மின் நூல்

Saturday, June 13, 2009

ஆத்மாவைத் தேடி....3 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

3. மனத்தின் இராஜாங்கம்.

பிற்பகல் அமர்வின் சந்தோஷத்தைக் கூட்டுவது போல வெளி சீதோஷ்ண நிலை வெகு ரம்யமாக இருந்தது. மனவியல் அறிஞர் மேகநாதனும் எல்லோரும் இருக்கையில் அமர்ந்துவிட்டதை நிச்சயப்படுத்திக் கொண்டு மேடையேறினார். கை நிறைய கத்தை கத்தையாக காகிதக்குறிப்புகள் வேறு.
மைக்கைச் சரிப்படுத்திக்கொண்டு வழக்கமான தனது குழைந்த குரலில் "ஆரம்பிக்கலாமா?" என்று கேட்டுக்கொண்டு பேச ஆரம்பித்தார்.

"இன்றைய காலை அமர்வில் நிகழ்த்தப்பட்ட உரையை ஒட்டியதான சிலருக்குத் தோன்றிய ஐய வினாக்களுக்கு பதிலளிக்கும் விதமாக இந்தப் பிற்பகல் அமர்வை அமைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்திருந்தோம் இல்லையா? நீங்கள் ஒவ்வொருவராக உங்களின் சந்தேகங்களைக் குறிப்பிட்டால், எனக்குத் தெரிந்த வரையில் விளக்கம் சொல்ல முயற்சி செய்கிறேன்.. ஆக, நீங்கள் கேட்கத் தொடங்கலாம்--" என்று புன்முறுவலுடன் அவையைப் பார்க்க உற்சாக கரகோஷம் எழுந்தது.

நாலாவது வரிசையில் உட்கார்ந்திருந்த குணசீலன் முதலில் எழுந்திருந்தார். "காலை அமர்வில் 'மனம்' என்கிற பொருளில் அருமையான உரை ஆற்றிய பேராசிரியர் மேகநாதன் அவர்களுக்கு மிக்க நன்றியைச் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். ஐயா அவர்கள் பேசும் பொழுது சொன்னார்கள். ஆன்மீகத்தின் அடித்தளமே இந்த மனம் என்ற ஒன்று தான் என்று சொன்னார்கள். விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பாய் இந்த மனம் என்கிற ஒன்றை இன்னது என்று கண்டுபிடித்து விட்டால், ஆன்மீகத்தின் அஸ்திவாரம் கலகலத்துப் போகாது. மாறாக, மேலும் உறுதியாகப் பலப்படும் என்கிற அர்த்தத்தில் சொன்னார்கள். ஆன்மீக உணர்வுகளும், விஞ்ஞான வெளிப்பாடுகளும் எதிர் எதிரானவை போன்ற தோற்றம் தான் பொதுவாக இருப்பதாகத் தெரிகிறது. அப்படியிருக்கையில், 'மனம்' பற்றிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் எப்படி ஆன்மீகச் சிந்தனைகளுக்குப் பலம் கூட்டும் என்பதே என ஐயம். ஐயா அவர்கள் இதுபற்றி விவரமாகச் சொன்னால் நல்லது" என்று கூறி அமர்ந்தார்.


"அருமையான கேள்வி மட்டுமல்ல, நியாயமான சந்தேகமும் கூட" என்று மனந்திறந்து பாராட்டினார் மேகநாதன். "உடற்கூறு சாத்திரம் என்பது உடலின் உள்ளிருக்கும் உறுப்புகள் பற்றிய அறிவே. தவளையையும், எலியையும், முயலையும் பெளதீக ரசாயனச் சாலைகளில் கூறு போட்டுப்பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக உடற்கூற்றின் ஞானம் உள்வாங்கப்பட்டது. மூளை, இதயம், தண்டுவடம், கல்லீரல், மண்ணீரலென்று மனித உடலினுள் என்னென்ன உறுப்புகள் உள்ளனவோ, அவையெல்லாம் உயிர்ப்புடன் இருக்கையில் எப்படிச் செயல்படுகின்றன என்று அறிய முற்பட்ட ஆராய்ச்சியின் செழுமையான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். ஆனால் முழுமை அடைந்து முற்றுப்பெறவில்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். உடல் உறுப்புகளைப்பற்றிய அறிவு என்பது அவற்றின் செயல்பாட்டைக் கண்டுபிடித்த அறிவாக இருக்கிறதே தவிர, இன்னும் முழுமையாக உடலை இயக்கும் இயக்கு சக்தி பற்றித் தெளிவாக அறியாத நிலையில் தான் இருக்கிறோம்.

