மின் நூல்

Sunday, October 4, 2009

எஸ். ஏ. பி. யின் "நீ"

சிறுகதையோ அல்லது புதினமோ எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். இவற்றை எழுதும் எழுத்தாளர்களில் தான் பலவிதம் என்றால், இவற்றை வாசிக்கும் வாசகர்களிலும் பலரகம். எந்தப் புத்தகத்தையாகவது குறிப்பிட்டு "இதைப் படித்திருக்கிறீர்களா?" என்று யாரையாவது கேட்டுப்பாருங்கள். நாமே கொஞ்சமும் எதிர்பார்த்திராத பலதினுசுகளில் பதில் வரும். "என்னத்தை எழுதிக் கிழிச்சிருக்கான்?" என்பதிலிருந்து "நாலு பக்கத்துக்கு மேலே நகர முடியலே; வெறும் குப்பை!" என்று ஒரேயடியாக கைகழுவி விடுபவர்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தோமானால், 90% பேர் 'இது இப்படியான கதை' என்கிற அளவில் தான் புரட்டியிருப்பார்கள்.

ஒரு முழு நாவலையே நாலே வரிகளில் சொல்லி விடுவோரே பெருவாரியான வாசகர்கள். மகாபாரதத்தைக் கூட ஒரே வரியில் சொல்லக் கூடிய எமகாதகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அது முக்கியமில்லை. 200 பக்க நாவலை எழுதியவர், எடுத்த புத்தகத்தை கீழே வைக்க முடியாமல், எழுதிய அந்தக் கதையை எப்படி நகர்த்திச் சென்றிருக்கிறார் என்பதை ரசித்துப் படிப்பவர் வெகுசிலரே. அந்த வெகுசில ரசனையாளர்களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். இவர்கள் எதுகுறித்தும் பேசவும் எழுதவும் விமரிசிக்கவும் தெரிந்தவர்களாய் இருப்பார்கள். இவர்கள் இளைஞர்களாய் இருப்பார்களே ஆயின், இவர்களே எதிர்கால தமிழ் எழுத்துலகின் நம்பிக்கை நட்சத்திரங்கள்.

குந்தலாவின் உள்ளத்தைக் கண்ணன் கவர்ந்தது இப்படி நேரவேண்டும் என்று விதித்திருந்ததைப் போல யதேச்சையாய் நடந்த சம்பவம்.

ஒருதடவை பார்த்த பார்வையிலேயே கண்ணனின் நெஞ்சத் தடாகத்தில் சம்மணம் போட்டு உட்கார்ந்தவள் சகுந்தலா. ஊட்டிக்கு தோழிகளுடன் சுற்றுலா வந்திருந்த சகுந்தலாவை பாதி பிக்னிக்கில் எதிர்பாராமல் மறுபடி சந்திக்கிறான் கண்ணன். இதுவரை தான் நான் உங்களோடு.. இனி அமரர் எஸ்.ஏ.பி.யின் எழுத்துக்கள் உங்கள் கூட வரும். மனிதர் எவ்வளவு இயல்பாய், லாவகமாய் கதையை நடத்திச் செல்கிறார், பாருங்கள்:

ஜ.ரா.சுந்தரேசனிலிருந்து சுஜாதாவரை எத்தனையோ எழுத்து மன்னர்களின் மனம் கவர்ந்தவர் என்றால், சும்மாவா...

*********

பிறகு, "நான் ஒரு விளையாட்டுச் சொல்லுகிறேன், விளையாடலாமா?" என்றாள், சகுந்தலா.

"ஓ," என்றார்கள் மற்றவர்கள், குதூகலத்துடன்.

"நம் எல்லோருக்கும் தெரிந்த யாராவது ஒருத்தரைப்பற்றி நான் நினைத்துக் கொள்வேன். அது யாரென்று நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்," என்றாள் சகுந்தலா.

"நீ மனத்துக்குள்ளே நினைத்திருக்கிறது எங்களுக்கு எப்படித் தெரியும்!" என்று ஆச்சரியப்பட்டாள் லில்லி.

சகுந்தலா அவளை கையமர்த்தினாள். "கொஞ்சம் பொறேன்?.. நீங்கள் ஒவ்வொன்றாகப் பத்துக் கேள்வி கேட்கலாம். என்கிட்டேயிருந்து வருகிற பதிலிலிருந்து, என் மனத்தில் உள்ளதைக் கண்டு பிடித்துவிடவேண்டும். பத்துக் கேள்வி கேட்டும் உங்களாலே கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், நீங்கள் தோற்றுப்போனதாக அர்த்தம்."

"அதற்குப் பத்து கேள்வி எதற்கு!" என்று புருவங்களை உயர்த்தினான் கண்ணன். "ஒரு கேள்வி போதுமே? 'நீங்கள் யாரை நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்' என்று கேட்டால் போயிற்று!"

