மின் நூல்

Tuesday, May 26, 2009

ஆத்மாவைத் தேடி....1 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி.....

1. காணவாரீர், கயிலைநாதன் தரிசனம்!

அன்று சனிப்பிரதோஷம் வேறு; கேட்க வேண்டுமா?...

மகாதேவ் நிவாஸே விழாக்கோலம் பூண்ட மாதிரி சிவன் கோயில் பகுதி வெகு அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. கோயில்மண்டபத்தின் வெளிவாசல் படியில் ஆரம்பித்து சன்னதி வரையும், சன்னதியைச் சுற்றியும் வெவ்வேறான வடிவங்களில் பெரிய பெரிய மாக்கோலங்கள் கண்ணைக் கவரும் வகையில் போடப்பட்டிருந்தன.

கொத்துகொத்தாக கொன்றைப் பூக்கள் பூத்துக்குலுங்க, முல்லைக் கொடிகளோ மண்டபத்தூண்களை ஆரத்தழுவி ஆறாம் வேதம் படித்துக்கொண்டிருந்தன. வெள்ளை வெளேறென்று தும்பை, அதன் அருகில் மல்லிகைப் பந்தல், இருவாட்சி என்று வகைவகையாக இருந்த மலர்க்கூட்டத்தினுள் புகுந்து வெளிப்பட்ட தென்றல் காற்று தன்னுடன் சுகந்த வாசனையையும் சுமந்து தன்னையும் சுகந்தமாக்கிக் கொண்டு வந்தது.

சன்னதியை நோக்கி நடுவில் இருந்த நந்திதேவருக்கு முதுகில் பச்சைபட்டுப் போர்த்தி அழகுபடுத்தியிருந்தனர். நந்திதேவரைச் சுற்றி அங்கங்கே மண்டபத்திற்குள் நுழைந்தவர்கள் சன்னதி நோக்கி கைகூப்பி வணங்கி சுற்றிலும் வரிசை வரிசையாக அமர்ந்து கொண்டனர்.

பூஜையும் அதைத் தொடர்ந்து அபிஷேகமும் தொடங்குவதற்கு அறிகுறியாக 'டாண்,டாண்'ணென்று கண்டாமணி ஒலித்தது.

"திருச்சிற்றம்பலம்...
"ஓம் நமச்சிவாய வாழ்க...
நாதன் தாள் வாழ்க.."
என்று ஒரு கோடியிலிருந்து உச்சஸ்தாதியில் முழக்கம் கிளம்ப...
"ஓம் லிங்க மூர்த்தயே நம:
ஓம் லிங்கோத்பவ மூர்த்தயே நம:"
--- என்று கோஷம் ஒலித்தது.
குழைந்த குரலில் கிருஷ்ணமூர்த்தியின் குரல் அந்த சூழ்நிலையில் எடுப்பாகத் தெரிந்தது.

"தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதி சூடிக்
காடுடைய சுடலைப்பொடி பூசியென் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனை நாட்பணிந்தேத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மானிவன் என்றே....


"---- தமிழ்நாட்டிலுள்ள தெய்வத்திருத்தலம் சீர்காழி.. விழுப்புரம்--மாயவரம் மார்க்கத்தில் உள்ளது. பாடல் பெற்ற ஸ்தலம் இது. திருப்பிரமபுரம் என்றும் சொல்வார்கள்.

"திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் இத்தலத்திற்கு வந்து, பெருமானை தரிசித்த பேறு பெற்றமைக்கு நெகிழ்ந்து பாடிய பாடல் இது. தோடு அணிந்த செவியன் அவன். தூய வெண்ணிற சந்திரனை சிரசிலே தரித்துக்கொண்டு சுடுகாட்டுச் சாம்பலை மேனியெங்கும் பூசியவனாய் இடபவாகனத்தில் அம்சமாக அமர்ந்திருக்கிறான். இவன் என் உள்ளம் கவர்ந்த கள்வன். ஒருகாலத்தில் பிரமதேவன் இவனை வழிபட இத்தலத்திற்கு வந்தான். அருள்வேண்டி வந்த பிரமனுக்கு இவன் அன்போடு அருள் பாலித்தவன். திருப்பிரமபுரம் என்னும் தலமாகிய இச்சீர்காழி தலத்தில். அருள் பாலிக்கும் பெம்மானே! பெரியோனே! உன் தாள் சரணம்!" என்கிறார் ஞானசம்பந்தர். இத்தலத்து சுவாமியின் பெயர் பிரம்புரீசுவரர் தோணியப்பர். தேவி திருநிலைநாயகி பெரியநாயகி அம்பாள்.

