மின் நூல்

Saturday, May 5, 2012

பார்வை (பகுதி-44)

ட்டோக்காரப் பெரியவர் நல்லவராகத் தெரிந்தார்.  இடத்தைச் சொன்னதுமே "போலாம். முப்பது ரூபா கொடுங்க.." என்று நியாயமான ரேட்டைச் சொன்னதும் மறு பேச்சு பேசாமல் வித்யா கெளதமுடன் ஏறிக்கொள்ள உஷாவும் அடுத்து ஏறி உட்கார்ந்து கொண்டாள்.

பெரியவருக்கு அந்தப் பகுதியே அத்துப்படியாக இருந்தது.  முரட்டுத்தனமாக ஆட்டோவை விரட்டி சாகஸம் செய்யாமல் நிதானமாக ஸ்பீட் பேக்கரில் ஏற்றி இறக்கி பாங்க் ஆப் இந்தியா ஒட்டிய லஷ்மித் தெருவில் திருப்பினார்.

"உங்களுக்கு ஸ்டாண்ட் எங்கே?.. மாம்பலத்தில் தானா?" என்று உஷா கேட்டாள்.

"இல்லேம்மா.. கே.கே.நகர்லே.  ஈஎஸ்ஐயைத் தாண்டி."

"இல்லே. இந்தப் பகுதிலாம் நல்லாத் தெரிஞ்சிருக்கேங்கறத்துக்காகக் கேட்டேன்."

"நீங்க ஏறினீங்கல்லே, அதுக்கு பக்கத்லே தான் போஸ்டல் காலனிலே ஒரு சவாரியை இறக்கிட்டு உங்கத் தெருவாலே வந்தேன். இப்பல்லாம் பெரும்பாலும் சவாரிலாம் அங்கேயிருந்து இங்கே, இங்கேயிருந்து அங்கே அப்படித்தான் இருக்கு. கிட்டத்தட்ட மாம்பலத்லே அல்லா இடமும் எனக்கு அத்துப்படி தான்."

"செல் வைச்சிருக்கீங்களா.. வெளிலே போகணும்னா ஆட்டோ தான். பக்கத்திலே இருந்தீங்கன்னா, வரலாம்லே. அதுக்காகக் கேட்டேன்" என்றாள் வித்யா.

"செல் தானே?  இருக்குங்களே.. நம்பர் சொல்லட்டுங்களா?"

"இருங்க.. நோட் பண்ணிக்கறேன்.." என்று ஹேண்ட் பாக்கிலேந்து தன் செல்லை எடுத்தாள் வித்யா. "சொல்லுங்க..."

ஆட்டோ பெரியவர் நம்பரைச் சொல்ல தன் செல்லில் குறித்துக் கொண்டாள்.
"உங்க பேரு என்ன?"

"பெரியசாமி.."

வித்யா தன் செல்லில் அவர் பெயரையும் குறித்துக் கொண்ட பொழுது அந்தப் பெரியவரே சொன்னார். "எங்கப்பா வைச்ச பேர் இது;  எங்கத் தாத்தா பேரு.  தாத்தான்னா அப்பாரு அப்பா.  என் அப்பாக்கு அவரு அப்பா மேலே அத்தனை பிரியம்.  அதான் அவரு அப்பா பேரே எனக்கு வச்சிட்டார்.  எனக்குன்னா என் அம்மா பேர்லே அத்தனை பிரியம்.  அதுனாலே என் பையனுக்கு என்னோட அம்மாவோட அப்பா பேரு வைச்சிருக்கேன்.  அவரு பேரு நாராயணன்" என்றார்.

தன் பையனின் பெயரை அவர் சொன்ன விதம் அழகாக இருந்தது. குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும் சரித்திரத்தைப் பற்றி ஒரு புஸ்தகமே எழுதலாம் போலிருந்தது வித்யாவுக்கு.  புஸ்தகம் இல்லாட்டாலும் ஓய்வா உட்கார்ந்து ஒரு சிறுகதையானும் இது பத்தி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.  அப்படி ஒன்று எழுதினால் வரிசையாக தாத்தாவுக்கு அப்பாவிலிருந்து வரிசையாக ஆரம்பித்து தாத்தா, அப்பா என்று எல்லோர் பெயர்களும் இருக்கும்படி பெயர் வைத்துக் கொள்கிறவர்களின் விவரங்களையும் எழுத வேண்டும் என்று எண்ணினாள்.

