இப்பொழுதெல்லாம் விமரிசனம் என்பது குறித்து நாம் நிறையவே பேசுகிறோம்.. சாதாரணமாக ஒன்றைப் பற்றியதான 'அபிப்ராயம்' மாதிரியான கருத்தைச் சொல்லுதல் என்கிற நிலைமாறி, இப்பொழுது விமரிசனம் என்பதே ஒரு துறையாகவும் உருக்கொண்டிருக்கிறது.
சொல்லப் போனால், விமரிசனம்என்பது ஒரு கலை. எல்லாக் கலைகளுக்கும் படைப்பாக்கம் என்பது எப்படி அடிப்படை அம்சமாக இருக்கிறதோ, அதே போன்றதான படைப்பின் நேர்த்தியும்,அழகும் விமரிசனத்திற்கும் தேவை.
என்றைக்கு விமரிசனத்தை ஒரு கலையாக ஏற்றுக்கொண்டு விட்டோமோ, அன்றைக்கே விமர்சகனும், எல்லாக் கலைஞர்களைப் போல ஒரு கலைஞன் தான்; அவன் ஒரு கலைஞனாக இருப்பதால் தான் எந்தக் கலைப்படைப்பையும் அவனால் நேசிக்க முடிகிறது.. ரசிக்க முடிகிறது.. இந்த நேசித்ததில், ரசித்தலின் விளைவான வெளிபாடு தான், அந்த ரசிப்பு குறித்தான அனுபவப் பகிர்வாகத்தான் அது குறித்தான அவனது விமரிசனமே முகிழ்க்கும்.
அதனால் தான் பலசமயங்களில் கலைப்படைப்புகளைப் பற்றி, கலைஞர்களல்லாத வெறும் பண்டிதர்கள் பேசும் பொழுது, அது குரங்கு கைப் பூமாலையாகிப் போகிறது. எல்லாக் கலைகளும் 'துறை'களாகிப் போனதின் விபரீதம் இது. அழகுணர்ச்சியும், அடிப்படை புரிதலில் விளைவான புளகாங்கிதமும் வற்றிப்போனதின் விளைவு இது. அதனால் தான் அத்தன்மைத்தான விமர்சன ஆர்ப்பாட்டங்களெல்லாம்,வெற்று உரைகளாக, வெறும் விவரக்குறிப்புகளாக இருக்கும். கலைஞனின் நெஞ்சத்து ஓலங்களை, மகிழ்ச்சியின் சாரல்களைத் தரிசிக்க வக்கில்லாத போக்கு இது. போகட்டும்..
மனசார ஒப்புக்கொள்ள வேண்டுமானால், படைப்புகள் குறித்தான விமரிசனம் என்பதே பிற்காலத்துச் சமாச்சாரம் தான்; அப்பட்டமான மேற்கத்திய சரக்கு.
சின்னக் குழந்தையின் தத்தித் தத்தி நடக்கும் தளர் நடைபோல தமிழில் சிறுகதைகளின் தோற்றமும், புதின வடிவங்களும் முகிழ்க்கத் தொடங்கிய பொழுது, அவற்றைப் பற்றிய விமரிசனக் கருத்துக்களாய் அபிப்ராயங்களும் வெளிப்பட்டன.
தமிழில் ஒரு காலத்தில் இந்த விமரிசனக்கலை கொடிகட்டிப் பறந்தது. இலக்கியமும்,விமரிசனமும் கை கோர்த்து இரட்டைக் குழந்தைகளாய் பவனி வந்தன. ஒன்றின் வளர்ச்சி இன்னொன்றையும் சார்ந்திருந்தது. க.நா.சு., 'எழுத்து' சி.சு.செல்லப்பா, சொல்லியே ஆக வேண்டிய விமரிசனக் கலைஞன் வெங்கட் சாமிநாதன், கனகசபாபதி, வல்லிக்கண்ணன், தி.க.சி., என்று வரிசைபடுத்திச் சொல்லலாம். இந்த வரிசை எந்தத் தரவரிசையுமல்ல.. இதில் வெங்கட்சாமிநாதனின் விமரிசனம் பற்றி, விமரிசனத்தைக் கலையாகச் செய்த-- இலக்கியம், இசை, சிற்பம், ஓவியம், தெருக்கூத்து என்று சகல மட்டத்திற்கும் தூக்கிச்சென்ற-- அந்தக் கலைஞன் பற்றி தனியே எழுதியாக வேண்டும்.
