மின் நூல்

Monday, April 2, 2012

பார்வை (பகுதி-38)

"சொல்லுங்க, உத்தமபுத்திரன்!"

உத்தம புத்திரன் தயங்கித் தயங்கித் தான் பேசினான்.  ஸ்பீக்கர் போன் நிலையில் ஃபோனை வைத்திருந்ததால், அவன் பேசியது அந்த ஹால் முழுக்கக் கேட்டது.

"ஸார்! நான் சொல்லியிருந்தேன்லே, அந்த டி.வி.புரோக்கிராமிற்காக ரிகார்டிங் வேலை ஏதோ காரணங்களினாலே தள்ளித் தள்ளிப் போர்றது.. முதல்லே டைரக்டர் ரெடியா இருந்தப்போ, டி.வி.காரங்களுக்கு இந்த மாதிரி புரோக்கிராம்லே ஒரு தயக்கம் இருந்தது. இப்போன்னா, டி.வி.காரங்க ஓ.கே. சொல்லிட்டாங்களாம்.  ஆனா, டைரக்டர் அவுட் டோர் ஷூட்டிங்குக்காக சுவிட்ஸர்லாந்த் போயிருக்கார்.  இரண்டு ஸாங்.  ரெண்டையும் முடிச்சிண்டு வர்றத்துக்கு ஒரு மாசத்துக்கு மேலே ஆகுமாம்."

"பரவாயில்லை, உத்தமபுத்திரன்.. டேக் இட் ஈஸி.."

"இல்லே, சார்! எனக்குத் தான் இதை உங்க கிட்டே சொல்றத்துக்குக் கூட கஷ்டமா இருக்கு.  அந்த டைரக்டர் தான் உங்க சப்ஜெக்ட்க்கு ஏத்தவர். ஒரு கமிட்மெண்ட்டோட எடுக்கக் கூடியவர்.  எந்தத் துறைலேயும் ஓபனிங் நன்னா இருந்தா அப்புறம் உங்களுக்கும் பிக் அப் ஆயிடும்ங்கறத்துக்காகத் தான் கொஞ்சம் வெயிட் பண்ணலாம்ன்னு தோண்றது."

"அதான் சொன்னேனே, உத்தமபுத்திரன், பரவாயில்லேன்னு.. எனக்கும் வேறே சில கமிட்மெண்ட் இப்போ புதுசா வந்திருக்கு.  நடுவிலே இந்த விஷயத்தையும் கொஞ்சம் ஒத்திப் போடலாம்ன்னு நினைக்கிறேன். எதுக்கும் நீங்க எங்கிடே கன்ஃபர்ம் பண்ணிக்கிட்டு இது விஷயமா மேற்கொண்டு முயற்சி எடுக்கலாம். என்ன?"

"ஸாரி, ஸார்.  ஏதோ கோபத்லே இருக்காப்லே இருக்கு.."

"நோ..நோ.." என்று அவசரமாக அதை மறுத்தான் லஷ்மணன்."எல்லாம் நல்லதுக்காகத் தான்.  நேர்லே பாக்கும் பொழுது சொல்றேனே? இப்போ ஃபோனை வைச்சிடட்டுமா?"

"சரி. ஸார்.."என்று மறுமுனையில் பதில் வந்ததும், ஃபோனைத் துண்டித்தான் லஷ்மணன்.

புத்தக அலமாரி திறந்து இரண்டு மூன்று காமிக் புத்தகங்களை எடுத்து கெளதமிடம் எடுத்துத் தந்தாள் ஊர்மிளா.  மூலையில் போட்டிருந்த சோபாவில் போய் உட்கார்ந்து கொண்டு அதைப் படிக்கத் தொடங்கினான் கெளதம்.

வந்து உட்கார்ந்ததும், "ஒண்ணுமில்லே. என் கதை ஒண்ணை சினிமாவா எடுக்கலாம்ன்னு ஒருத்தர் அபிப்ராயப்பட்டு ஆரம்ப வேலைலே இறங்கினார்.  அது சம்பந்தமா.." என்று லஷ்மணன் சொல்லும் பொழுதே, "நல்ல ஐடியா,சார்! எந்தக் கதைன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?" என்று ஆர்வத்துடன் கேட்டாள் வித்யா.

"அந்த ஐடியாவையே இப்போதைக்கு டிராப் பண்ணிடலாம்ன்னு இப்போ நினைக்கிறேன், வித்யா" என்று லஷ்மணன் சொன்ன போது, ஏன் இப்படிச் சொல்கிறார் என்று ஊர்மிளாவுக்கும் இருந்தது.

வித்யாவும் அதையேத் தான் கேட்டாள். "ஏன் சார்?.. முதல் முதல் வர்ற வாய்ப்பு.."

