மின் நூல்

Saturday, April 30, 2011

ஆத்மாவைத் தேடி …. 9 மூன்றாம் பாகம்

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி ....


9. ஓ!


குமார் அப்படிச் சொன்னதிலிருந்து இதுவரை இரண்டு பேரும் வழிநெடுகக் காரில் பேசிக்கொண்டு வந்ததின் தொடர்ச்சியாக கனவுகள் பற்றித் தான் இப்பொழுதும் பேசிக் கொண்டிருந்திருப் பார்கள் என்று தெரிந்தது.

சீரியலைக் கலந்து சிப்பிக் கப்பில் ஊற்றி ரிஷியிடம் தந்தாள் கிரிஜா. சமத்துக் குழந்தை, அடம் பிடிக்காமல் இரண்டு கைவிரல்களாலும் கப்பை இறுக்கப் பற்றி வாய்ப்பக்கம் வைத்துக் கொண்டது. குழந்தை சாப்பிடுவதை ஒரு பக்கம் கண்காணித்துக் கொண்டே பிரித்து வைத்திருந்த ஸ்நாக்ஸிலிருந்து ஒரு விள்ளல் எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள் கிரிஜா. மணிவண்ணன் தனக்கு வேண்டும் என்று வாங்கிக் கொண்டிருந்த டோனெட்டை ருசித்துக் கொண்டிருந்தான்.

"வாவ்! கனவுன்னாலே இன்ட்ரஸ்ட்டிங் சப்ஜெக்ட்! அந்தக் கனவின் கதையைப் பத்தித் தெரிஞ்சிக்கறது அதைவிட சுவாரஸ்யமா இருக்கும் போலிருக்கே!" என்றான் பிரகாஷ்.

"பிரகாஷ்! இது கதை இல்லே; மொத்தமும் சயின்ஸ்.." என்று அவன் சொன்னதைத் திருத்தினான் குமார்.

"ஸாரி.. அதைப் பத்தின விவரம்ங்கற அர்த்தத்திலே சொன்னேன்.. நீங்க சொல்லுங்க.." என்று குமார் இயல்பா தொடர்வதற்கு ஊக்கினான் பிரகாஷ்.

இப்பொழுது தமா இன்னொரு ஸ்நாக்ஸ் பொட்டலத்தைப் பிரிக்கத் தொடங்கியிருந்தாலும், அவர்கள் பேச்சில் கவனமாய் இருந்தாள். ரிஷி காலி பண்ணியிருந்த சிப்பிக்கப்பை அவள் கையிலிருந்து வாங்கிக் கொண்டு, டிஷ்யூ பேப்பரால் அவள் வாய்ப்பக்கம், கை எல்லா இடங்களிலும் துடைத்து விட்டாள் கிரிஜா.

"பொதுவா எப்போதாவது எனக்கும் கனவுங்கறது வரும் தான்.. இருந்தாலும் வந்த சடுதிலே மறந்தும் போயிடும்.. காலம்பற எழுந்ததும், ராத்திரி ஏதோ கனவு கண்டமாதிரி இருக்குமே தவிர, என்ன ஏதுங்கறதெல்லாம் சுத்தமா மறந்து போய்டும்!" என்றாள் கிரிஜா.

கிரிஜாவைப் பார்த்து புன்னகைத்தான் குமார். "அதுகூட ஒருவிதத்தில் நல்லது தான்.. கனவையும் நனவையும் இயல்பா பாக்கக் கத்துக்கிட்டீங்க நீங்க!"

"அப்படி கூட இல்லே.. எதனாச்சும் ஞாபகம் இருந்தாத்தானே அதைப் பத்தி நெனைச்சுப் பாக்கறதுக்கே! அதுவும் பயமுறுத்தமாதிரி, நடுங்கற மாதிரி, நினைவுலே தங்கற மாதிரி எதுவும் இருக்காது; வந்ததா, போனதான்னு வந்த சடுதிலே மறந்து போயிடும்!" என்றாள் கிரிஜா.

"நீ கொடுத்து வச்சவடி!" என்று சிரித்தாள் தமயந்தி. "நாள் பூரா எதையானும் போட்டு உழப்பிண்டே இருப்பேன், நான்! அந்த உழப்பல் தான் ராத்திரி கனவா வர்றதோன்னு சந்தேகம் கூட எனக்கு..!"

