மின் நூல்

Wednesday, March 7, 2012

பார்வை (பகுதி-32)

"நான் முதல்யே சொன்னபடி எனக்குன்னு இருக்கற குணத்தை நான் அறிவேன். எழுத்தாளன்னு ஆயிட்டதா நீங்க சொல்றீங்களே தவிர, எனக்குள் அந்த உணர்வு இன்னும் வரலே. நீங்க சொல்றபடி அப்படி ஆயிட்டாலும் அதனாலே நீங்க சொல்ற மாதிரி புதுசா எந்த குணமும் எனக்கு வரும்மான்னும் தெரிலே.. எந்தந்த குணம் போகும்னும் தெரிலே. ஆனா நிறைய படிக்க ஆரம்பிச்ச பிறகு எழுத ஆரம்பிச்ச பிறகு முன்னாடி இருந்த பதட்டம்லாம் குறைஞ்சு விஷயங்களைக் கையாள்றதிலே ஒரு அமைதி ஏற்பட்டிருக்குன்னு சொல்லலாம்" என்று ஆரம்பித்தான் ரிஷி.

எழுத்தாளன்னு உணர்வு எனக்கு இன்னும் வர்லேன்னு அவன் சொன்னாலும் அவன் சொல்லத் தொடங்கியதின் தொடக்கமே ஏதோ கதை சொல்கிற மாதிரி இருந்தது. தொடர்ந்து மேலும் ரிஷி சொல்ல ஆரம்பித்ததை ஆர்வத்துடன் கேட்கத் தயாரானாள் ஊர்மிளா.

 "ஆனா  நான் நிறைய எழுத்தாளர்களைச் சந்திச்சிருக்கேன்.  நம்ம எல்லாருக்கும் இருக்கற ஆத்திரம், கோபம், அன்பு, நைச்சியம் அத்தனையும் கொண்டவங்களாத்தான் அவங்களையும் பாத்திருக்கேன். ஒரு நேரத்லே அவங்க எப்படியிருப்பாங்களோ அப்படித்தான் அது மாதிரியான ஒரு நேரம் அவங்க எழுதற கதைலேயும் வர்றத்தேயும் அவங்க இருப்பாங்கன்னு நெனைச்சிப்பேன். அதுனாலே அவங்க கதைகளையெல்லாம் படிச்சா அவங்களைப் படிச்ச மாதிரின்னு நெனைச்சிப்பேன்.

ஆற்றோட்டமாக ரிஷியிடமிருந்து வார்த்தைகள் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன.  "நாளாவட்டத்தில் சில எழுத்தாளர்களுடன் பழக்கம் ஏற்பட்டப்போ அவங்க எழுத்துக்கும் நடைமுறை வாழ்க்கைலே அவங்க நடந்துக்கறத்துக்கும் சம்பந்தம் இல்லாதது மாதிரி தெரிஞ்சது..  தீவிரமா எழுதத் தொடங்கினா நாமும் அப்படி ஆகிப்போவோமோங்கற பயம் என்னைப் பிடிச்சிண்டது.  அதனாலே இன்னும் அவர்களைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன். அதிலேந்து ஒண்ணைத் தெரிஞ்சிண்டேன்.  அவங்கள்லே பல பேர் அகவுலக வாழ்க்கை வேறு புறவுலக வாழ்க்கை வேறுன்னு ஒரு மனிதரே தன்னை ரெண்டாப் பிரிச்சிண்டு வாழறது புரிஞ்சது.  அதாவது என் எழுத்து வேறு, என் வாழ்க்கை வேறுன்னு வாழறது.

