33. ஐஸ்கிரீம் சாப்பிட ஆசை
உடற்கூறு இயல் அறிஞர் உலகநாதனின் உரையில் இப்பொழுது வேகம் கூடியிருந்தது. அவையினரும் அவர் சொல்வதில் ஒன்றிப்போய் ஆர்வமுடன் கேட்டுக்கொண்டிருந்தனர்.
"உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு வேலை இருக்கிறது. தனக்கென்ற வேலை என்ற ஒன்று இல்லாமல் எந்த உறுப்பும் வேஸ்ட்டாக இல்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த அளவு விஞ்ஞான வளர்ச்சிக்குப் பிறகும், ஒவ்வொரு உறுப்பின் முழுப் பயன்பாட்டை நாம் உபயோகப்படுத்திக் கொள்ளவில்லை என்பது தான். இதற்குக் காரணம் என்னவாயிருக்கும் என்பதை உங்கள் யோசனைக்கே விட்டு விடுகிறேன். அங்கங்கே இப்படி உங்களை யோசிக்க வைப்பதற்கும் காரணம் இருக்கிறது.
"சரி. மூளைக்கு என்னதான் வேலை?.. உடல் உறுப்புகளால் உணரப்படும் ஒட்டுமொத்த உணர்வுகளும் வந்து சேரும் இடம் மூளை தான். உணர்ச்சி நரம்புகள் மூலமாகவோ அன்றி தண்டுவடத்தின் மூலமாகவோ உணர்வுகள் மூளைக்கு கடத்தபடுகின்றன. இதை உள்ளீடு என வசதிக்காக வைத்துக் கொள்ளலாம். எப்பொழுது 'உள்ளீடு' உண்டோ அப்போ 'வெளியீடு'ம் உண்டலல்லவா?.. பெறும் உணர்வுக்கேற்ப தேவையான உத்திரவுகளை நரம்புகள் மூலம் தசைகளுக்கு அனுப்புவது என்பதே மூளையின் 'வெளியீடு'. உணர்வுகள் பெருமூளை அடைந்து அடுத்து என்ன என்று தீர்மானித்து, உத்திரவுகள் வந்து சேர்ந்து, செயல்படும் நடவடிக்கைக்கான 'காலநேரத்'தை நாம் அறியும் கணிதவியலில் கண்டுபிடிக்கவேயில்லை. அவ்வளவு நுணுக்கமான ஃபிராக்க்ஷனுக்கும் ஃபிராக்க்ஷனான நொடி நேரம் அது!
உதாரணமாக இப்படி ஒரு நிகழ்வை மனத்தில் ஓட்டிப் பாருங்கள்:
"ஐஸ்கிரீம் சாப்பிட ஆசை"-- உணர்வு.
"ஜமாய்! வாங்கு. சாப்பிட்டு ஆசையைத் தீர்த்துக்கொள்" என்றோ--
"ஐஸ்கிரீமா?.. முதலிலேயே சளியில் மூக்கடைத்துக் கிடைக்கிறது. இதில் ஐஸ்கிரீம் ஒரு கேடா?" என்றோ--
"பெற்ற உணர்வுக்கும் கிடைத்த உத்திரவுக்கும் இடைப்பட்ட 'காலநேரத்'தை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
"இன்னொன்று.
"'ஐஸ்கிரீம் சாப்பிட ஆசை' என்கிற உணர்வு எப்படி ஏற்படுகிறது? ஐஸ்கிரீமை இதற்கு முன் சாப்பிட்டு அதன் சுவை மனசுக்குப் பிடித்த அனுபவமே காரணம்.
"இதற்கு முன் ஐஸ்கிரீமைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை, அப்படி ஒரு பொருளை சாப்பிட்டதே இல்லை என்றால் சாப்பிட ஆசையே ஏற்பட்டிருக்காது.
"ஐஸ்கிரீம் சாப்பிடுகிறாயா?'-- நண்பனோ, நண்பியோ கேட்டால்--
"ஐஸ்கிரீமா?.. என்ன அது?.. எப்படியிருக்கும்?"
