மின் நூல்

Tuesday, March 27, 2012

பார்வை (பகுதி-37)

லைசாய்த்து 'இந்த மெஜாட்டியோ கதை', 'பார்வை'கதை போல இருக்குமா, ரிஷி?" என்றாள் ஊர்மிளா.

"படிச்சிட்டு இருக்கறதா இல்லையாங்கறதை நீங்க தான் சொல்லணும், ஊர்மிளா!  ஆனா, பத்திரிகைலே கால் ஊனிக்கணும்ங்கற நிதர்சன உண்மையை உணர்ந்து எழுதின கதையா இருக்கும்ங்கறதை மட்டும் இப்போதைக்கு என்னாலே சொல்ல முடியும்" என்றான் ரிஷி.

"அப்போ கால் ஊனிக்கறத்துக்காக எழுதறது ஒண்ணு, அப்பாலே எழுதறது ஒண்ணுன்னு கூட இருக்குமா?"

"எஸ். அபராஜிதனும் நானும் போட்டிருக்கிற ப்ராஜக்ட் பெரிசு.  ரொம்ப தீர்க்கமான ஒண்ணு.  ஆனா இப்படி கால் ஊனிக்கறத்துக்காகவே எழுதற மாதிரி தொடர்ந்து எழுதக் கூடாதுங்கறதிலே தீர்மானமா இருக்கேன்" என்றான் ரிஷி.

"என்னங்க.. நீங்க பேசற பாஷையே எனக்குப் புரியலை. எனக்கென்னனா, எப்படியோ நீங்க பிரபலமானா சரின்னு தோண்றது" என்று வித்யா சொன்னதைக் கேட்டு குலுங்கிக் குலுங்கி சிரித்தான் லஷ்மணன்.

"இப்போ சொல்றதாவது புரியறதா பார்" என்றான் ரிஷி. "ஒரு கவிதை புத்தகம் வெளியீட்டு விழாலே தான் அபராஜிதனை முதன் முதலா சந்திச்ச பாக்கியம் எனக்குக் கிடைச்சது.     அதுக்கு முன்னாடி அவரோட ஒண்ணு ரெண்டு கதையைப் படிச்சிருக்கேன். அவ்வளவு தான், அவரைப் பத்தி எனக்குத் தெரியும்.  ஆனா, என்னோட பிரசுரமான ஒரே கதையைப் படிச்சிட்டு ரொம்ப பிரபலமான அவர் என்னைப் பாராட்டினது எனக்கு ரொம்பக் கூச்சத்தைத் தந்தது. நேருக்கு நேரே சொல்லக் கூடாது தான். இருந்தாலும் சொல்றேன்.  அவருடைய பரந்த மனப்பான்மை, எழுதற இன்னொருவனையும்-- அவன் எழுதறதைப் பாராட்டி அணைச்சிண்டு போர்ற தன்மை இதெல்லாம் பாத்து அந்த முதல் சந்திப்பிலேயே என் மனசிலே அவர் ரொம்ப உசரத்துக்குப் உயர்ந்திட்டார்.  இந்த பண்பெல்லாம் பத்திரிகை உலகிலே பாக்கறது அதிசயம் இல்லையா, அதனாலே கூட இருக்கலாம்.  அப்புறம் ரொம்ப நேரம் என்னை என்னவெல்லாமோ கேட்டார்.  நிறைய பொதுவான விஷயங்களைப் பேசினோம்.  கடைசிலே என்ன சொன்னார் தெரியுமா?..  'ரிஷி! நான் எழுத ஆரம்பிச்சப்போ எப்படி இருந்தேனோ, அந்த அபராஜிதனை உங்க கிட்டே இப்போப் பாக்கறேன்.  இந்த பத்திரிகை உலகிலே பழகிப் பழகி நாளாவட்டத்திலே அந்த அபராஜிதன் எங்கிட்டே கொஞ்சம் மங்கிப் போனாலும்,  நீரு பூத்த நெருப்பா எந்நேரமும் மனசிலே இருப்பதை உணர்ந்திருக்கேன்..  அந்த அபராஜிதனை நீங்க இப்போ ஊதி விட்டுட்டீங்க.. இனி அந்த அபராஜிதன் எழுந்து உங்களோட சேந்துப்பான்.  ஆனா நீங்க வளரணும்; வளர்றத்துக்காக இதெல்லாம் செஞ்சு தொலைக்கணும்ங்கறது என் அனுபவம். முன்னேரா நான் முன்னாடிப் போறேன்; என் பின்னாடியே வாங்க'ன்னார். அவர் சொன்னதையெல்லாம் நெஞ்சிலே அப்படியே பதிச்சிண்டிருக்கேன்.  காலம் தான் பதில் சொல்லணும்.." என்று ரிஷி சொல்லி முடித்த பொழுது, தனக்கே தெரியாத ஒரு புது அபராஜிதனைத் தெரிந்து கொண்ட மாதிரி இருந்தது ஊர்மிளாவுக்கு.