கொஞ்சம் நிறுத்தி விட்டு ரிஷி தொடர்ந்தான். "வாழ நேர்ந்த இந்த வாழ்க்கைலே நாம சந்திக்கற பிரச்னைகளும் அவற்றைக் கையாள்றச்சே ஏற்பட்ற அனுபவங்களும் தானே ஒருத்தரை வார்த்து எடுக்கறது?.. ஒரு எழுத்தாளருக்கு அந்த வார்த்தல் தானே எழுத்தா இருக்கணும்?..  இவங்களுக்கு ஏன் அப்படி இல்லைன்னு குழம்பிப் போனேன். ஒருத்தரைக் கேட்டேன்.  'வாழ்க்கை வேறு, எழுத்து வேறு இரண்டையும் போட்டுக் குழப்பிக்கக் கூடாது'ன்னார் அவர்.  அவர் ரொம்பப் பெரியவர்;  புகழ்பெற்ற எழுத்தாளர்.  அதனாலே 'நீங்க வாழறதும் பொய்; எழுதுறதும் பொய்ன்'னு அவர் முகத்துக்கு நேரே என்னாலே சொல்ல முடிலே.. ஆனா அவர் எழுதறது போல அவரே வாழாத போது எந்த அளவுக்கு அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கறதுங்கறதே எனக்குள்ளே கேள்விக் குறியாச்சு.. இந்த நேரத்லேயும் அவர் எழுதின எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்னு மனசிலே நெனைச்சிண்டது தான் அதிசயம்.  மனுஷப் பிறப்பின் உன்னத உணர்வுகளைக் குழைத்து அப்படியான ஒரு எழுத்தை அவர் எழுதினதுனாலே அவர் மேலே ஒரு மரியாதை. அவராலே முடியாம போகட்டும்; ஆனா அவர் எழுதினது மாதிரி நாம வாழ முயற்சிக்கணும்ன்னு ஒரு எண்ணம்.. இப்படியாக என் மனசிலேயும் அவர் வேறு, அவர் எழுத்து வேறுன்னு அவரே ரெண்டா பிரிஞ்சிண்டார்.

மனசிலிருந்து பிய்த்து எடுத்து சொல்கிற மாதிரியான அவனது நேரஷனுக்கு ஏத்த மாதிரியே ரிஷியின் முகபாவமும் மாறித்து. "ஒரு நிகழ்ச்சியைச் சொல்றேன். அப்போ நன்னாப் புரியும் உங்களுக்கு" என்று லேசாக முகம் நிமிர்த்தி எங்கேயோ தன் நினைவுகள் அழுந்திய தோரணையில் மேலும் சொல்லத் தொடங்கினான் ரிஷி. " ஒரு எழுத்தாளரின் எழுத்தை நான் ரொம்பவும் நேசித்தேன். அவர் உருக்கமா எழுதற கதைகளைப் படிச்சு நானும் உருகிடுவேன். டிபன் பாக்ஸ்கள் நிறம்பிய சாப்பாட்டுக் கூடையைத் தூக்கிக் கொண்டு அலுவலங்களில் சாப்பாடு சப்ளை செய்யும் 'டப்பா வாலா' கிழவர் ஒருத்தரைப் பத்தி உருக்கமா ஒரு கதை எழுதியிருந்தார் அவர். வேகாத வெயிலில், சுருக்கம் விழுந்த மேனி, பாளம் பாளமாய் வெடித்த பாதங்களோடு விந்தி விந்தி நடக்கும் அந்த பெரியவரின் சிரமத்தைப் படிக்கறச்சே மனசு கசியும்.

"ஒரு நாளைக்கு அந்தக் கதையை எழுதிய அந்த முதுபெரும் எழுத்தாளரோடு அவர் வீட்டில் பேசிக் கொண்டிருந்து விட்டு வெளியே வந்தேன்.  என்னோடு பேசியபடி அவரும் பக்கத்துக் கடையில் வெற்றிலை வாங்க வெளியே வந்தார். அந்த சமயத்தில் அந்தக் கதையில் வர்ணித்திருந்த கிழவரைப் போன்றே தள்ளாமையுடன் ஒரு கிழவி படபடக்கிற வெயிலில் பழக்கூடையுடன் நிழலுக்காக ஒதுங்கியிருந்தாள்.

"வீட்டுக்கு வெளியே வந்த எழுத்தாளர் அவளிடம் வந்து பத்து ரூபாய்க்கு பழம் கேட்டார்.  'பத்து ரூபாய்க்கு நான் என்னத்தைக் கொடுக்கறது'ன்னு முனகிண்டே அந்தக் கிழவி ஒரு சீப்பு பழத்திலிருந்து ஐந்து பழங்களைப் பிய்த்து அவரிடம் நீட்டிய போது, பத்து ரூபாய்க்கு பத்தாவது தர வேண்டாமான்னு எழுத்தாளர் அவளுடன் பெரிய சண்டைக்கேப் போய்விட்டார்.  கடைசியில் எட்டு பழங்களை வாங்கிக் கொண்டு ஒரு வழியாக அந்தக் கிழவியிடம் பத்து ரூபாயைத் தந்தார் எழுத்தாளர்.