"இந்தா.. சாப்பிட்டுப் பார்த்துச்சொல்."
"சாப்பிட்டு விட்டு, 'அடே! ஜில்லுன்னு ஜோரா இருக்கே?.. இதுக்குப் பேர் தான் ஐஸ்கிரீமா?'"
"கண் அந்தப் பொருளை நன்றாகப் பார்த்து, படமாக நினைவுத் திரையில் பதிகிறது. இன்னொரு தடவை அந்தப் பொருளைப் பார்த்தால், 'இதுதான்யா ஐஸ்கிரீம்' என்று புரிந்து கொள்வதற்கு வாகாக. சாப்பிட்டு அறிந்த சுவை நாவின் ருசி மொட்டுகளால் உணர்ந்து அந்தச் சுவையின் நேர்த்தியும் அனுபவக்குறிப்பும் கூட மூளையில் பதிகிறது-- அடுத்த தடவை ஐஸ்கிரீமைப் பார்க்கும் பொழுது ஆசைப்பட வைக்க.
"எல்லா உணர்வுகளும் மூளையின் எல்லா இடங்களிலும் வந்து சேர்ந்தால் 'டிராபிக் ஜாம்' ஆகிவிடும் இல்லையா?.. அதனால் இன்ன வேலைக்கு இன்ன பகுதி என்றுஇறைவன் அழகாக ஏற்பாடு செய்திருக்கிறான்.
"பார்வை உணர்வுக்கான இடம் பெருமூளையின் பின்புறப்பகுதியில்; விழித் திரையில் தலைகீழ் பிம்பமாக விழும் பார்வையில் படுபவனவற்றை அங்குள்ள் பார்வைநரம்புகள் ஒளிபிம்பத்தால் தூண்டப்பட்டு அதைப்பற்றிய உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. ஒலி, வாசனை, ருசி இவற்றை உணரும் பகுதி மூளையின் பக்கவாட்டில்உள்ளன. ஒவ்வொன்றுக்கும் உரிதான இலாகாக்கள் வெவ்வேறான இடங்களில் இருப்பதாகத் தோற்றமே தவிர, எல்லா இடங்களும் ஒன்றோடொன்று நரம்பு செல்களால் இணைக்கப்பட்டிருக்கின்றன.
"மொத்தம் 12 ஜதை நரம்புகள். எவ்வளவு திட்டமிட்ட ஏற்பாட்டுடன் மூளையின் அடிப்பகுதியில் இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை நினைத்துப் பார்த்தால் வியப்பு மேலிடுகிறது.
முதல் இரண்டு-- வாசனையை அறிய உதவ.
இரண்டாம் இரண்டு-- பார்வை நரம்புகள்; ஒரு கண்ணுக்கு ஒன்று என்று.
மூன்று, நான்கு, ஆறு -- கண்விழி தசையுடன் இணைந்த்து. பார்க்க, பார்க்கும் பொருளின் அளவு, தூரம் இவற்றைத் துல்லியமாக தீர்மானிக்க.ஐந்து -- வாயில் வந்தடையும் பொருளை அசைத்து தசைகளை இயக்க.
ஏழு -- முக நரம்புகள். அடிநாக்க்கில் படியும் ருசி, வாயைத் திறந்து மூட, சிரிக்க, நெற்றி மேட்டின் தசை மாறுதல்களுக்கு.
எட்டு -- ஒலித் தொடர்பானவை. காதுகளில் மோதும் ஒலி அலைகளை சமநிலைப்படுத்தும் சக்தி படைத்தவை.
ஒன்பது - நாக்கின் முன்பகுதியில் படும் பொருளின் ருசியை உணர, உணவை விழுங்க, உமிழ்நீரைச் சுரக்கச் செய்யவதற்கான தசைகளை இயக்க.