"ஜீவனுள்ள உறுப்புகளை வெட்டி ஒட்டித் தைக்கத் தெரிந்திருக்கிறோமே தவிர, அவற்றை இயக்க இன்னும் தெரிந்தோமில்லை. தெரிந்து கொள்ள முடியாமைக்கு முக்கியக்காரணம், உடலை இயக்க என்று உடலினுள் எந்த உறுப்பும் இல்லாத காரணம் தான். அதனால் தான் இன்றைய உடற்கூறு சாத்திரம் என்பது உடலினுள் உள்ள உறுப்புகளைப் பற்றிய வெறும் அறிவாக, கோளாறு கண்டவைகளை செப்பனிடுகிற அறிவாகப் போய்விட்டது"


இந்த இடத்தில் மேகநாதன் பேச்சை நிறுத்தி ஒரு வினாடி நேர மெளனத்திற்குப் பிறகு தொடர்ந்தார். "பல நூற்றாண்டு காலமாக பல்வேறு உயிரியல் கண்டுபிடிப்புகளுக்கு காரணகர்த்தாக்களாக அர்ப்பணிப்பு உணர்வுடன் தங்களை வருத்திக்கொண்டு செயல்பட்ட விஞ்ஞானிகளுக்கு என் சிரம் தாழ்த்திய நன்றிகள். அந்தத் திருக்கூட்டத்தின் மேல் அறிவியல் உலகம் கொண்டுள்ள நம்பிக்கை அசாத்தியமானது. தொடரும் அந்த நம்பிக்கையில் தான் இதையும் சொல்லவேண்டியிருக்கிறது.

"தனக்கென்று ஒரு உறுப்பு கொண்டிராத மனத்தின் வியக்கத்தக்க வேகமும், ஒட்டுமொத்த உடலையே தன் ஆளுகைக்கு எடுத்துக்கொண்டு அது நடத்தும் இராஜங்கமும் விஞ்ஞானாத்தை திகைக்க வைத்திருக்கிறது. இத்தனைகாலம் உறுப்பில்லாத எது பற்றியும் பேசுவதே, குறிப்பிடுவதே தீட்டு என்று கருதிய உடற்கூறு இயல், இப்பொழுதுதான் மனத்தின் செயல்பாடுகளைப் பற்றிய அறிவைத் திரட்டத் தொடங்கியிருக்கிறது. அதுவும் வெறும் ஆரம்பக்கல்வி அறிவாகத்தான் இப்பொழுது இருக்கிறது."அதனால் தான் மன உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு ஆன்மீகத்தின் பக்கம் அதன் கவனம் திரும்பியிருக்கிறது... தியானமும், யோகக்கலையும் உற்று கவனிக்கப்பட்டு பயிற்சிப் பாடங்களாக வைக்கலாம் என்கிற யோசனை ஏற்றுக்கொள்ளபட்டிருக்கிறது... விஞ்ஞான ஆராய்ச்சிகளின் இந்த திசை நோக்கியதானப் பயணம், மன இயல் சாத்திரத்தின் இன்னொரு மைல் கல் என்று சொல்லலாம்.


"கஷ்டமான ஒரு 'தீஸிஸை' விளக்குகிற ஒரு புரொபஸரின் பொறுப்பான நேர்த்தி மேகநாதனின் பேச்சில் இருந்தது.. "இது வரவேற்கத்தக்கது தானே என்று பூரிப்பதை விட, இதை ஆன்மிகத்தின் ஒரு கட்ட Process-ஆக நான் நினைக்கிறேன். இது ஒரு வேறுபட்ட Process என்பதையும் சொல்ல வேண்டும். பல நூறு ஆண்டுகளுக்கு முன், மனமே உடலின் சக்தி ஓட்டமாக ரிஷிகளாலும், ஞானிகளாலும் உணரப்பட்டு, கால சுழற்சியில் நாளாவட்டத்தில் ஆதிகால அற்புத சக்தியின் மகோதனம் மறைந்து அல்லது மறக்கப்பட்டு, அதுபற்றி இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக அறிதல் ஏற்பட்டு, மீண்டும் அதன் சக்தி உணரப்படும் காலகட்டம் இது. பளபளவென்றிருந்த பாத்திரத்தில் காலஓட்ட களிம்பேறி கறும்பச்சை கலராகிப் போனதைத் துலக்கி மீண்டும் பளபளப்பைக் காணும் படிமம் இந்த Process.

"இனி, உடல் விஞ்ஞானத்தை இரண்டு கூறுகளாகப் பிரிக்கலாம். 1. உடலினுள் அறியப்பட்ட உறுப்புகளைப் பற்றிய அறிவு, அதற்கான சிகித்சை முறைகள்.
2. உறுப்புகளிலில்லாமல் உடல் இயக்கத்தில் பங்கு பெறும் சக்திகளைப் பற்றிய அறிவு, அதற்கான சிகித்சை முறைகள்.

"அலோபதி வைத்திய முறைகளில் இதுவரை அறியாத இருண்ட கண்டமாக இருந்த இந்த இரண்டாவது பகுதி பற்றிய புதுக்கண்டுபிடிப்புகளும், அது பற்றிய ஞானமும் இப்போது கவனத்தைக் கவர்ந்திருக்கிறது என்றால், அந்த முயற்சிகளெல்லாம் வரவேற்க வேண்டியது தானே? இந்த இரத்தின கம்பள வரவேற்பில் ஆன்மீகமும் ஒரு சயின்ஸாக புதிய தலைமுறையினரால் போற்றப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை."

