மின் நூல்

Tuesday, May 15, 2012

பார்வை (பகுதி-45)

ஷாவின் பக்கம் நன்றாகத் திரும்பி உட்கார்ந்து கொண்டு அந்தப் பெண்ணும் உஷாவும் பேசுவதை வித்யா உற்று கவனிக்கலானாள்.  வேறு எங்கையோ பார்க்கிற மாதிரி போக்குக் காட்டிக் கொண்டு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று அவள் கவனித்திருக்கலாம்.  ஆனால் அவளால் அப்படியெல்லாம் வேடம் போடமுடியாது என்பது தான் வெளிப்படையான அவள் செயலுக்குக் காரணம் ஆயிற்று.

"விஜி எழுதிய அந்தக் கதை நன்றாகத் தான் இருந்தது.  ஆனால் ஆண் வாடை அந்தக் கதையில் அதிகம்.  அதான் ஒரு உறுத்தலாக எனக்குப் பட்டது" என்றாள் அந்தப் பெண்.

"ஆண் வாடைன்னா?.. என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்குப் புரியலையே?" என்றாள் உஷா.

"ஆணின் மமதைன்னு வேணா வைச்சிக்கங்க..  இந்த மமதை அந்தக் கதையின் ஒவ்வொரு வரியிலும் இழைஞ்சு கிடக்கறதை நீங்க உணர்லையா?" என்றாள் அந்தப் பெண்.

"அப்படியா சொல்றீங்க?.."  என்று வியப்புக் காட்டினாள் உஷா.

"அப்படி இல்லைனா?.. அந்தத் தீவிலே காட்டுவாசிகளிடம் மாட்டிக்கிட்டு உயிர் போகிற நிலையில்,  அந்த இக்கட்டில் தன்னைக் காப்பாற்ற வந்தப் பெண்ணிடம் அப்படியா அவனால் நடந்து கொள்ள முடியும்?"

"இல்லை, மேடம்.." என்று அவள் சொன்னதை மறுத்தாள் உஷா. "கதை பூரா இயல்பா ஓர் ஆண் தனக்கு நேர்ந்த அனுபவத்தை விவரிக்கற மாதிரியே அந்த 'மெஜாட்டியோ' கதை போர்றது.  ஆண் சொல்ற மாதிரியே எழுதினதாலே உங்களுக்கு அப்படித் தோணியிருக்கலாம்.  கடைசிலே மொத்த தன் பார்வையும் எவ்வளவு தப்புன்னு அந்த ஆண் ஃபீல் பண்றதை-- கதை படிக்கறவங்களை ஒரு அதிர்ச்சிக்குள்ளாக்கற மாதிரி-- ஒரே வார்த்தைலே சொல்லி விஜி கதையை முடிச்சது அற்புதம் இல்லையா? இதிலே ஆணின் மமதை எங்கிருக்குன்னு.. ஸாரி.. மமதை கொள்வதில் கூட ஆண்- பெண் என்று வித்தியாசம் இருக்கா என்ன?"

"பெண்ணுக்கு எப்பவுமே சுமாராகவாவது தோற்றமளிக்கற தன் புற அழகு முக்கியம். அடுத்தாற்பலே தன்னோட அறிவு.  இந்த இரண்டும் குறித்து அவளுக்கு என்றைக்குமே பெருமை ஊண்டு.  இந்த பெருமை அதிகமானால் அதுவே மமதையா மாறும். . ஆனால் ஆணுக்கு மட்டுமே தான் ஆண்ங்கறதாலேயே ஒரு பெளர்ஷ உணர்வு உண்டு.   தனக்கு மட்டுமே கிடைச்ச விடுதலை உணர்வு மாதிரி அது பற்றி என்னைக்குமே ஒரு பெருமை அவனுக்கு உண்டு.  அந்தப் பெருமை தலைவிரித்து ஆடினால் அதுவே மமதையா மாறும். அவ்வளவு தான்."

"இந்த மமதை போக மருந்தென்ன மேடம்?" என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் உஷா.

"ரொம்ப சிம்பிள்.  எல்லாமே மாறுதலுக்கு உட்பட்டவை.  மனசு மட்டும் அப்படியில்லைன்னு வீம்பு பிடிக்கக் கூடாது.  அனுபவப்படற நல்லதை கபால்ன்னு சுவீகரிச்சிக்கணும்.   தன்னோட அனுபவமின்மை தெரிஞ்சா அதைப் புரிஞ்சிண்டு மாத்திக்க முன்வரணும். தனக்குத் தெரிஞ்சிக்கறதை விட உசத்தியான இன்னொண்ணு தெரியற வரைக்கும் தான் இதெல்லாம்.  அது தெரிஞ்சிட்டா, அதை உணர்ந்திட்டா இந்தத் தனிப்பெருமைலாம் போயே போய்டும்.."