ஒரு நிமிடம் யாரும் பேசவில்லை.  எல்லையம்மன் கோயில் தெருவின் முனையில் ஆட்டோவை வலது பக்கம் திருப்பியபடி, "எங்களுக்குக்கெல்லாம் ஈரோடு பக்கம்" என்றார் ஆட்டோ பெரியவர்.

"ஈரோடு பக்கம்ன்னா?..எந்த ஊர்?" என்று ஆவலோடு உஷா கேட்டாள்.

"பவானிம்மா.  உங்களுக்குத் தெரியுமா?"

"தெரியுமாவாவது? எனக்கு கோபி" என்றாள் உஷா.

"அப்படியாம்மா. ரொம்ம சந்தோசம்மா.." என்று அவர் மேட்லி சப்-வேயில் இறங்காமல் வலது பக்கம் திருப்பினார். "இங்கே தான் ஈபி ஆபிஸ் பக்கம் அந்த கல்யாணச் சத்திரம் இருக்கு.." என்றார்.  கொஞ்சம் தாமதித்து, "நான் கூட டிரான்ஸ்போர்ட் டிபார்ட்மெண்ட்லே டிரைவரா இருந்து ரிடையர் ஆனவன் தாம்மா" என்றார்.  "வீட்டிலே சும்மா உக்காரப் பிடிக்காம ஆட்டோ ஓட்ட ஆரம்பிச்சிட்டேன்.. பொழுதும் போகுது.  பல ஜனங்களோட பேசிப் பழகறதும் மனசுக்கு சந்தோசமா இருக்கு.  என்ன சொல்றீங்க?" என்றார்.

"நீங்க சொல்றது சரிதான்" என்றாள் உஷா.

"உங்க பையன் நாராயணன் வேலைக்குப் போறாரா?" என்று கேட்டாள் வித்யா.

"போறான்ம்மா..  அடையார்லே பிரிண்டிங் டெக்னாலஜி படிச்சான்.  இப்போ அம்பத்தூர்லே ஒரு பெரிய பிரஸ்லே மானேஜரா இருக்கான். வயசு இருப்பத்தாறு ஆச்சு.  அவனுக்குத் தான் கல்யாணத்துக்கு பாத்துக்கிட்டு இருக்கேன்.  அது என்னவோ நெருக்கத்லே வர்ற மாதிரி இருக்கு. ஆனா முடிய மாட்டேங்குது.  சாதகத்லே ஏதோ கோளாறுங்கறாங்க.."

"ஜாதகம்ன்னு போயிட்டா.. எல்லா ஜாதகத்திலேயும் ஏதோ ஒண்ணு குத்தம் குறை சொல்லத்தான் சொல்றாங்க.. வேளை வரணும்.  அது வந்திட்டா போதும்.  இப்படி அப்படி எப்படியோ பிள்ளை வீட்டுக்காரங்களுக்கும் பொண்ணு வீட்டுக்காரங்களுக்கும் தெரிஞ்சி கல்யாணம் முடிஞ்சு போய்ட்றது.." என்று உஷா சொல்லும் பொழுதே, கல்யாண மண்டபம் வந்து விட்டது.

"அதெல்லாம் நம்ம கைய்லே இல்லே.  கல்யாணம்லாம் சொர்க்கத்லே நிச்சயக்கப்பட்றதுன்னு அதுக்குத்தான் சொல்றாங்க போலிருக்கு.. பெரியவரே, உங்க பையன் கல்யாணம் பத்தி பேசிகிட்டே வந்தோமா.. இதோ, கல்யாண சத்ரமும் வந்தாச்சு.. ஆக, சீக்கரமே உங்க பையனுக்குக் கல்யாணம் நடந்திடும் பாருங்க.." என்று வித்யா சொல்லிக் கொண்டே ஆட்டோவிலிருந்து இறங்கிய போது பெரியவரின் முகம் மலர்ந்தது.

