மின் நூல்

Saturday, April 7, 2012

பார்வை (பகுதி-39)

ழுத்துப் பட்டறை என்கிற சொல்லை இதற்கு முன் கேள்விப்பட்டதில்லை வித்யா.  அதனால், ரிஷி அந்த வார்த்தையை உச்சரித்த பொழுது விநோதமாக நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

"என்ன பார்க்கிறே?" என்று புரியாமல் கேட்டான் ரிஷி.

"என்னமோ சொன்னீங்களே.. சரியாக் காதிலே விழலே.. அதான்."

"இன்னிக்கு சாயந்தரம் 'எழுத்துப் பட்டறை' இருக்கு. ஆபீஸ் முடிந்தவுடன் நேரா அங்கே போயிட்டு கொஞ்சம் லேட்டாத் தான் வருவேன்.  சரியா?"

"எழுத்துப் பட்டறையா?.. என்ன அது?..  கொல்லன் பட்டறை-- கேள்விப் பட்டிருக்கேன்!..  அது என்ன எழுத்துப் பட்டறை?"

"எழுதுவதற்கான பயிற்சிக் களம்ன்னு வைச்சிக்கோயேன்."

"எழுதறதுக்குக் கூட பயிற்சி தேவையா, என்ன?"

"பின்னே?.. எழுதறது என்ன அவ்வளவு லேசுப் பட்ட காரியமா, என்ன?.. நிறைய பேருக்கு கற்பனைலே கதைகதையா தோணும். ஆனா சுவாரஸ்யமா சொல்லத் தெரியாது. நிறைய பேருக்கு சொல்லத் தெரியும். ஆனா இன்னொருத்தர் சுவாரஸ்யத்தோட படிச்சு ரசிக்கற மாதிரி எழுதத் தெரியாது.  ஆக, எழுதறத்துக்கும் ஒரு பயிற்சி தேவையா இருக்கு, இல்லயா?..  அதைச் சொல்லிக் கொடுக்கற வகுப்பு மாதிரின்னு வைச்சிக்கோயேன்."

"நியாயம் தான் நீங்க சொல்றதும்.  இப்போலாம் சில பேர் எழுதறதைப் பார்த்தா இப்படி ஒரு களன் தேவைதான்னு தோண்றது. அதுசரி,  நீங்க இப்பத்தான் எப்படி எழுதறதுன்னு பயிற்சி பெறப் போறீங்களா?"

"உண்மைலே அப்படித்தான்.  லட்சக்கணக்கா விக்கற பத்திரிகையை இன்னும் பல லட்சம் பேர் படிப்பாங்க இல்லையா?..  நிறைய பேர்ங்கறதாலே எல்லாருக்கும் பொதுவா பிடிச்ச விஷயங்களை எழுதணும்.  பிடிக்கறதோ இல்லையோ,  'என்னடா எழுதியிருக்கான்'னு யாரும் விசிறிப் பத்திரிகையைத் தூர எறிஞ்சிடக் கூடாது.  மொத்தத்திலே கதை படிக்கற அந்த பத்து நிமிஷத்திலே சுத்தி நடக்கற எதுவுமே அவனுக்குப் புலப்படாத மாதிரி புடிச்சு வைச்சிக்கற மாதிரி எழுதணும்.  அந்த மாதிரி எழுதறது எப்படிங்கறதுக்கான எழுத்துப் பட்டறை இது.  லஷ்மணன் சார் தான் ஏற்பாடு பண்ணியிருக்கார். கிட்டத்தட்ட எழுபது- எண்பது பேருக்கு மேலே கலந்துப்பாங்கன்னு நினைக்கிறேன்."

"கலந்துக்கறவங்க அத்தனை பேரும் எழுத்தாளர்களா?"