தன் மனசில் பாளம் பாளமா பதிந்திருக்கிற பல விஷயங்களிலிருந்து ஒண்ணைப் பெயர்த்தெடுத்துத் தந்த மாதிரி அந்தப் பெண் சொன்னது வித்யாவுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது.  இவளிடம் பேசப் பேச நிறைய தெரிந்து கொள்ளலாம் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டாள்.

"நீங்க சொல்றது எல்லாம் சரிதான்.  ஆனாலும் அந்தக் கதைலே, அந்த ஆண் தான் நெனைச்சது தப்புன்னு தெரிஞ்சவுடன் வருந்துகிறான் இல்லையா? நீங்க இப்போ சொன்ன அந்த மாற்றம் அவனுள் நிகழ்ந்த மாதிரி தானே அது?" என்று அவள் இன்னும் அதைக் கதை பற்றி அவள் கருத்தைச் சொல்ல வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் கேட்டாள் உஷா.

"நான் என்ன சொல்ல வர்றேன்னா..." என்று ஒரு வினாடி நெற்றியைச் சுருக்கிக் கொண்டு யோசனை செய்கிற பாவனையில் இருந்தார் அந்தப் பெண். அடுத்த வினாடியே, உதட்டைப் பிதுக்கியவாறே, "சொல்றத்துக்கு ஒண்ணுமில்லை, உஷா!.."என்று அந்தப்பெண் தன் இரு கைகளையும் விரித்தது வினோதமாக இருந்தது வித்யாவிற்கு. "அந்தக் கதையைப் படிச்சப்போ நான் உணர்ந்தது அது.  பாக்கப்போனா, படிக்கற கதை என்னமோ ஒண்ணு தான்.  அந்த ஒரு கதையையே பல பேர் படிக்கறச்சே, படிச்ச அந்தக் கதையைப் பத்தி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொண்ணு தோணுமில்லையா? அப்படி எனக்குத் தோணினது இது.  சொல்லப்போனா, ஹூயூமன் சைக்காலஜி இது.  பிடிச்சது நிறைய இருக்கும்.  அதையெல்லாம் வரிசைபடுத்திச் சொல்றதை விட்டுட்டு பிடிக்காது தான் சொல்லத் துடிச்சிண்டு ஞாபகத்திலே துருத்திண்டு முன்னாடி நிக்கும்.  அப்படி அந்தக் கதையை நினைச்சதுமே என் ஞாபகத்துக்கு வந்தது அது. அதனாலே அதைச் சொன்னேன்.." என்ற அந்தப் பெண், பேச்சை மாற்றவோ என்னவோ பக்கத்தில் அமர்ந்து இவர்கள் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்த வித்யாவை இப்பொழுது தான் பார்த்த மாதிரி, "இவங்களை எங்கையோ பார்த்த மாதிரி இருக்கே?  இவங்க உங்க ஃப்ரண்டா?" என்று கேட்ட தருணத்தில் ஊர்மிளாவும் பேசிக்கொண்டிருந்த அவர்கள் பக்கத்தில் வந்து அமர்ந்தாள்.

"இவங்களையா கேக்கறீங்க.." என்று வித்யாவைக் காட்டிக் கேட்டாள் ஊர்மிளா. "சாரி.. உங்களுக்கு இவங்களை அறிமுகம் பண்ண மறந்திட்டேன்லே.. இவங்க தான் வித்யா.. விஜியோட ஒய்ஃப்" என்று சொன்னவுடன் துணுக்குற்றது மாதிரிப் போனது அந்தப் பெண்ணின் முகம். இருந்தாலும் ஒரே வினாடியில் தன்னை சகஜ நிலைக்குக் கொண்டு வந்த மாதிரிச் சிரித்து, "ஹாய். வித்யா.. நைஸ் டு மீட் யூ" என்று லேசாகச் சிரித்தாள்.

இவ்வளவு தெளிவாக எல்லாவற்றையும் அலசும் அவள் யார் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் உதடு பிரித்து,"நீங்கள் யார்ன்னு சொல்லலையே?" என்றாள் வித்யா.  'தான் யார் என்று இவளுக்கு முன்னாலேயே தெரிந்திருந்தால், ரிஷியின் கதைபற்றி இவ்வளவு தூரம் இவள் பேசியிருக்க மாட்டாளோ' என்று அவள் நினைத்துக் கொண்டாள்.

