மின் நூல்

Friday, August 9, 2019

வசந்த கால நினைவுகள்...

                                      42

வானியில் இருக்கும் அற்புதமான பழைமையான கோயில்  சங்கமேஸ்வரர் ஆலயம்.  இந்தக் கோயில் நான் அங்கிருந்த காலத்தில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகமும் நடந்தது.   கிட்டத்தட்ட ஒரு வார காலம் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளோடு விழா பிரமாதமாக நடந்தது.   ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. 

அன்றைக்கு மாலை பொழுது சாய்ந்ததும் ஒரு இசைக் கச்சேரி இருந்தது.  கோயில் பிரகார மதில் சுவர் தாண்டி முன்பக்கம் பெரிய பந்தல் போட்டு கச்சேரிக்கு மேடை அமைத்திருந்தார்கள்.  பாடப் போவது பிரபல சங்கீத வித்வான்.  சினிமாவிலும் நாலைந்து பாடல்கள் இவர் பாடியிருந்ததால் கர்நாடக சங்கீதப் பிரியர்கள் மட்டும் என்றில்லாது சகலரும் திரண்டிருந்தனர்.
ஜரிகை வேஷ்டியும், புரளும் அங்கவஸ்திரமுமாயு பாடகர் பந்தலுக்குள் பிரவேசித்ததுமே மக்களிடம் உற்சாகம் பீறிட்டது.  ஒரு கூட்டமே பிரதம பாடகரோடு கூட வந்தது.  முன் வரிசை நாற்காலிகள் முழுவதுமே அவருடன் வருபவர்களுக்காக முன் கூட்டியே ஒழித்து விடப்பட்டிருந்ததால் வந்தவர்களுக்கு செளகரியமாகப் போய் விட்டது.           
                                                                                                                           
சங்கீத வித்வான் மைக்குக்கு பின்னால் அமர்ந்திருந்த காட்சியே அமர்த்தலாக இருந்தது.  நிச்சயம் 40-க்கு மேலே வயசு இருக்கும்.  சதுர முகமும் நரை தலையும் இள நகை முகமுமாய் எனக்கு அவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது.

அவருக்கு பக்கத்தில் ஒரு இளைஞன்.   தன்னம்பிக்கை நிறைந்த களையான முகம்.  குருவோடு சேர்ந்தே அவனும் பாடப் போகிறான் என்று அவனுக்கு முன்னாலும் ஒரு மைக் வைக்கப்பட்டதிலிருந்து தெரிந்தது.  விநாயகர் துதியுடன் ஆரம்பித்த கச்சேரி இரண்டே கீர்த்தனைகளில் களை கட்டி விட்டது.

அடுத்துப் பாடிய ஒவ்வொரு பாட்டுக்கும் கைத்தட்டல்  பந்தலைப் பிளந்தது.   எனக்கோ அந்த வயசில் சங்கீத விஷயத்தில் 'அ', 'ஆ' ன்னா கூடத் தெரியாத ஞான சூன்யமாக இருந்தாலும் அந்த வித்துவான் பாடுவதில் ஏதோ குறையிருப்பதாக ஒரு நெருடல்.  கொஞ்சம் கொஞ்சமாக அந்த நெருடல் என்ன என்று தெரிந்து கொள்ள மனம் தவியாய்த் தவித்தது.    அந்த சங்கீத வித்வான் அப்பொழுது பாடியது எனக்கு மனப்பாடமாகத் தெரிந்த  கோபால கிருஷ்ண  பாரதியின் கீர்த்தனை.  'தில்லையம்பலத்தானை கோவிந்த ராஜனை தரிசித்துக் கொண்டேனே' ... என்று அவர் பாட ஆரம்பிக்கும் பொழுது  இந்தத் தடவை அந்த வித்துவானின் முகத்தை வாயசைப்பை உற்றுக் கவனிக்க ஆரம்பித்தேன்.   'தில்லையம்பலத்தானை' என்று அவர்

ஆரம்பித்த பொழுது குரல் வளம்    கிரக்கமாக இருந்தது.    போகப் போக வேகம் கூடியது.  'தொல்லுலகமும்   படியளந்து' வரியிலும்,  'அம்பல ரகசியம் அறிந்து கொள்வதிங்கே' வரி வந்த போதும் சரி,   அவர் தன் குரலை உச்ச ஸ்தாயியில் ஏற்றி நிறுத்த முடியாமல் தவித்தது தெரிந்தது.                 