"அதனால் தான்.." என்றான் லஷ்மணன். "எப்பவும் முதல் அடியை தீர்மானமா எடுத்து வைக்கணும். அப்படி எடுத்து வைக்கறத்துக்கு முன்னாடி ஆயிரம் யோசனை இருக்கலாம். ஆனா, எடுத்து வைச்ச பிறகு ஏன் எடுத்து வைச்சோம்ன்னு ஆகிடக் கூடாதல்லவா?.. அதுக்காகத் தான்.  அதுவும் தவிர, இப்போ புதுசா நிறைய வேலை குவிஞ்சிருக்கில்லையா? இதிலே தீவிரமா கவனம் செலுத்தணும். அதனால் தான்" என்று அவன் சொன்ன போது, எழுத்தில் அவன் கொண்டிருந்த ஈடுபாடு ஊர்மிளாவுக்குப் பெருமையாக இருந்தது.  வித்யாவிற்கோ வலிய வந்த வாய்ப்பை நழுவ விடுகிற மனுஷனைப் புதுசாகப் பார்க்கிற பிரமிப்பு இருந்தது.  ரிஷியோ இதெல்லாம் எதிர்காலத்தில் தானும் கடைபிடிக்க வேண்டிய பாடம் போலும் என்கிற பாவனையில் லஷ்மணனின் உணர்வுகளை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தான்.

"அது என்னவோ தெரிலே, பத்திரிகைலே வந்த கதையெல்லாம் சினிமாக்கு லாயக்காத் தெரிலே..  ஆனா, டி.வி. சீரியல்களுக்குத் தான் பொருத்தமா இருக்கும்ன்னு எனக்கு அப்பப்போ தோணும்.  அப்படித் தோணிலாலும் அங்கேயும் படிச்சதைக் கெடுத்துத் தொலைச்சிடுவாங்களோன்னு பயமாவும் இருக்கும்" என்றாள் வித்யா.

"வித்யா! பேசாம நீங்களும் ஒரு எழுத்தாளரா ஆகியிருக்கலாம்.  நினைக்கறதை நன்னாத் தான் சொல்றீங்க.." என்று லேசான சிரிப்புடன் சொன்னாள் ஊர்மிளா. "கதை சொல்றதும் கேக்கறதும் உலகளாவிய பாரம்பரிய பழக்கம். படிச்சுத் தெரிஞ்சிக்கறது புஸ்தகம்ன்னா, பார்த்துத் தெரிஞ்சிக்கறது சினிமா,டிராமா, டி.வி. சீரியல் இதெல்லாம்.  தமிழ்நாட்டிலே வார, மாதப் பத்திரிகைங்க இல்லேனா, சிறுகதை, நாவல் இதெல்லாம் இவ்வளவு விரிவா ஜனங்கள் மத்திலே பழக்கப்பட்டிருக்காதுன்னு தாராளமாச் சொல்லலாம்.  இப்போ என்னன்னா சினிமாச் செய்திகள் முக்கியம் ஆகி, பத்திரிகைகளை ஆக்கிரமிச்சிண்டதும், கதையெல்லாம் டி.வி.பக்கம் போயிடுத்துன்னு நெனைக்கிறேன்"

"என்னுடைய கேள்வி என்னன்னா, பத்திரிகை--பதிப்பகம் இப்படித்தானே போகணும்?.. ஏன் அப்படிப் போகலேங்கறது தான்.." என்றாள் வித்யா

"படிச்சுத் தெரிஞ்சிக்கறதை விட பார்த்து, கேட்டுத் தெரிஞ்சிக்கற பழக்கம் அதிகமாயிட்டதாலே இருக்கலாம்.." என்றான் ரிஷி.

"அப்படியும் சொல்ல முடியாது.." என்றாள் ஊர்மிளா. "பதிப்பகப் பிரசுரக் கதைகள்ன்னு எடுத்திண்டா சில எழுத்தாளர்கள் எழுதினதுன்னா அதுக்கு இருக்கற மவுசே தனின்னு தான் தோண்றது. அதுவும் பத்திரிகைலே பிரசுரமான கதை அதுன்னா 'டக்'குன்னு ஜனங்க வாங்கிடறாங்க.."

"உங்க அனுபவத்தில்லே சொல்கிறீங்க... நீங்களே சொல்லிட்டா சரிதான். அதான் முன்னே இருந்த மாதிரி இப்போலாம் பத்திரிகைகள் தான் கதைங்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கறதில்லேன்னு ஆயிடுச்சே!  அப்போ எப்படி?" என்று அந்த 'எப்படி'யைக் கொஞ்சம் இழுத்தவாறே கேட்டாள் வித்யா.

"நீ கேக்கறதைப் பார்த்தா நிலமை இப்படியேப் போனா என்னத்தை எழுதி எந்த காலத்திலே நான் பிரபலமடையறதுங்கற கவலை உன்னை இப்பவே பிடிச்சிண்ட மாதிரி இருக்கே.."என்று சொன்ன ரிஷியால் சிரிப்பை அடக்க முடியவில்லை.. "நாம விரும்பியோ விரும்பாமலோ இங்கே அதான் நிலைமை.  பிரபல பத்திரிகை--வாசகர்--புத்தக விற்பனைன்னு ஒரு சங்கிலிப் பிணைப்பு ஃபார்ம் ஆயிடுது. சினிமா, ராசிபலன், ஜோதிடம், ஆன்மிகம், விளம்பரம் அத்தனைக்கும் இங்கே மார்க்கெட்டிங் சோர்ஸ் பத்திரிகை தான்.  ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு இன்ட்ரஸ்ட்டுன்னு அமோகமா இங்கே வியாபாரம் நடந்திண்டிருக்கு. தெரிஞ்சிக்கோ."

