மின் நூல்

Thursday, April 10, 2008

நெஞ்சில் நிறைந்தவன்எடுப்பு
அழைப்பாயோ என்னை அணைப்பாயோ--உந்தன்
அருகினில் வந்து இளைப்பாற....இப்போது
(அழைப்பாயோ..)

தொடுப்பு
கருவாகி உருவாகி கசிந்துருகி காதலாகி
மருவெலாம் நீங்கி உனை மருவத் துடித்தேன்
மனமெலாம் உன்னைத் தழுவ மயங்கித் தவித்தேன்
மோனம் கலைந்து நீயாக வந்து எனை
(அழைப்பாயோ..)

முடிப்பு
புவியாளும் ஜகன்நாதா! கோவர்த்தன கோபாலா!
தஞ்சம் அடைந்தேன்; என் நெஞ்சம் கவர்ந்தவ னல்லவோ?..
தணியாத தாபம் தீர தழுவிக் களித்திட
தவித்திடும் என் தாகம் தீர்க்க...கண்ணா...
(அழைப்பாயோ..)

40 comments:

Anonymous said...

ஆகா, தங்கள் கை வண்ணத்தில் பாடல் போலும், அறொஉதமாக இருக்கிறது!

ஜீவி said...

சாந்தகுமார் said...
//ஆகா, தங்கள் கை வண்ணத்தில் பாடல் போலும், அறொஉதமாக இருக்கிறது.//

தங்கள் வருகைக்கும், ரசனைக்கும்
மிக்க நன்றி, சாந்தகுமார்!
அடிக்கடி வர வேண்டுகிறேன்.

jeevagv said...

இசைப்பாடல் அருமையாக இருந்தது, தமிழிசை நெஞ்சை நிறைத்தது!
காதலாகி கசிந்துருகியவர்கள் உண்டு.
இங்கே நீங்கள் கண்ணனிடம் கசிந்துருகி, பின்னர் காதல் கொண்டுள்ளீர்கள். அதனால் மருவெல்லாம் மருகிடுதல் நன்று.
இந்தப் பாடலுக்கு என்ன ராகம் பொருந்தும் என யோசிக்கத் தோன்றுகிறது.
சாமா ராகம்?

sury siva said...

குரல் உங்களது கேட்டு
கண்ணன் அனுப்பிய கமென்ட்:
நான் ஜஸ்ட் அதைக்கேட்டு ஃபார்வேர்டு செய்கிறேன்.


"அழைத்தாலும் நீ அழையா விடினும்
அருகினில மர்ந்துனை அணைத்திடுவேன்

அணையா சோதி நின் இதயத்திலே கண்டு
அன்புடன் எனையே ஆட்கொண்டினையே ... நீ அழைத்தாலும் ....

நெஞ்சம் கவர்ந்தது நீயல்லவோ ! என்
நெஞ்சம் நிறைந்ததும் நீயல்லவோ = அதில்
பஞ்சாய்ப் படர்ந்ததும் நானல்லவோ !
பாஞ்சாலியின் கதையுனக்கு தெரிந்திலையோ ? ...அழைத்தாலும்....

புவி என்றும் ஜகம் என்றும் ஒன்றி ருந்தால் = அது எனைப்
பூசிக்கும் பக்தர் இதயமென்றோ !
கோவர்த்தனம் என்றும் ஒன்றிருந்தால் = அது
கோவிந்தனைப் பாடும் நின் மனமும் அன்றோ ! = ஆக,

அழைத்தாலும் நீ அழையாவிடினும் = நின்
அஹம தில் நான் தான் = நீ அறிவாய்.
அது நீதான் என அறிந்தபின்னே எனை
அழைத்திடல் வேண்டுமோ ? சொல்வாய் சொல்வாய்."

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://paattiennasolkiral.blogspot.com

ஜீவி said...