"போச்சுடா.. இவங்களும் யார்ன்னு உங்களுக்குச் சொல்ல மறந்திட்டேனா?" என்று தன்னையே கடிந்து கொண்ட முக பாவத்துடன் அந்தப் பெண் யாரென்று ஊர்மிளா சொன்ன போது  உஷா அடைந்த ஆச்சரியம் அவள் முகத்தில் பிரகாசமிட்டது.  "அடேடே!.. நீங்களா அது? இது எனக்கு எதிர்பாராத சர்ப்ரைஸ்" என்று அவள் திகைத்தாள். "உங்க கதைங்களை நிறையப் படிச்சிருக்கேன். ஆண் பெயரில் அல்லவா எழுதுறீங்க.. ஸீ.. ஆக்ச்சுவலி இத்தனை நாள் யாரோ ஆண் தான் அந்தப் பெயரில் எழுதறார்ன்னு நினைச்சிண்டிருந்தேன்.." என்று குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள். "ஃபெண்டாஸ்டிக்.. எதுக்குங்க அப்படி ஒரு ஆண் பெயரைத் தேர்ந்தெடுத்தீங்க?" என்று அவள் கேட்ட பொழுது, சிரித்த சிரிப்பில் அவள் கண்களில் நீர் ததும்பியது.

"நிறைய ஆண்கள், பெண்கள் பெயரில் எழுதும் பொழுது, பெண் நான் ஆண் பெயரில் எழுதக் கூடாதா என்ன?" என்று அவள் கேட்டது அர்த்தம் நிரம்பிய கேள்வியாக இருந்தது.  அதே சடுதியில், "வித்யா, நான் கேட்டதை நீங்க தப்பா எடுத்துக்கப் போறீங்க.. உங்க வீட்டுக்காரர், 'விஜி'ங்கற பேர்ல எழுதினாலும், அது விஜயக்குமார்ங்கற ஆண் பேரின் சுருக்கம் போலத்தான் தெரியறது.." என்று சொன்ன போது அந்தப் பெண்ணின் ஜாக்கிரதை உணர்வு வித்யாவுக்குப் புரிந்தது.   அதே சமயம் ரிஷியின் புனைப்பெயர் ரகசியம் உணர்வில் படர்ந்து முறுவலித்தாள்.  'நானும் என் பையனும் அந்தப் பெயரில் ஒளிந்திருக்கிறோ மாக்கும்" என்று அவளிடம் சொல்ல நுனி நாக்கு வரை வார்த்தைகள் உருவாகி வந்து விட்டது.  இருந்தாலும் கஷ்டப்பட்டு விழுங்கிக் கொண்டாள்.

"தவிர, 'விஜி'ங்கறது ஆண் தான்னு தெரியற மாதிரி போஸ்டர்லாம் போட்டு தூள் கிளப்பிட்டாங்களே!" என்றாள் உஷா. "உங்க போட்டோவைக் கூட எங்கேயும் நான் பாத்ததில்லையா, இத்தனை நாள் ஆண்ன்னே நினைச்சிண்டிருந்தேங்க." என்று மறுபடியும் அந்த பெண் எழுத்தாளரின் புனைப்பெயர் விசித்திரத்தை சொல்லி அவள் மாய்ந்து போனாள்.

"இந்தப் பெயர் எனக்கு அந்தப் பத்திரிகை ஆசிரியர் வைச்சது.." என்று ஒரு பத்திரிகையின் பெயரைச் சொன்னாள் அவள். "பெண்மனசை பளிச்சின்னு எடுத்துக் காட்டி எழுதிறீங்க.. அதனாலே, ஒரு ஆண் புனைப்பெயரை நீங்கள் வைத்துக் கொண்டால், படிக்கறவங்களுக்கு ஒரு திரில்லா இருக்கும்ன்னு எனக்கு இந்தப் பெயரைச் சூட்டினார் அவர்.  என் முதல் கதையே இந்தப் பேர்லே தான் வந்தது"

"அப்படியா?" என்று கேட்டுக் கொண்டாள் வித்யா. "'பெண்மனம்'ன்னு எழுத்தாளர் லஷ்மி எழுதின கதையைப் படிச்சிருக்கேன். காலப்போக்கிலே எல்லாம் மாறின மாதிரி இந்த வார்த்தைக்கான அர்த்தமும் இப்போ மாறிடிச்சின்னு நெனைக்கிறேன். பெண்மனம் அப்படீன்னு பெண்களுக்கு மட்டுமே சொந்தமான ஒண்ணு மாதிரி இப்போக்கூட அந்த வார்த்தயைச் சொல்லணும்ன்னு நெனைக்கிறீங்க?" என்று தலைசாய்த்து சந்தேகத்துடன் கேட்கிற மாதிரி வித்யா கேட்டாள்..

