓரக்கண்ணால் அவள் முகத்தில் ஏதாவது மாற்றம் தெரிகிறதா என்று பார்த்துக் கொண்டான்.

அவன் சொன்னதைக் கேட்டு அவர் முகம் சட்டென்று மாறியது. "ஒண்ணு சொல்றேன், கேட்டுக்கோ.." என்று குரல் மாற்றி கறாராகச் சொன்னார் புரந்தரதாசர். "இதெல்லாம் கத்துக்கறத்துங்கறது புஸ்தகத்தைப் படிச்சு மட்டும் தெரிஞ்சிக்கறதில்லே.  எல்லாத்துக்கும் தன்வயப்பட்ட பயிற்சி வேணும். தன்வயப்பட்ட பயிற்சினா, தன்னை ஒண்ணுலே ஈடுபடுத்திக்கற பயிற்சி. அந்த மன ஈடுபாடு இல்லாம எது ஒண்ணும் சாத்தியப்படாது. அதனாலே ஒவ்வொண்ணையும் தான் அனுபவப்பட்டு தானே உணரணும்.  ஒருத்தர் சொல்லி பலர் கேட்டுக்கறதுங்கற மாதிரியான சமாச்சாரம் இல்லை, இது. அத்தனையும் யோகிகளின் முதிர்ந்த சிந்தனை. நானும் இப்போ முந்தி மாதிரி பயிற்சி வகுப்பெல்லாம் எடுக்கறதில்லை" என்று அவனிடமிருந்து கத்தரித்துக் கொள்கிற மாதிரி சொன்னார்.

அடுத்த வினாடியே அவன் மேல் இரங்கங்கொண்டர் போல அவர் குரல் குழைந்தது. "உனக்கு  கதை எழுதறதுக்கு வேணா உபயோகப்படற மாதிரி சந்தேகம் எதுனாச்சும் இருந்தா கேளு. விவரமா உனக்குப் புரியமாதிரி சொல்றேன். குறிப்புகள்  கொடுக்கறேன். அதோட திருப்தி படணும்.  சரியா?" என்று சம்மதம் கேட்டார்.

"ரொம்ப  சந்தோஷம், சார்" என்றான் மோகன். "கோயிலுக்குப் போனா அதுவே எனக்குத் தனி அனுபவமா இருக்கு, சார்.  இறைவன்  சன்னிதானத்தில் மனசு மிகவும் லேசாகிப்  போறது.  இறைவன் திருவுருவ முகத்தைப் பார்க்கும் பொழுது சந்தோஷம் கொப்பளிக்கறது.  என்னை லட்சியம்  செய்யாது மனம் மட்டும் குதூகலமா இறைவனோடு தனியாப் பேசற மாதிரி இருக்கு.." என்று அவன் சொன்ன போது இடைமறித்து, "உன் மனம்ங்கறது  உன்னோடது  இல்லியா?.. உன்னை லட்சியம் பண்ணாம அது மட்டும் தனியா இறைவனோட பேசறதுன்னு எப்படிச் சொல்றே?" என்று அவனை ஆழம் பார்க்கிற மாதிரி வினவினார் பு.தாசர்.

அவருக்கு புரியற மாதிரி அதை எப்படிச் சொல்லணும் என்பதற்கு மனசில் ரிகர்சல் பார்த்துக் கொள்கிற தோரணையில் தான் அடைந்த உணர்வுகளை வார்த்தைகளாக்கும் முயற்சியில் யோசிக்கும் பொழுது, "இதைத் தான் உங்க 'இது ஒரு தொடர்கதை' கதைலேயும் பாண்டியனின் அனுபவமா சொல்லியிருக்கீங்களா?" என்று வித்யா ஆர்வத்துடன் கேட்டாள்.

அவள் அப்படிக் கேட்டது மோகனுக்கு ஆறுதலாக இருந்தது. "பேஸிக்கா என் உணர்வு அது.  அதை ஒரு கதையைப் படிக்கற வாசகர்கள் என்ன விரும்புவாங்களோ அதுக்கு ஏத்த மாதிரி சொல்லியிருக்கேன்.." என்றான் மோகன்.  உடனே புரந்ததாசர் பக்கம் பார்த்து சொன்னான். "கதை எழுதறதினாலேயோ என்னவோ எதை யோசிச்சாலும் மனம் தான் முன்னாடி ஓடி வர்றது.  அது பாட்டுக்க நிறைய ஐடியாக்களைக் கொடுக்கும்.  நிறைய கற்பனைகள். இப்படி செஞ்சா என்ன அப்படிச் செஞ்சா என்னன்னு நிறைய. அதுக்காக இந்த அறிவும் சும்மா இருக்காது. அடுத்தாப்ல தான் இதோட வேலை ஆரம்பிக்கும். இது அந்த நிறையதுலே சிலதை ரிஜக்ட் பண்ணி அறிவுபூர்வமா பொருந்தற மாதிரி சிலதைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கும். நான் மனம் சொன்னது, அறிவு திருத்தினதுன்னு  ரெண்டையும் வைச்சிப்பேன். கூலா அறிவுக்கும் மனசுக்கும் நடந்த யுத்தம் கதையாயிடும்.  அறிவும் மனசும் எல்லா கேரக்டர்லேயும் கலந்து புரண்டு கதைங்கற ரூபம் கிடைச்சிடும்" என்றான்.

அவன் சொல்வதை சுவாரஸ்யமாகக் கேட்டுக்  கொண்டு  வந்த புரந்தரதாசர், "ஒண்டர்புல்.. நினைக்கறதை அருமையா நேரேட் பண்றே, பையா!" என்றார்.

அவருக்கு குஷி வந்து விட்டால் பையா என்று கூப்பிடுவார் என்று வித்யாவுக்குத் தெரியும்..  சமயத்தில் அவளைக் கூட அப்படிக் கூப்பிடுவார். அதை மனசுக்குள் குறித்துக் கொண்டே, மோகனைப் பார்த்து, "அப்புறம்?" என்றாள் அவனை உற்சாகப்படுத்துகிற மாதிரி.

"இதிலே வேடிக்கை பாருங்க, எனக்கு இந்த அறிவு- மனசு இந்த ரெண்டுக்கும் இடையேயான யுத்தம் வேண்டியிருக்கறதாலே,  அந்த யுத்தம் தான் என் கதைங்கறதாலே, இந்த அறிவும் மனசும் ஒண்ணுக்கொண்ணு சமரசம் ஆயிடக்கூடாதுங்கறதிலே கண்ணும் கருத்துமா இருப்பேன்.  ரெண்டும் ரெண்டு சண்டை ஆடுகள் மாதிரி. ரெண்டையும் புஷ்டியா வளர்த்து வைச்சிருக்கேனாக்கும்!" என்றான் மோகன்.

"நிஜமாலுமா?.. அதை எப்படி வளர்க்கறது?" என்று வித்யா கேட்டதே ஒயிலாக இருந்தது.

"வளர்க்கறதுன்னா என்ன?.. படிக்கறது தான்.. நிறைய படிக்கறேன். அதான் தீனி, இந்த ரெண்டு ஆடுகளுக்குமே.  இந்த தீனிக்காக இந்த ரெண்டும் எப்பவும் காத்திருக்கும்.  இப்போ கூட பாருங்க, இந்த தீனிக்காகத் தான் உங்கப்பா என்ன சொல்லப் போறார்ன்னு காத்திருக்கு" என்றான்.