"அதுதானே நடக்காது!" என்று மறுத்தாள் சகுந்தலா, அழுத்தம் திருத்தமாக. "நீங்கள் கேட்கிற கேள்விக்கு, 'ஆமாம், இல்லை' என்று மட்டும் தான் பதில் சொல்வேன்!"

"அப்படியா? ஆனாலும் பத்துக்கேள்வி ரொம்ப அதிகம் என்று தோன்றுகிறது," என்று தன் அபிப்ராயத்தைத் தெரிவித்தான் கண்ணன்.

"அதிகமா குறைவா என்பது விளையாடிப் பார்த்தாலல்லவா தெரியும்? எங்கே, நான் ஒருவரை நினைத்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் கண்டுபிடியுங்கள், பார்ப்போம்?" என்று சவால் விட்டாள் சகுந்தலா.

உற்சாக மிகுதியில் ஆளுக்கொரு கேள்வியாகக் கேட்க ஆரம்பித்தார்கள். சகுந்தலா காதைப் பொத்திக்கொண்டு விட்டாள். "ஒருவர் தான் கேட்க வேண்டும். மற்றவர்கள் எல்லோரும் வாயை மூடிக்கொண்டு வேடிக்கைப் பார்க்கலாம். குறுக்கே பேசக்கூடாது!" என்று விதி வகுத்தாள்.

"நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறவர் ஆணா, பெண்ணா?" என்றான், கண்ணன்.

சகுந்தலா வாயை இறுக மூடிக்கொண்டு பேசாமல் இருந்தாள்.

கண்ணன் விழித்தான் பிறகு, மற்றவர்களைப்பார்த்து, "என்ன இது! இப்படிப் பதில் சொல்லாமல் உட்கார்ந்திருந்தால்?" என்று புகார் செய்தான்.

"உண்டு, இல்லை, என்று நான் பதில் சொல்லலாமே தவிர, ஆண், பெண் என்று சொல்லக் கூடாது. ஆணா என்று ஒரு கேள்வி கேளுங்கள். அப்புறம் பெண்ணா என்று இன்னொரு கேள்வி கேளுங்கள்," என்றாள் சகுந்தலா.

"ஓஹோ என்றானாம்! இப்படிக் கேட்டால் பத்து என்ன, இருபது கேள்வி கேட்டாலும் போதாது. ஆணா என்கிறா கேள்விக்கு இல்லை என்று பதில் வந்தால், பெண் என்று முடிவு கட்டிக்கொள்ள முடியாதாக்கும்?.. சரி, சொல்லுங்கள், ஆணா?"

"உம்," என்றாள் சகுந்தலா.
"ஆமா என்று வாயைத்திறந்து சொல்லுங்கள்."
"ஆமா."
"சுமாராக என்ன வயதிருக்கும்?"
சகுந்தலா மெளனம் சாதித்தாள்.
"அவள் தான் கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டாளே, உண்டு இல்லையென்று மட்டுமே பதில் சொல்ல முடியுமென்று?" என்று ஞாபகப் படுத்தினாள் லில்லி.
"மறந்துவிட்டேன்," பேருக்கு ஒரு தரம் தலையில் குட்டிக்கொண்டான் கண்ணன்.
"டாக்டரா?"
"இல்லை."
"வக்கீலா?"
"இல்லை."
"இஞ்ஜினியரா?"
"இல்லை."
"எழுத்தாளரா?"
"இல்லை."
"ஓவியரா?"
"இல்லை."
"நடிகரா?"
"இல்லை."
"பின்னே யார், உங்கள் வீட்டுப் பால்காரரா?" என்றான் கண்ணன், ஆத்திரத்துடன்.

"சகுந்தலா, "இல்லை," என்று விடையிறுத்தது, மற்றவர்களின் சிரிப்பொலியில் மூழ்கிற்று.
அவள் விரலை மடக்குவதைக் கவனித்த கண்ணன் திகைப்புடன், "அதையும் ஒரு கேள்வியாகக் கணக்குப் பண்ணிவிட்டீர்களா என்ன? நான் சும்மா விளையாட்டுக்காகக் கேட்டேன்!" என்று மன்றாடினான்.

"நீங்கள் விளையாட்டுக்காகக் கேட்டிருக்கலாம், நான் வினையாகத்தான் பதில் சொன்னேன்!" என்றாள் சகுந்தலா, நெஞ்சில் ஈரமில்லாமல்.

ஜோதியும் லில்லியும் பஞ்சாயத்துப் பண்ணிய பிறகே சகுந்தலா விட்டுக்கொடுத்தாள்.

"உஸ். அப்பாடா. எத்தனை கேள்வி ஆகியிருக்கிறது, இதுவரைக்கும்? ஐந்தா?" என்று விசாரித்தான் கண்ணன். ஆனவை ஏழு என்று அவன் நன்றாக அறிவான். சகுந்தலாவிடம் சண்டை பிடித்து, கோபத்தில் அவள் முகம் எப்படிச் சிவக்கிறது என்பதைக்கண்டு ரசிக்கவே இந்த தந்திரம்.