"என்னைக் கேட்டா பெண்மனம்ங்கறதை இப்போலாம் ஒரு குறியீடாகத்தான் எடுத்துக் கொள்ளணும்ன்னு நெனைக்கிறேன்.." என்றாள் ஊர்மிளா. "மென்மையான, சட்டுனு இளகக்கூடிய, தொட்டதெற்கெல்லாம் பரிதாபப் படக்கூடிய மனசை பெண்மனம்ன்னு சொல்ல வர்றாங்க போலிருக்கு. வித்யா! நீங்க சொல்ல வர்றது ரைட்.  இப்போலாம் அப்படியான மனசு பெண்களுக்குத் தான் சொந்தம்ன்னு சொல்ல முடியாது தான்"

"அதே மாதிரி இன்னொண்ணையும் சொல்லணும்..  மறந்திடும்.. இப்பவே சொல்லிடறேன். பெண்கள் பிரச்னைகளை முன்னிலைப்படுத்தி நீங்கள் எழுதும் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.. ஆனா, பெண்கள்னாலே பிரச்னை தான்ங்கற மாதிரி அந்தக் கதைகள் தோற்றம் கொடுப்பதை நீங்கள் தவிர்க்கலாம் இல்லையா?" என்று உஷா அந்த பெயர் பெற்ற எழுத்தாளரிடம் கேட்ட போது இவளுக்கு ரொம்ப தைரியம் தான் என்று நினைத்துக் கொண்டாள் வித்யா.

"அப்படீன்னு நெனைக்கிறீங்க?.." என்றாள் அந்த எழுத்தாளர்.  திடீரென்று உஷாவின் கரங்களைப் பற்றிக் கொண்டு, "உஷா! நீங்க எனக்கு ஒரு உபகாரம் செய்ய முடியுமா?" என்று அவள் கேட்ட பொழுது, இவளுக்குத் தான் செய்யக்கூடிய உதவி என்னவாக இருக்கும் என்று உஷா திகைத்தாள்.

"உங்களால் எனக்கு செய்ய முடிஞ்ச உதவி ஒண்ணு இருக்கு. உஷா!.  நீங்க என்ன செய்றீங்கன்னா.. இப்போ நீங்க சொன்ன மாதிரி என் கதைகளைப் பற்றிய உங்கள் விமரிசனங்களை 'ஆசிரியருக்கு கடிதங்களா' அந்தந்த பத்திரிகைக்கு எழுதிப் போடணும். அது உங்களால் முடியும். செய்வீங்களா?" என்று அந்தப் பெண் எழுத்தாளர் உஷாவிடம் ரொம்ப தன்மையாகக் கேட்டாள். "அதோட அப்படி நீங்க எழுதற அந்த விமரிசனங்கள் ரொம்ப கடுமையா இருக்கணும்ங் கறது என்னோட சொந்த விருப்பம்.  எப்படீன்னா, இப்போ நீங்க விஜியோட மெஜாட்டியோ கதைக்கு எழுதியிருக்கீங்களே, அந்த மாதிரி!" என்று அவள் சொன்ன போது வித்யாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.  ஊர்மிளாவின் முகத்தில் புன்முறுவல் தவழ,  உஷாவிற்கோ,'இவள் ஏன் இப்படியான ஒரு கோரிக்கையை தன்னிடம் வைக்கிறாள்' என்று வியப்பாக இருந்தது. அந்த வியப்பில் எதுவும் சொல்லத் தோன்றாமல் அவளையே பார்த்தாள்.

உஷாவின் மனதில் ஓடுவதையே படித்தாற் போல,"ஏன் இப்படி ஒரு ஆசை இவளுக்குன்னு உங்களுக்கு ஆச்சரியமா இருக்கும், இல்லையா?.." என்றாள் அந்த எழுத்தாள பெண்மணி.  அவள் விவரித்தது அவள் எழுதுகிற கதை மாதிரியே இருந்தது. "எந்த எழுத்தையும் மறுக்கிற மாதிரி, வேறு பார்வைலே பார்த்து படிப்பவர்கிட்டேயிருந்து விமரிசனம் வந்தா, அதை வாசிக்கறவங்க ஒரு தடவைக்கு இரண்டு தடவையா அதைப் படிப்பாங்க.. என் கதையைப் படிக்காதவங்களுக்கும், அப்படி என்ன அவர் எழுதியிருக்கிறார்ன்னு அதைப் படிக்கற ஆர்வம் கூடி படிப்பாங்க.. உடனே அவங்களும் தனக்கு தோண்றதை நீங்க எழுதினதுக்கு ஒட்டியோ வெட்டியோ கடிதமா எழுதிப் போடுவாங்க.. இந்த மாதிரி வாதப்பிரதிவாதங்கள் பத்திரிகைகளுக்கு பிராணவாயு மாதிரி.. இதனாலே பத்திரிகை உலகிலே என்னோட எழுத்துக்கு இன்னும் மவுசு கூடும்.  அதனாலே தான் கேக்கறேன்" என்று சொன்னவள், கொஞ்சம் நிதானித்து, "'செந்தூரப்பூ' பத்திரிகைலே வர்ற திங்கட்கிழமை 'சத்தியம்'ன்னு என் கதை ஒண்ணு வரப்போறது.  அதைப்படிச்சிட்டு காரசாரமா அந்தப் பத்திரிகைக்கு ஒரு கடிதம் எழுதிப் போடுவீங்களா, உஷா!" என்று கெஞ்சுகிற மாதிரி கேட்டாள்.