"அத்தனை பேரும் எழுத்தாளர்களா இருப்பாங்கங்களான்னு தெரிலே.  ஒருத்தர் சொல்லி ஒருத்தர்ன்னு நிறையப் பேரை எதிர்பார்க்கறாங்க. ஒரு கதைன்னா ஓரிரண்டு வரிலே இதான் கதைன்னு ரொம்பப் பேர் சொல்லிடறாங்க இல்லையா?   அந்த மாதிரி படிச்ச ஒரு கதையை பாமரத்தனமா புரிஞ்சிக்காம, ஒருத்தன் எழுதறதை எப்படி ரசிச்சுப் படிச்சுத் தெரிஞ்சிக்கறதுங்கறத்துக்கான பயிற்சியும் இருக்கும் போலே இருக்கு.  இது ரெண்டாம் கட்ட வாசகர்களை உருவாக்கற வேலை.  பெரும்பாலும் இப்படி உருவாகற வாசகர்கள் நாளாவட்டத்லே அவங்களும் கதையோ, கட்டுரையோ எழுத ஆரம்பிச்சிடுவாங்க.   இப்பவே இப்படிப்பட்ட வாசகர்களையும் உருவாக்கணும்ங்கறதிலே லஷ்மணன் சார் குறியா இருக்கார். அதனாலே அதுக்கான வாசகர்களும் வருவாங்கன்னு நினைக்கிறேன்" என்று சுவர்க் கடியாரத்தைப் பார்த்தான் ரிஷி.  மணி ஏழுதான் ஆகியிருந்தது. காலை காப்பி மட்டும் ஆகியிருந்தது.  ஒன்பது மணி வாக்கில் சாப்பிட்டு விட்டுக் கிளம்பினானால், பத்துக்கெல்லாம் ஆஃபீசில் இருக்கலாம்.

தோசைக்கல்லில் மாவை ஊற்றி விட்டு,"ஒருத்தர் சொல்லி ஒருத்தர்ன்னா, உங்கள் பங்குக்கு நீங்க யாரையானும் சொல்லியிருக்கீங்கங்களா.."என்றாள் வித்யா.

"யாரையும் இல்லே.  ஏன் கேக்கறே?"

"என்னைச் சொல்லியிருக்கலாமிலேங்கறத்துக்காகத் தான்.  ஏன் நான் கலந்துக்கக் கூடாதா?" ஒரு முட்டை ஸ்பூனில் எண்ணை எடுத்து தோசை சுற்றிலும் வார்த்தாள்.

"ரெண்டு நாள் நடக்கப் போறது, வித்யா!  இன்னிக்கு சாயந்தரமும் நாளைக்குக் காலம்பறவும்.  இன்னிக்கு முழுக்க முழுக்க எழுதறவங்களுக்கான பயிற்சி.  நாளைக்கு வாசகர்களும் கலந்துக்கற மாதிரி இருக்கும். நாளைக்கு வேணா நீ வரலாமே?"

"ஏன் நான் எழுதக் கூடாதா, என்ன?" என்று அம்பென வித்யாவிடமிருந்து புறப்பட்டக் கேள்வி ரிஷியை அசர வைத்துவிட்டது.

ரிஷி பதிலேதும் சொல்லாததிருந்ததைப் பார்த்து, "நேத்திக்கு ஊர்மிளா கூட சொல்லலையா, 'வித்யா, பேசாம நீங்களும் எழுத்தாளரா ஆகியிருக்கலாம்;  நினைக்கிறதை நன்னாத் தான் சொல்றீங்க'ன்னு.  உங்களுக்குத் தான் இதெல்லாம் தானே தெரிலேனாலும்,  அவங்கள்லாம் சொல்றதைப் பாத்தானும் தெரிஞ்சிக்கலாமில்லையா?" என்று வித்யா சொன்ன போது
"அப்படிப் போடு! அதானா விஷயம்?" என்று கலகலத்தான் ரிஷி.

"சிரிக்கறத்துக்கு நான் ஒண்ணும் இல்லாததைச் சொல்லிடலேயே?.. ஊர்மிளா சொன்னதைத் தானே சொன்னேன்?.." என்று வித்யா தோசையைத் திருப்பிப் போட்டாள்.

"ஊர்மிளா சொன்னது இருக்கட்டும். . நீயா என்ன சொல்றே, அதைச் சொல்லு.."