ஆனால் சகுந்தலா முகம் சிவக்கவில்லை. "ஒன்பது" என்றாள் சாவதானமாக. கண்ணனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. "ஒருகாலும் இல்லை! ஏழே ஏழுதான் ஆகியிருக்கிறது!" என்று கூச்சலிட்டான்.

"அப்படியானால் சரி. நீங்கள் இரண்டைக் குறைத்துச் சொன்னீர்கள், நான் இரண்டைக் கூட்டிச் சொன்னேன்," என்று புன்னகை செய்தாள்.

"இன்னும் மூன்று கேள்வி உண்டு, இல்லையா?" என்று தனக்குள்ளேயே சொல்லியபடி, மோவாயைத் தடவிக்கொண்டான் கண்ணன். பிறகு, எப்போதோ கேட்க வேண்டிய கேள்வியை இப்போது கேட்டான்."தமிழரா?"

"ஆம்," என்றாள் சகுந்தலா.

"இரண்டே கேள்வி பாக்கி," என்று அறிவித்தாள், பிஸ்கட் தகரத்தில் உதிர்ந்து கிடந்த தூளை வாயில் போட்டுக்கொண்ட ஜோதி.

பளிச்சென்று அப்போது ஒரு யோசனை உதித்தது, கண்ணன் மூளையில். அவன் முகம் பிரகாசம் அடைந்தது. ஒருகால்.. அப்படியும் இருக்குமோ? பரபரப்பை அடக்கிக்கொண்டு அவளை மெள்ள நோக்கினான். அவள் கடைக்கண்ணால் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஒருகால் அவள் கண்ணனைத்தான் மனத்தில் வைத்துக் கொண்டிருக்கிறாளோ? பொங்கியெழும் ஆவலைக் கஷடப்பட்டு உள்ளே அமுக்கி, "பட்டதாரியா?" என்றான்.

"இல்லை," சந்தேகமே கிடையாது. அவன் ஊகித்தது சரிதான். அவள் சொன்ன ஒவ்வொரு பதிலும் அவனுக்கு அப்படியே பொருந்துகிறதே!

கடைசியாக ஒரு கேள்வி: "பிரம்மசாரியா?"

"ஆம்," என்றாள் சகுந்தலா.

கண்ணன் புளகிதம் அடைந்தான். ஆனந்தம், பனிபோல் அவன் கண்களைத் திரையிட்டது.

"நான் நினைத்தது யாரை?" என்றாள் சகுந்தலா.

"நீங்களே சொல்லுங்கள், நான் தோற்றுவிட்டேன்," என்றான் அவன். தன் பெயரை அவளே சொல்லவேண்டும் என்பது அவன் ஆசை.

சகுந்தலா தயங்கினாள். பிறகு, "காமராஜ நாடார்," என்றாள்.

கண்ணனுக்கு பகீரென்றது. காமராஜ நாடாராவது!

"அடே! என்களாலே ஊகிக்க முடியவே இல்லையே!" என்று ஒருத்தி பாராட்ட, "நல்ல ஆளாகப் பிடித்தாய்!" என்று இன்னொருத்தி உதட்டைப் பிதுக்க, "இவருக்குக் கேள்வி கேட்கவே தெரியவில்லை!" என்று மற்றோருத்தி கண்ணனை இடித்துரைக்க, சகுந்தலாவின் கண்கள் அவனைப் பரிவோடு நோக்கி, அவனிடம் ஏதோ தெரிவிக்க முயன்று கொண்டிருந்தன. சிரிப்பை வரவழைத்துக் கொள்ளச் சிரமப்பட்டுக் கொண்டிருந்த கண்ணனுக்கு அந்த நயன மொழி புரிந்தால்தானே? 'முதலில்நான் உங்களைத்தான் நினைத்துக் கொண்டேன். கடைசியில் ஏனோ வெட்கம் வந்து என்னைச் சூழ்ந்து கொண்டுவிட்டது. சம்யோசிதமாக பெயரை மாற்றிவிட்டேன்," என்று அவள் சொல்லாமல் சொன்னது அவனுக்கு விளங்கவில்லை.

அப்புறம் ஏதேதோ விளையாடினார்கள். அவற்றிலெல்லாம் கண்ணன் மனம் ஈடுபடவில்லை.


--- "நீ" யில் எஸ்.ஏ.பி.புத்தகம் கிடைக்குமிடம்:

மணிமேகலை பிரசுரம்,
தணிகாசலம் சாலை,
தி.நகர், சென்னை-17

தொலைபேசி: 044-24346082

16 comments:

கவிநயா said...

