மின் நூல்

Sunday, March 18, 2012

பார்வை (பகுதி-35)

ரு நிமிட தாமத்திற்குப் பிறகு சடாரென்று கிளைத்த நினைவுச் சரடைப் பற்றிக் கொண்டு, "எனக்கென்னவோ வேறொன்று தோன்றுகிறது" என்றாள் ஊர்மிளா.

"என்ன?" என்றார் சுந்தரவதனன்.

"நாம் வழக்கமாக எல்லோரிடமும் வாங்குகிற ஒப்புதல் தான்.  இந்தப் பதிப்பகத்தின் மூலமாக தன்னுடைய படைப்புகள் பிரசுரமாவதற்கு ரிஷி சம்மதிக்க வேண்டுமே?.. பெரியவரிடம் இந்த விஷயத்தைக் கொண்டு போவதற்கு முன்னால், ரிஷி இதுபற்றி என்ன நினைக்கிறார் என்று தெரியவேண்டுமல்லவா?" என்றாள்.

"ஏன், என்ன சொல்லுவான்னு நெனைக்கறே?"

"ஒருகால் அவர் விரும்பலைன்னு வைச்சிக்கோங்கோ...அப்புறம்.."

"அப்படிக் கூட இருக்குங்கறே?..  தன் படைப்புகள் புஸ்தகமா வெளிவந்து பலபேருக்கு அறிமுகமாகறதை எந்த எழுத்தாளனாவது விரும்பாமக் கூட இருப்பான்னு நெனைக்கறே?"

"எல்லாரையும் சொல்லலே.  சொல்லப்போனா, இப்போலாம் எழுதற அத்தனை பேருடைய எண்ணமும், எழுதற எதையும் எப்படியாவது புத்தகமாக்கிடணும்னு தான் இருக்கு."

"பின்னே?.. ரிஷி மட்டும் என்ன சொல்லிடப்போறான்."

"ஒருகால் எல்லார் மாதிரியும் நினைக்காம அவர் வேறு மாதிரி நினைக்கலாம் இல்லையா?"

"என்னன்னு?"

"புத்தகமாகணும்ன்னு நெனைக்கலாம். ஆனா இந்தப் பிரசுரம் மூலமா இல்லாமன்னு.."

"ஐ காண்ட் ஃபாலோ யூ." என்றார் சுந்தரவதனன் குழப்பமான முகத்துடன்.

"இப்போ என் வீட்டுக்காரர் நெனைக்கலையா?.. அதுமாதிரி.."

"கொஞ்சம் தெளிவாச் சொல்றையா?"

"சொல்றேன்.  இந்தப் பதிப்பகத்தின் மூலமா அபராஜிதன் புத்தகம் எதையும் பிரசுரிச்சது இல்லை.  இல்லையா?.. நான் இந்த இடத்தில் வேலை செய்றதாலே இந்த இடத்திலேந்து தன்னோட புத்தகம் எதுவும் பிரசுரமுமாக வேண்டாம் என்றிருக்கிறார் அவர்.  நான் இந்த இடத்தில் வேலை செய்யலைனா, பத்தோடு பதினொண்ணா இந்தப் பிரசுரமும் அவருக்கு இருந்திருக்கும்.  அப்படி இல்லாததினாலே, எனக்கு முழுச் சுதந்திரம் இங்கே இருக்கணும்ங்கறத்துக்காக நான் சம்பந்தப்பட்டு இருக்கும் ஒரு நிறுவனத்தில் தன்னையும் எந்த விதத்திலும் சம்பந்தப்படுத்திக் கொள்ளாம விலகியிருக்கார் அவர்.  அவ்வளவு தான்" என்றாள்.

"புரியறது.  ஆனா, அபராஜிதன் புஸ்தகங்களும் இந்தப் பிரசுரத்தின் விற்பனைக் கூடங்களில் இருக்கு, இல்லையா?"