"அந்தக் கிழவியைப் பார்க்க எனக்குப் பாவமா இருந்தது.  எழுத்தாளர் வெற்றிலை வாங்க பக்கத்து கடைக்குப் போன தருணத்தில், பத்து ரூபாயை எடுத்து அவளிடம் நீட்டினேன்.  'அந்த ஐயா அடிச்சுப் பிடிச்சு எட்டு வாங்கிட்டுப் போயிட்டார்; வெலைவாசி இருக்கற லட்சணத்லே ஐஞ்சு தந்தாத்தான் எனக்கு கட்டுப்படி ஆகும், சாமி' என்றாள். 'இல்லை. நீ பழம் எதுவும் தர வேண்டாம். சும்மாத் தான் தர்றேன். உன் நஷ்டத்தை ஈடு கட்டும். வைச்சுக்கோ"ன்னு நான் சொன்னதும் என்னை ஒரு மாதிரி பார்த்தாள்.  அந்தப் பார்வை ரொம்ப அர்த்தம் நெறைஞ்சதா எனக்குப் பட்டது. அந்த ஏழ்மையிலும் குழி விழுந்த அவள் கண்களில் சுடர் விட்ட நியாயம் என்னைச் சுட்டதும் தான் தாமதம், எனக்கு புதுமைப்பித்தனின் 'கவந்தனும் காமனும்' கதை நினைவுக்கு வந்து 'என்னை என்ன பிச்சைக்காரின்னு நெனைச்சிட்டியா'ன்னு அவள் கேட்டுடுவாளோன்னு பயமாயிருந்தது.  அந்த சமயத்லே அப்படி நடக்கும்னு நானே எதிர்பார்க்கலே. சடார்னு அந்தக் கிழவி குச்சி குச்சியா இருந்த தன்னோட இரண்டு கையையும் நீட்டி என் நெற்றிப் பொட்டில் வைத்து திருஷ்டி கழித்தாள். 'யாரு பெத்த பிள்ளையோ, நீ நல்லா இருக்கணும்.  சும்மா காசு வாங்கிக்க எனக்கு மனசு ஒப்பலே, ராஜா! இந்தா, இதை வைச்சிக்க' என்று பத்து ரூபாய்க்கு என்ன உண்டோ, அந்த ஐந்து பழங்களை எடுத்துத் தந்தாள்.

வெற்றிலை வாங்கிக் கொண்டு திரும்பின எழுத்தாளர், என் கையிலிருந்த பழங்களைப் பார்த்து விட்டு, 'எவ்வளவு கொடுத்தீங்க?'ன்னார்.. 'பத்து ரூபாய்' ன்னு நான் சொன்னதும், 'அஞ்சு பழம் கொடுத்திருக்கா, இல்லையா? பத்து ரூபாய்க்கு அஞ்சு பழம்; கிழவி சரியாகத் தான் எங்கிட்டே சொல்லியிருக்கிறாள்' என்றவர், அவர் மனசில் என்ன நெருடித்தோ தெரியலே, சடாரென்று தன் கையில் வைத்திருந்த பழச்சீப்பிலிருந்து மூன்று பழங்களைப் பிய்த்து அந்த கிழவியிடம் நீட்டினார்.  'இந்தா.. நீ எனக்கு அதிகமா கொடுத்த பழம்' என்று அவர் கொடுத்த பழத்தை வாங்கிக் கொள்ள கிழவி மறுத்து விட்டாள்.  'அந்த மூணு பழத்துக்கு என்ன சண்டை போட்டே?.. நீயே வைச்சுக்கோ.  உனக்கு நா தந்ததா இருக்கட்டும்' என்று ஒரு ஆவேசத்தில் கூடையைத் தூக்கிக் கொண்டு போயே போய் விட்டாள்.  எழுத்தாளருக்கு என்னைப் பார்க்கவே முகமில்லை. 'வாங்க..  காபி சாப்பிட்டுப் போகலாம்' என்று என்னை மறுபடியும் வீட்டிற்குள் கூட்டிச் சென்று மனைவியைக் கூப்பிட்டு காபி போடச்சொல்லி எனக்கு கொடுத்து கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தார்.  பாதிப் பேச்சில் எழுந்திருந்து கிழவியிடமிருந்து வாங்கி டேபிளின் மேல் வைத்திருந்த பழங்களில் மூன்றை எடுத்து பக்கத்திலிருந்த பூஜை மாடத்திலிருந்த சுவாமி படத்திற்கு முன் வைத்து விட்டு வந்தார்.  வேறே ஏதோ தீவிர சிந்தனையில் இருக்கிற மாதிரி அவர் நடவடிக்கைகள் இருந்தது.  அப்போத் தான் 'நான் வரேம்மா..' என்று உள் பக்கத்லேந்து ஒரு நடுவயசு அம்மாள் நாங்க உக்காந்து பேசிண்டிருந்த ஹால் பக்கம் வந்தாங்க.  பார்த்தால் வீட்டு வேலைகள் செய்கிற அம்மாள் மாதிரி இருந்தது. அவங்களைப் பார்த்ததும் சடாரென்று எழுந்த எழுத்தாளர், பூஜை மாடத்திலிருந்த அந்த மூன்று பழங்களை எடுத்து, "இந்தா. குழந்தைங்களுக்குக் கொண்டு போய் கொடு.." என்று அவளிடம் தந்தார்.  அப்புறம் தான் இத்தனை நேரம் அவர் பட்டுக்கொண்டிருந்த அவஸ்தைகளிலிருந்து வெளிவந்த மாதிரி அவர் முகபாவம் தெரிந்தது.  அப்புறம் தான் ரொம்ப உற்சாகமாக அவர் பேசுகிற மாதிரி எனக்குப் பட்டது.  நான் கிளம்புகையில், "பாத்தீங்கள்லே! எழுதறதுக்கு கதையெல்லாம் எப்படி வர்றதுங்கறீங்க?..  இப்படித்தான்..' என்று என்னைப் பார்த்து ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்தார்" என்றான் ரிஷி.