"அட்டகாசம்ப்பா.." என்று எழுந்து மோகன் முதுகு பக்கம் கைவைத்து தட்டிக் கொடுத்தார் புரந்தரதாசர்.  "வெல்.. நீ  சொல்றது புரியறது.  எனக்குத் தெரிஞ்சதை சொல்றேன்.  நீ இப்ப உன்னோட அந்தக் கதை  'இது ஒரு தொடர்கதை' கதையைச் சொல்லு.." என்றார்.

"நான் சொல்றேம்ப்பா.." என்று தன்னிச்சையாக வித்யா முன் வந்த போது, மோகனின் முகம் மலர்ந்தது.  அவன் மனம் சந்தோஷக் கொடியை அசைத்து அசைத்து அவனைக் குஷிப்படுத்தியது.



(  இன்னும் வரும்)    







இது ஒரு தொடர்கதை -- 12

                                                 


'ஹலோ, தோழி' அனந்தசயனம்  மெளனமாக  இருப்பதைப் பார்த்து, "நான் என்ன சார் செய்யணும்?" என்று மறுபடியும் கேட்டான் மோகன்.

"அதைத்தான்-- நீ என்ன செய்யணும்ங்கறதைத் தான் யோசிச்சிண்டு இருக்கேன்.." என்று மோவாயைத் தடவிக் கொண்டிருந்தார் அனந்தசயனம்.  அடுத்த வினாடி டேபிளின்  மேல் கிடந்த ஒரு பென்சிலை எடுத்து லேசாக முன்னும் பின்னும் உருட்ட ஆரம்பித்தார்.

அவரே சொல்லட்டும் என்று அவர் விரல்களின் நர்த்தனத்தைப் பார்த்தவாறு  பேசாமல் இருந்தான் மோகன்.

நடுவில் ஒருதடவை இவன் பக்கம் திரும்பிப் பார்த்த பொறுப்பாசிரியர் ஜீ சடக்கென்று தன்  பார்வையை மாற்றி ஃபைலில் கவனம் கொள்கிற மாதிரி காட்டிக் கொண்டார்.  ஃபைலை அவர் பார்ப்பதாகக் காட்டிக்கொண்டாலும் அவர் மனசு இவர்கள் பேச்சில் தான் கவனம் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தவனாய் இருந்தான் மோகன்.

லேசாக அனந்தசயனம் தொண்டையைக் கனைத்துக் கொண்ட பொழுது அவர் யோசித்து முடித்து விட்டு தன் யோசனையை இவனிடம் சொல்லத் தயாராகி விட்டதாக மோகனுக்குத் தோன்றியது.  அதன்படியே அவர், "நீ என்ன செய்யறேனா, மோகன்.." என்று தான் நினைத்ததை சொல்ல ஆரம்பித்தார்.  "தி.நகர் சிவா-விஷ்ணு கோயில் உனக்குத் தெரியுமில்லியா? அந்தக் கோயிலுக்கு பக்கத்திலே தனலெஷ்மி  தெருன்னு ஒண்ணு இருக்கு. அங்கே போ.   வலது சாரிலே நாலாவது வீடு.  வெளிகேட் சிமிண்ட் தூண்லேயே புரந்தரதாசர்ன்னு பேர் கல்லே செதுக்கி பதிச்சிருக்கும். சாயந்தரமா போறது நல்லது.  எங்கே சுத்தினாலும் மனுஷர் ஆறு ஆறரைக்கெல்லாம் வீட்லே ஆஜராகியிருப்பார்.  போய்ப் பாக்கறையா?" என்றார்.

மோகனுக்கு கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரி இருந்தது. இருந்தாலும், "சரி, சார்.  போய்ப் பாக்கறேன்.. புரந்தரதாசர் யார், எதுக்கு நான் அவரைப்  பாக்கணும்ன்னு இன்னும் நீங்க சொல்லலையே?" என்றான்.

"ஹ..ஹ..ஹ..ஹ.." என்று அடக்கமாகச் சிரித்தார் அனந்தசயனம். "பாத்தையா? இப்படித் தான் அடிக்கடி ஆகிப்போறது.. என்ன யார்ன்னு சொல்லாமலேயே உங்கிட்டே சொன்னா உனக்கு என்ன தெரியும்?  இப்படித் தான்  அடிக்கடி ஆகிப்போறது.. என்  பார்யாள் கூட சொல்வாள்: 'ஏன்னா! பாதி யோசனைலேயே போய்டுது.  யோசிச்சதோட ரிசல்ட்டை மட்டும் ஒருத்தர் கிட்டே சொன்னா, நீங்க என்ன யோசிச்சீங்க, எதுக்குச் சொல்றீங்கன்னு யாருக்குத் தெரியும்?'ம்பாள். அது போகட்டும்.  இந்த புரந்தரதாசர்யார்ன்னா?.."

"எனக்கு ஒரு புரந்தரதாசர் தெரியும், தோழி சார்! கர்னாடக இசை மேதை புரந்தரதாசர்..."

"கரெக்ட்.  அவர் மேலே இவருக்கு  இருக்கற ஆசையாலே தான் அவர் பேரையே வைச்சிண்டிருக்கார். பேரண்ட்ஸ் வைச்ச பேர் ஸ்ரீநிவாசனோ, என்னவோ.. அற்புதமான இயற்கை நேசர் இவர்.  பிரபஞ்சம், எண்ணக் குவியல், காந்த சக்தின்னு நிறைய  சொல்வார்.  ஒவ்வொண்ணையும் அவர் சொல்றச்சே இதையெல்லாம் இவர் எங்கே தெரிஞ்சிண்டார்ன்னு கேக்கக் கேக்க ஆச்சரியமா இருக்கும். பெயிண்ட் கம்பனி ஒண்ணுலே அக்கவுண்ட்ஸ் செக்ஷன்லே இருந்து ரிடையர் ஆனவர்.  பெயிண்ட் கம்பெனிக்கும் பிரபஞ்ச ஞானத்துக்கும் என்னய்யா சம்பந்தம்ன்னு  இவர்கிட்டே பேசிண்டிருக்கறச்சே எனக்குத்  தோணும். அற்புதமான மனுஷர். போய்ப் பார். பார்த்துட்டு அவரைப் பத்தி எனக்குச் சொல்லு.." என்றார்.

"எதுக்கு நா அவரைப்  பாக்கணும்ன்னு இன்னும் நீங்க சொல்லலையே?" என்று நினைவு படுத்தினான் மோகன்.

"பாத்தையா? எதை முக்கியமாச் சொல்லணமோ அதைச் சொல்லாம இருந்திருக்கேன், பார்! நல்ல வேளை, ஞாபகப்படுத்தினே!" என்றார் அனந்தசயனம். "நீ இந்த 'இது ஒரு தொடர்கதை' கதைலே எழுதியிருக்கேல்யோ? அந்த பாண்டியனுக்கு கோயில்லே ஏற்பட்ட அனுபவத்தைப்  பத்தி.. அந்த மாதிரி அனுபவங்களைப் பத்தி எங்கிட்டே இந்த புரந்தரதாசர் நிறையச் சொல்லியிருக்கார்.  இதெல்லாம் ரொம்ப சாதாரணம். அவர் OBE பத்திச் சொன்னப்போத்தான் எனக்கு ஆச்சரியமான ஆச்சரியமா இருந்தது.."

"OBE-ன்னா?"