ஜீவா (Jeeva Venkataraman) said...
//இசைப்பாடல் அருமையாக இருந்தது, தமிழிசை நெஞ்சை நிறைத்தது!
காதலாகி கசிந்துருகியவர்கள் உண்டு.
இங்கே நீங்கள் கண்ணனிடம் கசிந்துருகி, பின்னர் காதல் கொண்டுள்ளீர்கள். அதனால் மருவெல்லாம் மருகிடுதல் நன்று.
இந்தப் பாடலுக்கு என்ன ராகம் பொருந்தும் என யோசிக்கத் தோன்றுகிறது.
சாமா ராகம்? //

கசிந்துருகிய பின் காதல்; காதலுக்குப் பின் கசிந்துருகுதல்--
இரண்டும் ஒன்றாகத் தெரிந்தாலும்,
நுண்ணிய வேறுபாடும் தெரிவது
உண்மைதான். அதைப் புரிந்து
சரியாகத்தான் சொல்லியுள்ளீர்கள்.
மற்றபடி, ராகம்?...
ராகங்கள் பற்றி விவரமாக இனிதான் நான் பயிலவேண்டும். அவற்றைப் பற்றி விவரமாக ஏதும் அறியேன்.
திரை இசைப்பாடல்களில் தான் ராகத்திற்கு ஏற்றபடி பாடல்கள் எழுதும் பழக்கம் அந்தத் துறையில்
பழகி விட்டது என்று அறிகிறேன்.
பாடலுக்குத் தக்கபடி ராகம் அமைத்துக் கொள்ள முடியும் தானே?.. ராகம் அமைத்த பிறகு, வார்த்தைகளில் ஏதேனும் நெருடல்கள் இருந்தால் மாற்றிக் கொண்டால் போயிற்று...
தாங்கள் சொல்லியிருப்பதிலிருந்து
இந்தப் பாடலுக்கு 'சாமா' ராகம
பொருந்தி வருகிற மாதிரி தெரிகிறது.
இன்னொருவருக்கு வேறு ஒரு ராகத்தில் இதே பாடலை ரசிக்க முடியும் என்றாலும் சரியே.
ராகங்களைப் பற்றி அறிந்து கொண்டால், ஓசை நயம் இயல்பாக வந்துவிடும் என்று தெரிவதால், அது பற்றி கற்க இனி முயற்சி செய்கிறேன். சர்வதாரி புதுவருடத்தில்
இந்த வகையில் எனது கன்னி முயற்சி இது.
தங்கள் வருகைக்கும் அன்பான
கருத்துக்களுக்கும் மிக்க நன்றி,ஜீவா!

ஜீவி said...

sury said...

//குரல் உங்களது கேட்டு
கண்ணன் அனுப்பிய கமென்ட்:
நான் ஜஸ்ட் அதைக்கேட்டு ஃபார்வேர்டு செய்கிறேன். //

ஆஹா..என்னொவொரு பாக்கியம்..
இன்னொரு முறை கண்ணனின் குரல்
அசரீதியாக எனக்குக் கிடைத்திருக்கிறது. (தாங்கள் அவசியம் எனது இதே வலைப்பூவில் இருக்கும் "நீர்மோர்" என்னும் சிறுகதையைப் படித்துப் பார்க்க வேண்டுகிறேன்) அருமையான ஒரு பாடல் தங்கள் மூலமாக தமிழ்ப் புத்தாண்டன்று தமிழ் கூறும் நல்லுலகத்திற்குக் கிடைத்திருக்கிறது.
தங்கள் முதல்வருகைக்கும் நீண்ட பின்னூட்ட கவிதை வாழ்த்துக்கும், கவிதை கடைசி கண்ணியில் கொடுத்துள்ள தத்துவ கருத்திற்கும் மிக்க நன்றி.
அடிக்கடி வாருங்கள், தஞ்சை சுப்புரத்தினம், சார்!

தி. ரா. ச.(T.R.C.) said...

தணியாத தாபம் தீர தழுவிக் களித்திட
தவித்திடும் என் தாகம் தீர்க்க...கண்ணா

ஆகா. அற்புதமான வரிகள்.எடுப்பு தொடுப்பு முடிப்பு பல்லவி அனு பல்லவி சரணத்துக்கு நல்ல மாற்று.ஊத்துக்காடு வரிகளில் சொல்ல வேண்டும் என்றால்
"எப்படித்தான் என் உள்ளம் புகுந்து என்னை அடிமை கொண்டீரோ ஸ்வாமி

தனியொருமுடிமேல் இளமயிலானது தருதோகையணிந்து வந்தவா,

உறியேறி களவாடி தோழருடன் உனக்கு எனக்கு எனத் தின்றவா

ஊரறியுமுன்பு அன்னையிடஞ்சென்று ஒன்றுமறியாமல் நின்றவா

சாமா ராகத்தில் பாடி இசையோடு அளியுங்கள். நல்ல முயற்சி.

sury siva said...

