இதற்கு முன் பகுதி:
http://jeeveesblog.blogspot.in/2016/10/blog-post_11.html
பகுதி—25
மாமன்னன்
செங்குட்டுவனின் வடபுலப் பயணம் பற்றிப் பறையறிவித்ததும் அந்தச் செய்தி எங்கணும் பற்றிக் கொண்டது.
ஆசான், அரச
நிமித்திகன், அமைச்சர், படைத்தலைவர்கள் ஒன்று கூடியிருக்க மன்னன்,
மன்னன் பரம்பரை பாத்யதையான சிங்க முகம் சுமந்த சிங்காதனத்தில் கம்பீரமாக
வீற்றிருந்தான்.
அவையில் வாழ்த்தொலி
முழங்க, சந்னதம் கொண்ட குரலில் மாமன்னன் செங்குட்டுவன் சொன்னான்:
“இமையமலையிலிருந்து இங்கு வந்திருந்த முனிவர்கள்
சொன்னார்கள். கங்கை பேராற்றின் கரையைக்
கடந்து இமயமலையில் வில்,புலி, கயல்
இலச்சினைகளை யான் பொறித்த பொழுது ‘எம்போலும் ஆற்றல் கொண்ட மன்னர் யாரும் இங்கு
இல்லை போலும்’ என்று எக்காளமிட்ட வடபுலத்து வேந்தர்களின் பழிச்சொல்லை முனிவர்கள்
சொல்லக் கேட்டேன்.
அது சோழ, பாண்டிய அரசர்களும் எம்மை
இகழ்வதற்கு இடம் கொடுத்த்தாகி விடும்.
இப்பொழுதே, இவ்விடத்தே சொல்கிறேன்.
“அவ்வடபுலத்து மன்னர் முடித்தலை மீது பெண்தெய்வத்திற்கு உரு வடித்தற்குரிய
கல்லைச் சுமந்து வரச்செய்வேன். யான் அவ்வாறு செய்யேன் ஆயின் வீரப்போரில்
வீரக்கழல் பூண்டு வாளேந்தி பகைவரை நடுங்கச் செய்யும் மன்னன் அல்லாது பயன்மிகுந்த நாட்டில் எம் குடிமக்களை அஞ்சச்
செய்யும் கொடுங்கோல் மன்ன்ன் என்று ஊர் பழி தூற்றும் இழிநிலையுடையேன்
ஆவேன்..” எனறு ஆவேசதுடன் சூளுரைத்தான்.
உடனே நிமித்திகன் எழுந்து, மன்னனை வாழ்த்தி, “உன்
செந்தாமரையன்ன சிவந்தத் திருவடிகளைப் போற்றிப் பணியும் காலம் இது, மன்னா!
காலம் கனிந்திருக்கிறது; நேரமும்
நல்ல நேரமாய் வாய்த்திருக்கிறது. குறித்த
திசை நோக்கிப் போருக்கு எழலாம்..” என்று ஜோதிட பலன் கூறினான்.
அது கேட்ட செங்குட்டுவன் படைத்தலைவனைப் பார்த்து “நம்
வாளையும் குடையையும் வட்திசை நோக்கி புறப்படுமாறு செய்வாயாக..” என்று
ஆணையிட்டான்..
மன்னனின் ஆணைக்குத்
தான் காத்திருந்த்து போல நிலமதிர போர்வீர்ர்கள் தங்களுக்கே உரித்த ஆரவாரத்துடன் வெற்றி
முழக்கமிட்டனர். முரசுகள் முழங்க, கொடிகள் காற்றில் அலைபாய்ந்தன.
அணிஅணியாக ஆரப்பரித்தப்
படைவீரர்களைத் தொடர்ந்து அமைச்சர் பெருமக்களும், கரணத்தியலவர் முதலான்
எண்பேராயக்தினரும், காலத்தைக் கணிப்போரும்,
அறம் கூறுவோரும் சென்றனர்.
இடையிடையே,”எம் மன்னர் புகழ் நீடுழி வாழ்க!’ என்ற கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. பட்டத்து யானை
வெற்றி வாளையும், வெண்கொற்றக்
குடையினையும் சுமந்து முன்னால்
சென்றது. அரண்மணை அருமேயிருந்த கொற்றவை கோயில் அருகே அத்தனை
பேரும் குழுமினர். வஞ்சிப்பூவும்
பனம்பூவும் கலந்த மாலையைச் சூடும் சேர
மன்னனின் அரசவை மாந்தரும் அந்தக் கூட்டத்தினருடன் சேர்ந்து கொண்டனர்.