மன இயல் அறிஞர் மேகநாதன் முதல் வினாவிற்கு விடையளித்து முடிக்கையில் அரங்கமே கரகோஷத்தில் அதிர்ந்தது.

அடுத்த ஐய வினாவைக் கேட்க, கோயில் சிற்பக்கலை ஆராய்ச்சி அறிஞர் சித்திரசேனன் எழுந்திருந்த இடைவேளையில் கையிலிருந்த காகிதக் கற்றைகளைக் கோர்வையாக அடுக்கிக் கொண்டார், மேகநாதன்.

(தேடல் தொடரும்)

7 comments:

நிகழ்காலத்தில்... said...

\\ஆன்மீகமும் ஒரு சயின்ஸாக புதிய தலைமுறையினரால் போற்றப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை."\\

உண்மைதான்., நல்ல உள்ளடக்கத்தைக் கொண்ட கட்டுரை., தொடர்ந்து இதுபோல் எழுதவும்.,

வாழ்த்துக்கள்

ஜீவி said...

நிகழ்காலத்தில்... said...
\\ஆன்மீகமும் ஒரு சயின்ஸாக புதிய தலைமுறையினரால் போற்றப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை."\\

//உண்மைதான்., நல்ல உள்ளடக்கத்தைக் கொண்ட கட்டுரை., தொடர்ந்து இதுபோல் எழுதவும்.,//

தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி, 'நிகழ்காலத்தில்'!

கிருத்திகா ஸ்ரீதர் said...

" பல நூறு ஆண்டுகளுக்கு முன், மனமே உடலின் சக்தி ஓட்டமாக ரிஷிகளாலும், ஞானிகளாலும் உணரப்பட்டு, கால சுழற்சியில் நாளாவட்டத்தில் ஆதிகால அற்புத சக்தியின் மகோதனம் மறைந்து அல்லது மறக்கப்பட்டு, அதுபற்றி இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக அறிதல் ஏற்பட்டு, மீண்டும் அதன் சக்தி உணரப்படும் காலகட்டம் இது. பளபளவென்றிருந்த பாத்திரத்தில் காலஓட்ட களிம்பேறி கறும்பச்சை கலராகிப் போனதைத் துலக்கி மீண்டும் பளபளப்பைக் காணும் படிமம் இந்த Process.

"I always think in similar lines. Glad to see this in this post. (Unable to comment in Tamil since do not have the tamil writer)

ஜீவி said...

//"I always think in similar lines. Glad to see this in this post. (Unable to comment in Tamil since do not have the tamil writer)//

அப்படியா கிருத்திகா?..
நான் எழுதியதை மீண்டும் படித்துப் பார்க்கச் செய்து விட்டீர்கள்.. உணர்வுகள் கொப்பளிக்கும் பொழுது ஆற்றோட்டமாக எழுதிய வரிகள், இப்பொழுது உங்களின் ஆமோதிப்புக்குப் பின் வெகுவாக அர்த்தம் பொதிந்து காணப்படுகின்றன.

உங்களிடம் 'தமிழ் எழுத்துரு' இல்லையா?.. என்ன ஆச்சு?.. இல்லை என்பதைக் கற்பனை செய்து பார்க்கவே என்னவோ போலிருக்கிறது. சீக்கிரம் சிறகு கொள்ளுங்கள்.. விரைவில் பறப்பதைப் பார்க்க ஆசை.

Shakthiprabha said...

//ஆன்மீகமும் ஒரு சயின்ஸாக புதிய தலைமுறையினரால் போற்றப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை.//

அப்படிப்பட்ட நாட்களைக் கண்டுவிட்டால் புவியில் பொற்காலம் வந்து விட்டது என்று பொருள்

ஜீவி said...

Shakthiprabha said...

//அப்படிப்பட்ட நாட்களைக் கண்டுவிட்டால் புவியில் பொற்காலம் வந்து விட்டது என்று பொருள்../

துந்துபிகள் முழங்குகின்றன; முரசம் அதிர்கிறது; முகப்படாம் பூண்டு ஆனைகள் கூட அசைந்து அசைந்து புறப்படத்துவங்கி விட்டன..

பொற்காலத்தின் அறிகுறிகள் இப்போவே மினுமினுக்கத் தொடங்கி விட்டன. மினுமினுப்பு ஜோதி சொரூபமாகி அத்தனை பேரையும் அணைத்துக் கொள்ளும் நாள் விரைவில் வந்து சேரும்; இது திண்ணம்!

கோமதி அரசு said...

விஞ்ஞானம்,விளக்கைப்போல்.
மெய்ஞ்ஞானம் சூரியன் போல்

இரண்டும் சேர்வது சூரிய ஓளியில் மின்சாரம் தயாரிப்பதுப் போல்.

Related Posts with Thumbnails