நடப்பதும் அவனே
நடாத்துபவனும் அவனே
நிகழ்வும் அவனே ..

எனக்கே அதிசயமாகத்தான் இருக்கிறது. நான் எனது
வலையுலக நண்பர் ஜீவாவின் பதிவென் எண்ணித்தானே
வந்தேன். பின்னோட்டமும் தந்தேன். தங்கள் பதில் கண்டபின்பு
தான் இன்னொரு பதிவுக்கு வந்திருக்கிறேன் எனத்தெரியவருகிறது.

உண்மையிலே, இன்று காலை
இனிய நண்பர் ஜீவா அவர்கள் எனது வலைப்பதிவு
http://movieraghas.blogspot.com
வந்தார். "இங்கே செல்லுங்கள் எனத் "
தந்தார் ஒரு திசை. அத்
திசை நோக்கிச் சென்ற
என் கண்களும் காதுகளும்
கார்முகில் கண்ணனைத்தானே கண்டன.

முன்னும், பின்னும், முதலும், முடிவும்
முன்னவன் எவனோ அவனே கண்ணன்.
ஜீவியும் அவனே .. ஜீவாவும் அவனே.
ஜீவன் உணரும் பிரும்மனும் அவனே.

நிற்க. உங்கள் கவிதைக்கு மெட்டமைக்கவேண்டும் எனத்
தோன்றியது. தர்பாரி கானடாவில் நன்றாகவே வருகிறது.
நீங்கள் அனுமதி தந்தால், சற்று நேரத்தில் இதை
"அழைப்பாயோ " என்ற தலைப்பில் யூ ட்யூபில் தருகிறேன்.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://movieraghas.blogspot.com
http://pureaanmeekam.blogspot.com

ஜீவி said...

sury said...

//உங்கள் கவிதைக்கு மெட்டமைக்கவேண்டும் எனத்
தோன்றியது. தர்பாரி கானடாவில் நன்றாகவே வருகிறது.
நீங்கள் அனுமதி தந்தால், சற்று நேரத்தில் இதை
"அழைப்பாயோ " என்ற தலைப்பில் யூ ட்யூபில் தருகிறேன்.//

என்ன வேகமான செயல்பாடு?.. எல்லாம் கண்ணனின் கருணை என்று தான் நினைக்கிறேன்..என்னை எழுதவைத்து, இசை அமைக்க உங்களை ஏற்பாடு செய்திருக்கும் அவன் கருணை நினைத்து திகைத்து நிற்கிறேன்.
தர்பாரி கனடாவில் அவன் திருநாமம் கேட்கக் காத்திருக்கிறேன்.
அவன் அருளால் அவன் தாள் வணங்கி..
அன்புடன்,
ஜீவி

ஜீவி said...

தி.ரா.ச. (t.r.c.) said...
//சாமா ராகத்தில் பாடி இசையோடு அளியுங்கள். நல்ல முயற்சி.//

வாருங்கள்,தி.ரா.ச.
அடியேன் இசை அமைப்பதை அறியேன். நாம் எல்லோரும் அனுபவித்துக் கேட்க அன்பர்
சூரி அவர்கள் 'தர்பாரி கனடா'வில் இசை அமைத்து, 'அழைப்பாயோ' என்னும் தலைப்பில் யூ ட்யூப்பில்
தருவதாகக் கூறியிருக்கிறார். கண்ணன்
புகழ் கேட்க, எப்படி ஒரு கூட்டு முயற்சி பாருங்கள்..
எல்லோரும் தர்பாரி கனடாவில் அவன் புகழ் கேட்கத் தயாராகலாமா?..

sury siva said...

