மின் நூல்

Tuesday, April 24, 2012

பார்வை (பகுதி-42)

லுவலகத்திற்குள் நுழையும் பொழுதே இன்றைய காலை வருகையைப் பகிர்ந்து கொள்வதற்கு கிருஷ்ணவேணி இல்லாதது ஊர்மிளாவிற்கு என்னவோ போலிருந்தது.  நுழைவாயில் முன்பக்கம் இல்லையென்றால் இன்னும் அலுவலகத்திற்கு வேணி வரவில்லை என்று அர்த்தம். 'என்ன காரணமோ தெரியலையே, ஏதானும் உடம்பு சரியில்லையோ, என்னவோ' என்று ஊர்மிளாவுக்கு கவலையாக இருந்தது.

கைப்பையை லாக்கரில் வைத்து விட்டு வாஷ் பேஸின் பக்கம் வரும் பொழுது, பார்ஸல் செக்ஷன் ஜோதி தட்டுப்பட்டாள்.  வேணி குடியிருக்கும் பகுதியில் தான் ஜோதியும் இருக்கிறாள்.  அலுவலகம் முடிந்து போகையில் தினமும் பஸ்ஸூக்காக ஜோதியுடன் தான் வேணி சேர்ந்து போவாள்.  இதை பலதடவை ஊர்மிளா பார்த்திருப்பதால் "ஜோதி! வேணி இன்னும் வரலையா?" என்று கேட்டாள்.

"அது தெரியாதா, அக்கா?" என்று ஜோதி ஆரம்பித்தாள். ஊர்மிளாவும் அவள் என்ன சொல்லப் போகிறாளோ என்கிற கவலையில் கலவரமானாள்.

"வேணிக்கு ஒரு அக்கா இருக்கில்லையா?  லச்சுமின்னு பேரு. அதை பொண் பாக்க வர்றாங்க.. அதான் வேணியும் லீவு போட்டிருச்சு.."

"காலைலே நல்ல சமாச்சாரம் தான் சொல்றே.." என்று ஊர்மிளா லேசாகச் சிரித்து தன் மகிழ்ச்சியைக் காட்டிக் கொண்டாள்.

"லச்சுமி நம்ம வேணியை விட லட்சணமா இருக்கும்க்கா.  இதை விட அது நல்ல டிரஸ்ஸெல்லாம் போட்டுக்கும். பாக்க வர்ற பையனுக்கு லக்கு தான்.  கொத்திக்கிட்டு போய்டுவான்லே!"

ஜோதி சொன்ன இந்த விஷயம் ஊர்மிளாவுக்கு இன்னும் கொஞ்ச நிம்மதியைக் கொடுத்தது.  சாதாரணமா சினிமாக்கள்லேலாம் வர்ற மாதிரி அக்காவை விட தங்கை அழகாயிருக்க, அக்காவைப் பெண் பார்க்க வருகிறவர்கள் பார்வை தங்கை மேல் என்று அக்கா திருமணம் தள்ளிப் போர்ற கதையா இருக்காம...

அவள் தன் கேபினுக்குள் போய் உட்காருவதற்கும் சுந்தரவதனன் அந்தப் பக்கம் வருவதற்கும் சரியாக இருந்தது. வழக்கமாக வேகமாகத் தான் அவர் நடப்பார் என்றாலும் இன்றைய நடை வேகம் அவர் வேகமாக வந்தது அவளைத் தேடித் தான் என்பது போலிருந்தது.

"உக்காருங்க, ஸார்.." என்று எழுந்திருந்து பின்னால் கிடந்த நாற்காலியை கொஞ்சம் முன்னால் இழுத்துப் போட்டாள்.

"தலைக்கு மேலே வேலை கிடக்கு.. உக்காரக்கூட நேரமில்லை" என்று சொல்லிக்கொண்டே உட்கார்ந்தார். "ரொம்ப தேங்க்ஸ், ஊர்மிளா.. நான் என் நன்றியைச் சொன்னேன்னு லஷ்மணன் கிட்டே சொல்லு.." என்றவர் கண் கண்ணாடியை எடுத்து துடைத்துப் போட்டுக் கொண்டார்.

"ரிஷி சொன்னான்.  அவனைப் பாக்க நீங்க மாம்பலத்துக்கும், உங்களைப் பாக்க அவா ரெண்டு பேரும் அடையாறுக்கும் வந்திட்டுப் போனாங்களாமே!   லஷ்மணன் செஞ்ச உதவி தான் கரெக்ட்! புஸ்தகமெல்லாம் போடறதை விட இது தெளஸண்ட் டைம்ஸ் பெட்டர்! கைதூக்கி விட்டுட்டீங்க.. இனிமே அவன் தான் பாத்துக்கணும். வால் போஸ்டர்ல்லாம் பாத்து மனசெல்லாம் நெறம்பி வழிஞ்சது..  இந்த அதிர்ஷ்டம் யாருக்குக் கிடைக்கும்ன்னு சொல்லு.  ரொம்ப தேங்க்ஸ்மா.." என்று சொல்லிக் கொண்டே வந்தவர் குரல் தழுதழுத்தது.

சுந்தரவதனன் அப்பொழுதிருந்த நிலையில் அவரது நெகிழ்ச்சி அவருக்குள்ளேயே கரைந்து போகட்டும் என்கிற எண்ணத்தில் அவர் சொல்லவந்ததைச் சொல்லட்டும் என்று ஊர்மிளா பேசாமலிருந்தாள்.