"Out of Body experience.  உடம்பை விட்டு வெளியே சஞ்சாரம் செஞ்சிட்டு மறுபடியும் நம்ப உடம்புக்கே வந்து சேர்ந்துடறது.  இந்த மாதிரி நிறைய விஷயங்களைச் சொல்லியிருக்கார். அதுக்கெல்லாம் என்னன்னவோ காரணம்லாம் சொல்வார்ப்பா! எனக்கு சரியாச் சொல்லத் தெரிலே.. நீயே அவரை நேர்லே பாத்துடேன்.  ஒரு தடவை அவரை பாத்துட்டையா, விடமாட்டே! அவரோட பேசறது, அவர் சொல்றதையெல்லாம் கேக்கறது உங்கதைக்கு ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்.. அதுக்குத் தான் சொல்றேன்.." என்றார்.

"அப்படியா சார்?" என்று மலர்ந்தான் மோகன். "நிச்சயம் செய்யறேன்,சார்!"  என்று டைரி எடுத்து புரந்தரதாஸர் என்கிற பெயரை எழுதி முகவரியைக் குறித்துக் கொண்டான்.

"அப்ப நான் வரட்டுமா.." என்று விடை பெற்றுக் கொண்டார் அனந்தசயனம்.

அப்பொழுது தான் அவரைப்  பார்க்கிற மாதிரி, "என்ன ஓய்! எப்படி இருக்கீர்?" என்றார் ஜீ.

"மோகன் சார்கிட்டே வேலை முடிஞ்சாச்சு.. அடுதாப்லே உங்க கிட்டத் தான் வரலாம்ன்னு இருந்தேன்" என்று நாற்காலியிலிருந்து  எழுந்தவாறே சொன்னார் அனந்தசயனம்.

"அப்பவே உம்மைப்  பாத்திட்டேன்.  மோகன்கிட்டே பேசி முடியட்டும்ன்னு  இருந்தேன்" என்றார் ஜீ. "ஒண்ணுமில்லே.. டெஸ்பாட்சிலே லெட்டர்லாம் வாங்கிகிட்டீங்களான்னு கேக்கத்தான்.  'ஹலோ,தோழி'க்கு நெறைய லெட்டர்ல்லாம் வந்திருக்கு, பாருங்கோ.. இன்னும் இரண்டு மாசத்துக்கு உம்ம பாடு கொட்டாட்டம் தான்.. உம்ம பக்கத்துக்கு நிறைய வாசக ரசிகர்கள், ஓய்!" என்றார்.

"அதை அப்படியே ஆசிரியர் காதுலேயும் போட்டு வைக்கறது தானே..." என்றார் அனந்தசயனம், ஜீயின் பக்கத்தில் போய்.

"வேடிக்கை என்ன தெரியுமா? ஆசிரியர் தான் இதையே எங்கிட்டே சொன்னார்.  அதைத்தான் நான் உம்ம கிட்டே சொன்னேன்.." என்று சொல்லி புன்னகைத்தார் ஜீ.

"அதானே பார்த்தேன்" என்றார் அனந்தசயனம்.

"நம்ம பத்திரிகைலே எந்தந்த பகுதியை எத்தனை பேர் ரசிச்சுப் படிக்கறா, அதெல்லாம் பத்தி என்ன நினைக்கறான்னு-- அப்படி அவா நினைக்கறதுக்கு ஏத்த மாதிரி என்னன்ன புதுப்புதுப் பகுதிகளை புதுசா புகுத்தலாம்ன்னு அனலைஸ் பண்ணி  பெரிசு பெரிசா கிராஃப்பே போட்டு வைச்சிருக்கார், ஆசிரியர்.  கூப்பிட்டுக் காட்டினார்.  இந்த நாலஞ்சு மாசத்லே உம்ம பகுதி ஜிவ்வுனு எகிறியிருக்கு, ஓய்!"

"ரொம்ப சந்தோஷம், நல்ல சேதி சொன்னதுக்கு.. சொல்லப்போனா, இதான் எழுதறவனுக்கு உற்சாக டானிக், இல்லியா?.. இந்த ஜோர்லேயே போனதும் உக்காந்து எழுதணும்.. வரட்டுமா.." என்றார் அனந்தசயனம்.

"பேஷாய்.." என்று தானும் எழுந்திருந்து  கைகூப்பினார் ஜீ.


மாலை தி.நகர் வழக்கம் போலவான நெரிசலில்  இருந்தது.  தனலெஷ்மி தெரு சுலபத்தில் பார்வையில் சிக்கியது, முடிக்க வேண்டிய ஒரு வேலையின் தொடக்க சந்தோஷமாய் மோகனுக்கு இருந்தது.

தெருக்குள் நுழைந்ததும் ஒரு குடியிருப்பு பகுதிக்கு வந்த உணர்வு சற்று முன்னான நகர் சந்தடிக்கு வித்தியாசமாக இருந்தது.  தெருவின்  வலது பக்கம் மாறி பார்த்துக் கொண்டே வந்த பொழுது  புரந்ததாசரின் பெயர்ப் பலகை பதித்த வீடு கண்ணில் பட்டது.

வாசல் இரும்பு கேட் பட்டை இரும்புக் கொக்கி போட்டு மூடியிருந்தது. அதைத் தாண்டி உள்பக்கம் காய்ந்த புல்வெளி. புல்வெளியில் ஒரு வேப்பமரம் கிளைபரப்பி அந்தப் பிரதேசத்தையே உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தது.  புல்வெளியின் நீளம் இருபதடி இருக்கும்.  அதைத் தாண்டியிருந்த வீட்டின் முன்புறம் சிமிண்ட் படிகட்டுகள். வீட்டின் முன்னால் தென்பட்ட திண்ணை போன்ற பகுதி மரச்சட்டங்களால் அடைக்கப் பட்டிருந்தது.

உள்ளே நாய் ஏதும் இருக்காது என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டு, மோகன் வாசல் கேட் கொக்கியில் கை வைத்தான்.  கொக்கியை நீக்கிய பொழுது லேசாக கேட்ட சப்தம் உள்வீடு வரைக் கேட்டு விட்டது போலும்.

"யாரது?.." என்று ஒரு பெண்ணின் குரல் கேட்ட வினாடி நேரத்தில் அவளே வாசல் திண்ணையில் பிரசன்னமானாள்.  வாளிப்பான தேகம். மாநிறம் என்றாலும் அம்சமான முகம். தலையில் சீப்பு தொத்திக் கொண்டிருந்தது. தலைவாரிக் கொண்டிருந்தவள், வாசல் சப்தம் கேட்டு வந்திருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டான் மோகன்.

"உங்களுக்கு யாரைப்  பாக்கணும்?" என்று கேள்விக்குறியாய் முகம் மாறி அந்தப் பெண் கேட்டதும், மோகன் கேட் தூணில் பதித்திருந்த பெயர் பலகையைக் காட்டினான். "அவரைப் பார்க்க வேண்டும்.." என்று கொஞ்சம் உரக்கச் சொன்னான்.

"இருக்கார்.. உள்ளே வாங்க.." என்று சொல்லி விட்டு அந்தப் பெண் உள்பக்கம் போய் விட்டாள்.  "அப்பா! உன்னை யாரோ பாக்க வந்திருக்கா, பாரு!" என்று ஒலி அஞ்சல் செய்தது போல உள்ளிருந்து அந்தப்  பெண்ணின் குரல் வெளிக்கதவு தாண்டி வாசல் திண்ணை வரை வந்து விட்ட மோகனுக்குக் கேட்டது.

அவனே எதிர்பார்க்கவில்லை. மீண்டும் வெளிப்பக்கம் அந்தப்பெண் வந்த பொழுது 'நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து' என்று தொடங்கும் பாரதிதாசனாரின் நிலவுப் பாட்டு மோகனின் நினைவுக்கு வந்தது.

"அப்பா இப்போ வந்திடுவா.. உள்பக்கம் வந்து இப்படி உட்கார்ந்திருங்கோ.." என்று அந்தத் திண்ணையோடு ஒட்டியிருந்த உள்பக்க ஹால் காட்டினாள்.