"இத்தனை நாள் இவ்வளவு விஷயங்களை எங்கிட்டே கூடச் சொல்லாம மறைச்சு இருக்கீங்கள்லே?" என்றாள் வித்யா.

"நம்ம வீட்டுக்கு எத்தனை சிறு பத்திரிகைகள் வர்றது?.. அதையெல்லாம் நீ புரட்டியாவது பாத்திருந்தையானா, எனக்கும் சொல்லணும்னு தோணியிருக் கும்.  வாரப் பத்திரிகைகள்லேயே நீ மூழ்கி இருக்கறதினாலே இதெல்லாம் சொன்னா எந்தளவுக்கு உனக்குப் புரியும்ன்னு தெரிலே.  அதான் சொல்றதுக்கு தயங்கிண்டிருந்தேனே தவிரச் சொல்லக்கூடாதுன்னு இல்லே" என்றான் ரிஷி.

"என்ன செய்யறது, வித்யா?.. இதான் வழி. ஒண்ணை யோசிச்சுப் பாக்கணும் நீங்க..  சுத்தமா வெகுஜனப் பத்திரிகைகள் படிப்பதையே விட்டு ஒழிச்சு, சிறுபத்திரிகைகள் பக்கம் போனவரை, திருப்பியும் இதுக்கே வாங்கன்னு கூப்பிடறது தப்பு தான்.  இருந்தாலும் வேறே வழியே இல்லை. ஆனா இப்போ எழுதற மாதிரி இப்படியே எழுதித் தேங்கிட மாட்டேன்னு அவரே சொல்றார்.. வெகுஜன வாசகர்களிடம் அறிமுகமாகி அவர்களைக் கவர்ந்தாரானால் பின்னாடி தான் எழுதுவதெல்லாம் பிடிக்கற மாதிரி அதிகப்படியான வாசகர்களைத் தன்னோட கூட்டிகிட்டு வர்லாம்ங்கறத்துக்காகத் தான் இதெல்லாம்"என்றாள் ஊர்மிளா.

"கூட்டிகிட்டு வர்றதா?.. எங்கே கூட்டிகிட்டு வர்றது?.. எதுக்காகக் கூட்டிகிட்டு வர்றது?.. எனக்கு என்னன்னா, நீங்க பேசறதிலே பல வார்த்தைகள் புரியாம இருக்கு.  ஆனா ஏதோ நல்லதுக்குத் தான் இதெல்லாம் செய்யற மாதிரி இருக்கு. இதோ, இப்பவே ஒரு கதையை படத்தோட ஜோரா போட்டுட்டாங் களே.. இந்நேரம் எங்க ஸ்டோர்லே பாதிப்பேர் இதைப் படிச்சிருப்பாங்க...  நான் போனவுடனே இருக்கு, வேடிக்கை.."ன்னு வித்யா முகம் மலர்ந்தாள்.

"கொஞ்ச காலத்துக்கு ரிஷி இந்த 'மெஜாட்டியோ' கதை மாதிரி தான் எழுதிண்டு இருப்பார்.  வெகுஜன வாசகர்களின் மனசில் அவர் பெயர் பதியறத்துக்காகத் தான் இதெல்லாம்.  ஓரளவு பிரபலம் அடைஞ்சதும் எதை எழுதுவதற்காகப் பேனா பிடிச்சிருக்கோம்ன்னு இப்போ அவர் நினைக்கிறாரோ அதெல்லாம் அவர் எழுத்தில் படியும்.  விஜிக்குத் தேவையான இந்தக் காத்திருப்பு எனக்கு தேவை இல்லாததினாலே இனிமே நான் எழுதற கதைங்கள்லே வெளிப்படையா உங்களுக்குப் புரியற மாதிரி சில மாறுதல்கள் தெரியும். அதையெல்லாம் படிச்சுப் பாருங்க. உங்களுக்கே புரியும். உங்க ஸ்டோர்லே இருக்கற பத்திரிகை படிக்கிறவங்களையும் கூட்டாச் சேர்த்துங்கங்க.  நான் எழுதற விஷயங்களை உன்னிப்பா கவனிங்க.. அதிலே என்னன்ன மாறுதல் தெரியறதுன்னு சொல்லுங்க.." என்றான் லஷ்மணன்.

வித்யாவுக்கு அவன் சொன்னதைக் கேட்டுத் தலைகால் புரியவில்லை. "அம்மாடி!  எவ்வளவு பெரிய பொறுப்பு கொடுக்கறீங்க.. நீங்க எழுதறதெல்லாம் ரொம்ப பிடிக்கும்.  அதனாலே தவறாம படிச்சிடுவேன். அவ்வளவு தான் எனக்குத் தெரியும்" என்றாள்.