"இந்த நிலைமைலேயும் நாலு பத்திரிகைலே நாலு தொடர்கள் எழுதிண்டு வர்றேன், இல்லையா?..  அதுனாலே ஒரேடியா மனந்தளர்ந்திடக் கூடாது.  கதைகள் படிக்கறதுக்குன்னு ஒரு செக்ஷன் இருந்தா, எப்படியானும் அவங்க படிச்சிண்டே தான் இருப்பாங்க.. அவங்களுக்காக எழுதறத்துக்காக எழுத்தாளர்களும் இருந்திண்டு தான் இருப்பாங்க.." என்றான் லஷ்மணன்.  "ஆனா, ஒருவிதத்தில் பார்க்கப் போனா, பத்திரிகைப் படைப்புலகை பொறுத்த மட்டில் முன்னாடிலாம் இருந்ததுக்கு இப்போ இருக்கற நிலமை ஒரு ஷீண நிலைன்னு தான் சொல்லணும். இருந்தாலும் மனம் தளரக் கூடாது. வாசகர்கள் தான் ஆதாரம். அவங்க தான் எல்லாம்.  இந்த டிரண்ட் மாறும்ன்னு நினைக்கிறேன்" என்றான்.

"புத்தகத் திருவிழாக்குப் போனா மலைப்பா இருக்கு.  மலை மலையா புதுசு புதுசா புத்தகங்கள் குவிஞ்சிருக்கு. கதைகள் படிக்கணும்னா இனிமே நேரா பதிப்பக புத்தகங்கங்களையே வாங்கிப் படிக்க வேண்டியது தானா?" என்றாள் வித்யா.

"அப்படிப் போனாலும் பரவாயில்லைங்கலாம். மேல் நாட்டேலாம் கதை, கட்டுரை, கவிதை எல்லாமே புத்தக ரூபமெடுத்தாச்சு.  பருவ இதழ்களெல்லாம் செய்திகளை வைத்து செய்திகள் எழுதறதுக்காகத்தான்.       இங்கேயும் நாளாவட்டத்திலே அப்படித்தான் ஆகும் போலிருக்கு. ஆனா பத்திரிகைகளு க்கு இருக்கற வீச்சு பதிப்பகங்களுக்குக் கிடையாது.  அது வேறோர் தனி உலகம். அந்த உலகத்தின் அனுபவங்களும் அலாதியானது.  பலது அனுபவப்பட்டா தான் தெரிஞ்சிக்க முடியும். அதுலே ஒண்ணு தன் படைப்புகளை புத்தகமா பாக்கறதும்." என்றான் லஷ்மணன்.

"உங்களுக்கு ரொம்ப தைரியம் தான்.."என்றாள் வித்யா. "ஊர்மிளாவை பக்கத்திலே வைச்சிண்டே பதிப்பகங்களைப் பத்தி..."

"அவங்க பதிப்பகம் எல்லாத்திலே இருந்தும் வித்தியாசமானது. அங்கே பத்திரிகைலே எழுதியேயிராத எழுத்தாளருக்கு முன்னுரிமை கொடுத்து பதிப்பகச் செலவிலேயே அவங்களோட நூல்களைப் பதிப்பிக்க தயாரா இருக்காங்க.  ஆனா, என்ன புத்தகம்- யாருடையதுங்கறதை அவங்க தான் தீர்மானிப்பாங்க.. அவங்க கை மோதிரக் கை.  குட்டுப்பட நிறையப் பேர் காத்திருக்காங்க.." என்று லஷ்மணன் சொன்ன போது, சுலோச்சனா தன்னிடம் சொன்ன விஷயத்தைச் சொல்லிடலாமான்னு ஊர்மிளாவுக்கு திடீரென்று அந்த விஷயம் ஞாபகம் வந்தது.  இருந்தாலும், 'சுலோச்சனா தானே சொல்லியிருக்கிறாள்,  பதிப்பக உரிமையாளர்களிடமிருந்து தகவல் வந்தால் பிறகு லஷ்மணனிடம் சொல்லிக் கொள்ளலாம்' என்று பேசாமல் இருந்தாள்.

"இப்போல்லாம் பதிப்பகங்களிலேயும் கதைன்னா மூஞ்சியைத் திருப்பிக்கறாங்க..  அதெல்லாம் போகட்டும்.  பேசிண்டே போனா, ஒண்ணு நம்பிக்கை தளர்வு ஏற்படும், இல்லே தடம் புரண்ட ரயிலை மீண்டும் தண்டவாளத்திலே ஏத்த உத்வேகம் உண்டாகும்.  இந்த இரண்டு மாசமா ரெண்டாவது சொன்னதுக்குத் தான் என்ன செய்யலாம்ன்னு யோசிச்சிண்டு இருக்கேன்.." என்றான் லஷ்மணன்.

அந்த சமயத்தில், 'தமிழுக்கும் அமுதென்று பேர்' என்று சுசீலாவின் குரல் ரிங்டோனாய் மிழற்ற, சடாரென்று இடுப்புப் பட்டையிலிருந்து செல் போனை மீட்டெடுத்த ரிஷி, "ஒரு நிமிஷம்" என்று அவர்களிடம் அனுமதி வாங்கிக் கொண்டு ஜன்னல் பக்கம் போய் பேசிவிட்டு வந்தான்.