"கையிலே வெண்ணையை வைச்சிண்டு நெய்க்கு யாராவது அலைவாங்களோ?" என்றான் பிரகாஷ்.. "கனவுலே எந்த டவுட்டானாலும் கிளியர் பண்றத்துக்கு.."

"நான் இருக்கறச்சேன்னு என்னைத் தானேச் சொல்றீங்க, பிரகாஷ்?.. தமா தானே?.. ஒண்ணும் சொல்லமாட்டா.. எல்லாத்தையும் அவளுக்குள்ளேயே போட்டு அமுக்கிக்கணும் அவளுக்கு!.. அது கூட பாதிக்காரணம், இவள் கனவுகளுக்கு!" என்றான் குமார்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க.. அவர் இப்படி ஏதாச்சும் சொல்வார்! பச்சப் பசேர்ன்னு தோட்டம், கொல்லுன்னு மலர்ச்சியா பூத்திருக்கற பூக்கூட்டம், 'சோ'ன்னு கொட்ற அருவி, நீர்வீழ்ச்சின்னு இப்படி ஏதாவது தான் என் கனவிலே வரும்! சில நேரங்கள்லே கொஞ்சம் கொழப்பமான கனவுகளும் உண்டு. எங்கப்பா எப்போவானும், எங்கம்மா அடிக்கடி என் கனவிலே வருவாங்க.." என்றாள் தமா.

"சரியான அம்மா கோண்டு இவள்!" என்று சிரித்தான் குமார்.

இதற்குள் எல்லோரும் காப்பி குடித்து முடித்திருந்தார்கள். செல்போன் எடுத்து அழுத்தி மணி பார்த்த குமார், "ஒண்ணு செய்யலாமா?" என்றான். "பக்கத்லேயே ஒரு பெரிய கார்டன்! ரெஸ்ட் ரூம் ஃபெஸிலிட்டியோட அருமையா இருக்கு..
ஸே.. ஒரு மணி நேரம் அங்கே காலாற நடந்து பேசிண்டே பொழுதைப் போக்கிட்டுக் கிளம்பிடலாமா?.." என்றான்.

"ஓ!" என்று ஒரு பெரிய 'ஓ'வை மணிவண்ணன் போட, அவன் பக்கம் திரும்பி கலகலவென்று சிரித்தான் பிரகாஷ்..

"இப்படித்தாங்க, இவன்! நானும் இருக்கேன், மறந்திடாதீங்க'ன்னு அப்பப்ப இவன் இப்படித்தாங்க காட்டிப்பான்!" என்றாள் தமா.

மணிவண்ணன் பக்கத்தில் சென்று, லேசாக அவனை அணைத்து அலாக்காகத் தூக்கிக் கொண்டான், பிரகாஷ்.. "நீங்களே பாருங்கள்! மணிவண்ணன் பெரிய ஆளா வருவான், பாருங்கள்!" என்று வாழ்த்தினான்.

அதற்குள் பிரகாஷின் காதுகளில் அவன் ஏதோ கிசுகிசுக்க, "ஒண்ணும் புரியலைடா, சரியாச் சொல்லு!" என்றான் பிரகாஷ்.

மறுபடியும் அவன் திருத்தமாக அவன் காதுகளில் சொன்னது கேட்டு, பலமாகச் சிரித்தான் பிரகாஷ். "குமார்! உங்க பய என்ன சொன்னான், தெரியுமா!"

எல்லாரும் 'என்ன' என்று கேட்கிற மாதிரி பிரகாஷ் பக்கம் திரும்ப, "இந்த வாண்டுப் பயலுக்கும் அப்பப்ப கனவு வருமாம்! அதைத் தான் சொன்னான்!" என்று குலுங்கிக் குலுங்கிச் சிரித்தபடி சொன்னான் பிரகாஷ்.

"ஏண்டா, மானத்தை வாங்கறே! அம்மா, அப்பா, பையன்.. ஒரே கனவுக் குடும்பமாலே இருக்கு'ன்னு நெனைச்சிடப்போறாங்க!" என்றாள் தமயந்தி.