"அதான் வேணும்" என்றான் லஷ்மணன். "அப்படியே தொடர்ந்து படிச்சிண்டு வாங்க.  பொழுது போக்குக் கதைகள்ன்னு என்னைக்குமே நான் எழுதினதில்லே.  ஆனா கதைகள் ரூபத்திலே சொல்ல விரும்பறதைக் கேப்ஸ்யூல்களாகக் கொடுக்காம... ரொம்ப சொல்லக் கூடாது, சொன்னா சுவாரஸ்யம் போய்டும். இனிமே நான் எழுதப் போறதையும் அதே உற்சாகத்தில் என் வாசகர்கள் ரசித்து வரவேற்கிற மாதிரி எழுதப் போறேன். நான் எழுதறதெல்லாம் ரொம்பப் பிடிக்கும்'ன்னு சொன்னீங்கங்கல்லே.. இனி நான் எழுதறதிலே கொஞ்சம் வித்தியாசம் தெரியும்.  அந்த வித்தியாசத்தை உங்களாலே தெரிஞ்சிக்க முடியறதா பாருங்க..  அப்புறம் அப்படித் தெரிஞ்சிக்க முடிஞ்சா அதெல்லாத்தையும் நீங்களும் மனசாலே உணர முடியறதா பாருங்க. உணர முடிஞ்சா அதிலே இருக்கற தப்பு, ரைட்டைச் சொல்லுங்க.. சரியான உங்கள் விமரிசனம் நான் நேரே போகறேன்னான்னு தெரிஞ்சிக்க உதவும். அதுக்காகத் தான்.." என்றான் லஷ்மணன்.

வித்யாவுக்கு தன்னால் இதெல்லாம் முடியுமா என்றிருந்தது. அதையே வேறே மாதிரி சொன்னாள். "எங்க ஸ்டோர்லே உஷான்னு ஒருத்தி இருக்கா. பயங்கர இண்டலிஜெண்ட்.  அவள் கூட உங்களோட தீவிர வாசகி தான்.  நீங்க எழுதின எல்லாத்தையும் பத்தி 'இதுக்காகத் தான் இந்த வாரம் இப்படி எழுதறார்.  அடுத்த வாரம் இப்படி எழுதுவார் பார்'ன்னு நெறையச் சொல்லுவா. அவள் சொன்னது பலது பலிச்சிருக்கு.  நீங்கன்னு இல்லே, பத்திரிகைங்கல்ல வர்ற எல்லாத்தையும் படிச்சு அக்கு அக்கா பிரிச்சுப் போட்டு அலசுவா. நெறைய வாசகர் கடிதங்கள் எழுதுவா.  அதெல்லாம் பொதுவா எழுதற வாசகர் கடிதங்கள் மாதிரி இல்லாம, ரொம்ப டிஃபரண்டா இருக்கும்.. இனிமே நீங்க எழுதறதையெல்லாம் பத்தி அவ என்ன சொல்றான்னு பாக்கறேன்.  எதுக்குன்னா என்னாலே அவ்வளவு தீர்க்கமா புரிஞ்சிக்க முடிலேனாலும்..."

'நீங்கள் சொல்ல வர்றது, புரியறது.."என்றான் லஷ்மணன்.. "சொல்லப் போனால் இப்படிப்பட்ட வாசகர்களுக்காகத் தான் எழுத வேண்டும். இப்போ சொன்னீங்களே, உஷான்னு ஒருத்தரைப் பத்தி! இந்த வாசகர்கள் எல்லாம் எங்கிருந்தோ குதித்தவர்கள் இல்லை.  இந்த சமூகத்தின் பிரதிநிதிகள்.  அவர்களுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. அவர்களும் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டியிருக்கிறது. அவர்களின் மேம்பாட்டிற்காக என்றில்லாமல், வேறு எதற்காக இதெல்லாம்' என்று சமயங்களில் எனக்கேத் தோன்றும்."

"இத்தனை நாள் நீங்கள் எழுதின கதைகள்லாம் அப்படித்தானே?.. மர்மக் கதையிலும் ஒரு மெஸேஜ் வைச்சிருப்பீங்களே.." என்றாள் வித்யா.

"உண்மை தான். இதை ஒரு நல்ல எழுத்தாளனோட குணம்ன்னு சொல்லாட்டாலும் உணர்வுங்கலாம்.  குணம்ன்னு எடுத்துக்கிட்டா, ஒவ்வொருத்தர்கிட்டேயும் ஒவ்வொண்ணு பதுங்கியிருக்கு. சில சமயம் அவன் கிட்டேயிருந்து வெளிப்பட நினைச்சு, வெளிப்படாமலேயே இன்னொரு நேர வெளிப்படலுக்காக பதுங்கிக்கும் அது. ஆனா உணர்வுங்கறது அப்படியில்லே. இந்த உணர்வு தான் எழுத்தாளனை ஆட்டிப்படைக்கிறது. இந்த உணர்வு தான் எழுதறவனுக்கும், அவன் எழுத்தைப் படிக்கறவனுக்கும் சங்கிலிப் பிணைப்பா இருந்து செயல்படறது."

