மின் நூல்

Monday, January 19, 2009

ஆத்மாவைத் தேடி....32

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


32. பேப்பர் பையன் கதை


ஊஞ்சல் பலகை நன்கு இழைக்கப்பட்டு மழமழவென்றிருந்தது. லேசாக அசைக்கையில், 'நான் இருக்கேன்'னு கிரீச்சிடாமல் பலகையோடு பூட்டிய சங்கிலி மெளனமாக அசங்கி, பராமரிப்பின் நேர்த்தியைச் சொன்னது.


காலை ஊன்றி அமர்ந்திருக்கும் பலகையை கொஞ்சம் பின் தள்ளி உந்தி விசைக்கொடுத்து அழுத்திக் காலை எடுக்கையில் லேசாகப் பின்னே போய், அதே வேகத்தில் மேலும் கீழும் போனால் தான் அது ஊஞ்சல். நிலையாக பிணைத்திருக்கும் சங்கிலியில் தொங்கியபடிக் கிடந்தால் வெறும் தொங்கு பலகைதான். அவ்வப்போதுள்ள நிலைமைகளுக்கேற்ப உச்சம் போயும் தாழ்ந்தும் உணர்வுகளை வெளிப்படுத்தும் உறவுகளும் ஊஞ்சலைப் போன்றதே என்று சிவராமன் நினைத்துக் கொண்டார்.

மாலுவின் அப்பா சுந்தரேசனும், கிருஷ்ணமூர்த்தியின் அம்மா ஜானகியும் அண்ணன்-தங்கைகள். இவர்களின் மூத்த அக்கா பார்வதியின் பிள்ளைதான், கிருஷ்ணமூர்த்தியின் அண்ணா வைத்தீஸ்வரன். அண்ணா என்றால் ஒன்று விட்ட அண்ணா. சுந்தரேசனின் பெரிய பெண் சீதாலஷ்மிதான் கிருஷ்ண மூர்த்தியின் மன்னி. எல்லாம் ஒன்றுக்குள் ஒன்றான சம்பந்தம். அதனால் உறவு விட்டுப் போகாமல் மாமா-மாமா பெண்-மச்சினன் என்று கெட்டிப்பட்டிருந்தது.

மாலுவின் கணவர் சிவராமன் மட்டும் வெளி குடும்பத்தவர். பெரியவர்கள் யாரும் இப்போது உயிரோடு இல்லாமையால் அவர் தான் இந்த இரண்டு குடும்பத்திற்கும் இப்போதைக்குப் பெரியவர்.

சிவராமனுக்கு சொந்த ஊர் சேலம். சேலம் அம்மாப்பேட்டை. அவர் குடும்பத்தில் அப்பா- அப்பாவுக்கு அப்பா என்று வழிவழியாக தலைமுறையில் ஒருத்தர் எப்படியோ வைதீகராய் அமைந்துபோவது விசேஷம்.

சிவராமன் படிப்பில் படுசுட்டி. ஸ்கூல் பைனல் வரை முதல் ரேங்கைத் தவற விட்டதில்லை. எக்ஸ்ட்ராகரிகுலர் ஆக்ட்டிவிடீஸ் வேறே-- பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி,நாடகம் என்று-- எக்கச்சக்கம். தான் படித்த பாரதி வித்தியாலயா பள்ளியின் பதாகையைத் தாழவிட்டுவிடாமல் மாவட்டம் பூராவும் தூக்கிப் பிடித்தவன்.


சிவராமன் எஸ்.எஸ்.எல்.ஸி. முடித்ததும், "என்னடா செய்யப்போறே?.. பி.எஸ்ஸி., படிக்கறையா?" என்றார் அப்பா ராமசுப்பு. இதோடு பையனின் படிப்பு முடங்கிப் போய்விடக்கூடாதென்ற தவிப்பு அவருக்கு.


"நேத்திக்கு சாயரட்சை ராஜகணபதி கோயிலுக்குப் போயிருந்தேன், அப்பா" என்று நேரடியாக அப்பாவை நிமிர்ந்து பார்க்காமல் தலை கவிழ்த்துச் சொன்னான் பிள்ளை.