அவருடன் சேர்ந்து மெல்லப் பாடிக் கொண்டு வந்த இளைஞன் உச்சத்தில் அழகாக நீட்டி பரவிப் படிந்து ஒரு விமானம் ரொம்ப மெஜஸ்டிக்காக கீழே இறங்கித் தவழ்வது போல குரலை இறக்கி நிரவிய  தருணத்தில் அவன் குரலுடன் வித்வானின் குரலும் சேர்ந்து கோண்ட பொழுது உச்சத்தில் குரலை ஏற்ற முடியாத வித்வானின் சிரமம் தெரிந்தது.   சரணத்தில் 'அருமறை பொருளுக்கெட்டா' வரியில் 'எட்டா'வை எட்டி நீட்டுவதில் சிரமப்பட்டு 'அறிதுயில் அணையானை'யில் மறுபடியும் உச்சம் அவஸ்தைப்படுத்தி உதவியாளர் உதவியில் அந்த நீட்டலை சமாளித்து 'ஆதரிப்பதங்கே' என்று இறக்கி முடித்த பொழுது கைத்தட்டல் வானைப் பிளந்தது.

உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்த எனக்கு அப்பொழுது அங்கே எழுந்த கைத்தட்டல் பாடகரின் அந்த உதவியாளருக்கு இல்லையென்றாலும், அந்த உதவியாளர் இல்லையென்றால் இந்த கரகோஷம் ஏது இங்கே என்ற கேள்வி மனசின் அடி ஆழத்தில் எழுந்து பொறுத்துக் கொள்ள முடியாமல் அவஸ்தையாக இருந்தது.

ஏதோ ஒரு சக்தி உந்தித் தள்ளியது போல எழுந்தேன்.  கூட்டத்தை விட்டு வெளியே வந்தேன்.  விறுவிறுவென்று  கோயில் வெளித்திடலில் இருந்த பூக்கடைக்குப் போய்  ஒரு ரோஜாப்பூ மாலை வாங்கிக் கொண்டு கச்சேரி நடந்த இடத்திற்குத்  திரும்பினேன்.  வித்துவான் அடுத்த பாடலைப் பாடுவதற்கான முஸ்தீபுகளில் இறங்கிக் கொண்டிருந்த பொழுது,  நின்று கொண்டிருந்த கூட்டத்தினரை விலக்கித் தள்ளிக் கொண்டு மேடைக்கு வெகு அருகில் போய் ஏந்திக் வந்திருந்த மாலையை அந்த உதவிப் பாடகர் இளைஞன் கழுத்தில் போட்டேன்.

அந்த ஷண வினாடி அந்தப் பந்தலே விக்கித்து நின்றது மாதிரி எனக்குத் தோன்றியது. 

நான் மேடையை நெருங்கியதுமே  வித்துவான் தனக்குத்  தான் மாலை என்று தெரிந்து லேசாகத் தன் தலையைக் குனிந்தது எனக்குத் தெரியும்..  இருந்தாலும் நான் அவரது    உதவியாளருக்கு மாலையைப்   போட்டதும்     தனது ஏமாற்றத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல்  சமாளித்துக் கொண்டு  அவர் தன் கையைத் தட்ட, மெக்கிலும் அந்த ஒலி வெளிப்பட்டு,  மொத்த கூட்டமுமே நான் போட்ட மாலைக்கு கை தட்டினதை அந்த இளைஞனுக்கு அந்த சமயத்தில் கிடைத்த அங்கீகாரமாகவே கருதினேன்.

இந்த ரசாபாசத்தை - வித்துவான் இருக்க அவர் சீடனுக்கு நான் போட்ட மாலை 'அபச்சாரத்தை'க் களைய --  யாரோ ஒருவர் ஓடிவந்து வித்துவானுக்கும் மாலையைப் போட்டார்.  அதற்கு மேடைக்கு அருகிலேயே நின்று கூட்டத்தோடு சேர்ந்து நானும் கைதட்டினேன். 

ரொம்ப நேரம் அங்கு இருக்க இருப்பு கொள்ளவில்லை எனக்கு.   கூட்டத்தை விலக்கிக் கொண்டு வெளியே வந்தேன்.   கோயில் கோபுரம் சர விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டு ஜெகத்ஜோதியாக இருந்தது.  கூடு துறைப் பக்கம் போகலாமா என்று  யோசனை ஓடியது.   சுற்றிலும் நன்றாகவே இருட்டு கவிந்து விட்டது.   பாதை அவ்வளவு சரியில்லாததினால் கூடுதுறை பக்கம் போவது அவ்வளவு சிலாக்கியமில்லாதிருக்கும் என்ற நினைப்பு வந்து  போகையில் எனக்கு எதிர்ப்புறம் நடந்து வந்து கொண்டிருந்த ஒரு பெரியார் என்னைப் பார்த்ததும் ஒரு கணம் தயங்கி,  "ஏம்பா அப்படிச் செஞ்சே?" என்று குழைவாகக் கேட்டார்.