வந்ததும், "'மெஜாட்டியோ' கதைக்கு முதல் பாராட்டு.. அதான்.." என்றான்.  அவன் சொன்னதைக் கேட்டு வித்யாவிற்கு முகம் கொள்ளாத மகிழ்ச்சி.

"ஹை.. முதல் பாராட்டா?.. யாருகிட்டேயிருந்துங்க?" என்றாள் ஊர்மிளா.

"என் குளோஸ் ஃப்ரண்டுங்க.  சிறுபத்திரிகைங்கன்னா இவனுக்கு உயிர்! இவன் சொல்லித்தான் 'கணையாழி'ன்னு ஒரு பத்திரிகை இருக்கறதே எனக்குத் தெரியும்! சுந்தர சோழன்னு பேர்.  'தனிச் சுற்றுக்கு'ன்னு போட்டு நிறைய சிறுபத்திரிகைகள் இவனுக்கு வரும்.  அதிலேலாம் எழுதவும் செய்வான். இவன் கொடுத்து படிச்சதினாலே தான் சின்னச் சின்னப் பத்திரிகைகள் எத்தனை இருக்குன்னு அந்த இன்னொரு ஒரு உலகமும் எனக்குத் தெரிஞ்சது."

யோசனையுடன் "ரொம்ப நல்லது.." என்றான் லஷ்மணன். "ஸோ.. சிறுபத்திரிகை உலகத்திலேந்தும் பாராட்டு வந்திடுத்து, இல்லையா?.. அதான் வேணும். இதைத் தான் நான் எதிர்பார்த்தேன்! வெகுஜன பத்திரிகைலே எழுதறோம்ன்னு வெட்கப்படறதுக்கு ஒண்ணுமில்லே.  எழுத்தாளனுக்கு என்னைக்குமே முதல் முக்கியம், என்ன எழுதறோம்ங்கறது. அந்த விழிப்புணர்வு! அதான் முக்கியம். அந்த முக்கியத்தை ஒட்டியே அடுத்த முக்கியம்,  அவன் முக்கியமா கருதி எழுதற அந்த எழுத்து எத்தனை பேருக்குப் போய்ச் சேர்றதுங்கறது.  எழுதறதுங்கறதே, அதுக்காகத் தான் இல்லையா?" என்றவன், தீவிர சிந்தனையுடன், "'இன்பத் தமிழ் நல்ல புகழ் மிக்கப் புலவர்க்கு வேல்'ன்னு அந்த பாரதிதாசன் பாட்டிலே ஒரு வரி வருமில்லையா?.. அதான் நம்ம எல்லா முயற்சிக்கும் ஆதாரம்! இந்த சுந்தர சோழனும் எழுதுவார் இல்லையா? நீங்க என்ன செய்றீங்கன்னா..  இந்த சுந்தர சோழன்,  அப்புறம் இந்த சுந்தர சோழன் போன்றவர்களை எனக்கு நீங்க அறிமுகப்படுத்தணுமே, ரிஷி!" என்றான்.

"தாராளமா.." என்று ரிஷி சொன்னவுடனேயே, "என்னது?.. எந்த காலத்லே இருக்கோம்னே தெரியலையே! அபராஜிதன், சுந்தர சோழன்னு ஒரே மன்னர்கள் சூழ இருக்கறாப்பலேனா இருக்கு!.." என்று வித்யா சிரித்த போது, "இனிமே ரிஷிகள்லாம் வரிசையா அறிமுகமாவாங்களோ, என்னவோ தெரிலே!" என்று சிரிக்காமல் சொன்னாள் ஊர்மிளா.


(இன்னும் வரும்)








21 comments:

Geetha Sambasivam said...

'சுலோச்சனா தானே சொல்லியிருக்கிறாள், பதிப்பக உரிமையாளர்களிடமிருந்து தகவல் வந்தால் பிறகு லஷ்மணனிடம் சொல்லிக் கொள்ளலாம்' என்று பேசாமல் இருந்தாள்.//

வித்தியாசமான மனைவி. அலுவல் வேலையைக் குடும்பத்தோடு போட்டுப் பிணைக்காமல்!!!!:))))

இந்த அத்தியாயத்தின் கோணம் முழுதும் இப்போதைய பத்திரிகைகளின் நிலைமையை அலசுவதாக அமைந்துள்ளது. இப்போதெல்லாம் தொடர்கதைகள் என்ற பெயரில் 10 அல்லது 12 வாரங்களே நெடுங்கதைகள் வருகின்றன. அதுவும் குறிப்பிட்ட பத்திரிகைகளில் மட்டுமே. :(((( கற்பனை வறண்டு போகவில்லை. கதாசிரியர்கள் பார்வை தொலைக்காட்சிக்குப் போனது தான் முக்கியக் காரணம். அதையும் இங்கே சொல்லி இருக்கீங்க.

ஸ்ரீராம். said...