தமிழ் வருஷப்பிறப்பான இன்று " பில்லா " எங்கள் காலனிக்கு வந்திருக்கிறார். அவர் போடும் சத்தத்தில்
ரெகார்டிங் இயலவில்லை.சிங்கர் பில்லாவைப் பார்க்கப் போய்விட்டார். கண்ணனிடம் ஒரு நாள் டைம் வாங்கித் தாருங்கள்.
வாசலில் மணி அடிக்கிறது. கபீர் வந்திருக்கிறார் போலும் !
நாளை வருகிறேன்.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://paattiennasolkiral.blogspot.com
http://movieraghas.blogspot.com

jeevagv said...

ஆகா, சுப்புரத்தினம் ஐயாவே மெட்டமைக்கப் போகிறாரா, நல்லது!

jeevagv said...

"எப்படித்தான் என் உள்ளம் புகுந்து..."
பாடலை இதுவரை கேட்டதில்லை, அறிமுகத்திற்கு நன்றி தி.ரா.ச ஐயா. பாடல் வரிகள் முழுதும் இங்கே இருக்கிறது.

sury siva said...

u may listen now azhaippayo in www.http://www.youtube.com/watch?v=x9sm4YdguMw
however, i am making an attempt
in Raag HINDOLAM and not in
dARBARI KANADA as originally
set by me. I am not a singer. So you may not expect any sort of quality in my voice.
subbu rathinam
thanjai.
ps; you may listen to raag malikas in http://movieraghas.blogspot.com

sury siva said...

http://www.youtube.com/watch?v=DH82mEHHbBg


ஹிந்தோளத்தில் பாட நான் முயற்சி செய்ததைக் கண்டீர்களா ?
திட்ட மாட்டீர்கள் என நினைக்கிறேன்.
கோவர்த்தன கோபாலா...கண்ணா எனத்துவங்கி
தர்பாரி கானடாவிலும் பாடலாம் என இன்னொரு முயற்சி செய்தேன்.
தர்பாரி கானடாவின் அழுத்தம், பிரயோகம் முடியவில்லை. கானடாவேதான்
பல இடங்களில் தொனிக்கிறது.
இருந்தாலும், கிழவன் சிரமப்பட்டு பாடியிருக்கிறானே என‌
ஒரு அனுதாபத்தில் கேட்கலாம்.
தர்பாரி கானடாவின் ஸ்வர ஸ்தானங்கள் அறிந்தவர்கள்
இந்த மெட்டிலே பாடினால் உண்மையில் நன்றாக இருக்கும்.
அதற்கு உத்தரவாதம்.
என்னால் பஞ்சமத்துக்கு மேலே போகமுடியவில்லை.
மன்னிக்கவும்.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://vazhvuneri.blogspot.com
http://pureaanmeekam.blogspot.com

sury siva said...

Jeeva avargal thantha 'inge ' chutti
redirect seyyavillai.
suppu rathinam.
thanjai.

ஜீவி said...

sury said....
//ஹிந்தோளத்தில் பாட நான் முயற்சி செய்ததைக் கண்டீர்களா ?// அருமை சார், சூரி சார்! உண்மை; வெறும் புகழ்ச்சி இல்லை;
தாங்கள் எடுத்துக் கொண்ட முயற்சி அத்தனையும், நினைத்ததை நிறைவேற்றிக் காட்டியது நினைத்து நினைத்து மகிழத் தக்கது. குறிப்பாக
எழுதிய வரிகளை இழுத்துச் சேர்க்க வேண்டிய இடங்களில் சேர்த்து ஸ்வரம் தப்பாமல் பாடி நிலைநிறுத்தியது, எழுதியவனுக்கு
மகிழ்ச்சி அளிக்கக் கூடியது.
எல்லோரும் அனுபவிக்க ஒரு வாய்ப்பாகவும் அமைந்துவிட்டது.
அனைவரின் சர்ர்பாகவும் தங்கள் முயற்சிகளுக்கு மிக்க நன்றி.

அடுத்த கீர்த்தனை திருவாரூர் தியாகராஜரின் தேரோட்டம் பற்றி.
இப்பொழுதே சொல்லி விட்டேன்.
நீர்மோர் படித்தீர்களா?..

jeevagv said...

ஹிந்தோளத்தில் தங்கள் பாடியது நன்றாக இருந்தது சுப்புரத்தினம் ஐயா, மிக்க நன்றி.

jeevagv said...

