மின் நூல்

Friday, December 2, 2011

பார்வை (பகுதி-14)

                       அத்தியாயம்--14

விஸ்வநாதனின் குரல் பழைய நினைவுகளில் தோய்ந்து வெளிப்படுகிற தோரணையில் இருந்தது.

"சிலருக்கு சில விஷயங்கள் பிடிக்கிறது. அப்படி அவங்களுக்குப் பிடிக்கிற அது மாதிரியே இன்னொண்னு இருந்தால் அதுவும் அவங்களுக்குப் பிடிக்கத் தானே வேணும்? அதான் இல்லை.." என்று சொல்லி கலகலவென்று சிரித்தான் விஸ்வநாதன்.

"அப்படி ஏதாவது லாஜிக் இருக்குங்கறே?" என்றேன்.

"ம்.. என்ன சொல்றது?.. எந்த லாஜிக்குக்கும் அடங்காத ஒரு மனோபாவம். அவ்வளவு தான் சொல்றதுக்கு இருக்கு.." என்றான் விஸ்வநாதன்.

"அப்படின்னா ஓ.கே. இந்த மனசு சம்பந்தப்பட்ட எதுவொண்ணுக்கும் எந்த வரையறையும் கிடையாது. ஆளாளுக்கு வேறே வித்தியாசப்படறதா, இதுதான்னு நிச்சயமா எது ஒண்ணும் சொல்ல முடியாது. நீ சொல்ல வந்ததைச் சொல்லு. என்னமோ இலட்சியம்னு சொன்னயே, என்ன அது?"

"சொல்றேன். அதைச் சொல்றத்துக்கு முன்னாடி அதுக்கு முன்னோட்டமா சிலதைச் சொன்னாத்தான் அதுவும் சரியா புரிபடும். எனக்குக் கூட இந்தப் புரிதல்லாம் பின்னாடி ஏற்பட்டது தான். அதுனாலே சொல்றேன்."

"சொல்லு."

"தனக்குப் பிடிச்ச ஒண்ணு மாதிரியே இன்னொண்ணு இருக்கறச்சே, அந்த இன்னொண்ணு பிடிக்காமப் போறதுக்கு என்ன காரணம்?.. ம்?.. மனசு சம்பந்தப்பட்டதுன்னு ஒரேடியா விலகிடவும் முடியாது. இதுக்கெல்லாம் காரணம் கண்டுபிடிக்கறது ஒண்ணும் பிரம்ம பிரயத்தன வேலை இல்லை. ரொம்ப சுலபம்."

"உனக்குத் தெரிஞ்சா நீதான் சொல்லேன்." என்றேன்.

"எனக்கு ஒண்ணு தோண்றது. அந்த இன்னொண்ணு தனக்குப் பிடிச்ச ஒண்ணுக்குப் போட்டியா வந்திட்டதா நினைக்கிற நினைப்புதான் அந்த இன்னொண்ணு மேலே வெறுப்பா மனசிலே மண்டறது."

"குட்.. இப்படிக் கூட ஒரு பார்வை இருக்கா?.. விசித்திரமா இருக்கேப்பா.."

"மனுஷனே ஒரு விசித்திரம். அந்த விசித்திரத்துக்குள்ளே ஆயிரமாயிரம் விசித்திர கலவைகள்.. சிவநேசன் இத்தனையிலிருந்தும் விலகி நின்று பார்க்கற ஒரு விசித்திர ஜீனியஸ். தனக்குப் பிடிச்ச எதுஒண்ணு மாதிரியும் இன்னொண்ணு இருந்தா, அந்த இன்னொண்ணிலே இருக்கற சிறப்பை தன்னுள் வாங்கிக்க ஆசைபடற வித்தியாசமானமானவர். அவர் ஒரு நாள் என்ன செஞ்சார் தெரியுமா?" என்றவன் மிடறு விழுங்கறமாதிரி, தொண்டைலே ஒரு இழுப்பு இழுத்துவிட்டுச் சொன்னான்.." "பாலிவுட்டின் கியாதி பெற்ற ஒரு ஸ்டூடியோவிற்கு என்னைக் கூட்டிப் போய் கம்போஸிங் ரூமில் இருந்த ஒரு இசைக்கருவியைக் காட்டினார். இதுவரை நான் அதைப் பார்த்திராததால் "இதற்குப் பேர் என்ன?" என்று கேட்டேன்..