அவள் சொன்னதைக் கேட்டு வித்யாவிற்கு என்னவோ போலிருந்தது. இவ்வளவு திறமையாக எழுதுகிறவள், பேசுகிறவள் தன் எழுத்தே வாசகர்களிடம் பேசட்டும் என்று வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்க மாட்டாளோ என்றிருந்தது.

"ஓ. எஸ். எழுதறேன்.  ஆனா,  எதையும் படிச்சவுடனே, என் கை நமநமக்கணும்.  அது ஒரு வார்த்தை அல்லது வரியாக் கூட இருக்கலாம்.  அதைப் பத்தி என் கருத்தை சொல்லியே ஆகணும்ன்னு தோணும். உடனே 'ஆசிரியருக்குக் கடிதம்' தான்.  இதுக்காகவே இருபது இன்லாண்ட் கடித உறைகள் எப்பொழு தும் என் டேபிள் ராக்கில் ரெடியா இருக்கும்ன்னா பாத்துக்கோங்களேன்.." என்று தன் பிரதாபத்தை உஷா சொன்னாலும், உஷாவின் உண்மையான ஆர்வம் வித்யாவுக்குப் பிடித்திருந்தது.  ' ஒருவிதத்தில் இவள் செய்தது கூட தன் கணவனின் எழுத்துக்கு உதவியாக இருக்கும் போலிருக்கே' என்று எண்ணம் வந்தாலும், அப்படியானும் கேட்டு வாங்கி என்ன புகழ் கூட வேண்டிக்கிடக்கிற து' என்று நினைத்துக் கொண்டாள். அந்த எழுத்தாள பெண்மணியிடம் இது பற்றிக் கேட்டால் அதற்கு என்ன சொல்வார் என்று கற்பனையில் ஓட்டிப் பார்த்தாள்.

இதற்கிடையில் யாரோ கைகாட்டி அழைத்துப் போயிருந்த ஊர்மிளா, திரும்பி அவர்கள் பக்கம் வந்த பொழுது, "என்ன, ஊர்மிளா!  நிகழ்ச்சி ஒண்ணும் ஆரம்பிச்சதா தெரியலையே! இன்னும் லேட்டாகுமா?"என்றாள் அந்த எழுத்தாள பெண்மணி.

"அதைத் தான் அங்கே போனப்போ கேட்டு வந்தேன்..  நிகழ்ச்சி நிரல்லே இல்லாட்டாலும், முதல் நிகழ்ச்சி நாம இப்போ நடத்தினது தானாம்..  ஒரு அறிமுகம் மாதிரி ஒருத்தருக்கொருத்தர் கலந்துரையாடல்..  அஃபிஷியலா அடுத்த நிகழ்ச்சி இதோ ஆரம்பிச்சிடுவாங்க போலிருக்கு.." என்றாள் ஊர்மிளா.

மேடைப் பக்கம் லேசான சலசலப்பு.  ரிஷி மேடைக்கு குறுக்கே போன போது
'வந்திட்டாரே' என்று வித்யா நினைத்துக் கொண்டாள். கெளதமும், "அதோ.. அப்பாம்மா" என்றான்..

"உங்க பிள்ளையா?.." என்று அந்த எழுத்தாளினி வித்யாவிடம் கேட்டுக் கொண்டாள்.  லேசாக சிரித்து அவள் சொன்னதை அங்கீகரித்தாக வித்யா காட்டிக் கொண்ட பொழுது, நிகழ்ச்சியைத் தொடங்கி விட்டார்கள்.