"நான் சொல்லணும்னா நெறையச் சொல்லலாம்.  ராத்திரி முச்சூடும் இதான் யோசனை. சரியாக் கூடத் தூங்கலே.." என்று அடுப்பை அணைத்து விட்டு வார்த்திருந்த தோசைகளை டிபன் பாக்ஸில் அடுக்கி, ஒரு சின்ன கிண்ணத்தில் மிளகாய்ப்பொடி போட்டு எண்ணை ஊற்றி அதனுள் வைத்து மூடினாள்.

"பொய் சொல்லாதே.. நீ விட்ட குறட்டைலே தூங்க முடியாம ஸ்டடி ரூம்லே போய் எழுந்திண்டிருந்த எனக்குன்னா தெரியும், நீ எப்படித் தூங்கினேன்னு.."

"நீங்க எழுந்து போனதெல்லாம் தெரியும்..  என்ன, அப்போ நாலு மணி இருக்குமா?.. அதுக்கு மேலே தான் சித்த தூக்கம் வந்தது..அஞ்சுக்கெல்லாம் எழுந்தாச்சு...   எழுந்திருந்தாத் தான் ஒவ்வொண்ணா தலைக்கு மேலே வேலை இருக்கே.."

"அதான் நானும் சொல்றேன்.  இருக்கற வேலையோட எழுதற வேலை வேறா?
இழுத்துப் போட்டிண்டையானா சதா இதே நினைப்பா இருக்கும்."

"நீங்க ஆபீஸுக்குப் போனபின்னாடி எனக்கென்ன வேலை?..  சொல்லுங்கோ. கொட்டு கொட்டுன்னு உக்காந்திண்டு வம்பளக்க யாராவது வருவாளான்னு இல்லே கதைவைச் சாத்திண்டு நாம போவோமான்னு இல்லாம..."

"...........................'

"நான் கூட வெறுமனே இந்த வாரப்பத்திரிகை, மாசப்பத்திரிகையெல்லாம் பிரிச்சோமா, சுவாரஸ்யமா கண்ணுக்குத் தட்டுப்படறதையெல்லாம் படிச்சோமான்னு தான் இருந்தேன்.  நேத்திக்கு லஷ்மணன் சொன்னதை யெல்லாம் கேட்டு, அவர் கதையெல்லாம் கூட எவ்வளவு மேம்போக்காப் படிச்சிருக்கோம்ன்னு தோணித்து..  உஷா மாதிரி படிக்கணும்னு தீர்மானிச்சிட்டேன்.  அதோட உஷா மாதிரி வாசகர் கடிதம் எழுதறதைத் தாண்டி கதைகளும் எழுத முயற்சிக்கணும்ன்னு தோண்றது."

"அப்படின்னா சரி.  நான் தடுக்கலே. இங்கே மேட்லி பிரிட்ஜ் பக்கத்லே ஒரு கல்யாண சத்திரத்லே தான் பட்டறை நடக்கறது.  அட்ரஸ் தரேன். சாயந்தரம் ஆறுக்கெல்லாம் அங்கே இருக்கற மாதிரி வந்திடு. ராத்திரி டின்னருக்கு ஏற்பாடு செஞ்சிருக்கு.  திரும்ப பத்தாயிடும். அதனாலே கெளதமை விட்டுட்டு வர வேண்டாம். அவனையும் கூட்டிண்டு வந்திடு."

"காலம்பற இப்பவே சொல்லிட்டா உஷாவும் வந்துடுவா.  அவளும் வந்திட்டா எனக்கும் ஒரு துணையா இருக்கும்.  இல்லையா?"

"கரெக்ட்.  அதுமட்டுமில்லே.  உஷா வர்றது பின்னாடி பல விஷயங்களுக்கு உபயோகமா இருக்கும்.  கண்டிப்பா அவளையும் கூட்டிண்டு வா.  எதுக்கும் உஷா வர்றதைப் பத்தி அப்புறம் எனக்கு 'கன்ஃபர்ம் பண்றையா?.. அவங்க வரலேன்னா, ஆபீசிலேந்து கொஞ்சம் முன்னாடி வந்து நானே உன்னைக் கூட்டிண்டு போறேன். சரியா?"

பிள்ளை விஷயத்தில், பெண்டாட்டி விஷயத்தில் என்று எல்லாவற்றிலும் புருஷன் அக்கறை கொண்டிருப்பது அவளுக்குப் பிடித்திருந்தது.  "நீங்க கவலைப்பட வேண்டாம்.  எப்படியும் உஷா வருவா.  நாங்க வந்திடறோம்." என்றாள்.