"அது வேறே.  அந்த புத்தகங்களெல்லாம் வேறே வேறே பதிப்பகங்கள் பதிப்பிச்சவை.  அந்த பதிப்பகங்களுக்கும், இந்த பிரசுரத்திற்கும் இருக்கற தொடர்பு அது.  இந்தப் பிரசுரம் அந்தப் பதிப்பகம் பதிப்பிச்ச புத்தகங்களுக்கு ஒரு விற்பனைக் கூடமா இருந்து விற்றுக் கொடுக்கறது. அவ்வளவு தான்.
அபராஜிதனுக்கும் அந்த பதிப்பகங்களுக்கும் தான் ஒப்பந்தம்.  அதே மாதிரி அந்தப் பதிப்பகங்களுக்கும் இந்தப் பிரசுரத்திற்கும் தான் புத்தக விற்பனை குறித்து கணக்கு வழக்கு.  இந்த பிரசுரத்திற்கும் அபராஜிதனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை அல்லவா?"

"கரெக்ட்..."

"அதே மாதிரி ரிஷியும் நெனைச்சார்ன்னா என்ன செய்யறதுங்கறதுங்கறது தான் இப்போ என் யோசனை.."

"சொல்லு..."

"ரிஷியும் தன் மாமா வேலை செய்யற பதிப்பகம் மூலமா தன் படைப்புகளைப் பதிப்பிக்க வேண்டாம்ன்னு நெனைக்கலாம் இல்லையா?"

"அப்படி நெனைப்பான்னு நெனைக்கறே?"

"ஏன்னா, மாமா எப்படியோ அப்படியே மருமானும் இருக்கக் கூடாதா, என்ன? அப்படியே அவரும் நெனைச்சார்ன்னு வைச்சிக்கோங்கோ.."

"ஓ.. நீ அப்படி யோசிக்கறையா?.. எனக்கு இந்த பாயிண்ட் தோணவே இல்லை பாரு."

"தோணாததுக்குக் காரணம் இருக்கு.  உங்களோட நேர்மை ஒண்ணு தான் உங்களுக்குக் குறிக்கோள்.  ஒரு வட்டத்தைப் போட்டுண்டு அதிலே நீங்க மட்டுமே அடக்கம்.  நான் சரியா இருக்கேன்லே அது போதும் எனக்குங்கற நினைப்பு.  உங்களைத் தாண்டி மத்தவங்களும் உங்களை மாதிரியே இருக்கணும்ங்கற எதிர்பார்ப்பு உங்களுக்கு இல்லை.  அதான் காரணம்." என்று ஊர்மிளா சொன்ன போது சுந்தர வதனன் முகம் மலர்ந்தது.

"குழந்தை! எவ்வளவு கரெக்டா பிட்டுப் பிட்டுச் சொல்லிட்டே?.. நீ சொன்னது நூத்துக்கு நூறு சரி.  நீ சொன்ன மாதிரி, நான் கரெக்டா இருந்தாப் போதும்ங்கற நெனைப்பு தான் எப்பவும் எனக்கு இருந்திருக்கு.   மருமான்னு வரச்சே இந்த உறவுங்கற அக்ஞானம் வந்து என் கண்ணை மறச்சிடுத்து. அதையும் சொல்லணும்" என்றார்.

இந்த நேரத்திலும் ரிஷியை எனக்கும் தெரியும் என்று சுந்தரவதனனிடம் காட்டிக் கொள்ள ஊர்மிளா விரும்பவில்லை; லஷ்மணன் அவளுக்குப் போட்டிருக்கிற வாய்ப்பூட்டு தான் பிரதான காரணம். ரிஷியும் லஷ்மணனும் சேர்ந்து ஏதோ ப்ளான் போடுவதாக அவளுக்குத் தெரியுமே தவிர, அது என்ன பிளான் என்று சரிவரத் தெரியாது.  அது சரியாத் தெரியற வரைக்கும் இப்படித் தான் இருக்கணும் என்பதில் அவள் தெளிவாக இருந்தாள். அநேகமா அடுத்த சனிக்கிழமை வரை இதற்கு கெடு.  அதுவரை தான் பொறுத்துப் பார்ப்போமே என்பது அவள் எண்ணம்.

சுந்தர வதனின் கேபினிலிருந்து கிளம்பி தன் இடத்திற்குப் போகும் பொழுது குறுக்கிட்ட புத்தக விற்பனைப் பிரிவு சுலோச்சனா, "ஊர்மிளா! உன்னைத் தான் தேடி உன் காபினுக்கு வந்தேன். உன்னைக் காணோம்ன்னு தெரிஞ்சதும் பெரியவர் தான் டிஸ்கஷனுக்குக் கூப்பிட்டிருக்கிறாரோன்னு நெனைச்சேன்" என்றாள்.  சுலோச்சனாவின் முக பாவம் அவள் எதையோ அவசரமாக அவளுக்குச் சொல்ல விரும்புவதைப் போலிருந்தது.