இப்போது பதிப்பகங்கள் பிரசுரிக்க நினைக்கும் புத்தகங்கள் நிச்சயம் அவர்களுக்கு நல்ல விற்பனையைத் தந்து லாபம் தரும் புத்தகங்களைத்தான் பதிப்பிக்க முன் வருவார்கள். இப்போதைய காலத்தில் எந்த வகைப் புத்தகங்கள் அதிகம் விற்கின்றன? சமையல் புத்தகங்கள்? மன நலக் கட்டுரைகள்? கதை எழுதுபவர்கள் கூட இப்போது எழுதும் கதைகளில் ஆராய்ச்சியையும், அலசலையும் புகுத்தி எழுதும் முறைதான் அதிகம் விற்பனை ஆகிறதோ என்றும் தோன்றுகிறது. அந்தக் காலத்தில் வந்தது போல வெறும் உணர்ச்சிபூர்வமான கதைகள் போல இப்போது எழுதுவது குறைந்துள்ளது. வாசகர்களும் அந்த நிலையைக் கடந்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். புகழ் பெற்று விட்ட எழுத்தாளர்களின் புத்தகங்களுக்கு என்றுமே கொஞ்சம் மவுசு இருக்கும்தான். ஆனாலும் புத்தகங்களின் விலைகள் கூடிக் கொண்டே போவது எழுத்தாளர்களுக்கு சந்தோஷம் கொடுக்கலாம். வாசகர்களுக்கு அல்ல!!

G.M Balasubramaniam said...

பத்திரிகை, பதிப்பகம், எழுத்தாளர், என்று பல கோண அலசல், தொடர்கிறேன்.

பாச மலர் / Paasa Malar said...

கீதா சொன்னதை ஆமோதிக்கிறேன்..

ஸ்ரீராம் சொல்வது போல் உணர்வுகள் பின் தள்ளப்பட்டு அலசல்கள் முன்னணியில் நிற்கின்றன...எதை எடுத்தாலும் பகுத்து வகுத்துப் பார்க்கிற மனநிலை கதை படிக்கும் வாசகர்களிடத்தும் இப்போது அதிகமாய் இருக்கிறது...

வாழ்க்கை நடைமுறையிலும் அப்படி இருப்பதுதான் காரணம்..
எல்லோருமே விமர்சகர்களாகிவிட்டோம்

கதைகள் சினிமா ஆக்குவதும் ஒரு தனிக்கலைதான்....

எழுத்தாளனின் எழுத்து எந்த எந்த விஷயத்தோடெல்லாம் தொடர்புபடுத்தப்படுகிறது என்று ஒவ்வொன்றாக நீங்கள் அலசுவது நன்று...

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

வித்தியாசமான மனைவி என்று வேணாச் சொல்லலாமே தவிர,
அந்த வித்தியாசத்திற்கான காரணம் வேறு..

'கணவனிடம் சொல்ல வேண்டிய விஷயம் அறைகுறையாக இருக்கிறது, அது முழுமையாக நேரடியாகத் தனக்குத் தெரியவந்ததும் கணவனிடம் சொல்லலாம்' என்று சுலோச்சனா சொன்ன விஷயம் கனிந்து வருவதற்காகக் காத்திருக்கும் மனைவி என்கிற விதத்தில் ஊர்மிளா நீங்கள் சொன்னபடி வித்தியாசமான மனைவி தான்.

//இந்த அத்தியாயத்தின் கோணம் முழுதும் இப்போதைய பத்திரிகைகளின் நிலைமையை அலசுவதாக அமைந்துள்ளது.//

தொடர்ந்து வாருங்கள். கதை போகிற போக்கு உங்களுக்குப் பிடிக்கும்.

கோமதி அரசு said...

எழுத்தாளனுக்கு என்னைக்குமே முதல் முக்கியம், என்ன எழுதறோம்ங்கறது. அந்த விழிப்புணர்வு! அதான் முக்கியம். அந்த முக்கியத்தை ஒட்டியே அடுத்த முக்கியம், //


எழுத்தாளானுக்கு எது முக்கியம் என்பதை அழகாய் சொன்னீர்கள்.

Geetha Sambasivam said...

தொடர

ஜீவி said...

@ ஸ்ரீராம்

"அது வேறோர் தனி உலகம். அந்த உலகத்தின் அனுபவங்களும் அலாதியா னது. பலது அனுபவப்பட்டா தான் தெரிஞ்சிக்க முடியும்."

-- என்று இந்தப் பதிவிலே சொன்னது தான் இதற்கான பதிலாகும்.

//புத்தகங்களின் விலைகள் கூடிக் கொண்டே போவது எழுத்தாளர்களுக்கு சந்தோஷம் கொடுக்கலாம். வாசகர்களுக்கு அல்ல!! //

முரணானக் கருத்தாகத் தெரியவில்லை?

வாசகர்களுக்கு சந்தோஷம் கொடுத்தால் தான் அந்தப் புத்தகத்தை வாங்கவே போகிறார். அவர்களது சந்தோஷமின்மை விற்பனையை பாதிக்கும். அது எழுத்தாளருக்கு சந்தோஷம் கொடுக்காத ஒன்று.

தொடர்ந்து வாருங்கள்.

ஜீவி said...

