திருத்தேரைக் காண வாருங்களேன்
திருவாரூர் ஐயன் திருக்கோலம்
நேரில் காண வாருங்களேன்
(திருத்தேரைக்)

தொடுப்பு
அசைந்தாடி அசைந்தாடி ஐயன்
திசைதோறும் திருவிளையாடல் காட்டி
திரிபுரம் எரித்த விரிசடை திருவிடங்கன்
தரிசனம் காண வாருங்களேன்....
குறுஞ்சிரிப்பு தவழும் கூத்தனின் முகமோ
கொள்ளை அழகு; அவன் தோளழகு அதைக்
கொண்டாடிக் களிக்க ஓடி வாருங்களேன்
கமலாலயம்; அன்னை கமலாம்பிகை
தவக்கோல மாட்சி; ஞானலோகக் காட்சி
காண வாருங்களேன் கண்பெற்றப் பேற்றை
கண்டு களிக்க வாருங்களேன்
கவலைகளும் நோய்களும் காணாமல் போகும்
புவனமாளும் தியாகேசன் முகதரிசனம்
(திருத்தேரைக்)
முடிப்பு
பட்டு பீதாம்பரம் பளீரிடும் வைர அலங்காரம்
பஞ்சமுக முரசும் பாரி நாகஸ்வரமும்
கொண்டாடிக் களிக்க கோலாகலம் காண
(திருத்தேரைக்)