"என்ன விஷயம், சுலோ?"

"ஒண்ணு உனக்குச் சொல்லணும்.." என்றவள், "வா, உன் கேபினுக்கேப் போகலாம்.." என்றாள்.

இருவரும் ஊர்மிளா கேபினை அடையும் பொழுது கேண்டினிலிருந்து வழக்கமா காப்பி கொண்டு வரும் பையன், இரண்டு மக்கில் இருவருக்கும் காப்பி வைத்து விட்டுப் போனான்.

அவன் போகும்வரைக் காத்திருந்து விட்டு சுலோச்சனா சொன்னாள்." எதுக்கு உன்னைத் தேடி வந்தேன்னா ஆச்சரியப்படுவே.." என்றாள்.

புன்முறுவலுடன், "ஏதோ சுவாரஸ்யமாத் தான் சொல்லுவே போலிருக்கு. சொல்லு.." என்றாள்.

"இந்த அரையாண்டு தமிழ்ப் புத்தக விற்பனை பத்தி விவரங்களை சின்னவர் கேட்டிருந்தார்.  நம்ம பதிப்பகம் மூலமா பதிப்பிச்ச புத்தகங்கள் ப்ளஸ் மத்த பதிப்பகங்கள் மூலமா பதிப்பிச்சு நாம் விற்பனைக்கு வைச்சிருக்கற புத்தகங்கள்ன்னு இந்த ரெண்டுக்கான விவரங்களும் தான்.."

"ஃபைன்.  சொல்லு."

"கம்ப்யூட்டர் சொன்ன கணக்குப்படி வெளிப் பதிப்பக மூலமா பதிப்பிச்சு நாம விற்கற புத்தகங்களில், உங்க ஹஸ்பண்ட் புத்தகங்களின் விற்பனை தான் டாப்!  எந்தளவுக்கு அதிகம்ன்னா அந்த வரிசைலே அதுக்கு அடுத்து வர்ற எழுத்தாளரை விட இருபதாயிரத்துக்கு மேலே அதிகம்.  இதிலே இன்னொரு கணக்கும் இருக்கு.  அதையும் சின்னவர் கிட்டே சொன்னேன்."

ஊர்மிளாவின் உள்ளம் குதி போட்டாலும் அதை வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல், "அது என்ன கணக்கு? அதையும் தான் சொல்லேன்" என்றாள்.

"நீ இப்படி அசுவாரஸ்யமா கேட்டா சொல்ல மாட்டேன்..." என்று பிகு பண்ணிக் கொண்டாள்.

கலகலவென்று காசு குலுங்கியது போலச் சிரித்தே விட்டாள் ஊர்மிளா.."பாத்தையா..  கேட்டதும் குதிக்கக் கூடாதுங்கறத்துக்காக நான் அடக்கமா இருந்தா, அதுக்காக இப்படி நீ கோவிச்சிக்கறதா?" என்றாள்.

"கோவிச்சிக்கலே, ஊர்மிளா! ஊரார் விஷயம் இல்லே; உன் விஷயம். உன் ஹஸ்பண்ட் ரிகார்ட் ப்ரேக் பண்ற மாதிரி ஒரு சாதனை பண்ணியிருக்கார். மெனக்கெட்டு ஒருத்தி அதைச் சொல்ல வர்றாளே, அதை சந்தோஷத்தோட கேப்போமேன்னு இல்லாம ஏதோ யாருக்கோ என்னவோங்கற மாதிரி..."

"அப்படியில்லே, சுலோ.. பெரியவங்க சொல்லியிருக்காங்க.. எப்படிப்பட்ட சந்தோஷத்தையும் கொஞ்சம் அடக்கத்தோட எதிர்கொள்ளணும்ன்னு.."

"அச்சு அசலா எழுத்தாளர் மனைவியாவே பேசறேம்மா.. பெரியவங்க சொன்னதெல்லாம், அவங்கள மாதிரி பெரியவங்களுக்குத் தான்.  நம்ம மாதிரி சிறிசுகளுக்கு இல்லே.. தெரிஞ்சிக்கோ.."