'தலைக்கு மேலே வேலை கிடப்பதை' மறுபடியும் ஞாபகப்படுத்திக் கொண்டு சுந்தரவதனன் தொடர்ந்தார். "என் கூடப்பிறந்தவா நாலு பேர். அதிலே ரிஷி அம்மா தான் ஒரே ஒரு பெண் குழந்தை.  எங்களுக்கெல்லாம் ஒரே தங்கைங்கறதாலே எங்க நாலு பேருக்கும் அவள் மேலே அப்படி ஒரு ஒட்டுதல்.  அப்பா போயிட்ட பின்னாடி நாலு பேரும் சேந்து ஜாம்ஜாம்ன்னு அவ கல்யாணத்தை நடத்தி வைச்சோம்.  அவளுக்கு ரிஷி தான் தலைச்சன். அவா என்னவோ நிகமாந்தகன், வேதாந்தம்ன்னு நிறைய பேரை சஜஸ்ட் பண்ணினா..  கடைசிலே நான் வைச்ச ரிஷிங்கற பேர் தான் கூப்பிடற பேரா ஆச்சு..  நான் வைச்சேன்னு ஒசத்திக்காகச் சொல்லலே.  பேர்ன்னா எப்பவும் சின்னதா இருக்கணும். அதான் பல நேரத்லே செளகர்யம்.  ரிஷிக்கு அடுத்தவ தான் ஹேமா. அதுவும் நான் வைச்ச பேர் தான்.  இப்போ செளகரியமா நியூஜெர்ஸிலே இருக்கா.  ஒரே குழந்தை.  பெண் குழந்தை. 'மாமா, நீங்க தான் ஹேமா குழந்தைக்கு நன்னா ஒரு பேரு செலக்ட் பண்ணிக் கொடுக்கணும்'ன்னான் ரிஷி. ஸ்ரீதேவின்னு வைடான்னேன்.  இன்னிக்கு அதுக்கு நாலு வயசாகறது. அவ்வளவு தூரம் போவானேன்?.. ரிஷி பையனுக்கு பாரு, அவாளே கெளதம்ன்னு ஷார்ட்டா வைச்சுட்டா."

"அதுமட்டுமில்லே.  ரிஷி கூட தன்னோட புனைப்பெயரை விஜின்னு ஷார்ட்டாத் தானே வைச்சிண்டிருக்கார்."

"கரெக்ட். ஆனா,  இப்போலாம் ரொம்பப் பேர் தன்னோட பேரோட ஊர் பேரையும் சேத்து வைச்சுக்கறா.  உலகமே குறுகிப் போயிருக்கறச்சே, குட்டியூண்டு ஊர் பேர் பெரிசாப் போயிடுத்துப் பாருன்னு நெனைச்சிப்பேன். ஜலகண்டாபுரம் சந்திரமெளலீஸ்வரன் நாராயணஸ்வாமிங்கற தன்னோட பேரை பாங்க் அப்ளிகேஷன் கட்டத்துக்குள்ளே போட்டு ரொப்பறத்துக்குள்ளே ஒருத்தர் பட்ட சிரமம் ஞாபகத்துக்கு வர்றது..  ஜே.ஸிங்கறது இன்ஷியல். நாராயண ஸ்வாமி தான் அவரோட பேர்.  நாரா.. வரை வந்தவுடனேயே கட்டம் முடிஞ்சி போயிடுத்து..  ரொம்ப நெருக்கமா வேறே அந்தக் கட்டங்களைப் பிரிண்ட் பண்ணியிருந்தாங்களா?    'நாரா..'க்குத் தொடர்ச்சியா கீழே கூட எழுத இடமில்லாம இருந்தது.   என்ன செய்வார் பாவம்! கடைசிலே என்ன செஞ்சார்ன்னா.." என்றவர், ஒருதடவை அவர் காபின் இருந்த திசைப்பக்கம் பார்த்து விட்டு, "இருக்கற வேலைக்கு இன்னும் ரெண்டு மணி ஆபீஸ் நேரம் கூட இருந்தால் தேவலைன்னு தோண்றது..  எதுக்கு வந்தேனோ அதைச் சொல்லாம என்னன்னவோ சொல்லிண்டிருக்கேன் பாரு" என்று கண் கண்ணாடியைக் கழட்டி பஞ்சக்கச்ச நுனியெடுத்துத் துடைத்து போட்டுக் கொண்டார்.  "எல்.ஐ.சி.லே தான் ரிஷி வேலை செய்யறான். அது உனக்குத் தெரியுமோல்யோ?..  குடும்பத்தை செளகரியமா பாத்துக்கறதுக்கு நல்ல வேலை அவனுக்கு அமைஞ்சிருக்கிருக்குங்கறது வாஸ்தவம் தான்.  என்ன மாதிரி ஆளுங்களுக்கு வயத்துப் பாட்டுக்கு செய்யற வேலையே பிடிச்சுப் போய்ட்டது.  எல்லாருக்கும் அந்த மாதிரியே இருக்கும்ன்னு சொல்ல முடியாது, இல்லையா?.. வாழ்க்கைன்னா செய்ற வேலையோட எல்லாம் போய்டறதா, என்ன? மனசுக்கு பிடிச்சதுன்னு ஒண்ணு இருக்கும் இல்லையா?  அப்படித்தான் சின்ன வயசிலிருந்தே அவனுக்கு கதைப் புஸ்தகமெல்லாம் படிக்கறது, எழுதறங்கறதிலே ஒரு ஈடுபாடு!  எப்பவும் ஏதாவது கிறுக்கிண்டே இருப்பான்.  அவனுக்கு மனசுக்குப் பிடிச்சதிலே ஷைன் ஆறதுன்னும் ஒண்ணு இருக்கில்லையோ! எத்தனை பேருக்கு இதெல்லாம் கைக்கெட்டறது?.. உங்க புண்ணியத்லே அந்த பாக்கியம் அவனுக்குக் கிடைச்சிருக்கு. வளந்திட்டானே தவிர சூது வாது தெரியாது. லஷ்மணன் சார் கிட்டே சொல்லு.  அவர் அனுபவப்பட்டவர். இந்தத் தொழில்லே இருக்கற தப்பு ரைட்டைச் சொல்லி அவர் தான் அவனுக்கு வழிகாட்டணும்.. நான் சொன்னேன்னு சொல்றையா, குழந்தை?" என்றார்.