"இதுக்குப் பேரா?.. ம்.. குட்டிப் பிசாசுன்னு வைச்சுக்கோயேன்." என்றார்.

"குட்டிப் பிசாசா?.. ம்ஹூம்.. அப்படிக் கூடவா பேர் இருக்கும்?"

"ஒரிஜனல் பேர் எதுவாயிருந்தா என்ன?.. இதை இயக்கற அந்த இசைஅமைப்பாளர் இதைச் செல்லமா அப்படித்தான் அழைக்கிறார்" என்றார்.

"இது என்ன செய்யும்?"ன்னு கேட்டேன்.

"நீ வாசிக்கறச்சே உன் வயலின்லேந்து இசை கிளம்பறதில்லையா? அது மாதிரி இதிலேந்து ஓலி கிளம்பும்" என்றார்.

"வயலின் மாதிரி இதையும் வாசிக்கலாமா?"ன்னு கேட்டேன்.

"வாசிக்கறதுன்னு அதைச் சொல்லக்கூடாது. வேணும்னா இயக்கறதுன்னு சொல்லலாம்" என்றார்.

"அதையும் மனுஷா தானே செய்யணும்?"

"ஒண்ணு தெரிஞ்சிக்கோ.."ன்னு தீர்மானமாச் சொல்ல ஆரம்பித்தார் அவர். "மனுஷன் இல்லாம எதுவும் இல்ல. ஆனா ஒரு வித்தியாசம். மனுஷனை மாதிரியே எது ஒண்ணையும் பிரதி எடுக்க முடியாது. ஏன்னா, மனுஷன் செயல்படற ஒவ்வொண்ணுலேயும் அவன் ஆன்மா சம்பந்தப்பட்டிருக்கு. அதான் மனுஷனோட கீர்த்தியே.." என்றார்.

"நீங்க சொல்றது புரிஞ்சும் புரியாதமாதிரி இருக்கு"ன்னேன். "மனுஷன் செஞ்சது தானே இந்தக் கருவி?.. தனக்குத் திருப்தி ஏற்படற மாதிரி அவன் செஞ்ச ஒண்ணில் அவன் ஆன்மா சம்பந்தப்பட்டுத் தானே இருக்கும்?" என்றேன்.

கொஞ்ச நேரம் சிவநேசன் மெளனமாயிட்டார். நான் கேட்டதுக்கு என்ன பதில் சொல்லலாம்னு யோசிக்கிறார் போலிருக்குன்னு நெனைச்சிண்டேன். நான் நெனைச்சமாதிரியே,"இப்படி சொன்னா உனக்குப் புரியும்"ன்னுட்டு சொல்ல ஆரம்பித்தார். "இவங்கள்லாம் ப்ளூட்ன்னு சொல்ற அந்தப் புல்லாங்குழலையே எடுத்துக்கோ. அது துளைகள் போட்ட சாதாரண மூங்கில் குழாய், இல்லையா?.. அந்தத் துளை ஒன்றின் மீது உதடு பொருத்தி மனுஷன் எவ்வளவு அற்புதமா கர்ணாமிர்தம் பொழியறான்?.. பாக்கறத்துக்கு அந்த மூங்கில் குழல் துளை மேலே அவன் உதடு பொருத்தியிருக்கிறது தான் தெரியும்; அதிலேந்து வெளிப்படற இசைக் கேக்கறவங்களுக்கு அவன் வாசிக்கறதெல்லாம் வர்ண ஜாலமா சொரியும். புல்லாங்குழல்லே வேணுகானம் இசைக்கத் தெரிஞ்ச அந்தக் கலைஞன், உதடு குவித்து உஷ்ணக்காற்றை அந்த மூங்கில் குழலின் முத்திரைத்துளை வழி செலுத்தி மற்றத் துளைகளை விரல் நுனியால் மூடித் திறந்து அவன் நினைக்கிற நாதத்தில் அதை வெளிப்படச் செய்கிறான். உள் செலுத்தி வெளிப்படும் காற்றில் அவன் ஆன்மாவே அடங்கியிருக்கிறது.. அவனில் வேர்விடும் விதவிதமான கற்பனை, காற்றில் வேணுகானமாய்த் தவழ்கிறது. இசைக்கும், இசைக்கலைஞனின் கற்பனைக்கும், அதன் வெளிப்படலுக்கும் இருக்கும் நேரடித் தொடர்பு இது. ஆனால், மிஷின் அப்படியில்லை. இதைத் தான் சொல்ல வந்தேன்.." என்றார்.