"அதானா சமாச்சாரம்?" என்று எதையோ நினைத்து கலகலவென்று சிரித்தான் லஷ்மணன். "எதானா சமாச்சாரம்.  சொல்லிட்டு சிரிங்க" என்றாள் ஊர்மிளா.

"அந்தக் கிழவியை எனக்கும் தெரியும்.  அந்த எழுத்தாளர் வீட்டுக்கு அடுத்தாப்லே இருக்கற பஸ் ஸ்டாப்பில் பழம் விற்றுக் கொண்டிருப்பாளே. அவள் தானே?" என்று ரிஷியைக் கேட்டான் லஷ்மணன்.

"ஆமாம். அவளே தான்" என்றான் ரிஷி.

"நேத்திக்கு அந்த எழுத்தாளரைப் பார்க்கப் போயிருந்தேன்.  ரொம்ப நேரம் பேசிண்டு இருந்தோம்.  நான் கிளம்புகையில், 'லஷ்மணா.. ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கே.. அடிக்கடி வா'ன்னு சொல்லிட்டு, அவரும் என்னுடன் வெளிலே வந்தார். 'உன்னை பஸ் ஏத்திட்டுத் திரும்பறேன். எனக்கும் காலாற நடந்த மாதிரி இருக்கும்' என்று பஸ் ஸ்டாப் வந்தார்.  நாங்க ரெண்டு பேரும் நெருக்கமா பேசிண்டு வர்றதைப் பார்த்த அந்த பழக்காரக் கிழவி அவரையும் என்னையும் மாறி மாறிப் பார்த்துட்டு, என்னைப் பார்த்து 'பழம் எடுக்க அட்வான்ஸ் பணம் இல்லே; இனிமே வியாபாரம் எப்படிச் செய்யப் போறேனோ'ன்னு இவங்க வீட்டு அம்மாகிட்டே சொல்லிக்கிட்டிருந்தேனா?  அதைக் கேட்டிட்டு, 'இந்தா! இந்தப் பணத்தை வைச்சு சமாளி'ன்னு மகராசன், உடனே ஐநூறு ரூபா எடுத்துக் கொடுத்தார்'  என்று சொன்னாள். நான் ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தப்போ, என்னைக் கொஞ்சம் தள்ளிக் கூட்டிண்டு வந்து, 'ஒண்ணுமில்லே, லஷ்மணன்!.  போனவாரம் ஒரு பழக்காரியைப் பத்தி நான் எழுதின கதை படிச்சிருப்பீங்களே.. அதுக்கு வந்த சன்மானம்..  ரொம்ப நாளா இந்தக் கிழவியைத் தெரியும்.  வழக்கமா இவ கிட்டே தான் பழம் வாங்கறது.  அவளுக்கு ஏதாவது உதவி பண்ணனும்னு நினைச்சிண்டிருந்தேன்.  அந்த பத்திரிகைலேந்து ஐநூறு ரூபா வந்ததா, அவளுக்கும் ஒரு நெருக்கடிலே உதவினதா இருகட்டுமேன்னு கொடுத்திட்டேன்.  நமக்கோ ஆயிரத்தெட்டு செலவு இருக்கு..அப்புறம் மனசு மாறிடக் கூடாது பாருங்கோ'ன்னார்" என்று லஷ்மணன் சொன்னது எல்லோரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டது.