அரும்படைத் தானை வீரர்க்கும், பெரும்படைத் தலைவர்க்கும் மன்னன் பெரும் சோறு
அளித்தான். அவர்களை வைத்துக் கொண்டு பூவா
வஞ்சியில் பூத்த வஞ்சியாய் மன்னன்
வஞ்சிப்பூமாலையைத் தன் முடியில்
சூட்டிக்கொண்டான். மற்ற நாட்டு மன்னர்கள்
தாம் ஏந்தி வந்திருக்கும் திரைப் பொருட்களைச் செலுத்தாலாம் என்பதற்கு அழைப்பு
விடுப்பது போல காலை முரசம் கடைவாயிலில் முழங்கியது.
நிலவுக்கதிர் நீந்தும் நீள்முடியும், உலகெலாம்
உணர்ந்து ஓதற்கரியவனுமாகிய சிவபெருமானின் திருவடிகளை வெற்றி பொருந்திய வஞ்சி
மாலையுடன் செங்குட்டுவன் தன் தலையிலே அணிந்து
பெருமானின் கோயிலை வலம் வந்து வணங்கினான்.
அச்சமயத்தில் அந்தணர் ஏந்தி வந்த ஆகுதியின் நறும்புகை சூழ வஞ்சி மாலை
நெஞ்சில் புரள மன்னன் பட்டத்து யானையின் பிடர்த் தலை ஏறினான்.
“சேர மன்னன் செங்குங்குட்டுவன் கொற்றம் சிறக்க!..” என்ற
வாழ்த்தொலிக்கிடையே திருவனந்தபுரத்துக்
கோயிலில் பாம்பணையின் மீது பள்ளி கொண்ட பெருமாளின்
சேடத்தைக் கொண்டு வந்து
தந்து சில ஆன்றோர் வாழ்த்தினர். ஏற்கனவே பிறாவா யாக்கைப் பெரியோனின்
திருவடிகளைத் தன் தலை மீது வைத்திருந்தமையால்,
பெருமாளின் சேடத்தைப் பெற்று சேரன்
தன் திண்ணிய புஜத்தின் மீது தாங்கிக் கொண்டான்.
ஆடல் அரங்குகளில் நர்த்தனமிடும் நாடக மகளிர் கை கூப்பி வழி
நெடுக நின்றிருந்தனர். “கொற்ற வேந்தே!
வாகை மாலையின் அழகில் தும்பை சேர அத்துடன் பனம்பூ மாலையும் சேர்ந்து நின்
பட்டத்து யானையின் முகத்தே புரள்கின்றன.
வெண்கொற்றக் குடை நிழலில் நீ யானையின் முடித்தலை அமர்ந்து வருகையில் எம்
கைவளைகளைக் கவர்வாய்! எம் கண்கள்
களிகொள்ளும் இவ்வழகிய தோற்றத்தை என்றும் நீ பெற்றிருப்பாயாக..” என்று வாழ்த்தினர்.
மாகதப் புலவரும், வைதாளிகரும், சூதரும் மன்னனின்
வெற்றிக்காக வாழ்த்தினர். யானை
வீரரும், குதிரை வீரரும், வாளேந்திய காலாட்படை மறவரும் வெற்றியைப்
போற்றிப புகழதனர். அந்த சமயத்தில் அசுரருடன் போரிட அமராவதியினின்றும் போர்ப்படையை
நடத்திச் சென்ற இந்திரனே போன்று செங்குட்டுவன்
செம்மாந்து தன் தலைநகரை விட்டு
நீங்கினான். அலைகளின் ஆர்ப்பாட்டம் கொண்ட
மேற்குக் கடற்கரையின் விளிம்பில் பிர்மாண்டமாக படைகள் அணிவகுத்துச் சென்ற பொழுது பின்புலக்காட்சியாய் மலைகளின் முதுகுகள்
தெரிந்தன. கனைக்கும் குதிரைகள் கொண்ட
தேர்ப்படை நிலமதிர நகர உலகநாயகன் நீலகிரி
மலையின் சரிவில் அமைந்திருந்த பாடிவீட்டை நெருங்கினான். பாடிவீடு அடைந்ததும் யானை எருத்தத்து
அமர்ந்திருந்த மன்னவன் கீழிறங்கி படை மறவர்கள் புடைசூழ பாடி வீட்டில் அமைதிருந்த
அமளியில் அமர்ந்தான்.