நல்ல விளையாட்டு! :) பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா. (விளையாட்டை சொல்லவில்லை :)

Jawahar said...

ரா.கி.ரங்கராஜனைப் படித்தால் எஸ்.எ.பி. அவரை எப்படி உருவாக்கியிருக்கிறார் என்பது புரியும். எஸ்.எ.பி. என் அபிமான எழுத்தாளர்களில் ஒருவர். முரண்பாடாக எழுத வேண்டும் என்றோ, சிந்திக்க வைக்க வேண்டும் என்றோ அவர் நினைத்ததில்லை. சுவாரஸ்யமாக எழுத வேண்டும் என்று நினைத்தவர்.

http://kgjawarlal.wordpress.com

கிருஷ்ண மூர்த்தி S said...

/ரா.கி.ரங்கராஜனைப் படித்தால் எஸ்.எ.பி. அவரை எப்படி உருவாக்கியிருக்கிறார் என்பது புரியும்./

எஸ் ஏ பியை மிகச் சிறந்த வியாபாரியாக மட்டுமே பார்க்க முடிகிறது.எழுத்தாளராக அல்ல!

அல்லது அவருக்குள் இருந்த நல்ல எழுத்தாளரை, வியாபாரி எஸ் ஏ பி வெளிப்படவே விடவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்.

குமுதம் ஆரம்பிக்கப்பட்ட சூழலில், ஆனந்த விகடனும், கல்கியும் மட்டுமே பெரும்பாலான வாசகர்களைக் கொண்டிருந்தன. அவைகளுக்கு ஈடு கொடுப்பது மட்டுமல்ல, அவைகளைத் தாண்டியும் போவதற்கான திரிசமன் வேலைகளை குமுதம் வெளிவர ஆரம்பித்த நாட்களில் இருந்தே தொடங்கி விட்டது.

கவுரவ ஆசிரியராக அழகப்பச் செட்டியாரை அறிவித்ததில் இருந்து, 'ரவிக்கை முட்டிக் கிழங்கு' என்று சரோஜாதேவி ரகச் சிறுகதைகள்,அட்டைப்படம் குனேகா சென்ட் மணமணக்க சினிமா நடிகைகளின் வரலாறு என்று தமிழ்ப் பத்திரிக்கை உலகத்தில் அன்றைய நாளில் வேறு எவரும் கற்பனை செய்து பார்த்திருக்க முடியாத அளவுக்கு ஜனரஞ்சகம் என்ற பெயரில் ஆரம்பித்து வைத்த பெருமை ஒன்றைத் தவிர, எஸ் ஏ பிஇன சாதனையாக,அவர் எழுத்துக்களைக் கூடச் சொல்ல முடியாது.

இந்த நீ கதையின் போக்கு கூட, பின்னால் அரசு கேள்வி பதில்கள் என்று பரிமாண வளர்ச்சி அடைந்த மாதிரி இருக்கிறது.

Slapstick comedy என்று சொல்வோமே, அந்த மாதிரி எதையோ தத்தக்கா புத்தக்கா என்று
எழுதிச் சிரிப்பு மூட்ட வேண்டும்! அல்லது கடுப்படிக்க வேண்டும்!

என் மதிப்பில் அது தான் எஸ் ஏ பி!

Shakthiprabha (Prabha Sridhar) said...

ரொம்ப ரசித்தேன். இயல்பாய் இருந்தது :)

ஜீவி said...

@கிருஷ்ணமூர்த்தி


வாருங்கள், கிருஷ்ணமூர்த்தி சார்!

'குமுதம்'ஒரு வணிக இதழ் தான்! வணிகம், தனது எதிர்கால வாழ்க்கையோடு நிரம்பவே சம்பந்தப்பட்டது, அதுதான் உயிர்மூச்சு என்று ஆரம்பத்திலேயே புரிந்து கொண்ட இதழ் அது. அது ஆரம்பிக்கப்பட்டபொழுது எனக்கு வயது நாலு. தேசத்திற்கு சுதந்திரம் கிடைத்த தருணம் அது.
வக்கீல் படிப்பு படித்து வெளியே வந்த எஸ்.ஏ.பி.,
-பார்த்தசாரதி நண்பர்களீன் கனவின் நிகழ்வான நிதர்சனமாக குமுதம் மலர்ந்தது. முதல் இதழை அறிமுகப்படுத்த வீட்டுக்கு வீடு இலவசமாக இதழை வழங்கினார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
அங்கேயே வியாபாரமும், கணக்கும் ஆரம்பித்து விட்டது.
ஒரு வியாபாரப்பத்திரிகை, தன்னையொத்த பத்திர்கைகளின் வழக்கமான பாணிகளிடமிருந்து விடுபட்டு, தன்னைத் தனியாக வாசகர்களிடம் காட்டிக்கொள்ள புதுமையான நடவடிக்கைகளை

