மின் நூல்

Tuesday, August 25, 2009

ஆத்மாவைத் தேடி....8 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

8. ஜோதி தரிசனம்

காலைச் சூரியனின் செங்கதிர் பட்டு அந்த சிவன் கோயிலின் கோபுரக் கலசங்கள் தகதகத்தன. அந்தக் கலசங்களின் மேல் பட்டுத்தெறித்த ஒளிக்கதிர்கள் கோபுரத்தின் மேல்பகுதி சிற்பங்களின் மேலும் பட்டு வர்ணஜால ஒளிக்கோலமாய் பிரகாசித்தது.

அந்தப் பிரகாசிப்பின் நடுவே தனியாக, இனம் காணுகிற மாதிரி தான் அந்தக்காட்சி ஒரு வினாடி தட்டுப்பட்டு அவர்களுக்குத் திகைப்பேற்படுத்தியது. அந்தத் திகைப்பில் சிலையாகிப் போன மூவரும் அந்த அற்புதக்காட்சியை தரிசித்த உணர்வில் பேசவும் முடியாது நாக்குழறி தடுமாறினர்.

கோபுரத்தின் நட்டநடுப் பகுதியில், தலைக்கு மேலே உயர கைசேர்த்து நிற்கிற தோரணையில், அந்த ஜோதிப்பிழம்பு அடிபெருத்து, தீக்கொழுந்துகளாய் நுனி குறுகி உயர எழும்பியும் தாழ்ந்தும் பளீரிட்டது.

கண்களில் பட்ட காட்சி மனசில் உறைத்த வினாடியில், "அருணாசலேச்வரா! ஹர ஹர மகாதேவா!.." என்று மெய்விதிர்த்து கன்னங்களில் போட்டுக்கொண்டு கைகூப்பினார் சிவராமன். கிருஷ்ணாவும், மாலுவும் எதுவும் பேச சக்தியற்று சிலையாகிப்போயினர். கூப்பிய அவர்களின் கரங்கள் லேசாக விதிர்விதிர்த்தன.

ஒரு வினாடி நேரத்து தரிசனம் தான்; பிரமையா, உண்மையா என்று பிரித்துப் பார்க்க சக்தியற்று குழந்தையாய் தவிக்கும் மனநிலை; என்ன பேறு பெற்றோம் என்று விம்மித் தணிகிற பெருமிதம். 'ஐயனே...ஐய்யாரப்பனே!' ஈரேழு ஜன்மத்திற்கும் இந்தப் புண்ணியம் போதுமப்பா' என்கிற சாந்தம். பார்த்த காட்சியை திருப்பித் திருப்பி மனசில் ஓட்டிப்பார்த்தும் நினைவில் பிடிபடாமல் போக்குக் காட்டும் விளையாட்டு... என்ன வந்தது, ஏது நடந்தது என்று நடந்ததை மீட்டிப்பார்க்கும் சக்தியற்று தொழுத கை தொழுதபடி இருக்க, மெளனமே அங்கு மொழியாயிற்று.

நூற்றாண்டு காலம் நோன்பிருந்தும் கிடைக்கப் பெறாத தரிசனம்! ஒருநிமிடம் நினைத்து பார்க்கவே மாலுவுக்கு உடல் நெகிழ்ந்தது.. "ஏன்னா, பூமிலேயே எனக்குக் கால் பாவலேன்னா.. என்னமோ செய்யறது.. இப்படிக் கொஞ்சம் உட்கார்ந்திடட்டுமா?" என்று வெளிப்பிராகார மண்டபத்தூண் ஒன்று பற்றி தன்னை நிலைப்படுத்திக் கொள்கிற மாதிரி மூச்சை இழுத்து விட்டு கல்தரையில் உட்கார்ந்தாள்.

அவள் என்ன சொன்னாள் என்று கேட்கும் ஸ்மரணை அற்று, கிருஷ்ணாவின் கைபற்றினார் சிவராமன். "நீ நன்னா பாத்தையா,கிருஷ்ணா?"என்று குழைவுடன் கேட்டார். "அம்மாடி! என்ன அழகு! என்ன தேஜஸ்! என்ன கொடுப்பினை!.." என்று நினைத்து நினைத்து பிரமித்தார்.

கிருஷ்ணாவுக்கு அவர் சொன்னது எதுவுமே மனதில் பதியவில்லை. பற்றிய சிவராமனின் கரத்தை ஆதுரத்துடன் தடவினார். "பரமேஸ்வரா! என்னே உன் கருணை?.. ஏழையின் மேல் எவ்வளவு இரக்கம்?" என்று நெகிழ்ந்தார்.