"அம்மாடி.. கேண்டின்லே ஸ்வீட் வாங்கித் தர்றேன். போதுமா?.. இப்போ அதையும் சொல்றையா?" என்று ஊர்மிளா இறங்கி வந்ததும் தான், சுலோச்சனாவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. "அப்படிவா, வழிக்கு!" என்றவள், "நான் சொன்ன அந்த இன்னொரு கணக்கைக் கேட்டு சின்னவரே மலைச்சுப் போயிட்டார்" என்றாள்.

"அடேடே! அப்படியா சமாச்சாரம்?..  ப்ளீஸ்.. அது என்னன்னு சொல்லமாட்டியாடீ?" என்று ஊர்மிளா பரபரப்புக் காட்டியதும்,  "ரொம்பத் தான் நடிக்காதே.. எனக்காகத் தான் இதெல்லாம்ன்னு தெரியறது.. இருந்தாலும் சொல்றேன். கேட்டுக்கோ.  தமிழ் புத்தகங்களில்லே நம்ம பதிப்பகத்திலே பதிப்பிச்சு வெளிவந்த எந்த புத்தகமும் உங்க ஹஸ்பெண்ட் புத்தக விற்பனைக்கு பக்கத்திலே கூட வர்லே! இங்க பதிப்பிச்சதிலே அதிகமா வித்ததுக்கும், உங்க வீட்டுக்காரர் நாவல் ஒண்ணின் விற்பனைக்கும் வித்தியாசம் பத்தாயிரத்துக்கு மேலே! ஜனங்க கிட்டே அபராஜிதன் ரீச் எப்படின்னு பாத்துக்கோ.." என்றாள்.

"எல்லாம் ஒரு சீசன் தான் சுலோ!  நாம தான் ஜாக்கிரதையா இருக்கணும்.  ரொம்ப வேகம்ன்னா, இடறினாலும் இடறிடும்.. அதுனாலே, எல்லாத்தையும் அடக்கத்தோட ஏத்துக்க வேண்டியது தான்.. என்ன சொல்றே?"

"நான் சொல்றது இருக்கட்டும்.  சின்னவர் என்ன சொன்னார் தெரியுமா?"

"சின்னவரா?.. அவர் என்ன சொன்னார்?"

"இந்த அனாலிசிஸ் எல்லாம் பாத்துட்டு, 'அடுத்தாப்லே, நம்ம பிரசுரம் மூலமா அபராஜிதன் புத்தகமெல்லாம் போடலாமே! என்ன நினைக்கிறீங்க'ன்னு என்னைக் கேட்டார்.  இந்த பிரசுர முதலாளியே கேக்கறார். நான் என்னத்தை சொல்றது, ஊர்மிளா! சொல்லு." என்றாள்.

அவள் கேட்டதைக் கேட்டு ஊர்மிளாவுக்கு மிகுந்த யோசனையாகப் போய்விட்டது.


(இன்னும் வரும்)













12 comments:

கோமதி அரசு said...

"தோணாததுக்குக் காரணம் இருக்கு. உங்களோட நேர்மை ஒண்ணு தான் உங்களுக்குக் குறிக்கோள். ஒரு வட்டத்தைப் போட்டுண்டு அதிலே நீங்க மட்டுமே அடக்கம். நான் சரியா இருக்கேன்லே அது போதும் எனக்குங்கற நினைப்பு. உங்களைத் தாண்டி மத்தவங்களும் உங்களை மாதிரியே இருக்கணும்ங்கற எதிர்பார்ப்பு உங்களுக்கு இல்லை. அதான் காரணம்." என்று ஊர்மிளா சொன்ன போது சுந்தர வதனன் முகம் மலர்ந்தது.

"குழந்தை! எவ்வளவு கரெக்டா பிட்டுப் பிட்டுச் சொல்லிட்டே?.. நீ சொன்னது நூத்துக்கு நூறு சரி. நீ சொன்ன மாதிரி, நான் கரெக்டா இருந்தாப் போதும்ங்கற நெனைப்பு தான் எப்பவும் எனக்கு இருந்திருக்கு. மருமான்னு வரச்சே இந்த உறவுங்கற அக்ஞானம் வந்து என் கண்ணை மறச்சிடுத்து. அதையும் சொல்லணும்" என்றார்.//

ஊர்மிளா சுந்தரவதனன் அவர்கள் குணத்தை சரியாக சொன்னதும், அவர் அதை ஏற்றுக் கொண்டு தான் கொஞ்சம் தடுமாறி போனதற்கு வருத்தம் தெரிவிப்பதும் அருமை.
இது இருவரின் உயர்ந்த குணங்களை
உணர்த்துக்கிறது.