"கோல மால்வரை மத்தென நாட்டிக் கோளரவு சுற்றிக் கடைந்தெழுந்த
ஆல நஞ்சுண்டவர் மிக இரிய அமரர் கட்குருள் புரிவது கருதி
நீல மார்கடல் விடந்தனை உண்டு கண்டத் தேவைத்த பித்த நீ செயத
சீலங்கண்டு நின் திருவடி யடைந்தேன் செழும்பொழில் திருப்புன்கூருளானே..


"தமிழகத்து வைத்தீஸ்வரன் கோயில் திருத்தலத்திலிருந்து இருமைல்கள் தொலைவில் உள்ளது திருபுன்கூர். சுந்தரமூர்த்தி நாயனார் இத்தலத்து இறைவன் அருளில் சொக்கிப் பாடிய பாடல் இது.

"மந்திரமலையை மத்தாக்கி, வாசுகிப்பாம்பை நாணாக்கி சமுத்திரம் கடைந்து எடுத்த ஆலகால விஷத்தை அருந்தி கண்டத்தில் தேக்கிக்கொண்ட நீலகண்டப் பெருமானே! எழிலார்ந்த திருப்புன்கூர் தலத்தில் உறைவோனே! உனது திருவடிகளே சரணம், சரணம்!" என்று மனமுருகிப் பாடுகிறார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். சோலைகள் சூழ்ந்த இத்தலத்து சுவாமியின் பெயர் சிவலோகநாதர். அம்பாள் சொக்கநாயகி. அம்மையே--அப்பனே, நிங்கள் அருள் எங்களைக் காக்க, காக்க!"

---ஒவ்வொரு பிரதோஷத் தினத்தன்றும் இரு திருமுறைப் பாடல்களைப்பாடி, பாடல்பெற்ற தலவரலாறு கூறி பெருமானைத் தொழுவது பெரியவர் கிருஷ்ணமூர்த்தி மஹாதேவ் நிவாஸூக்கு வந்ததிலிருந்து நடந்து வருகிறது. இன்றும் அவரது உரைக்குப்பின் பிறவாயாக்கைப் பெருமானுக்கு பூஜையும் அபிஷேகமும் தொடர்ந்தது.

இலிங்கத்திருமேனியாய் எழுந்தருளியிருந்த பெருமானுக்கு அபிஷேகம் அத்தனைபேரும் பக்தியில் நெக்குருகி நிற்க நடந்தது. வெளிப்பிராகாரத்தில் உற்சவமூர்த்தி ரிஷப வாகனராய் உமாதேவியாருடன் பல்லக்கில் எழுந்தருளியிருந்தார். அடியார்கள் திருப்பல்லக்குத் தூக்க மெதுவாக பிராகாரச்சுற்று ஆரம்பமாயிற்று.. அவரவர் மொழியில் இறைவனின் திருநாமம் உச்சரிக்கப்பட்டு அதை அத்தனைபேரும் கோரஸாகத் திருப்பிச் சொன்னார்கள். தமிழகத்திலிருந்து சென்றிருந்தோர்---

"ஓம் நமசிவாய - சிவாயநம:" என்றும்,

"தென்னாடு உடைய சிவனே, போற்றி!
எந்நாட்டவர்க்கும், இறைவா, போற்றி!
உள்ளமாய் உள்ளத்தே நின்றாய், போற்றி!
உகப்பார் மனத்து என்றும் நீங்காய், போற்றி!"