"சரி..."

கெளதம் பள்ளிக்குக் கிளம்பிப் போய் கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ரிஷியும் ஆபீசுக்குக் கிளம்பிப் போனான்.  அவன் சென்ற பின்னால், வித்யாவும் இரண்டு தோசைகளை தட்டில் எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தாள்.  உட்கார்ந்ததும் தான் புதினாத் துவையல் பிரிட்ஜில் இருப்பது நினைவுக்கு வந்தது.  எழுத்து அதையும், ஒரு டம்ளர் தண்ணீரையும் எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தாள்.  ஏதேதோ நினைவுகள் மூளை செல்களில் ஊர்வலமாகப் போகையில் இதற்கு அடுத்தது அது என்கிற மாதிரி ஒவ்வொரு காரியத்தையும் செய்வதே அனிச்சைத்தனமாக அவளுக்குப் பட்டது. 'இதில் கதை வேறு எழுத ஆரம்பித்து விட்டால்..' என்று நினைத்த பொழுது சிரிப்பு தான் வந்தது.  அடுப்பில் குழம்பு கொதிப்பது கூடத் தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கலாம் என்கிற நினைப்பே எல்லா வேலையையும் இந்த எழுதற வேலை சாப்பிட்டு விடுமோ என்று அவளுக்கு பயமாக இருந்தது. இன்னும் கொஞ்சம் யோசித்த பொழுது, இதையே கூட ஒரு கதையாக எழுதலாமோ என்று தோன்றித்து.  'உஷாவுக்கு வேறு தகவல் சொல்ல வேண்டுமே' என்கிற நினைப்பு வந்ததும், அவசர அவசரமாக தட்டில் இருந்த தோசையை விள்ளி வாயில் போட்டுக் கொண்டாள்.  புதினா துவையல் கொஞ்சம் காட்டமாக இருந்தது வாட்டமா இருந்தது.  டம்ளர் தண்ணீர் உள்ளே போனதும் காலையில் எழுந்திருந்ததிலிருந்து பம்பரமாகச் சுற்றியதற்கு அம்மாடி என்றிருந்தது.

'இத்தனை நேரம் உஷா புருஷனும் ஆபீசுக்குக் கிளம்பியிருப்பார்..  அதனால் உட்காரச் சொன்னாலும் சொல்லுவாள்' என்கிற யோசனையில் வாசல் பூட்டு சாவியை எடுத்துக் கொண்டு, வாசல் கிரில் கதவை மட்டும் பூட்டி விட்டுக் கிளம்பினாள்.


(இன்னும் வரும்)





  

20 comments:

Geetha Sambasivam said...

கற்பனைகள் எப்போ வரும்னு சொல்ல முடியாது தான். ஆதலால் அன்றாட வேலைகள் தடைபடுமோ என வித்யா நினைப்பதும் சரியே. குடும்பத்திற்கும் ஊறில்லாமல் தன்னுடைய ஆர்வத்திற்கும் ஊறில்லாமல் நினைத்த காரியத்தில் வித்யா வெற்றி பெற வாழ்த்துகள்.

அதே சமயம் நல்ல வேளையா இந்த மாதிரிக் கதை எல்லாம் நான் எழுதலையேனு ஆறுதலாவும் இருக்கு! :)))))))

அப்பாதுரை said...

சரளமாக எழுதினால் சுலபமாக படிக்க முடிகிறது.
டிபன் பாக்ஸ் அடுக்கின அழகைப் படிச்சதும் உடனே எடுத்துச் சாப்பிடத் தோணுது!

G.M Balasubramaniam said...

இதில் காணும் எழுத்துப் பட்டறை என்னும் யோசனையை நான் என் வரும் பதிவில் QUOTE செய்கிறேன். போகும் போக்கைப் பார்த்தால் வாசிக்கவும் ரசிக்கவும் இது போன்ற அமைப்பு தேவை என்றே தோன்றுகிறது. தொடர்கிறேன்.

பாச மலர் / Paasa Malar said...