லஷ்மணன் பேசறதைப் புரிந்து கொள்ற அக்கறையுடன் வித்யா கேட்க, ரிஷியோ ஒரு பள்ளி மாணவன் ஆசிரியரிடம் பாடம் கேட்பதைப் போல் கைகட்டிய பாவனையில் அவன் சொல்வதை உன்னிப்பாகக் கேட்டான்.

"நான் எழுத ஆரம்பிச்சதும் தான் இந்தக் கதைகள் எழுதறதிலே இருக்கற சூட்சுமமே எனக்குப் புரிபட ஆரம்பிச்சது.  நம்ம விருப்பப்படியே நாம உலாவ விடற எல்லாப் பாத்திரங்களிலும் நாமே நுழைச்சிக்கலாம்ன்னு தெரிஞ்சது. அதாவது கதாநாயகனும் நானே, கதாநாயகியும் நானே, வில்லனும் நானே மத்த துணைப்பாத்திரங்களும் நானேங்கற நிலைமை.  எல்லாரும் நானேன்னு ஆகறதாலே இது மட்டுமே நான்னு வரையறுத்துச் சொல்ல முடியாது.  எல்லாரிடமும் நானிருப்பேன், எல்லாவற்றிலும் நானேருப்பேன் என்கிற நிலை இது. நான் என்று இங்கே சொல்வது என் உணர்வை.  சொல்லப் போனா பொம்மலாட்டம் மாதிரி.  வேணுங்கற இழுப்புக் கயிறை வேணுங்கற மாதிரி இழுக்கற நிலை.  அந்தந்த நேரத்துக்கு வசதி எப்படியோ அப்படி. உங்களுக்குப் புரியறதுன்னு நினைக்கிறேன்"

"புரியறது. ஆனா ஒரு சந்தேகம்.." என்றாள் வித்யா.

"சொல்லுங்க.." என்றான் புன்முறுவலுடன் லஷ்மணன்.

"சகலமும் நீங்களேன்னு சொன்னீங்க.. அப்படி எல்லா பாத்திரங்களும் நீங்களேன்னா, எல்லா பாத்திரங்களும் உங்கள் உணர்வையே பெற்றிருக்கிறவர்களா இருக்க மாட்டாங்களா?.. கதாநாயகனும், வில்லனும் ஒருவரின் உணர்வையே எப்படிப் பெற்றிருக்க முடியும்?"

"வெரிகுட்.." என்று கைதட்டினாள் ஊர்மிளா. "எனக்கு கதைங்களை படிக்கறதைத் தவிர வேறே ஒண்ணும் தெரியாதுன்னு சொன்னீங்க?.. சரியான பாயிண்ட்டைப் பிடிச்சு இப்படிப் போடு போடென்று போடுறீங்களே?"

"ரொம்ப சரி.."என்றான் லஷ்மணன். "பொழுது போக்குக் கதைங்கன்னா, நீங்க சொல்ற மாதிரி சாத்வீகமான கதாநாயகன், கொடூரமான வில்லன்னு இப்படில்லாம் பாத்திரப் படைப்பு இருக்கும், இல்லையா?.. நான் எழுதற கதைலாம் அப்படியான சினிமாத்தனங்கள் இல்லாத கதைகளா இருக்கறதாலே, அந்த சிக்கல் எனக்கில்லை.  நடக்கற ஒரு விஷயம் அல்லது பல விஷயங்களைப் பற்றிய பார்வை தான் நான் எழுதற கதைங்களா இருக்கறதாலே, ஒரு பார்வைக்கு நேர் எதிரான இன்னொரு பார்வையை கதாநாயகனாகவும் வில்லனாகவும் கொள்கிறேன். மாறி மாறியும் அவற்றோடு ஒன்றியும் விடுபட்டும் டிபேட் நடக்கும் பொழுது எது சரியான பார்வைங்கற தெளிவு படிக்கற வாசகர்களுக்குக் கிடைக்கும்.    பல கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் இப்படியான விவாதங்கள் தான் என்னில் ஒரு கதை ரூபமெடுக்கிறது.  என் கதைகளைப் படிச்சு பழக்கப்பட்ட உங்களுக்கு இது நன்றாகவேத் தெரியும், இல்லையா?"