நான் ஒண்ணுமே சொல்லலே. சிவநேசன் சொல்றதெல்லாம் எனக்கு பிரமிப்பா இருந்தது. பேசாம அவர் சொல்றதைக் கேட்டிண்டிருந்தேன்.

"... இந்த மிஷின் இப்போ வெளிநாட்டிலேந்து கப்பல்லே வந்திருக்கிறத்துக்காகச் சொல்லலெ. உன் வயலின் கூட மேல்நாட்டுக் இசைக்கருவி தான். ஆனால் அந்தக் கருவியில் இசை கிளப்புகிறவன் நீ. வயலின் தந்திக் கம்பிகளுக்கும், அதன் மேல் நீ கைப்பிடித்து இப்படியும் அப்படியும் அசைக்கும் வில்லுக்கும், கற்பனையில் நீ காணும் தரிசனத்தை இசையில் நீ நிகழ்த்திக் காட்டும் லாகவத்திற்கும்--- ஓஹ்! இவை எல்லாத்துக்குமே ஒண்ணுக்கு ஒண்ணு சம்பந்தமிருக்கு. அதை வாசிக்கும் பொழுது இசையாய் நீ வெளிப்பட்டு, கேக்கறவங்க மெய்மறக்க அவங்களை நாத சாகரத்தில் ஆழ்த்தறே.. ஒரு இசைக்கலைஞன் தன் போக்கில் நிகழ்த்தும் அந்தக் கற்பனைக் களியாட்டம் இந்த மிஷினில் இல்லை என்பது தான் சோகம்.." என்றார்.

"ஐயா, இந்த மிஷின்லேந்து வெளிப்படறதும் இசை தானே?.. மனிதன் தானே இதையும் இயக்குகிறான்?.. அப்படியிருக்க...." என்று தயங்கித் தய்ங்கி இழுத்தேன்.

"கரெக்ட்! மனிதன் தான் இயக்கறான்; அதில் எனக்கு எந்த மாறுபாடும் இல்லை.
இயக்கறது அவனே தவிர உள்ளிருந்து செயல்படறது வேறே! ஸிந்தஸைஸர் என்னும் ஜகத்ஜால சித்தன் உள்ளீடாக இதில் செலுத்தப்பட்டிருக்கிறான்! அந்த உள்ளீட்டை வெளியிலிருந்து இயக்கும் வேலை மட்டுமே அவன் செய்வது! குழலிலிருந்து வெளிப்படுவது நாதம் என்றால், இந்த ஸிந்தஸைஸரிலிருந்து வெளிப்படுவது அதன் உள்ளிட்டிருக்கும் சப்த அலை! இதன் பிர்மாண்டம் இசைக்கலைஞனை சாப்பிட்டு விடும்! நூறு பேரை வயலினோடு உட்கார்த்தி வைத்து எழுப்பும் நாதத்தை, இந்த மிஷினைக் கையாளும் விரல் அசைவில் ஒரே வினாடியில் நூறு வயலின் ஓசையை வெளிப்படுத்த முடியும். அதுக்காகச் சொல்ல வந்தேன். சுருக்கமாகச் சொன்னா, நூறு வயலின், நூறு கலைஞர்கள் தேவை இல்லை; அவர்களுக்குப் பதிலா இந்த மிஷின் ஒன்றே போதும். புரிந்ததா?"

