மின் நூல்

Wednesday, October 15, 2008

ஆத்மாவைத் தேடி....10

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

10. ரிஷி கொடுத்த வரம்


மொத்தம் அறுபத்து நான்கு பேர். பலதுறை சார்ந்த பண்டிதர்; பல்வேறு மாநிலத்தவர். எல்லோரும் இப்படிப்பட்ட சதஸ்ஸில் தாங்கள் கலந்து கொளவது ஒரு பாக்கியமே எனக் கருதி வந்திருந்தனர்.

காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு அத்தனை பேரும் அந்த மஹாதேவ் நிவாஸின் வடகிழக்குப் பக்கம் இருந்த ஒரு பெரிய மண்டபத்தின் முன்னால் கூடிவிட்டனர். பூத்துக் குலுங்கும் நந்தவனத்தின் மத்தியில் இருந்தது, அந்த மண்டபம். அறுகோணத்தில் கட்டப்பட்ட மண்டபத்தின் நட்ட நடுவில் கோயில் போன்ற அமைப்பு நோக்கி பாதை தனியே பிரிந்து சென்றது. அந்த வழி சென்றால்.. நீறூற்றின் நடுவே மிகப்பெரிய பாறையில் அமர்ந்த நிலையில் தத்ரூபமாக பார்வதி- பரமேஸ்வரர் சிலைகள் செதுக்கப்பட்டிருந்தன. அன்னையின் மடியில் முருகனும், அப்பனின் மடியில் விநாயகரும்! கைலாயமே வந்து விட்டோமோ என்கிற உணர்வு அத்தனை பேருக்கும். மண்டபம், கோயில் எல்லாம் மஹாதேவ்ஜியின் அர்ப்பணிப்பு... ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் மிகுந்த அக்கரையும், பிரயாசையும் எடுத்துக் கொண்டு கட்டப்பட்டிருந்தது மேலோட்டமாகப் பார்க்கையிலேயே தெரிந்தது.

மண்டபத்தின் மேலே நடுமத்தியில் சின்ன ஸ்தூபி ஒன்று வான்நோக்கி நீண்டிருந்தது.. மண்டபத்தைச் சுற்றி வட்ட வடிவில் மிகப்பெரிய தியான மண்டபம். 'உழ்ழ்..' என்ற லேசான காற்றின் ஓசையைக்கூடக் கேட்கிற மாதிரி தியான மண்டபத்தில் அமைதி தவழ்ந்தது. தளமும், படிகளும் சலவைக்கல் பதிப்பிக்கப்பட்டு வழுவழுவென்றிருந்தன. தரிசனத்திற்குப் பிறகு தியானம் என்று வந்திருந்த அத்தனை பேரும் கிடைத்தற்கரிய பேறு பெற்ற திருப்தியில் வெளிவந்தனர்.

மனோகர்ஜியின் குருநாதர் கிருஷ்ணமகராஜ்ஜியும், மனோகர்ஜியின் தந்தை குருதேவும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் ஒன்றாக காசி சர்வ கலாசாலையில் படித்தவர்கள். பின்பு குருதேவ்ஜி வியாபாரத்திற்கு வர, கிருஷ்ணமகராஜ்ஜி யோகம் பயில இமயமலை நாடினார். கொஞ்ச காலம் தான்; வியாபாரம் பிடிக்காமல் மகாதேவ்ஜியும் பிள்ளைகளிடம் பொறுப்புகளைக் கொடுத்து விட்டு கிருஷ்ணமகராஜ்ஜியைத் தேடி இமயமலை சென்றார்.

அது அந்த குடும்பத்து ராசி; யாரோ ரிஷி கொடுத்த வரம். ஒரு தலைமுறை தாண்டி அடுத்து வரும் சந்ததியில் ஒருவர் யோகத்தில் நாட்டம் கொண்டு அதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பர். இந்த சந்ததிக்கு ராம்மனோகர்ஜி. மனோகர்ஜிக்கு மூன்று பிள்ளைகள். இரண்டு பேருக்கு இரண்டு ஆண் வாரிசுகள் உண்டு. மனோகர்ஜியின் இந்தப் பேரன்களில் யாராவது ஒருவர் நிச்சயம் பிற்காலத்தில் யோக மார்க்கத்தில் தன்னைச் செலுத்துவான் என்பது சர்வ நிச்சயம்; அது பரம்பரையாக அந்த குடும்பத்திற்குக் கிடைத்த வரம். எல்லாம் மனோகர்ஜி சொல்லி கிருஷ்ணமூர்த்திக்குத் தெரிந்தது.