"இப்போப் புரியறது.." என்று புன்னகைத்தாள் வித்யா. "உங்களோட கதைகள் எத்தனைப் படிச்சிருப்பேன்?.. பிரச்னை இதுன்னா ஆன்ஸர் இதுன்னு எவ்வளவு சரியாச் சொல்லிட்டார்ன்னு இத்தனை நாளும் நெனைச்சிண்டிருந்தேன்.  ஒரு கணக்குக்கு விடை கொடுக்கற மாதிரி, கதைகள் எழுதறதிலேயும் இப்படில்லாம் இருக்குன்னு இப்போத்தான் தெரிஞ்சது, அபராஜிதன் சார்!"

அப்படி வித்யா சொல்லிக் கொண்டிருக்கையில் டெலிபோன் மணி கிணுகிணுத்தது.  ஊர்மிளா போய் காலர் ஐடியைப் பார்த்து விட்டு, "உத்தம புத்திரன்.." என்றாள்.


(இன்னும் வரும்)











19 comments:

Geetha Sambasivam said...

சராசரி வாசகியான வித்யாவின் கோணத்திலிருந்து அலசல் அருமை. அதே சமயம் ரிஷியின் கதை அல்லவோ பிரசுரம் ஆகி உள்ளது. ஆனால் லக்ஷ்மணன் தன் எழுத்தைப் பற்றி அல்லவோ விவாதிக்கிறார்?? நான் சரியாய்ப் படிக்கலையோ?

ரிஷியின் கதை குறித்தான விமரிசனமாய்த் தெரியலை! ஆனால் வித்யாவோ கணவனின் கதை பிரசுரம் ஆனதும் தான் குடியிருக்கும் குடியிருப்பில் அனைவரும் படித்திருப்பார்கள் என்பதும் மட்டும் சொல்லி இருக்கீங்க.

Geetha Sambasivam said...

ரிஷி+அபராஜிதன் கூட்டு முயற்சியோ???

ஸ்ரீராம். said...

எனக்குத் தோன்றிய அதே சந்தேகத்தை வித்யாவுக்கும் வந்து சந்தேகத்தை தீர்த்து வைத்து விட்டார். என்னதான் மனதில் நிறுத்தியும், லக்ஷ்மணன்-ஊர்மிளா பெயர்ப் பொருத்தம் வைத்து ஊகித்தாலும் இந்த விஷயத்தில் சில குழப்பங்கள் (எனக்கு) வருகின்றன!

இராஜராஜேஸ்வரி said...

நடக்கற ஒரு விஷயம் அல்லது பல விஷயங்களைப் பற்றிய பார்வை தான் நான் எழுதற கதைங்களா இருக்கறதாலே, ஒரு பார்வைக்கு நேர் எதிரான இன்னொரு பார்வையை கதாநாயகனாகவும் வில்லனாகவும் கொள்கிறேன். மாறி மாறியும் அவற்றோடு ஒன்றியும் விடுபட்டும் டிபேட் நடக்கும் பொழுது எது சரியான பார்வைங்கற தெளிவு படிக்கற வாசகர்களுக்குக் கிடைக்கும். /

சிறப்பான பார்வை.. பாராட்டுக்கள்..

ஜீவி said...

@ Geetha Sambasivam

வருகைக்கும் கேள்விகளுக்கும் நன்றி. தங்கள் பின்னூட்டத்திற்கு அப்புறம் கதையில் சில வரிகளைச் சேர்த்து இன்னும் புரிகிற மாதிரி செய்திருக்கிறேன்.

ரிஷியின் கதைக்கான விமரிசனம் இல்லை. இது மாதிரி இன்னும் பல வாரப்பத்திரிகை கதைகளை ரிஷி எழுதப் போகிறார். எல்லாம் அவரது பிரபலத்திற்காக.

ஆனால், லஷ்மணன் விஷயம் அப்படியல்ல. அவர் ஏற்கனவே பிரபலமானவர். அதனால் வேறு மாதிரியான ஒரு கதைப்போக்குக்கு அவர் தன் ப்ரிய வாசகர்களைக் கூட்டிக் கொண்டு வருவதில் சிரமமிருக்காது.

ஏதோ ஒரு புள்ளியில் லஷ்மணனுடன் சேர்ந்து கொள்வார் ரிஷி என்பது இப்போதைய எதிர்பார்ப்பு.. பிரபலமடைந்த சூழலில் அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை இப்போதே கணிக்க முடியாதாகையால், லஷ்மணன் என்ன செய்ய இப்போது தீர்மானித்திருக்கிறார் என்று நமக்குத் தெரிந்த வகையில் கதையைக் கொண்டு போவோம். சரியா?..

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//இந்த விஷயத்தில் சில குழப்பங்கள்
(எனக்கு) வருகின்றன.//

இப்பொழுது இன்னொரு முறை இந்தப் பகுதியைப் படித்துப் பாருங்கள். கீதாம்மா பின்னூட்டத்திற்கான என் பதிலையும் சேர்த்து.