இரண்டு மூன்று பிரம்பு சோபாக்கள் அங்கிருந்தன.  பார்க்க வருகின்ற வெளி ஆட்களோடு உட்கார்ந்து பேசவான வரவேற்பு ஹால் போலிருந்தது.

அடக்கமாக உள்பக்கம் வந்து ஒரு சோபாவில் உட்கார்ந்தான் மோகன்.  அவன் உட்காருவதற்குத்தான் காத்திருந்த மாதிரி, அவன் உட்கார்ந்ததும் தலைக்கு மேலான மின்விசிறி சுழன்றது.  அந்தப் பெண் தான் ஸ்விட்சை இயக்கியிருப் பாள் என்கிற உள்ளுணர்வில் அவள் இங்கே தான் இருக்கிறாளோ என்கிற ஆவலில் பின்பக்கம் தலை திருப்பிப் பார்த்தான் மோகன்.

அவன் அப்படிப் பார்த்த நொடியில் விடுவிடுவென்று உள்பக்கம் செல்கிற அந்தப் பெண்ணின் பின்பக்கம் தான் அவனுக்குத் தெரிந்தது..

மாலையிலிருந்து நடக்கும் காரியங்களின் போக்கு மோகன் மனசுக்கு மிகவும் பிடித்திருந்தது.

இன்று தான்  ஆரம்பம்.  இந்த ஆரம்பம் இனிமேல் இந்த வீட்டிற்கு நிறைய தடவைகள் வந்து போவதான தொடர்ச்சிகளைக் கொண்டிருக்கும் போல ஒரு எண்ணம் அந்த ஷணம் அவன் நினைவில் படிந்தது.  மீண்டும் அதையே நினைத்துப் பார்க்க சுகமாகவும் இருந்தது.

அந்த சமயத்தில் ஹாலிருந்து  பார்த்தாலே தெரியும் படியாக அவன் உட்கார்ந்திருந்த இடத்திற்கு பின்பக்கமாயிருந்த மாடிப்படிகளில் யாரோ இறங்கி வருகிற உணர்வு அவனுக்கு ஏற்பட்டது.


(இன்னும் வரும்) 

இது ஒரு தொடர்கதை -- 11

                                               11



காளியண்ணன் கடையைக் கடக்கும் பொழுது பாண்டியன்  திரும்பிப் பார்த்தான்.  கடையிலிருந்த காளியண்ணன் இவனைப் பார்த்ததற்கு அடையாளமாக கையசைத்தான்.  மங்கை பக்கத்தில் இல்லாமலிருந்தால் பெயர் சொல்லி அழைத்திருப்பான் போலிருந்தது.

பாண்டியன் ஒரு வினாடி தயங்கி, "கடையில் ஏதாவது வாங்க வேண்டுமா?" என்று மங்கையிடம் கேட்டான். ஏதுமில்லை என்பதாக மங்கை தலையசைத்தாள்.

இருவரும் தங்கள் செருப்புகளை கடையின் பக்கத்திலிருந்த தடுப்பில் கழட்டி விட்டு விட்டு வந்த பொழுது "டூரிஸ்ட் வண்டி வந்திருக்கு.. அதான் கோயில்லே ரஷ்.." என்று கோயிலின் அப்பொழுதிய நிலவரத்தைச் சொல்கிற மாதிரி சொன்னான் காளியண்ணன்.

"அப்படியா?.." என்று அவன் சொன்னதை கேட்டுக் கொண்டதற்கு அடையாளமாக லேசாகச் சிரித்து நகர்ந்தான் பாண்டியன்.

கோயிலை நெருங்கிய பொழுது தாழ்தள டூரிஸ்ட் பஸ்கள் இரண்டு அருகருகே நின்று கொண்டிருப்பது தெரிந்தது.  இளநீர் வண்டிக்காரருக்கு  நல்ல  போணி. சீவிச் சீவி தலைப்பகுதியை துளையிட்டு ஸ்ட்ரா போட்டுத் தந்து  கொண்டேயிருந்தார். அந்த நேரத்திலும் ஒரு கும்பலே இளநீர் குடித்துக் கொண்டிருந்தது.

இந்தக் கோயில் பாடல் பெற்ற ஸ்தலம்.  சுற்று வட்டார பதினைந்து கோயில் செயினில் இதுவும் ஒரு கண்ணி..  அதனால் டூரிஸ்ட் பஸ்கள் வந்து போவது வெகு சகஜம்.  இப்படியான பஸ்களில் வந்து போவோர்கள் எதை வாங்குவார்கள் எதை வாங்க மாட்டார்கள் என்று தெரியாது.  அதனால் சன்னதித் தெரு நெடுக எக்ஸிபிஷன் மாதிரி நிறைய விதவிதமான கடைகள்.

துவஜஸ்தம்பத்தைக் கடந்த பொழுது இடது பக்க பிராகார முனையில் ஒரு பெருங்கூட்டம் நின்றிருந்தது இங்கிருந்தே தெரிந்தது.  "இந்த மாதிரி டூரிஸ்டுங்க வந்தாத்தான் நம்ம ஊர் கோயிலும் களைகட்டுது.." என்று போகிற போக்கில் பக்கத்தில் வந்தவர் சொல்லிக்  கொண்டே சென்றதைக் கேட்டு பாண்டியன் மங்கை பக்கம் திரும்பிச் சிரித்தான்.

"அவர் சொன்னத்துக்காச் சிரிக்கிறீங்க?" என்றாள் மங்கை.

"பொதுவா பிரதோஷம், பின்மாலைப் பொழுது இந்த நேரங்கள்லே தான் கோயில்லே உள்ளூர் ஜனங்களைப்  பாக்க முடியுது. மத்தபடி அவர் சொன்னது சரிதான். டூரிஸ்டுங்க வந்தாத் தான் இந்த மாதிரி கலகலப்பு" என்றான் பாண்டியன்.

அவன் சொன்னது  போலவே உள்ளே சன்னதிக்கு இருவரும் சென்றதும் நெரிசல் கொஞ்சம் அதிகமாகத் தான் இருந்தது.  வெளியூர்க்காரர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றான் பாண்டியன். கூட்டம் கொஞ்ச நேரத்திலேயே மட்டுப்பட்டதும் இருவருக்கும் ஆடலரசனின் அற்புதமான தரிசனம் கிடைத்தது.

வலப்புற மேற்கரத்தில் டமாருகம் பற்றியும், கீழ்க்கரம் அபயஹஸ்தமாகவும், இடப்புற மேற்கரம் அக்னியைத் தாங்கியும், கீழ்க்கரம் குஞ்சிதபாதம் காட்டியும், வலது திருவடியை முயலகன் மீதும், இடதை தூக்கிய திருவடியாகவும் கொண்ட இறைவனின் அழகை தரிசித்த களிப்பில் மங்கை
மெய்மறந்திருந்திருந்தாள்.  பாண்டியனோ 'தோள் கண்டார் தோளே கண்டார்' நிலையில் பெருமானின் திருமுகத்தில் பதித்த விழிகளை பெயர்த்தெடுக்க சக்தியில்லாதிருந்தான்.  அந்த லயிப்பினூடையான நினைவு சொக்கலில் பெருமானின் முக அழகில் இன்று குறும்புக் கீற்றொன்று ஒளிந்திருக்கிற மாதிரி பாண்டியனின் மனசுக்குப் பட்டது.