ஊத்துக்காடு வேங்கட சுப்பையரின் 'எப்படித்தான்...' பாடல் வரிகளின் சுட்டி இங்கே.

கிருத்திகா ஸ்ரீதர் said...

ஊத்துக்காடு பாடலகளைக் கேட்கும் போது மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் முடிவில் அவர் வாழ்ந்திருந்த தளங்களுக்கு நம்மை எடுத்துச்சென்றிருப்பார். இந்தப்பாடலும் மீண்டும் மீண்டும் வாசிக்கத்தூண்டுகிறது. இசையோடு கேட்க ஆசை...

sury siva said...

ஸ்ரீ ராம நவமி தினம் இன்று
நீர் மோர் தருகிறேன் என்று எவரேனும் சொன்னால்
சாப்பிடாது இருக்கமுடியுமா என்ன ?
நீர் காட்டிய இடம் சென்று மோர் அருந்தினேன்.
நீவிர் அழைத்தீர் அல்லவா ! அதனால்
மோர் ( more ) எனச்சொல்லி இன்னொரு குவளையும் குடித்தேன்.
வயிறு நிறைந்தது. நெஞ்சமு‌ம் நிறைந்தது.
மோர் மட்டும் வயிறை அடைய
நீர் என் கண்களை அடைந்தது.

நீர் இலாத ஒரு மோரும் உண்டோ ?
நீர் இணையா கரு முகிலும் உண்டோ ?
' நீ ' இல்லாத ஓர் ' நானும் ' உண்டோ /
நீ இல்லையெனில், எ(ன்)னில் உயிரும் உண்டோ ?

நீரும் மோரும் கலந்தன . இனி எந்
நாவில் ராமன் நாமம் என்றும் நின்றிட
ராமா ராமா வெனை அவனை அழைப்போம்

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
வாருங்கள்
http://movieraghas.blogspot.com

குமரன் (Kumaran) said...

கீர்த்தனை மிக எளிதாக அருமையாக இருக்கிறது ஜீவி ஐயா.

sury siva said...

நண்பர் ஜீவா காட்டிய சுட்டி வழி சென்று ஊத்துகுடியின் " எப்படித்தான் .." எனத்துவங்கும் பாடல்
நீலாம்பரியில் உள்ளது. இதை என் அம்மா நீலாம்பரியிலும் பாடுவார்கள். புன்னாக வராளியிலும்
பாடுவார்கள். சொற்கட்டு இரண்டுக்குமே சுத்தமாகப் பொருந்தும்.

நிற்க. ஹிந்தோளத்தை அடுத்து, நான் அதே பாடலை இன்னொரு முறை, தர்பாரி கானடா என நினைத்துக்கொண்டு பாட முயற்சித்ததைக் கேட்டு துன்புற்றவர் யார் ? யார் ?

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.

தி. ரா. ச.(T.R.C.) said...

எனது அடுத்த பதிவு நீலம்பரி. அதில் இந்தப் பாடலை போடலாம் என்று இருக்கிறேன்.முடிந்தால் விஜயம் செய்யலாம்

தி. ரா. ச.(T.R.C.) said...

எனது அடுத்த பதிவு நீலாம்பரி. அதில் இந்தப் பாடலையும் போடலாம் என்று இருக்கிறேன்.முடிந்தால் விஜயம் செய்யலாம்

jeevagv said...

தர்பாரி கானடா வில் பாடல் இன்னமும் நன்றாக இருக்கிறது. ஹிந்தோளத்தைக் காட்டிலும், தர்பாரி கானடா எனக்குப் பிடித்திருக்கிறது.

இரண்டின் சுட்டிகளும் ஒருசேர இங்கே:
தர்பாரி கானடா:
http://www.youtube.com/watch?v=DH82mEHHbBg
ஹிந்தோளம்:
http://www.youtube.com/watch?v=x9sm4YdguMw

sury siva said...

eppadithan paadal neelambariyile
pichu udhari irukkar O.S.Arun.
Athai eduthu naan naalai youtube, itube akiya sakala tube leyum podaren. jeevavukku mukkiyama
thanks sollanum.

subbu rathinam.
thanjavur.
ihd0d faffg

sury siva said...