அவரை நிமிர்ந்து பார்த்த பொழுது  என் மனசு லேசாகிப் போனது.   யாராவது இப்படி நான் அந்த  இளைஞனுக்கு மாலை போட்டதைப் பற்றிக் கேட்க மாட்டாங்களான்னு  தான் ஏங்கியது  மாதிரி இருந்தது.  "ஐயா!  தப்பா நான் ஏதாவது  செஞ்சிருந்தா மன்னிச்சிடுங்க.  பாடின அந்தப் பையன் என் வயசு  இளைஞன் இல்லையா?..   அவ்வளவு அருமையா இந்த வயசிலே அவன் பாடினதைப் பாத்து பரம சந்தோஷமா போயிடுத்து.  அதான்..  மூணு ரூபா சொன்னான்.  பேரம் பேசாம காசு கொடுத்து   மாலையை வாங்கிண்டு வந்தேன்.    அத்தனையும் ரோஜா. .. அந்த பையனுக்காகவே அமைஞ்ச மாதிரி இருந்தது.." என்று தாழ்ந்த குரலில் தயங்கித் தயங்கிச் சொன்னேன்.

"நீ ஒண்ணும் தப்பா செஞ்சிடலே.." என்றார் பெரியவர்.   "நானும் கேட்டேன்.   அந்தப் பையன் இன்னிக்குப் பிரமாதமாப் பாடினான்.  இவ்வளவு  ஜோராப் பாடறான்னேன்னு நான் அவனை மனசிலே பாராட்டி நினைச்சிக்கிட்டிருக்கற நேரத்லே தான் நீ டக்ன்னு அவனுக்கு மாலையைப் போட்டுட்டே.. அவனும்  நாளைக்கு இந்த பெரிய வித்துவான்  மாதிரி வர வேண்டியவன் தான்.   நீ அவனுக்கு மாலை போட்டது சரி தான்.." என்று சொன்னார்.

நான் அப்போ செஞ்ச காரியத்தை  இன்னொருத்தர் சரின்னு சொன்னது மனசுக்கு ரொம்ப திருப்தியா இருந்தது..  இருந்தாலும் தயங்கியபடி, "தப்பா செஞ்சிட்டோமோன்னு எனக்கு உள்ளூர ஒரு பயம் இருக்கத்தான் செஞ்சது.." என்றேன்.

அந்தப்  பெரியவர் வாஞ்சையுடன் என் தோளில் லேசாகத் தட்டிக் கொடுத்தார்.  "தம்பீ!  எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காம இந்த  மாதிரி உணர்வுபூர்வமா இன்னொருத்தரை மதிக்கறதெல்லாம்,  பாராட்டறதெல்லாம்  எல்லாராலேயும்  முடிஞ்சிடாது.  அதுக்குன்னு ஒரு நல்ல மனசு வேணும்.  அது உங்கிட்டே இருக்கு.  நிதானமா ஒரு காரியத்தை செய்யறச்சே தான் சாதக பாதகங்களையெல்லாம் யோசிச்சு நம்ம புத்தி அதிலே படியும்.   இந்த மாதிரி உணர்வின் எழுச்சிலே சடக்ன்னு செய்யறதெல்லாம் நாமாச் செய்யறதில்லே..  அதெல்லாம் நம்மளத் தாண்டி நடக்குது.  ஏதோ ஒரு சக்தி நமக்குள்ளே பூந்திண்டு செய்ய  வைச்சிடறது.  அப்படி  செஞ்சிட்டேன்னு எடுத்துக்க வேண்டியது தான்.." என்றார்.

"இருந்தாலும்..." என்று இழுத்தேன்.

"என்ன இருந்தாலும்?.. சும்மா போட்டுக் குழப்பிக்காதே.  நீ செஞ்ச காரியத்லே சத்தியம் இருக்கு.  அந்த பலம் ஒண்ணு  போதும்.." என்று என்னை தேற்றுகிற மாதிரி சொல்லி விட்டு என்னைத் தாண்டிப் போனார்.

நிமிர்ந்து பார்த்தேன்.  கோயில்  சுற்றிலும் தகதகத்த மின் ஒளியில் பளபளத்துக் கொண்டிருந்தது.  இறைவனே அந்தப் பெரியவர் ரூபத்தில் வந்து நான் செஞ்ச காரியத்தை அங்கீகரித்த மாதிரி அன்று உணர்ந்தேன்.

இரவு படுக்கையில் விழுந்த பொழுது மனம் பூராவும் இனம் புரியாத ஒரு நிம்மதி ஆக்கிரமிச்சிருக்கிற மாதிரி உணர்ந்தேன். 

சில விஷயங்கள் நடக்க டூலாக நாம் எப்படி உபயோகப்படுத்தப் படுகிறோம் என்று வாழ்க்கையில் முதல் முதலாக உணர்ந்த தருணம் அது தான்.


(வளரும்)
Related Posts with Thumbnails