வழக்கமாக இல்லாமல் ஆட்டோ பெரியவரும் தன் ஸீட்டிலிருந்து இறங்கி வண்டியைச் சுற்றிக்கொண்டு வந்து நின்றார்.  வித்யாவிடம் ஐம்பது ரூபாய் நோட்டாக இருந்தது.  அவரிடம் பாக்கியைக் கொடுப்பதற்கு இருபது ரூபாய் சில்லரை இல்லாமலிருந்தது.  அதற்குள் உஷா தன் பர்ஸைத் திறந்து பார்த்து "எங்கிட்டே இருக்கு.."என்று மூன்று பத்து ரூபாய் நோட்டுகளை எடுத்துத் தந்தாள்.  வாங்கிக் கொண்ட ஆட்டோக்காரர் அவர்கள் சத்திரத்தின் படியேறும் வரை பார்த்திருந்து விட்டுக் கிளம்பினார்.

பழைய மண்டபத்தை சமீபத்தில் தான் புதுப்பித்திருந்தார்கள் போலிருக்கு.  அங்கங்கே புது மோஸ்தரில் காணப்பட்ட விதவிதக் கலர் வெள்ளையடிப்பு அதைக் காட்டிக் கொடுத்தது.  உள் ஹாலின் ஒரு கோடியில் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் இடைவெளி விட்டு இரண்டடி உயரத்தில் மார்பிளில் மேடை கட்டியிருந்தார்கள்.  அங்கே போடப்பட்டிருந்த இரண்டு நாற்காலிகளுக்கு முன்னால் ஒரு மைக்கும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அவர்களை முதலில் பார்த்தது லஷ்மணன் தான். பார்த்தவுடன் மலர்ச்சியுடன் அவர்கள் இருக்குமிடத்திற்கு வந்தான்.  "வாங்க வித்யா! வாங்க, உஷா!" என்று அவன் சொன்னது உஷாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. தனக்குத் தெரியாத யார் இது தன் பெயரை இவ்வளவு சரியாகச் சொல்வது என்று லஷ்மணனை ஏறிட்டுப் பார்த்தாள்.  அவள் ஆச்சரியத்தைப் பார்த்து, "சார் தான் அபராஜிதன்.." என்று வித்யா சொன்ன போது சட்டென்று அவள் முகம் பூராவும் மலர்ந்தது.  "உங்க போட்டோவை பத்திரிகைகள்லே பாத்திருக்கேன்.. ஆனா, நேர்லே பாக்கறச்சே ஏதோ வித்தியாசம் தெரியறது..  அதான் சட்டுன்னு தெரிலே.. ஸாரி.." என்றவள், "அதுசரி, அது எப்படி என் பேர் உங்களுக்குத் தெரிஞ்சது?... முன்னே பின்னே பார்த்ததில்லையே!" என்று வியந்தாள்.

"உங்களைப் பத்தி வித்யா சொல்லியிருக்காங்க.. அதான்.. ஒரு கெஸ் தான்!  சரியாப் போயிடுத்து.." என்று சிரித்துக் கொண்டே லஷ்மணன் சொன்னவுடன், "எஸ்.. எங்க ஸ்டோருக்கு நீங்க வந்திருக்கீங்க, இல்லையா; அப்பவே பாக்க முடியாம போயிடுத்து.. இவ்வளவுக்கும் நான் உங்களோட அட்மைரர்! அப்படியும் இந்த வித்யா சொல்லாம விட்டுட்டா!" என்று வித்யாவின் கோர்ட்டில் பந்தைத் தள்ளினாள்.

"எங்கே ஊர்மிளாவைக் காணோம்?" என்று வித்யா கேட்பதற்கும் ஊர்மிளா மண்டபத்தின் உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது. அவளைப் பார்த்ததும் வித்யாவின் மனம் சந்தோஷத்தில் குதி போட்டது.. "ஹாய், ஊர்மிளா!" என்று பக்கத்தில் போய் அவளை அணைத்துக் கொண்டாள்..