மேற்கொள்வது அந்தப் பத்திரிகையின் ஆசிரியரின்

பெருமையையே பறைசாற்றும். வணிகப் பத்திரிகைகளின் முகலட்சணமே இது தானே?..
இதற்கு 'டைம்' பத்திரிகைக்கு வேறு, குமுதத்திற்கு வேறு என்று எந்த வித்தியாசமும் கிடையாது.
எஸ்.ஏ.பி.யின் எழுத்து என்றா;. அவரது படைப்புகளை மட்டுமே பேசவேண்டும். எஸ்.ஏ.பி. தமிழில் தமது கதைகளைச் சொன்ன பாணிபற்றிப் பேசும்பொழுது, அவர் ஆசிரியராக இருந்த 'குமுதம்' பத்திரிகையின் வியாபார தந்திரங்களை வலிந்து இழுத்துப் பேசி, இவர் 'குமுதம்' மட்டுமே என்று மயக்கம் கொள்வது

அவரது தனிப்பட்ட எழுத்தின் சிறப்பை, அதன் அழகை, லாவகத்தை அறிந்து மறுப்பதற்கு வழிகோலும். அவரது புதினங்கள் எதையும் நீங்கள் படித்ததில்லை என்பது உங்களது குறிப்புகளிலிருந்து தெரிகிறது. அவரைப் பற்றிய இவ்வளவு கடுமையான விமரிசனங்களைக் கொண்டிருக்கும் உங்களுக்கு அவரது புதினங்களையே படிக்க சிபாரிசு செய்கிறேன். 'குமுதம்' என்கிற குடம் தாண்டி அவர் ஜொலிப்பது தெரியும். படித்து விட்டுச் சொல்லுங்கள். அதுதான் நியாயமானது கூட.

அன்பான வருகைக்கும், கருத்து பகிர்விற்கும் மிக்க நன்றி, கிருஷ்ணமூர்த்தி சார்!

ஜீவி said...

@ கவிநயா


கண்ணனுக்கும் சகுந்தலாவிற்கும் காதல் அரும்பு கட்டிய நேரம் அது. அதை நிச்சயப்படுத்திக் கொள்ளக்கூட முடியாத முந்திய நிலை. இந்த நேரத்தில் கதாசிரியர் அவர்களை ஒருத்தருக்கொருத்தர் ரசிக்க, நேசிக்க வைக்கிறார்.

சகுந்தலா வேறு ஒருவருக்கு, அதுவும் கண்ணன் மிகவும் மரியாதை கொண்டிருந்த அவனது பாஸிற்கே வாழ்க்கைப்பட்டது தான் அவர்கள் கொண்டிருந்த காதலின் சோகம். இந்த சோகத்திற்குக் காரணம், சகுந்தலாவின் வாழ்க்கையில், தனது எதிர்கால சந்தோஷத்திற்க்காக கணக்குப் போட்டு விளையாடிய அவள் அண்ணன் ஆனந்தன்.
சகுந்தலாவின் காதல், மிகவும் தாமதமாக அவள் கணவன் ராஜேந்திரனுக்குத் தெரிகிறது. அற்புதமான எஃகு போன்ற உறுதியான உள்ளம் படைத்த ராஜேந்திரன், படிப்போர் மனத்தில் நீங்காத இடம் பிடிப்பார். "நீ" படிக்கக் கிடைத்தால் தவறவிடாதீர்கள்!

வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி, கவிநயா!

ஜீவி said...

@ Jawarlal

அருமையாகச் சொல்லிரயிருக்கிறீர்கள். 'முரண்பாடாக எழுத வேண்டும் என்றோ, சிந்திக்க வைக்க வேண்டும் என்றோ அவர் நினைத்ததில்லை' என்றோ நறுக்குத்தெரித்தாற் போல, மிகச்சரியாகவும்

சொல்லி விட்டீர்கள்.

ஹூம்.. அருமையான் டீம் அது. ஆசிரியர் அவர்களின் தலைமையின் கீழ் இயங்க, ரா.கி. ரங்கராஜன், ஜ.ரா.சுந்தரேசன், புனிதன் (சண்முகசுந்தரம்) என்ற அந்த அருமையான டீமுக்கு வாய்ப்பு (பாக்கியம்) கிடைத்தது. சுஜாதா அவர்கள்
தனது கட்டுரை ஒன்றில் எஸ்.ஏ.பி. என்கிற ஜீனியஸைப் பற்றி சுவைபடச் சொல்லியிருப்பார். புனிதன் இப்பொழுது இல்லை. மற்ற இருவர் எப்போதாவது தங்களுக்கு கிடைத்த ஆசிரியரை எழுத வாய்ப்பு கிடைத்த இடத்தில் நினைவு கொள்கின்றனர்.
ரா.கி.ரங்கராஜனால், எஸ்.ஏ.பி.யுடனான ஆசிரியர் குழுவின் அனுபவங்களையும், அவரது தனிப்பட்ட சிறப்புகளைப்பற்றியும் எழுத முடியும்.
அது தமிழ் பத்திரிகை உலகுக்குக் கிடைத்த

மிகச் சிறந்த கைடாகவும் அமையும். நானும் அவரிடம் கோரிக்கை வைத்து விட்டேன்.
செய்வாரா என்று தான் தெரியவில்லை.