'இந்தத் தொழில்லே'ன்னு அவர் சொன்னது மனசிலே உறைத்து, "தொழிலா?.." என்று புருவத்தை உயர்த்தினாள் ஊர்மிளா. "எழுதறதைக் கூட தொழில்னா சொல்றீங்க?.."

"பின்னே? சொல்லப் போனா முதலீடு இல்லாத தொழில்ன்பேன். வேணும்னா அவங்களுக்கிருக்கற கற்பனா சக்தியை வேணா முதலீடாச் சொல்லலாம். என்ன சொல்றே?"

"சொல்லலாம் தான். ஆனா, காசு பணம் போட்டு முதலீடு செஞ்சாத் தானே தொழில்ன்னு சொல்லுவா..  இதிலே அந்த முதலீடு இல்லாததினாலே../"

"நீ சொல்றது டெக்னிக்லி கரெக்ட் தான்.  ஒத்துக்கறேன்.திருவல்லிக்கேணிலே நாங்க இருந்தப்போ நாலு வீடு தள்ளி செல்லப்பான்னு ஒருத்தர் இருந்தார்.  மதுரை பக்கத்துக்காரர்.  எழுத்தாளர்.  எழுத்தாளர்ன்னா, இப்பல்லாம் சொல்றோமே அந்த மாதிரி இல்லே;  லைப்லே எழுதறதைத் தவிர வேறே ஒண்ணு இருந்ததா அவருக்குத் தெரியாது.  போதாக்குறைக்கு 'எழுத்து'ன்னு ஒரு பத்திரிகை வேறே நடத்தினார்.  எப்படி?.. பெண்டாட்டி நகை நட்டடெல்லாம் அடகுவைச்சு, கைக்காசையெல்லாம் காலிபண்ணி அந்த 'எழுத்து' பத்திரிகையைக் கொண்டு வர்றது தான் அவரோட ஸ்மரணை ஆச்சு.   மாசாமாசம் பத்திரிகைகள்லாம் அச்சான ஜோர்லே அவரே சுமந்துண்டு போய் வித்துட்டு வருவார்.  காலேஜ் லைப்ரரி, பஜார்ல்லே இருக்கற கடை-கண்ணி, ரயில்வே ஸ்டேஷன் புஸ்தகக் கடைங்க, நெருங்கினவா, நண்பர்கள் கூட்டம்ன்னு எதையும் விட்டு வைக்கலே, அவர். பாவம், மனுஷன் என்ன செய்வார், ஏது செய்வார்ன்னு தெரியாது.  ஒவ்வொரு மாசமும் முதல் வாரத்துக்குள்ளே 'டாண்'ன்னு பத்திரிகை கைக்கு வந்திடும்.  அவருக்காகவே நானும், இன்னும் நாலைஞ்சு பேரும் லைப் சந்தா கட்டியிருந்தோம். மாசம் இருபது பத்திரிகையை விக்கறதை என் பொறுப்பா ஏத்திண்டு தெரிஞ்சவாளு க்கு டிஸ்ட்ரிப்யூட் பண்ணியிருக்கேன். எதுக்குச் சொல்ல வந்தேன்னா, அவாள்லாம் எழுதறதை தொழில்ன்னு நெனைச்சதில்லே.  ஏதோ எழுதறதுதான் பிறவி எடுத்த பெரும் பயன்'ங்கற மாதிரி..  அந்தக் காலம் மாதிரி இந்தக் காலமும் இல்லேன்னு வைச்சுக்கோ.  எதைச் செஞ்சாலும் அதுனாலே எனக்கு என்ன லாபம்ன்னு நெனைக்கற காலம் இது.  இதிலே சொல்றத்துக்கு ஒண்ணுமில்லே...  என்னைக்கு எழுதறவங்களே இந்த எழுதற காரியத்தையும் ஒரு தொழில்ன்னு நெனைச்சு எழுத ஆரம்பிச்சிட்டாங்களோ அன்னிக்கே இதுவும் ஒரு தொழிலாயிடுத்து.  'தொழில் இல்லே இது; அதைத் தாண்டின ஆத்மார்த்தமான ஒண்ணு இதுன்னு என்னதான் நீ சொன்னாலும் அவங்க அதை ஏத்துக்கத் தயாரில்லே.  சம்பாதிக்கக் கிடைச்ச காசு-பண சமாச்சாரமாத் தான் இதையும் பாக்கறாங்க..  எத்தனை புஸ்தகம் போட்டோம்; அதிலே என்ன வருமானம் வந்தது? தன்னோட புஸ்தகத்தை எப்படில்லாம் விற்பனைபடுத்த லாம், அதுக்கு யார் யாரை அணிசேத்திண்டு என்னலாம் பண்ணலாம்கற மாதிரி போயிடுத்து.  அதனாலே எனக்கு என்னவோ இதுவும் ஒரு தொழில்ன்னு தான் தோண்றது.. "

"நீங்க சொல்றதெல்லாம் சரிதான்.  புஸ்தகத்துக்கு விலை போடறச்சேயே அந்த புஸ்தகத்திலுள்ள உள்ளடக்கத்துக்கு ப்ளஸ் அந்த புஸ்தகத்தை புஸ்தகமா ஆக்கித்தர்றத்துக்கான செலவுத் தொகைன்னு ஆயிடுச்சு.  அந்த புஸ்தகத்தோட உள்ளடக்கம்ங்கறது அந்த எழுத்தாளரோட உழைப்புங்கறதாலே புஸ்தகத்தை வித்து வர்ற காசுலே அவருக்குப் போய்ச் சேர வேண்டியது சேரணும்ங்கறதை ஒப்புக்கறேன். இதெல்லாம் சரி தான்.  என்னோட கேள்வி என்னன்னா, ஒரு எழுத்தாளர் மனசிலே ஒரு விஷயத்தைப் பத்தி எழுதணுங்கற அர்ஜ் தோணி மனம் குவிஞ்சு அதை எழுதறச்சேயே இந்த காசுங்கற நினைப்பு வந்திடறதான்னு தான்.   அப்படின்னு இருந்தாத்தான் எழுதறதே காசுக்காகன்னு எடுத்துக்கலாம் இல்லையா?.."