பத்தாவது ஜதைக்கு ஏகப்பட்ட முக்கிய வேலைகள். நெருக்கடியான நேரங்களில் இதயம், சுவசம், ஜீரண உறுப்புகள் ஆகியவை தாமே இயங்கிக் கொள்வதற்கான உத்திரவுகளை பிறப்பிக்க இந்த நரம்புகளே பொறுப்பேற்றுக் கொண்டு செயல்படுகின்றன.
பதினொன்றாவது - தலையைத் திருப்ப, தோளை வேகமாக அசைக்க
கடைசியான பன்னிரண்டாவது ஜதை -- நாக்கை அசைக்கும் தசைகளை இயக்க.
ஆக, பெருமூளை உணர்வுகளை உள்வாங்கவும், தேவையான் உத்திரவுகளைப் பிறப்பிக்கவும் ஏற்ற இடமாகிறது. நிதானித்துச் செய்யும் செயல்களின் உற்பத்திக்கேந்திரமும் இதுதான்.
இன்னும் தொடரும் விஷயங்களில் நிறைய அதிசயங்கள் இருக்கின்றன.
அவற்றைத் தொடர்ந்து பார்க்குமுன் --
இறைவன் இருக்கின்றார்
'ஆவ்' என்று நீண்ட கொட்டாவி. தூக்கம் கண்களைச் சுழற்றுகிறது. இதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது என்று தூங்கப் போகிறோம்.
சரி. இந்தத் தூக்கம் என்பது தான் என்ன?.. அயர்ச்சி அடைந்த நரம்புகள் தளர்ச்சி அடையச் செய்து சுகிக்கபடும் ஓய்வா?.. நாம் அப்படி நினைத்துக் கொண்டாலும் உண்மையில் இல்லை. தூங்கும் பொழுது தான், மூளை அதிக ஆக்ஸிஜனை ஏற்றுக் கொள்கிறது. மூளையின் 'ஹிப்போகேம்பஸ்' பகுதி முழு வீச்சில் செயல்படும்நேரம் நாம் தூங்கும் பொழுதே. நினைவில் நின்ற நிகழ்ச்சிகள், எப்போதோ நடந்தது கூட ஏதேதோ சம்பந்த முடிச்சை தமக்குத் தாமே போட்டுக் கொண்டு கனவுப்படம் ஓடுகிறது. அன்று நடந்தவை களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 'இதை ஃபைல் படுத்திக் கொள்ளலாம்' என்று மூளை தீர்மானித்துத் தன் கோப்பில் கோர்த்துக் கொள்ளும்நேரமும், அசந்து மறந்து மனிதன் தூங்கும் நேரம் தான்.
இதயம் பாட்டுக்க 'சிவனே' என்று துடித்துக் கொண்டிருக்கிறது. இரத்த ஓட்டம் தன் ஓட்டத்தில் கவனமாக இருக்கிறது. சுவாசக்காற்று சீராக நுரையீரல்களுக்கு சப்ளை ஆகிக்கொண்டிருக்கிறது.
மூளை சர்க்யூட்டுகள் மட்டும் மிகுந்த பொறுப்புணர்வுடன் ஒன்றுக்கொன்று பேசி வைத்துக்கொண்ட ஒற்றுமையில் செயல்பட்டு கண்களைச் செருக வைத்து நம்மைக் கட்டிப் போட்ட தூக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
உடலின் உள் செயல்பாடுகள் உணர்விலிருக்க, உடல் மட்டும் தன்னை இழந்து, தன்னிலிருந்து நழுவி தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல் தூங்கும் நேரம், தூங்குபவன் ஆனந்த களிப்புடன் தெய்வ சம்பந்தத்துடன் பிணைக்கப்பட்ட நேரம்!
இருட்டுக்கும் தூக்கத்துக்கும் கூட சம்பந்தம் உண்டு. இரவானால், 'விளக்கை அணைத்துத் தூங்கு' என்பது தொடர்ந்த பழக்கத்தினால் வந்த செய்கை.
(தேடல் தொடரும்)