முட்டை ஸ்பூனில் எண்ணெய் ஊற்றுதல், காட்டமான வாட்டமான புதினா சட்னி..எழுத ஆரம்பித்துவிட்டால் அதிலேயே மூழ்கிப்போய் அடுப்பை விட்டுவிடுவோமோ என்ற எண்ணம்...மிகவும் ரசிக்கும்படி அமைந்துள்ளது..

தம்பதிகளின் பேச்சில் இழையோடும் அந்நியோன்னியம் மெருகேற்றுகிறது..

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஒரு கதைன்னா ஓரிரண்டு வரிலே இதான் கதைன்னு ரொம்பப் பேர் சொல்லிடறாங்க இல்லையா? அந்த மாதிரி படிச்ச ஒரு கதையை பாமரத்தனமா புரிஞ்சிக்காம, ஒருத்தன் எழுதறதை எப்படி ரசிச்சுப் படிச்சுத் தெரிஞ்சிக்கறதுங்கறத்துக்கான பயிற்சியும் இருக்கும் போலே இருக்கு. இது ரெண்டாம் கட்ட வாசகர்களை உருவாக்கற வேலை. பெரும்பாலும் இப்படி உருவாகற வாசகர்கள் நாளாவட்டத்லே அவங்களும் கதையோ, கட்டுரையோ எழுத ஆரம்பிச்சிடுவாங்க. இப்பவே இப்படிப்பட்ட வாசகர்களையும் உருவாக்கணும்ங்கறதிலே லஷ்மணன் சார் குறியா இருக்கார்.//

இந்த லஷ்மணன் சாரும் நம்ப ஜீவி சார் போலவே இருப்பார் போலிருக்கு.
;)))))

கோமதி அரசு said...

"பின்னே?.. எழுதறது என்ன அவ்வளவு லேசுப் பட்ட காரியமா, என்ன?.. நிறைய பேருக்கு கற்பனைலே கதைகதையா தோணும். ஆனா சுவாரஸ்யமா சொல்லத் தெரியாது. நிறைய பேருக்கு சொல்லத் தெரியும். ஆனா இன்னொருத்தர் சுவாரஸ்யத்தோட படிச்சு ரசிக்கற மாதிரி எழுதத் தெரியாது. ஆக, எழுதறத்துக்கும் ஒரு பயிற்சி தேவையா இருக்கு, இல்லயா?.. அதைச் சொல்லிக் கொடுக்கற வகுப்பு மாதிரின்னு வைச்சிக்கோயேன்."//

கூத்து பட்டறை போல் எழுத்து பட்டறை அருமை.
என் கணவர் சொல்லுவார் சின்ன, சின்ன வாக்கியங்களாய் எழுத வேண்டும் படிப்பவர்களுக்கு எளிதாக இருக்கும் என்று.

இந்த கதையில் எழுதுவதற்கு பயிற்சி கொடுத்தால் நன்றாக இருக்கும்.
படிக்க ஆவலாய் இருக்கிறேன்.


"அதான் நானும் சொல்றேன். இருக்கற வேலையோட எழுதற வேலை வேறா?
இழுத்துப் போட்டிண்டையானா சதா இதே நினைப்பா இருக்கும்."//

வீட்டு வேலையோடு , வலையில் மாட்டிக்கொண்டு இப்போது என்ன எழுதலாம், எழுதியதற்கு பின்னூட்டம் வந்து இருக்கா, பதில் போட வேண்டும் என்பது போன்ற சிந்தனைகள் சதா மனதை ஆக்கிரமிக்கதான் செய்கிறது.

ஜீவி said...

@ Geetha Sambasivam

பார்வைகள் பலவிதம் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். அப்புறம் தெரிந்தது மனிதர்களின் நினைப்புகளும் பலவிதம் என்று.
அப்புறம் தான் தெரிந்தது ஒவ்வொரு வர் நினைப்புக்கேற்பவே அவரவர் பார்வைகள் அமைகின்றதென்று. பின்னால் தான் தெரிந்தது, இதனால் தான் பார்வைகள் பலவிதம் ஆயிற்று என்று.