"ஊர்மிளா! பேச்சு சுவாரஸ்யத்திலே ஒண்ணை நினைக்காமயே பேசிண்டு இருக்கோம், பாரு!  உங்க கணவரும் ஒரு பிரபல எழுத்தாளர். உங்களுக்கு எழுத்தாளர்களைப் பத்தி தெரியாதையா நான் சொல்லிடப் போறேன்?" என்று சுந்தரவதனம் கேட்ட போது ஊர்மிளாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

"அபராஜிதன் நிச்சயம் காசுக்காகவேன்னு எழுதறவர் இல்லை.  எழுதாம அவராலே இருக்க முடியாது; அதான் விஷயமே.  ஏன் இப்படி மாஞ்சு மாஞ்சு எழுதிறீங்கன்னு கேட்டா, 'எழுதற சுகத்துக்காக எழுதறேன்'பார்.  அவர் எழுதறத்தே பக்கத்திலே இருந்து பாக்கணுமே?.. மனசிலே அலை அலையா புரள்ற எண்ண வேகத்தை அப்படியே வரி வரியா எழுத்தாய் மாத்தி பேப்பர்லே உலா விடற மாதிரி இருக்கும்! அந்த நேரத்தில் முகத்தில் அலாதியான ஒரு களை வந்து அமர்ந்துக்கும். எழுதறத்துக்காக அஞ்சு இலக்கத்லே சம்பளம் வாங்கிண்டிருந்த வேலையை விட்டவர் அவர். அதனாலே தான் நான் நினைக்கறதை இவ்வளவு தீவிரமாகச் சொல்ல முடிந்தது" என்றாள் ஊர்மிளா.

"சாரி, ஊர்மிளா.." என்றார் சுந்தரவதனன்.  "எழுத்தாளர்கள் சம்பந்தப்பட்ட பதிப்பகத்திலே நாம வேலை செய்யறதாலே நமக்கிருக்கற அனுபவத்திலே என் மனசிலே தோணினதைச் சொல்லிட்டேன்.." என்றார்.

"பர்சனலாய் ஒண்ணுமில்லே, சார்! பொதுவாத் தானே நாம பேசினோம்.. அதனால் என்ன?" என்றாள் ஊர்மிளா.  ரிஷியைப் பத்தி சுந்தரவதனன் சொன்னது நினைவுக்கு வந்து, "ரிஷின்னா கொக்கான்னாம்! அவரோட அந்த 'பார்வை'' கதையைப் படிக்கறச்சேயே தெரிஞ்சி போயிடுத்து. அவருக்கு இருக்கற திறமைலே வெளுத்து கட்டப்போறார், பாருங்கோ!" என்று வெளிக்குச் சொன்னாளே தவிர உள்ளுக்குள்ளே அவளுக்கும் ரிஷியின் திடீர் வளர்ச்சியில் ஒரு கவலை இருக்கத்தான் செய்தது.   அதையே குறிப்பிட்டு நேற்று லஷ்மணன் சொன்னதும் நினைவுக்கு வந்தது. 'ஊர்மிளா! நானும் நெறைய உதாரணம் சொல்வேன்.  ஆரம்ப தீவிரம், நிறைய பப்ளிஷ் ஆகி கொஞ்சம் செட்டில் ஆனதும் காணாமப் போயிடும்.  'இருந்த சரக்கெல்லாம் காலியாடுத்து; இனிமே என்ன செய்வேன்'ங்கற மாதிரி ஒரு நிலைன்னு வைச்சிக்கோயேன்.  இந்த ரிஷி அப்படி ஆகாம இருக்கணும்.  அதான் என் ஆசை' என்று அவன் சொன்னதை நினைத்துக் கொண்டாள்.

சுந்தர வதனன் எழுந்து கொண்டார்.  "பிரஞ்சும், இங்கிலீஷும் செலக்ஷன் முடிஞ்சு மொழிபெயர்க்கறத்துக்குப் போயாச்சு இல்லையா?.. அடுத்தாப்லே மலையாளம்ன்னு சின்னவர் சொல்லியிருக்கார்.  நவநீத கிருஷ்ணன், கோயம்புத்தூர் பிரான்ச்சிலேந்து உதவிக்கு வர்றார். ஒருவாரம் தங்கியிருப்பார். அதற்குள்ளே அந்த வேலையை முடிக்கணும்..  வரேன்."