வேறு ஏதாவது விஷயத்திற்கான குழப்பங்களாக இருப்பின், தெரிவிக்க வேண்டுகிறேன்.

ஜீவி said...

@ இராஜராஜேஸ்வரி

தங்கள் பின்னூட்டம் ஊட்ட டானிக்.
மிக்க நன்றி.

மேலும் தொடர இந்தக் கட்ட புரிதல்
செளகரியமாக இருக்கும்.

தொடர்ந்து வர வேண்டுகிறேன்.

Geetha Sambasivam said...

நீங்கள் சேர்த்திருக்கும் வரிகளைக் கண்டு பிடித்துவிட்டாலும் ஸ்ரீராமிற்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகம் எனக்கும்!!!!!!!!!!!!! காத்திருக்கேன்.

ஜீவி said...

@ Geetha Sambasivam

நானும் ஸ்ரீராமின் சந்தேகம் என்னவென்று தெரிவதற்காகக் காத்திருக்கிறேன். :)) நீங்கள் சொன்னாலும் சரியே!

பாச மலர் / Paasa Malar said...

மீண்டும் நிறைய நிறைய டிப்ஸ் கிடைத்தது...

எழுத்தாளரின் எழுத்துப்போக்கை உஷா போல் கணிக்க முற்பட்டு வெற்றி தோல்வி காண்பது என்பது கதைகள் படிப்பதன் இன்னுமொரு சுவாரசியமான பகுதி....

எங்கோ ஓர் இடத்தில் லக்ஷ்மணனும் ரிஷியும் இணையப்போகிறார்கள் / ஒரே மாதிரியானவர்களாய் இருக்கப் போகிறார்கள் என்ற எண்ணத்தை உறுதிப்படுத்தியது உங்கள் பின்னூட்டம்..

கதாநாயகன். வில்லன் இன்னும் அத்தனை பாத்திரப்படைப்புகளின் மனநிலையை ஓர் ஆசிரியர் அனுமானித்து எழுதுவது என்பதுவும் அவரின் சிரத்தையைக் காட்டுகிறது....

எந்த அளவு மெஸேஜ் எப்படிக் கொடுக்கவேண்டும் வாசகர்களுக்கு...

அப்பப்பா..எழுதுவதைப் பற்றிய ஆய்வுகள் / குறிப்புகள் வரிக்கு வரி..

வழக்கம்போலவே, நிறையத் தெரிந்து கொண்டேன்..

Geetha Sambasivam said...

வித்யாவுக்கு வந்த அதே சந்தேகம் தான். அதைத் தானே லக்ஷ்மணன் தீர்த்து வைத்திருக்கிறார். என்றாலும் அதிலே இன்னமும் எனக்குத் தெளிவு வரவில்லை; அவங்க ப்ராஜெக்ட் பத்தி யூகிக்க முடியாததாலோ???

ஜீவி said...

@ பாசமலர்

உன்னிப்பாகப் படித்து வருவதற்கு நன்றி.

பிரச்னை இல்லாமல் எந்த வாழ்க்கையும் இல்லை. ஒரு பிரச்னையையும், அது குறித்தான வாதங்களையும்,பிரதிவாதங்களையும் அதற்கான தீர்வையும் கதை ரூபத்தில் தருகிறோம். அவ்வளவு தான்.

கதையாகும் போது வாதங்களையும், பிரதிவாதங்களையும் எடுத்து வைப்பதற்கு தேவைப்படுவோரே கதை மாந்தராகிறார்கள். ஆண்களாகவும், பெண்களாகவும் அவர்களை வரித்து அவர்களுக்கு ஒரு பெயரும் கொடுக்கும் பொழுது தத்ரூபம் கிடைக்கிறது. படிப்போர் ஒன்றிப் படிக்கின்றனர். தங்கள் வாழ்க்கையிலும் அப்படியான பிரச் னைகளை எதிர் கொள்ளும் பொழுது அவற்றைக் கையாள்வதற்கு அவர்களுக்கு வலு கிடைக்கிறது.
இது தான் இப்படியான கதைகளைப் படிப்பதினால் ஆன பயன்.

எது படிப்பதிலும் ஒரு நோக்கம் இருக்க வேண்டும் என்பது போலவே எந்தக் கதைக்கும் ஒரு நோக்கம் வேண்டும். அது இருந்தால் பயன் விளையும்.அது இல்லாதிருந்தால்
எழுதுவோருக்கும், படிப்போருக்கும் காலவிரயம்.