ஊர்மிளாவின் பார்வை தான் வித்யாவின் மனத்தில் எழுத வேண்டும் என்கிற எண்ணத்தை விதைத்தது. உஷாவின் ஈடுபாடுகள், அவளைத் தாண்டி செயல்படவேண்டு மெங்கிற உத்வேகத்தை வித்யாவின் மனத்தில் உருவாக்கியது. இதெல்லாம் தான் வித்யாவின் எழுத்தாள எண்ணத்திற்கு அடித்தளங்கள்.

எல்லாம் எப்படிப் போகின்றன என்று நம் பார்வையில் நாம் பார்க்கலாம்.

தொடர்ந்து வந்து சொல்லுங்கள்.
மிக்க நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

//எல்லாருக்கும் பொதுவா பிடிச்ச விஷயங்களை எழுதணும். பிடிக்கறதோ இல்லையோ, 'என்னடா எழுதியிருக்கான்'னு யாரும் விசிறிப் பத்திரிகையைத் தூர எறிஞ்சிடக் கூடாது. மொத்தத்திலே கதை படிக்கற அந்த பத்து நிமிஷத்திலே சுத்தி நடக்கற எதுவுமே அவனுக்குப் புலப்படாத மாதிரி புடிச்சு வைச்சிக்கற மாதிரி எழுதணும்//

எழுதறதுக்கான இலக்கணத்தை இதை விட அழகாச் சொல்ல முடியுமா?... அருமையா இருக்கு.

ஜீவி said...

@ அப்பாதுரை

ஆக, இனி சரளமாக எழுதவே முயற்சிக்கிறேன்.

சாப்பிட்டுக் கொண்டே கதைகள் படிப்பதிலும் பதின்ம வயதில் ஒரு சுகம் கண்டதுண்டு.அப்பொழுதெல்லாம்
சாப்பிடுவதை விட புத்தகங்கள் படிப்பது தான் முக்கியமாகப்பட்ட காலம் அது.

மிக்க நன்றி, அப்பாஜி.

ஜீவி said...

@ G.M. Balasubramanaiam

செய்யுங்கள். உங்கள் பார்வையில்
'எழுத்துப் பட்டறை'- படிக்க ஆவலே.

தொடர்ந்து வருவதற்கு நன்றி,ஜிஎம்பீ சார்!

ஜீவி said...

@ பாசமலர்

ரசித்துப் படித்திருப்பதற்கு நன்றி, பாசமலர்.

இன்னொருவர் சுவாரஸ்யமாக எழுதியிருப்பதைப் படிக்கும் பொழுதும்
பல நேரங்களில் சுற்றுப்புறம் மறந்து விடும் எனக்கு. அந்த நேரத்தில் யாராவது ஏதாவது கேட்டால், "உம்.. உம்.." என்று அனிச்சையாகச் சொல்லிக் கொண்டிருப்பேனே தவிர, அவர் கேட்பது மனத்தில் படியாது.
படிப்பதை முடித்து விட்டு, "என்ன கேட்டே?" என்று கேட்கும் பொழுது கேட்டவர்க்கு எரிச்சலாக வரும் தான்.

தன்னை மறந்து ஈடுபடும் விஷயத்தில் கவனம் ஒன்றுவது நல்லது தான் என்றாலும், ஒரே நேரத்தில் பலதைச் செய்யாமல் ஒவ்வொன்றிற்கும் ஒரு நேரம் ஒதுக்கிக் கொண்டால் நல்லது என்று இப்பொழுதெல்லாம் தோன்றுகிறது. ஆனால் அதை அமுல் படுத்துவதில் ஏகப்பட்ட சிரமங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

தொடர் வருகைக்கு நன்றி, பாசமலர்!

ஜீவி said...

@ வை.கோ.

அந்த 'நம்ப'வில் இருக்கும் உரிமைக்கு ஈடு இணை எதுவுமில்லை. 'ஊர் கூடித் தேர் இழுப்போம் ஓர் நாள்; வாரீர்!'
என்று தான் இப்போதைக்குச் சொல்லத் தோன்றுகிறது.

ஒரு வரியில் ஓராயிரம் உணர்வுகளை வடித்துத் தந்தமைக்கு மிக்க நன்றி,
கோபால்ஜி!

ஜீவி said...