'என்னைப் போல் ஒருவர்' என்று நான் நினைக்கும்படியான உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி, Jawarlal!
குமுதத்தில் எழுதுகின்ற நேரத்தில்

ஜீவி said...

@ Shakth¡ prabha

வாருங்கள், ஷக்தி!

'இயல்பாய் இருந்தது' என்று அது அருகி வரும் காலத்தில் சொன்னதே இதமாக இருந்தது.
அவரது 'காதலெனும் தீவினிலே' கதாபாத்திரங்கள்

அகிலாண்டம், ராதை, குறும்புக்கார யசோதா எல்லோரையும் நீங்கள் மிகவும் ரசிப்ப்பீர்கள்.
வசந்தன், அவன் ஆருயிர் நண்பன் நட்புக்கு எடுத்துக்காட்டாய் திகழ்ந்த செல்வத்தில் புரண்ட செல்வம், உண்மைக்காக உயிர் வாழ்ந்த வசந்தனின் அண்ணா சத்யம் அத்தனை பேரையும் நீங்கள் மிகவும் நேசிப்பீர்கள். இந்த நாவல்

படிக்கக் கிடைத்தால் தவறவிடாதீர்கள்.

வருகைக்கும், பகிர்தலுக்கும் மிக்க நன்றி,ஷக்தி.

கிருத்திகா ஸ்ரீதர் said...

ஆஹா அப்பவே இந்த விளையாட்டு இருக்கா.. என்ன ஒரு இயல்பான வர்ணனை... படிக்கத்தூண்டும் அமைப்பு படிப்பதற்கு மற்றுமொரு எழுத்து.... நன்றி....

ஜீவி said...

@ கிருத்திகா!

உங்களுக்கும், உங்கள் நூல் சேகரிப்பு ஆர்வத்திற்கும் கொண்டாட்டம் தான்! மணிமேகலை பிரசுரத்திற்கு போவதற்கு முன்னாலேயே போன் செய்து புத்தகங்களை எடுத்து வைக்கச் சொல்லுங்கள். கைவசம் இல்லையென்றாலும், கிடங்கிலிருந்து எடுத்து வைத்திருப்பார்கள்!
படிப்பதோடு மட்டுமல்லால் படித்ததை உங்கள் பார்வையில் பகிர்ந்து கொள்ளவும் மறக்காதீர்கள்.

மிக்க நன்றி, கிருத்திகா!

கிருஷ்ண மூர்த்தி S said...

ஜீவீ சார், குமுதம் பத்திரிகையை மட்டுமல்ல, அதன் ஆசிரியர் அதில் எழுதிய காதெலெனும் தீவினிலே முதலான தொடர்கள் தொடங்கி, அவர் மறைவுக்குப் பின்னால், அவர் மகன் நிர்வாகப் பொறுப்பேற்றபிறகு வெளிவந்த கீதைக் குறிப்புக்கள் உட்பட, ரா கி ரங்கராஜன், தான்னுடைய ஆசிரியரைப் பற்றிச் சொன்ன விஷயங்கள் உட்பட அத்தனையையும் படித்திருக்கிறேன்.

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20203306&format=html
இதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்! ஏவிஎம் ராஜன் புழ்பலதா காதல் விவகாரத்தைக் கிசு கிசுவாக முதலில் வெளியிட்ட புண்ணியம் அல்லது அசிங்கம் குமுதத்திற்கே! அன்றைக்கு ஆரம்பித்து, இன்றைக்கு வரைக்கும் நடிகைகள் அந்தரங்கங்களை வெளியிடும் கலாச்சாரச் சீரழிவைத் தொடங்கியதும் குமுதம்தான்! வேடிக்கை என்ன வென்றால் வெளிவரத் தொடங்கிய கொஞ்சகாலத்திற்கு ஒரு இலக்கியப்பத்திரிகையாகவே வெளிவந்திருக்கிறது என்பது குரூரமான சோகம்!

இந்தப்பின்னூட்டத்தை வெளியிடுவதில் உங்களுக்கு ஏற்படும் தயக்கம் எனக்குப் புரிகிறது. இதை வெளியிட வேண்டும் என்றுகூட நான் எதிர்பார்க்கவில்லை.