"லஷ்மணன்! எந்தப் பத்திரிகைலே இந்தக் கதையைப் படிச்சீங்க.. நான் பாக்கவே இல்லையே!" என்று ஆச்சரியப்பட்டுக் கேட்டான் ரிஷி.


(இன்னும் வரும்)




17 comments:

Geetha Sambasivam said...

கடைசியிலே அந்தப் புகழ் பெற்ற எழுத்தாளரும் எழுத்தைப் போலவே வாழ்க்கையையும் மாற்றிக்கொண்டுவிட்டார். லக்ஷ்மணன் மாற்ற வைத்துவிட்டார். இல்லையா!

மனித மனங்களை அலசுவது நன்றாக இருக்கிறது. எல்லாருக்குமே ஒரு பலவீனம் பேரம் பேசுவது. வாசல்லே வர கீரைக்காரி கிட்டே இருந்து எல்லார்ட்டயும்.

எங்க வீட்டிலே என்ன வழக்கம்னா மார்க்கெட்டில் கீரை வாங்கினா ஐந்து ரூபாய் இருக்கும். அதை வாசல்லே வரவ எட்டிலிருந்து பத்து ரூபாய்க்குக் கொடுப்பாள். பேசாமல் வாங்கிடுவோம். சுமை தூக்கிக் கொண்டு வராளே! அந்த இரண்டு ரூபாயில் என்ன கிடைக்கப் போகிறது. அவள் தான் சாப்பிடட்டுமே என்ற எண்ணம்

நவராத்திரிக்கு அவளுக்கும் எல்லாருக்கும் கொடுக்கிறாப்போல் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், ரவிக்கைத்துணியோ இல்லைனா என்ன எல்லாருக்கும் கொடுக்கிறோமோ அது உண்டு. வீட்டுக்கு உள்ளே அழைத்து உட்கார வைத்தே கொடுப்போம். அவள் சந்தோஷப் படுகையில் நமக்கும் மனதில் இனம்புரியாத மகிழ்ச்சி உண்டாகும்.

G.M Balasubramaniam said...

பார்வை பகுதி 31-க்கு, நான் எழுதிய பின்னூட்டத்துக்கு இதில் விளக்கங்கள் நிறையவே இருக்கிறது. சில கருத்துக்களை முன் வைக்கும் போது சில அனுகூலங்களும் சில பிரதிகூலங்களும் உண்டு. தொடர்கிறேன்.

ஸ்ரீராம். said...

//"நாளாவட்டத்தில் சில எழுத்தாளர்களுடன் பழக்கம் ஏற்பட்டப்போ அவங்க எழுத்துக்கும் நடைமுறை வாழ்க்கைலே அவங்க நடந்துக்கறத்துக்கும் சம்பந்தம் இல்லாதது மாதிரி தெரிஞ்சது.. தீவிரமா எழுதத் தொடங்கினா நாமும் அப்படி ஆகிப்போவோமோங்கற பயம் என்னைப் பிடிச்சிண்டது//

எழுத்தாளர்களின் எழுத்துகள் எல்லாம் தங்களைப் பிரதிபலிப்பதாகவே எழுதுவது ரொம்பக் கம்மி என்று தோன்றுகிறது. தான் பார்த்த, அனுபவித்த, கேட்ட சம்பவங்களை இன்னும் மெருகுபடுத்திக் கொடுக்கிறார்கள்.