"அப்படியில்லே, சுலோ.. பெரியவங்க சொல்லியிருக்காங்க.. எப்படிப்பட்ட சந்தோஷத்தையும் கொஞ்சம் அடக்கத்தோட எதிர்கொள்ளணும்ன்னு.."//

உண்மைதான்.

நம்ம பிரசுரம் மூலமா அபராஜிதன் புத்தகமெல்லாம் போடலாமே! என்ன நினைக்கிறீங்க'ன்னு என்னைக் கேட்டார். இந்த பிரசுர முதலாளியே கேக்கறார். நான் என்னத்தை சொல்றது, ஊர்மிளா! சொல்லு." என்றாள்.//

அப்போ லக்ஷ்மணன் ரிஷியின் புத்தகத்தை போடுவாரா?
எதிர்பார்ப்பு சரியா?

G.M Balasubramaniam said...

மிகவும் புத்தி கூர்மையுடன் ஒரு இக்கட்டை சமாளித்தாலும் அடுத்து ஒன்று வந்து நிற்கிறது. சவாலே சமாளி.

ஸ்ரீராம். said...

சுந்தரவதனன்-ரிஷி பற்றி ஊர்மிளாவின் பார்வை பிரமாதம்தான். அந்தப் பார்வை எனக்குக் கிட்டவில்லை! :)) அது சம்பந்தமாகவே முடிந்திருக்கும் வரிகளைப் படித்தபின் ஊர்மிளாவின் முடிவு என்னவாக இருக்கும் என்று யூகிக்க முடிந்தாலும் என் பார்வைக்கும் அபராஜிதன் பார்வைக்கும் (படைப்பவர் பார்வைக்கும்) வித்தியாசம் இருக்குமே....

பாச மலர் / Paasa Malar said...

உறவினர்கள் பத்திரிகைகளில் வேலை செய்வது கூட இக்கட்டைக் கொடுக்கிறது பாருங்கள்..

எழுத்தாளர் மனைவி ஊர்மிளாவைச் சுலோச்சனா சீண்டிய இடங்கள் நன்று...இயல்பாக வந்திருந்தது...

சுந்தரவதனனைப் பற்றிய ஊர்மிளாவின் குண அலசல்கள் நன்று...மனிதர்களில் இப்படியும் ஒரு வகை....நேர்மையான வெகுளி..

ஜீவி said...

@ கோமதி அரசு

எடுத்துக்காட்டுகளை எடுத்துச் சுட்டி ரசித்தமைக்கு நன்றி, கோமதிம்மா.

//அப்போ லக்ஷ்மணன் ரிஷியின் புத்தகத்தை போடுவாரா?
எதிர்பார்ப்பு சரியா?//

இதையெல்லாம் தான் இந்தத் தொடரில் அலசப் போகிறோம். தங்கள் ஆர்வத்திற்கு நன்றி.

ஜீவி said...

@ ஜிஎம்பீ

பெரும் போர்களில் கூட விட்டு வெளிவரும் சூட்சுமத்தைப் புரிந்து கொண்டு தான் வியூகத்தையே அமைப்பார்கள் என்று படித்திருக்கிறோம்.
(சக்ர வியூகத்திற்குள் மாட்டிக் கொண்ட அபிமன்யூ நினைவு வருகிறது)

கதைகளில் கூட அப்படித்தான், இல்லையா?.. அவிழ்ப்பது தெரிந்தே முடிச்சைப் போடுகிறார்கள். இரண்டும் எழுதுவரின் கற்பனையான ஏற்பாடு என்பதினால் இக்கட்டுகளுக்கான தீர்வுகள் சுலபமாக இருக்கின்றன. இக்கட்டுகளே படிப்போருக்கு சுவாரஸ்யம் ஏற்படுத்தத்தான். அப்படியான இக்கட்டுகளையும் அவற்றிற்கான தீர்வுகளையும் வாசகர்கள் ஏற்றுக் கொண்டு மகிழ்வதில் தான் எழுதுவோரின் திறமை இருக்கிறது.