சுந்தரவதனன் சென்றபிறகு இன்றைக்கு முடிக்க வேண்டிய பாக்கியிருக்கும் வேலைகளில் கவனம் கொண்டாள் ஊர்மிளா.  சின்னவர் அப்ரூவலுக்குப் பிறகு அவள் தயார்ப் பண்ண வேண்டிய வேலைகள் என்று சில இருந்தன. அப்ரூவல் கட்டத்தில் சின்னவர் ரொம்பவும் யோசிப்பார்.  பாதிக்குப் பாதியை தாண்டிய லாபம் கிடைக்கும் வேலைகளில் தனிப்பட்ட அக்கறையைக் காட்டுவார் அவர்.  பெரியவர் அப்படியில்லை.  அவர் ஈடுபாடே தனி; தனி மட்டுமில்லை;  அவரைப் போன்ற மனிதர்களை இக்காலத்தில் பார்ப்பதே அபூர்வம்.  பணம் பெரிசு அல்ல; புதுபுதுசாக நிறைய பதிப்பகத் துறையில் செய்ய வேண்டும் என்று விரும்புவர் அவர்.  சங்க இலக்கியங்களை எளிய தமிழில் மக்களுக்கு கொண்டு போய்ச் சேர்க்க வேண்டுமென்று விரும்பி ஒரு பல்கலைக் கழக பேராசிரியரிடம் அந்தப் பணியை ஒப்படைத்த பொழுது, தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயரின் பதிப்புகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு அய்யரவர்களின் கருத்திற்கேற்ப எழுதுவதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்று அதை தம் விருப்பமாகவே அந்தப் பேராசிரியரிடம் சொன்னார்.  சீவக சிந்தாமணியை மக்கள் பதிப்பாக வெளியிட்ட போதும் இதே விருப்பம் அவருக்கு இருந்தது.  சங்கஇலக்கியங்களைப் பதிப்பிக்கும் பொழுது இடது பக்கம் பாடலும், அரும்பத உரையும் வலது பக்கம் அந்தப் பாடலுக்காக உரையும், பாடிய புலவர் பற்றிய விவரங்களும் வர வேண்டும் என்று விரும்பினார்.  இதை சரிபார்க்கும் பணியை ஊர்மிளாவிடம் அவர் கொடுத்த பொழுது தான் அந்த சிரமம் அவளுக்குத் தெரிந்தது.    ஊர்மிளா சரிபார்த்ததைத் தாண்டி பெரியவர் வேறு இதே பணியைச் செய்த பொழுது, சில நேரங்களில் சங்க இலக்கியங்களுடனான தனது பரிச்சயங்கங்களைப் பற்றி அவளிடம் அவர் பகிர்ந்து கொண்ட பொழுது என்று-- அவர் மேல் அவளுக்கு தனி மதிப்பே உருவாயிற்று.   சங்க இலக்கியங்கள் பதிப்பில் இருந்த நேரத்தில் அவ்வப்போது வீட்டிலும் அவை பற்றியே லஷ்மணனிடம் அவள் பேசி விவாதித்த காலங்கள் மறக்க முடியாதவை..  சில நேரங்களில் லஷ்மணனின் பார்வை வேறு மாதிரி இருக்கும்.  பல நேரங்களில் அவன் கருத்தை மறுக்க முடியாது தவிப்பாள்.  அதையே அடுத்த நாள் பெரியவரிடம் சொல்லி விவாதிக்கும் பொழுது வேறொரு தெளிவு கிடைக்கும்.  பெரியவர், நிறைய தமிழறிஞர்களுடன், எழுத்தாளர்களுடன் பதிப்புத் துறையைத் தாண்டிய நட்பாக ஒரு உறவை வளர்த்துக் கொண்டவர். கருத்தரங்கங்கள் என்றால் அவருக்கு வெல்லக் கட்டி.  நிறைய தமிழ்க் கருத்தரங்களில் கலந்து கொள்வதை வழக்கமாகவே அவர் கொண்டிருந்தார்.  அதனால், சமூகத்தில் பதிந்திருந்த அவருக்கான பிம்பம், பதிப்பகத்திற்கும் ஒரு தனி மரியாதையைத் தேடித்தந்திருந்தது. அந்த மரியாதையும் பதிப்பகத்திற்கு ஒரு காவல் தெய்வம் மாதிரி அமைந்து அதைக் கட்டிக் காப்பாற்றுவதையும் சொல்லத்தான் வேண்டும்.

ஏதேதோ விட்டு விட்டான யோசனைகளுக்கிடையே வேலை பாட்டுக்க நடந்து கொண்டு தான் இருந்தது.  இன்றைக்கு அலுவலகம் முடிந்தவுடனேயே தி.நகர் போக வேண்டும் என்கிற நினைவும் ஊர்மிளாவுக்கு வந்தது. அஞ்சுக்கு கிளம்பினால் போக்குவரத்து நெரிசல் எப்படியிருந்தாலும் ஆறுக்குள் 'எழுத்துப்பட்டறை' அரங்கை அடைந்து விடலாம் என்று அவள் நினைத்த பொழுது, கேபின் தொலைபேசி கணகணத்தது.  எடுத்தாள்.

மறுபக்கத்தில் "அக்கா!.." என்று அழைக்கும் பொழுதே, கிருஷ்ணவேணி தான் என்று ஊர்மிளாவுக்குத் தெரிந்து விட்டது.


(இன்னும் வரும்)



24 comments:

அப்பாதுரை said...

'ஆத்மார்த்த எழுத்தாளர் பற்றிய விவரம் ரசித்தேன். 'வணிகம் என்பது எழுத்தின் நோக்கமா விளைவா?' என்ற சர்ச்சை சுவாரசியம். காசுக்காக எழுதின எழுத்துக்கும் எழுதிக் காசான எழுத்துக்கும் வித்தியாசம் இருப்பதை பாரதியார் ஒரு கட்டுரையில் அழகாகச் சொல்லியிருப்பார். சுதேசமித்திரன் பத்திரிகையில் வேலைபார்த்த போது 'இத்தனை எழுத்துக்கு இத்தனை காசு' என்ற கணக்கில் தினம் இத்தனை எழுத வேண்டும் என்று அவரைப் பிடுங்குவார்களாம். கொடி அசைந்ததும் காற்று வந்ததா மாதிரி தான் என்பது என் அபிப்பிராயம். 'தீபாவளி மலருக்கு ஒரு கதை எழுதித்தாருங்கள்' என்ற அழைப்பை ஏற்று எழுதினால் அந்த எழுத்து ஆத்மார்த்தமாக எழுந்தாலும் காசுக்கு எழுதியதா இல்லையா? கண்ணதாசன் தன் பாடல்களைக் காசுக்காக எழுதியதாக ஏற்கவே மாட்டாராம். மன்னன் பொன் கொடுப்பான் என்ற எண்ணத்தில் எழுதப்பட்ட இலக்கியங்கள் தான் இன்றைக்கும் காலம் கடந்து வாழ்கின்றன.. அவையெல்லாம் காசுக்காக எழுதியது என்று அடித்துத்தள்ளிவிட முடியுமா என்பாராம் பாரதிதாசன்.

ஸ்ரீராம். said...