ஏற்கெனவே அழகு கொஞ்சும் ஈஸ்வரன் முகத்தில் இந்த குறும்பு பாவனை இன்னும் அலாதி அழகைச் சேர்த்திருந்தது.  அதை உணர்ந்த மாத்திரத்தில் சந்தோஷத்தில் பாண்டியனின்  மனம் குதிபோட்டது.  இந்த விளையாடல் உணர என்ன பாக்கியம் செய்தோம் என்று நினைத்துக் கொண்டான். அந்தக் கோலத்தை இன்னும் உள்வாங்கிக் கொள்கிற ஆவலில் தீட்சண்யத்தைப் பார்வையில் தேக்கி பாண்டியன் பார்த்த பொழுது குறும்பு போன இடம் தெரியாது இயல்பாய்த் தெரிந்தது. . உடனே அவன் மனம் சுணங்கிப் போனது. குறும்பு கொப்பளிக்கும் அந்த திருமுகத்தை மறுபடியும் பார்க்க வேண்டுமென் று மனசு தவியாய் தவித்தது.  என்ன செய்யலாம் என்று ஒருவினாடி யோசித்தான்.  பார்வை தன்னை வஞ்சிக்கிறதோ என்று பதட்டப்பட்டான். தொடர்ச்சியாய் கூர்ந்து பார்ப்பதினால் இப்படி சலனம் ஏற்பட்டு இருக்கலாம் என்று நினைத்தவன், இமைகளை மூடி ஒருநொடி பார்வையைத் துண்டித்து புதுசாகப் பார்க்கிற மாதிரி இமை திறந்து பார்த்தால் ஒரு கால் அந்த குறும்பு முக தரிசனம் மறுபடியும் கிடைக்குமோ என்கிற நப்பாசையில் இரு கைகளையும் குவித்து கண்மூடி இறைவன் நாமம் துதித்தான். சடக்கென்று கண் திறந்து பார்த்தான்.  ஊஹூம்.. இவன் ஜாலக்குகளுக்கெல்லாம் இறைவன் மசிந்ததாகத் தெரியவில்லை.  பாண்டியன் என்ன பாடுபட்டும், நேராக-பக்கவாட்டில்- என்று எப்படிப் பார்த்தும் பெருமானின் முகத்தில் விளைந்த குறும்பின் விளைவான அந்த குறுஞ்சிரிப்பு அவன் உணர்வில் பதிய மாட்டாமல் அடம் பிடித்தது.  சும்மா இருந்தவனுக்கு சொர்க்கலோகத்தைக் காட்டி பறித்துக் கொண்ட மாதிரி இருந்தது.  அந்த ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் பாண்டியனின் மனசு பரபரத்தது.

அதற்குள் தீபாராதனைத் தட்டு கற்பூர ஜ்வலிப்புடன் நெருங்கி விட்டது.  மங்கை தான் பர்ஸ் திறந்து சில்லரை எடுத்துத் தட்டில் இட்டாள்.  அவள் தட்டில் இட்ட பளபள நாணயத்தில் கற்பூர ஆரத்தியின் ஜ்வலிப்புப்பட்டுத் தெறித்தத் தருணத்தில் இறைவனின்  அந்த குறும்பு முகக் கோலம் அட்டகாசமாக நாணயத்தில் பட்டுத் தெறித்த ஒளியில் காட்சியளித்து
மறைந்ததை பாண்டியன் பார்த்தான்.  அவன் மனசு நெக்குறுகிக் கரைந்தது.   சந்தோஷத்தில் பூரித்து சிலிர்த்தது.  தலையிலிருந்து உள்ளங்கால் வரை ஜில்லிட்ட மாதிரி இருந்தது. அர்ச்சகர் தந்த வீபூதியை அனிச்சையாய் கைக்குழிவில் வாங்கி நெற்றியில் இட்டுக் கொண்டது அவனே இல்லை போல் அவனுக்குத் தோன்றியது.

"போலாமா?.." என்ற மங்கையின் குரல் எங்கோ வெகு தூரத்திலிருந்து கேட்பது போலக் கேட்டாலும் தெளிவாக இருந்தது.  நிகழ்வுலகிற்கு இழுத்துக் கொண்டு வரப்பட்ட சுவாரஸ்யத்தில்"போலாமே?" என்றவன் தலை நிமிர்த்தி மீண்டும் இறைவனைப் பார்த்தான்.  'போய்விட்டு வா!' என்று மலர்ச்சியுடன் அனுமதி கிடைத்த மாதிரி இருந்தது.  சின்னக் குழந்தை மாதிரி மலங்க மலங்கப் பார்த்தபடி மங்கையைத் தொடர்ந்தான் பாண்டியன்.

வலதுபக்க அம்மன் சன்னதியிலும் கூட்டம் தான்.  இறைவன் சன்னதியில் தரிசனம் முடித்து அம்மன் சன்னதிக்கு வந்தவர்கள் தான் இங்கும் சூழ்ந்து நின்றிருந்தார்கள்.  அவர்கள் திருப்தியாக அர்ச்சனை, தரிசனம் எல்லாம் முடித்து செல்லும் வரை பாண்டியன் விலகியிருந்து காத்திருந்தான்.  மங்கை மட்டும் சென்று சன்னதி பக்கம் எட்டி எட்டி பார்த்து விட்டு வந்தாள்.  வந்தவள், "ஒண்ணும் தெரிலீங்க.." என்றாள்.

"நாம் தான் அடிக்கடி வர்றோமே?.. அவங்க இருந்து நிதானமாக தரிசனம் செய்து போகட்டும்.  அதற்கு பின்னால் நாம் போகலாம்.." என்றான் பாண்டியன்.

அம்மன் கர்ப்பகிரகத்திற்கு நேர் எதிரே மேல் பக்கத்தில் பெரிய நிலைக் கண்ணாடி ஒன்றை பதித்திருந்தார்கள்.  அதில் அம்மன் உருவம் தெரிகிறதா என்று பார்த்து விட்டு வந்தவள், வரும் பொழுதே உதடைப் பிதுக்கிக் கொண்டு வந்தாள்.

ஐந்தே நிமிடங்களில் கூட்டம் கலைந்து விட்டது.  பாண்டியனும் மங்கையும் நிதானமாக நின்று கைகுவித்தார்கள்.  மடிசார் புடவை கட்டி அம்மனுக்கு அலங்காரம் செய்திருந்தனர்.  திவ்யமான தரிசனம். அர்ச்சகர் கொடுத்த குங்குமம் வாங்கி இருவரும் இட்டுக் கொண்டனர்.

பிராகாரச் சுற்றுக்காக இடப்பக்கம் வந்த பொழுது அறுபத்து மூவர் வரிசை ட்யூப்  லைட் போட்டு வெளிச்சமாக இருந்தது.  அந்தப்பக்கம் விறுவிறுவென்று போய் அறுபத்து மூவர்களில் யாரையோ தேடிக்கொண்டிருப்பவளைப் போல் மங்கை ஒவ்வொரு சிலையாகப் பார்த்துக் கொண்டே வந்தாள். இங்கிருந்து பார்க்கும் பொழுதே பாண்டியனுக்கு நின்ற சீர் நெடுமாற நாயனாரின்  சிலைஎந்த இடத்தில் இருக்கும் என்று தெரிந்த து.  அவரைத் தான் தேடிக்கொண்டு மங்கை போகிறாள் என்று நினைத்தான்.  அவன்  அப்படி நினைக்கும் பொழுதே, மங்கை சடக்கென்று நின்று விட்டாள்.   நின்றவள் இவன் நிற்கும் பக்கம் பார்த்து கையசைத்தாள்.  பாண்டியன் அவளை நெருங்கிய போது மங்கை, மங்கையர்கரசியாரின் சிலையின்  முன்  நின்று கொண்டிருந்தாள். .