அவர் சொல்றது ஒருமாதிரி புரிந்த மாதிரி இருந்தது எனக்கு."நாளாவட்டத்தில் நம் போன்ற இசைக்கலைஞர்களுக்கு இங்கு வேலையிருக்காது என்கிறீர்கள்.. அதானே?" என்று கேட்டேன்.

"விஷயம் அதுவல்ல.." என்றார் சிவநேசன். "இது ஒன்றே என்று கலைஞன் எது ஒன்றிலும் குறுகிப் போக மாட்டான்! இசையின் பன்முகப்பட்ட விரிவாக்கம் எல்லாம் அவன் விளையாடிப் பார்க்கவே! ஆனால், ஒன்றை நிச்சயமாகச் சொல்ல முடியும். திரைத் துறையினருக்குத் தோதானது இந்த மாதிரியான எலக்ட்ரானிக் கருவிகள் தாம். பாடலின் நடுநடுவே நாலு இடங்களில் புல்லாங்குழல் நாதம், வயலினின் இரண்டு மூன்று தீற்றல்கள், வீணையின் மீட்டல், கிளாரினட், கிடார் என்று இவை போதும் இவர்களுக்கு என்பதால் இந்த மிஷின் இவர்களுக்குப் போதும். ஆனால் நான் சொல்ல வந்தது அதுவல்ல.." என்றார்.

அவரே ஒருநிமிட யோசனைக்குப் பிறகு தொடர்ந்தார்."நான் சொல்ல வந்தது என்னன்னா, இந்த மிஷினின் துல்லியம். சல்லடையில் வடிகட்டுகிற மாதிரி பிசிறுகளை வடிகட்டி ஒதுக்கித் தள்ளும் லாகவம்! இந்தத் துல்லியத்தை முதலில் நாம் சுவீகரிக்க வேண்டும்; அதைக் கைப்பற்ற வேண்டும். கொஞ்சம் கூட பிசிறு தட்டாத இதை விட பலமடங்கு சிறந்த துல்லியத்தைத் தர ஒவ்வொருவரும் அவரவர் இசைக் கருவியில் பயிற்சி பெற வேண்டும். இந்த மிஷினைத் தாண்டி நம் மேதமை மிளிர வேண்டும். அது தான் நம் இலட்சியம். அத்தனை பேரை வைத்து இங்கே அதற்காகத் தான் பயிற்சி. இந்த மிஷினிடமிருந்து நாம் கற்றுக் கொண்ட பாடமும் அதுதான். தெரிந்ததா?" என்றார்.

"அப்பொழுது தான் அவர் சொல்ல வந்த இலட்சியம் முழுமையாக எனக்குப் புரிந்தது. அந்த ஷணமே அதற்கான வெற்றிக்காக சூளுரைத்துக் கொண்டேன்" என்று விஸ்வநாதன் சொன்ன போது எனக்கு அவனுக்குக் கிடைத்த அனுபவங்களை நினைத்துப் பெருமைப்படத் தோன்றியது. காசு கொடுத்து அங்கங்கே பெறும் வெறும் பயிற்சி அனுபவங்களைத் தாண்டியவை இவை என்றும் நினைத்துக் கொண்டேன்.