திட்டமிட்டபடி முதல் கூட்ட நிகழ்ச்சி தொடங்கியது. முதல் நிகழ்ச்சி வந்திருந்த பண்டிதர்கள் தங்களைத் தாங்களே அறிமுகப்படுத்திக் கொள்வதாக இருந்தது. வந்திருந்தவர்களின் பெயரும், எந்த மாநிலத்தைச் சார்ந்தவர் என்பதும், அவர் விவரிக்கப்போகும் தலைப்பும், அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறையின் எண் போன்ற குறிப்புகள் கொண்ட பட்டியல் எல்லா கோ-ஆர்டினேட்டர்கள் வசமும் இருந்தது. கிருஷ்ணமூர்த்தியையும் சேர்த்து மொத்தம் நான்கு ஒருங்கிணைப்பாளர்கள். நான்குபேரும் கிட்டத்தட்ட பெரும்பாலான் பிரதிநிதிகள் பேசும் மொழி தெரிந்திருப்பவர்களாக இருந்தார்கள்.


எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதில் வெவ்வேறான கருத்துக்கள் பரிசீலிக்கப் பட்டன. உயிர்களின் ஜனனத்திலிருந்து, உலகம் உருவானதிலிருந்து, மரணத்தை அடுத்து, பிரபஞ்சத்தின் தொடக்கத்திலிருந்து என்று பல அம்சங்களில் கருத்துக்களைத் திரட்டலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கும், இதுவரை அறிந்துள்ள விஞ்ஞான வெளிப்பாடுகளுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என்பதைக் கிட்டத்தட்ட எல்லாப் பிரதிநிதிகளுமே வலியுறுத்தினார்கள். உடற்கூறு இயல், மனிதஅனாடமி, உடல் உறுப்புகளின் இயக்கம் இவற்றைப் பற்றி சொல்வதற்கென்றே மருத்துவத்துறை சார்ந்த வல்லுனர்கள் நான்கு பேர் வந்திருந்தனர். அலோபதி, ஆயுர்வேதம்,சித்த வைத்தியம், மனோவசியம், அக்குபஞ்சர், காந்த சிகித்சை போன்றவற்றின் ஆளுகை பற்றி விரிவாகச் சொல்ல ஆறு பேர் கொண்ட ஒரு குழு தயாராக இருந்தது. சித்தர்களின் சிந்தனைகளை சுவைபடச் சொல்ல ஆறுபேர். இசை இன்பத்தில் இறைவன் அன்பில் தோயத் தனியே ஒரு குழுவிடம் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது. மெஞ்ஞானத்தில் வேதங்களிலிருந்து ஆரம்பித்து உபநிஷத்துக்களின் ஒளிச்சுடர் ஏந்தி யோகிகளின் சிந்தனை செல்வத்தைப் புரிந்து கொள்ள முயற்சிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.


இன்னும் சதஸுக்கு ஒருமாத கால அவகாசம் இருப்பதால் இந்த இடைப்பட்ட காலத்தில் அந்தந்தத் துறை சம்பந்தப்பட்ட அனைத்து அறிஞர்களும் விவாதித்து உருவாகும் கருத்துக்களை 'தீஸிஸ்'களாக சதஸ்ஸில் சமர்ப்பிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது. .


தினம் தினம் அன்றைய மாலை நிகழ்ச்சியாய் புராணக்கதை சொல்ல மனோகர்ஜி, கிருஷ்ணமூர்த்தியைக் கேட்டுக்கொள்ள பலத்த கரவொலிக்கிடையே கிருஷ்ணமூர்த்தி தனது சம்மதத்தைத் தெரிவித்தார்.