எழுத்து வேறு, எழுதும் எழுத்தாளர் வேறு என்று எனக்குப் படும். பிரபல எழுத்தாளர்கள் விஷயத்தில் எழுத்தை ரசித்து எழுத்தாளரை நேரில் சந்திக்கும் ஆவல் வந்ததில்லை. நம்முள் இருக்கும் அந்த எதிர்பார்ப்பு பெரும்பாலும் பொய்த்தே போகும். அது அவர்கள் தவறும் அல்ல. நமது எதிர்பார்ப்புதான் தவறு.

பதிவில் சொல்லப் பட்டுள்ள சம்பவம் நன்றாக இருக்கிறது.

ஸ்ரீராம். said...

முதல் பின்னூட்டத்தில் "எழுத்தாளர்களின் எழுத்துகள் எல்லாம் தங்களைப் பிரதிபலிப்பதாகவே எழுதுவது ரொம்பக் கம்மி என்று தோன்றுகிறது. தான் பார்த்த, அனுபவித்த, கேட்ட சம்பவங்களை இன்னும் மெருகுபடுத்திக் கொடுக்கிறார்கள்.".....
இந்த வரிகளின் தொடர்ச்சியாக..."அபபடி கொடுக்கப் படுவதில் அந்த எழுத்தாளர்களின் தனிப்பட்ட பாணி என்ற ஒன்று பொதுவாக இருக்கலாம்" என்று சொல்லலாமா...

சிவகுமாரன் said...

\\ஆனா அவர் எழுதறது போல அவரே வாழாத போது எந்த அளவுக்கு அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கறதுங்கறதே எனக்குள்ளே கேள்விக் குறியாச்சு//

எழுத்தாளார்களை யோசிக்க வைக்கும் வரிகள். சில சமயங்களில் சில கவிதைகளை எழுதிவிட்டு இதை சொல்ல எனக்கு தகுதி இருக்கிறதா என யோசித்து கிழித்துப் போட்டதுண்டு.

விட்டதை எல்லாம் படித்துக் கொண்டிருக்கிறேன். அருட்கவிக்கு அன்புடன் அழைக்கிறேன்

பாச மலர் / Paasa Malar said...

தன்னைச் சுற்றி நிகழும் சம்பவங்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் எழுத்தாள குணத்தைப் பாட்டி கதை நன்றாக எடுத்துக் காட்டுகிறது...

எழுத்தாளனுடைய சொந்த குணாதிசயத் தாக்கம் கதைகளில் வெளிப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றுதான் என்றாலும் கூட...வார்த்தையில் ஒன்றும் வாழ்க்கையில் ஒன்றுமாய்ப்பலர் வாழத்தான் செய்கிறார்கள்..

இக்கதையையில் மீண்டும் மீண்டும் படிக்ககூடிய பகுதிகளுள் இதுவும் ஒன்று...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சாதாரண விளிம்பு நிலை வியாபாரிகளிடம் பேரம் பேசறதை எப்ப நாம நிறுத்தப் போறோமோ?

ஜீவி said...

@ Geetha Sambasivam

அந்த புகழ்பெற்ற எழுத்தாளர் இயல்பாகவே இரக்க குணம் படைத்தவர். உண்மையான எழுத்தாளர்களின் சாஸ்வத சொத்து எளியோரிடம் இரக்கம் கொள்வது. அவரும் எளியவராய் இருப்பதால் தான் இது சாத்தியப்படுகிறது என்பது இன்னொரு விஷயம். தனது டப்பா வாலா கதையிலேயே அந்த இரக்கத்தை வெளிப்படுத்திக் கொண்டவர் அவர். சமயம் வாய்க்கும் பொழுது அந்த டப்பா வாலா கதையைச் சொல்கிறேன்.

அப்படியான அந்த இரக்க குணம் அவருக்கு இல்லாத பட்சத்தில் அதிகப்படியான அந்த மூன்று பழம் அவரை அந்த பாடு படுத்தியிருக்காது.
அந்த மூன்று பழத்தை தனது எழுத்துத் திறமையால் ஐநூறு ரூபாவாக மாற்றி அது அந்த பழக்காரப் பாட்டிக்கே போய்ச் சேர வேண்டுமென்று தீர்மானித்து திருப்பித் தருகிறார் அவர்.

கருத்துப் பகிர்வுக்கு நன்றி, கீதாம்மா.

ஜீவி said...

@ G.M. Balasubramanian

ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே அநுகூலமும், பிரதி அநுகூலமும்.
நாணயம் இருப்பின் இரண்டும் தான் இருக்கும்.