கிருத்திகா said...

ஊத்துக்காடு பாடலகளைக் கேட்கும் போது மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் முடிவில் அவர் வாழ்ந்திருந்த தளங்களுக்கு நம்மை எடுத்துச்சென்றிருப்பார். இந்தப்பாடலும் மீண்டும் மீண்டும் வாசிக்கத்தூண்டுகிறது. இசையோடு கேட்க ஆசை..//

Blogger தி. ரா. ச.(T.R.C.) said...

எனது அடுத்த பதிவு நீலம்பரி. அதில் இந்தப் பாடலை போடலாம் என்று இருக்கிறேன்.முடிந்தால் விஜயம் செய்யலாம//


subbu rathinam oru mundhiri kottai.
itho antha paattu.


"எப்படித்தான் என் உள்ளம் புகுந்து என்னை அடிமை கொண்டையோ ஸ்வாமி!"
ஓ.எஸ்.அருண் குரலில் கேட்கவும்.

http://www.youtube.com/watch?v=5Eu8u7IumII

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://movieraghas.blogspot.com

ஜீவி said...

கிருத்திகா said...
//ஊத்துக்காடு பாடலகளைக் கேட்கும் போது மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் முடிவில் அவர் வாழ்ந்திருந்த தளங்களுக்கு நம்மை எடுத்துச்சென்றிருப்பார். இந்தப்பாடலும் மீண்டும் மீண்டும் வாசிக்கத்தூண்டுகிறது. இசையோடு கேட்க ஆசை...//

ஊத்துக்காடு மகான் கண்ணனோடு
பேசி, விளையாடிக் களித்தவர்.
அவரது அந்த பெறற்கரிய அனுபவம் தான் அவரது பாடல்கள்.
எளியேனின் இந்தப் பாடலும் உங்களுக்கு மகிழ்ச்சி அளித்தது குறித்து சந்தோஷம்.
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்.றி

ஜீவி said...

குமரன் (Kumaran) said...
//கீர்த்தனை மிக எளிதாக அருமையாக இருக்கிறது ஜீவி ஐயா.//

வாருங்கள், குமரன்! உங்களை என் தளத்தில் பார்த்து நிரம்ப நாட்களாயிற்று. நலம் தானே?..தங்கள்
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி. அடிக்கடி வாருங்கள்.

ஜீவி said...

தி. ரா. ச.(T.R.C.) said...
//எனது அடுத்த பதிவு நீலாம்பரி. அதில் இந்தப் பாடலையும் போடலாம் என்று இருக்கிறேன்.முடிந்தால் விஜயம் செய்யலாம்//

வாருங்கள், தி.ரா.ச.,
கணினியில் ஏற்பட்ட சில சிக்கல்களால்
உடனே என் மகிழ்ச்சியைத் தெரியப்படுத்த இயலவில்லை.
இன்று தான் எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள முடிந்தது. நீலாம்பரியில் இந்தப் பாடலைக் கேட்கக் காத்திருக்கிறேன்.
தங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

ஜீவி said...

திரு. சூரி சார்!
கணினி சிக்கல் காரணமாக அவ்வப்போது மறுமொழி அளித்திட முடியாமல் போய்விட்டது.
தொடர்ந்து பல விஷயங்களைக்
கோர்வைப்படுத்தி பின்னூட்டமிட்ட
ஜீவாவிற்கும், உங்களுக்கும் மிக்க நன்றி.

Kavinaya said...

ஐயா, இதோ என் தோழி மீனா, மலயமாருதம் ராகத்தில் பாடியுள்ள தங்கள் பாடல்:

http://www.esnips.com/doc/4ebfa481-4015-4520-8b49-bbe6d88d6b46/AzhaippayoTAKE2

ஜீவி said...

கவிநயா said...
//ஐயா, இதோ என் தோழி மீனா, மலயமாருதம் ராகத்தில் பாடியுள்ள தங்கள் பாடல்://

முதலில் எனது மனந்நிறைந்த மகிழ்ச்சியையும் நன்றியையும் சொல்லிவிடுகிறேன்.