@ கோமதி அரசு

'கூத்துப்பட்டறை' என்றதும் ந.முத்துசாமி அவர்கள் நினைவு வருகிறது. தெருக்கூத்தை நாடக இலக்கியமாக வார்த்தெடுத்துத் தந்த கலைஞர்! 'அன்று பூட்டிய வண்டி' என்று தெருக்கூத்துக் கலையைப் பற்றியதான இவரது கட்டுரைத் தொகுப்பில் ரசித்துத் தெரிந்து கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன. இவரது 'நாற்காலிக்காரர்கள்' நாடகம் மிகவும் பிரச்சித்திப் பெற்றது. தஞ்சை மாவட்ட புஞ்சை கிராமத்தைச் சேர்ந்தவர். இவரைப் பற்றி வேறொரு சமயம் 'எழுத்தாளர்கள்' பகுதியில் எழுதுகிறேன். 'கூத்துப்பட்டறை' வார்த்தையை நினைவு கொண்டமை க்கு மிக்க நன்றி..

கீதாம்மாவின், 'அதே சமயம்.. இருக்கு!' பின்னூட்டத்தைப் படித்து விட்டு நான் நினைத்துக் கொண்டதும் இது தான்! பல்வேறு குறுக்கீடுகளுக்கு ஊடே ஒவ்வொரு பதிவையும் ஒப்பேத்துவதற்குள் ஒருவழியாகி விடுகிறது.

தொடர்ந்து வருகை தந்து கருத்துக்களைச் சொல்லி பகிர்ந்து கொள்வதற்கு மிக்க நன்றி, கோமதிம்மா.

ஜீவி said...

@ அமைதிச்சாரல்

சாரலில் நனைந்த உணர்வு.

ரசனைக்கு நிரம்ப நன்றிங்க.

அப்பாதுரை said...

சாப்பிடும் பொழுது புத்தகம் படிக்கும் வழக்கம் எங்கள் வீட்டிலும் உண்டு. என் தங்கை தூங்கும் நேரம் தவிர புத்தகமும் கையுமாக இருப்பாள். (இந்துமதி, லக்ஷ்மி நாவல்கள்).

ஜீவி said...

அப்பாதுரை

சாப்பிடும் பொழுது புத்தகம் படிக்கும் வழக்கம் எங்கள் வீட்டிலும் உண்டு. என் தங்கை தூங்கும் நேரம் தவிர புத்தகமும் கையுமாக இருப்பாள். (இந்துமதி, லஷ்மி நாவல்கள்).

ஜீவி said...

@ அப்பாதுரை

//சாப்பிடும் பொழுது.. நாவல்கள்//

உங்களது இந்த கமெண்ட், 'Publish'
option இல்லாமல் இருக்க நானே எடுத்துப் போட்டிருக்கேன். அதான் அப்படித் தெரிகிறது.

எங்கள் வீட்டில் நிறையப் பேர் இப்படி.
இந்த விஷயம் தொடர்ந்து வருகின்ற
புதிய தலைமுறைகளிலும் தொடர்ந்து கொண்டிருப்பதும் இன்னொரு ஆச்சரியம். ஒரே வித்தியாசம்: இப்பொழுது ஆங்கில நாவல்கள் சிட்னி ஷெல்டன் இத்யாதி, தமிழில் இந்திரா செளந்தர ராஜன் மற்றும் அவர் மாதிரியான என்று தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அப்பாதுரை said...

'சரளமாக எழுதுவதால் சுலபமாகப் படிக்க முடிகிறது' என்று எழுதியிருக்க வேண்டும்.. தவறிவிட்டது.

dondu(#11168674346665545885) said...

//கெளதம் பள்ளிக்குக் கிளம்பிப் போய் கொஞ்ச நேரத்திற்கெல்லாம் லஷ்மணனும் ஆபீசுக்குக் கிளம்பிப் போனான். அவன் சென்ற பின்னால், வித்யாவும் இரண்டு தோசைகளை தட்டில் எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தாள்//

லக்ஷ்மணனா ரிஷியா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜீவி said...

@ Dondu

டோண்டு சார்! முதலில் இதைத் திருத்தி விட்டேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

Related Posts with Thumbnails