"அப்படி நெனைச்சாலும் இங்கே வேறே யாரும் வேத்து மனுஷா இல்லையே, நாங்க தானே இருக்கோம்.." என்று கிரிஜா சொன்ன போது, "அதுக்குள்ளே கோபம் பொத்துண்டு வர்றதைப் பார்!" என்று நெருக்கத்தில் வந்து அவள் கைகளைப் பற்றிக் கொண்டாள் தமா.. "'கிருஷ்ணா.. கிருஷ்ணா.'ன்னு வாய் ஓயாம சொல்லிண்டிருப்பா எங்க அம்மா! அப்படி ஒரு பிரியம் எங்கம்மாவுக்கு உன் அப்பா மேலே.. அந்தப் பிரியம் விட்டுப் போயிடுமா?.. அடுத்த தலைமுறைக்கும் அந்த அந்நோன்யம் கூட வந்திண்டு தான் இருக்கு!" என்றாள்.

"நீங்க சொல்றீங்க.. தேசம் விட்டுத் தேசம் வந்து ஒரு அன்னிய தேசத்திலே இருக்கறதாலே அந்த நேசம் பட்டுப் போகமா இருக்கோ, என்னவோ! உண்மைலே சொல்லணும்னா சொந்த பந்தங்களோட நெருக்கம்லாம் விட்டுப் போய் எவ்வளவோ நாளாச்சு.. சும்மா, வீட்லே ஒரு விசேஷம்னா, இல்லே குடும்பக் கல்யாணம் அது இதுன்னு ஏதாவது ஃபங்ஷன்னா ஒருத்தரை ஒருத்தர் பார்த்து குசலம் விசாரிச்சுக்கறதோட சரி.. அதுவும், வர்ற தலைமுறைங்க.. கேட்கவே வேண்டாம்.. ரொம்ப சுத்தம்!" என்றான் பிரகாஷ்.

"உங்க அண்ணா பேரு அர்ஜூன் தானே? ரொம்ப நாளைக்கு முன்னாடி இந்தியா போன போது பாத்தது.. அப்போ கல்யாணமான புதுசுன்னு நெனைக்கிறேன்.." என்றான், குமார்.


"ஆமா. அர்ஜூன் தான். அந்தப் பெயர் வைச்ச காரணத்தை எங்கப்பா கிட்டே கேக்கணுமே! ரொம்ப திரிலிங்கா இருக்கும்.. நெறையச் சொல்வார்!"


"எனக்கும் சொல்லியிருக்கார்.. அந்த ஞாபகத்திலே தான் இப்போ கூட கரெட்டா 'அர்ஜூன்'னு சொன்னேன்.." என்றான் குமார்.


"சுபாக்கு என்ன ஆறு மாசமா?.." என்ற தமாவுக்கு, "இல்லே.. இந்த பங்குனிக்கு ஏழாயிடுத்து.. அவாள்லாம் அந்த டெல்லி சதஸ் முடிஞ்சு ஊருக்குத் திரும்பறத்துக்கும், மன்னி டெலிவரிக்கும் சரியா இருக்கும்னு நெனைக்கிறேன்.."

"ஓ, அந்த சதஸ்! 'ஆத்மாவைத் தேடி..' இல்லையா?.. தமா அவா அப்பாவோட பேசிட்டு இந்த தலைப்பை ஒரு நாள் சொன்னா.. மறக்காம ஆழமா நெஞ்சிலே பதிஞ்சிடுத்து.. கிரிஜாவும் சரி, தமாவும் சரி-- ரெண்டு பேர் பெற்றோர்களுக்கும் இதிலே கலந்துக்க கெடைச்ச பாக்யம் சாதாரணமானது இல்லே.. எந்த ஜன்மத்திலேயோ பண்ணின புண்ணியம் தான் இதுக்கெல்லாம் காரணம்னு நா நெனைக்கிறேன்.."

பிரகாஷ் மிகுந்த வியப்புடன் குமாரைப் பார்த்தான். தன்னுடைய ஆச்சரியத்தை மறைக்காமல் அவனால் இருக்க முடியவில்லை.. "உங்களுக்கு இதிலெல்லாம் ஆர்வம் உண்டா, குமார்?.."