'ஒருதடவைக்கு இரண்டு தடவையாய் அன்பு வர்ஷித்திருக்கிறது.. தில்லி ரயில்வே ஸ்டேஷனில் அந்த கும்மிருட்டில் நண்பனாய், வழிகாட்டுவோனாய்.. இப்பொழுது ஜோதி ஸ்வரூபனாய்..' 'என்ன தவம் செய்தனை..' என்ற பாடலை சம்மணமிட்டு அமர்ந்த நிலையில் தொடைதொட்டுத் தாளம் போட்டு விஸ்தாரமாய் தேன்குரலில் காதுக்கு மிக அருகில் வந்து யாரோ இசைப்பது போலிருந்தது.

'பாடுவது யார்?.. ராதையோ?.. அவள் சாரீரத்தில் இவ்வளவு குழைவு இருக்காதே?.. வேறு யார்?.. மாலுவோ?.. ம்.. மாலு போலத்தான் இருக்கிறது!' என்று மாலுவின் நினைவு வந்து, 'எங்கே?" என்று தேடும் காரியமாய்த் திரும்பிப் பார்த்தார்.

பெரிய யாளி ஒன்று வாய் பிளந்து காலூன்றிப் பாய்கிற தோரணையில் நின்றிருந்த சிற்பத்திற்கு முதுகு காட்டியவாறு மாலு அமர்ந்திருக்கிறது தேசலாய்த் தெரிந்தது.

மாலு மட்டுமில்லை, தூரத்தில் இவர்களை நோக்கி யாரோ வருவதும் பார்வையில் பட்டது. வந்தவர், அருகில் வர வர அவர் மனோகர்ஜி என்பதும் புரிபட்டது.

"நீங்கள்லாம் இங்கே தான் இருக்கீறீர்களா.." என்று ஸ்வாதீனத்துடன் விசாரித்தபடி வந்தவர் "கிருஷ்ணாஜி! சிவராம்ஜிக்கு கொஞ்சநாள் கூட இங்கே தங்க முடியுமா? புது பொறுப்பு ஒண்ணு அவரைத் தேடிவந்திருக்கு.. அவருக்கு செளகரியப்படுமா?" என்று ஆவலுடன் கேட்டபடி சிவராமனின் கைகளைப் பற்றினார்.

(தேடல் தொடரும்)

9 comments:

dondu(#11168674346665545885) said...

இவ்வளவு இடைவெளி ஏன்? ரொம்பத்தான் காக்க வைத்து விட்டீர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜீவி said...

dondu(#11168674346665545885) said...
//இவ்வளவு இடைவெளி ஏன்? ரொம்பத்தான் காக்க வைத்து விட்டீர்கள்//

ஆமாம், நானும் அதை உணர்கிறேன்.
1. மற்ற பகுதிகளில் பார்த்த பராக்கு.
2. இதுவரை யாரும் கையிலெடுக்காத சப்ஜெக்ட். தொடர் முடிந்ததும், புத்தக உருக்கொள்ளவிருப்பதால், அதற்கேற்ப இப்பொழுதே நேர்த்தியாக அமைப்பு ரீதியில் கவனம் செலுத்த வேண்டும் என்கிற எண்ணம்.
--இதெல்லாம் தான் காரணம்.
தங்கள் அன்பான விசாரிப்புக்கு மிக்க நன்றி, ராகவன் சார்!

கவிநயா said...

//கூப்பிய அவர்களின் கரங்கள் லேசாக விதிர்விதிர்த்தன.//

படிக்கப் படிக்க மனசும்தான்...

///பார்த்த காட்சியை திருப்பித் திருப்பி மனசில் ஓட்டிப்பார்த்தும் நினைவில் பிடிபடாமல் போக்குக் காட்டும் விளையாட்டு... என்ன வந்தது, ஏது நடந்தது என்று நடந்ததை மீட்டிப்பார்க்கும் சக்தியற்று//

வெகு அருமையாக அந்த உணர்வுகளை வார்த்தைகளில் வெளிக் கொணர்ந்திருக்கிறீர்கள்!

Shakthiprabha said...

ஜீவி,


அழகான வர்ணனை. மெய்சிலிர்க்கவைக்கும் இந்த அனுபவம் இந்த ஜோதி தரிசனம் அற்புதங்களில் ஒன்றாய் அவர்களுக்கு மட்டும் புலப்பட்டதா?

எனக்கு சற்று புரியவில்லை :(

ஜீவி said...

@ கவிநயா

தங்கள் உணர்வுபூர்வமான ரசனைக்கு மிக்க நன்றி, கவிநயா!

ஜீவி said...

@ சக்திபிரபா

அப்பொழுது அந்த இடத்தில் இருந்தவர்கள் அவர்கள் மட்டுமே.
அதனால் அவர்களுக்கு அந்த பாக்கியம் கிட்டியது என்று சொல்வதை விட, அவர்களுக்காகவே அந்த தரிசனம் கொடுக்கப்பட்டது என்று கொள்வதே சரி. அவர்களைத் தலைநிமிர வைத்து, கோபுரம் பார்க்க வைத்து, ஒரே வினாடி தன் ஜ்வாலையைக் காட்டியது தான் அவர்கள் செய்த புண்ணியம். இது தான் கொடுப்பினை. இந்த நேரத்தில் இது நடக்க வேண்டுமென்ற கர்ம பலன்.