சில கருத்துக்களுக்கென்று விசேஷமான உண்மை ஒளி ஒன்று உண்டு. யாரும் அவற்றை முன் வைப்பதில்லை. அது யாரையாவது உபயோகப்படுத்திக் கொண்டு வெளிப்படுகிறது. அவ்வளவு தான்.

ஆழ்ந்த வெளிப்பாட்டிற்கு நன்றி, ஜிஎம்பீ சார்!

ஜீவி said...

@ ஸ்ரீராம்

எழுத்து என்றில்லை, யாரும் ஒரு தேர்ந்த மன நல நிபுணரிடம் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தால் போதும்
நாம் யார் என்று அவர் சொல்லி விடுவார்.

மனம் எப்பொழுதும் பெறும் அனுபவங்களால் எழுதியும், அழித்தும், மீண்டும் எழுதியும் கொள்வது. அவரவர் சிந்தனையில், பேச்சில், எழுத்தில் ஏன் கனவிலும் கூட தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் பேராவலும் அதற்கு உண்டு.

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி, ஸ்ரீராம்!

ஜீவி said...

@ சிவகுமாரன்

இந்த யோசிப்பு கூட எல்லோரிடமும் ஏற்பட்டு விடுவதில்லை. எப்படியோ சிலர் நமக்குப் பிடித்துப் போகிறார்கள். அப்படி அவர் நமக்குப் பிடித்துப் போவதற்காக என்னன்ன காரணங்கள் உண்டோ, அவற்றை அப்படியாக நமக்குப் பிடித்துப் போவோரே அவரளவில் இழக்கும் பொழுது, அவரால் தெரியப்படுத்தப்பட்ட அந்த காரணங்கள் முக்கியமாகி அவரிடம் கொண்டுள்ள பிடிப்பு அறுபட்டுப் போகிறது. அவர் முக்கியமில்லை, அவரால் தெரியப்படுத்தப்பட்டவையே முக்கியம் என்கிற அறிவார்ந்த சமாச்சாரம் இது.

அதற்கு மேல் அவரால் தெரியப்படுத்தப் பட்டவைகளுக்கு அவரை விட நம் மனத்தளவில் நாம் நெருக்கமாகி விடுவோம். அவ்வளவு தான்.

தங்கள் மனமார்ந்த உணர்வுகளுக்கு நன்றி.

ஜீவி said...

@ பாசமலர்

சண்டை போட்டு அதிகமாகப் பெற்ற அந்த மூன்று பழத்தை அநியாயமாக நினைக்கிறார் அந்த எழுத்தாளர். எப்படியாவது தனது அந்த அடாவடிச் செயலுக்கு தண்டனை கொடுத்துக் கொள்ள நினைக்கிறார். அந்த தண்டனை நிறைவேறும் வரை அவருக்கு நிம்மதியில்லை. அந்த மூன்று பழ மனச்சுமையை ரூபாயாக மாற்றுகிறார். தன்னால் முடிந்த அந்த மாற்றத்தைச் செய்து பழப்பாட்டிக்கு தக்க சமயத்தில் உதவி மனத்திற்கு நிம்மதி தேடிக்கொள்கிறார். அந்த நல்ல உணர்வு இல்லையென்றால், அந்தக் கதையில்லை, அந்த ரூபாயும் இல்லை.

உண்மையான எழுத்தாளர்களின் சிறப்பியல்பே இது தான். பார்க்கும் ஒவ்வொன்றும் அவர் உணர்வில் தீப்பற்றும். மற்றவர்களுக்கு சாதாரணமாகப் படுவது அவருக்கு மட்டும், 'என்னை கதையாக்க மாட்டாயா?' என்று காத்திருப்பதாகத் தோன்றும். அவர் அனுபவம்+அறிவு+கற்பனை கலந்து உருவாகும் ரசவாதம் இது.

பார்ப்பவையை வைத்து கதை பண்ணுவது வேறு; அவையே கதையாக மலர்வது வேறு. நல்ல உணர்வுள்ள எழுதுவோர் உள்ளத்தில் இந்த மலர்ச்சி இயல்பாகவே பூக்கும்.

பண்ணப்படும் கதையெல்லாம் அப்படி பண்ணுவோரைக் காட்டிக் கொடுத்து விடும்.

தங்கள் ஆழ்ந்த உணர்விற்கும் ரசனைக்கும் மிக்க நன்றி, பாசமலர்!