"சொல்லு. வழக்கமா போறது தானே"

"பிள்ளையாரைக் கும்பிட்டு இதுக்கு மேலே என்ன செய்யறதுன்னு ஒரு வழிகாட்டப்பான்னு வேண்டிண்டேன்."

"ம்."

"விபூதி இட்டுண்டு வெளிலே வந்தா, பக்கத்து 'கலைவாணி நியூஸ் மார்ட்'லே ஒரு போர்ட் மாட்டியிருந்தா."

"ம்." பையன் என்ன சொல்லப் போகிறான் என்கிற ஆவல் அவருக்கிருந்தது.

"காலம்பற வீடு வீடா பேப்பர் போடற பையன் வேணுமாம். முதல் அக்கிரஹாரம், மேட்டுத்தெரு, டவுன் ஸ்டேஷன் பக்கம், இரண்டாவது அக்கிரஹாரம்ன்னு அம்பது-அறுபது வீடு தேறுமாம். கொஞ்சம் வார,மாச சஞ்சிகைகளையும் சேர்த்துப் போடணும். மாசம் முப்பது ரூபா தருவாராம். சரியாப்பா."

"சரியான்னு இப்படி மொட்டையாக் கேட்டா?.. நான் சொல்றது இருக்கட்டும். நீ என்ன நெனைக்கறே?" என்று பையனை நேரடியாகக் கேட்டார் ராமசுப்பு.

"காலம்பற அஞ்சு மணிக்கு ஆரம்பிச்சா, ஆறு ஆறரைக்கு முடிஞ்சிடும்ப்பா. செய்யலாம்னு நெனைக்கறேன்."

"படிக்கற வயசிலே, 'வேலை'ங்கறது கொடுமைப்பா. அப்புறம் புத்தி அப்படியே போயிடும். உன்னை மேலே மேலே படிக்கவைச்சு ஆபிஸரா பாக்கணும்ங்கறது என்னோட ஆசை."

"----------------"

"சுகவனேஸ்வரர் கோயில்லே புஷ்பப்பல்லக்கு இல்லையோ?.. சுவாமி கும்பிட ஜெயராம மாமா வந்திருந்தார். காலேஜ் அட்மிஷனுக்கு அப்ளிகேஷன் கொடுக்கறளாம். வாங்கிப் போடச்சொன்னார்."

"நேத்திக்கு மத்தியானம் அதான்'பா வேலை. போய் வாங்கிண்டு வந்திட்டேன்"என்று மேஜை இழுப்பறையைத் திறந்து பையன் காலேஜ் அட்மிஷன் அப்ளிகேஷன் பாரம்காட்ட தந்தையின் முகம் மலர்ந்தது.

"படவாப் பயலே--" என்று சந்தோஷம் வந்தால் வழக்கமாய்ச் சொல்லும் வார்த்தையைச் சொல்லிச் சிரித்தார். "பின்னே எதுக்கு இந்த பேப்பர் போடற வேலையெல்லாம்?"

"டைப்ரைட்டிங், ஷார்ட் ஹேண்ட், புக்கீப்பிங் இதெல்லாம் தெரிஞ்சிருந்தா எல்லாத்துக்கும் கைகொடுக்கும்'பா.. அதெல்லாம் படிக்கத்தான் இது."

பையனின் சூட்டிகை தந்தைக்குப் பிடித்திருந்தது. இருந்தாலும் நாலு பக்கம் கவனம் போனால், முக்கியமான படிப்பு பாதிக்குமோ என்கிற பயமும் கூடவே இருந்தது.


"என்னப்பா--"

"இல்லே, எல்லாத்லேயும் தலை கொடுக்க ஒன்னாலே முடியுமான்னு யோசிக்கறேன்."

"முடியும், அப்பா.. மேல்நாட்லேலாம் அப்படித்தானாம். படிக்கறச்சேயே ஒழிஞ்ச நேரத்லே ஏதாவது வேலை செய்வாளாம்.. படிச்சேன்."

"செய்யறது நல்லது தான்; ஒரு பொறுப்பு வரும்ங்கறது சரிதான். ஆனா ஒன்னாலே முடியுமா? அதை நீதான் சொல்லணும். என்ன சொல்றே?"

"முடியும், அப்பா."