என்று உணர்வுப் பிழம்பாய் கோஷித்தனர். மத்தள, நாதஸ்வர ஒலி தொடர்ந்து, துந்துபி முழங்க, புறப்பாட்டின் நடுவே பிராகாரச்சுற்றில் அங்கங்கே வாகனத்தை நிறுத்தி திருமுறைப் பதிகங்கள் பாடப்பாட உற்சவமூர்த்திக்கு பன்னீர் சொரிய நீராட்டு நடந்தது. பதிகங்களை சிவராமனும், மாலுவும் சேர்ந்து பாடுகையில், மெய்மறந்து கூட்டம் நின்றது.


"வேயுறு தோளிபங்கன் விடம் உண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெளளி
சனி பாம்பிரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே"


முன்வரிசையிலிருந்த மனோகர்ஜியால் சந்தோஷத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. பதிகங்கள் முறையாகப் பாடப்பாட, பல்லக்கு சுமந்தும் சுற்றியும் வந்த பக்தர்கள் பெருமானின் அன்பு மழையில் நனைந்தார்கள். பிறவி எடுத்த பயன் அறிந்து கொண்ட அதிசயத்தில் திக்குமுக்காடிப் போனார்கள்.

ரிஷப வாகனத்தில் மஹேஸ்வரரின் நடைச்சுற்று மூன்று முறை பதிகப்பாராயண பக்திப் பிரவாகத்துடன் நடந்தது. அது நிறைவடைந்ததும், உற்சவ மூர்த்தியை இறக்கி வைத்து தீபாராதனை நடந்தது. பின் 'ஹரஹர மஹாதேவ' கோஷத்துடன் கர்பக்கிரகத்திலும் கற்பூர ஹாரத்தி நிறைவேறி தரிசனம் முடிந்து எல்லோரும் கிளம்ப ஏழு மணிக்கு மேலாகி விட்டது.

"உங்களுக்கு பிரயாணக் களைப்பாயிருக்கும்.. ஆகாரத்தை முடித்துக் கொண்டு, ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.. நாளை சந்திக்கலாம்" என்று சிவராமனிடம் விடைபெற்றுக்கொண்டார் மனோகர்ஜி.

கீழ்த்தளத்திலேயே சாப்பாட்டை முடித்துக் கொண்டு அவர்களை அறைக்கு அழைத்து வந்தார் கிருஷ்ணமூர்த்தி.

சிவராமன் - மாலு வந்தால் தங்குவதற்காக தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு பக்கதது அறையை மனோகர்ஜியிடம் சொல்லி தயாராக வைத்திருந்தார் கிருஷ்ணமூர்த்தி.

சிவராமன் கையோடு கொண்டுவந்திருந்த அவரது உடைமைகளும் முன்னமேயே இந்த அறையில் தான் வைக்கப்பட்டிருந்தன. அறைச்சாவியும் அவரிடம் தான் இருந்தது.

கதவு திறந்து உள்ளே நுழைந்தனர். பழங்கதைகளைப் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதேத் தெரியவில்லை. "நிம்மதியாகத் தூங்குங்கள்.. காலையில் பார்க்கலாம்" என்று கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் விடைபெற்று தன் அறைக்குத் திரும்பும் பொழுது இரவு மணி பதினொன்றுக்கு மேலாகிவிட்டது.

(தேடல் தொடரும்)

12 comments:

jeevagv said...

ஆகா,
அருமையாக அடுத்த பாகம் தொடர்கிறது!
//...தென்றல் காற்று தன்னுடன் சுகந்த வாசனையையும் சுமந்து தன்னையும் சுகந்தமாக்கிக் கொண்டு வந்தது.//
நல்ல நடையுடன் சேர்ந்து,
நல்ல பொருளும் பொதிந்து
மணம் வீசும் வாசம்!

ஜீவி said...

ஜீவா (Jeeva Venkataraman) said...
ஆகா,
அருமையாக அடுத்த பாகம் தொடர்கிறது!
//...தென்றல் காற்று தன்னுடன் சுகந்த வாசனையையும் சுமந்து தன்னையும் சுகந்தமாக்கிக் கொண்டு வந்தது.//
நல்ல நடையுடன் சேர்ந்து,
நல்ல பொருளும் பொதிந்து
மணம் வீசும் வாசம்!

வாருங்கள், ஜீவா!