@ G.M. Balasubramaniam

இப்பொழுது தான் எழுத எடுத்துக் கொண்ட மெயின் விஷயத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக வந்து கொண்டிருக்கிறேன்.

தொடர்வதற்கு மிக்க நன்றி, GMB சார்!

ஜீவி said...

@ பாசமலர்

//உணர்வுகள் பின் தள்ளப்பட்டு அலசல்கள் முன்னணியில் நிற்கின்றன...எதை எடுத்தாலும் பகுத்து வகுத்துப் பார்க்கிற மனநிலை கதை படிக்கும் வாசகர்களிடத்தும் இப்போது அதிகமாய் இருக்கிறது... //

'பகுத்து வகுத்துப் பார்க்கிற மனநிலை' நல்லது தான். முக்கியமாக நம்மை பாதிக்கும் விஷயங்களில். 'எதை எடுத்தாலும்' என்பது வெறுமைக்கு இட்டுச் செல்லும்.

'எல்லோருமே விமர்சகர்களாகி விட்டோம்' என்று அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

தொடர்ந்து படித்து கருத்துச் சொல்வதற்கு நன்றி, பாசமலர்!

ஜீவி said...

@ கோமதி அரசு

முக்கியமான விஷயத்தை முன்னிலைப் படுத்தி மனத்தில் குறித்துக் கொள்ளும் விதத்தில் எடுத்துச் சொன்னமைக்கு மிக்க நன்றி, கோமதிம்மா.

'எங்கே காணோம்' என்றிருந்தேன்.
தொடர்ந்து படித்து வருவதற்கு மிக்க நன்றி.

ஜீவி said...

@ Geetha Samhasivam (2)

'தொடர'-வைத் தொடர்ந்து ஏதோ சொல்ல வந்தது விட்டுப் போயிற்றோ என்று எண்ணியிருந்தேன்.

வேறோரு பதிவிலும் இந்த 'தொடர'வைப் பார்த்ததும், ஏதோ காரணத்திற்காகத் தான் என்று தெரிந்தது.

நிறைய பின்னூட்டங்கள் பதிலளிக்காமல் சேர்ந்து விட்டதால், அவற்றிற்கு பதிலளித்து விட்டுத் தொடர்கிறேன்.

மீள் வருகைக்கும் தொடர்ந்து வாசித்து வருவதற்கும் நன்றி.

Geetha Sambasivam said...

'தொடர'-வைத் தொடர்ந்து ஏதோ சொல்ல வந்தது விட்டுப் போயிற்றோ என்று எண்ணியிருந்தேன்.//

கூகிள் செய்து வரும் மாற்றங்களால் கொஞ்ச நாட்களாகப் பின் தொடரும் வசதி இல்லாமல் இருந்தது. எல்லாப் பதிவுகளிலேயும் என்ன பதில் வந்தது எனத் தேடிப்போய்ப் பார்க்க நேர்ந்தது. முந்தாநாளில் இருந்து இந்த ஆப்ஷனை மீண்டும் சேர்த்திருக்கிறார்கள். ஆகவே கொடுக்காத பின்னூட்டப் பதிவுகளில் அதைக் கொடுத்து வருகிறேன். :))))))))

கோமதி அரசு said...

எங்கே காணோம்' என்றிருந்தேன்.//

நான் ஊருக்கு போயிருந்தேன் சார். ஊரிலிருந்து வரும் போது உறவினரை அழைத்து வந்து இருந்தேன். அவர்களை எல்லா கோவில்களுக்கும் அழைத்து சென்று காட்டிக் கொண்டு இருந்த்தால் வலைப் பக்கம் வரமுடியவில்லை.

ஸ்ரீராம். said...

//முரணானக் கருத்தாகத் தெரியவில்லை?//

இல்லை. என் பார்வயில் பார்க்கும்போது சில புத்தகங்கள் நான் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினாலும் அதன் விலையைப் பார்த்து விட்டுப் பின் வாங்கியிருக்கிறேன். இதற்கு அதை எழுதிய எழுத்தாளர் காரணமாயிருக்க முடியாது. பதிப்பகங்கள்தான் விலையை நிர்ணயம் செய்கின்றன. முன்னாள் பல வருடங்களுக்கு முன்னாள் பைண்ட் செய்யப் பட்டு வைத்திருந்த சில பல புத்தகங்கள் அடிக்கடி இடமாறுதல்களினால் மற்றும் வேறு சில காரணங்களினால் சிதிலமாக, புதிய புத்தகங்கள் (படங்கள் இருக்காதே என்ற ஏக்கத்தையும் தாண்டி) வாங்க நினைத்தாலும் இதே நிலைதான். அதற்கு என் புத்தகம் சேர்க்கும் ஆசையைத் துறக்க வேண்டும். ஒன்று கடன் வாங்கிப் படிக்க வேண்டும், அல்லது நூலகங்களை நாட வேண்டும். அருகில் உள்ள நூலகங்களில் நாம் தேடும் புத்தகங்கள் பெரும்பாலும் கிடைப்பதில்லை. அலைய சோம்பல் பட்டும், நாட்கள் செல்லச் செல்ல மறந்தும் விடும்!