இப்படியான கதைகளை இப்பொழுது படிக்க முடிகிறதா, சொல்லுங்கள்.
இப்படியான ஒரு காலத்தை மீண்டும் வாசகர்கள் சிருஷ்டித்துக் கொள்ள
வழிகோலுவதும் லஷ்மணனின் ப்ராஜெட்டில் ஒரு அம்சம்.

கருத்து பகிர்தலுக்கு மிக்க நன்றி, பாசமலர்!

ஜீவி said...

@ Geetha Sambasivam

'தன் உணர்வு ஒன்றையே உந்து சக்தியாகக் கொண்டு எழுதும் அந்த ஒருவரே அவர் எழுதும் ஒரே கதையில் பல பாத்திரங்களாக எப்படி உருமாற முடியும்?' என்பதிலா தெளிவு கிடைக்கவில்லை?

அப்படியானால், ஓரளவு சொல்ல முயற்சிக்கிறேன்.

இப்பொழுதெல்லாம் எழுத்தாளருக்குப் பெயர் கதைசொல்லி என்று ஆன பிறகு கதை எழுதுவோருக்கு ரொம்ப செளகரியமாகப் போய் விட்டது.
'கதை சொல்ல வேண்டும், அவ்வளவு தானே' என்று ஒரு ஊரிலே ஒரு ராஜா இருந்தான் என்பது மாதிரி ஆரம்பித்து, ஒற்றைக் காட்சியையே கதையாகச் சொல்லி
(எழுதி) முடித்து விடுகிறார்கள்.
வாசிப்போருக்கும் திருப்தி. என்ன திருப்தி?.. ஒரு கதை வாசித்த திருப்தி. 'கதையை வெறும் கதையாக' எண்ணுவதில் விளையும் அனர்த்தங்கள் தாம் இதெல்லாம்.

கதை மாந்தரைப் படைப்பதின் நோக்கம் அவர்கள் மூலம் கதையை நடத்திச் செல்வதற்காகத் தானே?
கதையை எழுதும் எழுத்தாளர் அந்த பாத்திரங்களின் நடவடிக்கைகளின் மூலம் மட்டுமில்லாமல், அவர்களின் உரையாடல்கள் மூலமும் கதையை நகர்த்திச் செல்கிறார். அதாவது வெவ்வேறு குணங்கள் உள்ளவராகப் படைக்கப் பட்டிருக்கும் அந்த பாத்திரங்களை அவரவர் குணங்களுக்கு ஏற்ப பேச வைப்பதின் மூலம் எழுதும் அந்த ஒருவரே அந்த வெவ்வேறு குணங்களுக்கான உரையாடலை அமைத்து நடத்திச் செல்கிறார். குணங்கள் என்று மட்டுமில்லை, எழுதுவோர் ஆணாகவும், பெண்ணாகவும் உருமாறவும் வேண்டியிருக்கிறது.

மீள் வருகைக்கும், ஒன்றி இந்தத் தொடரை வாசித்து வருவதற்கும் மிக்க நன்றி, கீதாம்மா.

Geetha Sambasivam said...

இப்பொழுதெல்லாம் எழுத்தாளருக்குப் பெயர் கதைசொல்லி என்று ஆன பிறகு கதை எழுதுவோருக்கு ரொம்ப செளகரியமாகப் போய் விட்டது.
'கதை சொல்ல வேண்டும், அவ்வளவு தானே' என்று ஒரு ஊரிலே ஒரு ராஜா இருந்தான் என்பது மாதிரி ஆரம்பித்து, ஒற்றைக் காட்சியையே கதையாகச் சொல்லி
(எழுதி) முடித்து விடுகிறார்கள்.//

உண்மைதான்; இப்போதெல்லாம் ஒரு பக்கம், அரைப்பக்கம், வழக்கமான ஃபார்முலாக் கதைகள்னு வரதை விமரிசிக்கக் கூட முடியறதில்லைதான். :((((( இன்றைய தேவையும், விருப்பமும் அப்படி இருக்கு.

நீண்ட நாட்கள்/வருடங்கள் கழித்து இம்மாதிரியானதொரு நெடுங்கதையைப் படிக்கையில் சில குழப்பங்கள் அதனாலேயே ஏற்படுகிறது. தெளிவான விளக்கத்துக்கு நன்றி.

G.M Balasubramaniam said...

அதுக்கு முன்னாடி அவரோட ஒண்ணு ரெண்டு கதையைப் படிச்சிருக்கேன். அவ்வளவு தான், அவரைப் பத்தி // ///எனக்குத் தெரியும். ஆனா, என்னோட பிரசுரமான ஒரே கதையைப் படிச்சிட்டு ரொம்ப பிரபலமான அவர் என்னைப் பாராட்டினது எனக்கு ரொம்பக் கூச்சத்தைத் தந்தது. நேருக்கு நேரே சொல்லக் கூடாது தான். இருந்தாலும் சொல்றேன். அவருடைய பரந்த மனப்பான்மை, எழுதற இன்னொருவனையும்-- அவன் எழுதறதைப் பாராட்டி அணைச்சிண்டு போர்ற தன்மை// .......!!!??? தொடர்கிறேன்.