கிருஷ்ணவேணியின் லக்ஷ்மி அக்காவுக்கு திருமணம் நிச்சயம் ஆகியிருக்கட்டும்....வழக்கமான ஃபார்முலாவிளிருந்து மாறி அவள் வேறு நமக்கு அறிமுகமான தங்கையை விட அழகாயிருக்கிறார்!

மகன்களில் வளர்ச்சியில் நெகிழ்வோரே இந்தக் காலத்தில் அபூர்வம். மருமானின் வளர்ச்சியில் தழுதழுப்பவர் ரொம்பவே அபூர்வம். குறைந்த சிலபிளில் பெயர் வைப்பது சிறந்ததுதான். எனக்கென்னவோ எழுத வைத்துக் கொல்லும் பெயர் என்று விஜியைச் சொல்வதை விட ரிஷியே அழகாய் இருக்கிறது! :))

ஸ்ரீராம். said...

//அதனாலே தான் நான் நினைக்கறதை இவ்வளவு தீவிரமாகச் சொல்ல முடிந்தது" என்றாள் ஊர்மிளா//

ஊர்மிள சொல்லும் இந்த வரியில் ஒரு குழப்பம்...வேலையை விட்டதால்தான் லக்ஷ்மணனால் அவர் நினைத்ததைத் தெளிவாகச் சொல்ல முடிந்ததா, அல்லது அவர் அனுபவத்தைப் பார்த்ததால் சுந்தரவதனத்திடம் ஊர்மிலாவால் இது பற்றிய கருத்தைத் தெளிவாகச் சொல்ல முடிகிறதா...? அதாவது அங்கு நான் என்று வராமல் அவர் (லக்ஷ்மணன்) என்று வந்திருக்க வேண்டுமா?

விலைகள் பற்றிய விளக்கங்கள் சிந்தையைத் தூண்டுகின்றன. எழுத்து செல்லப்பா பற்றிச் சொல்லும் சுந்தரவதனம் இடத்தில் அவரின் படைப்பாளியான நீங்கள் இருக்கிறீர்கள் என்றால்....என்னே பேறு?

ஸ்ரீராம். said...

'கொல்லும்' 'ஊர்மிள' வரிகளில் பிழைக்கு வருந்துகிறேன்....(எனக்கு இதே வழக்கமாப் போச்சு!)

பாச மலர் / Paasa Malar said...

எழுத்து தொழிலாக / எழுத்து ஆத்மார்த்தமாக இவ்விரண்டுமே நடைமுறை எதார்த்தமாகிவிட்டன...
காலத்தின் தேவை / சூழல் கருதி தொழிலாகவும் பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது...

இந்தக் கதையின் அனைத்துப் பகுதிகளிலும் பெண்கள் உளவியல் / பெண்கள் நலன் குறித்த செய்திகள் தொடர்ந்து வருவது சிறப்பு.

அக்காவைப் பார்க்கவந்துவிட்டுத் தங்கையை விரும்புவது இப்போதும் கூட நடந்து கொண்டுதானே இருக்கிறது...

எழுத்தாளக் களையின் ரசிப்பு, ரிஷியின் வளர்ச்சி குறித்தான ஊர்மிளாவின் தவிர்க்க முடியாத ஒரு கவலை...சங்க இலக்கியங்கள் குறித்த சிலாகிப்பு....சுவாரசியம்

ஜீவி said...

@ அப்பாஜி! ஆறேழு மாசங்களுக்கு முன்னால் கும்பகோணம் பக்கம் போயிருந்தேன்.கும்பகோணத்திலிருந்து தாராசுரம் போகும் வழியில் பாதி இடிந்து கிடந்த கோயிலொன்றைப் புதுப்பித்துக் கட்டுவதற்காக திருப்பணிகள் நடந்து கொண்டிருந்தன.

நல்ல வெயில். இருந்தாலும் சிதிலமடைந்திருந்த கோயிலின் கோபுர அழகு எங்களை ஈர்த்து வண்டியை நிறுத்தி இறங்கிப் போய் பார்க்கச் சொன்னது. நீண்ட மதில் சுவர். தாண்டிப் போய்ப் பார்த்தால் படைபடைக்கிற வெயிலில், பெரிய பெரிய பாறாங்கற்கள் இடையே குந்தி உட்கார்ந்து கொண்டு-- ஆறு அல்லது ஏழு பேர்கள், தவறு சிற்பிகள்-- அங்கங்கே உட்கார்ந்து தேர்ந்தெடுத்த செவ்வக வடிவ கற்பாறையில் சிலை வடித்துக் கொண்டிருந்தனர்.

ஒருத்தர் பக்கம் போய் நின்றேன். நான் அருகில் நிற்கிற உணர்வே இன்றி கொஞ்சமே தலைசாய்த்து இடுப்பு வரை முடிந்திருந்த ஒரு தெய்வத்திருவுரு- வின் மூக்கைச் செதுக்கி வடிக்கும் பணியில் தன்னை மறந்திருந்தார்.
அந்த மூக்கு உருவாகும் நேர்த்தியை உற்றுப் பார்த்தவாறு நானும் நின்றிருந்தேன்.

பக்கத்து இடிந்த மண்டப்பத்தின் பக்கமிருந்து ஒரு பெண் குரல் கேட்டது. "வாய்யா! நேரமாகலே?.. சோறு தின்னுட்டுப் போவயா!" நிமிர்ந்து வெயில் சூடு பொறுக்காமல் கண் இடுக்கிப் பார்த்தேன். பெண்ணொருத்தி சோற்றுச்சட்டியுடன் உட்கார்ந்திருக்க, அவளைச் சுற்றி மற்றவர்கள் அமர்ந்து சாப்பாட்டை உருட்டி வாயில் போட்டுக் கொண்டிருந்தனர். இப்பொழுது சுற்றிப் பார்த்ததில் அத்தனை பேரும் மண்டபம் பக்கம் போயிருப்பது தெரிந்தது.