முதுபெரும் எழுத்தாளர் போலிருந்தது.  எழுத்தாளர்களுக்கென்றே அந்தக் காலத்தில் வாய்த்திருந்த கதர் வேஷ்டி ஜிப்பாவோடு இருந்தார்.  குரல் கணீரென்று மைக்கில் பட்டுத் தெரித்தது; வெளிப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் தீர்க்கமாகவும், தீர்மானமாகவும் இருந்தன. இரண்டு நாள் நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்துப் பேசினார்.  அரைமணி நேரப்பேச்சு, அனுபவம் பேசுவதாக இருந்தது.  பி.எம்.கண்ணன், மாயாவி, எல்லார்வி, கோமதி சுவாமிநாதன், பி.வி.ஆர், எஸ்.வி.வி., ஆர்வி, கொத்தமங்கலம் சுப்பு, வசுமதி ராமசாமி, கிருத்திகா என்று நிறைய பழம் பெரும் பத்திரிகை எழுத்தாளர்களைப் பற்றிச் சொன்னார்.  பி.எம்.கண்ணனின் 'முள்வேலி' கதையின் போக்கைச் சொல்லி பத்திரிகை எழுத்து என்று வரும் பொழுது இப்படியெல்லாம் எழுதினால் சிறப்பாக இருக்கும் என்று எடுத்துச் சொல்லி 'எழுத்துப் பட்டறை'யை ஆரம்பித்து வைத்தார்.

அடுத்துப் பேசியவர்-- அவரும் ஒரு எழுத்தாளர் தான் போலிருந்தது-- 'ஒரு சிறுகதையை எப்படித் தொடர்கதையாக எழுதுவது' என்கிற தலைப்பில் சிரிக்காமல் பேசினார்.  அவர் பேசிய ஸ்டைலைப் பார்த்து, வரிக்கு வரி வைத்திருந்த நையாண்டியைக் கேட்டு அவையே குலுங்கிக் குலுங்கி சிரித்தது.

வித்யா திரும்பி பக்கத்தில் உட்கார்ந்திருந்த உஷாவைப் பார்த்தாள்.  உஷா உன்னிப்பாக முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் அவர் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

வித்யாவின் மனசில் அலைஅலையாய் ஏதேதோ எண்ணங்கள் எழுந்து தாழ்ந்து நர்த்தனமாடின.


(இன்னும் வரும்)















































16 comments:

ஸ்ரீராம். said...

1) //ஹூயூமன் சைக்காலஜி இது. பிடிச்சது நிறைய இருக்கும். அதையெல்லாம் வரிசைபடுத்திச் சொல்றதை விட்டுட்டு பிடிக்காது தான் சொல்லத் துடிச்சிண்டு ஞாபகத்திலே துருத்திண்டு முன்னாடி நிக்கும். //

இந்த உங்கள் வரிகளில் 'பிடிக்காதது' என்ற வார்த்தைக்கு பதிலாக, 'தப்பு கண்டு பிடிப்பது' என்று (பின்னூட்டத்தில் மட்டும்) போட்டுக் கொள்கிறேன்! :)) ஏன்னா கீழே உள்ள வரிகளை எடுத்துப் போடணுமே!

//உஷாவின் உண்மையான ஆர்வம் விஜிக்குப் பிடித்திருந்தது.//

விஜி அல்லது வித்யா?

ஸ்ரீராம். said...

...

இராஜராஜேஸ்வரி said...

"எந்த எழுத்தையும் மறுக்கிற மாதிரி, வேறு பார்வைலே பார்த்து படிப்பவர்கிட்டேயிருந்து விமரிசனம் வந்தா, அதை வாசிக்கறவங்க ஒரு தடவைக்கு இரண்டு தடவையா அதைப் படிப்பாங்க..

சிறப்பான பார்வை... பாராட்டுக்கள்..

Geetha Sambasivam said...

பெண்கள் பிரச்னைகளை முன்னிலைப்படுத்தி நீங்கள் எழுதும் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.. ஆனா, பெண்கள்னாலே பிரச்னை தான்ங்கற மாதிரி அந்தக் கதைகள் தோற்றம் கொடுப்பதை நீங்கள் தவிர்க்கலாம் இல்லையா?" //

பல பெண் கதாசிரியர்களிடமும் இது குறித்துக் கேட்டு அவர்கள் கதைகளை விமரிசித்து, இப்போது சிலரிடம் பேச்சு, வார்த்தை கூட இல்லாமல் போனதே நிஜம்! :(((( பிரச்னைகளுக்குத் தீர்வும் கொடுக்கப் பட்டிருக்காது. கணவன் கொடுமைக்காரன் என்றால் அவனைக் கொல்வதே தீர்வாகச் சொல்லப் பட்டிருக்கும். :(((((((

//அப்படியானும் கேட்டு வாங்கி என்ன புகழ் கூட வேண்டிக்கிடக்கிற து' என்று நினைத்துக் கொண்டாள்.//

ஒரு பக்கம் உண்மையே என்றாலும் எழுதறவங்களுக்கும் ஊக்கம் வேண்டுமே! ஆனால் மாற்றுக்கருத்து என்பது மட்டும் தானாக வர வேண்டும். அதைக் கேட்டு வாங்கக் கூடாது. ஒவ்வொருத்தர் "பார்வை"யும் இயல்பாகவே மாறுபடும் இல்லையா? அப்படி மாறுபட்டுத் தெரிய வேண்டும்.