குமுதன் ஆசிரியரை ஒரு மனிதன், தன்னுடைய அளவுக்கு நிறைவாக வாழ்ந்து விட்டுப்போன ஒரு மென்மையான தனிமனிதன், வாசிப்பதில் நிறைய ஈடுபாடும், தன்னை அதிகம் வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொள்ளாத இயல்புள்ள மனிதன் எல்லாம் உண்மைதான்!

தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும் என்பதற்கேற்ப, அண்ணாமலை விட்டுப்போன எச்சங்களின்(குமுதம்) அடிப்படையிலேயே எனது விமரிசனம், கருத்து இருக்கிறது.

அருண்சங்கர் said...

திரு. எஸ். ஏ.பி அவர்கள் மறைந்த பிறகுதான் அரசு பதில்களில் வரும் "அரசு" அவர்தான் என்பது எல்லோருக்கும் தெரிய வந்தது. எழுத்துக்களில் நேர்மையையும், தூய்மையையும் கடைபிடித்து பத்திரிக்கை துறையில் ஒரு முன்னோடியாக விளங்கினார். ரா.கி. ரங்கராஜன், பால்யு போன்றோரை தமிழ் உலகறிய செய்தவரும் எஸ். ஏ.பி அவர்கள் தான். பத்திரிகை உலகில் ஒரு ஜாம்பவான் எஸ். ஏ.பி அவர்கள்.

அருண்சங்கர் said...

திரு. எஸ். ஏ.பி அவர்கள் மறைந்த பிறகுதான் அரசு பதில்களில் வரும் "அரசு" அவர்தான் என்பது எல்லோருக்கும் தெரிய வந்தது. எழுத்துக்களில் நேர்மையையும், தூய்மையையும் கடைபிடித்து பத்திரிக்கை துறையில் ஒரு முன்னோடியாக விளங்கினார். ரா.கி. ரங்கராஜன், பால்யு போன்றோரை தமிழ் உலகறிய செய்தவரும் எஸ். ஏ.பி அவர்கள் தான். பத்திரிகை உலகில் ஒரு ஜாம்பவான் எஸ். ஏ.பி அவர்கள்.

ஜீவி said...

கிருத்திகா said...

// ஆஹா அப்பவே இந்த விளையாட்டு இருக்கா..//

'பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு..' என்னும் திரைப்பாடல் கூட இந்த விளையாட்டின்

பின்னணியில் கிளைத்தது தான் போலும்!
முகிழ்க்க திகைத்துத் தடுமாறும் மெல்லிய காதலை, மேலும் முன்னேற்றி ஸ்திரப்படுத்த இந்த வேடிக்கை விளையாட்டை உபயோகப்படுத்திக் கொண்டது தான் எஸ்.ஏ.பி. அவர்களின் சாமர்த்தியம். "நீ" கதைப்போக்கில், அந்த கதையை வெளிப்படுத்திய தோரணையில், எழுதிய சாமர்த்தியத்தில் இன்றும் நினைத்தால் மலைப்பாய் இருக்கிறது, எனக்கு!

ஜீவி said...

@ கிருஷ்ணமூர்த்தி


சிறுவயதில் எழுத வேண்டும் என்கிற ஆசையை என் மனத்தில் துளிர்க்கச் செய்தவர் எஸ்.ஏ.பி. அவர்கள். அந்த ஏகலைவ குருபக்தி எப்பொழுதுமே தனிப்பட்ட முறையில் அவரிடம் எனக்குண்டு.

குமுதமா?.. இலக்கிய பத்திரிகையா?.. அது எப்போது?.. அது நாலணா விலை கொண்டு மாதத்திற்கு மூன்று வெளிவந்த காலத்திலிருந்து எனக்குத் தெரியும்.. ஆரம்பத்திலிருந்து, ஹேமா ஆனந்த தீர்த்தன் ரக கதைகள் தாம்!

மாயாவி, பி.எம்.கண்ணன், போன்றோர் ஆரம்பகாலங்களில் நல்ல தொடர்கதைகளை குமுதத்தில் சிறப்பாக எழுதியிருக்கிறார்கள்.
இவர்களைப் பற்றி எனது 'எழுத்தாளர்கள்'
பகுதியில் எழுதவிருக்கிறேன்.'குமுத' ஆர்ட்டிஸ்ட் 'வர்ணம்' அவர்களின் படங்கள் ரொம்பப் பிடிக்கும்.

மற்றபடி, 'குமுதம்'-- அதன் தரம் எல்லாம்
அவ்வப்போது விற்பனையை அதிகரிக்க அதைப் படிக்கும் வாசகரின் மனப்போக்கு என்னவாயிருக்கும் என்று அது நினைக்கிறதோ, அதுதான்! அத்தனை குப்பைகளுக்கிடையேயும்

தேர்ந்த வாசகனுக்கு வால்நட்சத்திரம் மாதிரி சில விஷயங்கள், ஜொலிக்கும்! அவ்வளவு தான்..
அந்த மாதிரி ஜொலிப்பவையும், 'குமுதம்' பிராண்டு இந்த ஆசாமிகள் தாம் அவற்றை ஆக்கித் தருவதற்கு லாயக்கானர்வர்கள் என்று நினைக்கிற மாதிரி, வார்த்தெடுத்துத் தரும் அந்த விஷயத்தின் நேர்த்தி இருக்கும்!