சில புத்தகங்கள்/படைப்புகள் வெளியாகி ஐம்பத்தைந்து வருடங்கள் ஆகியிருந்தால் காப்புரிமைப் பிரச்னை வராது என்றும் எந்தப் பதிப்பகம் வேண்டுமானாலும் அவற்றை வெளியிட முடியும் என்றும் கேள்விப் பட்டேன். எந்த அளவு உண்மையோ?

இது சம்பந்தமான எங்கள் ஏக்கத்தை, எண்ணத்தை ஒரு பதிவாகக் கூட எங்கள் ப்ளாக்கில் வெளியிட்டோம்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

// ஆனாலும் புத்தகங்களின் விலைகள் கூடிக் கொண்டே போவது எழுத்தாளர்களுக்கு சந்தோஷம் கொடுக்கலாம். வாசகர்களுக்கு அல்ல.//

//அதன் விலையைப் பார்த்து விட்டுப் பின் வாங்கியிருக்கிறேன். இதற்கு அதை எழுதிய எழுத்தாளர் காரணமாயிருக்க முடியாது. //

அதனால் தான் 'முரணான கருத்தாகத் தெரியவில்லை?'என்று கேட்டிருந்தேன். புத்தகத்தின் விலையின் அடிப்படையில் ராயல்டி எழுத்தாளருக்கு கிடைக்கும் என்ற் நினைப்பின் அடிப்படையில் 'எழுத்தாளருக்கு சந்தோஷம்' என்று நீங்கள் சொல்லியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

பதிப்பகங்கள் வியாபார ஸ்தலங்கள் ஆகையால் மார்க்கெட்டுக்குப் போய் காய்கறி வாங்குவதைப் போலவே புத்தகங்கள் வாங்குவதையும் நீங்கள் தீர்மானிக்க வேண்டும். அவரவர்க்கு என்று அவரவர் பார்வையில் ஆயிரம் நியாயங்கள். ஒன்றும் சொல்வதற்கி ல்லை.

புத்தகங்கள் விலை ஏகத்தாறாக இருப்பது பற்றி பல இடங்களில் நீங்கள் பகிர்ந்து கொண்டிருப்பட்டிருப் பது தெரியும். இன்னொரு பதிவர் பதிவில் கூட ஒரு புத்தகத்தைப் பற்றிச் சொல்லும் பொழுது, 'விலை தான் கொஞ்சம் அதிகம்' என்று நீங்கள் சொல்ல, அவரோ அதற்குப் பதிலாக
'அவ்ளோ விலை இல்லையே அது:)' என்று சொல்லி விட்டார்.

இதான் விஷயம். நாம் வாங்கும் பொருளுக்கு விலை நிர்ணயிப்பது நாமே தானே தவிர, அந்தப் பொருளை விற்பவர் அல்ல. இந்த விஷயத்தில் நான் தீர்மானமாக இருக்கிறேன்.

இந்த எழுபது வயதிலும் எனக்கும் நிறையப் படிக்க வேண்டும் என்று ஆசை தான். ஆனால், இருநூறு- முன்னூறு என்று விலை வைத்து விற்கப்படும் புத்தகங்களை வாங்க எனது பொருளாதார வசதி இடம் கொடுப்பதில்லை.

என் நூலகத்தைத் தவிர, முழுதும் நான் அரசு நூலகங்களைத் தான் நம்பியிருக்கிறேன்.திரு.ஜெயமோகனின் புத்தகங்களை படித்து அவை பற்றியான எனது ரசனையை எழுத வேண்டும் என்பது எனது வெகுவான ஆசை. ஆனால் ஜெமோவின் நூலகள் நூலகங்களில் கிடைக்காது. என்ன செய்வது? இது போன்ற 'அரிய' புத்தகங்களைப் படிக்க வேண்டுமென் றால் என்ன செய்வது?..

ஒரு வழி இருக்கிறது.

சென்னையில் நிறைய தனியார் 'புத்தக வாடகை நிலையங்கள்' இருக்கின்றன. 200 ரூபா புத்தகத்திற்கு 20 ரூபா படித்துக் கொடுத்து விட என்கிற மாதிரி. அவற்றில் இப்படியான புத்தகங்கள் கிடைக்கலாம். வேறு என்ன செய்வது? ஆசையிருந்தால், அப்படியானும் படித்துப் பார்க்க வேண்டியது தான்.

என் பகுதியில் ஒரு மொபைல் புத்தக வண்டியைப் பார்த்தேன். விசாரித்த பொழுது, "மெம்பரானால் வாரத்திற்கு ஒரு முறை வீட்டிற்கே வந்து புத்தகம் தருகிறோம்" என்றார்கள்."'ஜெமோ' புத்தகங்கள் இருந்தால், மெம்பராகச் சேருகிறேன்" என்றேன். அவர்களிடம் அவர் புத்தகங்கள் இல்லை."வாங்கி விட்டு உங்களுக்குச் சொல்கிறோம்". என்றார்கள். இன்னும் தகவல் தான் வந்தபாடில்லை.

உங்கள் அனுபவத்தையும் எழுதுங்கள்.
பகிர்தலுக்கு நன்றி, ஸ்ரீராம்!

Geetha Sambasivam said...