இறுதியில் பிரபஞ்சத்திலிருந்து ஆரம்பிக்கலாம் என்று ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.


அப்பொழுது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

(தேடல் தொடரும்)


6 comments:

jeevagv said...

சுவையாக நடையுடன், சுகமான வாசிப்பனுபவம் தருவதுடன், நிறைய எதிர்பார்ப்புகளையும் தருகிறது - ஆத்மாவைத் தேடி!

Kavinaya said...

மண்டபத்தையும், கைலாய தரிசனத்தையும் அப்படியே கண்முன் நிறுத்தி விட்டது உங்கள் எழுத்து.

(அதிசயம் என்னன்னு சீக்கிரம் சொல்லிடுங்க, ப்ளீஸ்!)

கிருத்திகா ஸ்ரீதர் said...

மீண்டும் சொல்கிறேன் இதை ஒரு படைப்பென்றுமட்டும் என்னால் கொள்ளமுடியவில்லை. எங்கோ எப்போதோ நடந்த அல்லது இப்போது நடந்து கொண்டிருக்கும் ஒரு உண்மையான நிகழ்வின் ஒழுங்குபட்ட நேர்முக வர்ணனை போன்றே மிக நேர்த்தியாக உள்ளது. எல்லாவற்றிற்கும் காரண காரியம் வைத்திருக்கும் அந்த ஈசன் இந்த தொடர்பதிவிற்கும் பின்னால் ஏதோ வைத்திருக்கிறான் என்ற எண்ணம் வலுப்பட்டுக்கொண்டே வருகிறது... நன்றி..

ஜீவி said...

ஜீவா (Jeeva Venkataraman) said...
//சுவையாக நடையுடன், சுகமான வாசிப்பனுபவம் தருவதுடன், நிறைய எதிர்பார்ப்புகளையும் தருகிறது - ஆத்மாவைத் தேடி!//

அப்படியா?.. மிக்க மகிழ்ச்சி.

ஜீவி said...

கவிநயா said...
//மண்டபத்தையும், கைலாய தரிசனத்தையும் அப்படியே கண்முன் நிறுத்தி விட்டது உங்கள் எழுத்து.

(அதிசயம் என்னன்னு சீக்கிரம் சொல்லிடுங்க, ப்ளீஸ்!)//

வருகைக்கும் கருத்துப் பகிர்தலுக்கும்
மிக்க நன்றி.
அதிசயம்?.. சொல்லியாச்சு!

ஜீவி said...

கிருத்திகா said...
//மீண்டும் சொல்கிறேன் இதை ஒரு படைப்பென்றுமட்டும் என்னால் கொள்ளமுடியவில்லை. எங்கோ எப்போதோ நடந்த அல்லது இப்போது நடந்து கொண்டிருக்கும் ஒரு உண்மையான நிகழ்வின் ஒழுங்குபட்ட நேர்முக வர்ணனை போன்றே மிக நேர்த்தியாக உள்ளது. எல்லாவற்றிற்கும் காரண காரியம் வைத்திருக்கும் அந்த ஈசன் இந்த தொடர்பதிவிற்கும் பின்னால் ஏதோ வைத்திருக்கிறான் என்ற எண்ணம் வலுப்பட்டுக்கொண்டே வருகிறது... நன்றி..//

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
ஆன்மீகத்தின் பல்வேறு பரிமாணங்களை படித்து வியக்கும் பொழுது, படித்தவற்றை பகிர்ந்து கொண்டு மகிழ வேண்டும் என்கிற உணர்வின் வெளிப்பாடே இந்தத் தொடர்.
பகிர்ந்து கொள்ளலில், ஒவ்வொருவரும் பழகிக் களித்த
பாஷை--சொல்லும் முறை-- ஒன்று உண்டல்லவா?.. ஒரு கதைசொல்லிக்குப் பிடித்த 'கதை சொல்லும்' வழியைத் தெரிந்தெடுத்திருக்கிறேன். அவ்வளவுதான்.

தங்கள் உணர்வுகளுக்கு மிக்க நன்றி.

Related Posts with Thumbnails