எஸ்.ஏ.பி. தொடர்கதை எழுதுகிறார் என்றால், காசு கொடுத்து வாங்குவேன்.. அவர் எழுத்துக்களை 'பைண்ட்' பண்ணி வைத்துக் கொள்ள.. ('சொல்லாதே' என்று ஒரு நாவல்;
சே! என்னமாய் எழுதியிருக்கிறார் என்று இந்த இடுக்கிலும் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.) இப்பொழுதெல்லாம், வார இதழ்கள் வேடம் பூண்ட இந்த சினிமாப் பத்திரிகைகளைப் புரட்டிப் பார்த்தே வெகுகாலம் ஆகிவிட்டது.

இந்த மாதிரி வெகுஜன பத்திரிகைகளுக்கு, கொழுத்த வியாபார நிருவனங்களிடமிருந்து கிடைக்கும் விளம்பரங்கள் தாம் ஊட்டச்சத்து..
அந்த நிருவங்களின் விளம்பர விசுவாசத்திற்கு,
ஆதாரமான விஷயம் பத்திரிகையின் விற்பனை பற்றிய புள்ளிவிவரங்கள்.. நமக்கு புரிபடாத
எத்தனையோ சமாச்சாரங்கள்.. எத்தனையோ நீக்கு, போக்குகள்..

விட்டுத்தள்ளுங்கள்.. எழுதுவோரின் நுண்திறமைகளை நுணுகிப் பார்த்து நசிக்க வாருங்கள், சார்!

ஜீவி said...

ArunSankar said...

// திரு. எஸ். ஏ.பி அவர்கள் மறைந்த பிறகுதான் அரசு பதில்களில் வரும் "அரசு" அவர்தான் என்பது எல்லோருக்கும் தெரிய வந்தது. எழுத்துக்களில் நேர்மையையும், தூய்மையையும் கடைபிடித்து பத்திரிக்கை துறையில் ஒரு முன்னோடியாக விளங்கினார். ரா.கி. ரங்கராஜன், பால்யு போன்றோரை தமிழ் உலகறிய செய்தவரும் எஸ். ஏ.பி அவர்கள் தான். பத்திரிகை உலகில் ஒரு ஜாம்பவான் எஸ். ஏ.பி அவர்கள்.//

தாங்கள் சொல்லியிருக்கும் அத்தனை சிறப்புகளையும் ஆசிரியர் பெற்றிருந்ததாக
நானும் நினைத்துப் பார்க்கிறேன்.

'அரசு' கேள்வி-பதில் பகுதி பற்றி ஒரு சம்சயம் உண்டு. அண்ணாமலை-ரங்கராஜன் -சுந்தரேசன்

பெயர்களின் முதல் எழுத்துக்களின் கூட்டு தான் 'அரசு' என்று. இப்படி நினைப்பதற்கு நியாமான காரணமும் உண்டு. அந்த காலத்தில் 'சேற்றின் சிரிப்பு'ஆறாவது விரல்', 'தங்கச்சாவி'
என்று அற்புதமான சித்திரக்கதைகள் வர்ணம் அவர்களின் படங்களுடன் குமுதத்தில் வந்தது.
இதில் 'தங்கச்சாவி' கதையின் சஸ்பென்ஸ்
தங்கசாமி, கச்சாலீஸ்வரன், விநாயகம் என்ற பெயர்களின் முதல் எழுத்துக்களின் கூட்டாக இருக்கும். இதனால், இந்த 'அரசு' பெயரின் ரிஷிமூலம் முன் சொன்ன பெயர்களின் முதல் எழுத்து கூட்டாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படியாயின் இப்பொழுதும் அதே 'அரசு' பெயரில் தொடர்வதற்கு அந்தப் பெயர் பெற்ற கியாதி தான் காரணமாக இருக்க முடியும்.

'பால்யூ'.. அவர் வசித்த கே.கே.நகர் வீட்டில் ஒரு முறை சந்தித்திருக்கிறேன். அற்புதமான மனிதர். ஆசிரியர் போலவே, தன்னை வெளிப்படக் காட்டிக் கொள்ளாத திறமைசாலி.
இவரைப் பற்றி பாலகுமாரன் அவர்கள் மிகுந்த நன்றியுடன் நினைத்துப் பார்த்த ஒரு கட்டுரையைப் படித்த நினைவு இருக்கிறது.

தங்கள் வருகைக்கும், பகிர்தலுக்கும் மிக்க நன்றி, அருண்சங்கர் சார்!

Related Posts with Thumbnails