G.M Balasubramaniam said...

இந்த புனைப் பெயர்கள் எல்லாம் தங்களை யாரென்று அடையாளப் படுத்திக் கொள்ள ஏற்படும் பயத்தினாலா.? எழுத்துப் பட்டறை குறித்து அறிய அவா.

அப்பாதுரை said...

ஆண்களுக்கான மமதையின் வேர் பற்றிய கருத்து சுவாரசியம். என் நண்பன் ஒருவன் சொன்னது நினைவுக்கு வருகிறது - ம்ம்ம் இடக்கரடக்கல் இல்லாமல் எழுத முடியாது :)
ஆண் பெயரில் எழுதும் பெண் எழுத்தாளர் யாரையும் எனக்குத் தெரியாதே? காட்டமாக விமரிசனம் எழுதினால் படிப்பாங்களா என்ன?

இயல்பான நடை உன்னிப்பாகக் கவனித்துப் படிக்க வைக்கிறது.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

பெயர் பிழையைத் திருத்தி விட்டேன்.
இனி வரிசைபடுத்தத் தடையில்லையே?

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//... //

?...

எனக்கு ஒரு நிகழ்வு ஞாபகத்திற்கு வந்தது. வேறு ஏதாவது இடத்தில் குறிப்பிடலாமென்று நினைத்து விட்டேன்.

ஸ்ரீராம். said...

//ஏன்னா கீழே உள்ள வரிகளை எடுத்துப் போடணுமே!//


என்ற வரிகளை அதற்கும் கீழே எடுத்துக் காட்டின சிறு பெயர் மாற்றத்தைத்தான் குறிப்பிட்டேன்! :))

அதற்கும் அடுத்த புள்ளி கமெண்ட் காலை முதல் ஆளாக பூ வனத்துக்குள் நுழைந்ததால் புதுசாக ;லாக் இன் செய்ய வேண்டி இருந்தது. எனவே 'ஃபாலோ' ஆப்ஷன் இல்லை அங்கு. புல்லிகளிட்டுப் பெற்றுக் கொண்டேன்!

//எனக்கு ஒரு நிகழ்வு ஞாபகத்திற்கு வந்தது. வேறு ஏதாவது இடத்தில் குறிப்பிடலாமென்று நினைத்து விட்டேன்.//

எதைப் பற்றி என்று சொன்னால் நினைவில் நிறுத்தி காத்திருக்க ஏதுவாக இருக்குமே...! :))

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//எதைப் பற்றி என்று சொன்னால் //

சரி. அப்பொழுது நினைவுக்கு வந்ததை இப்போதே சொல்லிவிடுகிறேனே?..

ஜெயகாந்தனின் எழுத்துக்களில் மனதைப் பறிகொடுத்தவர் ஆ.விகடன் வாசன்.எதையும் ஏதாவது காரணத்தோடு தான் எழுதுவார் ஜெ.கே. என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர். ஜெ.கே.யின் எழுத்துக்கள் அச்சாகும் பொழுது ஒரு வரி சுமந்து கொண்டிருக்கும் வார்த்தைகள் மட்டுமல்ல; வரியின் முடிவில் ஜெ.கே இடும் புள்ளிகள் கூட-- இரண்டென்றால் இரண்டு, மூன்றேன்றால் மூன்று என்று-- அப்படியே இருக்க வேண்டும் என்று சொல்வாராம்.

வாசன் சொன்னதும் சரியே. நானும் இதை உணர்ந்திருக்கிறேன். ஆழ்ந்து ஜெ.கே.யின் எழுத்துக்களைப் படிக்கும் பொழுது மனத்தில் அந்த வார்த்தைகள் விளைவிக்கும் ஓர் ஒலி அமைதியை உணரலாம். பிசிறு தட்டாத கீதம் அவர் எழுத்துக்கள். எழுத்து வரிகளின் முடிவில் அவர் இடும் அந்த புள்ளிகள் மாத்திரை அளவில் மிகச் சரியாக அடுத்த வரிக்கு நம்மைக் கடத்திச் செல்லும்!

ஜீவி said...

@ இராஜராஜேஸ்வரி

உணர்ந்து சொன்ன பார்வைக்கு நன்றி ராஜி மேடம்.

ஜீவி said...