பாண்டியன்  தன்  அருகாமையில் வந்ததை உணர்ந்ததும், "ராணி இங்கே, ராஜா எங்கேயோ?" என்றாள்.

"வா, காட்டுகிறேன்.." என்று அவளை அழைத்துப் போனான் பாண்டியன். கிட்டத்தட்ட பத்து பன்னிரண்டு சிலைகளைத் தாண்டி, "இதோ.." என்று நெடுமாற நாயனாரைக் காட்டினான் பாண்டியன்.

கொஞ்ச நேரம் அரசியார் இருந்த பக்கமும், இந்தப் பக்கமும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள் மங்கை.  "நம் கணக்குக்கு இன்னும் ஒருத்தர் குறையறார், இல்லியா?.. அந்த மந்திரியார் பேரு என்னங்க?.."

"யாரு, குலச்சிறையாரைச் சொல்லிறியா?"

"ஆமாங்க.. அவரும் அறுபத்து மூவரில் ஒருவர் தானே?.. அவரு எங்கேங்க?"

"நானும் பார்த்ததில்லே.. தேடிக் கண்டுபிடிச்சிடலாம்.." என்ற பாண்டியன் "நான் முன்பக்கம் பார்த்துகிட்டு வர்றேன்.. நீ இதுக்கு மேலே பார்த்துகிட்டுப் போ.." என்று வரிசையாக சிலைகளுக்கு உச்சியில் எழுதியிருந்த பெயர்களைப் பார்த்துக் கொண்டே போனான்.

குலச்சிறையார் மங்கையின் கண்களுக்குத் தான் தட்டுப்பட்டார். "அவரு இங்கே இருக்காருங்க.." என்று மங்கையின் குரல் கேட்டுத் திரும்பி, வேகமாக அவள் நின்றிருந்த இடம் நோக்கி வந்தான் பாண்டியன்.  இவனும் மங்கையும் சேர்ந்து ஏட்டில் படித்திருந்த இந்த மூன்று நாயன்மார்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் அவன் நினைவுத் திரையில் ஓடின.  மங்கையுடன் சேர்ந்து கோயிலுக்கு வந்திருக்கையில் ஒருசேர இந்த நாயன்மார்களைப் பார்த்ததில்  ஒரு நிறைவு அவன் மனசில் குடிகொண்டிருந்தது.  அது அவன் அடைந்த உற்சாகத்தில் தெரிந்தது.  மங்கையை அழைத்து பக்கத்தில் நிறுத்திக் கொண்டான். இருவரும் சேர்ந்து நின்று அறுபத்து மூன்று நாயன்மார்களையும் வணங்கினர்..

பிராகாரமெங்கணும் ட்யூப் லைட் போட்டு வெளிச்சத்திற்கு பஞ்சமில்லாமல் இருந்தது.  அதனால் இலேசாக இருட்டு கவிந்தாலும் கோயில் சுற்றுப்பாதையைச் சுற்றி வருவது சுலபமாக இருந்தது.  ஸ்தல விருட்சம் இருந்த பகுதிக்கு பக்கத்தில் இருந்த அகலமான மண்டபத்தை அலங்காரமான தூண்கள் தாங்கி நின்றன. தூண்களில் தாமரை மலர்கள் இதழ் விரித்து சிரித்துக் கொண்டிருந்தன.  பீடங்களிலோ படமெடுத்த நாக உருவங்கள். உபானம் முதல் ஸ்தூபி வரை கல்லினாலேயே கட்டப்பட்ட  கற்றளி சோழர்கள் கட்டிய கோயில் என்பதைத் தெரிவித்தது.

சிலுசிலுத்த காற்றில் கருங்கல் மேவிய சுற்றுப்பாதையில் நடப்பது மங்கையின் மனதுக்கு இதமாக இருந்தது. அதுவும் காதல் கணவன் அருகில் பாதுகாப்பாக நடந்து வருவது அந்த இதத்தை மேலும் இதமாக்கியது. பிராகார பாதை முடியும்  இடத்தில் சற்று மேல் தூக்கிக் கட்டப்பட்ட படிக்கட்டுகளைக் காட்டி, "ஏங்க, இங்கே கொஞ்ச் நேரம் உட்கார்ந்து விட்டுப் போகலாமா?" என்றாள் மங்கை.

"செய்யலாமே?" என்றபடி அந்த படிக்கட்டுகளை நெருங்கி வந்த பாண்டியன் சுற்றுப்பாதையில் சுற்றி வரும் யாருக்கும் இடைஞ்சலாக இருக்கக்கூடாதெ ன்று  ஒரு மூலைப் பகுதி பார்த்து அமர்ந்தான். மங்கையும் அவன் பக்கத்தில் அமர்ந்து கொண்ட போது, இறைவன் சன்னதியில் இன்று தனக்கேற்பட்ட அனுபவத்தை அவளுக்குச் சொல்லலாமா என்று பாண்டியன் நினைத்தான். அப்படி நினைத்தானே தவிர தான் அடைந்த அந்த அற்புத உணர்வை அப்படியே அவளும் உணருகிற மாதிரி சொல்ல முடியுமா என்பது அவனுக்கு சந்தேகமாகவே இருந்தது.

அவனின் அமைதியைக் கலைக்கிற மாதிரி, "என்னங்க?.." என்று அவன் சட்டையைத் தொட்டுக் கேட்டாள் மங்கை."நானும் பாத்திட்டுத்தான் வர்றேன்.. என்னவோ அப்போலேந்து ஏதோ யோசனைலேயே இருக்கறப்பல  இருக்கே?  என்ன விஷயம்? எங்கிட்டே சொல்லக் கூடாதா?" என்றாள்.

மங்கையிடம் சொல்லலாமா வேண்டாமா என்று அவனே இரட்டை மனமாய் இருக்கையில், மங்கையே அது பற்றிக் கேட்கும் பொழுது சொல்லாமல் இருக்கக் கூடாது என்று பாண்டியன் நினைத்தான்.

அவளுக்கு புரியும் படியாகச் சொல்ல வேண்டும் என்பதே அவன் கவலையாய் இருந்தது.  முடியும் வரை அப்படிச் சொல்வதற்கு முயற்சிப்போம் என்கிற முடிவான எண்ணத்தில் ஆரம்பத்திலிருந்து அத்தனையையும் விவரித்தான்.  தான் சொல்வதை சரியானபடிக்கு மங்கை உள்வாங்கிக் கொள்கிறாளா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளும் விதத்தில் அவள் முக மாற்றங்களை உன்னிப்பாக கவனத்தில் கொண்டவாறே பாண்டியன் சொல்லிக் கொண்டு வந்தான்.  தீபாராதனைத் தட்டு கற்பூர வெளிச்சம் நாணயத்தில் பட்டுத் தெறித்த ஒளியில் பெருமானின் குறும்புத் தோற்றத்தைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது என்று பாண்டியன் சொன்ன போது அவள் முகம் அடக்க முடியாத வியப்பில் மிளிர்ந்தது. லேசாக அவன் விரல் பற்றிக் கேட்டுக் கொண்டே வந்தவளின் பிடி இறுகியது போலத் தோன்றியது பாண்டியனுக்கு.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டவள், "ரொம்ப அதிசயமான்னா இருக்கு?.." என்று தலைசாய்த்து அவனை புதுசாக ஆராய்கிறவள் மாதிரிப் பார்த்தாள்.  "ஒருகால் நடந்தது அத்தனையும் உங்கள் பிரமையாய் இருக்குமோ?" என்று அவள் கேட்ட போது, "இல்லை, பெண்ணே!" என்று அவள் கேட்டதற்கு பதில் சொல்கிற மாதிரி பக்கத்து தூண் இருட்டுப் பகுதியிலிருந்து ஒரு குரல் வந்தது.