அந்தப் பெண்ணும் நாலைந்து தடவை கூப்பிட்டு விட்டாள். என் அருகில் சிலை செதுக்கிக் கொண்டிருந்த அந்த சிற்பி அவள் கூப்பாட்டைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. நான் தான் இங்கேயும் அங்கேயும் கவனம் சிதறிப் பார்த்துக் கொண்டிருந்தேனே தவிர அவர் அவள் அழைப்பை காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. இத்தனைக்கும் அந்த நபருக்கு வயது முப்பதுக்குள் தான் இருக்கும். கைகடிகாரத்தில் மணி பார்த்தேன். மதியம் இரண்டரையைத் தாண்டிக் கொண்டிருந்தது. "சாப்பிட்டு வந்து செதுக்கலாமிலே?" என்று நான் கூட அவரிடம் கேட்கலாம் போலிருந்தது.

இதற்குள் அந்த மூக்கு வேலை முடிந்து விட்டது. ஆஹா!அந்த வளைந்த மூக்கில் தான் எவ்வளவு அழகு?.. அரைகுறையாய் வேலை முடிந்திருந்த அந்த பாறாங்கல்லை நிமிர்த்தி வைத்து, கொஞ்ச தூரம் தள்ளி போய் அழகுப் பார்த்து விட்டு ஒருவித திருப்தியுடன் தூசிப்போக கையைத் தட்டிக்கொண்டு மண்டபம் பக்கம் திரும்பி, "தோ வந்திட்டேன்.." என்று அந்த சிற்பி போன போது கலை, கலைஞன் இந்த வார்த்தைக் கெல்லாம் அர்த்தம் தெரிந்த மாதிரி இருந்தது.

வயிற்றுப்பாட்டுக்கு காசு வரும் தான்.
பணம் பட்டுவாடா செய்யும் அந்த நேரத்தில் அதற்கான எதிர்ப்பார்ப்பு இருக்கும் தான். ஆனால், அதெல்லாம் அடுத்தபடியான அப்பாற்பட்ட அந்த நேரத்து எதிர்பார்ப்பு தான்! இல்லையா, அப்பாஜி?..

G.M Balasubramaniam said...

ஒரு எழுத்தாளரிடம் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டபோது எழுதுகிறேன் என்றாராம். “அது சரி பிழைப்புக்கு என்ன செய்கிறீர்கள் “ என்று கேட்டார்களாம். நினைவுக்கு வந்தது.

G.M Balasubramaniam said...

ஒரு எழுத்தாளரிடம் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டபோது எழுதுகிறேன் என்றாராம். “அது சரி பிழைப்புக்கு என்ன செய்கிறீர்கள் “ என்று கேட்டார்களாம். நினைவுக்கு வந்தது.

அப்பாதுரை said...

ஹிஹிஹி.. ஜிஎம்பி சார்.

அப்பாதுரை said...

சிற்பியின் முனைப்பு சிலிர்க்க வைத்தது ஜீவி சார். பின்னூட்ட இலக்கியம்.

இராஜராஜேஸ்வரி said...

பேர்ன்னா எப்பவும் சின்னதா இருக்கணும். அதான் பல நேரத்லே செளகர்யம்.

Nice.Name ...

ஜீவி said...

@ ஸ்ரீராம்

எழுத்துப்பணி, அலுவலகப் பணியைச் சாப்பிட்ட பொழுது, கை நிறைய சம்பளம் வாங்கிய வேலையா, இல்லை எழுத்தா என்ற கேள்வி எழுந்த பொழுது, லஷ்மணன் எழுத்துப்பணியையே தேர்வு செய்கிறார். அந்த அளவுக்கு எழுத்தின் மேல் அவர் கொண்டிருந்த ஈடுபாட்டை உணர்ந்ததினால் ஊர்மிளா அப்படிச் சொல்வதாகக் கொண்டால்.. ஓ.கே.தானே?

'எழுத்து' சி.சு.செ. பற்றி வருகின்ற இடம்.. யதார்த்த உணர்வை ஏற்படுத்த வேண்டுமென்றால், எழுதுவது யதார்த்தம் மாதிரியே இருக்க வேண்டுமே தவிர, அச்சு அசலாக யதார்த்தமாகவே இருந்து விடக் கூடாதென்பது விதி. அப்படியே யதார்த்தமாகவே இருந்து விட்டால்,
கதைப் போர்வை கலைந்து உண்மைச் சம்பவம் ஆகிவிடும். நீங்கள் 'திலகம்' பத்திரிகை பற்றி குறிப்பிட்ட பொழுதும் அதனால் தான் அது இல்லை என்றேன்.

தொடர் வருகைக்கும், ஆழ்ந்து வாசித்து பகிர்ந்து கொள்வதற்கும் நன்றி, ஸ்ரீராம்!

கோமதி அரசு said...

வாழ்க்கைன்னா செய்ற வேலையோட எல்லாம் போய்டறதா, என்ன? மனசுக்கு பிடிச்சதுன்னு ஒண்ணு இருக்கும் இல்லையா? அப்படித்தான் சின்ன வயசிலிருந்தே அவனுக்கு கதைப் புஸ்தகமெல்லாம் படிக்கறது, எழுதறங்கறதிலே ஒரு ஈடுபாடு! எப்பவும் ஏதாவது கிறுக்கிண்டே இருப்பான். அவனுக்கு மனசுக்குப் பிடிச்சதிலே ஷைன் ஆறதுன்னும் ஒண்ணு இருக்கில்லையோ! எத்தனை பேருக்கு இதெல்லாம் கைக்கெட்டறது?.. உங்க புண்ணியத்லே அந்த பாக்கியம் அவனுக்குக் கிடைச்சிருக்கு. வளந்திட்டானே தவிர சூது வாது தெரியாது. லஷ்மணன் சார் கிட்டே சொல்லு. அவர் அனுபவப்பட்டவர். இந்தத் தொழில்லே இருக்கற தப்பு ரைட்டைச் சொல்லி அவர் தான் அவனுக்கு வழிகாட்டணும்.. நான் சொன்னேன்னு சொல்றையா, குழந்தை?" என்றார்.//

மனசுக்கு பிடித்தவேலையை எந்த இடையூரும் இல்லாமல் செய்வதே பெரிய வரம் தான்.