படைகளின் இயக்கத்தால் எங்கணும் பேரொலி
சூழ்ந்திருந்தது. அந்த ஒலியின் வீச்சு
அலைஅலையாய் விரிந்து வானத்திலும் ஒலித்தது.
விண்ணில் உலாவிய முனிவர்கள் அவ்வொலி கேட்டு, ‘இப்பெரிய நிலத்தை ஆளும்
இந்திரனைப் போன்ற தீரனை நாமும் காண்போம்’ என்று கருதி மண்ணுலகம் இறங்கினர். மின்னலின் ஒளியையும் மயங்கச் செய்யும்
பேரொளியொடு தன் முன் வந்திறங்கிய முனிவர் குழாத்தைக் கண்டு மகிழ்ந்தும்
நெகிழ்ந்தும் போன மன்னன் அமளியிலிருந்து எழுந்திருந்து பணிவன்புடன் அவர்களை
நெருங்கி வணங்கினான். “செஞ்சடைக் கடவுளின்
அருளினால் விளங்கிய வஞ்சியில்
தோன்றிய மன்னனே கேட்பாயாக! நாங்கள்
பொதிகை செல்லும் வழியில் நின் பெரும் படையின்
ஒலியால் ஈர்க்கப்பட்டு இங்கு வந்தோம். நீ இமயம் செல்லும் கருத்து அறிவோம். அருமறை கற்ற அந்தணர் ஆங்கு வாழ்கின்றனர். பெருநில மன்னனே! அவர்களைப் பாதுகாத்தல் நின்
கடமையாகும்”என்று கூறி செங்குட்டுவனை வாழ்த்திச் சென்றனர்.
முனிபுங்கவர்கள் அவ்விடம் நீங்கியதும், “வீங்கு நீர் ஞாலம்
ஆள்வோன் வாழ்க!” என்ற வாழ்த்தொலியோடு
கொங்கணக் கூத்தரும் கர்நாடகக் கூத்தரும் வந்தனர். கூத்தர் குலத்திற்கான ஒப்பனை அவர் பூண்டிருந்தது
தூக்கலாகத் தெரிந்தது. தழைத்த மாலையைத்
தலையில் சுற்றியவராய், மணிவடங்கள் சுமந்த இளம் நகில்களைக் கொண்டவராய்,
கயல் நெடுங்கண்ணினராய் திகழ்ந்த ஆடல் மகளிரும் அவருடன் இருந்தனர். ‘கருங்குயில்கள் பாடின; இன வண்டினம் யாழ் இசைத்தன; அரும்புகள் அலரும் பருவமாய் இளவேனில் காலமும்
வந்தது; ஆனால் எம் காதலரோ இன்னும் வரவில்லை..” என்னும் பொருள் பொதிந்த மாதர்ப்பாணி வரிப்பாடலை
இசைத்துக் கொண்டே அவர்கள் வந்தது மயக்கம்
தருவதாய் இருந்தது.
‘கலகலக்கும் வளையல் அணிந்த நங்கையே! எழுவாய்; கோலம்கொள்வாய்! (ஒப்பனை பூணுவாய்!) கடிதாக இடி இடித்த உறுமலோடு கார்க்காலம் வந்த்து, காணாய்! சென்ற காரியம் முடித்துத் திரும்பும் காதலரைச் சுமந்த தேரும்
வந்தது, பாராய்!’ என்று முன் இசைத்த வரிப்பாடலுக்கு வைப்பாடலே
பதிலாய் இசைத்தபடி பின் வந்த ஆடல் மகளிருடன் குடகர்கள் மாமன்னன் முன் வரிசையிட்டு நின்றனர்.,
அவர்களுக்குப் பின் ஓவர்கள் வந்தனர். அவர்கள் வருகையிலேயே “வாள்வினை முடித்து மறவாள்
வேந்தன் ஊழி ஊழி வாழி” என்று வாழ்த்தொலிகளுடன் வந்தனர். ஆடலாசிரியன் வழிகாட்ட அங்கு குழுமியிருந்த அத்தனை
இசைக்கலைஞர்களுக்கும் பொன்னும்,
முத்தும், பவழமுமாய் மன்னன் அணிகலன்களை வாரி வழங்கினான்.
அந்த சமயத்தில்
தான் வாயிற்காவலர் ஏதோ சேதி சொல்வது போல வந்து பணிந்து நின்றனர்.
(வளரும்)
படங்களை உதவிய நண்பர்களுக்கு நன்றி.