"சரி. செய்.." என்று அனுமதி அப்பா வழங்கினார். "படிப்பு தான் முக்கியம். அதுக்கு குந்தகம் இல்லாம் வச்சுக்கோ. அப்படி அதுக்கு இடைஞ்சல்னா பேசாம எல்லாத்தையும் விட்டுடணும். தெரிஞ்சதா?"

"சரி, அப்பா."

ராமசுப்பு சாஸ்திரிகளுக்கு பையனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. நாலரை மணிக்கு அலாரம் வைத்து எழுந்தானானால், முகம் கழுவி உடைமாற்றிக் கொள்வதற்குள்,அவனோடையே எழுந்திருக்கும் அவன் அம்மா சிவகாமி, டிகாஷன் இறக்கி ஒரு கப் காப்பியோடு ரெடியாகி விடுவாள்.

சைக்கிளைத் தள்ளிக்கொண்டு கிளம்பினானால், திரும்புகிற வரையில் அந்த காப்பி தாங்கும். ஆறு மணிக்கு சாஸ்திரிகள் சந்தியாவந்தனம் பண்ணிக் கொண்டிருக்கையில் சரியாகத் திரும்பி விடுவான். அத்திப்பூத்தாற்போல் என்றாவது பேப்பர் வேன் டிலே ஆகி விட்டதென்றால், காலேஜ் கிளம்புவதற்குள் சிவராமன் அந்த தாமதத்தையும் சரிபண்ணிக் கொண்டு விடுவான்.

ராஜகணபதி கோயிலுக்கும், வில்வாத்ரி பவன் ஹோட்டலுக்கும் நடுவே இருக்கும் சிமிண்டு பாவிய தரையில் தான் வேன்களிலிருந்து இறக்கி வைத்த பேப்பர்கட்டுகள் மலையாகக் குவிந்து கிடக்கும். சிவராமன் வந்துவிட்டால், பேப்பர்கட்டுகளைப் பிரித்து அடுக்கும் அத்தனை பேருக்கும் டீம் லீடர் வந்துவிட்டமாதிரி குஷி! பரபரவென்று செயல்படும் சிவராமனின் வேகம் அந்தக் குழுவினரிடையே பிரச்சித்தி பெற்றது.


ஆங்கில, தமிழ் தினசரிகளைத் தனியே பிரித்துக் கொண்டார்களானால், ஒரு தினசரிக்கு இரண்டு பேர். பக்கம் பார்த்து சேர்ப்பது, தனிப் பண்டிலாக வரும் சப்ளிமெண்டுகளை தனியாகப் ஒவ்வொரு பேப்பரிலும் நுழைப்பது என்று வேலை பெண்டு வாங்கும். அரைமணி நேரத்தில் அவ்வளவையும் நேர்பண்ணி சைக்கிள் கேரியரில் தன்னதைத் தூக்கி வைத்துக் கட்டி கிளம்பிவிடுவான் சிவராமன். முக்கிய செய்திகள் ஏதாவது இருந்தால், அடுக்கும் பொழுதே மேலோட்டமாகப் பார்த்துவிடுவான். மொத்தத்தில் இந்த வேலை சிவரமனுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது; மனசுக்கு சந்தோஷமாகவும் இருந்தது.

"என்ன அப்படியே உட்கார்ந்திட்டேள்?..குளிக்கலையா?" என்று மாலினியின் குரல் அருகே கேட்டதும் தான் தலையைக் குலுக்கிக்கொண்டு நனவுலகுக்கு வந்தார் சிவராமன்.

"ம்.. என்ன கேட்டே?"

"சரிதான் போங்கோ... பாத்ரூம் காலியா இருக்கு. குளிக்கப் போகலையான்னு கேட்டேன்" என்றாள் மாலினி.

"இதோ--" என்று சிவராமன் எழுந்திருக்கையில், "அத்திம்பேர்! ஒரு டோஸ் காப்பி சாப்பிடறேளா?.. புதுசா டிகாஷன் இறக்கியிருக்கேன்" என்றபடியே வந்தாள் ராதை.

"பேஷா--" என்று எழுந்த சிவராமன் மீண்டும் உஞ்சலிலேயே அமர்ந்தார்.


(தேடல் தொடரும்)
Related Posts with Thumbnails