அதற்கு நல்ல வழிகாட்டியும் கிடைத்து விட்டால் கேட்கவே வேண்டாம்.

ரிஷிக்கும் இரண்டும் கிடைத்து விட்டது.
இனி முன்னேறி செல்ல வேண்டியது தான்.

கோமதி அரசு said...

ஆரம்ப தீவிரம், நிறைய பப்ளிஷ் ஆகி கொஞ்சம் செட்டில் ஆனதும் காணாமப் போயிடும். 'இருந்த சரக்கெல்லாம் காலியாடுத்து; இனிமே என்ன செய்வேன்'ங்கற மாதிரி ஒரு நிலைன்னு வைச்சிக்கோயேன். இந்த ரிஷி அப்படி ஆகாம இருக்கணும். அதான் என் ஆசை' என்று அவன் சொன்னதை நினைத்துக் கொண்டாள்.//

நல்ல எழுத்தாளன் என்று தன்னால் அடையாள்ப் படுத்தபட்ட ரிஷி நின்று நிலைத்து எழுத வேண்டும் என்ற லக்ஷ்மணின் எண்ணம் அவரின் உயர்ந்த உள்ளத்தை காட்டுகிறது.

ஜீவி said...

@ பாசமலர்

படைப்பிலக்கியம் படைப்போர் ஆசைப்பட்டாலும் எழுத்து ஒன்றையே தொழிலாகக் கொள்ள முடியாத நிலை தான்! உபதொழிலாக வேண்டுமானால் அது இருக்கலாம்.

தங்கள் வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி, பாசமலர்!

ஜீவி said...

@ ஜிஎம்பீ

ஒரு பத்திரிகையில் வந்த ஜோக் அது.
அதற்கு மேல் என்ன சொல்ல இருக்கிறது?..

ஜீவி said...

@ அப்பாதுரை (3)

நீங்கள் ரசிப்பீர்கள் என்பதற்காகத் தான் நீண்டு போனாலும் விவரித்து எழுதினேன். மீள் வருகைக்கு நன்றி.

ஜீவி said...

@ இராஜராஜேஸ்வரி

நேர்த்தி. நன்றி.

ஜீவி said...

@ கோமதி அரசு

உங்கள் நல்ல மனது பல நேரங்களில் வேறு மாதிரி எழுத நினைத்தாலும் அப்படி வேண்டாம் என்று எனக்கு நேர்வழி காட்டி விடும். இந்த பின்னூட்டமும் அப்படியான ஒரு வழிக்காட்டல் தான்!

தொடர்ந்து படித்து கருத்து சொல்வதற்கு நன்றி, கோமதிம்மா.

கோமதி அரசு said...

இலங்கை பயணம் நிறைவு பகுதி எழுதி இருந்தேன் . உங்கள் பார்வைக்கு வரவில்லை போலும். நேரம் இருக்கும் போது படித்து கருத்து சொல்லுங்கள் சார்.
நன்றி.

கோமதி அரசு said...

கதைகளில் உங்கள் நல்ல உள்ளம் தெரிகிறது. நான் வழிகாட்டியா!

ஜீவி said...

@ கோமதி அரசு

எழுத்தாள கொனஷ்டை என்று ஒன்று உண்டு. (கொனஷ்டை என்கிற புனைப்பெயரில் ஒரு பெண் எழுத்தாளரே இருந்தார். 'கலைமகள்' பத்திரிகையில் நிறைய கதைகள் எழுதிய நல்ல எழுத்தாளர்) கதையை எழுதிக் கொண்டு வரும் பொழுதே, 'இப்படித் திருப்பம் கொடுக்கலாமா, அப்படிச் செய்யலாமா, அதைக் கொண்டு வந்து இப்படி இந்த இடத்தில் சேர்க்கலாமா' என்று மனம் பரபரத்துக் கொண்டிருக்கும்.

அப்படி ரிஷி விஷயத்தில் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது 'ரிஷி இனி முன்னேறிச் செல்ல வேண்டியது தான்' என்று நீங்கள் குறிப்பிட்டிருந்ததைப் பார்த்த பொழுது 'எத்தனையோ எழுதப் போகிறோம், வேறொன்றில் அப்படிச் செய்து கொண்டால் போயிற்று'என்று நினைத்ததை கைகழுவி விட்டேன்.

இணையத்தில் எழுதும் பொழுது ஆர்வத்துடன் படிப்பவர்களின் எண்ணம் தெரிகிறது. கதையின் முழு உருவிற்கு பங்கம் ஏற்படாமல் இருக்கக் கூடிய
மாற்றங்களை படிப்பவரின் மன இசைவிற்கேற்ப எழுதலாமே என்று தான்.

தொடர்ந்த வாசிப்பிற்கு மிக்க நன்றி, கோமதிம்மா.

Geetha Sambasivam said...

என்னோட கேள்வி என்னன்னா, ஒரு எழுத்தாளர் மனசிலே ஒரு விஷயத்தைப் பத்தி எழுதணுங்கற அர்ஜ் தோணி மனம் குவிஞ்சு அதை எழுதறச்சேயே இந்த காசுங்கற நினைப்பு வந்திடறதான்னு தான். அப்படின்னு இருந்தாத்தான் எழுதறதே காசுக்காகன்னு எடுத்துக்கலாம் இல்லையா?.."//

பலமுறை யோசிக்கும் விஷயம் இது. காசுக்காகவெல்லாம் எப்படி எழுத முடியும்? அப்படி எழுதினால் அது திரும்பத் திரும்ப அரைத்த மாவாகவே அமையும். பலரும் அப்படி அரைப்பதைப் பார்க்கிறேன். :(((

ஜீவி said...

@ Geetha Sambasivam

உணர்ந்து சொல்லியிருக்கிறீர்கள்.

Related Posts with Thumbnails