"நீங்கள்லாம் வந்து ரொம்ப நேரமாச்சா?.." என்று கேட்ட ஊர்மிளா, "நீங்க, 'ஷா'- அதான் உஷா தானே?" என்று உஷாவைப் பார்த்துக் கேட்டதும் உஷா, வித்யாவைப் பார்த்து நெகிழ்ந்தாள்.  "இந்த வித்யாவைப் பாருங்க.. எல்லாருக்கும் என்னைப் பத்திச் சொல்லியிருக்கா.. ஆனா, எனக்குத் தான்.." என்று அவள் தடுமாறும் போதே, "உஷா! இவங்க தான் அபராஜிதன் சார் மிஸஸ்.. ஊர்மிளா!" என்று வித்யா சொன்ன போது, ஆர்வத்துடன் ஊர்மிளாவின் கைகள் இரண்டையும் பற்றிக் கொண்டாள் உஷா..  ஊர்மிளாவைப் பார்த்ததிலிருந்து நெருங்கிப் பழகிய தோழி ஒருத்தியை நெடுநாள் பிரிந்து இப்பொழுது திடீரென்று பார்ப்பது போல அவளுக்கு இருந்தது.

"வாங்க.. அந்தப் பக்கம் போலாம்.. நிறைய தோழியர்கள் வந்திருக்காங்க, பாருங்க" என்று ஊர்மிளா அவர்களை அழைத்துக் கொண்டு பெண்கள் வரிசையாக அமர்ந்திருந்த பக்கம் நகர்ந்தாள்.  ஊர்மிளாவைப் பார்த்ததும் கும்பலாக இருந்த அந்த பெண்கள் மத்தியில் ஒரு புது உற்சாகமே தொற்றிக் கொண்ட மாதிரி இருந்தது.

நிறையப் பேரை அவர்கள் பெயரைச் சொல்லிக் கூப்பிடும் அளவுக்கு ஊர்மிளாவுக்குத் தெரிந்திருந்தது.  உஷாவுக்கு சிலர் பெயரைக் கேட்ட பொழுது வார இதழ்களில் அச்சில் அவர்களின் பெயரைப் பார்த்த ஞாபகம் வந்து, 'ஓ! அவர்கள் தானா இவர்கள்'  என்று ஆச்சரியத்துடன் நினைத்துக் கொண்டாள்.

மொத்தத்தில் உஷாவுக்கு அது ஒரு புது அனுபவமாகவே இருந்தது.  எழுதுகிற உலகம், அது சம்பந்தப்பட்டவர்கள் என்று கும்பலாகப் பார்த்த பொழுது இதெல்லாம் பற்றி இத்தனை நாள் ஏன் தனக்குத் தெரியாதிருந்தது என்று ஒரு இழப்புணர்வே ஏற்பட்டது.  பத்திரிகைகள் வாங்குவதில் எந்தக் குறைச்சலுமி ல்லை; சொல்லப்போனால், அன்றாட வேலைகளில் பத்திரிகைகள் படிப்பதும் ஒன்றாகிப் போன சமாசாரம் அது.  ஒன்றாக மட்டுமில்லை, எழுதுபவர்களின் எழுத்துக்களை ஒரு பொழுது போக்கு போல படித்து அடுத்த வினாடியே படித்த பத்திரிகையைத் தூக்கிப் போடும் பழக்கமில்லை அவளுக்கு.  விசேஷமாக மனத்தில் தைக்கிற மாதிரி ஏதானும் ஒன்றைப் படித்தாளானால், அப்படிப் படித்தது நெடுநேரம் அவள் மனத்தைச் சுற்றிக் கொண்டிருக்கும்.  படித்தது அவளுக்குப் பிடித்திருந்தால் அதை எழுதியவர் பெயரைப் புரட்டிப் புரட்டி இரண்டு மூன்று தரம் பார்த்து, மனத்தில் அவர் பெயரைப் பதிய வைத்துக் கொள்வாள்.  அவள் நினைப்பதற்கு மாறுபட்டு எழுதியது இருந்தாலும், மறக்காமல் தான் நினைத்ததை அந்தப் பத்திரிகைக்கு தன் கருத்தாக எழுதிப் போடுவாள். அப்படி எழுதிப் போட்ட அவள் கடிதங்கள் நிறைய பத்திரிகைகளில் பிரசுரமாகியிருக்கின்றன.  சில நேரங்களில் உஷா என்றும் பல நேரங்களில் 'ஷா' என்றும் பெயர் வைத்துக் கொண்டு எழுதியிருக்கிறாள். 'ஷா' போன்ற ஆண்களுக்கு இதையெல்லாம் புரிந்து கொள்ள முடியாது' என்கிற மாதிரி காட்டமாக அவள் அந்தப் பெயர் கொண்டு எழுதிய ஒரு கடிதத்திற்கு பதிலாக இன்னொரு கடிதம் பிரசுரமானபோது, நாள் பூரா அதை நினைத்து நினைத்துச் சிரித்திருக்கிறாள்.  அவ்வளவு தூரம் போவானேன்,  ஆசிரியருக்கு கடிதம்' பகுதிக்கு எழுதும் 'ஷா' இவள் தான் என்று தெரிந்தால், இப்பொழுது கூட இந்தப் பெண்கள்லேயே எத்தனை பேர் அவளைச் சுற்றிக் கொள்வார்களோ' என்று நினைக்கையிலேயே அவளுக்குப் பெருமிதமாக இருந்தது.