பூவனத்தின் வாசத்தை நுகர்ந்தமை குறித்து மிக்க மகிழ்ச்சி. ஒரு வழியாக இரண்டாம் பாகத்திற்கும் வந்தாயிற்று;
இந்த பாகம் முந்தைய பாகத்திலிருந்து சற்றே மாறுபட்ட தோற்றத்தைக் கொடுக்கும் என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லிக் கொள்கிறேன். இனி தொடர்ந்து வந்து தங்கள் கருத்துக்களையும் சொல்ல வேண்டும். வருகைக்கு மிக்க நன்றி.

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

வணக்கம் அருமையான தொடர்.இனிய மணம் கமழ்கின்றது.

ஜீவி said...

முனைவர் சே.கல்பனா said...

//வணக்கம் அருமையான தொடர்.இனிய மணம் கமழ்கின்றது.//

தங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

Kavinaya said...

கோவிலின் விழாக் கோலத்தையும், நிகழ்வுகளையும் கண்முன் நிறுத்தி விட்டீர்கள். ஒரு கேள்வி. ஆறாம் வேதம்னு சொன்னீங்களே, 5-ம் வேதம் எது?

ஜீவி said...

கவிநயா said...

//கோவிலின் விழாக் கோலத்தையும், நிகழ்வுகளையும் கண்முன் நிறுத்தி விட்டீர்கள். ஒரு கேள்வி. ஆறாம் வேதம்னு சொன்னீங்களே, 5-ம் வேதம் எது?//

சூப்பர்! ஆழ்ந்து படிப்பதால் கரெக்ட்டாகக் கண்டுபிடித்துவிட்டீர்கள்!
பாராட்டுக்கள்..

வேதங்கள் நான்கே;அதில்மாற்றமில்லை.
பிற்கால இலக்கியங்களில் ஒரு நயத்திற்காக சிருங்கார உணர்வுகளை ஐந்தாம் வேதமாகச் சிலர் சொல்வர். சும்மாச் 'சொல்வது' தானே தவிர அப்படி என்று இல்லை.
நான்கு வேதங்களின் உயர்வையும் அதன் மாட்சிமையையும் கருதி,
அவற்றிற்கு அடுத்த இடத்தை எதற்கும் தராமல், அடுத்த இடத்தை வெறுமனே விட்டு விட்டு அதற்கு அடுத்த இடமான ஆறாம் இடத்தை சிருங்காரத்திற்குக் கொடுத்தேன். மன்மதன் இதற்கு மன்னிக்கட்டும்.

சிருங்காரத்தை சாஸ்திரங்களில் ஒன்றாகக் கொண்டிருக்கின்றனர் என்றுத் தெரிகிறது.

Kavinaya said...

விளக்கத்திற்கு நன்றி ஐயா.

கிருத்திகா ஸ்ரீதர் said...

பிரதோஷத்தை நேரில் தரிசித்த சந்தோஷத்தை கொண்டுவந்து விட்டீர்கள்....

ஜீவி said...

கிருத்திகா said...

//பிரதோஷத்தை நேரில் தரிசித்த சந்தோஷத்தை கொண்டுவந்து விட்டீர்கள்....//

தமிழகத் தலைநகரில் பிரதோஷ தினத்தை சிவன் கோயில்களில் வெகு சிறப்பாக கொண்டாடுகிறார்கள். சென்று தரிசித்த பேற்றின் நினைவலைகள்..

சந்தோஷித்தமை குறித்து மிக்க சந்தோஷம், கிருத்திகா!

குமரன் (Kumaran) said...

பதிகங்கள் எல்லாம் அருமை ஐயா.

குமரன் (Kumaran) said...

பதிகங்கள் எல்லாம் அருமை ஐயா.

ஜீவி said...

குமரன் (Kumaran) said...

//பதிகங்கள் எல்லாம் அருமை ஐயா.//

பெருமையெல்லாம் திருமுறைகளை யாத்த திருமுறைச்செல்வர்களுக்கே.
கலித்தொகை காட்டும் செய்திகளையும் தவறாது படித்து வருகிறேன். அந்தப் பகுதியில் தனியே வந்து சொல்கிறேன்.
வருகைக்கு நன்றி, குமரன்!

Related Posts with Thumbnails