கூட்டுப்புழுவாய் திருவையாறிலேயே தேங்கிவிடாமல், எங்களை விட்டு அவன் விலகியிருந்தது எத்தனை அனுபவங்களை அவனுள் விதைத்திருக்கிறது என்று எண்ணி சந்தோஷப்பட்டேன்.


(இன்னும் வரும்)

15 comments:

Shakthiprabha (Prabha Sridhar) said...

//////"எனக்கு ஒண்ணு தோண்றது. அந்த இன்னொண்ணு தனக்குப் பிடிச்ச ஒண்ணுக்குப் போட்டியா வந்திட்டதா நினைக்கிற நினைப்புதான் அந்த இன்னொண்ணு மேலே வெறுப்பா மனசிலே மண்டறது."

"குட்.. இப்படிக் கூட ஒரு பார்வை இருக்கா?.. விசித்திரமா இருக்கேப்பா.."

"மனுஷனே ஒரு விசித்திரம். அந்த விசித்திரத்துக்குள்ளே ஆயிரமாயிரம் விசித்திர கலவைகள்.. /////////



பார்வை இன்னும் பலரது கோணத்தில் மிக அழகாக விரிகிறது.

G.M Balasubramaniam said...

சிந்தசைசர் என்னும் எலெக்ட்ரானிக் கருவி பற்றி தெரிந்து கொண்டேன் நன்றி, கருவிகளின் இசையை துல்லியமாகக் கொண்டுவரும் இக்கருவி, குரல் இசையைக் கொண்டு வரமுடியுமா.?முடிந்தாலும் குரலிசையை மீற முடியாது. என்னதான் மெஷின் தறியில் நெய்த துணியாயிருந்தாலும் கைத்தறிக்கு உள்ள மவுசு குறைவதில்லை. ஏனென்றால் இதில் நீங்கள் கூறும் ஆன்மா சம்பந்தப் பட்டிருக்கிறது. விஞ்ஞானம் வளர வளர மனித வேலைகளை ரோபோக்கள் செய்தாலும் மனிதன் செய்யும் ஈடுபாடு அதில் இருக்காது.என்னைப்போல் இசையை ஓசையாகக் காணும் பலருக்கு விளக்கங்கள் அருமையாக இருக்கிறது.

பாச மலர் / Paasa Malar said...

வணக்கம்..நீண்ட நாட்களாகிவிட்டன பதிவுகளில் சந்தித்து....பார்வைகள் மொத்தத்தையும் பார்வையிட்டு மீண்டும் வருகிறேன்...

கோமதி அரசு said...

அவரே ஒருநிமிட யோசனைக்குப் பிறகு தொடர்ந்தார்."நான் சொல்ல வந்தது என்னன்னா, இந்த மிஷினின் துல்லியம். சல்லடையில் வடிகட்டுகிற மாதிரி பிசிறுகளை வடிகட்டி ஒதுக்கித் தள்ளும் லாகவம்! இந்தத் துல்லியத்தை முதலில் நாம் சுவீகரிக்க வேண்டும்; அதைக் கைப்பற்ற வேண்டும். கொஞ்சம் கூட பிசிறு தட்டாத இதை விட பலமடங்கு சிறந்த துல்லியத்தைத் தர ஒவ்வொருவரும் அவரவர் இசைக் கருவியில் பயிற்சி பெற வேண்டும். இந்த மிஷினைத் தாண்டி நம் மேதமை மிளிர வேண்டும். அது தான் நம் இலட்சியம். அத்தனை பேரை வைத்து இங்கே அதற்காகத் தான் பயிற்சி. இந்த மிஷினிடமிருந்து நாம் கற்றுக் கொண்ட பாடமும் அதுதான். தெரிந்ததா?" என்றார்.//


மனிதன் கண்டு பிடித்தகருவி துல்லியமாக இயங்கும் போது, மனிதன் அதை விட நேர்த்தியாக நிச்சியம் தரமுடியும்.

அதற்கு உழைப்பும் , முயற்சியும் நிச்சியம் பலனை தரும்.
இனி இலட்சிய பாதையில் முன்னேறி செல்வார்கள் குருவின் ஆசியால்.