சித்தப்பா என்னிடம் கொடுத்த ஜெமோ புத்தகங்களை என் தம்பி மூலம் மேற்கு மாம்பலத்தில் ஒரு மாற்றுத் திறனாளியில் நூலகத்தில் சேர்க்கச் சொல்லிக் கொடுத்தேன். வீடு மாறுவதால் பல புத்தகங்களை வைத்துக்கொள்ள இடமில்லை. :((( முன்பே தெரிந்திருந்தால் உங்களுக்கு வைத்திருப்பேன். இனி கிடைத்தால் படித்துவிட்டு உங்களுக்கென வைக்கிறேன்.

Geetha Sambasivam said...

புத்தகங்கள் விலை கட்டுப்படி ஆகாததால் நானும் புத்தகங்கள் வாங்குவது குறைவே. இன்னும் சொல்லப் போனால் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு ஒரு முறை கூடப் போனதில்லை. பலவும் பரிசாக வந்தவையே. கல்கி, தேவன் பைண்டிங்குகள் தான் நான் சேர்த்தவை. அவையும் உதிர ஆரம்பித்துவிட்டன. எத்தனை இடமாற்றங்கள். எல்லா இடங்களுக்கும் அவையும் சலிக்காமல் வந்திருக்கின்றன. :)))))) இன்னும் சில கல்கியில் இருந்து எடுத்தவை பைண்ட் செய்ய நேரமில்லாமல் உதிராகவே வைத்திருக்கிறேன்.

ஜீவி said...

@ Geetha Samhasivam

தங்கள் உடனடியான பதிலுக்கு மனமார்ந்த நன்றி, கீதாம்மா!
ஒரு விஷயத்தை மனத்தில் வைத்துக் கொள்ளாமல் பகிர்ந்து கொள்வதால் எவ்வளவு பலங்கள் என்று தெரிகிறது.
'ரங்கா! ரங்கா' என்கிற நினைப்பும் கூடவே. இருந்தாலும், இப்படியான புத்தகங்களைப் படிக்க அவனும் ஒரு வழி காட்டாமலா போவான்?..

ஸ்ரீராம். said...

ஸ்ரீதேவி லெண்டிங் லைப்ரேரி பற்றி எங்கள் ப்ளாக்கிலும் ஒரு பதிவு - அலைபேசி எண்ணுடன் - சொல்லியிருந்தோம். புத்தகங்களின் விலையறிந்து தீர்மானிப்பது நாம்தான். உண்மை. ஆனால் வேண்டாம் என்று உதறித் தள்ள முடியாத நேரங்களில் புலம்பல்ஸ் வருகிறது. நான் ஒரு மூச்சில் படிப்பவன் அல்ல என்பதால் லெண்டிங் லைப்ரேரி சிஸ்டம் எனக்கு ஒத்து வரவில்லை! வேலை காரணமாகவும், மனம் ஒப்பும் நேரத்தில் படிப்பதாலும் (இது ஒரு காரணமா...சாக்கு என்று நினைக்கலாம்) கூட ஒத்து வருவதில்லை. எங்கள் குடும்பத்திலேயே கூட ஒருவர் முடிந்தவரை நல்ல புத்தகங்களைத் தேடி சேகரித்து வைத்து, படிப்பவர்களுக்கு தருகிறார்தான்.. இதிலும் என்னைத்தான் குறை சொல்ல வேண்டும். என் சொந்த கலக்ஷனில் அந்த புத்தகம் இருக்க வேண்டும் என்று விரும்புவது என் குறை. கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை கதைதான்! ")))

கீதா மேடம் சொல்லியிருப்பது போல பல பழைய புத்தகங்கள் உதிரத் தொடங்கி உள்ளன. அவையும் கூட கைக்கெட்டும் தூரத்தில், விரும்பும் நேரத்தில் படிக்க முடியாமல் 450 கிலோ மீட்டர்கள் தளளி உள்ளன! "ரங்கா, ரங்கா என்றால்..." என்று நீங்கள் சொல்லியுள்ள வரிகளில் உங்களுக்குள் மட்டுமே புரியக் கூடிய ஒரு செய்தியைப் பார்க்கிறேன்!! :))

Geetha Sambasivam said...

அவையும் கூட கைக்கெட்டும் தூரத்தில், விரும்பும் நேரத்தில் படிக்க முடியாமல் 450 கிலோ மீட்டர்கள் தளளி உள்ளன! //

என்னாலே அப்படி எல்லாம் இருக்கவே முடியாது; என்னோட புத்தகங்கள் எதை எப்போப் படிப்பேன்னு சொல்ல முடியாது; ஆனால் எனக்குக் கை எட்டும் தூரத்திலேயே இருக்கணும். திடீர்னு எதையாவது எடுத்துப் பார்ப்பேன்; படிப்பேன். :)))) அமெரிக்கா போனப்போ கூட முக்கியமான புத்தகங்கள் ஒரு சூட்கேஸில்! :)))) ஒரே சூட்கேஸில் வைச்சால் எடை கூடுமேனு நாலிலேயும் பிரிச்சு வைச்சு எடுத்துப் போனோம். பையர் பார்த்துட்டு லைப்ரரி ஆரம்பிக்கப் போறியாம்மானு கிண்டல்! :)))))

Related Posts with Thumbnails