எழுதியவனின் எழுத்து எப்படியிருப்பினும், அதை இன்னொருவரின் குரலில் கேட்கும் சந்தோஷம் அலாதி தான்; அதுவே ஒரு பாடலாக இருக்கும் பொழுது, இசையின்பம் என்கிற உன்னதம் வேறு சேரும் பொழுது கேட்கவே வேண்டாம்.

தங்கள் அருமைத் தோழி மீனாவின் குரலில் குழைவும், உச்சரிப்பு மேன்மையும் அதிகம். அந்தச் சிறப்பு இந்தப் பாடலுக்கு மிகவும் பொருந்தி, "அழைப்பாயோ.." என்று நீட்டி அழைக்கையில், அற்புதமாக இருக்கிறது. 'மலையமாருதம்' அருமையானத் தேர்வு. நீங்கள் இருவரும் எடுத்துக் கொண்ட முயற்சிக்கும், சொன்னதைச் செய்த உணர்விற்கும் மீண்டும் நன்றி.

தோழியர் மீனாவுக்கு எனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்க வேண்டுகிறேன்.
ஜீவி

sury siva said...

//அற்புதமாக இருக்கிறது. 'மலையமாருதம்' அருமையானத் தேர்வு. நீங்கள் இருவரும் எடுத்துக் கொண்ட முயற்சிக்கும், சொன்னதைச் செய்த உணர்விற்கும் மீண்டும் நன்றி.

தோழியர் மீனாவுக்கு எனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்க வேண்டுகிறேன்.
ஜீவி//

நானும்.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.

Kavinaya said...

//எழுதியவனின் எழுத்து எப்படியிருப்பினும், அதை இன்னொருவரின் குரலில் கேட்கும் சந்தோஷம் அலாதி தான்; அதுவே ஒரு பாடலாக இருக்கும் பொழுது, இசையின்பம் என்கிற உன்னதம் வேறு சேரும் பொழுது கேட்கவே வேண்டாம். //

உண்மை ஐயா!

//தங்கள் அருமைத் தோழி மீனாவின் குரலில் குழைவும், உச்சரிப்பு மேன்மையும் அதிகம். அந்தச் சிறப்பு இந்தப் பாடலுக்கு மிகவும் பொருந்தி, "அழைப்பாயோ.." என்று நீட்டி அழைக்கையில், அற்புதமாக இருக்கிறது.//

ஆம் ஐயா. மனம் உருகும் உருக்கம் அவர் குரலில் குழைவது உண்மை. அதுவும் உங்கள் பாடல் தன்னை மிக உருகச் செய்து விட்டதாகத் தெரிவித்தார்.

உங்களின், சுப்புரத்தினம் ஐயாவின் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் உரிய இடத்தில் சேர்ப்பித்து விடுகிறேன்.

அருண்சங்கர் said...

இவை அனைத்தும் தங்களால் உருவான பாடல்களா ஜீவி சார்? மிகவும் அருமை.

ஜீவி said...

அருண்சங்கர் said...

//இவை அனைத்தும் தங்களால் உருவான பாடல்களா ஜீவி சார்? மிகவும் அருமை.//

ஆமாம், அருண்சங்கர். தமிழிசையில் சாகித்யங்களைப் படைத்த முன்னோர்களின் காலத்தால் மறையாத பாடல்களைப் படித்து புது முயற்சியாய் ஈடுபட்ட ஆர்வத்தில் சில்வற்றை எழுதும் பேறு பெற்றேன்.

கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் கழித்து உங்களது பின்னூட்டம் கண்டு மீண்டும்
தொடர்ந்து எழுத வேண்டும் என்கிற ஆணை கிடைத்த உணர்வு ஏற்பட்டிருக்கிறது.
அதற்கான சக்தி கிடைக்க பிரார்த்திக்கிறேன்.

தங்கள் வருகைக்கும், அன்பான பாராட்டிற்கும் மிக்க நன்றி, அருண்!

தி.தமிழ் இளங்கோ said...

’கண்ணன் வர்வான் கதை சொல்லுவான்” - தொடர்ந்து படித்து வருகிறேன்.

ஜீவி said...

வாசித்து வருவதற்கு நன்றி, ஐயா

Related Posts with Thumbnails