அப்படி அவள் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே, அவள் கையைப் பற்றி அவளை இன்னொருவரிடம் காட்டி, "இவங்களைத் தெரியுமா? இவங்க தான்,  'ஆசிரியருக்கு கடிதங்கள்' எழுதும் 'ஷா' என்கிற உஷா!" என்று யாரிடமோ ஊர்மிளா சொன்ன போது அந்தப் பெண் தன் இடத்திலிருந்து எழுந்தே வந்து, உஷாவை அணைத்துக் கொண்டாள்.

"உங்கள் கடிதங்களைப் படிச்சே உங்கள் பேர் மனசிலே பதிஞ்சு போயிடுத்து.. யார் இந்த ஷா, இப்படி அருமையா எழுதறாரே'ன்னு அடிக்கடி நெனைச்சிப்பே ன்" என்ற அந்தப் பெண் அவளுக்கு அருகில் ஒரு பக்கம் காலியாக இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்."அதுவும் 'வெண்ணிலா' பத்திரிகையில் ரிஷியின் 'மெஜாட்டியோ' கதையைச் சாடி நீங்க எழுதியிருந்த கடிதம், ஓகோ ரகம், உஷா" என்று அவள் சிலாகித்துச் சொன்ன பொழுது வானத்திலே பறக்கிற மாதிரி இருந்தது உஷாவுக்கு.

அதே சமயத்தில், அதைக் கேட்டு இன்னொரு பக்கத்தில் அமர்ந்திருந்த வித்யாவிற்கு என்னவோ போலிருந்தது.


(இன்னும் வரும்)









16 comments:

ஸ்ரீராம். said...

ஆட்டோக் காரர்களுக்கு நகர் முழுவதுமே நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். அதிலும் கே கே நகருக்கும் போஸ்டல் காலனிக்கும் அதிக தூர வித்தியாசமில்லையே...! :))

வித்யா இன்னும் முதலில் தோன்றிய ஐடியாவையே கதையாக்கவில்லை. இப்போது இன்னொரு ஐடியா! குறித்து வைத்துக் கொள்ள மாட்டாரோ....

ஆட்டோ ஓட்டுனர் பையன் பெயர் லோகநாதன் என்று எப்படி வித்யாவுக்குத் தெரிந்தது? அவர் சொல்லவில்லையே.... ஒரு பொருள் மறைபொருளா...!!

:)))

ஜீவி said...

@ ஸ்ரீராம்

வித்தியாசம் இல்லை தான். இருந்தாலும் போக வேண்டிய இடத்திற்கு அவர் ஒரு குறுக்கு வழியைத் தேர்ந்து வண்டியைச் செலுத்தியதால் உஷா அப்படிக் கேட்டாள்.