@ Geetha Samabasivam

//ஒவ்வொருத்தர் "பார்வை"யும் இயல்பாகவே மாறுபடும் இல்லையா? அப்படி மாறுபட்டுத் தெரிய வேண்டும்.//

ஒரு எழுத்தின் விளைவை வாசகன் தனது அனுபவத்தின் அடிப்படையில் உரசிப் பார்க்கும் பொழுது அவனுக்கு அந்த எழுத்து விளைவிக்கும் வேறொரு பரிமாணம் புரியலாம். ஒரு நல்ல வாசகனுக்கு ஒரு நல்ல எழுத்தைப் படிக்கும் பொழுது ஏற்படும் அனுபவம் இது. ஒரு நல்ல எழுத்துக்கும் இதான் அடையாளம்; அந்த எழுத்தாளனே நினைத்து எழுதாத உச்சிக்கு வாசகனை இட்டுச் செல்லும்.
சில நேரங்களில் அந்த எழுத்தாளர் எழுதக் கூடிய இன்னொரு கதைக்கான கருவாகக் கூட இதையெல்லாம் உபயோகித்துக் கொள்ளலாம்.
அதெல்லாம் அவரவர் சாமர்த்தியத்தை பொறுத்தது இல்லையா?

தொடர்ந்து வாசித்து கருத்திடுவதற்கு நன்றி, கீதாம்மா.

ஜீவி said...

இல்லை. புனைப்பெயர்களின் சரித்திரம் நீண்ட நெடிது. வழக்கமான பெயர்களிடமிருந்து வித்தியாசம் காட்டி மக்கள் மனத்தில் பளிச்சென்று பதிய வைக்க புனைப்பெயர் கொள்ளல் வழக்கமாயிற்று. பாலசுப்ரமணியம் என்றால் எத்தனை பாலசுப்ரமணியம்கள்? அத்தனை பேர்களிடமிருந்து தனித்துத் தன்னைக் காட்டிக் கொள்ள புனைப்பெயர் கொள்ளல் வசதியாக இருந்தது. உங்கள் பெயர் கொண்ட எழுத்தாளர் ஒருவர் சேவற்கொடியோன் என்று புனைப்பெயர் பூண்டிருந்தார்.

தாங்கள் மிகவும் அபிமானம் கொண்டிருந்தோரின் பெயரைக் கொண்டு புனைப்பெயர் கொள்வதும் ஒரு வழக்கமாயிற்று. கல்கி,சுரதா,
பாரதிதாசன்,ஜெகசிற்பியன் போன்று.
(ஷேக்ஸ்பியரின் மீது கொண்ட அபிமானத்தில் ஜெகசிற்பியன்)

உண்மைப் பெயரே புனைப்பெயர் போல் தோற்றமளிக்கும் அதிர்ஷ்டசாலிகளும் உண்டு. ஜெயகாந்தனைப் போல.

எழுத்துப் பட்டறை?.. இந்தத் தொடர், ஒரு தொடர்கதை அல்லவா? அதைக் கட்டுரையாக்கலாமா, சொல்லுங்கள்.

ஜீவி said...

@ அப்பாதுரை

கரெக்ட்! இடக்கரடக்கல்களை அடக்கிக் கொள்வதே நல்லது.

இந்தக் கதை முழுசான கற்பனைக்கதை ஆதலால், இதுவரை எனக்கும் தெரிந்திராத ஒன்றை கற்பனையாகக் கொண்டேன்.

தாங்கள் அடைந்த சுவாரஸ்யத்தை சொன்ன விதமும் சுவாரஸ்யமாக இருந்தது.

தொடர்வருகைக்கு நன்றி, அப்பாஜி!

கோமதி அரசு said...

இவ்வளவு திறமையாக எழுதுகிறவள், பேசுகிறவள் தன் எழுத்தே வாசகர்களிடம் பேசட்டும் என்று வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்க மாட்டாளோ என்றிருந்தது.//

எதிர்ப்பார்ப்பு இல்லாமல் இருக்க நிறைய பயிற்சி தேவைஇல்லையா!
நாம் மனிதர்கள் தானே எதிர்ப்பார்ப்பு இருக்க தானே செய்யும்.

நான் ஊரில் இல்லை இப்போது தான் படிக்கிறேன்.

பாச மலர் / Paasa Malar said...

ஆண் மமதை.....

இதைப் படிக்கும்போது திரைப்பாடல்களில் என்றென்றும் காதல் மற்றும் பெண்ணால் படும் அவஸ்தை என்று ஆண்கள்தான் நிறையப்பாடுகிறார்கள்..அவ்வளவு அவஸ்தை அவர்களுக்கு..பெண்கள் அப்படி இல்லை என்று தர்க்கம் செய்த என் நண்பர் ஏனோ நினைவுக்கு வந்தார்...

இந்தப்பகுதி..உளவியல் பார்வை

Related Posts with Thumbnails