கலாபூர்வமான படைப்புகளையெல்லாம் இப்பொழுது பார்க்கமுடியவில்லை. ஓரிரண்டு பேர் அழுக்குகளிலிருந்து மேலெழும்பி தலைதூக்கி இனம் கண்டு கொள்ளப்பட்டாலும், அவர்களும் 'காற்றுள்ள போதே தூற்றிக்கொள்'என்கிற கதையாய் திரையுலகு பக்கம் திரும்பி விட்டனர். சிலர் அங்கேயும் குப்பை கொட்ட முடியாமல், 'இதற்குத்தானா ஆசைப்பட்டேன்' என்று குமைந்து சோர்ந்து விட்டனர்.
தமிழ்கூறும் நல்லுலகில், கலைவளர்ச்சி சகல துறைகளிலும் வரட்சியாய்ப் போய் நெடுங் காலமாகிவிட்டது. நிஜங்கள் போய் நிழல்கள் நர்த்தனமிடும் காலம் இது. அது ஒரு கனாக்காலம்; நெஞ்சத்து உணர்வுகள் கலைரூபங்களாய் படைத்த காலம் போய், சம்பவங்களைப் புனையும் காலமாகிப் போய்விட்டது! இலக்கியத்தின் பெயரும் புனைவிலக்கியமாம்!
'கல்கி'யில் வெளிவந்த அகிலனின் 'பாவை விளக்கு' நாவலில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் பெயர், உமா. உருக்கமாகப் படைக்கப்பட்ட உமாவின் மேல் 'பாவை விளக்கு'படித்த வாசகர்கள் உயிரையே வைத்திருந்தனர். கதையின் இறுதிப்பகுதிகளில், 'உமா'வை அகிலன் சாகடித்து விடுவாரோ என்று கலங்கி, வாசகர்கள் அனுப்பி வைத்திருந்த நூற்றுக்கணக்கான தந்திகளும், ஆயிரக்கணக்கான தபால்களும் 'கல்கி' காரியாலயத்தை அதிரச்செய்தன. 'உமாவைக் கொன்று விடாதீர்கள்' என்று அவை அகிலனை மன்றாடின.
'கதை படிக்கிறோம்' என்ற எண்ணத்தையே மறக்கச் செய்த எழுத்தாளர்கள் வலம் வந்த காலம் அது; எழுத்தாளனுக்கும் எழுத்தை நேசித்த வாசகனுக்கும் பொற்காலம் அது! இப்பொழுது எழுத்தாளனுக்குப் பெயர், கதைசொல்லியாம்!
அன்று 'பேசும்படம்' 'குண்டூசி' பின்னால், பாலு சகோதரர்களின் 'கலை' சந்தாமாமா பிரசுரத்தின் 'பொம்மை' என்று சினிமாவுக்கே ஆன சினிமாப் பத்திரிகைகள் நான்கே உண்டு. இன்றோ,தமிழ்கூறும் நல்லுலகில் வெளிவரும் அத்தனை வெகுஜனப் பத்திரிகைகளும் சினிமாப் பத்திரிகைகளே! விளம்பரம் போக, மீதம் இருக்கும் அரை,கால் இண்டு இடுக்குகளில் போனால் போகிறதென்று 'ஒரு நிமிடக் கதைகளும்', 'ஒருவரிக் கதை'களும் பிரசுரமாகிக் கொண்டிருக்கின்றன.
எப்படி இருந்த தமிழ்க் கதையுலகம் என்று எண்ணிப் பார்க்காமலிருக்க முடியவில்லை.