சடக்கென்று பாண்டியனும், மங்கையும் அந்த இருட்டுப் பகுதி பக்கம் திரும்பிப் பார்த்தனர்.


(இன்னும் வரும்)



குறிப்பு: படங்கள் உதவிய  நண்பர்களுக்கு நன்றி
   

இது ஒரு தொடர்கதை -- 10

                                               10




'மனவாசம்' பத்திரிகையில் 'ஹலோ, தோழி...' என்று ஒரு பகுதி உண்டு.  வாழ்க்கையில் தங்களுக்கு ஏற்பட்ட வித்தியாச அனுபவங்களை நெருங்கிய தோழியிடம் பகிர்ந்து கொள்வதைப் போல பத்திரிகைத் தோழியிடம் பகிர்ந்து கொண்டு பதில் பெறுகிற மாதிரியான ஒரு பகுதி அது.  இந்தப் பகுதியில் பகிரப்படுகிற அனுபவங்கள் பெரும்பாலும் படிக்கிற வாசகர்களை ஏதாவது ஒருவிதத்தில் கவருகிற மாதிரி அமைந்திருக்கும்.

எழுபத்தைந்து வயசு அனந்தசயனம் தான் அந்தப் பகுதியைக் கவனித்துக் கொள்பவர். அதாவது அவர் தான் தோழி.  மாதத்திற்கு ஒருமுறை அலுவலகத்திற்கு வந்து நான்கு வாரங்களுக்கான 'ஹலோ, தோழீ'க்கான மேட்டரை ஒரு சேர கொடுத்து விட்டுப் போவார். அப்படி வருகையில் இந்தப்  பகுதிக்காக வாசகர்களிடமிருந்து வரும் கடிதங்களையும் பெற்றுச் செல்வார். 'ஹலோ, தோழீ'யின் தொடர்ச்சிப் பகுதிகளுக்கு அந்தக் கடிதங்கள் தாம் அடித்தளம்.

இப்பொழுது புதிதாக உதவி ஆசிரியர்களுக்கு 'பாரம்' பிரித்த சூழ்நிலையில் 'ஹலோ, தோழீ' பகுதி மோகனுக்காக ஒதுக்கப்பட்ட பாரத்தில் ஒரு பகுதியாக சேர்ந்து கொண்டிருந்தது.  அதனால் இந்தத் தடவை அவர் வந்திருந்த பொழுது மோகனை நேரிடையாகப் பார்த்து அவனிடம் தான் கொண்டு வந்திருந்த அச்சுக்கான மேட்டரைக் கொடுத்தார்.  அவரது வயதிற்கும் அனுபவத்திற்கும் மரியாதை தரும் நோக்கில் மோகன் எழுந்திருந்து அவர் தந்த காகிதங்களை வாங்கிக் கொண்டான்..

"தோழி, சார்! உங்கள் பகுதிக்கு நானும் ஒரு வாசகன், தெரியுமோ உங்களுக்கு?" என்று அவன் சொன்னதும் கலகலவென்று சிரித்து விட்டார் அனந்தசயனம். "தோழி,சார்'ன்னு நீங்க என்னை அழைச்சதாலே சிரிச்சிட்டேன். தப்பா நெனைக்காதீங்க.." என்று அவர் சொன்னதும் மோகனின் இதழ்க் கடையில்  புன்முறுவல் தவழ்ந்தது.

"ஆசிரியர் தான், இந்த 'ஹலோ, தோழீ' பகுதிக்கு அந்தத் தலைப்பைக் கொடுத்தது. சில விஷயங்களை ஒரு பெண் சொல்ற மாதிரி இருந்தா ஈடுபாட்டோட ஆண்களும் கேப்பாங்கன்னு அவர் சொன்னார்" என்றார் அ.சயனம். "இந்தப் பகுதியை எழுதறது ஆணா இருந்தாலும், பெண் எழுதற மாதிரி ஒரு தோற்றம் கிடைச்சாப் போதும்ன்னார் அப்போ.  அவர் சொன்னது கிட்டத்தட்ட சரியாத் தான் போய்க்கிட்டு இருக்கு. கம்பாரிங் வித் பெண் வாசகர்கள், எனக்கு ஆண் வாசகர்கள் தான் அதிகம்." என்றார். அப்படிச் சொன்னதில் ஒரு சுதந்திரத் தன்மையை அவர் உணர்ந்த மாதிரி இருந்தது.

"அப்படீன்னா, வாட் எபெளட் பெண்கள்?.. பெண் சொல்றதை பெண்கள் எப்படிக் கேட்டுப்பாங்க?.. எனி ஐடியா?" என்று அவர் பக்கம் தலையைச் சாய்த்துக் கேட்டான் மோகன்.

"இது கொஞ்சம் கஷ்டமான கேள்வி..." என்று மோவாயைத் தடவி விட்டுக் கொண்டார் அனந்தசயனம். "இருந்தாலும் எனக்குத் தெரிஞ்சதைச் சொல்ல முயற்சிக்கறேன்." என்று தொலைபேசி இணைப்புக்கு அருகில் நாற்காலி போட்டு உட்கார்ந்து லெட்ஜர் என்ட்ரி போட்டுக் கொண்டிருந்த சாந்தா பக்கம் பார்த்தார்.  அவளுக்குக் கேட்டு விடக்கூடாது என்பதை நிச்சயப்படுத்திக் கொண்ட மாதிரி தாழ்ந்த குரலில்,"பொதுவாச் சொல்றேன்.."என்று தான் நினைப்பதை சொல்ல ஆரம்பித்தார்.. " இந்த யோசிக்கறதுங்கறதை எடுத்திண்டாலே அதுவே பெண்கள் குணம்  தான். அவங்க நடவடிக்கைலாம் பாத்தாலே தெரியும். தடாலடியா இல்லாம  எதுவும் யோசிப்பின் அடிப்படைலே இருக்கும். பெண்கள்னாலே  அவங்க நினைப்புலே ஒரு விசேஷம் உண்டு. எல்லாத்திலேயும் இவங்களுக்குன்னு ஒரு தீர்மானமான கருத்து இருக்கும். தே ஆர் வெரிமச் ஸின்ஸியர் டு தெர் தாட்ஸ். அப்படி அவங்க வைச்சிருக்கிற கருத்துக்கு ஒத்து வந்தா, இந்த  வாரம் தோழி நல்லாச் சொல்லியிருக்காளேன்னு நெனைச்சிப்பாங்க.  ஒத்து வரலைனா, பெரிசா சொல்ல வந்துட்டா, பாரு'ன்னு தூக்கி எறிஞ்சிடுவாங்க.. தட்ஸ் ஆல்.." என்று கையை வீசிக் காட்டியவர் தொடர்ந்தார். "இதுலே விஷயம் என்னன்னா, மோகன்.. வீ ஆல் ஆர் ஹூயூமன் பீயிங்ஸ்.. இருந்தாலும் ஒரு அட்ராக்ஷன். அவ்வளவுதான். இதிலே ஆணுக்கு இருக்கற தீவிரம் பெண்ணுக்கு இல்லேன்னு  நெனைக்கறேன்.  பெண்ணுக்கு ஆணைப்பத்தித் தெரிஞ்சிக்கறதை விட தன்னைப் பத்தியும், தன்னைப் பத்தி இன்னொருத்தர் நல்லபடியா தெரிஞ்சிக்கணும்ங்கறதிலேயும் அக்கறை அதிகம் உண்டு.  நாலு பேருக்கு நடுவே லட்சணமா தன்னைக் காட்டிக்கணும்ங்கற ஆர்வம் அவங்க பிறக்கும் பொழுதே கூடவே பிறந்திடும்ன்னு நெனைக்கிறேன். கொஞ்சமே யோசிச்சாலும் பெண்கள் வாழ்க்கை பெண்கள் உலகத்துக்குள்ளேயே புதையுண்டு போயிருப்பது தெரியும்" என்றார்.