தொடர்வதற்கு நன்றி, ஜிஎம்பீ சார்!

ஜீவி said...

@ ஸ்ரீராம்

சிக்கல் இங்கே தான் இருக்கிறது.

ரிஷியின் படைப்புகளை ஊர்மிளா வேலை பார்க்கும் பதிப்பகத்தின் மூலமாக பிரசுரிக்க லஷ்மணன் ஏன் விரும்பவில்லை என்பது தெரிந்தால்
ஓரளவு பிரச்னைக்கு தீர்வு கண்டு விடலாம்.

லஷ்மணன் கொண்டிருக்கும் காரணம்
ஊர்மிளாவுக்கும் முழுசாகத் தெரியாததினால் தான் அவளுக்கும் குழப்பமாக இருக்கிறது.

லஷ்மணன் தான் பிரச்னை என்றால்
ஊர்மிளாவால் லஷ்மணனை கன்வின்ஸ் பண்ண முடியுமென்றால்
தீர்வு கண்டு விடலாம்.

இல்லை, லஷ்மணன் பேச்சை ரிஷி கேட்காமல் தன் புகழுக்கும், எதிர்கால வளர்ச்சிக்கும் தடை போடுகிறான் என்று முடிவெடுத்தால், தீர்வு கிடைத்து விடும்.

சாதாரணமாக நாம் வார இதழ்களில் படித்த, படிக்கும் கதைகள் என்றால் இப்படிப்பட்ட தீர்வுகளைப் பரிந்துரைக்கலாம்.

அப்படியான ஒரு தொடராக இந்தத் தொடர் இல்லாமலிருப்பது தான் வித்தியாசமாக யோசிக்க வைக்கிறது.

உங்கள் யூகம் சரியாக இருப்பின் இந்தத் தொடர் எழுதுவதற்கான காரணமே அதுவாக இருக்கும்.

படிப்பவர் மனம் மகிழ்ந்து ஏற்றுக் கொள்வதே, படைப்பவரின் வேலையை சுலபமாக்குவதும்.

தொடர் வருகைக்கும் பகிர்தல்களுக்கும் மிக்க நன்றி, ஸ்ரீராம்!

ஜீவி said...

@ பாசமலர்

பத்திரிகை என்றில்லை, எல்லா இடங்களிலும் அப்படித்தான்.

அதுவும் நெருங்கியவர் அதிகாரியாய் இருந்து விட்டால் போதும். அந்த அதிகாரியின் மேல் காட்ட வேண்டிய கோபத்தை அவரின் நெருங்கியவரின் மேல் காட்டி, அந்த அதிகாரியின் மேல் காட்டியதாகவே திருப்தி அடைவர் சிலர்.

//நேர்மையான வெகுளி..//

வெகுளியா? இல்லை, காலத்திற்கு ஒவ்வாதவரா?

காலத்தைத் தீர்மானிக்க வேண்டிய மனிதனை, காலம் தீர்மானிப்பதால் தான் தனிமனித குணாம்சங்கள் சிதறுண்டு போகின்றன போலும்!

ரசித்து வாசித்தமைக்கு நன்றி, பாசமலர்!

இராஜராஜேஸ்வரி said...

நான் கரெக்டா இருந்தாப் போதும்ங்கற நெனைப்பு தான் எப்பவும் எனக்கு இருந்திருக்கு.

பல ச்மயங்களில் அதுவே பிரச்சினை தருவதாக அமைந்துவிடுவதுண்டு...

Geetha Sambasivam said...

பார்க்கலாம், லக்ஷ்மணன் ஏன் ரிஷியின் புத்தகங்களைப் போடவேண்டாம்னு சொல்றார் என்பதற்கான காரணங்களைத் தெரிஞ்சுக்கலாம். காத்திருக்கேன்.

மற்றபடி இந்த அத்தியாயம் பல்வேறுவிதமான குணாதிசயங்களை நன்கு அலசி உள்ளது.

ஜீவி said...

@ இராஜராஜேஸ்வரி

எதுவும் தீர்மானமாகச் சொல்வதற்கில் லை. அப்படி இல்லாமலிருப்பதும், பிரச் னை தருவதாக அமைந்து விடுவதுண்டு, இல்லையா?

தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றிங்க.

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

தொடர்ந்து படித்து ரசித்து வருவதற்கு மிக்க நன்றி.

Related Posts with Thumbnails