ஜீவி said...

@ 'ஆரண்ய நிவாஸ்' ஆர்.ஆர்.

ஒவ்வொருவர் பார்வையும் ஒருமாதிரி.
இதற்கெல்லாம் காரணம் இன்னொன்று இருப்பதை இன்னொருவர் சொல்வார்.

தங்கள் பகிர்தலுக்கு நன்றி, ஆர்.ஆர்.

கோமதி அரசு said...

பூஜை மாடத்திலிருந்த அந்த மூன்று பழங்களை எடுத்து, "இந்தா. குழந்தைங்களுக்குக் கொண்டு போய் கொடு.." என்று அவளிடம் தந்தார். அப்புறம் தான் இத்தனை நேரம் அவர் பட்டுக்கொண்டிருந்த அவஸ்தைகளிலிருந்து வெளிவந்த மாதிரி அவர் முகபாவம் தெரிந்தது. அப்புறம் தான் ரொம்ப உற்சாகமாக அவர் பேசுகிற மாதிரி எனக்குப் பட்டது. //

மனதை நெருடும் விஷ்யத்திற்கு தீர்வு கொடைத்து விட்டால் மனதுக்கு உற்சாகம் தான்.

பாட்டியிடம் அதிகமாய் வாங்கிய பழத்தை பாட்டியிடம் கொடுத்தும் பாட்டி வாங்காத காரணத்தால் வருந்திய உள்ளத்தை வீட்டில் வேலை செய்பவருக்கு பழத்தை கொடுத்து உள்ளத்திற்கு சமாதானம் தேடிக் கொடுத்து விட்டார்.

மீண்டும் பழகதையில் கிடைத்த சன்மானத்தை பாட்டிக்கே கொடுத்து பிராயசித்தம் தேடிக்கொண்டதும் அவரின் நல் மனதை காட்டுகிறது.

அந்த நேரத்தில் அவர் எப்படி இருந்தாரோ அதனால் அதிக படியான பழத்தை கேட்டு விட்டார்.

கதை மிக அருமை.

ஜீவி said...

@ கோமதி அரசு

அழகாக அந்த 'அந்த மூன்று பழம்' கதை பற்றிய உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி விட்டீர்கள்.

//அந்த நேரத்தில் அவர் எப்படி இருந்தாரோ அதனால் அதிக படியான பழத்தை கேட்டு விட்டார்.//

இது தான் உண்மை. பிறருக்கு நம்மிடம், ஏன் நமக்கு நாமே கூட இந்த சமயத்தில் இப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்புகள் நிறைய இருக்கின்றன. ஆனால், ஒரு நிகழ்வு நிகழும் பொழுது நாம் எப்படி இருக்கிறோமோ அதற்கு முக்கியத்துவம் கொடுக்க பல சமயங்களில் தவறி விடுகிறோம்.

'அந்த நேரத்தில் அவர் எப்படி இருந்தாரோ'-- என்று அந்த நேரத்தில் அவர் இருந்த நிலை என்று ஒன்று உண்டு என்று அதற்கு மதிப்பளித்து சொல்லியிருக்கிறீர்கள் அல்லவா, இது தான் நிஜம்.

அந்த நிஜத்தைச் சொன்னமைக்கு நன்றி, கோமதிம்மா.

Shakthiprabha (Prabha Sridhar) said...

அத்தியாயம் நெகிழ்ச்சி...

//இப்படியாக என் மனசிலேயும் அவர் வேறு, அவர் எழுத்து வேறுன்னு அவரே ரெண்டா பிரிஞ்சிண்டார்.

//

இந்த வரிகள் ரொம்பவும் மனதை தொட்டது.

ஜீவி said...

@ Sakthiprabha

//இந்த வரிகள் ரொம்பவும் மனதைத் தொட்டது..//

உணர்வு பூர்வமாக கதைகளை எழுதுவதும், படிப்பதும் அருகி விட்டது என்று இந்தக் கதைக்கான பின்னூட்டத்தில் கூட சிலர் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். தங்கள் பின்னூட்டத்திலிருந்து அப்படியான கணிப்பு தவறு என்று தெரிகிறது.

தாங்கள் இந்தக் கதையைப் படித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தக் கதையின் சுந்தர வதனம் கூட சேலத்துக்காரர் தான்!

Related Posts with Thumbnails