பார்வை சிறப்பாய் இருக்கிறது.

ஜீவி said...

@ Shakthiprabha

எல்லா விஷயங்களிலும் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பார்வை இருப்பதினால், அதைச் சொல்வது சுலபமாகிப் போகிறது. ஒரு விஷயத்தில் இருக்கும் தீர்க்கமே, பல பார்வைகளை பார்க்க வைக்கிறது என்பதும் இன்னொரு உண்மை.

பகிர்தலுக்கு நன்றி.

ஜீவி said...

@ G.M. Balasubramaniam

முதல் முதலாக மின்னணு இசைக்கருவியை உருவாக்கிக் காட்டிய Robert Moog-க்கு இசை உலகம் கடமைப்பட்டிருக்கிறது. அறுபதுகளில் இவரின் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தாக நினைவு. Moog-ன் உருவாக்கம் Analog வகைத்தானது. இதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக டிஜிட்டல் சிந்தசைசர்கள்
வந்தன.

கதைகள், கவிதைகள் யாப்பது போலவே இசையிலும் தன்னில் விதவிதமாய் முகிழ்க்கும் கற்பனையில் சஞ்சாரம் செய்து பாடுவது, இசைப்பது எல்லாமே எல்லையற்று அவரவர் ஈடுபாட்டிற்கு ஏற்ப நிகழ்கின்றன. மற்றவற்றில் அந்த விகசிப்புகளுக்கு இடமில்லையாதலால்,
மனித மனத்தின் மாட்சி என்றைக்குமே
எதிலும் அடக்க முடியாத பிரமாண்டம் தான்.

தங்கள் பகிர்தலுக்கு நன்றி.

ஜீவி said...

@ பாசமலர்

வாருங்கள், பாசமலர்! தங்கள் கருத்துக்களை எதிர்பார்த்திருக்கிறேன்.
தோடர்ந்து வாருங்கள்..

ஜீவி said...

@ கோமதி அரசு

உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?..
தாங்கள் சொல்வது முக்காலும் உண்மை.

'பார்வை'க்காக பல பார்வைகள் அங்கங்கே விழுந்திருப்பதால், கதையும் அதன் வழியில் பயணிக்கிறது.

வருகைக்கு நன்றி. தொடர்ந்து படித்து தங்கள் கருத்துக்களைச் சொல்ல வேண்டுகிறேன்.

Geetha Sambasivam said...

சிந்ததைசர் என்னதான் துல்லியமானாலும் எலக்ட்ரானிக் பொருட்கள் ஒருநாள் கொஞ்சம் தகராறு செய்யத்தான் செய்யும் எனத் தோன்றுகிறது. சற்றுக் எதிர்பார்க்காத கோணத்தில் செல்லும் பார்வை.

இந்த சிந்ததைசர் விஷயத்தில் திரு பாலசுப்ரமணியன் கருத்துத்தான் எனக்கும் தோன்றியது. கைத்தறிச் சேலை தான் நான் அதிகம் கட்டுவதும். :))))) அதற்கு உள்ள மவுசே தனிதான். :)))))))

சிவகுமாரன் said...

புல்லாங்குழல் வாசிப்பு பற்றிய விஸ்தரிப்பு எனக்கு வேணுகானம் கேட்டது போல் இருந்தது.

சிவகுமாரன் said...

\\\அந்த இன்னொண்ணு தனக்குப் பிடிச்ச ஒண்ணுக்குப் போட்டியா வந்திட்டதா நினைக்கிற நினைப்புதான் அந்த இன்னொண்ணு மேலே வெறுப்பா மனசிலே மண்டறது."///

நிறைய யோசிக்க வைத்த வரிகள்.
தங்கள் பதிவுக்கு வந்தால். உடனே படித்துவிட்டு கமென்ட் போட்டு விட்டு போய் விட முடியவில்லை.
விசாலமான பார்வையுடன் ஆழ்ந்து படிக்க வைக்கிறீர்கள்.