ஆமாம். அதே யுக்தி தான். நேரடியாகக் குறிப்பிடாமல் விட்டு,
ஆழ்ந்து படிக்கிறவர்களுக்குப் புரிகிற மாதிரி எழுதியதில் மறைத்து வைத்த ஒன்று தான். knowing inner text- என்கிற ஆங்கில வரியை அருமையா கத் தமிழில் சொல்லியிருக்கிறீர்கள். மறைபொருள் என்கிற வார்த்தையை மட்டும் மறைந்திருக்கும் பொருள் என்று பொருள் கொள்ள வேண்டும்.

முதலில் கொடுத்த பெயர் லோகநாதன். பப்ளிஷூம் பண்ணியாச்சு; அப்புறம் கதையை வேறு மாதிரி கொண்டு போகலாம் என்று எண்ணம் தோன்றி ஒரு காரணத்திற்காக அந்தப் பெயரை நாராயணன் என்று மாற்றி விட்டேன். எதற்காக இந்த மாற்றம் என்று கண்டுபிடிப்பதும் உங்களுக்கு ஜூஜூபி தான்!

தொடர்வதற்கு நன்றி, ஸ்ரீராம்!

கோமதி அரசு said...

"அதெல்லாம் நம்ம கைய்லே இல்லே. கல்யாணம்லாம் சொர்க்கத்லே நிச்சயக்கப்பட்றதுன்னு அதுக்குத்தான் சொல்றாங்க போலிருக்கு.. பெரியவரே, உங்க பையன் கல்யாணம் பத்தி பேசிகிட்டே வந்தோமா.. இதோ, கல்யாண சத்ரமும் வந்தாச்சு.. ஆக, சீக்கரமே உங்க பையனுக்குக் கல்யாணம் நடந்திடும் பாருங்க.." என்று வித்யா சொல்லிக் கொண்டே ஆட்டோவிலிருந்து இறங்கிய போது பெரியவரின் முகம் மலர்ந்தது.//

வித்யா திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சியக்கபட்டு இருக்கு என்று சொன்னாலும், அந்த நேரம் சீக்கிரமே உங்கள் பையனுக்குக் கல்யாணம் நடந்திடும் என்று சொன்னவுடன் அதில் தான் எவ்வளவு மகிழ்ச்சி பெரியவருக்கு!
இப்படி நல்ல வார்த்தைகளால் மற்றவர்களை மகிழ்விக்க எத்தனை பேருக்கு தெரிகிறது !

ஆட்டோ ஓட்டுனர் மகன் நாராயணனுக்கு விரைவில் திருமணம் நடக்க வாழ்த்துக்கள்.

நாராயணனக்கு பெண் இருக்கிறாளே இக் கதையில்.

dondu(#11168674346665545885) said...

அப்பாடா முதல் அத்தியாத்திலேருந்து படிச்சாச்சு. மூச்சு விட்டுக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பாச மலர் / Paasa Malar said...

ஆட்டோ ஓட்டுநர் பையன் தான் வெணி தங்கைக்கான மாப்பிள்ளையோ...

பெயரளவில் தெரிந்தவர்களை நேரில் பார்க்கும்போது கிடைக்கும் அனுபவம் அலாதிதான்..

என்னென்ன தகவல்கள் எழுத்துப்பட்டறையில் கிடைக்கும்..காத்திருக்கிறோம்..

ஜீவி said...

@ கோமதி அரசு

//நாராயணனக்கு பெண் இருக்கிறாளே இக் கதையில்.//

ஆமாம், கோமதிம்மா. ஸ்ரீராமுக்கு பதிலளிக்கும் பொழுது அந்த எண்ணம் தான். பார்க்கலாம்.

ஜீவி said...