திருப்பதி வெங்கடாஜலபதிப் பெருமானை தரிசிக்கும் அனுபவத்தை நினைத்துப் பாருங்கள்.. எறும்பாய் ஊறும் வரிசையில் ஊர்ந்து, பெருமானை நெருங்க நெருங்க தமது அத்தனை சக்தியையும் கண்களில் தேக்க வைத்து மனசாரப் பார்த்து விட வேண்டும் என்று தவித்து சந்நிதிக்குத் தள்ளப் படுவோம்.

வேங்கடேசப் பெருமாளை பாதாதிகேசம் தரிசிக்க வேண்டும் என்று சொல்வார்கள்.. முதலில் திருப்பாதங்கள் என்று ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக மேல் நோக்கி நம் விழிகளை நகர்த்தி, முக தரிசனம் வரை வந்து விட்டாலே, சொர்க்கத்தையே தொட்டு விட்ட மாதிரி.. அதற்குள் இந்த 'ஜெருகண்டி'..தள்ளல்.. என்று ஒரு வழியாக வெளிப்பக்கம் வந்து சேர்ந்து விடுவோம்.. இன்னும் கொஞ்ச நேரம் தரிசனம் நீடித்திருக்கக்கூடாதா என்று ஏக்கமான ஏக்கம் வாட்டும். பார்த்த பெருமானின் முகத்தை நினைவுபடுத்திப் பார்ப்போமென்றால், என்ன மாயம்?.. பார்த்தது பார்த்த மாதிரி அப்படியே நினைவுக்கு வராது.. போட்டோக்களில் பார்த்த பெருமானின் திருமுகம் தான் நினைவில் முன்னே வந்து நிற்கும்.. ஊஹூம்.. என்ன பாடுபட்டாலும் தரிசித்த தரிசனம் அப்படியே நினைவுக்கு வராது!..
பாரதியாரின், "ஆசைமுகம் மறந்து போச்சே; இதை ஆரிடம் சொல்வேனடி" கதை தான்..
ஆனால், இத்தனைக்கும் நடுவே ஒன்று மட்டும் அதிசயமாய் நடக்கும்..
சந்நிதியின் உள்ளே தள்ளப்பட்டதும்,
அந்த வேகத்தில் நாம் நிமிர்ந்து பார்க்கும் பொழுது, அத்தனை நெரிசலுக்கும் நடுவே, சுற்றிச் சூழ்ந்து நெருக்கும் அத்தனை பேரையும் மறக்கச் செய்து, பெருமாள் முறுவலுடன் நம்மைப் பார்த்துக் கொண்டு, நமக்கு மட்டுமே தரிசனம் கொடுப்பதாக ஒரு உணர்வு ஏற்படும் பாருங்கள்..
அது தான் அவரது மகத்தான சக்தி!
அவரே கூப்பிட்டு அடுத்த தரிசனம்
தரும் வரை, பேட்டரிக்கு 'சார்ஜ்' செய்த மாதிரி..

இப்பொழுது சொல்லுங்கள்.

Shakthiprabha said...

//அவர்களுக்காகவே அந்த தரிசனம் கொடுக்கப்பட்டது என்று கொள்வதே சரி. //

அப்படித்தான் எனக்கும் பட்டது.

//அந்த வேகத்தில் நாம் நிமிர்ந்து பார்க்கும் பொழுது, அத்தனை நெரிசலுக்கும் நடுவே, சுற்றிச் சூழ்ந்து நெருக்கும் அத்தனை பேரையும் மறக்கச் செய்து, பெருமாள் முறுவலுடன் நம்மைப் பார்த்துக் கொண்டு, நமக்கு மட்டுமே தரிசனம் கொடுப்பதாக ஒரு உணர்வு ஏற்படும் பாருங்கள்..//

சத்தியமான வார்த்தை. சில திருக்கோவில்களில் நாம் நம்மையே மறந்து நின்றுவிடுகிறோம். எதற்கு வந்தோம், ஏன், பிரார்த்தனை (இருந்தால்) எல்லாம் மறந்து விட, கண்முன் விஸ்வரூபமாய் இறைவன் தரிசனம் மட்டும்...

அப்புறம் சுய நினைவு வந்த பின் அரைகுறை நினைவில் நம் நினைவில் நிற்பது "உலகத்துல எல்லாரும் நன்னா இருக்கணம்" என்பது தான்.

வார்த்தைகளால் விவரிக்க முடியாது...
நீங்கள் அற்புதமாக விவரித்திருக்கிறீர்கள்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

நிறைவான தரிசனம்.

ஜீவி said...

@ கிருத்திகா!

மனது குவிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

Related Posts with Thumbnails