குமாரிடமிருந்து சட்டென்று பதில் வந்தது. "என்ன அப்படிக் கேட்டிட்டீங்க, பிரகாஷ்! ரொம்பவே ஆர்வம் உண்டு.. அதானாலே தான் கனவுகளைப் பத்தியும் தெரிஞ்சிக்கணும்னு ஆர்வம் வந்தது.. நான் தெரிஞ்சிண்டைதையெல்லாம் உங்களுக்கும் சொன்னேன்னா, இதெல்லாம் பத்தி இன்னும் தெரிஞ்சிக்கணுங்கற ஆர்வம் நிச்சயம் உங்களுக்கும் வரும்!" என்றான்.


(தேடல் தொடரும்)
4 comments:

கோமதி அரசு said...

பச்சப் பசேர்ன்னு தோட்டம், கொல்லுன்னு மலர்ச்சியா பூத்திருக்கற பூக்கூட்டம், 'சோ'ன்னு கொட்ற அருவி, நீர்வீழ்ச்சின்னு இப்படி //

இப்படி எனக்கும் கனவுகள் வரும்.

கனவுகள் இனிமையானவை.

ஜீவி said...

@ கோமதி அரசு

ஆமாம், உவப்பான கனவுகள் எப்போதுமே இனிமையானவைதான்.
பெரும்பாலும் அப்படி இனிமையான மகிழ்ச்சியை அனுபவிப்பதும் கனவு காணும் நேரத்தில் தான்! அதனால் தான் ஒருபக்கம் அயர்ந்து தூங்குகையிலேயே இன்னொரு பக்கம் இந்த மகிழ்ச்சி அனுபவிப்பும் எப்படி சாத்தியப்படுகிறது என்பது தான் கேள்வியாகிப் போகிறது.
நினைவில் இப்படிப்பட்ட இனிய காட்சிகளைக் கண்டு ரசித்த புலன்களின் கனவிலான அனிச்சையான உணர்வு வெளிப்பாடோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது.
பெரியவர்களை விட்டுத் தள்ளுங்கள், சின்னஞ்சிறு குழந்தைகள் கூடத் தூக்கத்தில் கன்னங்குழிய சிரிக்கும், பார்த்திருக்கிறோம், அல்லவா?..
ஒரு நோக்கத்தோடேயே, தேவையின் அடிப்படையிலேயே எல்லாவற்றையும் படைத்திருக்கும் இறைவனின் வரம் தான் கனவுகளும்!

தங்கள் தொடர் வருகைக்கு மிக்க நன்றி.

ஸ்ரீராம். said...

எனக்குக் கூட ஒரே கனவு பலமுறை மீண்டும் மீண்டும் வந்துள்ளது. ஒரு யானை எண்ணை துரத்துவதான அந்தக் கனவு பல முறை வந்துள்ளது. முட்டுச் சந்திலோ ஒரு இடுக்கான அறையிலோ மாட்டிக் கொள்வது போல கூட வரும்..உடனே புதிய இடத்திலிருந்து மீண்டும் துரத்தத் தொடங்கும்....விடாமல் படித்து வருகிறேன். அறியாத விஷயங்களாய் இருப்பதால் பின்னூட்டம் ஏதும் இட்டு மாட்டிக் கொள்ள விரும்பவில்லை!!

ஜீவி said...

@ ஸ்ரீராம்

வாருங்கள், ஸ்ரீராம்!

கனவு என்பது எப்படி, எதனால் ஏற்படுகிறது என்பதை நமக்குத் தெரிந்தவரைப் பார்த்து விடுவோம்.
இடைஇடையே உபநிஷதங்களில் காணபடும் கனவு பற்றிய ஆழ்ந்த சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்வோம்.

கடைசியில் 'இந்தக் கனவு,இதனால்'
என்று ஏதாவது காரணம் கண்டுபிடிக்க முடிகிறதா பாருங்கள்.

'எங்கள் Blog'-கை நானும், இந்த Blog'-கை நீங்களும், படிக்காமல் இருந்தால் தான் ஆச்சரியம்!
தங்கள் பகிர்தலுக்கு மிக்க நன்றி, ஸ்ரீராம்!

Related Posts with Thumbnails