@ Dondu

வாங்க, டோண்டு சார்! ரொம்ப சந்தோஷம். காலையிலேயே பார்த்து விட்டேன். நீங்கள் தொடர்ந்து படித்துக் கொண்டு வருவதோடு அங்கங்கே பின்னூட்டமும் போட்டுக் கொண்டு வருவதும் தெரிந்தது. அதனால் தான் அவ்வப்போதே மாடரேஷனும் செய்து கொண்டு வந்தேன்; பின்னால் மறுமொழி கொடுத்துக் கொள்ளலாம் என்று. எடுத்தால் ஒரே மூச்சில் படித்து முடித்து விடுவது தான் உங்கள் வழக்கம் போலிருக்கு.

'ஆத்மாவைத் தேடி'- தொடரில் கூட அப்படித் தானே செய்தீர்கள்?..ஞாபகம் இருக்கா? 'ஆ.தே' பாதியில் நின்றிருக்கிறது. இதைச் சீக்கிரம் முடித்து விட்டு அங்கு போக வேண்டும்.

'அப்பாடா'வில் ஆயாசம் தெரிந்த மாதிரி இருந்தது. தொடர்ந்து படித்ததாலோ?..

அன்புடன்,
ஜீவி

ஜீவி said...

@ பாசமலர்

//பெயரளவில் தெரிந்தவர்களை நேரில் பார்க்கும்போது கிடைக்கும் அனுபவம் அலாதிதான்.. //

அந்த உணர்தலை பல தடவை நானும் அனுபவித்திருக்கிறேன், பாசமலர்! அதனால் தான் தன்னாலே அதுவும் எழுத்தாகியிருக்கிறது போலும்!

வேணியின் அக்கா விஷயத்தில் இப்பொழுது பெயர் மாற்றம் அளவில் இருக்கிறது. மற்றப் பொருத்தம் எல்லாம் எப்படிப் போகிறது என்று பார்க்கலாம்.

'எழுத்துப் பட்டறை' சமாச்சாரம் கட்டுரையாகிவிடக்கூடாது என்கிற எண்ணம் மேலோங்கியிருக்கிறது.
பார்க்கலாம்.

dondu(#11168674346665545885) said...

ஆயாசம் இல்லை. ஆறுதல், அதாவது நடுவில் தடங்கல் வராமல் முடித்து விட்டேன் என.

ஆத்மாவின் ராகங்களையும் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அப்பாதுரை said...

இதெல்லாம் ஆள் பெயர் மாதிரியில்லே இருக்கு? அவரு பவானின்னா இவங்க கோபியா? :)

Geetha Sambasivam said...

யாருக்கு மாப்பிள்ளை யாரோ, அவர் எங்கே பிறந்திருக்கிறாரோ! :))))

ஜீவி said...

@ டோண்டு

ஓ! மின்சாரத் தடையைச் சொல்கிறீர்களா?..

அது, 'ஆத்மாவைத் தேடி..'

ஜீவி said...

@ அப்பாதுரை

பவானி உங்களுக்குத் தெரியும்.

கோபி கோபிச்செட்டிபாளையத்தின் சுருக்கம்.

அந்த திருமண மண்டபம் பெயர் மறந்து விட்டது. 'அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்' காட்சியை சிமிண்ட் கலவையில் சித்திரப்படுத்திய முகப்போடு அற்புதமாக இருக்கும்.

ஜீவி said...

@ Geetha Sambasivam

அடுத்த வரி,

எந்த 'பார்வை' பட்டு..

இல்லையா?..

இராஜராஜேஸ்வரி said...

குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும் சரித்திரத்தைப் பற்றி ஒரு புஸ்தகமே எழுதலாம் போலிருந்தது ....

நல்ல பயனுள்ள ஆராய்ச்சி

ஜீவி said...

@ இராஜராஜேஸ்வரி

இந்த வியாபார உலகில் எதற்குத் தான் புஸ்தகம் இல்லை?.. முதலில் ஒன்று பற்றி விருப்பத்தை ஏற்படுத்துவது அப்புறம் அந்த விருப்பத்தை பூர்த்தி செய்வது என்று போய்க்கொண்டிருக்கி றது. புதுபுது விருப்பங்கள். அதற்கேற்பவான அல்லாடல்கள்.

Related Posts with Thumbnails