வெகு காலமாயிற்று இப்படி படித்து.
மனம் நிறைவாய் இருக்கிறது படிக்கும் போது.

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

இன்று இந்த சிந்தஸைஸர் இசைக் கருவிகள் பலவித மேம்பாடுகளைக் சேர்த்துக் கொண்டு வெகுவாக புழக்கத்தில் வந்து விட்டன. ஆர்வமிருப்பின் இவற்றைப் பற்றிய விவரத் தகவல்களை நீங்கள் சேகரித்துக் கொள்ளலாம். இன்றைய தினத்தில் எங்கங்கே இவற்றின் ஆளுகை இருக்கிறது என்று தெரிந்தால் பிரமித்துப் போவீர்கள்.

ஜீவி said...

@ சிவகுமாரன்

புல்லாங்குழல் மிகமிக எளிமையான இசைச் செல்வம் என்பதே அதன் மீதான அபிமானத்தை நமக்குக் கூட்டுகிறது. எங்கெல்லாம் எளிமை கோலோச்சுகிறதோ, அங்கெல்லாம் ஒரு குத்துவிளக்கு அழகு ஜொலித்து, நம் மனம் அதை நாடும். எந்தவித படாடோபமோ, அட்டகாசமோ இல்லாத இசைக்கருவி. அந்தக் குழைதல் அதற்கே உரித்தான ஒன்று. அதன் எளிமை கருதியே கிருஷ்ண பரமாத்மாவின் விரல்கள் அதனில் படரும் பாக்கியம் பெற்றதுவோ?..

'கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே..
கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே'..

என்று ஊத்துக்காட்டார் எப்படி சொக்கிப் போய் நிற்கிறார்! அந்த 'ஒருவிதமாய்' என்கிற ஒற்றை வார்த்தையில் எத்தனை அனுபவித்த அழகைத் திணித்திருக்கிறார்!

கூர்ந்த தங்கள் ரசனைக்கு மிக்க நன்றி, சிவகுமாரன்!

ஜீவி said...

@ சிவகுமாரன் (2)

பல துறைகளில் திறமையாளர்கள் வெளிச்சத்திற்கு வந்து வெகுஜன பார்வையில் படாமல் இருப்பதற்கும் இந்த தன்னல சார்புப் பார்வையே காரணம்!

பாறையைப் பிளந்து வெளிவந்த சின்னஞ்சிறு செடி போல, அப்படி வெளிச்சத்திற்கு வந்தவர்கள் கூட, தங்கள் ஆரம்ப காலங்களில் 'ஒன்றும் தெரியாதவர்கள்' போல ரொம்பவும் அடக்கி வாசித்திருப்பது கூட இந்த அவலத்தை உணர்ந்து கொண்ட ஜாக்கிரதை உணர்வால் தான் போலும்! அந்தக் காலம், இந்தக் காலம் என்றில்லாமல் இந்தக் அலங்கோலங்கள் எல்லாம் எக்காலத்திலும் அமுலில் இருக்கும் சரிதமாய்த் தெரிகிறது.

வாழ்க்கையில் தான் 'சாதனை' என்னும் புத்தகத்தின் பக்கங்களைத் திருப்பத் திருப்ப எத்தனை பாடங்கள்?..

மனநிறைவாய் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி, அன்பு சிவகுமாரன்!

dondu(#11168674346665545885) said...

இப்போதுதான் நான் ஏன் கணினிசார் மொழிபெயர்ப்பை தவிர்க்கிறேன் என்பது புரிந்தது.

மொழிபெயர்ப்பு ஒவ்வொன்றையும் ஒரு தனி கவிதையாக காணும் எனக்கு அந்த மென்பொருள் தேவையில்லைதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Related Posts with Thumbnails