"ஐ ஸீ.." என்றான் மோகன். "இதுக்கு என்ன சொல்றீங்க?.. ஆண் நினைக்க மாட்டானா? வீட்லே கிடைக்கற அட்வைஸ்லாம் கேட்டுக்கறது போதாதுன்னு, பத்திரிகையைப் பிரிச்சா இதிலுமான்னு ஆண் நெனைக்க மாட்டானா?"

"அப்படி நெனைக்காதவாறு எழுதற மேட்டரை கையாளறோம்லே?.. அதான் அதிலே இருக்கற சூட்சுமம்.." என்று கண்ணைச் சிமிட்டினார் தோழி சார்.

"சார்! எழுத வந்தா எத்தனை விஷயம் தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு? இதெல்லாம் இங்கே வேலைலே சேந்த பின்னாடி தான் ஒவ்வொண்ணா தெரிஞ்சிக்கறேன்" என்றான் மோகன்.

"இப்போ உன் விஷயத்துக்கு வருவோம்.." என்றார் அனந்தசயனம். "உன்னோட 'இது ஒரு தொடர்கதை' கதையை கதையா நினைக்க முடிலே, என்னாலே.  அதான் என்ன சமாச்சாரம்ன்னு கேட்டுடலாம்னுட்டு.." என்று அவர் சொல்லி நிறுத்தியது தொடர்ந்து சொல்லத் தயங்குவது போலிருந்தது.

"சொல்லுங்க, சார்.. என்ன விமரிசனம்னாலும்  சொல்லுங்க, சார்! கேட்டுக்கறேன்.." என்று ஆர்வத்துடன் கேட்டான் மோகன்.

"அதான் சொல்றேனே.. ஒரு கதைன்னு நினைக்க முடியாதபடிக்கு நிஜமா நடந்த மாதிரி எழுதறே.. நெஜமாலுமே நடந்த நிகழ்ச்சிகளை வைச்சு கதை மாதிரி சம்பாஷணைக் கோத்து எழுதறயா?..  இல்லே, இது முழுசும் உன் கற்பனைலே தோணின கதையா?.. அதான் தெரிஞ்சிக்கணும்னுட்டு.. பொதுவா கதைங்களுக்கு  ரிஷிமூலம், நதி மூலம் கேக்கக்கூடாதும்பா.. ஏதோ, தோணித்து.. கேட்டுட்டேன்.  கட்டாயமில்லே. சொல்ல முடிஞ்சா, சொல்லு.." என்றார்.

"உங்களுக்குச் சொல்றதுக்கு என்ன சார்?.. கற்பனை தான். நிஜம்ன்னு ஒண்ணு இல்லாம இல்லே; இருந்தாலும் கற்பனைப் பூச்சு தான் அதிகம். உங்களுக்குத் தெரியாததா, சார்?.. நடக்கற நிகழ்வுகளைப் பாத்து இப்படி இருந்தா எப்படி இருக்கும்ன்னு எழுத்தாளன் யோசிக்கறது கற்பனையா வடிவம் பூண்டு கதையாறது தானே சார், கதைங்கள்லாம்..  எந்த விகிதாச்சாரத்தில் நிஜத்தையும் கற்பனையையும் கலக்கணுமோ அந்த படிக்குக் கலந்த கலவை சார் இந்தக் கதை.." என்றான் மோகன்.

"உன் பதில் கூட அபாரம்ப்பா. மனசிலே இருக்கறதே அப்படியே சொல்றே.. இந்த மாதிரி கல்மிஷம் இல்லாம பேசறவாளுக்கு லைப்லே எல்லாம் நல்லபடியே நடக்கும். இன்னிக்கு இந்தக் கிழவன் சொல்றேன், பார்.. நீ நன்னா வருவே!" என்று ஆசிர்வதிக்கிற மாதிரி கைதூக்கி அவன் தோள் தொட்டார். "நீ எழுதின அந்தக் காட்சியை--  கோவில்லே அம்பலவாணனின் கன்னக் குமிழ்ச்சிரிப்பை அனுபவிச்சு தரிசனம் பண்ணின காட்சியை-- என்னால் மறக்க்வே முடியாது. அது நிச்சயம் கற்பனை இல்லே; உண்மையா நீயே அனுபவிச்சதாத் தான் இருக்கணும், இல்லியா?" என்றார்.

"உண்மைதான் சார்.." என்று ஒப்புக்கொள்கிற மாதிரி சொன்னான்  மோகன். "எப்பவுமே கோயிலுக்குப் போனா, இறைவன் சன்னதியில் இறைவனோடு ஐக்கியம் ஆற மாதிரி மனசை மலர்த்தி வைச்சிக்கறது என்னோட பழக்கம். முகதரிசனம் கிடைக்கறப்போ மனசோ அவர் கிட்டே பேசிக் கலக்க தவியா தவிக்கும். இந்த உடம்பு சட்டை கைகுவிச்சு தேமேன்னு கண்டதே காட்சியா நிக்க வேண்டியது, தான்! இந்த மனசுக்கு இருக்கற தைரியத்தைப் பாருங்க, துணிச்சலா அவரோட பேசக்கூட செய்யும்! நான் ஒதுங்கி நிக்க வேண்டியது தான்! அவங்க ரெண்டு பேரும் ஒண்ணாயிடுவாங்க! எப்படி  இருக்கு, பாருங்க நியாயம்!" என்று கலகலப்பாகச் சிரித்துக் கேட்டான் மோகன்.

"கொடுத்து வைச்ச ஆத்மா, ஐயா!" என்றார் அனந்தசயனம். "நீயே ஒரு நல்ல கவிதை மாதிரி இருக்கே! ஒண்ணு தெரியுமோ, உனக்கு?.. நல்ல கவிதைக்கு இலக்கணம் எதுக்கும்பாங்க.. இலக்கணம் வேணாம்ன்னு இல்லே. இலக்கணம்ன்னு ஒண்ணு தனியா இருக்கற மாதிரித் தெரியாம அந்தக் கவிதையோட கவிதையா அதுவும் கலந்து இருக்குமாம்.  அந்த மாதிரி தனியா பக்தின்னு ஒண்ணு தேவையில்லாமலேயே இறையனுபவம் உன்னோடையே கலந்த ஒண்ணா இருக்கு.." என்று சொன்ன போது அவர் குரல் தழுதழுத்தது.

ஒரு நிமிடம் யோசனையில் ஆழ்ந்தவர் போல இருந்தார் அனந்தசயனம்.  "உடம்பு-மனசுன்னு ஒவ்வொண்ணையும் தனித்தனியா கழட்டிப் பார்க்கத் தெரிஞ்சிருக்கு, உனக்கு!" என்றவர், அடுத்த வினாடி தலையைக் குலுக்கிக் கொண்டார்.. திடுதிப்பென்று, "நீ ஒண்ணு செஞ்சா என்ன?" என்றார்.

"என்ன சார் செய்யணும்?" என்றான் மோகன்.


(.இன்னும் வரும்)





Related Posts with Thumbnails