ஜீவி said...

@ Geetha Sambasivam

// நீண்ட நாட்கள்/வருடங்கள் கழித்து இம்மாதிரியானதொரு..//

அந்தக் காலத்தை (வல்லிம்மாவைத் தான் பின்னூட்டத்தில் காணோம்; படிக்கிறார்களா, தெரியவில்லை) மீட்டெடுப்பதற்கான ஒரு உரத்த சிந்தனையே இந்தத் தொடர். இனித் தொடர்வது உங்களுக்கு சுலபமாகப் புரியும்.

மிக்க நன்றி.

ஜீவி said...

@ G.M.B.

//???..//

???...?

கோமதி அரசு said...

"இப்போ சொல்றதாவது புரியறதா பார்" என்றான் ரிஷி. "ஒரு கவிதை புத்தகம் வெளியீட்டு விழாலே தான் அபராஜிதனை முதன் முதலா சந்திச்ச பாக்கியம் எனக்குக் கிடைச்சது. அதுக்கு முன்னாடி அவரோட ஒண்ணு ரெண்டு கதையைப் படிச்சிருக்கேன். அவ்வளவு தான், அவரைப் பத்தி எனக்குத் தெரியும். ஆனா, என்னோட பிரசுரமான ஒரே கதையைப் படிச்சிட்டு ரொம்ப பிரபலமான அவர் என்னைப் பாராட்டினது எனக்கு ரொம்பக் கூச்சத்தைத் தந்தது. நேருக்கு நேரே சொல்லக் கூடாது தான். இருந்தாலும் சொல்றேன். அவருடைய பரந்த மனப்பான்மை, எழுதற இன்னொருவனையும்-- அவன் எழுதறதைப் பாராட்டி அணைச்சிண்டு போர்ற தன்மை இதெல்லாம் பாத்து அந்த முதல் சந்திப்பிலேயே என் மனசிலே அவர் ரொம்ப உசரத்துக்குப் உயர்ந்திட்டார். இந்த பண்பெல்லாம் பத்திரிகை உலகிலே பாக்கறது அதிசயம் இல்லையா, அதனாலே கூட இருக்கலாம். அப்புறம் ரொம்ப நேரம் என்னை என்னவெல்லாமோ கேட்டார். நிறைய பொதுவான விஷயங்களைப் பேசினோம். கடைசிலே என்ன சொன்னார் தெரியுமா?.. 'ரிஷி! நான் எழுத ஆரம்பிச்சப்போ எப்படி இருந்தேனோ, அந்த அபராஜிதனை உங்க கிட்டே இப்போப் பாக்கறேன். இந்த பத்திரிகை உலகிலே பழகிப் பழகி நாளாவட்டத்திலே அந்த அபராஜிதன் எங்கிட்டே கொஞ்சம் மங்கிப் போனாலும், நீரு பூத்த நெருப்பா எந்நேரமும் மனசிலே இருப்பதை உணர்ந்திருக்கேன்.. அந்த அபராஜிதனை நீங்க இப்போ ஊதி விட்டுட்டீங்க.. இனி அந்த அபராஜிதன் எழுந்து உங்களோட சேந்துப்பான். ஆனா நீங்க வளரணும்; வளர்றத்துக்காக இதெல்லாம் செஞ்சு தொலைக்கணும்ங்கறது என் அனுபவம். முன்னேரா நான் முன்னாடிப் போறேன்; என் பின்னாடியே வாங்க'ன்னார். அவர் சொன்னதையெல்லாம் நெஞ்சிலே அப்படியே பதிச்சிண்டிருக்கேன். காலம் தான் பதில் சொல்லணும்.." என்று ரிஷி சொல்லி முடித்த பொழுது, தனக்கே தெரியாத ஒரு புது அபராஜிதனைத் தெரிந்து கொண்ட மாதிரி இருந்தது ஊர்மிளாவுக்கு.//

ரிஷியின் பதில் மூலம் ஒரு நல்ல எழுத்தாளினின் பரந்த மனப்பான்மையும், அபராஜிதன் என்ற லட்சுமணனின் உயர்ந்த குணமும் (ஊர்மிளாவுக்கே தெரியாத குணம் ) நமக்கு தெரிய வந்தது.

ஜீவி said...

@ கோமதி அரசு

குறிப்பிட்ட இடத்தை எடுத்துப் பாராட்டி ரசித்திருப்பதிலிருந்தே தங்கள் உயர்ந்த குணம் தெரிகிறது.

மிக்க நன்றி, கோமதிம்மா.

Related Posts with Thumbnails